வல்லினம் இலக்கிய முகாம் – நவீன கவிதைகள் அமர்வு

வல்லின இலக்கிய முகாமில் இரண்டாவது அமர்வாக அமைந்தது கவிதைகள் குறித்த உரையாடல். ‘பொருள்வயின் பிரிவு’, ‘பணி செய்து கிடத்தல்’, ‘எண்ணும் எழுத்தும்’, ‘காலத்தின் இலை’ மற்றும் ‘மெய்மையின் சுவை’ என முறையே கவிஞர் விக்ரமாதித்யன், கவிஞர் இசை, கவிஞர் மோகனரங்கன், கவிஞர் அர்ஜுன்ராச் மற்றும் கவிஞர் கார்த்திக் நேத்தாவின் கவிதைகள் அமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

பிரதானமாகக் கவிஞர் விக்ரமாதித்யனின் ‘பொருள்வயின் பிரிவு’ கவிதை விவாதிக்கப்பட்டது. இக்கவிதையைக் குறித்துப் பேசிய தர்மா, இருமனதான உணர்வினைக் கவிதை தருவதாகக் கூறினார். ‘இருள் பிரிந்திருக்கவில்லை’ என்ற வரி கவலையான மனநிலையைக் குறிப்பதாகவும் அக்கவலையைப் போக்க மனைவி வெந்நீர் வைத்துக் கொடுப்பது, வாசல் வந்து வழியனுப்புவது போன்றவை ஆறுதல் தருவதாகவும் வாசித்துணர்ந்திருந்தார். ‘முதல் பேருந்து…’ எனத் தொடங்கும் வரியிலிருந்து கவிதையின் நாயகன் வேறொருவரால் வழி நடத்திச் செல்ல, சுய இயக்கமின்றி இயக்கும் திசையில் இயங்கி உடன்படுபவனாக இருக்கிறான் எனக் கூறி முடித்தார்.

அதனையடுத்து வந்த கலந்துரையாடலில், காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பும் நாயகானாக இல்லாமல், தூரதேசத்திற்கு வேலைக்குச் செல்லும் தகப்பன், கணவனின் மனவேதனையைக் கவிதை பேசுவதாக ஆதித்தன் தெரிவித்தார். மனைவி, குழந்தைகளைப் பிரிந்து செல்லும் உறவுத் துயரமும் தொழில் நிமித்தத்தால் பிரியும் துயரமும் என இருவித துயரத்தில் நாயகன் பிரிவதாக எழுத்தாளர் கணேஷ் கூறினார். கவிதையின் முதல் நான்கு வரிகள் ஒருவனை வீட்டிலே இருக்க வைக்கக்கூடிய பொழுதினைக் காட்சிப்படுத்துவதாகவும் பகிர்ந்தார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் நவீன், கவிதை நமக்குள் அரூபமாகக் கடத்தக்கூடிய உணர்வே முதல் வாசிப்பில் அது சிறந்த கவிதையென உணர்த்துமெனக் கூறினார். அவ்வுணர்வினைக் கவிஞர் எவ்விதம் மனக்கண்ணிணுள் காட்சிப்படுத்துகிறார் என்பதும் முக்கியம். இக்கவிதையின் முதல் மூன்று வரிகள் அடுக்கிவரும் காட்சிகள் யாவும் வாசகனைக் கடைசி வரிகளுக்குத் தயார்படுத்தும் சூட்சமமே. தயாரானபின் வாசகன் வந்தடையும் இறுதி வரி வலி கொடுக்கிறது எனக் கூறினார் நவீன்.

சிறுகதையில் ஒளி, ஒலி, மணம் ஆகியவை இன்றியமையாததைப் போல கவிதையிலும் அது முக்கியமெனக் கோடிட்டார். இக்கவிதை முதலில் ஒளியைக் கடத்தி, பின்னர் ஒலியை உணர்த்தி, சூழலை அடுக்கிக் கொண்டு வந்து பிரிவின் துயர் நோக்கி வாசகனைத் தள்ளும்போது அது உடனுக்குடன் அவனுள் பதியப் பெறுவதாக விளம்பினார். மேலும், சண்முகா முதலிரு மற்றும் கடையிரு வரிகள் அதிகாலையைப் பார்த்து நாயகன் பொறாமைப்படுவது போலுள்ளது எனக் கூறினார். நாயகனின் மனம் இன்னும் வீட்டிலேயே இருப்பதாகவும் பிரிவின் வலியைத்தான் நாயகன் உணர்த்துகிறார் எனத் தினேஷ்வரி பகிர்ந்தார்.

இவர்களையடுத்து பேசிய எழுத்தாளர் ராஜகோபாலன், நிகழ்ச்சியின் முந்தைய அங்கமான சங்கப் பாடல்களிலிருந்து நவீன கவிதைக்கு வந்தடையும் துவக்கப் பாடலாக இக்கவிதை அமைகிறதெனக் கூறினார். கவிதை தலைப்பிலே தொடங்கிவிடுவதால் நவீன கவிதைகளில் முதன்மையாகக் குவிமையப்படுத்த வேண்டியது அதன் தலைப்பு என விளக்கிய ராஜகோபாலன், ‘பொருள்வயின் பிரிவு’ என்பது அகப் பொருள் குறித்துப் பேசும் சங்கப் பாடலில் இடம் பெற்றிருப்பதைக் கோடிட்டுக் காட்டினார். பொருள்வயின் பிரிவில், பிரிவின் துயரை அடைவது சங்க காலத்தில் தலைவியாக இருக்க காலப் பரிணாமத்தில் முதன்முறையாக மாற்றுப் பார்வையோடு நவீன கவிதை தலைவனின் துயரை மையப்படுத்தி முனைப்புக் காட்டியுள்ளதென கூறினார்.

‘அதிகாலை’ எனும் சொல் நம்பிக்கையின் குறியீடாகக் கவிதையில் வலம் வருகிறது. விடிவதற்கு முந்தைய இரவினைச் சுட்டும் இக்கவிதை, நாயகன் வாழ்க்கையில் விரைவில் மாற்றம் ஏற்படுமெனினும் இன்னும் அது நிகழாதிருப்பதை உணர்த்துகிறது. ‘காடு’ ஒலியில்லாத வெளியன்று. காலையில் செவிக்குள் புகும் ஓசையும் இரவில் செவி சேரும் ஓசையும் காட்டில் வெவ்வேறானவை. இரவின் ஓசை பயமூட்டும். அத்துடன் காட்டின் ஓசை நீர்ப்பெருக்கு போல் வருவதாகும். உடைத்துப் பிரவாகிக்கக் காத்திருக்கும் மனதைக் ‘காடு’ எனும் சொல் கவிதையில் உணர்த்துகிறது. ‘சாரல் மழை…’ என்ற வரி சங்க இலக்கியத்தின் குறிப்புகளோடு பொருத்திப் பார்க்கையில் மறுநாள் தலைவனின் பிரிவை முன்னிட்டு முதல் நாள் இரவில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழ்ந்தேறிய கலவியாட்டத்தைக் குறிப்பதாகிறது.

சோகம் நாயகியைத் தழுவியிருந்தாலும் இருவரும் கூடிய மகிழ்வில் அவள் நாயகனுக்குப் பணிவிடை செய்கிறாள். இதனையடுத்து, பொருள் தேட மகனை வழியனுப்பி வைக்கும் குணம் தாயுடையது. அதே வேளையில், கணவனுடன் அணுக்கமாக இருக்க வேண்டுவது தாரத்தின் சிந்தனை. இக்கவிதையில் அவள் தாயாக உருமாறியிருக்கும் கணத்தைக் கவிஞர் ‘தாய்போல’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ‘ஓட்டுநர் இருக்கைக்குப்…’ என்ற வரிகள் பயணிப்பவன் நாயகனாயினும் பயணத்தை முடிவு செய்பவன் அவனல்ல என விளக்கமாகக் கவிதையை உடைத்துப் பார்த்திருந்தார் ராஜகோபாலன். நவீன கவிதை அகமரபினையே அதிகம் பேசுகிற சூழலில், இக்கவிதை அவ்வகைப்பாட்டினுள் வெளிவந்த சிறந்த கவிதையெனக் கருத்துரைத்தார். இக்கவிதையினை மொழிபெயர்த்து ஸ்காண்டினாவியா பகுதியிலுள்ள ஒரு மாலுமியிடம் வழங்கினால் கண்ணீரோடு ஆமோதித்து இதுதான் சிறந்த கவிதையென நிச்சயம் கூறுவான் என உறுதிபடத் தெரிவித்தார் ராஜகோபாலன். அப்படியொரு பிரபஞ்சளாவிய தன்மை இக்கவிதைக்கு உண்டென ராஜகோபாலன் கூறி முடிக்க அடுத்த கவிதைக்கு அமர்வு நகர்ந்தது.

