நகரில் ஒரு மூன்றடுக்கு மாளிகை

மூன்றடுக்கு மாளிகை என்பது அந்தத் தனித்துவமான கட்டிடத்துக்கு இந்நகர மக்கள் சூட்டியிருக்கும் சிறப்பு பெயர். அந்தப் பெயருக்கு ஏற்றது போல மூன்று மாடிகளைக் கொண்டது அக்கட்டடம்.

அந்த மூன்றடுக்கு மாளிகை எந்த யுகத்தில் கட்டப்பட்டது? அது உருவான வரலாற்றை எப்படிக் கூறுவது?

இதன்  தலபுராணம் மலாயாவைப்  பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்திலிருந்து  தொடங்குகிறது.  அக்காலகட்டத்தில் அந்நியர்களைத் தடை செய்யும் எந்த வித சட்டங்களோ விதிகளோ இல்லாதது போல, இந்நாடு எல்லா வெளிநாட்டவர்களும்   சுதந்திரமாக வந்து போகும் இடமாக விளங்கியது. கப்பல் கரைத்தட்டியதும், அவர்களின் உடல் ஆரோக்கிய அறிக்கையையோ அது போன்ற ஏதாவதொரு சாதாரண கடிதத்தையோ காட்டினாலே போதும். பிறகு மிக எளிய சுகாதாரப் பரிசோதனை செய்யப்பட்டு அந்நியர்கள் இந்த அதிர்ஷ்ட பூமியில் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுவிடுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், குடியேறும் புதியவர்களுக்கு அவர்களின் ஊர்காரர்கள் யாராவது இங்கு இருந்து  உதவி செய்தாலே போதும்.  இங்கு எந்தக் குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் விளைவிக்காத வரையில் யாரும் இவர்களின் இருப்பைக் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த மண்ணில்  எல்லாரும் விரும்பியவாறு பொருள் ஈட்ட முடிந்தால் போதும். மற்றதெல்லாம் முக்கியமில்லை.

அந்தக் காலத்தில் அச்சிறு பட்டணத்தில் இரு செம்மண் சாலைகள் மட்டுமே இருந்தன. அதில் ஒரு செம்மண் சாலை  அருகில் இருக்கும் இரயில் வண்டி நிலையத்திலிருந்து தொடங்கும். அந்தச் சாலையின் இரு மருங்கிலும் குறைந்தது முப்பது பலகை வீடுகள் இருந்தன. அச்சாலை வடக்கும் தெற்குமாக நீண்டு கிழக்கு-மேற்குத் திசையை நோக்கிச் செல்லும் மற்றொரு செம்மண் சாலையைச் சந்திக்கும். அன்று நவீன மோட்டார் வாகனங்கள் இச்சாலைகளைப் பயன்படுத்துவது குறைவு. பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர் தவிர மரத்தாலான சக்கரங்கள் பொருத்திய மாட்டு வண்டிகளை அவ்வப்போது இந்த மண் சாலைகளில் பார்க்க முடியும். அந்த இரு செம்மண் சாலைகளும் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் இருந்த சதுர வடிவிலான பொட்டல் வெளியில்தான் அச்சிறு பட்டணத்தின் சந்தை அமைந்திருந்தது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நீண்டிருக்கும் செம்மண் சாலை ‘ஜாலான் லூரூஸ்’ (நேர்ச்சாலை) எனவும் கிழ்க்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாதை ‘ஜாலான் லிந்தாங்’(குறுக்குச் சாலை) எனவும் அழைக்கப்பட்டன.  

அந்தக் காலத்தில்  தெற்கிலிருந்து புறப்பட்டு மேற்கு திசை நோக்கி துறைமுகத்திற்குச் சென்றடையும் இரயில் வண்டிகள் இந்தச் சிறு பட்டணத்தின் இரயில் நிலையத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்தத் துறைமுகத்திற்கு எதிர்முனையில் அமைந்திருந்த இன்னொரு நகரை மலாக்கா நீரிணை பிரித்தது. அந்தக் காலத்தில் அந்நகர் தீபகற்ப மலேசியா வடப் பகுதியின்  பிரிட்டிஷ்  அரசாட்சி நகராகவும் முக்கிய அரசியல் மற்றும் வணிகத் தலமாகவும் விளங்கியது.

துறைமுகத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல வேண்டிய இரயில் வண்டிகள் அந்தப் பட்டணத்திற்கு ஒற்றை தண்டவாளப் பாதையில் முதலில் திரும்ப வேண்டும். அந்தப் பட்டணத்தின் ரயில் நிலையத்தில்தான் இரட்டை தண்டவாளப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு, தெற்கிலிருந்து வரும் தண்டவாளத்திற்குப் பக்கத்தில் வடக்கே நீண்ட நெல் வயல்களைக் கொண்ட  நெற்களஞ்சிய பிரதேசங்களைக் கடந்து இன்னொரு நாட்டு எல்லை வரை செல்லும் தண்டவாளம் ஒன்றும் அமைந்திருந்தது. துறைமுகத்திலிருந்து இரயிலில் வரும் சுற்றுப்பயணிகளும் பொருள்களும் முதலில் இந்தப் பட்டணத்தின் இரயில் நிலையத்திற்கு வந்த பின்புதான் தெற்கு அல்லது வடக்கு நோக்கிச் செல்லும் பிற போக்குவரத்தைப் பெற முடியும். துறைமுகத்துக்குச்  செல்லாதவர்களும் இங்கு வந்துதான் வடக்கோ அல்லது தெற்கோ செல்ல முடியும்.

இந்த இரயில் நிலையமே  மையமாக இருந்து பட்டணத்தின் துரித வளர்ச்சிக்குத் துணைபுரிந்தது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புத் தேடி துறைமுகத்திற்கு வருவோர் உடல் வலிமையும் ஆரோக்கியமும் பெற்றிருந்தாலே போதும். இந்த அதிர்ஷ்ட மண்ணில் அவர்கள்  கூலி வேலை செய்து பொருளீட்டி விடலாம்; வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டு, எதிர்காலத்தில் பிற வாய்ப்புகளையும் தேடிக் கொள்ளலாம்.

இப்பட்டணம் வெகு வேகமாக வளர்ச்சியடைந்தது. சில வருடங்கள் சென்று இந்த ஊரைப் பார்வையிட வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இரயில் நிலையத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுற்றிப் பார்த்த பின்பு  நேர்ச்சாலையும் குறுக்குச் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் தகரக் கூரையிலான சந்தை ஒன்றை கட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டனர்.  அதன் கட்டுமான வேலைகள் முடிந்ததும் சாலை மருங்கில் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள், புதிய வணிகக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர். அன்று முதல் வடக்கிலிருந்து தெற்காகவோ, கிழக்கிலிருந்து மேற்காகவோ பயணம் செய்வதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. மேலும், சீருடை அணிந்த மலாய் போலீஸ்காரர்கள்  ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 

அவ்விடத்தில் புதிய வணிகச் சந்தை நிறுவப்பட்டதால் குறுக்குச் சாலையின் பெயர் ‘ஜாலான் பாசார்’ என்று மாற்றம் கண்டது. இதை ஆங்கிலத்தில் ‘மார்கெட் ரோட்’ என அழைத்தனர். அதே வேளை, நேர்ச்சாலையில் இரயில்களின்  சைரன் சத்தம் ஆக்கிரமித்திருந்ததால் அச்சாலை ‘ஜாலான் ஸ்டேசன்’ அல்லது ‘ஸ்டேசன் ரோட்’ என மாற்றப்பட்டது. இருப்பினும்,  நூறு ஆண்டுகளான பிறகும் அங்கு வாழ்ந்த மக்களின் மனத்தில், ‘ஜாலான் லூரூஸ்’, ‘ஜாலான் லிந்தாங்’ என்ற பழைய பெயர்களே நிலைத்துவிட்டன.  

