பிரபஞ்ச நடனம்

கூகிள் மேப் செயலியில் மீண்டும் ஒரு முறை சோதனை செய்தேன். நான் வந்திருப்பது சரியான இடம்தான் என அது சொல்லியது. ஆனால், என் முன்னே சாலை நிறைவடைந்து பாலையின் மணல் மேடுதான் இருந்தது. பார்வைக்குச் சாலை மணலினுள் புதைந்திருப்பது போல காட்சியளிக்கவே நான் காரிலிருந்து இறங்கி மணல் மேட்டின் மேலேறிப் பார்த்தேன். சுற்றிலும் இருள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு விடுதி இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. இது துபாயிலிருந்து 100கி.மீ தொலைவில் உள்ள மிலேஹா என்ற பாலைவனம். இங்கு ஒரு தனியார் நிறுவனம் இன்று இரவு வானில் நிகழும் விண்கல்கள் பொழிவைக் காண அமைத்துள்ள ஒரு விடுதியைத் தேடி அவர்கள் தளத்தில் சுட்டியிடப்பட்டிருந்த இடத்தில்தான் நிற்கிறேன். ஆனால், அந்த விடுதி இங்கு இல்லை. அவர்களிடமே தொடர்பு கொண்டு கேட்கலாம் என மொபைலில் எண்ணைத் தேடிக் கொண்டிருந்தபோது, “அஸ்லாமு அலைக்கும்” என்று என் பின்னால் கேட்ட குரலால் திடுக்கிட்டுத் திரும்பியபோது அவன் நின்றிருந்தான். இளைஞன். செதுக்கிய சிலை போன்ற முகத்தில் புன்னகை தவழ, “மிலேஹா விடுதியைத் தேடுகிறீர்களா?” அவனுடைய ஆங்கில உச்சரிப்பிலேயே அவன் ஒரு எகிப்தியன் என்பதைத் புரிந்து கொண்டேன்.

நான், “ஆம்” என்றதும், அவன் “மன்னிக்கவும் நண்பா, நாங்கள் விடுதியை வேறொரு இடத்திற்கு மாற்றிவிட்டோம். நீ அந்த நாற்புற சந்திப்பில் வலதுபுறம் திரும்புவதைப் பார்த்தேன். எங்கள் விடுதிக்கு வருபவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு வருவதில்லை. எனவே, உன்னைத் தேடி வந்தேன்” என்றான்.

“இங்கிருந்து தூரமா?” சந்தேகத்துடன் நான் கேட்க, “இல்லை, அருகில்தான். போகலாம்,” என்றவாறு முன்னால் நடந்தான். அவன் வந்த மின்சார பைக் என் காரின் பின்னால் நின்றதை நான் அப்போதுதான் கவனித்தேன். அவன் முன்னால் போக நான் பின் தொடர்ந்தேன். நான் வலதுபுறம் திரும்பிய சாலை சந்திப்பிலிருந்து நேராக 200 மீட்டர்கள் சென்றதும் விடுதி இருந்தது.

அவன் அந்தத் திறந்தவெளி விடுதியின் வரவேற்பறைப் போன்ற முற்றத்தில் என்னை அமர செய்துவிட்டு, எனக்கான முன்பதிவினை உறுதிச் செய்வதற்காகச் சென்றான். அங்கு ஏற்கனவே பலர் அமர்ந்திருந்தார்கள். பெரும்பாலும் மேற்கத்தியர்கள். குடும்பமாகவும் நண்பர்களாகவும் மெல்லிய குரலில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அமைதியில் அதுவே சருகுகள் உடைவது போல சத்தமாகக் கேட்டது. நான் தனியாக அமர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த திரையில் காண்பிக்கப்பட்ட விண்கற்கள் பொழிவு பற்றிய தகவல்களைப் பார்த்துக் கொண்டிருதேன்.

133 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் அருகில் கடந்து செல்லும் ‘ஸ்விப்ட் டட்டில்’ என்ற வால் நட்சத்திரம், கடந்த 1992ஆம் ஆண்டு பூமியைக் கடந்து சென்றபோது அதன் சுற்றுவட்ட பாதையில் விட்டு சென்ற தூசிகளே விண்கற்கள் பொழிவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வானில் நிகழ்கிறது. ஏனெனில், அந்த மாதங்களில்தான் பூமி அந்த வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்ட பாதைக்கு நெருக்கமாக வருகிறது. ஆனால், நான் இங்கு வந்ததற்கான முக்கிய காரணம் இந்த விண்கற்கள் பொழிவு பற்றிய விளம்பரத்தில் கண்ட இன்னொரு அறிவிப்பு. அது ‘தனுரா நடனம்’.

வரவேற்பு முற்றத்தில் அமர்ந்திருந்தவர்களில் முன்பதிவு உறுதிச் செய்யப்பட்டவர்கள் விடுதியின் பணியாளர்களால் உள்ளே அழைத்துச் செல்லபட்டார்கள். அந்த விடுதியின் சூழலே ஒரு மாயக் காட்சி போல இருந்தது. எங்குமே விளக்குகள் இல்லை ஆனால், சிறிய வெளிச்சம் நிரம்பியிருந்தது. அந்த வெளிச்சத்தின் நிறம் மாறிக் கொண்டே இருந்தது. வெளிச்சம் எங்கிருந்து வருகிறதென கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது. நடைபாதையின் ஓரங்களில் சிறிய விளக்குகளைக் கிடைமட்டமாக அமைத்து அதன் மேல் தரை விரிப்பால் மூடியிருந்தார்கள். தரை விரிப்புக்கும் மணலுக்கும் இடையில் ஒரு விரற்கடை இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி வழியாக வெளிச்சம் பரவி நிலவொளி போல மென்மையாக மணலில் கிடந்தது. நான் நிழல் விழாத அந்த வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவன் அருகில் வந்ததை உணரவில்லை. “நண்பா” என அழைத்தபோதுதான் நிமிர்ந்து பார்த்தேன்.

