“சலனமின்மையை எதிர்வினையாகப் போர்த்தியிருக்கும் மனத்தைப் புனைவுகளில் நிகழ்த்திப் பார்க்கிறேன்” – அரவின் குமார்

அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில்  சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். செறிவான மொழி, தர்க்கப்பூர்வமான பார்வை, கச்சிதமான மொழிநடை, கற்பனையாற்றல் போன்ற கூறுகள் இவரின் எழுத்தின் பலம். இவ்வருடத்திற்கான வல்லினம் இளம் தலைமுறையினர் விருது அரவின் குமார் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதனையொட்டி, வாசகர்கள் மேலும் அரவின் குமாரை அறிந்துகொள்வதற்காக நிகழ்த்தப்பட்ட நேர்காணல் இது.

வல்லினம்: பகாங் நீங்கள் பிறந்த ஊர். மலேசியாவில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் யாரும் பகாங் மாநிலத்திலிருந்து உருவானதாக நினைவில்லை. உங்களுக்கு யாரேனும் நினைவுண்டா?

அரவின் குமார்: நான் பயின்ற பண்டார் இந்திரா மக்கோத்தா (முன்னர் பெஞ்சாரா தமிழ்ப்பள்ளி என அறியப்பட்டது) தமிழ்பள்ளியில் பல்லாண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிய துளசி சுந்தரம் எனும் ஆசிரியர் நாளிதழ்களில் கதைகளை எழுதியிருக்கிறார். அதன் பின்னர் மணிவண்ணன் எனும் புனைபெயரில் கதைகளை எழுதிய ஆறுமுகம் எனும் ஆசிரியரும் இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். மணிவண்ணனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான ‘மகாலட்சுமி’ நூல் வெளியீட்டு விழாவைக் குவாந்தானில் இருந்த சில தமிழ் அமைப்புகள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தன. இடைநிலைப்பள்ளி மாணவர்களை எல்லாம் நிகழ்ச்சிக்குப் பேருந்தில் அழைத்துச் சென்றார்கள். நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி அதுதான்.  பல மாதங்களாக அச்சகத்திலே இருந்த நூல்களின் நடுவில் இருந்த நூல் நரம்புகள் கழன்று நிகழ்ச்சியிலே அக்கக்காக வெளியீடு கண்டது நினைவில் இருக்கிறது. அதிலிருந்த கதைகளும், நாளிதழ் பாணி கதைகளாகவே இருந்தன.

வல்லினம்: உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இலக்கிய வாசிப்பு அல்லது பிற கலைகள் மீது ஈடுபாடு இருந்ததா?

அரவின் குமார்: என்னுடைய பெற்றோர்கள் இருவருக்குமே வாசிப்புப் பழக்கம் இருந்தது. அப்பா நாள் தவறாமல் நாளிதழ் வாங்கி வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். 2000ஆம் ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருந்த ‘இதயம்’, ‘தென்றல்’, ‘மன்னன்’, ‘மலர்’, ‘சூரியன்’ எனப் பல மாத, வார இதழ்களை வாசிக்கும் பழக்கம் அம்மாவிடமிருந்தே எனக்கும் தொற்றிக் கொண்டது. அம்மா, அவருடைய பள்ளிக்காலத்தில் மு.வ, ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களை வாசித்திருந்தார். ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’, ‘மண்குடிசை’, ‘அகல் விளக்கு’ நாவல்களின் கதைகளைச் சிலாகித்துப் பேசியது நினைவில் இருக்கிறது. அதை தவிர இசை கேட்பது, தையற் கலை ஆகியவற்றிலும் அம்மாவுக்கு ஆர்வம் இருந்தது.

வல்லினம்: உங்கள் கல்லூரி ஆசிரியர் தமிழ்மாறன் அவர்களால் தீவிர இலக்கிய வாசிப்பில் நுழைந்தீர்கள். அதற்கு முன் உங்கள் வாசிப்பு நிலை என்ன?

அரவின் குமார்: வீட்டில் தொடர்ந்து நாளிதழ் வாங்கப்பட்டுக் கொண்டிருந்ததால், என்னுடைய எட்டு வயதிலே நாள் தவறாமல் நாளிதழ் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால், அப்போதைய வாசிப்பு பெரும்பாலும் அரசியல், சமூகம் போன்ற புனைவல்லாத எழுத்தையே மையப்படுத்தி இருந்தது. அரசியல் நிகழ்வுகள், தலைவர்களின் பெயர்கள் அனைத்தும் நினைவில் இருக்கும். பெயர்களையும் நிகழ்வுகளையும் பெரியவர்கள் முன்னால் நின்று சொல்வதை வியப்பாகக் காண்பார்கள்.

இடைநிலைப்பள்ளிக்குச் சென்ற பின்னர்தான், நாளிதழ்களில் வரும் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கினேன். நாளிதழ் பாணியில் சிறு திருப்பங்களையும் நற்போதனைகளைச் செய்யும் கதைகளையும் எழுத முயன்றேன். இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் குமாரி ராதாவின் தூண்டுதலால் பகாங் மாநில அளவில் நடந்த சிறுகதைப் போட்டியில் பங்கேற்று பரிசும் பெற்றிருக்கிறேன். ஆசிரியர் கல்லூரியில் என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது தமிழ்ப்பிரிவு நூலகம். விரிவுரைஞர் தமிழ்மாறனின் வாசிக்கப் பரிந்துரைத்த நூல்களுக்கு முன்னரே கல்கியின் ‘பொன்னியில் செல்வன்’, மு.வவின் நாவல்கள், சாண்டில்யனின் நாவல்கள் ஜெயகாந்தன் சிறுகதைகள் ஆகியவற்றை ஒரு சுற்று வாசித்திருந்தேன்.



