
தீவிர இலக்கியம் அதன் வாசகர்களிடமிருந்து வெறும் நுகர்வைக் காட்டிலும் அதிகமாகக் கோரக்கூடியது — அதற்கு ஈடுபாடு, பொருள்கொள்ளுதல், சிக்கலான தன்மையுடன் ஊடாடும் விருப்பம் தேவை. நேரியல் முறையிலான கதைசொல்லல் மற்றும் உடனடி நுகர்வை வளர்க்கும் வெகுஜனப் புனைகதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் அடுக்குகள், பலபொருள்படும் தன்மை கொண்டது, பெரும்பாலும் எளிமையான புரிதலுக்கு மறுமுனையில் இருப்பது எனலாம். தீவிர இலக்கிய வாசிப்பின் உண்மையான மகிழ்ச்சி புறவயமான நுகர்வு அனுபவத்திலிருந்து அல்லாமல் அதன் உள்ளார்ந்த பொருளைக் கண்டறிவதில், கட்டமைப்பை ரசிப்பதில், கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கும் செயலில் பங்கேற்பதன் மூலம் வருகிறது.
தீவிர இலக்கியத்தை வாசிப்பது என்பது ஆர்வம், பொறுமை மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் ஒரு படைப்பை அணுகுவதே. இதற்கு வாசகர் வரலாற்றுச் சூழல், மொழியியல் நுணுக்கங்கள் மற்றும் மொழிபுக் கட்டமைப்புகள் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஈடுபாடு வாசகரின் அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சி ஆழத்தை மேம்படுத்தி இலக்கியத்தை வெறும் கதைசொல்லல் என்பதிலிருந்து தத்துவ விசாரம், சமூக விமர்சனம் மற்றும் கலைப் புதுமைகள் நிகழக்கூடிய ஊடகமாக மாற்றும். தீவிர இலக்கியத்தை வாசிப்பதால் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறனும் ஒருவரது உடனடி யதார்த்தத்திற்கு அப்பால் மனித அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும். பிறரது உணர்விடத்திலிருந்து சிந்திப்பது, உரையாடலை ஊக்குவிப்பது, முன்முடிவான கருத்துகளை மீளாய்வு செய்வது என தீவிர இலக்கியம் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவும். கூடுதலாக, தொடர் வாசிப்பு உள்ளார்ந்த கருப்பொருள்கள், கட்டமைப்பு வடிவங்கள், சொல்லாட்சி நுட்பங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்கும் திறனையும் வளர்க்கும். அவ்வகையில் தீவிர இலக்கிய வகைமையில் பொருந்தக்கூடிய ஒரு படைப்பை மேலோட்டமாக வாசிப்பது என்பது வாசகருக்கு மேற்கூறிய பலன்கள் எதையும் அளிக்காது என்பதால் அவ்வாறான படைப்பை வாசிப்பது எப்படி என்பதையும் விளக்க வேண்டியதாகிறது. இந்தக்கட்டுரை என் புரிதலிலிருந்து அதற்கான முயற்சியே.
1. மேற்பரப்பிற்கு அப்பால் நகர்தல்
சாதாரண வாசிப்புக்கும் தீவிர இலக்கிய வாசிப்புக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு, மேற்பரப்பிற்கு அப்பால் பார்க்கும் திறன். மேற்பரப்பு என்பது என்ன? படைப்பில் விவரிக்கப்பட்டுள்ள கதை மற்றும் சம்பவங்களே மேற்பரப்பு. அப்படைப்பின் கதை, களம் உங்களை மகிழ்விக்கக்கூடும், ஆனால் தீவிர இலக்கியம் என்பது வெறும் சம்பவங்களின் வரிசை மட்டுமல்ல — அது, அந்தச் சம்பவங்கள் அடிப்படையில் எதை உணர்த்த முயல்கின்றன? என்பதைப் பற்றியது. தீவிர இலக்கிய வாசகன் கேட்கவேண்டிய கேள்வி: இந்தச் சம்பவங்களுக்கு அப்பால் அல்லது இந்தச் சம்பவங்களின் மூலம் எழுத்தாளர் எதை வெளிப்படுத்த முயல்கிறார் என்பதே. உதாரணமாக:
- சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ — இந்த நாவல் தனிப்போக்குடைய ஓர் எழுத்தாளனின் வாழ்க்கையைப் பற்றியது மட்டுமல்ல, கருத்துகள், சித்தாந்தங்கள், நோக்கங்கள், பார்வைகள் என எல்லாமும் மாறிவரும் இன்றைய சமூகத்தில் இலக்கிய உலகில் நிலவும் பண்பாடு, அறிவுஜீவித்தனம் மற்றும் தனித்துவம் குறித்த கூர்மையான விமர்சனம்.
