சிண்டாய்: நிலத்தை மென்று வளர்ந்த தளிர்

மலேசியாவில் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளில் முதன்மையானவர் என்று அரவின் குமாரைச் சொல்லலாம். இவ்வாண்டின் வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது அவருக்கு வழங்கப்படுவது அதற்கான அங்கீகாரம்.  இவ்விருதை ஒட்டி வெளிவரும் ‘சிண்டாய்’ எனும் சிறுகதை தொகுப்பின் வழியாக அவரை மீள் வாசிப்பு செய்தபோது அரவின் குமாரின் புனைவுலகை மேலும் நெருங்கிச் செல்ல முடிந்தது.   

தோட்டப்புற வாழ்க்கை, கம்பத்து வாழ்க்கை, அங்கிருந்து இடம்பெயர்ந்த அல்லல்பாடுகள், நகரக் குடியேற்றத்தினால் ஏற்படும்  அந்நியமாதல் போன்ற களங்களிலிருந்து பெயர்ந்து, மலேசிய இலக்கியத்தை நகர வாழ்வு நோக்கி நகர்த்தி இருக்கும் புதிய தலைமுறை எழுத்தாளராக அரவின் குமார் உருவாகி வருகிறார்.

மலேசியாவின் தமிழ்ச் சமூகத்தைத் தாண்டி, பல இன சமூகங்களையும் அவற்றுக்கு இடையிலான பண்பாடு ஊடாட்டங்களையும் அதன் இயல்பிலேயே காட்டும் போக்கு புதிய தலைமுறை எழுத்தாளர்களிடம் உருவாகி விட்டதற்கான சான்றாக அரவின் குமாரின் வருகை உள்ளது.

உணவில் தொடங்கி இசை, நம்பிக்கைகள், சடங்குகள் என்று எல்லாவற்றிலும் மலேசிய சமூகத்துக்குரிய தனித் தன்மையான அம்சங்களை மிக இயல்பாகக் கூறிச் செல்கிறார். இது வேறொரு சமூகத்தின் வாழ்க்கை எனும் தொனியை, இத்தொகுப்பில் உள்ள கதைகளில்  காண முடியாது என்பதுதான் புதிய தலைமுறை மலேசிய எழுத்தாளர்களின் தனித்த அடையாளமோ எனத் தோன்றச் செய்கிறார்.

அரவின் குமாரின் எழுத்துப் பயணம் 2019ஆம் ஆண்டில்  தொடங்குகிறது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக எழுதி வரும் அவரைத் தொடக்கால எழுத்தாளர் எனலாம். ஆனால், தொடக்ககால  எழுத்தாளர்களிடம் பொதுவாக இருக்கும் கதை தேர்வு குறித்த தடுமாற்றமோ, தடைகளோ அரவினிடம் காணப்படவில்லை. எதை கதையாக்குவது எனும் தெளிவு அவரிடம் உள்ளது.

பன்முக நகர மக்களின் தனிமையும் அதன் அவதியும் அரவின் குமார் கதைகளில் உள்ள பொதுவான அம்சம் எனக் கூறலாம். பெருந் தோட்டங்களிலும் கம்பங்களிலும் கூட்டமாக வாழ்ந்தவர்கள், நெருக்கடியும் போட்டியும் நிறைந்த நகரின் தனித்த வாழ்க்கைக்கு மாறும்போது, மனித உறவுகள் மட்டுமின்றி பண்பு, ஒழுக்கம் சார்ந்த நெறிகளும் மாறுகின்றன. அந்த அந்தரத்தையும் கொந்தளிப்பையும் சிக்கலையும் அவற்றின் இடையே மின்னலிடும் மகிழ்ச்சிகளையும் அரவின் குமார் எழுதுகிறார்.

***

சராசரி மக்களின் அன்றாட வாழ்வில், அகத்தை மறைக்கும் புறவயமான செயல்பாடுகளின் அந்தரங்கமான நாடகத்தில் அகம் வெளிப்படும் தருணங்களைக் காட்டும் கதைகளாக ‘சிண்டாய்’, ‘பதில்’, ‘அடித்தூர்’, ‘அல்ஹம்டுலிலா’ கதைகள் உள்ளன. சமூக நம்பிக்கையை அடித்தளமாகக்  கொண்டு எழுதப்பட்ட கதைகளாக ‘சிண்டாய்’, ‘எலி’, ‘அணைத்தல்’ ஆகிய கதைகளைச் சொல்லாம்.

மலாய் சமூகத்தில் ஆழப்பதிந்திருக்கும் நம்பிக்கைகளில் பேய், பிசாசு, சூனியம், மாந்திரீகம் போன்ற இருண்மையான  நம்பிக்கையும் ஒன்று. காலம் காலமாகத் தொடரும்போது அவை பண்பாட்டு நம்பிக்கையாகவும் மாறிவிடுகின்றன. பல்வேறு சமூகங்களிடையே ஏற்படும் பண்பாட்டுப் பரிமாற்றங்களில் ஒன்றாகின்றன. உடலும் மனமும் வேறு வேறு என்ற கோட்பாட்டிலிருந்து உருவான அத்தகைய நம்பிக்கைகள், உள்ளுக்குள் அடக்கப்பட்டிருக்கும் எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அல்லது வெளியேற்றும் ஆயுதமாக உள்ளன. ‘சிண்டாய்’, ‘எலி’, ‘அணைத்தல்’ கதைகளில் அதனை உணர முடியும்போது அரவினின் கலை மனம் குறித்து மெல்லிய வியப்பு ஏற்படுகிறது. இருண்மையான அத்தகைய சமூக நம்பிக்கைகளை இக்கதைகளில் வேறொன்றின் மீதேறி, படிமகளாகியுள்ளன. ‘சிண்டாய்’ கதையில் சிண்டாய் பாடல் படிமமாகவும் ‘எலி’ கதையில் எலி படிமமாகவும் ‘அணைத்தல்’ கதையில் பயம் படிமமாகவும் அமைந்துள்ளன.

