
தமிழாசியாவின் ஏற்பாட்டில் மாதந்தோறும் நடந்து வரும் சிறுகதை கலந்துரையாடலில் கடந்த ஜனவரி மாதம் எழுத்தாளர் வண்ணதாசனின் ‘தனுமை’, ‘சமவெளி’, ‘நிலை’, ‘தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்’ ஆகிய நான்கு சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
வண்ணதாசனின் படைப்புலகத்தைப் பற்றிய எழுத்தாளர் ம. நவீனின் அறிமுகத்துடன் கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. வண்ணதாசன் படைப்புகளின் வாசிப்பனுபவம் சங்கப்பாடல்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கு நேரானதாக இருக்கின்றது. தமிழில் உருவாகி வந்த நவீன சிறுகதை கூறல் முறையில் தொடக்கத்திலே கதையின் மையத்தைச் சொல்லி அதனை விரித்தெடுக்கும் பாணி இருந்தது, ஆனால், வண்ணதாசனுடைய கதை கூறல் பாணியென்பது சங்கப்பாடல்களில் இருப்பதைப் போல திணைப் பின்னணி, அதன் விவரணைகள் என விரிவான வருணனைகளைச் சொல்லி மையமென ஒன்றைச் சொல்லாமல் பயணிக்கிறது. இவ்வாறான விரிவான வருணனைகள் கதைக்குள் ஒருவகையான மயக்க நிலையை உருவாக்கச் செய்து கதையின் மையத்தை விலகச் செய்கிறதென சுந்தர ராமசாமி உட்பட பல விமர்சகர்களும் வண்ணதாசனின் கதை கூறல் பாணியினைத் தொடக்கத்தில் நிராகரித்தனர். ஒரே மாதிரியான கதைக்களங்கள், வசீகரமான நடை ஆகியவற்றைக் காரணங்காட்டி இடதுசாரி விமர்சகர்களும் அவரைப் புறக்கணித்தனர். இன்றைக்கு வண்ணதாசனுடைய படைப்புலகம் தமிழின் தனித்துவமான எழுத்துப்பாணியாக நிலைகொள்வதைக் காணும்போது விமர்சனங்கள் படைப்பின் மீதான தீர்ப்புகள் அல்ல என்பது உறுதியாகிறது. வண்ணதாசனின் சொற்களிலே சொல்வதாக இருந்தால் ‘ஆழமில்லாததைப் போன்று தோற்றமளிக்கும் ஏரிப்பரப்பில் முழு வானத்தையும் கண்டுகொள்ள முடிகிறதல்லவா’ எனக் கதையில் வரும் உவமையைப் போல ஒரு சிறு தருணத்தை விரித்து விரித்து வண்ணதாசன் சொல்ல முயல்வது வாழ்வின் பிரம்மாண்டத்தைத்தான் என நவீன் குறிப்பிட்டார்.
வண்ணதாசனின் சிறுகதைகளில் மிகச் சிறந்ததாக விமர்சகர்களால் சொல்லப்படும் ‘தனுமை’ சிறுகதை குறித்துப் பேசிய சிவரஞ்சனி, ஞானப்பனுக்குத் தனு என்கிற தனலட்சுமி மேல் இருக்கும் ஒரு தலை காதலையே கதை மையப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். ஞானப்பன் மீது டெய்சி வாத்திச்சிக்கும் ஒருவகையான ஈர்ப்பு இருக்கிறது. இந்த ஈர்ப்பைச் சொல்வதற்காகக் கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வருணனைகள் கதையின் மையத்தைக் கண்டுகொள்வதில் சிரமத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, ‘தனுமை’ கதையில் இருக்கும் நிலக்காட்சி சித்திரிப்பின் வேறுபாடு கதையைப் புரிந்து கொள்ள உதவியதாக அரவின் குமார் குறிப்பிட்டார். தனு வராமல் போன பின் உடைமுள்களும் தேரிக்காடும் பரவிய மணல்வெளியில் தன்னை ஒடுக்கிக் கொள்ள ஞானப்பன் முயல்கிறான். அத்துடன், திருமண வயதைத் தாண்டிய முதிர்கன்னியான டெய்சி வாத்திச்சி மீதும் சர்ச்சுக்கு இறுக்கமான ஆடையணிந்து மிதிவண்டியில் செல்லும் மாணவி மீது கூட அவனுக்கு ஒருவிதமான ஈர்ப்பும் வெறுப்பும் இருக்கிறது. ஆனால், அவர்களின் மீதான ஈர்ப்பென்பதை நேரடியாகக் காமத்துடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கொள்வதால் அசூயை உணர்வு ஏற்படுகிறது. உடைமுள்ளில் பூ பூத்த அபூர்வ தருணத்தைத் தனுவே அவனுக்குள் உருவாக்குகிறாள். வெய்யில் பரவிய நிலத்தில் விழுந்த ஒரு துளி குளிராக தனுவை ஞானப்பன் காண்கிறான். அந்த வெய்யிலை உடலில் தகிக்கும் காமத்துடன் தொடர்புபடுத்த முடிகிறது. அவள் வராமல் போகும்போது அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிற வெய்யிலிலே தன்னைப் புதைத்துக் கொள்ள விரும்புறான். அப்பொழுது, பெய்யும் மழையில் தன்னிரக்கத்தில் சோர்ந்து போகின்றவனுக்குள் ஒரு துளி வெப்பமாக டெய்சி வாத்திச்சி மாறிப் போகிறாள். வளரிளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பின் நுட்பமான ஒரு பகுதியை வண்ணதாசன் காட்டியிருப்பதாக அரவின் குறிப்பிட்டார்.

