
ஒரு மெல்லிய ஒலியிலிருந்தே அனைத்தும் தொடங்கியது. நள்ளிரவில் அந்த ஒலியை அவன் கேட்டான். எண்ணெய் குமிழ்கள் மெல்ல மெல்ல நீரின் மேற்பரப்பில் தோன்றி பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வண்ணமயமான கோளங்களாக அழகாக நீரில் பரவுவது போல் அமைந்திருந்தது அந்த ஒலி. கர முர கர முர ஒலி… தலை முடியைக் கோதிக் கொண்டு சோபாவிலிருந்து எழுந்தமர்ந்தான். அது கனவில் கேட்ட சத்தம் என முதலில் நினைத்தான். சற்றுமுன் சோபாவிலேயே கண் அயர்ந்து தூங்கிவிட்டிருந்தான். அவன் உடலிலிருந்து கசிந்த வியர்வைத் துளிகளால் சோபா நனைந்திருந்தது. ஒரு நாள் பொழுதே கழியப் போகிறது. தொலைக்காட்சி இன்னும் அணைக்கப்படாமல் ஒருநாள் ஒளிபரப்பு முடியும் முன்னர் ஒலிபரப்பாகும் தேசிய கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தது. நாளிதழ்களுக்கும் குழந்தை பராமரிப்பு இதழ்களுக்கும் மத்தியில் விரைவாக ரிமொட்டைக் கண்டுபிடிக்க போராடியது அவனது கைகள். எப்படியோ சோபாவின் இடுக்கிலிருந்து ரிமொட்டைக் கண்டெடுத்துத் தொலைக்காட்சியை முடக்கினான். அந்த மெல்லிய ஒலி, ஒலித்தும் மறைந்தும் அவனிடம் விளையாடிக் கொண்டிருந்தது. செவிகளைத் தீட்டிக் கொண்டு அந்த ஒலியைக் கவனமாகச் செவிமடுத்தும் அவனுக்கு அது என்ன ஒலியென்று புலப்படவில்லை. எழுந்து சென்று மின்விசிறியை முடக்கினான். சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் ஒலி அடங்கியவுடன் அறையெங்கும் நிசப்தம் நிரம்பி, வெப்பம் பரவக் குப்பென்று வியர்த்தது. வரவேற்பறை இப்போது இறுக மூடப்பட்ட பெட்டகம் போல அமைதியாக இருந்தது. பட்டாம்பூச்சியைப் பிடிக்க துடிப்பவன் அதன் மெல்லிய இறக்கைகளின் அசைவை எதிர்பார்த்து மௌனமாகக் காத்திருப்பதைப் போல அவனும் மூச்சை அடக்கிக் கொண்டு மௌனமாக அந்த ஒலியைக் கேட்க முனைந்தான். வினாடி முள்ளை மிக மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்தது சுவரில் மாட்டப்பட்டிருந்த பழுதடைந்த கடிகாரம். டியூப் விளக்கு வெளிச்சத்தால் கவரப்பட்ட ஈசல்கள் சில மிகுந்த நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் வெளிச்சத்தைச் சுற்றி வெகு நேரமாகப் பறந்து கொண்டிருந்தன. ஈசல்களின் கீதம்கூட மென்மையாகத்தான் இருந்தது… ’ரீ ரீ ரீ’ அபார்ட்மெண்டிற்குக் கீழே வாகன நிறுத்துமிடத்தில் ஏதோ ஒரு காரின் அபாய சமிக்ஞை அலறிக் கொண்டிருந்தது. வேறொரு மாடியில் துயில்கொள்ள விருப்பமில்லாமல் அடம்பிடிக்கும் குழந்தையின் அழுகுரலும் கேட்டது.
நிசப்தமும் வெப்பமும் நிறைந்திருந்த வரவேற்பு அறையில் அவன், தன்னைச் சூழ்ந்திருந்தவற்றிலிருந்து எழுகின்ற ஒவ்வொரு சப்தங்களையும் அடையாளங் காண முயற்சித்துக் கொண்டிருந்தான். சற்று பொறுத்து, நீங்காத மௌனத்தால் நிறைந்திருந்த அந்த அறையில் மீண்டும் அவன் காதுகளுக்குக் கேட்டது பற்களை நறநறப்பது போன்ற அந்தச் சப்தம். படுக்கையறையிலிருந்துதான் அவ்வொலி வருவது போல தோன்றியது. உறங்கிக் கொண்டிருந்த மனைவி விழித்துக் கொண்டுவிட்டாளோ என்றெண்ணி அவன் மெல்ல அறை கதவைத் திறந்தான். வரவேற்பு அறையின் வெளிச்சம் படுக்கையறைக்கும் பரவியது. அவன் மங்கிய வெளிச்சத்தில் தன் மனைவி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிருப்பதைக் கண்டான். அவளின் அருகில் சென்று, கவனித்தபோது அவள் பல்லிடுக்கில் நறநற சத்தம் வந்து கொண்டிருந்தது. காதுகளை மெல்ல அவள் பக்கம் சாய்த்து, அவள் பற்கள் ஒன்றொடொன்று உரசிக் கொண்டு எழுப்பும் நறநற என்ற ஓசையைக் கேட்டான். இரவு முழுவதும் அவள் தூக்கத்திலே பற்களை நறநறத்துக் கொண்டிருந்தாள்.
படுக்கையறை சுவரில் பூசப்பட்டிருந்த வெண்நிறச் சாயத்தின் வாடை இன்னும் அறை முழுதும் வீசிக் கொண்டிருந்தது. அவன் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளைத் தாண்டிச் சென்று மங்கிய பார்வையோடு விளக்கைத் திறக்க முயற்சித்து தவறுதலாக விசிறியைச் சுழலவிட்டான். தடுமாற்றத்துடன் மீண்டும் முயற்சித்து அறையின் விளக்கைத் திறந்தான். விளக்கு மின்னி மின்னி ஒளிர்ந்தது. ஸ்னூபி கார்ட்டூன் பொறித்திருந்த இரவு ஆடையில், அவன் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். வெளிறிய முகத்தோடு கண்ணிமைகள் மெல்ல துடித்துக் கொண்டிருந்தன. போர்வைக்குள் இரண்டு சுண்டெலிகள் ஒன்றையொன்று துரத்துவது போல் அவளின் மூடிய இமைகளுக்குள் கண்கள் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.
நீண்ட கனாவில் திளைத்திருப்பவள் போல் நறநற சப்தத்தோடு பற்களை நறநறத்துக் கொண்டிருந்த அவளின் அருகில் அமர்ந்து கொண்ட அவன் அவளை உற்றுக் கவனித்தான். அவளின் கூந்தலை மெல்ல வருடி, காது மடல்களுக்குப் பின்னால் அதனை செருகிச் சரி செய்தான். மெல்ல தன் தலையைத் தாழ்த்தி, அவளின் பெயரைக் கிசுகிசுத்தான்.
அவள் நித்திரையில் மூழ்கி வெகு நேரமாகிவிட்டது. அதை அறியாதவன் போல் அவன் அவளின் பெயரைக் கிசுகிசுத்துக் கொண்டே இருந்தான்.
அவன் மனைவி நேற்று இரவு போலவே இன்றும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தாள். விளக்கை அணைத்துவிட்டு மெல்ல கதவை மூடி வரவேற்பறைக்கு வந்தான். மேலும் அதிகமான ஈசல்கள் விளக்கைச் சுற்றி படையெடுத்துக் கொண்டிருந்தன. சில ஈசல்கள் மெல்லிய இறக்கைகளை இழந்து தரையில் பதற்றத்துடன் அலைந்து கொண்டிருந்தன. வேனிற்காலம் என்பதனால் ஒரு துளி மழை நீர்கூட இல்லாமல் இடமே புழுக்கமாக இருந்தது. அவன் உடனே சாளரத்தைத் திறந்தான். எதிரிலிருந்த அபார்ட்மெண்ட், விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அங்குள்ளவர்களில் சிலர் உறங்கிவிட்டனர். சிலர் இன்னும் விழித்திருந்தனர்.
