பாவண்ணன் சிறுகதைகள்: எளிமையின் கலை

உலகில் பத்தாவது உயரிய மலையான அன்னபூர்ணா அடிவாரம் வரை கடந்த ஆண்டு ஏறியபோது முதல் மூன்று நாட்கள் அது கடுமையான பயணமாகவே அமைந்தது. நான்காவது நாள் அதிகாலை பயணம் பனிபடர்ந்த அன்னபூரணியைத் தரிசித்துக் கொண்டே நகரும் அனுபவம். முதல் மூன்று நாட்களைப் போல நான்காவது நாள் பயணத்தில் எங்குமே கற்படிக்கட்டுகள் இல்லை. செங்குத்தான மேடுகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் உச்சிக்குச் செல்லச் செல்ல இதுதான் வழித்தடம் எனும் வரையறைகள் எதுவுமற்ற வெட்டவெளி திறந்தே கிடந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அடைந்துவிடக்கூடிய எல்லை கண்களுக்குத் தெரிந்தாலும் அங்குச் சென்று சேர்வது அத்தனை சாதாரணமாக இல்லை. உயிர்வளி குறைபாடு சுவாசத்தைத் திணறடித்தது. பனிமலையின் வெண்ணொளி கண்களைக் கூசச் செய்தது. குளிர், நாசி முனைகளை ஊசியால் குத்துவது போல வாட்டியது. ஒவ்வொரு அடியையும் சிரமப்பட்டே எடுத்து வைத்தேன். எளிமையாகத் தெரிவதால் மட்டுமே ஒன்று சாதாரணமாகிவிடுவதில்லை என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

பாவண்ணனின் சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வாசித்தபோது அவ்வாறான ஒரு மனநிலையே ஏற்பட்டது. இலக்கிய வாசகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் நுழையக்கூடிய சிறுகதைகள் பாவண்ணனுடையவை. ஆனால் அவை அத்தனை எளிதாக வாசித்துக் கடந்துவிட முடியாதவை.

எழுத்தாளர் பாவண்ணனை எனக்கு ‘நேற்று வாழ்ந்தவர்கள்’ சிறுகதை தொகுப்பின் வழியாகவே அறிமுகம். காவ்யா பதிப்பகம் காவி நிற அட்டையில் கருப்பு எழுத்துடன் அத்தொகுப்பை  உருவாக்கியிருந்தது. சண்முகசிவாவின் இலக்கிய நண்பர் மா. சிவஞானத்தின் சேகரிப்பில் இருந்த அந்நூலை வாசித்தபோது முகப்பைப் போலவே சிறுகதைகளும் எளிமையாகத் தெரிந்தன. அதுவே அந்நூலைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அத்தொகுப்பில் இருந்த ‘வேஷம்’ சிறுகதை மலேசியாவில் நடக்கும் நூல் வெளியீடுகளை நினைவூட்டுவதாக அமைந்ததால் அத்தொகுப்பு எனக்கு நெருக்கமாக மற்றொரு முக்கியக் காரணம்.

‘வேஷம்’ எப்போதும் நான் நினைவு கூறும் சுவாரசியமான சிறுகதை.

ஓர் ஆளுங்கட்சி தலைவர் எழுதியுள்ள நூல் அச்சகத்தில் முழுமையடையாமல் சிக்கலில் உள்ளது. அந்த நூலை தயாரித்து முடிக்கும் பொறுப்பு கதைசொல்லியுடையது. வேலை முடியும் தருவாயில் இருந்தாலும் காலம் நெருக்கடியாக உள்ளது. அச்சக முதலாளிக்குக் கிடைத்துள்ள முதல் அரசு ஒப்பந்தம் அது. எனவே பதற்றத்தில் தவிக்கிறார். கதைசொல்லியிடம் ‘முடிந்துவிட்டதா?’ எனக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் மின்சாரமும் நின்றுபோக வேலை முழுமையாகத் தடைபடுகிறது. வேறு வழியில்லாமல் தயாரான நூல் அட்டைகளினுள் வெற்றுத்தாள்களைக் கொண்டு நிரப்பி, நூலாக மாற்றுகிறார்கள். அனைத்துமே தலைவரின் அந்தரங்க காரியதரியின் ஆலோசனைபடியே நடக்கிறது.

