கண்ணாடியை நிகர்த்தது அந்த  ஏரி

அவளுடைய மகிழுந்து கிட்டத்தட்ட கவிழ்ந்திருக்கும் அல்லது ஏரியில் சரிந்திருக்கும் விசித்திரமான அந்த அந்தி நேரத்தில், மான் ஒன்று  திடீரென்று மிக வேகமாக ஆனால் சத்தமின்றி சாலையில் தோன்றியது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே அங்கிருந்து ஓடி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுவிட வேண்டும் என்ற தவிப்பு எழுந்தது. 

அண்மைய காலமாக, தனது மாணவர்கள் தாடையை மேசை மேல் முட்டுக் கொடுத்து அமர்ந்து “ச ச” என்ற ஒலி எழுப்பிக் கொண்டு எழுதுவதைப் பார்க்கும்போது, வரிசையாகச் செல்லும் வனவிலங்குகளின் காட்சி ஒன்று அவளுடைய மனதில் ​​​​ தோன்றும். சாதுவான மான் கூட்டத்தில், மான்கள் ஒன்று மற்றொன்றோடு  புல்தரையில் கொஞ்சிக் குலாவும் காட்சி தெரியும். மான்கள் எப்படி வளர்கின்றன, அவை எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன என்று அவள் ஒருபோதும் தெரிந்துகொள்ள எண்ணியதில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்த பிறகு, அவள் அவற்றை அடிக்கடி நினைவு கூர்ந்தாள். கஷ்கொட்டையின் நிறத்தைப் போன்ற அவற்றின் மேனி நிறம். அவை ஒன்றையொன்று நேசிப்பது, எந்நேரமும் விழிப்பாக இருப்பது, மனிதர்களால் செவிமடுக்க முடியாத நிசப்தமான அவற்றின் வாழ்க்கை முறை, குறிப்பிட்ட சில இலைகளை விரும்பி அசை போடுவது, பிற விலங்குகள் போல் அவற்றின் உடலிலும் பேன்கள் ஒருவேளை இனப்பெருக்கம் செய்யக்கூடும் போன்ற கற்பனைகள் அடிக்கடி அவளுடைய மனக்கண்ணில் தெரிந்தன. இந்தக் கற்பனைகளெல்லாம் ஒருவேளை பிழையாக இருக்கலாம். நிஜ உலகில் அப்படி எதுவும் இல்லாமலும் போகலாம். அவள் ஒன்றும் உயிரியல் துறையில் வல்லுநர் அல்லவே.

அவர்களில் ஒருவர்கூட விதிகளை மீறுவதில்லை. சில வேளைகளில் கடலலைகளின் ஓசை போலவோ காலை சந்தையின் சலசலப்பு போலவோ ஒலிக்கும்  மேசைகளிலிருந்து எழும் கிசுகிசுத்தல் ஒலியைத் தவிர்த்து வேறு சத்தம் எழுவதில்லை.  சில சமயங்களில் ஒரே ஒரு கேள்வி ஒட்டுமொத்த வகுப்பையும் நிசப்தமாக இருக்கச் செய்யும். சில சமயங்களில் அந்தக் கேள்விக்குப்  பதிலளிக்க முயலும் ஒரே ஒரு குரல் அந்த நிசப்தத்தை உடைத்துவிடும்.

“முக்கிய கதாபாத்திரம் சொல்லும் அந்தச் சூழ்நிலை அந்த அளவுக்குத் தீவிரமானது என்று நான் நம்பவில்லை.”

“ஏன்?”

“கதைசொல்லி தனது சொந்தத் துன்பங்களை விவரிப்பதில் மிகவும் மும்முரமாயிருக்கிறார், பாதிக்கப்பட்ட ஒருவர் தனது கற்பனையை மிகவும் மிகைப்படுத்திக் கூறுவதைப் போல. ‘என்னைக் கிட்டத்தட்ட பைத்தியமாக்கும் அளவுக்குப் பயம் என்னைச் சித்திரவதை செய்கிறது’ என்று சிறுகதையின் ஆரம்பத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே இந்தச் சிறுகதை மனநோய்க்குள்ளான ஒரு பெண் தனக்குத் தானே பேசுவதிலிருந்து தொடங்குகிறது.”

“ஆனால் இந்தச் சிறுகதையின் தொனி மிகவும் நிதானமானது. இதெல்லாம் மனநோய் உருவாக்கும் கற்பனை  என்று நீங்கள் நினைக்கக் காரணமென்ன?

“ஆனால், நான் நினைக்கிறேன், பாதிக்கப்பட்டவர்….”

மற்றொரு குரல் எழுந்தது.

“பாதிக்கப்பட்டவராக இருப்பது மகிழ்ச்சியைத் தந்திருக்குமோ?  பாதிக்கப்பட்டவரின் கதை சாதாரணமாகக் கூட இருக்கலாம் இல்லையா?”

“அனுதாபத்தைப் பெறுவது எளிதானது.” ஒரு மாணவர் கூறினார்.

அப்போது வகுப்பில் ஆரவாரச் சிரிப்பொலிகளும் பெருமூச்சுகளும் எழுந்தன. சிலர் ஆம் என தலைகளை அசைத்தனர், சிலர் ஏற்க மறுத்துத் தலைகளை ஆட்டினர்.

சிறிது நேரம் விவாதம் நடந்தது.

விவாதத்தில் கலந்துகொள்ளாதவர்கள் இருக்கையிலிருந்தபடி கிசுகிசுக்க ஆரம்பித்தனர். ஆர்கெஸ்ட்ரா நடத்தும் தோரணையில், அவள் மெதுவாக அழுத்துவது போல கைகளை அசைத்தாள்.

“ஏன் அவசர முடிவு எடுக்க வேண்டும்? இந்தச் சிறுகதை தெளிவான ஒரு பதிலையா கொண்டுள்ளது? இந்தப் படைப்பு திறந்த முடிவோடுதானே முடிக்கப்பட்டுள்ளது?”

அவளுக்கு அவர்களுடன் உரையாட பிடிக்கும். அவர்களின் உரையாடல்கள் வெட்டுக்கிளிகள் மேலும் கீழும் குதிப்பது போல இருக்கும், கொஞ்ச நேரம் கிழக்கு நோக்கியும், கொஞ்ச நேரம் மேற்கு நோக்கியும் செல்லும்.

“ஆனால், உண்மையைச் சொல்வது அவ்வளவு கடினமா? அந்தச் சிறுகதை பூடகமாகத்தான் இருக்க வேண்டுமா?”

“அதனால்தான் எனக்கு மீபுனைவு  பிடிக்காது.” ஒரு மாணவர் ஏற்கனவே ஒழுங்குப்படுத்திய தமது புத்தகங்களை மார்போடு அணைத்துக் கொண்டு வேகமாக நடந்தார். பின்னர் திரும்பிப் பார்த்து, “அதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்,” என்றார்.

அதைத் தொடர்ந்து, ஓய்வு நேரத்துக்கு முன்பாக,  ஆயாசங்களும் புகார்களும் ரீங்காரம் போல எழுந்து அடங்கின.

ஜன்னலுக்கு வெளியே ஒரு துணை தொலைத்தொடர்பு கோபுரம் இருந்தது. திரைச்சீலைகள் வழியாக அதைப் பார்க்கும்போது, அலங்காரக் காகிதம் போல தூரத்தில் சிறியதாக தெரியும். ​​​​ புகைமூட்டம் இருக்கும்போது பார்வைக்கு முற்றிலும் மறைந்திருக்கும்.  ஆனால், இரவில் வெளிவட்ட நெடுஞ்சாலையில் காரோட்டிச் செல்லும்போது, அதைத் ​​தூரத்திலிருந்து பார்த்தால், ​​அதன் மின்னும் முனை கண்களைக் கவரும், ஒரு கலங்கரை விளக்கம் நிலத்துக்கு நகர்த்தப்பட்டுவிட்டது போல, ஒலி கடலிலிருந்து தொலைவில், இரவு வானத்தின் மூலையில், தனிமையில் அது தெரியும்.

நம் வாழ்வு அதனைச் சார்ந்ததாகிவிட்டது. சில சமயங்களில் அவள் அப்படி நினைப்பாள். நம்புவது கடினம்தான். ஆனால் உண்மை அதுதான். அது இல்லையென்றால், நாம் மேலும் தனிமையில் தள்ளப்படுவோம். ஆனால், ஒரு துணை தொலைத்தொடர்பு கோபுரமாக, தான்  தினமும் கோடி கணக்கான செய்திகளைத் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்  என்பது அதற்கு என்றைக்குமே புரியாது.

இத்தனை காலமாக, வேலையிடத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்து வருகிறாள். முப்பத்தைந்து வயதாகிவிட்டது. பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிவிட்டாள். ஆனால் அவளுக்குள் தான் இன்னும் தவழக் கற்றுக்கொள்ளும் குழந்தை என்ற உணர்வுதான் எழுகின்றது. அவள் ஆக அதிகமாகப் பேசுவது கற்பிக்கும்போது மட்டும்தான். சில சமயங்களில், இந்தச் சாதுவான மான் குட்டிகள் தனது பேச்சை எவ்வாறு புரிந்துகொள்கின்றன என்று அவள் சிந்திப்பாள்.

ஒவ்வொரு நாள் முடிவிலும், தான் இன்று என்ன பேசினோம்? கவனக் குறைவாக இருந்தோமா? தவறான புரிதல் வரும்படி ஏதும் சொல்லிவிட்டோமா? நாம் சொன்ன கருத்து நமது நெஞ்சார்ந்த உண்மையில்லையா? என முதல் நாள் வேலைக்குப் போனது முதல் எச்சரிக்கை குரல் அவளுக்குள் எழுந்து கொண்டே இருக்கின்றது.   

“அவர்கள் இன்னும் மிகவும் இளமையாக இருக்கிறார்கள், இப்போதுதான் பெரியவர்களாகப் போகிறார்கள், ஆனால் அவர்களின் இதயங்கள் இன்னும் குழந்தைத்தனமாக இருக்கின்றன, பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு இன்னது சரி அல்லது தவறு என்று வேறுபடுத்தத் இன்னும் தெரியாது. அவர்களின் செயல்கள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அவர்கள் உணரவில்லை. எனவே, விரிவுரையாளர் என்ற முறையில், நம் பேச்சில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.”