அவனுக்கு எதிரில் தெரிந்த அடுக்குமாடி தொகுதிகளின் இரு கட்டிடங்களும், இரண்டாகப் பிளக்கப்பட்ட எறும்புப் புற்றைப் போல் அமைந்திருந்தன. வான் முட்டி நிற்கும் அக்கட்டடங்கள் பரந்த வெளிக்காட்சியைப் பார்க்கவிடாமல் அவன் பார்வையைத் தடுத்துக் கொண்டிருந்தன. தூரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெளிச்சம், அந்த நகரத்தின் உயிர்நாடியான பகுதியை மட்டும் அவனுக்குக் காட்டியது. அந்த இரு கட்டடங்களுக்கு இடையிலும் நீள்சதுர வடிவில் இரவு நேரத் தோற்றம் தெரிந்தது. இரண்டு பிஸ்கட் துண்டுகளுக்கிடையில் ததும்பும் இனிப்பைப் போல விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
நள்ளிரவாகியும் வானம் இன்னும் சிவப்பேறி அடர்த்தியான மேகங்களால் சூழ்ந்திருந்தது. அபார்ட்மெண்டிற்குப் பின்னால் உள்ள சாலையோர விளக்குகள் மஞ்சள் புள்ளிக் கோடாக தெரிந்தன. அந்த நீண்ட இரவில் மஞ்சள் விளக்குகளுக்கு மத்தியில் வெண்நிற ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தன இரண்டு பிரமாண்ட கோபுரங்கள். மஞ்சள் வெளிச்சத்திற்கு மத்தியில் அதன் வெண்மை பிரகாசம் தனித்து தெரிந்தது. அக்கோபுரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெண்ணிற ஒளியின் சுழற்சியில் உருவானவைப் போல் தோன்றின.
இந்தச் சிறிய வீட்டை அவனும் அவனது மனைவியும் வாங்கியபோது தரை வரை நீண்டிருந்த அதன் சாளரத்தின் வழி இரவின் அழகை ரசித்துக் கொண்டே திளைத்திருக்கலாம் என எண்ணியிருக்கக்கூடும். மற்ற இடங்களைக் காட்டிலும் இந்த வீடு பாதி விலைக்கும் குறைந்த விலைக்குக் கிடைத்தது என்பதைத் தவிர இது பழைய அபார்ட்மெண்ட், அந்நியத் தொழிலாளர்களும் கருப்பர்களும் அதிகம் வசிக்கக்கூடிய அபார்ட்மெண்ட் என எதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் இந்த வீட்டை வாங்கினர். சொந்த வீடு வாங்க எண்ணம் கொண்ட நாள் முதல், அவர்கள் நகரத்தைச் சுற்றி அலைந்து திரிந்ததும் புதிய புதிய முகவரி வீடுகளாக ஏறி இறங்கிய தருணங்களும் நீங்காத நினைவுகளாக அவனுக்குள் பதிந்திருந்தன.
அதிரடியான வீட்டு விலை அவனின் நம்பிக்கையைக் குழைத்தது. அதோடு, ஒவ்வொரு முறையும் சாமார்த்தியமாகக் காய் நகர்த்தும் வீட்டுத் தரகர்களுக்கு முன் பேரம் பேசுவதில் திறமையற்ற அவன் அசௌகரியமாக உணர்ந்து நின்றான்.
ஆனால், வீட்டுத் தரகர்களின் சூட்சமத்தையும் கணவனின் தடுமாற்றத்தையும் அறிந்த அவனின் மனைவியோ, தரகர்கள் கூறும் வீட்டைப் பார்வையிட வேண்டும் என, ஒவ்வொரு முறையும் அங்குள்ள பொருட்களைத் தொட்டுத் தட்டிப் பார்ப்பது, கதவுகளின் திருகாணிகளையும் நீர் குழாய்களையும் உற்று கவனித்துச் சரிப்பார்ப்பது எனப் பல வித்தைகளை எந்தவொரு சோர்வின்றி நிகழ்த்திக் காட்டுவாள். அன்று அவர்கள் வெகு தூரத்திலிருந்து இந்த வீட்டைப் பார்வையிட வந்த தருணத்தை அவன் நினைத்துப் பார்த்தான். அரை நாளை அவர்கள் அங்கேயே கழித்தார்கள். அவள் வீட்டுத் தரகரிடமிருந்து விலகி, அவனைச் சமயலறைக்கு அழைத்துச் சென்று “இந்த வீடு சரியான தேர்வு என்று உனக்குத் தோன்றவில்லையா? ஒவ்வொரு ஆண்டும் சீனப் புத்தாண்டின்போது வீட்டுக்குள்ளேயே அமர்ந்து கொண்டு நாம் இரட்டை கோபுரத்தில் வெடிக்கப்படும் வானவேடிக்கையைப் பார்த்து ரசிக்கலாம்,” என அவளின் எண்ணத்தை அவன் காதில் கிசுகிசுத்து மகிழ்ந்தாள்.
பின்னர் மெக்டொனால்ட்ஸில் இருவரும் வீட்டுத் தரகரின் கூடுதல் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், தரகர் கூறியதற்கு நேர்விரோதமாக அந்த இடம் விளையாட்டுப் பூங்காவில் கூடியிருந்த சிறுவர்களின் கூச்சலால் நிரம்பியிருந்தது. வீட்டுத் தரகர் கூறியது யதார்த்தத்தோடு ஒத்துப் போகவில்லை.
அதைவிட ஆங்கிலத்திலிருந்த அந்த ஒப்பந்தப் பத்திரம் முற்றிலும் நிஜத்திற்கு எதிரானது போல அமைந்திருந்தது. அவன் அப்பத்திரங்களில் தரகர் சொன்ன இடங்களில் கையொப்பமிட்டான். “எல்லா பக்கங்களிலும் கையொப்பமிட வேண்டுமா?” எனச் சந்தேகத்துடன் கேட்டவனிடம் தரகர் “ஆமாம்” என அலட்சியத்தோடே பதிலளித்தான். நீண்ட நேரம் கைகள் வியர்க்க அந்த ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிட்டது இன்னும் அவனுக்கு நினைவிருந்தது. மிகக் கவனமாகவும் பதற்றத்துடனும் அவன் தரகரிடம் முதல் காசோலையை நீட்டினான். அவர்களின் வாழ்க்கையின் ஒரு பாதியைக் கொடுப்பது போல் கணமேறிக்கிடந்தது காசோலையின் காகிதம். இத்தனை காலமாக அவர்கள் சேமித்து வைத்த பணம் அது. அவன் அவளைத் கடைக்கண்ணில் நோக்கினான். அவள் மோவாய்க் கட்டையைக் கையில் ஊன்றிக் கொண்டு அறிமுகமில்லாத அச்சிறுவர்கள் பிளாஸ்டிக்காலான சறுக்கில் ஏறி, இறங்கி விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். சாந்தமும் மென்மையும் பரவி மலர்ந்திருந்தது அவளுடைய முகம்.
ஆகவே அவர்கள் மூன்று ஆண்டு வாடகை அறை வாழ்க்கையை ஒரு நிறைவுக்குக் கொண்டு வந்தார்கள். தங்கள் பொருட்களைச் சிறிய, பெரிய பெட்டிகளில் நிரப்பினர். ஒவ்வொரு முறையும் வீடு மாற்றலாகிச் செல்லும்போது, அவள் தூக்கி வீச மனமில்லாமல் சேகரித்த பால்யக் கால நினைவு சின்னங்களும் அவர்களுடன் இணைந்தே பயணிக்கும். இந்த முறையும் இத்தனை காலமாகப் பாதுகாத்து வந்த நிறம் வெளுத்துப்போன கரடி பொம்மை, உடைகள், தாள், பயணங்களில் வாங்கிய நினைவு பரிசுகள், நூல்கள், ஆல்பம் என அனைத்தையும் பெட்டிகளில் அடைத்தனர். பெரும் பண்டிகையைக் கொண்டாடுபவள் போல் அவள் புதிய மனைக்குக் குடிபெயரப் போகும் நாளை எண்ணி பேரின்பத்தில் திளைத்திருந்தாள். படுக்கைக்குக் கீழ், டிராயரில் ஏதாவதொரு பழைய பொருட்களைக் கண்டுவிட்டாலும் போதும், அவள் “ஆ… இந்தப் படத்தைப் பார். நான் தொலைந்துவிட்டது என நினைத்தேன் ஆனால் இன்னும் இருக்கு,” எனக் கூறி ஆனந்தம் கொள்வாள். அவளின் பதின்ம கால நினைவுகளைக் கதைகளாகக் கூறும் அவளின் போக்கு என்றும் நின்றபாடில்லை.