நடக்கும் எதுவும் கதைசொல்லிக்குப் புரியவில்லை. தலைவரின் பிறந்தநாள் விழாவில் ஓர் அங்கமாக இணையும் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் நூலைப் புகழ்ந்து தள்ளுகிறார். அந்நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நோபல் பரிசு கிடைக்கும் என்கிறார். கவிஞர் ஒருவரும் அதேபோல வெற்றுத்தாளில் உருவான நூலைக் கையில் ஏந்தி பாராட்டுகிறார். பேராசிரியர் ஒருவரோ பல்கலைக்கழக ஆய்வுகளைவிட தலைவர் எழுதிய ஆய்வு தரமானது என்கிறார். இப்படி வாசிக்கப்படாத நூல் குறித்து பாராட்டு மொழிகள் குவிகின்றன.

இதையெல்லாம் பார்த்து கதைசொல்லிக்குக் குழப்பம் உண்டாகிறது. உண்மையில் அது தான் வெற்றுத்தாள்களைக் கொண்டு தயாரித்த நூலா அல்லது உள்ளே எழுத்துகள் உள்ளனவா என்ற சந்தேகம் கூட வருகிறது. அச்சக முதலாளியோ இந்த நாடகத்தை ரசித்துப் பார்க்கிறார். கதைசொல்லியைப் பார்த்து “இதுதான் இந்த தேசத்தின் சரித்திரம்,” எனச் சொல்கிறார்.

எனக்கு முதலில் இது ஒரு நல்ல நகைச்சுவை சிறுகதையாகவே பட்டது. மலேசியாவில் நடக்கும் நூல் வெளியீடுகளில் நூலை வாசிக்காமல் வந்து பாராட்டிப் பேசும் முக்கியப் பிரமுகர் பலர் நினைவுக்கு வந்தனர். பாவண்ணனின் ஒரு தொகுப்பையாவது வாசித்துவிட்டோம் என்ற தைரியத்தில்தான் அவரை 2013இல் சந்திக்கவும் செய்தேன். என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை. பாவண்ணன் மிகக் குறைவாகவே பேசினார். கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறி புன்னகைத்தார். பரபரப்பும் ஆர்வக்கோளாறும் மிகுந்திருந்த நான் கொஞ்சம் அதிகமாகப் பேசியிருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

பாவண்ணனின் சிறுகதைகள் வாசகன் நுழைய அத்தனை கதவுகளைத் திறந்து வைத்தாலும் அவை கொடுக்கும் அனுபவங்கள் எளிமையானவை அல்ல என இரண்டாவது  வாசிப்பின் வழியாகவே கண்டடைந்தேன். உதாரணமாக, ‘வேஷம்’ சிறுகதையிலேயே தலைவர் எழுதியுள்ள அந்த நூல் எதை பற்றியது எனக் கவனிக்கத் தவறியிருந்தேன். அது இனத்தின் சரித்திரத்தையும் தேசத்தின் சரித்திரத்தையும் உள்ளடக்கிய நூல். தன் ஆட்சி காலத்தில் இவை இரண்டும் அடைந்துள்ள பொற்காலத்தைக் கூறும் நூல். அதை கவனித்து உள்வாங்கியபோது கதையின் முடிவில் அச்சக முதலாளி போலி புத்தகத்தைக் கண்டு “இதுதான் இந்த தேசத்தின் சரித்திரம்,” எனச் சொல்லும் வார்த்தைகளின் மேல் புதிய ஒளி பாய்ச்சப்பட்டது; அக்கதை முற்றிலும் வேறு கோணம் எடுத்தது.

பாவண்ணனை எளிமையில் கலைஞனாக நான் உணர்ந்துகொண்டது அப்படித்தான். ‘ஆனந்த நிலையம்’ அதில் ஓர் உதாரணம்.

இந்த வாழ்வில் நாம் செய்யவே விரும்பாத, நம்மை நாமே இழிவாகக் கருதக்கூடிய ஒரு தருணத்தைக் காலம் அள்ளி வந்து நம் முன் கொட்டி வேடிக்கை பார்க்கும்போது அதை நிகழ்த்துவதன்றி வேறு வழியற்ற மனிதனின் இயலாமையைப் பேசும் கதை இது.

ஒரு காலத்தில் தபால்காரனாக அரசாங்க வேலை பார்த்த துளசிங்கம் பார்வையில் கதை விரிகிறது. மனைவியின் தலைப்பிரசவத்திற்குப் பணம் தேவைப்பட்டதால் மூன்று மணியார்டர்களில் இருந்த பணத்தைத் திருடியதில் வேலை பறிபோனவன்தான் துளசிங்கம். வீடு புரோக்கர் ஒருவரிடம் எடுபிடி வேலை. வீடு விற்றால் கிடைக்கும் கமிஷனில் சிறு பகுதி கிடைக்கும். மூத்தவளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய பொறுப்பு வேறு கழுத்தை நெறிக்கிறது.