‘சிண்டாய்’ கதையில், ஆழ்மன உணர்வுகளையும் ஆசைகளையும் கையாள மலாய் இனத்தவரின் அமானுஷ்ய நம்பிக்கையை மெல்லிய குறுவாளாகப் பயன்படுத்தியிருக்கும் அரவின் குமார், எந்த இடத்திலும் கத்தி கீறி, ரத்தம் வெளிப்படாமல் லாவகத்துடன் சுழற்றியுள்ளார்.

கதைசொல்லியான பெண்ணின் ஆளுமையையும், அந்த ஆளுமையுடன் ஏற்படும் உரசல்களை அவர் திறனுடன் தட்டிவிடுவதையும் அவளுடைய செயல்கள் வழியாகவே சொல்ல முடிவது தேர்ந்த எழுத்தாளருக்கே கைவருவது. தம்பதியின் உரையாடல்கள், செயல்பாடுகளைக் கொண்டே கதையின் சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்திய மாந்திரீகம், அதில் மற்ற சமூகங்களுக்குள்ள நம்பிக்கைகளைச் சொல்லும் ‘எலி’ கதையில் உடல் இச்சையை நகர மனிதர்கள் நாசுக்காகக் கையாள்வதை ஒருவித எள்ளலுடன் பார்க்கிறார் ஆசிரியர்.  சபா மாநிலவாசியான பெலிசியாவும் இந்தியனான கதைசொல்லியும் லேசான சீண்டலுடனேயே கதை முழுவதும் உரையாடுகின்றனர். பெலிசியாவின் பேச்சும் இயல்பும் அவளை வசீகரமானவளாக்குகிறது. அவளுடன் பழக அலுவலகத்தில் எல்லா ஆண்களுமே விரும்புகின்றனர். கதைசொல்லியின் நண்பனான யோங்கும் பெலிசியாவும் நெருக்கமானவர்கள் போல் கதைசொல்லி காட்டுகிறார். ஆனால் அது குறித்து கதைசொல்லிக்குக் கவலை இல்லை. யோங், பெலிசியா, மணி அண்ணன், கதைசொல்லி போன்ற வெவ்வேறு இனத்து மக்களின் தனி தனிக் குணங்களையும் நம்பிக்கைகளையும் கதையோட்டத்தின் ஊடே விவரிக்கும் அதே நேரத்தில், இன்றைய நகரத்து இளம் தலைமுறையினரின் போக்கையும் மன ஓட்டத்தையும் வெளிப்படுத்துகிறார் கதாசிரியர்.  யோங்கின் அடுக்கு சாப்பாட்டையும் பெலிசியாவின் உடையையும் விமர்சிக்கும் கதைசொல்லியும் மற்ற ஊழியர்களால் விமர்சிக்கப்படலாம். இப்படியான உரசல்கள், ஊடாட்டங்களுக்கிடையே ஒருவித இணக்கத்தோடான இந்தப்  பல இன வாழ்வு தமிழ் எழுத்துக்குப் புதியது.  இரு பாலின சக ஊழியர்களுக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு குறித்த சாதாரண கதை கருவுக்கு, புதிய வாசிப்பையும் சுவாரஸ்யத்தையும் தருவது கதையின் களமும் மாந்தர்களும் ஒரு சிறிய இழையை மாயப் பின்னலாக்கும் எலி எனும் படிமமும். 

‘அணைத்தல்’கதையில் கடன் வாங்கியவரிடம் திருப்பிக் கொடுக்காத குற்றவுணர்வு, மாந்திரீகம், சூனியம் குறித்து புரையோடியிருக்கும் நம்பிக்கையை ஊதிப் பெரிதாக்குகிறது. நம்பிக்கை பயத்தையும் ஏற்படுத்தும். பய உணர்வுக்கும் அற உணர்வுக்குமான நுண்ணிய கோட்டை அரவின் இக்கதையில் கவனமாகக் கையாண்டுள்ளார். கோட்டை மிதிக்கும்போதே உணர்வின் உண்மை சிதைந்துவிடும். பொருள் மயக்கம் ஏற்பட்டு, சொல்ல வருவது புரியாமல் போய்விடும். இக்கதையில் கதைசொல்லிக்குள் இருப்பது நம்பிக்கை மீதான பயம். அந்த நம்பிக்கை முன்னும் பின்னும் அசைக்கப்படும்போது அவனுக்குள் பயம் கூடியும் குறைந்தும் அவனை அலைக்கிறது. முதலில் பயத்தினால் பணத்தைக் கொடுக்க நினைக்கிறான். குமார் அண்ணனுக்கு இந்தோனீசிய போமோவுடன் தொடர்பு இருந்திருக்காதோ என்ற கேள்வியும்  அண்ணன் இறந்து விட்டான் என்பதும் அவனுக்குள்ளிருந்த பயத்தைப் போக்குகின்றன. மாந்திரீகம் குறித்த நம்பிக்கை ஆழமாக இருப்பதாலேயே, அவன் இல்லாதபோது அது செயல்பாடாது என்ற எண்ணம் எழுந்து பயமும் குறைகிறது.

‘சிண்டாய்’, ‘எலி’, ‘அணைத்தல்’ ஆகிய இம்மூன்று கதைகளும் கச்சிதமான வடிவமும் நுட்பமும் கொண்ட கதைகள். 

‘சிண்டாய்’ கதையில், காமமும் கம்பீரமும் ததும்பும் பெண்ணின் ஆளுமையின் படிமமாக மாயம் நிறைந்த பாடல் உள்ளது.

