கடலும் கலங்கரை விளக்கமும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் சமூகத்தில் அரசியலில் தனிமனிதரில் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாகத் திகழ்கின்றது. உதாரணமாக, உ.வே.சா நம் பண்பாட்டின் வேர்களைத் தேடிச் சென்றார். நாட்டு விடுதலைக்காக காந்தி போன்ற தலைவர்கள் பின்னால் மக்கள் திரண்டார்கள். விவேகானந்தர், பாரதி போன்றவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆர்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்கள் அமைப்புகளை அமைத்து, சட்டங்களை உருவாக்கியதன் மூலமும் சமூகத்தில் பெண்களின் நிலை, கல்வி, பால்யவிதவைகளின்  வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்.

ஆலயங்களில் சமத்துவம் உருவாகியதும் பெண்கள் கல்வி கற்று பதவிகளில் அமர்ந்ததும் நம் சமூகத்தின் வேரில் நிகழ்ந்த மாற்றங்கள். இந்த இரண்டு மாற்றங்களையும் அடிப்படையாக வைத்து அதனுடன் அந்தக் காலக்கட்ட வாழ்க்கையை இணைத்து எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் ‘நான் லலிதா பேசுகிறேன்’ மற்றும் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ என்ற இரு நாவல்களை எழுதியுள்ளார்.

‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவல், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைக் காலப் பின்னணியாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பால்ய விவாகம் மூலம் சிறுமிகளுக்கு ஏற்படும் வாழ்க்கை சிக்கல்களை  லலிதா தன் வாழ்வின் மூலம் சொல்வதாக நாவல் உள்ளது.

அடுத்த நாவல் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’. இது மதுரை ஆலய பிரவேசத்தை மையமாகக் கொண்டது. அம்பிகா என்ற பத்திரிகையாளரின் வாழ்க்கையும் இணையாக நாவலில் வருகிறது.

அடுத்ததாக ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ என்ற நாவலில் ஒரு பாடகியின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. அதனுடன் சில தனிக் கதைகள் உள்ளன. ஒருவர் ஊர் ஊராக சுற்றுகிறார். அவர் சந்திக்கும் மனிதர்களிடம் காணாமல் போனவர்கள் பற்றிய கதைகளைச் சொல்கிறார். உதாரணமாக நானாசாகிப், வள்ளலார், அஸ்வத்தாமன் போன்றவர்களின் கதைகள். இறுதியில் என்ன ஆனார்கள் என்றால் தெரியவில்லை என்ற பதில் உள்ள கதைகளாக அவை உள்ளன. அதே போல இறுதியில் அந்த ஊர் ஊராக சுற்றும் மாயபிறவியும் கடலில் இறங்கிவிடுகிறான்.

முதல் நாவலான ‘கடலும் வண்ணத்துப்பூச்சியும்’ என்ற நாவலில் ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையும் அவர் எழுதிய ஐந்து குறுநாவல்களின் பகுதிகளும் உள்ளன.

இந்த நான்கு நாவல்களுக்கான விதைகளை எழுத்தாளர் வாழ்க்கையில் இருந்தும், கற்பனையிலிருந்தும், வரலாற்றில் இருந்தும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நான்கு நாவல்களையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அவை தனியர்களையும் மறுக்கப்பட்டவர்களையும் துணை இழந்த பெண்களையும் குடும்ப அமைப்பிலிருந்து விலகியவர்களையும் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டவர்களையும் முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் தற்செயலான மாற்றங்களின்  வழியே நாவல் நகர்கிறது.

இந்த நாவல்களில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆர்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை ஆலய பிரவேசத்தில் முக்கிய பங்கு வகித்த வைத்தியநாத அய்யர், ஆர்.எஸ். நாயுடு,சாந்துப்பட்டர் போன்ற உண்மை நாயகர்கள் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். விதவைகளாக வாழ்ந்து முதன்முதலாக பட்டம் பெற்று பணிக்குச் சென்ற அம்முகுட்டி, லட்சுமி, பார்வதி போன்ற பெண்களின் வாழ்க்கை கதாப்பாத்திரங்களால் பேசப்படுகிறது.  

‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் லலிதா என்ற பால்ய விதவையின் வாழ்வின் வழி வரலாற்று கதாப்பாத்திரங்கள் பின்னப்பட்டிருக்கிறார்கள். முத்துலட்சுமி ரெட்டி  சென்னை மாகாண சட்டச் சபையில் பால்ய விவாகம் பற்றி ஆற்றிய உரை முழுவதும் நாவலில் இடம் பெற்றுள்ளது. லலிதாவைக் காதலிக்கும் நீல்கமல் சுபாஷ் சந்திர போஸின் படையில் சேர்க்கிறான்.  அவனுக்காக காத்திருக்கும்  லலிதாவின் அக உணர்வுகளும்,  தனிப்பெண்ணாக அவளின் புறவாழ்க்கையும், சிஸ்டர் சுப்புலட்சுமி மற்றும் டாக்டர் முத்துலட்சுமியின் உண்மை வரலாற்றுடன் இணைந்து நாவலை  உயிர்ப்புள்ளதாக்குகிறது. பால்யத்தில் கணவனை இழக்கும் அவள் படிப்படியாக  இளமையிலேயே பெற்றோர், தன் கல்விக்கு உதவும் மாமனார், தங்கை, தான் காதலிக்கும் நீல்கமல் என்று அனைவரையும் இழக்கிறாள். காலம் அவளைத் தனியாளாக்கிக் கொண்டே இருக்கிறது.

இந்த நாவலில் ஒரு இடத்தில் ‘ஹோம் எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும். யாராவது படித்து முடித்து வெளியேறினால் தான் இடம் கிடைக்கும்’ என்று லலிதா சொல்வாள். அந்த அளவிற்குக் குழந்தை திருமணம் பெண்களைத் தனியர்களாக ஆக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.  வரலாற்று தகவல்களுக்கிடையில் லலிதாவின் முழு வாழ்க்கையும் வருகிறது. லலிதாவின் வாழ்வின் மூலம் ஒரு பால்ய விதவை பெண்ணின் அகத் தத்தளிப்புகளை உணர முடிகிறது.

‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவியில்’ நந்தினியின் கணவன் வீட்டை விட்டு வெளியேறி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை. இடையில் அம்மா இறக்கும் தருவாயில் ‘நந்தினி வாழ்வில் நல்லது நடக்கும்போது குறுக்கே நிற்காதீர்கள் அவள் மனதைத் தனியாக விடாமல் சங்கீதம் கற்று தரும்படி’ நந்தினியின் தந்தையிடம் சொல்கிறார். நந்தினி கர்நாடக இசை கற்றுக் கொண்டு கோவில் விழாக்களில் பாடிக் கொண்டு  தந்தையுடன் இருக்கிறாள். ஒரு நாள் காலையில் அவள் பாடுவதைத் தெருவில் நடந்து செல்லும் ஆனந்தன் கேட்கிறான். அவளைச் சபாவில் பாட வைத்து தொழில் முறை பாடகியாக அவளை மாற்ற உதவி செய்கிறான். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இருவரும் முதல் திருமண உறவினைப் பிரிந்தவர்கள். கதை மிக இயல்பாக ஒரு சிக்கலுமின்றி ஒரு வாழ்க்கை முன்னேற்ற கதை போல நகர்கிறது. திருமணம் முடிவான பிறகு பக்கத்து ஊருக்கு வந்திருக்கும் சாமியாரைக் காணச் செல்லும் நந்தினி அந்தச் சாமியார் தன் கணவன் என்று  கண்டுகொள்கிறாள். அது அவன் சாயல் கொண்ட வேறொருவராகவும் இருக்கலாம். அதன் பின் நந்தினியிடம் ஏற்படும் மனமாற்றத்துடன் நாவல் முடிகிறது.