மேற்பரப்பிலான வாசிப்பு இந்த அடுக்குகளைத் தவறவிட்டுவிடும், ஆழமான ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்பு அதன் பரந்துபட்ட இருத்தலியல் கவலைகளை, பிம்பங்கள் உருவாகிக் கலைவதை, உயர்ந்த தத்துவங்களின் கள யதார்த்தத்தை, வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு படைப்பின் ஆழத்தை அடைய வாசகர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்ன?
முதலில் ஒரு புத்தகத்தை விரைவாகப் படித்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தவிர்க்கவேண்டும். எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள் என்பது இங்கு முக்கியமே அல்ல. நீங்கள் குறைவான எண்ணிக்கையில் வாசித்திருந்தாலும் ஒரு படைப்பை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியம். படைப்பில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு காட்சியைப் பற்றிச் சிந்திக்க இடைநிறுத்துவது, சிக்கலான பகுதிகளை மீண்டும் மீண்டும் படிப்பது, குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சொற்றொடரை எழுத்தாளர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று கேள்வி கேட்டுக்கொள்வது பிரதியை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும். அதோடு, அப்படைப்பு சார்ந்த விமர்சனக் கட்டுரைகள், எழுத்தாளரின் நேர்காணல்கள் அல்லது கதை எழுதப்பட்டுள்ள வரலாற்றுச் சூழலை அறிந்து கொள்ளுதல் போன்ற துணை வாசிப்புகள் படைப்பின் மீதான புதிய கண்ணோட்டங்களைத் திறக்கும்.
2. மொழி மற்றும் பாணியில் கவனம் செலுத்துதல்
தீவிர இலக்கியம் அதன் மொழியிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது. சொற்களின் தேர்வு, அதன் இசைமை, வாக்கிய அமைப்பு மற்றும் உருவகங்கள் ஆகியவை வெறும் அலங்காரங்கள் மட்டுமல்ல, அவை அர்த்தத்துடன் ஒருங்கிணைந்தவை.
யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவலை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இந்நாவல் கவித்துவமான உரைநடையில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒன்று. அப்படைப்பின் மொழியிலுள்ள இசைமை, நாவலின் கருப்பொருளான காதல் மற்றும் ஏக்கம் குறித்த அதன் கவனத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் பத்திகளில் அதை நீங்கள் உணரக்கூடும்:
“நான் என்ன செய்வேன் ஜீவிதா… உங்கள் மெலிந்த உருவம்.. வட்டச் சிறுமுகம்… வரண்டாவில் நடக்கும்போதான புடவைச் சரசரப்பு… அசைவுகள்… புன்னகை… பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் நடந்தேன். இந்தச் சந்தோஷ நேரத்திற்கு — எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்தத் தருணத்திற்கு — அன்பு சுரந்து ததும்புகிற இந்தப் பிரகாச நிலைக்கு — எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு — பாடுகள் அத்தனையிலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்தலுக்கு — என்றென்றைக்குமாக உங்களுக்கு என் நன்றி.”