இந்நிலையில்தான் குணசீலன், சாவித்திரியம்மாள் பொறுப்பில் ஏழாயிரம் சதுர அடியில் நிலத்துடன் அமைந்த வீடான ஆனந்த நிலையம் விற்பனைக்கு வருகிறது. குணசீலனின் அப்பாவுக்குப் பிரெஞ்சுக்காரர் பரிசாகக் கொடுத்த வீடு அது.  குணசீலனின் அண்ணன்கள் திருமணம் செய்து வெளியூர் சென்றபோதும் குணசீலன் தன் பெற்றோர்களைப் பாதுகாக்க வேண்டும் என உள்ளூரிலேயே தங்குகிறார். அவர்கள் இறக்கும் வரை கணவன் மனைவி என இருவருமே பணிவிடைகள் செய்து பராமரிக்கின்றனர். பெற்றோர்கள் இறந்த பிறகு சொத்து பங்கீடு சிக்கல் எழுகிறது. குணசீலனின் ஐந்து சகோதர்களும் வீட்டைப் பங்கு கேட்க, அதை விற்று பங்கு தரும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் குணசீலன். மன உளைச்சலில் இருப்பவருக்குப் புற்றுநோயும் இணைந்துகொள்கிறது.

வீடு விற்கும் பணத்தில் அவருக்குக் கிடைக்கப் போகும் சிறிய பங்கில் வைத்தியம் பார்ப்பதா; மகனின் படிப்புக்குச் செலவு செய்தவதா; மகளுக்குத் திருமணம் செய்வதா; அல்லது இனி வாழ்வதற்கான வீட்டைத் தயார் செய்வதா எனக் குழம்பி நிற்கும் சாவித்திரியம்மாளின் மனக்குமுறலை அவளுடன் பேசி அறிகிறான் துளசிங்கம். அவர்களுக்கு நிகழ்ந்துள்ள அநீதியைக் கண்டு உளம் கொதிக்கிறான். குணசீலனின் உடன்பிறந்தோர் ஒவ்வொருவரும் அவருக்கு ஒரு துளி விஷத்தைப் பருகக் கொடுத்தவர்கள் என்பதாக கோபப்படுகிறான். ஆறுதல் வார்த்தைச் சொல்கிறான். ஆனால், அவனே இறுதியாக அந்த வீடு விற்பனை பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்திட செல்ல வேண்டியுள்ளது. அதுவே அவன் பணி.

“நீ எதுக்கு நிக்கற? கெளம்பு. அவுங்க காத்திருப்பாங்க இல்ல. வரும்போது ஐயாவ புடிச்சி அழச்சிகினு வா. பையனுக்குச் சாமர்த்தியம் போதாது.”  எனச் சாவித்திரியம்மா சொல்லும்போது அவனும் தன் பங்கிற்காகத் துளி விஷத்தைப் பருகக் கொடுக்கப் புறப்படுகிறான்.

நேரடியான கதை சொல்லலில் பாவண்ணன் வாசகனை இழுத்து வந்து சேர்க்கும் இடம் கொதிநிலம் போன்றது. ஆனால், அவர் வாசகனை அவ்வளவு சாவகாசமாக அந்நிலத்துக்கு அழைத்து வருகிறார். நம்மால் அங்கு இயல்பாக நிற்க முடியவில்லை. ஏன் வாழ்க்கை இத்தனை கோரமாக உள்ளது என்றும் மனிதன் தன் குறித்து சொல்லும் தீர்ப்புகளை அது ஏன் அனாசயமாக புறங்கையால் தள்ளிவிட்டு சிரிக்கிறது என்றும் புரிந்துகொள்ள முடியவில்லை. வழியே இல்லாமல், நாம் யாருடைய வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு இத்தனை தூரம் கடந்து வந்துள்ளோம் எனக் கைகள் பிசுபிசுக்க யோசிக்க வைக்கிறது.

கண் முன் நிகழும் ஒரு சரிவின் மேல் புகைப்படலத்தைப் பரவச் செய்து, அவ்விடத்தைச் சமன் செய்துவிட்டதாக எப்படி நம்மால் வாழ் நாளெல்லாம் சமாதானங்களைச் சொல்லி கடக்க முடிகிறது என்பது ஆச்சரியம்தான். அவ்வாச்சரியங்களை சாதாரணமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் நம்மிடம் பாவண்ணன் கதைகள் அசாதாரணமான வாழ்க்கைக் கோணத்தில் காட்டுகின்றன.

