
நடுநிலைப் பள்ளி பயிலும் வயதில் என் வகுப்பு நண்பன் அவனது மாமா மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான். எனக்கு அந்த வரியைச் செரிக்கவே முடியவில்லை. மலேசியா ஒரு ‘ஃபாரின் கண்ட்ரி’. வெளிநாட்டுக்காரர் ஒருவர் எப்படி எங்கள் ஊரில் இருக்கும் ஒருவருக்கு உறவினராக இருக்க முடியும்? அன்றைக்குப் புகழ் பெற்ற படமான ‘விதி’ திரைப்படத்தின் நீதிமன்ற காட்சிகளில் நடிகை சுஜாதா கேட்ட கேள்விகளை விட அதிகமாக நான் அவனைக் கேட்டுக் குடைந்தேன். அவர் மாமாவும் வேலைக்காக இங்கிருந்து அங்கே போகவில்லை, மலேசியாதான் அவருக்குச் சொந்த ஊர், தன் அம்மாவுக்கும் அதுதான் பிறந்த நாடு என்றும் சொன்னான் நண்பன். எனக்குக் கண் பிதுங்கியது. அவன் அம்மாவை நான் பார்த்திருக்கிறேன். எந்த வித்தியாசமும் இல்லாத அக்மார்க் நெல்லை கிராமப் பெண்மணி. அவர் ஒரு ஃபாரினரா? ஒரு கட்டத்தில் என் தொல்லை தாங்காமல் என்னை அவன் மாமாவிடம் அழைத்துப் போனான் நண்பன். அவர்தான் சற்றே சிரிப்புடன் அங்குள்ள தமிழ் ஆட்கள் எல்லாம் 4,5 தலைமுறைகளுக்கு முன்னரே அங்குப் போய் பணி செய்ததையும் அதன்பின் அந்த நாட்டின் குடிகளாக ஆனதையும் சொன்னார். என் வியப்பு மெல்ல புரிதலாக மாறியது. அன்றிலிருந்து மலேசியா போய் இந்த வாழ்க்கையைக் காண வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2024ஆம் ஆண்டின் ஜூன் தினக் காலை ஒன்றில் வல்லினம் நவீன் அழைத்தார். கோலாலம்பூரில் வல்லினம் இளைய எழுத்தாளர் விருது விழா 2024ஐ ஒட்டி ஒரு இலக்கியப் பயிற்சி பட்டறை உத்தேசித்திருப்பதாகவும் அதை நான் வந்து நடத்தித் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பழம் நழுவி பாலில் விழுந்தது என முடிப்பேன் என நினைத்திருப்பீர்கள். ஆனால், இந்தப் பழம் அதற்கு முன்பு இரண்டு முறை நழுவி வெளியே விழுந்து விட்டிருந்தது. கொரோனா தொற்று ஆரம்பித்த ஆண்டில் என்னை அங்கு அழைத்திருந்தார் நவீன். ஊரடங்கு, பயணத் தடை ஆகியவற்றால் அடுத்த மூன்று ஆண்டுகள் பயணிக்க முடியவில்லை. ஆனால் இம்முறை நவீன் உறுதியாகவே இருந்தார். பயணச் சீட்டுகளைப் பதிவு செய்து அனுப்பியும் வைத்தார்.
விருது விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக வந்து விருதினை வழங்கி சிறப்பிக்க மூத்த தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான பாவண்ணன் அவர்களை நவீன் அழைத்திருந்தார். ஆகவே பாவண்ணன் அவர்களும் நானும் சேர்ந்து செல்ல வேண்டுமென முடிவாகியது. பயணச் சீட்டினை நவீன் அனுப்பியதுமே பாவண்ணன் என்னை அழைத்தார். மலேசியா செல்ல வேண்டிய குறிப்புகள் முழுவதையும் சொன்னார். அது முதல்முறை என்பது அப்போது தெரியவில்லை. இந்தப் பக்கம் நவீன் அழைத்து அமர்வுகளுக்கு உரிய பாடத்திட்டத்தைக் கேட்டார் (இந்த ஆசிரியப் பெருமக்கள்… பாடத்திட்டம் இல்லாமல் பல் தேய்க்கக் கூட போக மாட்டார்கள் போல என நினைத்துக் கொண்டேன்). பயிற்சிக்கான அமர்வுகள் ஆறு பகுதிகள். மரபிலக்கிய கவிதைகள், பக்தி இயக்கக் கவிதைகள், நவீனக் காலக்கட்ட கவிதைகள், நவீன சிறுகதைகள், நவீன நாவல்கள், கேள்வி-பதில் என அமர்வுகளை வகுத்துக் கொண்டோம். மொத்தம் 30 பேர் வரை அதிகபட்சமாக பங்கெடுக்கும் விதத்தில் நிகழ்ச்சிக்கான பதிவினை நவீன் செய்திருந்தார். வெகு விரைவிலேயே பதிவுகள் முழுமையாக நிரம்பி விட்டதாகவும் தெரிவித்து எனக்கு ‘ஊக்கமூட்டினார்’.