ஒரு கதையைக் காட்சியாகக் கற்பனை செய்து பார்க்கக் கூடிய மணம், ஒளி, ஒலி என நுண்விவரணைகள் ‘தனுமை’ சிறுகதைக்குள் நிறைவாக இருந்ததாக ரேவின் சொன்னார். காலைச் சாய்த்து நடக்கும் கறுத்த பெண்ணைக் கதையின் நாயகியாக உருவகப்படுத்தியிருப்பதிலிருந்து பெண்ணழகு மீது கதை எழுதப்பட்ட 1970களில் இருந்த பொதுப்பார்வையை வண்ணதாசன் தகர்த்திருக்கிறார் என மோகனா குறிப்பிட்டார்.
தனு போன்ற பண்பை (தனுமை) கொண்ட பெண்களையே சிறுகதை பேசுவதாக நவீன் தன் பார்வையை முன்வைக்கத் தொடங்கினார். அழகும் மதர்ப்பும் கொண்ட முதிர்கன்னியான டெய்சி இளமையில் யாரையும் கவரவில்லையா என்ற கேள்விக்குப் பதிலைத் தனுவிடம் கேட்டுப்பார்க்கலாம் என்றார். தான் காதலிக்கப்படுவதையும் ஈர்ப்புக்குக் காரணமாக இருப்பதையும் தனு உணராததைப் போலவே ஒருகாலத்தில் டெய்சியும் இருந்திருக்கக்கூடும். இன்னொரு காலத்தில் யார் மனத்தில் காதல் உருவாகியிருக்கிறதென்பதையும் அதனைக் கவனிக்காமல் செல்கின்ற பெண்களையும் ஒருசேர அறிந்து கொள்ளும் நுண்ணுணர்வு டெய்சியால் அடைய முடிகிறது. தனு போன்ற பெண்களின் பண்பைக் கொண்ட பிற பெண்களின் கதையாக இக்கதையை அணுகலாமென நவீன் சொன்னார்.
