
எழுத்தாளர் அ.ரெங்கசாமி காலமாகியச் செய்தியை எழுத்தாளர் ம.நவீன் புலனத்தில் இட்டிருந்த அறிவிப்பின் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன். அன்றிரவே அவருக்கு அஞ்சலி செலுத்த அவருடைய வீட்டுக்கு நானும் சண்முகாவும் சென்றோம். சவப்பேழையில் கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் ரெங்கசாமி கிடத்தப்பட்டிருந்தார். கைக்கூப்பி வணங்கிவிட்டு வெளியில் வந்தேன்.
பொதுவாகவே, எழுத்தாளர்களையோ ஆளுமைகளையோ நேரில் சந்திப்பதில் எனக்குச் கூச்சம் அதிகம். அப்படி அவர்களைச் சந்திக்கும் போதும் ஒரிரு சொற்களுடன் தலையசைத்து விட்டு அகன்று விடுவேன். ஆனால், நல்வாய்ப்பாக ரெங்கசாமியை ஈராண்டுகளுக்கு முன்பு நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலேசியச் சுதந்திர நாளன்று, எழுத்தாளர் ம.நவீன் ரெங்கசாமியைச் சந்திக்கப் போவதாகக் கூறி, உடன் இணைந்து கொள்கிறீர்களா எனக் கேட்டார். அவர் முக்கியமான செய்தியொன்றைப் பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கிறார் என நவீன் சொன்னது இன்னுமே ஆர்வமேற்படுத்தியது. ஒரு வரலாற்றுத் தருணத்தில் உடன் இருக்கப் போகிறோமென்ற உணர்வெழ உடனே ‘ஆம்’ என்று சொல்லிவிட்டேன்.
கல்லூரியில் பயிலும் போதே வல்லினம் வெளியீடு செய்திருந்த ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ எனும் ரெங்கசாமியின் தன் வரலாற்று நூலை வாசித்திருந்தேன். அதைத் தொடர்ந்து, ரெங்கசாமியின் ‘இமயத் தியாகம்’, ‘புதியதோர் உலகம்’, ‘விடியல்’, ‘லங்காட் நதிக்கரை’, ‘கருங்காணு’ ஆகிய நாவல்களையும் வாசித்திருந்தேன். இரண்டாம் உலகப் போரை ஒட்டி மலாயாவில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளான சயாம் மரண ரயில் தண்டவாளக் கட்டுமானம், இந்தியத் தேசிய ராணுவத்தின் எழுச்சி, ஜப்பானியர் வருகை என மெய்யான வரலாற்றுத் தருணங்களையும் நேரனுபவத் தகவல்களையும் கொண்டு நிரப்பி புனைவனுபவமாக மாற்றிய முன்னோடி படைப்பாளி அ. ரெங்கசாமி. எப்படியும் 90ஐ கடந்தவர் மனத்தில் சொல்ல தவறவிட்ட கதைகள் ஊறிக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
முதலில் எழுத்தாளர் ரெங்கசாமியின் மகனைச் சந்தித்தோம். அவர் வாயிலாகத்தான், ஒரு முக்கியமான செய்தியொன்றை ம. நவீனிடம் சொல்ல வேண்டுமென ரெங்கசாமி அழைத்திருந்தார். மூத்த மகளின் பராமரிப்பில் ரெங்கசாமி இருப்பதாகச் சொல்லி அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் சகோதரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டுக்குச் சென்று கூடத்தில் அமர்ந்தோம். மூன்று நாற்காலிகள், ஒரு சிறிய மேசை தவிர கூடத்தில் வேறு எந்தப் பொருட்களையும் காண முடியவில்லை. ரெங்கசாமி நேரக்கட்டுப்பாடு மிகுந்தவர் என ம. நவீன் சொல்லியிருந்தார். வல்லினத்தின் முயற்சியால் வெளியான அவருடைய ‘கருங்காணு’ மற்றும் தன் வரலாற்று நூலான ‘சிவகங்கை முதல் சிசங்காங் வரையில்’ ஆகிய இரு நூல்களுக்கான தொகுப்புப் பணியின் போது சற்று தாமதமானாலும் அழைத்து “ஐயா வரலையா?” என உடனே கேட்பார் என நவீன் சொன்னார். கூடத்துக்கும் பின்கட்டுக்கும் இடையில் இருக்கும் அறை மறைவில் தளர்ந்த தோற்றத்துடன் ரெங்கசாமி ரொட்டியைப் பிட்டுப் பசியாறிக் கொண்டிருந்தது தெரிந்தது.