மலாய் பாப் இசை பாடகியான சித்தி நூர்ஹலிசாவின் ‘சிண்டாய்’ பாடல் மலேசியர்களிடம் குறிப்பாக மலாய்க்காரர்களிடம் மிகவும் பிரபலமானது. சித்தி நூர்ஹலிசாவின் நவீன இசையில் 1997ல் வெளிவந்த பாரம்பரிய நாட்டுப்புறப் பாடலான ‘சிண்டாய்’ பாடல் குறித்த கற்பனைகளையும் பயங்களையும் இழைகளாகக் கொண்டு பின்னப்பட்டது இக்கதை. ‘சிண்டாய்’ என்பதற்கு மலாய்ப் பட்டு என்பதுடன் பூனியான் இளவரசி என்ற பொருளும் உள்ளதால், அப்பாடலும் மாயங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.

கணவனை இழந்த வறிய குடும்பத்துப் பெண்ணான கதைசொல்லி தன் நான்கு வயது குழந்தையுடன் தந்தையையும் நோய்வாய்ப்பட்ட தம்பியையும் கவனித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறாள். தனது வீட்டுக்கு வரும் அப்பாவின் செம்பனை தோட்ட கூலியாளான அவாங்,  அவளைப் பார்க்கிறான். அவன் கட்டுடலுடன் அதில் உள்ள வெண்புள்ளிகளையும் அவள் பார்க்கிறாள். தொடக்கம் முதலே  வேட்கையும் வெறுப்பும் அவளிடம் காணப்படுகிறது. குடும்பத்தைக் காப்பாற்றுபவனாக இருந்தாலும், புறாக்களை வதை செய்து ரசிக்கும் அவனுடனான வாழ்க்கை அவளுக்கு அருவருப்பூட்டுவதாகவே இருக்கிறது. ஆனாலும் அவனைக் கவனித்துக் கொள்கிறாள். சமைத்துக் கொடுக்கிறாள். சராசரி இல்லத்தரசியாக இருக்கிறாள்.  

கனவுகள் நிறைந்த இளம் பெண்ணான கதைசொல்லிக்குச் சித்தியின் ‘சிண்டாய்’ பாடல் தன் அகத்தின் இசையாகவே ஒலிக்கிறது. எட்ட முடியாத கற்பனை உலகில் வாழ்பவர்களுக்குச் சோகத்தில் தோய்ந்திருப்பது ஒருவித சுகத்தைத் தரும்.

சித்தியின் பாடல்களை அவாங் ஒலிக்க விட்டுக் கேட்கிறான். அவள் தனக்குள்ளேயே கேட்கிறாள். அவன் உறங்கும்போது அப்பாடல்களைப் பாடி, அவனுக்குள் மாயத்தைப் புகுத்துகிறாள்.  மாயத்தில் கட்டுண்ட அவனை அணைக்கிறாள். அந்த இசையின் கம்பீரமும் சோகமுமாகத் தன்னை உருவகித்துக் கொண்டிருக்கும் அவளை, வென்று ஆட்கொள்ள அவனால் முடியாதிருக்கிறது.

எந்த இடத்திலும் இணைய முடியாத கோடுகளாக வாழும் இருவரும் அது குறித்த எந்த வெளிப்பாடுமின்றி மௌனம் காக்கின்றனர். கதைசொல்லியின் ஆளுமையும் அவள் கணவனின் அகமும் வெளிப்படும்போது இக்கதை இன்னொரு உயரத்துக்குச் செல்லும் எனத் தோன்றுகிறது.

தன் மாயம் வெளிப்படாமல் அவள் அவாங்கை அணைப்பதும், முதலில் அவன் அணைக்கும்போது மரத்துக் கிடப்பதுமாக சுய விருப்பின் விதிகளில் வாழும் பெண்ணின் கம்பீரம் இக்கதையில் கவர்கிறது என்றால், அகதியாக வாழும் பெண்ணின் சுதந்திரம் ‘தைலம்’கதையில் ஈர்க்கிறது.

நகரச் சாலைகளில் பாடியும் இசைத்தும் சிறு பொருள்களை விற்றும் சில்லறைகளில் வாழும் உள்ளூர் மாற்றுத்திறனாளிகள், சிறு வியாபாரிகளுக்கும் வெளிநாட்டு அகதிகளுக்குமான போட்டா போட்டிகளையும் அவர்களின் அல்லல்பாடுகளையும் பேசும்  கதையாகத் தொடங்கும் ‘தைலம்’ கதை, முடிவில் மனம் முகிழ்த்து வாழ்வதற்கு சின்னஞ்சிறு நம்பிக்கை போதுமானது என்பதைக் காட்டும்போது சிறு திகைப்பு ஏற்படுகிறது.

திறன் வித்தை, சிறு விற்பனைகள் மூலம் அன்றாட வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் நகர அகதிகளின் வாழ்க்கையைப் பேசும்  இக்கதையில் வரும் பண்பாட்டு உரசலும்; கலப்பும் இன்று பொதுவாக எல்லா நகரங்களிலும் காணக் கூடியது. மியன்மாரிலிருந்து வருபவர்கள் மலாய்காரர்களைப் போல உடுத்தவும் பாடவும் பேசவும் பழகுகின்றனர். வெவ்வேறு நாட்டவர்களிடையே மதமும் இசையும் பொதுத்தன்மையை ஏற்படுத்துகின்றன.

ஏற்கெனவே மணமான பங்ளாதேசியான ஸமானை மணந்து குழந்தை பெற்று, அவன் நாடு திரும்பும்போது,  தனித்து வாழ முடிவு செய்கிறாள் பர்மிய அகதியான ரோக்கியா. அவன் அன்பானவனாகவே இருக்கிறான். அவள் பாடுவதற்கு உதவுகிறான். அவளைச் சற்று வசதியான இடத்தில் குடி வைத்திருக்கிறான். அவன் பிரிவு அவளை வாட்டவே செய்கிறது. ஆனாலும் அவள் அவனுடன் செல்லவில்லை. தெருப் பாடகியான அவள், ஸமான் சென்றபின் ஏற்பட்ட தனிமையின் பதற்றத்தைத் தைலம் மூலம் நிரப்ப முயல்கிறாள். 

