
முட்டம் கிராமத்தில் இன்று மக்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. வழக்கத்திற்கும் மாறாக கடல் அலையின் உயரம் இன்று அதிகமாகவே இருந்தது. ஓயாதக் கடல் அலையும் கட்டித் தழுவும் அதன் உப்புக் காற்றும்தான் இம்மக்களுக்கு முதல் உறவு. அனைவரும் கடல் அலையைப் பார்த்தபடி கடற்கரை மணலில் அமர்ந்து சீமோனுக்காகக் காத்திருக்கிறார்கள்.
“சீமோன் மாமா வந்தாச்சா?” என்று ஊரில் உள்ள சின்னப் பிள்ளைகள் கூட நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த முறை குவெய்த்தில் இருந்து வந்தவன் நிறைய பொருட்களை வாங்கி வந்து ஊர்ப் பிள்ளைகளுக்குக் கொடுத்து மகிழ்வித்தான். அதற்காக அவன் அவனுடைய தாய் லூர்தம்மாளிடம் வாங்கிய அடி கொஞ்ச நஞ்சமல்ல.
சரமாரியாகப் பறந்து கொண்டிருந்த விளக்குமாற்றை ஒரு கணம் தடுத்தவன், “யம்மா… அடிக்காதே, நில்லு நில்லு யம்மா, செல்லுயதக் கேளு… ஏய்… யம்மா… யேசு என்ன செல்லியிருக்காரு?”
“என்ன லே?”
“செறிய பிள்ளையளுக்குத் தான் எனக்க ராஜ்ஜியத்தில இடம் உண்டுன்னு செல்லி இருக்காருல்லா?”
“லேய்… இதுல ஒண்ணும் கொறவில்லலே ஒனக்கு.” என்று அடியை மீண்டும் தொடர்ந்து கொண்டு, “வேதம் செல்லுதயோ. வேதம் படிப்பிச்சுக் கொடுத்தவளுக்கே வேதம். ஒழச்சு வேண்டி வந்த பைசா எல்லாம் இப்புடி எறச்சா எங்கனலே கடன அடைப்ப? ஒனக்க நெனெப்போட கிடக்க பிள்ளய எப்பலே கை பிடிப்பே? இதுக்கெடயில உங் கூட்டாளியளுக்கும் பாட்டிலு வாங்கிட்டு வார.” என்று விளக்குமாறு பிய்ந்து போகும் வரை அடி விழுந்தது சீமோனுக்கு.
நண்பர்கள் என்றாலும் சீமோனுக்கு உயிர். ஒவ்வொரு முறையும் அவன் குவெய்த்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இறங்கும் பொழுது அவனுடைய உயிர் நண்பன் தாமஸ் வரவேற்கக் காத்திருப்பான். சீமோன் அவனுக்காகவே பிரத்யேக மது வாங்கி வருவான்.
“எலேய் மக்கா. இங்கன உள்ள சரக்கெல்லாம் கழுத மோத்திரமாக்கும்லே. எனக்க மேலுக்கு பாரீன் சரக்கதான் கொள்ளாம் கேட்டியா.” என்று சீமோன் கொண்டு வந்த மதுபாட்டிலில் பாதியைக் குடித்து விட்டு மயங்கிய நிலைக்குச் சென்றுவிடுவான் தாமஸ். பிறகு சீமோன்தான் தாமஸை ஊருக்குக் கூட்டி வருவதாகக் காட்சிகள் மாறிவிடும். இன்றும் தாமஸ்தான் சீமோனுடன் திருவனந்தபுரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறான்.
மக்கள் கூட்டத்தோடு சீமோனின் தந்தை அந்தோணியும் கடலைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டார். ஊரே கடற்கரை மணலில் திரண்டிருக்க லூர்தம்மாள் மாத்திரம் வீட்டின் பின்புறம் தீவிரமாகச் சமையல் செய்து கொண்டிருந்தாள்.
