“இந்த விருதினால் எனது வாழ்வில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை” ஹான் காங்

இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று, உலக அரங்கில் கொரிய எழுத்தாளர்களின் வளமான கதைகளின் மீது கவனத்தை ஏற்படுத்தியுள்ளார் 54 வயது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் (Han Kang).

இலக்கிய உலகம் மிகப் பரந்தது. நோபல் விருது போன்ற அனைத்துலக அங்கீகாரங்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் இலக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்துகின்றன.   இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றதன் வழி, தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் உலகளாவிய இலக்கிய மேடையின் முன்இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பெருமையைப் பெற்ற முதல் ஆசியப் பெண்மணியாகவும் திகழ்கிறார் ஹான் காங். இந்தச் சாதனைக்கு மற்றொரு முக்கியத்துவமும் உள்ளது. 2000ஆம் ஆண்டு அமைதி பரிசு வென்றவரும் முன்னாள் தென் கொரிய அதிபருமான கிம் டே-ஜங்கிற்குப் பிறகு, நோபல் பரிசை வென்ற இரண்டாவது தென் கொரியர் இவர்.

ஹான் காங்கிற்கு 2024ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை அறிவித்தபோது, ‘வரலாற்று அவலங்களையும் மனித வாழ்வின் பலவீனத்தையும் தீவிரமான கவித்துவ மொழியில் வெளிப்படுத்தியதற்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹான் காங்குக்கு வழங்கப்படுகிறது’  என்று  பரிசுக் குழு தெரிவித்தது.

ஹாங் காங் கடந்த நாற்பது ஆண்டுகளாக கொரிய மொழியில் எழுதிவருகின்றார். இலக்கியப் பின்னணி கொண்ட குடும்பத்தில் 1970ஆம் ஆண்டு, தென் கொரியாவின் காங் ஜூ நகரில் பிறந்தார் ஹான் காங்.  கொரிய நாவலாசிரியரான ஹான் சியோங் வூன்னின் இரண்டாவது மகள் ஹான் காங். இவரது அண்ணன் ஹான் டோங் ரிம், தம்பி ஹான் காங் இன் இருவருமே கொரிய நாவலாசிரியர்கள். ஹாங் காங் இதுவரை இரண்டு கவிதை தொகுப்புகளையும் ஆறு நாவல்களையும் எழுதியுள்ளார்.

‘உடலுக்கும் ஆன்மாவிற்கும், உயிரோடிருப்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையேயான தொடர்பைக் குறித்துத் தனித்துவமான உணர்வறிவை அவர் படைப்புகள் கொண்டுள்ளன. ஹான் காங்கின் கவித்துவமான, பரீட்சார்த்த எழுத்து பாணி, சமகால உரைநடையைப் புத்தாக்கம் மிக்கதாக்கியுள்ளது,’ என்று சுவீடன் அகாடமியின் நோபல் குழுவின் தலைவர் ஆண்டர்ஸ் ஓல்சன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ் அகாடமி வழங்கும் இவ்விருதுக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்ஸ் (US$1.1 மில்லியன்) ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் காங், தான் அமைதியாக வாழ்வைத் தொடர்வதாகவும் எழுத்தில் கவனம் செலுத்துவதாகவும் நோபல் பரிசு அறிவிப்புக்குப் பிறகான முதல் நேர்காணலில் கூறியுள்ளார்.

அக்டோபர் 13ஆம் தேதி சோலில் உள்ள தனது வீட்டில், சுவீடனின் பொது ஒளிபரப்பு நிறுவனமான SVTக்கு அளித்த நேர்காணலில், விருதின் பொருள் குறித்துச் சிந்திக்க தனக்கு நேரம் தேவை என்றவர், ஸ்வீடிஷ் அகாடமியில் இருந்து தனது விருது குறித்து வந்த தொலைபேசி அழைப்பை ​​​​முதலில் ஒரு மோசடி என்று நினைத்ததாகச் சொன்னார்.