“இருளின் குமிழ்களைப்போல் உங்கள் புடவை அசைகிறது. மிகச்சன்னமாக ஒலிக்கின்றன உங்கள் கொலுசு மணிகள். தெளிந்து வருகிறது தலையில் சூடியிருந்த பூச்சரம். நடந்து நடந்து அகன்று கொண்டிருந்தீர்கள். ஒரு காலெடுத்து அடுத்த அடி வைக்கும்போது உங்கள் செருப்பிலிருந்து உதிரும் மணல், என்னை உட்கொண்டு திறந்திருக்கும் புதைகுழியை மூடுகிறது சிறுகச் சிறுக.., அலைகளை மிதித்தபடி கடலோரமாய் நடக்கத் துவங்கினேன்.”
***
இந்த இடத்தில் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலையும் குறிப்பிடவேண்டும். அதில் பாபுவின் தாபம் மற்றும் உளத்தடுமாற்றம் குறித்த கவனத்தை மேம்படுத்த அதன் மொழி உதவுகிறது. நாவலில் வரும் இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்:
”யமுனாவின் முகத்தையும் கண்ணையும் வனப்பையும் பார்த்தான் பாபு. இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுகமுடியாத, தொடமுடியாத ஒரு முழுமை, பொலிவு, சந்தனக்கட்டையின் வழவழப்பு, வர்ணம். நீண்ட விரல்கள், நீண்ட கைகள், நீண்ட பாதம். உண்மையாகவே இவள் தொடக்கூடாதவளா? நெருங்க முடியாதவளா? நெருங்கத் தகாதவளா? அறிவைத் தவிர, எண்ணங்களைத் தவிர வேறு ஒன்றுமே இவளுக்குக் கிடையாதா? இவள் சரீரத்திற்கு, தங்கச்சுரங்கமான இந்தப் புறஅழகிற்குப் பலனே கிடையாதா? இவளும் ஒருகணத்தில், ஒளிமங்கிய முக்கால் இருளில் தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும். தனிமையின் தயங்கும் துணிச்சலில், இருள்-ஒளிக் கலவையின் மறைவில், ஆகாயத்தை மட்டும் ஆடையாக அணிந்து நாணம் மின்னி நெளிய, குன்றியும் ஒடுங்கியும் எழுச்சி பெற்று நினைவழியத்தானே வேண்டும்.”
***
இங்ஙனம் மொழியில் முனைந்து உருவாக்கப்பட்டவற்றை அடையாளங்காண்பது தீவிர இலக்கிய வாசிப்பில் முக்கியமானதொரு செயல்பாடு — என்ன சொல்லப்படுகிறது என்பதைத் தாண்டி எப்படிச் சொல்லப்படுகிறது என்ற இடத்திற்குச் செல்வது. இதையுணர, சில பகுதிகளை வாய்விட்டுச் சத்தமாக வாசிப்பது, பயன்படுத்தப்படும் சொற்களில், வாக்கிய அமைப்பில் கவனம் செலுத்துவது, தொனியில் உருவாகும் மாற்றங்களைக் கவனிப்பது ஆகியவை எழுத்தாளரின் மொழிப்பயன்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும்.
3. கதைகூறலின் நுட்பங்களைப் புரிந்துகொள்வது
தீவிர இலக்கியத்தில் கதை அமைப்பு முக்கியமானது, பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. வெவ்வேறு கதைகூறல் நுட்பங்களை அடையாளங்காண்பது வாசகருக்கு படைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் பிரதியைப் புரிந்துகொள்ளவும் உதவும். எடுத்துக்காட்டாக சில கதைகூறல் நுட்பங்கள்:
- நேரியல்முறை அல்லாத கதைகூறல்: சுந்தர ராமசாமியின் ’ஒரு புளியமரத்தின் கதை’ நாவலின் கதை, மாறிமாறி வரும் காலவரிசை, பகுதிபகுதியான கதைசொல்லல் மூலம் எழுதப்பட்டுள்ளது. வாசகர்கள் அதன் பொருளை ஒன்றிணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
- அகவயமான கதைசொல்லிகள்: ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில், கதைசொல்லியின் கண்ணோட்டத்திலிருந்து வரும் கருத்துகள், ஒழுக்கம் குறித்த பார்வைகள் உண்மையின் அகநிலைத் தன்மையை எடுத்துக்காட்டுபவை.