இம்மண்ணில் அவள் உணவு சமைத்து வயிறுகளை வளர்க்கப் பிறந்தவள் போலதான் சமையல்கட்டில் உழைப்பவள். பத்தொன்பது வயதில் அந்தோணியைத் திருமணம் செய்து கொண்டு மூத்த மருமகளாக இந்த வீட்டிற்கு வந்த நாளன்று கரண்டியைப் பிடித்தவள். அந்தோணியின் தம்பிமார்களும் தங்கைமார்களுமாக எட்டு உருப்படிகள் திருமணமாகி வீட்டை விட்டு வெளியேறும் வரையிலும் பணி அதிகம் தான். அவர்கள் வீட்டாருக்கு மட்டுமின்றி ஊராருக்கும் சேர்த்தே சமைப்பாள். ஊரார் யார் வந்தாலும் லூர்தம்மாளின் கையால் உணவருந்தாமல் செல்ல மாட்டார்கள். அதுமட்டுமின்றி சீமோனும் அவன் பங்கிற்கு அவனது நண்பர்களில் யாரேனையும் ஒருவனைத் தினமும் அழைத்து வந்துவிடுவான் உணவு உண்பதற்கு. அதனால் எப்பொழுதும் ஏழு எட்டு பேர் சாப்பிடும் அளவிற்குத்தான் லூர்தம்மாள் சமைப்பது வழக்கம். குறைவாகச் சமைத்து அவள் கைகளுக்குப் பழக்கமே இல்லை.
“அவ ஆருன்னு தெரியுமா லேய்? அவளு ஒரே நாளில் ஐயாயிரம் பேருக்கு சோறு கொடுத்த யேசப்பனுக்க சீடர் ஆக்கும்லே கேட்டியா!” என்று அவ்வப்போது அந்தோணி கூறிச் சிரிப்பதுண்டு.
“எலேய் அந்தோணி… எனக்க ஊருல சொகமாக் கெடந்த என்னக் கொண்டு வந்து இந்த அணையா அடுப்புக்கு சொந்தக்காரி ஆக்குனது நீயில்லா?” என்று ஒரு இடியும் தருவாள் அந்தோணிக்கு லூர்தம்மாள்.
வீட்டின் பின்பக்கத்தில் இருந்த பெரிய அடுப்பில் சாதம் வெந்து கொதித்துக் கொண்டிருந்தது. மீன் குழம்பிற்கான மசாலாவை அம்மியில் அரைத்துக் கொண்டிருந்தாள் லூர்தம்மாள். முட்டத்தில் மீன் பிடிக்க யாரும் செல்லாததால் பக்கத்து கிராமத்திற்குச் சென்று அவளாகவே மீனும், கப்பை கிழங்கும் வாங்கி வந்திருந்தாள்.
நான்கு வீடுகள் தள்ளியிருந்த மேரியின் வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் டேங்க் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. லூர்தம்மாளுக்கு இதயத்தின் வெளியே ரத்தம் கசிந்தது அதைக் காண. நித்தம் உப்புத் தண்ணீரில் ஊறும் அவர்களுக்கு அரசு சுத்திகரித்து அனுப்பும் நல்ல தண்ணீர் என்பது தங்கப் பஸ்பம் போன்றது.
“குட்டேய் மேரீ… தண்ணி கீழ போவுதுடீ!” என்று லூர்தம்மாள் எழுப்பிய குரல், ஒலிப்பெருக்கியே இல்லாமல் கடற்கரையில் இருந்த மேரியின் செவிகளை எட்ட, கடற்கரை மணலைக் காற்றில் பறக்கவிட்டு ஓடோடி அவளது வீட்டிற்கு வந்து தண்ணீர் மோட்டரை நிறுத்தினாள். பிறகு மாடியில் இருந்து பார்த்தாள். லூர்தம்மாள் வியர்வைக் கொட்ட அடுப்பில் வெந்து கொண்டிருந்தாள். இவளிடம் யார் பேசுவது என்று தலையைக் கவிழ்த்துக் கொண்டு கடற்கரைக்குத் திரும்பிச் சென்றாள் மேரி.
“லூர்தம்மா என்ன செய்யா?” என்று மேரியிடம் அந்தோணி கேட்டார்.
