
தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் உருவாக்கிய கதைவடிவம் இன்னொரு வகையில் புதுமையாக அமைந்திருந்தது. ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன், ஆதவன் போன்றோர் முன்வைத்த வடிவங்கள் மற்றொரு புதிய பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தன.
எல்லா மாற்றங்களும் தமிழ்ச்சிறுகதை உலகத்தை ஒவ்வொரு கோணத்தில் வளப்படுத்தின. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதத் தொடங்கிய புதிய எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எளிதாக கைவரப்பெற்ற வடிவத்தில் தம் ஆக்கங்களை எழுதினர். இன்னொரு பகுதியினர் மற்றுமொரு புதிய வடிவத்தையும் வழிமுறையையும் ஏற்படுத்திக்கொண்டனர்.
இன்றைய சிறுகதைக்கு வாழ்க்கையின் ஒரே ஒரு தருணம் மட்டுமே போதும். அதை சரியான கோணத்தில் முன்வைப்பதன் வழியாக ஒரு சிறுகதையை நிகழ்த்திக் காட்டிவிட முடியும். உருவகமாகவும் படிமமாகவும் ஒரு காட்சியைச் சித்தரிக்கும் கலை, தமிழில் சங்ககாலச் செய்யுள் காலத்திலிருந்து நிலைபெற்றிருக்கும் ஓர் அம்சமாகும். நுட்பமனம் கொண்ட படைப்பாளிகள் அத்தகு சித்தரிப்புகளை சிறுகதைகளின் ஊடே பயன்படுத்தி கதைக்கு வலிமையை ஏற்படுத்துகின்றனர்.
’கண்தரவந்த காம ஒள்ளெரி என்புற நலியினும் அவரொடு பேணி சென்றுநாம் முயங்கற கடுங்காட்சியமே’ என்று தொடங்கும் குறுந்தொகைப்பாடல் நுட்பமான காட்சிச்சித்தரிப்புக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு. தானாகச் சென்று காதலனைக் கண்டு மகிழ்ச்சியடையவும் வழியற்று, அவராகத் தேடிவந்து தன்னைக் கண்டு மகிழ்ச்சியூட்டவும் வழியற்றுத் தவிக்கும் ஒரு காதலியின் கூற்றாக இக்கவிதை அமைந்துள்ளது. பிரித்துவிடவோ, விரட்டிவிடவோ யாருமின்றி குப்பைமேட்டில் ஏறி நின்று மோதும் கோழிகளைப்போல தன் விழைவுகளும் எண்ணங்களும் தமக்குள் முடிவில்லாமல் மோதிக்கொண்டே இருக்கின்றன என்னும் வேதனையை வெளிப்படுத்துகிறாள் அவள். ஒரு கோழிச்சண்டையின் சித்தரிப்பு, அவளுடைய அகத்தில் நிகழும் தவிப்புகளையும் மோதல்களையும் சித்தரிக்கும் ஊடகமாக அமைந்துவிட்டது. எங்கோ இருக்கும் நிலவின் படிமத்தை கண்ணாடி பிரதிபலிப்பதைப்போல ஒரு காட்சியின் சித்தரிப்பு இன்னொரு காட்சியைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.
ஒன்றைச் சித்தரித்து இன்னொன்றை உணர்த்தும் குறுந்தொகைப்பாடலின் வழியை இன்றைய சிறுகதைகளில் அமைந்திருக்கும் காட்சிச் சித்தரிப்புகள் பயன்படுத்திக்கொள்கின்றன. தொடக்க காலத்தில் அங்கொருவர் இங்கொருவர் என கையாண்டுவந்த இந்த வழிமுறையை இரண்டாயிரத்துக்குப் பிறகு பல இளைய எழுத்தாளர்கள் ஆற்றலுடன் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதை ஒரு நல்ல திருப்புமுனையான காலகட்டம் என்றே சொல்லவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் ஜெகன்னாதன், திருச்செந்தாழை, விஷால்ராஜா, சுஷில்குமார், அஜிதன் போன்ற எழுத்தாளர்களின் பல படைப்புகளில் இத்தகு சித்தரிப்புகள் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த வரிசையில் வைக்கும் அளவுக்கு அழகான சித்தரிப்புகளைக் கொண்டதாக மலேசியச் சிறுகதை எழுத்தாளர் அரவின்குமாரின் கதைகள் அமைந்திருக்கின்றன. அவருடைய ‘சிண்டாய்’ என்னும் முதல் சிறுகதைத்தொகுதியில் அத்தகு முயற்சிகளைப் பார்க்கமுடிகிறது.