தளர்ந்த தோற்றத்துடன் கூடத்துக்கு நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்தார். “எப்படி இருக்கீங்க ஐயா…” எனக் கேட்டு என்னைப் பார்த்தவரிடம் “நல்லா இருக்கோம் சார்… இவர் அரவின் குமார்… புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்” என அறிமுகப்படுத்தினார் நவீன். “உக்காருங்கையா…” என்றார். வழக்கமான சில சொற்களுக்குப் பின்னர் “ஒங்கக்கிட்ட மூணு சங்கதி சொல்லணும்… எல்லாம் உண்மையா நடந்த கதைங்கய்யா… என் கண்ணு முன்னால் நடந்து முடிஞ்சது… ஊரு சொல்லல பேரும் சொல்லல… எல்லாத்துக்கும் ஏத்த பேரா நீங்களே வச்சுக்குங்க… அது எப்படியோ எங்கேயோ பதிவாகணுமுன்னு ஆசை… நீங்களே கதையா எழுதலாம்… எனக்கு உங்க கிட்ட சொல்றதுதான் சரினு தோனுச்சி…” எனச் சொல்லி எச்சிலால் வாய் நனைத்துச் சிரிப்புடன் பார்த்தார். “சொல்லுங்க சார்…” என நவீன் ஆர்வத்துடன் அருகிலமர்ந்து கொண்டார். எனக்குச் சிறு வயது முதலே வயதானவர்கள் சொல்லும் கதையைக் கேட்பதில் ஆர்வம் அதிகம். நானும் கதை கேட்கும் சுவாரசியத்தில் அவருக்கு நேர் முன்னால் அமர்ந்து கொண்டேன்.
அவருடைய இளமைப்பருவத்தில் பார்க்க, கேட்க கிடைத்த மூன்று அனுபவங்களை நிதானமாகச் சொல்லத் தொடங்கினார். உடல் தளர்ந்திருந்தாலும் குரல் உடையாமல் கனீரென்று இருந்தது. முதல் கதை இப்படித் தொடங்கியது, ‘மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் ஊரைச் சேர்ந்த மர ஆசாரியான நாகப்பனும் மலையம்மாவும் கலப்பு மணம் புரிந்து கொண்டதால் குடும்பத்தின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருந்தது. மலையம்மாவின் அண்ணன், இருவரையும் கொல்வதற்காகக் கொலை வெறியுடன் ஊர் முழுக்க அலைந்து கொண்டிருந்தான். ஊரிலிருந்து தப்பியோடி நாகப்பட்டினம் வழியாக கப்பலேறி இருவரும் மலாயாவுக்கு வந்துவிட்டனர்.’
ரெங்கசாமி நிதானமாகவும் அழுத்தமான உணர்ச்சிப்பெருக்குடனும் கதையைத் தொடங்கினார்.
“ரெண்டு பேரும் நாங்க இருந்த சங்காங் கம்பத்துல அடைக்கலமாகி… மூணு பொம்புளை புள்ளைங்களும் ஆச்சு… அந்த மூணுல மூத்தது செவ்வந்தின்னு பேரு… நல்ல அழகா லட்சணமா இருக்கும்… அண்ணன் அண்ணன்னு என் மேல ரொம்பவும் உசுரா இருக்கும். தோட்டப் பள்ளியில் ஐந்தாமாண்டு வரையில் பயின்ற செவ்வந்திக்குத் தோட்டத்திலே ஆசிரியர் வேலை கிடைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அந்தச் சமயத்தில்தான் நீண்ட நாட்களாகத் தொடர்பு விட்டுப் போயிருந்த தமிழ்நாட்டு குடும்பத்திலிருந்து மலையம்மாவுக்குக் கடிதம் வந்து சேர்ந்தது. அப்பா உடல் நலம் கெட்டு மரணப்படுக்கையில் இருப்பதாகவும் நடந்தவற்றை எல்லாம் மறந்து மகளைச் சாவதற்கு முன்னர் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென ஏங்குவதாகவும் சொல்லி மலையம்மாவின் அண்ணன் கடிதம் எழுதியிருந்தார்.”