“தீவிரமாட்டு சமையல் நடக்கு. மாமா நீ செல்லக் கூடாதா?”
“ம்… செல்லித்தானாக்கும் அடி வாங்கி வந்து இங்க மண்ணுல கெடக்கே” என்று லுங்கியைத் தூக்கிக் காலில் இருந்த காயத்தைக் காட்டினார்.
“ஐயோ ! என்ன ரத்தம் பீறிட்டு கெடக்கு!” என்று வாய்மேல் கையை வைத்தாள் மேரி.
“அடுப்புல கெடந்த வெறகக் கொண்டுல்லா அடுச்சா.” என்று அவரது கண்கள் கலங்கியது.
“மாமா இஞ்ச இரி. நான் மருந்து வாண்டிக் கொண்டு வாரேன். ஒங் கெழவி பிராந்து பிடுச்சுத்தான் கெடக்கா” என்று எழுந்து சென்றாள்.
“யம்மா… எலேய் லூர்தம்மா” என்று மைக்கேல் வீட்டின் வாசலின் நின்று அழைத்தான்.
“இந்தா வாரேன் வாரேன்” என்று வழிந்த வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டு முன் வாசலுக்கு ஓடினாள் லூர்தம்மாள்.
“இந்நா” என்று ஒரு பையை நீட்டினான்.
அதை வாங்கிப் பார்த்த லூர்தம்மாள்,
“எலேய் நீ என்னத்த வாங்கியிருக்க. தேங்கா மட்டுந்தான் கெடக்கு. மல்லியல எங்கலே?” என்று கேட்டாள்.
மைக்கேல் வாயை இறுக்கி மூடிக் கொண்டு லூர்தம்மாளையே இமைக்காமல் பார்த்து நின்றான்.
சிவந்திருந்த அவனது கண்களைக் கண்டவள்,
“எலேய் நீ குடுச்சியாலே?!” என்று கேட்டாள்.
அவன் பதில் ஏதும் பேசாமல் சிவந்த கண்களின் வழி கண்ணீரை வடித்தான். அவனது கால்கள் நடுக்கம் கொண்டன.
பையைக் கீழே வைத்துவிட்டுத் தன் பலம் கொண்ட மட்டும் அவனை அடிக்கத் துவங்கினாள்.
“எலேய் ஒனக்கு புத்தி உண்டாலே. குடிச்சு குடிச்சு ரெண்டு கிட்டினிய கொன்னா. இனி உனக்குத் தர எனக்கக் கிட்னிதாம்ப்லே உண்டு. மேலு குடியொக்கத் தொடங்கினியோ? ம்? தொடங்கினியோ?” என்று அடி விழுந்து கொண்டே இருந்தது.
லுங்கியில் மூத்திரம் கசிந்து கொண்டிருந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் நின்ற இடத்தை விட்டும் அசையாமல் அடியை வாங்கிக் கொண்டு அழுது கொண்டே நின்றிருந்தான் மைக்கேல்.
சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கும் ஜெனிஃபர் ஓடி வந்து தடுக்கவில்லை என்றால் அடி வாங்கியே மரித்திருப்பான்.

“நீ அவன விடு அத்த. அவன ஏன் நீ இப்புடி அடிக்கியா?” என்று லூர்தம்மாளைத் திட்டிவிட்டு, மைக்கேலிடம் திரும்பி,
“இங்கன இருந்து போலே மைக்கேலு.” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் ஜெனிஃபர். அவன் அழுது கொண்டே கடலை நோக்கி நடந்தான். அவன் ஒரு பத்து அடி வைத்திருப்பான். லூர்தம்மாள், அவனது காதில் எட்டும் படியாக,
“அம்ம அடிச்சான்னு கோவிக்கான்டா மோனே கேட்டியா. சீமோனு வந்த ஒடனே நீ வா. நல்ல ஊக்கஞ் சாப்பாடானு அம்ம செய்தது. சூட்டுல கெடந்து கெரங்காத கேட்டியா?” என்று கத்தினாள்.
லூர்தம்மாளிற்கு மேலும் கீழும் மூச்சு வாங்கியது.