சிறுமியாகவே மாறி அவள் அக்கதைகளைக் கூறும்போதெல்லாம், சூரிய ஒளியில் மிளிரும் அவளின் சிவந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் சாந்தமாகப் புன்னகையை வீசி தலையாட்டிக் கொள்வான். எந்தப் பொருளையும் மறந்துவிட்டுவிடக்கூடாது என அவன் படுக்கை, அலமாரி என அனைத்தையும் வேர்த்து விறுவிறுக்க மீண்டும் மீண்டும் நோட்டமிட்டு உறுதிபடுத்திக் கொண்டான். வீடே காலியாகிவிட்டிருந்தது. எப்படியோ அவனின் வெள்ளை கன்சில் காரில் அனைத்து பொருட்களையும் ஏற்றிக் கொண்டு அங்கும் இங்குமாய் பல முறை அலைந்து திரிந்து புதிய வீட்டிற்குப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தான்.
“இது நம்ம சொந்த வீடு…” என அவள் கையில் துடைப்பத்தோடு பெட்டியில் அமர்ந்து கொண்டே முகத்தில் புன்னகை மலர கூறினாள். அப்பொழுது வீட்டிற்கான தளவாடப் பொருட்களைக்கூட அவர்கள் இன்னும் வாங்கவில்லை; சுவர்கூட வெற்று சுவராகவே இருந்தது. பேசினால் சந்தோஷ ஒலி எதிரொலிக்கும் வகையில் அந்த வீடே காலியாக இருந்தது.
இறுதியாக, கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட படகைப் போல் அந்த நகரத்தில் அவர்களுக்கான நிரந்தரமான ஓர் இடத்தில் இருவரும் குடியேறினர். அவன் சிந்தனைகள் மேலும் நீண்டன. அவனும் அவனது மனைவியும் வெவ்வேறு கம்பத்தைச் சேர்ந்தவர்களாகயிருந்தாலும் இருவருமே பல ஆண்டுகளாக இப்பெருநகரத்தில் பணி புரிகின்றனர். அவள் நகரத்திற்கு வருவதற்கு முன்னரே, அவன் இடைநிலைக்கல்வியை முடித்தவுடனே கலை துறையில் மேற்படிப்பைத் தொடர கம்பத்தைவிட்டு வெளியேறி தன்னந்தனியாக நகரத்திற்கு வந்துவிட்டான். பின்னர் பத்திரிக்கை அச்சகத்தில் வர்ணம் சேர்க்கும் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தான். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக அவன் நகரத்தில் வசித்துக் கொண்டிருந்தாலும் அவனால் இன்னும் கான்டோனிஸ் மொழியில் சரளமாகப் பேச இயலாததை அவன் மனைவி சில சமயங்களில் சீண்டுவாள். ஒவ்வொரு முறையும் உணவு ஆர்டர் செய்யும்போதெல்லாம் ‘லியோங்சியோய்(ஐஸ் டீ)’ என்பதனை ‘லியாங்ஷீ’ என்று கூறி தனக்குத் தானே சிரித்துக் கொள்வான். வேறு ஒன்றும் செய்ய முடியாது. நுனி நாக்கை மிக நுட்பமாகச் சுழித்து கான்டோனிஸ் சொற்களை உச்சரிக்கும் திறமை அவனுக்குக் கைவரவில்லை. அந்த மொழியை மேலும் ஆழமாக அவனால் கற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த நகரமே ஏதோ ஒரு ரகசியத்தைத் தனக்குள் மறைத்து வைத்திருப்பது போல அவனுக்குத் தோன்றும். எத்தனையோ ஆண்டுகளாக நகரத்தில் தங்கியிருந்தாலும் இன்னும் வழி தெரியாமல் நடு ரோட்டில் திக்கித் திணறுவதும் சாலையின் பெயர் பலகைகள்கூட தவறான வழியைக் காட்டுவது போன்ற சூழல்களால் அவன் திக்பிரமை பிடித்தவன் போல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவான். ஒவ்வொரு முறையும் அறிமுகமில்லாத இடத்திலிருந்து மற்றொரு அறிமுகமில்லாத இடத்திற்குப் குடிபெயர்ந்து கொண்டிருந்தாலும் இந்த நகரிலே நிரந்தரமாகக் குடியேறிட என்றுமே நினைத்ததில்லை. ஆனால், இப்பொழுது இந்தச் சாளரத்தின் வழி தூரத்தில் ஒளிரும் நகரத்தைக் கண்டு கொண்டிருக்கிறான். ஆயினும் அவன் தேடும் நிரந்தரத்தை அவன் இன்னும் உணரவில்லை. அவர்கள் இந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்தபோது வீடே காலியாக இருந்தது அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது.
இந்தப் பழைய வீட்டுச் சுவர்களில் நீர் சொட்டுக்கள் பழுப்பு நிறமேறி உலர்ந்த மலர் சரம் போல் அதன் தடயங்களைப் பதித்து வைத்திருந்தது. மெழுகுவர்த்திகள் உருகி ஏற்படுத்திய தடயங்கள்கூட மங்கிக் கிடந்தன. மரத் தரையின் சிறு சிறு ஓடுகள் தரையைவிட்டு வெளியேறத் தொடங்கியிருந்தன. அவள் தரையைக் கழுவும்போதெல்லாம் நீட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பலகைகளைப் கால் விரலால் தரையின் துளைக்குள் சிரமப்பட்டு இணைப்பாள். கழுவப்பட்ட தரையில் நடக்கும்போதெல்லாம், அந்தத் தரையில் நீட்டிக் கொண்டிருக்கும் பலகை ஓடுகள் கால் பாதத்தோடு ஒட்டிக் கொள்ளும். அதனை கால் விரல்களால் நீக்கி அவள் சரி செய்யும்போதெல்லாம் ஈரத்தில் வழுக்கி விழுந்து விடக்கூடும் என்ற அச்சம் எழ “ஆய், நீ கவனமா இருக்க வேண்டும்…” என அவளை அவன் எச்சரிப்பான்.
அப்போது அவள் இரண்டு மாதக் கர்ப்பிணி. புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்து சில நாட்களே ஆகியிருந்தன. அவளைக் கனமான பொருட்களைத் தூக்கவோ, உயரமான இடத்திற்கு ஏறி இறங்கவோ அவன் அனுமதிக்கவில்லை. அந்தச் சிறிய வீடு இரண்டு அறைகளும் ஒரு வரவேற்பு அறையும் கொண்டிருந்தது. அதில் சிறிய அறையொன்றை அவள் பிறக்கப்போகும் குழந்தைகாகச் சுத்தம் செய்து வைத்தாள். ஈடற்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த அவள் அக்குழந்தைகாக பல திட்டங்களையும் வகுத்தாள். பிள்ளையின் படுக்கையை எங்கு வைக்கலாம், மேஜையை எங்கு வைக்கலாம், எத்தனை வாட் மதிப்புள்ள விளக்கை வாங்கலாம், வார்ம் விளக்கா, ஹீட் விளக்கா, வீட்டுப்பாடங்களைச் செய்யும்போது போதிய வெளிச்சம் கிடைக்குமா போன்ற பல கேள்விகளுக்கேற்ற திட்டங்களைத் தீட்டினாள். அச்சமயத்தில் வீட்டிற்கான தளவாடப் பொருட்களைக்கூட அவர்கள் இன்னும் வாங்கவில்லை ஆனால், வயிற்றில் உள்ள சிசு நொடி பொழுதில் பிறந்து கண் இமைபதற்குள் வளர்ந்துவிடும் என்பது போல் எதிர்காலத்தை எண்ணி திட்டமிட்டாள்.