“உனக்கான முன்பதிவினை உறுதிச் செய்துவிட்டேன். நீ விரும்பினால் உள்ளே சென்று அமரலாம். இங்கு இருப்பதென்றாலும் உன் விருப்பம்,” என்றான்.

நான், “நன்றி” என்றேன். அவன் செல்வதற்காக திரும்பியபோது, எதுவோ கேட்பது போல நாற்காலியில் நான் சற்று முன் நகர, “வேறு ஏதேனும் உதவி வேண்டுமா?” எனக் கேட்டான்.

“தனுரா நடனம் எப்போது நடைபெறும்?”

முதல் முறையாக அந்தக் கேள்வியை எதிர்கொள்பவன் போல அவன் முகத்தில் ஆச்சரியம் படர்ந்தது.

“அதுதான் இறுதி நிகழ்வு. ஏன் கேட்கிறாய்?”

“நான் இங்கு வந்ததே அந்த நடனத்தைக் காண்பதற்காகத்தான்”

“நீ இவ்வளவு ஆர்வம் கொள்ளும் அளவுக்கு அந்த நடனத்தில் என்ன உள்ளது?” எனக் கேட்கும்போதே அவன் முகம் ஆச்சரியத்தில் இருந்து சந்தேகத்திற்கு மாறியது. அங்கிருந்த விளக்கொளியில் அதனைப் பார்ப்பதற்குப் பச்சோந்தியின் நிறமாற்றம் போல இருந்தது.

நான், “அது வரலாற்று சிறப்பு மிக்க நடனம் அல்லவா?” என்றபோது, அவன் என் அருகில் அமர்ந்து, “அப்படி என்ன வரலாற்று சிறப்பு உள்ளது?” எனக் கேட்டான்.

“13ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் சூபி மரபை உருவாக்கிய மெவ்லானா ஜலால் அல் தின் முஹம்மத் ரூமியின் சீடர்களான மெவ்லவிகளால் கடைபிடிக்கபட்ட பல்வேறு மத சடங்குகளில் ஒன்றுதான் இந்த நடனம். அப்போது ‘சூபி நடனம்’ அல்லது ‘சூபி சுழற்சி’ என அழைக்கப்பட்ட அது ஒரு தியான முறையாகவும் பின்பற்றபட்டது. சூபி சகோதரர்களால் அமைக்கப்பட்ட ஸெமாக்களில் மெவ்லவி சட்டங்களுக்கு ஏற்ப இந்நடனத்தை ஆடியவர்கள் டெர்விஷ்கள் என்ற துறவிகள். மனித நேயத்தைப் பரப்புவதற்காக இந்த டெர்விஷ்கள் பிச்சையெடுத்து வாழ்வதையும், பிச்சையெடுத்த பணத்தில் பெரும் பகுதியை ஏழை எளிய மக்களுக்குத் தானமாகக் கொடுப்பதையும் சபதமாக கொண்டவர்கள். இசையின் பின்னணியில் ஒரே இடத்தில் வேகமாக சுழல்வதன் மூலம் தன்னிலை மறந்து, மனித ஆணவம், ஆசைகளைத் துறந்து பிரபஞ்ச இயக்கத்துடன் இணைய முடியும் என அவர்கள் நம்பினார்கள். அந்த நடனத்தின் எகிப்திய வடிவமே இந்த தனுரா நடனம்.”

“ஓகோ…”

நான், “ஒட்டோமான் பேரரசின் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த இந்த மதச்சடங்கு காலப்போக்கில் அருகி, 1925ஆம் ஆண்டு துருக்கியில் முதல் பிரதமராகப் பதவியேற்ற முஸ்தபா கெமெல் அட்டர்க்கின் மதச்சார்பின்மை கொள்கையால் தடை செய்யப்பட்டது. இதனால் டெர்விஷ்கள் சிதறி மத்திய கிழக்கின் சிறிய கிராமங்களில் பதுங்கி இச்சடங்கைக் கடைபிடித்தார்கள். பின் 1956ஆம் ஆண்டு துருக்கிய அரசு வருடத்தின் இரண்டு வாரங்களில் மட்டும் கலாச்சார நிகழ்வாக இந்நடனத்தை நிகழ்த்த அனுமதி கொடுத்தது. இப்போது ஒரு ஆன்மீக சடங்காக இல்லாமல் சுற்றுலா பயணிகளுக்காகவும் விழாக்களிலும் ஆடப்படுகிறது. என் பணிகளுக்கு இடையே இப்போது என்னால் துருக்கி செல்ல முடியாது என்பதால் தனுரா நடனத்தைக் காண்பதற்காக இங்கு வந்தேன்,” என்றேன்.

அவன் யோசித்துக் கொண்டே “இந்த வரலாறெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், உனக்காக ஒரு சிறந்த நடனத்தை என்னால் ஆட முடியும் என நம்புகிறேன்” என்றபோது ஒரு கணம் கழித்தே அவன்தான் நடனம் ஆடப் போகிறான் என்பதை நான் உணர்ந்தேன்.

“நீயா? ஆனால், இந்நடனத்தின் வரலாற்று பின்புலம் பற்றி உனக்கு ஏதும் தெரியாது என்றாயே?” என வேகமாகக் கேட்க, அவன், “அதனால் என்ன? நான் சிறந்த முறையில் பயிற்சி பெற்றுள்ளேன். என்னால் 45 நிமிடங்கள் ஒரே இடத்தில் நின்று சுழல முடியும்” எனச் சாதாரணமாகச் சொன்னான்.