“அத்த, ஒனக்கு என்ன மண்டைக்கு வெட்டா?” என்று கத்தினாள் ஜெனிஃபர்.
ஏதோ அப்பொழுதுதான் ஜெனிஃபரின் இருப்பை உணர்ந்தவள் போல அவளது முகத்திற்குப் பார்வையைத் திருப்பினாள் லூர்தம்மாள்.
“ஆ மோளே. கொஞ்சம் மல்லியல தருவியா, மீனு கறியில இடனும். அவியல் செஞ்சா முடிஞ்சு. சீமோனு வந்ததும் அத்த கொரலு கொடுக்கேன், நீயும் சோறு தின்ன வா கேட்டியா.” என்றாள்.
ஒரு கணம் லூர்தம்மாளின் விழிகளைப் பார்த்துவிட்டு, செய்வதறியாது ஜெனிஃபர் அவளது வீட்டிற்குச் சென்று கொத்தமல்லித்தழையை எடுத்து வந்து தந்தாள். அப்பொழுது வாசலில் ஜெனிஃபரின் அப்பா நின்று கொண்டிருந்ததைக் கண்டாள் லூர்தம்மாள்.
சற்று குரலை உயர்த்தி,
“மோளே! கேளு எந்தப் படுக்காளி குறுக்க நின்னாலும் அவன வெட்டி மீனுக்கு எரையாக்கிட்டு, எனக்க மோன உனக்கு நான் கெட்டி வைப்பேன் கேட்டியா?” என்று ஜெனிஃபரின் அப்பாவின் காதில் விழும்படி கத்திவிட்டு,
“போ மோளே போ. கரையாண்டா.” என்று ஜெனிஃபரின் கண்ணீரைத் தன் முந்தானையில் துடைத்துவிட்டுச் சமையல் செய்ய ஓடினாள்.
ஜெனிஃபரின் அப்பா பதில் ஏதும் சொல்லாமல், மைக்கேலைத் தொடர்ந்து தலையைக் கவிழ்த்துக் கொண்டு நடை போட்டார் கடலை நோக்கி.
மைக்கேல் சீமோனை விட மூன்று வயது இளையவன். உடன் பிறக்கவில்லை எனினும் சீமோனுக்கும் மைக்கேலுக்கும் இடையே பரஸ்பர சகோதரப் பாசம் உண்டு. சிறு வயது முதலே மைக்கேல் அவனது வீட்டில் உணவுண்டதைக் காட்டிலும் லூர்தம்மாவின் கையால் சாப்பிட்டதுதான் அதிகம். தொழிலுக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து குடிப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டு மிகச் சிறிய வயதிலேயே இரு சிறுநீரகமும் செயல் இழந்து போனது மைக்கேலுக்கு. சீமோன் செவிலியராகப் பணிபுரிந்த மருத்துவமனையில் மைக்கேலைப் பரிசோதித்த பொழுது உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.
மைக்கேலின் சிறுநீரக ஆபரேஷன் அன்று, அவனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு வரலாம் என்று லூர்தம்மாளை அழைத்துக் கொண்டு போனார் அந்தோணி. ஆபரேசன் தியேட்டரில் இருந்து ஸ்ட்ரெச்சரில் மயக்க நிலையில் சீமோனும் அழைத்து வரப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி ஆனாள் லூர்தம்மாள். பிறகுதான், சீமோன் தனது ஒரு சிறுநீரகத்தை மைக்கேலுக்குக் கொடுத்து அவனது உயிரைக் காப்பாற்றியதை அந்தோணி கூறினார்.
மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள் லூர்தம்மாள்.
“எலேய் அந்தோணி! இவன நான் எனக்கு பெக்கேலே. ஊருல்ல உள்ள எல்லாருக்கச் சிலுவயுஞ் செமக்கப் பெத்துருக்கேன்லே. ஆஸ்பித்திரீல இருந்து எறங்கவும் இவனுக்க பேர யேசப்பான்னு மாத்து.” என்று அழுது கொண்டே வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.