மலேசிய நாட்டின் புகழ்பெற்ற பாடகி சித்தி. அவள் குரல் வசியப்படுத்தும் தன்மையைக் கொண்டது. அவளுடைய பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அவள் பாடும் சிண்டாய் பாட்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாட்டு. சிண்டாய் என்னும் சொல்லுக்கு இளவரசி என்பது பொருள். ஓர் இளவரசிக்கே உரிய கனவுகளை அந்தப் பாடல் வெளிப்படுத்துகின்றன. ஓர் ஏக்கத்தைப் போல, ஒரு தீர்மானத்தைப் போல, ஒரு ரகசியத்தைப்போல வெளிப்படும் அக்குரலின் வசீகரத்துக்கு ஆட்படாதவர்களே இருக்கமுடியாது.
இனிமையான ஒரு பாட்டின் வரிகளையும் இனிய குரலையும் லயித்துச் சுவைக்கும் நாட்டம் கொண்ட ஒருவன் இனிமைமயமானவனாக இருக்கக்கூடும் என்கிற கற்பிதம் நொறுங்கிவிழும் அளவுக்கு நேர்மாறானவனாக இருக்கிறான் அவாங் என்பவன். அவன் ஆழத்தில் குரூரம் உறங்குகிறது. ஒரே நேரத்தில் ரசிகனாகவும் குரூரமானவாகவும் இருக்கும் அவாங் ஒருபக்கம். இரண்டாவது கணவனாக அவனை மணந்துகொண்டு அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆட்படவேண்டிய நிலையில் இருக்கும் அப்பாவிப் பெண் இன்னொரு பக்கம். இவர்களிடயில் நிலவும் நெருக்கத்தையும் முரணையும் முன்வைப்பதுதான் இச்சிறுகதை.
பழுதாகி நிற்கும் தெருவிளக்கின் தோற்றத்தைச் சித்தரிக்கும் வரிகள், கணவனை இழந்து கைக்குழந்தையோடு துயரத்தில் மூழ்கியிருக்கும் பெண்ணை நினைத்துக்கொள்ளத் தூண்டுகின்றன. பறந்து திரிந்துவிட்டு தரையிலிறங்கும் புறாக்களின் கால்கள் சிக்கிக்கொள்ளும் அளவுக்கு சிறுசிறு வலைகளை தரையெங்கும் தயார்செய்துவைத்து, தந்திரமாக அவற்றைப் பிடிக்கும் அவனுடைய செயலைப்பற்றிய சித்தரிப்பு, அவாங்குக்கும் அவளுக்கும் இடையிலான திருமண வாழ்வின் தன்மையைச் சொல்லாமல் சொல்லி உணர்த்திவிடுகின்றன.
சமையலறையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் எலிகளைப் பிடிக்க எலிப்பொறிகளைப் பயன்படுத்துவதும் எலி பிடிபட்ட பின்னர் அந்தப் பொறியை தொலைவான ஓர் இடத்துக்கு எடுத்துச்சென்று எலியை விடுவிப்பதும் உலகவாடிக்கை. அவாங் வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொறியில் எலி மாட்டிக்கொள்கிறது. ஆனால், அப்பொறியை எடுத்துச் செல்லும் அவாங் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் அந்தப் பொறியை வைத்திருந்து, அந்த எலி செத்தபிறகு அதை எடுத்துச் சென்று வெளியே வீசுகிறான் அவன். அதுதான் அவனிடம் வெளிப்படும் குரூரத்தின் உச்சம். உழைப்பாளியாகவும் ரசிகனாகவும் இருக்கும் ஒருவன் குரூரமானவானகவும் இருக்கும் புதிரை உணர்த்துகிறார் அரவின்குமார்.
