“எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே” – பாவண்ணன்

பாவண்ணன் சமகால  நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள்எனஇடையறாதுதமதுபங்களிப்பைஅளித்துவருகிறார். கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர். மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது,  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது , விளக்கு அமைப்பின் வாழ்நாள்சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது, புதுச்சேரி அரசின், இலக்கியச்சிந்தனையின் சிறந்த நாவல் விருது என இவரது பங்களிப்புக்கு தமிழ்ச்சூழலில் தகுந்த கவனம் கிடைத்துள்ளது. டிசம்பர் மலேசியாவில் நடைபெறும் வல்லினம் விழாவுக்கு வருகை தரும் அவரை மலேசிய வாசகர்கள் கூடுதலாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.

வல்லினம்: இடைவிடாது வாசித்தும் எழுதியும் வருகிறீர்கள். குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் இச்சூழல் சாத்தியமாவது கடினம். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதிலிருந்து இந்த நேர்காணலைத் தொடங்கலாம்.

பாவண்ணன்: என் இயற்பெயர் பாஸ்கரன். புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையிலுள்ள வளவனூர் என்னும் கிராமத்தில் நான் பிறந்தேன். எங்கள் அப்பா தையல் தொழிலாளி. அம்மா குடும்பத் தலைவி. நான்தான் குடும்பத்தில் தலைமகன். எனக்கு இரு தம்பிகள். இரு தங்கைகள். பட்டப்படிப்பை முடித்த பிறகு தொலைபேசித்துறையில் இளநிலை பொறியாளராக தேர்வாகி கர்நாடக மாநிலத்துக்கு வந்தேன். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் மாமா மகளுக்கும் எனக்கும் திருமணம்  நடைபெற்றது. அவர் பெயர் அமுதா. பள்ளியிறுதி வரை படித்தவர். என் இலக்கிய முயற்சிகளைப் பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். அந்தக் காலத்திலிருந்து நான் எழுதும் ஒவ்வொரு படைப்பையும் உடனுக்குடன் முதல் ஆளாகப் படித்துவிடும் பழக்கம் அவருக்கு உண்டு. அவர் குறிப்பிடும் எந்தவொரு எளிய கருத்தும் எனக்கு மிக முக்கியமானதாகும். ஒரு படைப்பு அவரை ஈர்க்கவில்லை என்றால், அதை இன்னொரு வடிவில் எழுத முயற்சி செய்வேன். அவர் பெரிய விமர்சகரல்ல என்றாலும், அவரை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் அக்கறை உண்டு. வீட்டுக்கு வரும் இலக்கியப் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறவற்றை எடுத்து அவராகவே படிப்பார். குடும்பத்தை முழுக்க முழுக்க அவரே நிர்வகிக்கிறார். எல்லாவற்றையும் அழகாக நிர்வகிக்கும் சிறப்பான குணம் அவருக்கு உண்டு. சம்பளத்தை வாங்கி வந்து என் செலவுக்கு ஒரு தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சியதையெல்லாம் அவரிடமே கொடுத்துவிடுவேன். அதன் வழியாக எனக்கு அதிக அளவில் நேரம் கிடைக்குமாறு அவர் செய்கிறார். அந்த நேரத்தை நான் எழுதுவதற்கும் படிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவருக்கு நிகராக, என் சகோதர சகோதரிகளும் என் மீது எந்தப் பொறுப்பையும் சுமத்துவதில்லை. எல்லா முக்கியமான வேலைகளையும் அவர்களே பார்த்துவிட்டு, இறுதி நேரத்தில்தான் என்னை அழைப்பார்கள். அவர்கள் குடும்பத்துக்காக உழைக்கும் உழைப்பில் நான்கில் ஒரு பங்கு கூட நான் உழைத்ததில்லை. என் மகன் பொறியியல் பட்டதாரி. அவன் பெயர் அம்ரிதா மயன் கார்க்கி. நல்ல வாசகன். சிறப்பான ஆங்கில நாவல்களைத் தேடி வாசிப்பவன். என் எழுத்தில் நாட்டம் கொண்டவன். என்னைச் சுற்றியிருப்பவர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் குடும்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். என் கவனம் எழுத்தின் திசையில் குவிவதற்கு அவர்களுடைய ஆதரவே முக்கியமான காரணம்.’

வல்லினம்: பள்ளி வயதில் உங்கள் வாசிப்பு தொடங்கிவிட்டதைப் பற்றி பல இடங்களில் கூறியிருப்பதைப் படித்திருக்கிறேன். அப்போது என்னென்ன மாதிரியான நூல்களை வாசித்தீர்கள்?

பாவண்ணன்: வளவனூரில் இருந்த தொடக்கப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும்தான் நான் படித்தேன். அந்தக் காலத்தில் எங்கள் பள்ளிகளிலேயே நல்ல நூலகங்கள் இருந்தன. வாரத்துக்கு ஒரு நாள் ‘நூலக வகுப்பு’ என்னும் பாடவேளையும் இருந்தது. உடற்பயிற்சிக்காக ஒரு பாடவேளையை ஒதுக்கிவைப்பது போல நூலக வாசிப்புக்கும் ஒரு பாடவேளையை ஒதுக்கி வைத்திருந்தார்கள். அந்தப் பாடவேளையில் நூலகர் ஐம்பது அறுபது நூல்களைக் கொண்டு வந்து மேசை மீது வைத்துவிடுவார். எல்லாமே சிறார் நூல்கள். சின்னச்சின்ன கதைப்புத்தகங்கள். நாட்டுக்குழைத்த நல்லோர் வரிசை நூல்கள். நாங்கள் ஆளுக்கு ஒரு புத்தகத்தை எடுத்து அந்த வகுப்பு நேரம் முடியும் வரைக்கும் படிப்போம். கதை நேரம் என்றொரு பாடவேளையும் உண்டு. அப்போது ஆசிரியரும் கதை சொல்வார். மாணவர்களும் கதை சொல்வார்கள். அப்படித்தான் என் வாழ்வில் புத்தகங்களுக்கான இடம் உருவானது.

பள்ளியில் நடைபெறும் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, ஒப்பித்தல் போட்டி என எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். வெற்றி பெறும்போது புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும். எனக்கே எனக்கென சொந்தமாக புத்தகங்கள் வைத்துக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளி அது. அழ.வள்ளியப்பா எழுதிய ‘எங்கள் கதைகளைக் கேளுங்கள்’ என்ற புத்தகம்தான் நான் முதல்முதலாகப் பரிசாகப் பெற்ற புத்தகம். காட்டிலிருக்கும் ஒவ்வொரு விலங்கும் தன் வாழ்க்கை கதையை தானே வாய் திறந்து சொல்வது போன்ற அமைப்பில் எழுதப்பட்ட கதைகள். நான் அவற்றை விரும்பிப் படித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் இப்படி எனக்குச் சில புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தபடியே இருந்தன. வாண்டுமாமா, பெ.தூரன்  போன்ற எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள். எங்கள் வளவனூரில் ஒரு கிளை நூலகம் இருந்தது. என் அப்பாவின் நண்பருடைய மகன்தான் அதற்குப் பொறுப்பாளர். என்னிடம் இருக்கும் புத்தகங்களையெல்லாம் எடுத்துச் சென்று அவரிடம் காட்டி அதைப் போன்ற புத்தகங்களைப் படிப்பதற்குக் கொடுக்குமாறு கேட்டேன். என்னுடைய ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அவரும் புத்தகங்களைக் கொடுக்கத் தொடங்கினார். வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார். அங்கேயே உட்கார்ந்து படிக்க வேண்டும். அதுதான் அவர் நிபந்தனை. அதற்கு உடன்பட்டு, அவர் கொடுத்த புத்தகங்களையெல்லாம் படித்தேன்.

என் ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்று புத்தகங்களை வாங்கி வந்து படித்ததும் உண்டு.  குழந்தைகளுக்காகவே அந்தக் காலத்தில் வெளிவந்த ‘டமாரம்’, ‘கண்ணன்’, ‘பாலர் மலர்’, ‘கரும்பு’, ‘தம்பி’ புத்தகங்களையெல்லாம் கட்டுக்கட்டாக அவர் பைண்டிங் செய்து வைத்திருந்தார். அவற்றையெல்லாம் படிப்பதற்காக எனக்குக் கொடுத்தார். அவரிடமிருந்தே பிற்காலத்தில் ‘பஞ்சதந்திரக்கதைகள்’, ‘ஈசாப் கதைகள்’, ‘சித்திர ராமாயணம்’, ‘ஆலிஸின் அற்புத உலகம்’, ‘டாம் சாயரின் அனுபவங்கள்’ போன்ற புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பிறகு துப்பறியும் கதைகளையும் ‘அம்புலிமாமா’ கதைகளையும் படக்கதைகளையும் தேடியெடுத்துப் படித்தேன். பள்ளியிறுதித் தேர்வை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்த காலத்தில் என் நண்பனொருவனின் அக்காவிடமிருந்து ‘பொன்னியின் செல்வன்’ ஐந்து பாகங்களையும் வாங்கி வந்து படித்தேன். 

எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு அக்கா இருந்தார். பள்ளியிறுதி வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.  ஒவ்வொரு வாரமும் அவருக்காக வாராந்திரிகளைக் கடையிலிருந்து வாங்கி வந்து கொடுப்பேன். அவற்றையெல்லாம் அவர் படித்து முடித்த பிறகு எனக்கும் படிக்கக் கொடுப்பார். ஒருநாள் திடீரென அவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அப்போது அவர் அதுவரை படித்துச் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களையும் இதழ்களையும் ஒரு கட்டாகக் கட்டி கடையில் போட்டுவிட்டு வருமாறு கூறினார். தேவைப்படுகிற புத்தகங்களை அந்தக் கட்டிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். நான் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரித்து எனக்குப் பிடித்தவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை மட்டும் கட்டி கடையில் போட்டுவிட்டு பணம் வாங்கி வந்து கொடுத்துவிட்டேன். அப்போதுதான் கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ தொகுப்பையும் ஜெயகாந்தனின் ‘ஒரு பிடி சோறு’ தொகுப்பையும் படித்தேன். அதுவரை நான் படித்த கதைகளின் தன்மையிலிருந்து அந்தக் கதைகள் முற்றிலும் வேறுபட்டிருந்தன. என் வாசிப்புப் பயணத்தில் அது ஒரு திருப்புமுனையான தருணம். ஒரு நாள் அப்புத்தகங்களை நூலகத்துக்கு எடுத்துச் சென்று அந்த அண்ணனிடம் காட்டி அதேபோன்ற புத்தகங்களைப் படிப்பதற்குக் கொடுக்குமாறு கேட்டு வாங்கிப் படித்தேன்.



வல்லினம்: மரபுக்கவிதையில் உங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய நீங்கள், அதை ஏன் தொடரவில்லை? எழுதியவரை ஏதும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளதா?

பாவண்ணன்: பள்ளியில் எனக்குத் தமிழ்ப்பாடம் நடத்திய கண்ணன், ராதாகிருஷ்ணன், சாம்பசிவன் போன்ற ஆசிரியர்கள் பாடங்களை நடத்திய விதம்தான் எனக்கு மரபுக்கவிதையில் ஆர்வம் பிறக்கக் காரணமாக இருந்தது. பாரதியாரையும் பாரதிதாசனையும் படிக்கத் தொடங்கியதற்கு அவர்களே தூண்டுகோல். கல்லூரியில் படிக்க வந்தபோது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெ.தங்கப்பா. பெரிய இயற்கைப்பாவலர். அவருடைய அறிமுகம் சங்க இலக்கிய நூல்களையும் ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களையும் படிக்க வேண்டும் என்கிற உந்துதலைக் கொடுத்தது. மரபு வடிவமும் பாடல் உருவாகும் விதமும் பிடிபடத் தொடங்கியதும் நானே சொந்தமாகப் பாடல்களை எழுதினேன். என் ஆசிரியர் தங்கப்பா அவற்றையெல்லாம் பொறுமையாகப் படித்து செம்மைப்படுத்த ஆலோசனைகள் சொல்வார். கணக்கில்லாத மரபுக்கவிதைகளை அப்போது எழுதினேன். ஆயிரம் இரண்டாயிரம் வரிகளைக் கொண்ட நீளமான குறுங்காவியங்களை எழுதினேன். அப்போது மரபுக்கவிதைகளோடு வெளிவந்த இதழ்கள் எல்லாவற்றிலும் என் கவிதைகள் வெளிவந்தன. கல்லூரியில் இறுதியாண்டு முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் புதுவை அரசு சவரிராயலு நாயக்கர் நூற்றாண்டு நினைவை ஒட்டி ஒரு குறுங்காவியப் போட்டியை அறிவித்தது. நான் அதற்காக ‘பெண்மை போராடுகிறது’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காவியத்தை எழுதி அனுப்பினேன். அப்போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்ற காவியத்தையும் என்னுடைய காவியத்தையும் இணைத்து ஒரே புத்தகமாக புதுச்சேரி அரசாங்கமே வெளியிட்டது. மூன்று நான்கு தொகுதிகள் வெளியிடும் அளவுக்கு அப்போது என்னிடம் கவிதைகள் இருந்தன. ஆனால், புத்தகம் போடுவதெல்லாம் அந்தக் காலத்தில் எளிதான செயலல்ல. அப்படியே விட்டுவிட்டேன். என் கவனமும் மெல்ல மெல்ல மரபுக்கவிதை வடிவத்திலிருந்து புதுக்கவிதையை நோக்கி நகர்ந்துவிட்டது. சிறுகதைகளே என் செல்திசை என என் மனம் உணர்ந்து செயல்படத் தொடங்கிய பிறகு,  புதுக்கவிதை முயற்சிகளைச் சற்றே குறைத்துக் கொண்டேன். ஆனால், நிறுத்தியதில்லை. அது இன்றளவும் என் பிரியத்துக்குரிய இன்னொரு களனாகவே இருந்து வருகிறது.



வல்லினம்: மரபுக்கவிதையில் தொடங்கியதால்தான் பாஸ்கரன் என்ற பெயரைப் பாவண்ணன் என மாற்றிக் கொண்டீர்களா?