“எனது மகள் கொண்டாட்டங்களை விரும்பவில்லை,” என்று கொரிய ஊடகங்களிடம் அவரது தந்தை கூறியதை மேற்கோள்காட்டி, கொண்டாட்டத்தை நீங்கள் தவிர்த்தது ஏன்  என SVT அவரிடம் வினவியபோது, இல்லை, நான் என் மகனுடன் கெமோமில் டீயுடன் கொண்டாடினேன்.  நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் என் தந்தை தனது கிராமத்தில் உள்ளவர்களுடன் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறினார். எனக்கு அது பிடிக்கவில்லை, அதனால் நான் அவரிடம், தயவுசெய்து அந்தப் பெரிய விருந்து வேண்டாம் என்று சொன்னேன்,” என தெளிவுபடுத்தினார்.

இந்த விருதினால் தமது வாழ்வில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்ற காங், டிசம்பரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். “விழாவிற்குக் கட்டுரை எழுத வேண்டும் என்று கேள்விப்பட்டேன்,” என்ற அவர், “எனவே, எனது நாவலை நான் அக்டோபர் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் முடித்த பிறகு பிறகு, விழாவில் படிக்க அந்தக் கட்டுரையை எழுத வேண்டும்,” என்றும் அந்த நேர்காணலின்போது கூறினார்.

ஹான் காங் கவிதை வழியாக இலக்கியத்துக்குள் வந்தார். கொரிய மொழி இலக்கியத்தில், சோல் பல்கலைக்கழகத்தில் 1993ல் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் இலக்கிய, சமூக இதழான ‘Literature and Society’ என்ற இதழில் அவரது கவிதைகள் வெளிவரத் தொடங்கின.  அதே ஆண்டில் ‘சியோல் சின்முன்’ இலையுதிர் பருவ இலக்கியப் போட்டியில் ஹான் காங்கின் ‘The Scarlet Anchor’ எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது. 1995ஆம் ஆண்டு ‘A Love of Yeosu’ எனும் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்து வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது.  இது வரையில் 9 நாவல்களையும் நான்கு சிறுகதை தொகுப்புகளையும் ஒரு கவிதை தொகுப்பையும் இரண்டு கட்டுரை தொகுப்புகளையும் ஹான் காங் வெளியிட்டுள்ளார்.

2016இல் அனைத்துலகப் புக்கர் பரிசை வென்ற ‘The Vegetarian’ நாவல் ஹான் காங்கிற்கு அனைத்துலக அறிமுகத்திற்கான திறவுகோலாக அமைந்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது முதல் நாவல் அது. தி வெஜிடேரியன் நாவல் மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது.  இந்நாவலில் தொடர்ச்சியான பயங்கரக் கனவுகளுடன் போராடிய பிறகு, கடமையுணர்வு மிக்க மனைவியான யோங்-ஹே, சமூக விதிமுறைகளை எதிர்த்து செயல்படுகிறார். சைவ உணவை உண்ணுபவராக மாறுகிறார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரது குடும்பத்தினர் கவலைப்படும் அளவுக்கு அவரது மாற்றங்கள் இடம் பெறுகின்றன. மாமிச உணவு விரும்பி உண்ணப்படும் கொரிய சமூகத்தில் சைவ உணவு தெரிவு ஏற்படுத்தும் அதிர்ச்சியினையே நாவல் முதன்மைப்படுத்துகிறது. நாவலில் ஊன் உணவைத் தவிர்க்கும் நாயகியின் முடிவைக் கணவன், கொழுந்தன், அக்கா ஆகியோர் எதிர்கொள்ளும் விதத்தினூடாக ஆணாதிக்கக் கொரிய சமூகத்தை ஹான் காங் விமர்சனம் செய்திருக்கிறார். இந்நாவல் 2023ஆம் ஆண்டு கவிஞர் சமயவேலின் மொழிபெயர்ப்பில் தமிழில் ‘மரக்கறி’ என்ற தலைப்பில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெளி பதிப்பகம் நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் சமயவேல் இந்நாவலைப் பற்றி கூறும் போது, “ஹாங்கின் மனதிலிருந்த அடிப்படை கேள்விகளின் பின்புலத்திலிருந்து இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் பிறக்கிறோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் சாகிறோம்? என்பதோடு மட்டுமின்றி மரணம் பற்றிய பெரிய ஆய்வுதான் இந்த நாவல்.