நவம்பர் 28, 2024ஆம் நாள் சென்னையிலிருந்து காலை 11 மணியளவில் விமானம். அதுவரை ஒவ்வொரு மாதமும் பாவண்ணன் சார் அழைத்து எனக்குப் பயணம் குறித்த முன்னெடுப்புகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தார். விசா அங்குச் சென்றதும் வழங்கப்படும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல நம்மை எப்படிக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவில் பாவண்ணன் சார் எனக்குத் தைரியமூட்டி பயப்படுத்தினார் (டிஜிட்டல் சர்டிஃபிகேட்டை கலர் ஜெராக்ஸ்தான் எடுக்கணும், மலேசிய பணம் நெறைய இருக்குனு காட்டணும், ஆனா ரொம்ப காட்டப்படாது, எப்பப்ப எங்கெங்க போறோம்னு திணறாம சொல்லணும் என்பன போன்ற சில. இதுபோக நவீன் வழியாக 5,6 மலேசிய அரசாங்க துறை சார் தஸ்தாவேஜுகள். பிறகுதான் தெரிந்தது அவர் இதற்கு முன்பு மலேசியா சென்று வந்த எழுத்தாளரால் ‘விபரம்’ சொல்லப்பட்ட விஷயம்). பெங்களூரிலிருந்து முதல்நாள் இரவே வந்தவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து தங்க வைத்தோம். அவருடன் அவர் மனைவி திருமதி. அமுதா அவர்களும் வந்தார். அவருக்கு எவ்வித பதட்டமும் இல்லை. இரவு உறங்குமுன் ஒருமுறை தஸ்தாவேஜுகள் சரிபார்க்கப்பட்டன. காலையில் காரில் சென்னை விமான நிலையம் சென்றோம். புயல் மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும் பெரிய மழையோ காற்றோ இல்லை. இறங்கி உள்ளே நுழைந்ததும்தான் காரில் சார்ஜ் போட்டிருந்த என் கைபேசியை நான் எடுக்க மறந்தது தெரிந்தது. பாவண்ணன் சார் கைபேசியை வாங்கி பேசி அடுத்த பத்து நிமிடங்களில் ஓட்டுநர் கொண்டுவந்து கொடுத்து விட்டார். ஆனாலும் பாவண்ணன் சார் அதிலிருந்து என்மேல் கவனமாகி விட்டார் (மொபைல் எடுத்துக்கிட்டீங்களா? பாஸ்போர்ட் பத்திரமா இருக்கா? ). அவர் பதட்டத்திலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. அதற்கு ஏற்றாற் போல் கோலாலம்பூரில் காரில் இருந்து உணவு விடுதிக்கு இறங்கும்போது என் மேற்சட்டை பையிலிருந்த பாஸ்போர்ட் கீழே விழ, நான் கடமையே கண்ணாக உணவுவிடுதிக்குப் போக பாவண்ணன் சார்தான் கவனித்து அதை எடுத்து வந்து கொடுத்தார். கொடுத்தாலும் அவர் பதட்டம் போகவில்லை. திரும்ப வாங்கி அவர் மனைவியிடம் கொடுத்து விட்டார்.(நாங்க கிளம்பற வரை எங்கள்டயே பத்திரமா இருக்கட்டும்).
கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கி நாங்கள் உள்நுழைந்த வாயிலுக்கு எதிரே இருந்த ஓய்வறைக்குச் சென்று வந்து பார்த்தால் எங்களுடன் இறங்கிய எவரையும் காணவில்லை. பயணப்பைகளை எங்கே எடுப்பது எனத் தெரியவில்லை. ஒரு திசையில் முழுக்க சென்று பார்த்தால் முட்டுச்சந்து. அங்கிருக்கும் பணியாளர்களிடம் கேட்டால் எதிர்திசைக்குக் கைகாட்டுகிறார்களே ஒழிய எதுவும் பதிலாக பேசவில்லை. இறுதியாக ஒரு கடைக்கார தம்பி மனமிரங்கி நேரே போய் வழியில் வரும் படிகளில் கீழே இறங்கிப் போகவும் என்றார். ராம, லட்சுமணர்கள் சீதையைத் தேடியது போல தேடி கீழிறங்கும் படிகளைக் கண்டடைந்தோம். இப்போது கீழிறங்கும் படிகள் இரண்டு வழிகளாக பிரிந்து இறங்குகின்றன. அதற்குள்ளாகவே எங்களை அழைத்துப் போக வந்திருந்த அரவின் குமார் (ஆமாம், விருது பெறுபவரே வரவேற்ற பெருமை எங்களுக்குத்தான் என மலேசிய வரலாறு இனி உரைக்கட்டும்) இருமுறை அழைத்து விட்டார் (சார், எல்லாரும் வெளியே வந்துட்ருக்காங்க, நீங்க எங்க இருக்கீங்க?). என் குலதெய்வத்தின் காவல்தெய்வம் ஆகாச கருப்பனை மனதில் அழைத்து கதறினேன் (எல்லாந் தெரிஞ்ச மாதிரி சாரை வேற கூட்டிட்டு வந்து பதட்டமில்லாத மாதிரியே எம்புட்டு நேரம் நடிக்கறது? காப்பாத்துய்யா கருப்பா). கருப்பன் கண்சிமிட்டல் போல அதுவரை கருத்த டப்பா போல இருந்த பலகை உயிர் பெற்று இறங்க வேண்டிய வழியைப் பச்சை எழுத்துக்களால் காட்டியது. விரைந்து இறங்கினால் ஒரு ஐம்பதடிக்கு எவருமே இல்லாத தனி வழியில் நாங்கள் மட்டுமே போய்க் கொண்டிருக்கிறோம். பழையபடி கருப்பனைக் கூப்பிட வேண்டுமா என யோசிக்கும்போதே பாதை முடிந்த திருப்பத்தில் இமிக்ரேஷன் வரிசைகள் தெரிந்தன. கருப்பனுக்கு இரண்டாம் நன்றியைத் தெரிவித்து விட்டு இமிக்ரேஷன் வரிசையில் நின்றோம். ஆய்வுக்கு வந்த அதிகாரி அறைக்குக் கோப்புகளை எடுத்துச் செல்லும் விரைப்புடன் பாவண்ணன் சார் நிற்க எனக்கு என்ன சொதப்பப் போகிறோமோ என பதட்டம் ஆரம்பித்தது. பதட்டம் கூடினால் என் புன்னகை அகலமாகி விடும் என்பது என்னுடைய உருமறை நடத்தைக் கூறுகளில் ஒன்று.
