தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதரின் மனம் கனக்கும்.

tuupukari“அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..”

-மலர்வதியின் முன்னுரையிலிருந்து

மக்களின் மொழியில் இந்நாவல் எழுதப்பட்டிருப்பதை இதன் தலைப்பே உணர்த்துகிறது. தூப்புக்காரி என்பது வட்டாரச்சொல். கூட்டிப்பெருக்கி அள்ளுவதை குறிக்கின்ற சொல்தானிது. துடைப்பம் என்றும் விளக்குமாறு என்றும் ஆங்காங்கே சொல்கிற வழக்கமும் இருக்கிறது. மலேசியாவில் துடைப்பத்தை பலர் ‘ஜாடு’ என்றே சொல்கிறார்கள். கூட்டிப்பெறுக்குவதையும் குப்பைகளை அள்ளி துப்புரவு செய்கிற பெண்களை தூப்புக்காரி என அழைக்கப்படுகிறாள். ஆண்களாக இருந்தால் ‘தோட்டி’ என்ற சொல் வழக்கில் உண்டு.

    தோட்டி என்றதும் நினைவுக்கு வரும் விடயம், தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதி சுந்தர ராமசாமியால் தமிழில் மொழிபெயர்ந்த ‘தோட்டியின் மகன்’ என்ற நாவல்தான். அந்நாவலை வாசிக்கும் சமயம் தொட்டியின் அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. நண்பர்களுடன் கேட்ட பிறகே அதற்கான அர்த்தம் புரிந்தது. பின் தோட்டியின் மகனை வாசிக்கும் போது வேறு ஒரு உலகத்தை காண முடிந்தது. மேன் நிலையானாலும் கீழ்நிலையானாலும் நுண்ணரசியல் எங்கும் வியாபித்திருப்பதை அந்நாவல் வழி உணர்ந்தேன். ஜாதி வன்முறையும் பணக்கார சௌகரியங்களையும் ஒருங்கே காண முடிந்த நாவலாக அந்நாவல் இருந்தது. படித்து முடித்ததும். அந்நாவலை ஒருவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன், நாவல் குறித்து அவர் கேட்கவும், சுருக்கமாக தோட்டியின் மகன் குறித்து சொல்லிவிட்டேன். உடனே நாவலை திரும்ப கொடுத்துவிட்டு சொன்னார், “இந்த மாதிரிலாம் எதுக்கு எழுதனும்.. நம்ம நாட்டில் அப்படி இல்லையே… நீயே வச்சிக்கோ ”

   தான் பாதிக்காதவரை தன் வட்டாரம் அறிந்திருக்காதவரை எதையும் தெரிந்துக் கொள்ளவும் வலியை புரிந்துகொள்ளவும் அவர் தயாராக இல்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் இங்கே மிகுந்த தமிழ் பற்றாளர் என்ற பெயரை அவருக்காக பலர் தொடர்ந்து முன்மொழிந்து கொண்டே வருகிறார்கள். ஒருவேளை அவர் பெண் என்பதால் மலம், அசிங்கம் , தோட்டி என அவர் வாசிக்க விரும்பவில்லை என்ற நினைப்பு வந்தாலும்; எழுத்துக்கும் வாசிப்பிற்கும் ஆண் பெண் பேதமென்ன என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். பிறகு எந்த புத்தகத்தையும் அவருக்கு சிபாரிசு செய்வதை நிறுத்திவிட்டேன்.

   சமீபத்தில் இணையத்தில் தூப்புக்காரி நாவல் குறித்து சிலவற்றை பார்க்க நேர்ந்தது. தூப்புக்காரி நாவலை எழுதியவருக்கு சாகித்திய அகடாமியின் இளம் எழுத்தாளர் விருது கிடைத்தது. ஆனால் அதனை வாங்குவதற்குகூட செல்ல இயலாமல் கிராமத்தில் இருக்கிறார் மலர்வதி. டெல்லிக்கு செல்லவும் பணம் இல்லாத ஒருவர் அவர்.  அதுதான் அந்த நாவலை வாசிக்கதூண்டியது. விருது வாங்கியதால் அல்ல, விருதினை பெற்றுக்கொள்ளவும் செல்ல இயலாத சூழலிலும் ஒருவர் எழுதியிருக்கிறாரே என்பதுதான் காரணம்.

