இரண்டாம் துணை

அவனுக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது, அக்டோபர் மாதத்தின் தொடக்க நாளான அன்று, கிழக்கில் தாழ்வாக உதிக்கும் சூரியனின் வெப்பக் கதிர்கள் அந்த இரட்டை மாடி வீட்டின் இரண்டாம் தளத்தின் மாடத்தைக் கடந்து அவனது படுக்கையறை கதவு வரை நீண்டு கிடந்தது.  வழக்கமாக காலை கதிரவனின் வெளிச்சம் மாடத்தின் பாதி வரை வந்து விழும். அது இயல்பானதுதான். ஆனால், அந்த அக்டோபர் தினத்தில், தகிக்கும் சூரியனின் வெப்ப கதிர்கள் அதிகாலையிலேயே முழு மாடத்தையும் சூடேற்றியிருந்தது. பக்கவாட்டுக் கண்ணாடி கதவுகளையும் கடந்து வெளிச்சம் பரவியிருந்தது.  உடல் தகிக்கும் சூரிய ஒளியின் வெப்பம் கண்களைக் கூசச் செய்தது. காலை 8.30 ஆவதற்குள் கதிரவன் முழு உக்கிரத்துடன் தாக்க தொடங்கியிருந்தது.  ஏழு மணிக்கெல்லாம் வெப்பத்தை உணர முடிந்தது. பொழுது விரைவாக விடிந்து விட்டதால் காலை தொழுகைக்கான நேரமும் சீக்கிரம் தொடங்கிவிட்டது. காலை தொழுகை முடித்த பின் ஒரு குட்டி தூக்கம் போடுவது அவனது வழக்கம். பிறகு, பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்குக் காலைநடைக்குச் சென்றுவிடுவான். சிறு நகரமாக மாறியிருக்கும் அந்த வீடமைப்புப் பகுதியில் உருவாக்கப்பட்ட செயற்கை குளத்தையொட்டி அந்தப் பூங்கா அமைந்திருந்தது. பொழுது சீக்கிரம் விடிந்து சூரியன் வழக்கத்தை விட அதிக வெப்பத்தை அள்ளி வீசிக் கொண்டிந்த அன்றைய காலை நேரத்திலும் அவன் தன் அன்றாட கடமையைச் செய்ய பூங்காவுக்கு வந்து விட்டான்.   

இன்னும் மூன்று ஆண்டுகளில் அரை நூற்றாண்டை தொட்டு விடுவான். இளமை முதல் செலவழித்த கடும் உழைப்பின் விளைச்சலை நிம்மதியாக அனுபவிக்க வேண்டிய வயது. முறையான உடற்பயிற்சிகளும் உணவு கட்டுப்பாடும் அவன் உடலை  இன்றும் வலிமையாக வைத்திருந்தன.  கடும் வேலைகளுக்கிடையிலும் மனதுகேத்த துணை கிடைத்தவுடன், முப்பது வயதில் திருமணம் செய்து கொண்டான். இரண்டு ஆண்டுகள் காதலித்த பின்னர்தான் இனிமையான மலாய் பண்பாட்டு முறைப்படி இல்லற வாழ்க்கையைத் தொடங்கினான். அவர்களுக்கு விரைவிலேயே  ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக சுட்டியான இரண்டு குழந்தைகள் பிறந்து அன்பைப் பகிர்ந்து கொண்டு வளர்ந்தன. இரண்டு ஆண்டுகளில் கண்ணுக்கு அழகான இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் கவனம் தங்கள் வேலையை மேம்படுத்துவதிலும் குழந்தைகளைச் சிறப்பாக வளர்ப்பதிலும் குவிந்தது. அவன் ஒரு கூட்டு நிறுவனத்தில் கணக்காளராகவும் அவன் மனைவி பகுதி அரசு உதவி  நிதி நிர்வாக நிறுவனத்தில் முதலீட்டு அதிகாரியாகவும் பணி செய்து கொண்டிருந்தனர். பொருளாதார சிக்கல் என எதுவும் இல்லாததோடு மேல்தட்டு சொகுசுகள் அனைத்தும் அமைந்த வாழ்க்கையை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.  அவனது கடுமையான உழைப்பின் விளைவாக இன்று அதே கூட்டு நிறுவனத்தின் கிளை ஒன்றில் உயர்மட்ட நிர்வாகியாக இருக்கின்றான். அவன் மனைவியும் பழைய நிதி நிறுவனத்தில் நிதி முதலீட்டு உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுவிட்டாள். அவர்கள் உயர்மட்ட சமூக அந்தஸ்துக்குள் நுழைந்துவிட்டனர். 

அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அவன் மீதும் குழந்தைகள் மீதும் அன்பையும் அக்கறையையும் பொழியும் மனைவி.  கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவள் அவள். பணியிட பரபரப்புகள் ஒருபோதும் அவளைப்  பொறுப்புள்ள மனைவி என்கிற நிலையிலிருந்து விலக்கி வைத்ததில்லை. ஒவ்வொரு வார கடைசியிலும் அவன் மனைவி விதவிதமாக சமைத்து அசர வைப்பாள். அவள் உண்மையில் சமையலில் கை தேர்ந்தவள். மிகவும் ஆர்வமாகச் சமைப்பாள். அவர்கள் இன்ப துன்பங்களை ஒன்றாக எதிர்கொண்டனர்

இன்றைக்கு அவர்களின் வாழ்க்கையின் மதிப்பையும் ஆடம்பரத்தையும்  மட்டும் பார்ப்பவர்களுக்கு ஒரு காலத்தில் அவர்களும் பெரும் துன்பங்களைச் சந்தித்தவர்கள்தான் என்கிற உண்மை தெரியாது. திருமணமான புதிதில் அவன் பெரும் பண நெருக்கடியில் சிக்கினான். ஒரு வியாபார முயற்சியில் இறங்கியதால் வந்த வினை அது. ஆடம்பர உணவகம் ஒன்றைத் தொடங்கியபோது பெரும் உணவக சங்கிலியை உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஒரு மலையின் முகட்டில் இருந்து இன்னொரு மலை முகட்டில் தெரியும் பிரகாசமான ஒளியைக் கண்டு வியப்பது போன்றதுதான் அது எனத் திட்டமிட்டபோதும் கனவு கண்டபோதும் தோன்றவில்லை. இன்னொரு மலையில் தெரியும் ஒளியை அடைய கீழே உள்ள பெரும் பள்ளத்தாக்குகளையும் காட்டாறுகளையும்  கடக்க வேண்டியிருக்கும் என நினைக்கவேயில்லை. எல்லா முதலீடுகளும்  கருந்துளைக்குள் விழுந்த பொருள் காணாமல் போவது போல மறைந்து கொண்டிருந்த அந்தப் பொருளாதார மந்த நிலை காலக்கட்டத்தில், அவன் கடன் வாங்கி முதலீடு செய்த பல லட்சங்களும் மாயமாகிப் போயின. அவர்கள் மிக மிக நெருக்கடியான நாட்களைக் கடக்க வேண்டியிருந்தது. காரை வங்கி பறித்துக் கொண்டது. வீடு ஏலத்திற்குப் போகும் நிலை வந்தது. கடன்பற்று அட்டையின் கடன் வட்டிக்கு மேல் வட்டிப் போட்டுக் கழுத்தை நெறித்தது. வாங்கிய கடனைச் செலுத்த முடியாததால் வங்கி திவால் நோட்டீஸ் அனுப்பியது. காகிதத்தில் கணக்குப் போட்டு கனவு கண்ட போது அழகாக தெரிந்த யாவும் அதள பாதாளத்தில் சரிந்தன. காகிதத்தில் போட்டுப் பார்த்த கணக்குகளுக்கு முற்றிலும் வேறாக இருந்தன நிஜ கணக்குகள்.