வல்லினம்: ஜெயமோகனைச் சந்தித்தது உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை. அந்த அனுபவம் குறித்து சொல்லுங்கள்.

அரவின் குமார்: விரிவுரைஞர் தமிழ்மாறனின் அறிமுகத்தில்தான் ஜெயமோகனை அறிந்து கொண்டேன். கல்லூரி வகுப்புகளிலே தமிழ்மாறனின் வகுப்புகள் எனக்குத் தனிப்பட்ட முறையில் மிக விருப்பமானதாக இருந்தன. எனக்கு ஒன்றை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி இருந்தது. அந்த அறிந்து கொள்வதன் மகிழ்ச்சியைத் தமிழ்மாறனின் வகுப்புகளில் பெற முடிந்ததே அதற்குக் காரணம். அவருடைய வகுப்புகளில் சமயம் சார்ந்த நம்பிக்கைகள், மொழிப் பெருமிதங்கள் எல்லாவற்றையும் தடாலடியாகப் போட்டு உடைத்துக் கேள்விக்குள்ளாக்குவார்.  ஒரு புரட்சியாளரைப் பின் தொடர்வதைப் போன்ற குறுகுறுப்பை அவருடைய வகுப்புகள் தந்தன. அவர்தான் 2014ஆம் ஆண்டு தமிழின் முதன்மை எழுத்தாளர் என ஜெயமோகனை எங்களுக்கு அறிமுகப்படுத்திக் கல்லூரிக்கு அவரை வரவழைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.  அந்த நிகழ்ச்சிக்கு என்னை நெறியாளராக நியமித்திருந்தார். நிகழ்ச்சியின் ஜெயமோகனை அறிமுகப்படுத்த வேண்டியிருந்ததால், அவருடைய தளத்துக்குச் சென்று வாசிக்கத் தொடங்கினேன். அப்பொழுது ஜெயமோகன் ‘வெண்முரசு’ நாவல் வரிசையை எழுதத் தொடங்கி ‘முதற்கனல்’ நாவல் தொடராக நாள்தோறும் வெளிவந்து கொண்டிருந்தது. முதல் அத்தியாயத்தை வாசித்ததுமே அதன் மொழி, ஒழுக்கு எல்லாமே உடனடியாக என்னை ஈர்த்துக் கொண்டது.

நிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் இடையில் பேசினாலோ அல்லது கைபேசி ஒலி கேட்டாலும் ஜெயமோகன் பேச்சை இடையிலே நிறுத்துவார் அல்லது உடனடியாக அரங்கை விட்டு வெளியேறி விடுவார் எனத் தமிழ்மாறன் கறாராகச் சொல்லியிருந்தார். நிகழ்ச்சியின்போது இயல்பாகவே எனக்குள் இருந்த கூச்சத்தாலும் பதற்றத்தாலும் அவருடன்  பெரிதாக ஏதும் பேசவில்லை. ஆங்கில லிபியைக் கொண்டு தமிழை எழுதுவது, பாரதி மகாகவியா போன்ற விவாதங்களை ஒட்டி எழுப்ப நினைத்த கேள்விகளையும் கேட்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜெயமோகனின் தளத்தை அன்றாடம் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அதுவரை நான் அறிந்து வைத்திருந்த இலக்கியம், அரசியல் கலைசொல்லை எல்லாம் அவருடைய தளத்தில் உள்ளீட்டுத் தேடி விடிய விடிய வாசிக்கத் தொடங்கினேன். இலக்கிய வாசிப்பைப் பற்றிய புரிதலே அவருடைய எழுத்துகளிலிருந்துதான் பெற்றேன்.

வல்லினம்: உங்கள் முதல் சிறுகதை எங்கு பிரசுரமானது. எவ்வாறான வாசகப் பார்வையைப் பெற்றீர்கள்?

