வல்லினம் இளம் எழுத்தாளர் விருது & வல்லினம் இலக்கிய முகாம்

வல்லினம் இலக்கியக் குழு வருட இறுதியில் இலக்கிய விழாவினை நடத்துவது வழக்கம். அவ்வகையில் இவ்வாண்டு கோலாலம்பூரில் இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இலக்கிய முகாம்

வல்லினம் முன்னெடுக்கும் இந்த இலக்கிய முகாமை ஜா. ராஜகோபாலன் வழிநடத்துகிறார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் அறியப்பட்டவர். சங்கப்பாடல்கள், பக்திப்பாடல்கள், நவீன கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த இலக்கிய முகாமில் எவ்வாறு ஒரு படைப்பை வாசித்து ஆழமாக அறிவது என்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். இந்த முகாமின் பதிவுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் மொத்தம் 30 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா

இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதினை எழுத்தாளர் அரவின் குமார் பெறுகிறார். இரண்டாயிரம் ரிங்கிட் தொகையோடு நினைவுக்கோப்பையும் இந்த விருதில் வழங்கப்படும். இந்த விருது விழாவினை ஒட்டி கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் குறித்த ஓர் அரங்கு இடம்பெறுகிறது. இதில், ஶ்ரீதர் ரங்கராஜ், கி. இளம்பூரணன், விஜயலட்சுமி ஆகியோர் உரையாற்றுகின்றனர். இரண்டு ஆண்டுகளில் உருவான புதிய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை அடையாளம் காட்டுவதே இந்த அங்கத்தின் நோக்கம். இதனைத் தொடர்ந்து விருது விழா தொடங்கும்.

இளம் எழுத்தாளருக்கான விருதளிப்பு விழாவிற்கு எழுத்தாளர் மா. சண்முகசிவா தலைமை தாங்கும் வேளையில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வாழ்த்துரை வழங்குகிறார். மேலும் அரவின் குமாரின் ஆசிரியரும் அவரை இலக்கியவாதியாக அடையாளம் கண்டு உருவாக்கியவருமான ப. தமிழ்மாறன் அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் பாவண்ணன் தமிழகத்திலிருந்து சிறப்பு வருகையளிக்கிறார். தமிழின் முக்கிய விருதுகளான கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது,  விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது,  சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது போன்றவற்றைப் பெற்றவர் எழுத்தாளர் பாவண்ணன். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பாவண்ணன் கன்னடத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்களும் செய்து வருகிறார். இன்று தமிழில் இயங்கும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் இவர்.

இந்த விருதளிப்பு விழா விபரங்கள்

நாள்: 1.12.2024 (ஞாயிறு)

இடம்: YMCA மண்டபம், பிரீக்பில்ட்

நேரம்: மதியம் 2.00 – மாலை 5.00

இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம். முன் பதிவுக்கு 0163194522 என்ற எண்ணில் ம.நவீன் அல்லது 0136696944 என்ற எண்ணில் அ.பாண்டியன் ஆகியோரைத் தொடர்புக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...