இலக்கிய வாசிப்பைக் கூர்தீட்டிக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது 2024 டிசம்பர் மாதம் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் இருநாள் இலக்கிய முகாம்.
முகாமை வழிநடத்திய திரு ஜா. ராஜகோபாலன் சங்கப் பாடல் முதல் நாவல் வரையில் தமிழ் இலக்கியத்தை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அறிமுகப்படுத்தி, பொருள் புரிந்து வாசிக்கும் வித்தையை விளக்கினார். அதன்வழி, மொழி, பிரதி, தத்துவார்த்தப் புரிதல்களை அடைவதற்கான வழிமுறையைக் காட்டினார்.
கோலாலம்பூரில், பிரிக்ஃபீல்ட் YMCA ஹோட்டலில் 2024 நவம்பர் 30, டிசம்பர் 1 தேதிகளில் நடைபெற்ற முகாமில் இளையர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என வெவ்வேறு வாசிப்பு நிலைகளில் உள்ளவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவரது மாறுபட்ட வாசிப்பனுபவமும் வேறுபட்ட பார்வைகளும் முகாம் கருத்தாடல்களை வளப்படுத்தின. பங்கேற்றவர்கள் கொடுக்கப்பட்டிருந்த வாசிப்புப் பகுதிகளுடன், கூடுதலாகவே வாசித்து வந்திருந்ததும் அனைவருமே கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதும் அமர்வுகளின் சிறப்பு.
படைப்புக்கு நேர்மையான வாசிப்பு, அந்தப் படைப்பைப் புரிந்து கொள்ள வைக்கிறது, அதற்கு அப்பாலும் சிந்திக்க வைக்கிறது என்பதை இந்த ஒன்றரை நாள் முகாம் உணர்த்தியது.
நாவல் அமர்வு இரண்டாவது நாள் இடம்பெற்றது. இவ்வமர்வில் தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’ ஆகிய இரு நாவல்கள் குறித்து உரையாடினோம்.
ரசனை விமர்சனமாகத் தொடங்கிய உரையாடலை, வாசிப்புக்கான வழிகாட்டலாக மாற்றினார் ராஜகோபாலன்.
நாவலை எப்படிப் பார்ப்பது என்பதை விளக்கிய ராஜகோபாலன், அந்தப் பிரதி எழுதப்பட்ட காலம், அது பேசும் காலகட்டத்தைக் கவனிக்க வேண்டும் என்றார்.
பிரதியில், காலமாற்றத்தின் அவதானிப்பு-விவாதம், மாற்றம் ஏற்படும் களம் (பாய்மரக் கப்பலில் வரலாறு), அது சார்ந்த வளங்கள், நம்பிக்கைகளில் ஏற்படும் மாற்றம், மாற்றத்தின் விளைவாக வாழ்க்கை முறையும் விழுமியங்களும் மாறுவது ஆகியவைப் பிரதிபலிக்கப்படுகின்றன என்றால் அது முக்கியமான படைப்பாகிறது என்றார்.
ரசனை சார்ந்து தனக்கு வேறு கருத்து இருந்தாலும், மேற்சொன்னதன் அடிப்படையில் இரு நாவல்களுமே முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார்.
பிரதி என்ன சொல்கிறது என்றே பார்க்க வேண்டும். அது எதைச் சொல்லவில்லை என்பதை ஆராயக் கூடாது என்பது அந்த அரங்கில் அவரது அறிவுரையாக இருந்தது. தீவிர விமர்சன உரையாடலாக இருந்தால் அவர் கருத்து வேறாக இருந்திருக்கலாம்.