என்னால் அவன் சொன்னதை உள்வாங்க முடியவில்லை. ‘மெய் தரிசனத்தை அடைவதற்கான ஒரு ஆன்மீக சடங்காக, தியான முறையாக ஆடப்பட்ட இந்த நடனத்தைப் பற்றிய எந்த அறிதலும் இல்லாமல் வெறும் பயிற்சியினாலேயே எவ்வாறு ஆட முடியும்?’ என்று எனக்குள் எழுந்த கேள்வியே ஒழுங்கான வடிவம் பெறாமல், “ஆனால் நீ ஒரு இஸ்லாமியன் அல்லவா?” என அவனை நோக்கி எழுந்தது.

 “இல்லை நண்பா, நான் ஒரு எகிப்தியன் ஆனால், கிறிஸ்தவன். அலெக்ஸாண்டரியாவைச் சேர்ந்தவன். வேலை தேடி துபாய் வந்தபோது இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தவன் வேறு வேலைக்குச் சென்றுவிட்டதால் என்னை ஆடச் சொல்லி கேட்டார்கள்.” அருகே வந்து மெல்ல என் காதில், “கூடுதலாக பணம் தருவதாகச் சொன்னார்கள் என்பதால் நானும் சம்மதித்தேன்,” என்றான்.

எதிர்பார்ப்புகள் ஏன் எப்போதும் ஏமாற்றங்களைத் தருகின்றன. எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு நிமிடத்தில் என் மொத்த ஆர்வமும் வடிந்து நான் சோர்வடைந்தேன். என் முகக் குறிப்பை உணர்ந்தவன் போல அவன் என் தோளில் கைவைத்து, “வருந்தாதே நண்பா, நான் சிறப்பாகவே நடனமாடுவேன்,” என்றான்.

 “ஆம். ஆனால் அது உயிரற்றது. பொருளில்லாமல் வெறுமனே சுழல்வது.”

“உனக்கு அவ்வாறு தோன்றலாம். ஏனெனில், நாங்கள் இங்கு ஒருங்கிணைக்கும் வேறு பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பியே பலர் வருவார்களே தவிர பிரத்யேகமாக இந்த நடனத்தை மட்டும் காண யாரும் வருவதில்லை. உன்னைப் போல் சிலர் வரக்கூடும். அவர்களும் நான் இந்த நடனத்தைப் பொருள் உணர்ந்து ஆடுவதாகவே எண்ணுவார்கள்.”

‘என்னால் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் இங்கு வரும் எல்லோரையும் ஏமாற்றுவதாகவே எனக்குத் தோன்றியது. இந்த நடனத்தின் ஆன்மீக பின்னணியும் மெய் தரிசனத்தையும் அறியாத ஒருவன் வெறும் பயிற்சியினாலேயே மேடையேறுகிறான். அவன் நிகழ்த்துவது இயந்திர பொம்மையின் அர்த்தமில்லாத அசைவுகள் போல ஒன்றையே மீண்டும் மீண்டும் பிழையில்லாமல் செய்வது. இந்த நடனத்தின் மூலம் அவன் அடையாளப்படுத்துவது என்னவென்றே உணராமல், கலையென்று இல்லாமல் வெற்று கேளிக்கையாக ஆடுகிறான். எனக்கு அவன் மீது வெறுப்பு ஊறியது. அவன் இங்கிருந்து சென்றுவிட்டால் நல்லது’ என்று சிந்தித்தவாறே தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.

அவன், “நண்பா, என்ன யோசிக்கிறாய்?” என்றான்.

நான் ஒன்றுமில்லை என்பது தலையாட்டிக் கொண்டே அவனிடம், “நீ எங்களை ஏமாற்றுகிறாய் என்று உனக்குத் தோன்றவில்லையா?” எனக் கேட்க,

“இல்லை. ஏமாற்றப்படுவதை அறியாதவரை மனிதர்கள் ஏமாறுவதில்லை என்பதை என் வாழ்க்கை அனுபவம் மூலம் நான் அறிந்திருக்கிறேன். அதுவும் இல்லாமல் நான் நடனம் ஆடுவதன் மூலம் உங்களை மகிழ்விக்கிறேனே பின்னர் அது எப்படி ஏமாற்றமாகும்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

எவ்வாறு இவனால் இப்படி பேச முடிகிறது?தான் செய்யும் தவறை உணராமல் நியாயபடுத்தும் இவனிடம் எப்படிப் புரிய வைப்பது என்ற ஆற்றாமையால் எனக்கு கோபம் வந்தது.

நான் ஆக்ரோஷமாக, “இல்லை. நீ ஏமாற்றுகிறாய். எந்த வகையில் நீ விளக்கினாலும் அதனடியில் ஒளிந்திருப்பது அதுவே. நீயும் அதை அறிவாய் என்பதால் சாமர்த்தியமாக சமாளிக்கவும் செய்கிறாய்” எனக் கத்தினேன்.

அவன் பொறுமையாக, “ஏன் இந்த ஆவேசம் நண்பா? உண்மையாகவே நான் யாரையும் ஏமாற்றுவது போல உணரவில்லை என்றபின், என்னால் உன் கோபத்தை புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான்.

நான் மெல்ல தணிந்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

அவன் என் தோளில் கை வைத்து, “நீ எதையோ போட்டு குழப்பி கொள்கிறாய் என நினைக்கிறேன். இந்த உலகம் புரிந்து கொள்ள மிக எளிமையானது நண்பா. இங்கு நிகழ்பவைகளை அர்த்தபடுத்துவதில் எந்தப் பயனுமில்லை” என அவன் சொன்ன போது விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. அந்த இடமே இருளில் மூழ்கியது. முன்னறிவிப்பின்றி சூழ்ந்த இருளால் மன எழுச்சி அடைந்து அங்கு குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் எழுப்பிய ஆரவாரச் சத்தம் பல திசைகளில் இருந்து ஒலித்தது.

