‘மண்ணும் மனிதரும்’ நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழ்விக்கி தளத்துக்குச் சென்று எழுத்தாளர் சிவராம் காரந்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவை வாசித்தேன். கலைக்களஞ்சியத் தொகுப்புகள், சூழியல் செயற்பாடுகள், யக்ஷ கான கலை மீட்டுருவாக்கம் எனப் பிரமிக்கத்தக்க அறிவு பங்களிப்பைக் கன்னட அறிவுலகத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார். கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருந்த சுட்டியைச் சொடுக்கி காரந்த் யக்ஷ கானக் கூத்தைக் கற்றுத் தரும் காணொளியைப் பார்த்தேன். அந்தக் காணொளி எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் சிவராம காரந்துக்குக் குறைந்தது 80 வயதாவது ஆகியிருக்க வேண்டும். கூத்தின் அறிமுகக் காட்சியாக இருக்கக் கூடிய அந்தக் காட்சியில் தான் எதிர்பார்க்கும் மெய்ப்பாடும் அசைவும் நடிகரிடம் வருவதற்காகக் கைகளை ஓங்கி சந்நதமெழுந்தவரைப் போல ஆவேசத்துடன் கற்றுத் தருகிறார். காணொளியின் இறுதியில் அந்தச் சூழலை அவரே தேர்ந்த மெய்ப்பாடும் அசைவுகளுடன் பாடியும் ஆடியும் காட்டுகிறார். வயதுக்கு மீறிய ஆற்றலும் கலையின் வெளிப்பாடு குறித்த ஆழ்ந்த பிரக்ஞையுணர்வும் கொண்ட ஆசிரியராக அவரைக் காணும்போது பரவசமாக இருந்தது. ‘மண்ணும் மனிதரும்’ நாவலும் கூட மூன்று தலைமுறை நீளும் வாழ்வின் துயர்கள், வீழ்ச்சிகள், மரணங்கள் ஆகியவற்றின் முன்னால் தொடரும் வாழ்வை அளாவிப் பார்க்கும் நிதானமான தேர்ந்த வெளிப்பாட்டு வடிவத்தைக் கொண்டது.
1941இல் எழுதப்பட்ட ‘மண்ணும் மனிதரும்’ (மரளி மண்ணிகெ) நாவலைத் தமிழில் டாக்டர் சித்தலிங்கையா 1967இல் மொழிபெயர்த்திருக்கிறார். தென் கர்நாடகத்தின் கோடிக்கடற்கரை பகுதியை ஒட்டிய நிலத்தில் மண்ணுக்கும் மனிதருக்கும் நீளும் மூன்று தலைமுறை உறவையே ‘மண்ணும் மனிதரும்’ நாவல் பேசுகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலான நூற்றாண்டு காலச் சமூக, பண்பாட்டு மாற்றங்களை ராம ஐதாளர் எனும் வேளாளப் பார்ப்பனரின் கொடி வழியினரின் வாயிலாகக் காட்டுகிறது நாவல்.