கெட்ட வாடை வீசும் பன்றிக்கொட்டகை அருகே, கால்வாயில் மலசலம் கழித்து, சிறிய பலகை வீட்டில் மூன்று குடும்பங்களோடு நெருக்கியடித்து வாழும் வாழ்க்கையைச் சில நாட்களிலேயே ஏற்றுக் கொண்டுவிட்ட அவளுக்கு, வாழ்வில் பிடிமானம் ஏற்பட ஹசானின் சிறு புன்னகை போதுமானதாக உள்ளது. அந்தப் புன்னகை செராய் புல்லையும் சீன வெற்றிலையையும் சேர்த்துச் செய்யும் தைலத்தைவிட சக்திமிக்கதாக இருக்கிறது. அவள் உள்ளம் மலர்ந்து வசீகரமாகப் பாடுகிறாள். ஹசானின் நட்பார்ந்த போக்கு, போட்டி நிறைந்த அச்சூழலில் ஓர் இணக்கத்தை ஏற்படுத்துகிறது. எல்லா இசையும் ஒன்றுடன் ஒன்று கலந்து இசைக்கிறது. சிறு சிறு நம்பிகைகளில் வாழ்கையை நிறைத்துக் கொள்ளும் அந்த மக்களின் உளவியலை இயல்பாக இக்கதை வெளிப்படுத்துகிறது.

புதிய துணையைக் கண்டடையும் ரோக்கியா, நாளை அவனோடும் செல்லமாட்டாள். அதுவே அவள் சுதந்திரம். கவனமற்றது போன்று வெளிப்படும் கவனமான கலைவடிவத்தைக் கொண்டது இக்கதை. ‘அடித்தூர்’ அதற்கு நேர் எதிரானது எனலாம்.

பெண்ணும் ஆணும் தங்கள் தேவைகளை அடைந்து, அடுத்ததை  நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நவீன உலகில், ஆற்றுப்படுத்தப்படாத ஆதி இச்சையினால் மூச்சுத் திணறும் முதிய தம்பதிகள் குறித்த கதைதான் ‘அடித்தூர்.’

தாத்தா குளிரில் நடுங்கி, கையறு நிலையில் தவிக்கும் சில நிமிடங்களைத்தான் கதை காட்டுகின்றது. கதைசொல்லியின் நினைவோடையில் தாத்தா – பாட்டியின் வாழ்க்கை விரிகிறது.  தாத்தா, பாட்டி இருவரது தோற்றத்தையும் குணங்களையும் வாழ்க்கையையும் கண்முன் காட்சியாக்குகிறது இக்கதையின் கதையோட்டம்.

வயதாக ஆக தங்களுக்கிடையில் வலுபெறும் விலகலால் விரக்தியும் குறிப்பாக தாத்தாவுக்கு அழுத்தமும்  அதிகரிக்கிறது. அதை இருவரும் தங்கள் செயல்களால் வெளிப்படுத்துகின்றனர். எதிலும் நேர்த்தியோடு இருந்த தாத்தா, அத்தனை நேர்த்தியையும் தானே குலைக்கிறார்.  கறையை மறைக்க தன் மீது போர்த்திக் கொண்ட அத்தனை போர்வைகளையும் தானே தூக்கி எறிகிறார். கிடைக்காத அன்பையும் அரவணைப்பையும், ஆக்ரோஷமாக வெளிப்படுத்துபவராக உள்ளார் பாட்டி. தாத்தா கத்தினால் அதைவிட அதிகம் கத்துபவராகவும் அவர் இரண்டு மங்குகளை உடைத்தால், அவர் நான்கு மங்குகளை உடைக்கிறார். சாமி ஆடுகிறார். ஆனால் அது அவருக்குப் பிடிக்காததாகவே இருக்கிறது. வீரமும் நேர்த்தியும் எப்படித் தாத்தாவுக்கு போர்வையாக இருக்கிறதோ, அதேபோல பாட்டிக்கு ஆக்ரோஷம் இருக்கிறது. தாத்தா குறித்த பெருமிதக் கதைகளைப் பேரனுக்குச் சொல்லும் பாட்டி, தாத்தாவுக்காக அதிக இனிப்பு சேர்த்து கேசரி செய்கிறார். மஞ்சள் தேய்த்துக் குளித்து குளித்து எதையோ நிவர்த்திச் செய்பவராக இருக்கிறார். தீர்க்கப்படாத ஒன்று தாத்தாவை நிலைகுலைந்துபோகச் செய்கிறது. அத்தனை இறுமாப்பையும் கம்பீரத்தையும் இழந்து உடல் நடுங்க, குலுங்கி அழுகிறார். தன் தாயின் கடைசி நிமிட கண்ணீரை நினைத்து அவர் விடும் கண்ணீர், மன்னிப்புக்கோருவதாக இருக்கலாம், கழிவிரக்கமாக இருக்கலாம், இயலாமையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், கண்ணீராக அக்குறை கரைந்து வழிகிறது.

பாட்டியின் முகத்து மஞ்சளும் தாத்தாவின் அம்மா முகத்து மஞ்சளும் தாத்தாவை நடுங்க வைக்கும் படிமமாக உள்ளது. கிடைக்காத நியாயத்துடன், நீண்ட விலகலில் வாழும் தம்பதியரின் உணர்வு அயர்ச்சி எனும் அன்றாட உண்மை என்பதிலிருந்து, மானுட உண்மை நோக்கி நகர்த்தும் சாத்தியத்தை அது கொண்டுள்ளது. அதை அரவின் குமார் அப்படியே விட்டு நகர்ந்து விடுகிறார்.

