துணுக்குற்று கண் விழித்த பொழுது, உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு. மிக உயரமான கட்டடத்திலிருந்து விழுந்ததால் அவ்வுணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். கனவுதான். ஆனால், உணர்ச்சி நிஜமானது. ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டது முதல் இப்படியான கனவுகள்தான் மூன்று மாதங்களாக வருகின்றன. ஆனால், மதிய நேரத்தின் இடைவெளி உறக்கத்திலும் இப்படியான கனவு வருவது வியப்புதான்.
உதட்டின் ஓரத்தில் வழிந்திருந்த உமிழ் நீரை துடைத்துக் கொண்டேன். அது மெல்லிய ஜவ்வு பசை போன்று ஒட்டிக் கொண்டு வந்தது. கண்கள் சிவந்து எரிச்சலடைந்திருந்தன. விழியோர இடுக்கில் லேசாய் நீர் தேங்கியதில் எதிர் இருக்கும் காட்சிகள் மக்கி தெரிந்தன. அது கண்ணீரா என்ற சந்தேகமும் எழுந்தது. இப்போதெல்லாம் அழுகை என் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.
எழுந்து நிற்க முயன்றேன்.
சுவரில் மணி 6 என்று காட்டியது. மதியம் தூங்குவது இப்பொழுது வாடிக்கையாகி விட்டது. தூங்கிக் கொண்டே இருப்பது ஒரு விடுதலையைக் கொடுத்தது. எழுந்து அமர முடியாமல், சோபாவில் சாய்ந்து படுத்தேன். முதுகுத் தண்டு வலித்தது.
ஸ்வேதாவை அப்பொழுது நினைத்துக் கொண்டேன். நினைப்பதைக் கவனித்தேன் என்றும் சொல்லலாம். காரணம் நான் அவளை நினைப்பதைக் கடந்த மூன்று மாதங்களாக ஒருபோதும் நிறுத்தியதில்லை.
மிக இயல்பானவள் ஸ்வேதா. யதார்த்தமானவளும் கூட. சில சமயங்களில் மட்டும் அழுவாள். அவள் அழுகைக்கு ஒலி இருக்காது. சத்தமே இல்லாத ஒரு துன்பம். நான் அவளிடம் அதை பற்றி கேட்டும் அவள் சொன்னதில்லை. ஒன்றுமில்லை என்பாள். சொல்ல முடியாத கவலை அல்லது ரகசியம். ரகசியங்களை மிக பாதுகாப்பாக வைத்திருக்கூடிய குணம் அவளுடையது. என்னிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள். ‘இல்லை என்னிடமும் சிலவற்றை மறைத்துதான் வைத்திருப்பாளோ? ஏன் அந்த பகிர்ந்து கொள்ளாமை? ஏன் அந்த நம்பிக்கையின்மை’ அவள் சொல்லியிருக்கலாம். என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ. அல்லது அவள் மிக ஆழமாய் நம்பும் ஒருவரிடமோ.
கைபேசி ஒலி எழுப்பியது. திறந்து பார்தேன். தம்பி வாட்சப் அனுப்பியிருந்தான். தம்பி என்றால் என் சின்னம்மாவின் மகன். தம்பி போன்றவன். பத்து மணிக்கு மேல், அவர்கள் வருவார்கள் என்று என்னிடம் சொல்லியிருந்தான். இன்னும் நான்கு மணி நேரம்தான் இருந்தது.
சுற்றி வீட்டைப் பார்த்தேன். முன்பு அவளுடன் சேர்ந்து வாங்கிய அபார்ட்மென்ட். விசாலாமானது. அப்பொழுது இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். இப்பொழுது வேலையைவிட்டு இரண்டு மாதங்களாகி விட்டன. சேமிப்பு கரைவதைப் பற்றி கவலை படாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தேன். வீடு பல நாள் சுத்தம் செய்யப் படவில்லை. மேஜை முழுக்க சிதறிய நிலையில் புத்தகங்கள். பாதி சாப்பிட்ட கெ.ப்.சி. அட்டை பை. சோபாவில் மேல் மலை போல் குவிந்த துணிமணிகள். பாதி உலர்ந்த வாடை வேறு வீசிக் கொண்டிருந்தது. தூசி படிந்த தொலைக்காட்சி. அதற்கு மேல் என்றோ நான் கிறுக்கி வைத்த எங்கள் இருவரின் பெயர். துடைத்து பல மாதங்களிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மேசையின் மீது இரண்டு நாள் முன்பு குடித்து வைத்த காபி குவளை அப்படியே கிடந்தது. கடைசி அடிக்காபி வற்றி காய்ந்து அப்படியே ஒட்டி போயிருந்தது. உள்ளே இருந்த உலோக கரண்டியில் வரிசையாய் எறும்புகள். குப்பை தொட்டி நினைவு வந்ததும் கேஸ் அடுப்பும், கை கழுவும் நீர் தொட்டிக்கும் நடுவில் இருந்த அதை பார்த்தேன். ஒரு வாரமாய் குப்பை வீசப்படவில்லை.