சட்டென இளமை காலத்திற்குத் திரும்பியவள் போல் புதிதாக கருவுற்றிருந்த அவள் புதிய விஷயம் அனைத்தையும் மிகைப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டாள். தூங்குவதற்கு முன் படுக்கையில் படுத்துக் கொண்டே ‘சிலிப்பிங் பியூட்டி’, ‘தம்பலினா’, ‘பினோச்சியூ’, ‘டீ லிட்டல் மேர்மேட்’ போன்ற சிறுவர்களுக்கான ஆங்கில கதை புத்தகங்களை வாசிக்க தொடங்கினாள். நீண்ட காலமாகக் குழந்தைக்காக ஏங்கி நம்பிகையிழந்த அவளின் நிலையை உள்ளுணர்ந்த அவன், குழந்தையாகவே மாறியிருந்த அவளை நிதானமாகவும் பொறுமையாகவும் கையாண்டான்.
ஒரு முறை அவனுக்கே தெரியாமல் அவள் கர்ப்பப் பரிசோதனை கருவியை அள்ளிக் குவித்து வாங்கிக் கொண்டு மணிக்கணக்காகக் குளியலறையின் கதவைப் பூட்டிக் கொண்டு அங்கேயே இருந்த தருணம் அவனுக்கு இன்னும் நினைவில் இருந்தது. பத்திரிகை அச்சகத்திலிருந்து வீடு திரும்பிய அவன் குளியலறையின் கதவைப் பல முறை தட்டியும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பதற்றமும் அச்சமும் பற்றிக்கொள்ள தட தடவென மீண்டும் கதவைத் தட்டிய பிறகே அவள் கதவைத் திறந்தாள். பதில் ஏதும் கூறாமல் சிவந்த முகத்தோடு உதட்டில் புன்னகையோடும் கண்களில் வழிந்தோடிய கண்ணீரோடும் கர்ப்பப் பரிசோதனை கருவியை அவனிடம் நீட்டிய அந்தத் தருணத்தில்தான், சொந்த வீடொன்று வாங்க வேண்டும் என அவர்கள் முடிவெடுத்தனர்.
இப்பொழுது அவன் மட்டும் இந்த நள்ளிரவில் வரவேற்பறையில் தன்னந்தனியாக அமர்ந்து கொண்டு படுக்கையறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அவளின் பற்கள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு எழுப்பும் நறநறக்கும் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான். வரவேற்பறையில் உள்ள அந்தச் சோபா மண்டி வியாபாரச் சந்தையில் வாங்கியது. அனுப்பும் செலவைச் சிக்கனப்படுத்த அந்தச் சோபாவை அவனுடைய சிறிய காரிலேயே அடக்கிக் கொண்டு வீட்டிற்குக் கொண்டு வந்தான். தொலைக்காட்சியின் விலையை ஒப்பிட்டு வாங்குவதற்காக, அவன் பயன்படுத்தப்பட்ட மின்சார சாதனப் பொருட்கள் விற்கும் சந்து கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அலைந்து திரிந்து, ஒரு தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஒரு பல் பிடுங்கப்பட்டவன் போல் உணர்ந்தான். இப்பொழுது 30 இன்ச் அளவிலான அந்தத் தொலைக்காட்சி எதற்கும் பயனில்லாமல் இரண்டு நெகிழி நாற்காலிகளுக்கு மேல் வைக்கப்பட்டிருக்கிறது. வாடகை வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பெட்டிகள் இன்னும் ஆங்காங்கு சிதறி கிடக்கின்றன. அவற்றில் சில பெட்டிகளின் மூடி திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடக்கின்றன; இன்னும் சில பெட்டிகள் திறக்கப்படாமல் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன.

புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்து ஒரு மாதக்காலம் ஆகிவிட்டது. இருந்தும் அந்த வீடு சுத்தம் செய்து அலங்கரிக்கப்படாமல் முதன் முதலில் அவர்கள் பார்த்தது போலவே உள்ளது. சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் பழுதடைந்த கடிகாரத்தின் வினாடி முள் முன் நகர்ந்து செல்ல துடித்தாலும் அதனால் நகர இயலாததைப் போல அவர்களுடைய காலமும் இந்த வீட்டில் உறைந்துவிட்டது. அனைத்தும் சரியாகச் சென்று கொண்டிருக்கையில் எப்பொழுது அந்தக் கடிகாரம் பழுதடைந்தது என்பதுகூட நினைவில் இல்லை. முன்பு அவன் மனைவி தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், சோபாவில் அமர்ந்து, நூல் பின்னிக் கொண்டே தொலைக்காட்சியை விரும்பி பார்ப்பாள் அடர்சிவப்பு நிறத்திலான ஒரு ஜோடி காலுறைகளை அவள் பின்னிக்கிக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் பின்னல் வேலைகளைச் செய்து கொண்டே அவள் கண் அயர்வதும் உண்டு. இரவு வெகு நேரத்திற்குப் பிறகுதான், அவன் தன்னை எழுப்பியதை அவள் உணர்வாள். கண்களைத் தேய்த்துக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்துவிட்டுத் தரை வரை நீண்டு கொண்டிருக்கும் சாளரத்தின் வழி பால்கனியில் இன்னும் காய்ந்து கொண்டிருக்கும் ஈரமான ஆடைகளின் மீது பார்வையை அலையவிடுவாள். மொத்த இரவுக் காட்சிகளின் பாதியை அந்த ஆடைகள் மறைத்துவிட்டிருக்கும்.
அவன் சமகாலத்திற்குத் திரும்பினான். அவன் மனைவி சோபாவில் இல்லை. ஆனால், வெகு தூரத்தில் உள்ள அந்த ராட்சத கோபுரத்தில் மட்டும் ஓயாமல் ஒளி பிராகாசித்துக் கொண்டிருக்கிறது. அவள் பின்னத் தொடங்கிய சின்ன காலுறை முழுமை பெறாமல் பெட்டிக்குள் அடங்கிவிட்டது. இளஞ்சிவப்பு நிறத்திலான நூல் சுருள் தரையில் விழுந்து கிடக்கின்றது. அதன் நீளமான ஒரு முனையை மட்டும்தான் பார்க்க முடிந்தது, மற்றொரு முனை எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை.
அவர்களின் வீட்டின் நீண்ட பிரான்சிஸ் ஜன்னல் இரவு முழுதும் திறந்தே கிடக்கின்றது. வெளிச்சத்தை நோக்கி சாளரத்தின் வழி ஈசல்கள் படையெடுத்து வீட்டுக்குள் நுழைகின்றன. அவன் தரையில் விழுந்து கிடந்த ஈசல்களைப் பெருக்கினான்.
மயிர் கற்றைகளோடு குப்பையில் சிக்கிக் கொண்டிருந்த சிறகுகளற்ற பூச்சிகள், தன் பெரிய வயிற்றை இழுத்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தன. அவன் நாளிதழைக் குழாய் போல சுருட்டி தரையில் விழுந்து கிடந்த ஈசல்களின் மீது ‘பாக் பாக்’ என ஓசை எழும்படி அடித்து ஒழித்தான். பிறகு நிசப்தம் மீண்டும் வீட்டை நிரப்பியது. கதவுக்குப் பின்னால் அவன் மனைவி பற்களை நறநறவென கடித்துக் கொண்டிருக்கும் சப்தம் ஏதோ ஒன்றை கடித்து மென்று காலி செய்வது போல மிக நுட்பமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
சிறார் கதைகளின் இளவரசிகளைப் போல் அவளும் எப்பொழுதிலிருந்து முடிவற்ற ஆழ்ந்த கனவில் மூழ்கினாள் எனத் தெரியவில்லை?