அடுத்த கதையான ‘நிலை’ சிறுகதையை நான்கு கூறுகளின் அடிப்படையில் தான் புரிந்து கொண்டதாக சாலினி குறிப்பிட்டார். முதலாவதாக, கதை முழுக்க கோமுவின் மனநிலையைக் காட்டும் வண்ணமயமான ஒலி, ஒளி, மணம் ஆகிய சித்திரிப்புகளைக் குறிப்பிடலாம். சிறுவர்களின் அகவுலகைக் காட்டும் சித்திரிப்புகள் கதையின் மைய உணர்வான சோகத்தைப் புறந்தள்ளி மகிழ்ச்சியைக் காட்டியப்படியே பயணிக்கின்றன. அந்த முரணையே கதையை அணுகுவதற்கான அடுத்த கூறாகக் குறிப்பிட்டார். ஒன்றை இன்னொன்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் சித்திரிப்புகளான மரங்களை கோமுவின் மனமலர்ச்சியுடன் ஒப்பிடப்படுவதைக் குறிப்பிட்டார். அதே மாதிரியாக மனிதர்களையும் இன்னொரு மனிதருடன் பொருத்திப் பார்க்கும் பொதுமையை வண்ணதாசன் கதையில் நிகழ்த்துகிறார். அத்துடன் கதை முழுதும் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் நுண்விவரணைகளையும் சாலினி குறிப்பிட்டுச் சொன்னார். இறுதியாக, தேரோட்டம் முடிந்து நிலையத்தில் ஓய்ந்திருக்கும் தேரைப் போன்றவளாகவே கோமுவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள். கோமுவின் மனத்தில் தேரையொட்டி எழுகின்ற கற்பனைகளும், நினைவுகளும் ஓய்ந்து தேரும் வடம் இழுத்து நிலையத்தில் ஓய்ந்திருக்கும் தேரைக் காண்கிறாள். அத்தருணம் தேரின் நிலையைக் கோமுவுடன் தொடர்புபடுத்தப்படுவதாக அமைகிறதென்றார். தொடர்ந்து பேசிய லாவண்யா, வீட்டு வேலைகள், தவிப்புகளில் கழியும் வாழ்விலிருந்து கோமு விடுதலை பெற எண்ணுகிறாள். வீட்டிலுள்ள அனைவரும் தேரோட்டத்தைக் காணச் சென்றபோது ஆளோயந்த வீட்டின் தூண்கள் இரண்டும் இரு மிருகங்களாக அவளுக்குத் தோற்றமளிக்கின்றன. தேரின் முகப்பில் இருக்கும் வெள்ளைக் குதிரையில் ஏறி வானத்தில் பறப்பதைப் போல கற்பனை செய்கிறாள். ஆனால், தேரின் வடங்கள் அவளால் கொஞ்சமும் இழுக்க முடியாதபடிக்குப் பாரமானவையாக இருக்கின்றன. அவளுடைய மனவுணர்வுகளுக்கும் யதார்த்த வாழ்வுக்குமான முரணைத்தான் நிலை சிறுகதை காட்டுவதாக லாவண்யா குறிப்பிட்டார். அடுத்ததாக, கதையில் இருந்த துயரை நேரடியாக வெளிக்காட்டாமல் பின்னணியில் சன்னமாக ஒலிக்க விட்ட கதையின் கூறல் முறை தனக்குப் பிடித்திருந்ததாக அரவின் குறிப்பிட்டார். மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய பால்யப்பருவத்தில் எங்கோ மச்சு தட்டோடியில் நின்று பார்த்த முழுமையற்ற தேரின் அங்க அசைவுகளும் நினைவுகளையும் மனத்தில் ஓட்டிப் பார்த்து மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளும் கோமுவின் சித்திரிப்பு வாசிப்பில் துயரைக் கடத்தி விடுகிறது என்றார். அடுத்து பேசிய ரேவின் கோமுவின் மனநிலையொட்டி வரக்கூடிய துயர் இருந்தாலுமே கதை முன்னிலைப்படுத்த முனைவது கோமு தானே உருவாக்கும் மனமகிழ்ச்சியைத்தான் என்றார். கதையை வாசிக்கும்போது முகுந்த் நாகராஜனின் கவிதையொன்று தனக்கு நினைவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.
விளையாட்டுப் பிள்ளைகள்
இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்.
ஒன்று
ஊஞ்சலில் நின்றும், உட்கார்ந்தும்,
ஒற்றைக்காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக்கொண்டும்
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?
