வல்லினம் இலக்கிய முகாம் – சிறுகதை அமர்வு

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் திகதிகளில் நிகழ்ந்த வல்லினம் இலக்கிய முகாமில் ஜா. ராஜகோபாலன் வழிநடத்த, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த வாசகர்களும் படைப்பாளிகளும் ஒன்றாக அமர்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியப் படைப்புகளை வாசித்து விவாதித்தோம். இந்த நிகழ்வு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்,அமைந்துள்ள YMCA ஹோட்டலில் நடந்தேறியது. நவம்பர் முப்பதாம் திகதி நடைபெற்ற சிறுகதை அமர்வில், நவீன இலக்கியத்தின் ஐந்து சிறுகதைளை விரிவாக வாசித்து அது சார்ந்த வாசிப்பனுபவத்தை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டோம். எழுத்தாளர் காளி பிரசாத் எழுதிய ‘திருவண்ணாமலை’, சுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’, விஷால் ராஜாவின் ‘திருவருட்செல்வி’, குணா கந்தசாமியின் ‘காதலும் ஏனைய பூதங்களும்’ மற்றும் தோப்பில் முகமது மீரானின் ‘அனந்தசயனம் காலனி’ ஆகிய கதைகள் கலந்துரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அக்கதைகளை முன்னரே வாசித்து வந்ததால் ஒவ்வொரு கதை சார்ந்தும், வாசித்தவர்களுக்குள் எழுந்த கேள்விகள் மற்றும் அது சார்ந்த மேலதிக புரிதல்கள் குறித்த  உரையாடல் நிகழந்தது.

திருவண்ணாமலை – காளி பிரசாத்

முதல் சிறுகதையாக காளிபிரசாத்தின் ‘திருவண்ணாமலை’ குறித்த வாசிப்பனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்தக் கதையில், கதை நாயகன் கண்ணன் ஒரு வசைசொல்லை உதிர்க்க அவனுக்குக் கீழ் பணிப்புரியும் பாபுவின் காதில் அது ‘திருவண்ணாமலை’ என ஒலிக்கிறது. பதிலுக்கு அவன் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்கிறான். கண்ணன் ஒவ்வொரு முறையும் வசைசொல்லை உதிர்க்கும்போதும் பாபுவுக்கு அது ‘திருவண்ணாமலை’ என்றே ஒலிக்கிறது. பதிலுக்கு அவன், ‘திருச்சிற்றம்பலம்’ என்றே சொல்கிறான். இந்த விளையாட்டு ஒருகட்டத்தில் கதைசொல்லிக்குப் பழகி விடவே அவனுக்குள் அது வரை இருந்த கட்டுக்கடங்காத கோபம் குறைந்து போகிறது. கோபத்தைக் குறைப்பதற்காக அவன் வைத்திருந்த புத்தரின் புகைப்படம் அவனுக்குத் தேவையில்லாததாக ஆகிவிடுகிறது. ஆனால், கதையின் முடிவில், கம்பெனி செக்யூரிட்டியான தெலுங்கு பேசும் ரமணய்யா, ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லத் தெரியாமல், கண்ணன் அந்த வசைசொல்லை உதிர்க்கும்போதெல்லாம், பதிலுக்கு ‘தோத்திரம்’ என்று சொல்ல நினைத்து முடியாமல், ‘தொத்ரம்’ என்கிறான். இப்போது கண்ணனுக்கு ரமணய்யா தன்னைத் தெலுங்கில் கெட்ட வார்த்தையால் திட்டியதைப் போலிருக்கிறது. என்ன முயன்றும், அவனால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை, கடைசியில் நடு இரவில் தெலுங்கு கெட்ட வார்த்தைகள் என்று இணையத்தில் தேடியெடுத்த வார்த்தைகளிலும் ‘தொத்ரம்’ என்ற வார்த்தை இல்லை. திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டதில், அந்த வார்த்தை நிச்சயமாக ஒரு கெட்ட வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று நிச்சயம் செய்து கொள்கிறான். அதன் பின் நிம்மதியாக உறங்கிப் போகிறான். இப்போதும் புத்தர் அவனைப் பார்த்து புன்னகைக்கிறார் என்று கதை முடிகிறது.