அறிமுக வாசிப்பில், ஒன்றின் தொடக்கமாக எழுதப்பட்ட எழுத்துகளை அதன் பங்களிப்புக்காக வாசிக்க வேண்டும் என்பதே அவர் சொன்னது. ஒரு கருத்தை, சிந்தனையை, மாற்றத்தை, வரலாற்றை அல்லது வடிவத்தைத் தொடக்கமாகச் சொல்லும் எழுத்துக்குத் தனி இடம் உள்ளது. ‘அக்னிப் பிரவேசம்’ போன்ற படைப்புகள் முதல் வாசிப்பில் ஏற்படுத்தும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் அடுத்தடுத்த வாசிப்புகளில் தராதிருக்காலம். அல்லது எழுப்பட்டு பல காலம் கடந்து வாசிக்கும்போது, அன்றைய காலத்துக்கு அது சாதாரண ஒன்றாக இருக்கலாம். என்றாலும், அதற்கென்று ஓர் இடம் இருக்கிறது, வாசிப்பு உள்ளது என்பதை அவர் விளக்கினார்.
பொதுவாக, விமர்சனங்கள் சார்ந்த இலக்கிய உரையாடல்களிலேயே கலந்து கொண்டிருந்ததால் வாசிப்பு அடிப்படையிலான இந்த உரையாடல் படீரென்று வெட்டிச் செல்லும் மின்னல் தெறிப்பாக இருந்தது. இக்கருத்தை முகாமில் பங்கேற்ற பலரும் முன்வைத்தனர்.
இது, வாசிப்பில் ஒரு புதிய அணுகுமுறையைத் தந்திருப்பதாகக் கூறினார் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமான ஸ்ரீதர்.
பாய்மரக் கப்பல்
பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’ 1995இல் வெளிவந்தது. இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற நாவல்.
விவசாயக் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறையின் கதை ஊடாக, சமூக வரலாற்றையும் – மாற்றங்களையும் நாவல் முன்வைக்கிறது.
நிலத்தைக் காக்கும் தனது போராட்டத்தில் சாதி ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், மொழி ஆதிக்கம் என்று அலைக்கழிகிறான் அந்த விவசாயி.
காசாம்பு, முத்துசாமி, முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம், துரைசாமி ஆகியோர் வழியாக, கால நகர்வோடு நிகழ்கின்ற சமூக மாற்றத்தையும் அதனால் ஏற்படும் சிந்தனை மாற்றத்தையும் நாவல் விவரிக்கிறது.
காலத்தின் கண்ணாடி, பிரெஞ்சு காலணியாதிக்கத்தின் முகம், சுதந்திரப் போராட்டத்தின் முகம், சுதந்திர இந்தியாவின் முகம், பொருளியல் மாற்றத்தின் முகம் எனக் கால மாற்றத்தின் முகங்கள் வெவ்வேறாகிக் கொண்டே இருக்கின்றன. மாற்றம் ஏற்படுத்தும் தடுமாற்றமும் மாற்றத்தை உள்வாங்கும்போது உண்டாகும் சிந்தனை மாற்றமும் பாத்திரங்களின் குணங்களாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன.
முத்துசாமி கவுண்டரின் அண்ணன் மகன் காந்தியவாதி. அவரது சகோதரன் ஒரு நொடி உணர்ச்சி வேகத்தில் குடும்பத்தினரைக் கொலை செய்து சிறை செல்கிறார்.
பிரான்சின் காலணியாதிக்க எச்சத்தினால் ஆட்பட்டு பெரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பிரான்ஸ் செல்கிறான் அவரது மகன் முனுசாமி. மற்றொரு மகன் ரங்கசாமி ஆன்மிகவாதியாகி குடும்பத்திலிருந்து விலகுகிறான்.
இந்த நாவல் பற்றிப் பேசிய சாலினியும் மோகனாவும் காலமாற்றம், தலைமுறை மாற்றங்களினால் ஏற்படும் அடையாளம், அதிகார மாற்றங்கள் குறித்துச் சிறப்பாகப் பேசினர்.
சாலினி
காலத்தின் மாற்றம் முதலில் தோன்றுவது நிலத்தில். அந்த நிலம் நகரமயமாதலோடு எவ்வாறு பரிணாமம் பெறுகிறது என்பதை நாவல் காட்டுகிறது என்றார் சாலினி.