பாவண்ணன், வாசகனை மட்டுமல்ல தன் கதையில் வரும் பாத்திரங்களையுமே சில சமயம் அவ்வாறு அபத்த சூழல்கள் முன் செயலற்று நிற்க வைக்கிறார்.

உதாரணமாக, ‘சூறை’ என்ற சிறுகதையில் செயல்படாமல் போகும் இரயில் நிலையத்தின் மேல் கிராம மக்கள் ஏன் அத்தனை வன்மத்தைக் காட்டுகின்றனர் என்பதற்கான எந்தப் பதிலும் இல்லாமல்தான் கதைசொல்லி கடந்து செல்கிறார்.

விழுப்புரம் – பாண்டிச்சேரி தடத்தில் கட்டப்பட்ட முதல் இரயில் நிலையத்தில் பணியாற்றும் கதைசொல்லியின் பார்வையில் படிப்படியாக ஒரு இரயில் நிலையம் அவ்வூர் மக்களாலேயே அதன் அடையாளத்தை இழக்கிறது. சேவை குறைக்கப்படும்போது அதுவரை தங்களுக்குச் சேவை செய்த ஒரு தளத்தை அவரவர் தங்கள் மாட்டைக் கட்டுப்போடவும் கொக்கை உரிக்கவும் நெல் இழுக்கவும் படுத்துறங்கவும் பயன்படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அதன் சேவை முழுவதும் நிறுத்தப்படுவதை அறிந்ததும் மேலே ஏறி கூரையைப் பிரிக்கிறார்கள். அதிகாரிகள் முன்பே நிலையத்தைச் சூறையாடுகின்றனர்.

காட்டுச் செடிகள், உயிர்களின் நடமாட்டம் ஓயும் வரை தங்கள் இரகசியக் கண்களைச் சுருக்கிக் காத்திருந்து ஓரிடத்தை அபகரிப்பது போலவே மனிதர்களும் இருக்கிறார்கள். சூறையாடல் என்பது மனிதன் கூட்டமாக இருக்கும்போது தன்னுள் இருந்து திரட்டிக்கொள்ளும் ஆதி இச்சை என்பதாகவே அவர்களின்  செயல்கள் தொடங்கி முடிகின்றன. மீறல்கள் விடுதலை உணர்வாக மாறுகிறது. ஒன்றை அழிப்பதன் வழியாகவே அதை தங்களுடையதாக நம்ப முனைகிறார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்கு வரும் கதைசொல்லி ஓர் ஆர்வத்தில் அந்தப் பாழடைந்த இரயில் நிலையத்தைப் பார்க்கச் செல்லும்போது உண்மையிலேயே காட்டுச் செடிகள் அவ்விடத்தை ஆக்கிரமித்துள்ளன. அதிகாரியாக இருந்தபோது மக்கள் சூறையாடியதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததைப் போல இப்போதும் காட்டுச் செடிகளின் சூறையாட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்கிறார் கதைசொல்லி.

உண்மையில் அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வேடிக்கை பார்க்க மட்டுமே அவ்விடம் செல்கிறார். பற்றிப் படரும் கோரக்கைகள் வாழ்வை நசுக்கும்போது வேடிக்கை பார்ப்பதன்றி வேறு என்ன செய்துவிட முடியும்? இப்படி வேடிக்கைப் பார்க்கும் மனிதர்கள் பாவண்ணன் கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றனர்.

‘முள்’ சிறுகதையில் தன்னுடன் பணியாற்றும் கணேசனை உரிமையாக அண்ணன் என அழைக்கும் இளைஞன் ஒருவன் அவர் வீட்டுக்குச் செல்வது அவர் குழந்தைகளைக் காண்பதற்காக. நான்கு குழந்தைகளும் ‘சித்தப்பா’ என அன்பைப் பொழிவார்கள். அப்படி ஒரு முறை இளைஞன் நைஜீரியாவிலிருந்து கணேசனின் தம்பி குடும்பம் வந்திருப்பதை அறிகிறான். அப்படியானால் அவர்தானே உண்மையான சித்தப்பா. நெடு நாள் கழித்து வரும் அந்தச் சித்தப்பாவுடன் குழந்தைகள் நெருக்கமாக இருந்தால் தன் மனது எப்படியெல்லாம் கஷ்டப்படும் எனும் எண்ணமும் அவனுக்கு எழுகிறது. ஆனால், அங்கு நைஜிரிய தம்பதிகளின் மகனைப் பார்த்து தன் அன்பைக் காட்டும் இளைஞன் மெல்லிய அவமதிப்புக்குள்ளாகிறான். அவனுக்கு நிகழும் அவமதிப்பை அக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதையின் ஜீவன்.