நவீன கவிதை 2

கவிஞர் இசையின் ‘பணி செய்து கிடத்தல்’ இரண்டாவது கவிதையாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கவிதை குறித்து வாசித்த எழுத்தாளர் தினேஷ்வரி முதலில் இயல்பான கவிதையைப் போன்ற தோற்றத்தை வழங்கியதாய் கூறினார். கவிஞர் இசை குறித்த தேடலில் அவரது உயிர்மை இதழுடனான நேர்காணல் ஒன்றைக் கண்டடைந்திருந்தார். (https://isaikarukkal.blogspot.com/2024/06/blog-post_23.html?m=1) அதில் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் சாரத்தைப் பேசியிருந்த இசை, அதுவே அவரது கவிதைகளில் தொழில்படும் எளிமையெனவும் சாதாரண சொற்களைக் கொண்டே அசாதாரணங்களை உருவாக்க முடியும் எனவும் பதிவு செய்திருந்ததைச் சுட்டிக்காட்டி மீண்டும் கவிதையில் லயித்த தினேஷ்வரி வேறொரு கோணத்தில் அதனை அணுகினார்.

 திருநாவுக்கரசரின் ஐந்தாம் திருமுறையில் வரும் பாடலான,

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

என்பதை மேற்கோள் காட்டி, கூலியை எதிர்பார்க்காமல் உண்மையாக உழைப்பதைக் கவிதையின் தலைப்பு மையப்படுத்துகிறது என்றார். ஒரு மரம் பூத்துக் குலுங்கி கனி தந்து நிற்கிறது. ஆனால், அது எதையும் உத்தேசிப்பது இல்லை. இதனைக் கவிதையுடன் பிணைத்துப் பார்க்கிறார் தினேஷ்வரி. ‘இப்போது உலகின் ஏதோ ஒரு மூலை…’ என்ற வரிகள் மனத் தூய்மையைத் தழுவுவதாகக் கருத்துற்றிருந்தார் அவர். துப்புரவு பணி செய்வோரைப் பொதுவாக ஏறெடுக்காத நமது மதிப்பீடுகள் பற்றிய எந்தக் கவலையுமின்றி அவர்கள் அவர்களது உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறித் தனது பகிர்வை முடித்தார் தினேஷ்வரி.

தொடர்ந்து பேசிய சாலினி, கவிதையை நேரடியாக அணுகுவது தொடர்பான கேள்வியை முன்வைத்தார். ஒரு கவிதையில் வரும் உணர்வு, காட்சிகள் ஆகியன கவிதையைப் புரிந்து கொள்ள வழிகோல்கிறது. அது தரும் நேரடியான பார்வையை விடுத்து ஆழப் பார்ப்பது தேவையா என்ற கேள்வியை நிறுவினார். துப்புரவு செய்பவர்களின் வாழ்க்கை துப்புரவாவது கவிதையில் அவர் கண்டு கொண்டது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, எழுத்தாளர் ராஜகோபாலன் மூன்று வித புரிதல் மனிதனுக்கு உண்டென்பதனைச் சுட்டிக்காட்டினார். தெரிதல் நிலை (to know things), புரிதல் நிலை (to understand) மற்றும் உணர்தல் நிலை (to realise) என அதனை வகைப்படுத்தினார். ஒரு தகவலை எந்தச் சிரமமும் இன்றி நினைவில் நிறுத்திக் கொள்வது தெரிதல் நிலை சார்ந்தது. இது அன்றாட வாழ்வுடன் மோதாததால் அது குறித்த பெரும் சிந்தனை நமக்குத் தேவையானதில்லை. காட்டாக, ஒரு உணவகத்தில் உள்ள உணவு வகைகளைத் தெரிந்து வைத்திருப்பதாகும். அடுத்த படியான புரிதல் நிலை, ஒரு செயல்பாட்டை முழுக்கத் தெரிந்து கொள்வதாகும். அதே உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவின் செய்முறையினை உள்வாங்குவது இந்நிலையின் எல்லையைக் குறிக்கின்றது.

ஈற்று நிலையான உணர்தல் நிலையை விளம்பிட்ட ராஜகோபாலன், அதனை ஒரு நாளும் இன்னொருவருக்குக் கடத்த முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். உணர்தல் நிலை தனியனுபவம் சார்ந்தது. முந்தைய கவிதையை (‘பொருள்வயின் பிரிவு’) மாலுமி வாசிக்க நேர்ந்தால், அவன் அடையும் உணர்வு அம்மாலுமி உணர்ந்த வாழ்க்கையாதலால் நிகழ்கிறது. ஆக, சாலினியின் கேள்வி முதல் இரு நிலைகளுக்கு மட்டும் பொருந்துவதாகவும் மூன்றாம் நிலையினை எட்டாது எனவும் ராஜகோபாலன் கூறினார். ஒவ்வொரு கவிதையையும் எளிமையாக்கி அணுகுவதாக இருந்தால் முந்தைய கவிதை ஒருவன் பேருந்தில் ஏறிச் செல்வதை மட்டுமே குறிக்குமென விளக்கினார். ஒருவருக்கு உணர்வு என்பது எப்படி வருகிறது? அது நுண்ணொடியில் நிகழ்கிறது. அதன் பின்னரே அது தொடர்பான வெளி விரிவடைகிறது என ராஜகோபாலன் சொன்னார்.

நல்ல கவிதை எது என்ற கேள்வியை முன்வைத்த ராஜகோபாலன், ஒரு கவிதையில் நான்கு வரிகளை நீக்கிய பிறகும் பொருள்படுமாயின் அல்லது கவிதை முடிந்த பிறகும் ஏன் நீள்கிறது எனும் கேள்வி வாசகனிடத்தில் எழுமாயின் அது நல்ல கவிதையன்று என நுவல்ந்தார். ஒளிப்படக்கருவியின் காட்சிகாணியோடு (view finder) கவிதையைத் தொடர்புபடுத்துகிறார் ராஜகோபாலன். வெற்றுக் கண்களால் பற்ற முடியாத நுண்தகவல்களைக் காட்சிகாணி எப்படி உள்வாங்க முடிகிறதோ அது போலதான் கவிதையும். மேலும் விளக்கிய அவர், ஒரு பயிற்சியாகச் சங்கப் பாடலில் உள்ள வரிகளுள் ஒன்றை நீக்கி அது பொருள்படுமா என்பதைச் செய்து பார்க்கச் சொன்னார். அப்படிச் செய்வதாக இருந்தால் அது சாத்தியப்படாது என்றும் நிறுவினார். தங்கத்தை அளப்பது போல மிக அளந்ததாகச் சங்கப் பாடல் வரிகள் இருக்குமென விளக்கினார். அதனைச் செறிவார்ந்த நிலையில் கொண்டு நிறுத்த, லாவகமாக அழுத்தி ஒரு நெற்று (capsule) வடிவில் கொண்டு வருவதே கவிதையின் பணி. அந்த நெற்று சரியாகத் தீண்டப்படும்போது அது பிரம்மாண்டமாக விரியும். அது போலதான் கவிதையும். எவ்வளவு சுருக்கமாக, எவ்வளவு விரிவாகப் பொருள் தருகிறது என்பதே நல்ல கவிதை எனவும் கவிதையின் அழகும்கூட அதுதான் எனவும் ராஜகோபாலன் நவில்ந்தார்.

மேலும் பேசிய அவர், இசை கவிதையின் அழகியல் என்ன என்பதை வினவினார். கவிதையின் பொருளுணர்தல் என்பது சொல்லுக்குப் பொருள் கொள்வதல்ல. சங்கப் பாடல்களைக் கல்லூரி பாடமாக வைக்கும்போது, சொல்லின் பொருள் பொருட்டு அரும்பதவுரை வழங்கப்படுகிறது. தேர்வு புள்ளிகளைக் கணக்கில் கொண்டு சொல்லுக்குப் பொருளறிந்த உடனே அது விளங்கப் பெறுகிறது என அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்கின்றனர். ஆனால், கவிதையோ உணர்வதற்குரியது. இதே போன்று சொல்லுக்குப் பொருள் காண்பதைக் கூகுள் போன்ற இணையத் தேடுபொறி செய்யுமெனில் கூகுள்தான் ஆகச் சிறந்த கவிதை இரசனையுடையதாகுமா என வினவினார் ராஜகோபாலன். தினேஷ்வரி பொருள் கண்ட ‘கிடத்தல்’ எனும் சொல்லே கவிதையில் நுட்பமான இடமென ஆமோதித்த ராஜகோபாலன், துப்புரவு பணி பிறரால் அசூயையாக அல்லது மதிக்கப்படாத பணியாக இருப்பதை விளக்கினார். வேறெந்த பணியாளரையும் அணுகித் தொடத் தயங்காத நாம் துப்புரவு பணியாளர்களை நெருங்குவதில் மனத்தடை கொள்கிறோம். ஆனால், அவர்களுக்குள்ளும் ஒரு உலகம் இயங்கியபடியேதான் உள்ளது எனச் சொன்னார்.