அந்த மூன்று மாடிக் கட்டிடம் ஜாலான் லிந்தங் சாலையோரத்தில், சந்தைக்குப் பக்கத்திலேயே தெற்கைப் பார்த்து இருந்தது. இந்தக் கட்டடத்திற்கு எதிரே ஜாலான் லூரூசில் ‘வூ சீ டா டி மியோ’ என்ற கோவில் ஒன்று மேற்கைப் பார்த்து இருந்தது. இந்தக் கோயில் ஐந்து விரல் தேவனின் பெரிய கோவில் என்றும் அழைக்கப்பட்டது. இந்தக் கோவிலின் சொத்துதான் மூன்று மாடிக் கட்டடம்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் கால்நடை வளர்ப்போர் பன்றி காய்ச்சலாலும் பறவை காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார்களாம். அங்கிருந்த ஊர் தலைவர்கள் சிலர் கோவிலில் பிரார்த்தனை நடத்தி ஐந்து விரல் தேவனிடம்  தங்கள் நகருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலைக் களைய வேண்டிக் கொண்டார்களாம். சில நாட்களிலேயே, அந்தப் பட்டணத்தில் கடும் மழை பொழிந்ததாம். அடுத்த சில நாட்களிலே பெரு வெள்ளத்தில் அடித்துச் சென்றது போல அங்கு நோய் பீடித்திருந்த கோழி, வாத்து, நாய் போன்ற எல்லா கால்நடைகளும் நோய் தொற்று நீங்கிக் குணமடைந்தனவாம். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பட்டணமும் நல்ல வளர்ச்சி காணத் தொடங்கியது. மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து ஐந்து விரல் தேவனைப் பயபக்தியுடன் வழிபட்டதோடு காணிக்கைகளை அள்ளி வழங்கத் தொடங்கினர். அந்த நன்கொடையில் கட்டப்பட்டதுதான் மூன்று மாடிக் கட்டடம். அந்தப் பட்டணத்தில் அப்போது மிக உயர்ந்த கட்டடமும் அதுவாகத்தான் இருந்தது. ஐந்து விரல் தேவன் கோவில் அந்தப் பட்டணத்தில் சொந்த கடைவீடுகளும் சொத்துகளும் கொண்ட செல்வந்தர்கள் சிலரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

ஒருமுறை அந்தக் கோவில் நிர்வாகக் கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. அந்தப் பட்டணத்தில் வாழப் போகும் அடுத்த சந்ததியினர் இனியும் தலைமுறை தலைமுறையாக வறுமையில் வாழக் கூடாது, அதற்கு அவர்கள் கணிதமும் பொருளாதாரக் கல்வியும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில்  வெள்ளைக்காரனோடு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று தீர்மானித்தனர்.  தம் அடுத்த சந்ததியினர் இந்தப் பட்டணத்தின் இரயில் நிலையத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். புகைவண்டி ஸ்டோரைப்  பார்த்துக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அதே வேளை வங்கிக் கணக்கு வழக்கு பார்க்கும் அறிவையும் பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் தாய்நாட்டில் நிலபுலன்கள் வாங்கவும் புதிய வீடு கட்டவும் பணம் அனுப்ப வங்கி வரைவோலையைப் பயன்படுத்தும் முறையையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தனர்.

மேலும் அந்தக் கூட்டத்தில், கோவிலுக்கு வரும் நன்கொடைகளை இனியும் கோவிலில் சேமித்து வைப்பது ஆபத்தானது. யாரும் அதற்கு பொறுப்பேற்க முடியாது. அவற்றை கோவில் செயற்குழுத் தலைவர் வீட்டில் வைத்திருப்பதும் பல்வேறு பேச்சுகளுக்கு இடம் கொடுக்கும். ஆகவே, அந்த நன்கொடை பணத்தில் சொத்துகளோ கட்டிடங்களோ வாங்குவது  லாபகரமான முதலீடாக இருக்கும் என  முடிவு எடுத்தனர்.

பள்ளிக்கூடங்கள் கட்டி நிர்வகிப்பதும் கல்வி வளர்ச்சிக்குச் செலவு செய்வதும் தலைமுறைகள் தாண்டியும் நன்மையளிக்கூடிய பணி என்பதால் அது சமூகத்தால் பெரிதும் மதிக்கப்படும் நீண்ட கால திட்டமாகும். ஆகவே, அவர்கள் ஜாலான் லிந்தாங்கில் இருந்த ஐந்து விரல் தேவன் கோவில் நிர்வாகத்தின் பெயரைப் பயன்படுத்தி ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் கல்விக்கூடம் அமைக்க நிலம் வாங்குவது என முடிவு செய்தனர். 

தெற்கு நோக்கி அமைந்திருக்கும் கட்டிடங்கள் வாஸ்து சாஸ்திரப்படி,  நன்மை தரக் கூடியவை என்பது பொதுவான நம்பிக்கை. தாய்நிலத்தில் மூதாதைகள் வழிபட்ட கோயில்கள் எல்லாமே தெற்கு நோக்கி அமைந்தவைதான். புதிதாக வாங்கிய அந்த நிலத்தில் மூன்று மாடி கட்டடம் எழுந்தது. அக்காலகட்டத்தில் அக்கட்டடம்தான் நகரின்  மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. அன்று முதல்  அக்கட்டடம் மக்களால் பல தலைமுறைகளாக மூன்றடுக்கு மாளிகை என சிறப்பாக பெயர்சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றது.

2

சிறிது காலம் சென்று, கல்வி நிலையங்களை நிர்வகிப்பதில் சிறந்தவரெனவும் கல்வி திட்டங்கள் வரைவதில் வல்லவரெனவும் கூறிக் கொண்டு நிரம்பக் கற்றவர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரே அந்தப் பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மாணவர்கள் சேர்ப்பு வேலைகளிலும் பள்ளிக்கான கல்வி திட்டங்களை வரைவதிலும் மிகத் தீவிரமாக இறங்கினார்.   அவர் சீனா நாட்டின் பூஜியன் பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டார் என ஹாக்கியன் சங்கத் தலைவர் கூறினார். ஆனால், அந்த நேரத்தில்  உயர்கல்வி கற்ற அவர் ஒருவரே இந்தத் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பள்ளியின்  உடல் உழைப்பு தொழிலாளியாகவும் வேலை செய்திருக்கிறார். 

அப்போது, ஐந்து விரல் தேவன் கோவிலின் நிர்வாக அலுவலகம் அந்த மூன்று மாடிக் கட்டடத்தின் கீழ்த் தளத்தில் செயல்பட்டது. அந்தக் கோவிலின் தீப தூப ஆராதனைகளைக் கவனித்துக்கொள்ளும் பூசாரி  ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வந்து அந்த நாளில் கோயிலில் நடந்த சிறிய பெரிய சம்பவங்கள் எல்லாவற்றையும் பற்றி செயலாளரிடம் தகவல் சொல்வார். அப்போது கோயிலுக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளையும் பெறப்பட்ட காணிக்கைகளையும் ஒப்படைத்துவிடுவார்.

மூன்று மாடிக் கட்டட மண்டபத்தின் நடுவில் சுதந்திரத் தந்தை சூன் யாட் சென் படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. படத்திற்குக் கீழே மூன்று அடி அகலத்திலும் ஆறடி உயரத்திலும் ஓர் இரும்பு அலமாரி இருந்தது. அந்த அலமாரியின் சாவிகள் கோவில் தலைவரிடமும் செயலாளரிடமும் மட்டுமே இருந்தன.

உயர்கல்வி கற்ற அந்த ஹாக்கியன் இனத் தலைமையாசிரியர் ஐம்பது வயதை அடைந்திருந்தார்.   அவர் அக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தனியாகத் தங்கியிருந்தார். அவரின் மனைவி குழந்தைகளெல்லாம் சீனாவில் பூஜியன் பகுதியில் வசித்து வருவதாக எல்லாரும் பேசிக் கொண்டார்கள். இங்கு வந்து நிலைமை சரியானதும் அவர்களையும் அழைத்து வந்துவிட எண்ணம் கொண்டிருந்தார்.  ஆனால், அவரின் எண்ணம் நிறைவேறவில்லை. மிக அமைதியான சுபாவமும் வெளித்தோற்றத்தில் சோர்ந்த முகத்தோடு மந்தமானவராகவும் தெரிந்த அவர் மீது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன.  கோயில் நிர்வாகம்  வரையறுத்த கல்வி திட்டங்களையும் அவர் பின்பற்றாமல் பிணக்கிக் கொண்டிருந்தார்.  இறுதியில்  வெறும் ஒன்பது மாதங்களிலே மூன்றாவது மாடியில் தங்கியிருந்த அந்தத் தலைமையாசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்தப் பள்ளியில் பயின்ற 15 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. அந்த மாணவர்களில் பெரும் பகுதியினர் கோவில் செயற்குழு உறுப்பினர்களின் பிள்ளைகளாகவே இருந்தனர். பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர் இல்லாத காரணத்தால் பள்ளி தற்காலிகமாகப் மூடப்பட்டது.

கோவில் தலைவர் அப்போது உரத்த குரலில் சொன்னார்,

“கிங் பேரரசின் பரம்பரை ஆட்சி கால பெருமையைப் போன்று மிடுக்காக செயல்பட்ட  நம் பள்ளியின் மூடுவிழா வெறும் வரலாறாகிப் போய்விட்டது.  ஆனால், நான் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பேசி இந்தப் பள்ளிக்கு மிக விரைவிலேயே அரசாங்க ஆசிரியரைக் கொண்டு வர போராடுவேன். அதே வேளை,  நம் பிள்ளைகள் வெள்ளைக்காரன் மொழியையும் படிக்க வேண்டும்.”

ஆசிரியர் இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட பள்ளி மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை. அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடியும் மூன்றாவது மாடியும்கூட முன்று ஆண்டுகளாக காலியாகவே கைவிடப்பட்டு கிடந்தன. அந்த மூன்று ஆண்டுகளில், ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட நிலையில் காற்றோட்டம் இல்லாமல் கட்டடத்துக்குள் ஒரு வகையான அசௌகரிய வீச்சம் எழத் தொடங்கியிருந்தது. இருள் சூழந்த நிலையும் பூச்சிகளின் வினோத சத்தங்களும் சிறுவர்களிடையேயும்  பெண்களிடையேயும் அச்சமூட்டும் கதைகளாக உருவாகி நகரில் பரவின. அன்றைய நாளிலிருந்து பகல் வேளையாக இருந்தால்கூட அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு மாணவர்கள் செல்வதே கிடையாது.