“வேணாம்! வேணாம்ன்னு எவ்வளவு தடுத்தும் கேட்காம மொத்த குடும்பமும் கப்பலேறிட்டாங்க… மரணப்படுக்கையில இருந்த அப்பனுக்குப் புள்ளையப் பாத்ததும் தெம்பு வந்துருச்சு. மூத்த மகன் திருமணமாகிப் பல வருசகியும் பிள்ளை பேறு இல்லாம வம்ச விருத்தி இல்லாம போச்சுன்னு மனசுக்குள்ள பொதைஞ்சுருந்த துயரத்த மக கிட்ட சொல்லி விசனப்பட்டுருக்கார். இந்தம்மா, மனசும் ஒடம்பும் தளர்ந்து போயிருக்குற அப்பனுக்குத் தெம்பு சொல்ல தன்னோட மூத்த மகளையே அண்ணனுக்கு ரெண்டாந்தாரமா கொடுக்குறேன்னு வாக்கு கொடுத்துருச்சு… பெத்தவங்களுக்கு மருமகளாவும் ஆச்சு… ஒடன் பொறந்தவனுக்கு மனைவியாவும் ஆச்சுன்னு திருமணம் பண்ணி வச்சு மலாயாவுக்கு வந்துட்டாங்க.”
”திருமணமான ஒரு வருசத்துல மகளுக்கு ஆண் குழந்தை பிறந்துருக்குன்னு செய்தி வந்ததும் ஊருக்குத் திரும்பி மகள கண்ணார பாக்கணும்னு அப்பனுக்கு ஆயிக்கும் ஆச… இங்க சொந்தமில்லாம ஒரியா இருக்குறத்துக்கு அங்கன சொந்தங்களோட வாழலாம்னு மலாயா மண்ணோட தொடர்ப ஒரே அடியா விட்டுட்டுப் போகணும்னு முடிவுக்கு வந்தாங்க… நானும் கம்பத்துல இருந்தவங்க பலரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காம அடுத்த புள்ளைங்க இரண்டோட நிரந்தரமா தமிழ்நாட்டுக்குக் கப்பலேறிப் போனாங்க… அங்க சென்ற பிறகுதான், மக படுற பாடு ஒன்னொன்னா தெரிய வர்ரது… காட்டு வேலை, வீட்டு வேலைன்னு மூத்த மனைவியும் கணவனும் சேர்ந்து புள்ளைய வேல வாங்கியிருக்காங்க… சொத்தை ஆளுறதுக்கு வாரிசு வேணும்ன்னுதான் இந்தப் புள்ளைய ரெண்டாந்தாரமா கட்டியிருக்காங்க… ஊருல நடந்த அநியாயத்தச் சொல்லி நீங்களாம் எவ்வளவு சொல்லியும் கேட்காம புள்ளையும் கட்டிக் கொடுத்து ஊருக்கும் திரும்பி வந்து தலையில மண்ணு போட்டுக்கிட்டேன்னு கடிதம் எழுதியிருந்தாரு… வீட்டுல நடக்குற கொடுமை பொறுக்காம, இந்த ஆண் பிள்ளைக்காகத்தானே என் வாழ்க்கை சீரழியுதுண்ணு, ஊருக்கு நடுவுல இருக்குற கேணியில பையனத் தூக்கி போட்டுட்டா செவ்வந்தி.” கதையைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்குத் திடுக் என்றது. நிமிர்ந்து அமர்ந்தோம்.