ஜெயமோகனுடனான ஓர் உரையாடலில், ‘வாழ்க்கை’ என்ற ஒற்றை பதம் கவிதையாகிறது என ராஜகோபாலன் கருத்து பரிமாறியதாகக் கூறினார். ஒவ்வொரு வாழ்க்கையும் மற்றொரு வாழ்க்கை போல இருப்பது கிடையாது. கவிஞனின் கண்; காலத்தின் கண். நாம் துப்புரவாளர்களைத் தூற்றிக் கொண்டிருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். அதுவே பணி செய்து கிடத்தல் என ராஜகோபாலன் தெளிவுபடுத்தினார். ‘அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக…’ என்ற வரி தற்போது முகமன் விளிக்க பெண்கள் பழக்கம் கொண்டிருக்கும் தழுவல் கலாச்சார பாவனைகள் ஏதுமின்றி துப்புரவாளப் பெண்கள் இருப்பது, பாவனை இல்லாத அவர்களின் வாழ்க்கையைக் குறிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

எத்தனை துயரம் மனிதனை ஆட்கொண்டாலும் அவன் சிறு சிறு மகிழ்ச்சியின் துணையுடன் தொடர்ந்து வாழவே செய்கிறானென ராஜகோபாலன் கூறினார். இசை இக்கவிதையில் ஒரு நுண்விவரிப்பைச் (micro narration) செய்துள்ளார். அதனை உணரும் தருணம் மனதின் ஒரு மூலை தூய்மை காண்கிறது. நம்முள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருந்த அபிப்பிராயம் குலைகிறது என ராஜகோபாலன் விளம்பினார். ‘எங்கென்றுதான் எனக்குச் சொல்லத் தெரியவில்லை’ என்ற கவிதையின் இறுதி வரி கவிஞனின் ஒப்புதல் குரல் ஒலிப்பது தொடர்பாகப் பேசிய ராஜகோபாலன்,  கவிஞனிடத்திலே ஒன்று தெரியவில்லையெனில் அதைத் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கு இருப்பதாகக் கூறினார். எல்லாம் தெரிந்ததைப் போல எழுதுபவர்கள் மத்தியில் உண்மையோடும் நேர்மையோடும் நவீன கவிஞன் திகழ்கிறான். தன்னுடையதையும் சேர்த்து மனிதக் குலத்தின் தாழ்ச்சி, கீழ்மையை வெளியே வைப்பதற்கு நவீன கவிஞன் தயங்குவதில்லை. அதுவே நவீன கவிதையின் முக்கிய அம்சமாகிறது என எடுத்தியம்பினார் ராஜகோபாலன்.

கூடுதலாகக் கருத்துரைத்த எழுத்தாளர் நவீன், உலகம் தூய்மை ஆவதன் நிறைவாகத் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகிறது எனப் பகிர்ந்து கொண்டார். அந்த நிறைவின் மகிழ்ச்சியாகக் கவிதையை நேரடியாக அணுகுவதும் அந்த மகிழ்விற்குக் கூடுதலான அர்த்தத்தை வழங்குவதாகக் கூறினார். ‘இதை ஓய்வென்று நம்பவில்லை நான்…’, ‘உலகின் ஏதோ ஒரு மூலை…’ மற்றும் ‘எங்கென்றுதான் எனக்குச் சொல்லத் தெரியவில்லை’ ஆகிய வரிகளைச் சுட்டிக்காட்டி, இவ்வரிகளின் வீச்சு அவ்வகை வாசிப்பில் குன்றுகிறதெனினும் அவ்வகை வாசிப்பிற்கான வழியும் தவறல்ல என நவீன் அவர்களின் கருத்துடன் இசைந்தார் ராஜகோபாலன். அத்துடன் அமர்வு அடுத்த கவிதையை நோக்கிச் சென்றது.

நவீன கவிதை 3

கவிஞர் மோகனரங்கன் எழுதிய ‘எண்ணும் எழுத்தும்’ அடுத்த கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது. இக்கவிதையைக் கூர்ந்த லாவண்யா, கவிஞர் நேரடியான கேள்வியைத் தன் முன் வைப்பதாகக் கூறினார். நமக்குத் தெரிந்ததை அல்லது தகவல்கள் அடிப்படையில் நாம் நம்புவதைப் பிரதானம் என்று எண்ணியிருக்கும் பட்சத்தில், பிறரின் கூற்றும் எண்ணமும் நிலையில் நமக்குள் இருக்கும் நம்பிக்கைகளுடன் முரண்படும்போது ஒரு பிடிவாதக் குணத்துடன் அதனை நிராகரிக்க முற்படுகிறோம். அவ்வாறு எப்படி இது சாத்தியமாகுமென நினைக்கக்கூடிய அவ்விடம், நம் முன் ஞானத்தை அல்லது நாம் அறியாத புதிர்களைக் கட்டவிழ்க்கையில், அதனை நாம் நம்பாமல் போகும்போது அது நம்மை விட்டு அகன்று விடலாம். அது உண்மையென இருந்தாலும் நிராகரிப்பிலிருக்கும் நமக்கு, அந்த வஸ்து கிடைக்கப் பெறாது போகலாமென முதல் தரப்பு புரிதலை லாவண்யா விளக்கினார்.

இருப்பில் நாம் அறிந்த உலகம் ஒன்றும் அறியாத உலகம் ஒன்றும் இருக்கிறது. நாம் அறிந்த ஒன்றிலிருந்து கிடைக்கும் நெம்புகோலைக் கொண்டுதான் அறியாத ஒன்றை துலாவ வேண்டியுள்ளது. அம்மாதிரி தருணத்தில் மனம் கொள்ளும் பாவனைகள் வியப்பூட்டுவதாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட பழக்கத்தில் உழன்று வந்த மனம், அதையேதான் பிடிவாதத் தன்மையோடு இறுக்கிப் பிடித்து மாற்றுக் கருத்துடன் சமர்கொள்கிறது எனக் கவிதையை மற்றொரு கோணத்தில் அணுகியதாக லாவண்யா கூறினார். மேலும் கருத்துரைத்த அவர், கலைஞன் அல்லது கவிஞன் வாழ்வில் இதனைப் பொருத்திப் பார்ப்பது தொடர்பாகப் பேசினார். நடைமுறை உலகமும் கற்பனை உலகமும் வெவ்வேறானவை. அவ்விருவரும் இயங்குகின்ற கற்பனை உலகம் நடைமுறை உலகுடன் வெகுவாக முரண்படுகிறது. அப்படியான மோதலுக்குரிய தளத்தில் வாழக் கூடிய அவர்கள் கொள்ளும் சமரசத்தின் விளைவாக எழும் வலியையும் கவிதை பதிவு செய்வதாகச் சொன்னார்.

கவிதையில் ‘முயல்-காகிதம்-கானகம்’ ஆகிய மூன்று சொற்களைக் கொண்டு மேலும் விளம்பிய லாவண்யா, ‘முயல்’ ஒரு கற்பனையான உயிரினமாக, எளிதில் பிடிபடாத மாயத் தன்மையோடு விளங்கக்கூடிய, மாய உலகத்தினையும் பிடிவாதத் தன்மையினையும் குறிக்கலாமெனக் கூறினார். கற்பனை சார்ந்த விஷயம், ஏட்டுக்கல்வி, எழுத்து, தகவல் அல்லது கவிதை இருக்கக்கூடிய ஒரு ஊடகமெனக் ‘காகிதம்’ என்ற பதம் வாயிலாக அதனைப் பொருள் கொள்கிறார். அச்சொல் நாம் ஒரு கற்பனை உலகத்தினுள் நுழைவதையும் குறிக்கலாமென மேலும் இயம்பிய அவர், ‘கானகம்’ என்ற சொல் காடு, இயற்கை ஆகியவற்றைக் குறிப்பதனால் அது கவிதையில் காட்சிப்படுத்த வந்த கற்பனையின் உலகமாகவும் சுதந்திரத்தின் குறியீடெனவும் அணுகியிருந்ததாகத் தன் பதிவைச் சொல்லி முடித்தார் லாவண்யா.