எழுத்தாளன் தன் முதல் தொகுப்பில் தன்னையும் சேர்த்தே முன்வைக்கிறான். தான் என்பது தன் ஆழ்மனம். எவ்வளவு மறைக்க முயன்றாலும் அவனால் அதன் அம்சங்கள் வெளிபடுவதை அழிக்க முடிவதில்லை. அப்படி இந்தத் தொகுப்பில் சில இடங்களில் அரவின் குமார் வெளிபடவே செய்கிறார். ‘பதில்’, ‘கோணம்’ ஆகியவை அதில் முக்கியமானவை. குறிப்பாக, ‘பதில்’கதையில் அவ்வெளிபாடு சற்று அழுத்தமாகவே உள்ளது.

‘பதில்’ கதை தனி தனித் தீவுகளாக வாழும் நகர மக்கள் தங்களுக்கான  இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியைப் பேசுகிறது. அதே நேரத்தில் வாழ்வின் வெறுமையை நிரப்ப ரகசியமாக மனித உறவுகளை நாடும் மனத்தின் சிடுக்கையும் வெளிப்படுத்துகிறது.

ரயிலின் கடைசி இருக்கையைத் தனது இடமாக்கிக் கொள்ளும் கதைசொல்லியுடன் நீண்ட மூக்குக் கொண்ட சக பயணி ஒருவர் ஆறு மாத காலமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். கார் விபத்தில் மகனை இழந்தபின், பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யத் தொடங்கிய அவர் ஒரு சாதாரண கடை ஊழியர். கதைசொல்லி இறுதிச் சடங்கு சேவை நிறுவனமொன்றில் பிணங்களை அலங்கரிக்கும் பணியைச் செய்பவன்.

இருவேறு வயதினர். ஒருவர் நேரடிப் பேச்சைத் தவிர்க்கும் ‘ஜென்சி’ இளையர். மற்றவர் மகனை இழந்த துயரத்தையும் வாழ்க்கை குறித்த பல அச்சங்களையும் விரக்தியையும் பேசி பேசி கரைக்கத் துடிக்கும் மூத்த தலைமுறை. இருவருக்குமிடையேயான உரையாடல்கள் பெரும்பாலும் ஒருவழிப் பேச்சாக, குறைகூறல், புலம்பல்களாக இருக்கின்றன. முதியவர், இளைஞர் இருவரில் யாருக்குப் பதில் தேவை என்னும் கேள்வியைப் போலவே, தனிமை யாரை அதிகம் பாதிக்கிறது என்ற கேள்வியும் கடைசி வரையில் நீடிக்கிறது.

புற உலகில் தனித்திருப்பதாலேயே அக வயமான அணுக்கத்தை நாடுகின்றனர் இருவரும். கோடுகள் ஓரிடத்தில் இணையும்போது அதன் தீவிரம் புலப்படுகிறது. பேச்சற்ற நிலையில்  அத்தருணத்தைத் திறமையுடன் வெளிப்படுத்தியுள்ள அரவின் குமார், அதை பொருட்படுத்தாமல் உதறிச் செல்லும் இன்றைய தலைமுறையின் மனப்போக்கை, இளையராகக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளார். பேச்சு ஒரு படிமமாக திறமையாகக் கையாளப்பட்டிருப்பதால் இது ஒரு நல்ல கதையாக வந்துள்ளது. மேலும் இக்கதை அரவின் குமார் எழுதிய முதல் சிறுகதை என்பது ஆச்சரியம் தருகிறது. 

சுவாரஸ்யமான உரையாடல்களைக் கொண்ட கதை ‘கோணம்’.

படம் எடுக்கக் கற்றுக்கொள்ளும் இரு இளையர்கள், வகுப்புக்காக வித்தியாசமான கருவையும் காட்சியையும் தேடிச் செல்கிறார்கள். நகரில் உள்ள சாப்பாட்டுக் கடைகளில் வழக்கமாக  காணக் கூடிய  மெலிந்த உடலும் தாடியும் வெளுத்த உடையும் அணிந்த ஒருவரைச் சந்திக்கின்றனர். அவரை அவர்கள் தவிர்க்க நினைக்க, படமெடுப்பது குறித்துப் பேசி அவர்களை அவர் பேச்சில் இணைக்கிறார். பல குரல்களில் பேசி அவர்களை ஈர்க்கிறார். ஒரு கட்டத்தில் அவர் ஏமாற்றுக்காரர் என அவர்கள் நினைக்கிறார்கள். பொய்யான கைபேசி எண்ணைக் கொடுக்கிறார்கள். அவர்களிடம் ஐம்பது வெள்ளியை ஏமாற்றி வாங்கியதாக எண்ணி நோகிறார்கள். மறுநாள் அதே கடைக்கு அவரைப் பார்க்கப் போகிறார்கள். அவர் வரவில்லை. ஆனால், அவர்கள் சாப்பாட்டுக் காசைத் தன் கணக்கில் அவர் எழுதச் சொல்லியிருப்பதை அறிகிறார்கள். படம் எடுப்பது பற்றிய கதைசொல்லியின் விளக்கங்களும் விவரணைகளும் சற்றே கட்டுரை தொனியைக் கொண்டிருக்கிறது. இலக்கின்றி வாழ்க்கையின் போக்கில் வாழும்  நகரவாசியான ஸ்ரீதரின் பேச்சே கதை.

‘கோணம்’ என்பது பார்ப்பவரைப் பொறுத்தது. இக்கரு நிறையவே எழுதப்பட்டுவிட்டது என்றாலும், கதையின் களமும் மொழியும் இக்கதையைக் குறிப்பிடத்தக்க கதையாக்கி உள்ளது)

இத்தொகுப்பில் முற்றிலும் வித்தியாசமான சிறுகதையாகவும் அதன் களமாகவும் ‘யாருக்காகவும் பூக்காத பூ’ அமைந்துள்ளது.