 அவ்வளவு விரைப்பான பேச்சு அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ஆனால் சந்திப்பு அறையில் யாரும் அதை வேடிக்கையாகக் கருதவில்லை. சில விரிவுரையாளர்களின் பணி ஒப்பந்தங்கள் நிறைவடைந்துவிட்டிருந்தன. அவை புதுப்பிக்கப்படமாட்டா. அன்றைய கூட்டத்தில் அது தெரிவிக்கப்பட்டது. அது ஓர் அறிவிப்பு, கலந்துரையாடல் அல்ல. செயற்குழு முடிவு செய்துவிட்டது. ஒரு சில வாக்கியங்களில் முடிந்துவிட்டது. அந்த அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, ஒப்புதல் தெரிவித்தல் தொடர்ந்தது.  அது வழக்கமாக நடக்கும் சந்திப்புக் கூட்டம் மட்டுமே, எந்த ஆட்சேபனையும் இருக்காது, எந்த மாற்றமும் இருக்காது.

ஒரு சக ஊழியர் மெல்ல ஆதங்கப்பட்டார். இருக்கையிலிருந்து சிறிய கிசுகிசுத்தல்கள் எழுந்தன. ஒருவர் அவளிடம் வந்து பேசினார்.

“இங்கே எந்தப் பிரச்சனையையும் உண்டு பண்ணாதீர்கள். அவரைப் போல…  இவரைப் போல…. அவர்கள் மேல் புகார் கொடுக்கப்பட்டது, நீக்கப்பட்டார்கள்… அவர் உங்களுடன் ஒரே அமர்வா? உங்களுக்கு அறிமுகமானவரா?”

“ம்ம், எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் அவரை இதற்கு முன் சந்தித்திருக்கலாம்,” என்றாள் அவள்.

எதிரில் அமர்ந்திருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் துறைத்தலைவர் மேலும் சிரத்தையுடன் பேசினார்.

“நீங்கள் மற்றவர்களை மதிக்க வேண்டும். உங்களால் தாங்க முடியாத தீயை மிதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் மாணவர்களின் பொருட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால், அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள், நாங்களும் மிக மிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்தான்.”

அவர் கீழே பார்த்து கூட்ட அறிக்கையை வாசித்தார், கடைசி பக்கத்தின் கீழ்ப்பகுதியில், அரசாங்கத்தின் பொதுச் சேவை துறையின் முழக்கம் அச்சிடப்பட்டிருந்தது: நாட்டுக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுதல்.

அவளுடைய பெற்றோரும் அரசு ஊழியர்கள்தான். தாயார் தொடக்கப்பள்ளி ஆசிரியர், தந்தை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்.  அவ்வப்போது, ​​அதே அரசாங்க சுலோகங்கள் எழுதப்பட்டிருக்கும் புதிய கிண்ணங்களும், துண்டுகளும், குடைகளும், பேனாக்களும் மற்றும் கோப்புறைகளும் வீட்டில் தோன்றுவது வாடிக்கையானது. அவை அனைத்தும் விடுமுறை கால பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு அவளுடைய பெற்றோரால் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட நினைவு பரிசுகளாகும். தொடக்கத்தில் அவள் எதையும் உணரவில்லை, குடைகள் உடைந்துவிடும், துண்டுகள் நிறம் மங்கிவிடும், கோப்பைகள் உடைந்துவிடும். இப்போது, முதன்முறையாக, அந்த முழக்கம் அவள் இதயத்தில் அழுத்தமாகவும் உண்மையாகவும் ஒரு கல்லைப் போல பதிந்துள்ளதை உணர்ந்தாள்.

“இதை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் அவர்களை விட அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.”

“நானும் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவள்தான்,” என்று அவள் நினைத்தாள். இது முள்ளைப் போன்ற ஒர் உணர்வு. நெற்றிக்கு அடியில் ஒளிந்து கொண்டு எந்த நேரத்திலும் உதடுகளைத் துளைத்துக் கொண்டு வரும். காற்றில் மிதக்கும் சிரிப்பொலி அலைகளையும் வெற்று சலசலப்புகளையும் உடைக்க அது போதுமானது. “நீங்கள் தற்செயலாக பவள பாறையை மோதிவிட்டீர்கள் என்றால்,  நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் அதை மிகவும் கவனமாக விடுவிப்பதே. உங்களுக்கு உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை”

அவளுடைய கார் எப்போதும் ஒரு நிழலான மரத்தடியில் நிறுத்தப்படும். அடிக்கடி காரினுள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, சிந்தித்துக் கொண்டிருப்பாள். கார் கண்ணாடியைக் கீழிறக்கும்போது உலகமே அலையாக அவளை நெருங்கும். ஆனால் இங்கு இருப்பது அமைதியான அலைகளற்ற உட்புறத்து நிலம். மெல்ல வீசும் காற்று கார் நிறுத்துமிடத்தைக் கடந்து செல்கிறது. உயிரியல் துறை வளாகத்திலுள்ள மீன் குளத்தின் மேற்பரப்பில் மடிப்புகள் விழுகின்றன.

அவளுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது. புத்தகத்தின் தலைப்பு, ஆண்டு, ஆசிரியரின் வாழ்க்கை ஆகியவற்றை எந்த மெனக்கெடலும் இல்லாமல் கூறுவதோடு அவற்றை வெண்பலகையிலும் எழுதி மக்களை வியப்பில் ஆழ்த்துவாள். அவளுடைய நல்ல நினைவாற்றல் காரணமாக, அவள் அடிக்கடி செவிமடுக்கும் விஷயங்கள் அவற்றின் தாக்கத்தை இழக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

“நினைவில் வைத்திருக்கத் தேவையில்லாத விஷயங்களை மறக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” இது அவளுடைய தாயாரின் அறிவுரை.

“இப்போது என்னிடம் நினைவில்கொள்ள வேண்டிய விஷயங்கள் மட்டும்தான் நிறைய இருக்கின்றன.” அவள் பதிலளித்தாள்

அப்போது அவளின் தாய் மீன் ஆய்ந்து கொண்டிருந்தாள்.  “அதான் செத்துப் போச்சே, செத்த மீனை மீண்டும் கொல்லக் கூடாது” எனக் கூறினாள்’.

” எனக்குப் புத்தி சொல்லாதே” அவளுடைய தாய் மீனின் வயிற்றை மெல்லிய கத்தியால் அறுத்து மீனின் செவுள்களையும் குடலையும் அகற்றினார்.

மீனின் கண்கள் ஏன் மூடுவதில்லை என்று சிறுவயதில் அம்மாவிடம் கேட்டது அவளுடைய நினைவுக்கு வந்தது. மீனின் கண்கள் எப்பொழுதும் விழித்தே இருப்பதால் மீனைச் சாப்பிட்டால் புத்திசாலியாகிவிடலாம் என்று அந்த நேரத்தில் அம்மா சொன்னாள்.

“இருந்தாலும் இறுதியில் மனிதர்களால் கொல்லத்தான் படுகின்றது”

“போய் புத்தகத்தை எடுத்துப் படி. போய் செய்ய வேண்டியதைச் செய்” என்றார் அவளுடைய அன்னை. “போ, போய் உன் வேலையைப் பார் “.

அவள் தன் தந்தையுடனிருக்க பால்கனிக்குச் சென்றாள். தந்தை சுற்றிலும் தெரிந்த வழக்கமான காட்சிகளை மிகுந்த மனத்திருப்தியுடன் பார்த்தாவாறு புகைபிடித்துக் கொண்டிருந்தார். மலைச்சரிவில் சீன தேசிய வகை ஆரம்பப்பள்ளி ஒன்று இருந்தது. கிளாரினெட் இசை விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் அவர்களை விட உற்சாகமானவை என்று அவளுடைய தாயார் அடிக்கடி சொல்வார். ஆனால் இப்போது அவளுக்கு அந்த ஓசைகளைக் கேட்க பிடித்திருக்கிறது. சில சமயங்களில் பள்ளியின் ஒலிபெருக்கிக் கருவி ஒருவர் அல்லது இருவரை அழைக்கும்.

“ஹுவாங் வெய்க்சிங், இங்கே வரவும்.” அல்லது “யே யுன்க்சின், யே யுன்க்சிங் நீ எங்கே இருக்கிறாய்?”

இதன் விளைவாக, அந்த வட்டாரத்தில் உள்ள அனைவருமே இந்த மாணவர்களின் பெயர்களைச் செவிமடுத்தனர், இந்த மாணவர்கள் தேடப்படுவதையும் அழைக்கப்படுவதையும் தெரிந்து கொண்டனர். அந்தத் தொடக்கப்பள்ளியில்  யாரோ ஒரு ஆசிரியர் ஒலிபெருக்கியைக் கையில் பிடித்துக் கொண்டு மாணவர் கூட்டத்தின் முன் நின்று உரக்கப் பேசுவதையும்  அந்தச் சீன தொடக்கப்பள்ளி மாணவர்கள் சிறிய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் போல சீராக வரிசையில் நிற்பதையும் அவளால் மனக்கண்ணால் பார்க்க முடிந்தது. முன்பொரு முறை, கான்வென்ட்டில் சக மாணவி ஒருத்தி அப்படிச் சொன்னாள். அவர்களை இவள் அறிந்திருக்கவில்லை. அந்த மாணவர்களை மலைச்சரிவில் கேட்கும்  பலவித ஒலிகளோடு ஒப்பிட்டுக் கொள்வாள். சில வேளைகளில் அருகிலிருந்து கத்தும் சிறார்களின் சத்தம் போலவும் தொலைக்காட்சி அலறலில் மூழ்கடிக்கப்படும் ஓசை போலவும் அவர்களின் கூச்சல் இருக்கும்.   இதற்கு முன் அந்தச் சூழலை ஏன் அவளால் சகித்துக்கொள்ள முடிந்ததில்லை என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போது யோசிக்கையில், அவள் எதிர்கொள்ளும் வேலையை விட அந்த வேலை எளிதாகவும் எளிமையாகவும் இருந்ததை அவளால் எண்ணிப் பார்க்க முடிந்தது.