மோகனரங்கனின் கவிதை கவிஞன் அல்லது கலைஞனின் படைப்புலகைச் சுட்டலாம் என்று சொன்னார் எழுத்தாளர் கணேஷ். பிரக்ஞைபூர்வமாக மூன்று கால்களுடன் முயல் படைக்கப்படுகிறது என லாவண்யா நுவல்வதைப் போலின்றி, நான்கு கால்களாகப் படைக்க எத்தனித்து அது மூன்று கால்களென மாறியிருக்க, இக்கவிதை அப்படைப்பின் மீதான திருப்தியின்மையைக் குறிப்பதாக அவர் தன் புரிதலைப் பதிவு செய்தார். அவ்வாறு ஊனமுற்ற படைப்பு வாசகனிடத்தில் செல்லும்போது வாசகன் சிந்திக்காத அர்த்தத்தையும் அது வழங்கி ஊனம் விலகி படைப்பு முழுமை காண்கிறது எனப் பொருள் கொண்டிருந்தார் கணேஷ். நிற்க, நாம் வாசித்த வாசகம் தொடர்பான கேள்வியை எழுப்பும்போதுதான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதெனத் தினேஷ்வரி கருத்துரைத்தார். ஒரு படைப்பானது எழுத்துகளுக்குள்ளே அடங்கியிருப்பதல்ல. கேள்விகளைத் தொடர்ந்து வீசிட, எண்ணங்கள் உருப்பெற்று அப்படைப்பைக் கடந்து நம் சிந்தனைகள் விரிவடையும். அவ்வாறு நாம் நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு வாசித்த எழுத்தினை மேலும் ஆய்ந்து அடுத்த நிலைக்குச் சென்ற பிறகு அவ்வெழுத்தை நம்பலாமெனக் கவிதை குறிப்பதாகத் தினேஷ்வரி நவில்ந்தார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் அரவின் குமார், முயலுக்கு நான்கு கால்கள் உள்ளன என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட உண்மை. ஓர் படைப்பில் அதெப்படி மூன்று கால்கள் தான் இருக்க முடியுமென அறியப்பட்ட மனநிலையில் தர்க்கக் குறியோடு அப்படைப்பை அணுகிடும்போது, அப்படைப்பு அதன் தரிசனத்தைத் திறந்து காட்டாமல் ஒளிந்துவிடுவதைக் கவிதை விளக்குவதாகக் கூறினார். அப்படி ஒளிந்துவிடும்போது புனைவெழுத்தின் அதிசயம் நிகழாது, வாசகனின் தர்க்கக் கேள்விக்கு விடையாக மேலோட்டமான புரிதலைக் குறிக்கும் அம்முயலுக்கு நான்கு கால்கள் இருக்கலாமெனக் கவிஞர் குறிப்பிடுவதாகச் சொன்னார் அரவின். எழுத்தாளர் தயாஜி கூறுகையில், நாம் வாசிக்கும் ஒரு படைப்பினை முழுக்க விளங்கிக் கொண்டதாக நினைத்திருக்க, எந்தச் சமயத்திலும் அது பொருள் மாறக்கூடும் என்பதற்கான எச்சரிக்கையாகக் கவிதையைப் பொருள் பெயர்த்திருந்தார். ஆதித்தன் ‘நான்கு கால்கள் இருக்கலாம்’ எனக் கவிஞர் எழுதியிருப்பதான ஒரு சாத்தியக்கூறு (possibility) முன்வைப்பு ஏனென்று வினவிட, எழுத்தாளர் ராஜகோபாலன் கவிதை தொடர்பாக முழுக்க விளக்கினார்.

கவிதையின் தலைப்பிலுள்ள நுட்பம் என்ன என்ற கேள்வியோடு ராஜகோபாலன் தொடங்கினார். இட மூளை, வல மூளை போன்ற இருபொருண்மையியலைக் (dualism) குறிப்பதாகக் கவிதையின் தலைப்பு எண்ணையும் (numbers) எழுத்தையும் (language) சுட்டுகிறதென ராஜகோபாலன் கூறினார். எழுத்து என்பது மொழியைப் பிரதிபலிக்கிறது. மொழி கட்டற்றது. கற்பனையினைத் தொடர்பாட மொழி பயன்படுகிறது. அதே சமயம் தர்க்கம் (logic) என்ற துருவமொன்று உள்ளது. உலகளாவிய நிலையில் ஒரு பொருளோ அல்லது செயலோ நிரூபணம் ஆகியிருப்பதே தர்க்கமாகிறது. காட்டாக, ‘பேனா எழுதும்’ என்று கூறிட, வையம் முழுக்க பேனா எழுதும் வினையைப் புரிய வேண்டும். அதை விடுத்து ஒரு நாட்டில் பேனா எழுத மற்றொரு நாட்டில் அது ஒட்டடை அடிக்கப் பயன்படுமெனில் அது தர்க்கம் ஆகாது. ஆக, தர்க்கமானது ஒன்றை மிகக் கறாராக அளந்து சொல்கிறது எனத் துலக்கப்படுத்தினார் ராஜகோபாலன். தர்க்கத்தை அளவையியல் என்றும் குறிப்பிடுவர் என மேலும் கூறினார்.

கம்பராமாயணத்தின் இரணிய வதைப்படலத்தில் நரசிங்கம் தூணைப் பிளந்து வெளித் தோன்றி, பெரு வடிவு கொள்ளும் காட்சியைப் பெரியாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மாணிக்கக் கிண்கிணியெனும் ஆறாந்திருமொழியில் பின்வருமாறு பாடுகிறார்:

அளந்திட்ட தூணை யவன்தட்ட, ஆங்கே

வளர்ந்திட்டு வா ளுகிர்ச் சிங்க வுருவாய்

இதில் வரும் ‘அளந்திட்ட தூணை’ மேற்கோள் காட்டி அளவு செய்த தூண் எனத் தர்க்கத்தினை விரித்துரைக்க முற்பட்டார் ராஜகோபாலன். இப்புராணத்தில் இரணியனுக்கும் பிரகலாதனுக்கும் இடையே நடக்கும் தர்க்க உரையாடலை உடன் மேலோட்டமாகவும் ராஜகோபாலன் குறிப்பிட்டார்.

தர்க்கத்தை எளிமையாகப் புரிந்து கொள்ள பால் குறித்து வாசகர்களிடம் வினவினார். வெண்மை, சுண்ணாம்பு (calcium) தனிமம், இனிப்புச் சுவை, திரவ வடிவு என அதன் பண்புகளை வாசகர்கள் பட்டியலிட்டனர். பொருளிலிருந்து பண்பு வந்ததா அல்லது பண்பிலிருந்து பொருள் வந்ததா என அடுத்த வினாவைத் தொடுத்தார் ராஜகோபாலன். பெரும்பாலோர் பொருளிலிருந்தே பண்பு வந்ததெனப் பதிலளித்திருந்தனர். இப்போது பாலின் பண்புகள் அனைத்தும் அதனிலிருந்து களைந்து விட்டால் பொருள் எவ்வாறு விளங்குமென மேலும் வினவினார். பண்பு இல்லையெனில் பொருளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தெளிவுறச் செய்தார். ஆக, பண்பிலிருந்துதான் பொருள் வருகிறதெனத் தர்க்க சாஸ்திரம் இயங்கும் முறையை விளக்கினார் ராஜகோபாலன். இதற்கு நேர்மாறான கூற்றொன்றையும் முன்வைக்க இயலுமென, ஆன்மா என்பது உடலில் இருப்பது என்றுரைக்க, உடலுக்கு வயதாகும் ஆன்மா வயதாகாதெனவும் உடல் தளர்வடையும் ஆன்மா தளர்வடையாது எனவும் உடல் மரணமடையும் ஆன்மா மரணிக்காது எனவும், ஆகையால், இந்தப் பொருளுக்குரிய பண்பு எதுவும் ஆன்மாவுக்கு இல்லாததால் ஆன்மாவும் உடலும் வேறு வேறு என வாதிடும் சாமர்த்தியத் தனத்தைத் தர்க்க சாஸ்திரம் நிகழ்த்துமெனவும் மேற்படி விளம்பினார்.

இவ்வாறு இயங்கி வரும் தர்க்கத்திற்கு உருவம் கொடுப்பதாக ‘எண்ணும்’ (numbers) என்று சொல்லின் தலைப்பு அமைகிறது. அப்படி எண்களைக் குறிப்பதாகத் தலைப்பை அணுகுகையில், அதன் கறார் தன்மை புலப்படுகிறது. மறுமுனையில் எழுத்து, எண்களுக்கு எதிரான அதன் கட்டற்ற இயல்பினைக் கொண்டமையால் இவை இரண்டும் வெவ்வேறு துருவத்தில் இயங்கக் கூடியதை ராஜகோபாலன் விளக்கினார். கவிதையில் வரும் கவிஞன் கவிதையின் முதல் வரியை எழுதி அடுத்த வரிக்காக நாள் கணக்கில் காத்திருக்கிறான். அப்படிக் காத்திருந்து எழுதி முடித்திருக்க, அதனை வாசிக்கும் வாசகனானவன் இது எப்படி இப்படியிருக்க முடியுமென வினவ, நீங்கள் சொல்வது போலும் இருக்கலாமெனக் கவிஞன் பதிலளிப்பதாகக் கவிதையை ராஜகோபாலன் விளம்பினார். ஆனால், தர்க்கத்தைக் கொண்டு கவிதையை நெருங்கும்போது கவிஞன் காட்சிப்படுத்தும் முயலைத் தர்க்கவியலாளர்கள் ஒரு போதும் பிடிக்க இயலாதென்பதையே மோகனரங்கன் குறிப்பிடுகிறாரெனத் தெளிவுப்படுத்தினார்.