“Let’s fuck everyone” என ஒருவன் சொல்ல, எதிர்வினையாக ஒலித்து அடங்கிய சில சிரிப்பொலிகளுக்குப் பின் யாரோ, “Yes, under the stars” என்றபோது நான் புன்னகைத்து, “On the path of meteors” என நினைத்துக் கொண்டேன்.

“நீ புன்னகைக்கிறாயா நண்பா?” பக்கத்திலிருந்து அவன் குரல் கேட்டது. நான் புன்னகைப்பேன் என்று அவன் ஊகித்து கேட்கிறானா என்ற சந்தேகத்தில் திரும்பி நோக்கியபோது, வானிலிருந்து பொழிந்த மெல்லிய வெளிச்சத்தில் அவன் மிகம் பிசுப்பேரிய கண்ணாடியில் தெரிவது போல மங்கலாக துளங்கி அவன் அங்கு இருக்கிறானா என்ற மாயையை ஏற்படுத்தியது.

“பார்த்தாயா நண்பா. இஇவ்வளவதான் மனிதர்கள். எல்லை மீறுவதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டே இருப்பவர்கள். எல்லை மீறும்போது மகிழ்பவர்கள். நீ கூட சிரித்தாய் அல்லவா” என்றான்.

நான் அவன் சொன்னதைக் கவனிக்காதது போல, “அர்த்தமில்லாமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை,” என்றேன்.

அவன் புரிந்து கொண்டு, “அப்படியானால் சொல். இவர்கள் இங்கு கூடியிருப்பதன் அர்த்தம் என்ன? இந்த விண்கற்கள் பூமிக்கு அருகில் வருவது அறிய நிகழ்வு அல்ல. வருடந்தோறும் நிகழும் ஒன்றுதான். இதைக் காண்பதன் மூலம் இம்மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? பணம் செலவழித்து இவர்கள் இதைக் காண வருவது உண்டு, குடித்து, நண்பர்களுடன் அரட்டையடித்து இவ்விரவைக் கழிக்கத்தான். சிறிது யோசித்து பார், இந்த விடுதி அளிக்கும் வசதிகள் இல்லையெனில் இவர்களில் எத்தனை பேர் விண்கற்களைக் காண ஆர்வம் கொள்வார்கள்.”

கேலி தொனிக்கும் அவன் குரலும் அவன் கேள்வியில் இருந்த உண்மையும் என்னை எரிச்சலடைய செய்தன. ஆனாலும் எங்களையறியாமலே தொடங்கிவிட்ட இந்த விவாதத்தில் இருந்து பின்னடைய என் மனம் தயங்கியது.

நான், “இவை எவருக்கும் பொருள்பட வேண்டுமெனவோ, வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனவோ அவசியமில்லை. இத்தகைய நிகழ்வுகள் மனிதனின் கற்பனையைத் தூண்டுபவை. கனவுகளில் வளர்பவை. கனவுகளும் கற்பனைகளும்தான் மனித இனத்தை இத்தனை ஆண்டு காலம் நிலைக்க செய்து அத்தனை உயிர்களுக்கு மேல் நிறுத்தியவை.”

அவன் என்னை விநோதமாகப் பார்த்தான். “நான் நிகழ்காலத்தில் இவற்றுக்கு அர்த்தம் உண்டா என்று கேட்டால், நீ என்னவோ கனவு, கற்பனை என உளறுகிறாயே நண்பா” எனச் சொல்லி சிரித்தான்.

நான் என்ன சொல்வதென்று புரியாமல் குழம்பி, “உனக்குப் பபுரியவில்லையென்றாள் விடு. நாம் இதை பற்றி பேசுவதை நிறுத்தி விடுவோம்” என அந்த உரையாடலை முடிக்கும் விதமாகச் சொன்னேன்.

அவன் எதுவோ சொல்ல முயன்று பின் அமைதியாக இருந்தான். மென்மையாக காற்று வீசிக் கொண்டிருந்தது. சுற்றிலும் வைக்கபட்டிருந்த குளிர்சாதன பெட்டிகளால் பாலையின் வெம்மையையும் மீறி அந்தப் பகுதியில் மட்டும் காற்று குளிர்ந்திருந்தது. பாலையின் மணல் குழிந்து இறங்கிய குளம் போன்ற பள்ளத்தில் அந்த விடுதியை அமைத்திருந்தார்கள். அது ஒரு தற்காலிக இஇடமதான். வீசும்  காற்றுக்கு ஏற்ப மணல் மேடுகள் மாறுவதைப் பொறுத்து விடுதியை இடம் மாற்றி கொண்டேயிருப்பார்கள். காற்றில் மணல் வழியாமல் இருக்கவும், சிறு உயிரினங்கள் உள் நுழைவதைத் தடுக்கவும் சுற்றிலும் புல்லால் ஆன தடுப்பரண் கட்டி அதனுள் மணலைச் சமன்படுத்தி உணவு பொருட்களுக்காகவும், கழிவறை வசதிக்காகவும் இரண்டு கூடாரங்கள் அமைத்திருந்தார்கள். திறந்திருக்கும் மீதி இடத்தைச் சதுரங்களாக பகுத்து மணலை இறுக்கி அதன்மேல் தரை விரிப்புகளும் சாய்வணைகளும் இட்டு தட்டியால் மறைத்திருந்தார்கள். குளிர்சாதனப்பெட்டி ஒரு மூலையில் இருந்தது. தேநீர் தயாரிப்பதற்கான பொருட்களும், ஹூக்காவும் இருந்தன. வேண்டுமானால் புகைத்துக் கொள்ளலாம். வாரயிறுதி விடுமுறை நாட்களில் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நகரத்தின் சத்தங்களில் இருந்து தப்பி பாலைவன இருளின் அமைதியில் இரவைக் கழிக்க விரும்புவர்களுக்குப் பொழுதுபோக்குடன் கூடிய சிறந்த விடுதி. முதலுதவி வசதிகளும் அவசரகால சேவை வசதிகளும் எப்போதும் தயார் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு பற்றிய எந்தப் பயமும் இல்லை. நான் எழுந்து அவனிடம் விடைபெற்றுக் கொண்டு என் திறந்தவெளி அறையை நோக்கி நடந்தேன். எங்கும் நிறைந்திருந்த மெல்லிய வெளிச்சங்களில் நிழல் அசைவுகளாக மனிதர்கள் தெரிந்தனர். நான் அறையினுள் சென்று தரை விரிப்பில் இருந்த சாய்வணைப்பில் தலை வைத்து படுத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியிருந்தேன்.

