கே.பாலமுருகனின் ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ கவிதை நூலை முன்வைத்து…

bala coverஇலக்கியம் என்பது பிற கலை வடிவங்களைப் போன்றே படைப்பாளியின் உள கொந்தளிப்பையும் அழகியல் ஈர்ப்பையும் சாரமாக கொண்ட வெளிப்பாடாகும். ஓவியம் சிற்பம் போன்ற கலைகளுக்கு நிறமும் வடிவமும் ஊடகமாக இருப்பது போல் இலக்கியத்தின் ஊடகம் மொழியே.

அவ்வகையில் ஒரு மொழியின் உச்சபச்ச திறனையும் மேன்மையையும் கொண்டு செயல்படுவது கவிதைத் துறையே. கவிதையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் அவை வெளிப்படுத்தும் பொருளும் பல்வேறு படிமங்களையும் பரிணாமங்களை கொண்டவையாக இருப்பதால் கவிதை பன்முகத்தன்மை கொண்டது என்பதும் உண்மை.

பிற இலக்கிய படைப்புகளைப் போல் அல்லாமல் கவிதைத்துறை ஒரு கவிஞன் வாழுகின்ற காலத்தை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. வரலாற்றை பின்புலமாகவும் சமகால சமூக அரசியல் பண்பாட்டு அதிர்வுகளை மையமாகவும் கொண்டே கவிதைகள் படைக்கப்படுகின்றன.

தமிழ் கவிதைகளின் மிக நீண்ட வரலாற்றில் தற்போது அதிகம் பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நவீன கவிதைகளே எனலாம். பிறவகை கவிதைகளைப் போல் அன்றி, நவீன கவிதைகள் மிக குறைந்த அலங்காரத்துடனும் மிக காந்தாரமான வீரியத்துடனும் தன்னை கட்டமைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

கே.பாலமுருகனின் இக்கவிதை தொகுப்பில் இடம் பிடித்திருக்கும் கவிதைகள் அனைத்தும் நவீன கவிதைகள் ஆகும். அவை மலேசிய நாட்டின் பின்புலத்தில் இயங்குபவை. அதோடு, முன்னேற்றத்தையும் வளப்பத்தையும் நோக்கி மிக வேகமாக நகரும் ஒரு நாடாக மலேசியா தன்னை முன்னிருத்திக் கொண்டாலும், அரசியல், பண்பாடு, சமூகவியல் காரணங்களால் பொது நீரோட்டதில் இருந்து விலக்கப்பட்டு தங்கள் இருப்பை நிருவிக்கொள்ள முடியாமல் தடுமாறும் விளிம்பு நிலை மக்களின் குரலாகவும் ஒலிக்கின்றன.

ஆகவே, இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் பொது சமூகத்தால் மறக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் குரல், கவித்துவ சீற்றத்துடன் வெளிப்படும் தருணங்களை கண்டறிய வேண்டியது வாசகர்களின் கடமை என்றே நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...