இந்த நாவலில் நந்தினியின் கணவனின் இயல்பும் தொட்டுக் காட்டப்படுறது. பூஜிக்கும் அம்பிகையாக தன் மனைவியைக் காணும் அவன் அடுத்த எல்லையில் அவளை வெறும் போகப்பொருளாகப் பயன்படுத்துகிறான். இது இன்று வரை நம் சமூக மனநிலையாகவும் இருக்கிறது. நாவலில் காணாமல் போன கணவனுக்கு இறப்பு சான்றிதழ் வாங்குதல், மறுமணத்திற்குத் தயாராகி  தன் தாலியைக் கழற்றி பாலில் போடுதல் போன்ற நடைமுறைகளை நந்தினி வெகு இயல்பாக செய்கிறாள். ஆனால், தன் கணவனின் சாயலைக் கொண்ட ஒருவரைப் பார்க்கும்போது சட்டென்று அவள் மனம் களைகிறது. அவள் பார்த்தது அவன் கணவனே என்றாலும் கூட, இல்லற பந்தம் விட்டு யாரும் காணாமல் ஓடிப் போன ஒருவனைத் தன் மனதில் இருந்து நகர்த்த முடியாததது எதனால்? சமூகமும் காலமும் ஆழ்மனதில் ஏற்றி வைத்த பாறை அது. அது அவள் மனதை நசுக்குகிறது. வெகு இயல்பாக நிகழும் நிகழ்வுகள் இந்நாவலின் பலமாக உள்ளது. இயல்பாக நடப்பதாலேயே அவை இயல்பாக ஆவதில்லை. மற்ற நாவல்களில் பெண்கள் தங்களின் இருப்புக்காக சமூகத்திடமும் சடங்குகளிடமும் முட்டி மோதுகின்றனர். ஆனால், இந்த நாவலில் நந்தினி தன் ஆழ் மனதிடம் மோதுகிறாள். நந்தினி நாவல் முழுவதும் இதுவரை சுணங்கியிருந்த தன் வாழ்வில் சட்டென்று அனைத்து சிக்கல்களும் சரியாகி வாழ்க்கை இயல்பாவதைப் பற்றிய பதற்றத்தை உணர்கிறாள். அந்தப் பதற்றம் எதையோ எதிர்பார்க்கிறது. அதுதான் இறுதியில் நடக்கிறதோ என்று தோன்றியது.

இந்த நாவலில் வரும் ஊர்ஊராக சுற்றும் மாயப்பிறவி தான் தற்செயலாக சந்திக்கும் மனிதர்களிடம் நானாசாகிப் காணாமல் போனது, வள்ளலார் அறையில் தன்னைப் பூட்டிக் கொண்டது, அஸ்வத்தாமன் இறப்பில்லா சாபம் பெற்று காட்டில் மறைந்தது என்று சில நிகழ்வுகளைச் சொல்கிறான். இறுதியில் அவர்கள்  என்ன ஆனார்கள் என்ற அவர்களின் கேள்விக்குத் தெரியவில்லை என்ற பதிலைச் சொல்லி நகர்கிறான். உண்மையில் சில கேள்விகளுக்குப் பதில் இருப்பதில்லை. அவன் ஏன் ஓரிடத்தில் நிலைத்து வாழ்வதில்லை? என்பதும் உளவியல் புதிர். விவேகானந்தர் பாறையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் கடலுக்குள் சென்று மறைகிறான்.  விளங்கிக்கொள்ள முடியாத மானுட மனதின் மாயம் அதில் உள்ளது. இந்த நாவலில்  கடலில் சென்று மறைவதைப் போல எங்கள் ஊர் அருகில் உள்ள கொல்லிமலையில் சென்று மறைந்தவர்கள் கதைகளைக் கேட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து எங்கள் தெருவில் பேரப்பிள்ளை மீது அதீத பாசம் கொண்ட தாத்தா ஒரு நாள் இப்படிக் காணாமல் போனார். ‘ஏன் பெரும்பாலும் ஆண்கள் காணாமல் போகிறார்கள் … பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? அவர்கள் வெளியேறுவது எதிலிருந்து? சட்டென்னு வாழ்க்கை சாரமில்லாமல் ஆகிறதா?’ என்ற கேள்விகளை எழுப்பும் நாவலாக இந்த நாவல் உள்ளது. இந்த நாவல்  அன்றாட சராசரி வாழ்க்கை தளத்தில் உள்ள நாவல். ஆனால், வாழ்க்கை பற்றிய துணுக்குறலையும் மனத்தின் மாயம் பற்றிய பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. நாவல் விரிந்த கடலுடன் முடிகிறது.