அரவின் குமார்: பள்ளிக்காலத்திலே சில சிறுகதைகளை எழுதிப் பரிசும் பெற்றிருக்கிறேன் என்ற போதிலும் அதனை ஆசிரியர், வகுப்பு நண்பர்கள் தாண்டி யாரும் வாசித்துக் கருத்துரைத்ததில்லை. 2016ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக பேரவைக் கதைகள் போட்டிக்கு அனுப்பப்பட்ட என்னுடைய கதை மாணவர் பிரிவில் மூன்றாவது பரிசைப் பெற்றது. அந்தப் போட்டியில் என்னுடைய கதை பரிசு பெற்றதை அறிந்து தமிழ்மாறன் கதையை வாசிக்கக் கேட்டார். நான் வசித்த கம்பம் நகரத்தின் நடுவில் இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாய் மேம்பாட்டுக்கு இரையாகி வந்தது. அது ஒட்டுமொத்தமாய்க் காணாமற் போகுமுன் அதனை மையப்படுத்தி எழுதலாம் எனக் கம்பத்தைப் பின்னணியாகக் கொண்டு கதையை எழுதியிருந்தேன். அந்தக் கதையை வாசித்து, கதை நன்றாக இருப்பதாகத் தட்டிக் கொடுத்து, இது மாதிரி ஏற்கனெவே நிறைய கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லி அவருடைய பாணியிலே “சிறுகதை எழுத வரும் எழுத்தாளன் குறைந்தது ஆயிரம் சிறந்த சிறுகதைகளாவது வாசித்திருக்க வேண்டும்… அப்பொழுதுதான் எழுத்தாளனாவதற்கான வக்கு அமையும்… இன்னும் வாசியுங்கள்” என அறிவுறுத்தினார். அப்போதைக்குச் சுற்றிலும் இலக்கியம் வாசிக்கும் நண்பர்கள் யாரும் உடனிருக்கவில்லை. “நாளிதழ்களில் எழுதி வந்த இலக்கிய வாசிப்பு கொண்ட சு.தினகரன் உன் கதையில் இருக்கும் நுண்சித்திரிப்புகள் நன்றாக இருக்கின்றன…அவை நாவலுக்கு உதவிகரமானதாக இருக்குமெனப் இருக்கும்“ எனப் பாராட்டினார். அதற்குச் சில மாதங்கள் கழித்து எழுத்தாளர் பாலமுருகன் என்னுடைய எழுத்தை வாசித்துப் பாராட்டினார். அதை தவிர மற்ற பாராட்டுகள் எல்லாமே மிகப் பொதுவானதாகவே இருந்தன.


வல்லினம்: உங்கள் குடும்பத்தில் நீங்கள் எழுதுவது குறித்து எவ்வாறான அபிப்பிராயங்கள் உள்ளன?

அரவின் குமார்: நான் பள்ளிக்காலத்திலிருந்தே கையில் தாளும் பேனாவுமாகத்தான் வீட்டில் அலைந்து கொண்டிருப்பேன். நாளிதழ் செய்திகளை வெட்டிச் சேகரித்துக் கையெழுத்துப் பிரதியொன்றைத் தயாரிக்க முயன்றிருக்கிறேன். நாளிதழில் வரும் தலையங்கத்தைப் போல செய்திகளை வாசித்துத் தலையங்கம், குறிப்புகள் எழுதுவது என வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்பதால் என் எதிர்காலத்தின் மீது இயல்பாக அம்மாவுக்குப் பயமிருந்தது. ஆனால், எழுத்து சார்ந்த எதாவது எதிர்காலம் அமையுமென அம்மா நம்பினார். மற்றவர்களுக்கு நான் வெளியில் அதிகம் பேசாமல் எழுதிக் கொண்டிருப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இணைய இதழ்களில் எழுதுவதைக் கண்டு நாளிதழ்களிலும் இதழ்களிலும் எழுதுமாறு ஊக்குவித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக எழுதுவதையும் வாசிப்பதையும் காணும்போது அதை பாராட்டவே செய்கிறார்கள்.

வல்லினம்: விளிம்பு நிலை மாந்தர்கள் உங்கள் சிறுகதைகளில் ஏராளம் வருகிறார்கள். ஏன்?

அரவின் குமார்: என்னுடைய புற உலக அனுபவங்கள் எல்லைக்குட்பட்டவை. சிறுவயதில் வாசிப்பே பெரும் பகுதியாக நிறைத்திருந்தபோது வாழ்ந்த கம்பமும் அங்கிருந்த மனிதர்களே என்னுடைய நினைவுகளில் நிறைந்திருந்தனர். பின்னாளில், ஆசிரியர் வேலை கிடைத்து, கோலாலம்பூரின் மையமான மஸ்ஜிட் ஜாமேக் பகுதிக்கு அன்றாடம் ரயிலில் பயணித்து வந்தேன். ரயில் நிலையத்திலிருந்து பதினைந்து நிமிட நடை தொலைவில் பள்ளி இருந்தது. அந்தப் பதினைந்து நிமிடத்தில் வீதியில் இருக்கும் பிச்சைக்காரர்கள், மனநலம் பிறழ்ந்தோர், குடிநோயாளிகள் ஆகியோரை ஒவ்வொரு நாளும் சந்தித்திருக்கிறேன். சிலருடன் உரையாடவும் வாய்ப்பு அமைந்தது. அவ்வளவு அணுக்கத்தில் அவர்களைப் பார்ப்பதென்பது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. அப்படிப் பார்த்த மனிதர்களில் ஒருவர் நான் அளித்த உணவைச் சாலையில் எடுத்து வீசி வெறியாகிய நிகழ்வை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் மலேசியா வந்திருந்தபோது சொன்னேன். அதனை உடனடியாக எழுதாமல் நன்றாக மனத்தில் ஊறப்போட்டு எழுதுங்கள் என்றார். அப்படி நான் பார்த்த மனிதர்களைக் கதைகளுக்குள் கொண்டு வர முயன்றேன். அவர்களைப் பார்க்கும்போது பொதுவாகத் தோன்றும் அசூயை, அவநம்பிக்கை மனநிலைகளுக்கு அப்பால் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைப் போன்ற விசாரத்தைக் கதைகளுக்குள் கொண்டு வர முயன்றேன்.


