பாட்டு என்பது மொழியின் உச்ச வடிவம். ஒரு மொழியானது வளப்பத்தையும் அதன் முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைவது பாட்டு வடிவத்தில்தான். தன்னைப் பற்றியும் தன்னைச் சார்ந்துள்ள சமூகத்தையும் இயற்கையையும் சொற்செறிவுடன் பண்தொடுத்து அணிப்பூட்டி மொழியில் அழகுப்பட தொடுப்பதே பாட்டு.
சொல் நயம், பொருள் நயம், உணர்ச்சிச் செறிவு, சுதந்திரப் போக்கு, கற்க கற்க முடிவில்லா புதுச்சுவை தருதல் போன்றவைக் கவிதை இயல்புகளாகக் கூறலாம். இவையோடு சேர்த்து கருவும் உருவும் பாட்டின் வகைகளை வரையறுக்கின்றன.
சங்கப் பாட்டு தமிழின் முதல் இலக்கிய வடிவம் எனக் கூறப்படுகிறது. ஒரு நாடு அல்லது சிற்றூர் அரசர்களின் புலவர் குழுக்கள் சேர்ந்த ஒட்டுமொத்த அமைப்பாகவே சங்கம் கருதப்படுகிறது. சங்க காலப் பாடல்கள் பெரும் பகுதி கற்பனை செறிந்தவை என்றும் அவை அக்காலத்தே வாழ்ந்த மக்களின் உண்மை தன்மையை விளக்கவில்லை என்று கூறுவோறும் உள்ளனர். இருப்பினும், செம்மையானதொரு வாழ்வியல் அமைப்புக் கொண்ட காலத்தின் பதிவு அது என்று கூறும் ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். நிலத்தை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் அகம் மற்றும் புற வாழ்க்கையின் மறு பதிப்பாக சங்க இலக்கியம் அமைகிறது. அக வாழ்க்கையில் காதல், கற்பு, குடும்ப அமைப்பு , குல வழக்கம், ஆண் மற்றும் பெண்களின் இயல்பு, ஒழுக்கம் போன்றவைப் பாடப்பட்டன. புற வாழ்க்கையில் வீரம், புகழ், கொடை, நாட்டுப் பற்று போன்றவைப் பாடப்பட்டன.
சங்கப் பாடல்களின் தனிச் சிறப்புகளாக தன்னுணர்ச்சி, தன்மை நவிற்சி, நாடகத் தனிநிலைக் கூற்று, இயற்கை புனைவு, பொதுமை பண்பு, அறவுணர்வு, உலகியல் அறிவு ஆகியவை அமைகின்றன. இத்துணை இலக்கியச் சிறப்புகள் அமைந்து சங்கப் பாடல்கள் தனித்துவம் பெற்று மிளிர்கின்றன. இவைதான் சங்கப் பாடல்கள் கவித்துவத்தின் தருணங்களை வியந்து நோக்கச் செய்வதோடு கவிச் சுவையின் உச்சத்தையும் உணர்த்தின.
இத்தகைய சங்கப் பாடல்கள் நம் உயர்கல்விக் கழங்கங்களில் ஆய்வுப் பொருளாகும்போதும் பாடசாலைகளில் பாட்டுக் கருவியாகும்போதும் கவித்துவக் குலைவுகள் ஏற்பட்டு வெறும் அறிவுரை களங்களாகவும் மன்னர் புகழுரைக்கும் புகலிடமாகவும் பண்பாட்டு விழுமியம் பேசும் உரை களங்களாகளாக மட்டுமே இயங்குகின்றன. இந்த நிலை சங்க இலக்கியப் பாடல்களின் முழுமையான இனிமையைச் சீர்குலைத்ததோடு அதை நுகர்வோர் மத்தியிலும் சோர்வை ஏற்படுத்தி விடுகிறது.