அங்கு முன்பு தனியாகத் தங்கியிருந்த ஆசிரியர் தன்னை அறியாமலே தன் தனிமையைத் தாங்காமலோ அல்லது சலிப்பைப் போக்கிக் கொள்ளவோ எலிகளுடன் சினேகமாகியிருந்தார். தான் உண்டு மிச்சப்பட்ட உணவுகளை மூன்றாவது மாடி படி ஓரத்திலும் தரையிலும் வைத்து அந்த உறவுகளுக்கு உணவளித்தார். அந்த ஆசிரியர் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பியதும் அங்குக் குடித்தனமாகிவிட்ட எலிகள் பகலிலும் மிகச் சுதந்திரமாக மூன்றாவது மாடியெங்கும் அந்தக் கட்டிடம் தங்களுக்கே சொந்தம் என்பது போல அலைந்து திரிந்தன. பல இரவு பகல் கடந்து கால ஓட்டத்தில் பத்தாண்டுகள் நகர்ந்து விட்டன. இருப்பினும், அந்த மூன்று மாடிக் கட்டடத்தில் ஹாக்கியன்  ஆசிரியர் வளர்த்த எலிகளின் பரம்பரை நிரந்தர குடித்தன வாசியாக நிலைத்து விட்டன.

அந்த ஆசிரியர் கடும் மழை பெய்து கொண்டிருந்த ஒரு நாள் இரவில் அந்நகரை விட்டு வெளியேறிய பின்னர்  மூன்று மாடிக் கட்டடம் தொடர்பான மர்மத்தில் பேய் கதை ஒன்று பட்டணவாசிகளின் நினைவில் நிலைத்துவிட்டது. அந்தக் கட்டடத்தின் எதிர்முனையில் தங்கியிருந்த ஆ சாங் அப்போது கதவோரத்தில் நின்று மூன்றாவது மாடியை அண்ணாந்து பார்த்தபோது ஆசிரியரின் உருவம் சன்னல் அருகே நின்று கிழக்குத் திசை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். அவ்வேளை ஆ சாங்கிற்கு அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி தெரியாது. ஹாக்கியன் ஆசிரியர் தனிமையில் தூர தேசத்தில் இருக்கும் தன் மனைவி மக்களைக் நினைத்து ஏங்குவதாக எண்ணி “ஐயா பாவம் இந்த ஆசிரியர்!” என வார்த்தைகளற்று தனகுள்ளே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

அதே வேளை, வெகுதூரம் கிராமத்தில் வாழும்  தன் மனைவி மக்களை எண்ணி தானும் ஏங்கிப் போனார்.

அடுத்த சில நாட்களிலே, அந்த ஆசிரியர் தன் ஊருக்குச் செல்ல கப்பல் ஏறும்போது கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி பரவியது. மேலும் கடலில் குதித்த அவரின் சடலம் கண்டு பிடிக்கப்படவில்லை என்ற செய்தியும் பரவியதால்  அவர் சீனாவிற்குத் திரும்பவில்லை என்ற வதந்தி ஒன்றும் மக்கள் மத்தியில் விரைவாகப் பரவியது. இது ஆசிரியர் பற்றி ஆ சாங் புலம்பியதை மெய்ப்பிப்பதாக அமைந்தது. கூடுதலாக, அந்த மூன்றடுக்கு மாளிகையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் அவ்வப்போது மனித நடமாட்டமும் பேச்சு ஒலியும் கேட்டது. ஆகவே, நகர மக்களைப் பொருத்த வரை, அந்த ஹாக்கியன் ஆசிரியர் மூன்றடுக்கு மாளிகையைவிட்டுப் போகவே இல்லை என்றே நினைத்துக் கொண்டனர்.

இதுபோன்ற வதந்திகள், அந்த ஹாக்கியன் ஆசிரியரைச் சீனாவிலிருந்து வரவழைத்த கோயில் தலைவருக்கு ஆத்திரமூட்டியது. ஆகவே, பௌத்த மத வழக்கப்படி ஆசிரியரின் ஆன்மாவிற்கு வழிபாடு ஒன்றை நடத்தினார். அந்த வழிபாட்டிற்குப் பிறகு கோவில் செயற்குழுத் தலைவர் இரவு வேளையில் ஒருமுறைகூட அந்த மூன்றடுக்கு மாளிகையில் கால் வைக்கவில்லை.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது, அந்த ஆசிரியரிடம் ஒரு காலத்தில் மாணவராயிருந்த பாக் சீ உய்  போன்றவர்கள் பிள்ளைகள் பெற்று பேரன் பேத்திகளும் எடுத்துவிட்டனர். அண்மையில் 80 வயது பிறந்தநாளைக் கொண்டாடிய பாக் சீ உய், “அந்த ஹாக்கியன்காரர் மூனாவது மாடியிலதான் இன்னும் இருக்கிறார்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

3

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் கோவில் செயற்குழு தலைவர், தீவிலிருந்த  பிரிட்டிஷ் அரசாட்சி  அலுவலகத்திற்கு அழைக்கப்படிருந்தார். அங்குச் சென்று வந்ததுமே கூலியாட்கள் சிலரை வைத்து அந்த மூன்று மாடிக் கட்டடத்தின் உள்ளும் வெளியும் துப்புறவு செய்யும் பணியைத் தொடங்கினார். அங்கு இருந்த கோவில் நிர்வாக அலுவலகத்தையும் கோவிலுக்குச் சொந்தமான அருகில் இருந்த மற்றொரு கட்டத்திற்கு மாற்றினார்.

பிரிட்டிஷ் காலணித்துவ அரசாங்கத்தின் முழு மாணியத்தில்  பள்ளியை உருவாக்கும் கனவு முதன்முறையாக நனவாகியது. பிரிட்டிஷ் அரசாங்கமே பள்ளிக்கான செலவினங்களை ஏற்றுக் கொண்டு பள்ளி ஆசிரியர்களையும் நியமனம் செய்தது. உள்ளூர் தலைவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகளை மட்டும் செய்து கொடுத்தனர். சூரிய ஒளி பிரகாசமாக வீசிய ஒரு காலை பொழுதில் ‘ஜூயாங் ஜூ க்ஷியாவ்’ என்று பொறிக்கப்பட்ட பள்ளியின் பெயர் பலகை அக்கட்டடத்தின்  வாயிலில் மாட்டப்பட்டது.

பெற்றோர்கள் அப்புதிய பள்ளியில் பயிலும் தங்கள் பிள்ளைகள் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். இந்த மூன்றடுக்கு மாளிகையில் பயிலும் தங்கள் பிள்ளைகளும் அடுத்த அடுத்த தலைமுறை மாணவர்களும் கல்வியாளர்களாகவும் அறிவாளிகளாகவும் வர வேண்டும் என்பதே பெற்றோர்களின் பெருங்கனவாக இருந்தது. மேலும், இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரசாங்க வேலைக்கான தகுதியைப் பெற்று அசராங்க பணியாளராக வாய்ப்பு உள்ளது என கோவில் தலைவர் கூறினார். மேலும், இந்தப் பள்ளியில் மாணவர்கள் சீன மொழி கற்றுக் கொள்வதோடு கூடுதலாக ஆங்கில மொழி, கணிதம், அறிவியல், மலாய் மொழி போன்று மேலும் சில பாடங்களையும் கற்றுக் கொள்வர் என்று கூறினார்.

முதல் கல்வித் தவணை தொடக்கத்திலே மாணவர் சேர்க்கை மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 7 வயது தொடங்கி 15 வயது வரை சுமார் 40 மாணவர்கள் அப்பள்ளியில் பதிந்து கொண்டனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற பள்ளி என்ற வரலாற்றுப் பெருமையே மக்கள் மத்தியில் அப்பள்ளிக்கான வரவேற்பை அதிகரித்திருந்தது. அதோடு சமூகப் பள்ளி நிலையிலிருந்து நவீனப் பள்ளியாக உருமாற்றம் கண்டது, அந்நகர மக்களின் கல்வி வளர்ச்சியில் மைல்கல்லாக அமைந்தது.

கல்வி இலாக்காவால் பள்ளிக்கு அனுப்பப்பட்ட புதிய தலைமையாசிரியர் மாணவர்களைக் கீழ்நிலை தொடக்கப் பள்ளி, மேல்நிலை தொடக்கப்பள்ளி என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து இரண்டு வகுப்புகளை நடத்தினார். கீழ்நிலை தொடக்கப்பள்ளி இரண்டாவது மாடியிலும் மேல்நிலை தொடக்கப்பள்ளி மூன்றாவது மாடியிலும் இயங்கியது. கீழ்த்தள மண்டபத்தில் ஆசிரியர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அதில் தலைமையாசிரியர் அறையும் வரவேற்பு அறையும் அமைந்திருந்தன.