அவன் மனைவி கருவுற்றிருந்த காலக்கட்டத்தை நினைத்துக் கொண்டான். வாரந்தோறும் மருத்துவப் பரிசோதனைக்கு இருவருமே சேர்ந்து கிளினிக் சென்று பின்னர் வேலைக்குச் செல்வர். மற்ற தாய்மார்களைப் போலதான் அவளும். சூப்பர்சோனிக் திரையில் காட்டப்படும் சிசுவின் மங்கலான கருப்பு வெள்ளை படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவள் ஆனந்த கண்ணீர் வடிப்பாள். ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் ஸ்டெதாஸ்கோப்பை வைத்துவிட்டு, குழந்தை நலமாக இருக்கிறது. ஆனால், சிசுவின் இதயத் துடிப்பு மற்ற சிசுக்களைப் போல் இல்லாமல் மெதுவாகத் துடிக்கின்றது என்பதனை உணர்ச்சியற்ற முகத்துடன் கூறினார். அவன் “இதுதான் கடக ராசிக்காரர்களின் இயல்பு. பெரியவர்களானதும் அவர்கள் நிதானமானவர்களாகச் செயல்படுவார்கள்,” எனக் கூறி அவளைச் சமாதனப்படுத்த முயற்சித்தான்.
இருந்தும், நிலையற்ற உணர்ச்சிகளைக் காட்டும் மனைவியை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. அடர்சிவப்பு நிறத்திலிருக்கும் ஒரு காட்டு விலங்கு சட்டென நிறம் மாறுவது போல அவள் உணர்ச்சிகள் மாறிக் கொண்டிருந்தன. விடியற்காலை இரண்டு மணிக்கு இறைச்சிக் கஞ்சி சாப்பிட விரும்பி கோபப்படுவது போன்ற அவளது பல்வேறு பொறுமையற்ற நடத்தைகளைப் புரிந்துகொள்ளவதில் அவன் திணறிப் போனான். சில சமயங்களில் அவளைப் புரிந்துகொள்ள முடியாத ஏமாற்றத்தில் அவன் வருந்தியதும் உண்டு. ஆனால், தூங்கி எழுந்தவுடன் தான் கண்ட கனவைப் பற்றி கூறும்பொதெல்லாம் அவள் மகிழ்ச்சியாகவே இருப்பாள். ஒவ்வொரு முறையும் படுக்கையில் படுத்துக் கொண்டு கூந்தலை விரல்களால் சுருட்டி விளையாடியவாறே அவள் கண்ட கனவுகள் நினைவிலிருந்து மறைந்து போகும் முன்பாக பாதி கனவுகளைச் சொல்லி மகிழ்வாள்.
கனவில், ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் மகிழ்ச்சியாகக் கையசைத்ததைக் கண்ட அவள், அவனை நெருங்கி, அச்சிறுவன் கிசுகிசுப்பதைக் கேட்க முயற்சித்தும் அவளால் அதனை கேட்க இயலவில்லை. சிறுவனின் அழகிய உதடுகளின் அசைவுகளை மட்டும்தான் அவளால் காண முடிந்தது. ஆனால் எதையும் கேட்க முடியவில்லை. தலையசைத்து அவன் பேசுவது ஏதும் கேட்கவில்லை என்று அச்சிறுவனிடம் அவள் கூற முனையும்போதே தானும் ஒலியற்றுதான் பேசுகிறோம் என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள். அவள் உதடுகள் மட்டுமே அசைகின்றன.
“ஏன் கனவில் எதுவும் கேட்கவில்லை?” அவள் கேட்டாள்.
“கனவில் சத்தங்கள் கேட்காது மா. யாராவது கனவில் ஒலிகளைக் கேட்டதுண்டா?” எனப் பதிலளித்தான் அவன். அன்று காலை, இருவரும் சீக்கிரமாக எழுந்து பல் துலக்கிவிட்டு, வழக்கமான பரிசோதனைக்காகக் கிளினிக்கிற்குச் சென்றபோதுதான், மெதுவாகத் துடித்துக் கொண்டிருந்த சிசுவின் இதயத் துடிப்பு முழுமையாக நின்றுவிட்டது என்ற செய்தி அவர்களை நிலைகுழையச் செய்தது.
பழுதடைந்த படகு ஒன்று பனிக்குட நீரில் மிதக்க முடியாமல் ஆழத்திற்குச் சென்று மூழ்கவது போல் தோன்றியது. பல கோடி அடி ஆழம் மூழ்கி, எந்த எதிரொலியும் இல்லாதது போல் ஆனது. மருத்துவரின் வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. “குழந்தைகளின் இயல்பே மெதுவாகச் செயல்படுவதுதான்,” என்ற நம்பிக்கையில் குழந்தைக்கு மீண்டும் இதயத் துடிப்பு திரும்பும் வரை அவள் காத்திருந்தாள். ஆனால், காலம் உறைந்துவிட்டது. அவள் கருவுக்குள் உள்ள சிசு இனி வளரப்போவதில்லை. கை முஷ்டி அளவு வளர்ந்திருந்த சிசுவின் சடலத்தை அவள் கற்பனை செய்து கொண்டாள். அவளின் சூடான திரவத்தில் மிதக்கும் சிசுவின் இரத்த குழாய், உறுப்புகள், சுண்டு விரல் நீளத்திற்கு நீண்டிருக்கும் அதன் வால் அனைத்தும் பேரண்ட இருளில் மிதந்து ஒளியில்லாமல் இருளிலே மடிந்துவிட்டது.
கருக்கலைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவள் ஒரு மாதக் காலத்திற்குப் படுக்கையிலே தீட்டுச் சடங்குகளை அனுசரித்தாள். அறையின் சன்னல் திரைகளை அப்போது மூடியவள் இப்போதும் பகல் நேரத்தையும் இருளாக்கும் பழக்கத்தை தொடர்கின்றாள். வீட்டை அலங்கரிக்கவோ சுத்தம் செய்யவோ நேரமில்லாமல், இப்பொழுதுதான் புதிதாக வீடு மாறி வந்தது போல் வீடே அலங்கோலமாக கிடக்கிறது. அவளுக்கான மூலிகை மருந்துகளைக் கொதிக்க வைப்பதிலும் துணிகளைத் துவைப்பதிலும் அவளின் தினசரி தேவைகளைப் பூர்த்திச் செய்வதிலும் அவன் நேரத்தைக் கழித்தான்.
ஆனால், அவன் மனைவி மாறிவிட்டாள். பேசுவதை முற்றாக நிறுத்திவிட்டாள். அவனிடம் கூட முன்புபோல பேசுவதில்லை. வலி நிவாரணி மருந்தை உட்கொண்ட பிறகு, அவள் ஆழ்ந்து உறங்கிவிடுவதை அவன் அறிந்து வைத்திருந்தான். சில சமயங்களில் வேலை முடிந்து உணவு பொட்டலத்தோடு வீடு திரும்பும் சமயத்தில் விளக்கேற்ற ஆளின்றி வீடே இருள் சூழ்ந்திருக்கும்.
அவளை அழைத்து, கன்னங்களை மெல்ல தட்டிவிடும் பொழுதுதான் அவள் விழிகளைச் சிரமப்பட்டு அசைப்பது தெரியும். மெல்ல அவளின் உடலைப் படுக்கையிலிருந்து தளர்த்தி நீண்ட கனவு கண்டவள் போல் கொட்டாவி விட்டுவிட்டு நிகழ்காலத்திலிருந்து விலகி எங்கேயோ இருப்பது போல் அவன் மீது பார்வையை வீசுவாள். எங்கே இருக்கிறோம் என்பதனை அறியாதவள் போல் வெளிச்சம் சூழ்ந்த அறையின் மீது அவளது பார்வை படரும். மருந்து உட்கொள்வதை நிறுத்தியும் அவள் தன்னிலை மறந்து ஆழ்ந்து உறங்கிவிடும் பழக்கம் நீண்டு கொண்டிருந்தது. எப்பொழுதிலிருந்து ஆழ்ந்து உறங்கும் பழக்கம் அவளைத் தொற்றிக் கொண்டதென்று தெரியவில்லை. குளிர்காலத்தில் பூச்சிகள் அதன் வலையில் உறங்குவது போல அவளும் நீர் ஆகாரம் ஏதுமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறாள். இருவருக்கும் இடையில் ஊடுருவ முடியாத திரை உருவாகியிருந்தது. வெளிச்சமான அந்த வீட்டின் நடுவே அவன் மட்டும் தன்னந்தனியாக நிற்கின்றான். ஏதோ ஒன்று அவனிடமிருந்து விலகி சென்று கொண்டிருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல அவனைச் சூழ்ந்துள்ள நிசப்தத்திற்கும் அவளின் பற்கள் நறநறக்கும் ஓசைக்கும் அவன் பழகிவிட்டான். கர முர கர முர என்ற சப்தம். அது மட்டும்தான் அவன் மனைவி அவனிடம் தொன தொனப்பது போல் அவனுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது
“அப்பொழுது இந்தப் பெருநகரின் எல்லையில் வசித்த நாங்கள், பட்டுப் பூக்கள் மலர்வது போல் வானில் வெடிக்கும் வானவேடிக்கையைப் பார்த்து ரசித்துள்ளோம்.”