நாவலின் தொடக்கத்தில் ராம ஐதாளரின் மனைவி பார்வதி தன் திருமணத்தை நினைவு கூர்கிறாள். செலவைக் குறைக்க பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் மழை காலத்தில் நடத்தப்பட்ட அவளது திருமணம் கற்பனையில அவலக் கனவைப் போல வந்து போகிறது. கோடி பகுதியில் புரோகிதம் செய்து செல்வாக்குடனும் நிலத்துடனும் வாழும் கணவரின் சொல்லுக்கு அடிபணிந்தவளாகவே பார்வதி இருக்கிறாள். அவர்களுடனே இருக்கும் ஐதாளரின் விதவை தங்கையான சரஸ்வதி மட்டுமே விவேகத்துடன் அண்ணனை எதிர்த்துக் கேள்விகள் எழுப்புகிறாள். அவர்களின் அன்றாடத்தின் பெரும் பகுதி விவசாயம், எதிர்கால உணவு தேவைக்கான சேமிப்பு எனக் கடும் உடலுழைப்பால் கழிகிறது. ஆற்றுக் கழிமுகப் பகுதியில் மிதந்து வரும் மரக்கட்டைகளை மூச்சடக்கி நீந்தி கரையேற்றி விறகுக்காக பிளந்து மழை காலத்துக்காகச் சேமித்து வைக்க வேண்டும். மழை காலத்து உணவுகளான வடாம், அப்பளமிடுவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும். வீட்டைச் சுற்றிய நிலத்தில் வெள்ளரி, நெல் ஆகியவற்றை நட்டு பாதுகாக்க வேண்டும். இதற்கிடையில் பிராமணச் சமூக ஆசாரங்களையும் பின்பற்ற வேண்டும். பிள்ளை பேறில்லாததால், இறுதிக் கிரியை செய்து விண்ணுலகம் சேர்க்க பிள்ளையைத் தத்தெடுக்கும் யோசனையைச் சரஸ்வதி பார்வதிக்குத் தருகிறாள். அதனை அண்ணனிடமும் சரஸ்வதி சொல்கிறாள். அவர்களின் யோசனையை அலட்சியம் செய்கின்ற ஐதாளர் வீட்டில் பந்தல், வாசல் மெழுகுதல் என விசேஷத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய சொல்லி அக்கரைக்கு நீந்திச் சென்றுவிடுகிறார். விடியலில் பக்கத்து வீட்டு சீனமய்யரும் ஐதாளரும் திருமண ஏற்பாடுகளைப் பேசி வருவதைக் கேட்டே இரண்டாவது திருமண ஏற்பாட்டை இருவரும் அறிந்து கொள்கின்றனர்.
சிவள்ளி எனும் வேற்று பிராமணப் பிரிவைச் சேர்ந்த சத்தியபாமையை ஐதாளர் இரண்டாவதாக மணக்கிறார். ஐதாளருக்கு சத்தியபாமையின் மூலமாக லட்சன் என்னும் லட்சுமி நாராயணன் பிறக்கிறான். பெரியம்மாவான பார்வதியின் பின்னாலே லட்சன் ஓடித் திரிந்து வளர்வதைக் கண்டு உள்ளூர சத்தியபாமைக்கு எரிச்சலாக இருக்கிறது. இரண்டாவதாக சுப்பி பிறக்கிறாள். மகன் ஆங்கில வழிக் கல்வி பெற வேண்டுமென எண்ணுகிற ஐதாளர் அவனைப் பாட்டனார் வீடிருக்கும் படுமுன்னூருக்கு அனுப்பி வைக்கிறார். குடும்பத்திலிருந்து விலகி வாழ்கின்ற லச்சன் கொஞ்சம் கொஞ்சமாய் சூது, காமம் எனப் போகங்களில் திளைக்கத் தொடங்குகிறான். அதற்காகப் பொய்கள், திருடு என லட்சனின் வாழ்வு பாழ்படத் தொடங்குகிறது. அவனுக்குக் குந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணய்யர் எனும் வழக்கறிஞரின் மகள் நாகவேணியை மணம் செய்து வைக்கின்றனர்.
