நெடிய பயணம்

இன்றைய தினம் சீக்கிரம் முடிவடைந்தால் போதும் என்று இருந்தது. அப்பா முன் தினமே நன்றாக குடித்திருந்தார். அவர் அருகே அதன் நெடி காலையிலும் வீசியது. வழக்கத்துக்கு மாறாக காலையிலேயே குளித்து நெற்றி நிறைய திருநீறு பூசி இருந்தார். எப்போதும் இல்லாத அவருடைய இன்முகம் எனக்கும் அக்காவுக்கும் எரிச்சல் ஊட்டியது.

தாங்கவே முடியாத இன்றைய தினத்துடன் மல்லுக்கட்ட விருப்பமோ மனமோ இல்லாத அம்மா ஏற்கனவே பூர்வீக கிராமம் சென்று விட்டிருந்தார். சாமான் செட்டுக்களைக்கூட அம்மா சென்று ஒரு வாரம் கழித்துத்தான் நான் மூட்டை கட்டி ஒரு லாரியில் கிராமத்துக்கு எடுத்துச் சென்றேன். அனைத்து சாமானங்களையும் அப்பாவே கூட இருந்து ஏற்றி விட்டார். வீடு காலி செய்யும்போதுதான் தெரிகிறது இத்தனை பொருட்கள் இருந்தனவா என்று. ஒவ்வொன்றுக்கும் அப்பா ஒரு கதை வைத்திருந்தார். நல்ல வேளை எந்தக் கதையையும் அவர் விலாவாரியாக சொல்லவில்லை. ஆனால், ஒற்றை ஒற்றை வரிகளாக சொல்லிக் கொண்டே சென்றது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. “இந்தக் கடிகாரம் மெட்ராஸ்ல ஏலத்துல எடுத்தது… அப்பவே 54 ரூபா.” “இந்த டேபிள் வாங்கினப்ப தேக்குன்னுதான் சொன்னாங்க… அப்ப எனக்கு நம்பிக்கையே வரல. 150 ரூபா அதிக விலைனு நெனச்சு தான் வாங்கினேன். இதுவரையில ஒரு தடவை மட்டும்தான் இந்த டேபிளுக்கு மைக்கா ஷீட் மாத்தினேன்னு சொன்னா நம்ப முடியுதா? நாங்க ஒரு எட்டு பேர் குத்தாலத்துக்குக் குளிக்க போனப்ப அங்க சமைக்க வாங்கினது இந்த அடுப்பு. எல்லோரும் காசு போட்டுத்தான் வாங்கினோம், ஆனா வரும்போது அதை நான் நைசா எடுத்துகிட்டு வந்துட்டேன்…” என்று அவர் சொல்லிச் சிரித்தார். அந்தச் சிரிப்பு, விவஸ்த்தை கெட்ட அந்த அத்துவான சிரிப்பு,  இன்று வரை என் நெஞ்சில் நீங்காது மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைய தினத்தைக் கடந்துவிட வேண்டும்.

அக்காவுடன் அமர்ந்து ஒப்பந்த பத்திரத்தைப் படித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து அவர் கேட்டார், “ஏம்ப்பா, அவங்களுக்கு நாம ஏதாவது சுவீட்டு கீட்டு வாங்கிட்டு போய் கொடுக்கணுமோ? இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்… அவங்கள பாத்தா ரொம்ப நல்லவங்க மாதிரி தெரியுறாங்க… என்ன நான் சொல்றது…”

நான் ஆத்திரம் தாளாமல் ஏதோ சொல்ல வர அக்கா முந்திக் கொண்டாள். “அப்பா… கொஞ்சம் சும்மா இருப்பா. ஏன் இப்படி ஒளறுறீங்க. அதுதான் ஆகிப்போச்சுல்லா. இனி நடக்க வேண்டியதைச் சரியா செய்வோம். மாத்திரை சாப்டீங்களா? டாக்டர் கிட்ட எதுனா போகணுமா?”