கடந்த வார தொடக்கத்தில் வீசிய குப்பையின் அழுகிய வாடையை இப்பொழுது எப்படியோ நாசி உணர்ந்து கொண்டது. நினைவுகள்தான் வாசனையையும் மீட்டு தருகிறது. வாடை இப்பொழுது தலையை வலிக்க செய்தது. எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். உடலில் ஒட்டிக் கிடந்த சோம்பலைச் சிரமப்பட்டு அறுத்தெரிந்து எழுந்த பொழுது கொஞ்சம் இயங்க முடிந்தது. வீட்டை ஒழுங்குபடுத்தி குப்பைகளையெல்லாம் கட்டி கீழே இருக்கும் பெரிய தொட்டியில் வீசி விட்டு வரும் பொழுது, கையில் அதே அழுகிய வாடை அடிப்பது போன்ற உணர்வு.
வீட்டிற்கு வந்து குளித்து அமர்ந்த பொழுது மணி ஏழரை. பசிப்பது போல் உணர்ந்தேன். எழுந்து சென்று சமையலறை அலமாரியில் இருந்த மேகியை எடுத்து பிரித்து, மேகி தூளைக் கொட்டி சுடுநீர் ஊற்றி ஊற வைத்தேன். கொஞ்ச நேரம் ஊற வேண்டும். மீண்டும் அறைக்குச் சென்று மெத்தை மீது அமர்ந்தேன். அறையின் மேஜை மீது பரப்பி போடப்பட்டிருந்த நூல்களை நோக்கினேன். பல நூல்கள் வாசித்து விட்டு, எந்தப் பக்கத்தில் விட்டேனோ அதை அப்படியே திருப்பி வைத்திருந்தேன். வாசிக்காமல் விட்டு விட்ட பல நூல்கள் இருந்தன. மீண்டும் வாசிக்க வேண்டும். வாசிப்பதை விட்டு பல மாதங்களாகி விட்டன.
கண்கள் செருகியது.
நான் நெடுநேரம் தூங்கியிருக்கவில்லை. யாரோ மிக ஆழத்திலிருந்து உந்தி தள்ளியது போன்ற உணர்வு ஏற்பட்டு அதிர்ந்து எழுந்தேன். அப்போது அறையை இருள் சூழ்ந்திருந்தது. ஒன்றும் கண்களுக்குப் புலப்படவில்லை. அனைத்திலும் இருட்டு. சுற்றி யாருமில்லை என்ற உணர்வு. இனம்புரியா அச்சம் உள்ளத்துக்குள் ஊடுருவியது. மெல்ல மூச்சு வாங்கியது. வலது கரத்தைத் தூக்க முயன்று, அது செயலிழந்து இருப்பதை உணர்ந்தேன். கையே இல்லையென்ற உணர்வு ஏற்பட்டது. இடது கையால் அதை ஓங்கி குத்தினேன். கொஞ்சம் வலி வந்தது. பின் தலையணை பக்கத்திலிருந்த கைபேசியை எடுத்தேன். ஊற வைத்திருந்த மேகி நினைவுக்கு வந்தது. எழுந்து சென்று பார்க்கும் பொழுது, கதவின் மணியொலி கேட்டது. தம்பியாக இருக்க வேண்டும்.
அவன் நண்பர்களுடன் அன்றிரவு அங்கே தங்குவான் என்று சொல்லியிருந்தான். அவன் நெருங்கிய தோழனுக்கு பிறந்தநாள் வேறு. 21 வயது என்று சொன்னான். தம்பிக்கும் அதே வயது தான். கொஞ்சம் பார்ட்டியும் இருக்குமென்று முன்னமே சொல்லியிருந்தான். மறுப்பு சொல்வதற்கில்லை. இடையறாத எண்ணங்களில் இருந்து எனக்கும் கொஞ்சம் விடுதலை வேண்டுமென்று எண்ணியிருந்தேன். களைந்திருந்த தலை முடியைக் கையால் கொஞ்சமாய் வாரி இழுத்து விட்டு, கண்ணாடியில் முகத்தைப் பார்த்து கொண்டேன்.