வல்லினம்: புறத்தில் நிகழும் திருப்பங்கள், மனதில் ஏற்படுத்தும் மிக மெல்லிய அசைவுகள் உங்கள் கதைகளில் மீண்டும் மீண்டும் பதிவாகின்றன. ஆனால், அவ்வசைவுகள் குளத்தில் எறியப்படும் கற்கள் போல அளவில் பெரிய அடுத்தடுத்த  அலைகளை உருவாக்கக் கூடியவை. மௌனத்தில் படபடக்கும் அம்மனிதர்கள் அனைவரும் உங்களின் உருவகங்கள் எனலாமா?

அரவின் குமார்: என்னுடைய இயல்பு எனச் சொல்வதை விட அதன் மீதான ஒரு ஈர்ப்பினாலே அதனைத் திரும்ப நிகழ்த்திப் பார்க்கிறேன் எனலாம். சலனமின்மையை எதிர்வினையாகப் போர்த்தியிருக்கும் மனத்தை வாழ்க்கையில் முன்வைக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன. அந்தச் சாத்தியங்களைப் புனைவில் நிகழ்த்திப் பார்க்கத்தான் அம்மாதிரியான மனிதர்களைக் கதைகளில் உருவாக்குகிறேன். 

வல்லினம்: எழுத்தாளர்கள் பலருக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபாடு இருப்பது குறைவு. நீங்கள் இடைவிடாது பயிற்சியில் இருக்கிறீர்கள். மலை ஏறுகிறீர்கள்,  தினமும் மெதுவோட்டம் ஓடுகிறீர்கள், உங்களின் ஒருநாளில் கணிசமான அளவு உடற்பயிற்சிக்குக் கொடுக்கிறீர்கள். இவையெல்லாம் வெறும் உடலுக்கான பயிற்சி என மட்டும் எடுத்துக்கொள்வதா?

அரவின் குமார்: சிறுவயதில் என்னுடைய உடல்நலம் மிக எளிதில் கெடக்கூடியதாக இருந்தது. மாதத்தில் பல நாட்கள் தலைவலி, காய்ச்சல், சளி என எதாவது ஒரு உபாதையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பேன். அதனாலே, விளையாட்டுகள், உடற்பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்காமல் இருப்பதற்கான சலுகையை அம்மா எனக்கு வழங்கியிருந்தார். என் வயதையொத்த நண்பர்கள் அதிகமும் விளையாட்டுகளில் திளைக்கும்போது வேடிக்கை பார்ப்பவனாக அல்லது அது குறித்து எந்த எண்ணமுமில்லாமல் வீட்டில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பேன். கொஞ்சம் வளர்ந்த பின், என்னால் ஈடுபட முடிந்த ஓட்டம், நடைபயிற்சி போன்றவற்றில் இயல்பாகக் கவனம் திசை திரும்பியது. எதையாவது ஒன்றை மனத்தில் அசைப்போட்டுக் கொண்டு நடப்பதோ ஓடுவதோ என்னுடைய இயல்புக்கு மிகவும் தோதானதாக இருந்தது.  உடலின் மீதான அக்கறையும் சேர்ந்து கொண்டதால் அன்றாடத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உடற்பயிற்சி மாறிவிட்டது. ஒரு நாளைக்கு நிச்சயம் அரை மணி நேரமாவது எதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பதைச் சில ஆண்டுகளாக வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். அப்படிச் செய்ய முடியாத நாட்களில் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

வல்லினம்: பொதுவாக,  இன்றைய இளைஞர்கள் ஆடம்பர பிரியர்கள், அதிகமும் கேளிக்கை விரும்பிகள் என்று சொல்வது மிகையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் உள்ளது. ஆயினும், GTLF விழாவில் பேசியபோது நீங்கள் மினிமல் வாழ்க்கை பற்றிய விருப்பத்தை முன்வைத்தது ஞாபகம் இருக்கிறது. அது பற்றி சொல்லுங்கள்.  இப்போதும் அந்த மனநிலை அகலாமல்தான் இருக்கிறீர்களா?

அரவின் குமார்: இந்த மினிமலிச வாழ்க்கை முறையில் எனக்கிருக்கும் ஆர்வம் அடிப்படையில் என்னுடைய தாத்தாவிடமிருந்து வந்திருக்கலாம் என நினைக்கிறேன். பொதுவாகவே, முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் சிக்கனம் என்பது வாழ்க்கை முறையாகவே இருப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். என்னுடைய பால்யத்தின் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் பெல்டா நிலத்தில் குடியேறியிருந்த தாத்தா, பாட்டியுடன் கழிந்தது. அவருக்குச் சிக்கனம் என்பதில் இருந்த கறாரான பிடிப்பை நான் உள்வாங்கியிருந்தேன். பொருட்களைப் பயன்படுத்தும் பாங்கு, ஒழுங்கு என்பதில் இருக்கும் ஈர்ப்பு அவரிடமிருந்தே வந்திருக்க வேண்டும்.

அதன் பின்னர், கல்லூரிக் காலத்தில் காந்தியின் ‘சத்திய சோதனை’ நூலைப் படித்ததும் அதீதமான உடையலங்காரம், அணிகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதென்பது மனநிலையாகவே மாறியது. விலை அதிகமற்ற உடைகள், அளவான உணவு, சிறு உடல் உபாதைகள் தானே சரியாகும் வரையில் காத்திருப்பது அப்படி ஒரு வாழ்க்கை முறைக்குள் பழக முயன்றேன்.  அம்மாதிரியான அலங்காரங்களின் மீதான விருப்பமே ஒருவகையான குற்றவுணர்வை மனதுக்குள் உண்டுபண்ணுவதாக உணர்ந்தேன். இப்பொழுதும் அந்த மனநிலையும் வாழ்க்கை முறையும் எனக்கு உவப்பானதாகவே இருக்கிறது. ஆனால், கூடுமானவரையில் இறுக்கமான விதிகளைக் கொண்டு அதனைப் பின் தொடர்வதைத் தவிர்க்கிறேன். 