ஒரு கவிஞனின் வாக்குமூலமென, அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என உறுதிபடயிருக்க, அவன் காட்ட முற்படும் முயலை முதலில் தர்க்கவியலாளர்கள் கண்டு கொண்டு அதனைக் கொண்டு வந்தால் பிற்பாடு அதற்கு நான்கு கால்கள் என நானும் சொல்கிறேன் என்று சவால் தொனிக்க எழுதுகிறான் கவிஞன். தன்னகத்தின் அளவில் அவன் உறுதிபட இருந்தாலும் அதனை மறுப்பதற்கான இடத்தையும் கவிஞன் வழங்கவே செய்கிறான். எனினும், தன் நிலைப்பாட்டில் அவன் எந்தச் சமரசமும் செய்து கொள்ளவில்லை. கவிஞனின் அகவுலகத்தில் அவன் எழுதியிருப்பது அவனளவில் உண்மையானதுதான். அதனால்தான், ஒரு படைப்பை வாசிக்கையில் கவிஞனின் அகவுலகத்தினுள் பயணித்தல் அவசியமாகிறது. ஒரு படைப்பில் ஒருவன் ஏன் அப்படிச் செய்தான் என்று சிந்திக்க வேண்டும், ஏன் அப்படிச் செய்யவில்லை என்று யோசித்தல் கூடாது என்பதற்கு ராஜகோபாலன் தமிழ்த்திரைபடங்களை மேற்கோளாக முன்வைத்தார்.

இடர் சூழும் சூழலில் கதாநாயகன் எப்படி உரிய நேரத்தில் வருகிறான் போன்ற கிண்டல் ததும்பும் கேள்விகளுக்குத் திரைப்படத்துறையில் இயங்கும் ராஜகோபாலனின் நண்பர் அவரிடம் பதிலளித்திருந்தார். அந்தத் திரையில் எடுக்க முனைந்தது சரியான நேரத்தில் வரும் கதாநாயகனைப் பற்றியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் ஆபத்திலிருந்தோ சிக்கலிலிருந்தோ குறிப்பிட்டோரைக் காப்பாற்றும் கதாநாயகனைப் பற்றியதுதான் அப்படத்தின் காட்சி என்றிருக்க, ஏன் தாமதமாக வரவில்லை போன்ற கேள்விகள் அவசியமற்றவை என்பதை எடுத்தியம்பினார் ராஜகோபாலன். அந்தத் திரைப்பட வெளியில் அதற்கான சாத்தியங்கள் அவ்வாறுதான் இயங்குகின்றன. ஆக, புறவுலகின் தர்க்கத்தினை அகவுலகின் தர்க்கத்துடன் கலகத்திற்கு அழைப்பது விரையம் நிறைந்தது.

ஆதலால்தான், நம்பிக்கை நிறுத்தம் (suspension of disbelief) என்ற புறக்கணித்தலை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுதல் புனைவுலகத்திற்குப் பிரதானமாகிறது. தீவிரச் சிந்தனைகளையும் உலகப் பொதுவான தர்க்கத்தினையும் கவிதையின் உலகத்துக்குள் செலுத்தும்போது அது அவ்வாறு செய்வோருக்குப் பிடிபடாது போகிறது. கவிதையின் உலகத்துக்குள் நுழைவதற்கு அந்தக் கேடயங்களைக் களைந்து உலாவ முற்பட வேண்டும். ஆகவேதான், நிலையில் நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளைப் புனைவெழுத்தின் தரிசனம் வேண்டி அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். அவ்வாறு நிறுத்தி புனைவினை அணுகினால் அது பெரும் பொருள்படும். இல்லாவிடில், அணுகுவோர்க்கு அது வெறுமையாகவே தோன்றுமென விளக்கி முடித்தார் ராஜகோபாலன்.

நவீன கவிதை 4

நான்காவது கவிதையாக, கவிஞர் அர்ஜுன்ராச்சின் ‘காலத்தின் இலை’ விவாதிக்கப்பட்டது. முதற்பார்வையாக ஆசிரியர் சுப்புலெட்சுமி, மாயைத்தனத்தினையும் மர்மத்தினையும் உள்ளடக்கி கவிதை விளங்குவதாகக் கூறினார். கவிதையில் இலை விழுவதை உதிரும் நிலை, ஒன்றிலிருந்து விடுபடுதல், இழப்பு அல்லது மரணத்தைக் குறிக்கலாம் என்று பொருள் கொண்டிருந்தார். ஒரு பக்கம் அழகான காட்சியாகவும் மறுபுறம் சோகமயமானதாகவும் அவ்விழுதலைக் காண்கிறார் சுப்புலெட்சுமி. பழுத்த இலையும் பச்சை இலையும் கணக்கேதுமின்றி விழுவது ஒரு புரிந்து கொள்ள முடியாத தன்மையினை வழங்குவதாக விளம்பிய அவர், விழும் இலைகள் எங்கிருந்து வந்தவை, எங்குப் போய் சேர்பவையெனக் கேள்விகளும் அவருள் எழுந்ததாக நுவல்ந்தார். கவிதை தரும் காட்சி ஒரு இறுகிய பாறை போன்று இருக்கிறது. ஏதோ ஒன்று தொடர்ந்து நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், நாம் அதனை உணர்வதில்லை. ஆனாலும், அது சர்வநிச்சயமாக எதையோ ஒன்றை நிகழ்த்தும் என்பதற்கான நினைவுறுத்தலாக இக்கவிதையை வாசித்திருந்தார். துளிர்த்த இலை விழுவதைகூட மரணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார் சுப்புலெட்சுமி. மரணம் நம்மை அவதானித்துக் கொண்டே இருக்கிறதா என்ற கேள்வியெழ, மரணம் உறுதியாக வருமெனினும் அது எப்போது வருமெனத் தெரியாததால் அதனை மனிதர்கள் அச்சத்தோடு பார்க்கிறார்களா என்ற தொடர் கேள்விகளால் சுப்புலெட்சுமி தன் பகிர்வை முடித்தார்.

கவிஞர் தேவதச்சனின் கவிதையைக் எழுத்தாளர் கணேஷ் மேற்கோள் காட்டினார்.

காற்றில் வாழ்வைப் போல்

வினோத நடனங்கள் புரியும்

இலைகளைப் பார்த்திருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்

இலையைப் பிடிக்கும்போது

நடனம் மட்டும் எங்கோ

ஒளிந்து கொள்கிறது.

இதில் நடனமெனத் தேவதச்சன் எதைக் குறிக்கிறாரோ அதுவே தான் இங்கு இலை விழுவதாக உள்ளதென இரு கவிதைகளையும் தொடர்புப்படுத்தினார். காலத்தின் இலை எனும்போது அது காலத்தைக் குறித்து, காலம் சொட்டிக் கொண்டே இருப்பதைக் குறித்துப் பேசுகிறது என்றும் நவில்ந்தார். சுப்புலெட்சுமி மொழிந்ததைப் போல மரணத்துடன் இதனைத் தொடர்புப்படுத்துவதைவிட, ஒரு சுழற்சி(cycle) எனத் தொடர்ந்து வருவதான காட்சியை உருவப்படுத்துதல் பொருத்தமாகயிருக்கும் எனக் கருதினார் கணேஷ்.

ஒரு மனிதன் இறப்பதைப் பார்த்து மற்றொரு மனிதனின் சிந்தையில் தானும் ஒரு நாள் இறக்கக்கூடும் என்ற சிந்தனையைக் கவிதை வழங்குவதாக எழுத்தாளர் பாரதி கூறினார். ஆன்மாவைக் குறிக்கின்ற கவிதையாகத் தினேஷ்வரி அவரது பார்வையை வெளிப்படுத்தினார். உடல்தான் மரணத்தைத் தழுவுகிறது; ஆன்மா பிரிந்து எங்குச் செல்கிறதென்பது புதிரெனினும் அது மீண்டும் பிறப்புடன் இணைகிறது என மேலும் கூறினார் தினேஷ்வரி.

உலகம் முழுவதும் ‘இலை’ என்பது நவீன கவிஞனுக்கு மிகப் பெரிய அகத்தூண்டலாக விளங்குகின்றது. ஆங்கில, ஐரீஷ், சீனக் கவிதைகளில் உதிர்ந்த இலைகளானவை மிகப் பெரிய குறியீடுகளென ராஜகோபாலன் தன் விளக்கத்தைத் துவக்கினார். தலைப்பே கவிதையைக் குறித்து (காலம்) சொல்லிவிடுகிறதாய் கூறிய அவர், இந்திய மரபிலே ஆகச் சிறப்பாகச் சொல்லப்பட்ட படிமம் ஒன்று உள்ளதெனப் புதிர் போட்டார். இந்திய மரபிலுள்ள மெய்யியலெனும் தத்துவத்தை அதனிலிருந்தே கடைந்தெடுக்க, இந்தியத் தத்துவத்திற்கான மொத்த படிமமொன்றை வைக்க இயலுமெனில், அப்படியொரு படிமத்தை இந்திய மரபு கொண்டுள்ளது என ராஜகோபாலன் திடமாகச் சொன்னார்.