நந்தினியின் கதாப்பாத்திரத்தின் அடுத்த நகர்வு ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவலில் அம்பிகாவிடத்தில் நடக்கிறது. நந்தினி போல அல்லாமல் அம்பிகாவின் மேல் மனம் மட்டுமல்ல  ஆழ் மனமும் தங்குதடையற்றது.  ஆலய நுழைவு போராட்டம் ஒரு அலையாக எழுந்து துடியாக நடந்து கொண்டிருக்கிறது.  பத்திரிக்கையாளராக பணியாற்றும் அம்பிகா ஆலயப் பிரவேசத்தை நேரில் பார்த்து எழுதுகிறாள். எட்வர்ட் ஜென்னர் என்ற  பிரிட்டிஸ்காரரைக் காதலிக்கிறாள். தாய், தந்தை, சமூகத்தை எதிர்கொள்கிறாள். ஒரு பத்திரிக்கையில் பணி புரியும் அவளுக்குப் பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, விடுதி என்று பல கனவுகள் இருக்கின்றன. மதுரை ஆலய நுழைவைப் பின்புலமாக்கி சங்கரலிங்க நாடரின் வாழ்க்கையும் அம்பிகாவின் வாழ்க்கையும் சொல்லப்படுகிறது. இந்தியா விடுதலை பெற்றபோது தமிழகத்திலிருந்து வெளியேறி தன் கணவனின் நாட்டிற்குச் செல்கிறாள். இதில் அம்பிகாவிற்குப் புது மாற்றங்களை ஏற்றுகொள்வதில் பெரிய சஞ்சலங்கள் இல்லை. கனவுகளை நோக்கிய திட்டமிடல்களும் அதை நடைமுறைபடுத்தும் வழிமுறைகள் மட்டுமே அவள் எதிரில் நிற்கின்றன.

‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவல் எழுத்தாளரின் முதல் நாவல். இதில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் சிறுபருவத்தில் எதார்த்தமாக கிடைக்கும் கல்வியும் உதவியும் அவர் வாழ்வை மாற்றி அமைக்கின்றன. அவர் வாழ்வின் ஆழமாக மாற்றங்களை நிகழ்த்திய மனிதர்களை, நிகழ்வுகளை வண்ணத்துப்பூச்சிகளாக நினைத்துக் கொள்கிறார். உதாரணத்திற்கு, அவருக்கு ஆங்கில அகராதி பரிசளிக்கும் ரெஜினா ஒரு வண்ணத்துப்பூச்சியாக அவர் மனதில் இருக்கிறார். அவரைப் போலவே தாய் தந்தையற்ற வசந்தியைத் திருமணம் செய்து கொண்டாலும் அவருக்குள் உள்ள சோகம் அவளில் பிரதிபலிப்பதால் அவரால் இயல்பாக வாழ முடியாமல் விவாகரத்து செய்கிறார். இந்த உளவியல் புதிரானது. தன்னைப் போலவே சிரமப்படும் ஒருவருடன் இயல்பாக வாழ முடியாத தன்மை வியப்பளிக்கிறது. அவர் அவருள் உறையும் தன்னையே வசந்தியில் காண்கிறார். அவருக்குத் தேவை ‘தானல்லாத’ ஒருவர்.  அவர் தன்னைப் போல உள்ள ஒருவரிடமிருந்து மகிழ்ச்சியைப் பெற முடியாமல் போகிறது.

