
புதியவர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும்போது நாமறிந்த, வாசித்த புனைவுலகில் சில புதிய அனுபவங்களும் தருணங்களும் சேர்ந்துகொள்கின்றன என்பதால் புதிய எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அந்த எழுத்தாளர் யார் என்ற எந்த அறிமுகமுமின்றி நேரடியாக கதைகளை அணுகி வாசிக்கும் வாய்ப்பை இணைய இதழ்கள் அளிக்கின்றன. புதிய பல இளம் எழுத்தாளர்களை இணைய இதழ்களின் வழியாகத்தான் அறிய முடிகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் எழுதுபவர்களையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கின்றன. ‘வல்லினம்’ இதழ் வழியாக அப்படி அறிமுகமானவர் அரவின் குமார். புதியவர்களின் கதைகளைக் கொண்டிருந்த இதழ் ஒன்றில் அவரது ‘அணைத்தல்’ என்ற சிறுகதை வெளியாகியிருந்தது.
இந்த முதல் தொகுப்பில் பத்து கதைகள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கதைகளில் உள்ள மனிதர்கள் – சிறுவர்கள், பெண்கள், இளையோர், முதியவர்கள்- அனைவருமே நொந்துபோனவர்கள். அன்றாடப் பாடுகளின் சுமைகளால் கவலைகளால் மனம் சோர்ந்து சலித்துப்போனவர்கள். மகிழ்ச்சி, குதூகலம், கொண்டாட்டம் ஆகியவற்றை அறியாதவர்கள். அப்படியேதும் தருணங்களை அவர்கள் தம் வாழ்வில் சந்திக்க நேர்ந்ததில்லை. மற்றவர்களைப் போல தாமும் வாழவே ஆசைப்படுகிறார்கள். அந்த நோக்கத்துடன்தான் உழைக்கிறார்கள். கிடைத்த வேலைகளை செய்கிறார்கள். ஆனால், அவர்களால் வாழ முடிவதில்லை, பிழைத்துக் கிடைக்கத்தான் வாய்த்திருக்கிறது. எல்லா நேரத்திலும் துயரைச் சுமந்தபடி சலிப்புற்ற வாழ்வில் ஒரு சிறு ஆசுவாசத்தைத் தேடித் திரியும் பாவப்பட்டவர்கள்.
வெவ்வேறு மனிதர்களைப் பற்றிய தனித்தனிக் கதைகளாக அமைந்தபோதிலும் இந்தக் கதைகளை ஒட்டுமொத்தமாக யோசிக்கும்போது ஒரு வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைக் காட்டுபவையாகவே உள்ளன. பிழைப்புக்காக மண்ணையும் உறவுகளையும் விட்டு அந்நிய நிலத்தில் காலூன்ற இயலாத பதற்றமும் துயரமும் சலிப்பும் இவர்கள் அனைவரையும் இணைக்கும் பொதுக்காரணிகளாக உள்ளன.
மறுநாள் எப்படி விடியப்போகிறது என்று எந்த உத்தரவாதமும் இல்லாத மனிதர்களுக்கு இடையிலான உறவுகளும் நிலைக்காது போவதில் எந்த வியப்பும் இல்லை. இருப்பதைவிட மேலான ஒன்று வாய்க்கும்போது அதை நாடிச் செல்வது இயல்பே. ஒப்புக் கொள்வதைத் தவிர வழியில்லை. இந்த மனிதர்களும் அவ்வாறே அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கும் வேறு உறவுகள் வாய்க்காமலில்லை.
