சொற்களைக் கொல்லும் கலையானது…

navin_Coverயார் அந்த மாயா? ஏன் அவள் மட்டும் இந்த உலகின் ஒழுங்கை எந்த முன்னறிவிப்புமின்றி களைத்துப் போடுகிறாள்? அவளுக்கு மட்டும் உலகம் ஏன் எந்தக் கொள்கையும் எந்த இலட்சியங்களும் இல்லாத ஒரு விளையாட்டுப் பொருளாக மாறிவிடுகின்றது? நவீனின் கவிதைகளில் வரும் ஒரு மாயாவாக மாறிவிடுவதைவிட இந்த உலகம் செய்த அனைத்துக் கவிதை கொலைகளையும் வேறெப்படியும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது எனத் தோன்றுகிறது.

கவிதை உணர்ச்சிகளின் போர் என்பதானாலோ என்னவோ எல்லாம் கோபங்களையும் திணித்து அதைச் சமூகத்திற்கான கட்டாயத் தேவையாக்கி வெளியிடும் போட்டியை அனைத்துத் தரப்பினரும் நடத்தி வருகிறார்கள். தன் வாழ்க்கைக்குள்ளிருந்து எழும் வெறுப்பை, கசப்புணர்வை, சந்தேகங்கங்களை, அறவுணர்ச்சியை என அனைத்துயுமே கோபமாக்குவதன் மூலம் அதைக் கவிதையாகச் சொல்லிக்கொள்ளலாம் என்கிற ஒரு பொதுவசதி இப்பொழுது உருவாகியுள்ளது. கவிதைக்கான அர்த்தம் சமூகத்திற்கான அறவுணர்வைக் கோபப்படுத்தி வார்த்தைகளில் கக்குவது என ஆகிவிட்டது.

சமீபபமாக மலேசிய இலக்கிய சூழலில் கவிதைகள் குறித்த விவாதங்கள், உரையாடல்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டன என்று தோன்றுகிறது. கோபம்தான் கவிதை என ஆகிவிட்ட பிறகு இன்னொருவனின் கோபங்களை அதிக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. கவிதைக்குள் இருக்கும் கோபம் நியாயமானதுதான் அதனை நோக்கி நாம் விழிப்புணர்ச்சி அடைய வேண்டுமே தவிர அதை ஆழமாக உரையாடக்கூடாது என அனைவரையும் ஒன்று திரட்டுவதைத் தவிர இன்றைய கவிதைகள் வேறொன்றும் செய்வதில்லை.

மிகவும் வன்மத்துடன் சமூகத்தால் கைவிடப்பட்டது கவிதையாகத்தான் இருக்க முடியும். அல்லது தமிழ்ப்பத்திரிகைகள் கவிதைகள் எனும் பெயரில் மனித வாக்குமூலங்களைப் பிரசுரித்து வருவதால் எது கவிதை என்பதில் ஒட்டுமொத்த மலேசியாவும் சற்று தடுமாறியும் குழம்பியும் போய்விட்டன என்றுத்தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் மனித உணர்வுகளின் மறுவடிவம்தான் இலக்கியம்/கவிதை என்பார்கள். ஆனால் இன்று வெறும் கோபம் மட்டுமே பற்பல காரணங்களையொட்டி கவிதையாகி வருகின்றது. எல்லோரும் அவசரத்திற்கு சிறுநீர் கழிப்பதைப் போல சட்டென ஒரு கவிதையை எழுதிக் கொடுத்துவிடுகிறார்கள். அதற்கு மேல் அடக்க முடியாத ஒருவன் சிரமப்பட்டு முக்கி கண்கள் கலங்கி சிறுநீரை வெளியாக்குவதைப் போல சிரமப்பட்டு அறவுணர்வை வரவழைத்து சொற்களை அடுக்கி அரசியல் தெளிவில்லாமல் வெறுமனே ஒரு சமூகக் கவிதையைப் பிதுக்குவதாக கவிதைச்சூழல் மாறிவிட்டது.

கவிதை உணர்வுகளின் போராக இருந்தாலும், அப்போர் உருவானதற்குப் பின்னணியில் வாழ்க்கையின் ஆழங்கள் இருந்திருக்க வேண்டும்; வாழ்க்கை குறித்தத் தேடல் இருந்திருக்க வேண்டும்; வாழ்க்கை குறித்த சந்தேகங்கள் இருந்திருக்க வேண்டும்; வாழ்க்கை குறித்த கேள்விகள் இருந்திருக்க வேண்டும் ; இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் இல்லாமல் என் கோபத்தைச் சமூகத்திற்கான கோபமாக மாற்றும் வேலையைத்தான் கவிதைகள் செய்யுமென்றால் அது உயிர்த்திருக்காது. அது ஒரு வாக்குமூலமாக மட்டுமே கரைந்து போகும்.