அவர்களின் முதல் சந்திப்பு அவன் நினைவுக்கு எட்டியது. அந்த ஆண்டின் இறுதி நாளன்று, புத்தாண்டு கவுண்டவுனுக்காகவும் வானவேடிக்கையைக் கண்டு மகிழவும் தன் இளம் காதலியை இரட்டை கோபுரத்திற்கு அவனுடைய சிறிய கன்சில் காரில் அழைத்துச் சென்றதை அவன் எண்ணிப் பார்த்தான். அவன் வறுமையின் சின்னமாக அந்தச் சிறிய கன்சில் கார் அமைந்திருந்தாலும், அவள் அந்தக் காரில் அவனருகில் அமர்ந்து பயணித்தாள். இரட்டை கோபுரத்திற்குச் செல்லும் வழியில் காரின் கியரை மாற்றும்போதெல்லாம் அவனது கை, வெள்ளை பளிங்கு போல் இருக்கும் அவளின் வலது கரத்தைத் தொட்டு உரசியவுடன் ஏதோ தவறு செய்துவிட்டவன் போல் இதயம் படபடக்க காரைத் தவறுதலாக இடதுபக்கம் செலுத்தி நெடுஞ்சாலைக்குச் சென்று வழியைத் தவறவிட்டு சாலை நெரிசலில் சிக்கிக் கொண்டான். இருந்தும், சாலை நெரிசலில் வாகனங்களின் பின் எரிந்து கொண்டிருக்கும் சிவப்பு விளக்குகள் ஏனோ அவனுக்குள் சுவாரஸ்யத்தை உண்டாக்கியது.
முன்நோக்கியோ அல்லது பின்நோக்கியோ அவனால் காரை நகர்த்த இயலவில்லை. கார் மிக மெதுவாகவே முன் நகர்ந்து சென்றது. காரில் இருந்த வானொலியும் பழுதடைந்திருந்தது. “இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வானவேடிக்கையைப் பார்க்கலாம்” என்று கூறிய அவன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன் அவள் மோவாய்க் கட்டையைக் கையில் ஊன்றிக் கொண்டு கார் ஜன்னலின் வழி வெளிகாட்சிகளைக் கண்டு கொண்டிருந்தாள். அவன் உடனே கலை கல்லூரியில் படிக்கும்போது தனக்கு நிகழ்ந்தவற்றைக் கதைகளாகக் கூற ஆரம்பித்துவிட்டான். சௌகிட் சாலையில் அமைந்துள்ள கடையின் மேல் தளத்தில் உள்ள அறையில் வாடகைக்குத் தங்கி அங்கிருந்து காலையில் நடந்தே கல்லூரிக்குச் சென்றாதாகக் கூறி கதையைத் தொடங்கினான்.
வகுப்பு தொடங்கிய சில நாட்களிளே சீனியர்கள் அவனை அழைத்துச் சென்று அருகிலுள்ள தெருவில் திருநங்கைகளை அவனிடம் காட்டியுள்ளனர். அந்தத் தெருவே சிறுநீராலும் கழிவுநீராலும் துர்நாற்றம் வீசும். பல இந்தியர்கள் கையில் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் ஆண்களுக்கான வீரிய லேகியத்தை விற்பதையும் தெருவிற்குப் பின்னால் ஜன்னலில் தங்களின் மார்பகங்களைக் காட்டி வழியில் செல்பவர்களை அழைக்கும் திருநங்கைகளைத் துணிவோடு அவனால் எதிர்நோக்க இயலவில்லை என்றும் கூறிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள், கீழ் மாடியில் உள்ள சிக்கன சாப்பாட்டுக் கடையில் மதிய உணவு வாங்கி கொண்டிருக்கும்போது, பெருத்த உடலுடன் தாறுமாறாக உடையணிந்த கிழவி ஒருத்தி தன்னுடன் சேர்ந்து உணவு வாங்க நிற்பதை அவன் கண்டதைக் கூறினான். உரோமங்கள் உதிர்ந்து நிறம் மங்கிய அவளின் புருவத்தில் இரவு பூசிய கருநீல நிற மையின் மிச்சம் இன்னும் ஒட்டிக் கொண்டு அவலட்சனமாக காட்சி தந்தது. அவள் தொள தொளவென டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தாள். அது பலமுறை துவைக்கப்பட்டும் அழுக்கேறி நைந்திருந்தது. அவள் இரவு நேரங்களில் அடிக்கடி தெருவில் தான் கண்ட வயதான விலைமாது என அவன் அறிந்திருநந்தான். அன்று எதிர்பாராவிதமாக அவளை மதிய வேளையில் அவ்வளவு அருகாமையில் கண்டதைக் கதையாக அவளிடம் கூறினான். அந்நகரின் இருண்ட உலகத்திற்குள் தான் நுழைவதாக உணர்ந்த அது போன்ற தருணங்களில், சுவரை விரல்களால் சுரண்டும்போது எழுகிற விநோத உணர்வுகளைத் தாம் பெற்றதாக அவன் கூறினான்.
ஆனால், அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. திடீரென்று ஜன்னலுக்கு வெளியே காட்டி, “அதை பார்!” என்றாள். அவன், அவள் பக்கமிருந்த ஜன்னலை நெருங்கி அவள் காட்டிய திசையை நோக்கினான். கண்ணாடி திரையின் வெளியே ஓசையெதுமின்றி வானத்தில் வானவேடிக்கை முடிவில்லாமல் பூத்து இருண்ட வானில் மறைந்து கொண்டிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி இருந்த அச்சமயத்தில் கலங்கிய அவளின் கண்களில் வானவேடிக்கையின் பிரதிபலிப்பை அவன் கண்டான். இறுதியில் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு அவள் கைகளை அவன் பற்றினான்.
இப்போது இன்னும் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் மனைவியின் கரங்களைப் பற்றி, அவள் விரல் நுனியில் கனன்று கொண்டிருந்த உஷ்ணத்தை உணர்ந்தான். புரியாத பழங்கால வார்த்தைகளின் வரிகளை மௌனமாக வாசிப்பது போல், அவள் விரல்களுக்கு இடையில் இருந்த எலும்பு மூட்டுகளைத் தொட்டு, விரல் நகங்களுக்கும் எலும்பு மூட்டுகளுக்கும் இடையில் உள்ள தோல் மடிப்புகளை நகங்களால் சீண்டி விளையாடினான். நாள் முழுதும் கடினமாக உழைத்த அவன் சோர்வுடன் அவளருகில் படுக்கையில் உடலைக் கிடத்தினான். உடலை இறுக்கி, கால்களை மடக்கி அவளை நோக்கி சாய்ந்து கொண்டான் தலையை உயர்த்தி அவளைக் கவனித்தான். அவளது இமைகள் மெல்ல அசைந்தன. நொடி பொழுதில் திடீரென அவள் கண் விழிக்கக்கூடும் எனக் கற்பனை செய்து கொண்டு மனதுக்குள்ளே 1 2 3 என எண்ணினான். 1… 2… 3… காலம் அப்படியே உறைந்துவிட்டதுபோல இருந்தது. இப்படி அவளைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது என நினைத்தவன், மெல்ல அவன் உடலை அவள் உடலோடு இணைத்து அணைத்துக் கொண்டான். அவன் கைகள் அவளின் மெல்லிய இரவு ஆடைக்குள் நுழைந்தன. கடற்கரையில் புரண்டு கிடக்கும் ஓர் ஓங்கிலைக் கையாள்பவன் போல் மிக மெதுவாகவும் கவனமாகவும் அவள் மேனியின் மேடு பள்ளங்களில் அவன் கைகளை மேலும் கீழுமாக அலையவிட்டான். அவள் கண்கள் இன்னும் இறுகி மூடியிருந்தன. அவனின் செய்கையை அனுமதிப்பவள் போல் அவள் சீராகச் சுவாசித்துக் கொண்டிருந்தாள். ஆடைக்குள் கைகளைவிட்டவன் அவளின் மார்புகளை மெல்ல வருடினான். பூ மொட்டுகள் போல் அவளுடைய முலைக்காம்பூகள் இன்னும் நிரம்பி நிமிர்ந்து கொண்டிருப்பதை அவன் விரல்கள் அவனுக்கு உணர்த்தியது.
