வல்லினம் முகாம் – பக்தி இலக்கியம் அமர்வு

கடந்த 30 நவம்பர் 2024 தொடங்கி 1 டிசம்பர் 2024 வரை கோலாலம்பூரில் அமைந்துள்ள YMCAவில் வல்லினம் இலக்கிய முகாம் நடந்தேறியது. இம்முகாமில் சங்கப்பாடல், நவீன கவிதை, சிறுகதை, பக்தி இலக்கியம், நாவல் போன்ற படைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஒவ்வொரு அமர்வையும் எழுத்தாளர் ஜா. ராஜகோபாலன் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்தினார். அவ்வகையில் டிசம்பர் 1 காலையில் முதல் அமர்வாகப் பக்தி இலக்கியம் குறித்து கலந்துரையாடப்பட்டது. காரைக்காலம்மையாரின் ‘அற்புதத்திருவந்தாதி’, நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி’, பெரியாழ்வாரின் ‘பெரிய திருமொழி’ பாடல்களும் பேயாழ்வார், குலசேகர் ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோறின் பாடல்களும் இவ்வமர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

இந்த வல்லின முகாம் அமர்வுகளில் எனக்கு முற்றிலும் புதியதாக விளங்கியது சங்கப்பாடல் மற்றும் பக்தி இலக்கிய அமர்வுகள்தான். கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் குறித்த அறிமுகங்களும் பார்வைகளும் அதனை அணுகும் முறைகளையும் இதற்கு முன் நிகழ்த்தப்பட்ட முகாம்களின் வழி அறிந்ததுண்டு. அதுபோல் விரும்பி தேடிச் சென்று வாசிக்கக் கூடியவைதான் கவிதைகளும் நாவல்களும் சிறுகதைகளும். ஆனால், பக்தி இலக்கியத்தை இது வரையில் நானாகத் தேடிச் சென்று வாசித்ததில்லை. கல்லூரி காலங்களில் வாசித்த அனுபவம் மட்டும்தான் இருந்தது. ஆனால், முகாம் நடைபெறுவதற்கு முன்பே எங்களுக்கு 10 பக்திப் பாடல்கள் வழங்கப்பட்டன. 10 பாடல்களா என்ற அச்சமே முதலில் தொற்றிக் கொண்டது.

பக்திப் பாடல்களில் கையாண்டுள்ள சொல்லின் பொருளையும் அதன் தருணத்தையும் அறிந்திருந்தால் மட்டுமே அதன் சுவையை உய்த்துணர முடியும். அவ்வகையில் சில பாடல்களைப் புரிந்து கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினேன். அதனால் வாசிக்க நாட்டமில்லாமல்கூட இருந்தது. முகாம் வரும் முன் அனைத்தையும் வாசித்திருக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் வாசித்தேன். சிலவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்ததால் சிறு அச்சத்துடன்தான் அன்றைய அமர்வில் கலந்து கொண்டேன். ஆனால், அமர்வின் தொடக்கத்திலே ராஜகோபாலன் அவர்கள் வழங்கிய முன்னுரை பக்தி இலக்கியத்தின் மீது சிறு நாட்டத்தை ஏற்படுத்தியதோடு என்னைச் சகஜ நிலைக்கும் கொண்டு வரச் செய்தது.

சங்க இலக்கியத்தோடு பக்தி இலக்கியத்தை ஒப்பிட்டு அறிமுகத்தை வழங்கினார் ஜா. ராஜகோபாலன். பக்தன் இறைவனை அடைவதற்கு ஏங்குவது, தலைவி தலைவனை அடைய ஏங்குவது போல் அமைந்திருக்கும் என்று கூறினார். சங்கப்பாடலின் அமைப்பிலிருந்தே உருவானது பக்தி இலக்கியம். சங்கப் பாடல்களில் குழந்தையின் அம்சங்களைக் கொண்டு உருவாகிய பாடல்களைப் போல் பிள்ளை தமிழாகப் பெரியாழ்வார் பக்தி இலக்கியத்தில் கையாண்டுள்ளதைக் காட்டாகக் குறிப்பிட்டார் ராஜகோபாலன். தொடர்ந்து, பக்தி இலக்கியத்தை நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அதனைக் குறித்த அறிமுகம் அவசியம் என்பதால் தொடர்ந்து பக்தி இலக்கியம் குறித்த சிறு வரலாற்று அறிமுகத்தையும் பக்தி இயக்கம்(Moment) குறித்த அறிமுகத்தையும் வழங்கினார்.