அந்த நேரத்தில் அவன் மனைவிதான்  இருள் சூழ்ந்த பாதாளத்திலிருந்து அவனை மீட்டெடுக்கும் தெய்வமாக இருந்தாள். அப்போது இரண்டாவது குழந்தையைச் சுமந்து கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணியான அவள் சலிக்காமல் அவனுடன் எல்லா பொருளகங்களின் படிகளிலும் ஏறி இறங்கினாள். அவனுடைய பொருளாதார சிக்கல்ளைத் தீர்ப்பதில் மிகப் பெரிய துணையாக இருந்தாள். அவர்கள் அந்த இருண்ட பாதையை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல கடந்தனர். அவனும், சொர்க்கத்திலிருந்து வந்த மீட்பு தெய்வம் போன்ற அவளும் மட்டுமே அத்துன்பங்களைச் சுமந்தனர். குழந்தை பிறந்து, மனைவியின் மேற்கல்வியும் நிறைவடைந்து, அவனுக்குப் பதவி உயர்வும் கிடைத்த பிறகுதான் சிரமங்கள் மெல்ல குறையத் தொடங்கின. அவர்கள் வெறுமையின் குழியிலிருந்து மீண்டு வந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். தன் கடின உழைப்பு இந்த வெற்றிக்குக் காரணம் என்றாலும் தன்  மனைவியின் அன்பே நெம்புகோளாகி அவனைத் தூக்கிவிட்டதை அவன் மறக்கவில்லை. அவனைப் பொருத்தவரை அவள் ஒரு சாதாரண பெண் அல்ல. அவள் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்த  தேவதை. காதலும் பற்றும் மிக்க மனைவி. கனிவும் அக்கறையும் கொண்ட தாய்.

ஆனால், வாழ்க்கை மிக விசித்திரமானது. அந்த விசித்திரம்,  சூரிய ஒளி தகிக்கும் வெப்பத்துடன் தன் வழக்கமான எல்லையைக் கடந்திருந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்தது. அந்த வெப்பமான அக்டோபர் மாத தினத்தில்தான் அவன் குளிரச் செய்யும்மொரு வினோதத்துக்குள் விழுந்தான். ஆம் குளிர்ச்சிதான். குளிர குளிர ஒரு காதல். அன்று சில பத்தாண்டுகளுக்குப் பின் தன் இரண்டாவது காதலை அவன் கண்டடைந்தான். முதல் காதல் கொஞ்சமும் சிதையாமல் அப்படியேதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமுமில்லை. வேலை நிமித்தமாக நகரின் மேல்மட்ட மக்கள் புழங்கும் கஃபே ஒன்றுக்கு சின்ன இளைப்பாறலுக்குச் சென்றிருந்தான். வழக்கம் போல ஒரு துண்டு கேக், ஒரு கோப்பை லாதே,  சற்றுமுன் மேல் தளத்தில் வாங்கிய நூல்  ஆகியவற்றுடன் அமர்ந்திருந்தான். கேக், லாதேயுடன் ஒரு புத்தகத்தையும் புரட்டியபடி இளைப்பாறுவது காதலைப் போலவே இனிமையானது. அந்த நிமிடம்தான், அவனைப் போலவே தனியாக அங்கே அமர்ந்திருந்த அழகிய பெண் ஒருத்தியைப் பார்த்தான். முதலில் மனதில் எந்தச் சலனமும் தோன்றவில்லை. ஆனால், வினோதமாக ஏதோ ஓர் ஈர்ப்பு அவளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஆச்சரியம் என்னவென்றால், அவளிடம் இருந்தும் அதே எதிர்வினை வந்ததுதான். அவள் தன்னைத் தான் பார்க்கிறாள் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. அவனுக்குப் பின்னால் இருந்த சாம்பல் நிற சுவரில் கருத்தைக் கவரும் ஓவியமோ படமோ எதுவும்  இல்லை. அவர்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன.  ஒரு விநாடி சந்தித்த கண்கள் விலக முடியாமல் நின்றன.

கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கீற்று ஒன்று அவள் இதயத்திலிருந்து அவன் இதயத்துக்கு நேராக பாய்வதாக ஓர் உணர்வு துளிர்த்தது. உடல் சிலிர்த்தது. கால நகர்ச்சியை உணராமல் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். சட்டென அவள் புன்னகைத்தாள். அந்தப் புன்னகை நிச்சயம் அவனுக்குரியதுதான். அவன் தன் ஆண்மைக்குச் சேதம் வராமல் மரியாதையுடன் புன்னகைத்தான். ஒளிக்கீற்று ஒரு மெல்லிய நூலாக மாறி அவர்களைப் பிணைத்துக் கட்டியது. அந்த இனிமையான புன்னகையை வீணாக்கிவிட்டு லாதேயை மட்டும் அருந்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவன் விரும்பவில்லை. அவளிடமிருந்தும் நல்ல சமிக்ஞைகள் வந்து கொண்டிருந்ததால், அவன் துணிந்து அவள் அருகில் சென்று அங்கே அமர அனுமதி கேட்டான். அவனுக்கே அந்தத் துணிச்சல் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதன் பாதகங்களை அவன் யோசிக்கவில்லை.  அவமானங்களைச் சுமப்பது பற்றிய அக்கறையற்ற பித்து என்றுதான் அதைக் கூற வேண்டும். அவள் மறுத்துவிட்டால் என்னவாகும்? அல்லது அவள் தன் காதலனுக்கோ கணவனுக்கோ காத்திருந்தால்? அந்தப் பார்வையும் புன்னகையும் சாதரண முகமனாகக் கூட இருக்கலாமே. அவனை ஏளனமாக பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டால் என்ன செய்வது. எவ்வளவு பெரிய அவமானம். அவன் மிக பணிவாக அவளை அணுகினான். அவள் மறுத்தால் மன்னிப்பு கேட்க தயாராகவே இருந்தான். ஆண்கள் அப்படிதான். அணுமானம் செய்தபின் பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் எப்போதும் சிந்திப்பதில்லை. அது அதீத நம்பிக்கையினால் அல்ல. ஆணாதிக்க திமிர் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், அது அபூர்வ மனநிலையில் உணரப்படக்கூடிய ஒரு நுட்பமான வேதியல் மாற்றம். அந்த ரசாயனம் தேகத்திலிருந்தா? கண்களிலிருந்தா? அல்லது உயிரிலிருந்து சுரக்கிறதா என்பதைச் சொல்ல முடியாது. அது உள்ளார்ந்த  நுட்ப உணர்வு குமிழ்களால் மட்டுமே உணரக் கூடிய நுட்பமான வேதிப்பொருள்.