இளைஞன் தன் மகனுக்குக் கொடுத்த சாக்லெட்டை ‘மட்டம்’ எனச் சொல்லும் அவன் அம்மாவின் தடிமனான குரல் கேட்டு நோகும் இளைஞனின் புறப்பாட்டை விவரம் அறிந்த பெரியவர்கள் கையாள்வது அத்தனை எளிதானதாக இல்லாத சூழலில் அவனிடம் நெருக்கமாக இருக்கும் தேன்மொழி எனும் சிறுமி மட்டும் கையில் வைத்திருக்கும் சாக்லெட் தாளைக் கீழே போட்டு இளைஞனுக்கு டாட்டா காட்டுவதுடன் கதை முடிகிறது. தேன்மொழி எப்போதும் இவனிடத்தில் சாக்லெட் தாளில் பொம்மை செய்யச் சொல்பவள். அந்தப் பொம்மையால் உற்சாகம் கொள்பவள். ஆனால், அன்று அவள் இளைஞனிடம் எதையும் கேட்கவில்லை. பெரியவர்களுக்கு ஒரு கனத்த சூழலைக் கடக்க பாவனையே கைக் கொடுக்கிறது; குழந்தைகளின் முகத்தில் அது அமைவதில்லை. எனவே, அவள் தன் மகிழ்ச்சியைக் கைவிடுகிறாள். அது சாக்லெட் காகிதமாக காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது.

பாவண்ணன் பல சந்தர்ப்பங்களில் கு. அழகிரிசாமியை நினைவுப்படுத்துகிறார். குறிப்பாக கதைகளில் அவர் குழந்தைகளைக் கையாளும் இடங்கள் அசாதாரணமானவை.  ‘முள்’ சிறுகதையில் வரும் சங்கர் எனும் சிறுவன், இளைஞன் கொடுக்கும் சாக்லெட் காகிதங்களைச் சேகரிப்பவனாக வருகிறான். “நூறு வரைக்கும் சேகரிக்கப் போகிறேன்” எனச் சொல்கிறான். ஆனால், நூறுவரை சேகரித்தப் பின் என்ன செய்வதென அவனுக்கு எந்தத் திட்டமும் இல்லை. அதுதான் குழந்தைகள் உலகம். முன்னேற்பாடுகளும் முன் திட்டங்களும் இல்லாத உலகம். அந்த உலகம் பாவண்ணன் புனைவில் அபாரமாக வெளிபடுகிறது.

அது போலவே பாவண்ணன் குழந்தைகளை நேசிக்கும், அவர்கள் மனங்களை அறியும் எழுத்தாளராகவும் சில சிறுகதைகளில் வெளிபடவே செய்கிறார்.

‘பயணம்’ சிறுகதையை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். பெரிய திட்டங்கள் இல்லாமல் சைக்கிளில் இருநூறு மைல்கள் ஓட்டி வரும் கதைசொல்லி ஒரு மழை நேரத்தில் தன் வீட்டில் ஒதுங்க அழைக்கும் சிறுவனுடன் கொள்ளும் நட்பே சிறுகதையின் சாரம். சிறுவன் தனக்குச் சைக்கிள் மீது இருக்கும் பிரியத்தைச் சொல்கிறான். ஒரு வேளை சைக்கிள் இருந்ததால் கூட சிறுவன் கதைசொல்லியை வீட்டுக்கு அழைத்திருக்கலாம். மெல்ல மெல்ல சைக்கிள் மீது தனக்கு இருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தியபடியே இருக்கிறான். கதைசொல்லி அவனுக்குச் சைக்கிள் மீது இருக்கும் கற்பனையைத் தனது அனுபவத்தால் இன்னும் விரிவாக்குகிறார். கற்பனையில் அவன் கதைசொல்லியிடம் சைக்கிள் ஓட்டும் காட்சியும் அந்தக் காட்சியில் ஒன்றித்த கதைசொல்லி வேடிக்கையாக ‘பிரேக்’ எனக் கத்துவதும் குழந்தைகளை அறியாதவர்களின் கரங்கள் ஒருபோதும் எழுதாது. 

கதைசொல்லி சிறுவனுக்கு மிதிவண்டியை ஓட்டக் கொடுக்கிறார். அவன் குரங்குப் பெடலில் ஓட்டுகிறான். கதைசொல்லி கொடுக்கும் பயிற்சியில் சீட்டில் அமர்ந்து ஓட்டவும் பழகிக் கொள்கிறான். கடைசியில் கதைசொல்லியுடனேயே அவன் மாமா வீடு வரை புறப்படுகிறான். மாமா வீட்டில் உள்ள சைக்கிளைக் கூட தொட தனக்கு அனுமதி இல்லை என்கிறான். கதைசொல்லியின் சைக்கிளில் மாமா வீடு வரை ஓட்டிச் சென்று தோரணை காட்ட புறப்படும் சிறுவனிடம் சொல்லாமல் கதைசொல்லி பேருந்தில் ஏறி புறப்படுகிறார்.

குரங்குப் பெடலில் சைக்கிள் ஓட்டும் சிறுவன் சீட்டில் அமர்ந்து செல்கையில் அடையும் பரவசத்தை யாரால் அவ்வளவு எளிதில் பறிக்க முடியும்? பாவண்ணன் போன்ற எழுத்தாளர்களால் அது ஒருபோதும் முடிவதில்லை. கதை நடக்கும் காலத்தில் சைக்கிள் பெருமதியானதுதான். ஆனால், கதைசொல்லியின் மனம் இழப்பதில் வரும் தியாகத்தில் வெளிபடவில்லை; ஒரு சிறுவனின் புன்னகையைப் பறிக்காமல் வருவதில் அது குவிகிறது. இருநூறு மைல்கள் தான் ஓட்டி வந்த நெடும் பயணத்தைவிட குரங்குப் பெடலில் இருந்து சீட்டில் அமர்ந்து சில நூறு மீட்டர்கள் சைக்கிள் ஓட்டியுள்ள சிறுவனின் பரவசத்தைக் கதைசொல்லி அறிந்துள்ளான்.

‘கிருஷ்ண ஜெயந்தி’ சிறுகதையில் ஒரு சிறுவன் இக்கட்டான நிலையில் வளர்ந்த இளைஞனாக பாத்திரம் எடுத்து மீண்டும் சிறுவனாகிப்போகும் அசாதாரணத் தருணத்தைக் காட்டுகிறார் பாவண்ணன். தி. ஜானகிராமனின் ‘சிலிர்பு’ சிறுகதையில் சிறுமி சட்டென தாயாகி பின்னர் சிறுமியாகும் நுட்பமான இடம் அது.    

மாங்காய் திருட வரும் நான்கு சிறுவர்களில் ஒருவன்தான் கதைசொல்லி. மாமியிடம் மாட்டிக் கொள்ள, மாமி அன்பாய்க் கடிந்து அவனைத் திருத்துகிறார். மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி என்பதால் கிருஷ்ணர், கண்ணன் என யாரைப்பற்றி மாமி கூறியும் அவன் அறிந்திருக்கவில்லை. மாலையில் மறுபடியும் மாமியைச் சந்திக்கும்போது அவர் தலையில் அடிப்பட்டிருப்பதைப் பார்த்து மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றான். தையல் போடப்பட்டதும் காப்பி வாங்கித் தருகின்றான். “தையல் போட்ட மயக்கத்துல உக்காந்திருக்கச்சே ஓடிப் போயி ஒரு காப்பி வாங்கியாந்து கொடுத்தான் பாருங்கோ. அந்த நேரத்துல அது அமுதம். எப்பிடிடா கண்ணா நோக்கு அது தோணித்து?” என வியக்கும் மாமி “கண்ணனும் தெரியலைங்கறான், கிருஷ்ணனும் தெரியலைங்கறான். இதுமட்டும் எப்படித் தோணித்தோ?” எனும் மாமி இறுதியில் கூறும் வரிகளில்  கதைசொல்லியான சிறுவன் கண்ணனாகவும் கிருஷ்ணனாகவும் வாசகனுக்கும் உருமாறி மாயம் செய்கிறான்.