அண்மையில் நடந்த வல்லின இலக்கிய முகாமில் சங்க இலக்கிய அமர்வு இந்த அபத்தமான இலக்கியப் பயிற்சியைச் சுட்டிக் காட்டியது. மேலும், சங்க இலக்கிய நுகர்ச்சிக்கான சரியான முறையினைத் தமிழ்நாட்டு எழுத்தாளர் ராஜகோபாலன் மிகச் சிறப்பாக விளக்கி வழிகாட்டினார்.
சங்க இலக்கியப் பாடல்களை வாசிக்கும் முறை, அதன் பொருளை உணரும் விதம், படிமக் காட்சிகளின்வழி வாழ்க்கையின் அறம், இயற்கை புனைவுகளின் நுட்பம் எனப் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த அமர்வின் முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப் பாடல்கள் குறித்துச் சில பங்கேற்பாளர்கள் தங்களின் புரிதலை முன்வைத்தனர். அவர்களின் படைப்பில் எழுந்த குறைபாடுகளை முறைப்படுத்தும் விதமாகத்தான் எழுத்தாளர் ராஜகோபாலனின் வழிகாட்டல் அமைந்திருந்தது.
சங்கப் பாடல்களை அசை பிரித்துப் படிக்கும்போது சொல்லுடைப்பு ஏற்பட்டாலும் அவற்றை முழுச் சொல்லாக உச்சரிக்கும் வாசிப்பு நுட்பத்தையும் விளக்கினார். சங்கப் பாடலின் வழக்குச் சொற்கள் நாம் இன்று பயன்படுத்தும் சொற்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதனைப் பொருளுணர்ந்துகொள்வதென்பது சவால் மிக்கது. தொடர் வாசிப்பின் வழியும் சங்க இலக்கிய அகராதிகள் வழியும் இவ்வாறான சிக்கலைக் கையாள முடியும் என்றார். மேலும், சங்கப் பாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவுரைகள் பெரும்பாலும் பாடல்களின் நுட்பத்தை விளக்குவதில்லை. மாறாக பாடலுக்கான நேரடி பொருள் விளக்கமாகவே அமைந்து விடுகிறது. இது சங்கப் பாடல் நுகர்வோர் மத்தியில் போதாமைகளை ஏற்படுத்தி முழுமையாக அறிவு பெறுவதைத் தடை செய்கிறது.
அடுத்தாக சங்க இலக்கியப் பாடல்களின் படிமக் காட்சிகளில் மறைந்திருக்கும் வாழ்க்கை தருணங்களையும் அதன் அழகியல்களையும் விரிவாக விளக்கினார். பொதுவாக இந்த இடத்தில்தான் நாம் சங்க இலக்கியப் பாடல்களின் கவித்துவத்தைத் தவறவிட்டு வெறும் மொண்ணையான புரிதலோடு பாடல்களைக் கற்றுக் கொள்கிறோம். வாசிப்பிலும் பொருள் அறிவதிலும் காட்சி நயத்திலும் ஒருசார் நிலையில் நின்று வாழ்வியல் அறிவுரையாக மட்டுமே புரிந்து கொண்டு சங்க இலக்கியப் பாடல்களைக் கடந்து விடுகிறோம்.
மதுரைக் காஞ்சியில் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய சங்கப் பாடல் பயிற்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பாடல் பங்கேற்பாளரால் முழுமையாக வாசிக்கப்பட்டு, வாழ்க்கையின் நிலையாமையை என்ற அறக் கருத்தை இப்பாடல் முன்வைப்பதாக அவர் கூறினார். இதுவே, கல்விக் கழகங்களின் அபத்தமான பயிற்று முறை என்பதை வலியுறுத்திப் இப்பாடலில் தவறவிட்ட கவித்துவத் தருணங்களை விளக்கித் தெளிவுப்படுத்தினார் எழுத்தாளர் ராஜகோபாலன். ஒவ்வொரு அடியாக விளக்கி அதற்குள் மறைந்திருந்த மனித வாழ்க்கை முறை, படிமம், உள்ளுறை, உவமம் போன்றவற்றை எடுத்துச் சொல்லும்போது அச்சங்கப் பாடல் பரப்பு குறுகிய புரிதல் எல்லையைக் கடந்து வாசகனின் பார்வையில் விரிந்து வியப்புக்குள்ளாக்கியது.