எழுத்தாளர் தமது ஒவ்வொரு குறுநாவலிலும் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு காலக்கட்ட வாழ்க்கையைச் சித்தரித்து மீதியை வாசகர் யூகத்திற்கு விட்டுச் செல்கிறார்.  ‘ஆதித்ய சிதம்பரம்’ குறுநாவல்கள் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு “இங்கே எல்லாமே தெளிவாக சொல்லிடனும் எதுவுமே மிச்சம் வைக்கக்கூடாது”என்று சொல்லிச் சிரிக்கிறார்.

நாம் அதையே சுரேஸ்குமார இந்திரஜித்தின் படைப்புலகிற்கான வடிவமாக எடுத்துக்கொள்ளலாம். நாவல்களை வாசித்து முடித்தப்பின் எனக்கு என்னுடைய கல்லூரி Hint notes எழுதும் ‘நோட் புக்’ நினைவிற்கு வந்தது.

தேர்வுக்குப் படிக்கும்போது இறுதியாக அந்த ‘நோட் புக்’தான் கைகளில் இருக்கும். முழு பாடத்திட்டமும் குறிப்புகளாக இருக்கும். அது போல இந்த நாவல்கள் தான் கொண்ட களங்களை, கதைகளை, கதாப்பாத்திரங்களை, உணர்வுகளைக் குறிப்புகளாக்கி வைத்திருக்கிறது.

களம் ஒரு கதாப்பாத்திரமாக விரியவில்லை. கதையும் விவரணைகள் இன்றி சுருங்கச் சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்களின் கோட்டுச் சித்திரங்களே உள்ளன. உணர்வுகளைக்கூட எழுத்தாளர் தொட்டுக்காட்டி நகர்ந்துவிடுகிறார்.

கலெடாஸ்கோப்பை திரும்பும்போது சில வளையல் துண்டுகள் பலப்பலவாக பெருகி வருவதைப் போல நம் கற்பனையில் விரிக்க வேண்டிய சில வரலாற்று துண்டுகளை அந்தக் காலக்கட்ட வாழ்க்கையுடன் இணைத்து நம் கைகளில் தருகிறார்.

வாழ்வின் தன்னிச்சயற்ற தன்மை மீதான அலைகழிப்பு நாவல்களில் உள்ளது. குடும்ப அமைப்பின் வன்முறை, குடும்பம் இல்லாதவர்களின் வாழ்க்கை, கைவிடப்பட்டவர்களின் வாழ்க்கையைக் கூறும்போது உணர்வுகளைக் குறிப்புகள் போலவே கையாள்கிறார். மூன்று நாவல்களுக்குப் பிறகு நான்காவது நாவலாக ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவல் அவர் கையை மீறி அக உணர்வுகளின் தத்தளிப்பாக மாறியிருக்கிறது.

இதை யோசிக்கும்போது தனிப்பட்ட முறையில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்  ஐம்பதுகளில் பிறந்த தலைமுறையின் இயல்பு பற்றிய எண்ணம் வந்தது. அடிப்படையில் அவர்கள் நேருயுக லட்சியவாத தலைமுறை. அந்த இயல்பைச் சுரேஸ்குமார இந்திரஜித்தின் நாவல்களில் உணர்கிறேன். எவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் நாவலில் கசப்பு இல்லை. உத்வேகமும் லட்சிய வேகமும் கனவுகளும் உள்ள கதாபாத்திரங்கள்.