பக்தி இயக்கம் என்பது இந்தியாவின் சிறப்பாகக் கருதப்படுகின்றது. கிட்டத்தட்ட நான்காம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் உருவாகியிருக்கலாம் என்று குறிப்பிட்டார். அதற்கு முன் இரு வழியாக வழிபாடு பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று அணங்கு முறை மற்றொன்று பூர்வ மீமாம்சம் (யாகம்/ஹோம்ம) முறை. இவ்வழிப்பாட்டு முறை பொருளாதார ரீதியில் அதிக பணத் தேவையைக் கோருவதால் மன்னர்களுக்கு மட்டுமே உகந்தவையாக அமைந்திருந்தது. ஆக, இறைவன் பொதுவானவன், அனைவருக்குமானவன், மனதால் மெய்மையுணர்வோடு இறைவனை எவரும் அணுகலாம் என்ற அடிப்படையிலே பக்தி இலக்கியம் உருவெடுக்கின்றது. இறைவனை நண்பனாக, தலைவனாக, காதலனாக, சேயாக எனப் பல கோணங்களில் அணுகும் வாய்ப்பைப் பக்தி இலக்கியம் உருவாக்கித் தருகின்றது. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களிலிருந்து பக்தி இயக்கம் தோன்றியது. மீரா, அக்கமாதேவி, பசவண்ணா போன்றோரைக் காட்டாக அவர் குறிப்பிட்டார். பல இடங்களில் பக்தி இயக்கம் தோன்றினாலும் அனைத்திற்கும் முன்னோடியாக முன்னின்றது தமிழகம் என்றார் ராஜகோபாலன்.

லதா

பக்தி இலக்கியத்தில் அனைவருக்கும் முன்னோடியாக விளங்குபவர் காரைக்காலம்மையார். நான்காம் நூற்றாண்டிலே ஒரு பெண்ணாக இருந்து இல்லறத்தைத் துறந்து கடவுளுக்கு அர்ப்பணிப்புச் செய்வதெல்லாம் வியப்புக்குரிய செயலாகும். அதோடு, பக்திப் பாடல்களில் உள்ள செவ்வியல் தன்மையை ஆராயும்போது இப்பாடல்களை எழுதியவர்களின் அறிவுத்தன்மையையும் கூர்மையையும் உணர முடியும். நான்காம் நூற்றாண்டிலே தோன்றிய மிகச் சிறந்த கல்வியாளர்களின் அறிஞர்களின் பக்திப் பாடல்களைதான் நாம் வாசிக்கின்றோம் என்ற உணர்வோடு இப்பாடல்களை வாசிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை எளிமையாக இருந்தாலும் அவர்களின் சொற்கள் ஒவ்வொன்றும் அறிவில் சிறந்ததாக அமைகின்றது. பக்தி இலக்கியத்தில் உள்ளவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற பிம்பத்தை முற்றிலும் உடைத்தெறிந்து பக்தி இலக்கியத்தை அணுகினால் அதன் சிறப்பை இன்னும் முழுமையாக உணர முடியும் என அறிந்து கொண்டு முதல் பாடலைக் குறித்து கலந்துரையாடலைத் தொடங்கினோம்.

முதல் பாடலாக காரைக்காலம்மையார் இயற்றிய அற்புதத்திருவந்தாதி பாடல்கள் குறித்து எழுத்தாளர் லதா அவர்கள் அவரின் பார்வையை முன்வைத்தார். இரண்டு பாடல்களும் மெய்ஞானத்தை உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். லதாவைத் தொடர்ந்து ராஜகோபாலன் இவ்விரு பாடல்களையும் அதன் அமைப்பு முறைகளின் வழி அணுகி விளக்கமளித்தார். முதலில் அந்தம் ஆதியாக மாறும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது காரைக்காலம்மையாரின் பாடல்கள் என்று குறிப்பிட்டார். அதாவது பாடல் முடியும் ஈற்று வரியிலிருந்து அடுத்த பாடலின் அடி தொடங்குவதே அந்தாதி. அவ்வகையில் காரைக்காலம்மையாரின் பாடல்களின் வடிவமைப்பு பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. காட்டாக