தன்னுடைய பிறழ் பாலியல் உறவுகளால் பெற்ற நோயை நாகவேணிக்கும் பரவச் செய்வதால் நாகவேணியும் அவளது தந்தையும் மனம் உடைகின்றனர். அவர்களை விட்டுப் பிரிந்து கேரளத்தில் கிராம அதிகாரியாகப் பணியாற்ற லட்சன் சென்றுவிடுகிறான். இதற்கிடையில், கோடியில் சீனமய்யருக்கும் ஐதாளருக்கும் சொத்து சேர்ப்பதில் போட்டி தொடங்குகிறது. சீனமய்யரின் மகன்கள் ஒவ்வொருவராக பெங்களூருக்கு ஓட்டல் வேலைக்குச் சென்று ஒட்டல் உரிமையாளர்களாக மாறி ஊருக்கு அனுப்பும் பணத்தில் சீனமய்யரின் செல்வாக்குக் கிராமத்தில் உயர்கிறது. அவரைப் போலவே ஓட்டு வீடு போட்டு மாடி வீடு கட்டும் பொருளற்ற ஆசையை ஐதாளர் அந்திம வயதில் செய்து பார்க்கிறார். அவருடைய சொத்துக்கு நாகவேணியை வாரிசாக ஆக்கிவிட்டு மறைந்தும் போகின்றார். சொத்து தன் கைமீறிப் போனதால் அவமதிக்கப்பட்டவனாய் உணரும் லச்சன் குடும்பத்தாரிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறான். கடன் தொல்லையால் மறுபடியும் நாகவேணியுடன் வாழத் தொடங்குகிறான். அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்து ஆறு மாதங்களில் இறந்து போகிறது. அடுத்ததாக, பிறக்கும் ஆண் குழந்தைக்குப் பாட்டனார் நினைவாக ராம ஐதாளர் என்றே பெயர் சூட்டப்படுகிறது. மறுபடியும், நாகவேணியிடமிருந்து ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட பூர்வீகச் சொத்துகளை அடகு வைத்து ஓட்டல் வைப்பது, காமம், சூது எனப் போகங்களில் திளைக்க மைசூருக்குச் சென்று விடுகிறான்.
உடனிருக்கும் சரஸ்வதியும், சத்தியபாமையும் அடுத்தடுத்து இறந்துவிட நிர்க்கதியாகின்ற நாகவேணி தன் தந்தை வீட்டில் மகனுடன் வாழத் தொடங்குகிறாள். அவளுடைய துன்பத்தை வயலின் கருவி கற்றுக் கொள்வதன் வழி போக்கிக் கொள்ள முயல்கிறாள். மகன் வளர்ந்த பின்னால் மறுபடியும் கிராமத்துக்கே திரும்பி பறிக் கொடுத்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வாழத் தொடங்குகிறாள். மறுபடியும் வறுமையும் துன்பமும் அவளை வாட்டுகிறது. மகனைச் சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறாள். நேர்மையானவனாகவும் இலட்சியவாதியாகவும் இருக்கின்ற ராமனுடைய வாழ்வு காந்திய வழியிலான சுதந்திரப் போராட்ட ஆர்வம், வயலின் கலை கற்றல் எனச் சென்னையில் கழிகிறது. அங்கிருந்து ஊருக்குத் திரும்பி பம்பாய்க்குச் செல்கின்றவன் கம்யூனிஸ்டு இயக்க ஆர்வம், ஓவியக் கலையின் மீதான ஆர்வம் எனத் திசைமாற மறுபடியும் ஊருக்கே திரும்புகிறான். சொந்த கிராமத்திலே பள்ளி ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்குகிறவன் குத்தகை நிலத்தில் புகையிலை விதைத்துப் பெற்ற பணத்தால் நிலத்தை மீட்கின்றான். தாயும் அத்தையும் தொடர்ந்து செய்யும் வற்புறுத்தலுக்கிணங்க திருமண ஏற்பாடுகளையும் செய்ய தொடங்குவதோடு நாவல் நிறைவுறுகிறது.