உறங்கிவிட்டேன் என்பதை எங்கிருந்தோ என் கனவுக்குள் ஒலித்த ஒரு பெண் குரலைக் கேட்டு விழித்துக் கொண்டபோதே உணர்ந்தேன். அது விண்கற்கள் பொழிவுக்கான நேரம் நெருங்கிவிட்டதை அறிவிக்கும் ஒரு பெண்ணின் குரல். நான் எழுந்து தேநீர் தயாரித்துக் குடித்துவிட்டு மீண்டும் படுத்து வானை நோக்கினேன். ஏற்கனவே நள்ளிரவு ஆகியிருந்தது. விழிகள் இருளுக்குள் பழகி வானில் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. சில நட்சத்திரங்களின் மினுக்கங்களைக் கூட காண முடிந்தது. வானமே கண்விழித்து பூமியைப் பார்ப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டது. மிக அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நட்சத்திரங்களின் தூரம் என் கண்களுக்குள் அசையாமல் நின்றிருக்கும் ஆச்சரியம் என்னை உளம் போங்க செய்தது. நகர்தலே உயிர்களின் அடிப்படை விசை. மொத்த பிரபஞ்சமும் முடிவிலியில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் காலத்தில் நகர்கிறோம், அதனாலேயே மாற்றங்களால் சூழப்பட்டுள்ளோம். ஒரு வகையில் மாறிக் கொண்டே இருப்பதுதான் நம் மீதான காலத்தின் கருணை என்று தோன்றுகிறது. என்னென்னவோ எண்ணங்கள் என்னுள் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஒரு நட்சத்திரம் வானிலிருந்து உதிர்ந்து கீழே விழுவதைக் கண்டேன். ஒளிரும் வைரம் போல அல்லது சுடர்ந்தெழுந்த மின்மினி போல அது என்னை நோக்கி வந்தது. என் உடல் பதற்றம் அடைந்து அனிச்சையாக நான் எழ முயன்றபோது அது இருளுக்குள் மறைந்தது. அதனைத் தொடர்ந்து பல நட்சத்திரங்கள் வானிலிருந்து உதிர்ந்து வான வேடிக்கை போல இருளில் மறைந்து கொண்டேயிருந்தன. விண்கற்களின் பொழிவு ஆரம்பித்துவிட்டது என அறிவிப்பு வந்தபோதுதான் நடப்பது என்னவென்று நான் உணர்ந்தேன். ஏனெனில், விண்கற்கள் விமானம் போல வானைக் குறுக்காக கடந்து செல்லும் என்றே நான் நினைத்திருந்தேன். மாறாக இவ்வாறு மழையைப் போல ஒளிச்சரடுகளாக பூமியை நோக்கி பாயும் என்று நான் கற்பனை செய்திருக்கவில்லை. பொழியும் விண்கற்களால் வானமே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவை கற்கள்கூட அல்ல, பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததுமே எரிய தொடங்கி மேற்பரப்பை அடையும் முன் சாம்பலாகி விடும் விண்வெளியின் துகள்கள். விண்ணின் அம்புகளைப் பூமி தன் கவசத்தால் தடுத்து போரிடுவது போல எனக்குத் தோன்றியது. சுற்றியிருந்த கூட்டத்திலிருந்து ஆங்காங்கே ஆச்சரிய குரல்கள் ஒலித்தன. இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடித்த விண்கற்களின் பொழிவு ஆரம்பித்தது போலவே சட்டென நின்று வானம் மீண்டும் இருளில் மினுங்கிய போது அதுவரை என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த காற்று சீறும் ஒலி என் மனம் உருவாக்கிய மாயமா எனத் தோன்ற பெருக்கெடுத்த குருதியின் சூட்டால் என் உடல் முழுவதும் மயிர் கூச்செரிய எனக்குள் அச்சம் பரவியது. என் உள்ளங்கைகள் வியர்த்து உடல் மெல்ல நடுங்கியது. உண்மையிலேயே விண்கற்களின் பொழிவு நடந்ததா அல்லது ஏதேனும் கனவா என்ற மயக்கம் தோன்றவே நான் வேகமாக எழுந்தமர்ந்தேன். குளிர்சாதனப்பெட்டியை அணைத்துவிட்டு திரும்பி நோக்கியபோது கையில் உணவு தட்டுடன் அவன் வந்து கொண்டிருந்தான்.

புன்னகைத்துக் கொண்டே வந்து உணவை என் முன்னே வைத்துவிட்டு எதிரே அமர்ந்தான். கோழி இறைச்சியில் செய்யப்பட்ட மந்தியும் இரண்டு ரொட்டிகளும் தக்காளியுடன் பச்சை மிளகு சேர்த்து அரைக்கப்பட்ட சட்னியும் ஆட்டுக்கால் சூப்புடன் நறுக்கிய காய்கறிகளும் தட்டில் இருந்தன. ‘குனாஃபா’ என்ற இனிப்பு இன்னொரு சிறிய தட்டில் இருந்தது.

அவனிடம், “நீ உணவு உண்ணவில்லையா?” எனக் கேட்டேன்.