தானே தனிநெஞ்சந் 
தன்னையுயக் கொள்வான்
தானே பெருஞ்சேமஞ் 
செய்யுமால் – தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து 
பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து. (காரைக்காலம்மையார்)

என்ற பாடலை எடுத்துக் கொள்ளலாம். இப்பாடலை இரண்டு பாகங்களாகப் பிரித்துப் பார்த்தால் மட்டுமே இதன் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள முடியும். //தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான் தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்// என்ற அடியை முதல் பாகமாகவும் //தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து.// என்ற அடுத்த அடியை இரண்டாவது பாகமாகவும் பிரித்துக்கொள்ள வேண்டும். முதல் அடி எல்லாவற்றிலும் இருந்த பற்றைத் துறந்து தனித்து இருக்கும் நெஞ்சை ஆட்கொள்ள இறைவனே தானாக வருவான் என்பதே முதல் பாகத்தின் பொருள். இவ்வரிகளுக்கு உருவம் கொடுக்க இயலாது. அவ்வரிகள் அனைத்தும் காட்சகளின்றி அருவமாக விளங்குகின்றது.

அடுத்த வரிகள் நஞ்சுமிழும் நாகத்தை நீ மாலையாக அணிந்து கொள்வது போல்தான் பல தவறுகளைச் செய்யும் மனிதனை நீ ஆதரிக்கிறாய் என்று பொருள் கொள்ளலாம். இரண்டாவது பாகத்தை நம்மால் காட்சியால் நமது கற்பனையில் நிகழ்த்திப் பார்க்க முடியும். முதல் பாகம் அருவமாகவும் அடுத்த பாகம் காட்சியாக மாறும் அழகியலை நாம் இப்பாடலில் உணர முடியும். அதோடு, மனிதனின் கீழ்மைகளை மிக அழகாக உணர்த்துவதே பக்தி இலக்கியம்தான் என்று ராஜகோபாலன் குறிப்பிட்டார். ஆக, நான்காம் நூற்றாண்டிலே இப்படியொரு நுண்ணிய வடிவமைப்போடு பாடல் இயற்றப்பட்டுலதை எண்ணினால் வியப்பாகவே இருந்தது.

அடுத்து, வாழ்க்கை தத்துவங்களை மெய்ஞானம் மற்றும் பக்தி இயக்கம் அடிப்படையில் நாம் அணுகலாம். அவ்வாறு வாழ்க்கையின் தத்துவத்தைப் பக்தி இயக்க அடிப்படையில் அணுகி பாடலாகக் காரைக்காலம்மையாரின் இப்பாடலைக் கொள்ளலாம்;

இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்; றோற்றி
யிறைவனே யீண்டிறக்கஞ் செய்வா – னிறைவனே
“யெந்தா!” யெனவிரங்கு மெங்கண்மேல் வெந்துயரம்
வந்தா லதுமாற்று வான். (காரைக்காலம்மையார்)

இப்பாடல் படைத்தல், காத்தல், அழித்தல் எனச் செயலாற்றும் இறைவன், ‘என் தலைவனே’ என நாம் இறங்கும் பொழுது துயரத்தை மாற்றுவான் என்ற பொருளில் அமைந்துள்ளது. இப்பாடலின் சிறப்பு யாதெனில் முதல் வரியிலே இறைவனின் செயல்கள் குறித்து குறிப்பிட்டு பின்னர் நாம் இறைவனிடம் எதை எதிர்ப்பார்க்க வேண்டும் என்ற புரிதலை நமக்குள் விதைக்கின்றது. துயரம் வந்தால் இறைவன் அதனை மாற்றுவானே தவிர துயரே வரக்கூடாது என நாம் எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதனை இப்பாடல் உணர்த்தியது. இறைவனின் செயல்களையும் நாம் எதிர்பார்ப்புகளையும் இவ்வளவு தெளிவாக நான்காம் நூற்றாண்டிலே கூறியிருப்பதே பக்தி இலக்கியத்தின் சிறப்பைக் காட்டுகின்றது.

சாலினி

தொடர்ந்து, நம்மாழ்வார் இயற்றிய ‘திருவாய்மொழி’ பாடல் பற்றி கலந்துரையாடப்பட்டது. வைணவர் மரபில் முதன்மை குருவாகத் திகழ்பவர் நம்மாழ்வார். 1000 பாடலுக்கு மேல் எழுதியவர் நம்மாழ்வார்.