பாவண்ணன்: இல்லை. தொடக்கத்தில் என் சொந்தப் பெயரிலேயே நான் எழுதி வந்தேன்.  அப்போது புதுச்சேரியில் எழிலேந்தி என்கிற நண்பர் இலக்கியக்கூடல் என்னும் பெயரில் ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி மாதம்தோறும் ஒரு கூட்டம் நடத்தி வந்தார். அதையொட்டி ஒரு கவிதைப் போட்டியை அவர் அறிவித்தார். நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தங்கப்பா வழியாக போட்டியைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டதும் நான் அப்போட்டிக்காக ஒரு கவிதையை எழுதி அனுப்பி வைத்தேன். முதல் கூட்டம் நடைபெறும் தருணத்தில் போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். முடிவைத் தெரிந்து கொள்வதற்காக நான் அந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். புதுவையைச் சேர்ந்த இலக்கண வல்லுநரும் அறிஞருமான திருமுருகனார் என்பவர்தான் போட்டிக்கு நடுவராகச் செயல்பட்டவர். போட்டிக்காக வந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளின் பொதுப்போக்கு பற்றி சிறிது நேரம் உரையாடிவிட்டு அவர் தமக்கு மிகவும் பிடித்த கவிதைகள் என ஐந்து கவிதைகளைக் குறிப்பிட்டார். அவற்றில் மிக மிகப் பிடித்தது என அவர் என் கவிதையைக் குறிப்பிட்டு அதைப் படித்துக் காட்டிய பிறகு, இதுவே முதல் பரிசுக்குரிய கவிதை என்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்திருந்த எனக்கு வானத்திலேறிப் பறப்பது போல இருந்தது. பெயரை அறிவித்ததும் எழுந்து சென்று பரிசாகக் கொடுக்கப்பட்ட புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்துவிட்டேன். கூட்டத்தில் அமர்ந்திருந்த பலரும் என்னை வாழ்த்தி கைகுலுக்கிப் பாராட்டினர். அனைவரும் கலைந்து சென்ற பிறகு ஒரு பெரியவர் எனக்கு அருகில் வந்து மெல்லிய குரலில் பாடலில் அவர் கண்டடைந்த நயத்தைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக “நீங்கள் ஏன் நல்லதொரு புனைபெயரில் எழுதக் கூடாது?” என்று கேட்டார். நான் அதைப் பற்றியெல்லாம் யோசித்ததே இல்லை. நீங்களே ஒரு பெயர் சொல்லுங்கள், இனி அப்பெயரிலேயே எழுதுகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் ஒரு கணம் யோசித்த பிறகு அழகாகப் பாட்டு எழுதுகிறீர்கள், பாவண்ணன் என்னும் பெயரில் எழுதுங்கள். பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார். எனக்கும் அந்தப் பெயர் பிடித்திருந்தது. அப்படியே செய்கிறேன் என்று அவரிடம் அன்று தெரிவித்தேன். அடுத்த நாள் முதல் நான் எழுதிய கவிதைகளையெல்லாம் அந்தப் பெயரில்தான் எழுதினேன். எனக்கு அருகில் வந்து எனக்குப் பெயரை ஆலோசனை வழங்கிய பெரியவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன்பு அவரை நான் பார்த்ததே இல்லை. இலக்கியக்கூடல் நிகழ்ச்சியில் அதற்குப் பிறகும் பார்க்கவில்லை. அவர் முகம் கூட எனக்கு மறந்துவிட்டது. அந்தப் பெயரை எழுதும் ஒவ்வொரு முறையும் முகமறியாத அம்மனிதரை ஒரு கணம் நினைத்துக் கொள்கிறேன்.

வல்லினம்: பொதுவாகக் கவிதை என இந்த நேர்காணலில் நீங்கள் குறிப்பிடுவது மரபுக்கவிதையையா? அல்லது புதுக்கவிதையும் எழுதியுள்ளீர்களா?

பாவண்ணன்: கல்லூரியில் படித்து முடிக்கும் காலம் வரைக்கும் மரபுக்கவிதைகளைத்தான் எழுதி வந்தேன். சிறுபத்திரிகைகளின் அறிமுகம் கிடைத்த பிறகு புதுக்கவிதையின் அறிமுகம் கிடைத்தது. பாரதியாரின் வசன கவிதைகளின் மீது பெரிய அளவில் நாட்டம் கொண்டிருந்தேன். பிதற்றலைப் போன்ற தோற்றத்தில் காணப்படும் அவ்வரிகளுக்கு அடியில் தெரிந்த காட்சிச் சித்திரங்கள் அளித்த அனுபவம் மகத்தானது. கச்சிதமான எதுகைகளும் மோனைகளும் பொருந்தி வந்த பாட்டைவிட கூடுதலான மன எழுச்சியை அவ்வரிகள் அளித்தன. அதன் தொடர்ச்சியாக அப்துல் ரகுமான், மீரா, இன்குலாப் போன்றோரின் கவிதை தொகுதிகளைப் படித்தேன். கருத்துகளை முன்வைக்கும் கவிதைகளைவிட, அனுபவங்களை முன்வைக்கும் கவிதைகளைக் கூடுதலாக மதித்தேன். பிறகு, என் தேடலின் விளைவாக பசுவய்யா, விக்கிரமாதித்யன், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதச்சன், தேவதேவன்  போன்றோரின் கவிதைகளைத் தேடி வாசித்தேன். அவர்கள் எழுதிய கவிதைகள் எந்தப் பத்திரிகையில் வெளிவந்தாலும் அவற்றை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு அடிக்கடி பிரித்துப் படித்தபடி இருப்பேன். அவற்றின் தொடர்ச்சியாக நானும் புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினேன். சிறுகதைகளை எழுதத் தொடங்கிய சமயத்திலேயே புதுக்கவிதைகளையும் எழுதி வந்தேன். ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்கிற என்னுடைய முதல் சிறுகதை தொகுதி 1987இல் வெளிவந்தது. ஆனால் என்னுடைய முதல் கவிதை தொகுதி ’குழந்தையைப் பின்தொடரும் காலம்’ 1997இல்தான் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘கனவில் வந்த சிறுமி’ என்னும் தொகுதி 2006இலும் ‘புன்னகையின் வெளிச்சம்’ என்னும் தொகுதி 2007இலும் வெளிவந்தன. இன்றும் தொடர்ந்து கவிதைகளை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். கவிதை வாசிப்பும் கவிதை எழுதுவதும் என்னைக் கூர்மைப்படுத்த உதவும் பயிற்சிகள்.  



வல்லினம்: மரபுக்கவிதையில் இருந்து உரைநடைக்குத் தாவிய அந்தக் காலக்கட்டத்தை நினைவு கூற முடியுமா?

பாவண்ணன்: மரபுக்கவிதையை ஓர் எழுத்து வழியாக நான் பின்பற்றி இயங்கி வந்த காலத்திலேயே , அதற்கு இணையாக புனைகதைகளையும் நாவல்களையும் வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். பள்ளிக்கூட காலத்திலிருந்தே தொடங்கிவிட்ட கதை வாசிப்புதான் அதற்குக் காரணம்.  கதை வடிவத்தின் மீது இனம் தெரியாத ஈர்ப்பும் இருந்தது. எங்கள் கல்லூரி நூலகத்தில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘செம்மலர்’, ‘தாமரை’ போன்ற இலக்கிய இதழ்கள் கிடைக்கும். அவையனைத்தும் அந்தப் பருவத்திலேயே எனக்கு அறிமுகமாகி இருந்தன. இதற்கு நடுவில் கர்நாடக மாநிலத்தின் சார்பாக இளநிலை பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரிய ஓராண்டு பயிற்சியைப் பெறுவதற்காக ஐதராபாத் சென்றிருந்தேன்.  என் குடும்பத்தில் அது ஒரு கடுமையான காலகட்டம். எங்கள் அப்பா உடல் நலம் குன்றியிருந்தார். வருமானம் போதுமானதாக இல்லை. இரண்டு தம்பியரும் இரண்டு தங்கையரும் படித்துக் கொண்டிருந்தனர். குடும்பத்தை நடத்த முடியாமல் அம்மா சிரமத்தில் மூழ்கியிருந்தார். கடுமையான மன உளைச்சலில் தவித்தேன். எனக்குக் கிடைக்கும் உதவித் தொகையில் ஓரளவு சாப்பிடுவதற்குத் தேவையான தொகையை மட்டும் வைத்துக் கொண்டு எஞ்சியதை வீட்டுக்கு அனுப்பி வந்தேன்.

ஒரு நாள் இரவு சாப்பிடுவதற்கு என்னிடம் பணமில்லை. கொஞ்சம் சில்லறைகள் மட்டுமே இருந்தன. நண்பர்களிடம் சாப்பிடச் செல்வதாகச் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றேன். நெடுந்தூரம் நடந்து சென்று இருந்த சில்லறைக்கு நாலைந்து வாழைப்பழங்கள் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் அருந்தினேன். அதுவரை இரைச்சலிட்ட வயிறு மெல்ல மெல்ல அடங்கியது. மெதுவாக நடந்து அறைக்குத் திரும்பினேன். சிலர் உறங்குவதற்குத் தயார் செய்து கொண்டிருந்தனர். சிலர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தனர். என் மனத்திலோ ஏராளமான துன்பக்காட்சிகள் மூச்சுவிட முடியாதபடி பெரும்பாரமாக நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தன. எப்படியாவது அவற்றைக் கொட்டி இறக்கிவிட வேண்டும் என்று தோன்றியது. எழுத்து ஒன்றே என் புகலிடம். மின்னலடித்தது போல, துன்பத்தை எழுதிக் கடப்பது தொடர்பாக கார்க்கியின் புத்தகத்தில் எங்கோ படித்த நினைவு வந்தது. கார்க்கியால் எழுதிக் கடக்க முடியும் என்றால் என்னாலும் என் துக்கத்தை எழுதிக் கடக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், நான் அதுவரை பழகி வந்த கவிதை வடிவம் அதற்கு உகந்ததல்ல என்பது எனக்குப் புரிந்தது. சிறுகதை வடிவமே அதற்குப் பொருத்தமான வழி என்றும் தோன்றியது. எழுதுவதற்குரிய காட்சிகள் ஏராளமாக நெஞ்சில் முட்டிமுட்டி மோதிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் என்னை எழுது என்னை எழுது என்று உந்தி எழுந்தன. அந்தக் கணத்தில் நான் இளநிலை பொறியாளர் பதவிக்கான நேர்காணலுக்காக பெங்களூரில் இருந்த தலைமை அலுவலகத்துக்குச் சென்று வந்த அனுபவம் மனத்திரையில் மின்னியது. உடனே அதை எழுத முடிவெடுத்தேன்.

எந்தப் புள்ளியில் தொடங்க வேண்டும், எதை எதையெல்லாம் அடுக்கடுக்காகச் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் காட்சிவெளியாகத் தெரிந்தன. அந்த நிமிடத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். அப்போது இரவு பத்தரை மணி. அறைக்கு வெளியே கூடத்து விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுதினேன். மறுநாள் அதிகாலை ஐந்து மணி வரைக்கும் நிறுத்தாமல் அந்தக் கதையை எழுதி முடித்தேன். அக்கணத்தில் என் மனம் ஒரு தாளைப் போல எடையற்று லேசாக இருப்பதை உணர்ந்தேன். பறப்பது போலத் தோன்றியது. என்னையறியாமல் புன்னகைத்தேன். நான் எழுதியது ஒரு துன்பியல் கதை. ஆனால், ஒரு துன்பத்தை இறக்கி வைத்த மனநிறைவில் மகிழ்ச்சி பிறப்பதை முதன்முதலாக உணர்ந்தேன். துன்பத்தை எழுதிக் கடக்கும் கார்க்கியின் வரிகளில் பொதிந்திருக்கும் உண்மையை நேரடியாகவே உணர்ந்தேன். இன்னும் விடியாத வானத்தையும் மங்கத் தொடங்கிய விண்மீன்களையும் சிறுசிறு மேகங்களையும் பார்த்தேன். என் மடி மீது ஒரு குழந்தை போல கிடந்த தாள்களையே மீண்டும் மீண்டும் பார்த்தேன். என் மனம் மகிழ்ச்சியில் விம்மியது. இனி என் வாழ்வில் துக்கமில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதற்குள் அறைக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நண்பர்கள் அதிகாலையில் படிப்பதற்காக ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்தனர். “என்னடா செய்யற இங்க?” என்று கேட்டனர். நான் என் கையிலிருந்த கதைப்பிரதியைக் காட்டினேன். அவர்கள் புன்னகைத்தபடியே “சரி சரி, வா, டீ சாப்ட்டுட்டு வரலாம்” என்று என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றனர். இப்படித்தான் என் முதல் சிறுகதையை எழுதி முடித்தேன்.


வல்லினம்: ‘நான் இலக்கியவாதிதான்என நீங்கள் மெய்யான ஒரு பயணத்தை மேற்கொண்டது எந்த ஆண்டு? அப்போது உங்கள் வயது என்ன? தமிழ் இலக்கியத்தில் அச்சமயம் யாரெல்லாம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர்?

பாவண்ணன்: என் முதல் சிறுகதையை எழுதி முடித்த கணத்திலேயே நான் என்னை ஓர் எழுத்தாளனாக உணர்ந்துவிட்டேன். அது 1982ஆம் ஆண்டு. என் பாதை எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.  என் முதல் சிறுகதையைத் ‘தீபம்’ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் காத்திருந்தேன். பிரசுரமாகவில்லை. உடனே தீபத்துக்கு இன்னொரு புதிய சிறுகதையை அனுப்பி வைத்தேன். அது பிரசுரமானது. என் பயணம் தொடங்கிவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு 24 வயது. எழுபதுகளில் எழுதத் தொடங்கி தம்மை உறுதியாக நிறுவிக் கொண்ட முன்னணி எழுத்தாளர்கள் வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பிரபஞ்சன், கந்தர்வன், நாஞ்சில்நாடன் போன்ற ஆளுமைகளும் என்னைவிட சற்றே வயதில் மூத்த கோணங்கி, சுப்ரபாரதிமணியன், சங்கரநாராயணன், இரா.முருகன் போன்றோரும் எழுதிக் கொண்டிருந்தனர்.