காட்சிகளாகும் உணர்வுகள்
‘மண்ணும் மனிதரும்’ நாவல் தென் கர்நாடகத்தின் கோடி பகுதி பிராமணர்களின் வாழ்வைத் துல்லியமான தகவல்களுடன் புறவயமாகச் சித்திரிக்கிறது. மழை காலம், வெய்யில் எனக் கால மாற்றங்களில் கோடி பகுதி அடையும் மாற்றங்கள் தொடங்கி மனிதர்களுக்குள் நேரும் மாற்றங்கள் வரையில் மிகத் தெளிவாகக் காட்டும் யதார்த்தவாத படைப்பாகவே ‘மண்ணும் மனிதரும்’ நாவல் விளங்குகிறது. புறவயமான சித்திரிப்பிலே ஓவியத்தைப் போல முழுக் காட்சியையும் காரந்தால் காட்டிவிட முடிகிறது. ஆறு கடலுடன் சேரும் கழிமுகப்பகுதியில் மலைக்குக் கீழாக முப்புறமும் வயல் சூழ ராம ஐதாளரின் வீடு அமைந்திருக்கிறது. வெய்யில் காலத்தில் வியர்வையே மழையாகப் பொழிகிறதென்கிறார். மழை காலத்தில் கடலலைச் சீற்றத்தை //தனது வெறியைக் கண்டு தானே நகைத்து உருள்வதைப் போலத் தோற்றமளிப்பதாக// குறிப்பிடுகிறார். எளிமையான சித்திரிப்புகளில் கற்பனையால் விரியும் காட்சிகளை உருவாக்குகிறார். வாழ்க்கை துயராலும் வறுமையாலும் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள செல்கின்ற நாகவேணியைச் சித்திரிக்கும் இடத்தின் ஊடே கடல் நண்டுகளை வேட்டையாட வந்த நரி அந்நியர்களின் ஊடுருவலை அனுமதிக்காமல் ஊளையிட்டதாக காரந்த் காட்டும் சித்திரம் உணர்வுகளையும் சேர்த்துப் படம்பிடிப்பதாக அமைந்திருக்கிறது.
பண்பாட்டு மாற்றங்களால் மாறும் மதிப்பீடுகள்
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மெல்ல பண்பாட்டு மாற்றம் கோடிப் பகுதியை ஊடுருவத் தொடங்குகிறது. கோடியின் திண்ணைப் பள்ளியில் உபந்நியாசங்கள், வாய்ப்பாடு, யக்ஷகானப் பாடம் ஆகியவைச் சங்கர ஐகளால் கற்றுத் தரப்படுகிறது. லட்சனைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க சங்கர ஐகள் சரஸ்வதியை வலியுறுத்துகிறார். ஆங்கில வழிப் பள்ளியில் எல்லா சாதியினரும் ஒன்றாக அமர்ந்து கற்பதால் ஆசாரக் கெடுதல் உண்டாகுவதாகச் சொல்கிறார். குந்தாபுரத்தில் ஆங்கில வழிக் கல்வி கற்ற வழக்கறிஞர்களைப் போல லட்சனும் உருவாக படுமுன்னூரில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு அனுப்பும் முடிவை ஐதாளர் எடுக்கிறார். கோடியில் நடந்து வந்த திண்ணைப் பள்ளியில்கூட முறை வழக்கொழிகிறது. சீனமய்யரின் பிள்ளைகள் பெங்களூரில் திறக்கப்படும் ஓட்டல்களில் வேலை செய்ய அனுப்பப்படுகின்றனர். தொழிலைக் கற்றுக் கொண்ட பின்னர் புதிய ஒட்டல்களைத் திறக்கின்றனர். பிராமணர் எச்சில் இலை பொறுக்குவதா என்ற ஏளனக் கேள்வி மறைந்து அதன் வழியே ஈட்டப்படும் செல்வத்தால் ஊரில் சீனமய்யரின் செல்வாக்கு உயர்கிறது. சீனமய்யருக்கும் ஐதாளருக்கும் சொத்து சேர்ப்பதில் சூட்சுமமான