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்

கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்

கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்

கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்

கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்

கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?

கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்

கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? (நம்மாழ்வார்)

எனும் இப்பாடலில் வரும் என்னும் என்ற சொல் ‘என்று சொல்லும்’ என்று பொருள்படுகின்றது. ஒரு பெண் விஷ்ணுவின் அழகில் மயங்கி பேசுவதைக் கண்டு அப்பெண்ணின் தாய் அவள் மகளின் போக்கை எண்ணி புலம்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது. கல்விக்கு எல்லை இல்லை, கற்கும் கல்வியே நான்தான், கல்வியை உருவாக்கியதும் நான்தான், அறிதல் நீக்கம் செய்பவளும் நான்தான், கல்வியின் சாரமும் நான்தான் என இறைவனின் கூற்றுகளைக் கூறும் என் மகளுக்குள் இறைவன் ஏறித்தானோ, அவள் எதை படிக்கிறாள் என வினவும் கல்வியாளர்களிடம் நான் என்ன சொல்வேன் எனக் கேட்கும் தாயின் புலம்பல்தான் இப்பாடலின் பொருள். இறைவனின் கூற்றைச் சூழலோடு பொருத்தி அமைக்கப்பட்டுள்ளதே இப்பாடலின் சிறப்பு. மேல் அடிகளில் இறைவனைப் பற்றிய கூற்றுகளைக் கூறி இறுதியில் //கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?// என்ற வரியில்தான் நம்மாழ்வார் எனும் கவிஞரிடம் இடம் வெளிவருகின்றது.

அடுத்து, பெரியாழ்வாரின் ‘பெரிய திருமொழி’ பாடல் குறித்து பேசினோம்.

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட

ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான்! என்று அழ

கூற்றுத் தாய் சொல்லக்  கொடிய வனம் போன

சீற்றம் இலாதானைப் பாடிப் பற

சீதை மணாளனைப் பாடிப் பற.   (பெரியாழ்வார்)

இப்பாடல் ராமன் வனம் சென்ற காட்சியை உந்திப் பறத்தல் விளையாட்டின் வழி கூறும் பாடலாக அமைகின்றது. தாய் போல் திகழ்ந்த கைகேயி ராமனை வன்ம் போகச் சொன்னவுடன் அதனை எண்ணி கவலையடையும் ஈன்ற தாய் அழுதாலும் விதியை மாற்ற முடியவில்லை. ராமனும் சீற்றம் இல்லாமல் வனத்திற்குச் சென்றான். இப்பாடலில் ‘கூற்றுத் தாய்’ என்பது விதி என்று பொருள்படுகின்றது. இப்பாடலைக் கம்பராமாயணத்தோடு ஒப்பிட்டு பாரதி அவர்களுன் கனேஷ் பாபு அவர்களும் கருத்துரைத்தனர். ஆழ்வார்களின் பாடல்கள் விதையாக விளங்கி விருட்சமாக மாறியது கம்பராமயனத்தில் காணலாம் என்பதைக் கலந்துரையாடலின் நிறைவில் புரிந்துகொள்ள முடிந்தது.

அடுத்து, பேயாழ்வாரின்

புகுமதத்தால் வாய்பூசிக் கீழ் தாழ்ந்து அருவி 
உகு மதத்தால் கால் கழுவிக்,கையால் மிகு மதத் தேன் 
விண்டமலர் கொண்டு விறல் வேங்கடவனையே *
கண்டு வணங்கும் களிறு.   (பேயாழ்வார்)