“உன்னுடன் சேர்ந்து உண்ண எனக்கும் விருப்பம்தான். ஆனால், சிறிது நேரத்தில் நான் நடனமாட வேண்டும்” எனச் சொல்லிய அவன் திரும்பி நோக்கி, “தேநீர் குடித்துக் கொள்கிறேன்” என்றான்.

நான் சரி என்பது போல புன்னகைத்தேன். கொதிகலனில் இருந்து சூடான நீரை ஒரு குவளையில் ஊற்றி தேயிலைப் பையை மூன்று நான்கு முறை அதில் முக்கி, சிறிது சீனி, ஒரு புதினா இலையும் இட்டு கலக்கி கையிலெடுத்துக் கொண்டே, “நான் ஆடும் தனுரா நடனத்தின் பொருள் என்ன?” எனக் கேட்டான்.

நான் வெறுமனே அவனை நோக்கியபடி இருந்தேன். இன்னொரு விவாதத்தைத் தொடங்கும் மனநிலையில் நான் இல்லை. அவனுடனான கசப்பான உரையாடலை விண்கற்கள் பொழிவினூடாக மறந்து சகஜ நிலையில் இருக்கும் என்னைச் சீண்டுவதற்காகவே இக்கேள்வியை அவன் கேட்பதாக நினைத்தேன். ஆனால், அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், “ இன்று உனக்காக அதன் பொருளை அறிந்து கொண்டு ஆடுகிறேன்,” என்றபடி மெல்ல சிரித்தான்.

“என்னை ஏமாற்றுவதன் குற்றவுணர்வினால் கேட்கிறாயா?” என நான் கேட்க, அவன் “அப்படி அல்ல, அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்கிறேன். மறுபடியும் சொல்கிறேன், நான் யாரையும் ஏமாற்றவில்லை,” என்றான்.

நான் சரியென்பது போல பெருமூச்சு விட்டு, “ நடனத்திற்காக நீ என்ன ஆடைகள் அணிவாய்?”

“எகிப்திய கலாச்சார முறைப்படி ஒரு துணியைத் தலையில் தலைப்பாகை போல சுற்றிக் கொள்வேன். நீண்ட விரிந்த பல வண்ணங்களிலான அங்கி அணிவேன். அந்த அங்கி இடுப்புக்குக் கீழே இரண்டு அடுக்குகளாக இருக்கும்” என்றான். “கூடுதலாக கையில் பாம்பு அடைக்கும் பெட்டி போல நான்கு பெட்டிகள் வைத்திருப்பாய்” என நான் சொல்ல, அவன், “ஆம், அதை விட்டுவிட்டேன்” என வருந்துவது போல சொன்னான்.

நான் சிரித்துக்கொண்டே, “13ஆம் நூற்றாண்டில் டெர்விஷ்கள் வெண்ணிற அங்கியின் மேல் கருப்பு நிற கோட் அணிந்திருந்தார்கள். கையில் எதுவும் வைத்திருக்க மாட்டார்கள். தலையில் ஒட்டக முடியால் செய்யப்பட்ட தொப்பி அணிந்திருப்பார்கள். அந்தத் தொப்பி மனித ஆணவத்தின் கல்லறையையும், வெண்ணிற அங்கி ஆணவத்துக்கான கவசத்தையும் குறிக்கிறது. நடனம் தொடங்கும்போது கருப்புநிற கோட்டை கழற்றுவதன் வழியாக அவர்கள் உண்மையை அறிவதற்காக மறுபிறப்பு எடுப்பதை அடையாளமாக உணர்த்துவார்கள்,” என்றேன்.

அவன் ஆர்வமாக சிறிது முன்னால் வந்து, “எந்த உண்மையை அறிவதற்காக” எனக் கேட்டான்.

“இறைவன் ஒருவனே என்ற உண்மையை, இறைவனை அணுகி அவன் அன்பை இந்த உலகுக்கு அளிக்கும் ஒரு மதச்சடங்காகவே டெர்விஷ்கள் இந்த நடனத்தை ஆடினார்கள். இப்போது விழாக்களில் பார்வையாளர்களைக் கவர்வதற்காகவும், கேளிக்கைக்காகவும் பல வண்ணங்களிலான அங்கி அணிந்து ஆடப்படுகிறது. ஆனால், அதன் மெய் தரிசனம் நடனம் ஆடுபவர் வெளிபடுத்தும் அசைவுகள் செய்கைகள் வழியாக அவ்வாறே நீடிக்கிறது. பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக சில அசைவுகளைக் கூடுதலாக சேர்த்திருக்கிறார்கள் என்றுகூட சொல்லலாம்.”

“ஓகோ”

“ஆம். தனுரா நடனத்தின் இறுதியில் இரண்டு அடுக்காக இருக்கும் அங்கியில் ஒன்றைக் கழற்றி தலைக்கு மேல் பிடித்தவாறு சுற்றுவது வானையும், பின் அதை சுருட்டி கையில் வைத்து குழந்தையைப் போல நீ கொஞ்சுவது படைப்பையும் குறிக்கிறது,” என நான் கூற “அப்படியென்றால் இடையில் மீதமிருக்கும் அங்கி பூமியைக் குறிக்கிறதா?” என அவன் கேட்க, நான், “ஆம், சரியாக சொன்னாய்” என்றவாறு தொடர்ந்தேன்.

“அது மட்டுமில்லாமல் நீ கைகளில் வைத்திருக்கும் பெட்டிகளில் ஒன்றைப் பார்வையாளர்களுக்குக் காட்டியவாறு சுழல்வது வாழ்க்கையையும், இரண்டு பெட்டிகளைக் காட்டுவது பிறப்பையும் இறப்பையும், மூன்று பெட்டிகள் காலங்களையும், நான்கு பெட்டிகள் பூமியின் நான்கு பருவங்களையும் குறிக்கும். ஆனால், டெர்விஷ்கள் நடனத்தில் இந்தச் செய்கைகள் எதுவும் இருக்கவில்லை”.   