சிறுவர்களின் உளவியலைப் பேசும் கதை இது. ரூபனின் ஆங்கிலத் திறன், சற்று வசதியான வாழ்க்கையினால் அவனைப் போட்டியாக நினைக்கிறான் கதைசொல்லி. ரூபன் நெருக்கமான நண்பனாக இருந்தபோதும் ரூபனைவிட சிறக்க வேண்டும் என அவனறியாது போட்டியிடுகிறான். தேவாலயத்துக்கு வரும் வெள்ளைக்காரருக்கு முன்னால் தான் ஆங்கிலப் பாடல் பாடப் போவதைக் கதைசொல்லி சொல்லாமல் மறைக்கிறான். ரூபன் என்ன செய்யப் போகிறான் என்பதையே பதற்றத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். நிகழ்ச்சி அன்று  ரூபனின் தந்தை இறந்து விட, அவன் நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகிறது. கதைசொல்லி இறப்புக்குச் சென்றபோது, அந்தத் துக்கத்திலும் “பாட்ட ஒழுங்கா பாடிக் காட்டுனியா?” என்று கதைசொல்லியிடம் கேட்டு கதைசொல்லியை வியக்க வைக்கிறான். தன் பாடலின் உயிர்ப்பும் அர்த்தமும் ரூபனின் உண்மை நிலையில் இருப்பதை உணரும் கதைசொல்லி,  நண்பனுக்காக அழுகிறான். இதுபோன்ற கதைகள் நிறையவே எழுதப்பட்டுள்ளன என்றபோதும் அரவின் குமார் இக்கதை மூலம் காட்டும் சமூகப் படிநிலைகள் கதையை வாசிக்க வைக்கின்றது. தேவலாயமும் அது சொல்லித் தரும் மேற்கத்திய வாழ்க்கை முறையும் ஆங்கிலமும் இன்னமும் உயர்வுணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருப்பது, சமூக இடைவெளி இன்னமும் பெரிதாக இருப்பதையே காட்டுகிறது.

‘அவனது குரல் நான் பாடிய பாடலில் குறைந்திருந்த ஏதோ ஒன்றை நிகர் செய்ததைப் போன்று இருந்தது’ என்று ஆசிரியர் வலிந்து கதைசொல்லியின் மனநிலையைக் கூறியிருக்கிறார். ரூபனின் துக்கமும் கதைசொல்லி அதனை உணர்வதும் இயல்பாக வாசகருக்குக் கடத்தப்பட இன்னும் ஏதோ தேவையாக இருக்கிறது.

‘கேளாத ஒலி’ இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அறிவியல் கதை.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அறிவுத்திறன் பாதிப்பு உள்ளவர்கள் வெளிப்படுத்தும் ஒலிகளையும் உடல்மொழிகளையும் புரிந்து கொண்டு இயங்க செயலியின் பயன்பாட்டாளர் ஒருவரின் தந்தையும் அச்செயலிலை நிர்வகிக்கும் நிறுவனத்தில் பயனீட்டாளருக்குச் சேவை வழங்கும் ஒருவருக்குமான உரையாடலாகக் கதை நிகழ்கிறது. அச்செயலி, பாதிப்புள்ள ஒரு சிறுவனின் மொழியைப் புரிந்து அவன் செயல்பட உதவுவதற்கு மேலாக, அவனது உணர்வுகளையும் மாற்றத் தொடங்கியபோது அவனது தந்தைக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. செயலி தன்னிச்சையாக, அதன் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகக் குறை சொல்கிறார். செயற்கை நுண்ணறவின் ஆற்றலையும் ஆபத்தையும் சொல்லும் கதை. அறிவியல் தரவுகள் குறித்த விவரங்களுக்கு அப்பால், மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் அவர்களின் சூழல், உணர்வுநிலைகளுக்குமுள்ள தொடர்புகளையும் பொருத்திப் பார்க்க முயன்றிருக்கிறார் அரவின் குமார். மேலாளரான கீதாவின் கடுமை, அறிவுத்திறன் பாதிப்புள்ள சிறுவனனின் செயல்பாடுகள், அவன் தந்தையின் ஆற்றாமை எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் தனிமையையும் சோகத்தையும் பணியாளர் சேகரிக்கும் தரவுகளாகச் சொல்லிச் செல்வது, கதையொழுக்கை நேர்த்தியாக்குகிறது.

‘அல்ஹம்டுலிலா’ பொதுவாகபல இன சமூகத்தில் நிகழக்கூடிய கதை. பெரும்பான்மை எனும் நீரோட்டத்தில் கலந்து தன்னை நிலைநிறுத்துக் கொள்ள நினைக்கும் ஒருவர், இறுதிக்காலத்தில் தன் சுய அடையாள இழப்பை எண்ணி மருகுவதே கதை. தனியாக வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவரைப் பார்த்துக் கொள்ளும் ஒரு மலாய் இளைஞன் சொல்வதாக கதை நகர்கிறது. வரலாற்று ஆசிரியரான அவரை நான்காண்டுகளாக அவன் பார்த்துக் கொள்கிறான். வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பெயர்களையெல்லாம் அவர் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் ‘அல்ஹம்டுலிலா’ சொல்லிக் கொண்டு