எனும் பாடல் குறித்து எழுத்தாளர் சர்வின் பேசினார். இப்பாடல் காட்சி பிம்பமாக அமைந்துள்ளது எனக் கூறி பாடலில் ஏன் மதஜலம் குறிப்பிடப்பட்டுள்ளது என வினா தமக்குள் எழுந்ததைக் கூறினார். அதற்கான விடையையும் அவரே கூறினார். யானை தன் காமத்தால் தன்னையே சுத்தம் செய்து கொண்டு இறைவனை வழிபடுவது போல்தான் மனிதனும் எனக் குறிப்பிட்டார். இறுதியாக, காமம், குரோத, மோகங்களும் இறை வடிவே. ஆக்கமும் அழகும் மெய்மை மட்டுமல்ல அழிவும் பிரிவும் பொய்மையில்கூட பிரமத்தின் வடிவங்கள்தான் எனப் பாடலோடு ஒப்பிட்டுக் கூறினார் சர்வின். ராஜகோபலன் அவர்கள் நுகர்வு வெறியால் யானை அதன் மத நீரினால் தன்னைச் சுத்தம் செய்து கொண்டு தேன் நிரம்பிய மலரைப் பறித்து வீரமும் திறமையும் நிறைந்த பெருமாலை வணங்கும் காட்சியை இப்பாடல் காட்டுவதாகக் கூறினார். உலகியலின் நடுவிலிருந்த இறைவனை வணங்கும் சூழல்தான் இப்பாடல் உணர்த்துகின்றது. ஆக, ஒரே ஒரு காட்சியைப் படிமமாக்கி வாசகனுக்குள் பல சிந்தனைகளை நிகழ வைக்கும் விந்தையை இப்பாடலில் நம்மால் உணர்ந்திட முடியும்.

மேலும், பெரியாழ்வாரின்

கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்  கவளம் எடுத்துக்

கொடுப்பான் அவன் போல்

அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு  அமரர்பெருமான்

கொண்டு நின்ற மலை

கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்  கதுவாய்ப் பட

நீர்முகந்து ஏறி எங்கும்- 

குடவாய்ப் பட நின்று மழை பொழியும்  கோவர்த்தனம் என்னும்

கொற்றக் குடையே.

எனும் பாடல் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. ஒரு காட்சியை மற்றொரு காட்சியோடு ஒப்பிடுவதையும் ஒரே இடத்தில் இரு கற்பனைகளைப் பயன்படுத்தும் சூழலையும் இப்பாடல் வாசகனுக்குத் தருகின்றது. மலையைத் தூக்கும் காட்சி, யானைக்குக் கவளம் ஊட்டும் காட்சி, மழை பொழியும் காட்சி எனப் பல காட்சிகளால் இப்பாடல் நிரம்பியுள்ளது. யானைக்குக் கவளத்தைக் கொடுக்கும் காட்சியை இறைவன் மலையைத் தூக்கும் காட்சியோடு ஒப்பிட்டுள்ளது இப்பாடலின் காட்சி சிறப்பு. அதோடு, மழை குடத்திலிருந்து பொழியும் காட்சியும் மற்றொரு சிறப்பாக அமைகின்றது.

இறுதியாக, நேரப் போதாமையால் குலசேகர ஆழ்வாருடைய பாடலோடு பக்தி இலக்கியம் அமர்வு நிறைவடைந்தது. குலசேகர ஆழ்வாரின்

தரு துயரம் தடாயேல்  உன் சரண் அல்லால் சரண் இல்லை

விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்  வித்துவக்கோட்டு அம்மானே

அரி சினத்தால் ஈன்ற தாய்  அகற்றிடினும்  மற்று அவள்தன் 

அருள் நினைந்தே அழும் குழவி  அதுவே போன்று இருந்தேனே

(குலசேகர ஆழ்வார்)

இப்பாடலைக் குறித்து ராஜகோபாலன் விளக்கமளித்தார். இறைவனை வணங்குவதால் எந்தத் துயரும் தடைசெய்யப்படப்போவதில்லை. இருப்பினும், நான் உன்னிடத்தில்தான் சரணடைவேன் என இப்பாடல் விளக்குவதாக அவர் குறிப்பிட்டார். தாயின் அன்போடும் சினத்தோடும் ஒப்பிட்டு இப்பாடலை இயற்றியது இப்பாடலின் சிறப்பாகத் தோன்றியது.

ஆக, ராஜகோபாலன் இவ்வமர்வில் ஒவ்வொரு பாடலையும் எளிமையாகவும் நகைச்சுவையுணர்வோடும் விளக்கியது இப்பாடல்களைப் புரிந்துகொள்ள சுலபமாக்கியது. பக்தி இலக்கியங்களின் சுவையையும் வடிவமைப்பையும் இந்த அமர்வில் அறிந்து கொள்ள முடிந்தது. பாடலை உய்த்துணரும் வழிகளையும் இந்த அமர்வின் வழி கற்றுக் கொண்டேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...