”பையன காணோம்னு ஊரு முழுக்கத் தேடுறாங்க… பையன் பிணம் கேணியில மிதக்குது… வெளியில எதுவும் சொல்லாம காதோடு காது வச்ச மாரி பையன அடக்கம் செய்துட்டாங்க… இந்தப் பொண்ணுக்குப் பித்துப் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சு… வீட்டுல இன்னும் கொடுமை தாங்க முடியாம போச்சு. கடைசியாக, அம்மன வேண்டி ஒடம்புல நெருப்பு வச்சி எறந்துட்டா!” எனச் சொல்லி முடித்தார்.
“சார், ஒரு நாட்டார் தெய்வம் உருவான வரலாறு மாதிரி இருக்கு சார்… அங்க எங்கயாச்சும் அந்தப் பொண்ணுக்குக் கோயில் ஏதும் வச்சிருக்காங்களா…” என நவீன் கேட்டார். கையில் வைத்திருந்த கைக்குட்டையால் வாயைத் துடைத்துக் கொண்டு “தெரியலய்யா… இந்தச் செய்திய, செய்தித்தாள்ல பாத்துத்தான் தெரிஞ்சிக்கிட்டோம்… அத்தோட அவுங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் தொடர்பு முடிஞ்சுருச்சு,” என்றார்.
ரெங்கசாமியின் புனைவு மொழியென்பது கூட தகவல்களும் தரவுகளும் ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டவட்டமான சட்டகங்களுக்குள் அனுபவங்களைப் பார்வையாளர் கோணத்தில் உருவாக்கி அளிப்பதாகவே இருக்கும். என்னுடைய கற்பனைக்குள் கிணற்றில் மூழ்கிய சடலமும் தீக்குளித்த பெண்ணின் சித்திரமும் மின்னி மறைந்தது. அதன் தகிப்பிலிருந்து மீள்வதற்குள் ரெங்கசாமி பேசத் தொடங்கினார்.
“இன்னொரு செய்தி, இதுவும் உண்மை சம்பவங்கய்யா!” என அடுத்த கதைக்குத் தயாராகினார். “ஊருல… எங்க ஊருல… ஒரு முரடன் இருந்தான். அவன் அங்கன இருந்த பொண்ணு ஒன்ன கெடுத்துட்டான். மாசமாகி புள்ளயும் பெத்துக்குச்சி. அரசமரத்துக்குக் கீழ பஞ்சாயத்துக் கூடுது. அந்தப் பொண்ணு தன்னோட ஆம்பிள புள்ள… கைப்புள்ளய பஞ்சாயத்து முன்னால போட்டு இவன் என்ன கெடுத்துட்டான்னு சொல்லுது… இந்த முரட்டுப் பய என்ன செஞ்சான்னு தெரியுமா… அந்தப் புள்ளய வாங்கி தலைக்கு மேல வீசி என் புள்ள இல்லன்னு சொல்லிட்டான். நல்ல வேளையா பக்கத்துல இருந்தவுக புள்ளய புடிச்சிட்டாங்க! அடாவடியா நடந்தவன்கிட்ட என்ன நியாயம் பேசறதுன்னு அந்தச் சங்கதிய அப்படியே விட்டுட்டாக… அந்தப் பொண்ணு ஊருக்குள்ளே மலாயாவுக்கு ஆள் பிடிக்க வந்த கங்காணிக்கிட்ட பேரு பதிஞ்சு கப்பலேறிடுச்சு… இங்க வந்து சங்காங் கம்பத்துல… அப்புறமா பாடாங் ஜாவாவுல எல்லா கொஞ்ச காலம் இருந்துச்சி… உறவு முறையில் அந்த அம்மாளோட வந்த பையன் எனக்கு அண்ணன் முறைத்தான்.