கடற்கரை மணலில் அமர்ந்திருந்த அந்தோணியின் அருகில் வந்தமர்ந்தாள் அவரது மூத்த மகள் எஸ்தர்.
“அப்பா!” என்று அணைத்துக் கொண்டாள்.
“எனக்க மக்களே!” என்று அவளது தலையைத் தடவிக் கொடுத்தார் அந்தோணி.
“அம்மா எங்க?” என்று எஸ்தர் கேட்டாள்.
“வீட்டில மோளே. அவ சமைக்கா. யாரு அவ கிட்ட பேசினாலும் சண்டைக்கு வாரா.”
“சரி நான் வாரே என்னா.” என்றவளிடம்,
“அவளவிட்டு கொறச்சு எட்டி நின்னு பேசு மோளே.” என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
எதிரில் மைக்கேல் தள்ளாடிக் கொண்டே வருவதைக் கண்டாள். சிவந்த அவனது ஈர விழிகளும், கன்னத்தில் படிந்திருந்த விரல் தடங்களும் லூர்தம்மாளின் மனநிலையைக் காட்டியது எஸ்தருக்கு. ஒரு வார்த்தைக் கூட பேசாமல் எஸ்தரைக் கடந்து சென்றான் மைக்கேல்.
தயங்கிக் கொண்டே வீட்டிற்குள் வந்த எஸ்தர் நேராக பின்புறத்திற்குச் சென்றாள். அணைந்த அடுப்பில் இருந்து மெல்லிய புகை வந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிறப் பூக்களால் நிறைந்திருந்த தங்க அரளி மரத்தின் அடியில் லூர்தம்மாள் படுத்திருப்பதைக் கண்டாள். சீமோன் அவனது நண்பன் வீட்டில் இருந்து கொண்டு வந்து நட்ட செடி, இன்று பெரிய மரமாக வளர்ந்து இருந்தது. லூர்தம்மாளைப் பார்த்தாள். இமைகள் மூடியிருந்தன. மூச்சுக்காற்று சீராக உள் சென்று வெளியேறுவது அவள் மேனியின் அசைவில் தெரிந்தது. அவள் மீது மஞ்சள் அரளிப் பூ சில விழுந்திருந்ததைக் கண்டாள்.
எஸ்தர் தயங்கிக் கொண்டே “அம்மா” என்றழைத்தாள்.
மகளின் குரல் கேட்டுக் கண் திறந்து எழுந்த லூர்தம்மாள் அருகில் இருந்த விளக்குமாற்றைக் கையில் எடுத்து அதன் பின்புறத்தை உள்ளங்கையில் அடித்துச் சமமாக்கினாள். சற்று பயந்த எஸ்தர் நின்றிருந்த இடத்தில் இருந்து இரண்டடி பின் நகர்ந்து மீண்டும் அழைத்தாள்.
“அம்மா உன்னத் தான்.”
லூர்தம்மாள் அமைதியாக விளக்குமாற்றால் குப்பையைத் தள்ளத் துவங்கினாள்.
“அம்மா, நீ எதக் கண்டு ஓடுஆ?”
விளக்குமாற்றின் வேகம் கூடியது. எஸ்தர் அழத் துவங்கினாள்.
“அவன் மரிச்சுப்போயி அம்மா. சீமோனு நம்மள விட்டுப் போயி.” என்றழுதாள்.
பற்களைக் கடித்துக் கொண்டு, “குட்டேய்!” என்று கத்தியபடி விளக்குமாற்றைக் கீழே வீசி விட்டுப் படியில் இருந்த அரிவாளை எடுத்து ஓங்கிக் கொண்டு எஸ்தரை நோக்கி ஓடினாள் லூர்தம்மாள். பயந்து போன எஸ்தர் வீட்டை விட்டு ஓடி வாசலில் போய் நின்று கொண்டாள்.