வல்லினம்:  பொதுவாக இலக்கியத்துக்குள் வரும் இளைஞர்கள் கவிதையையே தங்கள் வாசலாக கொள்வதுண்டு. ஆனால் நீங்கள் கவிதைகள் எழுதுவதில்லையே. ஏன்?

அரவின் குமார்: பொதுவாகவே எனக்குள் செயற்படும் தர்க்க மனம் கவிதைக்கு எதிரானதாக இருப்பதாக எண்ணுகிறேன். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கிறேன். அப்படியே, புதுக்கவிதையும் எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாமே உரத்தக் குரலில் பேசுவதாகத் தோன்றியதால் அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். கவிதைக்கான மனநிலை என்பது துளித்துளியாய் முழுத்துச் சொட்டும் இலை முனை நீருக்கு ஒப்பானதாகவே எண்ணுகிறேன். அதனை ரசிக்கும் மனநிலை இருப்பதைப் போல எழுதவும் கைக் கூடுமென எண்ணுகிறேன்.



வல்லினம்: அன்னபூரணா மலை ஏற்றமும் நேபாள பயணமும் உங்களின் முதல் வெளிநாட்டுப் பயணம். அந்த அனுபவம் குறித்துக் கூறுங்கள்.

அரவின் குமார்: அன்னபூரணாவுக்கு முன்பதாக மலேசியாவில் இருக்கும் சில குன்றுகளைத் தவிர வேறெங்கும் மலையேற்றப் பயிற்சியை நான் செய்ததில்லை. அன்னப்பூர்ணா மலையேற்றப் பயணத்திட்டத்தில் இணைய எழுத்தாளர் ம. நவீன் அழைத்தார். பல நாட்களாக மலையேறவேண்டுமென்ற எண்ணம் மனதுக்குள் இருந்ததால் உடனடியாக ஆம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், அதற்காக எந்தப் பிரத்தியேக பயிற்சிகளையும் செய்யவில்லை. பயணத்துக்கான நாள் நெருங்கும்போதுதான் அன்னப்பூரணாவின் உயரத்தையும்  அதன் வழித்தடத்தையும் அறிந்து கொண்டேன். அன்னப்பூரணாவின் அடிவாரத்தில் சில நூறடிகள் நடக்கத் தொடங்கியதும் மனத்தில் இருந்த பதற்றம் நீங்கிவிட்டது. அன்னப்பூரணாவிலிருந்த ஆறு நாட்களுமே மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் எதிர்ப்பார்த்தற்கு மாறாக, எளிதாக மலையேற முடிந்தது. பனிப்படலம் (glacier) உருகியோடிய அபாயம் மிகுந்த தடத்துக்கு நடுவில் முட்டுக்கற்களும் வேர்களும் பின்னிப் நடப்பதற்கே சிரமம் அளிக்கும் மலையேற்றத் தடத்தில் நடந்து உச்சியைக் காணும் பயணம் மனத்தை எதோ தியானம் செய்வதைப் போன்ற அமைதிக்கு அழைத்துச் சென்ற பிரம்மையை உணர்ந்தேன். மலையில் நான் உணர்ந்த அமைதியிலும் சலனமின்மையிலும்தான் மொத்த நேபாளமும் இருந்தது. தலைநகர் காட்மாண்டிலும் கூட தெருவை வெறித்துக் கொண்டு எதையுமே செய்யாமல் பலர் உட்கார்ந்திருந்தனர். பண்பாடு, கலை போன்றவற்றையும் தாண்டி என்னைக் கவர்ந்திருந்தது நேபாளத்தில் இருக்கும் சலனமின்மைத்தான். உலகின் உயரமான மலைகளைக் கொண்ட நாடான நேபாளம் மலையின் தனிமையைப் போர்த்திக் கொண்டிருப்பதாகவே இருந்தது.

வல்லினம்: ஏன் எதையும் சுருக்கமாக எழுத வேண்டுமென நினைக்கிறீர்கள்? உங்கள் சினிமா, இசை சார்ந்த பதிவுகள், பயணம் அனுபவங்கள் எனப் பலவும் போதுமான விரிவு இல்லாமல் இருக்கின்றன.

அரவின் குமார்: என்னுடைய தயக்கத்தால் எதையும் சொல்லெண்ணிச் சுருங்க சொல்லிவிட வேண்டுமென்ற இயல்பு சிறுவயதிலே இருந்தது. எதையும் விரைவாகச் சுருங்கச் சொல்லிவிட முயல்வேன். பேசப்போகும் செய்தியை மிகச் சுருக்கமாகப் புரியும் படி சொல்லிச் சென்றுவிட வேண்டுமென்ற எண்ணிமிருந்தது. அதனைத்தான் என்னுடைய எழுத்திலும் காண முடிகிறதென்பதை உங்கள் கேள்வியிலிருந்து புரிந்து கொள்கிறேன். சுருக்கமாக எழுதும்போது இன்னும் அதிகச் செறிவாக இருப்பதாக ஒரு எண்ணப்பதிவும் இருக்கிறது. சிலவற்றை விரிவாக எழுதுவதை ஒரு பயிற்சியாகவும் செய்து பார்க்கிறேன்.