இந்தக் கவிதையின் சாரத்தைப் போலவே, கோமு தனக்கான மகிழ்ச்சியைத் தானே உருவாக்கிக் கொண்டதாக ரேவின் குறிப்பிட்டார். கோமுவின் மனநிலையைக் காட்டி குழந்தைகளின் உளவியலைக் காட்டுவதாகவே தான் புரிந்து கொண்டதாக சுதாகர் கூறினார். வீட்டு வேலைகளும் சிரமங்களும் நிறைந்த வாழ்விலிருந்து விடுபட முடியாத நிலையையே கதை காட்டுவதாக சல்மா குறிப்பிட்டார். கற்பனையே வாழ்க்கை சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பைத் தருவதைக் கோமுவின் எண்ணவோட்டத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்ததாக புஸ்பவள்ளி சொன்னார். இறுதியாக, இந்தக் கதை முழுக்க முழுக்க கவித்துவமான படிமத்தால் ஆனதாக தன்னுடைய வாசிப்பனுபவத்தை ம.நவீன் முன்வைத்தார். இந்த மொத்த கதையுமே தேர் என்னும் மையத்தை நோக்கியே நகர்கிறது. கதை முழுக்க தேரைப் பற்றி பிறர் சொல்ல கேட்ட நினைவுகளையும் கற்பனைகளையும் கொண்டு கோமு உருவாக்கும் தேரென்பது உயிருள்ள ஒன்றைப் போலவே துலங்கி வருகிறது. பச்சைப் பிள்ளையைப் போல தேர் ஓடியதாகத் தேரோட்டத்தைப் பார்த்தவர்கள் குறிப்பிடும் இடம் கதையில் வருகிறது. அந்தத் தேரைக் கோமு பார்க்க முடியாமல் போவதில் உள்ளூர சோகமொன்று ஒளிந்திருக்கிறது. ஆனால், நிலையத்துக்கு வருகிற கோமுவின் கண்களை எதிர்கொள்கின்ற தேர் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது எனும் இடமென்பது வடத்தை இழுத்து தேரை நகர்த்திச் சென்று கொண்டிருக்கும் பழகியக் கண்களுக்குப் பதிலாகக் கற்பனையின் வாயிலாக அசைவும் உயிரோட்டமும் கொண்ட தேரைக் கற்பனை செய்யும் சிறுமியின் உயிர்ப்பான கண்களைக் கண்டபின் தேருக்கு ஏற்படும் வியப்பாகப் பொருள் கொள்ளும் கவித்துவமான வாசிப்பின் வழியேதான் கதை தன்னைத் திறந்து காட்டுவதாக நவீன் குறிப்பிட்டார்.

அடுத்த கதையான ‘சமவெளி’ சிறுகதை குறித்து பேசிய அரவின், ஓவியத்தில் இருக்கும் விவரணையைப் போலவே காட்சிகளால் ஆனதாகச் ‘சமவெளி’ சிறுகதை இருந்ததாகக் குறிப்பிட்டார். பணிச்சூழல், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கை சூழல் ஆகியவற்றால் தனக்குள் இருக்கும் நுண்ணுணர்வு தளத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் கதைசொல்லி இருக்கிறான். இன்றைக்கு அழகிய ஓவியம் வரையப்பட்டு தன் நுண்ணுணர்வுத்தளம் மீட்கப்பட்டுவிட்டதென்ற மகிழ்ச்சியில் மனத்தில் எழும் பூந்தோட்டத்தைப் பற்றிய கற்பனையில் ஆழ்கிறான். அதை மனைவியிடம் காட்டி மகிழ எண்ணும்போது அதை அசிங்கமென மனைவி நிராகரித்து மருந்து மாத்திரை வைக்கப்பட்டிருக்கும் அலமாரியைக் காட்டுகிறாள். அவளே கூட, நீரைக் கண்டும் மழைநீரைக் கண்டும் உள்ளூர ஆனந்தமடைகிற நுண்ணுணர்வு கொண்டவள்தான். நடுநிசியின் நிலவைப் பார்க்க தோட்டத்துக்குச் செல்லக் கூடியவள்தான். இவனுடைய அவசரக் கோடுகளும், கவிதை வரிகளும் போல அவளுக்குள்ளும் நுண்ணுணர்வை மீட்கப் போராடும் மனத்தின் வெளிப்பாடுகளாகவே அவற்றைக் காண முடிகிறது. ஓவியத்தை ஒதுக்குமிடத்தில் கூட பனியன், சேலையைப் போல வடிவத்துக்குள் கொண்டு வர முடியாத நிறம் மங்கிய பாவாடையை மடித்துக் கொண்டிருக்கிறாள். மளிகைச் சாமானைப் பிரித்துக் கொட்டும்போது உருளும் கண்ணாடி பாட்டில்களின் சலசலப்பும் மூடிகளின் சத்தங்களும் சேர்ந்து அவளுக்குள்ளும் இயந்திரமயமாகிப் போன வாழ்க்கையைக் குறித்த போதம் அவனுக்குள் எழுகிறது. பாட்டில்களுடன் வருபவளின் அருகிலமர்ந்து கொள்கிறான். அவளும் தன்னைப் போலவே நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறாள் என்ற உணர்வும் அந்த வாழ்வைப் பங்கீட்டுக் கொள்ளும் உணர்வையே அவள் தரும் பொட்டுக்கடலை எடுத்து உண்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிவதாக அரவின் குறிப்பிட்டார். கலையுணர்வு மிக்க கணவனும் அதைப் புரிந்து கொள்ள முடியாத மனைவியும் சேர்ந்து இறுதியில் வந்து சேரும் சமவெளிப் புள்ளியினையே கதை காட்டுவதாக இளம்பூரணன் குறிப்பிட்டார். கதைசொல்லியின் நுண்ணுணர்வு மனைவியால் புரிந்துகொள்ள முடியாததைப் போலவே அவனாலும் வீட்டுப் பணிச்சூழலுக்குள் இயந்திரமயமாகிவிட்ட மனைவியை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. இந்த இரண்டு முரண்பட்ட புள்ளிகளின் இணைவையே கதை பேசுவதாக லாவண்யா குறிப்பிட்டார்.