- வேறுபட்ட கண்ணோட்டங்கள்: சோ.தர்மனின் கூகை நாவல் சாதிய ஒடுக்குமுறைகளை, சமூகக் கட்டமைப்புகளை பல்வேறு கதாபாத்திரங்களின் கண்ணோட்டங்கள் வழி முன்வைக்கிறது, இதன்மூலம் பல அடுக்குகள் கொண்ட வாசிப்பனுபவத்தை வழங்குகிறது.
- மீபுனைவு: ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வழமையான கதைசொல்லலைத் தவிர்த்து புராணம், வரலாறு மற்றும் தத்துவத்தைக் கலந்து, கதை குறித்த வாசகரின் பார்வைக்குச் சவாலான வகையில் கட்டமைக்கப்பட்டது.
தீவிர இலக்கியம் பெரும்பாலும் எளிமையான, ஒற்றை-நோக்கில் கூறப்படும் கதைகளை நிராகரிக்கிறது, அதற்குப்பதிலாக வாசகரின் பங்களிப்புத் தேவைப்படும் துண்டு-துண்டான, பல அடுக்குகள் கொண்ட கதைசொல்லலைத் தேர்வு செய்கிறது. மொழிபிலுள்ள மாற்றங்கள், கண்ணோட்டத்தில் நிகழும் மாற்றங்கள், கட்டமைப்பு ரீதியிலான புதுமைகள் ஆகியவை கருப்பொருளின் மீதான தாக்கங்களைக் கொண்டிருப்பதால், வாசகர்கள் அவற்றைக் கவனிக்கத் தங்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
4. மையக்கருத்துகள், மறைபொருளைத் தேடுதல்
தீவிர இலக்கியப் படைப்பு ஒருபோதும் அதில் நேரடியாகச் சொல்லப்படும் கதையைப் பற்றியது மட்டுமல்ல — அது எப்போதும் அறிவுசார், தத்துவ உரையாடலின் பகுதி. இலக்கியத்திலுள்ள அடிப்படை மையக்கருத்துகள், மறைபொருள்களை அடையாளம் காண வாசகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சில உதாரணங்கள்:
- பாமாவின் கருக்கு: சுயசரிதை நாவல் என்பதைத் தாண்டி, சாதிய ஒடுக்குமுறை, எதிர்ப்புத்தன்மை மற்றும் சுய அடையாளத்தை ஆழமான தனிப்பட்ட பார்வை மூலம் ஆராய்கிறது.
- ஜெயமோகனின் வெள்ளை யானை: காலனித்துவ விடுதலைக்கால வரலாற்றுநாவல் மட்டுமல்ல, நம்பிக்கை, கண்ணோட்டங்கள் மற்றும் யதார்த்தத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான இடைவினை குறித்த ஆய்வு.
- ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்: இடப்பெயர்வு, பண்பாட்டு மாறுதல் மற்றும் உயிர்வாழ்வதற்கான போராட்டம் ஆகியவற்றை விவாதிப்பது மட்டுமின்றி காலனித்துவ, பிந்தைய காலனித்துவ யதார்த்தங்கள் குறித்த விமர்சனம்.
தீவிர இலக்கியத்தில் கருப்பொருள்கள் அல்லது மையக்கருத்துகள் அரிதாகவே நேரடியாகக் கூறப்படும்; அவை மீண்டுமீண்டும் சொல்லப்படும் காட்சிகள், உருவகங்கள், உரையாடல்கள் மூலம் யூகிக்கப்பட வேண்டியவை. தீவிர இலக்கிய வாசகர் காலப்போக்கில் இந்த நுணுக்கங்களைக் கண்டறியக் கற்றுக்கொள்கிறார். வெளிப்படையாகக் கூறப்படாதவற்றைப் போலவே, சொல்லப்படாமல் விடப்பட்டவற்றிலும் கவனம் செலுத்துவது தீவிர இலக்கிய வாசிப்பில் மிக முக்கியமானது.