நிலத்தில் உழைப்பாளியாக இருக்கும் முத்துசாமிக்கும் உரிமையாளரான முத்துசாமிக்கும் உள்ள அடையாள மாற்றத்தை, காலம் உருவாக்கும் சமூக அடுக்குகளின் பிரதிபலிப்பாக உள்ளது. அடையாளம் தரும் அந்த அதிகாரம் நில உடமையிலிருந்து அரசியல், சினிமா என வேறொன்றுக்கு மாறும்போது ஏற்படும் உரசல்களைப் பாத்திரங்களின் உணர்வுகள் வழியாக நாவல் காட்டுவதை அவர் எடுத்துக்கூறினார்.
மோகனா
யதார்த்த பாணியில், முன்னும் பின்னுமாக நகர்ந்தும், ஒரே நேரத்தில் இரு காலங்களைத் தொட்டும் (Dual timeline, Alternating timeline) நாவல் எழுதப்பட்டுள்ளது என்று கதைசொல்லலை விவரித்த மோகனா, பொதுவுடமை சிந்தாந்தம், பெண்ணியப் பார்வை ஊடாக, நாவலின் உள்ளடக்கம் குறித்த பார்வையை முன்வைத்தார்.
அதிகாரமும் அடையாளமும் சமூகத்தையும் தனிமனிதர்களையும் எவ்வாறு அசைக்கின்றன, சிந்தனை முரண்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் கதாபாத்திரங்கள் வழியாகச் சொல்ல முனைந்தார்.
நாவலின் பெண் பாத்திரங்கள் குரலற்றவர்களாக இருப்பது இருவரது ஆதங்கமாகவும் கேள்வியாகவும் இருந்தது.
அவர்களது உரைக்குப் பின்னான உரையாடலிலும் அந்தக் கேள்வியே பிரதானமாக இருந்தது.
சமூகவியல் நோக்கில் நாவல் வாசிப்பு
இறுதியாகப் பேசிய ராஜகோபாலன், நாவல் விவரிக்கும் காலகட்டத்தின் பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள் என்று கூறினார். அந்த யதார்த்தத்தை நாவல் காட்டுவதை அவர் விளக்கினார்.
காலணிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரத்துக்குப் பின்னான காலம் வரையிலான காலமாற்றத்தைச் சமானியனின் வாழ்வை மையப்படுத்திச் சொல்லும் நாவல் என்பதால், ‘பாய்மரக் கப்பல்’ முக்கியமான நாவலாகிறது என்றார் ராஜகோபாலன். மேலும் 1990களின் தொடக்கத்தில் நிலம் சார்ந்த சமூகம் குறித்து அதிகம் எழுதப்பட்டதில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நாவலை வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் சமூகவியல் சார்ந்த ஒரு முறையை அவர் முன்வைத்தார்.
காலமாற்றத்தை அவதானப்படுத்துகிறது இந்நாவல். அது குறித்த விவாதத்தையும் உரையாடலையும் கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தினால் வாழ்க்கை முறையும், விழுமியங்களும் மாறுகின்றன. வளங்களும் நம்பிக்கைகளும் கேள்விக்குள்ளாகப்படுகின்றன. இந்த அடிப்படையில் பார்க்கையில் ‘பாய்மரக் கப்பல்’ நாவலை முக்கியமான நாவல் என்றார் ராஜகோபாலன்.
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாள்’ நாவல் குறித்து அரவின் குமாரும் சுதாகரும் பேசினர். இருவரும் விமர்சனப் பார்வையில் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.
தி.ஜானகிராமனின் முக்கியப் படைப்புகளில் ஒன்றான ‘அம்மா வந்தாள்’ 1966ல் வெளிவந்தது. இந்நாவல் எம். கிருஷ்ணன் என்பவரின் மொழிபெயர்ப்பில் ‘The Sins of Appu’s Mother’ என்று 1972ல் முதலில் வெளியிடப்பட்டது. ‘Remembering Amma’ என்ற தலைப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாவது மொழியாக்கத்தை மாலதி மாதுர் செய்திருந்தார்.