ஒடுங்கிய முகம். தாடியைச் சவரம் செய்து பல மாதங்கள் ஆகியிருக்கும். தொண்டை குழியைத் தொடும் அளவிற்கு வளர்ந்திருந்தது. கழுத்து எலும்புகள் புடைத்து தெரிந்தன. மெலிந்த உடல். உடலுக்கு ஒட்டாதபடி அணிந்திருந்த உடை. பிறகு கையை வாய்க்கு அருகே கொண்டு சென்று ஊதிப் பார்த்தேன். நாற்றமெடுக்கவில்லை. இருந்தாலும் ஒரு மின்ட் மிட்டாயை எடுத்து வாயில் போட்டு விட்டு, கதவைத் திறந்தேன். தம்பி சிரித்து, நின்றுக் கொண்டிருந்தான். கூடவே அவனையும் சேர்த்து எட்டு பேர் இருந்தனர். அதில் ஐவர் பெண்கள். என் வயதைக் கொண்டு பார்த்தால், சிறுமிகள் என்றும் சொல்லலாம். நான் ஒன்றும் பேசாமல் கதவைத் திறந்து விட்டு, என் அறை நோக்கி நடந்தேன். எல்லாரும் உள்ளே நுழைந்து, கதவு சாத்தப்படும் ஒலி கேட்டது.
என் அறைக்குள் நுழைந்தவுடன் அவர்களிடம் பேசியிருக்கலாமோ என்று தோன்றியது. பின் பரவாயில்லை என்ற எண்ணமும் வந்து மறைந்தது. அவர்கள் காதலர்களாய் இருப்பார்களோ என்றும் தோன்றியது. அனைவரும் ஜோடிகளாய்தான் வந்திருக்க கூடுமென்று யூகித்தேன். போட்டு வைத்திருந்த மேகி அப்படியே சமையலறை மேஜை மீது இருப்பதை எண்ணி பெரு மூச்சு எழுந்தது. அதை எடுக்க மீண்டும் வெளியே செல்ல வேண்டும்.
அலுப்பாயிருந்தது.
அப்படியே மடிக்கணினியை எடுத்துக் கொண்டு மெத்தை மீது அமர்ந்தேன். தலையணையை எடுத்து மடி மீது வைத்து, அதன் மேலே மடிக்கணினியை வைத்து, நெட்ப்ளிக்ஸில் ஏதாவது படம் இருக்கிறதா என்று பார்த்தேன். தேடி தேடி அலுத்தது. த்ரில்லர் பார்க்கலாம், என்று தொடங்கி, ரொமண்டிக், ஹோரர், பின்பு கலை படங்கள் என்று எல்லாவற்றையும் தட்டிப் பார்த்தேன். எதுவும் பிடிக்கவில்லை. பின்பு உலக அழிவு குறித்த படங்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். பேரழிவுகளைப் பார்க்க மனம் ஏங்கியது. ஒரு படமிருந்தது. சொடுக்கி தட்டினேன். பத்தே நிமிடத்தில் சலிப்படைந்தது. மனம் எதையும் ஏற்கவில்லை. எதுவோ ஒன்று மனதைக் களைத்துப் போட்டுக் கொண்டேயிருந்தது. என்னவென்று யோசித்தபோது அது வெளியே ஒரு பெண்ணின் சிரிக்கும் சத்தம் என உணர்ந்தேன். ஸ்வேதா அப்படித்தான் அடித் தொண்டையில் சிரிப்பாள். நிலையற்ற நிலை. அலைகழிப்பு. கொஞ்சம் பதற்றமும் கூடியது.
எழுந்து வெளியே சென்றேன். மேஜையின் மீதிருந்த மேகியை எடுத்துக் கொண்டு, ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தேன். அவர்களைப் பார்க்கவில்லை என்றாலும் உடல் அனைவரையும் அறிந்து கொண்டிருந்தது. என்னை நோக்கியவர்களைப் பார்த்து கொஞ்சமாய் புன்னகைத்து விட்டு, சோபாவில் அமர்ந்தேன். கையில் மேகி ஆறிப் போயிருந்தது. தம்பியின் பக்கமிருந்த பெண்தான் சிரித்திருக்க வேண்டும். சிரித்து ஓய்ந்த பின் இருக்கும் வடு அவள் முகத்தில் ஒட்டியிருந்தது.
நான் வந்தவுடன் அவர்கள் சற்று அமைதியாகி இருப்பதைக் கவனித்தேன். என் தம்பி பக்கத்தில் ஒரு கருப்பு நிற பேக் இருந்தது. அவர்களைப் பார்த்து கொஞ்சமாய் சிரித்தேன்.
“ஏன்பா அமைதியா இருக்கீங்க. என்ன பத்தி ஒன்னும் நெனச்சுகாதீங்க. உங்களுக்கு வேணாம்னா, நா உள்ள போயிடுறேன். ரூம்ல இருக்க ஒரு மாதிரி கடுப்பா இருந்துச்சி. அதான் வெளியே வந்துட்டேன். இப் யூ டோன்ட் மைன்ட்,”
“ஐயோ அண்ணா, அது எல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல. நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்க,” தம்பி பேசினான்.
பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவன் கையிருந்தது. அவளும் அதை பற்றியிருந்தாள். நான் மீண்டும் அவளைப் பார்த்தேன். பின்னர் விழிகளை விலக்கி கொண்டேன். அவளை நான் பார்த்ததைக் கவனித்திருப்பாளா என யோசித்துக் கொண்டேன். அவர்கள் மீண்டும் பேசத் தொடங்கினார்கள். நான் எழுந்து, பால்கனி கதவைத் திறந்து வெளியே சென்றேன். குளிர் காற்று உடலை அள்ளிக் கொண்டது. மேலிருந்து நோக்கும் பொழுது நகரம் மஞ்சள் விளக்குகளுடன் ஓர் ஓவியம் போன்றிருந்தது. தூரத்தில் கோலாலும்பூர் இரட்டை கோபுரம் தெரிந்தது. அதை பார்ப்பதே ஒரு அலாதி சுகம். சில நேரங்களில் பிரமிப்பும், பல சமயங்களில் ஒரு வித பெருமையும் அகத்தில் தோன்றி மறையும்.
பாக்கெட்டை தடவிப் பார்த்தேன்.
அது அங்கே தான் இருந்தது. நேற்று மாலை சத்யா வந்து கொடுத்திருந்தான். எடுத்து பார்த்த பொழுது புதிதாக தெரிந்தது. மூக்கின் அருகே கொண்டு சென்று முகர்ந்துபார்த்தேன். கடும் மணம். மேல் வீட்டில் போலிஸ்காரர் ஒருவர் வசிப்பதால் பால்கனியில் நின்று புகைக்கத் தயக்கமாக இருந்தது. அறையினுள் அதை பற்ற வைத்து, புகைத்து, புகையை உள்ளிழுத்து விட்ட பொழுதுதான் அதுவரை மண்டையை அடைத்திருந்த கனமான வலி இறங்கியது போலிருந்தது. உடலில் பற்றியிருந்த பதற்றம் மெதுவாய் குறைந்தது. மூச்சு சீராவதைக் கவனித்தேன். மனம் அமைதியடையும் வரை உள்ளிழுத்து விட்டேன். அது பாதி எரிந்து அழிந்து கொண்டிருந்தது. மீதியிருந்ததை ஊதி அனைத்துவிட்டு, மீண்டும் எடுத்து பாக்கெட்டில் வைத்தேன். மீண்டும் அவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டது.
“ப்ரோ வாங்க ப்ரோ, நீங்க மட்டும் ஏன் தனியா இருக்கீங்க? சும்மா வாங்க பேசுவோம். ஜாலியா இருக்கும்,” சொன்னது பெண்ணின் குரல். பால்கனியில் இருந்து உள்ளே நுழைந்து, சோபாவின் அருகே சாய்ந்திருந்த நான், அந்தக் குரல் கேட்டுத் திரும்பினேன். மெதுவாய் சிரித்து விட்டு, அவர்கள் பக்கத்தில் சென்றமர்ந்தேன். தம்பி எனக்கு நேரெதிரில் இருந்தான். அவன் பக்கத்தில் அவளிருந்தாள். அவர்கள் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது எனக்குப் புதிதாக இருந்து. அமர்ந்த அடுத்த கணமே திரும்பி எழுந்து விடலாமென்று எண்ணினேன். அது சரியாக இருக்காதென புருவங்கள் சுளித்து, முகத்தைக் கூர்மையாக்கி தீவிரமாக ஒன்றைக் கவனிப்பது போல பாசாங்கு செய்தேன்.
நடுவே ஒரு பாட்டில். அதை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். கூடவே அனைவரிடமும் ஒரு குட்டி கண்ணாடி கிளாஸ். பாரில் ‘வோட்கா ஷாட்’ அடிப்பதற்கு பயன்படுத்துவோம். சில நேரங்களில் ‘டக்கிலாவும்’ உண்டு. ஆனால், அவர்கள் அதை கொண்டு என்ன செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. அனைவரிலும் ஒருவகை களிவெறி கூடியிருந்தது. அங்கே மதுவாடை வீசிக் கொண்டிருந்தது. என் முகத்தில் குழப்ப ரேகை பரவி இருக்கக் ககூடும்.