5. பொருள் கொள்ளுதல்
தெளிவான தீர்வுகளை வழங்கும் வெகுஜன எழுத்துகளைப் போலல்லாமல், தீவிர இலக்கியம் தெளிவின்மையில் (Ambiguity) செழித்திருப்பது. ஒரு பிரதிக்கு வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமான விளக்கங்களை அளிக்கலாம், ஒவ்வொன்றும் படைப்பின் செழுமையை அதிகரிக்கின்றன.
- கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்: கதை சொல்லியின் பயணம் நேரடியான பயணமா அல்லது சமூக மாற்றத்திற்கான ஓர் உருவகமா?
- ஜோ டி’ க்ரூஸின் ஆழி சூழ் உலகு: தனிமனித ஒழுக்கத்தை விமர்சிக்கிறதா அல்லது சமூகத்தின் கடுமையான கட்டமைப்புகளை விமர்சிக்கிறதா?
- அசோகமித்திரனின் தண்ணீர் : இந்த நாவல் மையப்படுத்துவது ‘80களில் இருந்த சென்னையின் வாழ்க்கை முறையையா அல்லது திரைப்படத்துறையில் உள்ள அவலங்களையா அல்லது மனிதசமூகத்தின் குணவியல்புகளையா?
பொருள் கொள்ளுதல் என்பது தொடர்ச்சியான செயல்முறை; இலக்கியப் படைப்பு ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய அர்த்தங்களை வெளிப்படுத்தக் கூடியது. வாசகரின் வளர்ந்து வரும் கண்ணோட்டத்தால் புதுவடிவம் பெறுவது. இலக்கிய விவாதங்களில் பங்கேற்பது, பல பகுப்பாய்வுகளைப் படிப்பது என்பதோடு ஒருவரின் சொந்தக்கருத்துகளை எழுதுவதும் கூட பொருள் கொள்ளும் அனுபவத்தை ஆழப்படுத்த கூடியதே.
6. விமர்சனச் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுதல்
இலக்கியத்தை ஆழ்ந்து வாசிப்பதென்பது ஒரு படைப்பை அதன் பிரபலத்திற்காக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அதைக் கேள்விகேட்பதை உள்ளடக்கியது. அதாவது படைப்பை வெவ்வேறு வகையில் ஆராய்வது. எடுத்துக்காட்டாக சில விமர்சனச் சிந்தனைகள்:
- எழுத்தாளரின் பார்வை: எவ்வகையான சார்புகள் அல்லது சித்தாந்தங்கள் படைப்பை உருவாக்கியுள்ளன?
- வரலாறு மற்றும் பண்பாட்டுச் சூழல்: படைப்பிலுள்ள காலம் மற்றும் இடம் அப்படைப்பின் மையப்பொருள்களை எவ்வாறு வடிவமைக்கின்றன?
- மாற்று வாசிப்புகள்: வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகள் — மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், பின்காலனித்துவம் போன்றவை — படைப்பை எவ்வாறு மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகின்றன?
உதாரணமாக, இமயத்தின் கோவேறு கழுதைகள் நாவலை சமூக ஏற்றத் தாழ்வுகளின் வர்ணனையாக அல்லது தலித்திய படைப்பாக அல்லது தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் அடக்குமுறையாக அல்லது ஆண்சமூகம் பெண்ணை எவ்வாறு பார்க்கிறது என்பதாக, ஆராயப்படும் கண்ணோட்டத்தைப் பொறுத்துப் பொருள்கொள்ளலாம். விமர்சனக் கோட்பாடுகள் சார்ந்து படைப்பை வாசிப்பது வாசகர்கள் அவற்றின் மேலோட்டமான அர்த்தங்களுக்கு அப்பால் படைப்புகளை மறுகட்டமைக்க உதவுகிறது, அதிகாரக் கட்டமைப்புகள், கருத்தியல் நிலைப்பாடுகள் மற்றும் பண்பாட்டு மறைபொருள்களை கேள்விக்குள்ளாக்க உதவுகிறது.