இந்தக் கதையைக் குறித்து பேசிய ரேவின், ஒரு வசைசொல் நல்ல சொல்லாக மாறிப் புரிந்து கொள்ளப்படும் விந்தையான வார்த்தை விளையாட்டு இக்கதையில் நிகழ்வதாக் கூறினார். ஆனால், அதுவே கதைநாயகனின் மன அழுத்தத்துக்கும் கோபத்துக்கும் மருந்தாக மாறிவிடுகிறது. ஆனால், கதையின் முடிவில் மீண்டும் அந்த மருந்தே விஷமாக மாறிவிடுகிறது என்ற தன் வாசிப்பை முன் வைத்தார். சுத்தியல் என்பது ஆக்குவதற்கும் அழிப்பதற்குமான குறியீடாக கதையில் பயன்படுத்தப்படுகிறது என்றார்.  

இளம்பூரணன், இந்தக் கதையில் கண்ணனின் கட்டுக்கடங்காத கோபம் ஒரு எளிய சொல்லால் கட்டுப்படுத்தப்படும் விந்தை கதையை அழகாக்குகிறது என்றார். ஆனால், அவனைக் காக்கும் சொல்லே மீண்டும் அவனைத் தொந்தரவுக்குள்ளாக்குவதும் விந்தைதான் என்றார்.

விஜயலட்சுமி, இந்தக் கதையில் இடம்பெறும் புத்தர் படம் என்பதும் நல்லதொரு குறியீடு என்றார். கண்ணனின் நிம்மதி என்பது தற்காலிகமானதுதான், என்பதையே புத்தரின் புன்னகை சுட்டுகிறது என்றார்.

என்னுடைய கருத்தை நான் இவ்வாறு வெளிப்படுத்தினேன், கண்ணன் அடிப்படையில் கட்டுக்கடங்காத கோபம் கொள்பவன், வார்த்தைகளைத் தன்னை மீறி வெளிப்படுத்தி விடுபவன், தான் மற்றொருவனைக் கெட்ட வார்த்தையில் திட்டும்போது, மற்றவனும் தன்னை அப்படித்தானே திட்டியிருப்பான் என்ற தர்க்கத்தைப் பயன்படுத்தி தன்னைத் தானே அமைதியடையச் செய்துகொள்கிறான். ரமணய்யா கெட்ட வார்த்தையைத்தான் பயன்படுத்தியிருக்கிறான் என்று கஷ்டப்பட்டு கண்ணன் கண்டுபிடிப்பதெல்லாம் தன்னுடைய ஆணவத்தை நிறைவடையச் செய்து கொள்வதற்குத்தான்.

முடிவில் ராஜகோபாலன் பேசும்போது, இந்தக் கதை நவீன வாழ்க்கையின் அபத்தத்தைப் (absurdity) பேசும் கதை என்றார். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், மனித ஆணவத்தில் உள்ள அபத்தத்தைச் சொல்லும் கதை. இந்தக் கதை கிட்டத்தட்ட உண்மைக் கதையே. டீக்கடையில் காளிபிரசாத் உண்மையாகவே இக்கதையில் வரும் கண்ணன் போன்ற ஒருவர் பேசுவதைக் கேட்டு அதன் பாதிப்பில் இந்தக் கதையை எழுதினார் என்றார். ஆனால், அந்த அபத்தம் ஒருகட்டத்தில் ஆன்மிகமாக மாறுவதையும் கதை பேசுகிறது. கதை நாயகன் மற்றொருவனை வசைசொல்லால் ஏசும்போது அவன் அதைப் பிறிதொரு சொல்லாக மாற்றிப் புரிந்து கொள்வது இவனுக்கு ஒரு பிரச்சனையாக ஆவதில்லை. ஆனால், இவனால் புரிந்து கொள்ள முடியாத மற்றொரு சொல்லைப் பிறிதொருவன் இவனை நோக்கி வீசும்போது அது நிச்சயம் கெட்ட வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று இவனது ஆணவம் சொல்கிறது. அதை இவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வலிய முயன்று அதுவொரு கெட்ட வார்த்தைதான் என்று இவனுக்கு இவனே நிரூபித்துக் கொண்டால்தான் இவனால் நிம்மதியாகத் தூங்க முடியும். அபத்தத்தின் அபத்தம்தான் இந்தக் கதை. இந்த அபத்தங்களையெல்லாம் நோக்கி புத்தர் புன்னகை செய்தவாறே இருக்கிறார். ராஜகோபாலனின் உரைக்குப் பின், அடுத்த கதை நோக்கி நகர்ந்தோம்.