இந்த பூமிப் பந்தில் உருவாகியுள்ள அனைத்து உயிர்களோடு மனிதர்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார் ஹேன் ஹாங். ‘புல் அமர்ந்து கொண்டே வளர்கிறது. ஆனால் மனிதனுக்கு பல்வேறு போராட்டங்கள்’ என்ற ஜப்பானிய ஹைக்கூ கவிதை போன்று இந்த நாவல் தாவரங்களையும் ஆய்வு செய்கிறது. மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பு வரை பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வாழ வேண்டிய நிலை ஏன் உள்ளது? என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார். புத்த மரபின் அடிப்படையில் இந்த நூலை அவர் படைத்துள்ளார். மேலை நாட்டு தத்துவத்தோடு முரண்படும் மறுப்புக் கோட்பாடு, புத்தக் கோட்பாடு ஹேன் ஹாங்க்கு இருந்த தனிப்பட்ட உளவியல் சிக்கல் இவையெல்லாம் சேர்த்து ஒரு நாவலாக ‘தி வெஜிடேரியன்’ உருவாகி உள்ளது,” என்று கூறுகின்றார்.

2007ல் வெளிவந்த ‘The Vegetarian’ நாவல் லிம் வூ-சியோங் இயக்கத்தில் 2009இல் திரைப்படமானது. அவரே காங்கின் மற்றொரு நாவலான  ‘Scars’ஐ  2011ல் இயக்கியிருந்தார்.

உலக அளவில் கவனம் பெற்றாலும், ‘The Vegetarian’ நூலைப் பள்ளி நூலகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கொரியாவில் நாடு தழுவிய பெற்றோர் குழு ஒன்று கோரிக்கை விடுத்ததுள்ளது.  தேசிய பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு அக்டோபர் 22 அன்று வெளியிட்ட அறிக்கையில், “நோபல் பரிசு பெற்றவரால் எழுதப்பட்டது என்பதற்காக, தீவிரமான,  வன்முறை மற்றும் பாலியல் சித்தரிப்புகள் கொண்ட நூலை தொடக்க, நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளி நூலகங்களில் வைக்கக் கூடாது,” என்று கூறியுள்ளது. இது இளையர்களுக்குத் ‘தீங்கு விளைவிக்கும்’ நூலாக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.  10,000க்கும் மேற்பட்டோர் இந்தக் கோரிக்கையை ஆதரித்து மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

2002ல் வெளிவந்த ‘யுவர் கோல்ட் ஹேண்ட்ஸ்’ (Your Cold Hands), நாவல் கலையில் காங்கின் ஆர்வத்தின் வெளிப்பாடாக அமைந்தது. காங்கின் ‘Greek Lessons’ (கிரேக்கப் பாடங்கள்) நாவல், உளவியல் நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் ஆண் பெண் இருவருக்குள் உருவாகும் காதலை மையமிட்ட நாவல். குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண் உலகத்துடனான தன் தொடர்பை முற்றிலும்  துண்டித்துக் கொள்ளும் அவள் பயன்பாட்டில் இல்லாத கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறாள். பயன்பாட்டில் இல்லாத மொழியால் எவராலும் தன்னைத் தாக்க இயலாது என நம்புகிறாள். அவளுக்குக் கிரேக்க மொழி சொல்லித் தருபவர், மரபு வழியாக வரும் பார்வை இழப்பு நோயிற்கு பாதிப்புக்குள்ளாகிறார். அவருக்குப் பார்வை மங்குகிறது.   இருவரும் பொது களமாக விளங்கும் மொழியையும் சொற்களையும் கொண்டு எவ்வாறு காதல் வயப்படுகின்றனர் என்பதே கதை.