அத்தத்துவப் படிமம் நிலையிலுள்ள இந்திய தத்துவங்களிலிருந்து வராது, மகாபாரதக் காவியத்திலிருந்தே வருகிறதென விளம்பிய அவர், மகாபாரதத்தின் இறுதிப் போர் தருணத்தில் அர்ஜுனன் முன் கண்ணன் அருளும் விஸ்வரூபம்தான் அப்படிமம் எனப் புதிர் நீக்கினார். அந்த விஸ்வரூபத்தைப் பார்த்த கணம் அர்ஜுனன் தளர்ந்து கீழே விழுகிறான். அவனால் அந்தப் பிரம்மாண்டத்தைத் தாங்கிட முடியவில்லை. ஒரு வாயில் சகல உலகமும் அதனுளிருக்கும் உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாட்டிற்கப்பாற்பட்டு அத்தனையும் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்க, மற்றொரு வாயிலிருந்து புது உலகமும் திணைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவை வெறும் இரு வாய்கள் நிகழ்த்திக் காட்டக் கூடியதாக இருக்க, விஸ்வரூபத்தில் மொத்தம் பத்து தலைகளை உடைய கிருஷ்ணரை, அந்தப் பிரம்மாண்டத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது அர்ஜுனன் அவரைப் பழைய உருவிற்குத் திரும்பும்படி மன்றாடுகின்றான்.

இதுதான் காலத்தின் பிரம்மாண்டம் என விளக்கிய ராஜகோபாலன், காலத்தால் மிகச் சிறிய இடங்கொடுக்கப்பட்ட மானுடர்களால் காலத்தின் பிரம்மாண்டத்தைத் தாங்கிடவே இயலாது என்பதையும் கூறினார். மாங்குடி மருதனார் பாண்டிய மன்னனின் பெருமையைச் சங்கப் பாடலில் நிறைய பாடியுள்ளார். பாண்டியன் எவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகு, எத்தனை திட்டங்களிட்டப் பிறகு, எத்தனை பேரைக் களப்பலி கொடுத்த பிறகு அவ்வாகையைச் சூடியிருப்பான் என எண்ணுவது ஒரு புறமிருக்க, அப்போது காலம் அவனைப் பார்த்துச் சொல்வதென்ன என்று வினவினார் ராஜகோபாலன். “உன்னைப் போன்று எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன்” என்ற செருக்குடனான தொனியில் அதனுடைய அசரீரி ஒலிக்க, அதில் காணப் பெறும் இரக்கமின்மை மையப்படுத்தப்பட வேண்டியது. அதனை அனுபவிக்கும்போது நாம் தளர்வுறுகிறோம். காலத்தின் முன் நாம் வெறும் சிறு துகளே. ஆகையால்தான், அர்ஜுனன் அப்பிரம்மாண்டம் நோக்கி கதறுகிறான் என விளக்கினார் ராஜகோபாலன்.

அர்ஜுனன் கவிஞன் இல்லாததால் அவனால் அந்தப் பிரம்மாண்டத்தைச் செரித்திட முடியவில்லை. ஆனால், அதனை நம் கண்களுக்கு உட்பட்ட ஒன்றாக வடித்துக் கொண்டு வருதல் ஒரு கவிஞனால் நிகழ்த்த முடிகிறது. இவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தை ஒரு கவிஞன் சொற்களுக்குள் அடக்கி விடுகிறானென ராஜகோபாலன் கூறினார். மீண்டும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மேற்கோள் காட்டிய அவர், பெரிய திருமொழியிலிருந்து ஒரு வரியினைக் கோடிட்டார்: ‘இவ் வேழுலகமுண்டும் இடமுத்தால்சாழலே’. இறைவன் என்ன செய்கிறார்? உலகத்தைப் படைத்தும் காத்தும் அழித்தும் ஒரு விளையாட்டினை நடத்துகிறார். அதனையே ‘லீலாவிபூதி’ என்கிறோம். அதுதான் காலம். காலத்தின் இப்பெரும் ஆட்டத்தைக் கவிஞன் ஒரு மரத்தில் பொருத்தி, அதில் உதிரக் கூடிய இலைகள் வழியாக அதே பிரம்மாண்டத்தை நமக்குச் சொல்லக் கூடிய இடம் கவனிக்கத்தக்கதென மொழிந்தார் ராஜகோபாலன்.

நுண்ணோக்கி (microscope) வழியாக நுண்ணுயிரியினை விரிவாகக் கண்ணுற, அதன் விரிவான உலகம் இயங்கிக் கொண்டிருப்பது வெற்றுக் கண்களுக்குப் புலப்படத் தொடங்குகிறது. அவ்வுலகினுள் போட்டி, பொறாமை, உணவுண்ணுதல், ஒன்றிப் பெருகுதல், பலநூறு ஆகுதல், மரணித்தல் போன்ற அனைத்தும் நிகழ்ந்தேறுகின்றன. இன்னொரு விதத்தில் அதைச் சொல்ல முனைந்த ராஜகோபாலன், துளிப்பிரபஞ்சம் என்ற பதத்தை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு துளிக்குள்ளும் ஒரு பிரபஞ்சம் இயங்குகிறதென விளக்கிட்டார். இந்தப் படிமத்தை ஒரு மரத்துடன் பொருத்திப் பார்க்க, அந்த மரத்தில் உள்ள இலைகள் மனிதர்கள் அல்லது படைப்பினங்களாக நாம் அடையாளங் காணலாம் என்றார். ஒரு பொருள் மரணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்தபடியே உள்ளோம். உயிரினம் என்றில்லாது உயிரற்றவைகளும் மரணித்து மீண்டும் புதியவையாகப் பிறந்தபடியே உள்ளன. ஏகத்துவம் (The Oneness) என்பது ஒன்றை காண காண எல்லாம் ஒன்று போல தோற்றம் தருவதாகும். இவற்றைக் கவிதையோடு பொருத்துகிறார் ராஜகோபாலன். ‘எப்போதும் முப்போதும் விழாத இலை…’ என்ற கவிதையின் வரிகள் மானுடர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்பதைக் குறிப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து, ஒரு வெளியில் இலைகள் உதிர, மறுவெளியில் அது முளைத்தவாறே இருப்பதானது மனிதர்கள் மரணித்தும் பிறந்தும் நிகழும் மரண-ஜனனக் கருத்தியலைப் பேசுவதாக விளக்கினார். பழுத்த இலை ஒன்று விழும்போது, ஒரு புதிய இலை தளிர்விடுகிறது என்ற சீனப் பழமொழியைக் கூடுதலாக மேற்கோள் காட்டினார் ராஜகோபாலன்.

‘ஒரு தொடக்கமும் இல்லை…என்பதான ஒரு விளையாட்டை’ என்ற வரிகள் மேற்கூறிய லீலையைக் குறிக்கின்றது. இந்த லீலை எங்கு நிகழ்கிறது? காலத்தில். காலம் எங்கு இருக்கிறது? அது சொல்ல முடியாதது. அதனால்தான் கவிஞன் ‘அந்தரத்திலேயே நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கிறது’ என உபயோகித்திருக்கிறாரென ராஜகோபாலன் சொன்னார். அந்தரம் என்பது எங்கும் எதிலும் சிக்கிடாத ஒன்று. கையில் சிக்காது எது நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கிறது? ‘அது!’ அது என்பது என்ன? அதற்கு எந்தப் பெயரும் இல்லை. அப்படிப் பெயர் வேண்டுமெனில் கவிதையின் தலைப்பான ‘காலத்தின் இலை’ என்பதை வைத்துக் கொள்ளலாம் என நுவல்ந்தார் ராஜகோபாலன். இக்கவிதையினை இந்திய மரபில் இருக்கக் கூடிய ஒரு முக்கியத்துவம் பெற்ற படிமத்திற்கான நவீன கவிதையாகப் பொருள் கொள்ளலாம் எனவும் கூறினார். எங்கேயோ உள்ள தத்துவத்தை, கண் அறியும் மரத்தின் வாயிலாக நிகழ்த்திக் காட்ட முடியுமென்பதை நவீன கவிஞன் நிரூபிக்கிறான்.