அவன் இங்க வந்து மலாய் கம்பத்துலே வளந்து நல்ல மலாய்மொழி கத்துக்கிட்டான். அப்பன போல பெருத்த சோம்பேறி, முரடன்… வாயில ஓயாம சிகரெட் பொகையும்… மலாயாவுல ஜப்பான்காரன் வந்து மூன்றரை வருசம் இருந்தான்ல… அப்ப இந்தப் பயலோட அம்மாளுக்கு எதோ சீக்கு கண்டு சுருண்டு செத்துப் போச்சு. போர் முடிஞ்சப் பிறகு 1948ல உறவினர்கள் மூலமா தமிழ்நாட்டுல அம்மாவ பெத்த பாட்டி அம்மணி இருக்குறாங்கன்னு தெரிய வருது. எப்படியோ, இங்க இருக்குறவங்க செய்த உதவியால தமிழ்நாட்டுக்குக் கப்பலேறிட்டான். பேரன பாத்து கெழவிக்கு எனங்காணாத சந்தோசம். அங்குட்டும் இங்குட்டும் வேல செஞ்சு சோறு வைச்சு வெஞ்சனமா கொடுத்துருக்கு… கேட்டுக்குங்கய்யா… கூழு கூட இல்ல… சோறு போட்டுருக்கு…”
”நாலு வருசம் ஒரு வேல வெட்டியுமில்லாம ஊருல அலைஞ்சுக்கிட்டு இருந்தான். காலையில எழுந்து வெள்ளை வேட்டி சட்டைகட்டி கடையில ஒக்காந்தா மதியத்துக்குத் திங்கத்தான் வீட்டுக்கு வர்ரது. நாலு வருசம் கழிச்சு 1952 ஆம் வருசம் மறுபடியும் மலாயாவுக்குத் திரும்பணும் ஆசை. பாஸ்போட் லேசுல கெடைக்காதுல்ல… அதுக்காக அந்த ஊருல இருந்த மணியக்காரர பார்த்து ஒரு அனுமதி கடிதம் வாங்க நாயா அலஞ்சான்… அவன் இவன விட பெரிய கொம்பன்… இவன்கிட்ட காசு வாங்க இப்படியே அலைகழிச்சுக்கிட்டு இருந்தான்… கடைசியா, இவனுக்கு ஒதவ இவன பெத்த அப்பன் இருந்தானே… அந்தச் சண்டியன்… அவன் கிட்ட ஊரு பேரு சொல்லாம வெத்துத்தாள்ல ஒரு கைநாட்டு வாங்கி இவனுக்கு பாஸ்போட் வாங்கி தந்துருக்கான். மலாயாவுக்கு மறுபடியும் வந்தார். இங்கயும் ஒரு பெண்ணோட திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. நல்லா கேளுங்க ஐயா… காலம் எப்படித் திரும்பி நடக்குதுன்னு பாருங்க. மறுபடியும் குடும்பத்தக் கூட்டிக்கிட்டு ஊருக்குக் கப்பலேறிட்டான். அங்கன, முன்ன ஒரு மொற வாங்குன கைநாட்டு வச்சு சண்டியரோட மொத்த சொத்தையும் வாங்கிட்டான். கடைசியில சாவுற காலத்துல, அந்தப் பையன் வீட்டில அடைக்கலமாயி எறந்து போனாரு சண்டியரு… ஒரு வகையில எனக்குச் சித்தப்பா முறைத்தான் …” எனச் சொல்லித் தண்ணீரைக் கொஞ்சம் குடித்தார். கதையில் இருக்கும் ஏமாற்றமும் கசப்பும் ரெங்கசாமியின் குரலில் கொஞ்சமும் இல்லை. அந்தக் கதையைச் சொல்ல வேண்டுமென்கிற முனைப்பு மட்டுமே அவருடைய குரலில் இருந்தது.
மூன்றாவதாக, இன்னொரு கதையைச் சொல்லத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகும் நிறைய தமிழர்கள் குடியுரிமை பெறுவதில் சுணக்கம் காட்டினர். மலாயா பிழைக்க வந்த நாடுதான் என்ற அலட்சியத்தால் குடியுரிமை பெறாமல் வெறும் வேலை பெர்மிட்டைக் கொண்டு தோட்டங்களில் வேலை செய்து வந்தனர். அப்படி, குடியுரிமை பெறாததால் பின்னாளில் பல துன்பங்களை அனுபவித்த பெண்ணொருத்தியின் கதையைச் சொன்னார் ரெங்கசாமி.