“அண்ணா இந்த விளையாட்டை ‘Truth or Dare’னு சொல்வாங்க. இங்க நடு சென்டர்ல இருக்கும் பாட்டில சுத்தி விடுவோம். யார்கிட்ட நிக்கிதோ அவுங்க தான் விக்டிம். சோ நாங்க அவுங்க கிட்ட ஒரு கேள்வி கேட்போம். அவுங்க அதுக்கு பதில் சொல்லணும். அந்த கேள்வி எந்த மாதிரி வேணுமானாலும் இருக்கலாம். உங்க பர்சனல் லைப், லவ் ஸ்டோரி, இல்லனா 18+ கேள்வியாகக் கூட கேட்போம். ஆனா நீங்க உண்மைய தான் சொல்லணும். அப்படி அந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்ல வேணாம்னு நெனச்சீங்க, டேர் செய்யணும். டேர்னா நாங்க என்ன செய்ய சொல்றோமோ அதை அப்படியே செய்யணும். இது ஒரு சீரியஸ் கேம் அண்ணா. பொய் சொல்ல கூடாது,” என் தம்பி விரிவாக விளக்கிக் கொண்டிருந்தான்.
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது நான் அனைவரின் முகத்தையும் பார்த்தேன். அவர்களில் எதுவோ குடியேறியது போலிருந்தது. முகம் கொஞ்சமாய் மயக்க நிலையில் இருந்தது. அவர்கள் அனைவரும் ஒரே வயதுடையவர்கள் தான். இருபத்தியோன்று அல்லது மிஞ்சினால் இருபத்திரண்டு இருக்கும். அவன் பேசும் பொழுதே எனக்குச் சலிப்படைய தொடங்கியது. பின்பு எனக்கே நான் கேட்டுக் கொண்டேன். ‘எதற்கு எல்லாவற்றிலும் எனக்கு சலிப்பு ஏற்படுகிறது? புதியவர்களை, புதியவற்றை பார்க்கும் பொழுது எரிச்சல் ஏற்படுகிறதா? அல்லது வயது ஏறுவதால் அனைத்திலுமிருந்து விலக்கம் ஏற்படுகிறதா’ என்று எண்ணினேன்.
“சரி, ஒகே டா. மொத நீங்க எல்லாம் ஸ்டார்ட் பண்ணுங்க. நா கடைசியா ஜோயின் பண்ணிக்கிறேன்”, என்றேன்.
“அப்ப நீங்க மொத அந்த பாட்டில சுத்துங்க, யார் கிட்ட நிக்கிதோ அவுங்க பதில் சொல்லணும்”, பேசியது என் தம்பியோடு வந்த இன்னொருவன். அவர்கள் பெயர்களைக் கூட நான் அறியவில்லை. உண்மையில் அதில் ஆர்வமில்லை. ஆட்டத்தின் விதிகள் கொஞ்சம் புரியாவிட்டாலும் அந்தப் பாட்டிலை எடுத்துச் சுத்தினேன். அந்தக் கண்ணாடி பாட்டில் வேகமாய் சுழன்று பின் ஓரிடத்தில் நின்றது. ஒரு பையனை நோக்கி அது நின்றது. அவன் அமர்ந்திருக்கும் பொழுதே உயரமாய் தெரிந்தான். பாட்டிலை பார்த்து மெதுவாய் சிரித்தான். ஒருவன் அவனிடம் கேள்வி கேட்க வேண்டும். அவன் பதற்றமாவதை நான் கவனித்தேன்.
“நீ வெர்ஜின்னா இல்லையா, அப்டி இல்லனா, எப்டி உன்னோட வெர்ஜினிட்டிய இழந்தனு சொல்லணும், அப்புறம் யார் கூடனு சொல்லணும்,”
அவன் மெல்ல சிரித்து விட்டு ஒரு கருப்பு நிற பேக்கிலிருந்து பாட்டிலை எடுத்தான். அது உயர் ரக டக்கிலா வகை மது. எப்படியும் அறநூறு வெள்ளிக்கும் மேலாக இருக்கும். பின் ஒரு கொக்கொ கோலா பாட்டிலையும் எடுத்தான். அதை மெதுவாக அவன் முன்னே இருந்த கிளாஸில் கொஞ்சம் ஊற்றி விட்டு, பின் அந்த கோலாவையும் அதனுடன் சேர்த்தான். அவன் முகத்தில் ஒருவித தீவிர தன்மை கூடியது. அனைவரும் அமைதியாகினர். அந்தக் குட்டி கிளாஸ் மதுவை அப்படியே எடுத்து வாயில் ஊற்றி விழுங்கினான். முகம் எரிச்சலில் நெளிந்து, கோணலாகி திரும்பி சாதாரணமாகியது. குடித்தவுடன், அடித் தொண்டையிலிருந்து ஒரு சத்தம். திருப்தியடைந்த ஒரு வெளிப்பாடு.