திருவருட்செல்வி- விஷால்ராஜா

அடுத்த கதையாக விஷால்ராஜாவின் ‘திருவருட்செல்வி’ குறித்த உரையாடல் துவங்கியது.  இந்தக் கதையில், தென் தமிழகத்தைச் சேர்ந்த செல்வி, தனது அப்பாவின் திடீர் மறைவால் ஏற்பட்ட கடன் சிக்கல்களைச் சமாளிக்க, சென்னை வந்து பெண்கள் தங்கும் விடுதியொன்றில் தங்கிக் கொண்டு, தன் சுய முயற்சியில் ஒரு வேலையில் அமர்ந்து கொண்டே, மெல்ல மெல்ல, கடன்களையெல்லாம் கட்டித் தீர்க்கிறாள். இதற்கிடையே, அவளைத் தேடி வந்த பூனைகளிடம் பிரியம் காட்டி, அதற்குச் சிஷ்ருஷை செய்கிறாள். கதையின், முடிவில், அவள் தனக்கான பாதையைத் தெளிவாகக் கண்டு கொள்கிறாள்.

இந்தக் கதையைக் குறித்த தனது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் மலர்விழி. தனது பேச்சில், நவீன காலத்தில்,  பெண்களின் பொறுப்பு மாறிக் கொண்டே இருக்கிறது, பல பெண்கள் தங்கள் பெற்றோர்க்குக் கொள்ளி வைப்பதைக் கூட தற்காலத்தில் பார்க்க முடிகிறது.  இந்தக் கதையில் அப்படிப்பட்ட தன்நம்பிக்கையும் நிமிர்வும் உள்ள செல்வி என்ற கதாப்பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்றார். வாழ்வின் சிக்கல்களைத் தன்நம்பிக்கையுடன் எதிர்த்து வெற்றி காணும் ஒரு பெண்ணைக் குறித்த கதையில், இறை நம்பிக்கையும் பூனைகள் மீதுள்ள அன்பும் இணைக்கோடுகளாக இக்கதையில் இடம்பெற்றுள்ளன. தீவிரமும் கச்சிதமும் ஒருங்கே கூடிய கதை இது, என்றார்.

அடுத்து தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துகொண்ட சாலினி, இந்தக் கதை கூர்மையான காட்சிச் சித்தரிப்பைக் கொண்டது என்றார். நான் பேசும்போது, இக்கதையைப் பொருள் x அருள் என்ற இரு பார்வையில் வாசிக்கலாம் என்றார். நாம் வாழும் இந்த உலகம் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது, பொருட்சிக்கல்களால் நிறைந்தது இந்த உலகம். செல்விக்கும் இந்த பொருட்சிக்கலே முதன்மையானதாக இருக்கிறது. ஆனாலும், இணையாகவே இந்த உலகைத் தாண்டிய இன்னொரு உலகில் அருள் என்பதே பிரதானமானதாக இருக்கிறது. அருள் வீற்றிருக்கக்கூடிய அந்த உலகத்தில் பொருளுக்கு முக்கியத்துவம் இல்லை. அங்கே அன்பும், அருளும்தான் பிரதானம். பூனைகளுக்குப் பிரியம் காட்டி, அதன் துயரைத் தீர்த்து வைப்பதன் மூலம், செல்வி, அந்த அருள் உலகத்தையும் வசப்படுத்துகிறாள். பொருள் தேடும் இந்த உலகத்திலும் வெல்கிறாள், கூடவே அருளையும் அவள் வெல்கிறாள். அவள் அருளை வெல்லும் அந்தப் புள்ளியில் கதை முடிவடைகிறது. முடிவில், ‘திருவருட்செல்வி’ என்ற வார்த்தையை கதாசிரியர் பயன்படுத்தியிருப்பதை இக்கோணத்தில் அணுகலாம், என்றேன்.