என் முறை வருவதற்கு முன்னர் இமிக்ரேஷனில் இருந்த அம்மணி இருவரை அப்படியே ஒதுக்கி ஓரம் கட்டினார். அவர் கைகாட்ட இருவர் வந்து அவர்களை அழைத்துப் போனார்கள். இந்தம்மாவிடம் நாம் மாட்டி விடக் கூடாது என்று நினைக்கும்போதே அவர் கைகாட்டி என்னை அழைத்தார். நான் விதியை நொந்தபடி சென்று என் பாஸ்போர்ட்டுடன் மாலை வணக்கம் ஒன்றையும் சேர்த்து தந்தேன். எதற்கு வருகை என்ற கேள்விக்கு நண்பர்களைச் சந்திக்கவும், இடங்களைப் பார்ப்பதற்கும் என்ற பதிலால் திருப்தி அடைந்தார். அடுத்து எனது ஊர் திரும்புதல் தேதி கேட்டார். மறக்காமல் டிசம்பர் 6 என சொன்னேன். சளைக்காமல் அம்மணி அடுத்து கேட்டார் – உங்கள் ஊர் திரும்புதலுக்கான பயணச்சீட்டு பினாங்கிலிருந்து போடப்பட்டிருக்கிறது. கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்கு என்று பயணிக்கிறீர்கள்? விருது விழா முடிந்ததும் கெடா மாகாணத்தில் பினாங்கு தாண்டி இருக்கும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் அழைப்பில் நான் பினாங்கு செல்வதாக நவீன் சொல்லியிருந்தாரே தவிர என்றைக்கு, எப்படி என பயணத்திட்டம் எதுவும் எனக்குத் தெரியாது. பாவண்ணன் சாரும், அவர் மனைவியும் விழா முடிந்து கோலாலம்பூரிலிருந்து நேரே சென்னை திரும்புவதால் அவர்களுக்குக் குழப்பமே இல்லை. இப்போது விழா, வகுப்பு, இலக்கியம், பயிற்சி, உரை என என்ன சொன்னாலும் அம்மணியைக் குழப்பி விடும். கருப்பன் கிருபன். நாவில் அந்த நேரத்தில் வந்தமர்ந்தான் – “அதுவா மேடம், இங்கே இரண்டு நாட்கள் என நண்பர்கள் சொன்னார்கள். பயணத்திட்டம் அவர்களுடையது. கே.எல்-ஐ இரு நாட்களில் முடித்து விட்டால் 3ஆம் நாள் பினாங்கு. கூட ஒரு நாள் இங்கே போனால் அதற்கடுத்த நாள். ஆகவே என்று பினாங்கு போகிறேன் என சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஊர் திரும்புதல் பினாங்கிலிருந்து டிசம்பர் 6 என்பது மட்டும் உறுதியாகத் தெரியும் என்றேன். “தனியாகவா வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். நண்பர் குடும்பத்துடன் வந்திருப்பதாகச் சொல்லி அடுத்த மேஜையில் நிற்கும் பாவண்ணன் சாரையும், அவர் மனைவியையும் சுட்டிக் காட்டினேன். அம்மணி பர்தாவின் வழியே கண்களில் கருணை பொழிய குனிந்து ஏதோ செய்தார். நிமிராமலேயே என் பாஸ்போர்ட்டை தூக்கி முன்னால் வைத்து விட்டு ஏதோ செய்து கொண்டிருந்தார். பிற வரிசைகளில் அனைவருக்கும் கைரேகை, கருவிழி பதிவுகள் நடந்து கொண்டிருந்தன. எனக்கு இப்போது என்ன செய்வதென தெரியவில்லை. மெல்ல “மேடம், எனக்கு வேறெதாவது கேள்விகள் உண்டா?” என வீட்டுப்பாடம் எழுதாத மாணவன் ஆசிரியையிடம் சொல்லும் பாங்கில் கேட்டேன். “உங்களுக்கு முடிந்தது. அவ்வளவுதான்” என்றார். நான் சற்று குழம்பி கைரேகை, கருவிழி பதிவு செய்யும் கருவிகளை உற்றுப் பார்த்தவாறே “நிஜமாகவே அவ்வளவுதானா?” என்றேன். என் முகம் என்ன விசித்திரத்தில் இருந்ததோ அப்போது? அம்மணி புன்னகைப்பது அவர் கண்களில் மட்டுமே தெரிந்தது. ”உங்களுக்கு அவ்வளவுதான் சார். உங்களை மலேசியாவுக்கு வரவேற்கிறோம் சார். இனிய பயணமாக அமையட்டும்” என்றபடி பொத்தானை அழுத்தி தடையை நீக்கி ஒரு கையால் வழிகாட்டி “ப்ளீஸ் சார்” என்றார்.