அவளின் கைகளை மேல் நோக்கி உயர்த்தி அவளின் ஆடைகளை அகற்றினான். விளக்கின் வெளிச்சத்தில் அவளுடைய வெண்மை பூசிய மேனி வெளிர்ந்து கண்களை உறுத்தியது. மெல்லிய தோலுக்குள் படரும் பச்சை நரம்புகளைத் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிந்தது. அவளின் கூந்தல், முகம், கழுத்து, தோள்பட்டைகளின் எலும்பு என அனைத்தையும் தொட்ட அவனது கை, மெல்ல அவளின் அக்குள்களை நோக்கிச் சென்றது. சுத்தமாக மழிக்கப்படாத ரோமங்களால் செழித்திருந்த அவளின் அக்குள்களை வருட முயற்சித்தான். முன்பு அவன் அக்குள்களை வருடும்போது அவளுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை எண்ணி அஞ்சி நாணும் அவள் இப்பொழுதோ உணர்ச்சிகளற்று படுத்திருந்தாள்.
அவனது விரல்கள் அவளின் மிருதுவான மேனியின் மேல் நீந்தி, மெல்ல அவளின் தொப்புளுக்கு மேல் சுழன்று அவளின் மர்மமான ரகசிய இடத்திற்குச் சென்றது. உண்மையில் ஒரு காலத்தில் அவளுடைய தொப்புளுடன் ஓர் உயிர் பிணைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அறுபட்ட கயிற்றைப் போல் நோக்கமற்று அவ்விடத்தை வெறுமை சூழ்ந்துள்ளது.
தொப்புளைக் கடந்து அவள் அணிந்திருந்த பருத்தியிலான உள்ளாடைக்குள் அவளின் அந்தரங்கமான பகுதிக்கு அவன் விரல்கள் சென்றன. அடர்திருந்த ரோமங்களை வருடியவன் திடீரென சிறிது நேரம் குற்றவுணர்வுக்கு ஆளாகியவன் போல் செயலிலழந்து நின்றான். பின்னர் கரிய ரோமங்களுக்குள் மறைந்திருந்த அவளின் மென்மையான துளையை அடைவதற்காக ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டிருந்த ரோமங்களைக் கவனமாகத் விலக்கினான். அவளின் வரண்ட மடிப்புகளில் துழாவிய விரல்கள் சொரசொரப்பான சுவரில் பட்டது போல தடைபட்டு நின்றன.
அவனால் ஊடுறவ முடியவில்லை. அவனது பயணம் தடைபட்டு நின்றது. தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான். அவள் ஆடையற்ற மேனியோடு வெண்மை நிறத்திலான பதுமையைப் போல் கனவில் மூழ்கி இன்னும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நொடி பொழுதில் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த காமம் அணைந்தது. அவமானமும் சோகமும் அவனைப் பற்றிக் கொண்டு அலைகழித்தன. ஊடுறுவ முடியவில்லை.
அவளின் தோற்றம் சிறுத்துக் கொண்டே வருவது போல அவனுக்குத் தோன்றியது. மெல்லிய ஒளிபோலாகிவிட்ட அவள் உடலை அவனால் ஊடுறுவி வெளியேறிவிடமுடியும் என நினைத்தான்.
‘கர முர கர’ …
நிசப்தம் நிரம்பிய அந்தப் பொழுதில் மீண்டும் அவனுக்கு அந்த நறநறக்கும் மெல்லிய ஒலி கேட்கின்றது. அவன் மனைவியின் முகத்தருகே சென்று பார்த்தான். அவன் நினைத்தது போல அது அவளின் பற்கள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு எழுப்பும் ஓசையல்ல. அந்தச் சத்தம் அவளிடமிருந்து எழவில்லை. ஆனால், அவனை நச்சரித்துக் கொண்டிருக்கும் அவ்வோசை வீட்டைச் சுற்றிலிருந்தும் வருகின்றது. பலகையிடப்பட்ட தரையிலிருந்து, குவிந்து கிடக்கும் பெட்டிகளுக்குப் பின்னாலிருந்து, நீர் சுவடு பதிந்த சுவரிலிருந்து என எல்லா இடங்களிலிருந்தும் வருவதை அவன் கேட்டான்.
படுக்கையைவிட்டு விலகி காதுகளை மெல்ல சுவரின் மேல் சாய்த்தான். பற்கள் நறநறக்கும் அந்த மெல்லிய சப்தம் கடலலையைப் போல் பேரொலியாகப் பெருக்கெடுத்து ஒலித்தது. பலகை தரையை மிதித்தான். ஊஹூ பசையால் ஒட்டப்பட்டிருந்த சிறிய பலகை துண்டுகளின் மேல் கால் வைத்தவுடன் அப்பலகை துண்டுகள் வெளியேறியதைக் கண்டான். தலையைத் தாழ்த்திப் பார்த்தபோது, மக்கி, உளுத்துப் போயிருந்த மரப்பலகையில் ஈசல்களும் கரையான்களும் ஊர்ந்து கொண்டிருந்தன.
படுக்கையறையில் கிடந்த பெட்டிகளைச் சிரமத்துடன் நகர்த்தினான். அப்பெட்டிகளுக்குப் பின்னாலிருந்த சுவரில், இருண்ட அறை மூலையில், களிமண்கூடு ஒன்று தோன்றியிருந்தது. அது எப்போது உண்டானது என அவன் அறியவில்லை அந்தக் கூட்டினை விரல்களால் சீண்டினான். அரிசி அளவிருந்த கரையான்கள், ஒளி ஊடுருவும் உடலுடன் நீண்ட புற்றிலிருந்து அரக்கப் பரக்க வெளியேறத் தொடங்கின. கவனிக்கப்படாமல் மறந்திருந்த தருணத்தில் கரையான்கள் அந்த அறையில் சத்தமில்லாமல் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்துவிட்டன போலும்.
கரையான்கள் அங்குள்ள மரத்தளவாடங்களை அரித்து ஏப்பமிட்டு மெல்லிய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தன.
அதன் மெல்லிய ஒலி பேரொலியாகப் பெருக்கெடுத்து அவன் காதுகளிள் ஒலித்தது. அவனுக்கு விசித்திரமான கற்பனை ஒன்று தோன்றியது. அவன் வசித்துக் கொண்டிருக்கும் அந்த அபார்ட்மெண்டும் சாளரத்தின் வழி கண்ட வீடுகளும், கரையான்கள் தின்ற மிச்சமாக உறுதியற்ற காலி பெட்டிகளைப் போல் அவனுக்குத் தோன்றின. ஒரு உலுக்கு உலுக்கினால் மொத்த வீடுகளும் மண்ணில் சரிந்துவிடக்கூடும். அவனால் எதையும் நம்ப முடியவில்லை. அனைத்தும் கனவில் நிகழ்வதைப் போல உணர்ந்தான்.