வல்லினம்:  பக்கத்து வீட்டு அக்காவின் பழைய புத்தகங்களில் இருந்துதான் ஜெயகாந்தனையும் கு. அழகிரிசாமியையும் கண்டடைந்ததாகக் கூறினீர்கள். அதேபோல உங்கள் சிறுகதை உலகத்தை அடையாளம் காண உதவியவர்கள் இவர்கள் இருவரும்தான் என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது குறித்து கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்?

பாவண்ணன்: அழகிரிசாமியின் சிறுகதைகளிலும் ஜெயகாந்தன் சிறுகதைகளிலும் காணக் கிடைத்த மனிதர்களில் பலர், கதைகளுக்காக உருவாக்கப்பட்ட கற்பனை மனிதர்களல்லர் என்பதையும் நம்மைச் சுற்றி வாழ்கிற உண்மையான மனிதர்களே என்பதையும் அவர்களுடைய வாழ்வின் ஒரு தருணத்தைக் கண்டெடுத்து அவ்விருவரும் கதைகளாக எழுதியிருக்கிறார்கள் என்பதையும் நான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டேன். என்னுடைய நிஜ வாழ்க்கையில் என்னைச் சுற்றி வாழும் மனிதர்களில் பலர் அழகிரிசாமியும் ஜெயகாந்தனும் தீட்டிக் காட்டிய  கதைமாந்தர்களின் சாயலோடு இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய வாழ்வில் புதைந்திருக்கும் கதைகளைக் கண்டடைய அந்த முன்னோடிகளின் ஆக்கங்களும் அவர்களின் வழிமுறையும்  துணையாக இருக்கும் என்று நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. புதுமைப்பித்தனையும் மெளனியையும் விட இவ்விருவரும் படைத்திருக்கும் கதைப்பாத்திரங்களில் என்னால் மிக எளிதாக ஒன்றிப் போக முடிந்தது.  அவர்களின் வழியாக மானுட குலத்தின் தீராத துக்கத்தையும் அழியாத உண்மையையும் கண்டறியும் பயணத்தை எழுத்து வழியாக நிகழ்த்த முடியும் என்றொரு நம்பிக்கை பிறந்தது. இன்று வரையில் அந்தப் பாதையில் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வல்லினம்: உங்களின் சிறுகதைகளை வாசிக்கும்போது சில சமயம் கு. அழகிரிசாமியின் நினைவு வருகிறது. யதார்த்தமான ஒரு சூழலில் நிகழும் அசாதாரணமான தருணங்களாக அவை பதிவாகி பெரும் தாக்கத்தை நிகழ்த்துகின்றன.  உங்கள் கதைகளில் வரும் மனிதர்களோடு உங்கள் கதை சொல்லலின் அழகியலையும் கு. அழகிரிசாமியிடம் பெற்றீர்கள் எனச் சொல்லலாமா?

பாவண்ணன்: நாம் வாழும் உலகத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மனிதர்களைப் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான தருணங்களைக் கடந்து வருகிறோம். ஆனால், எல்லா மனிதர்களையும் அல்லது எல்லாத் தருணங்களையும் நாம் ஒரு சிறுகதையாக வடிவமைக்க முயல்வதில்லை. நாம் முன்வைக்க நினைக்கும் மனிதர் என ஒரு சிலரே இருப்பார்கள். அல்லது நாம் முன்வைக்க நினைக்கும் தருணம் என ஒரு சில தருணங்கள் மட்டுமே இருக்கும். இந்தத் தேர்வின் பின்னணியில் நம் மனம் ஒரு சல்லடையாக செயல்படுகிறது. எல்லோருடைய மனத்திலும் ஒரு சல்லடை இருக்கும். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வனுபவத்துக்கும் எண்ணப்போக்குக்கும் உகந்த வகையில் ஒரு சல்லடையை உருவாக்கி வைத்துக் கொள்கிறார்கள்.  ஆரம்பக் காலத்தில், எனக்கு உகந்த சல்லடையை நான் உருவாக்கிக் கொள்ள எனக்கு உதவியவர்கள் அழகிரிசாமியும் ஜெயகாந்தனும். என் எழுத்துக்கான அழகியலின் தொடக்கப் புள்ளியாகவும் அவர்கள் இருந்தனர். என் வாசிப்பு பெருகப் பெருக, புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், ஆ.மாதவன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன் போன்ற பல மூத்த படைப்பாளிகளிடமிருந்தும் அழகியல் கலையை அறிந்து கொண்டேன். ரஷ்ய எழுத்தாளர்கள் தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, செகாவ், குப்ரின், புஷ்கின், துர்கனேவ் என நான் நன்றி சொல்ல வேண்டிய எழுத்தாளர்களின் பட்டியல் மிகவும் நீளம். அழகியல் கலையை அறிந்து முடிந்த ஒன்றாக ஒருபோதும் சொல்லவே முடியாது. அறிதோறும் அறிதோறும் அறியாமையையே அதிக அளவில் உணர்த்தும் கலை அழகியல் கலை. அதன் அனுபவத்தை விரிவாக்கிக் கொள்ள இன்னும் நான் பயிற்சி செய்தபடியே இருக்கிறேன்.

வல்லினம்: உங்களுக்கு ஆதர்சமான இவ்விரு எழுத்தாளர்களையும் ஆகியோரைச் சந்தித்துள்ளீர்களா? அந்த அனுபவத்தைப் பகிர இயலுமா?

பாவண்ணன்: நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அழகிரிசாமி மறைந்துவிட்டார். அவருடைய மறைவுக்குப் பிறகுதான் அவருடைய புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிற்காலத்தில், அவருடைய ஒட்டுமொத்த சிறுகதைகளைக் காலச்சுவடு ஒரு பெருந்தொகுதியாகக் கொண்டு வந்தபோது, அத்தொகுதிக்கு அழகியல் நோக்கில் ஒரு நீண்ட முன்னுரையை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு அமையும் என்று நான் அக்காலத்தில் ஒரு முறை கூட நினைத்துப் பார்த்ததில்லை.

கதைகளைத் தவிர, அழகிரிசாமி இரு நாடகங்களையும் எழுதியுள்ளார். இரண்டுமே மிக முக்கியமானவை, ஒன்று ‘கவிச்சக்கரவர்த்தி’. கம்பரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படைப்பு. மேடையில் நிகழ்த்தத்தக்க அளவில் மிகச் சிறப்பாக காட்சிகளை ஒருங்கிணைத்து எழுதப்பட்டது.  இன்னொன்று ‘வஞ்சமகள்’. சூர்ப்பனகை அவமானப்படுத்தப்படும் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது. கெடுவாய்ப்பாக, இரு நாடகங்களும் பெரிய அளவில் மேடைக்காட்சிகளாக நடிக்கப்படாததால், அவற்றுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை.

ஜெயகாந்தன் நான் எழுத வந்த காலத்தில் ஒரு பெரிய ஆளுமையாக உயர்ந்து நின்றிருந்தார்.  பட்டப்படிப்பை முடித்ததுமே வேலை கிடைத்து நான் கர்நாடகத்துக்குச் சென்றுவிட்டதால், தமிழ்நாட்டில் எழுதிக்கொண்டிருந்த பல மூத்த எழுத்தாளர்களையும் சமகால எழுத்தாளர்களையும் நான் சந்தித்ததே இல்லை. ஒரு சிலரை மிகவும் தாமதமாகச் சந்தித்தேன்.

ஜெயகாந்தனை நான் மூன்றுமுறை சந்தித்திருக்கிறேன். புத்தாயிரத்தாண்டு பிறந்ததையொட்டி கர்நாடக தொலைபேசித்துறையின் தலைமையலுவகத்தில் ஒரு தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது. அச்சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் என் நண்பர் முகம்மது அலி. இப்போது முடவன்குட்டி முகம்மது அலி என்னும் பெயரில் மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறார். அவ்விழாவுக்கு அவர் ஜெயகாந்தனைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அவர் தமிழில் ஆற்றும் உரையை நான் கன்னடத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என அவர் விரும்பினார். நான் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஜெயகாந்தன் உரையை மொழிபெயர்த்தேன். அதற்கு முன் அலி என்னை ஒரு சிறுகதை எழுத்தாளர் என்று ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்தினார்.   ”பெயரைப் பார்த்த நினைவிருக்கிறது” என்று என்னைப் பார்த்து புன்முறுவலோடு சொன்னார் ஜெயகாந்தன். அவரோடு வந்திருந்த சா.கந்தசாமியும் என் கதைகளைப் பற்றி சில சொற்கள் சொன்னதை அவர் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார்.

அன்று ஜெயகாந்தன் மேடையில் அரைமணி நேரம் பேசினார். நான் மொழிபெயர்த்ததை உன்னிப்பாக கவனித்தார். நிகழ்ச்சி முடிந்து தேநீர் அருந்தும் வேளையில் என்னைப் பற்றிக் கேட்டார். நான் படித்தது, வேலை கிடைத்து கர்நாடகத்துக்குள் வந்தது, பல ஊர்களில் பணி செய்த அனுபவத்தோடு பெங்களூருக்கு வந்து சேர்ந்த கதையையும் எழுதத் தொடங்கிய கதையையும் சுருக்கமாகச் சொன்னேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட பிறகு விடைபெற்றுச் சென்றார்.

அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அவருக்கு ஞானபீட விருது கிடைத்தது. அக்காலத்தில் தினமணி நாளேட்டில் அவ்வப்போது நடுப்பக்கக் கட்டுரைகளை நான் எழுதி வந்தேன். ஜெயகாந்தன் ஞானபீட விருது பெற்றமைக்காக அவரைப் பாராட்டும் விதமாக ’கலையைத் தேடி வந்த கெளரவம்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினேன். அது பரவலான கவனத்தைப் பெற்றது. அடுத்து இரண்டு மூன்று ஆண்டுகள் இடைவெளியிலேயே மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது எனக்குக் கிடைத்தது. அதற்கான விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினர்களாக ஜெயகாந்தனும் எம்.டி.வாசுதேவன் நாயரும் கலந்து கொண்டனர். ஒருவர் சால்வை அணிவிக்க, ஒருவர் மாலையிட அவ்விருதை நான் பெற்றுக் கொண்டேன். என் வாழ்வின் அரிய தருணங்களில் அது ஒன்று. அன்று ஜெயகாந்தன் மேடையில் என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்து “நீங்க தினமணியில எழுதிய கட்டுரையைப் படிச்சேன்” என்று புன்னகைத்தபடி என் கைகளை அழுத்தமாகப் பற்றிக் குலுக்கினார். பிறகு “பெங்களூருல நீங்க என் பேச்சை மொழிபெயர்த்தீர்கள் அல்லவா?” என்று புன்னகையுடன் தலையசைத்துக் கொண்டார்.

மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர்கள் சிலர் ஒருங்கிணைந்து தமிழில் ‘வார்த்தை’ என்றொரு மாத இதழையும் ‘எனி இந்தியன்’ என்னும் பதிப்பகத்தையும் தொடங்கினர். ஐந்து புத்தகங்களை ஒருசேர முடித்து ஒரு வெளியீட்டு விழாவை அவர்கள் நடத்தினர். அக்கூட்டத்துக்குத் தலைமையேற்று புத்தகங்களை வெளியிட்டவர் ஜெயகாந்தன். என்னுடைய ‘நதியின் கரையில்’ என்னும் கட்டுரைத் தொகுதியை அப்போது அவர் வெளியிட்டார். அப்போதும் ஐந்தாறு நிமிடங்களுக்கு அப்பால் அவரோடு உரையாட சரியான வாய்ப்பு அமையவில்லை. அவ்விதமாக, நான் அவரை மூன்று முறை சந்தித்தபோதும், ஒவ்வொரு முறையும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே  அவரோடு உரையாட முடிந்தது. ஆனால், அதுவே எனக்குப் பெரிய மன நிறைவை அளித்தது. ஒரு வேளை நான் சென்னைவாசியாக இருந்திருந்தால், தினமும் சந்தித்து உரையாடக்கூடிய நண்பராக மாறியிருப்பேன்.


வல்லினம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த நீங்கள், பெங்களூருக்குத் தொழில் நிமித்தமாகக் குடியேறிய காலத்தில் இணைய வசதியெல்லாம் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அங்கிருந்தபடி தமிழ் இலக்கியச் சூழலை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்? அச்சூழல் உங்களை எழுத்தாளனாகத் தொடர உதவியதா?