’அணைத்தல்’ இன்னொரு முக்கியமான சிறுகதை. சின்னம்மாக்கிழவி, குமார் அண்ணன், சுகுமாறன் அங்கிள், வட்டிக்குக் கடன் வாங்கும் அப்பா, கடனை அடைப்பதற்காக பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் மகன் என பல பாத்திரங்கள் இச்சிறுகதையில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொருவோடும் தொடர்புடைய தனிக்கதையாக இச்சிறுகதை தோற்றமளிக்கிறது. காட்சிச்சட்டகங்கள் அந்த அளவுக்கு கச்சிதமாக அமைந்திருக்கின்றன. ஆனால் முடிவை நெருங்க நெருங்க மனிதர்களின் கதையாக அல்லாமல் மானுட குணத்தைப்பற்றிய கதையாக அது மாறிவிடுகிறது. அந்த அளவுக்கு வலுவான காட்சிச்சித்தரிப்புகள் இக்கதையில் அமைந்துள்ளன.
குறுகிய காலத்தில் அதிக அளவில் பணமீட்டும் வழி என சொல்லப்பட்டதை நம்பி திருப்பியளிக்கமுடியாத அளவுக்கு அதிமான தொகையைக் கடனாகப் பெற்றுவிட்டுத் தவிக்கும் அப்பா. தினசரி வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு மட்டுமே வருமானமுள்ள மகன். கடன் கொடுத்த குமார் அண்ணன் அளிக்கும் நெருக்கடிகள், அவனால் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளுக்கு அஞ்சி எப்படியோ பணத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து கடன்கணக்கை நேர் செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளும் தந்தை என பல துண்டுக் காட்சிகள் வழியாக கதை நீண்டு செல்கிறது.
குமார் அண்ணனைப்பற்றிய பழைய நினைவுகளை அசைபோட்டபடி கடனை அடைக்க நடந்து செல்கிற மகனால் குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் இறந்துபோன செய்தி கிடைக்கிறது. அவன் இறந்தால் என்ன, அவனுக்குரிய பணத்தை அவனுடைய அம்மாவான சின்னம்மாக்கிழவியிடம் கொடுப்பதுதான் முறை என்ற எண்ணத்தோடு அந்தக் கிழவியியைப் பார்க்கச் செல்கிறான். அவள் தெருவோரத்தில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறாள். தொகையை அவளிடம் கொடுப்பதா அல்லது திரும்பிச் செல்வதா என நினைத்து ஒரு கணம் தடுமாறுகிறான் அவன்.
கிழவி பசியாறட்டும் என அவளுக்கு அருகில் இரு சோள ரொட்டிகளை வாங்கி வைக்கிறான் அவன். பிறகு ஒதுங்கி நின்று என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்கிறான். யாசகத்தை மறுக்கும் வேகத்தோடு அந்தக் கிழவி அதை எடுத்து சாலையில் வீசுகிறாள். அவளுக்குப் பக்கத்தில் சென்று உரையாடலாம் என நினைத்து அருகில் சென்று நிற்கிறான் அவன். கிழவியின் மனத்தில் என்ன ஓடியதோ தெரியவில்லை. ஒரு விம்மலுடன் அவனை அணைத்துக்கொள்கிறாள்.
அந்த அணைத்தலுக்கான தூண்டுதலை அரவின்குமார் சித்தரிக்கவில்லை. என்றோ இறந்துபோன தன் மகனே தன் அருகில் வந்து நிற்பதாக அவளுக்குத் தோன்றியிருக்கலாம். வாழ்வின் இறுதிக்கணத்தில் இளைப்பாறுவதற்குக் கிடைத்த தோளாக அவனைக் கருதியிருக்கலாம். சோள ரொட்டிகளைத் தள்ளி ஒதுக்குவதுபோல மானுட உறவை மனிதர்களால் ஒருபோதும் ஒதுக்கித்தள்ள முடிவதில்லை என்கிற உண்மையை உணர்ந்துகொண்ட கணமாகவும் இருக்கலாம். ஏதோ ஒன்று, அந்த அணைப்புக்குப் பிறகு அவள் சுருண்டு படுத்துவிடுகிறாள். பணத்தை அவளிடம் கொடுக்க நினைத்த இளைஞன் அக்கணத்தில் கொடுக்காமலேயே திரும்பி விடுகிறான்.