மலேசியாவிற்குள் அதிகாரபூர்வமாக காலடி எடுத்து வைத்து நுழைந்தேன். பாவண்ணன் சார் வந்ததும் எனக்கு மட்டும் ஏன் கருவிழி, கைரேகை எடுக்கவில்லை என சரியாகக் கேட்டார். எனக்கே தெரியவில்லை என்றேன். பயணப்பைகளை அப்படியே நகர்வரிசையிலிருந்து கீழே இறக்கிப் போட்டிருந்தார்கள். தேடி எடுத்துக் கொண்டு வாயிலுக்கு வந்தோம். வ மேல் வி வைத்திருந்த அரவின் குமார் விரைந்து வந்து வரவேற்றார். சென்னை விமான நிலையத்தில் நுழைவதற்கு முன்பிருந்த வழக்கமான பாவண்ணன் சாரின் புன்னகை முகம் கோலாலம்பூர் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போதுதான் திரும்ப வந்தது.
***

மலேசியாவில் இறங்கி தங்குமிடம் செல்ல காரில் ஏறியதும் முதல் மனப்பதிவாக அமைந்தது அங்குள்ள போக்குவரத்து சீர்மைதான். சாலைகள் தரமானவை. ஆனால் போக்குவரத்தின் சீர்மை சாலைகளில் செல்லும் வண்டிகளால் நிகழ்த்தப்படும் விஷயம். முந்திச் செல்ல வேண்டிய நேரம் தவிர வேறெங்குமே இடது ஒர மூன்றாம் வரிசையைத் தாண்டி ஒரு இரு சக்கர வண்டி கூட வரவில்லை. இந்தியாவில் இன்று கார் ஓட்டும் எவருக்கும் ஆகப் பெரிய ஆபத்தாக இருப்பவர்கள் பைக் ஓட்டுபவர்கள் தான். இடதுபுறம் திரும்ப சமிக்ஞை விளக்கை எரிய விட்டு இடது புறமாக காரைத் திருப்பினால் பின்சக்கரத்துக்கும், முன்சக்கரத்துக்கும் இடையே திருப்பத்தின் விலகலால் உருவாகும் சிறு இடைவெளிக்குள் புகுந்து திருப்பத்தின் வளைவுக்குள் உங்களை முந்திக் கொண்டு செல்ல முயலும் ஒரு பைக்/ஸ்கூட்டரை எப்போதும் எதிர்பார்த்திருக்கும் நுண்ணுணர்வு வாய்த்தவர் என்றால் உறுதியாக அவர் தமிழக சாலைகளில் கார் ஒட்டியவராகத்தான் இருப்பார். ப்ளைண்ட் ஸ்பாட் எனப்படும் கண்மறைவு பகுதிக்குள் நுழையும் இரு சக்கர வாகன ஓட்டியை நீங்கள் உற்றுப்பார்த்தாலே அவரால் உங்கள் தாயாரில் தொடங்கி மூன்று தலைமுறைக்கு வாயாலேயே வசவுத் திதி கொடுக்கப்பட்ட அனுபவம் உண்டெனில் நீங்கள் சென்னையில் கார் ஒட்டியவர் என ஐயமின்றி நிரூபிக்கப்படும். அப்படிபட்ட சூழலில் 4 மணி நேரத்துக்கு முன்பிருந்த ஒருவனுக்கு இப்போதைய சீர்மை எப்படி இருக்கும்? அரவின் குமாரிடம் சொன்னேன் –“வண்டியை நிறுத்தி இறங்கிப் போய் ரெண்டு பைக்காரனையாவது கட்டி அணைச்சுக்கணும் போல இருக்கு”. அரவின் “எவன்டா இவன்?” என்பது போல பார்த்தார். பாவண்ணன் சார் “ இல்ல ராஜகோபால், அப்படியெல்லாம் இங்கே சட்டுனு வண்டியை ரோட்ல நிறுத்தக் கூடாது. சட்டம் கடுமையா இருக்கும் இங்கே “ என்றார்.