போட்டி உருவாகிறது. நெல்லும் கீரைகளும் முந்திரிப்பழங்களும் நடப்பட்டு வந்த ஐதாளரின் வயலில் ராமனின் காலத்தில் குத்தகை நிலத்தை மீட்க அதிக லாபம் தரும் பணப்பயிரான புகையிலை நடப்படுகிறது. சீனமய்யரின் மகன்கள் ஓட்டல் வியாபாரம் செய்ய வெளியூருக்குச் செல்கின்றனர். ஆங்கிலக் கல்வி பெற்ற லச்சனும் அரசு பணி பெற்று கேரளாவுக்குச் செல்கிறான். விவசாயத்திலிருந்தும் கிராம வாழ்விலிருந்தும் அந்நியப்படும் புதிய தலைமுறை உருவாகி வருகிறது. மூன்றாவது தலைமுறையில் ஐதாளரின் வீட்டில் நாகவேணியும் அவளது தாயும் சீனமய்யரின் வீட்டில் அவரது மனைவி எனப் பெண்கள் மட்டுமே கிராமத்தில் வாழும் சூழல் உருவாகிறது. ஓட்டல் வியாபாரத்தில் ஈடுபட அரசு வேலையை லட்சன் துறக்கிறான். அதற்கடுத்தத் தலைமுறையினர், அலுவலகம், தொழிற்சாலை வேலைகளுக்காகப் பெரு நகர்களான சென்னை, பம்பாய்க்குப் பெயரத் தொடங்குகின்றனர். இப்படியாக நிலவுடைமை காலக்கட்டத்திலிருந்து முதலாளித்துவப் பொருளியல் நோக்கிய நகர்வு பண்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
இன்னொரு வாழ்வு
மேற்கல்விக்காகச் சென்னைக்குச் செல்லும் ராமன், சுதந்திரப் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கத் தொடங்குகிறான். கல்லூரி நிர்வாகத்தின் தடைகளையும் மீறி காந்தியின் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றுத் தடியடி வாங்கிச் சிறைக்குச் செல்கிறான். சிறையிலிருந்து விடுதலையாகிச் சுதந்திர உணர்வு மேலோங்க ஊருக்கு வருகின்றான். கதராடை நூற்றுச் சந்தையில் விற்பவனை விலை அதிகம் என மக்கள் புறக்கணிக்கின்றனர். அவ்வாறே, காங்கிரஸ் இயக்கத்தில் சேர்வதற்கான சந்தா தொகை அதிகமென்கின்றனர். செம்படவர்கள் கூட்டத்தில் மது ஒழிப்பு உறுதிமொழியைப் பெற்ற ஆறாவது மாதத்திலே மீண்டும் பழைய நிலைக்கே திரும்புகிறது. தன்னுடைய லட்சியவாத வேட்கை சோர்வடைவதை ராமன் உணர்கிறான். அம்மாவின் தாய் இறந்து அவள் வழியாக வந்து கொண்டிருந்த பணம் நின்றுவிட்டப் பின் அவனுடைய லட்சியவாத வேட்கை முற்றிலுமாக ஓய்ந்துவிடுகிறது. அவ்வாறே, பம்பாய்க்குச் சென்று வேலை தேடச் செல்கின்ற போதும் அறை நண்பர்களுடன் சோசிலிசத்தைக் கற்றுக் கொள்கின்றான். வேலை கிடைக்காத எரிச்சலும் முதலாளிகளின் சுரண்டல் நடவடிக்கையின் மீதான கோபத்தாலும் தீவிரமாக சோசிலிசம் பேசும் அறை நண்பர்கள் மறுநாள் மறுபடியும் வேலைக்காக முதலாளிகளை நாடிச் செல்கின்றனர். இப்படி லட்சியவாதமும் குடும்பப் பொறுப்புகளும் என இரு முரண்பட்ட போராட்டத்தில் இன்னொரு வாழ்வை நாவல் காட்டுகிறது. கணவன் கைவிட்டு அத்தையும் மறைந்துவிட தனியாளாக மகனை வளர்த்தெடுக்க வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்படுகின்ற நாகவேணி ஓய்வு நேரங்களில் வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்கிறாள். அவளின் கலையைச் சுவீகாரமாய்ப் பெற்றுக் கொள்கின்ற ராமனுக்கும் வயலின் வாசிப்பில் ஆர்வம் இருக்கிறது. வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் அம்மாவைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அலையோசை பின்னணியில் அவள் வயலின் வாசிக்கக் கேட்டு நிறைவுறுகிறான். வாழ்க்கை தேவைகளாளும் குடும்பப் பொறுப்புகளாலும் அலைக்கழிக்கப்படுபவன் லட்சியவாத செயல்களின் எல்லையைக் கண்டு சோர்வடையும்போதெல்லாம் கலை அவனை அணைத்துக் கொள்கிறது. தாயின் வறுமையும் துயரையும் பொறுக்காமல் நாள் முழுதும் வேலை செய்யும் ஓட்டல் வேலையை ஏற்று மங்களூருக்கு வருகிறான். ஓட்டல் வியாபாரத்தில் நட்டமாகி சூதிலும் மதுவிலும் வாழ்வைக் கழிக்கும் தந்தை லச்சனைக் காண்கின்றான். இவ்வளவு அகக் கொந்தளிப்புக்கு இடையிலும் எதிர்பாராமல் காண நேரிடுகின்ற ஓவியக் கண்காட்சி அவன் மனத்தை உள்வாங்கி கொள்கிறது. பம்பாயில் நெரிசலான அறையில் குறைந்த வருமானத்துக்குப் பாடல் கற்றுக் கொண்டிருக்கிறான். அங்கும் ஓவியக் கண்காட்சியில் காணும் நோவா எனும் யூதப் பெண்ணின் ஓவியம் அவனைக் கவர்கிறது. யூத இன ஒழிப்பு நடவடிக்கையால் சொந்த நாட்டை விட்டுப் பிரிந்து வந்திருக்கும் தன் துயரை ராமனின் வயலின் இசை பிரதிபலிப்பதாக நோவா உணர்கிறாள். பம்பாயிலிருந்து ஊருக்குத் திரும்பும் முன் அவளுக்குத் தன் ஊர்ச்சூழலை ஓவியமாக வரைந்து தருவதாக உறுதி தருகின்றான். கடற்கொந்தளிப்பில் பனைமரத் தோப்பில் தேங்கிய நீரில் அமைதியான பனை மரங்களும் கடலலையும் ஒரு சேரத் தெரியும் கொந்தளிப்பும் நிலைப்புமென வாழ்வின் இரண்டு பக்கங்களையும் காட்டும் ஓவியத்தை வரைந்து நோவாவுக்கு அனுப்புகிறான். கலை வழியே வாழ்வு குறித்து எழும் உண்மையொன்றை நோக்கி நாவல் நகருமிடமாக அதனைக் காண முடிகிறது.
பாத்திர வார்ப்பு
இந்த நாவலில் ராமனின் பாத்திரம் அழுத்தமாக உருவாகியுள்ளது. சிறுவயது தொடங்கியே ராமனுக்குக் கலை மனத்துக்கான வார்ப்பு அமைந்திருக்கிறது. சிறுவயதிலே கடலைக் காண்பதில் தீராப் பித்து அவனிடம் இருக்கிறது. கடற்கரை மணலில் பொறுக்கியெடுத்த கிளிஞ்சல்களைக் கொண்டு சித்திரம் வரைகிறான். அம்மாவுடன் சென்று காண்கின்ற தெருக்கூத்துகள் அவனுடைய பால்யக்கனவுகளில் வருகிறது. அம்மா கற்றுக் கொண்ட வயலின் கலையைத் தானும் கற்றுக் கொள்கிறான். ஓவியக் கலையையும் கற்றுக் கொள்கிறான். வறுமை, லட்சியவாதத்தில் சோர்வு, துயர் என எந்த இக்கட்டிலும் ஒழுக்கம் பிறழாத இலட்சியவாதம் அவனிடம் இருக்கிறது.