அறத்தை மீறிய கவிதைகள்

என்னைப் பொறுத்தவரை கவிதை சமக்காலத்திய நல்லது கெட்டது என இரண்டையும் ஆராய வேண்டும் அல்லது இரண்டிற்குமாக இல்லாமல் ஒரு நடுநிலைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏற்கனவே உள்ள புனிதத்தை அப்படியே கொண்டாடுவதையோ அல்லது அதற்கு மாற்றாக இன்னொரு புனிதத்தைப் பேசுவதையோ கவிதைகள் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளன. கவிதையைக் கடவுளுக்கு நிகராக வைத்துப் பார்க்கும் மனப்பாங்கு நம் சமூகத்தின் மேல்நிலை மனிதர்களைப் பீடித்துள்ளது. கடவுளுக்கும் கவிதைக்கும் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது அவர்கள்தான். சமூகத்திலுள்ள மனிதர்கள் எத்தனை வகைப்பட்டுள்ளார்கள், அவர்களின் பலத்தரப்பட்ட வாழ்க்கை எப்படி இயங்குகின்றன என்பதனைப் புரிந்துக்கொள்ளாமலே ஒருவன் எப்படி ஒட்டுமொத்த சமூகத்திற்கான தர்மத்தையும் பேச முடியும்?  ஆற்றோரங்களில் வாழும் ஒரு தமிழனின் நியாயமும், அடுக்குமாடியில் வாழும் ஒரு தமிழனின் நியாயமும் பங்களாவில் வாழும் ஒரு பணக்காரத் தமிழனின் நியாயமும் ஒன்றென நிரூபிக்க முடியுமானால் அப்பொழுது வேண்டுமென்றால் சமூகத்திற்கான கவிதையை எழுதிட முடியும் என நான் ஒப்புக்கொள்கிறேன். நம்முடைய கவிதைகளில் ஓங்கி ஒலிக்கும் அறம் சமூகத்தின் இன்னொரு பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைக் கொஞ்சமும் பேச முற்படவில்லை, அவர்களைத் தீண்டவும் இல்லையென்றால் பிறகென்ன சமூகக் கவிதை, பொதுக்கோபம்?

நாம் எழுதுவது பத்திரிகையாளர்களையும் மேல்நிலை மனிதர்களையும் படித்த மேதாவிகளையும் மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும். அவர்களிடம் இல்லாத அறத்தைப் பற்றி பேசுவதானாலேயே அதற்குள் போய் சட்டென வசதியாக மறைந்து கொள்கிறார்கள். இப்பொழுதுள்ள கவிதைகள் இவர்களைப் போன்ற போலியானவர்களுக்கு ஒளிந்து கொள்வதற்கு இடத்தைக் காலியாக்குகின்றன. ஆனால் பேசப்பட்ட வேண்டிய உரையாட வேண்டிய மனிதர்கள் மீது அதிகப்பட்சமாக ஒரு கருணையையும் இரக்கத்தையும் மட்டுமே பதித்துவிட்டுப் போகின்றன.

வாழ்க்கைக்கும் இதற்கு முன்பாகப் போதிக்கப்பட்ட அறத்திற்கும் இடையே எந்தத் தொடர்புமில்லாமல் மனித வாழ்வு சிக்கிக் கொண்டிருக்கின்றன. கவிதைகள் அதன் ஆழத்தைப் பேசாமல் மீண்டும் கட்டியமைக்கப்பட்ட அறத்தையே பூஜித்துக் கொண்டிருப்பதன் மூலம் மனித வாழ்க்கைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லாமல் தேங்கிப் போகின்றன. மறுவாசிப்பிற்குரிய எந்த வாய்ப்பையும் வழங்காமல் முதல் வாசிப்பிலேயே சுணக்கமாகிவிடும் கவிதைகளில் அரசியல் வாழ்வும் நிலத்தின் அரசியலும் போதாமல் பலவீனமாகின்றன.

ம.நவீன் கவிதைகளின் அரசியல்

மலேசியக் கவிதைச்சூழலில் ம.நவீன் அவருக்குரிய இடத்தைத் தக்கவைக்கும் வகையில் தொடர்ந்து தன் கவிதை முயற்சிகளைக் கூர்மைப்படுத்தி வருகிறார் என்றே சொல்ல முடியும். ஒரு மலேசிய வைரமுத்து என அறிகிற அளவிற்கு 1999–களில் எழுதத் துவங்கி பின்னர் சிறுக சிறுக கவிதைகளால் மலேசியத் தமிழ்ப்பத்திரிகை மற்றும் இதழ்களின் வாயிலாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக மன்னன், நயனம் போன்ற தினசரிகளில் மாதந்திர இதழ்களில் மலேசிய வாசகர்களால் வாசிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அதே நவீன் தன் வாசிப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் தன் கவிதையின் ஆழத்தையும் கூர்மையையும் மேலும் வளப்படுத்தி மீண்டும் புதிய அரசியல் சொல்லாடல்களுடன் மலேசிய வாசகர் மனங்களைக் கீறிப் பார்க்கத் தொடங்கினார். மரபார்ந்த கவிதை வாசிப்பைக் கேள்விக்குள்ளாக்கினார். சமூகத்தின் அவதூறுகளையும் விமர்சனங்களையும் கேலிகளையும் கோபங்களையும் தன் கவிதையின் வாயிலாக அதிகமாகச் சேகரித்த ஒரே கவிஞர் ம.நவீன்தான். இன்று கவிதைச் சூழலுக்கு வெளியே உள்ளவர்களால் நவீனின் கவிதைகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை; அதே சமயம் கவிஞர்கள் எனச் சொல்லக்கூடியவர்களும் அவருடைய கவிதையைத் தீவிரமாக உரையாடுவதோ விமர்சிப்பதோ இல்லை.