“அவர்கள் சொற்பேச்சு கேட்கவில்லை என்றால், கடுமையாகக் கண்டிக்க வேண்டும்,” என்று அனுபவம் நிறைந்த அவளுடைய தந்தை கூறினார். “ஒருவனைத் தண்டித்து மற்றவர்களை அச்சுறுத்த வேண்டும், ஈவிரக்கம் காட்டக் கூடாது, ஒருபோதும் அவர்கள் முன் சிரிக்க கூடாது”.

சாப்பாட்டு மேசையில், அவர்களின் உறவினர்களைப் பற்றி பேசுவார்கள், ஒத்த வயதில் இருந்த அவளுடைய தாய் வழி சொந்தங்களைப் பற்றியும் தந்தை வழி சொந்தங்களைப் பற்றியும் பேசுவார்கள். அவர்களில் யார் வெற்றி பெற்றுவிட்டார், யார் வாழ்க்கையை இன்னும் வீணடித்துக் கொண்டிருக்கிறார், யார் மீது அறவே நம்பிக்கையில்லை என்று பேசுவார்கள்.

“உடன்பிறந்தவர்களே ஒருவரையொருவர் சந்திக்க விரும்புவதில்லை,” என்றார் அன்னை. “முன்பு சோம்பேறிகளாக இருந்தார்கள். இப்போது இன்னும் மோசம். முதலாளியுடன் ஏன் அடிக்கடி சண்டை போடுகிறார்கள் என்று தெரியவில்லை. எந்த வேலையிலும் நீடிப்பதில்லை.”

“இந்த மாதிரி ஆட்களிடம் எந்த முன்னேற்றமும் இருக்காது, எப்பவுமே முதலாளிகளைப் பகைத்துக் கொள்வார்கள். ” என்றார் அப்பா.

நீண்ட நாட்களாக அவள் ஒரு சிலரைச் சந்திக்கவில்லை. அவர்களைப் பற்றி இவர்கள் பேசும்போது, கொஞ்சம்தான் நினைவில் நிற்கிறது, கனவின் எஞ்சிய நினைவுச் சிதறள்கள் போல.​​ அவர்களில் சிலர் அவளுடைய சிறுவயது விளையாட்டுத் தோழர்களாக இருந்தும், அவர்களை அவள் மறந்துவிட்டதைக் கண்டு அவளுடைய பெற்றோர் ஆச்சரியப்படவில்லையே என்பது அவளுக்கு விசித்திரமாக இருந்தது. சீன தேசிய வகை தொடக்கப்பள்ளியில் படிப்பை முடிப்பதற்கு முன்பே, தனது பெற்றோரின் பள்ளி மாற்றத்தினால் அவள் தேசிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டாள். பின்னர் ஒரு கான்வெண்டில் இடைநிலை கல்வி. அதன் பிறகு அவர்களுடைய குடும்பம், உறவினர்களிடமிருந்து மேலும் தூரமாகிக் கொண்டே போனது. அவர்கள் அனைவரும் வேற்று மனிதர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களில் சிலர் தங்களது பட்டப் பெயர்களுடன் வெற்றி பெற்றவர்கள் ஆகியிருந்தார்கள் என்றும் இன்னும் சிலர் பிரச்சனைகளுள்ளவர்கள் என்று கருதப்பட்டு தோற்றுப் போனவர்கள் ஆகியிருந்தார்கள் என்றும் எண்ணிப் பார்க்க உண்மையிலேயே சிரமமாக இருந்தது.

“அவர்களின் விவகாரங்கள் உங்களுக்கு எப்படித் தெரியும்?” “உங்களுக்கு யார் சொன்னது?” என்று ஆச்சரியப்பட்டாள். “நிச்சயமாக யாராவது சொல்லியிருக்க வேண்டும்.”

அவளுக்கு இன்னும் ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறது. சிறுவயதில், பள்ளி விடுமுறையின்போது, ​​அவளுடைய பாட்டி வீட்டில், அந்த ஏரிக்கரையில் நின்றுகொண்டு அவளும் மற்ற சிறார்களும், அவளுடைய மாமா தண்ணீரில் குதிப்பதைப் பார்ப்பார்கள். அந்த ஏரி மிகவும் பெரியது. மிகுந்த ஆழம். அங்குள்ள மக்கள் ஏரியின் அருகே மீன் வளர்த்தார்கள். ஏரியின் மேற்பரப்பு மூங்கில் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். தங்களின் தந்தை தண்ணீருக்குள் வலை தைப்பதில் வல்லவர் என்று அவளுடைய உறவுப்பிள்ளைகள் தெரிவித்தார்கள். அவர்களின் தந்தை ஒரு முரட்டுக் கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு தண்ணீரில் குதிப்பார்.

அங்கிருக்கும் பெரியவர்களிடம், “மாமா எப்போது மீண்டும் மேலே வருவார்?” என்று கேட்பாள்.

அவர்கள் அவளிடம், “ஒரு நிமிடம் பொறு” என்பார்கள்.

அவள் ஏரியின் விளிம்பில் குனிந்து நின்று காத்துக் கொண்டிருப்பாள். நீரின் மேற்பரப்பில் ஒரு தலை தோன்றும். ஏரியின் நடுவில் சிற்றலைகள் தோன்றும். முதலில் தோன்றியது சிற்றலையா அல்லது மனிதத் தலையா என்று அவளால் அறிய முடிந்ததில்லை.

அங்குள்ளவர்கள், “உன் மாமாவுக்கு நல்லா ‘டம்கட்டும்’ திறமை இருக்கு” என்பார்கள். “தண்ணீரில் மீன்பிடி வலையின் கிழிசலைச் சரி செய்வது எளிதானது அல்ல, ஏனென்றால் மூச்சைப் பிடித்துக் கொண்டு, தண்ணீருக்குள் உள்ள பொருளைப் பார்த்து, தண்ணீருக்குள்ளேயே கிழிசலைக் கண்டுபிடித்து, அதைத் தண்ணீருக்குள்ளேயே தைக்க வேண்டும். எனவே, தண்ணீருக்குள் நீண்ட நேரம் இருப்பதற்குப் போதுமான காற்றை அடக்கிக் கொண்டிருக்க வேண்டும்”

அன்று மாலை சுட்டெரிக்கும் வெயில் அவளைக் கண்ணயரச் செய்தது.  மாமா எத்தனை முறை மேலே தோன்றினார் என்பது அவளுக்கு நினைவில்லை. ஒவ்வொரு முறையும் மேலே தோன்றியபோதும், வானத்திலிருந்து மேகங்களை நுரையீரலுக்குள் உறிஞ்சுவது போல, வானத்தை நோக்கி வாயைத் திறப்பார்.

வலையை ஏன் கரைக்கு இழுக்கவில்லை என்று அவர்களிடம் கேட்டதற்கு, வலை பெரிதாகவும் கனமாகவும் இருப்பதால் அது கடினமென்று அவளுடைய மூத்த மாமன் மகன் கூறினார். ஏரியின் அடித்தளத்தில் கயிறுகள் மற்றும் ஆப்புகள் கொண்டு வலையை நிலைபடுத்தியிருந்தார்கள்.   ஆகவே வலையைக் கரைக்கு இழுத்தால் அதில் அதிக ஓட்டைகள் உண்டாகும் என்பதால் அதைத் தொடுவதில்லை.  

அதிகம் பேசுவது மிகவும் ஆபத்தானது என்பதால், குறைவாகப் பேசுவதென முடிவு செய்தாள். அப்படிப் பேசுவது கூட தேவையான தெளிவுகள் பெறுவதற்கு மட்டுமே. அவளுடைய மான்களுடன் இருப்பது அவளுக்கு இன்னும் அதிக ஓய்வையும் அமைதியையும் தருவதாக எண்ணினாள். ஆற்றல் மிக்கவர்களாகவும் அனுபவம் குறைந்தவர்களாகவும் புத்திகூர்மையுள்ளவர்களாகவும் இருந்த அவர்களை அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் அவளை மதிப்பதையும் கேள்விகள் கேட்பதையும் கீழ்ப்படிவதையும்  அவள் விரும்பினாள். ஓய்வை விரும்புவதிலும் அழுத்தத்தை வெறுப்பதிலும் அவர்களைப் போன்றே தானும் இருப்பதாக உணர்ந்தாள். தனக்குள் இருக்கும் முரண்பாடுகள் அந்த மாணவர்களின் இதயங்களிலும் இருப்பதைக் கண்டாள்.

அவர்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், மௌம், கார்வர், தோல்கியன், ஹாரி போட்டர் (Maugham, Carver, Tolkien, Harry Potter) என்பார்கள். தாமஸ் மான், ஹெமிங்வே, ஃபால்க்னர் அல்லது வர்ஜீனியா வூல்ஃப் (Thomas Mann, Hemingway, Faulkner atau Virginia Woolf) என்று யாரும் சொல்வதில்லை. ஏன் என்று கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள்.

“ஹெமிங்வேயின் உரையாடல்களில் மையம் இல்லை, அர்த்தமும் புரிவதில்லை,” என்பார்கள்.

“மிகவும் அதிகமான புதிய சொற்கள், மிகவும் அதிகமான கதாமாந்தர்கள், மிகவும் சிக்கலான உறவுகள்” என்று தொடர்ந்து சொல்வார்கள்.