குவிந்து கிடந்த பெட்டிகளில் பூச்சிக்கொள்ளி மருந்தைத் தேடினான். வீட்டில் குடிபுகுந்த நாள் முதல் அடுக்கப்படாமல் குவிந்து கிடந்த அந்தப் பொருட்களில் பூச்சிக்கொள்ளி மருந்து கிடைக்கவில்லை. அவன் பெட்டியிலிருந்து ஸ்க்ரூடிரைவரைக் கையிலெடுத்துக் கொண்டு சுவரில் நகரும் ஒவ்வொரு கரையானையும் தாக்கி கொல்லத் தொடங்கினான். அரிசி நிறத்தில் மென்மையாக பலமற்றியிருந்த கரையான்கள் அவனின் அடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் சதக் சதக் வயிறு வெடித்து இறந்தன. வெளிச்சத்தைக் கண்டு அஞ்சி ஓடிய கரையான்கள் அங்குமிங்குமாக அரக்கப் பரக்க ஓடியதைக் கண்ட அவன் கோபத்தில் ஸ்க்ரூடிரைவரால் அவற்றை அடித்தான். பலம் கொண்டு அடிக்க விருப்பமில்லை ஆனாலும் அவன் அடித்த அடியில் சுவரில் ஒரு சிறிய துவாரமே உருவாகிவிட்டிருந்தது.
அவன் திகைத்துவிட்டான். இவ்வளவு பலமற்ற சுவராக அது இருக்கும் என அவன் எதிர்பார்க்கவேயில்லை. இரவு பகலாய் ஈசல் துளைத்தது போல சாம்பல் பூத்த மெல்லிய வெளிபுறம் மட்டுமே உள்ள சுவராக அது தெரிந்தது. சுவரைத் தட்டியவுடன் அவனுக்குக் கேட்டது வெற்று ஒலி மட்டுமே. இந்தச் சுவரின் ஓட்டை பக்கத்து அறை வரை செல்கிறதா? அல்லது யாரும் அறிந்திராத ஆழத்தில் உள்ள வேறொரு இடத்திற்குச் செல்கிறதா? வெள்ளை சுவரில் தெரிந்த துவாரம் ஏனோ அவன் கவனத்தை ஈர்க்க விரலைச் சுவரின் துளைக்குள் நுழைத்தான். வெள்ளை துகள்களோடு சில ஈசல்களும் அதிலிருந்து கொட்டின. இப்பொழுது அந்தச் சுவருக்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை அறிய அவன் ஆர்வம் கூடியது. ஸ்க்ரூடிரைவரால் சுவரில் உள்ள துவாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கினான். சிறிது நேரம் தோண்டிய பின், கை முஷ்டி அளவு பெரியதாகிவிட்ட அந்தத் துவாரத்தில் வழி உற்று நோக்கினான் ஆனால், அவன் கண்களுக்கு ஏதும் தென்படவில்லை. பொறுமையிழந்த அவன் சுத்தியலைக் கையிலெடுத்துக் கொண்டு அந்தச் சுவரை ஓங்கி அடித்தான். பலமான ஓசையோடு துகள்கள் பறக்க அந்த வெண் சுவர் பிளந்து ஒரு பெரிய கருந்துளை உருவானது.
ஊற்று நீர் கொப்பளித்துக் கொண்டு வருவது போல, அந்தக் கருந்துவாரத்திலிருந்து ஈசல்கள் திபு துபுவென வெளியே பறந்து வந்தன. படுக்கையறை முழுவதும் அவை பறக்கத் தொடங்கின. ஆடையின்றி தூங்கிக் கொண்டிருந்த அவன் மனைவியின் மேல் சில ஈசல்கள் பறந்தன. ஆடைகளிலும் அவள் மேனியெங்கும் அவை ஊர்ந்தன. அந்த ஈசல்களின் கால்கள் அசையும் சத்தமும் சிறகுகள் அசையும் ஓசையும் அவன் காதுகளுக்குக் கேட்பது போல தோன்றியது. ஸ் ஸ்ஸ்ஸ்… ர் ர் ர் ர்… அவன் அவசரமாக தன் முகத்திலும் சட்டையிலும் உடலிலும் ஊர்ந்த ஈசல்களைத் தட்டிவிட்டான். அவன் பாதத்தில் மிதிபட்ட பல நூறு ஈசல்கள் நசுங்கிச் செத்தன. மறைந்திருந்த எறும்புப் புற்றை அவன் தவறாகக் களைத்ததுவிட்டது போல இருந்தது. அல்லது இந்த ஈசல் கூட்டம் வெகுநாட்களாகவே தங்கள் நெடும்பயணத்தைத் திட்டமிட்டு வானுக்கும் பூமிக்குமாகப் பறக்க காத்திருந்திருக்க வேண்டும். அவ்வளவு அதிகமான ஈசல்களை அவன் கண்டதேயில்லை. அது ஏதோ ஒரு பழங்கால நம்பிக்கையை அவனிடம் சொல்ல வருவது போல இருந்தது. தரையில் அமர்ந்து கொண்டு ஈசல்களின் மேல் கவனத்தைச் செலுத்தினான். வெளிச்சத்தின்பால் ஈர்க்கப்படும் பூச்சிகளின் இயல்புக்கேற்ப, அவை கதவு வழியாகவும் நண்ட சாரளத்தின் வழியாகவும் நகர்ந்து கொண்டிருக்கும் மேகக்கூட்டம் போல வெகு தூரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பிரமாண்ட கோபுரத்தை நோக்கி மிதந்து செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் அவ்விடத்தை நீங்காத நிசப்தம் நிரம்பியது. சுவரில் உருவாக்கியிருந்த தூவரத்தை நோக்கிவிட்டுப் படுக்கையில் படுத்திருந்த மனைவியைக் கவனித்தான். அவளின் தூக்கம் ஈசல்களால் கலையப்படவில்லை, கண்கள் மூடி அவள் இன்னும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். படுக்கை முழுதும் ஈசல்களின் மெல்லிய இறக்கைகள் உறைந்த கண்ணீர் துளிகள் போல் சிதறி கிடந்தன. வழக்கம் போல் இரவு வெப்பமாக இருந்தது. அறை முழுதும் சரளை கற்களின் துகள்களாளும் ஈசல்களின் சடலங்களாலும் நிறைந்திருந்தது. நெற்றியில் வடியும் வியர்வைத் துளிகளோடு கவனமாகத் தலையை இருண்ட சுவரின் துவாரத்திற்குள் நுழைத்து, இருளிள் எதையோ தேடினான். ஆனால், இருள் சூழ்ந்த அந்தத் துவாரம் அவனின் மூச்சொலியை மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்து. பின்னர் மெல்ல மெல்ல எந்தவொலியையும் எழுப்பாமல் மௌனித்துக் கொண்டது. துவாரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு, உடலைக் குறுக்கி துவாரத்திற்குள் நுழைந்தான். அனைத்து ஒலியும் ஒளியும் அவனைவிட்டு வெகுதூரம் பிரிந்தன. அவன் பார்வைக்குத் தென்படாத தூரத்தில் ஈசல்கள் பறந்து வெளியேறிய பிறகு மொத்த அப்பார்ட்மெண்டும் ஓசையின்றி அசைந்து கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சாளரத்தின் சட்டகம் ‘கர்ர்ர்’ என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. சுவரில் தொங்கி கொண்டிருக்கும் விளக்கு அங்குமிங்குமாய் ஆடி நீண்ட நிழலையும் குறுகிய நிழலையும் மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தது. அபார்ட்மெண்டின் சாளரத்துக்கு வெளியே வெளிச்சங்களால் மிளிர்ந்து கொண்டிருந்த நகரத்தின் இரவுச் சூழல் மெல்ல மெல்ல அதன் ஒளியை இழந்து கொண்டே வந்தது. அந்தப் பெரு நகரமும் அவனின் சுத்தியல் அடிகளையும் வீச்சுகளையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலற்று இடிந்து விழுந்து மறைந்து போகும் என அவன் அறிந்திருக்கவில்லை.
இப்போது அவனால் எந்த ஒலியையும் கேட்க இயலவில்லை. அந்த எல்லையற்ற நிசப்தத்தில் அவன் மனம் சாந்தமாகியிருந்தது. ஒரு கணம், அவனும் அவன் மனைவி மிதந்து கொண்டிருக்கும் அதே கனவுக்குள் மூழ்கத் தொடங்கினான்.
சீன மூலம்: கிங் பன் ஹுய்
மலாய் மொழிபெயர்ப்பு: லீ யோக் ஹியாங்
தமிழில் : சாலினி