  அப்படிப்பட்டவரிடம் இருந்து வந்திருக்கும் எழுத்துகளை நம்பலாம் என்று என் மனம் சொல்லியது. இங்கே சினிமாவிற்கு பாட்டெழுதியவரெல்லாம் உயர்ந்த இலக்கியவாதியாக போற்றிய போதுதான் உண்மையான எழுத்துகள் வருகை தடைபட்டன. ஏற்கனவே சம்பாதிக்கின்றவரை நம் செலவில் அழைத்து வருவோம், தங்க வைப்போம், விழா எழுப்போம், புத்தக விற்றுக் கொடுப்போம். வழியனுப்புவோம். இங்கிருந்தும் நாம் போவோம். போட்டோ பிடிப்போம் பண்ணாடையுடன் மன்னிக்கவும் பொன்னாடையுடன் திரும்பி வருவோம். திடீர் சாம்பார் , திட்டிர் ரசம் போல திடீர் திடீர் என பொன்னாடை வாங்கியவர்களெல்லாம் இலக்கிய காவலர்களாக ஆகிடுவார்கள். ‘சந்தைக்கு போகிறபோது பரதநாட்டிய உடை வேலைக்காகாது’ என்று ஜெயமோகன் சொன்னதாய் படித்திருக்கிறேன். சொல்லப்போனால், கழிவறைக்கு போனாலும் இலக்கிய காவலர்களாக இருப்பவர்கள் இவர்கள் என்றே நினைத்து திடீரென சிரிப்பதை தவிர வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை.

   ஒரு பெண் படிக்கத் தயங்கிய ஒன்றையே இன்னொரு பெண் எழுதியிருக்கிறாள் என்றால் யார் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள். எது நிகழ்காலம் என்ற கேள்வி நம்மை நோக்கி எத்தனை முறை கேட்கிறோம். தூப்புக்காரியில் வரும் கதாப்பாத்திரங்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள். பந்தியில் மிஞ்சிய சோற்றை நாய்க்கு போடும்போதெல்லாம், நாயுடன் சண்டையிட்டு அதனை எடுத்து உண்கிறார்கள். அதுதான் நிகழ்காலம்.

   கனகம் என்ற தூப்புக்காரி, அவள் மகள் பூவரசி, பூவரசியின் காதலன் மனோ, பூவரசியை விரும்பும் மாரி போன்றவர்கள்தான் கதையினை நகர்த்திச் செல்கிறார்கள்.

   கனகம் கதை சொல்கிறாள், பூவரசி கதை சொல்கிறாள், மனோ கதை சொல்கிறான். இப்படி இவர்கள் சொல்லிக்கொண்டு போகும் கதையில் நாமுஜ்ம் சேர்ந்த்து செல்கிறோம். நம் முகத்திலும் நாற்றம் அறைகிறது. நம் கண்ணிலும் மாதவிடாய் துணி தெர்கிறது, நம் கால்களிலும் மலம் மிதிபடுகிறது.

‘தொட்டியின் மகன்’ நாவலில் சொல்லப்படும் அரசியலை இதில் பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களை காண முடிகிறது.

   பொது கழிவறைக்கு சென்றிருப்போம். எத்தனை முறை உள்ளே சென்று துர்நாற்றம் பொருக்காமல் ஓடி வந்திருக்கிறோம். எத்தனை முறை கழிவறை குழிக்கு நீர் பாய்ச்சாமல் வந்திப்போம். எத்தனை முறை சுவரில் எல்லாம் மூத்திரம் பெய்திருப்போம். மூத்திரம் என்று சொன்னதுமே பலருக்கு கிலி பிடித்தது போல உடல் உதரிவிடும். சிறுநீர் என்றுதான் சொல்லவேண்டும். ‘பீ’ என்றும் சொல்வது அருவருப்பானது, மலம் என்றே சொல்லுதல் வேண்டும். யாருக்கும் பீ என்றால் குமட்டும் , மலம் என்றால் வாசிக்கும் போல.