அமைதியான அந்த மாணவர்களை, பல கோணங்களில் சவாலான வினாக்களையும் கருதுகோள்களையும் கருத்துசகளையும் விளக்கங்களையும் முன்வைத்து துலங்கச் செய்யவில்லையென்றால், அந்த வகுப்பு பல வண்ணங்களைக் கொண்ட போர்வையாக மாறிவிடும்.  அது போன்ற ஓர் உற்சாகம் மிகுந்த போர்வையைத் தைக்க முடிவது பெருமையல்லவா. அப்படி ஒரு போர்வையைத் தைக்கும் வாய்ப்பை வேறெங்கும், யாராவது கொடுத்திருப்பார்களா என்று அவளுக்குத் தெரியவில்லை. சில நேரங்களில அந்தக் குரல்கள், ஒரு வனத்தின் கலவை ஒலிகளாய் அவளுக்குக் கேட்கும். கூச்சல் மிக்க வனத்தின் நடுவே நிற்கும் அந்தக் கற்பனை தோற்றத்தில், பல்வேறு விலங்குகள் தங்கள் மறைவிடங்களிலிருந்து ஒன்றையொன்று அழைத்துக் கொண்டிருக்கும். நாணத்தோடு முகம் காட்ட மறுக்கும் மான்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் நடக்கும். அவை அமைதியாக இருந்தாலும் சுற்றி நடப்பதை அறிந்தேயிருக்கும். அந்த வனம் ஒரே நிறமானால், நிச்சயமாக இவ்வளவு அழகாக இருக்காது.  

சில நேரங்களில் இந்த உற்சாகம் மீது கொண்ட ஈர்ப்பு, சேவையின் தொடக்கத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக்  கொண்ட தாரகமந்திரத்தை அவள் மறக்கக் காரணமாயிருந்தது. முதலில் அவள் தன்னைக் காற்றாக நினைத்துக் கொண்டாள். கண்ணுக்குத் தென்படாதவளாக. ஒரு அடி பின்வாங்கி நின்று மற்றவர்களை வழிநடத்துபவளாக… வகுப்பிலிருந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசும் போது வெவ்வேறு ஒலிகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்திய மாணவர்களும் சீன மாணவர்களும்தான் அதிகமாக இருந்தனர். நான்கு மலாய் மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள்தான் வகுப்பில் நிழல்கள் போல  அமைதியாக இருப்பவர்கள். அவர்களில் அதிக உற்சாகம் கொண்ட ஒரு இளைஞன் இருந்தான், மெலிந்தவன், நாகரிக உடைகள் அணிவான். வெப்பமான நாட்களில் இறுக்கமான உடைகளும், முக்கால் நீள கால்சட்டையோடு கூர்மையான காலணிகளும் அணிந்து வகுப்புக்கு வருவான். கலகலப்பாக பேசுவதை விரும்புபவன்,  அவன் மணிக்கட்டில் அணிந்திருக்கும் வெள்ளி மணிச் சங்கிலி எப்பொழுதும் ஒலியெழுப்பிக்  கொண்டிருக்கும்.

அவன் நாடகத்துறையில் இருந்து வருபவன்.

“இந்த நாவல் ஒரு நாள் மேடை நாடகமாக்கப்பட்டால், அழகான வெனிஸ் இளைஞன் கதாபாத்திரத்தை நிச்சயமாக நான்தான் ஏற்பேன்.”

சிலர் விசில் அடித்தார்கள். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவன் தன் சுருள் முடியை வருடினான். “என்னை விட பொருத்தமானவர் யாரும் இல்லை.”

“உன் தலைமுடி கருப்பாக இருக்கிறது என்பதை மறந்துவிடாதே” மொத்த வகுப்பும் சிரித்தது, “உனக்கு மிகவும் வயதாகிவிட்டது!”

அவளும் ஒப்புக்கொண்டாள், அவள் திறந்த மனமுடையவள், அன்பானவள், திறமையான மாணவர்கள் அனைவரையும் மன்னிக்கத் தயாராக இருந்தவள். இ. இ. கம்மிங்ஸின் (E. E. Cummings)  “Spring is like a perhaps hand” and…. without breaking anything’ என்ற கவிதையை வாசிக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாள்.

அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள், அவர்களிடையே இருக்கும்போது அவள் இன்னும் இளமையாக இருப்பதைக் கண்டு அவள் மகிழ்ச்சியடைந்தாள். அந்த அழகான மாணவன் ராகத்தோடு பாடுவது போல் கவிதை ஒன்றை ஒப்புவித்தான்: “எனக்குப் பிடித்திருக்கிறது, என் உடலை எனக்குப் பிடித்திருக்கிறது.” இன்னும் பத்து நிமிடம் இருந்ததால் அவள் அதை அனுமதித்தாள். அந்தக் கவிதை மிகவும் இனிமையாக இருந்தது. அவளும் அதிகம் யோசிக்கவில்லை. அழகான எதையும் அவளால் தடுக்க முடிந்ததில்லை.

அந்த மாணவன் நிறைவான மகிழ்ச்சியுடன் அந்த மின்னதிர்வு வாக்கியங்களை வாசித்தபோது, ​​அவன் உண்மையிலேயே ஓர் அழகான ஆண்மகன் என்பதை அவள் உணர்ந்தாள். அவனுடைய நீளமான இமைகள் ஒவ்வொரு வாக்கியத்தையும் கடந்து செல்லும்போது துடித்தன.  அக்கவிதையை எழுதிய கவிஞர் இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவருடைய கவிதையை அத்தகைய ஒருவன் வாசிப்பதைத் தடுக்க அவருக்கு எந்தக் காரணமும் இருந்திருக்காது என்று அவள் நினைத்தாள். அந்த மாணவன் தன் குரலின் தொனியால் அவளின்  முதுகுத்தண்டை மீட்டுவதாக அவள் உணர்ந்தாள். அந்த ஒலி சில சமயங்களில் வயலின் கம்பியைப் போல இறுக்கமாக இருந்தது, சில சமயங்களில் ஒரு கடிதம் போல பரவியது. யாரெல்லாம் அறையை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை உணராதவள் போல் அவள் இருந்தாள். 

அது ஏப்ரல் மாதம்.  காலம் மிக விரைவாக கடந்து போனது. காய்ந்த இலைகள் குழுவாக நடப்பது போல் தரையில் நிமிர்ந்து நிற்கும் அளவுக்குக் காற்று பலமாக வீசியது. சில நேரங்களில், மண்ணில் வேரூன்றிய தாவரக் கொத்து, நிலம் பற்றிய கவலையற்று இருப்பது போல  தான் ஓய்வாக நிலைத்தன்மையோடு இருப்பதாக அவள் உணர்ந்தாள். தோட்டத்தில் புதிய தளிர்கள் துளிர்விடுவதைப் பார்த்ததும் அவள் களையெடுத்தாள். முதலில் நடப்பட்ட தாவரங்களைப் பொறுத்த வரை, அவை கிட்டத்தட்ட மடிந்துவிட்டன. மழைக்குப் பிறகு, அவை உறுதியுடன் மீண்டும் உயிர் பெறும். தண்டுக்கும் கிளைக்கும் இடையில் சிலந்தி தன் வலையை அமைத்திருந்தது.

மலைச்சரிவில் உள்ள தொடக்கப்பள்ளியில் விடுமுறை தொடங்கிவிட்டிருந்தது. காலியான பள்ளிக் கட்டிடத்திலிருந்து மணியோசையைக் கேட்க முடிந்தது. ஏரியின் கலங்கிய மேற்பரப்பில் கொசுக்களும் ஈக்களும் மொய்த்தன.

தேர்வைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, ​​நேர்த்தியாகப் வெட்டப்பட்ட புல் தரையையொட்டி தாழ்வாக பறந்த பறவைக் கூட்டம் ஒன்று ஓசையின்றி பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.  அவை மழைக்கு முன் பூச்சிகளைப் பிடிக்க அங்கும் இங்கும் பறந்து கொண்டிருப்பது கருநிற நிழல் புள்ளிக் கோடுகள் போல ஆகாயத்தில் தெரிந்தன.  தூரத்தில் நேர்த்தியாகக் கவாத்து செய்யப்பட்ட மரங்களின் வரிசை தெரிந்தது.  கீழ்வானம் வரை மழை மேகங்கள் நீண்டிருந்தன. வெளிச்சம் மங்கி புல்வெளி மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்துடன் தெரிந்தது. சாளரத்தின் வழி பார்த்த காட்சி சட்டகம் இட்ட ஓவியம் போல் தெரிந்தது.

மாணவர்கள் உள்ளே நுழைவதற்கு முன், அவள் ஒரு மலாய் ஆசிரியருடன் உரையாடினாள்.  சாதாரணமாகக் கேட்டாள்.

“நீங்கள் முன்பு எங்கே கற்பித்தீர்கள்?”

“மாரா (MARA) பல்கலைக்கழக கல்லூரி,” என்று அந்த ஆசிரியர் பதிலளித்தார்.

சிறிது நேரம் யோசித்தாள். நெல் மணிகளை எண்ணுவது போல, சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளத்தில் அசைபோட்டாள். வகுப்பறையில் இருந்த எண்ணிடப்பட்ட மேசைகளையும் நாற்காலிகளையும் பார்த்துக் கொண்டே அவள் கேட்டாள்.

“அங்குக் கற்பிக்கும்போது, சீன மாணவர்களுக்கு நீங்கள் கற்பித்ததுண்டா?”

அந்த ஆசிரியர் அவளைப் பார்க்காமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டார். நன்கு யோசித்த பிறகு  பதிலளித்தார்.

“இல்லை, அங்கு 100% மலாய் மாணவர்கள்.”

இது அவளுக்கு ஏற்கனவே தெரிந்த பதிலாக இருந்தாலும் அவள் ஆச்சரியப்பட்டாள். அதே நேரத்தில், அத்தகைய கேள்வி உண்மையிலேயே அர்த்தமற்றது என்பதையும் அவள் உணர்ந்தாள். இத்தகைய கேள்விகள் குழப்பத்தை உண்டாக்குமென அந்த ஆசிரியர் கருதுவாரா? விரோதமானது அல்லது வேண்டுமென்றே சிக்கலைத் தேடுவது என்று நினைப்பாரா? அந்த ஆசிரியர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.  ஆனால் அவர் பதில் சொன்னபோது நிதானமாகப் பேசியது போல்தான் இருந்தது. அவர் கண்களில் இருந்து எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. பொருத்தமான தொனி. கவனமான வெளிப்பாடு. அவருடைய நிதானம்  குளத்து நீரை நிகர்த்திருந்தது.