“இல்ல நா வெர்ஜின் இல்ல. பதினெட்டு வயசு இருக்கும்போது, ஸ்கூல்மேட் பொண்ணு கூட நடந்துருச்சி. ஆனா யாருனு சொல்ல முடியாது. பிகாஸ் அந்த பொண்ண உங்க எல்லாருக்கும் தெரியும்,” என்றான். அனைவரும் சிரித்தார்கள். கை தட்டினார்கள். ஆர்பரித்தார்கள். சில கெட்ட வார்த்தைகளும் வெளி வந்தன. எல்லாம் ஆங்கிலத்தில். ஆங்கிலத்திலேயே பினாத்தினார்கள். பெண்கள் ஆண்களிடமும் ஆண்கள் பெண்களிடமும் மிக சகஜமாக இருந்தார்கள். எனக்கு அதில் ஆர்வம் கூடியது. புதியது ஒன்றில் ஈர்ப்பு வருவது நெடு நாட்களுக்குப் பிறகு இது முதல் முறை.
“நீ யாருனு சொல்லலைனா, நாங்க சொல்றத செய்யனும்”,
“சரி, சொல்லுங்க”,
“சட்டைய கழட்டிட்டு உட்காரு,” சொன்னது ஒரு பெண். அவனுடைய தோழியாக இருக்கலாம். அவளுக்கு மெலிந்த உடல். உடலோடு ஒட்டிய சட்டை அணிந்திருந்தாள். அவன் கழட்டி விட்டு உட்கார்ந்த பொழுது, அனைவரும் மீண்டும் ஆர்ப்பரித்தார்கள். கழற்ற சொன்ன பெண், அவன் புஜங்களைத் தொட்டு “ஜிம்முக்கு போவியா?” என்றாள். அவன் தலையாட்டிய பிறகு, அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு பெண்ணிடம் காதோடு ஏதோ சொல்ல, அவள் பெருங்குரலில் சிரிக்க, மீண்டும் அனைவரும் சிரித்தார்கள். ஆட்டம் தொடங்கியது.
அடுத்து ஒரு பெண்ணிடம் அந்தப் பாட்டில் சுழன்று நிற்க, அவளிடம் அவளுடைய காதல் பற்றி கேட்கப்பட்டது. அவள் அதை கூற மறுத்த பொழுது, அவள் தலையில் தண்ணீர் ஊற்றி விடும்படி சொன்னார்கள். கூட்டமே சேர்ந்து அவள் மேல் தண்ணீர் ஊற்றினார்கள். அவள் கூந்தல் நனைந்து, தண்ணீர் உடலை நனைத்தது. நான் அதை கவனித்துக் கொண்டிருந்தேன். அவள் நனைந்தவுடன் உடலைச் சிலிர்த்தாள். கூட்டத்தில் ஒருத்தி “யு ஸ்லேய் கேர்ள்” என்றாள்.
அடுத்த முறை வந்த பொழுது, என் தம்பியிடம் வந்து அந்தப் பாட்டில் நிற்க, நான் கேள்வி கேட்க வேண்டுமென்ற முறை வந்தது. அவனிடம், “எப்போதிலிருந்து நீ குடிக்கிற?” என்று கேட்டேன். திடீரென அவர்களிடமிருந்து எழுந்த அந்த வெடிச் சிரிப்பால் நான் சற்று கூர்மையானேன். அனைவரும் சிரித்து முடிக்க சில நிமிடங்கள் ஆனது.
“ஐயோ ப்ரோ, நீங்க என்ன கிரிஞ் பண்ணிட்டு இருக்கீங்க. இதெல்லாம் ஒரு கேள்வியா?” என்று சொல்லி சிரித்தான். “பூமர் ப்ரோ நீங்க,” என்று தடித்த உடல் கொண்ட ஒருவன் உரக்கக் கூவினான். அதை தொடர்ந்து, பெரும் கூச்சல், அழுத்தமான சிரிப்பு சத்தம். நான் திரும்பி தம்பியைப் பார்த்தேன். அவன் பதில் சொன்னான்.
“பதினாறு வயசுல,” எனச் சொல்லிவிட்டு தலை குனிந்தான். கடும் போதையிலும் நான் அண்ணன் என்பதை மறக்கவில்லை என்பது நிறைவாக இருந்தது.
இன்னொருத்தி பாட்டிலைச் சுழற்தியதில், அது வேறொருவனிடம் நிற்க, அவன் அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமையால், அவளுக்கு முத்தம் தர வேண்டுமென்று கேட்டாள். எனக்கு முதலில் அதிர்ச்சிதான். அவனும் கொடுத்தான். அவர்கள் காதலர்களா என்பது தெரியவில்லை. கேட்கவும் தயக்கமாக இருந்தது.
இம்முறை பாட்டில் சுழன்று என்னிடம் நின்றது. கருப்பு நிற கிளாஸ் பாட்டில். மேலே புஜம் பெருத்த எருமை மாட்டின் உருவ ஸ்டிக்கர்.