   இப்படி வார்த்தைகளே பேதப் படுத்துகிறதே இதனுடன் வாழ்க்கையை நடத்துபவர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

   ‘தூப்புக்காரி’, அவளுக்கும் மனம் இருக்கிறது, அதுவும் காதல் கொள்கிறது, பின்னர் களவி கொள்கிறது. தான் களவி கொண்டதை ஜன்னல் வழி பார்த்தவனையே திருமணம் செய்யும்படி ஆகிறது. பொதுவாகவே தாழ்ந்த ஜாதியினை கொண்டவர்களுக்குத்தான் தோட்டி வேலை கொடுத்து சமூகம் அவர்களை இன்னும் கீழேயே வைத்திருக்கும். இந்நாவலில் நாடார் ஜாதியில் இருந்து ஒரு தூப்புக்காரி வருகிறாள். தன் ஜாதிக்காரர்களிடமே கூட நெருங்க முடியாமல் அவர்கள் தின்ற எச்சில் இலையை அள்ளி போட்டு மிச்ச மீதியை உண்கிறாள்.

   தாயின் உடல் நலம் குன்றவே , மகள் அத்தொழிலை ஏற்கும் காட்சி படிப்பவர் மனதினையும் அவள் மனம் போல சூன்யமாக்குகிறது.

   கணவனும் இறக்கிறான், குழந்தையும் உடல் இளைக்கிறது, அவளும் மலம் அள்ளுகிறாள். அப்போதுதான் குழந்தையை தத்துக்கொடுக்க மருத்துவர் ஒருவர் கேட்கிறார். தான் போல அல்லாமல் தன் பிள்ளை நன்றாக வாழும் என்ற எண்ணத்தில் ஒத்துக்கொள்கிறாள் இளைய தூப்புக்காரி. அந்த நாளும் வருகிறது. புதிய பெற்றோர் கையில் தூப்புக்காரியின் குழந்தை. குழந்தை அணிந்திருந்த பழை கிழிந்த ஆடையை கழட்டுகிறார்கள். புத்தாடை அணிவிக்கிறார்கள். கழட்டப்பட்ட ஆடைக்கு பாதி பாதி என பணம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது தூப்புக்காரிக்கு.

   இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பணக்கார வாழ்க்கைக்கு பயணமாகப்போகிறது. அந்த நேரம் வந்துவிட்டது. சட்டென தூப்புக்காரி ஆவேசமாகிறாள். ரோசம் கொள்கிறாள். ஒரு முடிவுக்கு வருகிறாள்.

   அந்த இடம்தான் இந்நாவலை உச்சிக்கு கொண்டு போகவேண்டிய இடம். முதல் முறை படிக்கும் போது உச்சிக்கு அருகில் சென்றாலும், மீண்டும் படிக்கையில் நாடகம் போல் அமைந்துவிடுகிறது. ஆனாலும் சில விதிவிலக்கு நாடகங்கள் இருப்பது நாம் அறிந்ததே.

   மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்னும் நாவல் படிக்கவேண்டிய ஒரு புதினமாக மனதில் பதிகிறது. மலம் சுமக்கும் மனிதர்கள் நாம், மனம் வந்து இந்நாவலை படித்து அவர்கள் வாழ்க்கையை கொஞ்சமேனும் அறிய முயற்சிப்போம். அறிதல் மட்டுமே, புரிதலையும் மாற்றங்களையும் கொண்டுவரும் சக்தி.

தயாஜி

6 comments for “தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதரின் மனம் கனக்கும்.