பாவண்ணன்: கர்நாடகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றச் சென்றபோது என் வயது 24. நூலக வாசிப்பின் விளைவாக எனக்குத் தமிழின் மிகச் சிறந்த சாதனை படைப்புகளின் அறிமுகம் இருந்தது. ரஷ்ய இலக்கியமும் ஐரோப்பிய இலக்கியமும் அறிமுகமாகியிருந்தது. நான் பணியாற்றத் தொடங்கியது பெல்லாரி மாவட்டத்தில். ஆறு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊர் மாற்றி ஊர் சென்று கொண்டே இருந்தேன். என் முகவரிகள் மாறிக் கொண்டே இருந்தன. அப்போது தமிழ்நாட்டில் வெளிவந்த எல்லா சிறுபத்திரிகைகளையும் சந்தா கட்டி வரவழைத்துப் படித்தேன். அவற்றில் வெளிவரும் விளம்பரங்களைப் பார்த்து புதிய புத்தகங்களின் வரவைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அவற்றை வி.பி.பி. வழியாக வரவழைத்துப் படித்தேன். சென்னைக்கு என் நண்பர்கள் புறப்படும்போதெல்லாம் அவர்களிடம் ஒரு புத்தகப்பட்டியலைக் கொடுத்தனுப்பி வாங்கி வரச் சொல்லி படிப்பேன். அப்போதுதான் ஜெராக்ஸ் வசதி நம் சூழலில் அறிமுகமாகியிருந்தது. நண்பர்கள் வழியாக அரிய நூல்களின்  ஜெராக்ஸ் பிரதிகளை வரவழைத்துப் படித்தேன். ‘அன்னா கரினினா’, ‘மதகுரு’, ‘நிலவளம்’ போன்ற மொழிபெயர்ப்புகளையெல்லாம் ஜெராக்ஸ் பிரதிகளாகவே படித்தேன். எனக்கு உதவும் நண்பர்கள் எல்லா ஊர்களிலும் இருந்தார்கள். அவர்களுடைய அன்பான உதவியால் எந்தப் புத்தகத்தைப் பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் படிக்கவும் என்னால் முடிந்தது. என் நண்பர்கள் இயற்கை எனக்களித்த அருங்கொடை. அவர்களால் என் வாசிப்பும் எழுத்து முயற்சியும் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வல்லினம்: நீங்கள் எழுதவந்த காலத்தில்,  வெ.சா., சு.ரா போன்ற இலக்கிய விமர்சகர்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். மேலும் கோட்பாட்டு விமர்சகர்களும் எழுதிக் கொண்டிருந்தனர். அந்த வகையில் உங்கள் படைப்புகள் தீவிர விமர்சனங்களுக்குட்பட்டுள்ளனவா? அவ்வாறான விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

பாவண்ணன்: தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து எழுதும் தமிழ் எழுத்தாளனாகவே நான் இருந்து வந்திருக்கிறேன். நான் ஏற்றிருந்த பணிச்சூழல் அவ்விதமாக இருந்தது. ஆயினும் சில எழுத்தாளர்களுடன் மடல்வழித் தொடர்பில் இருந்தேன். சில எழுத்தாளர்களுடன் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்புகளும் கிடைத்தன. பிரபஞ்சன், இராஜேந்திர சோழன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆ. மாதவன், பூமணி, சா.கந்தசாமி, வண்ணதாசன், விக்ரமாதித்யன், மா.அரங்கநாதன் போன்றோரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். க.நா.சு வை அவருடைய படைப்புகள் வழியாகவும் மொழிபெயர்ப்புகள் வழியாகவும் மட்டுமே நான் அறிவேன்.  சந்தித்ததில்லை. 1987இல் என்னுடைய முதல் சிறுகதை தொகுதி ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ வெளிவந்தபோது, க.நா.சு. சென்னைக்கு இடம் மாறி வந்துவிட்டிருந்தார். மா. அரங்கநாதனோடும் ‘முன்றில்’ இதழோடும் அவருக்கு நல்ல உறவு இருந்தது. என்னுடைய முதல் தொகுதியை அரங்கநாதனின் வாசிப்புக்காக அனுப்பி வைத்திருந்தேன். அவருக்கு அத்தொகுதி பிடித்திருந்ததாக பதில் எழுதியிருந்தார். அடுத்த ஆண்டில் அவர் ‘முன்றில்’ தொடங்கியபோது ஒவ்வொரு இதழிலும் க.நா.சு. மதிப்புரைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார். அப்போது மா. அரங்கநாதன் தன்னிடம் இருந்த ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’  தொகுதியைக் க..நா.சு.வுக்கு அளித்ததாகவும் அதை ஒன்றிரண்டு நாட்களிலேயே படித்து முடித்த க.நா.சு. “இந்தப் புதுப் பையன் எழுத்து நல்லா இருக்குது. டில்லிக்கு போய் வந்ததும் இதை பத்தி நான் ஒரு கட்டுரை எழுதறேன்” என்று சொன்னதாகவும் அரங்கநாதன் தெரிவித்தார்.  கெடுவாய்ப்பாக, சாகித்திய அகாதெமி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தில்லிக்குச் சென்றிருந்த க.நா.சு. தில்லியிலேயே மறைந்து போனார். அவருடைய கருத்தை அறிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.  வெங்கட் சாமிநாதன் என்னைவிட இருபத்தைந்தாண்டுகள் பெரியவர்.  ஆனால், அந்த வித்தியாசத்தைக் கடந்து என்னிடம் மதிப்புடன் பழகியவர். அவருடைய மகன் பெங்களூரில் இருக்கிறார். அவரைச் சந்திப்பதற்காக அடிக்கடி பெங்களூருக்கு வந்து தங்கியிருப்பார். அப்போது அவரைச் சந்திக்கச் செல்வேன். மணிக்கணக்கில் உரையாடுவார்.  உரையாடலில் பெரு விருப்பம் கொண்டவர் அவர். அந்த அறிமுகம் நிகழ்வதற்கு முன்பே, ‘சுபமங்களா’ இதழில் என் சிறுகதை தொகுதிகளுக்கும் நாவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் தொடர்ந்து மதிப்புரை எழுதினார். அவருடன் உரையாடிய அனுபவங்களை ‘வெங்கட் சாமிநாதன் : சில பொழுதுகள் சில நினைவுகள்’ என்னும் தலைப்பில் நான் தனி நூலாகவே எழுதியிருக்கிறேன். என் படைப்புகள் மீது நல்ல மதிப்பையே அவர் கொண்டிருந்தார். “நீ போற வழி நல்லாதான் இருக்குதுய்யா. குற்றம் கண்டுபுடிச்சி சொல்ல ஒன்னுமில்லை.  நீ போயிட்டே இரு” என்பதுதான் அவர் அடிக்கடி என்னிடம் சொன்ன சொல். சுந்தர ராமசாமியும் ஏறத்தாழ இதே சொற்களைத்தான் சொன்னார். “உங்க கதைகள் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்குது. எழுத்துல சில விஷயங்களை நீங்க வேணும்னே தவிர்க்கிற மாதிரி தெரியுது.  உங்க வாழ்க்கைக்கு நெருக்கமா நீங்க இருக்கணும்னு நெனைக்கறாப்புல தோணுது. அதனால ரொம்ப கான்ஷியஸா தவிர்க்கறீங்கன்னு நெனைக்கறேன். ஆனா ஒரு எழுத்தாளன் அப்படி செய்யக்கூடாதுன்னு ஒரு நாளும் நான் சொல்லமாட்டேன். தவிர்க்கறதும் தவிர்க்காம விடறதும் உங்க சுதந்திரம். உலகத்துல அப்படியும் ஒரு பாணி இருக்கட்டுமே” என்று அவர் சொன்ன சொற்கள் என் நெஞ்சில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.  ஆனால் அதைப் பற்றி அவர்கள் எங்கும் எழுதவில்லை. அதற்கான நேரமும் சூழலும் அமையாமல் போயிருக்கலாம். புதுமை சார்ந்த கோட்பாட்டு விமர்சகர்களுக்கு என்னைப் போன்ற எதார்த்த வழி படைப்பாளிகள் அனைவருமே ஏதோ ஒருவித பழமைவாதிகள் என்ற எண்ணமே இருந்தது. அவர்கள் எதார்த்த வழி படைப்பாளிகள் ஒருவரையும் பொருட்படுத்தி வாசிக்க முயற்சி செய்யாத நிலையில் என் படைப்புகளை வாசித்திருப்பார்கள் என்று நினைக்கவே இடமில்லை.


வல்லினம்: கன்னட மொழியைப் பெங்களூர் சென்றுதான் கற்றீர்களா?

பாவண்ணன்: பெல்லாரியில் இறங்கி பணியில் இணைந்த முதல் நாளே கன்னட மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்குள் விதையாக விழுந்துவிட்டது. என்னோடு என் முகாமில் என்னைப் போலவே ஆறு இளநிலை பொறியாளர்கள் இருந்தனர். இருவர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் நான் கன்னடத்தில் பேச உதவி செய்தார்கள். எங்கள் முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினார்கள். அவர்களில் தெலுங்கு பேசுகிறவர்களும் இருந்தனர். கன்னடம் பேசுகிறவர்களும் இருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட அரைகுறையான உரையாடல்களும் என் கன்னட அறிவுக்கு உதவியாக இருந்தது. முதல் நாள் மாலை வேலை முடிந்ததும் நகரத்துக்குச் சென்று, கன்னட அரிச்சுவடிப் புத்தகத்தையும் முதல் வகுப்புக்குரிய பாடப்புத்தகத்தையும் வாங்கிக் கொண்டு வந்தேன். உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளுமாக கன்னடத்தில் மொத்தம் 49 எழுத்துகள். என் நண்பர்கள் வழியாக அவற்றை இரண்டே நாட்களில் கற்றுக் கொண்டேன். அடுத்து உயிர்மெய்யெழுத்துகளையும் ஒரு வாரத்தில் கற்றுக் கொண்டேன். பிறகு இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என அவர்களே அடுத்தடுத்து கற்பித்தனர். எழுத்து மொழியை நண்பர்கள் வழியாகவும் பேச்சு மொழியை என் தொழிலாளர்கள் வழியாகவும் வெகு விரைவில் கற்றுக் கொண்டேன். பிறகு, ஒன்றாம் வகுப்பு கன்னடப் புத்தகத்தை அடுத்து இரண்டு, மூன்று எனத் தொடங்கி எட்டாம் வகுப்பு கன்னடப் புத்தகம் வரை வாங்கி வந்து படிக்கவும் எழுதவும் தீவிரமாகப் பயிற்சி செய்தேன். ஆறு மாதத்தில் கன்னடம் கரதலப்பாடமாகிவிட்டது. பிறகு செய்தித்தாள்,  வார இதழ், மாத இதழ் எனக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கி எல்லாவற்றையும் படிக்கும் பயிற்சியை எடுத்துக் கொண்டேன். ஓராண்டுக்குப் பிறகு நேரடியாக கன்னட நாவலைக் கையிலெடுத்துப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சிவராம காரந்த். அவருடைய ‘சோமனதுடி’ நாவலைத்தான் நான் முதன் முதலில் படித்தேன். அது ஒரு பரவசமான அனுபவம். பெரு நகரங்களையும் சிறு நகரங்களையும் கேபிள் வழியாக இணைத்து எல்லா ஊர்களுக்கும் எஸ்.டி.டி. வசதியை ஏற்படுத்தித் தருவதுதான் எங்கள் பணி. இப்படி பெல்லாரியில் தொடங்கிய என் பயணம் ஹொஸபெட்டெ, கொப்பள், கதக், ஹூப்ளி, தார்வாட் வரைக்கும் சென்று முடிந்தது. பிறகு ஆந்திரத்தில் திருப்பதி, சித்தூர் என ஒரு ஆண்டு. மீண்டும் கர்நாடகத்தில் ஷிமோகா, சித்ரதுர்கா, பத்ராவதி, ஹரிஹர் என இரண்டு ஆண்டுகள். 1989இல்தான் நான் பெங்களூருக்கு வந்தேன். அதற்குப் பிறகும் என் குடும்பத்தினர் இங்கிருக்க, நான் மட்டும் ஊரூராக அலைந்து கொண்டுதான் இருந்தேன். அது எல்லா ஊர்களின் பேச்சு மொழியையும் வட்டார வழக்கையும் புரிந்து கொள்ள உறுதுணையாக இருந்தது. என் பயணங்களின் வழியாக நான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்ட உண்மை ஒன்றுண்டு. நம் வாழ்க்கையில் நடப்பவை அனைத்தும் வரையறுத்துச் சொல்ல முடியாத ஏதோ ஒரு வகையில் நல்லதற்கே என்பதுதான் அது. அது ஒன்றும் புதிய விஷயமல்ல. என்றென்றும் இருக்கக்கூடிய ஒரு பழங்காலத்து உண்மைதான்.

வல்லினம்: தமிழில் தலித் இலக்கியம் உருவாக கன்னட தலித் சிறுகதைகளை நீங்கள் மொழியாக்கம் செய்தது உங்களின் முதன்மையான பங்களிப்புகளில் ஒன்று. உங்களுக்கு அந்த எண்ணம் எப்படி உருவானது?

பாவண்ணன்: நான் கன்னட மொழியைக் கற்று, கன்னட இலக்கியப் படைப்புகளை நேரடியாகப் படிக்கத் தொடங்கிய காலத்திலேயே கர்நாடகத்தில் தலித் இயக்கம் உருவாகி நிலைபெற்றுவிட்டது. அதற்குச் சில ஆண்டுகள் முன்பாக கர்நாடகத்தின் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்திலும் அந்த இயக்கம் நிலைபெற்றிருந்தது. பெல்காம் என்பது இரு மாநிலங்களுக்கும் இடையிலான பகுதி என்பதால் மராத்தி இலக்கியம் கன்னடத்திலும் கன்னட இலக்கியம் மராத்தியிலும் மொழியாக்கம் செய்யப்படுவது மிக இயல்பாக நடந்தேறிக் கொண்டிருந்தது. அரசியல் களங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக உருவான தலித் எழுச்சியும் சுதந்திர இந்தியாவில் கல்வியால் தலைநிமிர்ந்த முதல் தலைமுறை தலித் இளைஞர்களின் வேட்கையும் இணைந்து ஒரு புதிய சிந்தனை போக்கு உருவாவதற்குத் தூண்டுகோலாக அமைந்தன. கவிதை, சிறுகதை எனப் பல தளங்களில் தலித் படைப்பாளிகள் உருவானார்கள். தாம் எப்படி உலகத்தாரால் நடத்தப்படுகிறோம் அல்லது நசுக்கப்படுகிறோம் என்பதைப் படைப்புகளாக எழுதி வெளியுலகம் அறியும்படி செய்தார்கள். ஒரு சிறுகதையாகவோ அல்லது நாவலாகவோ முன்வைக்கும்போது, அது புனைவாக கருதப்பட்டுவிடும் என்னும் எச்சரிக்கை உணர்வால், தம் வாழ்க்கையைத் தன்வரலாற்று நூல்களாக அவர்கள் எழுதத் தொடங்கினர்.  உண்மை தன்மை உணரப்பட வேண்டும் என்னும் எச்சரிக்கை உணர்வு அவ்விதத்தில் செயல்படத் தூண்டியது. ஏற்கனவே வெளிவந்திருந்த மராத்திய தலித் எழுத்தாளர்களின் தன்வரலாற்று நூல்கள் கன்னட தலித் எழுத்தாளர்களுக்கும் உத்வேகமூட்டி, அவர்களையும் எழுத வைத்தன. அத்தகு படைப்புகள் எழுந்து வந்த காலத்தில் நான் அவற்றுக்கு வெகு அருகில் இருந்தேன். அதனால் ஏற்பட்ட மாற்றங்களை நேருக்கு நேர் பார்த்தேன். இப்படிப்பட்ட வீச்சுடன் தமிழுலகத்திலும் தன்வரலாற்று நூல்கள் எழுதப்பட வேண்டும் என நான் நினைத்தேன். யாராவது ஒருவர் தொடங்கி வைத்தால், பிறர் அதே வழியில் விருப்பத்தோடு எழுதக்கூடும் என நான் நம்பினேன். அதனால் உடனடி  முன்மாதிரியாக விளங்கிய கன்னடச் சிறுகதைகளையும் தன்வரலாற்று நூல்களையும் அறிமுகம் செய்யும் விதமாக மொழிபெயர்த்து வெளியிட்டேன். 