புதிதாகப் பள்ளி திறக்கப்பட்டதும் பட்டணத்திற்கு வெளியே சில மைல் தூரத்தில் வசித்து வந்த விவசாயிகள், பால்மரம் வெட்டும் தொழிலாளிகள், சிறு தோட்டக்காரர்களென பலரும் அப்பட்டணத்தில்  நிலமும் வீடும் வாங்கிக் குடிபுகுந்தனர். பொருளாதார நடவடிக்கைகள் நகர மையத்திலிருந்து புறநகர் பகுதிகளுக்கும் விரிவாக்கம் கண்டன. கோவில் தலைவர் சொன்னார் ”இந்த நகரம்  புத்துயிர் பெற்றுவிட்டது.”

ஆமாம் உண்மைதான், அந்த நகரம் புத்துயிர் பெற்றுவிட்டது

பகல் வேளையில் பள்ளி அமைந்திருந்த மூன்றடுக்கு மாளிகை உள்ளேயும் வெளியேயும் ஒளி வீசி பிரகாசித்தது. மாணவர்களின் ஆரவார ஒலிகளும் பலகை தரைகளில் அதிரும் கால்தட ஓசைகளும் கேட்ட வண்ணமாகவே இருந்தன. ஆனால், இரவில் அக்கட்டடம் பூட்டப்பட்டதும் இரகசிய பேச்சொலிகளும், ஏதேதோ இனம் புரியாத ஓசைகளும் அதோடு சேர்த்து அங்குப் படருகின்ற குளிர் காற்றும், ஒரு வகையான திகிலுணர்வை அப்பட்டண வாசிகளுக்கு ஏற்படுத்தியது.  அந்தக் கட்டடத்தின் மாடியிலிருந்து கருத்த நிழல் போன்ற உருவம் ஒன்று கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றுவதால் இரவில் அந்தக் மூன்றடுக்கு மாளிகையின் முன் பகுதியைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் சிறுவர்களும் பெண்களும் உடனே மௌனமாகி விரைவாகக் கடந்து சென்று விடுவார்கள். 

தான் செங் சின்

4

பத்தாண்டுகள் கண் சிமிட்டும் கணத்தில் கடந்திருந்தன.

அப்பள்ளிக்கூடம், ஜூயாங் 1 மற்றும் ஜூயாங் 2 என இரு கிளைகளாக வளர்ந்திருந்தது. அந்தக் கிளைப் பள்ளிகளின் கட்டுமான வேலைகள் முடிந்ததும் பள்ளி மேலாளர் வாரியம், ஐந்து விரல் தேவன் கோவில் செயற் குழுவினரோடு சேர்ந்து கீழ்நிலை இடைநிலைப் பள்ளி ஒன்றை திறப்பதற்கான பணிகளில் மும்முரமாகச் செயல்பட்டனர். எண்பது விழுக்காடு பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள் கோயில் நிர்வாக குழுவினராக இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம், பள்ளி பணியாளர்களின் சிந்தனை போக்குகளையும் கல்வி போதனை உள்ளடக்கத்தையும் கண்காணிக்க வசதியாக சில ஆங்கில கல்வி அதிகாரிகளைப் புகுத்தும் பொருட்டுதான், ஜூயாங் பள்ளி மேலாளர் வாரியத்தை அமைக்க பணித்தது. ஹாங்காங்கில் பிரிட்டிஷ் அரசாங்க கொள்கைகளுக்கு எதிரான அரசியல் இயக்கம் பரவத் தொடங்கிவிட்டதாகவும், மலாய் தீவுகளிலும் ரகசிய குழுக்கள் பரவத் தொடங்கிவிட்டதாகவும் அரசாங்கம் காரணம் கூறிக் கொண்டது. இது போன்ற அரசியல் நிலவரங்கள் எந்த வகையிலும் பள்ளி மேலாளர் வாரியத்தின் புதிய பள்ளி திறப்பதற்கான பணிகளைச் சோர்வடையச் செய்யவில்லை.

ஊதுபத்திகளின் நறுமணமும் தூபப்புகையின் வாசனையும் நல்ல பயனைக் கொண்டு வந்தது. ஊர் மக்கள் காணிக்கைகளை அள்ளி அள்ளி வழங்கினர்.  மேலும்  நகரிலிருந்த கோவில் சொத்துகளின் வாடகையும் கோயிலுக்குச் சொந்தமான ரப்பர் தோட்ட வருமானமும் புதிய கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதால், மக்கள் மத்தியில் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தன.

அப்போது அந்த மூன்று மாடிக் கட்டடத்தில் அமைந்திருந்த ஜூயாங் பள்ளி பிற பள்ளிகளுக்கு நடுவமாகத் திகழ்ந்தது. இரண்டாவது மாடியிலும் மூன்றாவது மாடியிலும் நான்கு ஆறாம் ஆண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன.   கீழ்த்தளத்தில் பெரிய மண்டபமும் ஜூயாங் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் அறையும் அமைக்கப்பட்டன. மூன்றடுக்கு மாளிகை அந்தப் பட்டணத்தின் மதிப்பிற்குரிய உயர்கல்விக் கழகமாக உயர்ந்து நின்றது.

ஆனால், அந்தப் பட்டணத்தில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் அமைதியைக் குலைத்தன. முதலில், காவல் நிலையத்தில் உயர் அதிகாரி ஒருவர் காணாமல்  போனார்.  அடுத்ததாக ஜப்பான் இராணுவம் குழு குழுவாக வந்து அந்தக் காவல் நிலையத்தை முழுமையாக ஆக்கிரமித்தன. இதற்கு முன்பு அங்குப் பணியிலிருந்த காவல் அதிகாரிகளின் சீருடைகளைக் களைந்து சாதாரண உடை அணிந்து வீட்டுக்குப் போக  ஆணை பிறப்பித்தது. ஒரு வேட்டுச் சத்தமுமில்லாமல் அடுத்த மூன்று நான்கு மணி நேரத்தில் அந்தப் பட்டணத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ஜப்பான் இராணுவம்.

ஆங்கிலேய அதிகாரிகளை நகரிலிருந்து முழுமையாக விரட்டிவிட்ட மகிழ்ச்சியில் பட்டணத்தின் நடுவில் நின்றவாறு தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் நோட்டமிட்ட  ஜப்பான் இராணுவத்தின் தலைமை அதிகாரியின் கண்களில் பட்டது, பட்டணத்தின் மிக உயரமான அந்த மூன்றடுக்கு மாளிகை. நீல வானத்தின் கீழ், பளிச்சென்றிருந்த வானிலையில் நின்றவாறு,  தன் ஆள்காட்டி விரல்களை நீட்டி “இனி இந்தக் கட்டடமே எனது நிர்வாக அலுவலகம்,” என உறுதிச் செய்தான்.

கல்விக் கழகமாக உயர்ந்து நின்ற அந்தக் கட்டடம் அடுத்தடுத்த ஆண்டுகளில் முற்றிலும் ஜப்பான் ஆட்சியாளர்  நிர்வாக மையமாக மாறிப் போனது. அரசியல் அதிகார தலமாகவும் அந்தப் பட்டண மக்களின் உயிர் குடிக்கும் இடமாகவும் திரிந்து நின்றது. இந்நிலையைக் கண்டு மக்கள் மத்தியில் பய உணர்வு மேலோங்கியிருந்தது. எந்நேரமும் கவலையும் கடுஞ்சினமும் வெறுப்பும் அவர்களைச் சூழ்ந்திருந்தது. இவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? எப்போது தணியும் இவர்களின் வலியும் வேதனையும்?

அப்பள்ளி கட்டடத்தில் இருந்த மேசை, நாற்காலி, அலமாரி, கரும்பலகையோடு சேர்த்து இன்னும் பிற பொருள்களெல்லாம் ராணுவ முகாம் அதிகாரியின் ஆணைக்கிணங்க அழிக்கப்பட்டன. அவை பட்டணத்தின் ஒரு மூலையில் மரக்கட்டை குன்றென குவிந்து கிடந்தன.

அன்று இரவே ஜப்பான் இராணுவத் தலைமை அதிகாரி அப்பட்டணத்திற்குச் சிறப்பு வருகையளித்தார். அணிதிரண்டு நின்ற இராணுவ பட்டாளத்தை நோக்கி பேசத் தொடங்கினார். பேசி முடித்ததுமே  இராணுவ வீரன் ஒருவன் கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு மரக்கட்டை குன்றென குவித்து வைக்கப்பட்ட பள்ளி தளவாடப் பொருள்களைத் சுற்றி வந்தார். பிறகு அந்த  மரக்கட்டை குன்றைச் சிரிந்த முகத்துடன் தீயிட்டுக் கொளுத்தினார்.