அதன் பிறகு, அந்த ஆசிரியர் பேச்சை மாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வில் மாணவர் ஒருவர் எப்படி ஏமாற்றினார், அந்த மாணவர் எப்படி ஆசிரியரிடம் சிக்கினார். தண்டனையைப் பொறுத்தவரை, அவர் நிச்சயமாக பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டிருப்பார் என்றெல்லாம் சொன்னார்.

அவள் “ஆம், ஆம், ஆம்,” என்று அர்த்தமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஜன்னலுக்கு வெளியே மழையில் நனைந்த காட்சிகளைப் பார்ப்பதை அவள் தொடர்ந்தாள். புல்தரை நன்கு ஈரமாகியிருந்தது.

குளிரூட்டி மிகவும் குளிராக இருந்தது. அவள் அன்று சீக்கிரம் எழுந்திருந்தாள். கொட்டாவி விட்டாள்.

முன்பிலிருந்தே, அவளுக்கு மலாய் மொழியில் ‘ஆயேர் மூக்கா’ என்ற சொற்றொடர் மிகவும் பிடிக்கும்.  முகம் உணர்வுகளைக் காட்டிக் கொடுத்துவிடும். காற்று வீசும்போது அசையும் நீர் பரப்பு போல உணர்வுகளின் கொந்தளிப்பை  முகம் காட்டிவிடுகிறது.  பிறர் முகத்தில் பார்ப்பது  நம்முடைய  சொந்த உணர்வுகளாக இருக்கலாம்.

பேசப்படும் விஷயங்கள் சில பொருத்தமானவை, சிலவற்றைப் பேசவே கூடாது. சிலரால் இந்தக் கொள்கையைத் தொடர்ந்து பேண முடிகிறது போலும்.

ஏரியின் அடியில் மறைந்திருக்கும் பொருள் காற்றில் வெளிப்படாது, அதிர சிரிப்பது போல் தோற்றம் தரும்  நபர்கள், வெடித்துச் சிரிப்பார்கள், ஆனால் அவர்களின் கண்கள் சிரிக்காது. அப்படிச் சத்தத்துடன் சிரிக்காவிட்டால், மக்கள் தங்களை அணுக மாட்டார்கள் என்று அவர்களுக்குப் பயம். அவர்களின் கண்கள், வாதுமைக் கொட்டையின் தோல் போல கடினமான ஏதோ ஒன்றால் சிறைப்படுத்தப்பட்டிருப்பது போல் இருக்கும். அவர்களின் கண்கள் ஒரு குகை போல, அவற்றைப் பார்த்தவுடனேயே அந்தக் கண்கள் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் தெரிந்துகொள்வது என்பது தெரிந்துகொள்வது மட்டுமே. தெரிந்துகொள்வது என்பது, கொள்கைகளுக்குக் கீழ்ப்படிய மறப்பது, விழிப்புடன் இருக்க மறப்பது போன்ற தவறுகளைச் செய்வதைத் தடுக்காது.  அந்தத் தவறு, அதை எப்படிச் சரி செய்வது என்பதற்கு அப்பாற்பட்டு, அது ஒரு தவறுதான். அதன் பிறகு, தமது வரையறையைக் காட்டும் ஒரு வழிகாட்டியைப் பின்பற்றுவது போல  தன்னைத் தானே படிப்படியாகத் அவள் தனிமைபடுத்திக் கொண்டாள். முன்பிருந்தே ஒரு கொள்கையை காட்டிக் கொடுத்த  வழிகாட்டியாக அவளுக்கு அது இருந்தது.

அவள் தன்னைப் பற்றி சலிப்படையத் தொடங்கினாள், மேலும் வழிகாட்டி விஷயத்திலும் சலிப்படைந்தாள்.மே மாதத்தின் வருகையால் பருவக்காற்றின் தன்மை மாறிவிட்டிருந்தது. வெளியே செல்வதற்கு முன், ஜன்னலை மூடுவதற்கு அவள் தனக்குத்தானே நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நாள் மறந்து போனாள்.  திரும்பி வந்தபோது, அலுவலகத்தின் மூலையில் மெல்லியதாய் தண்ணீர் தேங்கியிருப்பதைக் கண்டாள். அப்போதுதான் தரை ஒரு பக்கம் தாழ்ந்திருப்பதை அறிந்தாள். சாதாரண நாள்களில் அவள் அதை உணர்ந்ததில்லை.

ஈரப்பதம் கான்கிரீட் சுவர்களில் ஊடுருவியது. மழை நாட்களில் குளிரூட்டி அதிக குளிரைப் பரப்பியது.  அவள் தோள்களைக் கட்டிக் கொண்டு துறைத்தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். ஒரு கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த அவர், முகத்தில் மிகுந்த தீவிரம் தெரிய தலையை உயர்த்தினார்.

“நீங்கள் வகுப்பில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கிறீர்கள் என்று மாணவர்கள் சொல்வதாக கேள்விப்பட்டேனே? மேலும், ஒரு முஸ்லீம் மாணவனை ஓரினச்சேர்க்கைக் கவிஞரின் கவிதைகளை வாசிக்கச் சொன்னீர்களாமே?” என்று அவளிடம் கேட்டார்.

அவளுக்கு எதிர்க்காமலிருக்கும் எண்ணமில்லை, ஆனால் அது இ. இ. கம்மிங்ஸின் (E. E. Cummings) கவிதை அல்லவா… அவ்வளவு சிரமப்பட்டு  அதை அவரிடம் விளக்கத்தான் வேண்டுமா? அவள் உண்மையிலேயே சோர்வாகவும், அவமதிப்பாகவும் கோபமாகவும் இருந்ததாள். அவளால் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியவில்லை.

“இது மிகமிக தீவிரமான பிரச்சனை. எனக்குப் புகார் வந்திருக்கிறது. நான் வெளிப்படையாகப் பேசத் தேவையில்லை. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிய வேண்டும். சிலருக்கு இது போன்ற விஷயங்களைப் பார்ப்பது பிடிக்காது. நிச்சயமாக, நீங்கள் எதையும் கற்றுத் தரலாம், இலக்கியம்,  ஆம் இலக்கியத்தை அரசியலோடு இணைத்துப் பேச கூடாது என்று எனக்கும் தெரியும்… இருந்தாலும், இப்போது இந்தப் பிரச்சனை வந்திருக்கிறது, இதை மற்றவர்களுக்கு விளக்குவது மிகவும் கடினம். உண்மையாகவே  சொல்கிறேன், யாரும் புகார் செய்யாவிட்டால் நான் கண்டுகொள்ளமாட்டேன்.”

அவள் பேசாமல் செவிமெடுத்துக் கொண்டிருந்தாள்.

“உங்கள் மாணவர் செல்ஃபி எடுத்திருக்கிறார், இணையத்தில் தன் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.  மேடைகளில் கவிதை வாசிக்கிறார், மேலும் தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். எத்தனை பேர் அவரைக் கொல்லப் போவதாக மிரட்டுகிறார்கள் என்பதை நீங்கள் போய்ப் பார்க்க வேண்டும்…”

“அவர்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நானும் நம்புகிறேன்.”

“ அந்தச் செயற்குழு என்ன சொல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. முட்டைக்குள் எலும்பைத் தேட விரும்புபவர்கள் இருந்தால், அவர்களுக்கு விளக்கம் சொல்லியாக வேண்டும். என்ன பதில் சொல்வது என்று நீங்கள் யோசிக்கலாம்.”

அமைதியாக இருந்து, நிலைமையைச் சத்தமில்லாமல் கடந்து செல்ல தன்னால் முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்றில், சற்றே மேலெழும்பிய இலட்சினை வடிவம் ஒட்டப்படுகிறது. சிவப்பு முத்திரையும் கூட ஒரு மர்மமான வாக்கியம் போன்றதுதான். அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும் அவளுடைய செவிகளைக் கிட்டத்தட்ட மூழ்கடிக்கும் கூர்மையான வெறுமையை அவளால் உணர முடிந்தது.

உணவகத்தில், தேர்வு கண்காணிக்கும் ஆசிரியராக அன்று இருந்த ஒரு மலாய் ஆசிரியையை அவள் சந்தித்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் முகமன் கூறினார்கள். மலாய் ஆசிரியரின் முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும். ஆனால் அவருக்குத் தெரிந்திருக்குமா? இந்தப் பெண் உண்மையில் பிரச்சனைகளைத் தேடிக்கொள்ளும் தன்மையுடவள் என்றும் இவளுக்கு யதார்த்தத்தின் மேல் திருப்தி இருக்காது என்றும் அவர் மற்றவர்களிடம் சொல்லக்கூடுமா?

மாலை முழுவதும், அவளுடைய இதயம் மந்தாரமாக இருந்தது, சிந்தனையில் குழப்பம், கற்பித்தலிலும் குழப்பம், வகுப்புக்குப் பத்து நிமிடம் தாமதம், சிந்தனைகள் தவறாக இணைக்கப்பட்ட மின்கம்பி போல முடங்கிக் கிடந்தது.   படிவங்களைத் தவறாகப் பூர்த்திச் செய்துவிட்டு, மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிக் கொண்டிருந்தாள்

இரவு உணவு நேரத்தில், தொலைக்காட்சியின் ஒலி வீட்டின் அறையை நிரப்பியது. நாடகத் தொடர்கள், விளம்பரங்கள், செய்திகள். அவளுடைய பெற்றோர்கள் சலிப்புடன் தொலைக்காட்சியைப் பார்த்தார்கள். இவளையும்தான்.  ஒருவேளை அவர்கள் இந்த மகளால் திருப்தி அடைந்திருக்கலாம், அல்லது திருப்தி அடையாமலும் இருக்கலாம், அவளுக்கு உறுதியாக தெரியவில்லை. பின்னர், அப்பா தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவளைப் பார்த்து, ‘ஆளுமை பெருவது எப்படி’ என்பது பற்றி பேசினார். அவள் தன் தந்தை சொல்வதை விசுவாசமாகக் கேட்பவள். ஆனால், தனிமையில் இருக்கும் இந்த வயதில், அப்பாவால் அவள் மூலமாக மட்டுமே வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள முடிந்தது. அப்பா, தாம் தலைமை ஆசிரியராக இருந்த நாள்களை நினைவு கூர்ந்தார்.