7. ஆழ்ந்து வாசிப்பதற்கான உத்திகள்
இலக்கிய வாசிப்பில் ஆழமாக ஈடுபடுவதற்கு நிச்சயம் தீவிரமான முயற்சி தேவை. அதற்கு சில நடைமுறை உத்திகள் உள்ளன.
- வரிகளைக் கோடிடுதல்: முக்கியமான சொற்றொடர்களை அடிக்கோடிடுதல், எண்ணங்களைக் குறிப்புகளாக எழுதுதல், தனித்து நிற்கும் பகுதிகளைக் குறித்து வைத்துக் கொள்ளுதல் போன்றவை புத்தகத்துடனான உரையாடலை உருவாக்க உதவும்.
- மெதுவாக மீண்டும்மீண்டும் படிப்பது: பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்த பல வாசிப்புகளில் மட்டுமே அவற்றின் ஆழத்தை வெளிப்படுத்தும்.
- மற்றவர்களுடன் விவாதிப்பது: படைப்பை வாசித்த வெவ்வேறு நபர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் வெவ்வேறு விளக்கங்களை வெளிப்படுத்தி புரிதலை வளப்படுத்தலாம்.
- முன் ஆய்வு: எழுத்தாளரின் சார்புநிலை அல்லது எந்தச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர், படைப்பின் வரலாற்றுப் பின்னணி என்ன, அப்படைப்பு ஏதேனும் குறிப்பிட்ட இலக்கிய இயக்கம் சார்ந்து எழுதப்பட்டிருந்தால் — உதாரணமாக பின் நவீனத்துவம் — அதுகுறித்து அறிந்துகொள்வது படைப்பைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கும்.
- வாசிப்பு நாட்குறிப்பு: வாசிக்கும்போது தோன்றும் எண்ணங்கள், கேள்விகள், நீங்கள் நிகழ்த்திய பகுப்பாய்வுகளைப் பதிவு செய்வது, சிக்கலான கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு வாசகராக உங்களது தனிப்பட்ட வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் உதவும்.
8. தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
தீவிரமாக வாசிக்க முனையும்போது, வாசகர்கள் அவர்களது ஈடுபாட்டைச் சிதறடிக்கும் சில விஷயங்களில் மாட்டிக்கொள்ளும் சாத்தியமுண்டு.
- கதையில் மட்டும் கவனம் செலுத்துதல்: ‘அடுத்து என்ன நடக்கிறது’ என்பதில் மட்டும் கவனத்தை நிலைநிறுத்தும்போது மையப்பொருள்கள் மற்றும் நுட்பங்களைத் தவற விட்டுவிடலாம்.
- உடனடித் தெளிவை எதிர்பார்ப்பது: சில படைப்புகள் தெளிவற்றதாகவும் திறந்த முடிவாகவும் இருக்கும்; இதை ஏற்றுக்கொள்ளாத தன்மை வாசிப்பின் மகிழ்ச்சியைத் தடுத்துவிடும்.
- அறிமுகமில்லாத படைப்புகளைப் புறக்கணித்தல்: சிரமம் அல்லது பண்பாட்டு வேறுபாடுகள் காரணமாக சவாலான நூல்களைத் தவிர்ப்பது வாசகர்களின் இலக்கியத் திறப்பைக் (Literary Exposure) குறைக்கும்.