அவள் பெயர் நத்தாஷா.  பதின்ம வயது குறும்புத்தனங்களைக் கடந்து பொறுப்புகளை ஏற்க தயாராகும் இருபதுகளின் கடைசிகளில் இருந்தாள். உயர்கல்வி கற்று நல்ல பணியில் இருக்கும் பிற பெண்களைப் போலவே நாத்தாஷாவும் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்பு காதலன் இருந்தான். இப்போது யாரையும் அவள் மனம் நாடவில்லை. அவளுக்கும் அவனுக்கும் வயது வேறுபாடு அதிகம் என்றாலும் நகர்புற வாழ்க்கை வயது காரணமாக யாரையும் முதுமைக்குள் தள்ளுவதில்லை.  தொந்தி தொப்பை இல்லாமல் அவன் கட்டுடலோடுதான் இருந்தான். முகச்சுறுக்கமோ தோல் சுறுக்கமோ விழவில்லை. மனமும் சொகுசான வாழ்க்கை தந்த நம்பிக்கையில் மலர்ந்தே இருந்தது. நத்தாஷா அவனுக்கு,  அழகு, இளமை, ஆரோக்கியம், சுறுசுறுப்பு என எல்லா வகையிலும் ஏற்ற இணைதான். அறிவும் சுயநம்பிக்கையும்  கொண்டவள். சுயகாலில் நிற்பவள்.  நத்தாஷா அவனைப் போலவே பிறந்து வளர்ந்ததெல்லாம் நகர்புறத்தில்தான். ஆமாம், அவர்களுக்குள் பொருந்திப் போக மிக ஏற்பான வேதியல் கலவை இருந்தது. சமூக தரத்திலும் வாழ்க்கை முறையிலும் இருவரும் ஒரே நிலையானவர்கள். அவனுக்கு வெவ்வேறு சமூக அந்தஸ்த்து உள்ள ஆணும் பெண்ணும் காதலில் விழும்  தேவதை கதைகளில் நம்பிக்கையில்லை. எங்காவது அபூர்வமாக அப்படி நிகழலாம். அதுவும் பெரும் குழப்பத்தில்தான் முடியும் என்பதே அவன் எண்ணம்.  ஒத்த ரசனை உள்ளவர்களுக்குள் ஈர்ப்பு ஏற்படுவது போல ஒரே சமூக அந்தஸ்து கொண்டவர்களுக்கிடையேதான் மனக்கவர்ச்சியும் வாய்க்கும் என்பது அவன் கருத்து. இதை கர்வமாகவோ மேட்டிமை மனப்பான்மையாகவோ அவன் நினைக்கவில்லை. மாறாக, உணர்ச்சிகளுக்கு அபாற்பட்ட அறிவியல்  கோட்பாட்டின் கருதுகோளாகவே கருதினான். 

அவர்களின் தொடர்பு நீடித்தது. அவனும் நாத்தாஷாவும் பல கஃபேகளுக்கு அவ்வப்போது சென்று வந்தனர். பகல் உணவை ஒன்றாகவே உண்டனர். திரைப்படத்துக்குக் கூட சென்றனர். அவர்களின் உறவு ஒரு பிளேட்டோனிக் புனித உறவாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆம். பிளேட்டோ தன் சிம்போசியம் உரையாடலில் காதல் படிநிலைகளை வகுத்தவாரு முதலில் உடல் அழகில் கவரப்பட்டு பின்னர் மெல்ல மன அழகில் ஈர்ப்பாகி, ஆன்மீக அழகு, மீட்பு என வளர்ச்சியை நோக்கி சென்று பிரபஞ்ச நிலையை அடைவதை விளக்குகிறது. அதில் காமம் இல்லை. எனவே, உடலில் இருந்து விடுபட்டது. அகம் சார்ந்த மீட்பை நோக்கமாக கொண்டது. பிளாட்டோ காதலுக்கு அதீதமான ஒரு கருத்துருவைக் கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது. ஆனாலும் அவன்  அந்த நவபிளேட்டோ கருத்துகளோடு தன் உறவைத் தொடர்புபடுத்திக் கொள்ள முயன்று குழம்பினான்.

ஆனால், அவன் காதல் வளர்ந்து கொண்டிருந்தது. நாத்தாஷாவோடு இருக்கும் நேரங்களில் உண்டாகும் மனநிறைவை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவளும் அப்படிதான் உணர்ந்தாள். மிகப் பொருத்தமான இணையாக தங்களை அடையாளம் கண்டு கொண்ட காதலர்கள்  அடுத்து செய்யக் கூடியது என்ன? நாத்தாஷாவின் வயதும் மனமுதிர்ச்சியும் ஓர் இளம் காதலனின் பொங்கி ஆர்ப்பரிக்கும் காதலை வேண்டி நிற்கவில்லை.  உல்லாசம், ஏக்கம், மோகம், பொறாமை, ஊடல் எனப் பெரும் காதல் நாடகத்தின் பாத்திர வார்ப்புகளாக தன்னை மாற்றிக் கொள்ள அவளால் முடியாது. அது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. அவர்கள் இருவருக்குமே பணி சார்ந்த லட்சியங்கள் இருந்தன. தங்கள் நேரத்தை அசட்டுத்தனமான துன்பியல் காதல் நாடகத்திற்குச் செலவளிக்க அவர்கள் தயாராக இல்லை.