கோலாலம்பூர் நகரத்தின் புறநகராக இருந்து இப்போது மையப்பகுதியாகவே மாறிவிட்ட லிட்டில் இந்தியா பகுதியில் விடுதி வளாகம். பயிற்சி அரங்கம், விழா அரங்கம், தங்குமிடம் அனைத்தும் ஒரே வளாகம் என்பதால் ஒவ்வொன்றுக்குமாக இடம் மாற வேண்டியதில்லை. விழாக் குழுவினரை மனமாறப் பாராட்டிக் கொண்டேன் மனதுக்குள். சென்னையில் மிகச் சுத்தமான தியாகராய நகருக்குள் இருந்த சூழல்தான் அங்கே. தென்னிந்தியாவின் பெயர் பெற்ற உணவகங்கள் அனைத்தும் அங்கே இருந்தன. விடுதியில் அறைக்குச் சென்று பயணப்பைகளை வைத்ததும் அரவின் இரவுணவுக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரின் புகழ் பெற்ற எம் டி ஆர் உணவகத்தின் மலேசிய கிளைக்குச் சென்றோம். அதே சுவை. எம் டி ஆரின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அதன் சுவையும் தெரியும். மையா சகோதரர்கள் (பரமேஸ்வர மையா, கணப்பையா மையா, யக்ஞ நாராயண மையா) 1920களில் தெற்கு கர்நாடகா (கனரா) பகுதில் சமையல் கலைஞர்களாக பணிபுரிந்து வந்தவர்கள். பரமேஸ்வர மையாவும், கணப்ப மையாவும் 1924ல் பெங்களூரில் ஒரு உணவு விடுதியைத் துவக்குகிறார்கள். இட்லி, காஃபி போன்ற சிற்றுண்டி உணவகம். மூத்தவரான பரமேஸ்வர மையா ஐந்து ஆண்டுகளில் மறைந்து போக இளையவரான யக்ஞப்பா (யக்ஞ நாராயண மையா) உணவகத்தைக் கவனித்துக் கொள்ள பெங்களூரு வந்து சேர்கிறார். அவருடைய உழைப்பால் உணவகம் புகழ் பெறத் தொடங்குகிறது. வியப்புக்குரிய விஷயம், யக்ஞப்பா அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. 1950களில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள உணவகங்களைக் கவனிக்கிறார். பெங்களூரு திரும்பியதும் அவர் சில மாற்றங்களைத் தம் உணவகத்தில் கொண்டு வருகிறார். வெந்நீரில் கரண்டி, தட்டுகளைக் கழுவுவது, உணவருந்துவோர் நேரே பார்க்கும் விதத்தில் சமையலறையை அமைத்தது, காஃபியில் சேர்மானங்களின் அளவைத் துல்லியமாக்குதல், வடையின் அளவை வரையறுத்தல் என பல சுவாரசியமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். இன்று வரை பிரபலமாக இருக்கும் திறந்த சமையலறை (Open kitchen) யக்ஞப்பாவால் அறிமுகம் செய்யப்பட்டது. உணவு வகைகளிலும் பல புதிய கண்டுபிடிப்புகள் என உணவகத் தொழிலை ஒரு தொழிலமைப்பின் கட்டுமானத்தோடு மாற்றியமைத்தார். இந்த வரலாற்றை பேசியபடியே எம் டி ஆரில் உண்டு முடித்தோம். பல்லாண்டுகளாக பெங்களூர்வாசியான பாவண்ணன் அவர்களுக்குப் பெருமையாலேயே வயிறு நிரம்பி விட்டது.

மறுநாள் முழுவதுமே எங்களுக்கு ஊர் சுற்றிப் பார்க்கும் நாள். நவீன் அழைத்து காலையில் தயாராக இருக்குமாறும் தன் நண்பர்கள் வந்து எங்களை அழைத்துச் சென்று ஊர் சுற்றிக் காட்டுவார்கள் என்றும் சொன்னார். காலையில் லாவண்யாவும், அவரது தோழி பிரியாவும் வந்தார்கள். உற்சாகப் பந்து போல எப்போதும் புன்னகையுடன் துள்ளிக் கொண்டே இருந்தார் லாவண்யா. பத்துமலை, சைனா பஜார், மலைக்காடுகள் என பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். சாயலில் தன் அப்பா போலவே இருப்பதால் பாவண்ணன் அவர்களை அப்பா என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார். சற்றும் களைப்பின்றி இரவு வரை எங்களை ஊர் சுற்றிக் காட்டி சில பொருட்களை மலாய் மொழியில் பேரம் பேசி வாங்கிக் கொடுத்தார். உடல்நிலை சரியில்லாதபோதும் அவரது தோழி பிரியா எங்களுடன் வந்து இடங்களைக் காட்டி அவர் வீடு இருந்த அருமையான இடத்திற்கும் அழைத்துப் போனார். ஒரு குன்றுச்சரிவின் மேல் அமைந்திருந்த அடுக்ககம். சரிவு முழுவதும் பசும்புல் வெளி. கிணறு போல சுற்றி வட்டமாக அமைந்திருந்தது. அங்கிருந்து கோலாலம்பூர் நகரம் உயரமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களோடு தெரிந்தது. ஒவ்வொரு இடத்திலும் அங்கு எது சிறப்பான உணவகமோ அங்கு அழைத்துச் சென்றார்கள். சுற்றிய களைப்புடன் விடுதிக்குத் திரும்பும்போதுதான் நவீனைப் பார்க்க முடிந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்குத் திரும்பினோம்.