ராஜகோபாலன் பேசும்போது, ஒரு குறிப்பிட்ட தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுவதுதான் சிறுகதையின் இயல்பு. கிட்டத்தட்ட புகைப்படம் போல. ஒன்றைச் சொல்வதன் மூலம் பிறிதொன்றை உணர்த்துவதும் சிறுகதையின் இயல்பே. இக்கதையில், செல்வியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், பூனைகள் வருவதையும் தனித்தனியாக வாசித்துப் பார்க்கலாம். அவள் முதலில் தன் அம்மா சொல் பேச்சு கேட்பவளாகவே இருக்கிறாள், முதலில் வந்த பூனையை, அம்மா சொல் கேட்டு வெளியில் விட்டுவிடுகிறாள். ஆனால், ஒரு கட்டத்தில் தன் சம்பாத்தியத்தால், கடனை முழுக்கக் கட்டி விட்டதும், அவளுக்கு மாபெரும் தன்நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டு விடுகிறது. மிகச் சரியாக, அந்தத் தருணத்தில் பூனைகள் மீண்டும் அவளிடம் வருகின்றன. இப்போது அவளுக்குத் தனது அம்மாவின் அறிவுரை தேவையில்லை. சுயமாகவே முடிவு செய்து, பூனைக்கு வைத்தியம் செய்து, குணப்படுத்துகிறாள். அதன் பின்பு, அவளுக்குத் தான் செல்லும் திசை குறித்த மாபெரும் தெளிவொன்று பிறக்கிறது. தான் அரசு அலுவலர் ஆகப் போவதாகப் பூனையிடம் தெரிவிக்கிறாள். அவள் அந்த இலக்கையும் அடைந்து விடுவாள் என்பதையே கதை சொல்லாமல் சொல்கிறது. கதையில் வரும் பூனை என்பது செல்வியின் சுயம்தான் என்றார். மேலும், இது ஒரு திருவருட்செல்வியைப் பற்றிய கதையல்ல. சென்னையில் இது போல பெண்கள் விடுதியில் தங்கியவாறே தன்னையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றப் பாடுபடும் எத்தனையோ திருவருட்செல்விகளைப் பற்றிய கதையும்தான் இது என்றார்.

நவீன் இந்தக் கதையைக் குறித்த கேள்வியொன்றை எழுப்பினார். பூனைகள் இடம்பெறும் இக்கதையில், பூனைகளின் அடிப்படையான இயல்புகளைச் சொல்லவில்லையே, பூனையை நன்கு அறிந்து எழுதிய ஒருவரின் கதையாக இது படவில்லை. இதை ஒரு விமர்சனமாக வைக்கலாமா என்றார். ராஜகோபாலன், அது ஒரு போதாமைதான். ஆனால், ஒட்டுமொத்த கதைக்கும் அதனால் எந்தப் பாதகமும் நேரவில்லை என்கிறபோது, அதைக் கலைக்குறைப்பாடாகச் சொல்ல முடியாது என்றார்.

தயாஜி பேசும்போது, இந்தக் கதையில், ‘மாடியில் இருந்து தூக்கிப்போட்டாக்கூட பூனைக்கு எதுவும் ஆகாது, அது யாரையும் எதிர்பார்க்காத மிருகம்’, என்ற வரியோடு செல்வியின் ஆளுமையை இணைத்துப் பார்க்கலாம் என்ற முக்கியமான கோணத்தை முன் வைத்தார்.