‘பிருந்தாவனம்’ சிறுகதையில் வரும் தண்டபாணி எனும் சிறுவனின் கதாபாத்திரமும் ஏறத்தாழ அப்படியானதுதான். அண்ணன் தனபாலின் கட்டுச்செட்டான கறார் வாழ்க்கை முறையின் மேல் உள்ள அச்சத்தால் அண்ணி தான் ஆசைப்பட்டவற்றை வாங்க முடியாமல் தவிக்கிறாள். தண்டபாணி அவளுக்குச் சில உபயங்கள் சொல்லி தந்திரமாக அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்கத் துணை இருக்கிறான். அதன் உச்சமாக அண்ணிக்குக் குழந்தை கண்ணன் பொம்மை மீது ஆசை வருகிறது. சிக்கனத்தால் அழகுணர்ச்சியை இழந்துள்ள கணவனுக்கு அந்தக் குழந்தை கண்ணன் பொம்மை ஆடம்பரம் என்பதை அறிவாள். தண்டபாணி கொடுக்கும் திட்டத்தால் அதை வாங்குகிறாள். ஒருமுறை கணவனிடம் சிக்கிக்கொள்ளும் வேளையில் தண்டபாணியால் தப்புகிறாள்.

சிறுவர்கள் பெரியவர்களை அறிந்துள்ளதைப் போல பெரியவர்கள் சிறுவர்களை ஒருபோதும் அறிய முயன்றதில்லை என்பதைப் பாவண்ணனின் கதைகள் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன. பெரிய பெரிய சிக்கல்களுக்கு அவர்களிடம் சிறிய தீர்வுகள் இருக்கின்றன. குழந்தை கண்ணனைத் தன் புத்தகப்பையில் ஒழித்து வைத்து அப்பையைப் பிருந்தாவனமாக்க முடிகிறது.

உண்மையில் தண்டபாணி அண்ணியைச் சந்தித்த கணமே அவளின் துன்பத்தைப் போக்கும் மருந்தாகிவிடுகிறான். அண்ணியிடம் ஒட்டிக் கொள்கிறான். அது எத்தனை இயல்பானது. சிறுவர்கள் தாங்கள் இருக்க விரும்பும் மகிழ்ச்சியான சூழலைச் சுற்றியுள்ள அனைவர் மீதும் பரப்புகின்றனர்.

பாவண்ணன், யதார்த்தவாத சிறுகதைகள் வழியாக இலக்கியச் சூழலுக்கு அறிமுகமானவர். யதார்த்தவாத சிறுகதைகள் என்பது அன்றாடங்களை நம் தேவைக்கேற்பத் தெரிவு செய்து அவற்றைக் கொண்டு உருவாக்கிக் கொள்ளும் புனைவுகள் எனலாம். சமூக யதார்த்தங்களுடன் பொருந்திப்போகும் பின்னணியில் வரும் கதாமாந்தர்கள் வழியாக எழுத்தாளர் கண்டடையும் வாழ்க்கை தரிசனங்களே இவ்வகை சிறுகதைகளின் வெளிபாடு. பாவண்ணனை யதார்த்தவாதம் வழியாக ‘அறிமுகமானவர்’ என நான் குறிப்பிடக் காரணம், இடையறாது எழுத்தில் இயங்கும் அவரது விரிந்த புனைவுலகத்தை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் முடக்கிவிட முடியாது என்பதால்தான்.

திரை, ரணம், போர்க்களம் போன்ற தொன்மங்களைக் கொண்டு உருவான சிறுகதைகள், புதிர், பிரிவு போன்ற புராண பாத்திரங்களை மையமிட்ட சிறுகதைகள் என பல உதாரணங்கள் பாவண்ணனை விரிந்த களங்களைக் கொண்ட கதைசொல்லியாகவே உணர வைக்கிறது.

இதற்கு நேர் எதிராக, ‘சுவரொட்டி’, ‘காலத்தின் விளிம்பில்’ போன்ற மிக நேரடியான மன அவஸ்தைகளைச் சொல்லும் கதைகளும் எழுதப்பட்டுள்ளன. இதுபோன்ற கதைகளில் வாழ்வில் சந்திக்கும் எளிய முரண்களைத் தவிர ஆழமாக விவாதிக்கும் தருணங்கள் குறைவு. புரட்சிகரமான சுவரொட்டிகளை எழுதி இறந்த பிறகும் வாசகங்களால் வாழும் பெரியப்பாவும் (சுவரொட்டி) வாழும் காலத்தில் மிக அழகிய முதியோர் இல்லத்தில் அனாதையாக விடப்பட்ட நினைவுகளை இழந்த தையல் நாயகியும் (காலத்தின் விளிம்பில்) இரு வெவ்வேறு துருவங்கள். இருவரையும் காணச் செல்லும் கதைசொல்லியின் மன உணர்வின் ஆழங்களைப் பாவண்ணன் எழுதிப் பார்க்கிறார். இவ்வாறு தன்னிலையில் எழுதப்பட்ட கதைகளில் வரும் கதைசொல்லிகள் எழுத்தாளர்களாக உள்ளனர். அவர்களைப் பாவண்ணனாகவே வாசிக்க முடிகிறது.