அதிகாரத் தரப்பினரின் அடக்கு முறையைச் சித்தரிக்கும் வகையில்  ‘Human Acts (2014)’  நாவலை இவர் எழுதியிருக்கிறார். 1979ஆம் ஆண்டு கொரியாவின் ராணுவ ஆட்சியர் பார்க் படுகொலை செய்யப்பட்டதும் ராணுவ ஆட்சி வந்தது. அதை எதிர்த்து அணிதிரண்ட தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களின் மீது அடக்கு முறையும் வன்முறையும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1980இல் குவாங்ஜூ நகரில் ஜனநாயகப் போராளிகள் மீது அரசாங்கம் நிகழ்த்திய வன்முறை கொரிய ஜனநாயக வரலாற்றில் படிந்த கரும்புள்ளியானது. அச்சம்பவத்தில் போராளிக் குழுவொன்றின் மீதான அதிகாரத் தரப்பின் அடக்கு முறையைக்  காங்கின் ‘Human Acts (2014)’  நாவல் பேசுகின்றது. இந்நாவல் கதைசொல்லலின் முக்கியத்துவத்தை வெறும் கலையாக முன்வைக்காமல் ஆவணப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. மறைந்துபோகும் நினைவுகளைப் பாதுகாப்பதற்கும் சங்கடமான உண்மைகளை எதிர்கொள்வதற்கும் தூண்டுகிறது. ஒவ்வொரு கதையும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, காயங்களை ஆற்றுவதாகவும் நினைவூட்டுதாகவும் இரு முனையில் செயல்படுகிறது. மனித ஆழ்மனத்தின் நெகிழ்ச்சியையும் பேசுகிறது.

காங்கின் உரைநடை பெரும்பாலும் பரீட்சார்த்தமானது. கவிதையில் புலமை மிக்க அவர் பயன்படுத்தும் கவித்துவ உரைநடை, உளவியல் உரைநடை போன்றவை வாசகர்களுக்கு புது அனுபவமாக அமைகின்றது.   உருவகங்களாலும் படிமங்களாலும் கட்டமைக்கப்படும் அவரது எழுத்துகள் வன்முறை, துக்கம், ஆணாதிக்கம் போன்ற கருப்பொருள்களைப் பேசுகின்றன. 2016ஆம் ஆண்டு ‘The White Review’விற்கு அளித்த பேட்டியில், “விழுமியத்திலிருந்து மிருகத்தனம் வரையிலான மனிதகுலத்தின் பரந்த தளம் சிறுவயதில் இருந்தே எனக்கு கடினமான வீட்டுப்பாடம் போன்று பிரச்சனையாக உள்ளன. எனது நூல்கள் மனித வன்முறையின் இந்தக் கருப்பொருளின் வெவ்வேறு கோணங்கள் என்று கூறலாம்,” என்றார்.

இறுதியாக, “வரலாறு மற்றும் சொற்கள் மூலம் கற்றுக் கொள்ள நமக்கு பல வாய்ப்புகள் உள்ளன, ஆனால் வரலாறு மாறிக் கொண்டே இருக்கிறது. குறைந்த பட்சம் எப்போதாவது  கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். கொலை செய்வதை நாம் நிறுத்த வேண்டும் என்பது நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளவற்றில் மிகத் தெளிவான செய்தியாகும்,” என ஹான் காங் கூறுகின்றார்.

காங் போன்றவர்களின் வெற்றியால், புதிய எழுத்தாளர்களால் உருவாகி வரும் சமகால இலக்கியம் தொடர்ந்து செழிப்படைந்து வருவதை உணர முடிகிறது. இலக்கியம் மாறுபட்ட கதைகளின் மூலம் வளம் பெறுகிறது. தனித்துவமான பண்பாட்டு மரபுகளுக்குள்ளிலிருந்து ஆழமாக வெளிப்படும் குரல்களிலிருந்து படைப்புகளை உருவாக்குவது கட்டாயமாகிறது. மூத்த எழுத்தாளர்களுடன் புதிய எழுத்தாளர்களுக்கான அங்கீகாரமானது, எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் இலக்கிய நியதிகளை மறுவரையறை செய்வதற்கும் வழி வகுக்கிறது. காங் போன்றவர்கள் அனைத்துலக  அரங்கில் கொரிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கான பிரகாசமான எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர். அதே நேரத்தில், அவர்களின் கதைகள் எதிர்கால படைப்பாளிகளுக்குப் புதிய பாதையையும் அமைத்துத் தருகின்றன.

https://www.nobelprize.org/what-to-read-han-kang/

https://pulse.mk.co.kr/news/english/11137449

https://www.bananawriters.com/hankanginterview

ETV Bharat Tamil Nadu

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...