மலாய்க்காரராக வாழும் அவர், வேட்டி கட்டி வாழ்ந்த ஒரு தமிழர் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. ஆனால், அதை அவனிடமும் மறைக்கிறார். அவர் குடியிருப்பில் பாதுகாவலனாக வேலை செய்த ராஜன் அவரிடம் தமிழில் பேசி, தன் வரலாற்றை மறைத்து வாழும் அவரைத் திடுக்கிட வைக்கிறான். ராஜனைக் கிழவர் திட்டுகிறார். அதன் பிறகு ராஜன் கிழவரைத் தவிர்க்கிறான். ராஜனைத் தேடிச் சென்று மன்னிப்புக் கேட்கிறார். ராஜன் அதைப் பொருட்படுத்தாதபோதும், இது வரையிலான எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கோரியது போல அல்லது மறைவிடத்திலிருந்து சுயத்துடன் வெளிவந்த சுதந்திரத்தை அனுபவிப்பது போல கிழவர் மகிழ்கிறார். நிம்மதியோடு உயிரை விடுகிறார். கதைசொல்லி மணமாகதவன் என்று பொய் சொல்லி வேலைக்குச் சேர்ந்ததை அறிந்தபோது, கிழவர் துரோகி என்று மிகக் கோபமாகத் திட்டும்போது, அது தன் மீதான கோபமும்தான் என்பதும், அவனைக் கிழவரின் மகள் மன்னித்துவிடும்போது, எல்லாமே சரியாக இருக்கும்போது அடையாளத்தை மறைப்பது ஒன்றும் பெரிய தவறல்ல என்பது கிழவரின் குடும்பம் ஏற்றுக் கொண்ட ஒன்று என்பதும் தெரிகிறது. 

சிக்கல் இல்லாத நடையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. பல ஆண்டு காலம் தனக்குத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்த ஒன்றிலிருந்து கிடைக்கும் விடுதலையினால், மரணத் தருணத்தில் கிடைக்கும் நிறைவையும் நிம்மதியையும்  காட்சிப்படுத்தும் கதை.

இந்தச் சிறுகதைகளில் சில பலவீனங்களும் இருக்கவே செய்கின்றன.

இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகள் புறவயமாகவே நகர்கின்றன.

‘எலி’ கதையில் கணினி மென்பொருள் நிறுவனத்தின் உயர் அதிகாரியான பெலிசியா தனியாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். அவளை எலி ஒன்று தொந்தரவு செய்கிறது. எலியின் கீச்சொலி வெளியிலும் அவளுக்குள்ளும் கேட்டு கேட்டு அவளை இம்சைப்படுத்துகிறது. கனவுகளில் அவள் உடலுக்குள் எலி ஓடி, நரம்புகளை அறுத்து அவளைப் பயமுறுத்துகிறது. இரவில் நிழலைக் கண்டு நடுங்கும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகினாள். அவள் மீது ஈர்ப்புள்ள இந்தியக் கதைசொல்லியிடம் தன் உளைச்சலை விளக்குகிறாள். அவன் மூலம்  இந்திய மாந்திரீகனான மணி அண்ணனை நாடுகிறாள். அவர் அவளுக்கு எலியைத் தாளில் வரைந்து கொடுத்து வீட்டில் கொளுத்தச் சொல்கிறார். வழியில் ஓர் எலி மரணத் தருவாயில் தப்பிப்பதை நேரில் பார்த்து, வாய்விட்டு அலறும் அவள், விடுபட்டவளாகிறாள்.

பட்டும்படாமலும் நகரும் நகரப் பெண்ணின் தந்திரமும் எதிராளியின் திணறலும் இன்னும் ஆழப்படும்போது இப்படிமம் எப்படி நகரும் என யோசிக்க வைக்கிறது. இந்தியனான கதைசொல்லி மீது பெலிசியாவுக்கு நம்பிக்கை வந்ததற்கான தருணம் இடம்பெறாததால் திடீரென கதைசொல்லியை நம்பி அவள் உதவி கேட்பது சற்று உறுத்துகிறது. அதேபோல, யோங்கைப் பற்றி கவலையில்லை எனக் கதைசொல்லி சொல்வதற்கான முகாந்திரமும் கதையில் தெளிவாக இல்லை. எல்லாருடனும் மிக இயல்பாகப் பேசிப் பழகும் அவள் எப்படி நகர்ந்தும் விடுகிறாள் என்பதையும் காண முடியவில்லை.

‘அணைத்தல்’ கதையில் அப்பா விபத்துக்குள்ளானது சூனியத்தால் என நம்பத் தொடங்க, அப்பாவின் மனநிலை பாதிப்பு, அம்மாவின் தோலைச் சுரணையற்றுப் போகச் செய்யும் வெண்புள்ளிகள் எல்லாமே சூன்யத்தால் என நம்பத் தொடங்குகிறான் கதைசொல்லி. அவனுக்குப் பயமுறுத்தும் கனவுகளும் வரத் தொடங்குகின்றன. தூக்கம் தொலைந்து, லாரி ஓட்டும் வேலையை விடுகிறான். கடைசியில் கடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து சூனியத்திலிருந்து தப்பிக்க நினைக்கும்போது கடன் கொடுத்த குமார் அண்ணன் இறந்துபோய் விட்டது தெரிகிறது. அவனது பாட்டியிடம் பணத்தைக் கொடுக்க நினைக்கிறான். ஆனால், அதை வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. மனநிலை பிறழ்ந்தவளாகத் பசியோடு எலும்புக்கூடாக தெருவில் படுத்திருக்கும் நிலையிலும் அவனது அனுதாப உணர்வைக் கசக்கி எறிகிறாள். பயம் அவனைக் குற்றவுணர்வுக்குள்ளாக்குகிறது. 

அரவின் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் தன் கனவுகள், எதிர்பார்ப்புகள், சிந்தனைகளிலேயே மூழ்கியிருப்பவர்கள். தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதாலேயே தனிமையானவர்கள். அது நகரவாசிகளின் பொதுத் தன்மை.  இத்தகைய பலர் ஒரு கதையில் வரும்போது கதையின் ஒருமை குறைவதற்கான வாய்ப்புண்டு. இக்கதை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. சின்னம்மாக் கிழவி, கதைசொல்லி, குமார் அண்ணன் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேர்கோடுகளில் செல்பவர்கள். அக்கோடுகள் ஓரிடத்தில் இணைய வேண்டும் என்பதில்லை. எனினும், இக்கதையின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள கதைப்பின்னல் உதவவில்லை. கதையின் நோக்கம், குமார் அண்ணன் இறந்துவிட்டான் என்று அறிந்த பின்னரும் பணத்தைக் திருப்பிக் கொடுக்க கிழவியைத் தேடச் செய்வது கதைசொல்லியின்  அணையாத பயமா அல்லது இழிவான நிலையிலும் இரக்கத்தைத் தூக்கி வீசும் பாட்டியின் பலமா எனும் குழப்பம் ஏற்படுகிறது.  கதையில் நோக்கத்தைச் சார்ந்தே, கதையின் நகர்வுகள் அமையும்போது, கதையில் ஒருமை ஏற்படுகிறது.