வல்லினம்: மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன அல்லது ஆங்கில இலக்கிய போக்கை நீங்கள் கவனிப்பதுண்டா? தமிழ் படைப்புகளோடு அவற்றை ஒப்பிட முடியுமா?

அரவின் குமார்: மலேசியாவில் எழுதப்படும் மற்ற மொழி படைப்புகளை நான் அதிகமும் வாசித்ததில்லை. மொழிபெயர்ப்புக்காக ஷாக்கிரின் கதைகள் சிலவற்றை வாசித்தேன். அதன் பிறகு சீன மொழியிலிருந்து மலாய் மொழிக்குப் பெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் சில கதைகளை வாசித்துப் பார்த்தேன். அதையொட்டி அம்மொழி இலக்கியப் போக்கைப் பற்றிய புரிதலை உருவாக்கிக் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஷாக்கிரின் கதைகள் நவீன நகர வாழ்வின் ஆழமின்மையும் அதன் பின்னணியில் வெளிப்படும் பண்பாட்டுக் குறிப்புகளைக் கொண்ட உளவியல் சிக்கலையும் பேசுகிறது. நான் வாசித்த மொழிபெயர்ப்பு சீனக் கதைகளில் இருத்தலியல் சிக்கலை நவீனத்துவப் பாணியில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனித்தேன். அவற்றை காட்டிலும் தமிழில் எழுதப்படும் கதைகள் இன்னும் பேசு பொருளால், கூறுமுறையால் மேம்பட்டு இருப்பதாகவே உணர்கிறேன்.

வல்லினம்: எஸ்.எம். ஷாக்கீரின் சில சிறுகதைகளை, வல்லினத்தில் மொழிபெயர்த்த அனுபவம் உங்களுக்கு உண்டு. அந்த வகையில் மொழிபெயர்ப்பு துறையில் தொடர்ந்து ஈடுபடுவீர்களா?

அரவின் குமார்: நிச்சயமாக, மொழிபெயர்ப்பில் ஈடுபட ஆர்வம் இருக்கிறது. ஷாக்கிரின் கதைகளை மலாயிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது மலாய் சமூகத்தின் பண்பாட்டு உட்குறிப்புகளை மொழிபெயர்ப்பதில் சிக்கலை உணர்ந்தேன். சிறுகதைகளின் நேரடி பொருள் பெயர்ப்பு எனக்கு எளிதானதாகவும் விரைவானதாகவும் இருந்தது. ஆனால், மொழிபெயர்ப்புக்குப் பின்னரான புருப் ரீடிங்கின்போதுதான் பண்பாட்டுக் குறிப்புகள் விடுபடலைக் கண்டேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட மூலமொழியும் அதை சார்ந்த பண்பாட்டு, வரலாற்று, இலக்கியக் குறிப்புகளின் மீதான வாசிப்பும் புரிதலும் அவசியமென நினைக்கிறேன். அதற்கான பயிற்சியும் வாசிப்பும் பெற்ற பின்னரே மொழிபெயர்ப்பில் இன்னும் ஆர்வத்துடன் ஈடுபட முடியும்.

வல்லினம்: வல்லினம் விருது அறிவிக்கப்பட்ட தருணத்தில் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

அரவின் குமார்: வல்லினம் இலக்கிய முகாமின் மலாய், சீன இலக்கிய அரங்கின் இடையில் எதிர்பாராவிதமாக விருது அறிவிக்கப்பட்டப்போது பதற்றம் கலந்த மகிழ்ச்சியாக இருந்தது. விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்றுத் திரும்பியவுடனே அடுத்தாண்டில் முதல் நூல் வெளியீடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட வேண்டுமென இருந்து வந்த எண்ணத்தை விருது அறிவிப்பு விரைவுபடுத்தியது. ஆனால், உள்ளூர விருதைப் பெறுவதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டுத்தானிருந்தேன். எனக்கு வழங்கப்பட்ட விருதின் மூலம் இந்தக் காலக்கட்டத்தின் மலேசியத் தமிழ் இலக்கியம் பயணப்படும் செல்திசை அறியப்படுகிறதென்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் விருது பெறுவதன் நிறைவையும்  உண்டாக்கியது.

வல்லினம்: வல்லினம் இளம் படைப்பாளர் விருது பெரும் இந்த நேரத்தில், இலக்கிய விருதுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

அரவின் குமார்: இலக்கிய விருதுகள் சூழலில் அளிக்கும் கவனமும் பாராட்டும் தொடர்ந்து செயற்படுவதற்கான ஊக்குவிப்பாக அமைகின்றது. ஆனால், இலக்கிய விருதுகள் மட்டும்தான் இலக்கியச் செயற்பாடுகளுக்கான அளவுகோல்களாவது இல்லை. தொடர்ந்து,  இலக்கியத்தில் தீவிரத்துடன் இயங்குவதற்கான விசையையும் உறுதியையும் தனியேதான் திரட்டிக் கொள்ள வேண்டும். அரசியல் காரணங்களுக்காவும் ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சக்கரை என்பதைப் போல கணக்குக்கு விருது தருவதையும் நான் விரும்பவில்லை. எந்தச் சார்புநிலையுமின்றி இலக்கியப் பங்களிப்பு, செயற்பாட்டுத் தீவிரம் கருதி தரப்படும் விருதுகளே முக்கியமானவை எனக் கருதுகிறேன்.