நான், “டாக்டர்கிட்ட போனா மட்டும் தெளிஞ்சிடும் பாரு.” என்றேன். அக்கா என்னை நோக்கி திரும்பி ‘பேசாமல் இரு’ என்று சமிக்ஞை செய்தாள்.

அவர் காதில் ஏதும் விழாதவர் போல் அக்காவைப் பார்த்துச் சொன்னார், “சரிம்மா, இனி அப்பா ஒன்னும் சொல்ல மாட்டேன்.” 

நான் “அக்ரீமெண்ட் போட்டு அட்வான்சும் வாங்கியாச்சு. எதுனா அபச குணமா பேசி பார்ட்டி திரும்பிக்க போறான். திருப்பி கொடுக்க இப்ப அட்வான்சும் கைவசம் இல்ல,” என்றேன்.

அவர் சட்டென்று எழுந்து, “அட… நானே தப்பு பண்ணுன மாதிரி சொன்னா என்ன பண்றது. எப்ப உங்க அம்மாவ கட்டினனோ அப்ப இருந்து எனக்கு இறங்குமுகமா தான் இருக்கு. பீடை புடிச்ச முண்ட… அவளை அப்பவே விட்டு எரிஞ்சிருந்தா இப்போ நண்டு சிண்டு எல்லாம் என்ன இந்தக் கேள்வி கேட்குமா.”

எனக்கும் விசுக்கென்று கோபம் வந்தது. இது இப்போதைக்கு இன்னொரு விவகாரமான விஷயமாக இருக்க வேண்டாம், இன்றைய தினத்தைச் சுமூகமாக கடத்த வேண்டும் என்று பட்டது.  மனதில் தோன்றும் ஆயிரம் எதிர் மொழிகளை விஷம் விழுங்குவது போல் தொண்டைக்குள் அழுத்திக் கொண்டேன். 

இன்றைய நீண்ட தினத்தைக் கடத்திவிட வேண்டும். அது ஒன்றுதான் தேவை. 

இதேபோல்தான் அன்று சாமான் செட்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு கிராமத்துக்குச் செல்லும்போது, அந்த நாளும் இப்படித்தான் நீண்டு நீண்டு சென்றது. இதோ முடிந்து விடும் இதோ முடிந்து விடும் என்று அந்த நாள் போக்கு காட்டியது. ஒவ்வொரு நாளும் இனி அந்தப் பழைய வாழ்வை ஞாபகப்படுத்த போகும் பொருட்களின் உறுத்தலோடு அந்த லாரிப் பயணம் மிக மிக நெடியதாக இருந்தது. பூர்வீக வீட்டில் பொருட்களை இறக்கி வைக்கும்போது அம்மா ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நல்ல வேளை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இறுக்கமான அந்த மௌன கணங்களை அப்போது எப்படியோ கடந்து விட்டிருந்தேன். கடைசியாக லாரிக்காரனுக்குப் பணம் கொடுக்கையில் கடைசி 500 ரூபாயைச் சில்லறை முடிப்புகளாக தந்த கணமும் அந்த லாரிக்காரனின் தினுசான பார்வையும் என்னைக் கலங்கடிக்க வைத்து விட்டது. அன்று யாருக்கும் தெரியாமல் அமைதியில் அழுதேன். 

எப்போதும் விரைவாகச் செல்லும் அன்றாடங்கள் இப்போதெல்லாம் நின்று, இருந்து மெதுவாக செல்கிறது. மிடுக்குடன் அமர்ந்திருக்கும் அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் இந்த அன்றாடம் இன்னும் இன்னும் கனமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்குச் சான்றுரைப்பது போல் அப்பா ஆரம்பித்தார், “எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க. இன்னைக்கு தான் இங்க கடைசி நாள். இந்த வீட்டோட நம்மள பிடிச்ச பீடை ஒளிஞ்சு போகணும்… ஆனா… நம்ம கிட்ட இருந்து வாங்கிக்கிறவங்க சந்தோஷமா இருக்கணும்… என்ன நான் சொல்றது… முழு மனசு இல்லைன்னாலும், கெட்டது நினைக்க கூடாது பாரு… ஆனா நான் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கங்க, உங்க அம்மா இருக்காலே… அவ நல்லவன்னு நினைச்சுறாதீங்க.”