வேறு எப்படி ஆடுவார்கள் என்பது போன்ற அவன் முகக்குறிப்பைப் புரிந்து கொண்டு நான் தொடர்ந்து சொன்னேன்.

“நான் ஏற்கனவே சொன்னது போல டெர்விஷ்களால் கடைபிடிக்கபட்ட பலவிதமான தியான முறைகளில் ஒன்றுதான் சுழன்றாடும் இந்த நடனம். நடனத்தின் தொடக்கத்தில் இறைவன் ஒருவனே என்பதன் அடையாளமாக அவர்கள் இரு கைகளையும் மார்புக்குக் குறுக்காக மடித்து தோள்களைத் தொட்டவாறு நிற்பார்கள். பின் பிரார்த்தனைகள் சொல்லிக் கொண்டே வலதுகையை வான் நோக்கியும், இடதுகையை பூமியை நோக்கியும் விரித்தவாறு ஒரே இடத்தில் நின்று கடிகாரத்தின் எதிர்திசையில் சுழல்வார்கள். அப்போது அவர்கள் கண்களை மூடியிருப்பார்கள்.”

“கண்களை மூடியிருந்தால் உடலின் சமநிலை தவறி கீழே விழக்கூடுமே?” என அவன் சந்தேகமாகக் கேட்க, நான், “இல்லை. விழமாட்டார்கள். அவர்களின் பயிற்சி அத்தகையது. கண்கள்தான் நாம் இந்த உலகத்திற்குள்ளும், இந்த உலகம் நமக்குள்ளும் நுழைவதற்கான வாயில். அதை மூடுவதன் வழியாக அவர்கள் இவ்வுலகைவிட்டு வெளியேறுகிறார்கள்.”

வேட்டைக்காக கூர் கொள்ளும் சிறுத்தையின் சாயல் அவனிடம் வந்தது.

“ஏன் கடிகாரத்தின் எதிர்திசையில் சுழல்கிறார்கள் எனப் புரிகிறதா?”

அவன், “நம் உடலின் செல்களின் இயக்கம் அவ்வாறு இருப்பதால் அத்திசையில் சுழலும்போது எளிதில் களைப்படைய மாட்டோம் என்று என் பயிற்சியாளர் சொன்னார்” என்றான்.

“நம் உடலின் செல்கள் மட்டுமல்ல, நாம் வாழும் இந்தப் பூமியும், அது சுற்றும் சூரியனும், இந்த மொத்த பிரபஞ்சமுமே கடிகாரத்தின் எதிர்திசையில்தான் சுழல்கிறது.” என நான் சொன்னபோது அவன் கண்கள் விரிந்தன.

“அப்படியென்றால்?”

“அப்படியென்றால் இவ்வாறு வேகமாகச் சுழல்வதன் மூலமாக ஏதோ ஒரு புள்ளியில் பிரபஞ்ச இயக்கத்துடன் இணைந்து உன்னத நிலையை அடைய முடியும் என்று டெர்விஷ்கள் நம்பினார்கள். அந்த உன்னத நிலையை அல்லது உன்னத அன்பை இறைவனிடமிருந்து பெற்று மனிதர்களுக்குக் கொடுப்பதன் அடையாளமாகவே அவர்கள் வலதுகையை வானை நோக்கியும், இடதுகையைப் பூமியை நோக்கியும் விரித்திருப்பார்கள். அவ்வாறு அளிப்பதன் வழியாக அவர்கள் மனிதர்களை அன்பால் அரவணைக்கிறார்கள். அன்பு செய்யவே கடவுள் மனிதனைப் படைத்தார் என்ற செய்தியை உலகுக்கு அறிவிக்கிறார்கள். இதைதான் ரூமி ‘எல்லா அன்பும் கடவுளின் அன்பை அடைவதற்கான பாதையே. ஆனாலும், அன்பின் ருசியை அறியாதவர்கள் அதை உணர மாட்டார்கள்’ என்றார்,” என்று நான் கூறினேன்.

அவன், “ஓ, அப்படியானால் நான் இந்த நடனம் வழியாக அன்பை மற்றவர்களுக்கு அளிக்கிறேனா” என சொல்லிச் சிரிக்க நானும் சிரித்தேன்.

அவன் யோசித்துக் கொண்டே, “வியப்பாக இருக்கிறது நண்பா. இருந்தாலும் இந்த அர்த்தங்கள் எல்லாம் அவர்களே ஏற்படுத்திக் கொண்டதுதானே? அவர்கள் நம்பினார்கள் என்பதற்காக அது சாத்தியம் என்று அர்த்தமில்லையே” எனக் கேட்டான்.

நான் சலிப்படைந்து, “எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கைகள் மேல் எழுப்பபடும் கேள்விகளுக்கான பதில் நீயே முயன்று பார் என்பதாகவே இருக்கும். ஆனால், எப்போதுமே ஒளியைத் தேடிய பயணம் இருளிலிருந்து இருளுக்குதான் செல்லும் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்,” என்றேன்.

“சரி நண்பா, நடனத்திற்கு நேரமாகி விட்டது. நான் கிளம்புகிறேன்,” எனக் கைகுலுக்கிவிட்டு நடந்து சென்றான். நான் அவனையே பார்த்தபடி இருந்தேன். தனுரா நடனத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் மட்டும் விளக்குகள் எரிய மேடையின் முன் இடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒவ்வொருவராகச் சென்று அமரத் தொடங்கினர். நான் மெல்ல நடந்து சென்று மேடையின் வலதுபுறமாக இருளில் மறைந்து நின்றேன். பல வண்ணங்களிலான அங்கி அணிந்து கையில் ஏதும் இல்லாமல் அவன் மேடையில் வந்தான். அந்த உடையில் விளக்குகளின் வெளிச்சத்தில் வேறு ஒருவன் போல காட்சியளித்தான்.  எல்லோரையும் நோக்கி புன்னகைத்துக் கையசைத்து விட்டு பின்னணியில் ஒலித்த இசைக்கு ஏற்ப சுழன்று ஆடத் தொடங்கினான். இசையின் தளத்திற்கு ஏற்ப அவனின் வேகம் கூடிக் கொண்டே வந்தது. விரிந்த கைகளுடனும் இடைவ்வரை உயர்ந்த அங்கியுடனும் பம்பரம் போல சுழன்று ஆடிய அவன் கண்கள் மூடியிருந்ததைப் பார்த்தபோது என் இதயம் துடிக்கும் ஓசையை நான் கேட்டேன்.  