 
வல்லினம்: விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் உரையாடிய அனுபவம் குறித்து கூறுங்கள்?

அரவின் குமார்: இன்றைக்குத் தமிழிலக்கியத்தில் நிகழ்கின்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் தீவிரத்தாலும் அளவிலும் விஷ்ணுபுரமே முதன்மையானது. அந்த நிகழ்ச்சியில் இளம் மலேசிய எழுத்தாளராக நான் பேசப் போகிறேன் என்பது ஒருசேர மகிழ்ச்சியையும் பயத்தையும் தந்தது. ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்னரே அதற்கான அறிவிப்புகளுடன் என் கதைகளின் சுட்டிகளும் ஜெயமோகனின் தளத்தில் அளிக்கப்பட்டிருந்தன. அரங்கில் என்னிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கியப் பின் நிகழ்ச்சி தொடங்கும் வரையிலிருந்த பதற்றம் காணாமற்போய் இயல்படைந்து ஒவ்வொன்றுக்கும் பதில்களைச் சொல்லத் தொடங்கினேன். என்னுடைய  கதைகளை வாசித்து ஒவ்வொருவரும் கேட்ட கேள்விகள் வியப்பாக இருந்தன. அதை காட்டிலும் நான் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இலக்கியச் செயற்பாட்டில் பரிசீலிக்க வேண்டியவற்றையும் ஒட்டியும் தெளிவை அங்கிருந்து பெற்றேன். மலேசியச் சூழல் என்பது எழுத்தாளரே தொகுப்பாளராக, விமர்சகராக, வாசகராக, இலக்கியச் செயற்பாட்டாளராக இருந்து இயங்க வேண்டிய சூழலில் இயங்குகிறது. தமிழ்நாட்டிலும் அம்மாதிரியான சூழல் இருந்தாலும், ஒவ்வொன்றுக்குமான தனித்தனியே ஆர்வம் கொண்டோர் இருக்கத்தான் செய்கின்றனர். இலக்கியச் செயற்பாட்டை ஒட்டி எழுப்பப்பட்ட கேள்வி நான் பயணப்பட வேண்டிய பாதையைக் குறித்த தெளிவைக் காட்டியது. எழுத்தாளர், வாசகர் என்ற வட்டத்துடன் ஒதுங்கி கொள்ளாமல் இலக்கியச் செயற்பாடு என்ற பாதையைக் காட்டியது. புதிய களங்களை ஒட்டி யதார்த்த பாணிக் கதைகளை எழுதுவதுடன் அறிவியல் புனைவு கதைகளை எழுதலாமே என்ற பரிந்துரையைக் கேள்வியாகவே ஜெயமோகன் கேட்டார். எழுத்தில் இருக்கும் சுயதணிக்கை மனநிலை, விமர்சனப் பார்வையில் ஆழமின்மை என ஒவ்வொன்றுமே முக்கியமானதாக இருந்தன.  இலக்கியத்துக்காக மட்டுமே இரு நாட்கள் கூடியிருந்து தீவிரமும் மகிழ்ச்சியுமாக இருந்தது நிறைவான அனுபவமாக அமைந்தது.

வல்லினம்: உங்களின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் தமிழகமாக அமைந்தது. பயணத்தில் உங்களின் ஆர்வம் எப்படியானது?

அரவின் குமார்: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் எனச் சோழநாட்டுப் பயணமாக அதனை வடிவமைத்தவர் நண்பரும் எழுத்தாளருமான ஜி.எஸ்.எஸ்.வி நவின். கொடும்பாளூரிலிருந்த முற்காலச் சோழப்பாணிக் கோவிலான மூவர் கோவில் தொடங்கி பிற்காலச் சோழக் கோவிலான தாராசுரம் ஐராவரதேசுவரர் கோவில் எனப் பல கோவில்களைப் பார்த்தோம். ஜி.எஸ்.எஸ்.வி நவின் ஆலயக்கலைப் பயிற்சிக்குச் சென்றிருந்ததால் சிற்பங்களில் இருந்த நுணுக்கங்களை விளக்கினார். ஒவ்வொரு கோவிலுமே மாபெரும் கலைசெல்வங்களாக இருந்தன. தமிழ்நாட்டிலிருந்து திரும்பி பல மாதங்களாகப் பகலொளி நுழையாத இருள் சூழ்ந்த கோவில் முகமண்டபமும் அதை சுற்றிலும் இருக்கும் அகோரப்பத்திரர், அக்னிவீரப்பத்திரர் சிலைகள் எனக் கனவுகள் வந்து கொண்டே இருந்தன. எனக்கு இயல்பாக வரலாற்றின் மீதும் ஆர்வமிருந்ததால், மன்னர்களின் காலக்கட்டம், பண்பாட்டுச் சூழல் என மனதுக்குள் இன்னொரு காலத்துக்குள் சஞ்சரிக்கும் உணர்வை ஒவ்வொரு கணமும் கோவில் உலா ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