***

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையுமே குறிப்பிடத் தகுந்த இலக்கிய முயற்சிகள் என்று சொல்லலாம்.  வடிவமாகவும் கதை சொல்லிலும் இக்கதைகள் வெற்றிப் பெற்றுள்ளன.

மொழியைக் கூர்கருவியாகக் கையாளாமல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல், தன்னைத் தொந்தரவு செய்பனவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் கதைகள். பெரும்பாலும் அவர் அறிந்த அனுபவங்களிலிருந்து உருவானவை. 

தொகுப்பை வாசித்து முடிக்கும்போது, நிறைவைத் தருவது இதன் அசல் தன்மை.

மக்களின் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனிப்பவராக இக்கதைகளின் வழி அரவினைப் பார்க்க முடிகிறது. ‘அடித்தூர்’ தாத்தா, ‘பதில்’ கதையின் நீண்டு மூக்குக்காரான், ‘எலி’ கதையின் மணி அண்ணன், ‘கேளாத ஒலி’யின் சிறுவனும் அவன் தந்தையும் என்று மாந்தர்களின் தோற்றம், உடை, பாவனைகளையும் பழக்கங்களையும் அவர்களின் குணங்களுடன் இணைத்து, அவர்களைக் கண் முன் நடமாட வைக்கிறார்.

அதே வேளையில், இன்றைய இளம் தலைமுறையின் அவசரமும் எல்லாவற்றையும் விரைந்து அறிந்து, கடக்க விளையும் வேகமும் அரவினிடம் உள்ளது. வாசிப்பு, விவாதம், எழுத்து எதிலும் தீவிரமான, ஆழமான புரிதலுக்கும் வெளிப்பாட்டுக்கும் இப்போக்கு தடையாக இருக்கக்கூடும். அதற்கப்பால், சுயமாக அடையும் ஒளித் துளியை வாசகனுக்குக் கடத்த இன்னும் அதிக கூர்மையும் நிதானமும் ஆழ்சித்தமும் தேவையாகிறது.

உண்மைக்கு ஒப்புக் கொடுத்து எழுதும் அரவின் குமாரின் ‘சிண்டாய்’ தொகுப்பை மொத்தத்தில் வாழ்க்கை கணங்களைப் படம்பிடிக்கும் சித்திரங்கள் எனச் சொல்லலாம்.

அகதிகள் முதல் லாரி ஓட்டுபவர், கடையில் வேலை பார்ப்பவர், உணவகத்தில் பாத்திரம் கழுபவர், பிணங்களை அலங்கரிப்பவர், மாந்திரீகம் செய்பவர் போன்ற எளிய மக்கள், இளையோர்கள், முதியவர்கள், அலுவலக ஊழியர்கள் வரை மலேசிய நகர வாழ்க்கையின் கணங்களை எழுத்துக்குள் பதியவைத்துள்ளன இக்கதைகள்.

இனம், மொழி, படிப்பு, வசதி, வயது, குடியுரிமை எவ்வித பேதங்களும் இன்றி நகரவாசிகளை உழற்றும் தனிமை சட்டென்று அறைகிறது. அதை வெளியில் சொல்ல முடியாத நிலையும் பகிர்ந்து கொள்ளவும் தோன்றாத தன்னுர்வும் துணுக்குறச் செய்கின்றன. அக்கதைகள் குறித்து  யோசிக்கும்போது, அந்த உணர்வுகளின் ஊடாக வெளிப்படும் அமுதமோ அல்லது விஷமோ மனத்தில் படியாதது உறுத்துகிறது. சொற்ப வார்த்தைகளில், எளிமையான சித்திரங்களாக அவை சொல்லப்பட்டிருப்பது தெரிகிறது.

வாழ்வு கணங்களின் சித்திரமாகச் சிறுகதையைக் கொள்ளும்போது ஒரு பெரும் பொறுப்பு ஏற்படுகிறது. அக்கணத்தின் தெறிப்பை அதன் அக, புற நிதர்சனங்களுடன் காட்டும் திறன் தேவைப்படுகிறது.

சிறு கோட்டினால் ஆன சித்திரத்தின் மூலம் ஒரு வாழ்வை, வரலாற்றை, நம்பிக்கையைச் சொல்லி அதன் மூலம் புதியதொரு வெளிச்சத்தைத் தர வேண்டி உள்ளது.

நல்லிலக்கியம், நல்ல கலைகள் என்பன படைப்பவரின் ஆத்மா. அவை சமூகத்தின் ஆத்மாவாகவும் உள்ளன. மலேசிய இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதோடு, வரும் தலைமுறைக்கு வழிகாட்டி, வளர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் அரவின் குமார், மிகுந்த அக்கறையுடன் தன் நேரத்தை அர்ப்பணித்து இலக்கியம் படைக்கும்போது, நிச்சயம் அது அவருக்குப் பெரு நிறைவு தருவதாக இருக்கும். மலேசியாவிலிருந்து உண்மையான படைப்புத்திறன் கொண்ட அரவின் குமார் போன்ற இளம் எழுத்தாளர்கள் கவனம் பெறும்போது, அந்த மக்களின் சுயத் தேடலும் வீரியம் பெறும். அச்சமூகமும் உயர்வு பெறும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...