அல்லலுற்ற வாழ்விலும் உறவுகள் அமைகின்றன. சக மனிதர்களுடனே ஒவ்வொரு நாளையும் கழிக்கவேண்டிய சூழல். திருமணம், குழந்தைகள், குடும்பச் சண்டை, மனக் கசப்பு, சிறு பூசல்கள், சமரசங்கள் என்று எல்லாமே உண்டு. வீட்டுக்கு வெளியிலும் போட்டி, பொறாமை, வெறுப்பு, அரவணைப்பு, ஏமாற்றம், அணுசரணை என பலவிதமான அனுபவங்கள். விதிக்கப்பட்ட வாழ்வின் கண்ணிகள் இவை. பட்டும் திருந்தியும் அழுதும் சலிப்புற்றும் வெறுத்தும் வேண்டாமலும் இவற்றைக் கடந்தே கரைசேர இயலும். இத்தனைக்கும் நடுவில் ஒருசில சந்தர்ப்பங்களும் ஒருசில மனிதர்களும் ஏற்படுத்தித் தரும் எளிய, சிறிய சந்தோசங்களும் ஆறுதல்களுமே நம்பிக்கை அளிப்பவையாக உள்ளன.
இந்தக் கதைகள் வெளிச்சக் கீற்றுகளே எட்டிப் பார்க்காத இருண்ட உலகத்தில் நிகழ்பவை. அந்த இருட்டு தரும் பயத்தையும் தடுமாற்றத்தையும் போக்கவென நிவாரணிகளாக அமைகின்றன சில நம்பிக்கைகள், ரோக்கியா தடவிக் கொள்ளும் தைலத்தைப்போல. கைவிடப்பட்டவர்களுக்கான ஆறுதலை அளிக்கின்றன அத்தகைய நம்பிக்கைகள். மாந்திரீக நடவடிக்கைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் போன்றவை தற்காலிகமான தப்பித்தல்களை சாத்தியப்படுத்துகின்றன. அன்றாடத்தின் புற அழுத்தங்களால் நொந்து நொடிந்துபோன மனம் திசைதெரியாமல் தடுமாறி, சிதைவுற்று அலையும்போது தர்க்கங்களையும் பகுத்தறிவையும்கொண்டு அதனை சீர்படுத்த முடியாது. மனம் எதிர்பார்ப்பது விளக்கங்களை அல்ல, ஆறுதலை அல்லது திசைதிருப்பலை அல்லது போதமற்ற தூக்கத்தை. கடும் உழைப்பாளியான தாத்தாவுக்கு நிலத்தின் மீதிருந்த பற்று தன் மீது இல்லை என்கிறபோது பாட்டிக்கு வடிகாலாக அமைவது அடர்த்தியாக மஞ்சளைப் பூசிக்கொண்டு சாமியாடுவது. விலகலும் வெறுப்பும் கூடுந்தோறும் குளியலறைக் கல்லில் தேய்க்கும் மஞ்சளும் அடர்த்திகொள்கிறது.
செம்பனைக் குலைகளை வெட்ட வரும் அவாங்குக்கு சிண்டாய் பாடலின் மீதிருக்கும் ஈர்ப்பும் அது அவன் மனத்தில் உருவாக்கும் கற்பனைகளும் உள ஆழத்தின் வெளிப்பாடுகளே. தொடர்ந்து ஏற்படும் விபத்தும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் அந்த வெளிப்பாடுகளின் தொடர்ச்சியே. அவாங்கின் காதில் ஒலிக்கும் அந்தப் பாடல் கதையின் இறுதியில் கதைசொல்லியான அவன் மனைவிக்கும் கேட்கிறது. அவள் அவனை அணைத்தபடியே தன் வாயைப் பொத்திக்கொள்கிறாள். சிண்டாய் பாடலைப் பாடும் பெண் குரல் எனும் மன உணர்வு அவனிடமிருந்து இப்போது அவளிடம் தாவுகிறது.

பணி அழுத்தமும் காதலனைப் பிரிந்த மன அழுத்தமும் சேர்ந்து பெலிசியாவுக்குள் உருவாக்கும் எலித் தொல்லைக்கு நேரடியான நிவாரணமோ சிகிச்சையோ வாய்ப்பில்லை. மாந்திரீக வழியான தீர்வே உகந்ததாக இருக்கும் என்று தீர்மானிக்கிறாள். முள்ளை முள்ளால் எடுக்கும் யுக்தி.