வல்லினம்: உங்கள் முயற்சிக்குப் பின் அவ்வாறான தலித் இலக்கியங்கள் தமிழில் உருவானதா? அவற்றில் குறிப்பிடத்தக்க படைப்புகள் எவை?

பாவண்ணன்: என் மொழிபெயர்ப்பில், வெளிவந்த இரு தலித் தன்வரலாறுகளும் கன்னட தலித் எழுத்தாளர்களின் சில தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட ‘புதைந்த காற்று’ என்னும் தொகுதியும் பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டன. பத்திரிகைகளில் நல்ல மதிப்புரைகளும் வெளிவந்தன. அந்தக் காலக்கட்டத்தில் பல இளைஞர்களை அந்த நூல்கள் ஈர்த்தன. அவர்களில் சிலர் ஊக்கம் கொண்டு எழுதத் தொடங்கினர். இந்த நூல்களை அவர்கள் முன்னோடி நூல்களாகக் கருதினார்களா இல்லையா என்பதைக் குறிப்பிட்ட எழுத்தாளர்கள்தான் சொல்ல வேண்டும். நானாக அப்படிச் சொல்வது பிழையாகும். இந்த மொழிபெயர்ப்புகள் வெளிவருவதற்கு முன்பே பாமா எழுதிய ‘கருக்கு’ வந்துவிட்டது. இவை வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு கே.ஏ.குணசேகரன் எழுதிய ‘வடு’ என்னும் தன்வரலாறு வெளிவந்தது. இரண்டுமே தமிழ்ச்சூழலில் முக்கியமான ஆரம்பப் புள்ளிகள். இன்றளவும் அனைவராலும் வாசிக்கப்படுபவை. திருக்குமரன் கணேசனின் ’கறிவிருந்தும் கவுளி வெற்றிலையும்’ சமீப காலத்தில் வெளிவந்த மிக முக்கியமான தன்வரலாற்று நூல். அந்நூலுக்காக அவர் எழுதியிருக்கும் முன்னுரையில்,  கவர்ன்மெட் பிராமணன் தன்வரலாற்றை எழுதிய அரவிந்த மாளகத்தியை நினைவுகூர்ந்து பதிவு செய்திருக்கிறார். ராஜ் கெளதமன் எழுதிய ‘சிலுவைராஜ் சரித்திரம்’ ஒரு நாவல் என்றபோதும் அதை தன்வரலாற்று நாவல் என்றே குறிப்பிடலாம். இன்னும் கூட சில படைப்புகள் இருக்கலாம். நான் படித்திராத நிலையில் ஒரு முழுமையான பட்டியலைக் கொடுப்பது மிகவும் சிரமம்.

வல்லினம்: தலித் இலக்கியம் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் சாதிய இலக்கியம் என இன்று பேசப்படுகிறது. உங்கள் வாசிப்பில் தலித் இலக்கியம் என்பதை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

பாவண்ணன்: ’இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’ என மானுட குலத்தை அறத்தின் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து மதிப்பிட்ட இலக்கிய மரபில் வந்தவர்கள் நாம். எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே. அழகிரிசாமி எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையின் தலைப்பு ‘சுயரூபம்’. இவ்வாழ்வில் ஒருவனை இரு குணங்கள் விலங்காக  மாற்றுவதற்குத் தயாராக இருக்கின்றன. ஒன்று பசி. இன்னொன்று சாதிப் பெருமிதம். ஒருவன் சாதிப் பெருமிதம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் சாப்பாட்டுக் கடையில் உட்கார்ந்து கொண்டு உணவைப் பற்றி பொருட்படுத்தாதவனைப் போல ஏளனமாகப் பேசிச் சிரிக்கிறான்.  அவனே பசி மேலோங்கிய தருணத்தில் இன்னொருவனை அடித்து வீழ்த்தி விலங்கைப் போல அடுத்தவனிடமிருக்கும் உணவைப் பறித்துக் கொள்ள முயற்சி செய்கிறான். இரு விலங்குகளையும் கட்டுப்படுத்தி ஆளத் தெரிந்தவர்களுக்குப் பிரச்சினை இல்லை. கட்டுப்பாடு அற்றவர்கள் ஏதோ ஒன்றுக்கு இரையாகி வீழ்ந்துவிடுகிறார்கள். சாதிய அடையாளம் வெளிப்படையாக முன்வைப்பதாலேயே இக்கதையைச் சாதியக் கதை என யாரும் வகுத்துவிட முடியாது. சாதிப் பெருமையில் அடங்கியிருக்கும் வெறுமையையும் அறிவீனத்தையும் உணர்த்தும் கதை என்றுதானே சொல்ல முடியும். இன்னொரு சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. அது நாஞ்சில் நாடன் எழுதிய கதை. அது ஒரு  விற்பனை பிரதிநிதியின் கதை. தொழில் காரணமாக காலை முதல்  அலைந்து கொண்டே இருந்ததில் அவனுக்குச் சாப்பிடக்கூட நேரமில்லை.  ஒரு சாப்பாட்டுக் கடையில் நான்கு ரொட்டிகளைப் பொட்டலமாகக் கட்டி எடுத்துக் கொண்டு அவசரமாக ஓடி வந்து ரயிலைப் பிடிக்கிறான். ரயில் ஓடத் தொடங்கியதும் அந்தப் பொட்டலத்தைப் பிரித்து உண்ணத் தொடங்குகிறார்.  இன்னும் அரைத்துண்டு ரொட்டி மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில் அறிமுகமில்லாத இன்னொருவர் அவர் கையைப் பிடித்து நிறுத்தி ‘நாம் சாப்பிடலாம்’ என்று சொல்கிறார். அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெரியவர் பொட்டலத்தைத் தன் பக்கம் இழுத்து சாப்பிடத் தொடங்குகிறார். சாதி, மொழி, இனம் என அனைத்தையும் கடந்து பசியின் விளைவாக ஒன்றிணையும் மானுட உணர்வை இக்கதையின் சித்தரிப்பு உணர்த்துவதை நம்மால் உணர முடிகிறது அல்லவா? ஒரு கதையில் முன்வைக்கப்படும் ஒரு பாத்திரத்தை எந்த அடையாளமும் இல்லாமல் மொட்டையாக எப்படி ஒருவர் குறிப்பிட முடியும்? அவருடைய மொழி, இன, சாதி அடையாளம் இடம்பெறுவதை ஒரு படைப்பாளியால் தவிர்க்க முடியாது. ஆனால், அவை அனைத்தும் சிறுகதை உணர்த்த முற்படும் சித்திரத்துக்கு துணைநிற்பவையாகவும் நம்பகத்தன்மையை உருவாக்குவதாகவும் மட்டுமே தொழிற்படுகின்றன. அதுவே அதன் எல்லை. நல்ல சிறுகதைகள் அனைத்தும் அப்படித்தான் அமைந்துள்ளன. அக்கதைகளை ஒருவரும் சாதியக் கதைகள் என மமதிப்பிடுவதுமில்ல, ஒதுக்குவதுமில்லை. அப்படிப்பட்ட நிலையில் சாதிய அடையாளம் சுட்டிக்காட்டப்படுவதாலேயே தலித் எழுத்தாளர்களின் கதைகளை மட்டும் சாதியக் கதைகள் என எப்படி வகுக்க முடியும்? யார் எழுதிய கதையாக இருந்தாலும் சரி, அது எந்தப் புள்ளியை நோக்கி பயணம் செய்கிறது, எத்தகு சித்திரத்தை அளிக்கிறது, எத்தகைய உண்மையை நமக்கு உணர்த்துகிறது என்பதுதான் முக்கியம். வேறு எந்த அம்சமும் முக்கியமில்லை.

வல்லினம்: இந்தக் கேள்வியை இன்னும் விளக்கமாகக் கேட்கிறேன். கெய்ல் ஓம்வெத் தலித்தியம் என்பதைக் கொஞ்சம் விரிவு படுத்தி தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படும் அனைவரும் தலித்துகள் என்கிறார். தயாபவர் போன்ற மராட்டிய எழுத்தாளர்களும் பொருளாதார கலாச்சார அடக்குமுறைக்கு ஆளானவர்களையும் தலித் எனும் வகைமையில் அடக்கலாம் என்கிறார். ஆனால், தமிழில் தலித் இலக்கியம் என்பது சாதிக்குள் அடங்கியுள்ளதா எனக் கேட்கிறேன். கன்னடத்திலும் சாதிய ஒடுக்குமுறை அல்லது தீண்டாமையைப் பேசும் சூழல்தான் தலித் இலக்கியமாக முன்வைக்கப்படுகிறதா?

பாவண்ணன்: களச் செயல்பாடு என்பது வேறு. இலக்கியச் செயல்பாடு என்பது வேறு. ஒரு சமூகத்தில் சில நன்மைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் மக்களுக்குக் களச் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட தருணத்தில் ஒருங்கிணைந்து நின்றால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். இலக்கியச் செயல்பாடு என்பது இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது முழுக்க மனம் சார்ந்தது. சிந்தனை சார்ந்தது. ஓர் இலக்கியச் செயல்பாட்டை ஒரு சாதி அமைப்புக்கு உரியதாக ஒரு போதும் வகுக்கவே முடியாது. அது தன்னிச்சையானது. தனக்கேயான பாதையைக் கொண்டது. வாசகர்கள் வகைப்படுத்தி புரிந்துகொள்வதற்கான ஒரு சட்டகமாக மட்டுமே தலித் இலக்கியம் என்னும் அடையாளம் தேவைப்படுகிறது. தலித்துகள் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் வலியையும் முன்வைப்பதால் மட்டுமே ஒரு படைப்பு இலக்கியப் படைப்பாக நிலைத்து நிற்க முடியாது. எந்தப் படைப்பும் இலக்கியம் என்னும் மாபெரும் வடிவத்துக்கே உரிய அழகியலையும் ஆழத்தையும் அது கொண்டிருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.

சங்க இலக்கியத்தை அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என நாம் ஏன் பிரிக்கிறோம்? பாடல் வடிவங்களை ஆசிரியப்பா, வெண்பா, விருத்தப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என ஏன் பிரிக்கிறோம். கூடுதலான புரிதலுக்காக மட்டுமே வகைமைப்படுத்துவது அவசியமாகிறது. ஒரு பாடல், பாட்டுக்கே உரிய தாளத்தையும் ஆழத்தையும் கொண்டிருக்கும்போது மட்டுமே பாடலாக ஒரு வாசகனின் மதிப்பைப் பெறும். ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்ட பாடல்களைச் சலித்துச் சலித்துத்தானே நம் முன்னோர்கள் அகநானூறையும் புறநானூறையும் தொகுத்து வைத்தார்கள். அந்தக் காலத்து வகைமைப்படுத்தலின் விளைவாகவே அதை நாம் கருதுகிறோம்.

ஒரு வாசகனின் கோணத்தில் தலித் இலக்கியமும் ஒரு வகைமையே. எல்லா மாபெரும் இலக்கியங்களும் தொட்டு நிற்கக்கூடிய ஆழத்தை தலித் இலக்கியமும் தொட வேண்டும். அப்படித் தொடுகிற படைப்புகளே வாசக மனத்தில் இடம் பிடிக்கிறது. வரலாற்றிலும் இடம் பிடிக்கிறது. நான் அறிந்த வகையில் நான் பேசிப் பழகிய சித்தலிங்கையா, தேவனூரு மகாதேவ, மொகள்ளி கணேஷ் ஆகியோரின் படைப்புகள் அந்த ஆழத்தைத் தொட்டு நிற்பவை. சாதிய அடையாளத்தைக் கடந்து செல்பவை. ஒடுக்கு முறை அனுபவங்களையும் தீண்டாமை அனுபவங்களையும் பிறரைவிட தலித்துகள் எதிர்கொள்கிறார்கள் என்பது எதார்த்தமான உண்மை. ஓர் எழுத்தாளருக்கு, தொடக்க நிலையில் சொந்த அனுபவங்கள் சார்ந்து யோசிப்பதும் எழுதுவதும் எளிதாக இருக்கும். ஆனால், ஒருவரும் அதை மட்டுமே நம்பியிருப்பதில்லை.  மனப்பயிற்சியும் எழுத்துப்பயிற்சியும் பெருகப் பெருக, பிறர் அனுபவங்களையும் அவர் தன்வயமாக்கிக்கொள்கிறார்.  வாடிய பயிரைக் காணும்போது அவரால் வாடாமல் இருக்க முடிவதில்லை. அதுதான் ஒரு படைப்பாளிக்குரிய மனம்.  அது ஒரு நீண்ட பயணம். எல்லா எழுத்தாளர்களும் அந்தப் பயணத்தில் எங்கும் தடைப்பட்டு நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டே இருப்பவர்களே.’

வல்லினம்: தமிழைத் தவிர இந்தியாவின் பிற மொழிகளில் தலித் இலக்கியத்தின் போக்கு எவ்வாறு உள்ளது?