“குட்டேய்… எனக்க பிறவியில நான் செஞ்ச பெரும் பாவம் என்ன தெரியுமாட்டி? உன்ன எனக்க கருவில கொல்லாத்ததுதா நான் செஞ்ச பெரிய பாவம். நீ காதலுச்சவன கைப்பிடிக்க, உனக்க மாமியாக்காரி கேட்ட நகயக் கொட்டிக் கொடுக்கானல்லா உனக்க அப்பன் கடன வாங்கியது. அத அடச்சுக் கொண்டாடல்ல எனக்க மவன பிளைட்டு ஏத்தி விட்டது ரெண்டு பேருங் கூடி. கடலோடும், மண்ணோடும், மீனோடும் கூடி சொகமா இருந்த எனக்க மவன ஒஞ் சிலுவையத் தூக்க வேண்டியல்லா நீ அனுப்பியது. குட்டேய்! எனக்க கண்ணு முன்ன நிக்காத. கொன்னு கடல்ல இட்டுறுவேன்.” என்று எச்சரித்தாள் லூர்தம்மாள்.
“அம்மா நான்தான் பாவி. எனக்க தம்பியக் கொன்ன பாவி!” என்று தன்னையே அடித்துக் கொண்டு அழுதாள் எஸ்தர்.
“அவன் வருவான். எனக்க மவன் சொம தாங்கியாக்கும். அவன் செல்லிருக்கான். அவன் வருவான். வந்து அவனோட குவேய்த்துக்கு என்னயக் கூட்டிக் கொண்டு போவான். அவன் செல்லிருக்கான். அவன் வருவான். அப்பனும் மோளும் அனாதயாக் கெடங்க.” என்று அடித்துக் கூறினாள் லூர்தம்மாள்.
“அம்மா, அது நீ அவன நெனச்சு நெனச்சுக் கண்ட கனவாக்கும். அம்மா, சீமோனு வேல செய்த ஆஸ்பத்திரியில நெருப்பு பிடிச்சு, நெறய ஆட்கள் ஜன்னல் வழியா சாடி குதிச்சு மரிச்சதா. அதுல நம்ம சீமோனும் சாடியதா அம்மா. அவனும் மரிச்சு போயி. செல்லுயத ஒண்ணு கேளு அம்மா.” என்று மெல்ல அருகில் சென்றாள்.
உடனே அரிவாளை ஓங்கிய லூர்தம்மாள்,
“எனக்க கிட்ட வாராதட்டி! எனக்க மவன் உசிருக்கு பயந்து சாடிச் சாவுறவன் இல்ல கேட்டியாட்டி?” என்றாள் ஆவேசமாக.
பயந்து போன எஸ்தர் நகராமல் நின்றாள்.
“குட்டேய்… நகைய வாண்டிட்டு நீ என்னட்டி சென்ன? எடது கை தாரது வலது கைக்கு தெரியக் கூடாதுன்னு சென்னேலட்டி நீ. வேதம்… நாயீ… நாய், வேதம் பேசினியாக்கும் நாய் நீ. குட்டேய், கொடுத்தவனுக்கு தான்டீ தெரியக் கூடாதுன்னு கடவுள் சென்னது. ரெண்டு கை கொண்டு பைசா வாங்குன குண்டிக்கு தெரியணுட்டி. இந்நா எனக்க கழுத்துல இருக்குயது இந்த ரண்டு பவுனு சங்கிலிதான். இந்நா இதயுங் கொண்டு போ. எனக்க கண்ணு முன்ன நிக்காத… போ…” என்று தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இழுக்க அது ஒரே இழுவையில் லூர்தம்மாளின் கையில் அகப்பட, தூக்கி எஸ்தரின் மீது வீசினாள். அது எஸ்தர் மீது பட்டு மண்ணைத் தொட்டது.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் எஸ்தர் அங்கிருந்து விலகி கடற்கரையை நோக்கி அழுது கொண்டே நடந்தாள்.
அரிவாளை வைத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்ற லூர்தம்மாள் தாமஸ்ஸிற்குத் தனது செல்போனின் வழி அழைத்தாள். இரண்டு முறை கழிந்து மூன்றாம் முறை தான் பதிலளித்தான் தாமஸ்.