அவனுடைய மனநிலையை உணர்த்தும் வகையில் ஒரு புறக்காட்சியைச் சித்தரித்திருக்கிறார் அரவின்குமார். அந்தக் கிழவி சாலையில் தூக்கியெறிந்த சோளரொட்டிகள் மீது தொடர்ச்சியாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அந்த ரொட்டி முதலில் நசுங்குகிறது. அதன் கிரீம் எங்கும் பரவுகிறது. அடுத்தடுத்து செல்லும் வாகனங்களின் பாய்ச்சலால் ரொட்டி விழுந்த தடமே இல்லாமல் சில கணங்களிலேயே மறைந்துபோய்விடுகிறது. மனித உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இல்லாமல் போகும் நன்றிஉணர்ச்சியின் வெளிப்பாடாக அக்காட்சி அமைந்துவிடுகிறது. இத்தொகுப்பில் சிறந்த கதைகளில் ஒன்றாக இக்கதையைக் குறிப்பிடலாம்.
‘கோணம்’ என்பது இன்னொரு சிறுகதை. புதிதாகப் படமெடுக்கக் கற்றுக்கொள்ளும் ஒளிப்படக் கலைஞர்களுக்கான பயிலரங்கில் நல்ல கோணத்தில் சிறப்பான படங்களை எப்படி எடுப்பது என்பதைப்பற்றி மாஸ்டர் சொல்லிக் கொடுக்கிறார். பயிற்சியின் முடிவில் இரு நண்பர்கள் புதுமையான கோணத்தில் புகைப்படம் எடுக்கும் ஆசையோடு நகரத்தைச் சுற்றி வருகின்றனர். உச்சி வேளை வரைக்கும் எதுவும் சரியாக அமையவில்லை. நண்பகல் உணவுக்காக ஒரு விடுதிக்குச் செல்கின்றனர். அங்கே நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலையும் நடிகரொருவரைக் காண்கின்றனர். வாய் ஓயாமல் அவர் பேசுவதும் அடிக்கடி அறிவுரை சொல்வதும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அக்கணமே அவரைப்பற்றிய தவறான எண்ணம் அவர்கள் நெஞ்சில் உருவாகிவிடுகிறது. அவர் பேசும் ஆத்மார்த்தமான சொற்களை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. அவர் சாப்பிட்டதற்கும் சேர்த்து அவர்கள் பணம் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.
அன்று முழுதும் நல்ல படம் எடுப்பதற்கான கோணம் அமையவே இல்லை. மறுநாள் வேறொரு பகுதியில் அலைகின்றனர். அங்கும் எதுவும் சரியாக அமையவில்லை. பகல் உணவுக்காக மீண்டும் அதே விடுதிக்கு வருகின்றனர். அப்போது அந்தப் பெரியவர் இல்லை. அது அவர்களுக்கு நிம்மதியுணர்வைக் கொடுக்கிறது. சாப்பிட்டுமுடித்த பிறகு பணம் செலுத்த கல்லாவுக்கு அருகில் வந்ததும், அங்கே அமர்ந்திருந்த பெண் அவர்களிடம் பணம் வாங்க மறுத்து, அந்தப் பெரியவர் அவர்களுக்கு வழங்கும் உணவுக்குரிய தொகையை தன் கணக்கில் வரவுவைக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கிறாள்.
அக்கணத்தில், அந்தப் பெரியவர் மீது அந்த இளைஞர்கள் கொண்டிருந்த பிம்பம் கரைந்து இன்னொன்றாக மாறுகிறது. நாம் சாதாரணமாக பார்க்கும் காட்சிகளுக்கும் கேட்கும் சொற்களுக்கும் நம் மனம் உருவாக்கும் கோணம் என்பது முற்றிலும் ஒரு கற்பிதமே என்பதையும் அது வேறொரு கோணமாக இருப்பதற்கான சாத்தியப்பாடுகளை இயல்பாகவே கொண்டிருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். ஒளிப்படத்தை மாறுபட்ட கோணத்தில் எடுக்க நினைத்தவர்களுக்கு வாழ்க்கையின் மாறுபட்ட கோணம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது.
அரவின்குமார் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதிய பத்து சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. மலேசிய இளம் எழுத்தாளர் அரவின்குமாருக்கு வாழ்த்துகள்.
(சிண்டாய். ஜெ. அரவின்குமார். வல்லினம் பதிப்பகம். மலேசியா)