பாவண்ணன்: தமிழ், கன்னடம், ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெளிவரும் படைப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளும்  வாய்ப்பு இல்லாத சூழலில் இக்கேள்விக்கு என்னால் நேரடியான பதிலைச் சொல்வதில் தயக்கமிருக்கிறது. ஆனால், இதையொட்டி எனக்குத் தெரிந்த ஒரு தகவலை மட்டும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பாளருக்கான விருது விழாவைப் பெங்களூரில் நடத்தியது. விருது பெறுவதற்காக எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்த மொழிபெயர்ப்பாளர்கள்  கலந்து கொண்டனர். விழா முடிந்து உணவு இடைவேளையின்போது அசாம், சிக்கிம், பீகார், உத்தரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். அம்மொழிகளில் தலித் எழுத்துகள் சார்ந்து உருவாகியிருக்கும் உத்வேகத்தைப் பற்றி அவர்கள் உற்சாகமாக எடுத்துரைத்தனர். சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதுவதைவிட ஒவ்வொருவரும் தன்வரலாறுகளை எழுதி வெளியிடுவதைப் பற்றி  பலரும் சொன்னார்கள். கன்னடச் சூழலிலும் தன்வரலாறு நூல்களே பெரிதும் வருகின்றன என்று நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.  அதன் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தன்வரலாறுகள் என்பவை நமது சமகாலம் பற்றி நாம் எழுதி வைக்கும் ஆவணங்கள். அவை சார்ந்து எவ்விதமான விமர்சனங்களுக்கும் இடமில்லை. ஒரு மனிதனாக இந்த மண்ணில் காலூன்றி நிற்பதற்குப் படும் பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளையும் அவை நேரடி அனுபவக் குறிப்புகளாக பதிவு செய்கின்றன. ஒவ்வொரு மொழியிலும் குறைந்தபட்சம் ஒரு பத்து தலித் தன்வரலாறுகள் எழுதப்பட்டு நிலைத்துவிட்டன என்று நினைத்துக் கொள்ளுங்கள். எல்லா இந்திய மொழிகளிலும் இப்படிப் பத்து பத்து தன்வரலாறுகள் எழுதப்பட்டு நிலைத்துவிட்டன என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவற்றில் மிகச் சிறந்த ஐம்பது தன்வரலாறுகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறும் என்றால், அவையே இந்திய தலித் வாழ்க்கை நிலையின் தோராயமான சித்திரத்தை உணர்த்தும் வரலாற்றுச் சாட்சியங்களாக திகழும் என்பது என் எண்ணம். சமூக ஆய்வாளர்கள் யாராவது இத்தகு நோக்கத்துடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு செயல்பட்டால் நல்லது.

வல்லினம்: இதன் அடிப்படையில் தலித் இலக்கியத்திற்கான வரையறை ஒன்றை உங்கள் வாசிப்பின் புரிதலின் வழி வழங்க இயலுமா?

பாவண்ணன்: எந்த வரையறையும் தோராயமான ஒன்றுதான். ஒருபோதும் தீர்மானமாக எதையும் வரையறுத்துவிட முடியாது. எப்போதும் மாற்றங்களுக்கான வழிகளையும் அது தன்னகத்தே கொண்டிருக்கிறது. தலித் இலக்கியம் என்பது தனி வரையறைகளைக் கொண்ட உறுப்பல்ல. அது பேரிலக்கியம் என்னும் சட்டகத்தின் உறுப்பு. எந்தத் தலித் படைப்பும் இலக்கியம் என்னும் மாபெரும் வடிவத்துக்கே உரிய அழகியலையும் ஆழத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

வல்லினம்: உங்களைக் கவர்ந்த புனைவுகள் குறித்து தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். இலக்கிய விமர்சனம் செய்துள்ளீர்களா? என் வாசிப்பில் இல்லை என்றே கருதுகிறேன். அப்படியென்றால் ஏன்?

பாவண்ணன்: நான் எழுதத் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே புத்தகங்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் அவற்றை பற்றி சிறு சிறு நினைவுக் குறிப்புகளாக நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் பதிவு செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். பிறகுதான் அவற்றை தனிக் கட்டுரைகளாக எழுதும் ஆர்வம் பிறந்தது. நூல் அறிமுகக் கட்டுரைகளை எழுதுவதற்கு நான் எனக்கென சில வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறேன். சிறுகதை, நாவல், கட்டுரை என எந்தத் துறை சார்ந்த புத்தகமானாலும் சரி, அதில் வெளிப்பட்டிருக்கும் அழகியல் பார்வைகளையே நான் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். ஒரு வாசகனாக அக்கூறுகள் எனக்கு அளிக்கக்கூடிய நிறைவுணர்வு மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.  ஆகவேதான் நான் எப்போதும் என்னைக் கவர்ந்த புத்தகங்களை மட்டும் முன்வைத்து எழுதுகிறேன். அவற்றை ஒருபோதும் பொதுவாக நம் சூழலில் எழுதப்படும் மதிப்புரைக் கட்டுரைகளுக்கு இணையானதாக வைத்து மதிப்பிடக் கூடாது. எனக்கு நிறைவைத் தராத ஒரு படைப்பைப் பற்றி நான் ஒருபோதும் எழுதுவதில்லை. உள்ளடக்கம் சார்ந்தோ, வடிவம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ ஏதோ ஒரு வகையில் ஒரு படைப்பு எனக்கு நிறைவை அளிக்க வேண்டும். அந்த அம்சத்தை ஒரு பற்றுக்கோடாகப் பிடித்துக் கொண்டு என் அறிமுகத்தைத் தொடங்குவேன். அப்படைப்பில் நான் மிகவும் ரசித்துப் படித்த பகுதிகளை முன்வைப்பேன். நூலில் அங்கங்கே உருவகங்களாகவும் படிமங்களாகவும் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிர்களை விடுவித்து உணர்த்தியபடி செல்வேன். அப்போது அடையக் கூடிய பரவசங்களைப் பற்றியும் குறிப்பிடுவேன். ஒரு வாசிப்பு என்பது எவ்வளவு தொலைவுக்கு என் சிந்தனையை முன்னோக்கிச் செலுத்துகிறது என்பதையும் முக்கியமான கூறாகக் கருதுவேன். படைப்புக்கணங்கள் வழியாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் வழிமுறையையும் சுட்டிக் காட்டுவேன். இலக்கியத்தைப் புரிந்து கொள்வதன் வழியாக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அறிமுகக் கட்டுரைகளை அமைத்துக் கொள்வேன். வாழ்க்கை பாதையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு கணம்தான் படைப்பாக மாறுகிறது. அக்கணத்தை உருப்பெருக்கம் செய்யச் செய்ய அது வாழ்க்கையின் பேருருவத்தைக் காட்டுகிறது. வாழ்க்கையிலிருந்து இலக்கியத்துக்கும் பிறகு இலக்கியத்திலிருந்து வாழ்க்கைக்கும் செல்லத்தக்க வட்டப் பாதையில் வெளிச்சம் விழும்படி என் கட்டுரைகளை அமைத்துக் கொள்வேன். தொண்ணூறுகளின் இறுதியில் ‘திண்ணை’ என்னும் இணைய இதழ் தொடங்கப்பட்டபோது, அதில் ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் நூறு கட்டுரைகளை எழுதினேன். தமிழகத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளையும் இலங்கையில் எழுதப்பட்ட சிறுகதைகளையும் பிற இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் எழுதப்பட்டு தமிழ்மொழிபெயர்ப்பில் படிக்கக் கிடைத்த முக்கியமான சிறுகதைகளையும் முன்வைத்து, இலக்கியத்தின் வழியாக வாழ்க்கையின் பேருருவத்தை அணுகிப் புரிந்து கொள்ளும் விதமாக அக்கட்டுரைகளை எழுதினேன். அதன் இன்னொரு பகுதியாக ஐம்பது கவிதைகளை முன்வைத்து ‘உயிரோசை’ என்னும் இணையத் தளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகளை எழுதினேன். அவை அனைத்தும் அழகியல் வழியாக வாழ்வியலை நெருக்கமாக உணர உதவி செய்பவை என்பது என் நம்பிக்கை. ஒன்றை மதிப்பிட்டு அதன் எல்லா அம்சங்களையும் பரிசீலித்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு வழிமுறையை விமர்சனம் எனக் குறிப்பிடலாம் என்றால், என்னையும் நீங்கள் இலக்கிய விமர்சகன் என்று ஏற்றுக் கொள்ளலாம்.

வல்லினம்: நீங்கள் எதார்த்தவியல் புனைவுகளையே அதிகம் எழுதுகிறீர்கள் என்று அறிய முடிகின்றது. தமிழில் மிகவும் பழமையானதும் வலிமையானதுமாக எதார்த்தவியல்  பாணியே இருக்கின்றது. ஆனால், இன்றைய இளம் வாசகனை எதார்த்தவியல் படைப்புகள் எந்த அளவு  கவரும் என நினைக்கிறீர்கள்.  எதார்த்தமல்லாத (Non-realism) போக்குகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

பாவண்ணன்: எதார்த்தவழி எழுத்து முறை இன்றைய இளம் வாசகர்களுக்கு உவப்பளிக்காது எனச் சொல்ல முடியாது. இன்று எழுதும் புதிய எழுத்தாளர்களும் சரி, இன்று வாசிக்கும் புதிய வாசகர்களும் சரி, புதிய எதார்த்த வழி கதைகளை விரும்பி வாசிப்பவர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.   ‘திண்ணை’, ‘சொல்வனம்’, ‘கனலி’, ‘பதாகை’, ‘வாசகசாலை’, ‘தமிழினி’, ‘நீலி’, ‘வல்லினம்’ எனத் தமிழில் வெளிவரும் பெரும்பாலான இணைய இதழ்களை நான் தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். அவற்றில் எழுதும் இளைய எழுத்தாளர்களின் படைப்புகளையும் விரும்பிப் படிக்கிறேன். முன்பு எப்போதும் இல்லாத வகையில் எதார்த்த வகைமை சார்ந்து எழுதுகிறவர்களே இன்று அதிக அளவில் எங்கெங்கும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எதார்த்த வகை எழுத்துக்கு அவர்கள் தம் ஆற்றலுக்கு இசைவான வழியில் மெருகேற்றியிருக்கிறார்கள். ‘அரூ’ இதழில் அறிவியல் கதைகளை எழுதும் இளைஞர்களின் படைப்புகளிலும் உள்ளடக்கம் சார்ந்து அறிவியல் உண்மைகளையும் கற்பனைகளையும் முன்வைக்கும் முயற்சிகளைப் பார்க்க முடிகிறது. ஆயினும், அத்தகு படைப்புகளிலும் வெளிப்பாடு சார்ந்து எதார்த்த பாணியைப் பின்பற்றும் முனைப்பையே பார்க்க முடிகிறது. எதார்த்த எழுத்து முறை தன்னைத்தானே பல நுட்பங்களுடன் ஒவ்வொரு கட்டத்திலும் புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், எல்லாக் காலத்து எழுத்தாளர்களுக்கும் அது உகந்த எழுத்து முறையாக இருக்கிறது.

வல்லினம்: ‘சத்தியத்தின் ஆட்சி’, ‘எல்லாம் செயல்கூடும்’, ‘நிலமிசை நீடு வாழ்பவர்’, ‘எப்பிறப்பில் காண்போம் இனி’, ‘மண்ணில் பொழிந்த மாமழை’ எனக் காந்திய ஆளுமைகள் குறித்த கட்டுரை நூல்கள் எழுதியுள்ளீர்கள். உங்களைக் காந்தியவாதி என வரையறுக்கலாமா?

பாவண்ணன்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிய தகவலுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்தேன். அது இலங்கையைச் சேர்ந்த இராஜகோபால் என்பவர் எழுதிய தன்வரலாற்று நூல். எப்போதும் தன்வரலாற்று நூல்கள் மீது எனக்கு ஒரு பித்து உண்டு. உடனே அந்த இணையப் பிரதியை அச்சுப்படியாக மாற்றி ஒரே நாளில் படித்து முடித்தேன். இலங்கைக்கு வந்த காந்தியடிகளின் உரையால் ஈர்க்கப்பட்ட இராஜகோபால் பெற்றோரின் அனுமதியோடு,  தமிழகத்துக்கு வந்தார். மதுரையை மையமாகக் கொண்டு நடைபெற்ற விடுதலை போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையில் அடைபட்டுத் துன்பப்பட்டார். விடுதலைக்குப் பிறகு இலங்கைக்கு மீண்டும் சென்று காந்திய வழியில் இறுதி மூச்சுள்ள வரை மக்களுக்குத் தொண்டாற்றினார். அவருடைய வாழ்க்கை வரலாறு ஆழ்ந்த மன எழுச்சியை ஊட்டியது. பல நண்பர்களிடம் அவரைப் பற்றி உரையாடினேன். ஒருவருக்கும் அவரைப் பற்றிய விவரம் தெரிந்திருக்கவில்லை. அதைக் கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. அவருடைய பெயர் மீதும் தியாகத்தின் மீதும் இருள் படிந்துவிடாமல் காப்பது என்னுடைய கடமை என்று தோன்றியது.  ஆதலால்,  தமிழ்ச் சூழலில் அவரை அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டேன். அதன் தொடர்ச்சியாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த எண்ணற்ற தியாகிகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்றொரு வேகம் பிறந்தது. அவர்களைப் பற்றி வெளிவந்திருக்கும் பதிவுகளையும் நூல்களையும் நூலகங்களில் தேடித் தேடி எடுத்தேன். தமிழகமெங்கும் வசிக்கும் என் நண்பர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களையும் அத்தேடலில் ஈடுபடுத்தி தகவல்களைப் பெற்றேன். அவ்வப்போது எழுதிய அக்கட்டுரைகள் ‘சர்வோதயம் மலர்கிறது’, ‘கிராம ராஜ்ஜியம்’ ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்தன. நீங்கள் குறிப்பிட்டுள்ள தொகுதிகளில் அக்கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதுவரை ஏறத்தாழ எழுபது ஆளுமைகளைப் பற்றி எழுதிவிட்டேன். குறைந்தபட்சமாக நூறு ஆளுமைகளைப் பற்றி எழுத வேண்டும் என்பது என்னுடைய கனவு. என் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  அவர்களெல்லாரும் வாழ்ந்து முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது.