லட்சியவாத காலக்கட்டத்தின் இயல்பும் தற்செயல்களால் ஆன வாழ்க்கை எதார்த்தமும் கலந்த புனைவுகள் என்று இந்த நாவல்களைச் சொல்லலாம். லலிதாவிற்கும் நந்தினிக்கும் ரெஜினாவிற்கும் அம்பிகாவிற்கும் அவரவர்களுக்கான லட்சியங்கள் உள்ளன. முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

சில விஷயங்களை மிகக் கவனமாக செய்யும்போது கலையாகிறது. உதாரணத்திற்கு, சிற்பக்கலை அப்படியான ஒன்று. அது போல இந்த நாவல்களில் தற்செயல்கள் கவனமாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல்களை ‘தற்செயல்களின் கலை’ என்று சொல்லலாம்.

மேலும் இந்தப் படைப்புலகம் எங்கெங்கே கலையாகிறது என்று சில உதாரணங்கள் மூலம் சொல்லலாம்.

வாசிக்கும் நம் மனதில் சில விஷயங்களை இந்த நாவல்கள் வேறு கோணத்தில் படிமங்களாக விட்டுச் செல்கின்றன.

இந்தப் புனைவு களத்தில் எழுத்தாளர் கடலைக் காட்டும் விதம் அல்லது அவர் கடலை உணரும் விதம் நாம் உணரும் கடலில் இருந்து மிகவும் மாறுபட்டது. கடலில் இருந்து தள்ளியிருக்கும் நாம் அதை கனவு வெளியாக உற்சாகமான அலையடித்தலாக அல்லது அலைகழிப்பாக உணர்கிறோம். ஆனால், இங்கு புயலால் ஊர் அழிந்து  பட்டினியுடன் உணவுக்காக சிறுவன் ஒருவன் கை நீட்டும் இடமாக, ஊர் சுற்றி ஒருவன் சென்று மறையும் இடமாக காட்டப்படுகிறது. நாவலின் இறுதியில் எழுத்தாளர் ஆதித்த சிதம்பரம் மன நிம்மதிக்காக  கடல் முன் சென்று அமர்கிறார்.

நாவல்களில் இயற்கை வர்ணணைகள் இல்லை. அதற்கு மாற்றாக ஏதுமற்ற கடல் ஒரு படிகம் போல நிற்கிறது. அது எப்போது வேண்டுமாலும் வெடித்து சிதறலாம், பேரலைகளை உண்டாக்கலாம் இல்லை அப்படியே வழக்கமான உள்ளார்ந்த அசைவுகளுடன் இருக்கலாம்.

‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலை  முடித்ததும்  ‘ஐஸ்ஹவுஸ்’ நினைவில் படிந்திருந்ததை உணர முடிந்தது. ‘ஐஸ்ஹவுஸ்’   பிரிட்டிஷ் இந்தியாவில் ஐஸ்கட்டிகளை பாதுகாப்பதற்காக கடற்கரையில்  கட்டப்பட்ட வியாபாரக் கிடங்கு.  ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் வரும் ‘ஐஸ்ஹவுஸ்’ ஒரு குறியீடு போல மனதில் நிற்கிறது. முதல் தலித் தொழிலாளர் புரட்சி நடந்த இடம், விவேகானந்தர் போன்ற மாபெரும் துறவி தங்கி பேசிய இடம், தலைமழிக்கப்பட்டு எங்கோ வீட்டின் புழக்கடையில் ஒரு பொழுது உண்டு வாழ்க்கையே இல்லாமல் ஆகியிருக்கக்கூடிய  பால்ய விதவைகள், தங்கள் எதிர்காலத்தைக் கல்வியின் வெளிச்சத்தில் காணும் இடமாக இருந்திருக்கிறது. பெண்கள் ஆசிரிய பயிற்சி பள்ளியின் விடுதியாக இருந்திருக்கிறது. நம் லட்சியவாத பிம்பமான விவேகானந்தரின் நினைவகமாக இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கிறது. படிகம் போன்ற கடலுக்கு முன் ஒரு சாட்சியாக ஒரு கலங்கரை விளக்கம் போல அது மனதில் நிற்கிறது.