அந்தப் பட்டணத்தின் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய துயரச் சம்பவமாக அது அமைந்தது. அந்தத் தீ அப்பட்டணத்தை வெளிச்சப்படுத்திக் காட்டியது.  ஜப்பான்காரனுக்குப் பயந்து மறைந்து கொண்டிருந்த அப்பட்டண மக்களையும் அந்த வெளிச்சம் அம்பலப்படுத்தியது. அக்காலகட்டத்தில் கட்டட தளவாடப் பொருள் எல்லாம் மரத்தாலும் தகரத்தாலும் ஆனவை என்பதால் தீ திகுதிகுவென எரிந்தது. அப்பெரும் தீச்சசம்பவம் இனி அங்கு ஜப்பான் ராணுவம் நிகழ்த்தப்போகும் அட்டூழியங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் சாட்சியாக அமைந்தது.

அன்று இரவு முழுவதும் மூன்று மாடிக் கட்டடத்தின் விளக்குகள் எரிந்து கொண்டே இருந்ததாக ஹா சியாங் கூறினார். அங்குத் துப்புரவு வேலைகள் இடைவிடாது நடந்து கொண்டிருந்தன. கட்டடத்தின் உள்ளும் புறமும் துப்புரவு செய்யப்பட்டிருந்தது. இறுதியாக, அந்தக் கட்டடத்தின் வாசலில் கம்பீரமாக மாட்டப்பட்டிருந்த ‘சூயாங் சூசியாவ்’  என்ற பெயர் பலகையும் கழற்றப்பட்டுத் தீக்குவியலில் வீசப்பட்டது.  கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீ அதை தின்று விழுங்கியது.

மறுநாள் காலையில், ஜப்பான் அதிகாரியின் தலைமையகமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடிக்குப் புதிய தளவாடப் பொருள்களும் மலிகை சாமான்களும் வந்து இறங்கின. அதே வேளை, அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளம் சிறைக் கூடமாகவும் விசாரணை அறையாகவும் மாற்றப்பட்டிருந்தது. ஜப்பான் இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு அதிர்ஷ்டவசத்தால் உயிரோடு திரும்பியவர்கள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடி, சித்ரவதை கூடமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.  விசாரணையில் தாக்கப்பட்டு மயங்கியவர்களை அங்குதான் அடைத்து வைப்பதாக செய்திகள் கசிந்தன.

ஜப்பான் இராணுவத்தால் சந்தேகத்தில் பிடிப்பட்டவர்கள் மூன்றாவது மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். விசாரணையில் இறந்து போனவர்களின் உடல்கள் இரவு வேளையில் அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடி ஜன்னல் வழியாகத் குப்பை போல தூக்கியெறியப்பட்டன.  அதன்பின், ஜப்பான் இராணுவ வாகனம் ஒன்று வந்து அந்த உடல்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றது.

அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடிக் குறித்த பலவேறு கதைகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டன. அவற்றில் அந்தக் கட்டடத்தின் எதிரில் குடியிருந்த பெரியவர் ஹாசியாங் கூறிய பல கதைகளும் மர்மங்களும் பரபரப்பானவை. ஹா சியாங் சொன்னது என்னவென்றால்,  அந்தக் கட்டடத்தில் முதலில் வந்து தங்கிய ஹாக்கியன் ஆசிரியர் இன்னும் அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில்தான் வசிக்கிறார். அவர் எங்கும் சென்றுவிடவில்லை. ஜப்பான் இராணுவம் வந்து தளவாடப் பொருள்களை எரித்து பல அட்டூழியங்கள் செய்த வேளையில் கூட மூன்றாவது மாடியின் ஜன்னல் ஓரத்தில் ஒரு ஜோடி கண்கள் வெகுதொலைவை வெரித்தபடியோ அல்லது கீழே நடப்பதைப் பார்த்தபடியோ இருப்பதை யாரும் உணர முடியும்.

 ஹா சியாங்  மேலும் சொன்னார், ஜப்பான்காரர்கள் மனித மாமிசத்தை  உண்கிறார்களாம். ஹா சியாங்  பல முறை மிக அருகில் ஒளிந்திருந்து பார்த்தாராம். மூன்றாவது மாடியிலிருந்து வீசப்பட்ட சடலங்களைக் கூர்ந்து கவனித்தபோது அவற்றில்  தொடை பகுதி சில வெட்டப்பட்டும் கைப் பகுதியில் உள்ள சதை கழிக்கப்பட்ட நிலையில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தாகவும் கூறினார்.

ஹா சியாங் மூன்றாவது மாடி மர்மங்கள் குறித்து மேலும் விளக்குகையில் சில வேளைகளில் ‘த’ என்ற ஒலி கேட்குமாம். அப்போது வெட்டப்பட்ட கைப் பகுதி மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழும். அதை தொடர்ந்து ‘தா’ என்று நீண்ட ஒலி கேட்கும்போது உயிரற்ற உடல் வந்து விழுமாம்.

மூன்றாவது மாடியில் நீர் கொதிக்கவைப்பட்டதாகவும்  சமையல் வேலைகள் நடந்ததாகவும் அவர் கூறினார். தன் வீட்டு சன்னல் வழி மேல்நோக்கி மூன்றாவது மாடியைப் பார்க்கும்போது மங்கிய விளக்கொளியும் அதை தொடர்ந்து மனிதர்களின் முனகலும் கேட்கும் என்று தெரிவித்தார்.

அதன் பின்பு அந்த மூன்றாவது மாடியில் ஜப்பான் இராணுவ வீரன் ஒருவன் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி பரவியது. அந்தச் சம்பவத்தில் ஜப்பான்காரனின் தலை  முற்றாக சிதைந்து போனது.

ஜப்பான் இராணுவத்தினர் மனித மாசிசம் உண்பார்கள்  என்ற வதந்தி நம்ப முடியாததாக இருந்தது.  ஆனால், அங்கு வசிக்கும் எலிகள் மனித மாமிசத்தைத் தின்னுகின்றன என்ற செய்தி பட்டண மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த மூன்றாவது மாடி எலிகளின் கோட்டையாகிவிட்டது என்பது அந்நகரவாசிகள் அறிந்த செய்திதான்.  பத்தாண்டுகளுக்கும் முன்பு மூன்றாவது மாடியில் குடியிருந்த ஹாக்கியான் ஆசிரியர் எலிகளை வளர்த்தார். கால ஓட்டத்தில் அவை இனவிருத்திச் செய்து பல மடங்காகப்  பெருகின. மனித வாடையே அறியாத அந்தப் பிராணிகளுக்கு எல்லாமே உணவுதான் எனும் பொழுது, மனித உடலை அவை தின்னுகின்றன எனப் பரவிய வதந்தி வியப்புக்குரியது அல்ல.

ஜப்பான் எதிர்ப்பு குழுவினரை, ராணுவம் அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தி குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்கி அங்கேயே பசித்திருக்கும் எலிகளுக்கு இரையாக விட்டுச் செல்லும். இது போன்றதொரு கொடுமையை எங்கும் பார்த்திருக்க முடியாது. இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை மனிதர்கள் செய்யச் துணிவார்களா? இது மிருகத்தின் செயல்பாடுதானே? இதை செய்ய துணிந்த மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வேறுபாடு இருக்க போகிறது? இத்தகைய கொடூரச் செயல்கள் அப்பட்டண மக்கள் மத்தியில் ஜப்பான்காரர்கள் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஐயோ! ஜப்பான் எதிர்ப்பு குழுவினரின் நிலை பரிதாபமானது.

அந்தக் கோவிலுக்கு அடிக்கடி வந்து போகும் மூதாட்டிகளிடையே, மூன்று மாடிக் கட்டடத்தில், பூனையைவிட பெரிய உடல் கொண்ட எலி ஒன்று ஜின் உருகொண்டு திரிவதாக வதந்தி பேசப்பட்டது.  அது ஆயுதம் துளைக்க முடியாத அதீத உடல் கொண்டிருப்பாகக் கருதினர். ஒருநாள் அந்த ஜின் எலியே கீழான  ஜப்பான் இராணுவ வீரர்களை அழித்துவிடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அன்று முதல் அந்தப் பட்டணத்தில் இருக்கின்ற பெண்களும் சிறுவர்களும் பெரியவர்களும் சிறியவர்களும் எல்லாருமே ஜின் எலி ஒன்று மூன்றாவது மாடியில்  வசிப்பதாக நம்பினர்.   அது அங்குள்ள  நூற்றுக்கணக்கான எலிகளுக்கெல்லாம் தலைமை வகித்து மூன்றாவது மாடியின் இருள் உலகைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகப் பேசிக் கொண்டனர்.

அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் இருந்த தடுப்புக் காவல் அறையும் விசாரணை அறையும் கூட ஜப்பான் இராணுவத்தினர் செய்த பாவங்களைத் தாங்கியிருக்கும் இடமாகத்தான் இருந்தது. ஜப்பான் எதிர்ப்பு அணியினரை ஜப்பான் இராணுவத்தினர் அடிப்பது, கை விரல் நகங்களைப் பிடுங்குவது, குடலில் குழாயின் மூலம் தண்ணீர் செலுத்துவது, உயிரோடு நெருப்பில் வாட்டுவது போன்ற மனிதாபிமானமற்ற கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இந்தக் கொடுமைகளின் ஓலங்களைக் கேட்டு அப்பட்டண மக்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிப் போயினர். அதனால் மூன்று மாடிக் கட்டடத்தின் பக்கம் தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலன்றி அவர்கள் செல்வதில்லை. மூன்றடுக்கு மாளிகைக்குள் நுழைவதை யாருமே விரும்பவில்லை.

ஜப்பான் ஆட்சியின்போது இந்த மூன்று மாடிக் கட்டடத்தில் அடித்துக் கொடுமைப்படுத்திக் கொல்லப்பட்ட நகர வாசிகள் எத்தனை பேர் என யாருக்கும் தெரியாது. பட்டண மக்களால் என்றென்றும் அறிய முடியாத மர்மமாக அவை ஆகிவிட்டன.

மூன்றடுக்கு மாளிகை தொடர்ந்து அந்த  நகரின் சாலை சந்திப்பில் நிலைத்து நிற்கின்றது. ஆனால் அது பெருமைகளையெல்லாம் இழந்து, பயம், இருள் போன்ற தீவினைகளின் குறியீடாகக் காட்சியளிக்கின்றது. அந்த நகரவாசிகளின் மனங்களிலும் மூன்றடுக்கு மாளிகை துரதஷ்டத்தையும் கடந்த கால அவலங்களையும் சித்தரிக்கும் அடையாளமாகவே தோன்றியது.  ஆகவே,  அதை பற்றி பேசுவதையும் நினைப்பதையும் முடிந்தவரை தவிர்த்தனர்.

ஜப்பானியர்களின் தோல்விக்கு ஓராண்டுக்கு முன்பாகவே மூன்றடுக்கு மாளிகை விரிசல்விட்டு நிலைகுலைய ஆரம்பித்துவிட்டது. ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள் சில திடீரென தானாகவே வெடிக்க ஆரம்பித்தன. காவலிலிருந்த சில ஜப்பானிய இராணுவ வீரர்கள் கையிலிருந்த துப்பாக்கிகள் படார் என வெடித்து சில வீரர்களைக் கொன்றன.  பிறகு சில வேளைகளில் அக்கட்டடத்திலிருந்து பயங்கரமான அலறல் சத்தமும்,  முனகலும், அழுகை ஓலங்களும் கேட்டன. தவிர, எலி உருவத்தில் நடமாடும் ஜின் மனிதர்ளைக் கடிப்பதாக பரவிய வதந்தியால் ஜப்பானிய வீரர்களும் மூன்றடுக்கு மாளிகையில் வேலை செய்ய அஞ்சி நடுங்கினர்.    இந்தச் சம்பவங்களால் கோபமுற்ற ஜப்பான் இராணுவ தலைவர், தலைமை அலுவலகத்தை அந்தக் கட்டடத்திலிருந்து இரயில் நிலையம்  எதிரில் அமைந்திருக்கும் காவல் நிலையத்திற்கு மாற்றி அமைத்தார்.

ஐந்து விரல் தேவன் கோவிலின் தலைவர் அந்தக் கட்டடத்தின் பெரிய கதவைச் சங்கிலியும் பூட்டும் போட்டு பூட்ட சென்றபோது பெரும் நடுக்கத்துடன் சென்றார்.    அந்த நேரத்தில் எழுந்த பதற்றமும் கலக்கமும் மூத்த பட்டணவாசிகளின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போனது.

5

ஜப்பான் இராணுவத்தினர் மலாயாவை விட்டுச் சென்றுவிட்ட பிறகு அந்த மூன்று மாடிக் கட்டடம் கைவிடப்பட்டுக் கிடந்தது. இக்கட்டான சூழ்நிலையிலும் பட்டண மக்கள் யாருமே அந்தக் கட்டடத்தின் முன் பகுதியில் நடந்து செல்லத் துணிவதில்லை. கட்டடத்தை அடுத்து அமைந்துள்ள மாற்றுச் சாலையைப் பயன்படுத்தி அவசர அவசரமாக்கக் கடந்து சென்று விடுவர். இரவு வேளையில் அப்பட்டண மக்களின் கண்கள் மூன்று மாடிக் கட்டடத்தின் பக்கம் திரும்பியதே இல்லை. அந்தக் கட்டடத்தினுள் உலவும் கருத்த நிழல் உருவத்தின் கண்களைத் தங்கள் கண்கள் சந்தித்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். கோவில் நிர்வாகக் குழுவினர் மூன்று மாடிக் கட்டடத்தின் நிலவரங்கள் பற்றி பேசுவதை முழுமையாகத் தவிர்த்திருந்தனர். அதேபோல் பட்டண மக்களும் அந்தக் கட்டடத்தின் கசப்பான கடந்த கால சம்பவங்களைத் தங்கள் நினைவிலிருந்து முழுமையாக அகற்றிட எண்ணினர்.  மூன்றடுக்கு மாளிகையில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களைப் பற்றி பேசிக்கொள்வதையும் நிறுத்திவிட்டனர். 

ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தன…

ஐந்து விரல் தேவனின் பெரிய கோவில் தலைவர் இறந்து போனார். அவருக்குப் பதிலாக தியொசியூ இனக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தலைவரானார். புதிய தலைவர் கோவில் சொத்தான மூன்றடுக்கு மாளிகையை அப்படியே கைவிடுவது சரியில்லை எனவும் அது தங்களின் முன்னோர்களை அவமதிக்கும் செயல் எனவும் எண்ணினார்.

கதவுகள் பூட்டப்பட்டு பல காலமாக இருளுக்குள் புதைந்து கிடந்த அந்தக் கட்டடம் பட்டண மக்களின் நினைவுகளிலிருந்து முழுமையாக நீங்கிவிட்டிருந்தது. ஆயினும் ஒரு நாள் காலை சூரிய ஒளி வெளிச்சத்தில் அந்த மூன்று மாடிக் கட்டடத்தின் கதவுகளைத் கோவிலின் புதிய தியோசியூ தலைவர் வெற்றிகரமாகத் திறந்தார். அந்தக் கட்டடத்தைச் சுத்தம் செய்ய சீனர்கள் தயங்கியதால் துப்புரவுப் பணி செய்யும் இந்தியர்கள் குழு ஒன்று வரவழைக்கப்பட்டு சுத்தம் செய்யும் வேலைகள் தொடங்கப்பட்டன. கட்டடம் முழுமயாக புதுச் சாயம் பூசப்பட்டு நீர்க் குழாய்கள் சீரமைக்கப்பட்டன. மின்சார இணைப்புகளும் புதிதாக மாற்றப்பட்டன. இந்திய வேலையாட்கள் அந்த மூன்று மாடிக் கட்டடத்திற்குப் புது பொலிவைக் கொடுத்திருந்தனர். ‘அதிர்ஷ்டம் தரும் இல்லம் வாடகைக்கு விடப்படுகிறது’ என்ற பெயர் பலகை மூன்று மாடிக் கட்டடத்தின் நுழைவாயிலில் மாட்டப்பட்டது.

ஆறு மாதங்கள் கழித்து நடுத்தர வயது மதிக்கத்தக்க நாவிதர் ஒருவர் அக்கட்டடத்தின் கீழ்த்தளத்தை வாடகைக்கு எடுத்து முடி வெட்டும் கடையைத் திறந்தார். கோவில் நிர்வாகம் மிகக் குறைந்த வாடகைக்கு அவ்விடத்தைக் கொடுத்தது. அதே வேளை, கட்டட நிர்வாகத்தினர் அவரை இரண்டாவது மூன்றாவது மாடிகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஆனால் அவர் ஒருபோதும் மேல் மாடிகளைப் பயன்படுத்தியதே கிடையாது. இரவு வேளைகளில் சைக்கிலை மிதித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்வது சிரமாக இருந்தாலும் ஒரு நாளும் அந்தக் கட்டடத்தில் தங்க எண்ணம் கொண்டதில்லை. அவர் இரண்டாவது மாடிக்குச் செல்ல நினைத்ததே இல்லை. கடுமையான வெயில் நேரத்தில் கூட கீழ்த்தள அடுப்படி குளிர்ச்சியும் அமைதியும் கொண்டிருப்பதால் அங்கேயே ஒரு நாள் பொழுதைக் கழித்து விடுவார் . அப்போதெல்லாம் திடீர் திடீரென்று குளிர்ந்த காற்று உடலையும் கால் பகுதியையும் உரசிச் செல்வதை உணர்ந்திருக்கிறார்.