இப்பாடலில் பாண்டிய நெடுஞ்செழியனின் வீரத்தையும் செல்வ செழிப்பையும் கொடை பண்பையும் புகழ்ந்துரைத்து இறுதியில் இவையாவும் காலபெருவெளியில் நிலையற்றது என்பதை உணர்த்துகிறார் புலவர் மாங்குடி மருதனார். பாடலின் இறுதியில் ‘திரை இடு மணலினும் பலரே உரை செல – மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே’ என்ற அடிகளில் புலவர் உலகின் நிலையாமையைக் காலத்தின் குரலாக முன்வைக்கிறார். இதுவே இப்பாடலின் கவனிக்கத்தக்க இடம் என்று சுட்டிக்காட்டினார் எழுத்தாளர் ராஜகோபாலன். எத்துணைச் செல்வம், புகழ் சேர்த்தாலும் அனைத்தும் காலம் எனும் பெரும் ஆற்றலிடம் அடங்கிவிடும் என்றார். பல ஆயிரம் மன்னர்கள் உன்னைப் போல் ஆண்டு தீர்த்து நிலையற்றுப் போயினர் என்ற செய்தியைக் காலத்தின் எச்சரிக்கையாகப் புலவன் முன்வைக்கிறான் என்ற இடம்தான் இப்பாடலில் நாம் தவிறவிட்டத் தருணம் என்பதையும் விளக்கினார். வெறும் மன்னர் புகழ் நிலையற்றது என்ற செய்தியிலிருந்து விலகி காலத்தின் பேராற்றலை முன்வைத்து பாடலை முடிக்கின்றார்.
மேலும் இப்பாடலில் வாசிப்பில் தவறவிட்ட இன்னொரு இடத்தையும் சுட்டிக்காட்டுகிறார். அறம் போற்றும் மன்னர்களின் போற்றத்தக்க பண்பினையும் உலக நலம் போற்றும் புலவர்களின் நடுநிலைத்தன்மையும் இப்பாடலின்வழி தெளிவுப்படுத்துகிறார். தலையாலங்கானத்துப் போரில் வென்ற மன்னனின் நில வளம், பொருள் பலம், புகழ் ஆகியவற்றைப் புகழ்ந்து பாடி இறுதியில் இவையாவும் நிலையற்றது; “பாண்டியா உன் புகழ், செல்வம், கொடை நிலையில்லாதது” என்று இழிந்துரைக்கும் புலவருக்குப் பரிசளிக்கும் குணம் கொண்ட பாண்டியனின் பண்பையும் இப்பாடலில் நாம் உணர வேண்டும் என்றார். அதே வேளை புலவன் என்பவன் வெறும் பரிசுக்காகப் பாடுபவன் அல்ல என்ற புலவர்களின் மரபையும் முன்வைக்கின்றது இப்பாடல் என்பதை உணர்த்தினார்.