வெளிவந்த காலத்திலிருந்து அதிகம் வாசிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வரும் நாவல் ‘அம்மா வந்தாள்’. தஞ்சையை பூர்வீகமாகக்கொண்ட பிராமண சமூகத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் இருக்கும் தாய்க்கும் வேதம் படிக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் பேசுகிறது. அவள் வேதம் படிக்க அனுப்பும் அப்புவின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.
காவிரிக்கரையில் ஒரு குக்கிராமத்தில் வேதபாடசாலையில் 16 ஆண்டுகள் வேதம் படிக்கும் அப்பு, படிப்பு முடிந்ததும் பெற்றோரிடம் திரும்ப மிகுந்த ஆவலுடன் இருக்கிறான். புறப்படும் வேளையில், வேத பாடசாலையை நடத்தும் பவானியம்மாளின் அண்ணன் மகள் இந்து அவன் மீதுள்ள காதலைச் சொல்கிறாள். அப்பு மறுக்க, சீற்றம் கொள்ளும் இந்து அவன் அம்மாவைப் பற்றிச் சொல்கிறாள்.
ஊருக்குப் போனதும் அந்த உண்மையை அறியும் அப்பு வேதபாடசாலைக்கே திரும்புகிறான். பவானியம்மாளின் ஆசியுடன் இந்துவை ஏற்றுக் கொண்டு வேதபாடசாலையைப் பார்த்துக் கொள்ள முடிவு செய்கிறான். அப்போது அங்கு வரும் அலங்காரத்தம்மாள் ‘நீ வேதம் கற்று ஒரு ரிஷியாகத் திரும்பி வருவாய், நீ கற்ற வேதங்களின் ஒளிப் பிழம்பில் என் பாவங்களைப் பொசுக்கிக் கொள்ளலாம் என நினைத்தேன், கடைசியில் நீயும் அம்மா பிள்ளை தானா’ என்று சொல்லி, காசிக்குக் கிளம்புகிறாள்.
அரவின் குமார்
நாவலை இரண்டு முறை வாசித்ததாகக் கூறிய அரவின், நாவலில் வரும் இளமை பருவத்து ஆண் தன் அம்மாவை அவளது பாலியல் ஆழங்களின் வாயிலாக மறுகண்டடைவு செய்யும் மைய தரிசனம், இரு வாசிப்பிலும் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டார். அம்மாவின் பாத்திர வார்ப்பிலிருந்து எழும் அதிர்ச்சியும் குழப்பமும் கொஞ்சமும் குறையாமல் இருந்தது என்றார்.
பொதுவாக மரபான இந்திய ஆணுக்குத் தன் வாழ்வில் அம்மாவின் இடமென்பது என்னவாக இருக்கிறது எனும் கேள்வியை அப்பு பாத்திரம் எழுப்புகிறது. தாய்வழித்தெய்வங்கள், தாயன்பு விழுமியங்கள் எல்லாம் சேர்ந்து தாய் என்பதைப் பக்தி மனநிலைக்கு நிகரானதாக உருவாக்குவதுடன் மகனின் ஆளுமையின் ஒரு பகுதியாகவும் அது மாறிவிடுகிறது. இந்நிலையில் அம்மாவின் பாலியல் ஆழத்தை அறிந்து கொள்கின்ற மகனுக்கு ஏற்படுகின்ற நிலைக்குலைவு நாவல் வாசிப்பு ஏற்படுத்தும் அதிர்ச்சிக்கும் குழப்பத்துக்குமான காரணமாக இருக்கலாம் என்று அவர் விளக்கினார்.
நாவலில் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டிப்பட்டிருக்கும் மனித உணர்வுகள், மெய்யியல், தத்துவ விசாரம் மூன்றையும் இணைத்த அரவினின் பார்வையின் மாறுபட்டதாக இருந்தது; இந்நாவலின் தத்துவமாக மனித வாழ்வில் காமம் எனும் விசை செலுத்தும் ஆழத்தைச் சொல்லலாம்.
உயிரிச்சையின் விசையால் செலுத்தப்பட்டு மனிதர்கள் அடையும் சலனத்தையும் ஆணவ நிறைவு எனச் சிக்கலான ஆண் பெண் உறவின் முரண்களை நாவல் பேசுகிறது. மெய்மையின் தேடலில் ஈடுபடுத்தப்படும் மகனும் சமூக மதிப்பீடுகளுக்கு மாறாக பாலியல் ஒழுக்கம் மீறும் தாயும் சேர்ந்து ஒருவரில் மற்றொருவரை அறிந்து கொள்ளும் தரிசனமே ‘அம்மா வந்தாள்’ நாவலின் உச்சம்.
அழகும் ஆகிருதியும் நுண்ணுணர்வும் என ஒரு பெண்ணுக்குரிய லட்சியவாத அழகின் அத்தனை அம்சங்களும் கொண்ட அலங்காரத்தம்மாள், வேத அறிவுக்குள் கரை கண்டு தனக்குள் ஒடுங்கி கொள்கின்ற தண்டபாணியின் மீது உள்ளூர சலிப்பை அடைகிறாள்.
அவளின் ஆணவமே உடலை ஆளுகின்ற உரிமையை இன்னொருவரிடம் கொடுக்க செய்கிறது. தன் பாலியல் உணர்வுகளின் மீது அவள் செலுத்தும் கட்டுப்பாடு, ஆணவமே பாலியல் மீறல் செய்தவளாக அவளை ஆக்குகிறது.
அலங்காரத்தம்மாளின் அழகும் ஆகிருதியும் தண்டபாணிக்கு எரிச்சலூட்டுக்கிறது. அவளுடைய பெயரின் பால் இருக்கும் நேரடி கோபம் தொடங்கி சிவசுவுடனான அவளது தொடர்பு மீதான அசூயை என அவள் மீது உள்ளூர கோபத்தைக் கொண்டிருக்கிறார்.
அலங்காரத்தம்மாளின் அழகையும் ஆகிருதியையும் ஆள வேண்டுமென உள்ளுக்குள் தோன்றுகின்ற உயிரிச்சையின் துடிப்பும் ஆணவ நிறைவுக்குமாக தண்டபாணி எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறார். இருவருமே உள்ளூர ஒருவர் இன்னொருவர் மீது வெறுப்பைக் கொண்டிருக்கின்றனர்.
‘அம்மா வந்தாள்’ நாவலின் முதன்மையான சிக்கலாக உணர்வுகளின் நியாயத்துக்கும் பாவனைகள் அல்லது ஒழுக்க தளைகளுக்குமிடையிலான ஊசலாட்டத்தைக் குறிப்பிடலாம்.
நாவலின் இறுதியில் வரும் வருணனைப் போற்றுகின்ற வேதப்பாடல் நேரடியாக மனிதர்களுக்கிருக்கும் உயிரிச்சையைப் பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்புபடுத்தும் பாடலாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அம்மாவைப் பொறுத்தளவில் வேதமென்பது தவறைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்ட தூய அறிவு. அதன் தரிசனத்தைக் கற்றுத் தேறும் மகனிடம் அடைய எண்ணுகிறாள். வேத பண்டிதனாக இருந்தாலும் அப்பு நாவலில் அடையும் தரிசனம் என்பது காமம் செலுத்தும் விசையை உணர்வதே ஆகும். அதனால்தான் அம்மாவை வெறுக்கவும் ஒதுக்கவும் முடியாமல் தவிக்கின்றான். அவனிலும் தன்னையே அலங்காரத்தம்மாள் உணர்ந்து சாவொன்றே தன்னைத் தூய்மைப்படுத்தும் என்ற முடிவை எடுக்கிறாள்.