“ஏய்… கொஞ்சம் கம்முனு இருக்கியா… வீட்டை விக்கிறோம்ன்னு கொஞ்சமாவது வருத்தம் இருக்கா? ஒரு மனுஷன் எவ்வளவு சொரணை கெட்டு…” என்று நான் சொல்ல வருவதை, “தம்பி…” என்று பதட்டமான ஒரு சொல்லில் நிறுத்தினாள் அக்கா.

“நான் ஏன்டா வருத்தப்படணும்… நீயும் உன் தாத்தனுமா எனக்குச் சம்பாரிச்சு கொடுத்தீங்க? உன் தாத்தன் இத… இப்பிடி… இப்பிடி…” எழுந்து நின்று இடுப்பைக் கோணலாக ஆட்டி காண்பித்து தொடர்ந்தார், “ஜின்ச்சா ஜின்ச்சா போட்டவன்டா… நான் உருவாக்கின சொத்து இது. நான் திண்ணு அளிப்பேன் ஊதாரித்தனம் பண்ணி அளிப்பேன். என்ன எந்த மயிராண்டியும் கேள்வி கேட்க முடியாது. பாத்துக்க…”

“அப்ப, என்ன மயித்துக்கு ரெண்டு குழந்தை பெத்துக்கிட்ட… பன்னி குட்டி போட்ட மாதிரி. இப்படி நடுரோட்டில் விடவா…” என்று கை ஓங்கிய என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்தாள் அக்கா.

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கண்கள் நிறைந்தன. “என்ன சொல்றான் பாரு… நாம ரெண்டு பேரும் பொறந்து வளர்ந்த வீடு. நமக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி இந்த நாய் பேசுது.”

“டேய் கொஞ்சம் சும்மா இரு. கேட்றப் போவது…”

“கேக்கட்டுமே… ஊதாரி நாய்.”

அக்கா விசும்பி அழுதாள். “இப்படி நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிறத பாக்கவா நான் இங்க வந்தேன். நீங்க எல்லாரும் தேடிப் பார்த்து கட்டி வச்சீங்களே ஒரு குடும்பத்துக்கு. நான் உங்க வீட்டுல கஷ்டப்பட்டது போதாம அங்கேயும் போய் கஷ்டப்படுறேன். ஏன்னு வந்து கேக்க ஒரு நாதியில்ல. பொழுது கழிந்து பொழுது வந்தா வீட்ல ஒரே சண்டைதான். கெடையில கிடக்குற மாமியாவும் போய்த் தொலைய மாட்டேங்குது. இந்த வயசுல இருந்தே பீ மூத்திரம் அல்ல வெச்சுட்டீங்க. என் வீட்டுக்காரரும் ஒத்தை ஆளா எத்தனை தான் பாக்க முடியும். வீடு விக்கிறீங்களே நீங்க ஏதாவது செய்வீங்க ஏதாவது தருவீங்கன்னு பார்த்தா… ஹம் ஹு… உங்க பஞ்சாயத்தே பெருசா இருக்கு,” என்றவள் நா தழுதழுக்க முந்தனையால் கண்கள் துடைத்தாள்.

புதை குழியில் மாட்டிக் கொண்டிருப்பவன் தலையில் பாறாங்கல்லை வைத்தது போல் உணர்ந்தேன். நடு நஞ்சு உடலை விட்டு தனியே வந்து அடித்துக் கொண்டது. யாருக்கும் சமாதானம் சொல்ல முடியாதவனாக உணர்வற்று சொன்னேன், “என் கிட்ட எதுக்கு சொல்ற. உள்ள ஜம்முனு உக்காந்திருக்க கோடீஸ்வரனுக்குப் போய் சொல்லு…” என்றதும் அக்கா மேலும் அழுதாள்.