மௌனம் இதழ் வெளிவந்த சமயத்தில் நவீனின் கவிதைகளை முதன் முதலாக விமர்சித்து எழுதினேன். நாய் சாலையில் புணர்வதைப் பார்த்து ஒரு பையன் கேட்கும் கேள்விக்கு முன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் சமூகத்தின் முகத்தில் அறையும் வகையில் அக்கவிதை நேர்மையாக வெளிப்பட்டிருந்தது. நாம் உண்மைகளையும் யதார்த்தங்களையும் எதிர்க்கொள்வதில்லை. அதனைப் போலியாகக் கடக்கவே முயற்சிக்கிறோம். அப்படிக் கடப்பவர்களை இழுத்து வந்து வாழ்வின் நிஜமான அரசியலுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தும் நவீனின் கவிதைகளால் பலர் பாதிப்படையலாம்; கிளர்ச்சியடையலாம்; துன்புறுத்தப்படலாம். வாழ்க்கையைக் கிசுகிசுப்பதல்ல கவிதை; நாம் ஒளித்து வைத்திருக்கும் முகங்களைக் கிழித்து தறதறவென வெளியே இழுத்து வரும் வன்மம்தான் கவிதை. நாம் தப்பிக்க நினைக்கும் இடத்திலேயே நம் மனசாட்சிகளைக் கீறிப்பார்க்க வைப்பதும்தான் கவிதை. அழகியலையும் கவித்துவத்தையும் வைத்து  நாம் செய்த அனைத்துப் பாசாங்குகளையும் உடைத்து விசாரிப்பதுதான் கவிதை. நாம் சொல்லாமல் விட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஓங்கி ஒலிப்பதுதான் கவிதை என நினைக்கும் வகையில் மலேசியத் தமிழ்க்கவிதையின் போக்கை மாற்றியமைத்ததில் ம.நவீனுக்கும் முக்கிய பங்குண்டு.

காதல் , வல்லினம் போன்ற மலேசியத் தீவிர இலக்கிய இதழ்களில் ம.நவீனின் முக்கியமான கவிதைகள் பிரசுரம் கண்டதோடு சமீபத்தில் குவர்னிகா எனும் உலக இலக்கியத் தொகுப்பிலும் அவருடைய கவிதைகள் பிரசுரிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய கவிதைக்குள் இருக்கும் சமூக, மத, அரசியல் விமர்சனங்கள்தான் அவரின் கவிதைகளை உலக வாசகர்களைச் சென்றடைய வைக்கிறது. உலகத் தமிழ் வாசகர்களால் நவீனின் கவிதையினூடாக நுழைந்து தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியின் மீது அறத்தை மீறிய புரிதலை வைக்க முடிகின்றது.

சொற்களைக் கொல்லும் கலை

அடுத்ததாக நான் நவீனின் கவிதைகளின் மூலம் அவர் தமிழில் உள்ள சொல்லின் மரபார்ந்த பொருளைக் கொலை செய்யக்கூடியவர் என அறிய முடிந்தது. இது சொல் வன்முறை என்றாலும் ஒரு சொல்லுக்குள் இருக்கும் பன்முக திறப்புகளை உடைத்துக் காட்டும் வல்லமை பொறுந்திய சொற்களுக்கு இதுபோன்ற அணுகுமுறை அவசியமாகின்றது. கடவுள் என்ற சொல்லைக் காலம் காலமாக ஒரு சமூகம் பூஜித்து வருவதையும் புரிந்து வைத்திருப்பதையும்கூட நவீன் அச்சொல்லை மறுகண்டுபிடிப்பு செய்கிறார். நிலத்தின் அரசியலோடு ஒரு சமூக முன்னெடுப்பை விமர்சிக்கக் கடவுள் என்கிற சொல்லின் மீது படிந்திருக்கும் வரலாற்றை முழுவதுமாக அழித்து அதனை தன் கவிதைக்குள் புதியதாக நுழைக்கிறார். சொற்களைக் கண்டு[பிடிக்கும் வேலையைவிட இருக்கும் சொற்களை மறுகண்டுபிடிப்பு செய்வதுதான் கூர்மையான கவிதையின் போக்கு என நினைக்கிறேன். சொற்கள் வசப்படுவதுதான் நல்ல கவிதை என ஒருமுறை டாக்டர் சண்முக சிவா சொன்னார். அந்த வகையில் நவீனிடம் சொற்கள் வசப்பட்டதோடு அச்சொல்லை அவர் உடைத்து அதனுள் இருக்கும் சாத்தியங்களையும் காட்டுகிறார். இது நவீன கவிஞனுக்கே உரிய திமிர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *