கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை உலுக்கி ஓசை எழுப்ப ஆரம்பித்தான் தேவன்.
பனி மூடியிருந்த அமைதியான விடியற்காலையில் அந்தச் சங்கிலியின் ஓசையால் தடால் என எழுந்தமர்ந்த பாப்பியம்மாள், “ஞான் வருந்நு, எனிக்கி கொறச்சு ஒறங்ஙான் சமயந்தாடோ,” என்று கூறி மீண்டும் உறங்க முயற்சித்தாள். ஆனால், பாப்பியம்மாவைத் தேவன் விடுவதாகத் தெரியவில்லை.
“ஹூம்ம், இவன் என்னெ ஒறங்கான் விடில்லா,” என்று போர்வையை விலக்கி எழுந்து வெளியே வந்த பாப்பியம்மாள், அவளது மகள் மித்ராவின் அறை கதவைத் தட்டி,
“யெணி மித்ரே, ஹோம்வர்க்கு எழுதனம்,” என்று குரல் கொடுத்துவிட்டு, ஓசை ஏதும் எழுப்பாமல் தன் அண்ணன் அண்ணியின் அறையைத் தாண்டிக் கொல்லைப்புறத்துக்குச் சென்றாள்.
பின்னங்கால்களைத் தரையில் ஊன்றியபடி முன்னங்கால்களை மாறி மாறி காற்றில் அசைத்து, துதிக்கையை இடமும் வளமும் ஆட்டிக் கொண்டு, காட்டு வாழை இலை போல பரந்து விரிந்திருந்த காதுகளைக் காற்றில் விசிறிக் கொண்டிருந்தான் தேவன்.
“நீ எப்பழும் க்லோக்கு அஞ்சு அடிக்குன்னதுனு மும்பு என்ன உணர்த்தும்,” என்று கடிந்தவாறு தேவன் உண்ண, பனை மர இலைகளையும் கட்டைகளையும் கொண்டு வந்து அவன் முன் அடுக்கினாள்.
“நன்னாயிட்டு வெட்டி விழுங்கு,” என்றாள் சற்று கோபமாக.
அவளது கோபத்தை உணர்ந்த தேவன் அசைவதை நிறுத்திவிட்டு சிலை போல நின்றான். பாப்பியம்மாள் வைத்த கிளை கட்டைகளில் துதிக்கையை வைக்கவில்லை. அதை கண்ட பாப்பியம்மாள், புன்னகைத்தபடி அவனருகே சென்று துதிக்கையை அணைத்துக் கொண்டு,
“எனிக்கு தெய்ஷ்யமில்லா மோனே. நீ கழிச்சோ,” என்று சமாதானம் செய்தாள்.
பாப்பியம்மாளின் அன்பை உணர்ந்த பின் இலை தழைகளை மென்று அரைக்க ஆரம்பித்தான்.
வீட்டினுள் சென்ற பாப்பியம்மாள் பம்பரமாய் சுற்றத் துவங்கினாள். வெளி வாசலில் ஆரம்பித்து முற்றம் முழுவதுமாக சுத்தம் செய்து, முன் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தேவனின் கொட்டகையைச் சுத்தம் செய்த பின்னர் சமையலறைக்கு ஓடினாள்.
முதல் வேலையாகப் பாகற்காய் சாற்றைப் பிழிந்து ஒரு குவளையில் நிரப்பினாள். காலை உணவிற்குப் புட்டும் கடலை கறியும் தயார் செய்தாள். மித்ராவிற்கு மதிய உணவாக சாதமும், அயிலை மீன் வறுவலும் கட்டினாள்.
அவளது அண்ணன் கொச்சப்பனின் அறை கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. பாப்பியம்மாளிற்கு அது சொர்க்க வாசல் திறந்து கடவுள் காட்சியளிக்கும் தருணம். கொச்சப்பனின் மீது அவ்வளவு பயம் கலந்த மரியாதை அவளுக்கு.
அண்ணனின் காலடி ஓசை கேட்டதும் பாகற்காய் சாற்றை அவரது வெள்ளி டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு விரைந்தாள்.
திவான் நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு கையில் செய்தித்தாளையும் மறு கையில் பாகற்காய் சாற்றையும் வாங்கிக் குடிக்கலானார் கொச்சப்பன்.
பள்ளிக்குத் தயாராகி ஓடி வந்த மித்ரா தனது மாமனின் இருப்பைக் கண்டு கால்களை அடக்கி மெதுவாக சமையலறைக்குச் சென்றாள். அவள் பயந்து பதுங்குவதை விழிகளால் அன்றி சிந்தையாலேயே உணர்ந்தார் கொச்சப்பன்.
“அம்மே, புட்டு ஆயா?”
“ஆ, சுந்தரி வந்நோ!” என்று ஒரு தட்டில் காலை உணவை வைத்துக் கொடுத்தாள்.
தேங்காய் எண்ணெய் தேய்த்து, நேர் வகுடோடு இறுக அழகாகப் பின்னியிருந்த அவளது கார் கூந்தலையும் வட்ட வடிவமான தன் மகளின் முகத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த கோபுரப் பொட்டையும், அதன் கீழ் இருந்த மெல்லிய சந்தனக் கோடும் கண்டு ரசித்தவள், தன் மகளுக்குத் திருஷ்டி எடுத்து, “நம்மட துர்கே அம்மனப் போலே உண்டு,” என்றாள்.
அவ்வார்த்தைகளில் இருந்த இனிப்பின் சாரம் மித்ராவினுள் இறங்கியதாகத் தெரியவில்லை. அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் புட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவளது பெளர்ணமி தேகத்தில் வாரை வாரையாகப் பிரம்பின் சிவப்புக் கோடுகள் தென்பட்டன. அதை கண்ட பாப்பியம்மாள் மனம் நொந்து,
“மோளே, கணக்கு நன்னாயிட்டு படிக்கனும். மாமன தேஷியம் பிடிப்பிக்கிறது?” என்றாள்.
உணவைப் பாதியில் வைத்துவிட்டு, “அம்மே ஞான் போகுந்நு. சமயம் ஆயி.”
“இந்நா சோறும் மீன் பொறுச்சதும் உண்டு.”
“அம்மே! நீ மறந்நோ? உல்சவம் உள்ளது கொண்டு இந்நு ஸ்கூலு அர திவசமாணு.”
“தெய்வமே! ஞான் அது மறந்நு போயல்லோ மோளே!”
புத்தகப்பையை எடுத்துக் கொண்டு பின்பக்கமாக வெளியேறினாள். தேவனை, பாகன்-மார்த்தாண்டன் குளிப்பாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டாள். பையைக் கீழே வைத்துவிட்டு தேவன் மீது தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் விளையாடிவிட்டு, அவனது துதிக்கையை ஒரு ஐந்து நிமிடம் அணைத்துக் கொண்டு விடைபெற்றாள்.
மித்ரா சென்றவுடன் காப்பியை மற்றுமொரு வெள்ளி டம்ளரில் எடுத்துக் கொண்டு கொச்சப்பனின் அருகில் சென்றாள் பாப்பியம்மாள்.
“ஏட்டா”
“ம்… எந்தா பரா”
“ஆள்காரு புரத்து காத்து நிக்குந்நு” என்று தயங்கியபடி கூறினாள்.
“அறியாம். ஞான் ஒருங்கி வராம். நீ ஏடத்தி எந்தாணு செய்யுன்னதென்னு நோக்கு,” என்றார் காப்பியைக் குடித்தபடி.
அதற்குமேல் பாப்பியம்மாள் ஒன்றும் சொல்லாமல் தன் அண்ணியைக் காணச் சென்றாள். பள பளக்கும் தேக்கு மரக்கட்டிலில் விலையுயர்ந்த சொகுசு மெத்தையில் போர்வைக்குள் படுத்திருந்தாள் வசுமதி. மெதுவாக அருகில் வந்த பாப்பியம்மாள் போர்வையை லேசாக விலக்கினாள். வாய் பிளந்த பிரண்டைச் செடியைப் போல படுத்திருந்த வசுமதி மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள்.
“ஏடத்திக்கு ஞான் சாய கொண்டு வரட்டே?” தலையைக் கோதியபடி பாப்பியம்மாள் கேட்டாள்.
‘சரி’ என்று சைகையால் சொன்னாள் வசுமதி.
எழுந்து அமர வைக்க முற்பட்ட பாப்பியம்மாளைத் தடுத்த வசுமதி, தானே எழுந்து கொள்வதாகக் கை அசைத்தாள்.
வசுமதியை அவள் இஷ்டப்படி விட்டுவிட்டு, சமையலறைக்குச் சென்ற பாப்பியம்மாள் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தேநீரை இறக்கி வடிகட்டி, வெளியே கொச்சப்பனிற்காகக் காத்திருந்த ஊர்க்காரர்கள் ஐந்து பேருக்கும் சேர்த்து டம்ளர்களில் ஊற்றினாள். வசுமதிக்குத் தேநீர் டம்ளரைக் கொடுத்துவிட்டு வெளியே காத்திருந்த ஊர்க்காரர்களுக்குக் கொண்டு கொடுத்தாள்.
தேநீரை வாங்கி கொண்ட பூசாரி, “தம்புரான் தயாராணோ?” என்று மெல்லிய குரலில் கேட்டார்.
“ஏட்டன் இப்போ வரும்” என்றாள்.
அப்பொழுது தேவனின் பிளிறல் ஓசை கேட்டு அனைவரும் அவன் பக்கம் திரும்பினர். அவனை நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி அழைத்து வந்தான் மார்த்தாண்டன்.
மிக பிரம்மாண்டமான கரிய மலை ஒன்று அசைந்து வருவது போல தன் உடலை உலுக்கிக் கொண்டு வந்து நின்றான் தேவன்.
அவனைக் கண்ட பூசாரி,
“தேவன், அங்ஙு வளந்தள்ளோ!!” என்று வியந்தார்.
“பின்னே! கொச்சப்பன்ட வீட்டு ஆனையாணல்லோ!” என்று கூறி சிரித்துக் கொண்டே வெளியே வந்தார் கொச்சப்பன்.
அவரது குரல் வந்த பக்கம் திரும்பிய ஐவரும் தேநீர்க் கோப்பைகளைக் கீழே வைத்துவிட்டு அவரவர் வணக்கங்களைச் சமர்ப்பித்தனர். கூப்பிய ஐவரின் கரங்களைப் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்தார் கொச்சப்பன்.
கொச்சப்பனின் பெரிய உருண்ட முகமும் நெற்றியில் சந்தனமும் காது வரை படர்ந்திருந்த மீசையும், தடிமனான கைகால்கள் கொண்ட பெருத்த உடலும் சேர்ந்த தோற்றமே காண்போரை மிரட்டுவது போல இருக்கும். மொத்தத்தில் இரண்டு கால் யானையாகவே வடசேரிக்கரை கிராமத்தைக் கட்டி ஆட்சி செய்தார். ஊரில் மங்களகரமான எந்த நிகழ்வாயினும் தம்புரான் குடும்பத்துக்கே முதல் மரியாதையும் முதல் வரவேற்பும் தரப்படும். இது ஐந்து தலைமுறைகளாக நடந்து வரும் வழக்கம்.
“பின்னே எந்தான்னு கார்யம்?” என்று கொச்சப்பன் கேட்க, கொண்டு வந்திருந்த தாம்பூலத்தட்டை எடுத்து பவ்யமாகக் குனிந்து கொச்சப்பனிடம் நீட்டிய பூசாரி,
“வருந்ந வெள்ளியாய்சா நம்முட உல்சவத்தின்டே அவசான திவசம், தங்களே ப்ரத்யேகமாயி அந்நதே பூஜைக்கு வரவேல்குன்னு,” என்றார்.
“ஹூம்ம்” என்று ஒரு கணம் பாப்பியம்மாவைப் பார்த்தார் கொச்சப்பன்.
பார்வையாலேயே புரிந்து கொண்ட பாப்பியம்மாள் அங்கிருந்து விலகி உள்ளே சென்றாள். அவள் சென்ற பிறகு கொச்சப்பன் எழுந்து நின்று தாம்பூல மரியாதையைப் பெற்றுக் கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து கோவில் அலுவலகத்திற்கு வருவதாகக் கூறி ஊர்க்காரர்களை அனுப்பி வைத்தார்.
ஐவரும் கேட்டைவிட்டு மறைந்ததும் கொச்சப்பனின் பார்வை வாசலில் தனக்கென்று அமைத்திருந்த கொட்டிலில் நின்றிருந்த தேவனின் மேல் நகா்ந்தது. தேவன் கொச்சப்பனின் வீட்டில் இருபது வருடங்களாக வளர்ந்து வருகிறான். அவன் இங்கு வாழும் இத்தனை வருடத்தில் கொச்சப்பனை நேருக்கு நேர் பார்த்ததில்லை. வீட்டில் உள்ள மற்ற அனைவரையும் அன்பாக வருடிக் கொள்வான். ஆனால், கொச்சப்பனைக் கண்டால் சற்று விலகியே நிற்பான். இத்தனை பெரிய மிருகம் தன்னைக் கண்டு பயப்படுவதில் ஒரு பெரு மகிழ்ச்சி கொச்சப்பனுக்கு.
வெள்ளித் தட்டில் பாப்பியம்மாள் தயாராக வைத்திருந்த புட்டும் பயிரும் வாழைப்பழமும் சாப்பிட்டுவிட்டு தனது ஜீப்பில் ஏறி வெளியே சென்றார் கொச்சப்பன்.
2.
வசுமதி தேநீர் அருந்திவிட்டு மெதுவாக எழுந்து, தத்தை போல் நடந்து குளியலறைக்குச் சென்றாள். ஒரு பெரிய அண்டாவில் வெந்நீர் தயாராக இருந்தது. வசுமதி, அவளுக்காகக் கட்டப்பட்டிருந்த திண்டின் மேல் அமர்ந்து கொண்டாள். மூலிகை இலைகள் கலந்த குளியல் பொடியை ஒரு கின்னத்தில் எடுத்து வந்தாள் பாப்பியம்மாள். குளியலறை கதவை மூடிவிட்டு, வசுமதியின் ஆடைகளைக் கலைய உதவினாள். மெல்லிய வேல் கம்பு போல இருக்கும் வசுமதியின் உடலைக் காண வேதனையாக இருந்தது பாப்பியம்மாளிற்கு. வசுமதியின் தலையில் இருந்த மயிர்க் கற்றைகளை ஒன்றாகத் திரட்டும் பொழுது ஏதோ காய்ந்த சருகை சேகரிப்பது போல தோன்றியது. மிகவும் கவனமாக ஒன்று திரட்டி உச்சி முடிந்தாள்.
வசுமதியிடம் பேசிக் கொண்டே வெந்நீரை மொண்டு அவளது உடலின் மீது ஊற்றிக் குளியல் பொடியால் தேய்க்கத் துவங்கினாள். பச்சிளங் குழந்தையைக் குளிப்பாட்டுவது போல தினமும் கை நடுங்கும் பாப்பியம்மாளிற்கு. பாப்பியம்மாள் வசுமதியோடு மனம்விட்டுப் பேசுவது இந்தக் குளியல் உபசாரம் முடியும் வரை தான். அதன் பிறகு பாப்பியம்மாள் செய்ய ஏதேனும் வீட்டு வேலை அவளுக்காகக் காத்திருக்கும். அவளது மொழியாடலுக்கு வசுமதி வழக்கமாக பதில் ஏதும் கூறுவதில்லை. என்றேனும் பதிலளிக்கத் தோன்றினால் ஓரிரு வார்த்தைகள் வரும். அதுவும் தண்ணீர் இல்லா ஆழ் கிணற்றில் கல்லைப் போட்டால் வரும் எதிரொலி போல இருக்கும்.
வசுமதியைக் குளிப்பாட்டிய பின்னர், உடலைத் துடைத்துவிட்டு முண்டுத்தி விட்டாள். எண்ணெய் தேய்த்துத் தலைவாரி, குங்குமம் இடும் பொழுது வசுமதி இந்த வீட்டிற்கு மருமகளாக அடி எடுத்து வைத்த பொழுது ஆரத்தி எடுத்தது நினைவு வரும், பாப்பியம்மாளிற்கு.
திடகாத்திரமான உடலோடு புன்னகை மாறா இன்முகத்தோடு இந்த வீட்டில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல வலம் வந்த நினைவுகள் வந்து வலியூட்டும்.
வசுமதியை மெதுவாக அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்துக் காலை உணவை ஊட்டிவிட்டாள்.
அதற்குள் தேவன் பிளிறும் ஓசை கேட்டது. இது வசுமதிக்கான அழைப்பு மணி. வசுமதியை அழைக்கும்போது மட்டும் வித்தியாசமாக மீட்டுவான்.
“தா, முழக்கான் துடங்கி, ஏடத்திய விளிக்கும்போள் மாத்திரம் அவன்ட சப்தம் வேறயானு!” என்றாள் பாப்பியம்மாள்.
லேசாகப் புன்னகைத்தாள் வசுமதி. உணவருந்திய பின் அவளது வாயைத் துடைத்துவிட்டு, வசுமதி நிதானமாக நடக்க வாக்கரை எடுத்து வந்து தந்து, கவனமாக நடக்கச் சொன்னாள் பாப்பியம்மாள்.
வாக்கரைப் பிடித்தபடி மெதுவாக வெளியே சென்றாள் வசுமதி. அவளைக் கண்டதும் தேவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பட்டாம்பூச்சியைப் போல அவனது காதுகள் சிறகடித்தன. கால்கள் நிலை கொள்ளவில்லை. இந்த வீட்டிற்குத் தேவன் வந்த நாள் முதல், ஒரு நாள் கூட வசுமதி இவனது அருகில் நின்று உரையாடாமல் இருந்ததில்லை. வாதம் வந்து மூளையைப் பாதித்த நிலையிலும்கூட தத்தித் தத்தி நடந்து வந்து தேவனோடு சில மணி நேரம் கழித்துவிட்டுத்தான் செல்வாள்.
வசுமதியைக் கண்டதும் ஒரு நாற்காலியை எடுத்து வந்து தேவனின் அருகில் போட்ட மார்த்தாண்டன்,
“அம்மே ஞான் பக்க்ஷனம் கழிச்சுட்டு வராம்” என்று நகர்ந்து சென்றான்.
வசுமதி நாற்காலியில் அமர்ந்ததும், தேவனும் கீழே அமர்ந்து, தன் துதிக்கையை வசுமதியின் மடியில் வைத்தான். மொழியே இல்லாமல் வசுமதி உரையாடுவாள். அவளது எண்ண அலைகளை உணர்ந்தவன் அதற்கேற்றார் போல, துதிக்கையால் சைகை செய்தும், தலையை அசைத்தும், சில சமயம் மெதுவாகப் பிளிறுவதுமாக வசுமதியோடு ஒன்றித்து இருந்தான். தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்த பின் வசுமதியின் கண்களில் தேங்கிய கண்ணீர் கன்னங்களுக்குப் பிரவேசிக்கும் பொழுது அதை தன் துதிக்கையால் துடைத்து விடுவான் தேவன். இதோடு அன்றைய உரையாடல் நிறைவு பெரும்.
3.
காலை உணவை உண்டுவிட்டு தன் ஜீப்பில் கிளம்பிய கொச்சப்பன் தனக்குச் சொந்தமான தென்னந் தோப்பிற்குச் சென்றார். தோப்பிற்குள் நுழையும் பொழுது, பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்கள்,
“தே, தம்புரான் வருந்நு!” என்று பவ்யமாகக் கை கூப்பி வணங்கினர்.
பெருமிதப் புன்னகையோடு ஜீப்பில் இருந்து இறங்கி அங்கே இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார். கணக்காளர் ஒரு இளநீரைக் கொண்டு வந்து கொச்சப்பனிற்குக் கொடுத்தார். அதை குடித்துவிட்டு கணக்கு வழக்குகளைப் பார்க்கத் துவங்கினார் கொச்சப்பன். அங்கே வேலை செய்யும் இத்துட்டி, தலையைச் சொறிந்தவாரு வந்து நின்றான்.
“எந்தாடா இத்துட்டி?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார் கொச்சப்பன்.
“தம்புரான்…” என்று தயங்கினான்.
“எந்தாடா. நினக்கு ஜோலி ஒந்நும் இல்லே?”
“ஜோலி உண்டு தம்புரான். அது… “
“எந்து வேணம்?”
“தம்புரான்… அடுத்த மாசம் என்டே மகளுடயே விவாகமானு கொரச்சு பணம் தந்நு என்னே சஹாய்க்குமோ?”
“ம், இது சோதிக்கான் நினிக்கு எந்தினா இத்தற மடி?”
“தம்புரான்டே அனுகிரஹம் இல்லாதே என்டே குடும்பத்தில் ஏதொரு காரியமும் சம்பவிக்கில்லா,” என்று கைகளைக் கூப்பினான்.
கூப்பிய கைகளைக் கண்டதும், இருபதாயிரம் ரூபாயை எடுத்து இத்துட்டியின் கையில் கொடுத்தனுப்பினார் கொச்சப்பன்.
கணக்கு வழக்குகளைப் பார்த்த பிறகு ஜீப்பில் ஏறினார். கிளம்பும் முன் கணக்காளரை அழைத்து இத்துட்டியைச் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தேவனின் சாணத்தை அள்ளி சுத்தம் செய்திட தனது வீட்டிற்கு அனுப்பச் சொல்லிக் கட்டளையிட்டார்.
பின்பு துர்கை அம்மனின் அம்பலத்திற்கு ஜீப்பை செலுத்தினார். வடசேரிக்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலானது கொச்சப்பனின் மூதாதையர் ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் கட்டி எழுப்பியது. முக்கிய விஷேசங்களில் முதல் மரியாதை தம்புரான் குடும்பத்தாருக்கும் அவர்களது வீட்டில் வளர்க்கப்படும் யானைக்குமே வழங்கப்படும். பெரும் நிதியைக் கொடுத்து தலைமுறை தலைமுறையாக இந்தக் கோவிலைப் பராமரித்து வருகின்றனர் தம்புரான் குடும்பத்தார். கொச்சப்பனைப் பொறுத்த வரை இக்கோவில் மிக முக்கியமான சொத்து. அவருடையே கவுரவமே இதில்தான் உள்ளது என்று நம்புபவர். கோவில் சார்ந்த முடிவுகள் எதுவுமே தம்புரானின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றப்படமாட்டாது. அந்த அளவிற்கு நிதி கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
கொச்சப்பனின் ஜீப் கோவில் காம்பௌண்டிற்குள் நுழைந்ததும், கோவில் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தோர் எழுந்து நின்று கொண்டனர். கொச்சப்பன் உள்ளே நுழைந்ததும் அவரை வரவேற்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டனர்.
கோவில் பணவர்த்தனைகள் கொச்சப்பனின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கணக்கு வழக்குகளைச் சரிபார்த்த பிறகு,
“ம்க்குக்கும்!” என்று தொண்டையில் ஓசையை எழுப்பினார் கொச்சப்பன்.
கோவில் பூசாரி உடனே தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிச் சுவைத்தபடி,
“எத்தற ஆனகள் வருந்து?” என்று கேட்டார்.
“இருவத்தஞ்சு” என்று சட்டென யோசிக்காமல் மேலாளர் பதில் கூற, அவரை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்த கொச்சப்பன்,
“பதினஞ்சு மதி” என்றார்.
மேலாளரை ஓரக்கண்ணால் முறைத்தார் பூசாரி.
பின்பு கொச்சப்பனை நோக்கி,
“அது தங்களுடே இஷ்டம். ஆனையூடே ப்ரத்தேகதயே குறிச்சு நிங்களுக்கு நன்னாயி அறியாம். பக்ஷே ஒரு ஆனைக்கும் தேவனே தோல்பிக்கான் ஆவில்லா,” என்றார்.
கொச்சப்பனின் முகம் மலர்ந்தது.
“எத்தற தரம் வெடி நிங்கள் பொட்டிக்கான் உத்தேசிக்குந்நு?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் கொச்சப்பன்.
மேளாளரை முந்திக் கொண்ட பூசாரி,
“அது தங்களுடே இஷ்டம்.” என்றார்.
“ஆகாசம் எல்லா வர்ணகளுமாயி நிறயட்டே” என்றார்.
“தங்களுடே இஷ்டம் போலே ஞங்கள் செய்யாம்,” என்று வணக்கம் வைத்தார் பூசாரி.
4.
கொச்சப்பன் வீட்டைவிட்டு வெளியேறும் வரை காத்திருந்தாள் அபிநயா. அவர் வெளியே செல்ல மணி பதினொன்றே ஆகிவிட்டது. கொச்சப்பன் சென்ற சில மணித்துளிகள் கடந்து அபிநயா மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் தன் மகள் அனுவோடு. வந்து ஒரு வாரம் ஆகியிருந்ததால் இவ்வீட்டின் மனிதர்களின் அன்றாடத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருந்தாள். இதற்கு முன் இங்கே வந்த பொழுதெல்லாம் இத்தனை நாட்கள் தங்கியதில்லை. ஓரிரு நாட்களில் திரும்பிச் சென்றுவிடுவாள். தேவனும் வசுமதியும் உரையாடிக் கொண்டிருக்கும் காட்சி விநோதமாக இருந்தது முதலில் காணும் பொழுது. நாட்கள் செல்லச் செல்ல, அவர்களுக்குள் இருக்கும் அன்பை எண்ணி வியந்து போனாள். அவர்களைப் பார்வையால் கடந்துவிட்டு வீட்டினுள் சென்றாள்.
பாப்பியம்மாளின் பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. கொச்சப்பன் வீட்டில் இல்லையெனில் பாப்பியம்மாளின் ஒலியின் அளவீடு மிகவும் அதிகமாக இருக்கும். அபிநயா வந்ததைக்கூட கவனிக்காமல் சங்கீதத்தில் மூழ்கியபடி சமைத்துக் கொண்டிருந்தாள்.
அனு, “பூ… ஆஆ” என்று ஒலி எழுப்ப திரும்பிப் பார்த்த பாப்பியம்மாள்,
“மோளே! நீ எப்போ வந்நு?”
புன்னகைத்த அபிநயா,
“இப்போ தான். உங்க பாட்டுல மயங்கி நின்னுட்டேன். அருமையா பாடுறீங்களே” என்றாள்.
“ஹ, ஹ… நீ வளரே மதுரமாயி சம்சாரிக்குன்னு” என்று அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு, “நல்ல ஒறக்கமானோ?” என்று கேட்டாள் அனுவைத் தூக்கியபடி.
“ஆமா, அனு நல்லாதான் தூங்கினா. எனக்குத் தான் தூக்கம் வரல. தேவன் உங்கள எழுப்பும்போது நானும் எழுந்துட்டேன்,”
“அச்சோ, அது நினக்கு ஷீலிக்கும் மோளே, சாயா குடி” என்று தேநீரைக் கொடுத்துவிட்டு, “நீ நேர்தே உணர்ந்நெங்கில் எந்துகொண்டு தாழ இறங்கியில்லா?” என்று கேட்டாள்.
“ம்ம்க்கும்… நான் வந்தாலே உன்னியோட அப்பாவுக்குப் பிடிக்கல. சேர், துண்டு, நியூஸ்பேப்பர் எல்லாம் பறக்குது வேற. அதான் அவரு வெளிய கெளம்பின பின்ன வரலாம்னு.”
அவளது குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்த பாப்பியம்மாள், “மோளு விஷமிக்கேண்டா. எல்லாம் ஷெரி ஆகும்,” என்றாள்.
“ம்… மித்ரா ஸ்கூலுக்குப் போயிட்டாளா?”
“அதே அவளு நேரத்தே போயி. இந்நு ஸ்கூலு பகுதி திவசமானு. பத்து மின்ட்டினுள்ளில் அவள் எத்தும்,” என்று சொல்லி முடிப்பதற்குள்,
“அம்மே ஞான் வந்நு” என்று மித்ராவின் குரல் வாசலில் கேட்டது.
வந்த உடனேயே , “ஏ… சக்கரே!” என்று அனுவை வாரி எடுத்து முத்தமிட்டு வட்டம் அடித்தாள்.
தேவனோடு உரையாடிவிட்டு வசுமதியும் வீட்டினுள் வந்து சேர்ந்தாள்.
வாக்கரோடு வந்த வசுமதிக்கு நாற்காலியில் அமர உதவினாள் அபிநயா. பின்பு வசுமதி வாஞ்சையோடு தனது பேத்தியை அள்ளிக் கொண்டு முத்தமிட்டாள்.
பாப்பியம்மாளும் அவர்களோடு இணைய, பழைய கதை எல்லாம் பேசி மகிழ்ந்தார்கள். பெரும்பான்மையாக வசுமதியின் உரையாடல் புன்னகையாகவும் சிரிப்பாகவுமே இருந்தது. ஆனால், அபிநயாவின் கண்களுக்கு அது அழகாக இருந்தது. வசுமதியின் மடியில் ஒரு பக்கம் அனு அமர்ந்து கொண்டு அவள் பங்கிற்கு “ஆ… ஊ…” என்றாள். மறு பக்கத்து மடியில் மித்ராவும் சாய்ந்து கொண்டு மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தாள். ஆனால், இவை அனைத்தும் கொச்சப்பன் வீட்டிற்குள் வரும் வரைதான். கொச்சப்பன் வீட்டில் இருந்தால் ஏதோ கன்னிவெடிக்குப் பயந்து நடப்பதைப் போலதான் அனைவரது நடையுமே இருக்கும். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவும் மாட்டார்கள். அப்படியே பேசும் சூழ்நிலை வரும் தருணங்களில் ரகசிய குரலில்தான் சத்தம் வரும்.
“மோளே, உன் ஸ்கூல் கதை எல்லாம் சொல்லு,” என்று அபிநயா மித்ராவைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டாள். அனுவோடு விளையாடிக் கொண்டே மகிழ்ச்சியாகப் பேசலானாள் மித்ரா. பாப்பியம்மாவும் இடையிடையே சில சம்பவங்களை நினைவுப்படுத்த, வீடே சிரிப்பலையில் மிதந்தது.
எல்லோரும் பசியில் இருப்பார்கள் என்று சமைத்த பண்டங்களை எடுத்து வர, சமையலறைக்குச் சென்றாள் பாப்பியம்மாள். பால் கோதுமையில் செய்த கஞ்சியை அனுவிற்குக் கொடுக்கச் சொல்லி மித்ராவிடம் தந்தாள்.
அபிநயாவுக்குச் சாப்பாட்டைப் பரிமாறினாள். அவள் மித்ராவுக்கு ஊட்டிக் கொண்டே தானும் சாப்பிட்டாள்.
இந்தக் காட்சியை எல்லாம் காண வசுமதிக்கு மன நிறைவாக இருந்தது. உள்ளம் நெகிழ்ந்து போனது. இப்படியே வீடு தினமும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
அப்பொழுது ‘டங்.. டங்’ என கோயில் மணி ஓசை அடித்தது.
“திருவிழாவோட கடைசி நாள் எப்போ?” என்று அபிநயா கேட்டாள்.
“மட்டந்நாள் மோளே… அதான் நாள மறுநாள்,” என்றாள் பாப்பியம்மாள்.
“அம்மே, ஏடத்தி உன்னி ஏட்டன் குறிச்சு சோதிச்சதானு,” என்று கூறி சிரித்தாள்.
“நீ சரியான வாலு. ஆமா பாப்பிமா, உன்னி திருவிழாவோட கடைசி நாளுக்குதான் ஊருக்கு வர்ரதா சொன்னாங்க,” என்றாள் அபிநயா.
“மோளே, வெடிக்கெட்டு குறிச்சு அபிக்கு அறியாமோ” என்று கேட்டாள் பாப்பியம்மாள் அபிநயாவிடம்.
“ஆன்… உன்னி சொல்லி எனக்குத் தெரியும். மக்களோட வேண்டுதல் நிறைவேறினா துர்கை அம்மனுக்கு பட்டாசு வெடுச்சுக் கொண்டாடுவாங்க. கரெக்ட்டா?”
“ஏடத்தி, நினக்கு எந்தெங்கிலும் ஆக்ரஹமுண்டோ?” என்று மித்ரா அபிநயாவைப் பார்த்துக் கேட்டாள்.
“இப்போ மாதிரியே நாம எப்பயும் சிரிச்சு சந்தோஷமா இருக்கனும். அதான் எனக்கு வேண்டுதல்,” என்று அபிநயா கூறினாள்.
அப்பொழுது தேவன் சத்தமாகப் பிளிறினான்.
“அவனுக்கும் அதே!” என்று கூறி சிரித்தாள் பாப்பியம்மாள்.
5.
அபிநயாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர். கொச்சப்பனுக்கும் வசுமதிக்கும் ஒரே வாரிசு உன்னி. உன்னியும் அபிநயாவும் ஒரே கல்லூரியில் படித்தவா்கள். இவர்கள் இருவரின் காதல் தெரிந்த நாள் முதலில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தார் கொச்சப்பன். முதலில் அவருக்குக் காதல் திருமணம்தான் பிடிக்கவில்லை என்று எண்ணியிருந்தாள் அபிநயா.
“அப்பாவுக்கு எங்க வீட்ல இருக்குறவங்க தலை மயிர்கூட அவர் உத்தரவு குடுத்தாதான் உதிரனும்.” என்று உன்னி ஒருமுறை சொன்ன பொழுது விளங்கவில்லை. இங்கே வந்த இந்த ஒரு வாரத்தில் அவன் சொன்னதின் அர்த்தம் விளங்கியது அபிநயாவிற்கு.
கொச்சப்பனின் கண் பார்வையின் கீழ், அவரது கால்களின் அடியில்தான் தன்னைச் சுற்றி உள்ளோரின் உலகம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். கொச்சப்பன் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் ஒவ்வொரு கணக்கு உள்ளது. கொச்சப்பனுக்கும் உன்னிக்கும் இடையிலான இந்த விரிசல் அவனது திருமணத்தால் மட்டும் நிகழ்ந்தது அல்ல. அது பல காரணங்களில் ஒன்றானது மட்டுமே. கொச்சப்பனின் அதிகாரத் திமிரை உன்னி கேள்வி கேட்க ஆரம்பித்ததில் இருந்து உண்டானது.
வெளியில் இருந்து பார்ப்போருக்கு, கணவனை இழந்த பாப்பியம்மாளிற்கு, பிறந்த வீட்டில் மித்ராவோடு தஞ்சம் புக இடம் கொடுத்தது கொச்சப்பனின் கருணை என்று தோன்றும். சொத்துரிமை கேட்டுவிடக் கூடாது என்று வேலைக்காரியைப் போல் நடத்தப்படுவது உன்னியின் அறிவுக்கு எட்டும் பொழுது அதை எதிர்த்துக் கேள்வி கேட்ட நாளில் துவங்கியது இருவருக்குமான பகை. பண உதவி கேட்டு ஊர் மக்களில் யாரேனும் வந்தால் உதவி செய்வது போல் செய்துவிட்டு, கொடுத்ததற்கு மேல் அவர்களிடம் அவர்கள் அறியாமலேயே வேலை வாங்கி அந்தக் கடனைத் தீர்ப்பது எனப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.
உன்னி – அபிநயாவின் திருமண செலவிற்குக்கூட கொச்சப்பன் பணம் கொடுக்கவில்லை. ஒரு டைரியை எடுத்து வந்து அதில் உன்னி பிறந்தது முதல், பள்ளி, கல்லூரிக்குச் செய்த செலவும், இன்சூரன்ஸ் கட்டிய செலவும் பட்டியலாக இருக்கிறது என்றும், அதை முதலில் திருப்பித் தரும்படி கேட்டார். தனக்கு எதுவும் வேண்டாமென, நண்பர்களிடம் கடன் வாங்கி தனது திருமணத்தை நடத்திக் கொண்டு பின்பு மாதம் தோறும் கடனைச் சம்பலத்தில் இருந்து அடைத்தான்.
இன்னமும் இந்த வீட்டோடு அவன் உறவாக இருப்பதும், வந்து செல்வதற்குமான காரணம் இவ்வீட்டில் வாழும் மூன்று பெண்கள்தான்.
எப்பொழுது வந்தாலும், அதிகபட்சம் ஒரு நாள் மட்டுமே தங்குவான். ஒருநாளாயினும் தங்கி உண்பதற்கான பணத்தைப் பாப்பியம்மாளிடம் கொடுத்து கொச்சப்பனிடம் தரச் சொல்லிவிடுவான் உன்னி.
“ஏன்?” என்று அபிநயா கேட்டதற்கு, “இல்லனா அந்தக் கணக்கும் டைரில ஏறிடும்” என்றான்.
திருவிழாவைப் பற்றி உன்னி கூறிய பொழுது அபிநயாவிற்கு ஆசையாக இருந்தது அவனுடைய ஊருக்குச் செல்ல. தான் கடைசி நாள் பூஜைக்கு மட்டும் வந்து சேர்ந்து கொள்வதாகச் சொல்லி அவளையும் அனுவையும் மட்டும் ஒரு வாரம் முன்னரே ஊருக்கு அனுப்பி வைத்தான்.
இவ்வீட்டிற்குப் பலமுறை வந்த போதிலும், ஒரு முறைகூட கொச்சப்பன் அபிநாயாவிடம் பேசியதில்லை. அனுவையும் தூக்கிக் கொஞ்சியதில்லை. ஒரே ஒரு முறை அனுவைத் தூக்கி இருக்கிறார். அப்பொழுது பாப்பியம்மாள் தேவனின் கொட்டகையைச் சுத்தம் செய்து கொண்டருந்தாள். அபிநயா அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். திடீரென அனு அழும் ஓசை கேட்டு ஓடினாள். உள்ளே சென்று பார்த்தால் கொச்சப்பன் அவளைத் தூக்கி சமாதானம் செய்து கொண்டிருந்தார். அபிநயாவைக் கண்டதும்,
“குஞ்ஞினே ஒட்டக்க விட்டுட்டு எவடே போயி” என்று கத்திவிட்டு அனுவை அவளது கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அபிநயா வீட்டில் உள்ளப் பெண்களோடு சகஜமாகப் பழக நெடு நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை. மூவரும் பழகுவதற்கு எளிமையாகவும் இனிமையாகவுமே இருந்தார்கள். அதிலும் மித்ராவை மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு. பாப்பியம்மாள் அளவிற்கு அவள் பேசவில்லை என்றாலும் அவளுள் ஏதோ தெய்வீகத்தை உணர முடிந்தது அபிநயாவால். அதே சமயம் அவளது விழிகளில் ஏதோ சொல்ல முடியாத சோகம் இருப்பது போலவே நம்பினாள். ஒரு முறை அவளிடம் அவளது பள்ளித் தோழிகளைப் பற்றி கேட்ட பொழுது, பள்ளியில் அவளுக்கு நெருங்கிய நண்பர்களே இல்லை என்றாள். மேலும் அவளுக்கு உற்ற தோழன் என்றால் தேவனும், துர்கை அம்மன் கோயிலின் பின்னால் வானுயற நின்றிருக்கும் அந்தப் பச்சை மலையும்தான் என்றாள். அம்மலையைப் பற்றியும் அதிலிருக்கும் அறிய வகை மூலிகைகள் உடலின் எந்தப் பகுதியின் நலனுக்கு என்பது வரை அறிந்திருந்தாள்.
ஒரு முறை அம்மலைக்குச் சூரியன் அஸ்தமித்த பின் அபிநயாவை அழைத்துச் சென்றாள். இருட்டாக இருந்ததால் டார்ச்சோடு வந்திருந்தாள் அபிநயா.
“மோளே உனக்கு பயமா இல்லியா?”
“ஏடத்தி, ஒந்நும் பயப்படேண்டா. டோர்ச்சு ஆஃப் ஆக்கு”
“எது? டோர்ச்சு ஆஃப் ஆக்கினா என்னய பாம்பு ஆஃப் ஆக்கிடும்”
“ஹ ஹ ஹ… ஏடத்தி வெஷமிக்கேண்டா. ஈ மலையில் பாம்பு கடிக்கு ஒரு பச்ச மருந்நு இண்டு,”
“அது இண்டு, அத நீ போய் இந்த இருட்டுல எடுத்துட்டு வர வரைக்கும் நான் இண்டனும் இல்ல,”
வாய் மூடி சிரித்தாள் மித்ரா. அபிநயாவின் கையில் இருந்த டார்ச்சை வாங்கி அணைத்துவிட்டு. “ஏடத்தி, தோ அவடே நோக்கு” என்று அவளது தலையைத் திருப்பிக் காட்டினாள்.
அபிநயவால் அவளது விழகளில் தோன்றும் காட்சியை நம்ப முடியவில்லை பல ஆயிரம் மஞ்சள் மொட்டுக்கள் நிலத்தில் இருந்து ஒன்றாகக் கிளம்பியது போல மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் சிறு சிறு மஞ்சள் ஒளியோடு எழுந்தன.
“இவ்வளவு அழகான ஒரு சீன நான் என் லைஃப்ல பாத்ததே இல்ல மோளே!” என்று வியந்தாள் அபிநயா.
இம்மலையில் வாழும் சில பறவைகளுடன்கூட உரையாடக் கற்றிருந்தாள். மற்றொரு நாள் பகலில் அழைத்துச் சென்றாள் அபிநயாவை. ஏதோ ஒரு குரல் எழுப்புகிறாள் பதிலுக்கு ஒரு பறவையின் குரலும் வந்தது அடர்ந்த மரங்களின் நடுவில் இருந்து. ‘மனுசங்களவிட இவளுக்குப் பூச்சியும் பறவையும்தான் பிடிக்குது போலயே’ என்று எண்ணிக் கொண்டாள் அபிநயா.
பின்பு ஒரு நாள் மித்ராவிடம் அவளுடைய பொழுதுபோக்கைப் பற்றிக் கேட்ட பொழுது வரைவது மிகவும் பிடிக்கும் என்றாள். வசுமதி அம்மாயியிடம் கற்றுக் கொண்டதாகச் சொன்னாள். வசுமதியின் தனித் திறமை அவள் மனதின் ஓட்டங்களைச் சித்திரமாகக் காட்டுவது. உடல்நிலை நன்றாக இருந்த பொழுது, வசுமதி வரைவதைப் பார்த்துக் கற்றுக் கொண்டதாக மித்ரா கூறினாள்.
அபிநயா உணர்ந்த இவ்வீட்டின் மற்றொரு வழக்கம், இவ்வீட்டின் மூன்று பெண்மணிகளும் ஒருவரோடு ஒருவர் பிணைந்திரா விட்டாலும் மூவரும் பிணைந்திருப்பது தேவனோடு. அதுவே அபிநயாவிற்கு விந்தையாக இருந்தது.
6.
திருவிழாவின் இரண்டாம் நாள் தேவனின் பிளிறலோடு துவங்கியது. பாப்பியம்மாள் எழுவதற்கு முன் அபிநயா முழித்துக் கொண்டாள். அனுவின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக எழுந்து வெளியே வந்து படிகளைத் தாண்டி கொல்லைப்புறத்துக்குச் சென்றாள்.
தேவனின் காலை உணவிற்குத் தேவையான இலை தழைகளைக் கொண்டு வந்து அவன் முன் போட்டாள்.
“ம், சாப்பிடு” என்றாள்.
தேவன் அவனது துதிக்கையைச் சுருட்டி வைத்து தலையை இடமும் வளமும் அசைத்தான்.
“ஏன்டா தின்ன மாட்ட. இதுக்குத்தான இவ்ளோ காலையில எழுப்பின?” என்று கேட்டாள்.
அதை பார்த்து சிரித்துக் கொண்டே வந்த பாப்பியம்மாள்,
“மோளே, அவன கெட்டிப் பிடிக்கு. என்னாலே அவன் கழிக்கும்,” என்றாள்.
“இது வேறயா!” என்று அவன் துதிக்கையை அணைத்துக் கொண்டு ஒரு முத்தமிட்டாள்.
பின்பு ஆனந்தமாகச் சாப்பிட ஆரம்பித்தான்.
“வீட்டுல எல்லா லேடீஸயும் நல்லா கரெக்ட் பண்ணி வச்சுருக்கடா நீ. பாசக்கார யான,” என்று தட்டிக் கொடுத்தாள்.
“ஷெரி மோளே, உள்ளில் வா சாயா தெரா” என்று அபிநயாவை அழைத்துச் சென்றாள் பாப்பியம்மாள்.
தேநீர் கொதித்தவுடன் மூன்று டம்ளர்களில் ஊற்றினாள்.
“அது யாருக்கு?”
“மித்ராக்கு”
“குடுங்க நான் கொண்டு போய் தரேன்”
என்று தேநீரை எடுத்துக் கொண்டு மித்ராவின் அறை கதவைத் திறந்தாள். தடாலென மித்ரா அவளது மேஜையின் டிராவில் எதையோ மறைத்து வைத்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு, “அம்மே” என்று திரும்பினாள்.
அபிநயா சிரித்துக் கொண்டே “அம்மேயல்லா. ஏடத்தியாணு” என்று தேநீரைக் கொடுத்து, “குட் மார்னிங்” என்றாள்.
“குட் மார்னிங் ஏடத்தி”
“கணக்குப் பாடமா?”
“ஆமா. இன்னு எனக்கு டெஸ்ட்டு இண்டு”
“ஓ சரி சரி. நீ படி. ஈ.வினிங் பாக்கலாம்” என்று மித்ராவின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து, அறையை விட்டு வெளியேறினாள்.
பாப்பியம்மாளுடன் தேநீர் குடிக்க அமர்ந்தாள் அபிநயா. வழக்கம் போல் பாப்பியம்மாள் கதை பேச ஆரம்பித்தாள். அரை மனதாக பாப்பியம்மாவிற்குப் பதில் கூறிக் கொண்டிருந்தாள் அபிநயா. அவளது சிந்தை முழுவதும் நிரம்பி இருந்தது மித்ராவின் சிவந்த விழிகளும், வாடிய முகமும். இந்தக் குழந்தைக்கு அப்படி என்னதான் கவலை என்று வேதனை அடைந்தாள்.
கொச்சப்பனின் அறை கதவு திறக்கும் ஓசை கேட்டது.
“பாப்பிமா, நான் அப்புறம் வரேன்,” என்று பின் பக்கமாகச் சென்று வீட்டைச் சுற்றி முன் பக்கம் வந்து மாடிப் படிக்குத் தாவி தன் அறைக்குச் சென்றாள் அபிநயா.
மித்ராவையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
பள்ளிக்குச் செல்லும் வழியில் யாரேனும் அவளைத் தொந்தரவு செய்கிறார்களா என்று யோசித்தாள், அந்த அளவிற்கு இந்த ஊரில் யாருக்கும் தைரியம் கிடையாது. ஏனெனில், கொச்சப்பனிற்கு இந்த ஊர் மொத்தமுமே பயந்து கிடக்கிறது. அப்படி யாரும் மித்ராவை நெருங்கிவிட முடியாது.
ஒரு வேலை எல்லாப் பிள்ளைகளுக்கும் அப்பா இருப்பதைப் போல தனக்கு இல்லையே என்ற கவலையோ என்னவோ தெரியவில்லையே என்று குழம்பினாள்.
மித்ரா பள்ளிக்குச் செல்லும் வரை காத்திருந்தாள். அனுவைக் குளிப்பாட்டி பால் கொடுத்து அடுத்தத் தூக்கம் போடத் தொட்டிலில் கிடத்தினாள். பின்பு கொச்சப்பனின் ஜீப் சத்தம் கேட்டு மறையும் வரை காத்திருந்து பின்னர் கீழே சென்றாள்.
சமையலறையில் பரபரப்பாக இருந்த பாப்பியம்மாளிடம், சென்ற அபிநயா,
“பாப்பிமா, ஒரு பேப்பர் பேனா வேணும்” என்றாள்.
“மித்ரையுடே ரூமில் இண்டு மோளே,” என்று சமைத்தபடியே கூறினாள்.
மித்ராவின் அறைக்குச் சென்ற அபிநயா குறைந்தது ஒரு மணி நேரம் அங்கே இருந்தாள். மித்ரா வரைந்த ஓவியங்கள் நிறைந்த நோட்டை ஒவ்வொன்றாகத் திருப்பிப் பார்த்தாள். ஒவ்வொரு பக்கமாகத் திருப்பத் திருப்ப மனதில் இருள் சூழ்வது போல இருந்தது. அனைத்தும் கருப்பு வண்ணத்தால் மட்டுமே தீட்டப்பட்டிருந்தன. சில ஓவியங்களில் கருப்பு உருவம் கொண்ட ஒரு பெண்ணின் உடலில் அவளது பிட்டத்தில் மட்டும் சிவப்பு வண்ணம். ஒரே குழப்பமாக இருந்தது அபிநயாவிற்கு.
நிச்சயம் அவளுக்கு ஏதோ மனக் கஷ்டம் இருக்கிறது என்று உறுதி செய்தாள். சட்டென அவளது டேபிள் ட்ராவில் எதையோ தன்னிடம் இருந்து மறைத்தது நினைவுக்கு வர அதை திறந்து தேட முயன்ற பொழுது அறையின் கதவு தடாலெனத் திறந்தது.
பதறிய முகத்தோடு திரும்பினாள் அபிநயா. எதிரில் வசுமதி நின்றிருந்தாள்.
“அம்மா!” என்றாள்.
“சக்கரே கரையுந்நு” என்று மெல்லிய குரலில் சொன்னாள் வசுமதி. சைகையோடு சொன்னதால் அபிநயாவிற்குப் புரிந்தது.
“இதோ போறேன் மா” என்று மித்ராவின் ஓவிய நோட்டை மேஜை மேல், இருந்த இடத்திலேயே வைத்து விட்டு, வெளிறிய முகத்தோடும் கனத்த இதயத்தோடும் சென்றாள்.
அவள் சென்ற பிறகு மேஜை மேல் இருந்த மித்ராவின் நோட்டை எடுத்துப் பார்த்தாள் வசுமதி. திறந்திருந்த டிராவை நோட்டம் விட்டாள். அதில் ஒரு சிறிய சுறுக்குப் பை இருந்தது. அதை திறந்து பார்த்துவிட்டு தன் முந்தானையில் மறைத்துக் கொண்டு மித்ராவின் அறையை விட்டு வெளியேறினாள்.
“ஏடத்தி… குளிக்கான் சூடு வெள்ளம் தயாரானு” என்று பாப்பியம்மாள் குரல் கொடுத்தாள். மித்ராவின் ஓவிய நோட்டைத் தனது தலையணை அடியில் மறைத்து வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றாள். உடைகளைக் கலைந்து வெந்நீர் ஊற்றியபோது வசுமதியின் உடல் நடுங்கியது. வழக்கம் போல் பாப்பியம்மாளின் உரையாடல் நீண்டு கொண்டே போனது. அதில் ஒரு எழுத்துகூட வசுமதியின் காதில் விழவில்லை. தனக்கு இத்தனை சேவை செய்யும் அவளை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை வசுமதியினால்.
குளித்து உடை மாற்றிவிட்டுக் காலை உணவை ஊட்டும் பொழுதுகூட பாப்பியம்மாவைப் பார்க்கவில்லை வசுமதி. விழிகளை எங்கோ வைத்திருந்தாள். உணவருந்திய பின் வழக்கம் போல் வெளியே சென்று தேவனின் துதிக்கையைப் பிடித்த படி அமர்ந்து கொண்டாள். ஒன்றரை மணி நேர மௌனப் போராட்டம் நிறைவுக்கு வந்தது. பிறகு தேவன் வசுமதியின் கண்ணீரைத் துடைக்கக் காத்திருந்தான். ஆனால், வசுமதியின் கண்கள் வறண்டு இருந்தன.
7.
சொன்னது போலவே உன்னியும் வடசேரிக்கரை துர்கை அம்மனின் நிறைவு நாள் கொண்டாட்டத்திற்கு வந்து சேர்ந்தான். திருவிழாவை ஒட்டி ஊரே மேல தாளத்தோடும் தோரணங்களோடும் பிரம்மாண்டமாகக் காட்சி அளித்தது. எல்லா வகை வண்ணங்களையும் ஒன்றாகக் கலந்து மொத்த ஊரின் மீதும் ஊற்றியது போல நிறங்களால் நிறைந்து இருந்தது. பதினைந்து யானைகள் அலங்கரித்துக் கூட்டி வரப்பட்டு துர்கை அம்மன் கோவிலின் முன்னால் நிற்க வைக்கப்பட்டன.
தூக்கம் கலைந்து எழுந்து வந்து திவான் நாற்காலியில் அன்றைய செய்தித்தாளைப் பிடித்தபடி அமர்ந்திருந்த கொச்சப்பனுக்கு வசுமதி பாகற்காய் சாறு கொண்ட வெள்ளி டம்ளரைக் கொண்டு வந்து தந்தாள்.
“பாப்பி எவடே” கொச்சப்பன் கேட்டார்.
“அவளும் மித்ரேயும் நேரத்தே அம்பலத்துப் போயி” என்று தன்னால் இயன்ற வரை சத்தத்தைத் திரட்டிச் சொன்னாள் வசுமதி.
“எந்தா?” என்று கொச்சப்பன் கோபமாகக் கேட்க, சைகையால் சொன்னாள்.
பின்பு கொச்சப்பனின் மிக அருகில் நாற்காலி ஒன்றைப் போட்டு வசுமதி அமர்ந்து பேசலானாள். பழுதான ரேடியோ அலைவரிசையைத் தேடும் பொழுது வெட்டி வெட்டி ஒலி எழுப்புவது போல கேட்டது கொச்சப்பனிற்கு. ஒரு ஐந்து நிமிடங்கள் பேசியிருப்பாள். பேசியதில் சில சிந்தியும் சிதறியும் கொச்சப்பனின் காதில் விழுந்தன. காதில் விழுந்ததே ஒழிய சிந்தைக்கு எட்டியதாகத் தெரியவில்லை. பாகற்காய் சாற்றைக் குடித்து முடிப்பது வரை கவனிப்பது போல அவ்வப்போது தலையை லேசாக ஆட்டிவிட்டு, கோவிலுக்குக் கிளம்புவதாகச் சொல்லி எழுந்துவிட்டார்.
குளித்துத் தயாராகி பட்டு வேஷ்டி கட்டி, பட்டுத் துண்டைக் கொண்டு உடலைப் போர்த்தி வெளியே வரும் பொழுது, தேவன் தயாராக இருந்தான். ஒரு காலைத் தூக்கி அவன் படிக்கட்டாக மாற்ற, கொச்சப்பன் தேவனின் மீது ஏறிக் கொண்டார். அவ்வளவு பெரிய வல்விலங்கின் மீது ஏறி அமர்ந்தபின் வடசேரிக்கரை மொத்தமும் அவரது காலடியில் இருப்பது போல ஒரு பெருமிதம் உண்டாயிற்று.
“நமக்குப் போகாம்.” என்று கணீரெனக் கட்டளையிட, மார்த்தாண்டன் தேவனை வழி நடத்தினான்.
கோவிலுக்குத் தயாராகி வந்த உன்னியும் அபிநயாவும் அனுவும், கொச்சப்பன் தேவன் மேல் பயணிப்பதைப் பார்த்துக் கொண்டே வந்தனர். தேவனைக் கண்டதும் “ஆ… பூ…” என சத்தம் போட்டாள் அனு. தேவன் அவனது தலையை வட்டம் அடிப்பது போல் ஆட்டி அனுவுக்குப் பதில் கூறி வெளியே சென்றான். “ஹூம்ம்… தேவன் உன்னயும் விட்டு வைக்கலயா?” என்று சிரித்தாள் அபிநயா.
உன்னி, வசுமதியின் தோளைப் பிடித்தபடி, “அம்மே தா..!! வடசேரிக்கரையின்டே ராஜா போகுந்நு.” என்று பரிகாசம் செய்தான்.
‘நாம அவருக்கு முன் கோயிலுக்குப் போகனும்.’ என்று அபிநயாவையும், அனுவையும் கிளம்பச் சொல்லி வசுமதி சைகை செய்ய, மூவரையும் ஜீப்பில் ஏற்றி கோவிலுக்கு அழைத்துச் சென்றான் உன்னி. கோவிலை அடைந்ததும் வசுமதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாதம் வந்த பிறகு வசுமதி வெளியே செல்வதில்லை. நெடுநாட்கள் கழித்து வசுமதியைக் கண்ட ஊர் மக்கள் “தம்புராட்டி சுகானோ” என்று உற்சாகமாக நலம் விசாரித்துக் கோவிலுக்குள் மெதுவாக அழைத்துச் சென்றார்கள்.
“ஆ.. ஏடத்தி வந்நல்லோ!” என்று ஆச்சரியப்பட்டாள் பாப்பியம்மாள்.