வாழ்க்கை பற்றிய அம்மாவின்  பார்வை அப்பாவுக்குப் பிடிப்பதில்லை. மனிதர்கள்  வாழ்க்கையை எவ்வாறு ஏற்புடையதாக்கிக் கொள்வது என்பதை அறிந்திருக்க வேண்டும், அதுதான் வாழ்க்கை என்று அம்மா சொல்வார். இந்த வார்த்தைகளைப் பல தசாப்தங்களாக மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டார்.  அவள் அம்மாவுடன் பாத்திரம் கழுவும் போது அம்மா தன் தனிமை வாழ்க்கையைப் பற்றி கூறுவதைப் பொறுமையாகக் கேட்பாள். அம்மா தம் வாழ்க்கை விஷயங்களைப் பேசும்போது எப்போதும் மற்றவர்களைப் பற்றி பேசுவார்.

அனைத்துமே பிற மனிதர்களைப் பற்றிய விஷயங்கள்.

இறுதியில், அவள் தனியானாள். உட்கார்ந்தே இருந்தாள். நகர விரும்பவில்லை. தூங்க விரும்பவில்லை,  பல் துலக்க விரும்பவில்லை, தன்னைச் சுற்றி புற்று எழும்பும் வரை உட்கார்ந்தே இருக்க மட்டுமே எண்ணினாள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, அந்த வீடியோவைத் தேடியெடுக்க வேண்டுமென்ற நினைவு வந்தது.  கிடைத்ததும் பல கடவுச் சொற்களை முயற்சி செய்தாள். இறுதியில் கிடைத்தது, ஆனால் வீடியோவின் தலைப்பு மட்டுமே எஞ்சியிருந்தது, வீடியோ தடுக்கப்பட்டிருந்தது.

ஒரு வாக்கியம் கண்ணில் பட்டது: ‘இந்த வீடியோ மற்றவர்களின் பாதுகாப்புக்கு மிரட்டலாகின்றது, நிறுத்தப்பட்டுவிட்டது.’

அவளுடைய எலும்பு மஜ்ஜை சில்லிட்டது.

ஒரு வாரம் கடந்து போனது. இரண்டு வாரங்கள் கடந்து போயின. அவளுடைய முதுகெலும்பு இன்னும் சில்லிட்டுதான் இருந்தது. அவள் தொடர்ந்து விரிவுரை அறைக்கு உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தாள்.  கட்டொழுங்கு குழுவிடம் எவ்வாறு விளக்கமளிப்பது என்று அவள் சிந்திக்கவில்லை, சந்திப்புக் கூட்டத்துக்கு அவள் அழைக்கப்படவுமில்லை. அந்த விஷயத்தைப் பற்றி யாரும் பேசவுமில்லை.  அது ஒரு முடிவுக்கு வந்தவிட்டதா? மறக்கப்பட்டுவிட்டதா? அந்த விவகாரத்தைப் பற்றி பேச வேண்டாம் என்று யாராவது உத்தரவிட்டு விட்டார்களா? அல்லது அது குறித்த விளக்கங்களுக்கு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்களா?

அந்த மாதத்தின் இறுதி வரை அவள் விவரம் அறியவில்லை. கட்டொழுங்கு வாரியம் வழக்கை கைவிட்டிருந்தது. வாரியத்தின் கவனம் மேலும் இளமையானவரும் மேலும் சிக்கலானவருமான ஓர் ஆசிரியரின்பால் திரும்பியிருந்தது. முஸ்லிம் பெண்களின் தோற்றம் குறித்து அவர் பேசியதாக கூறப்பட்டது.  புனிதத்தையும், உலகியலையும் வேறுபடுத்திக் காட்டினாலும், உண்மையில் அது உடல் ரீதியான கட்டுப்பாடுதான் என்று சொல்லியிருக்கிறார். இந்த விவாதம் சில முஸ்லிம் மாணவர்களைப் புண்படுத்தியிருந்தது. அவர்கள் முதலில் அவருடன் கலந்து பேச அவருடைய அறைக்குச் சென்றனர். பின்னர், “அவரது அணுகுமுறை குர்ஆனை அவமதிக்கிறது” என்று முடிவு செய்து கல்லூரிக்குப் புகார் கடிதம் அனுப்பினர். அதனால், எல்லா விதமான கோபங்களும் விமர்சனங்களும் மலையும் அலையும் போல் அந்த ஆசிரியை நோக்கி பாய்ந்தன. அச்சமயத்தில், எதேச்சையாக அந்த ஆசிரியரின் ஒப்பந்தமும் காலாவதியாக அதை புதுப்பிக்க வேண்டாம் என்று கல்லூரி முடிவு செய்தது.

நாள் முழுவதும் ஓய்வில்லை, வகுப்பு முடிந்து, வழக்கம் போல் உயிரியல் துறைக்கு முன்னால் உள்ள மீன் குளத்தைக் கடந்து சரிவான பாதையில் நடந்தாள். ஜூன் மாதமாதலால், பீனிக்ஸ் பனைகள் அதன் பூக்களால் சிவந்திருந்தன. நாடகத் துறையைச் சேர்ந்த அந்த மலாய் மாணவன் கண்ணுக்குத் தென்படவில்லை. அவனை எங்குமே சந்திக்க முடியவில்லை

.

அவள் அந்தக் கதவு வழியாக சென்றாள். கதவு திறந்து கிடக்க வெளிச்சம் தாழ்வாரத்தை ஒளிரச் செய்தது. அவள் உட்புறம் பார்த்தாள். அந்த இளம் பெண் ஆசிரியர் தம் பொருள்களைப் பெட்டிகளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். தரையில் அட்டைப் பெட்டிகளின் குவியல்கள் சிதறிக் கிடந்தன. அவளுடைய காலடிச் சத்தம் கேட்டு அந்த ஆசிரியைத் தலையை உயர்த்தினார். முகமனாக “ஹாய்” என்ற சொல் மட்டும் வந்தது.

அவள் வாசலுக்கு வெளியிலிருந்தே “ஹாய்” என்று பதிலளித்தாள். அவளுக்குள் சிறியதாக ஒரு குற்ற உணர்ச்சி. இந்த ஆசிரியையால்தான் தன்னுடைய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அவள் அறைக்குள் விரைந்து சென்று, தோழமையைக் காட்டுவதற்காக,  கிழிப்பது, இழுப்பது, பசை நாடாவை ஒட்டுவது என்று முடிந்த வரையில் உதவிகள் செய்தாள். அந்த இளம் ஆசிரியை அவளுடைய உதவியை மறுக்கவில்லை. ஆய்வறிக்கைகள், ஆங்கில, மலாய் மற்றும் சில சீனப் புத்தகங்கள்ளுடன்,  அவளுக்கும் பொருள் புரிந்த சில சீன வாசகங்களும் இருந்தன. தன் ஆர்வத்தை அடக்கி, ஒவ்வொரு புத்தகமாக அவள் பெட்டிக்குள் வைத்தாள், தங்க நிறத்திலான அட்டையைக் கொண்ட ஒன்றைக் கண்டபோது அது அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. அதை உற்றுப் பார்த்து உறைந்து போனாள். அந்த ஆசிரியர் உடனே அதை அவளிடமிருந்து வாங்கி பெட்டியில் வைத்து, அதன் மேல் நிறைய குறிப்பு புத்தகங்களை அடுக்கினார்.

“பரவாயில்லை, இங்கே யாரும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் அதை எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, பிரச்சனை இல்லை.”

“என் முன்னால் எவ்வளவு பெரிய ஆட்கள் இருந்தாலும், யாருக்கும் பயப்படாமல், என் விருப்பப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான்,” என்றார் அந்த ஆசிரியர்.

திரைச்சீலைகள் திறக்கப்பட்டன. அந்த அறை பிரகாசமானது. அந்தப் பெண் தன் கைப்பையிலிருந்து சிகரெட்டை எடுத்து அவளிடம் ஒன்றை நீட்டினார். அவள் வேண்டாம் என தலையை ஆட்டினாள். அந்த ஆசிரியர் ஒரு சிகரெட்டை எடுத்து, தலையைக் குனிந்து, தலைமுடியை நெருங்கி, சிகரெட்டைப் பற்றவைத்து கொண்டார். அன்று மாலை, அந்த அறை  சிகரெட் வாசனையால் நிரம்பியது.  அது அவள் மூக்குக்கு அசௌகரியமாக இருந்தது. அவளுடைய நுரையீரல் பல்வேறு தூசுதுரும்புகளால் நிரம்பியிருப்பதைப் போல் உணர்ந்தாள்.

“மன்னிக்கவும், நான் ஒன்றைக் கேள்விப்பட்டேன்,” என்று தொடங்கியவள்,  சொல்லாமல் நிறுத்தினாள்.

“என்ன கேள்விப்பட்டீர்கள்?”

அந்த ஆசிரியருக்கு அவள் சொல்ல வருவது புரிந்தது. மேலும் மேலும் உயரே எழும்பிக் கொண்டிருந்த வெள்ளைப் புகைக்கிடையிலிருந்து எதையோ தெரிந்துகொள்ள அவளைப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து, அந்த ஆசிரியர் தமது நாற்காலியில் அமர்ந்து, தரையில் இருந்த பொருட்களை உதைத்து ஓரமாகத் தள்ளி, நாற்காலியை மேசைக்கு அருகில் இழுத்தார். அன்று நடந்ததை மீண்டும் விவரித்தார். என்ன நடந்தது என்பதை அவளிடம் செய்து விளக்கினார். “இவ்வளவுதான்…” என்று நிறுத்தியவர்,   தன் இடப்புறத்தில் இருந்த டிராயரைத் திறந்து, இடுப்பைக் குனித்து, காற்றை உடலோடு அணைக்கும் தோரணையில் எதையோ வெளியே எடுத்து தன் மடியில் வைப்பது போல  பாவனை  செய்து, “என் உடல், நான் குனிந்தபோது குர்ஆனைத் தாண்டிவிட்டது என்று சொல்கிறார்கள். அது தவறாம்.“ என்றார்.