மறுநாள் இலக்கிய பயிற்சி முகாம் துவங்கியது. முன்பே சொன்னது போல சரியான நேரத்தில் துவக்குவதில் மிகக் கண்டிப்புடன் இருந்த நவீன் துவங்கும் நேரத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக இழுத்த மூச்சை முகாம் தொடங்கியதும்தான் வெளியே விட்டார். முகாம் அமர்வுகள் குறித்து என்னை விட தெளிவாகவும், துல்லியமாகவும் அதில் பங்கு பெற்ற நண்பர்களே அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள். கூறியது கூறல் வேண்டாம் என்பதால் அப்பதிவுகளின் சுட்டிகளை இணைத்திருக்கிறேன்.
https://vallinam.com.my/version2/?p=10037 ரேவின் எழுதிய வல்லினம் இலக்கிய முகாம் – நவீன கவிதைகள் அமர்வு
https://vallinam.com.my/version2/?p=10027 சாலினி எழுதிய வல்லினம் முகாம் – பக்தி இலக்கிய அமர்வு
https://vallinam.com.my/version2/?p=10013 இளம்பூரணன் கிராமணி எழுதிய வல்லினம் முகாம் – சங்கப்பாடல்கள் அமர்வு
https://vallinam.com.my/version2/?p=10017 கணேஷ் பாபு எழுதிய வல்லினம் முகாம் – நவீன சிறுகதைகள் அமர்வு
https://vallinam.com.my/version2/?p=10021 கனகலதா எழுதிய வல்லினம் முகாம் – நாவல் அமர்வு
https://vallinam.com.my/version2/?p=9958 கணேஷ் பாபு எழுதிய வல்லினம் இலக்கிய முகாம் 2024 அனுபவங்கள்
ஒட்டுமொத்த பார்வையாக இந்த இலக்கிய முகாம் குறித்து எனக்கு மனதில் பட்ட கருத்துகளைச் சொல்கிறேன். முதலாவதாக, எனது ஐயங்கள் மகிழ்வுடன் ஏமாற்றமடைந்த விதம். இதற்கு முன்பு இலக்கிய பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்த வேளைகளில் அவற்றில் பங்கு பெறும் பங்கேற்பாளர்களைக் குறித்த ஒரு அடிப்படை புரிதல் எனக்கு இருந்தது. பங்கேற்பாளர்களின் வாசிப்பு, வாசிப்பு முறை, அணுகுமுறை ஆகியவற்றில் எனக்கு முன்யோசனைகளே இருந்ததில்லை. ஆனால் மலேசிய வாசகர்கள் குறித்து எனக்கு எவ்வித புரிதலும் இல்லை. கூடவே முன்பே தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் கனகலதா, கட்டுரைகள் எழுதி அறியப்பட்டிருக்கும் கணேஷ்பாபு, தேர்ந்த வாசகியும் ‘திருனவேலி’காரருமான பாரதி ஆகிய சிங்கப்பூரார்களும் அமர்வுகளில் பங்கெடுக்கிறார்கள். ஆகவே சற்று யோசனையாகவே இருந்தது. ஆனால் நிகழ்வு துவங்கிய சற்று நேரத்திலேயே பங்கேற்பாளர்கள் ஆச்சரியப்படுத்தினார்கள். தமிழகத்தில் நடக்கும் எந்த நவீன இலக்கிய சந்திப்புகளுக்குச் சற்றும் குறைவில்லாத ஒன்றாகவே, அதாவது, தமிழகத்தில் நடப்பது போலவே இருந்தது. வாசிப்பில் தமிழக வாசகர்களுக்கும், மலேசிய சிங்கப்பூர் வாசகர்களுக்கும் எவ்வித வேறுபாடும் என்னால் காண முடியவில்லை.
இரண்டாவதாக, அமர்வுகளுக்குப் பங்கேற்பாளர்கள் தம்மை தயாரித்து வைத்திருந்த விதம் மகிழ்ச்சி அளித்தது. அனைவரிடமும் அரங்குகளுக்கான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் இருந்தன. பலரிடமும் அரங்குகளுக்கான தயாரிப்புக் குறிப்புகள் இருந்ததைப் பார்க்க முடிந்ததில் எனக்குச் சற்று கலக்கமாக இருந்தது. சூழலுக்குச் சொல்லணி தரும் திரைநவீன வள்ளுவரான வடிவேலுவைத் துணைக்கழைத்து மனதைக் கல்லாக்கி, உடம்பை இரும்பாக்கி கைப்புள்ளயின் ‘கெம்பீரத்துடன்’ நுழைந்தேன். ஒவ்வொரு அரங்கிலும் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பகுதியைக் குறித்த தம் வாசிப்பை முன்வைக்குமாறு நவீன் அமைத்திருந்தார். ஆகவே ஒருவர் தன் பார்வையை முன்வைத்ததும் பிறர் அது குறித்து உரையாடுவது, வெவ்வேறு பார்வைகளைப் பகிர்ந்து கொள்வது என அரங்கு ஒவ்வொன்றும் சுவாரசியமாக சென்றது. பாராட்டத்தக்க அம்சம் என்னவென்றால் தம் பார்வைக்கு மாற்றுப்பார்வை வைக்கப்பட்டாலும் அதை ஒவ்வொருவரும் மிக முதிர்ச்சியுடன் கையாண்டார்கள். அவ்வாறே மாற்றுக் கருத்து உரைப்பவர்களும் மூர்க்கமின்றி பேசியது சிறப்பு.