“உங்க உடலுறவு அனுபவத்த விரிவா சொல்லுங்க,” ஆங்கிலத்தில் கேட்டது வழிய சென்று முத்தம் கேட்ட பெண்தான். என் அகம் பதற்றமுருவதை உணர்ந்தேன். மூச்சிழுத்து என் தம்பியைப் பார்த்தேன். அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களிடம் சொல்வது என்னுள் ஒருவித நடுக்கத்தை உண்டு பண்ணியது.
“இல்ல… நா சொல்ல முடியாது,” என்றேன். அவர்கள் கேலிச் சிரிப்புக்காகக் காத்திருக்கும் நேரத்தில் மூச்சிழுத்து விட்டேன்.
நினைத்தது போல் அனைவரும் சிரித்தனர். ஒருத்தன் மதுவைக் கோப்பையில் ஊற்றாமல், கீழே ஊற்றினான். ஒருவன் குடிக்க வாய்க்குள் வைத்திருந்த மதுவை, சிரிப்பை அடக்க முடியாமல் வெளியே துப்பினான். என் முகத்தில் கண்ணுக்குத் தெரியாத யாரோ காரி உமிழ்ந்தது போலிருந்தது.
“அப்படினா அவளோட உதட்டுல ஒரு முத்தம் கொடுக்கணும்,” எனத் தம்பியின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணைக் காட்டினாள் கேள்வி கேட்டவள்.
நான் என்ன செய்வதென தெரியாமல் விழித்தேன். அவளைப் பார்த்தபோது அந்தப் பெண் புருவத்தை உயர்த்திக் காட்டினாள். “முடியாது” என்றேன் அழுத்தமாக. ஒருவன் என்னை “பூமர் அங்கிள்!” என்றான்.
அவர்கள் என்னைப் பொருட்படுத்தாமல் போத்தலைச் சுழற்றினர். அது வேகமாய் சுழன்று என் தம்பி பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நின்றது. அப்போதுதான் கவனித்தேன். அவள் என்னையே ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். தோற்ற நான் அதற்குப் பின் அங்கிருக்க பிடிக்காமல் எழுந்து பால்கனிக்குச் சென்றேன். உண்மையில் அந்தப் பெண்ணின் பார்வையின் ஆழத்தை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை.
பால்கனிக்குச் சென்ற பின்னர் கண்ணாடி கதவைத் தள்ளிச் சாற்றினேன். எல்லா கூச்சலும் முழுமையாக நின்றிருந்தது. வெளியே குளிர் காற்று. உள்ளே அவர்களின் கூச்சலை அசைவுகளாக மட்டுமே உணர முடிந்தது. பால்கனி விளக்கைத் தட்டாததால் அவர்களால் என்னைப் பார்க்க முடியாது. தம்பியின் பக்கமிருந்த பெண் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். என்னைப் போலவே அவளையும் கேலி செய்வதை அறிந்துன்கொண்டேன்.
பாக்கேட்டிலிருந்த சிகெரட்டை எடுத்து பற்றவைத்து ஒரு இழு இழுதேன். மேல் வீட்டு போலிஸ்காரர் மீது பயம் போயிருந்தது. இப்போது இதன் போதை தேவையாக இருந்தது.
அப்பொழுது ஸ்வேதா நினைவில் நின்று துலங்கினாள். அவள் முகம் தெளிவாய் வந்து நின்றது. மெதுவாய் அவளைக் கண்டேன். அவள் தொடுகை. அந்த நறுமணம். கூந்தலின் ஈரப்பதம். அவள் தினம் அணிந்து கொள்ளும் வாசனை திரவியத்தின் மணம். எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக வந்து சேர்ந்தது. அது எங்கோ பக்கத்தில், கைக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கின்றன என்ற பிரம்மை தோன்றி மறைந்தது.
பன்னிரெண்டு வருட உறவு. திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்த சில மாதங்களில் அவளால் எப்படி அந்த முடிவுக்கு வர முடிந்தது எனப் புரியவில்லை. ஒருவாரம் அம்மாவின் வீட்டில் தங்கி விட்டு வருவதாகச் சென்றவள் ஏன் தூக்கில் தொங்கினால் என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை.
கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் என்னை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தபோது கொஞ்சம் எச்சரிக்கையானேன். கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவள் கண்ணாடி கதவைத் தள்ளி திறந்தபோது மென்மையாகச் சிரித்தேன். மிக இயல்பாக என் பக்கம் வந்து நின்று எட்டிப் பார்த்தவள் தன் உடலைத் தானே இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.