  1. Novah
    March 5, 2014 at 12:40 am

    arumai…

  2. விஜயா
    July 9, 2014 at 5:17 pm

    அன்பிற்குரிய தயாஜி,
    இந்நாவலின் தொடக்கம் மற்றும் முடிவைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் கனத்த இதயத்துடனும், தொண்டைவரை தேங்கி நின்ற துயரத்துடனுமே கடந்து சென்றேன். ஒவ்வொரு சொற்களும் என் மனத்திரையினுள் படமாக ஓடிக்கொண்டே இருந்தது… மாரியின் தலையிலிருந்து வடிந்து உதடுவரை தொட்டு வாயினுள் புகும் கழிவையும், தூமைத்துணியை துவைக்க பெற்ற பணம் சாக்கடையில் மிதந்து செல்லும்போதும், பொத்தி பொத்தி வளர்த்த மகளை கனகமே தூப்புக்காரியாகும்படி சொல்லும் தர்மசங்கடமான நிலையும், இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ தருணங்களில் சற்றே புத்தகத்தை மூடிவைத்துவிட்டு சலனமுற்ற என் மனதை சாந்தப்படுத்த முயன்று தோற்றுத் தோற்றுப்போய் மீண்டும் கதைக்குள் புகுந்தேன்.
    நீங்கள் கூறுவது போலவே இதன் முடிவு சினிமாத்தனமாகத்தான் எனக்கும் தோன்றியது. ஆனால், “தூப்புக்காரிகளின் துன்பமும், வலியும், வேதனையும், அவமானத்தையும், இழப்பையும் போக்க தன் மகள் இதே கழிவுகளுக்கிடையில்தான் வளரனும்; இதுதான் உண்மையான வாழ்க்கை அனுபவம்; இதிலிருந்துதான் அவள் உயர்ந்து வரணும்; அதுதான் உண்மையான சாதனை; அப்போதுதான் அவளால் மாற்றத்தை உண்டாக்க முடியும்” என்னும் கூற்று பூவரசி, கனகம் போன்றவர்களின் துயரமிகு வாழ்க்கையின் ஆழத்தையும் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற அடங்காத வேட்கையையும், ஏக்கத்தையும் காட்டுவதாகவே நான் உணர்கிறேன். இங்கு தாய் பாசம் என்பது மறைந்து ஒரு பெண்ணின் பேராற்றலும், போராடும் குணமுமே என் கண்முன் வந்து சென்றது.
    இந்நாவலில் ஆங்காங்கு நாவலாசிரியரே வழிந்து வந்து கவிதைகள் மற்றும் கூற்றுகள் வழியாக கருத்துச் சொல்லும் பகுதி தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல நாவலை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி)

  3. March 4, 2016 at 8:35 pm

    நாவலை படிக்கவேண்டும் போல் உள்ளது .. துடைப்பத்திற்கும் ,ஜாடுக்கும் வித்தியாசம் உண்டுங்கோ..

  4. அழகுராஜ்
    March 2, 2019 at 1:59 pm

    அருமையான நாவல் தொடர்ந்து படிக்க நேரம் கிடைக்கவில்லை என்றாலும் எப்போது முழுவதும் படித்து முடிப்போம் என்ற ஒரு ஆவல் இருந்தது.இந்த நாவலில் வரும் கனகம் தன் சாதியினராலேயே ஒதுக்கப்படுகிறார். பூவரசி மனோவால் ஏமாற்றப்படுகிறாள்.
    மாரி சுத்தபடுத்தும் தொழிலாளி மட்டுமல்லாமல் எனக்கு இந்த நாவலில் பிடித்த முக்கிய கதாபாத்திரம். இது சாதிக்கொடுமை,பெண்ணடிமை,ஆணாதிக்கம்,அதிகாரம் படைத்தோரின் அநாகரிகமான வார்த்தைகள்,
    சுத்தப்படுத்தி தூய்மையாக்கும் துப்புரவு தொழிலாளிகளை இச்சமூகம் பார்க்கும் நிலை ஆகியவற்றை சமுதாய அக்கறையோடு புதுமைப்பெண்ணாக வலம் வரும் நாவலாசிரியர் மலர்வதி அவர்கள் எழுதியுள்ளார்

    • rajeswaran Angusamy
      May 6, 2021 at 12:56 am

      hi,
      where i can get this novel

  5. rajeswaran Angusamy
    May 6, 2021 at 12:55 am

    i want this novel but its not available anywhere. where i can contact to get this? its urgent

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...