இறுதியில் பேசிய ம.நவீன், கலைஞன் கலையை நிகழ்த்துகிறபோது வேறொருவனாகவும் அதன் பிறகு யதார்த்த வாழ்வுக்குள் வேறொருவனாக மாறி நிற்பதைக் கதை காட்டுவதாகச் சொன்னார். தன்னுடைய கலையுணர்வைப் புரிந்து கொள்ள முடியாத சூழலை அவன் ஏற்றுக் கொள்வதையே கதை காட்டுவதாகக் குறிப்பிட்டார். இந்தக் கதை தனக்கு ‘முழுக்கைச் சட்டையும் கதிரேசன் என்பவரும்’ என்ற இன்னொரு வண்ணதாசனின் கதையை நினைவுபடுத்தியதாகச் சொன்னார். தங்களுடைய முன்னாள் கல்லூரி விரிவுரைஞரைச் சந்திக்கச் செல்லும் முன்னாள் மாணவர்கள் மாயவித்தையை(மேஜிக்) மாணவர்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காட்ட முயற்சி செய்கின்றனர். ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு மாயவித்தையில் ஆர்வம் இல்லையென ஆசிரியர் அதற்கான வாய்ப்பை வழங்க மறுக்கிறார். ஆசிரியருடைய வீட்டிலிருக்கும் சிறுவனுக்கு அவர்களின் வித்தைகள் கவர்கின்றன. காலனியில் இருக்கும் மற்ற சிறுவர்களை அழைத்து வந்து வித்தை காட்ட எண்ணும் எண்ணமும் ஈடேறாமல் போக ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் கதையும் கலையின் வழி மட்டுமே நிறைவடையும் மாயவித்தைக் கலைஞர்களைக் குறித்து இருந்ததாகக் குறிப்பிட்டார்.
அடுத்தக் கதையான ‘தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்’ சிறுகதை குறித்து புஷ்பவள்ளி தன்னுடைய வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்தக் கதையில் தோட்டமாகக் குடும்பமே உருவகிக்கப்படுகிறது. தன்னுடைய குழந்தையை மனைவி வீட்டார் கொஞ்சி மகிழ்வர் என்ற கதைசொல்லி எண்ணுகிறார். ஆனால், அவர் எண்ணியதற்கு மாறாகக் குடும்பத்துக்கு அப்பால் பேருந்தில் பயணிக்கும் முன் பின் அறிந்திராதவர்கள் குழந்தையின் அழுகையை ஆற்றுப்படுத்தி அரவணைப்பது குடும்பமென்னும் தோட்டத்துக்கு வெளியிலும் சில மென்மையான மனம் படைத்தவர்கள் இருக்கக்கூடுமென்ற எண்ணத்தைத் தருவதாகக் குறிப்பிட்டார். அடுத்ததாகப் பேசிய சிவரஞ்சனி குழந்தைப் பேறுக்கு பிறகு குழந்தைக்கு ஈடான கவனம் அதன் தாய்க்கும் வழங்கப்படுவது இயல்புதானென்றும் அதனை அறியாமல் குழந்தைக்குக் கிடைக்கும் கவனம் வழி தான் அடையும் மகிழ்ச்சியை மட்டுமே மையப்பாத்திரம் உத்தேசிப்பதாகச் சொன்னார். இறுதியாகத் தன்னுடைய பார்வையைச் சொன்ன நவீன், ஒரு குழந்தைக்குக் கிடைக்கும் சரிபாதி பாராட்டுகளும் கொஞ்சல்களும் பெற்றோர்கள்தான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி தன் குழந்தைக்கு மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் கவனத்தைத் தானும் பெற