அவர்கள் இறுதி முடிவை எடுத்தனர். மிக ரகசியமாக நிக்காஹ் முடித்துக் கொண்டனர். எளிய திருமணம்தான். நாத்தாஷா நகரத்துப் பெண். கொம்பாங் இசை முழங்க, உறவுகள் சீர்வரிசை ஏந்தி வர, சண்டீங்  செய்யும் தடபுடலான கம்பத்து பாணி திருமண விருந்தை அவள் விரும்பவில்லை. தங்கள் திருமணத்தை, நிறைவான நிக்காஹ் முறைப்படி, ஒரு மசூதியில் பதிவு செய்து கொண்டதோடு முடித்துக் கொண்டனர். நாத்தாஷா வழக்கம் போல தன் பரபரப்பான வேலை சூழலுக்குள் மூழ்கிப் போனாள். அவனும் தன் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பினான். ஆனால், அவன் அன்றாட வாழ்க்கை சுழற்சியில் மாற்றங்கள் உண்டாயின. அவன் தன் மனைவியையும் நாத்தாஷாவையும் கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. இரண்டு மனைவியருக்காக நேரம் ஒதுக்குவதென்பது ஒரே நேரத்தில் இரண்டு கிரகங்களை நிர்வகிப்பது போன்றது. அவன் முதல் மனைவியைப் பற்றி நாத்தாஷாவிடம் ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டான். அவளைப் பற்றி அதிகம் புகழ்ந்து பேசாவிட்டாலும் ஒரு சொல்கூட குறைத்து சொன்னதில்லை. புது மனைவியின் அன்பைப் பெற மூத்த தாரத்தைத் தாழ்த்தி சொல்பவன் உலகில் மிக இழிவான பிறவி என்பது அவன் கருத்து. அவன் தன்னை அப்படி ஒரு இழிவான பிறவியாக ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை. அவன் முதல் மனைவி உண்மையாகவே அவனுக்காக சொர்க்கத்திலிருந்து வந்த தேவதைக்கு ஒப்பானவள்தான். அவளைப் பற்றி ஒரு சொல்லும் குறைத்துச் சொல்லிவிட முடியாது.

அவ்வளவு மனமொத்த இணையாக அவன் மனைவி இருக்கும்போது ஏன் அவன் இன்னொரு பெண்ணை மணம் செய்ய வேண்டும் என நாத்தாஷா ஒருமுறை கேட்டபோது, அவன் சொற்களற்று அவளின் மின்னும் விழிகளையே பார்த்தபடியிருந்தான். எனக்கு உண்மையில் பதில் தெரியவில்லை என்று மட்டும் சொன்னான். உண்மையாகவே அவளின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. ஒரு ஆணின் காதலை, 1+ 1= 2 என்ற கணித விதிகளின் படி முடிவு செய்துவிட முடியாது. ஆண்களின் காதல் 1 + 1 = 1, 1 + 2 = 1, 1 + 3 = 1 என எல்லாமும் ஒன்றில் முடிவது. ஆணின் காதல் எப்போதும் பரிபூரணமானது. பகுத்தோ பெருக்கியோ பார்க்கத் தெரியாதது.