காந்தியவாதி என்னும் சொல் நாம் நினைத்திருப்பதைவிட மிகுந்த ஆழமான பொருளையுடையது.  காந்தியடிகளின் பேச்சாலும் எழுத்தாலும் செய்து காட்டிய தொண்டுகளாலும் ஈர்க்கப்பட்டு தம் வாழ்நாள் முழுதும் தேச மக்களுக்காக தொண்டாற்றிய இந்த ஆளுமைகளுக்குத்தான் காந்தியவாதி என்னும் அடைமொழி பொருந்தும். என்னைப் போன்றவர்களுக்குப் பொருந்தாது. வேண்டுமென்றால், என்னைக் காந்திய எண்ணம் கொண்டவன் என்று குறிப்பிடலாம்.

கேள்வி: காந்தியின் மீது அல்லது காந்திய தத்துவத்தின் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் உண்டானது?

பாவண்ணன்: பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு கட்டுரை போட்டியில் எனக்குப் பரிசாகக் கிடைத்த ‘சத்திய சோதனை’ புத்தகம்தான் தொடக்கப்புள்ளி. எங்கள் வகுப்பில் தமிழ் பாடத்தில் நான் டீடெயில் பிரிவுக்காக பாடமெடுத்த ஆசிரியர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பல நிகழ்ச்சிகளை அடிக்கடி எங்களுக்குக் கதையாக விவரித்துச் சொல்வது வழக்கம். அதுவும் காந்தியடிகள் மீது எனக்கு ஆர்வம் பிறக்கக் காரணமாக இருந்தது. பள்ளி படிப்பு முடிந்து விடுமுறையில் இருந்த சமயத்தில் நூலகத்தில் ‘நாட்டிற்குழைத்த நல்லோர்’ என்னும் பொது தலைப்பு வரிசையில் ஏராளமான விடுதலை போராட்டத் தலைவர்கள், தியாகிகள், சமூக சீர்திருத்தக்காரர்கள், சமயப் பெரியோர்கள் எனப் பலரைப் பற்றி கைக்கு அடக்கமான சிறிய சிறிய நூல்களை எடுத்துப் படித்தேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் காந்தியடிகள் செல்வாக்குச் செலுத்திய மனிதராக இருந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தத் தகவல்களெல்லாம் காந்தியடிகளைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தைத் தூண்டியது. தொடர்ந்து தேடி தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். இளநிலை பொறியாளருக்குரிய பயிற்சியை முடித்ததும் நான் வேலைக்குச் சென்று சேர்ந்த இடம் கர்நாடகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றான பெல்லாரி. கன்னட மொழியைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அன்று மாலையே கடை தெருவுக்குச் சென்று  அரிச்சுவடிப் புத்தகங்களை வாங்கி வந்த கதையை ஏற்கனவே நான் சொன்னேன் அல்லவா? அதை தொடர்ந்து நான் செய்த மற்றொரு செயல், அந்த நகரத்தின் சிறைச்சாலை இருக்குமிடத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு சென்றதாகும்.  சிறைச்சாலையின் வாசலில் நின்றபடி அதையே வெகுநேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அச்சிறையில் காந்தியடிகளும் பிற காங்கிராஸ் தொண்டர்களும் அடைக்கப்பட்டிருந்த செய்திகளெல்லாம் அப்போது ஏராளமான சித்திரங்களாக மனத்தில் அலைமோதின. அச்சிறையின் சுற்றுச் சுவரையொட்டி வெகு தொலைவு காந்தியடிகளின் நினைவில் தோய்ந்தபடி நடந்து சென்று திரும்பினேன். காந்தியடிகளின் மூச்சுக்காற்று அங்கு சுற்றியிருந்த மரங்கள் மீதும் சுவர்கள் மீதும் படிந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது. நான் சுவாசிக்கும் காற்றில் அது இன்னும் நிறைந்திருக்கிறது எனக் கற்பனை செய்து கொள்ள எனக்குப் பிடித்திருந்தது. இரவு கவியும் வரை அங்கேயே நின்றிருந்துவிட்டு திரும்பிவிட்டேன்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பத்து நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு போர்பந்தருக்குச் சென்று காந்தியடிகள் பிறந்த இல்லத்தைப் பார்த்து வந்தேன். அவர் உட்கார்ந்து படித்த மேசையையும் நாற்காலியையும் அவருடைய அறையையும் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது.  பூனா நகரத்தைச் சேர்ந்த ஆகாகான் சிறைச்சாலைக்கும் சென்று அவர் அடைக்கப்பட்டிருந்த அறையையும் கஸ்தூர்பா, மகாதேவ தேசாய் கல்லறைகளையும் பார்த்து வந்தேன். இப்படித்தான் காந்தி மீதான என் ஆர்வம் தொடங்கியது.

வல்லினம்: மனித உறவுகளைக் குறித்த சிடுக்கான பகுதிகளை உங்கள் புனைவுகள் பெரும்பாலும் பேசுகின்றன. உங்கள் புனைவுலகம் என்பதன் அடிப்படையான செல்திசை என்ன என்று உங்களுக்கு ஏதேனும் தெளிவுகள் உண்டா? அல்லது உங்கள் புனைவுலகின் ஆதார கேள்வியென நீங்கள் ஏதேனும் அவதானித்துள்ளீர்களா?

பாவண்ணன்: இலக்கியம் எழுதப்பட்ட காலத்திலிருந்தே அன்பும் அறமும் வாழ்வில் மிக முக்கியமாகப் பேணப்பட வேண்டிய பண்புகள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே வந்துள்ளது. அவை எவ்வளவு பழமையான குரல்கள் என்றாலும் என் சூழலில், என் வாழ்வை முன்வைத்து அந்த மதிப்பீடுகளை மறுவரைவு செய்வதையே என் இலக்கிய வழியாக மேற்கொண்டிருக்கிறேன். அன்பின் மேன்மை, அன்பின் மென்மை, அன்பினால் அடையும் சிறுமை, அன்பினால் விளையும் பாதகங்கள், அன்பினால் அடையும் நன்மைகள், தீமைகள் என்பவற்றை ஒரு பக்கமாகவும் அன்பின்மையால் ஏற்படும் வெறுமை, விரக்தி, கசப்பு, பொறாமை, போட்டி, துன்பம் போன்றவற்றை இன்னொரு பக்கமாகவும் அடுக்கி வைத்தால் அவை அனைத்தையுமே அன்பின் பாற்பட்டவையாகவே குறிப்பிட வேண்டும். அதையே அறத்துக்கும் சொல்வேன். இலக்கியத்தில் அவற்றை அவ்வகையில் முன்வைப்பதே என் வாழ்நாள் பணியென நான் தீர்மானித்துக் கொண்டேன். அவற்றைத் தொகுத்துப்  பார்த்துக் கொள்ளும் ஒருவரால் சமகால வாழ்வின் தடங்களை எளிதில் உணர முடியும் என்பது என் நம்பிக்கை. ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே’ எனத் திருமந்திரத்தில் ஒரு பாடலில் ஒரு குறிப்புண்டு. ஏறத்தாழ என் ஆழ்மன எண்ணமும் அதுதான். அன்புக்காகவும் அறனுக்காகவும் குரல் கொடுத்தபடி இருப்பதை என் வாழ்நாள் பணியாக கருதிக் கொள்கிறேன்.

வல்லினம்: வாழ்க்கை ஒரு விசாரணை’, ‘பாய்மரக் கப்பல்’ ஆகிய இரண்டு நாவல்களையும் வாசித்த அனுபவத்திலிருந்து ஒரு கேள்வி. வாழ்க்கை ஒரு விசாரணை நாவலின் நாயகன் மாடுகளுக்கு லாடம் அடிக்கும் வேலை செய்பவன். ஒடுக்கப்பட்ட சாதி பின்புலம் உடையவன். பாய்மரக்கப்பல்’, மூன்று தலைமுறை விவசாய குடும்பம் ஒன்றைப் பற்றியது. கவுண்டர் சாதி பின்புலம் கொண்ட குடும்பம். ஆனால், நாவல்களில்  இந்த இரண்டு வாழ்க்கை போக்குகளிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. மொழி அளவிலும் வாழ்க்கை முறை, பண்பாடுகள் பபோன்வற்றிலும் பொதுவான தோற்றமே வெளிப்படுகின்றது.  தமிழ்ச் சூழலில் திருமணம், உணவு போன்ற பலவற்றிலும் வட்டாரம் அல்லது சாதிய பின்னணியின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நிலையில் உங்கள் நாவல்களில் வட்டார வழக்கு உரையாடல்கள் உட்பட அந்தத் தனித்துவங்கள் வெளிப்படவில்லை. நீங்கள் இயல்பாகவே இவ்வகையான நுண் பண்பாட்டு சித்தரிப்புகளைவும் விவரணைகளையும் தவிர்கிறீர்கள் என்று சொல்லலாமா? அவ்வாறாயின் ஏன் அப்படி எழுத வேண்டும்?

பாவண்ணன்: என் படைப்புகளை ஒட்டி நண்பர்கள் கருத்துரைக்கும்போது இதுவரை “இச்சூழலிலிருந்து வெளியேறி முப்பது நாற்பது ஆண்டுகள் கழிந்திருந்தாலும் உங்கள் படைப்புகளில் வட்டார வழக்கு உரையாடல்  பழைமை மாறாத தன்மையுடன் பொருத்தமாக இருக்கிறது” என்று  சொன்னதைத்தான் நான் கேட்டு வந்திருக்கிறேன். முதன்முதலாக அவை தனித்துவத்துடன் வெளிப்படவில்லை என்று நீங்கள் சொல்வதைக் கேட்க வியப்பாக இருக்கிறது. ஏதோ ஒருவகையில் உங்கள் எதிர்பார்ப்புகளை என் படைப்புகள் நிறைவு செய்யவில்லை என்று தோன்றுகிறது.  புதுச்சேரி, தென்னார்க்காடு மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும் இடையில் அவரவர்களுடைய வகுப்பு சார்ந்த வேறுபாட்டைத் தவிர, வாழ்க்கை நிலையில் பெரிய வேறுபாடு இல்லை. இரு தரப்பினரும் உடலுழைப்பையே பெரிதும் நம்பி இருப்பவர்கள். இவர்களைவிட வலிமை மிக்க வகுப்பின் முன்னால் இவ்விருவருமே ஒரே விதமாக தோற்றமளிப்பவர்கள்.

ஒரு படைப்புக்குள் வெளிப்படும் வட்டார மொழி விவரங்களோ, சிலாகித்து சொல்லப்படும் சொலவடைகளோ, சடங்கு விவரணைகளோ எல்லாமே ஒரு குழந்தைக்குச் செய்யும் ஒப்பனைகளுக்கு நிகரானவை. அவ்வளவுதான். அவ்வளவு அலங்காரங்களுக்குப் பிறகும் அந்தக் குழந்தை அழு மூஞ்சியாக இருந்தால் என்ன செய்வது? குழந்தை சிரித்த முகத்தோடும் இயல்பான சுறுசுறுப்போடும் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஒப்பனைகள் அல்ல. பல சமயங்களில் சிரிக்கும் குழந்தைக்கு ஒப்பனையே கூட தேவையில்லை. ஓர் எளிய புன்சிரிப்பே எல்லா ஒப்பனைகளையும்விட நம்மை ஈர்க்க போதுமானதாகும்.

வாழ்நாள் முழுக்க வட்டார மொழி பிரயோகங்களுடன் கதைகளை எழுதியவர் கி. ராஜநாராயணன். எவ்விதமான வட்டாரச் சாயலும் இல்லாமல் எளிய பொது தமிழில் கதைகளை எழுதியவர் அசோகமித்திரன். இருவருமே மகத்தான கலைஞர்கள். இது எப்படிச் சாத்தியமானது? ஒரு படைப்பின் வெற்றியைத் தீர்மானிப்பது, அப்படைப்பில் மையம் மட்டுமே. தன் ஆழத்தை நோக்கி வாசகர்களைப் பயணம் செய்யவைக்கும் ஆற்றல் மட்டுமே.

ஒரு பெண்ணுக்கு நிகழும் திருமணம் தொடர்பாக கி. ராஜநாராயணன் ’கன்னிமை’ என்றொரு ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அதில் ஏராளமான திருமணச்சடங்கு பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம். சடங்கு சார்ந்த சில பாடல்கள்கூட அக்கதையில் இடம் பெற்றிருக்கும். அவருடைய வழக்கமான வட்டார மொழியிலேயே அந்தக் கதை அமைந்துள்ளது. ஆனால், ‘கன்னிமை’ சிறுகதையின் வெற்றிக்கு இவை எதுவுமே காரணமில்லை. திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிடம் திருமணத்துக்கு முன்பு வெளிப்பட்ட ஒரு பண்பு காணாமல் போய்விடுகிறது. எந்தப் பண்பைக் கண்டு ஊரே அவளைப் பாராட்டி மெச்சியதோ, அந்தப் பண்பு ஒரு மேகத்தைப் போல காணாமல் போய்விடுகிறது. அது மறைந்த மாயத்தையும் மர்மத்தையும்தான் கி.ரா. வாசகனின் கவனத்துக்குக் கொண்டு வருகிறார். அதுதான் அந்தக் கதையின் பயணம்.

வட்டாரச் சித்தரிப்புகளையும் மொழிப் பிரயோகங்களையும் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டே இதுவரை நான் எழுதி வந்திருக்கிறேன். ஒருபோதும் தவிர்க்க நினைத்ததில்லை. அதே சமயத்தில் அதிலேயே ஆழ்ந்து திளைத்திருக்கவும் நினைத்ததில்லை. 

வல்லினம்: தமிழகத்தை விட்டு தமிழில் எழுதப்படும் பிறநாட்டு இலக்கியங்களை வாசிப்பதுண்டா?