கோவிலுக்குச் செல்லும் பாதையில், தேவன் இடமும் வலமுமாக தன் உடலை அசைத்து மெதுவாக சுமந்து சென்றான் கொச்சப்பனை. ஊரே திரண்டு நின்று மலர் தூவி வரவேற்பு மரியாதை செய்தனர். தேவனின் ஒவ்வொரு அசைவிலும் தலை சுற்றுவது போல் இருந்தது கொச்சப்பனுக்கு. செண்ட மேளத்தின் சத்தம் யாரோ தலைக்குள் அமர்ந்து அடிப்பது போல கேட்டது. அதை நிறுத்தச் சொல்லலாம் என்றால், குரல் வெளியே வரவில்லை. ஊர் முழுக்க, வழி் நெடுக ஒலிப்பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்த துர்கையம்மனின் பாடல்கள் கொச்சப்பனை ஏதோ செய்தது. தலையைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார். வசுமதியின் திக்கிய வார்த்தைகள் யாவும் சுற்றி வட்டமிட்டன. வாந்தி வருவது போல நெஞ்சைப் பிசைந்தன. அவள் என்ன கூறினாள் என்று வார்த்தைகளைத் திரட்டி அர்த்தம் தேட முயற்ச்சித்தார்.
திடீரென கார் குகைக்குள் அடைபட்டது போன்ற காட்சி. அது குகையா அல்லது தேவனின் உடலா என்று புரியவில்லை கொச்சப்பனுக்கு. அந்த அடர்ந்த இருட்டில் கண்களுக்கு ஒளி கிடைக்கவில்லை. கனவுலகில் மிதப்பது போல மாயை உண்டானது. கண்களைத் திறந்தால் ஒளியே இல்லை. சட்டென ஒரு மின்மினிப் பூச்சி கடுகு போல ஒளி வீசிக் கொண்டு வந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தின் ஆழத்தில் இருந்து தேவன் வந்தான். அவனது துதிக்கையை ஒரு பெண் கட்டிக் கொண்டு முகம் புதைத்து நின்றிருந்தாள்.
கொச்சப்பன் அருகே சென்றதும் அவ்வுருவம் திரும்பி அதன் முகம் காட்டியது.
“அம்மே!!!” என்று அலறிய கொச்சப்பன், “ஞி… ஞிங்கள்… மறிச்சு…” என்று திக்கினார்.
“ஞான் மறிச்சோ? நீ என்னேக் கொன்னல்லோ பொன்னு மோனே… என்டே கழுத்தில் சவுட்டிக் கொன்னல்லோ?”
கழுத்தை யாரோ நெறிப்பது போல வலி எடுத்தது கொச்சப்பனிற்கு. மீண்டும் இருள்.
“நீ உறக்கத்தில் கூட என்டே பேரு பரயினில்லல்லோ?” என்று வசுமதியின் குரல் மட்டும் கேட்டது. மீண்டும் ஒரு மின்மினிப் பூச்சி இன்னும் அதன் ஒளியைக் கூட்டித் தர அதில் தேவனின் துதிக்கையைப் பிடித்தபடி வசுமதி வந்து நின்றாள்.
மின்மினிப் பூச்சியின் பிட்டத்தில் இருந்த அந்த மஞ்சள் ஒளி சிவப்பாக மாறியது. அது வசுமதியின் பிட்டத்தின் துளை போல காட்சியளித்தது கொச்சப்பனுக்கு. வாதம் வந்து முடங்கிய உடலைத் தன் இச்சைக்காக மட்டுமே உபயோகித்தத் தருணங்கள் கொச்சப்பனின் சிந்தையை ஆட்டியது.
மீண்டும் இருள்.
அவ்விருளின் ஆழத்தில் இருந்து தேவன் சத்தமாகப் பிளிறினான். அந்தப் பிளிறல் ஓசை கொச்சப்பனின் காதுகளில் ஊசி குத்தியது போல வலியை உண்டாக்கியது. காதுகளைப் பிடித்தபடி அவன் பிளிறிய திசையில் திரும்பும் பொழுது இரண்டு மின்மினிப் பூச்சிகள் மஞ்சள் ஒளியை வீசின. அதில் தேவனின் விழிகளில் தீக்கங்கு போல ஜுவாலை எறிந்தது. அவனது துதிக்கையின் வலப்பக்கம் வசுமதியும், இடப்பக்கம் மித்ராவும் நின்றிருந்தனர். மித்ராவின் கையில் ஒரு சுறுக்குப் பை இருந்தது.
“என்டே கையில் தா மோளே” என்று அந்தப் பையை வாங்கிய வசுமதி, அவளது கன்னத்தைத் தாங்கியபடி, “மறிக்கேன்டது நீயில்லா என்ட பொன்னு மோளே, ஆ மஹா பாவியானு!” என்று அந்தப் பையில் இருந்த அரளி விதையை வெள்ளி டம்ளரில் போட்டு கொச்சப்பனிடம் நீட்டினாள். அதிலிருந்து பாகற்காய் சாறும் அரளி விதைச் சாறும் வழிந்து கொச்சப்பனை நோக்கிப் பாய்ந்து வந்தது.
காலையில் பாகற்காய் சாறு கொடுத்த பொழுது வசுமதி பேசிய வார்த்தைகள் இப்பொழுது சத்தமாகவும் தெளிவாகவும் கேட்டது கொச்சப்பனிற்கு.
“நீ் செய்தது நாட்டுகாரருக்கு வேணெங்கில் அறியாதிருக்கும், பக்ஷே நினிக்கு அறிஞ்சுட்டானல்லோ செய்தது.”
இரண்டு மின்மினிகளின் பிட்டத்தின் மஞ்சள் ஒளி சிவப்பாக மாறி, அதிலிருந்து இரத்தம் ஊற்றெடுத்தது. சட்டென அவ்விடம் இரத்தக் குளமாக மாறி அதில் தான் மூழ்குவது போல மூச்சுத் திணறியது கொச்சப்பனிற்கு.
இரத்தப் படுகையில் மூழ்கி எழ முயற்சிக்கும் பொழுது இரண்டு மின்மினிப் பூச்சிகள் மூன்றாக மாறி சிவப்பு வண்ண ஒளி வீச, தேவனின் துதிக்கையைப் பிடித்தபடி நின்றிருந்த வசுமதியும் மித்ராவும், அனுவைத் தாங்கி நின்றிருந்தனர்.
அனுவின் உள்ளாடையைக் கொச்சப்பன் கலையும் காட்சி கொச்சப்பனின் கண் முன் வரும் பொழுது பொறுமை இழந்த தேவன், நான்கு யானைகள் ஒன்று சேர்ந்த மாபெரும் பிரம்மாண்டமான பச்சை மலை போன்ற உருவமாகக் காட்சியளித்தான். கடுஞ் சினங்கொண்டு சக்கரம் போல சுற்றி கொச்சப்பனைக் கீழே தள்ளினான். பச்சை பச்சையாக வாந்தி எடுத்தபடி கிடந்தது கொச்சப்பனின் உடல்.
தனது துதிக்கையைச் சுருட்டித் தலையை வான் நோக்கி உயர்த்திய தேவன், வடசேரிக்கரையே அதிர எக்காளத்தின் இசை போல பிளிறினான். அவன் பிளிறியது துர்கை அம்மனின் கோவில் கோபுரத்தில் ஒலித்தது. இம்மீட்டல் யாருக்கென்று பாப்பியம்மாவிற்கு நன்கு தெரியும்.
“ஏடத்தி, தேவன் நிங்களோடு எந்தோ பரயான் ஷ்ரெமிக்குந்நு” என்றாள் வசுமதியிடம்.
‘ஆம்’ என்று தலையாட்டிய வசுமதி, பாப்பியம்மாவின் காதருகில் சென்று, தன் சக்தி எல்லாம் ஒன்று திரட்டி, “படக்கம் பொட்டிக்கான் பரா” என்று கூறினாள்.
வடசேரிக்கரையே அதிரும் வகையில் செண்ட மேளம் கொட்டி முழங்க, விதம் விதமாக வெடிச் சத்தம் ஒலிக்க, ஆகாயம் முழுக்க வண்ண நிறங்களால் நிறைந்திட, பதினைந்து யானைகளும் பிளிற, கொச்சப்பனின் மேல் ஏறிய தேவன் நின்று கொன்றான்.
Well written. Climax visualisation through words was goosebumps..