“அட சீ” என்றாள். அதற்கும் மேல் என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.

ஏழெட்டு புத்தக பெட்டிகள் அவர்கள் கண் முன் குவிக்கப்பட்டுவிட்டிருந்தன. சூரிய வெளிச்சம் மேற்கில் ஒடுங்கிக் கொண்டிருந்தது.  அவர்களால் ஒழுங்குபடுத்தி வைக்க முடிந்தது அவ்வளவுதான். புத்தக அடுக்கில் இன்னும் பல புத்தகங்கள் இருந்தன. “கிளம்ப நேரமாகி விட்டது. ம்ம், இங்கிருந்து சீக்கிரமாக போய்விட நான் விரும்பினாலும், எல்லாவற்ரையும் எடுத்து வைக்க ஒரு நாள் போதாது.” தன் கடைசி சிகரெட்டை ஆசைதீர புகைத்தபடி கூறினார் அந்தப் பெண்.

சிகரெட்டை அணைத்து, சாம்பல் கிண்ணத்தைச் சுத்தம் செய்தார். சிகரெட் வாசனை இன்னும் அவளுடைய தலையிலும் உடலிலும் இருந்து கொண்டே இருந்தது.

ஜூன் மாதத்தின் இறுதி அவள் காதுகளில் நடுக்கம் ஏற்படுத்துவதை உணர்ந்தாள்.

“நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? நான் கொண்டு போய் விடுகிறேனே,” என்றாள் சஞ்சலம் கொண்ட இதயத்துடன், “இந்த நேரத்தில் போக்குவரத்து கிடைப்பது கடினம்.”

அந்த இளம் ஆசிரியைத் தலைநகரின் வடக்கு பகுதியில் தேசிய மிருகக்காட்சிசாலைக்கு அருகில் வசிக்கிறார். அங்கு எப்படிச் செல்வது என்பது அவளுக்குத் தெரியும், அங்கு ஏற்கனவே போயிருக்கிறாள். விலங்குகளை ஆற்றல் இழந்த கூண்டுகளில் பார்த்திருக்கிறாள். அவள் அவரை வீட்டில் கொண்டு விட புறப்பட்டாள். அவருடைய எண்ணங்கள் இடது பக்கம் சாய்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தாள்.  அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும் அவர்களுக்கிடையே அவ்வளவாக நெருக்கமில்லை என்று அவளுக்குத் தோன்றியது. இந்த மிக மிக இளமையான பெண் ஆசிரியர் அந்தக் கல்லூரிக்குப் புதியவர். அவர்களின் அலுவலகங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்தன. அடிக்கடி நடைபாதையில் சந்தித்துக்கொள்வார்கள். சந்திப்புக்கூட்டங்களில் ஒன்றாகக் கலந்துகொள்வார்கள். பாடத்துக்கான ஆசிரியர் மாற்றத்தின்போது வகுப்பறைக்கு வெளியே ஒருவருக்கொருவர் காத்திருப்பார்கள்.

இப்போது, ​​மிக மிக இளமையான இந்தப் பெண், நம்ப முடியாத அளவுக்குத் தைரியத்தின் சின்னமாக மாறிவிட்டிருந்தார். இந்த நேரத்தில் அவள் மௌனம் காப்பதே உசிதமென்று அவளுக்குத் தோன்றியது.  அந்தப் பெண் நல்ல மனநிலையில் இல்லாமல் இருக்கலாம் என்றும் நினைத்தாள். ஆனால் இந்தப் பயணத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் தேவையாக இருந்தது. எனவே அவர்கள் கொஞ்சமாக உரையாடினர், சலிப்பு தட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எள்ளி நகையாடினர், பொதுப்போக்குவரத்து அமைப்பின் பலவீனங்களைக் குறை கூறினர். நிர்வாக அமைப்பின் பலவீனத்தையும்  அநீதியையும் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த வானொலி ஒலிபரப்பைக் கேட்கும் வரை அவர்களின் உரையாடல், தொடர்ந்தது. வானொலி நிகழ்ச்சியைச் சற்றுநேரம் அமைதியாகவும் கவனமாகவும் செவிமடுத்தனர்.

“இதற்குப் பிறகு நீங்கள் எங்குச் செல்வீர்கள்?” ஓட்டுநர் இருக்கையிலிருந்தபடி கேட்டாள்.

அவர் தோள்கள் உயர்த்தி “தெரியவில்லை,” என்றாள்.

“அவர்கள் உங்களிடம் எப்படிச் சொன்னார்கள்?”

“அவர்கள் இப்போது புத்திசாலிகளாகிவிட்டார்கள்,” என்றார். “மிகவும் நாகரீகமான காரணங்களை அவர்களால் சொல்ல முடிந்தது. என்னுடைய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்பதே அவர்களின் காரணம். சமீபத்திய பாடதிட்ட சீரமைப்பினாலும் துறையின் புதிய மேம்பாடுகளாலும் , என்னுடைய சேவை இனி தேவையில்லையாம். மாணவர்களிடமிருந்து விமர்சனம்களும் புகார்களும் வந்ததாக அவர்கள் குறிப்பிடவேயில்லை.”

“ஓ,  நிலமை அப்படியிருக்கிறதா… அப்படியிருக்கும் பட்சத்தில், வேறென்னதான் சொல்ல முடியும்.”

“வேறு என்ன சொல்ல வேண்டும்?”

அவள் மௌனம் காத்தாள்.

“நான் இரையாக்கப்பட்டேன் என்று சொல்லவா?” அவர் பக்கத்து இருக்கையிலிருந்து கூறினார். “ஆனால் நான் அதைச் செய்ய விரும்பவில்லை. விஷயம் உண்மையில் இன்னும் சிக்கலானது, மிக மிக சிக்கலானது.”

வேலை முடிந்து செல்வோரின் மகிழுந்துகள் அலை பெருக்கு போல் நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக நெரிசலில் சென்றன. ஆறு வரிசைகளில் நகர்ந்த மகிழுந்துகளால் அந்த இடம் ராட்சச வாகனம் நிறுத்தும் இடமாக காட்சியளித்தது.  கார்களின் ஹாரன்கள் ஓயாமல் ஒலித்தன. கார்கள் அங்குலம் அங்குலமாக நகர்ந்தன. நீண்ட வரிசைக்குப் பிறகு, ஏறக்குறைய ஒரு மணி நேரம் முடிந்து, அந்திசாயும் நேரத்தில், கார்கள் சுங்கச்சாவடியைக் கடந்த பிறகும் வாகனச் சமுத்திரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது.

“நான் வெளிநாட்டிற்குச் செல்ல விண்ணப்பிப்பேன் என்று நினைக்கிறேன். வெளியேறுவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும்” பக்கத்து இருக்கையிலிருந்து அவர் சலிப்புடன் கூறினார். “நீங்கள் எப்படி? எல்லாம் நன்றாகத்தானே போகிறது? தொடர்ந்து இங்கேயே கற்பிக்க முடியுமா?”

ஓட்டுநர் இருக்கையில் அவள் ஆமாம் எனத் தலையசைத்தாள், பின்னர் இல்லை என தலையை ஆட்டினாள். “எனக்குத் தெரியவில்லை. நல்லதை எதிர்பார்க்கிறேன். “அந்த நம்பிக்கை நல்லதைக் கொண்டு வரும்,” என்று கசப்பான குரலில் கூறினாள்.

“நான் அந்தக் குறும்படத்தைப் பார்த்தேன், உங்களுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, சிலருக்கு அவதூறு பேசுவது பிடித்திருக்கிறது,” என்று அவர் கூறினார் “ஆங்கிலமொழி இலக்கியத்தின் அடிப்படை அறிமுகம்தான் பாதுகாப்பானதும் நடைமுறைக்கு அப்பாற்பட்டதுமாக இருக்கும். வேறு எந்த வேலையும் இல்லாத சிலர் மட்டும்தான், அதாவது, மக்களைப் பயமுறுத்துவதற்கு வாய்ப்பைத் தேட விரும்புகிறவர்கள் மட்டும்தான், அனைவரையும் பயமுறுத்துவதற்கு ஒரு கொலையைச் செய்கிறார்கள்.”

அவள் அமைதியாகச் செவிமடுத்தாள். தன்னால் பேச முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. உண்மையில் சொல்வதற்கு எதுவும் இல்லை. நடந்து முடிந்ததைப் பொருத்தவரை அதுதான் உண்மை எனத் தோன்றியது அதுதான் பாதுகாப்பானதும் யதார்த்த நடப்புகளுக்குப் பொருந்தாதுமாக இருக்கின்றது. மிகப் பெரிய இடைவெளிதான் என்று  யோசித்தாள். அந்த இடைவெளி உண்மையிலேயே அந்தத் தீவுகளுக்கு இடையிலான தூரத்தை விட அதிகம்.

அவருடைய வீட்டை அடைந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கையசைத்து விடைபெற்றனர். சோர்வாக இருந்ததால் அவள் அதிகம் பேசவில்லை. உடனடியாக வீட்டுக்குப் புறப்பட்டாள்.

கார் வெளிப்புற நெடுஞ்சாலையிலிருந்து உட்புற சாலைக்குத் திரும்பியது. சரிவைக் கடந்து, நகரத்தின் வடக்கே இருந்த பசுமையான காட்டு வழியாகச் சென்றது. வானில் கிட்டத்தட்ட அந்திசாய்வது தெரிந்தது. கதிரவனின் கடைசி கதிர்கள் மரங்களின் உச்சிகளில் நிலைத்திருந்தன. குறுகலான பாதை மலைப்பகுதியில் வளைந்து வளைந்து சென்றது.  இருண்டிருந்த மரப்பட்டைகளும் மரநிழல்களும் மங்கலாகத் தெரிந்தன. சாலையின் இருபுறமும் பசுமை மிகுந்த குட்டையான மரங்கள் நடப்பட்டிருந்தன. அந்தப் பசுமைக்கு இடையில் வீடமைப்புப் திட்டத்தின் பெரிய விளம்பர பலகை ஒன்று காட்சி தந்தது.