‘மண்ணும் மனிதரும்’ நாவலில் மூன்று தலைமுறை பெண்களின் கதையாகக் காணக்கூடிய சாத்தியம் உள்ளது. சரஸ்வதி, பார்வதி, சத்தியபாமை, நாகவேணி என மூன்று தலைமுறை பெண்களின் கண்ணீரும் உழைப்புமே வாழ்வை முன் நகர்த்தும் விசையாக நிற்கிறது. ஆணாதிக்க மனநிலை கொண்ட ஐதாளரின் வீட்டில் கணவனை இழந்து அடைக்கலமானதிலிருந்தே உழைப்பையே தன்னுடைய வாழ்வாக சரஸ்வதி ஏற்றிருக்கிறாள். தன்னை அலட்சியம் செய்து விசேஷத்துக்கான ஏற்பாட்டைச் செய்ய சொல்லும் அண்ணனுக்குத் தன் இருப்பின் இன்றியமையாமையை உணர்த்த கணவனின் குடும்பத்து வீட்டுக்குச் செல்கிறாள். தன்னுடைய இரண்டாம் திருமணம் நடக்க சரஸ்வதியின் துணை அவசியமென உணர்ந்து அவளைச் சமாதானப்படுத்தி அழைத்து வரும் அண்ணனிடம் முதல் மனைவி பார்வதிக்கு நகையைக் கேட்கின்றாள். அவளுடைய ஆலோசனையே மூன்று தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தை வழிநடத்தி வருகிறது. நெடுங்காலம் வாழ்கின்றவர்கள் ஒரு குடும்பத்தின் அல்லது சமூகத்தின் சிதைவையும் கண் முன்னே காணும் வாய்ப்பைப் பெறுகின்றனர். ராம ஐதாளரின் தங்கையான சரஸ்வதி 75 ஆண்டுகள் உயிர் வாழ்கிறாள். கண்பார்வை இழந்து அந்திமத்தை நெருங்கி கொண்டிருக்கும்போது லட்சனின் சுயநலத்தால் நிலம் பறிப்போய் குத்தகைக்கு நிலம் பெற்று வாழும் இக்கட்டான சூழலை அவள் எதிர்கொள்கிறாள். கணவனால் ஏமாற்றப்பட்ட நாகவேணி எந்நிலையிலும் சரஸ்வதியைப் பிரிந்து தன் வீட்டுக்குச் செல்ல கூடாதென்பதில் உறுதியாக நிற்கிறாள். தன் நெடிய வாழ்வின் தரிசனமாக கையேந்தாமல் உழைத்து வாழ்தலையும் தியாகத்தையும் நாகவேணிக்குக் கையளித்து மறைகிறாள். கணவனின் இரண்டாவது திருமணச் செய்தியை அறிந்த பின்னர் பார்வதி தான் புறக்கணிக்கப்படுவதாக என உள்ளூர வேதனை அடைகிறாள். ஆனால், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சத்தியபாமையின் மகனான லச்சனை வளர்த்தெடுத்து உழைப்பில் தன்னைக் கரைத்து வாழ்கிறாள். தன் அந்திமத்தின்போது கணவனின் மடியில் தன்னுடைய உயிர்பிரிய வேண்டுமென்கிற ஆசையைச் சொல்லுமிடத்தில் அவளுடைய மெளனமான அக வலி வெளிப்படுகிறது.
மூன்று தலைமுறை வாழ்வின் வீழ்ச்சியைச் சொல்லி உருவாகும் புதிய காலத்தில் நம்பிக்கையுடன் எழும் தளிரையும் சேர்த்தே காரந்த் ‘மண்ணும் மனிதரும்’ நாவலைப் படைத்திருக்கிறார். பெரு நகர வாழ்வு, லட்சியவாதம் என எல்லாவற்றிலும் சோர்வடைகின்ற ராமன் மீண்டும் மண்ணை நம்பி ஊருக்கே திரும்பி வாழ்வைத் தொடங்குகிறான். இன்னொரு நீண்ட சுழற்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறான்.
என்றுமுள்ள உண்மையான இயற்கையின் முன்னால் சங்கிலித் தொடரைப் போல ஒன்றே போல தொடரும் பிறப்பு, இறப்பு, துயர்களைக் கொண்ட நீண்ட வாழ்வொன்றைப் காரந்த் படைத்திருக்கிறார். அந்த வாழ்வின் நுட்பமான உணர்வெழுச்சித் தருணங்களும் அலைகழிவுகளையும் காட்டி அதன் முன்னால் நம்பிக்கையுடன் வாழ்வு தொடர்வதைத் தரிசனமாக ‘மண்ணும் மனிதரும்’ நாவல் முன்வைக்கிறது.