“ஆ மோனே! சீமோன கூட்டிக் கொண்டு நேர வீட்டுக்கு வா கேட்டியா. ஓட்டல்ல எங்கயும் சாப்பிடாத. அம்ம நல்லா மீனு கறியும், மீனு பொறுச்சதும், அவியலும், கப்பையும் ஒருக்கச் செஞ்சாச்சு.” என்றாள்.
“அம்மா!” என்று தேம்பினான் தாமஸ்.
“ஆ சரி மோனே!” என்று போனைத் துண்டித்துவிட்டு தனது அறைக்குச் சென்று ஒரு பயணப் பையை எடுத்து அதில் தனது உடைகளை எடுத்து வைக்கத் துவங்கினாள்.
“அக்கா!” என்று குரல் கேட்டது. துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த லூர்தம்மாள் தன் அறையை விட்டு வெளியே எட்டிப் பார்த்தாள். பாதரியாரும் தனது தம்பியுமான பிலிப் நிற்பதைக் கண்டாள்.
“என்ன சாமியாரே?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள்.
“அக்கா, இஞ்ச நீ என்ன செய்யா? இன்னும் கொஞ்ச நேரத்துல சீமோனு ஒடலு வரும்.” என்றார் பிலிப்.
“எலேய் பிலிப்பே… இஞ்ச இருந்து எறங்கிப் போலே.” ஆத்திரம் அவளது கண்களில் பொங்கியது.
“அக்கா. சீமோனுக்க குணம் நீ அறியாத்தது இல்ல. அவன் கடவுளோட ராஜ்ஜியத்திலே சொகமா இருப்பான். கோதுமை மணி மண்ணுல விழுந்து மடியா விட்டா…” என்று பிலிப், விவிலியத்தின் வசனத்தை முடிப்பதற்குள் பளார் என அடி அவரது கன்னத்தில் விழுந்தது.
“லே பிலிப்பே நீ மிண்டாதிரு, உனக்கப் பிரசங்கத்தக் கேட்டுக் கேட்டாக்கும் எனக்க மவன் ஊரு மக்களுக்க பாடுகளச் செமந்தது. உனக்க பேச்சக் கேட்டாக்கும்லே அவன் மக்களுக்கு சேவ செய்ய நர்ஸ்ஸூ வேலைக்குப் போனது. அது கொண்டுல்ல அவன எல்லாருங் கூடி பிளைட்டு ஏத்தி விட்டது. அவனு ஒருக்காலும் பயந்து சாடி சாவுறவனில்ல கேட்டியாலே. அவனுக்க சிநேகிதன நடுக்கடல்ல இருந்து, பத்து நாளு கூடி நீந்திக் கரை கொண்டு சேத்தவனாக்கும்லே எனக்க மவன். அவன் சாவுக்கு பயந்தவன் இல்லலே. மரிச்சது எனக்க மவனில்ல. இந்த முட்டத்து மண்ணில எவஞ் சாகக் கெடபின்னு, எனக்க மவன் அவனுக்க இரத்தங் கொடுத்துக் காப்பாத்தினவனாக்கும்லே.” என்று மார் தட்டிக் கொண்டே கூறிவிட்டு, “மிண்டாது இருந்தெங்கில் உனக்குக் கொள்ளாம்.” என்று மூச்சிரைக்க எச்சரித்துவிட்டு லூர்தம்மாள் தன் அறைக்குள் சென்று கதவைத் தாழ் இட்டுத் தனது துணிகளை எடுத்து வைப்பதைத் தொடர்ந்தாள்.
பிலிப், கண்ணீரோடு வீட்டின் வெளியே சென்றார். ஒரு வெள்ளை வேன் தெரு முனையில் திரும்புவதைக் கண்டார். சீமோனின் உடலோடு வந்து சேர்ந்தான் தாமஸ். மந்திரம் சொல்லி சீமோனின் உடலையும் ஆன்மாவையும் ஆற்றுப்படுத்தத் தயாரானார் பிலிப்.
உப்புக் காற்றின் ஓலம் கேட்டது. சீமோனின் கையால் தானியம் உண்ட புறாக்கள் ஆலயத்தின் மேல் சலனத்தோடு பறந்தன. ஊரே மார்பில் அடித்துக் கொண்டு ஓடியது அவனை நோக்கி.