விஷ்ணுபுரம் விருது விழாவையொட்டி பல எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பலர் மிக முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்த கடைசி நாளின் போதுதான் எழுத்தாளர் பெருந்தேவியைச் சந்தித்தேன். அவருடன் நானும் எழுத்தாளர் கனகலதாவும் மாமல்லப்புரம் கோவிலுக்குச் சென்றிருந்தோம். அவருடைய வீட்டுக்கருகில் இருந்த ஒரு சித்தர் ஆலயத்தைப் பற்றி சொல்லத் தொடங்கி பருப்புத் துவையலுடன் கூடிய எளிய விருந்தும் மாமல்லப்புரத்தின் அர்ஜூனத்தபசு சிற்பத்துடன் நிறைவு பெற்ற அந்த நாளே எதோ கனவைப் போல மனதுக்குள் படிந்து போயிருக்கிறது. அதனைத் தனிப்பதிவாகவே எழுதியிருக்கிறேன். https://

aravinpages.blogspot.com/2024/07/blog-post_16.html

வல்லினம்: உங்கள் தலைமுறையினரின் இலக்கிய ஈடுபாடு எவ்வாறு உள்ளது?

அரவின் குமார்: என் தலைமுறையை என்பதைத் தொன்னூறுகளில் பிறந்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுத வந்தவர்கள் என்று சொல்லலாம். இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் புனைவிலக்கிய முயற்சி குறைவாகவே நிகழ்கிறது. தொகுப்பு, நூல் என்றளவில் மிகக் குறைவான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் செயற்பாடுகள் என்ற வகையில் பங்கேற்பாளர், பார்வையாளர் என்ற நிலையை இன்னும் நான் உட்பட என் தலைமுறையினர் இன்னும் தாண்டவில்லை என்பதையே காண முடிகிறது. ஆனால், தொடர் வாசிப்பும் இலக்கியப் புரிதலுடன் எழுத வரும் சக தலைமுறை எழுத்தாளர்களாக பரிமித்தா, சர்வின் போன்றோரைக் காண்கிறேன்.

வல்லினம்: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஆண் பெண் உறவு, குடும்ப அமைப்பு பற்றி, ஒரு இளம் எழுத்தாளராக உங்கள் கருத்து என்ன? பல ஆண்களும் பெண்களும் திருமணத்தை தள்ளிப் போடுவதை அரசாங்கமே கலக்கத்துடன் கவனித்து கருத்து சொல்வதால் இதைக் கேட்கிறேன்.

அரவின் குமார்: முந்தைய காலத்தில் உறவைப் பேண வேண்டுமென ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகம், பண்பாடு ஆகிய காரணங்களால் இருந்து வந்த இறுக்கமான உறுதிப்பாடு என்பது இன்றைக்குப் பொருந்தாததாக ஆகியிருக்கிறது. அதனாலே, உறவில் ஒருவிதமான நம்பிக்கையின்மை எப்பொழுதும் இருப்பதாகக் கருதுகிறேன். திருமணத்துக்கு முன்பாக பல்வேறு உறவுகளை ஏற்படுத்தவும் நீடித்துப் பார்க்கும் மனநிலை இயல்பாகியிருக்கிறது. சேர்ந்து வாழ வேண்டுமென்ற எண்ணம் எதன்பொருட்டேனும் உருவாகுமானால் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பின்னால்தான், காதல், அன்பு, பொருளாதாரம், வாழ்க்கை எல்லாமே ஒளிந்திருப்பதாக எண்ணுகிறேன்.


வல்லினம்: அடுத்து உங்கள் இலக்கிய முயற்சிகள் என்ன?

அரவின் குமார்: என்னுடைய அடுத்த முயற்சியென்பது நாவல் நோக்கியதாக இருக்கிறது. இரண்டாண்டுகளாக நாவலொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஈயச்சுரங்கத்தைப் பின்னணியாகக் கொண்ட அந்த நாவலுக்காகத் தொடர்ந்து பல தகவல்களைத் திரட்டி வாசித்து வருகிறேன்.

அதன் பெரும்பகுதி எழுதப்பட்டு விட்டாலும் கூட அதனை முழுமைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து கொண்டேத்தான் இருக்கின்றன. அந்த நாவலை எழுதி முடித்து வெளியிட வேண்டும் என்பது படைப்பிலக்கிய முயற்சியாக இருக்கிறது. அதற்கடுத்து, மலேசியாவில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்திருக்கும் தமிழ் நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திரத்துக்குக் கால்நூற்றாண்டுக்கு முன்னால் இருந்து 2000 ஆண்டு வரையில் வெளிவந்த மலேசியத் தமிழ் நாவல்களையொட்டி விரிவான கல்வியியல் விமர்சனமும் ஒரளவு ரசனை விமர்சனமும் எழுதப்பட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்திருக்கும் நாவல்களை வாசித்துத் தொகுத்துக் கொள்வதென்பது மலேசிய இலக்கியப் போக்கையும் அறிந்து கொள்வதுதான்.

1 comment for ““சலனமின்மையை எதிர்வினையாகப் போர்த்தியிருக்கும் மனத்தைப் புனைவுகளில் நிகழ்த்திப் பார்க்கிறேன்” – அரவின் குமார்

  1. Sharvin Selva
    November 1, 2024 at 11:44 am

    அருமையான நேர்காணல். இன்னும் உங்களை அணுகி அறிந்துக் கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள் அரவின்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...