“இங்க கோலாவுல (கோலா கிள்ளான்) நமக்கு தெரிஞ்ச பெண் பிள்ளையொன்னு 35 வயசாகியும் திருமணமாகாம தொழிற்சாலையில வேலை செய்துகிட்டு இருந்தது. பெத்தவுங்க எல்லாம் எறந்துட்டாங்க… அண்ணனுங்க திருமணமாகித் தனிக் குடும்பமான பிறகு தனிக்கட்டையா வேல செய்துகிட்டு சம்பளப்பணத்த சேத்து வச்சு வாழ்ந்து வந்துச்சு. குடியுரிமை இல்லாததால பேங்கல அக்கவுண்ட் திறக்க முடியாதனால… மொத்தச் சேமிப்பும் வீட்டுலத்தான் வச்சிருந்துச்சு… தொழிற்சாலையில வேல செய்ற ஒரு ஆசாமிக்கு இந்தப் பெண் வச்சிருக்குற காசு மேல கண்ணு… பேங்கல பணம் வச்சிருந்தா நல்லது… அதுக்குக் குடியுரிமை எடுத்துத் தார்ரேன்னுட்டு சிறுக சிறுக அந்தப் பெண்ணோட சேமிப்ப கரைக்க ஆரம்பிச்சுட்டான்… மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கிட்டுப் போய்ச் சேர்ந்துட்டான்… அப்புறமா, தொழிற்சாலையில வேலையும் போய் சேமிப்புப் பணமும் கரைஞ்சு போயி பலகாரக் கடை நடத்திட்டு வர்ரா… இப்படிக் குடியுரிமை இல்லாத துயர் இன்னைக்கும் இருக்குய்யா…” என மூன்றாவது கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார். மூன்று கதைகளிலும் இருந்த கசப்பும் ஏமாற்றத்தின் சாயலும் ரெங்கசாமியிடம் கொஞ்சம் கூட இல்லை.
கதை சொன்ன களைப்பு அவரிடம் இருந்தது. “இந்த மூனு கதைங்களும் என் மனசுல ரொம்ப காலமா இருக்குதுங்கய்யா. நான் எழுதியிருக்கணும்… முடியல. இப்ப அந்தச் சுமைய உங்க கிட்ட கொடுத்துட்டேன். இதை என்ன செய்யுறீங்களோ அது ஒங்க விருப்பம்” என்றார். முகத்தில் நிம்மதி.
என்னைப் பார்த்தப்படியே ”ரொம்ப மகிழ்ச்சியா உங்கள பார்த்தது” என்றார். நவீனும் நானும் விடைபெற்றோம். அவருக்கருகில் அமர்ந்து ஒரு படத்தை எடுத்தபோது “உங்க பேரு என்னய்யா” எனத் திரும்ப கேட்டார். பெயரையும் பணியாற்றும் பள்ளியின் பெயரையும் சொன்னேன். வெளியில் செல்வதற்கு முன்னால் “வெளியில யாரு கேட்டாலும் சார் நல்லாத்தான் இருக்காருன்னு சொல்லுங்க” எனச் சொல்லி விடை தந்தார். தன்னுடைய நெடிய வாழ்வில் நினைவில் சேகரமாகி அந்திமத்தில் எழுத்தாக்கி விடத் துடித்த மூன்று கசப்பனுபவங்களை ரெங்கசாமி எங்களுக்குக் கடத்தியிருந்தார். அந்த மூன்று அனுபவங்களையும் எழுத்தாக்கி விடுவதே அவருக்கான அஞ்சலியாக இருக்கும். இதை வாசிக்கும் யார் வழியாகவும் அது பின்னர் புனைவுகளாக மாறலாம்.
அ. ரெங்கசாமிக்கு என்னுடைய அஞ்சலிகள்.
அஞ்சலி கதைகள் ரெங்கசாமி ஐயாவுக்கு மட்டும் சமர்ப்பணம் அல்ல. கதை மாந்தர்களின் துயரத்தை அனுபவித்த அனைவருக்கமே.