காவிநிற மடிப்புடவை மனதை விட்டு அகலவே இல்லை. ஒரு மனித வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புழக்கடையில் தள்ளும் வலிமை கொண்டது. இதுபோலவே வெள்ளை நிற புடவைக்கும் சென்ற தலைமுறை வரை வலிமை இருந்தது. அது மெல்லிய வண்ணங்களில் பூப்போட்ட புடவையாக ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில்  மாறுவது ஒரு தரிசனம்.

இவர் படைப்புலகம் கதைகள் வழியே மட்டுமே நீண்டு செல்கிறது. நம் வாய்மொழிக்கதைகள், கூத்துகள் போல கதைகளை மட்டும் கொண்ட கதைகள்.

தெருக்கூத்தில் முதலில் கேட்கப்படும் கேள்வி, “ஒரு கதை சொல்லட்டுமா?”என்பது. ஆனால், அதில் அத்தனை கதைகள் சொல்லப்படும். நம் முன்னால் நின்று நம் மனதை விரிப்பார்கள். அர்ஜுனன் பிரதாபங்களைக் கொண்ட ஒரு கூத்தில் அரசகுமாரிக்கு அவள் தோழி கதை சொல்லத் துவங்குவாள். அவள் முன்னால் தாமரை  மொக்குகள் நிறைந்த தாம்பாளம் இருக்கும். கைகளில் உள்ள வாழைநாரில் ஒரு பூவை வைத்து ஆற்று மணலை எண்ணினாலும் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது என்று முதல் கதையைத் துவங்குவாள். இடையில் விடுகதைகள் போடுவாள். கூத்துப் பார்ப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும். பார்வையாளர்களுக்குக் கேள்விகளும் உண்டு.  மாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு நாளை மீண்டும் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவாள். அவள் சொல்லாமல் விட்ட இடங்கள் என்னவாக இருக்கலாம், அர்ஜூனின் லீலா பிரதாபங்கள் என்னவாக இருக்கும் என்று தன் கற்பனையை இளவரசி கிளியிடம் சொல்வாள். அது போன்ற அனுபவம் இந்த நாவல்களை வாசிக்கும்போது ஏற்படுகிறது. நம் மரபின் கதைசொல்லல் என்ற அழகியலின் சாயலுடன் நவீன மொழிதலும், நவீன சிந்தனையும் இணைந்த படைப்புலகம் இது.

எப்பொழுதும் மனிதனுக்குள் தற்செயல்கள் மீதான பதற்றமும் கேள்விகளும் உண்டு. அதுவே நிலையாமையை உணர வைக்கிறது. அந்த நிலையாமை மனிதனுக்குள் அச்சமாக, சிந்தனையாக, தேடலாக, ஞானமாக மாறுகிறது. முதல் நாவலின் இறுதியில் கடற்கரையின் அமர்ந்திருக்கும் எழுத்தாளர்  ஆதித்த சிதம்பரம் கடலலைகளின் மீது பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் அலைகளில்  மூழ்கிவிட வாய்ப்பிருக்கிறது என்று பதற்றப்படுகிறார். இந்தப் பிரபஞ்சத்தில்  வண்ணத்துப்பூச்சிகளும் கடலும் காலத்தின் கைகளில் தற்செயலானது என்ற பதற்றம் அவருக்கு. ஆனால், அவை தங்கள் சிறகுகளின் வலிமையால் அந்த அலைகளைப் பறந்து கடந்து கரையைத் தாண்டி பறந்து மறைகின்றன. தற்செயல்களின் அலைகளை எதிர்கொண்டு பறக்கும் மனிதனின் வல்லமை வெளிப்படும் நாவல்களாக இந்த நாவல்கள் உள்ளன.

எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் அவர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...