வாசுதேவன்- சுனில் கிருஷ்ணன்

இந்த அமர்வில் அதிகம் விவாதிக்கப்பட்டது சுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ என்ற கதைதான். இக்கதையில், உடம்பின் அனைத்து பாகங்களும் செயலிழந்து போய், படுத்த படுக்கையாக இருக்கும் வாசுதேவன் என்ற இளைஞனை அவனது பெற்றோர்கள் நான்கு வருடங்களாக, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கின்றனர். எத்தனையோ வகையான மருத்துவ முறைகளை முயன்று பார்த்தும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. நிவாரணம் என்பதே இல்லாத நிலையிலும், ஆயுர்வேத சிகிச்சை அளிக்க ஆசைப்பட்டு அப்பகுதியில் பிரபலமாக இருக்கும் ஆயுர்வேத மருத்துவரை அணுகுகிறார்கள். கதைசொல்லியும் அவனது நண்பனும், பயிற்சி மருத்துவர்களாதலால் அனுபவம் வாய்ந்த அந்த மருத்துவரிடம் மூன்று மாதம் சம்பளமில்லா உதவியாளர்களாகப் பணியேற்கிறார்கள். தினமும், அவர்கள் இருவரும் வாசுதேவன் வீட்டுக்கு வந்து அவனுக்குத் தேவையான பிழிச்சல், கிழி போன்ற சிகிச்சைகளைச் செய்கிறார்கள். ஆனாலும், வாசுதேவனது நிலையில் ஒரு முன்னேற்றமுமில்லை. உயிரற்ற பிணமாக இருக்கும் வாசுதேவனுக்கு, நம்பிக்கையேயில்லாமல் கடமைக்காக சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒருகட்டத்தில், வாசுதேவனின் அப்பா, கதைசொல்லியிடம், வாசுதேவனை நம்பிக்கையுடன் அணுகி அவனிடம் பேசிக் கொண்டே வைத்தியம் செய்யுங்கள், அவனால் அனைத்தையும் கேட்க முடியும், அதனூடாக அவனுக்குள் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்கிறார். கதைசொல்லியும், அதற்குப் பின் வாசுதேவனை உணர்வுபூர்வமாக அணுகி அவனிடம் மானசீகமாகப் பேசியபடியே சிகிச்சை அளிக்கிறார். அவனுக்குள் சில மாற்றங்கள் ஏற்படுவதையும் கதைசொல்லி அவதானிக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் வாசுதேவனின் அம்மா, அவனது சிகிச்சைக்காக ஆகும் செலவுகளையும் அதைத் தங்களால் சமாளிக்கச் சிரமமாக இருக்கிறது என்றும் சொல்லும்போது, கதைசொல்லி அவரிடம் வாசுதேவனைக் குணப்படுத்தவே முடியாது என்ற உண்மையைச் சொல்லி விடுகிறான்.

அடுத்த சில நாட்களில், வாசுதேவனின் அப்பா அவர்கள் இருவரையும் அழைத்து, சிகிச்சையை நிறுத்தி விடலாம் என்கிறார். வாசுதேவனின் விதவை அக்காவும் அவளது பெண் குழந்தையும் அந்த வீட்டுக்கு வந்துவிட்டதை அவர்கள் பார்க்கிறார்கள். சிகிச்சையின் இறுதி நாளில், வாசுதேவன் கதைசொல்லியின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றதொரு பிரமை ஏற்படுகிறது கதைசொல்லிக்கு. அடுத்த மூன்று நாட்களில், வாசுதேவன் இறந்து விட்டதாக இவர்களுக்குத் தகவல் வருகிறது. இவர்கள் இருவரும் சென்று சேரும்போது, பொம்மைகளைப் பிய்த்துப் போட்டு விளையாடும் தனது குழந்தையை வாசுதேவனின் அக்கா திட்டுவதும், அதற்கு அந்தக் குழந்தை, எல்லாம் சும்மாத்தான் என்று பதில் சொல்வதுமானதொரு காட்சியில் கதை முடிவடைகிறது. நம்பிக்கையின் பொருள் அல்லது பொருளின்மை, வைத்தியனின் அறம், புண்ணியம் பாவம் என்ற வழக்கமான கோணங்களில் இருந்து விலகி மேலதிகமாக இக்கதையைப் புரிந்துகொள்ள முடியுமா என்று இந்த அமர்வில் முயன்று பார்த்தோம்.