முயற்சிகளில் தோல்விகளை எட்டியபோதும் தொடர்ந்து தன் கனவை உறுதியாகப் பற்றியிருக்கும் ஒருவனின் நடவடிக்கைகளை பிறரால் புரிந்துகொள்வது கடினம். அவனது உறுதி, உளப்பிறழ்வாகவே தென்படும். ஒரு வேளை உணவுக்காக அல்லது பணத்துக்காக அவனிடும் வேடமோ என்ற சந்தேகத்தையும் விதைப்பது இயல்புதான். ஆனால், அவ்வாறில்லை என்று அறிய நேரும்போது அவனை புரிந்து கொள்ள முடியாதவர்களின் மனநிலையையே சந்தேகிக்கத் தோன்றுகிறது.
அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் நமக்கு சில பாடங்களைத் தருவதுண்டு. அப்போது நமக்குள் சில தீர்மானங்களும் உருவாகும். ஆனால், அப்படியொரு சந்தர்ப்பத்தை நாம் நேரில் சந்திக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதை அந்தக் குறிப்பிட்ட தருணமே முடிவு செய்யும். அதில் சரி தவறுகளுக்கு பெரிய அளவில் இடமில்லை. அப்பாவின் பேராசைக்காக கடன் வாங்கித் திருப்பித் தர முடியாமல் மிரட்டலுக்கு உள்ளாகி மந்திரவாதியின் சாபத்துக்கு பயந்து ஓடி ஒளியும் ‘அணைத்தல்’ கதையின் இறுதியில் கிழவியின் நிலையைக் கண்டபின் ஏற்படும் சிறு தடுமாற்றம்தான் யதார்த்த வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நகர்த்திச் செல்கிறது. சரி, தவறுகள் இடம் மாறும் இத்தகைய தருணங்கள் பல கதைகளிலும் உள்ளன.
உழைக்கும் மனிதர்களின் அன்றாடத்தின் துயரைச் சொல்லும் இந்தக் கதைகள் உள்ளபடியே சலிப்பான ஒரு விலகலை உருவாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன. ஆனால், அரவிந்தின் கதைகளை அந்த சாத்தியத்திலிருந்து விடுவிக்கக் கூடியவர்களாக அமைந்திருப்பவர்கள் அக் கதைகளில் உலவும் சிறுவர்கள். சிறுவர்களும் அவர்களின் உலகமும் உலகியல் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவை. எனவே, எளிமையான அவர்களின் அணுகுமுறை சந்தர்ப்பங்களின் அழுத்தங்களை லேசாக்கிவிடுகிறது.
சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான இரு வேறு அனுபவ உலகங்களையும் இணைத்து உருவாக்கும்போது ‘கேளாத ஒலி’ போன்ற ஒரு புனைகதை சாத்தியமாகிறது. அது முற்றிலும் நேரடியான அனுபவ உலகைச் சார்ந்திருக்கும் அதே நேரத்தில் அனுபவத்துக்கு அப்பாலான ஒரு மெய்நிகர் வெளியையும் சார்ந்திருக்கிறது. மனித மூளையின் ஆற்றலை நிகர் செய்யும் அறிவியல் முயற்சிகளின்போது அடைய நேரும் வியப்பைவிட சந்திக்க நேரும் திகைப்பும் அச்சமுமே கூடுதலாக உள்ளது என்பதைச் சுட்டுகிறது இந்தக் கதை.
நவீன மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக ஆயுட்காலம் கூடியிருக்கிறது. மூத்தோர்களின் மக்கள்தொகையும் அதிகரித்திருக்கிறது. அவர்களின் பராமரிப்புக்கான இல்லங்கள் இன்று புதிய வணிக வாய்ப்புகளாக மாறியுள்ளன. பிள்ளைகள் இருந்தும் தள்ளாத வயதில் தனிமையில் விடப்பட்டிருக்கும் மூத்தோர்களின் மனநிலையை கூர்ந்து அணுகவேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையினருக்கு உள்ளது. பெரிதும் அமைதியில் ஆழ்ந்து தமக்கான உலகில் உலவிக்கொண்டிருக்கும் அவர்களின் மனநிலையை குலைக்கவும் தடுமாறச் செய்யவும் புறஉலகின் சிறு சந்தர்ப்பமோ, சொல்லோகூட போதும். அதன் பின் அவர்களை மீட்பது கடினம். மரணம் மட்டுமே அதிலிருந்து தீர்வாகி முடியும்.