“மோனே!” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தடுமாறி ஓடினார் அந்தோணி.
குற்ற உணர்வால் இதயம் வெடிப்பது போல ஓலமிட்டாள் எஸ்தர்.
ஊர் மக்களின் ஒப்பாரிச் சத்தம் கேட்டு, இதயத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தனது வீட்டில் இருந்து வெளியே வந்தாள் ஜெனிஃபர். கடைசியாக சீமோன் தந்து விட்டுப் போன முத்தங்களின் ஈரத்தை தேகமெங்கும் தேடினாள்.
ஜெனிஃபரைக் கண்டவுடன் தாமஸ் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.
“தங்கச்சி… எனக்க நண்பனக் கடைசியாக் கூட்டி வந்துட்டேன்.” என்றழுது கொண்டே சீமோன் எப்படி இறந்தான் எனச் சொன்னான் அவளிடம்.
ஊர் ஒன்று சூழ சீமோனின் உடலைக் கொண்டு வந்து கொண்டிருந்தனர் அவனது வீடு நோக்கி. ஜெனிஃபர் சீமோனின் வீட்டினுள் ஓடினாள் லூர்தம்மாளை அழைத்துக் கொண்டே.
“அத்த கதவத் தெறந்து வெளிய வா.” என்றாள்.
லூர்தம்மாள் பதில் பேசவில்லை.
“ஒருக்க வெளிய வா. கடைசியா சீமோன வந்து பாரு.”
லூர்தம்மாள் அமைதி காத்தாள். அலமாரியை மூடும் சத்தம் கேட்டது உள்ளிருந்து.
சீமோனின் உடலை நடு வீட்டில் கொண்டு வந்து கிடத்தினர்.
“நீ சென்னது சரிதான் கேட்டியா லூர்தம்மா. உனக்க மவன் உசிருக்கு பயந்து சாடல கேட்டியா. ஒரு பிள்ளையோட உயிரக் காப்பாத்த அதத் துணியல கட்டிச் சாடி மல்லாக்க விழுந்து மரிச்சானாம் எனக்க சீமோனு.” என்று அழுது கொண்டே கூறினாள் ஜெனிஃபர்.
“அந்தோணி நான் சென்னன்லா, எனக்க மவன் வருவான்னு!” என்று லூர்தம்மாள் கத்தினாள் உள்ளிருந்து.
மிகச்சரளமாய், அழகிய வட்டார வழக்கோடும் பிரமாதமாய் இருந்தது. பைபிள் வசனத்திற்கு புதிய வெளிப்பாடுகளோடும் இருந்தது. வலது கை செய்வது யாருடைய இடது கைக்குத் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதும் யார் அதை மறவாமல் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும் சிறப்பு. கோதுமை மணிகள் மற்றவர்களுக்காய் சுலபமாய் மண்ணில் விழுந்து பலனளிக்கக்கூடும். ஆனால் அதை நம்பி இருக்கும் ஆத்துமாக்களை உயிரோடு இருக்கும் வரையில் நரகத்தில் அல்லவோ தள்ளும். மலர்விழி மணியத்திற்கு வாழ்த்துக்கள்💐💐
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
சீமோன் என்ற கோதுமை மணியின் கதையை மிகுந்த உணர்வுப்பூர்வமாக படைத்திருக்கிறீர்கள். லூர்தம்மாள் பெரும் ஆளுமையெனத் திரண்டு வந்து சீமோனை அவனின் பாடுகளை விளைச்சலை கடத்தியிருக்கிறார்.
நல்ல கதை மலர்விழி
சிறுகதையில் வட்டார வழக்கு வார்த்தைகள் ரொம்ப அருமை. லூர்தம்மாள் இனி எப்படி வாழ்வாள் என்று எண்ண வைத்து விட்டார் மலர்விழி மணியம். வெகு ஜோரான சிறுகதை. காலத்துக்கும் மனதில் நிற்கும் மா. வாழ்த்துகள்