அடுத்ததாக சாகலாசனார் பாடிய அகநானூறு பாடல் ஒன்றும் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பாடல் காட்சிப் படிமங்களில் மறைந்திருக்கும் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றது. ‘நாயுடை முதுநீர்க் கலித்த தாமரை’ என்ற அடிகள் நீர்நாய்களையுடைய பழைய குளத்தில் தழைத்த தாமரை என்று மேலோட்டமாகப் பொருள் கொள்ளப்படுகிறது. இது ஒரு காட்சிப் படிமம் எனக் குறிப்பிடுகின்றார் பயிற்றுநர் ராஜகோபாலன். இப்பாடலில் நீர்நாய் என்பது பரத்தையோடு கூடி மகிழ்ந்து திரும்பிய கணவனையும், முதுநீர் தாமரை என்பது மிகப் போற்றத்தக்க குடும்ப பின்னணியிலிருந்து வந்த மனைவியானவள் இல்லற ஒழுக்கத்தைத் திண்மையாகப் போற்றியவள் என்பதைக் குறிக்கின்றது. இந்தக் காட்சிப் படிமத்தின் வழி இல்லறத்தில் கணவனின் கீழ்மையும் மனைவியின் மாண்பும் பேசப்படுவதாகக் கூறினார். வெறும் காட்சியாகக் கடந்து செல்லாமல் அதில் மறைந்துள்ள காட்சிப் படிமத்தையும் உடன் அறிந்தால்தான் சங்கப் பாடல்களின் கவித்துவம் விளங்கும் என வலியுறுத்தினார்.
இதே பாடலில் ‘கூர் எயிற்று அரிவை குறுகினள்’ என்ற அடியை மேலோட்டமாக வாசித்துப் பொருள் அறியும்போது கூர்மையான பற்களையுடைய உன்னுடைய பரத்தையான இளம் பெண் அணுகினாள் என்று விவரித்துக் கடந்து விடலாம். இதே பாடலைச் சற்று ஆழ்ந்து சிந்தித்து வாசிக்கும்போது இளம் பெண்கள் சார்ந்த உளவியல் செய்தி வெளிப்படுவதாகக் கூறினார் எழுத்தாளர் ராஜகோபாலன். ‘கூர் எயிற்று’ என்பது வெறுமனே இளம் பரத்தையின் பற்களின் நிலையைக் காட்டும் சொற்கள் அல்ல. அது அவளின் பேச்சுத் தன்மையை விளக்கும் சொல். இளம் பரத்தையின் பேச்சானது குத்திக் கிழிக்கும் தன்மை கொண்டது என்பதை விளக்குவதாகக் கூறினார். அடுத்து தொல்கபிலர் பாடிய குறுந்தொகை பாடலிலும் ‘இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவை’ என்ற அடியில் அதே வகையான பெண் உளவியல் பேசப்படுவதாக விளக்கினார். இதில் தலைவியானவள் நேர்மையாகப் பேச வேண்டியதை மட்டும் பேசி உணர்த்துபவள் என்று பாடப்பட்டுள்ளது.
இவ்வாறு சுருங்க அமைந்து வாழ்க்கையின் பெரும் பரப்பை உணர்த்தும் சங்க இலக்கியப் பாடல்களின் வீச்சை எடுத்துக்காட்டி பங்கேற்பாளர்களிடையே சங்கப் பாடல் வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மேலும், சங்கப் பாடலே இன்றைய நவீன கவிதைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்றது என்று கூறி சில நவீன கவிதைகளில் காணப்படுகின்ற சங்கப் பாடல் கூறுகளை விளக்கினார்.
சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களைத் தன்னிச்சையாகச் சென்று நுகர்வது என்பது மிகக் குறைவு. கல்விக்கழகங்களின் வழியே அறிமுகம் பெறுகிறோம். கல்விக்கழகங்களின் ஒருதலையான கற்பித்தல் முறையினால் சங்க இலக்கிய அறிமுகம் நமக்கு தலைவன் தலைவியின் வாழ்க்கை குறித்தும் மன்னர்களின் சிறப்புகளைப் பாடுதல் அளவோடே குறுகி விடுகிறது. வல்லினம் ஏற்பாடு செய்த இந்த முகாம் குறிப்பாக இளைஞர்களுக்குச் சங்கப் பாடல்கள் நுகர்வு குறித்த விழிப்புணர்வையும் அதன் கற்றல் நுட்பத்தையும் வழங்கியுள்ளது.