காற்றில் அவள் கேசம் அலையலையாய் எழுந்தன. நீளமான முகம். பெரிய கண்கள். குழந்தைகளுக்குரியவை. சிறு சிவந்த உதடுகள். அதன் மேல் எச்சில் ஈரம். மெல்ல என் பக்கத்தில் நின்று, எதிரே விரிந்திருந்த நகரத்தை நோக்கினாள்.
“உங்க பேரு?” என்றேன் வழக்கமான தயக்கங்களின்றி கேட்டது எனக்கே வியப்பாக இருந்தது. அவள் தேவி என்றாள். என் பெயரை, அவள் கேட்காதது ஏமாற்றமாயிருந்தது.
“இந்த விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என என் கண்களை உற்று நோக்கியபடி கேட்டாள்.
சற்று தடுமாறி “இட்ஸ் ஓகே” என்றேன். அவள் அப்படி கேட்டது மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
ஒரு கணம் அவள் அமைதியானாள். நானும் அமைதியாக நின்றேன். அவளிடம் இறுக்கம் கூடுவதை உணர்ந்தேன்.
அந்தச் சின்ன பல்கானியில் எங்களுக்குள் இடைவெளி குறைந்திருப்பதைக் கவனித்துத் தடுமாறினேன்
நான் பார்வையைத் திருப்பி தூரத்தில் தெரிந்த கோலாலும்பூர் இரட்டை கோபுரத்தை நோக்கினேன். ஆனால், என் மனம் அவளையே கவனித்துக் கொண்டிருந்தது
”உங்களுக்கு கேர்ல் பிரண்ட் இருக்கா?” என்றாள்
ஸ்வேத்தா திடுமென என் மனதில் எழுத்தாள். ஆனால், இவளிடம் ஸ்வேதாவைப் பற்றி சொல்ல மனம் வரவில்லை. அது தேவையில்லை என நினைத்தேன்.
“நீங்கள் என்னிடம் மறைக்கிறீர்கள். சொல்ல பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை,” என இரட்டை கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்.
எனக்குச் சுருக்கென்றது. திரும்பி அவளை முறைத்துப் பார்த்தேன். கண்கள் எரிந்தது. கீழ் உதடு மெல்ல துடித்து அடங்குவதை உணர்ந்தேன். தாடைகள் இறுகியது. ஒரு கணம் என்னைக் கட்டுபடுத்திக் கொண்டேன். அவள் அதைக் கண்டு அஞ்சுவாள் என்று எண்ணினேன். அவள் ஒரு கணம்கூட அசையவில்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது உதடுகள் குவிந்து பார்வை கூர்மையாகியிருந்தன. விழிகளில் ஒரு புன்னகை.
நான் திரும்பி வெற்று வானத்தைப் பார்த்தேன்.
“எதுக்கு இப்ப ஸ்ட்ரெஸ்?” என என் முதுகில் கை வைத்தாள். வெப்பமான கரங்கள்.
நான் ஒன்றும் பேசவில்லை. ஆனால், அந்த நேரம் எனக்கு ஸ்வேதாவின் நினைவு வந்தது. நான் உடைந்துபோகும்போதெல்லாம் அவள் இப்படித்தான் என்னை இதே பால்கனியில் வைத்து சமாதானம் செய்வாள். அவள் கரங்கள் முதுகில் இருந்து ஏறி என் தலையை வருடின. நான் தடுக்கவில்லை. ஆனால், உடைந்து அழ வேண்டும் போல தோன்றியது.
நான் சட்டென இறுக அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். அவள் உடல் லேசாக நெகிழ்வதை உணர்ந்தேன்.
இதமாக இருந்தது. அந்தக் குளிர் காற்றில் அவள் கதகதப்பும் மணமும் கொஞ்ச நேரம் எல்லா துன்பத்தையும் மறக்கடித்தது.
“இரவு விடிய இன்னும் நேரமிருக்கு…” என அவள் என் காதில் கிசுகிசுத்தாள்.
நான் ‘உண்மை’ என்பது போல தலையாட்டினேன்.
அவள் உதட்டை மெல்ல என் உதட்டருகில் எடுத்து வந்தபோது இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டு முத்தமிட்டேன்.
நீண்ட முத்தத்திற்குப் பிறகு அவள் தன்னை விடுவித்துக்கொண்டு எதுவும் நடக்காதது போல உள்ளே சென்றாள். கண்ணாடி கதவைத் திறந்து மூடிய அந்த ஒரு வினாடி பெரும் வெற்றிக் கூச்சல் சட்டென எழுந்து அடங்கியதைக் கேட்டேன்.
எனக்கு உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. சட்டென வெடித்து அழுதேன். அப்படியே தரையில் படுத்துக் கொண்டேன். சில்லிட்ட தரையில் உடலைச் சுருக்கிக் கொண்டேன்.