மூன்றாவதாக, அரங்கைக் கவனிக்கும் பயிற்சி. என்னை அடித்து வீழ்த்திய விஷயம் பங்கேற்பாளர்களில் பெரும்பான்மையும் ஆசிரியப் பெருமக்கள். இங்கு இதுவரையிலான ‘அனுபவங்களால்’ சற்று அவநம்பிக்கையாகவே இருந்தேன். ஆனால் நல்ல மாணவரே நல்ல ஆசிரியர் என்பதை ஒவ்வொருவரும் மெய்ப்பித்து என்னை வெட்கமடையச் செய்தார்கள். தயாரிப்புக் குறிப்புக்களை விட அதிகமான அரங்குகளின் உரையாடல் குறிப்புக்களை எழுதியிருப்பதைப் பார்க்க 2010களில் நாங்கள் ஊட்டி காவிய முகாமில் இருந்த நினைவுகள் தோன்றின. அதைப் பகிர்ந்து கொண்டபோது “அப்பவேலருந்தே நீங்க இப்டித்தானா?” எனக் கேட்டு பதினைந்தாண்டு கால பழையவன் நான் என்பதை நினைவுப்படுத்தி என்னை துணுக்குறச் செய்தார் லாவண்யா. எனக்கென்னவோ ஊட்டி முகாம்கள் நேற்று நடந்தவைப் போலவே இருக்கின்றன. ஐயங்களைக் கேட்கும் விதம், தம் புரிதலை வெளிப்படுத்தும் பாங்கு, உரையாடலில் பிறர் பேசுவதைக் கேட்கும் பொறுமை என மிகத் தேர்ந்த பங்கேற்பாளர்கள். தயாஜி, சர்வீன் செல்வா ஆகியோரது படைப்புகளை வாசிக்க நேர்ந்தபோது வியப்பளித்தார்கள். மலேசியாவின் தமிழ் எழுத்துலகில் அவர்களுக்கான எதிர்காலம் ஒளி மிக்கதாக இருக்கிறது.
என்னளவில் இந்த முகாமை நிறைவான ஒன்றாகவே உணர்கிறேன். முகாமில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூட தாம் ஆசிரியர் எனும் மனப்பான்மையையோ, முன்பே எழுதி வருபவர்கள் எனும் ‘சீனியர்தனத்தையோ’ உரையாடல்களில் மட்டுமல்லாமல் ஓய்வு நேரப் பேச்சுகளில் கூட வெளிப்படுத்தவில்லை. விரிவான வாசிப்பும், தத்தம் பார்வைகளை முன்வைக்கும் கச்சிதமான பேச்சுமாக அரங்குகளைச் சுவாரசியமான அனுபவமாக்கினார்கள்.
சிங்கப்பூர் கோஷ்டியார் புண்ணியத்தில் நெடுநாட்களாக இலக்கியம் மூலம் மட்டுமே அறிந்து வாயூறிக் கிடந்த யாழ்ப்பாண உணவு வகைகளை ருசிக்க முடிந்தது. அதிலும் கனகலதா மூத்த சகோதரிக்குரிய பொறுப்புணர்வுடன் மாலையில் கடைகளுக்கு அழைத்துச் சென்று என் வீட்டிற்கு வாங்க வேண்டியவற்றையும், இதுவரை ருசித்திராத பழ வகைகளையும் பார்த்து பார்த்து வாங்கி என் கைகளில் குவித்து விட்டார். நீடித்த நட்புக்கான நண்பர்கள் என உணரச் செய்தனர்.