- ஒற்றை விளக்கத்தைத் திணித்தல்: இலக்கியம் பல அர்த்தங்களுக்குரிய வாய்ப்பைக் கொண்டுள்ளதே அதன் சிறப்பு; ‘சரியான ஒற்றை அர்த்தம்’ இருக்க வேண்டுமென விரும்புவது, ஒரே கண்ணோட்டத்தில் — உதாரணமாக பெண்ணியம், மார்க்சியம், தலித்தியம் — அனைத்துப் படைப்புகளையும் பார்ப்பது அதன் செழுமையைக் குறைத்துவிடும்.
- மொழிநடை மற்றும் கட்டமைப்பைப் புறக்கணித்தல்: ஒரு கதை சொல்லப்படும் விதம் அதன் உள்ளடக்கத்தைப் போலவே முக்கியமானது. இதுகுறித்து ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
9. தனிப்பட்ட அனுபவத்தின் பங்கு
ஒவ்வொரு வாசகரும் தங்கள் சொந்தப்பின்னணி, உணர்ச்சிகள், கண்ணோட்டத்தைக் கொண்டு படைப்பை அணுகுகிறார்கள். அவர்கள் அதை எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்கள், பிரதியோடு எவ்வாறு தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என்பது நபருக்கு நபர் வேறுபடும். இந்த அகநிலை என்பது அதன் தனிச்சிறப்பு, வரம்பு அல்ல. ஒரு நாவல் ஒரு வாசகரின் பண்பாட்டு, சமூக அல்லது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வெவ்வேறு வாசிப்புகளை அளிக்கக்கூடும். உதாரணமாக:
- ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாசகர் ஒரு நாவலின் ஒடுக்குமுறை சார்ந்த மையப்பொருள்களை மிகவும் கூர்மையாக உணரலாம்.
- வெளிநாட்டில் வாழ்ந்த ஒருவர் இடப்பெயர்ச்சி மற்றும் அடையாளச்சிக்கல் சார்ந்த கதைகளின் கருத்துகளுடன் முரண்படலாம்.
- இழப்பு, காதல் அல்லது சிரமங்கள் போன்ற வாழ்க்கை அனுபவங்கள், இலக்கியத்தின் உணர்ச்சி ஆழத்தை ஒருவர் உணரும் விதத்தை வடிவமைக்கின்றன.
புதிய விளக்கங்களுக்குத் திறப்புடன் இருந்து மற்றொருவரின் பார்வையை ஏற்றுக்கொள்வது வாசிப்பு அனுபவத்தை வளப்படுத்தும், இலக்கிய வாசிப்பு என்பதை தொடர்ந்து மாறும், வளரும் உரையாடலாக மாற்றும்.
***
இறுதியாக, இலக்கியத்தைத் தீவிரமாக வாசிப்பதென்பது, ஒரு படைப்பை வாசித்து அடையும் இன்பத்திற்குப் பதிலாக அவ்விடத்தில் பகுப்பாய்வை வைப்பதல்ல, மாறாக நுண்ணறிவு மூலம் வாசிக்கும் இன்பத்தை ஆழப்படுத்துவது. இது வாசிப்பு என்ற செயலை புறவயமான நுகர்விலிருந்து முழுமையான அகவய ஈடுபாடாக மாற்றுவது, ஒவ்வொரு புத்தகத்தையும் ஓர் அறிவுசார் உரையாடலாக மாற்றுவது. மேற்பரப்பிற்கு அப்பால் பார்ப்பதன் மூலம், மொழியின் நுட்பங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், கருப்பொருள்களை கேள்விக்கு உட்படுத்துதன் மூலம், பிரதியைப் பொருள்கொள்ளுவதன் மூலம், வாசகர்கள் தீவிர இலக்கியப் படைப்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியும். அப்போது இலக்கிய வாசிப்பு என்பது வெறும் கதைவாசிப்பதாக மட்டுமின்றி, கருத்துகள், பண்பாடு மற்றும் மனித அனுபவத்துடன் நிகழும் ஓர் உயிருள்ள உரையாடலாக மாறும்.
சிறப்பான விளக்கம
அருமை