மேலதிகமாகக் கருத்துரைத்த எழுத்தாளர் கணேஷ், ‘எல்லாம் ஓர் இறை’, ‘கடலலையானவை நீர் மட்டுமே. கடலும்கூட’ (Waves are nothing but water. So is the sea) எனச் சில வரிகளைக் குறிப்பிட்டு கவிதையுடன் தொடர்புபடுத்தினார். அதனைத் தொடர்ந்து, இந்தக் கவிதையினைப் புரிந்து கொள்ள ஓர் இந்திய மனம் தேவையாகிறது என ராஜகோபாலன் விளக்க, ஆதித்தன் திருக்குறளிலிருந்து ஒரு குறளைக் கவிதையுடன் தொடர்புப்படுத்தினார். மீண்டும் ராஜகோபாலன் ஒரு திவ்ய பிரபந்த மேற்கோளை மொழிந்தார்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குகளின் மாய்ந்து மாய்ந்து

ஆந்தார் என்றல்லால் அன்றுமுதல் இன்று அறுதியா

வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை நிற்குறில்

ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ

நம்மாழ்வார் அருளச் செய்த திருவாய்மொழியிலிருந்து மொக்குகள் என்ற பதத்தை மையப்படுத்தி, மழை மொக்கு என்பது நிலையிலிருக்கும் நீர்ப்பரப்பின் மீது மழைத்துளி விழ உருவாகும் குமிழியைக் குறிப்பதாக விளக்கினார். அம்மொக்கு உருவாகிய அடுத்த நொடியினில் மறு துளி விழ அது உடைந்து போகிறது. அப்படித்தான் மனிதர்கள் பிறந்தும் இறந்தும் போகின்றனர் எனத் தத்துவார்த்த விளக்கத்தை அளித்தார் ராஜகோபாலன்.

மீண்டும் கணேஷ், கம்பராமாயண மேற்கோளான ‘நீர்க்கோல வாழ்வை நச்சி’ என்ற கும்பகர்ணனின் கூற்றைக் கூறி அதனையும் கவிதையுடன் தொடர்புபடுத்த, ராஜகோபாலன் நாலடியார் நூலிலிருந்து இதையேதான் ‘யாக்கை நிலையாமை’ என்கிறோம் என்றுரைத்தார். கூடுதலாக, எழுத்தாளர் பாண்டியன் முதல் வரியில் ‘ஒரு இலை’ என்று எழுதியிருக்கும் கவிஞன், ஐந்தாவது வரியில் ‘ஓர் இலை’ என்று குறிப்பிட்டிருப்பதன் காரணத்தை வினவினார். ஒரு இலை எனும் போது பல இலைகளில் ஒரு இலையைக் (one of the many leaves) குறிப்பதாகவும் ஓர் இலை எனும்போது தனித்துவம் பெற்ற இலையினைக் (the one and only) குறிப்பதாகவும் ராஜகோபாலன் விளம்பி முடிக்க அமர்வு இறுதி கவிதையைப் பேச விழைந்தது.

நவீன கவிதை 5

இறுதி கவிதையாக, ‘மெய்மையின் சுவை’ எனும் கவிஞர் கார்த்திக் நேத்தாவின் கவிதை கருத்தாடப்பட்டது. எழுத்தாளர் தயாஜி இதனுள் ஆழ்ந்து, கவிதை எழுதிய கவிஞருக்குப் பதிலாக முதலில் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் நினைவெழுந்ததாகக் கூறினார். அத்துடன் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். பாரதியின் குடும்பம் வறுமையின் பிடியிலிருக்க, சமையலுக்குச் செல்லம்மாள் வைத்திருந்த அரிசியை முற்றத்தில் சிட்டுக்குருவிகளுக்குத் தூவியபடி இருந்திருக்கிறார். செல்லம்மா கோவம் கொள்கிறார். பாரதி “செல்லம்மா.. நாம் கோவப்பட்டு கொள்கிறோம். முகத்தை திருப்பிக் கொள்கிறோம். ஆனால் இந்தச் சிட்டுக்குருவிகளைப் பார். எவ்வளவு இணக்கமாக இருக்கின்றன. அன்பாக இருக்கின்றன. கண்கள் திறந்திருந்தும் நாம் இந்தச் சிட்டுக்குருவிகளை இரசிக்கவில்லை என்றால் நாம்தான் மூடர்கள். இந்தப் பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

அந்தத் தருணத்தில் அது மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் என்று எடுத்துரைத்த தயாஜி, அதுவே உன்மத்தம் என்றார். இந்தக் காட்சியைக் கவிதையுடன் பொருத்திப் பார்க்கிறார். மெய்மையின் சுவையெனும் தலைப்பு தயாஜியை யோசிக்க வைத்திருக்கிறது. மெய்மையினை உணர்ந்த பிறகு சுவையினை அறிவதன் அவசியம் இருப்பதில்லை. அது ஒரு முடிவு. அந்த மெய்மைக்கும் ஒரு சுவையுண்டென்றும் அது சுவையாக இருக்கிறதென்றும் நோக்குகிற கவிஞரின் பார்வை அவரின் எல்லையற்ற தேடுதலைக் குறிப்பதாக விளக்கினார் தயாஜி. இக்கவிதையில் ‘உன்மத்தம்’ என்ற சொல்லே கவிதையைப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டி என்று மேலும் கூறினார். ஒரு படைப்பாளனுக்கு வெளிச்சத்தை விட இருளின் மேல் ஏன் ஆர்வம் குவிகிறது? சிரிப்பை விட அழுகையிலும் அழகை விட அழகின்மையிலும் பற்று கொள்வதானது அவன் அடையும் வரமென உரைத்த தயாஜி, கவிஞர்கள் அடையும் இவ்வுன்மத்தத்தை ஆவேசங்கொண்டு சாமியாடுபவர்களுக்கு ஒத்ததாகப் பார்ப்பதாகவும் கூறினார்.  அந்த அருள் அவர்களை ஒரு மாற்றுப் பார்வை நோக்கி திருப்புகிறது. சிவபெருமான் ஆடும் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றான உன்மத்த நடனத்தை ஒத்தே கவிஞர்களின் மனமிருப்பதாகவும் கருத்துரைத்தார்.

உன்மத்தம் கவிஞர்களுள் என்னவாக இருக்கிறது? என்னவாக வெளிக் கொள்கிறது? என்ற கேள்விகள் அவருள் எழுகின்றன. இயல்பாகக் கவிஞர்களை மூளை திறம்பியவர்களாகக் கருதுகிறோம். பற்றி எரியும் தன் வீட்டைக் கவனிக்காது குருவிகளுக்கு அவர்களால் தீனி போட முடிகிறது. வீடு எரிந்து முடிந்த போதும், அவர்கள் பிரதானப்படுத்தும் சிட்டுக்குருவிகளுள் காலங்கடந்து வீற்றிருக்கிறார்கள். நாமும் அதனை மீள மீள மேற்கோளாக உபயோகப்படுத்தி புளகாங்கிதமடைகிறோம். இதையேதான் தயாஜி உன்மத்தமாகப் பார்ப்பதாகக் கூறினார். கவிதையை எழுதும்போதும் வாசிக்கும்போதும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற வாஞ்சையாகத்தான் இக்கவிதையைப் புரிந்து கொள்வதாகப் பகிர்வை முடித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் அரவின் குமார், ‘வெறும் இருளுக்கும் சுடர் இருந்த இருளுக்கும் வேறு வேறு சுவை’ என்ற இறுதி மூன்று வரிகளைக் குவியப்படுத்தி அதுவே கவிதையின் முகமனெனக் கூறினார். இருள் நோக்கிச் சென்றும் கூட மெய்மையையின் சுவையானது ஒளிமிக்க ஒன்றுதான் என்று அரவின் விளம்பினார். கூடுதலாக, எழுத்தாளர் தினேஷ்வரி கவிதை முரணோடு இயங்குவதாக விளக்கினார். இருள் என்பதுதான் மெய் என்றும் ஒளி என்பது பொய்யென்றும் கருதுகிறார் அவர். அதனால் கவிஞர் விளக்குகளை அணைத்தபடியே செல்கிறார். அதன் விளைவாக உண்மை (கடைசி விளக்கின் முன் அமர்ந்து சூழப் பந்தலிட்ட இருளைக் கண்ணுற்றேன்) கவிஞருக்கு விளக்கமாகிறது. சுருங்க, ‘கண்டடைதல்’ என்ற பொருளில் கவிதையை அணுகுகிறார் தினேஷ்வரி. உண்மையாகவே இருப்பது இருள்தான். ஆனால், நாம் வெளிச்சத்தை உண்மையென்று நம்புகிறோமென விளக்கி முடித்தார்.