பாவண்ணன்: வாசிப்பதில் எப்போதும் ஆர்வம் உள்ளவன் நான். பாரதியார் காலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவற்றை நான் படித்திருக்கிறேன். பாரதியார், சுத்தானந்த பாரதியார், புதுமைப்பித்தன், க.நா.சு., அழகிரிசாமி, தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.ஜெயராமன், துளசி ஜெயராமன், த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, சு.கிருஷ்ணமூர்த்தி, தி.ஜ.ர., பெ.தூரன் என எண்ணற்ற மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்த புத்தகங்களையெல்லாம் தேடித் தேடி படித்திருக்கிறேன். தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, குப்ரின், செகாவ், துர்கனேவ், ஷோலகோவ், புஷ்கின் போன்ற ரஷ்ய எழுத்தாளர்களின் நூல்களையும் ஐரோப்பிய எழுத்தாளர்களின் நூல்களையும் மொழிபெயர்ப்பு வழியாகவே படித்திருக்கிறேன். இந்தியாவின் பிற மொழிகளிலிருந்தும் உலக மொழிகளிலிருந்தும் காலச்சுவடு, எதிர், கிழக்கு, தடாகம், நூல்வனம் போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் மொழிபெயர்ப்புகளையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுகிறேன்.  வாசிப்பு என்னை எப்போதும் உற்சாகம் கொண்டவனாக வைத்திருக்கிறது.

வல்லினம்: நீங்கள் சொல்வது மொழிபெயர்ப்புகள். நான் அறிந்துகொள்ள விரும்புவது தமிழகத்தைக் கடந்தும் தமிழ் இலக்கியங்கள் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் அவை படைக்கப்படுகின்றன. அவற்றை வாசிக்கிறீர்களா? அவை குறித்த உங்கள் பதிவுகள் அரிதாக இருப்பதால் கேட்கிறேன்.

பாவண்ணன்: இலங்கையின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடக்கத்தில் கைலாசபதியும் சிவத்தம்பியும் சுட்டிக் காட்டிய எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே தேடியெடுத்துப் படித்தேன். பிறகு தளையசிங்கத்தின் எழுத்துகள் அறிமுகமாகின. அதற்குப் பிறகு மேலும் பலரை நானாகவே தேடிப் படிக்கத் தொடங்கினேன். எஸ்.பொன்னுத்துரை, வ.அ.இராசரத்தினம், முருகானந்தன், என்.கே.ரகுநாதன், கே.டேனியல், சி.வி.வேலுப்பிள்ளை, டொமினிக் ஜீவா, அ.முத்துலிங்கம், சாந்தன், கே.கணேஷ், தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு, இளைய அப்துல்லா, பவானி எனப் பலருடைய படைப்புகளை விரும்பி படித்தேன். இலங்கை படைப்புகளைத் தேடிப் படித்த அளவுக்கு நான் மலேசிய, சிங்கப்பூர் படைப்புகளைப் படித்ததில்லை. இங்குள்ள நூலகங்களில் அவை இல்லாததும் ஒரு காரணம். இரண்டு,மூன்று ஆண்டுகள் முன்பாக உங்களிடமிருந்து நான் பெற்றுக் கொண்ட வல்லினம் மலர் வழியாகவே இங்கு நடைபெற்ற இலக்கிய முயற்சிகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். சீ.முத்துசாமியின் ‘மலைக்காடு’ நாவலிலிருந்தும் உங்களுடைய ‘பேய்ச்சி’ நாவலிலிருந்தும்தான் என்னுடைய மலேசிய இலக்கிய வாசிப்பு தொடங்கியது.


வல்லினம்: நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளீர்கள். ‘நயனக்கொள்ளைஉங்களின் நூறாவது நூல். எழுத்தின் வழியாகவே இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் நீங்கள். ஆனால் பொது வாசகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படாதவராக இருக்கிறீர்கள். உங்களை முன்னிறுத்திக் கொள்ளாதது நீங்களாக எடுத்த முடிவா?

பாவண்ணன்: உண்மைதான். அது நானாகவே எடுத்த முடிவுதான். எழுத்திலும் வாசிப்பிலும் மட்டுமே என் மனம் தோய்ந்திருக்கிறது.

வல்லினம்: பெரும்பாலும் இலக்கிய சர்ச்சைகளில் சிக்காதவராகவும் இருக்கிறீர்கள். இவ்வளவு எழுதியும் இத்தனை விருதுகள் வாங்கியும் அதை எப்படிச் சாத்தியப்படுத்தியுள்ளீர்கள்?

பாவண்ணன்: இயல்பிலேயே என் குணம் அப்படி அமைந்துவிட்டது. அதற்குத் தனிப்பட்ட காரணம் என எதுவும் இல்லை. ஒரு சிறுவனிடம் எதிர்பாராத விதமாக ஒரு டார்ச்லைட் கிடைக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்வான் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஒரு பொத்தானை அழுத்தினால் வெளிச்சம் பாய்ந்து சென்று ஒரு புள்ளியில் வட்ட வடிவில் குவிவது ஒரு மாயச் செயல் போன்ற வசீகரம். அந்த வசீகரத்தில் தன்னை இழந்து பரவசமுறாத சிறுவனே இந்த உலகத்தில் இருக்க முடியாது. அந்தப் பரவசத்தை அவன் மீண்டும் அடைய விரும்புவது இயற்கை. அந்த டார்ச்லைட்டை எடுத்துச் சென்று தன் நடமாட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உயிரினங்கள் மீதும் வீட்டு உறுப்பினர்கள் மீதும் அஃறிணை பொருட்கள் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சி அவை கொள்ளும் புதுப் பொலிவைப் பார்த்து ரசிப்பதில் அவனுக்குச் சலிப்பே ஏற்படுவதில்லை. அதுபோலத்தான், எப்படியோ என் இளமைக்காலத்தில் ஏதோ ஒரு நற்பேற்றின் விளைவாக என்னிடம் இந்த இலக்கியம் வந்து சேர்ந்தது. நான் அதை சிக்கென பற்றிக் கொண்டேன். அதன் வழியாக ஒவ்வொன்றையும் பார்த்து வியக்கத் தொடங்கினேன். .நானே எழுதுபவனாக மாறியபோது என் வியப்பு பல மடங்காகப் பெருகியது. ஒரு புதிய வெளிச்சத்தை, ஒரு புதிய கோணத்தைக் கண்டடையும்போது ஏற்படும் மனவிரிவு மகத்தான அனுபவம். அந்த அனுபவத்தில் திளைக்கத் தொடங்கிய பிறகு இந்த உலகில் அதைவிடவும் மகத்தான ஒன்று எதுவுமில்லை என்று தோன்றிவிட்டது. என் எழுத்துக்கான வாசகர்கள் உருவானார்களா என்பதைப் பற்றி யாராவது கேட்டால், அந்தக் கேள்விக்கு என்னால் உறுதியாகப் பதில் சொல்லத் தெரிந்ததில்லை. சிறிது காலம் அது ஒரு மனக்குறையாகக்கூட என்னை வாட்டியதுண்டு. ஆனால், மிக விரைவிலேயே அந்த வாட்டத்திலிருந்து வெளி வந்துவிட்டேன். எங்கோ சிலர் இருப்பார்கள், எப்படியோ தேடிப் படிப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.

கன்னடத்தின் வசன இலக்கியத்தில் முதன்மை வசனகாரர்களில் ஒருவர் அக்கா என்கிற அக்கமகாதேவி.  சிவபக்தியின் பரவசத்தைத் தன் அழகிய வசனங்கள் வழியாக எடுத்துரைத்தவர். ஒரு கட்டம் வரையில் தன் குரல் சிவன் காதில் விழ வேண்டும் என்று மனமுருகப் பாடிப் பரவசமடைகிறார். பிறகு ஒரு தருணத்தில் அப்பரவசமே சிவன் என்பதை அவர் உணர்ந்து கொள்கிறார். அதன் பிறகு சிவனை நோக்கி “நீ கேட்டால் கேள், கேளாவிட்டால் விடு, உன்னைப் பாடாமல் இருக்க மாட்டேன். நீ கருணை காட்டினால் காட்டு, காட்டாவிட்டால் விடு, உன்னைப் பூசிக்காமல் நான் இருக்க மாட்டேன், நீ விரும்பினால் விரும்பு, விரும்பாவிட்டால் விடு, உன்னை நான் தழுவிக் கொள்ளாமல் இருக்க மாட்டேன், நீ பார்த்தால் பார், பார்க்காவிட்டால் விடு, உன்னைப் பார்த்து மகிழ்ந்து புகழாமல் நான் இருக்க மாட்டேன், நான் உன்னைப் பூசித்து பரவசத்தில் ஆடுவேன் ஐயா, சென்னமல்லிகார்ஜுனய்யா” என்று பாடத் தொடங்கிவிடுகிறார்.  அவர் அடைந்த பரவசம்தான் அவருடைய தன்னம்பிக்கைக்குக் காரணம். என் மனநிலையும் கிட்டத்தட்ட அதுதான். என் எல்லையை அப்படி நானே வகுத்துக் கொண்டேன்.

வல்லினம்: அப்படி இருந்தும் ‘புக் பிரம்மா’ பெங்களூர் இலக்கிய விழாவை ஒட்டி எழுந்த சர்ச்சையில் தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளரான உங்கள் பெயர் சர்ச்சையில் அடிப்பட்டது. அப்போதும் நீங்கள் அமைதி காத்தீர்கள். மௌனம் சர்ச்சைகளுக்குப் பதிலாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதமா?

பாவண்ணன்: பெங்களூரில் ‘புக் பிரம்மா’ இலக்கியத் திருவிழா தென்னிந்திய மொழிகளான கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளின் இலக்கியப் போக்கையும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வாசகர்கள் அறிந்து கொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்டு ஆகஸ்டு 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மூன்று நாட்களில், மூன்று தனித்தனி அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழில் நாவல், சிறுகதை, கவிதை, தலித் இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசகர் எதிர்பார்ப்பு என மொத்தம் ஆறு அமர்வுகள். ஓர் அமர்வுக்கு மூன்று பேர் என்கிற அடிப்படையில் ஆறு அமர்வுகளுக்கு பதினெட்டு பேர்களும்  இரு பொது  அரங்குகளில் உரையாற்றுவதற்காக இருவரும் என மொத்தத்தில் இருபது படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தென்னிந்திய அளவில் நடைபெறும் முதல் முயற்சி இது. இதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்னும் பதற்றம் எல்லோருக்குள்ளும் இருந்தது. தமிழ் அமர்வுகளை ஒருங்கமைத்துக் கொடுக்கும் பொறுப்பில் நான் இருந்தேன். எல்லா விதங்களிலும் தகுதி கொண்டவர்களைத்தான் அழைத்திருந்தோம். ‘புக் பிரும்மா’வுக்கென ஒரு இணையத் தளம் உருவாக்கப்பட்டதும் பெயர்ப் பட்டியலும் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன. பொதுவெளியில் உள்ள அனைவருக்கும் நடப்பது என்ன என்பது தெரிய வேண்டும் என்பதாலேயே ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலேயே அப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ரகசியம் எதுவும் பேணப்படவில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, சிலர் அழைக்கப்படவில்லை என்பதுதான் நிகழ்ச்சி முடிவடைந்ததும் முன்வைக்கப்பட்ட புகார். தமிழ்மொழி சார்ந்து மட்டுமல்ல, பிற மொழிகள் சார்ந்தும் இத்தகு புகார்கள் எங்களை வந்தடைந்தன. இது முதல் நிகழ்ச்சி என்பதையும் முதல் வெற்றி என்பது எங்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமாக அடைந்தே தீர வேண்டிய  வெற்றி என்பதையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு அமர்வுக்குரிய படைப்பாளிகளை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. மூன்று நாட்களிலுமாக மொத்தத்தில் எட்டாயிரம் பேர் அரங்கத்து பார்வையாளர்களாக வந்திருந்தனர். நிகழ்ச்சியின் காணொளிகளை இதுவரை மூன்று இலட்சம் பேர்களுக்கும் மேலானவர்கள் பார்த்திருக்கின்றனர். அதன் வெற்றி இப்போது உறுதியாகிவிட்டது.

ஒவ்வொரு மொழியிலும் தேர்ந்தெடுக்கத்தக்க தகுதிகளைக் கொண்டவர்கள் இன்னும் பலர் உள்ளனர் என்பதை நாங்களும் அறிவோம். ஒவ்வொரு ஆண்டும் நடக்கவிருக்கும் இத்திருவிழாவில் அத்தகையோர் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். ஒரு செயலைச் செய்து காட்டித்தான் இன்றைய புகார்களுக்குரிய பதிலை அளிக்க முடியுமே தவிர, வெறும் சொற்களால் அல்ல என அமைப்பில் உள்ள அனைவருமே முடிவெடுத்தோம். எங்கள் அமைதிக்கு அதுதான் காரணம். 

வல்லினம்: உங்களின் சமகால இலக்கியவாதிகளில் முக்கியமானவர்களாக யாரையெல்லாம் கருதுகிறீர்கள்?

பாவண்ணன்: ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன், இரா.முருகன், சுப்ரபாரதிமணியன், பெருமாள்முருகன், கெளதம சித்தார்த்தன் ஆகியோரையெல்லாம் நான் முக்கியமானவர்கள் என்று கருதுகிறேன்.

வல்லினம்: இளம் எழுத்தாளர்களை வாசிப்பதுண்டா?

பாவண்ணன்: என் இலக்கியச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே புத்தக வாசிப்பை வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளம் எழுத்தாளர்களின் ஒரு சில புத்தகங்களையாவது நான் படித்திருக்கிறேன். கமலதேவி முதல் ஹேமிகிருஷ் வரைக்கும், செந்தில் ஜெகன்னாதன் முதல் அஜிதன் வரை  எழுதியுள்ள நூல்களில் முக்கியமான தொகுதிகளைத் தேடிப் படித்திருக்கிறேன். அந்த வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக அவ்வப்போது அறிமுகக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். என்னுடைய தளத்தில் அத்தகு அறிமுகக் கட்டுரைகளை நீங்கள் படிக்கலாம். பெயர்ப்பட்டியல்  வேண்டாம் என்பதால், நான் இங்கு பெயர்களைத் தவிர்க்க விரும்புகிறேன். எங்கோ கவனத்துக்கு வராமல் ஒன்றிரண்டு பேர்களுடைய படைப்புகள் விடுபட்டிருக்கலாம். ஆனால், பொதுவாக தேடித் தேடி படித்துவிடும் குணம் கொண்டவன் நான்.

நேர்காணல்: ம.நவீன், அ. பாண்டியன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...