பெரும்பாலும் சீனர்கள் அங்கு முடி வெட்ட வருவதில்லை. வயதுபோன மலாய்க்காரர்களும் இந்தியர்களுமே அதிகம் வந்து முடி வெட்டிச் சென்றனர். அருகில் இருக்கும் வேறு முடி வெட்டும் கடைகளைவிட இங்கு விலை குறைவாக இருப்பதால் மட்டுமே அவர்களும் அங்கு வந்தார்கள். வெறும் ஒன்பது மாதங்கள் மட்டுமே அக்கடை அங்குத் தாக்குப் பிடித்தது. ஒரு வருட ஒப்பந்தம் நிறைவடையவில்லை. கடையின் உரிமையாளர் வியாபாரத்தைச் சுருட்டிக் கொண்டு இனி இந்த இடமே வேண்டாம் என ஓடி விட்டார். அந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கேட்கும் பயங்கரமான சத்தங்கள் உடல் சிலிர்க்கச் செய்து அடி வயிறையும் நெருக்கி எடுப்பத்தாகக் அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அவர் காலி செய்து சென்ற பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு யாரும் அங்கு வாடகைக்கு வரவில்லை. அதன் பிறகுதான், சைக்கிள் கடை முதலாளி ஒருவர் அங்கு வாடகைக்கு வந்தார்.

அந்தக் காலகட்டத்தில், அப்பட்டண மக்கள் தொகை அதிகரித்திருந்தது. சீனர்களைத் தவிர வேறு இன மக்களும் பட்டணத்தின் ஒதுக்குப்புற பகுதிகளில் குடியேறியிருந்தனர். அப்போது அங்கு ஒரு தேசியப் பள்ளியும் ஒர் ஆங்கில இடைநிலைப்பள்ளியும் புதிதாகக் கட்டப்பட்டிருந்தன. அதே வேளை, ஜூயாங் பள்ளி மேலாளர் வாரியமும் கீழ்நிலை இடைநிலைப்பள்ளி கட்டட வேலைகளின் கண்காணிப்புப் பணிகளை முடித்து மேல்நிலை இடைநிலைப்பள்ளி நிறுவுவதற்கான வேலைகளைத் தொடங்கியிருந்தனர். அதற்காக கல்வித் துறையுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

காலம் மிக விரைவாகக் நகர்ந்தது. சைக்கிள் கடை மூன்று மாடி கட்டடத்திற்கு வாடகைக்கு வந்து ஆறு ஆண்டுகளாக நிலைத்திருந்தது. அது அந்தப் பட்டண மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. அது பற்றி கடை முதலாளியைக் கேட்டபோது அவர்  மூன்றாம் மாடியை  அண்ணாந்து பார்த்தபடி உரத்த குரலில் சொன்னார், ”நான்  அங்கிருப்பவர்களுக்கு  மரியாதை தருகிறேன். அவர்கள் அவர்கள் வேலையைத் தடையின்றி செய்யலாம். நானும் என் வேலைகளைச் செய்கிறேன். நாங்கள் எங்களுக்குள் பரஸ்பர மரியாதை கொண்டுள்ளோம். யாரும் எல்லை தாண்டுவதில்லை. நான் தேசம் விட்டு வந்த வீரர்களை மதிக்கின்றேன். சுருக்கமாக சொன்னால், நான் ஒரு வாய் சோற்றுக்காகத்தான் இத்தனை பாடுபடுகின்றேன் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனால்தான் அவர்கள் எனக்கு எந்தத் தொல்லையும் கொடுப்பதில்லை.” 

6

அதே ஆண்டில் ஐந்து விரல் தேவன் கோவிலின் 100ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி மேடை கூத்து நிகழ்ச்சி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்றது. ‘தீயோசியூ’, ‘கந்தோனிஸ்’ மற்றும் ஹாக்கியன் நாடகக் குழுக்கள் 15 நாட்களுக்குப் பக்திபூர்வமான படைப்புகளை வழங்கினர். பெரிய சந்தைக்கு முன்புறம் உள்ள சாலையில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு முப்பது நாட்களுக்குப் போக்குவரத்து மூடப்பட்டது. ஏதோ ஒரு காவல் நிலையத்திலிருந்து வந்த மலாய் இன போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் இது குறித்து ‘தீயோசியூ’ இனக் குழு தலைவரிடம் பலமுறை புகார் செய்தார். இருப்பினும், அந்தப் புகாரை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், அதுவரை அந்நகரம் காணாத கோலாகலத்துடன் அக்கோவிலின் பவள விழா கொண்டாட்டங்கள் மிக விமரிசையாக நடந்தன.  அந்தப் பட்டண வரலாற்றிலே இதுபோன்றதொரு கொண்டாட்டம் நடந்ததில்லை. அங்குள்ள மக்கள் என்றும் இல்லாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். அவ்வாண்டு இரப்பர் பால்  விலையேற்றம்  கொண்டாடத்திற்கு முக்கிய காரணமாகியது. மக்களால் விழாசெலவுகளை ஈடுகட்ட முடிந்தது. இருப்பினும் கூத்து அரங்கேற்ற வந்திருக்கும் கலைஞர்களுக்கான தங்குமிட வசதி செய்து கொடுப்பதில் சிக்கல் எழுந்தது. தொடக்கத்தில் பள்ளியின் தங்கும் விடுதியில் அவர்களுக்குத் தங்கும் இடம் வழங்கப்பட்டது.  ஆனால் அப்பள்ளியின் நிர்வாகக் குழுவினருக்கு அதில் திருப்தி இல்லை. இது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்று கருதினர். இறுதியில் விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவர் அக்கலைஞர்களை மூன்றடுக்கு மாளிகையில் தங்க வைக்க முடிவெடுத்தார்.

“இந்தக் கட்டடத்தில் தங்குவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலுமில்லை, பயப்பட வேண்டாம், அதிகமான கலைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள்; நம்மால் யாரையும் எதிர்க்க முடியும்,” என  தீயோச்சியூ நாடகக் குழு தலைவர் உரக்கப் பேசினார்.

ஆயினும் சில நாட்களிலே அப்பட்டண மக்கள் மத்தியில் பலவேறான வதந்திகள் பரவத் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கது,  ஒருநாள் இரவில் அந்த நாடகக் குழுவின் முக்கிய இளம் நடிகர் ஒருவர் மூன்றாவது மாடியில் படுத்து உறங்கியவர், காலையில் எழுந்தபோது இரண்டாவது மாடியின் படிக்கட்டுகளில் கிடந்ததாக சொன்னார்கள். மேலும் ஒர் இளம் நடிகர் இரவில் கருப்பு நிழல் பிம்பத்தைப் பார்த்துத் திடுக்கிட்டு எழுந்தாராம்.

மேலும், கந்தோனிஸ் குழு தலைவி கழிப்பறையில் இருக்கும்போது குளிர் காற்றலையினால் தாக்கப்பட்டு உடல் நலமின்றி போனார். நாடகக் குழுவிலிருக்கும் குழந்தைகளும் இரவு வேளையில் அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு அலறின.

‘ஹாக்கியான்’ நாடகக் குழுவினரின் அனுபவங்கள்  பற்றிய வதந்திகள்  இன்னும் பயங்கரமாக இருந்தன. படித்த கிழவர் ஒருவர் இரவு வேளையில் ஹாக்கியான் மொழியில் ‘சான்ஜிசிங்’ என்ற மூன்று சொல்  மரபுக் கவிதையைத் தினமும் கனவில் தோன்றி போதிப்பதாகக் கூறினர். அதோடு மட்டுமல்லாது அந்த ‘சான்ஜிசிங்‘ கவிதையை ஹாக்கியான் மொழியில் ஒப்புவிக்க சொல்வதாகவும் வதந்தி பரவியது.

இப்படியே மூன்று மாடி கட்டடத்தைப் பற்றி பேசப்பட்ட வதந்திகள் பல்கி பெருகி அது மேலும் பிரபலமானது. மேலும் எத்தனையோ மர்மங்களையும் பயங்கரத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு உயர்ந்து நின்றது அந்த மூன்று மாடிக் கட்டடம். 

சில நாட்களுக்குப் பிறகு, அங்கு வாடகைக்கு இருந்த சைக்கிள் கடை முதலாளியும் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்தார். சைக்கிள் கடை நடத்த பட்டணத்துக்கு அருகில் மேலும் வசதியான இடம் கிடைத்துவிட்டதாகச்  சொல்லி அவர் மாறி சென்று விட்டார். ஆனால் உண்மை கதை அதுவல்ல என பட்டண மக்கள் பலருக்குத்  தெரிந்திருந்தது. ஒரு நாள் காலையில் முதலாளி கடையைத் திறந்தபோது கடையில் இருபது,   முப்பது எலிகளின் உடல்கள் சிதறிக் கிடந்ததாம்.  அது பார்க்க மிக பயங்கரமாக இருந்ததாகப் பேசிக் கொண்டனர். 

மூன்றடுக்கு மாளிகை மீண்டும் காலியானது. ஓரிரு மாதங்கள் அல்ல இருபது ஆண்டுகளாக அது அப்படியே ஆளின்றி கிடந்தது.

90ஆம் ஆண்டுகளில் மீண்டும் அக்கட்டடம் அப்பட்டண மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுக்குத் தயாரானது. 