இங்கேதான் அந்த விலங்கு, ஒருவேளை மானாக இருக்கலாம், மான் போலத்தான் அது தோற்றமளித்தது, எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று ஓட்டுநர் இருக்கை ஜன்னலுக்கு வெளியே தோற்றம் தந்தது.

அவள் தலையைத் திருப்பி அதைப் பார்த்தாள், விசித்திரமான கொம்புகள். ஜன்னலுக்கு வெளியே காற்று போல ஓடுகிறது. பார்வைச் சட்டென மங்குகிறது. இல்லை, அது பெரிய ஜாதி காட்டுமானாக அல்லாமல், சாதாரண மானாக இருக்கலாம், அவளுக்கு உறுதியாக தெரியவில்லை, உயிரியலில் அவளுக்கு ஆற்றல் குறைவுதான்

அதை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஒரு பகுதி மட்டுமே தெரிந்தது. தலைப்பகுதியும் உடலின் ஒரு பகுதியும் தெரிந்தன, கொடூரமான விலங்கினால் துரத்தப்பட்டுக் கொண்டிருப்பது போலவும், கூண்டிலிருந்து தப்பி ஓடுவது  போலவும் அதன் உடலில் நடுக்கம் தெரிந்தது. சில வினாடிகள், அவள் காரோட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை மறந்தாள். அவளால் பார்வையைச் சாலைக்குத் திருப்ப முடியவில்லை. அந்த விலங்கு ஜன்னலுக்கு வெளியே மிகவும் நெருக்கமாக இருந்தது, அதன் உடலில் உள்ள  உரோமங்கள் தொடக்கூடிய தூரத்தில் இருப்பது போல் தோன்றியது, அதன் கொம்புகளை அவளால் எட்டிப்பிடிக்க முடியுமெனத் தோன்றியது. அதன் கொம்புகள் தாம் தொலைக்காட்சியில் பார்த்ததைவிட குட்டையாகவும் சிறியதாகவும் தெரிந்தன. கொம்புகள் வானிலையின் மாற்றத்தால்கரடுமுரடாகவும் கருமையாகவும் மாறிவிட்ட முறிந்த மரக்கிளைகள் போல இருந்தன. அதன் கழுத்து மிகவும் நீளமாக இருந்தது. அதன் கண்கள் பக்கவாட்டில் உற்று பார்ப்பது போல் தோன்றியது, அதே நேரத்தில், அது தன் பார்வைக்குத் தெரியாத முன் திசையை நோக்கி ஓடியது.

சிறிது நேரத்துக்கு, சாலையின் இரு மருங்கிலும் மரங்கள் வலை போல் சூழ்ந்திருந்த அமைதியான பாதையில் அவளும் அந்த மானும் ஓடிக் கொண்டிருந்தனர். கருநீல வானத்தில் கனவு தேசத்து எல்லையைக் கடந்து செல்லும் மேகங்கள் போல அவள் பயணித்துக் கொண்டிருந்தாள்.  நீர் பெருக்கைப் போல் அவள் பிரக்ஞை பொங்கியது. அலையென வலிமை பெற்ற பிரக்ஞை, அவள் உடல் முழுவதும் பரவி, அவளைப் பூமியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயல்வது போல மிதக்கச் செய்தது. காலவெளிகள் சொந்தம் கொள்ள முடியாதவளாக அவள் எதிர்காலத்துக்குள் நுழைந்தாள்.

ஆனால் இது கண்ணிமைக்கும் நேரத்துக்கு மட்டுமே நடந்தது. பெரும் மையவிலக்கு சக்தியால் கார் சாலையிலிருந்து கிட்டத்தட்ட தூக்கி எறியப்பட்ட அந்த நேரத்தில், திடீரென திடுக்கிட்டு அவள் பிரேக்கில் காலை வைத்தாள். சக்கரங்கள் கீச்சிட்டன. கனமற்ற அந்த விலங்கு, வண்டியைக் கடந்து, அதன் இஷ்டம் போல் தொடர்ந்து ஓடியது,  அவள் கண் முன்னே அது ஓடி மறைந்து மங்கலான சிறு புள்ளி மட்டுமே எஞ்சியது. கடைசியில் கண்ணில் இருந்து மறைந்தது.

கார் ஒரு பெரிய வட்டத்தில் சுற்றியது. சாலையோரத் தடுப்பைக் கடந்து, சாலையை விட்டு வெளியேறி, ஏரிக்கு முன்னாலிருந்த கைவிடப்பட்ட நிலப்பகுதிக்கு வேகமாகச் சென்றது. அதிர்ச்சியில் அவள் அலறும் முன்பே எல்லாம் நின்று போனது.

அவள் நிதானமாக இருந்தாள், ஆனால் அப்போதும் அதிர்ச்சியில் அவளது இருக்கையில் உறைந்த நிலையில் இருந்தாள். சிறிது நேரம் கழித்து காரின் பின்புற கண்ணாடியில் பார்த்தாள். பின்னால் சாலையில் கார்கள் எதுவும் இல்லை. ஸ்டீயரிங்கை மெதுவாக திருப்பி காரைப் பின்நோக்கி நகர்த்தினாள். கார் சக்கரங்கள் சேற்றுப் பள்ளங்களில் சிக்கியிருந்தன. கார் இயந்திரம் எப்படி ஒலித்தாலும், சக்கரங்கள் நின்ற இடத்திலேயே சுழன்றன.

அவள் கார் இயந்திரத்தை முடக்கிவிட்டு காரை விட்டு இறங்கியதும் ஒரு கொசுக்கூட்டம் அங்குப் பறந்து வந்தது. அவளுடைய காதுகளில் சில்வண்டுகளின்  ஒலி நிரம்பியது. நீர் ஒளிபட்டு பளபளத்தது. அங்கே சில கைவிடப்பட்ட மரச்சாமான்களை அவளால் பார்க்க முடிந்தது. ஏரிக்கு மிக அருகில் ஒரு சோபா இருந்தது, அதன் கால்கள் தண்ணீரைத் தொடும் நிலையில் இருந்தன. அவளை அழைக்கும் விடுமுறையைப் போல் அது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. ஆனால், அவள் சோபாவை நோக்கி நடக்க முற்பட்டபோது சோபாவை அணுகுவது சாத்தியமல்ல என்பதை உணர்ந்தாள். உடைந்த மரக் குவியல்களும், குப்பை கூளங்களும் அதைச் சூழ்ந்திருந்தன.

அலங்கோலமாகவும் ஈரமாகவும் இருந்த சுற்றுபுறத்தை நோட்டமிட்டாள். காரின் சக்கரத்துக்கு அடியில் வைக்கக்கூடிய ஒரு மரப்பலகையைத் தேட முயன்றாள்.

வானம் விரைவாக இருளடைந்தது. அவளுடைய கால்களைக் கொசுக்கள் கடித்தன. அவள் காருக்குத் திரும்பி இயந்திரத்தை மீண்டும் முடுக்கினாள். ஆனால் வானமும் ஏரியும் இருட்டும் வரை காத்திருந்ததால் அங்கேயே சிக்கிக் கொண்டாள். அவளுக்கு யாரையாவது அழைக்க வேண்டும் என்ற தவிப்பு உண்டானது. ஆனால் தொலைப்பேசி தொடர்பு தெளிவாக இல்லை, தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து மீண்டும் மீண்டும் அதே பதில்தான் கேட்டது.

அவள் மிகவும் குழப்பமடைந்தாள். ஒரு தெரு விளக்குக்கூட இல்லை.

தான் அமர்ந்திருந்த இடம் ஏரியிலிருந்து வெகு தொலைவில் இருப்பது அவளுக்குத் புரிந்தது. ஆனால், அவளால் எதையும் பார்க்க முடியாததால், கண்களைத் திறந்த நிலையிலேயே பார்வையற்றவளாகிவிட்டது போல் இருந்தது. தூரத்தை உணர்ந்துகொள்ள முடியாத தூய இருட்டு. அவள் பூமியின் படைப்பைப் பற்றிய கட்டுக்கதையை நினைத்தாள், தெளிவற்றதை அகற்றும் அதிவீரனையும் அசாதாரணமான தைரியத்தையும் கற்பனை செய்தாள். முதல் ஒலியைப் பார்த்து, தங்களுக்குக் கண்கள் இருப்பதை உணர்ந்ததும், அடையும் அதிர்ச்சியை அவளும் உண்ர்ந்தாள். காரின் விளக்குகளை எரியவிட்டால் இருளைப் போக்கலாம் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் விளக்குகளைப் எரியவிட்டு தான் அங்கு இருப்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது பாதுகாப்பானதா அல்லது தொடர்ந்து இருளில் ஒளிந்து கொண்டிருப்பது பாதுகாப்பானதா என்று அவளுக்குத் தெரியவில்லை.

இந்த நேரத்தில், அவள் அமைதியாக  உட்கார்ந்து, கவனமாகச் செவிமடுத்தாள். இருளிலிருந்து வரும் பல்வேறு அறியப்படாத ஒலிகளையும் பாடலின் நல்லிணக்கத்தை உருவாக்க காட்டில் உள்ள பல்வேறு பூச்சிகள் எழுப்பும் ஒலிகளையும் கேட்டு இந்த இருளெனும் சேற்றை எதிர்கொண்டாள். ஏரியின் மேற்பரப்பில் பலத்த காற்று வீசுவதைக் கேட்டாள். காற்று, அவள் காரைக் கடந்து புதர்களையும் காட்டுப் புற்களையும் கடந்து வீசிக் கொண்டிருந்தது.  அவளுடைய சிந்தனைகள். சோர்வடைந்தன. இதுதான் அது, ஆம் இதுதான் சற்றே ஓய்வெடுப்பதற்கான இடம்.  

சீன மூலம்: ஹொ சொக் ஃபொங்

மலாய் மொழிபெயர்ப்பு: லீ யோக் ஹியாங்

தமிழில் : ச விஸ்வநாதன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...