அனைவரும் கவிதையின் அடிப்படை வெளியைத் தொட்டு விட்டதாகப் பாராட்டிய எழுத்தாளர் ராஜகோபாலன், தமிழ் மரபில் ‘மெய்’ என்பது என்னவென்ற கேள்வியோடு பகிர்தலைத் தொடங்கினார். பௌத்த மரபில் மெய் என்பது இருளாகத்தான் பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், அதனைச் ‘சூன்யம்’ என்பதகாவும் அதன் இணைச்சொல்லை விளக்கினார். சூன்யம் என்பது இருள் நிறைந்த இடம். இந்த இருள் பேரிருள் என்று சொல்லப்படுகிறது. வழக்கத்தில் சொல்லக்கூடிய இருள் (dark) என்று பொருள்படாது, ஏதுமற்ற அல்லது ஒளியற்ற உலகைக் குறிப்பதாகக் கூறினார். உலகத்தின் ஆக்கம் (genesis) தொடர்பாக உலக மதங்களை அவதானிக்கையில், இறைவன் உலகைப் படைப்பது தொடர்பான அத்தியாயத்தைக் குவிமையப்படுத்திட, முதலில் அவர் ஒளியைப் படைப்பதாகத்தான் (Let there be light.) பதிவு செய்யப்பட்டுள்ளது என முன்னிலைப்படுத்தினார். ஆக, படைப்பிற்கு முன்னாளிருந்து இருப்பது இருளே! பேரிருள்! படைப்புகள் அனைத்தும் இருளுக்குப் பிற்பாடே தோற்றம் கொள்கின்றன. இறைவன் ஒளியைப் படைத்து பின்னர் மனிதர்களைப் படைக்கின்றான். அப்படி நாம் காலவரிசையில் பின்னோக்கிப் பயணித்து ஆதி வெளியைத் தொடும்போது இருளையே சென்றடைகிறோம். அதுதான் மெய்மையின் சுவை எனப்படுகிற பேரிருள் என விளம்பினார் ராஜகோபாலன்.

பித்தனுக்கும் சித்தனுக்கும் ஒரே புத்தி என்ற தமிழ் பழமொழியை மேற்கோள் காட்டிய ராஜகோபாலன், இருவரும் ஒரே மாதிரியே இருப்பார்களெனினும் அவர்களுள் வேறுபாடுள்ளதென பழமொழியின் உள்ளீடு தொடர்பாகக் கலந்துரையாடினார். தத்துவ வரலாற்றில் அதிகம் விவாதிக்கப்பட்ட டயோஜெனெசு (Diogenes) மற்றும் மகா அலெக்சாந்தர் ஆகிய இருவரைப் பற்றியதான கதையினை மேற்கோள் காட்டினார் ராஜகோபாலன். வெயிற்குளித்துக் (sun bathing) கொண்டிருந்த டயோஜெனுசுவிடம் உலகையே வென்றிருந்த அலெக்சாந்தர் அவருக்கு ஏதாகிலும் வேண்டுமா என்று வினவுகிறார். டயோஜெனுசுவோ வெயிற்குளிப்பதைக் கெடுக்காதிருந்தாலேபோதுமெனத் தள்ளி நிற்கச் சொல்லி பதிலுரைக்கிறார். அந்தப் பதிலில் உறைந்து போகிறார் அலெக்சாந்தர்.

டயோஜெனுசுவின் குரல் காலத்தின் குரலாக அங்கு ஒலிக்கிறது. நாம் அந்த மெய்யியலாளரை என்னவென்று இயல்பாகக் கருதுகிறோம்? சக்கரவர்த்தி வந்து வரத்தையொத்த வாய்ப்பைக் கொடுக்க, ‘அதனால் என்ன?’ என்ற அவரின் மனநிலை பைத்தியக்காரத்தனமென்று சொல்லவே தலைப்படுகிறோம். ஆனால், சொல்லும் குரல் காலத்தின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மனம் பிறழ்ந்தவனின் பிறழ்ச்சிக்கும் ஞானியின் திறம்பலுக்கும் என்ன வேறுபாடென உசாவினார் ராஜகோபாலன். ஞானியின் திறம்பல் உணர்திறத்துடனே அவரிடமிருந்து உதிர்ந்து விடுபடுகிறது. அது எவ்வளவு மேற்பூச்சோடு வழங்கப்பட்டாலும் அதனை அவர் பொருட்படுத்துவதில்லை. ‘வெறும் இருளுக்கும் சுடர் இருந்த இருளுக்கும் வேறு வேறு சுவை’ என்ற வரியைக் கோடிட்டுக் காட்டி இருதரப்பினரும் வெற்றுக்கையுடனே இருக்கின்றனர் என விளம்பினார். ஆயினும், பித்தனது வெற்றுக்கை பற்றாக்குறையினால், வெறுமையினால் மட்டுமே நிறைந்துள்ளதாக விளக்கினார். அதில் எதையாவது நிரப்பிட பித்தன் காத்திருக்கிறான். ஞானிக்கு அந்த அவசியம் இல்லை.

கவிதையில் ‘வெளிச்சம்’ என்ற சொல் உலகம் சார்ந்த விவரங்களைக் குறிக்கிறது. அதனை ஒவ்வொன்றாகக் களைந்து வருவதையே ‘அணைத்தல்’ என்ற சொல் பொருள்படுத்துகிறது.

யாதனின் யாதனின் நீங்கினான் நோதல்

அதனின் அதனி இலன் (குறள் 341)

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய ராஜகோபாலன், ஒவ்வொன்றாக ஒருவன் சகலத்தையும் துறந்து, இறுதியில் ‘நான்’ என்ற தன்னைதானே துறப்பதே அது என மேலும் கூறினார். அர்ஜுன்ராச், கார்த்திக் நேத்தா ஆகியோர் தத்துவம் படித்தவர்கள் கிடையாது. இருந்தெனினும், ஒரு தத்துவத்தின், மெய்யியலின் குறியீட்டையும் படிமத்தையும் கச்சிதமாகக் கவிதையுள் பொருத்த முடிகிறது. தத்துவம் பயின்ற பலராலும் அதனைச் சாத்தியப்படுத்த சிரமம் கொள்வர். கவிஞர்கள் மட்டும் எப்படிக் கைவரப் பெறுகின்றனர் என்று வினவிட, அதுதான் ‘உன்மத்தம்’ எனக் குறிப்பிட்டார் அவர். அது சுயமாகவே அவர்களை மீறி அவர்களுள் அமர்ந்து கொள்கிறது. மெய்யியல், பண்பாடு போன்ற துணை வாசிப்பு இது போன்ற கவிதைகளைப் புரிந்து கொள்ள வாசகர்களுக்கு உதவி செய்கிறது.

மேலே கருத்தாடப்பட்ட ஐந்து கவிதைகளும் நவீன கவிதைக்கு எடுத்துக் கொண்ட அறிமுகம் மட்டுமே என்றார் ராஜகோபாலன். மனிதனின் கீழ்மையையே அதிகம் நவீன கவிதைகள் திரைப்படுத்துகிறது. நவீன கவிதை குறித்த அறிமுகத்தில் அப்புள்ளியைத் தொட வேண்டாமென எண்ணம் கொண்டிருந்ததாகப் பகிர்ந்தார். ஆனாலும், இவை மானுட இயல்புகளைத் தொடக் கூடிய கவிதைகளே எனவும் நுவல்ந்தார். நவீன கவிதைக்கும் மரபுக் கவிதைக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாட்டில் நவீன கவிதை என்றும் தன்னைத்தானே குற்றவாளி கூண்டில் ஏற்றிக் கொள்ளும் தன்மையுடையதாக இருக்கிறது. தனது தவறுகளை முன்வைத்து அதன் வழியாக உலகை நோக்குகிறது. அதனுடைய எந்தத் தவறுக்கும் எவ்விதமான நியாயப்படுத்துதலையும் அது நிகழ்த்துவதில்லை. ‘ஆம் தனது சுயம் கொஞ்சம் கேவலம் மிகுந்ததுதான்’ என்று ஒப்புதல் கொள்ளும். அதில் எந்தத் தயக்கமும் இருப்பதில்லை.

அதே வேளையில், அது முழுக்க பேரிருளுள் புகுந்திடவும் முடிவதில்லை. கவிஞர்கள் சென்றடைய கூடிய இருளானது கார்த்திக் நேத்தா கூறும் ‘மெய்மையின் சுவையாகத்தான்’ இருக்க முடியும் என விளம்பிட்டார் ராஜகோபாலன். தொடர்ந்து நவீன கவிதைகளை வாசிக்கப் பரிந்துரைத்தார். மரபுக் கவிதைகளை வாய்விட்டு வாசிப்பதையொத்து, நவீன கவிதைகளைக் கண்களாலே வாசிக்கவும் ஊக்கப்படுத்தினார். அதனைப் பார்க்கப் பார்க்க ஒரு கட்டத்தில் தொடர்புகொள்ளுமென நம்பிக்கையூட்டினார். கவிதையை மீள்வாசித்தலென்பது நம்முள் சிதறடிக்கப்பட்டிருக்கும் சிந்தனைகளை நுண்ணொடியில் ஒருமுகப்படுத்திவிடும் வித்தை எனக் கூறி அமர்வை முற்றுக்குக் கொண்டு வந்தார் ராஜகோபாலன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...