‘தியோச்சியூ’ இனக் குழுவைச் சார்ந்த பள்ளியின் மேலாளர் வாரியக் குழு தலைவர் இறந்து வெகு நாட்களாகிவிட்டன.  பள்ளியின் மேலாளர் வாரியக் குழு தலைவராக புதிதாக பொறுப்பேற்றவர் ஹாக்கா இனத்தைச் சார்ந்தவர். அவர் பல தவணைகளாக அப்பொறுப்பில் நிலைத்துவிட்டார்.  ஆனாலும் அவருக்குப் பதவியிலிருந்து விலக விருப்பமில்லை. ஆகவே எதாவது திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்த நினைத்தார். அப்படி ஒரு திட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மற்ற செயற்குழு உருப்பினர்கள் அவரைப் பதிவிலிருந்து இறக்க மாட்டார்கள் என்று நினைத்தார். அப்படிதான் மூன்றடுக்கு மாளிகை அவர் சிந்தனையில் தட்டுப்பட்டது. 

கடந்த சில ஆண்டுகளில் மூன்று மாடிக் கட்டடத்தில் சாலையை நோக்கியிருந்த ஜன்னல் சட்டங்கள் உடைந்து விழுந்தன. பல காலமாக வெயிலிலும் பலத்த காற்றிலும் பாதிக்கப்பட்ட கற்கூரைகளில் ஆங்காங்கு ஓட்டைகள் விழுந்து காணப்பட்டன. அக்கட்டடத்தின் பல பகுதிகளில் புதர் மண்டிப் போய் பல சேதங்கள் ஏற்பட்டு இருந்தன. ஒவ்வொரு மாடியிலும் பலகையால் அமைக்கப்பட்ட தரை பகுதி மக்கி போயிருந்தன. மாடிக்குச் செல்லும் படிகளும் இடிந்து விழும் நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்தன.

ஆனாலும் அக்கட்டடத்தில் ஏதோ தவறாக இருப்பதாகவும் ஏதோ ஒன்று அங்கு உலவுவதாகவும்  அந்த ‘ஹக்கா’ இன தலைவர் நம்பினார். அவர் கட்டுமான குத்தகையாளரை அழைத்துக் அக்கட்டடத்தின் கூரை ஓடுகளை முழுமையாக அகற்றச் சொன்னார். பிறகு அக்கட்டிடத்தைச் சுடும் வெய்யிலில் ஒரு மாதத்திற்குக் காய விடச் சொன்னார்.  அப்படிச் செய்வதன் வழி கட்டடத்தைத் துர் சக்திகளிடமிருந்து மீட்டு புனிதப்படுத்த முடியும் என நம்பினார். கட்டடத்தின் கூரைகள் அகற்றப்பட்டபோது நூற்றுக்கணக்கான எலிகள் அக்கட்டடத்திலிருந்து வெளியேறி அருகில் இருந்த சாக்கடைகளில் தஞ்சம் புகுந்து கொண்டன.

அக்கட்டடத்தில் மக்கிப் போன பலகை தரைகளெல்லாம் உடைத்தெடுக்கப்பட்டு எரிக்கப்பட்டன. சுவர்களும் இடித்துத் தள்ளப்பட்டன. அக்கட்டடத்தின் அடித்தளமும் தோண்டியெடுக்கப்பட்டுப் புதுத் தளம் அமைக்கும் பணிகள் நடந்தன.

திடீரென ஒரு நாள் அக்கட்டடத்தின் சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டு சுற்றிலும் தகர தடுப்புகள் எழுப்பப்பட்டன. பொதுமக்கள் அப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அடித்தளத்தைத் தோண்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது நிறைய சடலங்கள் கிடைத்ததாகவும் அதன் பின் அரசாங்கம் தலையிட்டு மேல் விசாரணைகள் நடப்பதாகவும் வதந்திகள் பரவின. மேம்பாட்டுப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்குத் கைவிடப்பட்டன.

7

இரவும் பகலும் கடந்து காலம் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது. புதிய நூற்றாண்டு தொடங்கியது. அதே சாலை சந்திப்பில் புதியதொரு மூன்று மாடிக் கட்டடம் பெருமையுடன் உயர்ந்து நின்றது.

புதிய கட்டடம் முற்றிலும் ‘சிமெண்டால்‘ கட்டப்பட்டிருந்தது. பெரிய சாலையை நோக்கியிருந்த இரண்டாவது, மூன்றாவது மாடியின் ஜன்னல்களின் சட்டங்கள் அலுமனியத்திற்கு மாற்றப்பட்டுக் நீண்ட கருப்புக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. கட்டடம் முழுமையும் புதிய சாயம் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. கீழ்த்தளத்தில் முதன்மை வாயிலின் கதவுகளும் அலுமனியத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அக்கதவுகளை மேல் நோக்கித் தள்ளி திறக்கும்போதும் கீழ்நோக்கி இழுத்து மூடும்போதும் பெரும் சத்தம் எழும்பினாலும் அச்சத்தம் கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது.

இப்பொழுது அந்த மூன்றடுக்கு மாளிகை அப்பட்டணத்தின் உயர்ந்த கட்டடம் என்ற தகுதியையும் அடையாளத்தையும் இழந்திருந்தது. முதலில் அங்குக் கட்டப்பட்ட ஐந்து மாடிக் கட்டடம் அப்பட்டணத்தின் அடையாளமாக மாறியது. ஐந்து மாடிகளுக்கு மேல் எழுப்பப்படும் கட்டடங்களில் மின்தூக்கி வசதி இருக்க வேண்டும் என்ற அரசாங்க விதி இருப்பதால் அக்கட்டடம் ஐந்து மாடிகள் மட்டுமே கொண்டிருந்தது. அதற்குப் பிறகு அங்கு மேலுமொரு உயர்ந்த கட்டடம் கட்டப்பட்டது. அது 18 மாடிகள் கொண்ட வணிக வளாகமாகத் திகழ்ந்தது.  அது அந்தப் பகுதியின் வணிக நடவடிக்கைகளுக்கு ஆதாரமாகவும் விளங்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தப் பட்டணத்தில் இருபது மாடியில் அமைந்த ஐந்து தொகுதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.  அந்தச் சிறு பட்டணத்தில் பெருமையோடு உயர்ந்து நிற்கும் கட்டடங்களாக அவை திகழ்ந்தன.

புதுப் பொலிவு பெற்ற மூன்று மாடிக் கட்டடம் ‘மூன்றடுக்கு மாளிகை வாடகைக்கு விடப்படும்’  என்ற அறிவிப்பைச் சன்னல்கள் தாங்கியவாறு காட்சியளித்தன. நாளிதழ்களில் தினமும் வாடகை குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டும் பல காலமாக அங்கு யாரும் வாடகைக்கு வரவில்லை. வருடக் கணக்கில் அதன் கதவுகள் பூட்டியபடியே இருந்தன.  மூன்று மாடிக் கட்டடத்தின் மேல் ஏற்பட்ட பயமும் மரியாதையுமே அந்தப் பட்டண மக்களை நெருங்கவிடவில்லை என்பதை ஐந்து விரல் தேவன் கோவில் வாரிய உறுப்பினர்கள் அறிந்திருந்தனர்.  மூன்றடுக்கு மாளிகையின் அருகில் வசித்து வந்த ஹா சியாஙின் பேரனான டா தௌ அந்தக் கட்டடத்தில் ஏதோ ஒன்று இருப்பதாகக் கூறினார். இதற்கு முன்பு இதே போன்ற செய்திகளைக் கூறிய ஹா சியாங்கும்  ‘நீண்ட காலன்’ என அழைக்கப்பட்ட அவரது மகனும் இப்பொழுது ஹாக்கியன் கல்லறையில் நீள் துயில் கொண்டுவிட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் புதுப் பொலிவு பெற்ற கட்டடத்தில் மலாய்க்கார துணி வியாபாரி ஒருவர் வாடகைக்கு வந்தார். துணி வியாபாரம் தொடர்பான அறிவிப்புப் பலகை அக்கடையின் வாயிலில் மாட்டப்பட்டுப் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்குத் துணி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

8

2005ஆம் ஆண்டு ஒரு நாள் அக்கட்டடத்தின் முன்புறமாகச் செல்ல நேர்ந்தபோது துணிக் கடையின் அறிவிப்புப் பலகை என் கண்களில் பட்டது. ஆனால் கடை அடைக்கப்பட்டுப் பூட்டு தொங்கியது. அக்கடையின் மலாய்க்கார உரிமையாளர் எங்கே போனார் என்று தெரியவில்லை.

‘அதிர்ஷ்டம் வாய்ந்த கடை வாடகைக்கு விடப்படுகிறது’ என்ற பெயர் பலகை மூன்றடுக்கு மாளிகையின் கண்ணாடி ஜன்னலில் அன்றும் மாட்டப்பட்டிருந்தது. ஆமாம் அது தொடர்ந்து அங்கேயே  மாட்டப்பட்டிருக்கிறது.

சீன மூலம்: ஹொ சொக் ஃபொங்

மலாய் மொழிபெயர்ப்பு: ஹோ வீ சீ

தமிழில் : கி. இளம்பூரணன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...