நாத்தாஷா, அதன் பின் அந்த கேள்வியைக் கேட்பதே இல்லை. ஆனால், அவன் மனைவிக்கு, நாத்தாஷாவின் வருகை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையைச் சொல்லி,  அவனது தேவதையின் மனதை நோகடிக்க அவன்  விரும்பவில்லை. ஒரு மகிழ்ச்சியை உருவாக்க நிலையாக இருக்கும் இன்னொரு மகிழ்ச்சியை ஏன் சிதைக்க வேண்டும். இரண்டு மகிழ்ச்சிகளுமே அதன் அதன் இடத்தில் சேதமின்றி இருப்பதுதான் நல்லது. இரு வேறு துருவங்களும் சந்தித்துக் கொள்ளக் கூடாது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லட்டும்.  அவனுக்குத் தனியான மதிப்பீடும் கருத்தும் உள்ளது. உலகம் வினோதங்களால் நிறைந்து கொண்டுள்ளது. ஆனால், அவன் இந்த வினோதத்தால் மனம் கலங்கிவிடவில்லை. அவன் எப்போதும் போல வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான். தன் காதலை வகுத்தோ பெருக்கியோ அவன் பகிர்வதில்லை. அவனை வந்தடைந்த இரண்டு பொக்கிஷங்களுக்கும் காதலை முழுமையாகவே பறிமாறிக் கொண்டிருந்தான். அதுவே பத்தாகவோ நூறாகவோ ஆனாலும் பரிபூரண அன்பின் முன்னே ஒன்றாகவே ஆகும். அவன் பேசுவது சமத்துவம் பற்றியல்ல; அழகின் பூரணத்துவம் பற்றி.

இந்த வினோதமான காலக்கட்டத்தில் அவனால் அந்தப் பரிபூரணத்தின் சாயலை உணர முடிந்தது. லைலா மேல் காதல் கொண்ட குயாஸ் பின்னர் மஞ்னு என்று பித்தன் பட்டம் பெற்றதைப் போல, அவன் ஒரு குயாஸாக இருந்தபோது, லைலாவின் வெளித் தோற்ற அழகில் மயங்கினான். ஆனால், மஞ்னு எனும் பித்தனான பின்னர் அந்த வெளித் தோற்ற மயக்கம் மறைந்து விட்டது. அவன் ஆன்ம அழகில் மயங்குபவனாக மாறிப் போனான். ஆன்ம அழகின் லயிப்பு அவனுக்கு புதிய தரிசனங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.  இப்போது லைலாவின்  அழகு பரிபூரணத்தின் நிரந்தர பேரழகாக மாற்றம் கண்டுவிட்டது. அவனுக்குள் ஊரும் இனிய நீரூற்றின் போக்கை அவனால் அடையாளம் காண முடியவில்லை. இது காதலின் விளைவா அல்லது பேராண்ட பேரழகு என்னும் கருத்தின் பாதிப்பா எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவன் பிளேட்டோனிக் காதலின் உயர் படிகளில் ஏறிக் கொண்டிருப்பதாக  உறுதியாக நம்பினான்.