புஷ்பவள்ளி இக்கதையைக் குறித்துப் பேசும்போது, இக்கதையில் வாசுதேவனின் தந்தையின் நம்பிக்கையும் கதைசொல்லியின் குற்றவுணர்ச்சியும் அழுத்தமாகப் பதிவாகி இருப்பதாகச் சொன்னார். மேலும், கதையின் முடிவில், வாசுதேவனின் அக்காவின் வருகைக்குப் பின்னர்தான் வாசுதேவனின் மரணம் நிகழ்கிறது. அந்தச் சில நாட்களில், பெற்றோரின் கவனம் வாசுதேவனிடம் இருந்து விலகி, அவனது அக்கா மற்றும் அவளது குழந்தையின் மீது குவிந்து விடுகிறது. விளைவாக, வாசுதேவன் அவர்களது கவனத்தில் பின்தங்கிவிடுகிறான். இதுவே அவனது மரணத்துக்குக் காரணமாகிவிடுகிறது என்றார். பொம்மைக்கு நேர்ந்ததுதான் வாசுதேவனுக்கு நேர்ந்ததா என்ற முடிவை ஆசிரியர் வாசகனது தீர்மானத்துக்கு விட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது என்றார்.

அரவின் தன்னுடைய கருத்தாக, இந்தக் கதை பேசும் நிலையாமை தன்னைக் கவர்ந்ததாகவும் முடிவுப் பகுதியில் ‘சும்மாதான்’ என்று அந்தக் குழந்தை பேசுவதில் உள்ள அர்த்தமற்ற அர்த்தம் கதையைச் செறிவாக்குகிறது என்றார். சர்வின் செல்வா, இக்கதையை வாசிக்கும்போது நம்முடைய தனிப்பட்ட துன்பங்கள் எல்லாம், வாசுதேவன் அனுபவிக்கும் துன்பங்களோடு ஓப்பிடுகையில் ஒன்றுமேயில்லை என்றார். சல்மா பேசுகையில், இந்தக் கதையில் இடம்பெறுவது ஒரு திட்டமிட்ட கொலை என்றார். வாசுதேவனின் அக்காவும், அவளது குழந்தையையும் பார்த்த பின்னர், பெற்றவர்களுக்கு வாசுதேவன் இரண்டாம் பட்சமாகிப் போகிறான், என்றார்.

லதா, இந்தக் கதையில் வரும் கதைசொல்லியின் சங்கடங்களைக் குறித்துப் பேசினார், அவன் ஒரு வைத்தியனாக நோயாளியின் குடும்பத்தினரிடம் நம்பிக்கையைப் புகட்ட வேண்டுமா அல்லது யதார்த்தத்தைச் சொல்லி அவர்கள் மனத்தை நோகச் செய்ய வேண்டுமா? அவனது மனசாட்சி அவனைப் பின்னதையே தேர்ந்தெடுக்கச் செய்கிறது என்றார். மேலும், இந்தக் கதையில், வாசுதேவன் என்ற பெயரின் அர்த்தத்தைச் சொல்லும் வரிகள் கதையைப் புரிந்து கொள்ள உதவி செய்கின்றன என்றார். (ராஜகோபாலன் அந்த வரிகளை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கக்கூடாது, அது வாசகனுக்கு கதையை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறது என்றார்).