ஜானகிராமன் காட்டுகின்ற காமமென்பது வெளியில் பெருகி உள்ளும் நிறைகின்ற காமத்தை விலக்கும் மனிதர்களின் நுண்ணிய சலனங்களை முன்வைப்பது என்று கூறினார் அரவின் குமார்.
சுதாகர்
திருமண வாழ்வில் முழுமை பெறாத மூன்று தலைமுறை பெண்களின் பார்வையில் நாவலைப் பார்த்திருந்தார் சுதாகர். பவானியம்மாள், அலங்காரத்தம்மாள், இந்து ஆகிய மூவரின் எண்ணங்கள், நுண்ணிய வெளிப்பாடுகள் மூலமாகக் காமம் என்பது உடல் சார்ந்தது மட்டுமன்று, மனம் சார்ந்தது என்பதை இந்நாவல் வழி அறிய முடிகிறது என்ற சுதாகர், அலங்காரத்தம்மாளை ஏன் எவருமே கேள்வி கேட்வில்லை என்ற தனது ஆதங்கத்தை முன்வைத்தார்.
மொழியும் பாத்திரங்களின் உரையாடலும் வாசிப்பைத் தூண்டுவதாக இருந்தது என்ற சுதாகர், மொழி கதாபாத்திரங்களின் உணர்வை நன்கு வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.
இது அக்காலத்தில் வெளியான புரட்சிகரமானதொரு படைப்பு. என்றும், இது போன்ற கருவைக் கையாள நாவலாசிரியருக்கு மிகுந்த துணிவு தேவைப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார் சுதாகர்.
தொடர்ந்து இடம்பெற்ற நாவல் குறித்த உரையாடலில், இன்றைய காலத்திலும் இத்தகைய கருப்பொருள் விவாதத்துக்குரியதாக இருப்பதை உணர முடிந்தது.
இந்த நாவலில் காட்டும் இருவிதமான ஏமாற்றங்களைச் சுட்டினார் சிங்கப்பூர் எழுத்தாளர் கணேஷ் பாபு.
நாவலின் தொடக்கத்தில், அப்புவிற்கு தன் அம்மா குறித்து தான் ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம் உடைபடும்போது தாங்க முடியாத ஏமாற்றத்துக்குள்ளாகிறான். நாவலின் முடிவில், அலங்காரத்தம்மாள், தன் மகனான அப்பு மீது தான் உருவாக்கி வைத்திருந்த எதிர்பார்ப்புகள் நொறுங்குவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் ஏமாற்றமடைகிறாள் என்று கணேஷ் கூறினார்.
நாவலின் வேதாந்த பார்வை குறித்துப் பேசினார் இளம்பூரணன். வேதாந்தத்தை முதன்மையான இலக்கு, தனி மனித உணர்தல் என்பதைத் தண்டபாணி பாத்திரம் மூலமாக அறிய முடிகிறது என்றார் அவர்.
பிராமண சமூகத்தில் பெண்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்ற கருத்தை நாவலில் காண முடிவதாகக் கூறிய ஆதித்தன், நாவல் கொடுக்கும் அந்தத் தோற்றத்தைப்ப் பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக விவரித்தார்.
இந்த நாவலின் உள்ளடக்கம் மரபைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவதும் சீண்டுவதும் என்றார் மோகனா.
புனித சிசுவாக வளர்க்கப்பட்ட அப்பு, திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுள்ள மாதின் பெண்ணை மகளை மணக்கக் கூடாது எனக் கூறும் அலங்காரத்தம்மாளின் முரண் குறித்து கேள்வி எழுப்பினார்.
இருத்தல் மீதான கேள்வியில் எழும் சுயதரிசனம்
இறுதியாகப் பேசிய ராஜகோபாலன் நாவல் குறித்து தனக்கு விமர்சனம் இருந்தாலும், இந்த நாவலைப் பார்ப்பதற்கான ஒரு அடுக்கு முறையை முன்வைத்தார்.