வேண்டியே குழந்தையை மனைவி வீட்டுக்கு அழைத்து கதையின் மையப்பாத்திரமான அப்பா அழைத்துச் செல்கிறார். அவர் எண்ணியதற்கு மாறாக, அவர் மீது மட்டுமின்றி குழந்தை மீதும் அவர்களுக்கு அக்கறை இல்லாமலிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. அதன் பிறகு, அந்தக் குழந்தையை அழவைப்பதற்கான முயற்சியே அவரிடம் இருக்கிறது. குழந்தையின் அழுகைக்கான பொருளை உணர்ந்தவனுக்கு அதை நிறுத்துவதொன்றும் பெருஞ்சிக்கல் இல்லை. ஆனால், குழந்தையின் அழுகை வழி உருவாகும் கவனத்துக்காக அதனை அனுமதிக்கிறான். கதையின் இறுதியில் பேருந்தில் குழந்தையின் அழுகையை ஆற்றுப்படுத்திய பெரியவர் சொன்ன சொல்லை உரக்கச் சொல்லிப் பார்ப்பதன் வழியே குழந்தை வழி உருவான கவனத்தைத் தானும் பெற்ற நிறைவையே அவனிடம் காண முடிவதாகச் சொன்னார். ஒட்டுமொத்தமாக, ஒரு குழந்தையின் வழியாகக் கவனத்தைப் பெற்றுக் கொள்ள முயலும் பரிதாபமான தந்தையின் கதையாகவே இக்கதையைக் கண்டதாக நவீன் குறிப்பிட்டார்.
இந்தக் கதைகளுடன் வண்ணதாசனின் மிகச்சிறந்த கதைகளின் வரிசையில் வைக்கத்தகுந்த இன்னுமிரண்டு கதைகளையும் நவீன் பகிர்ந்து கொண்டார். முதல் கதை ‘போய் கொண்டிருப்பவள்’ எனும் சிறுகதை. விரும்பிய காதலனுடன் சேர முடியாமல் ஊதாரி கணவனுடன் வாழ நேர்கின்ற பெண்ணின் மனம் ஒவ்வொரு கணமும் அடையும் உணர்வு மாற்றங்களைக் நுட்பமாகக் காட்டியிருக்கும் கதை என நவீன் குறிப்பிட்டார். அடுத்த கதையான ‘சிநேகிதி’ கதையில் இன்ன உறவு எனச் சொல்லிவிடமுடியாத உறவொன்றைக் கம்பி மேல் நடக்கும் வித்தையைப் போல எழுத்தில் வண்ணதாசன் நிகழ்த்தியிருப்பார். பெண்களுடன் எளிதில் பேசி நட்பு கொள்ள முடிகிற சுந்தரத்தை எண்ணி முதுமையில் நலம் விசாரித்து கண்ணீர் சிந்தும் சிநேகிதிகளுடனான அறுதியிட்டுக் கூறமுடியாத உறவை மிக நுணுக்கமாக வண்ணதாசன் வெளிப்படுத்தியிருப்பார் என்றார்.
இந்தக் கலந்துரையாடல் வழியே மனித உணர்வுகளின் நுட்பமான இடங்களைப் புறச்சூழலில் இருக்கும் மற்றொன்றின் விரிவான வருணனையின் வாயிலாகத் தொட்டுச் சொல்லக் கூடிய வண்ணதாசனின் படைப்புலகத்தை இன்னுமே அணுக்கமாக உணர முடிந்தது. அத்துடன் நுண்மையான உணர்வுகளை எழுத்தில் கடத்திவிட முடிந்த தமிழிலக்கியத்தில் முக்கியமான கலைஞனைக் கண்டுகொண்ட நிறைவும் எழுந்தது.
வண்ணதாசன் அவர்களின் கதைகளைப்பற்றி இளம் தலைமுறையினரின் நுட்பமான ஆய்வும் விவாதமும் வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது…..இன்னும் பலகதைகளின்மூலம் தமிழ்ச்சமூகத்தில் அன்பையும் அறத்தையும் விதைத்துக்கொண்டிருக்கும் ஆசான் அவர். வணங்குகிறேன் அவரை.