பாவண்ணனின் சிறுகதைகளில் பெண்களுக்குத் தனித்த இடம் உண்டு. ‘வக்கிரம்’, ’மீரா பற்றிய சில குறிப்புகள்’, ‘காலணி’, ’பூனைக்குட்டி’, ‘பிருந்தாவனம்’ என சிலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், என் வாசிப்பில் ‘பொம்மைக்காரி’ அவற்றில் உச்சமானது.

பொம்மைக்காரன் மாரி, தன் மனைவி வள்ளியைக் கிட்டத்தட்ட ஒரு அடிமை போலதான் நடத்துகிறான். அடி உதையெல்லாம் சாதாரணம். உறவும் காதலில்லாமல் நிகழ்கிறது. எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் அவள், அவனிடம் அன்பை மட்டுமே செலுத்துகிறாள். அந்த அன்பைத் தன் உடலை ஒருமுறை வேறொருவனிடம் பணையம் வைப்பதன் வழியாகவும் வெளிப்படுத்துகிறாள். வெளியூர் சந்தையில் மாரிக்குச் சிலருடன் கைக்கலப்பு உண்டாக, பொம்மை கடையை அங்கேயே விட்டுவிட்டு வள்ளியுடன் கடும் காயங்களுடன் ஓடி ஒளிகிறான். அரை பிணமாக வீழ்ந்து கிடக்கிறான். அந்தக் கூட்டத்தில் ஒருவன் மட்டும் அவர்களைக் கண்டுபிடிக்கிறான். கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால் தன்னுடன் உறவுகொள்ள வேண்டும் என வள்ளியிடம் ஒப்பந்தம் போடுகிறான். மயங்கி கிடக்கும் கணவனைக் காக்க வேறு வழியில்லாத வள்ளி அதற்கு உடன்படுகிறாள். “செதுக்கி வச்சமாரி இருக்குடி… செதுக்கி வச்ச மாரி இருக்குடி…” என வள்ளியின் அழகை வர்ணித்தபடியே அவன் கொள்ளும் உறவைக் கணவனிடம் மறைத்து வைக்கிறாள் வள்ளி. ஒரு வகையில் அவளிடம் கூட அதை மறைத்தே வைக்கிறாள். கணவனைக் குணப்படுத்தி பழைய நிலைக்கு மாற்ற இடைவிடாது பணிவிடை செய்யும் அவளுக்கு அடியும் உதையும் தொடர்கிறது. அப்படி ஒரு உச்சமான வேதனையில் தன்னைப் புணர்ந்த சுருள்முடிகாரனின் நினைவு காமமாக, ஏக்கமாக, இச்சையாக தீவிரம் கொள்ளும் இடமும் அதை அவள் அடக்கத் தவிக்கும் தருணமும் பாவண்ணன் புனைவில் கவித்துவமாக மிளிர்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாது எழுதி வரும் பாவண்ணனின் சிறுகதைகள் எண்ணிக்கையில் அதிகம்தான். அத்தனையையும் வாசித்து அவர் புனைவுலகை மதிப்பிடும் நோக்கம் இக்கட்டுரைக்கு இல்லை. அள்ள முடிந்த பனி மொறுவல்களைக் கையில் ஏந்தி அன்னபூர்ணாவின் மலை உச்சியின் அனுபவத்தை அறிய முயல்வது போலதான் இதுவும். பாவண்ணன் இன்னும் ஆழமாக அறியப்பட வேண்டியவர் என்பதை மட்டும் வாசித்த சில சிறுகதைகள் உணர்த்துகின்றன. 

1 comment for “பாவண்ணன் சிறுகதைகள்: எளிமையின் கலை

  1. November 2, 2024 at 4:01 pm

    பாவண்ணன் சிறுகதைகளைச் சிக்கலில்லாமல் வாசிக்க முடியும். வாசகனுக்குப் புரியும்படியான எளிமையைக் கையாள்பவர். மானுட மெல்லுணர்வை சிறப்பாகப் பிரதிபலிக்கும் சிறந்த கதைகளைத் தொட்டு நல்ல ரசனை விமர்சனத்தைத் தந்திருக்கிறார் நவீன்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...