மாற்றம் என்பது குடும்பத்திலும் நிகழக்கூடியது. ‘பாய்மரக் கப்பல்’ நாவலில் விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் போல ‘அம்மா வந்தாள்’ நாவலில், சுயம் – இருத்தல் மீதான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சமூக இழுக்கு, அதனால் ஏற்படும் சமூக அழுத்தங்களால் சுயத்தில் ஏற்படும் மாற்றத்தையும் அதே நேரத்தில் விட்டுக்கொடுப்பதைத் தவிர்க்க முனைவதையும் காட்டுகிறது.
அதனால் அம்மா, மகள், மருமகள், தோழி எனப் பலவாறு மாறுபடும் ஒருவரின் பாத்திரம் மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, அதனை உள்வாங்கிக் கொள்ள முனையும் அல்லது தவிக்கும் மனிதர்களின் அக உணர்வுகளையும் நாவலில் காட்டுவதாகக் கூறினார்.
இருத்தல் மீதான நம்பிக்கைகள் கலைத்து அடுக்கப்படுவதில் ஏற்படும் சுயதரிசனம் என்றார் ராஜகோபால்.
***
‘பாய்மரக் கப்பல்’ நாவல் பற்றிப் பேசிய பெண்களும் அந்நாவலில் பெண்களின் குரல் அடக்கப்பட்டிருப்பதாகக் கூறியதால், அந்தச் சிந்தனையைத் தொடர்ந்த உரையாடல்களில் வெளிப்பட்டது.
அதே போல, ‘அம்மா வந்தாள்’ நாவல் குறித்துப் பேசிய இரு ஆண்களும் ஆணின் பார்வையிலேயே பேசினர். ஆண் பாத்திரங்கள் குறித்துப் பேசினாலும், பெரும்பாலான அலங்காரத்தம்மாள், இந்து, பவானியம்மாள் மூவரைச் சார்ந்தும் அவர்களது செயல்பாடுகள் ஏற்படுத்திய சிந்தனை சார்ந்துமே அவர்களது பார்வையிருந்தது. கதை சொல்லியாக அப்பு இருந்தபோதும், பெண் பாத்திரங்கள் வழியாகவே நாவல் தரும் தரிசனத்தை அவர்கள் பார்த்தனர். முந்தைய உரையாடலைப் போலவே இவர்களது பார்வையே உரையாடலை நகர்த்தியது.
ஒரு வேளை, இரு நாவல்களையும் ஆண்- பெண் இருவரும் கலந்து பேசியிருந்தால் உரையாடல் சற்று வேறாக இருந்திருக்குமோ எனத் தோன்றியது.
எனினும், நாவல் அமர்வு இறுதி அமர்வாக இருந்ததால், உரையாடலுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. சரியாக மதியம் 12:15க்கு அமர்வு முடிந்து, அறை ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் ஏற்பாட்டாளர்கள் பரபரப்பாக இருந்தனர். பங்கேற்பாளர்களும் தங்கள் தங்குமறையைக் காலி செய்து அடுத்த நிகழ்வுக்குத் தயாராகும் மனநிலையில் இருந்தனர். அன்று மதியம் 2:00 மணிக்கு இளம் எழுத்தாளர் விருது விழா நிகழ்வு தொடங்க இருந்தது.
***
இந்த உரையாடல் தொடரப்படும்போது மேலும் ஆழமான புரிதலும் விரிந்த பார்வையும் ஏற்படும்.
ராஜகோபால் முன்வைத்த முறை எல்லா நாவல்களுக்கும் பொருந்துமா, தொடக்க நாவல்கள் எல்லாவற்றையும் அந்த அடுக்கு முறையில்தான் பார்க்க வேண்டுமா, வாசிப்பு நிலையிலிருந்து விமர்சனப் பார்வைக்குச் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை போன்றவற்றைப் பங்கேற்பாளர்கள் இந்தத் தளத்தில் தொடர் உரையாடலாக எடுத்துச் செல்வது நிச்சயம் எல்லாருக்கும் பயனளிக்கும்.