பாரதி பேசும்போது, நோய் முற்றி இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு Willpower அல்லது ஒரு பற்றுணர்வு இருக்கும். அந்தப் பற்றுணர்வை அவர்கள் துறக்காதவரை உயிர் உடம்பில் தங்கும். அவர்கள் அந்தப் பற்றை விடும்போது உயிர் எளிதாகப் பிரிவதை அனுபவத்தினூடாக அறிந்திருக்கிறேன் என்றார். இக்கதையிலும், கதையின் முடிவில், அவனது பெற்றோர் வாசுதேவனிடமிருந்து கவனத்தை விலக்கி வைத்திருந்த பொழுதில், அவனுக்குள் இருக்கும் பற்றுணர்வு விடுபட்டு, இறந்துபோக நேர்ந்திருக்கலாம் என்றார். அல்லது அவனது பெற்றோர்களுக்கும் அந்தப் பற்றின் பிடிமானம் தளர்ந்திருக்கலாம் என்றார்.

கதையின் முடிவு தெலுங்கில் இருப்பதைப் பற்றியும் பேசப்பட்டது. ஆனால், இது வித்தியாசமாகத் தென்படவில்லை. தெலுங்கு பேசக்கூடிய குடும்பத்தின் கதை இது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தங்களுக்குள் கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை தெலுங்கில்தான் பேசிக் கொள்கிறார்கள். ஆகையால், முடிவில் அந்த உரையாடலைத் தமிழில் எழுதினால்தான் செயற்கையாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

இக்கதை குறித்து முடிவில் பேசிய ராஜகோபாலன், வாசுதேவன் என்பவர் பரதெய்வம். எந்த வேலையும் செய்யாமல் தானே தன்னில் லயித்தவர். பரவாசுதேவன். இக்கதையில் மாபெரும் மானுட நாடகம் ஒன்று நிகழ்கிறது. சங்கடத்திற்கும் தர்ம சங்கடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியவர், இக்கதையில் வரும் பெற்றோர்க்கும் கதை முடிவில் வருவது அத்தகைய தர்ம சங்கடமே என்றார். குழந்தை பொம்மையுடன் விளையாடுவது போலத்தான் இறைவன் மானுடர்களை வைத்து விளையாடுகிறான். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று அவனைக் கேட்டால், சும்மாதான் என்பான். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். இக்கதையில் வரும் குழந்தையும், கிட்டத்தட்ட தெய்வம் சொல்வதைப் போல, சும்மாதான் என்கிறது. அதற்கு மேல் இது எதற்கும் அர்த்தம் இல்லை. இந்தப் பதிலுக்கு அழுத்தம் கொடுக்கத்தான் அது தெலுங்கில் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.  

இந்த மூன்று கதைகள் குறித்த உரையாடலுக்கே நேரம் சரியாக இருந்ததால், குணா கந்தசாமியின் ‘காதலும் ஏனைய பூதங்களும்’ மற்றும் தோப்பிலின் ‘அனந்தசயனம் காலனி’ கதைகளும் விரிவாக விவாதிக்கப்படவில்லை.

குணா கந்தசாமியின் ‘காதலும் ஏனைய பூதங்களும்’ கதையில், இதற்கு முன்னுள்ள கதைகளில் இல்லாத காட்சிகளினூடாகக் கதை சொல்லும் முறை பயின்றுவராததையும் அதற்கான காரணங்களையும் ராஜகோபாலன் சுருக்கமாக எடுத்துரைத்தார். குறிப்பாக, கதையின் முடிவில்  “அவனை நம்பி கிணத்துக்குள்ள விழுந்திட்டேன்” என்று ஜெயந்தி சொல்வதிலுள்ள முரணே இக்கதையை அழகாக்குகிறது என்றார்.

தோப்பிலின் ‘அனந்தசயனம் காலனி’ மனித வாழ்வின் அபத்தத்தை மற்றொரு வகையில் முன்வைக்கும் கதைதான் என்ற கோணத்தில் இக்கதை குறித்து சுருக்கமாகப் பேசினோம்.

மொத்தத்தில், இந்த அமர்வில், தரமான கதைகளை வாசித்தும், அவை குறித்த தரமான உரையாடலையும் நிகழ்த்திப் பார்த்த நிறைவு எல்லோருக்குமே ஏற்பட்டது எனலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...