முகாம் ஞாயிறு மதியம் நிறைவடைந்ததும் விருது விழாவுக்குத் தயாரானார்கள் வல்லினம் குழுவினர். விருது பெறும் அரவின் குமாருக்கு மட்டும் அரங்க ஏற்பாடுகளில் அனுமதி இல்லை. ஆனால் அரங்கிற்கு வெளியே நடக்க வேண்டிய ஏற்பாடுகள் அனைத்திலும் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார். சரியாக குறித்த நேரத்தில் அரங்கம் நிறைந்தது. விழாவும் தொடங்கியது. என் மதிப்புக்கும் வணக்கத்துக்குமுரிய சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள், மலேசிய எழுத்தாளர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும் டாக்டர் சண்முக சிவா ஆகியோரை மூத்த எழுத்தாளரான திரு பாவண்ணன் அவர்களுடன் மேடையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. விழாவின் முதல் பகுதியாக மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தின் தற்போதைய போக்கை ஒட்டுமொத்தமாக ஒரு விமரிசனபூர்வமான குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் 45 நிமிடங்களுக்குள் நமக்கு அளிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கு பாராட்டுக்குரியது. இந்த அமர்வில் ஶ்ரீதர் ரங்கராஜ், கி. இளம்பூரணன், விஜயலட்சுமி ஆகியோர் பேசினர். மூவருமே ஆழக் கற்று அதன் செறிவை மட்டும் நமக்கு அளிக்கும் விதத்தில் பேசினார்கள். விருது விழாக்கள் வெற்று சம்பிரதாய பாராட்டுரைகளாக மட்டுமே எஞ்சுவதை இம்மாதிரியான அமர்வுகள் மாற்றுகின்றன. விழாவுக்கு வருகை தந்தவர்கள் ஓராண்டு பட்டயப் படிப்புக்கான விஷயங்களையும், அறிவையும் பெற்றுச் செல்கின்றனர். இதைப் போன்ற திட்டமிடப்பட்ட அமர்வுகள் ஒவ்வொரு விழாவிலும் அமைய வேண்டியது அவசியம். இதைத் திட்டமிட்ட வல்லினம் குழுவினருக்கும், திட்டத்தை எதிர்பார்ப்பிற்கு மேலாக பூர்த்தி செய்த ஶ்ரீதர் ரங்கராஜ், கி. இளம்பூரணன், விஜயலட்சுமி ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும், நன்றியும்.

இரண்டாம் பகுதியாக விருது விழா துவங்கியது. அரங்கம் முழுவதும் வெவ்வேறு விதங்களில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களிலும், படைப்பில் உள்ள வரிகளும் எழுதப்பட்டிருந்த பலவகை பதாகைகளில் சிரித்துக் கொண்டும், கல்லூரி மாணவர் போல தோற்றம் காட்டிக் கொண்டிருந்த அரவின் குமார் மேடையில் விசாரணைக்கு வந்த காவல் அதிகாரி போல முகபாவம் கொண்டிருந்தார். தனது ஏற்புரையில் ஒளிப்படங்களில் தோன்றிய அந்த அரவின் குமாராக வெளிப்பட்டார். இந்த விருது இனி தான் எழுத இருப்பதற்கானது என்ற சாராம்சத்தில் அவர் பேசியது விருதின் நோக்கத்தை அவர் உணர்ந்திருப்பதைக் காட்டியது. டாக்டர் சண்முக சிவா, சுவாமிஜி, எழுத்தாளர் பாவண்ணன் ஆகியோர் பேசியது அரங்கிற்குப் பொருத்தமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தன. விரிவான பதிவு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிறது – https://vallinam.com.my/version2/?p=9918.

விழா முடிவடைந்ததும் சுவாமிஜியின் அழைப்பின் பேரில் நான் அவருடன் கிளம்பினேன். அடுத்த ஐந்து நாட்கள் அவருடன் பினாங்கு தொடங்கி தாய்லாந்து எல்லை வரையிலான மலேசியப் பகுதிகளில் சுற்றித் திரிந்தேன். கோலாலம்பூரிலிருந்து கிளம்புமுன் ஞாயிறு இரவு சுவாமிஜி அழைத்துச் சென்ற ஒரு கலை நிகழ்வு என் மலேசியப் பயணத்தின் மறக்க முடியாத வாழ்நாள் நினைவு. சுவாமிஜியுடனான ஐந்து நாட்களும் வரம் போல் வாய்த்தவை. ஒவ்வொரு நாள் காலையும் அத்வைத , விசிஷ்டாத்வைத உரையாடல்களுடன் 90 நிமிடங்கள் நீளும் எனக்கு மட்டுமென கிடைத்த சுவாமிஜியுடனான நடைப்பயிற்சி நிமிடங்களை வாழ்வின் சிறந்த தருணங்கள் எனும் பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறேன். வயதோ, அனுபவமோ குறுக்கே வராமல் நட்பைப் பேணும் விதமும், வாழ்வை அனுபவிக்கும் விதமும் நிரம்பப் பெற்ற திரு குமாரசாமி அவர்களின் நட்பு, புலமையையும், இலக்கிய ஞானத்தையும் எங்குக் கண்டாலும் கண்ட மாத்திரத்தில் காதல் கொண்டு விடும் திரு தமிழ்மாறன் அவர்களுடனான நட்பும் முதன்முறை சந்தித்தவர்கள் போல இல்லாமல் செய்து விட்டன. இனி தொடரப்போகும் வாழ்நாள் நட்புகள் என்றே சொல்வேன். இந்த அனுபவங்களைப் பிறிதொரு வாய்ப்பில் எழுத உத்தேசித்திருக்கிறேன்.
என் வாழ்வின் முதல் மலேசியப் பயணம் இனிய அனுபவமாக இருக்கிறது. இதனைச் சாத்தியப்படுத்திய வல்லினம் நண்பர் நவீனுக்கும், வல்லினம் குழுவினருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.