000
மனிதர்களையும் இந்த வாழ்வையும் ஒரு புனைவாசிரியர் கூர்ந்து அணுகுகிறார் என்பதைப் பொறுத்தே அவரைப் பற்றிய மதிப்பீடுகள் அமையும். சுய அனுபவம் சார்ந்து மட்டுமே எழுதுவதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் அவரால் திடமாகவும் நம்பகத்தன்மையுடனும் அனைத்தையும் துல்லியமாக சித்தரித்துவிட முடியும். ஆனால், வசதியான அந்த எல்லையைத் தாண்டி தனது சுய அனுபவத்துக்கு புறத்தில் உள்ள வாழ்வையும் மனிதர்களையும் அணுக முற்படும்போதுதான் அவரது புனைவுத்திறனுக்கான சவால்களை அறிய முடியும். கற்பனையின் துணைகொண்டு மட்டுமே அவற்றை சந்திக்க முடியும்.
இக்கதைகளில் வெளிப்படுபவை அரவிந்தின் சுய அனுபவ உலகம் அல்ல. வெவ்வேறு மனிதர்களின் சித்திரங்களை அவர் கண்டும் கேட்டும் தனது புனைவின் வழியாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார். அவர்களை நேரடியாக நம்மால் சந்திக்க முடிகிறது. அவர்களைக் கேட்க முடிகிறது. அவர்களின் பாடுகளையும் துயரங்களையும் உணர வாய்க்கிறது. வெறும் கோட்டுச் சித்திரங்களாக அல்லாமல் அவை ஒவ்வொன்றும் உயிர்ப்புடன் அசைந்து நடமாடுகின்றன. முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், பாவப்பட்டவர்கள் என்று ஒவ்வொரு தரப்பினருக்குமான உணர்வுநிலைகளை அவரால் துல்லியமாக உணர்த்த முடிகிறது. ஒரு புனைவாசிரியனாக அவர் தேர்ந்தெடுக்கும் புலங்களும் மனிதர்களும் அவரது நோக்கையும் திறனையும் உறுதிப்படுத்துவனவாக உள்ளன.
கதைகளை எப்போதும் முழுமையாக சொல்லவிடவேண்டிய அவசியம் இல்லை என்பதை அறிந்திருக்கிறார் அரவின். முடிந்த பின்னும் தன்னுள் விடுவிக்கப்படாத ஒரு முடிச்சைக் கொண்டிருக்கும் கதைகள் வாசகனுக்குள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அடித்தூர், சிண்டாய், எலி, தைலம், கேளாத ஒலி போன்ற கதைகளில் இத்தன்மையைக் காண முடிகிறது.
ஐந்து ஆண்டுகளில் பத்து கதைகள் என்று அவரது முன்னுரையில் காண முடிந்தது. கதைகள் உருவாகி வருவதற்கு காத்திருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எதை கதையாகச் சொல்லவேண்டும் என்று தீர்மானிக்கவும் கதையை அழுத்தமாக வெளிப்படுத்தவும் இந்தக் காத்திருப்பு நிச்சயம் உதவும். ஆனால், தொடர்ந்து நிறைய எழுதுவது தனக்கான கதைமொழியை கண்டுபிடிக்க உதவும். எழுதுவது அனைத்தையும் வெளியிட, பதிப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
கதைக்காக அவர் தேர்ந்தெடுக்கும் களங்களும் தருணங்களும் அழுத்தமாகவும் நம்பிக்கையளிப்பவையாகவும் அமைந்துள்ளன என்பதை இத்தொகுப்பிலுள்ள கதைகள் உறுதிப்படுத்துகின்றன. அரவின் குமார் நிறைவான நல்ல கதைகளை எழுத வாய்ப்பிருக்கிறது.