மெதுவாக வாசலுக்கு வந்தவர் நடந்ததை ஊகித்து கைகளை உயர்த்தி நியாயம் கேட்பவர் போல, “இது போனா நம்ம கிட்ட வேற எதுவும் இல்லாதது மாதிரி இரண்டு பேரும் பேசிக்கிறீங்க. ஊர்ல இன்னும் நாலு ஏக்கர் நிலம் இருக்கு.”

“அந்தப் பாங்காட்டுல குழி தோண்டி படுத்துக்கோ,” என்று முணுமுணுத்தேன்.

“என்ன சொன்ன… என்ன சொன்ன…” என்று இறங்கி வந்தவரிடம் கண்களைத் துடைத்தவாறே “சும்மா இருங்கப்பா,” என்று சொல்வதற்கும் சரவணன் வருவதற்கும் சரியாக இருந்தது.

உள்ளே வந்த சரவணன் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய அவகாசம் இல்லாதவனாக, “இன்னும் இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அங்க பத்திர ஆபீசுக்கு பார்ட்டி வந்து நேரமாச்சு. எட்டாம் நம்பர் டோக்கன் நம்மது,” என்று என்னைப் பார்த்தான். 

அப்பா, “ரெஜிஸ்டர் ஆபீஸ் இங்க இருந்து ரெண்டு கிலோமீட்டர்க்கு உள்ள தான் வரும். இதோ எட்டு வச்ச மாதிரி. ரெண்டு நிமிஷத்துல போயிரலாம். நம்ம வீட்ல இருந்து எல்லாமே பக்கம்தான் தம்பி. அவ்வளவு மெயின்ல இருக்கு,” என்று சொல்லிக் கொண்டு சாவகாசமாக வேட்டியை அவிழ்த்து கட்டினார். 

அவருடைய பாவனை சரவணனுக்கே அசௌகரியத்தைத் தந்திருக்கும்.

“நீ அவரைக் கூட்டிக்கிட்டு முன்னால போ. நானும் அக்காவும் டூவீலர்ல வந்துறோம்” என்றேன். அவர் எதையும் கண்டுகொள்ளாதவர் போல கேட்டை தாண்டி சென்று சரவணனின் வண்டி முன் வந்து நின்றார். 

அவர்கள் கிளம்பியதும் நாங்கள் பின்னாலே கிளம்பினோம். சார்பதிவாளர் அலுவலகம் முன் வண்டி வந்து நின்றதும் யாருக்கும் காத்திராமல் ஏதோ பந்திக்குச் செல்பவர் போல நேராக உள்ளே சென்றார். பின்னால் வந்து நின்ற நான் சரவணனைப் பார்த்து சமிக்ஞை செய்தேன். சரவணன் வண்டியை நிறுத்திவிட்டு அவரைப் பின்தொடர்ந்து உள்ளே ஓடினான். நானும் உள்ளே சென்றபோது அப்பா எதிர் பார்ட்டியுடன் அமர்ந்து சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகில் சரவணன் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தான். எனக்குப் பின்னால் வந்த அக்கா நேராக அவரிடம் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் கையில் காலியான ஒரு பை இருப்பதை அப்போதுதான் நான் கவனித்தேன்.

கூட்டமாக இருக்கும் அந்த இடத்தில் வழக்கம் போல தனியாக இருப்பதாகவே நான் உணர்ந்தேன். அந்தக் குழுவில் மொத்தம் எட்டு பேர் இருந்தனர். ‘எதற்கு இத்தனை?’ வயதானவர்கள் நான்கு பேர், அப்பா அம்மா வயதுடைய ஒரு தம்பதி, ஒரு குட்டிப் பாப்பா அவர்களுடன் என் வயதை ஒத்த ஒரு நெடிய பையன் வேறெங்கோ பார்த்து நின்று கொண்டிருந்தான். மென்பச்சை நிறத்தில் நீளவாக்கில் கோடு போட்ட முழுக்கை சட்டையைக் காக்கி நிற கால்சட்டைக்குள் சொருகி விட்டிருந்தான். அவன் போட்டிருந்த வார்செருப்பின் வகையை நான் கண்ணில் கண்டே இரண்டொரு வருடம் ஆகியிருக்கும். அவன் மட்டும் குழப்பமான எதிர்பார்ப்புடன் இருக்க மற்றவர்கள் வெவ்வேறு விகிதமான சந்தோசத்தில் இருந்தனர். அவர்களுள் ஒருவராக அப்பாவும். 