ஓராண்டு கடந்தது. உஷ்ணமான அக்டோபர் மாதம் முடிந்து மழைக்கால நவம்பர் மாதம் தொடங்கியது. ஒவ்வொரு நாளையும் குளிரும் பனியும் ஊடுறுவி நிறைத்துக் கொண்டிருந்தது. தினமும் இருவேறு கோள்களைக் கவனித்துக் கொள்வதும் இரண்டு பொக்கிஷங்களின் சிறப்பு மங்காமல் கவனித்துக் கொள்வதும் அவனுக்குக் கிளர்சியூட்டும் பணிகளாகியிருந்தன. நவம்பர் மாதம் ஒவ்வொரு மாலையும் மழை பெய்து சாலை நெரிசலை அதிகப்படுத்தியது.  ஆனால், மழையின் குளிர்ச்சி மனதில் பொங்கிக் கொண்டிருக்கும் எல்லா வெப்பத்தையும் தனிக்கும் தன்மை கொண்டிருந்தது. காலை தொடங்கி இரவு வரை அடை மழை பெய்து கொண்டிருந்த ஒரு நவம்பர் நாளில் அவன் நாத்தாஷாவின் வீட்டுக்கு வந்தான். அன்று மனம் ஏனோ அதிகம் சோர்ந்திருந்தது. இருண்ட வானமும் அடை மழையும் ஆகாயத்தின் சோகக் கண்ணீர் போல இருந்தது. அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அவன் அறைக்குள் நாத்தாஷா வந்தாள். கிளர்ச்சி தரும் நறுமணத்துடனும் அளவான ஒப்பனையுடன் அவள் இருந்தாள். ஆனாலும் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சோகத்தில் நிழல் படிந்திருந்தது. நாத்தாஷா பேரழகியாக அவன் முன் நின்றாள்.  மழை சூழ்ந்த  அந்த வியாழன் இரவில் பேரழகியாக நாத்தாஷா அவன் முன் நின்ற அந்த நிமிடங்கள் அவன் ஞாபகத்தில் பதிந்து போயின. உண்மையாகவே விண்ணிலிருந்து வந்த தேவதையாக அவள் தெரிந்தாள். திறந்து கிடந்த அகண்ட சன்னல் வழி திடீரென முழு நிலவு எழுந்தது. நாத்தாஷா சன்னலுக்கு மிக அருகில் நின்றாள். அவன் அவளை நெருங்கிச் சென்றான்.

“இது நாம் சந்தித்துக் கொள்ளும் கடைசி நொடி,” என்றாள் நாத்தாஷா. அவள் கண்களில் கண்ணீர் துளிகள் முத்து சரம் போல உதிர்ந்து கொண்டிருந்தன.  அவன் பிரம்மை பிடித்தவனாகச் செயலற்று நின்றான்.  அப்போது நாத்தாஷாவின் தோள்களில்  இரண்டு பெரிய இறக்கைகள் வெளிப்பட்டன. அவன் வாய் இறுக மூடி கட்டப்பட்டதாக உணர்ந்தான். ஒரு சொல்லும் அவனால் சொல்ல முடியவில்லை. அந்த நொடியில் நாத்தாஷா சன்னல் வழியே வானில் சிறகசைத்துப் பறந்து விண்ணேறினாள். கனமான சிறகுகள் அசையும் ஓசை பெரும் சோக இசை போல ஒலித்தது. நாத்தாஷா வானில் பறந்து விண்ணில் மேகம் போல கலந்து மறைந்து போவதை அவன் உடல் நடுங்கி குழைய  செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று, விடியும் வரை அவன் சன்னலோரம் அமர்ந்து பெருநிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள், முழுவதும் நாத்தாஷா இல்லாத அந்தக் காலி வீட்டில் நினைவுகளை இறுக அனைத்தபடி இறுதியாக தூங்கினான். மாலையில் தன் வீட்டுக்குத் திரும்பினான். அன்று மனைவியோடு இரவு உணவு உண்ணச் சென்றான். அந்தத் திறந்த வெளி கடையில் அமர்ந்தபடி விரிந்து கிடந்த வானத்தைப் பார்த்தான். வானில் தெரிந்த முழு நிலவில் அவள் முகம் பதிந்து கிடப்பதாக தோன்றியது. தனது காதல் அமரத்துவம் பெற்றுவிட்டதோ எனத் தோன்றியது.

ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதமும் கதிரவன் தன் வெப்பக் கீற்றை  எல்லை கடந்து பரப்பும் நாட்களில், தன் காதலை அமரக் காதலாக வார்த்தெடுத்த அந்த நாட்களை அவன் நினைத்துக் கொள்வான்.  

மலாயில்:  Teman Kedua

தமிழில்: அ.பாண்டியன்

1 comment for “இரண்டாம் துணை

  1. November 29, 2024 at 12:01 am

    இரண்டாவது காதலும் திருமணமும் கனவு போன்று வந்து கலைந்து போனதுதான் மிச்சம்.

    – எம். பிரபு, பெந்தோங்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...