7 comments for “பிரபஞ்ச நடனம்

  1. நித்யா மணிகண்டன்
    November 1, 2024 at 2:10 pm

    அருமை👌 தோழர் ரோட்ரிக்ஸ்… ஆழ்ந்த ஒரு அமைதியைத் தொட்ட உணர்வு!

    • Rotricks
      November 3, 2024 at 5:23 pm

      நன்றி

  2. J Mohaideen Batcha
    November 4, 2024 at 11:53 pm

    மிகச்சிறப்பான படைப்பு.

    • Rotricks
      November 13, 2024 at 6:48 pm

      நன்றி

  3. C.Rajan chellappa
    November 10, 2024 at 4:18 pm

    அருமையான மொழி நடை…

    சலிப்படைக்க வைக்காத வார்த்தை பிரயோகம் என உனது மொழிநடை பலப்படுவதிலே மிக்க மகிழ்ச்சி நண்பா…

    ஓர் இனம் புரியா உணர்வு…
    பாதி கனவில் விழித்தது போலான உணர்வு…
    என இக்கட்டுரை என்னை ஆச்சிரியங்களுக்குள் இழுத்துச் செல்கிறது…

    விண்கல் பொழிவு…
    கனவுகளும்..
    கற்பனைகளும்தான் மனித இனத்தின் நிலைக்கச் செய்யும்…
    நகர்தலே உயிர்களின் அடிப்படை விசை…
    என…
    விண்கல் பொழிவை விவரித்த விதம் நேரில் கண்ட உணர்வு…

    எழுத்தாளன் தன் உணர்வை பார்வையாளனுக்கு கடந்துவதோடு மட்டுமில்லாமல்…
    அதன் பரிபூரணத்தை உணரச் செய்வதில் வெற்றியடைகிறான்..

    அப்படிப்பட்ட எழுத்தாளனாக மாறிவிட்டாய் நான் மனதார நம்புகிறேன் நண்பா…

    வாழ்த்துகள்…

    சூஃபி நடனத்தையும்…
    அதன் மேன்மையையும்…
    டெர்விஷ்களை விவரித்த விதம் மிகவும் அருமையாக இருந்தது…

    கலை மக்களுக்கானது…

    அதன் அடிப்படை சாரம்சம் “அன்பு”…

    அன்பைதான்
    உலகினுள்ள எல்லா கலையும் அறிவுறுத்துகின்றன…

    அர்த்தமற்ற அவனது நடனத்தை அவனுக்கு அர்த்தமாக்குவதை உணர்த்தியது உங்களது உரையாடல்கள்…

    எதிர்ப்பார்ப்புகள்
    ஏன்?..ஏமாற்றமே அளிக்கிறது…

    அதையே!..
    இப்பிரபஞ்சமும்
    உணர்த்துகிறது…

    அர்த்தமற்ற அவனது நடனத்தை அர்த்தமாக்குவதற்கே
    உங்களது சந்திப்பை
    இப்பிரபஞ்சம் ஏற்ப்படுத்திக் கொடுத்திருக்கிறது…

    அவன் பணத்திற்காக. நம்மை ஏமாற்றினாலும்…
    அவன் தனுரா
    நடனத்தையும்….
    டெர்விஷ்களையும்…
    அடுத்த தலைமுறைக்கு கடத்த கண்டிப்பாக அவன் தேவை…

    பொய்யால்தான் உண்மையை அடையாளப்படுத்த முடியும்….

    இருளில்தான் வெளிச்சத்தை அடையாளக் காண முடியும்…

    போலிகளால்தான்
    அசல்களை அடையாளப்படுத்த முடியும்….

    அவனது…அன்று
    சந்திப்பு இல்லையென்றால்?…
    இன்று இந்த கட்டுரை இங்கு இல்லை…

    நிகழ்வுகளையும்…
    விளைவுகளைகளும்..
    தொடர்புடையவை!…

    எல்லாமும்…
    ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை…

    அதைதான் பிரபஞ்சம் காண்பிக்கிறது….

    எதை தேடுவீர்களளோ!…
    அதையே!..
    கண்டடைவீர்கள்!…

    நீ எதை தேடிக் கொண்டிருக்கிறாயோ!..
    அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது!..

    என ரூமியின் கவிதைகளாய் பரவசமூட்டுகிறது…
    இக்கட்டுரை…

    வாழ்த்துகளும்…
    நன்றிகளும்…

    நண்பா…

    இப்பிரபஞ்சம்…
    உன்னை ஆசிர்வதிக்கட்டும்…

    – செ.இராசன் செல்லப்பா

  4. Jaikumar
    November 14, 2024 at 10:12 pm

    நம்மையும் நாமறியாமல் இந்த பிரபஞ்சம் பற்றியும், இந்த வாழ்வு பற்றியும் வியப்புடன் சற்றே ஆழமாக சிந்திக்க வைக்கின்ற கட்டுரை. ரோட்ரிக்ஸ் அவர்களின் சிறந்த எழுத்துக்கு நன்றி !
    – ஜெய்

  5. Poyyamozhi
    January 6, 2025 at 11:24 pm

    What a fabulous Work , Superly layered . Enjoyed a lot , expecting such a beautiful work.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...