இன்னும் சிறிது நேரம் கழித்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. இனி ஏதும் செய்வதற்கில்லை. வந்தாகிவிட்டது. அந்தக் கூட்டத்தினர் அனைவரும் என்னைப் பார்த்தாகியும் விட்டது. எனது முதல் பிம்பம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்று போட்டாகிவிட்டது. எண்ணெய் ஏறிய முகமும் நேற்று போட்ட சட்டையும் என் உடல் மொழியும் எனக்கே இப்போதுதான் உரைத்தது. அவர்களைப் பார்த்து பொத்தம் பொதுவாக சிரிக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் அப்பா உறக்கச் சொன்னார், “நம்ம பையன் தான். காலேஜ் படிக்கிறான். இன்னும் ரெண்டு வருஷம் தான் இருக்கு. மெரிட்ல வந்தவன். மகா புத்திசாலிங்க இவன். இவனுக்காகத்தான் எல்லாம். நாள பின்ன வெளிநாடு போகணும்னு தொழில் தொடங்கணும் குடுடா காசன்னு நம்மள பாத்து ஒரு சொல் வந்திடக் கூடாது பாத்துக்குங்க. என்ன நான் சொல்றது.”

அவர்கள் அனைவரும் என்னைப் பார்க்க அந்த மிடுக்கான பையன் மட்டும் ஏதோ யோசனையில் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்தவாறு அனைவருக்குமான வணக்கம் போல் வலது கையை மட்டும் பாதி தூரம் மேலே உயர்த்தி இறக்கினேன். அவன் என்னைப் பார்த்தது போலவே தெரியவில்லை. 

அதன்பின் அங்கே அசௌகரியமான ஓர் அமைதி உருவாக அப்பா மட்டும் எதையும் கண்டுகொள்ளாதவர் போல சுவாரசியமாக பல் குத்த ஆரம்பித்தார். நான் சரவணனைப் பார்த்து “நம்ம டோக்கன் எப்போ?” என்றேன்.

அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து ஒரு பெரியவர் “எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகிடும்,” என்றார்.

அதை கேட்டதும் அப்பா சட்டென்று எழுந்து, “அப்படின்னா எல்லாரும் வாங்க ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்,” என்றார். அவர் அதை பாதி வேண்டுதல் போலவும் பாதி கட்டளை போலவும் சொன்னார். எதிர் குழுவில் இருக்கும் அப்பாவின் வயதை ஒத்த ஒருவர் அரைகணம் ஸ்தம்பித்து அங்கு நிலவும் சுமூகத் தன்மையைத் தொடரும் பொருட்டு “வாங்க போலாம்,” என்றார். அப்பா அதிகாரி போல் முன் நடக்க எதிர் குழுவினர் அனைவரும் அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டு பின் சென்றனர்.

அவர்கள் சென்றதும்தான் கவனித்தேன் அக்காவின் போன் இங்கு வந்ததில் இருந்து ஒலித்துக் கொண்டே இருப்பதும், அக்கா எடுத்து எடுத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பதும். அது அத்தான் போல தெரியவில்லை என்றாலும் கேட்டேன், “அய்த்தானா?”

“இல்லை.  அப்பா கடன் வாங்கின ஆட்கள்…”

“அவங்க நேத்து வரைக்கும் என் கூட தான பேசிகிட்டு இருந்தாங்க. உன் கூட என்ன அவங்களுக்கு?”

“அப்பா கிட்ட கேட்டுக்கோ…” என்றுவிட்டு சட்டென்று மௌனமானாள்.

இரண்டு வினாடிகள் எதிர் எதிர் நின்று கண் பார்த்துக் கொண்டோம். அந்த மௌன கணங்கள் விசய சந்தடிகளை அப்போது அள்ளி அள்ளி வைத்தன. இருவருக்கும் இடையே ஒரு மௌனம் வந்து குடியேறியது. அதை உணர்ந்த நான்,  “அந்த ஆள் கையில பைசா இருக்காது. சட்டுனு எழுந்து கூடப் போ…” என்றேன். அக்கா கையில் இருந்த காலிப்பையை எடுத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவர்களுக்குப் பின்னால் ஓடினாள். அவள் நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது.

இதுவரையில் குழப்பிக் கொண்டும் பலவாறு பிரிந்து மோதிக் கொண்டிருந்த மனம் கணப்பொழுதில் வியந்து ஸ்தம்பித்து அசையாமல் நின்று கொண்டது. அப்படி நின்ற மனம் தன்னிலையில் இருந்து ஆழ்ந்து ஆழ்ந்து சென்றது. ஆழ்ந்து சென்ற மனம் சிந்தனையாக அல்லாமல் வெறும் இருப்பாக இருந்தது. சரவணன் தொண்டை செறுமினான். “எதுனா சாப்பிட்டியா டா?” என்றான்.

***

“டேய் உன்னத்தான்.” என்று அவன் அதட்டும்போது ஆழத்திலிருந்து வெளியே வீசப்பட்டவன் போல எழுந்தேன். மீண்டும் அமர்ந்து எதையோ நிராகரிப்பவன் போல தலையை ஆட்டிக் கொண்டேன். “இல்லடா…” என்றேன்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டம் குறைந்து கொண்டு வந்தது. அங்கே நானும் சரவணனும் மட்டும் கூட்டத்தில் தனித்து விடப்பட்டிருந்தோம். அவனைப் பார்த்து மெலிதான தன்னிறக்கமான ஒரு புன்னகை செய்தேன். அதை உள்வாங்கி ஆமோதிப்பவன் போல தலையசைத்து, “எல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும்,” என்றான்.

“உனக்கு எதாவது அலுவல் இருக்காடா?”

“எந்த வேலையா இருந்தாலும் அதை அப்புறமா பாத்துக்கலாம். நீ என்ன பத்தி கவலைப்படாத. முதல்ல இதை முடிக்கலாம்.”

“தேங்க்ஸ் டா.”

சரவணனின் இருப்பு ஒரு உதவிகரமான கைப்பிடி போல் இருந்தாலும் சங்கடமாகவும் இருந்தது. சிறு வயதிலிருந்து நான் சரவணனிடம் என் தீரங்களை நிரூபித்து பழகியவன். இப்போது இந்தச் சூழ்நிலை என்னை வேறு விதமாக கவிழ்த்துப் போட்டிருக்கிறது. ஒருவேளை என்னை அவன் இப்படிப் பார்க்கத்தான் கூடவே இருக்கிறானோ. “இந்த நாள் சீக்கிரம் முடிஞ்சிட்டா தேவலைன்னு தோணுது,” என்றேன். அதையும் அமைதியாக ஆமோதித்தான். 

“இனிமே இந்த ஊருக்கு என்னால வர முடியாது. இஇன்னைக்குததான் கடைசி நாள். இங்க ரொம்ப ஞாபகம் இருக்கு. இந்த இடத்தை விட்டு ரொம்ப தூரமா போயிடணும். இங்கிருந்து போயிடணும்,” 

என் சிறிய வாழ்க்கையின் சாட்சியாக இதுநாள் வரையில் அவன் இருந்திருக்கிறான். என் பரிதாப நிலையை அவனிடம் பந்தி விரிப்பதைத் தவிர இந்த உக்கிர கணத்தை வேறு விதமாக எனக்குக் கையாளத் தெரியவில்லை. முடியவில்லை.

அதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. டீ குடிக்க சென்றவர்களும் திரும்பி வந்தனர். அனைவரும் ஒரே அணி போல் இருந்தனர். 

அப்பா கையெழுத்திட்டார். அந்த மிடுக்கான பையனும் கையெழுத்திட்டான். அவன் பெயர் ரவிக்குமாராம். அப்பா ரவிக்குமாரைக் கையைப் பிடித்துக் கொண்டு ஆசீர்வதித்தார். வாழ்த்தினார். அக்காவிடம் இருந்து காலிப்பை நிரம்பியிருந்தது. அதை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தாள். அப்பாவிடம் இன்முகம் இப்போது இல்லை என்றாலும் வாட்டமான முகமும் இல்லை. என் கண்களைச் சந்திக்கக் கூடாது என்ற பிரியத்தனம் அவரிடம் தெரிந்தது.

நான் சரவணனின் காது அருகில் திரும்பி, “பணத்தைச் சரியாக எண்ணி  வாங்கிட்டாங்களான்னு கேளுடா…” என்றேன்.

“அதை போய் நான் எப்படி டா கேட்க.”

எதிர் குழுவினர் மேலதிக மிச்ச வேலைகளைக் கவனிக்க அந்த அலுவலகத்தின் உள் அறைக்குள் சென்றனர். அக்காவும் அப்பாவும் வெளியே நின்று கொண்டிருந்த கடன்காரர்களின் காருக்குள் ஏறிக் கொண்டதாக சரவணன் பார்த்து விட்டு வந்து சொன்னான்.

“வண்டி எடுத்துட்டுச் சீக்கிரம் அவங்கள ஃபாலோ பண்ணுடா. நான் சொல்லிட்டு வந்துறேன்.” என்றவுடன் அவன் வெளியே ஓடினான். 

பிறகு அங்கே நானும் அந்த ரவிக்குமார் மட்டும்தான் இருந்தோம். 

போயிட்டு வர்றேன்னு சொல்வதா அல்லது வரேன்னு மட்டும் சொல்வதா என்று யோசிப்பதற்குள் அவன், “பத்திர ரசீது வந்ததும் நாம் கிளம்பலாம்,” என்றான்.

“சரிங்க.”

“உன்னோட ஸ்கூட்டி அந்த வீட்ல இருக்கு போல. கையோட வந்து எடுத்துக்கோ.”

“அது அக்காவோடது. அவங்க கிளம்பிட்டாங்க. நான் நாளைக்கு வந்து எடுக்கிறேன்.”

“நாங்க இன்னைக்கே பூட்டீட்டு கிளம்பிடுவோம். இப்பவே எடுத்துக்கிடீன்னா சௌகரியம்.” 

“என்கிட்ட இப்போ வேற வண்டி இல்ல… அதுதான்.”

“என் கார்ல போயிடுவோம். அப்புறம் எந்த எந்த சாவி எது எதுக்குன்னு நீ காமிக்கணுமில்ல.”

அதற்குப் பிறகு எனக்கு வார்த்தை வரவில்லை. என்னுடையது அல்லாத என் வீட்டுக்கு அவர்களுடன் அவர்கள் காரில் நான் இப்போது செல்ல வேண்டும். 

இப்போது அந்த வீட்டைப் பார்க்க எப்படி இருக்கும்? புதிதாக இருக்குமோ? அவர்களுடைய பெரிய காரில் ஒன்பதாவது ஆளாக நான் ஏறிக் கொண்டேன். 

“இங்கிருந்து இரண்டே கிலோ மீட்டர்தான்…” என்றார் ஒருவர்.  “அங்கிருந்து எல்லாமே பக்கம்தான்…” என்றார் மற்றொருவர். 

ஆம்! அங்கு இருந்து எல்லாமே பக்கம்தான். இதோ! எட்டு வைத்தது போல. அங்கிருந்து இங்கு பக்கம். இங்கிருந்து அங்கு வெகு தூரம்.

கார் கிளம்பியது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...