நாளை மறுநாள் நிஷா அக்காவின் திருமணம். அவள் என் நண்பனின் அக்கா என்பதால் நானும் அக்காவென்று அழைப்பேனே தவிர எங்களுக்குள் இரத்த உறவெல்லாம் இல்லை. ஆனால், நாங்கள் நல்ல நண்பர்கள். தன் வயதினரிடமோ அல்லது தன்னைவிட மூத்த வயதினரிடமோ பழகுவதற்குப் பெண்களுக்குக் கிடைக்காத சுதந்திரம் இளைய வயதினரிடம் பழகுவதற்கு எளிதாக கிடைத்து விடுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும், சமூகத்திற்கும் அதில் சில கணக்குகள் இருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் நாங்கள் அறிந்திருக்கவில்லை. சிறு வயது முதலே என் நண்பன் அவன் அக்காவுக்காகச் செய்ய மறுக்கின்ற சிறிய வேலைகளையெல்லாம் நான் செய்து உதவியதன் வழியாக இயல்பாகவே எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகியிருந்தது.
பள்ளி இடைவேளைகளில் மாணவர்கள் கூட்டமாக ஈக்களைப் போல மொய்க்கும் கடைகளில் இருந்து உப்பு நீரில் ஊறவைக்கப்பட்ட நெல்லிக்காய், மாங்காய் வாங்கி கொடுப்பது, ரெக்கார்ட் நோட்டுகளில் படம் வரைந்து கொடுப்பது, மதிப்பெண் சான்றிதழில் அவள் அப்பாவின் கையெழுத்தைப் போடுவது என என் நண்பனைவிட நான் நிஷா அக்காவிற்கு விசுவாசமானவனாக இருந்தேன். அவள் ரகசியங்களை வாயைக் கையால் பொத்தி என் காதில் சொல்லிச் சிரிக்கும்போது அவள் கண்களில் நான் காணும் பயமின்மையும் தயக்கமின்மையும் உள்ளூர என்னை அவளுக்கு நெருக்கமானவனாக உணர வைத்தது. என்னைவிட மூன்று வயது பெரியவள் என்பதால் எனக்காக அவளின் ஏவல்கள் எல்லாம் கெஞ்சலாகவோ, வேண்டுகோளாகவோ அல்லாமல் எப்போதும் ஆணைகளாகவே இருக்கும். என் பருவ வயது சோகங்களில் தலையைத் தட்டி, “பைத்தியம், இது ஒரு விஷயமா?அவ ஒரு ஆளுனு இதுக்காக நீ வருத்தப்படுற,” என எளிதில் கடந்து செல்பவளாகவும் என்னையும் கூட்டி செல்பவளாகவுமே இருந்திருக்கிறாள்.
இப்போது இந்தத் திருமணம் கூட அவளின் பெற்றோரால் பல மாதங்களாகத் தேடி கண்டடைந்த சம்மந்தம் அல்ல. அவளாகவே கண்டடைந்த சம்மந்தம். அக்காவின் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டில் தினமும் காலையில் கடலுக்குச் சென்று வந்து ஈரச்சாரத்தோடு பல் தேய்த்து குளிக்கும் எல்லோருக்கும் தெரிந்த பையன்தான் மாப்பிளை.
அவள் காதலைப் பற்றி என்னிடம் சொன்னபோது நான் குழப்பமாகக் கேட்டேன், “நீ காலேஜுக்கு போய் படிக்குற, கடலுக்கு போறவன ஏன் லவ் பண்ற?” என்னை அறியாமலே அக்காவின் எதிர்காலத்தின் மீது நான் ஏற்றியிருந்த எதிர்பார்ப்புகளின் பிரதிபலிப்பாகவே அந்தக் கேள்வி ஒலித்தது.
அவள் முறைத்துக் கொண்டே, “எல, அவன் என்ன சொன்னான் தெரியுமா?” எனப் பெண்களுக்கே உரித்தான ஆளுமையின் வெளிப்பாடான புருவத்தை உயர்த்தினாள்.
நான் என்னவென்பது போல அவளைப் பார்த்தேன்.
“நேத்து நீ என்னை பாத்து சிரிக்காம போன, இன்னிக்கு வலைல ஒரு மச்சமும் இல்ல. உன் சிரிச்ச முகத்த பாத்துட்டு சந்தோசமா போனா தான் நல்லா தொழில் நடக்குது. இன்னிக்காவது சிரிச்சிட்டு போ,” எனச் சொல்லி சிரித்த அவளின் முகத்தில் காதலின் கர்வம் தெரிந்தது.
‘அய்யே, பைத்தியம்’ என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டே, “அப்ப டெய்லி நீ அவன பாத்து சிரிச்சிருக்க,” எனச் சந்தேகத்துடன் கேட்க, அவள் “இதுல என்ன இருக்கு? பக்கத்து வீட்டு பையன்தானே, டெய்லி காலேஜுக்கு போற வழில பாத்தா மூஞ்சிய தூக்கி வச்சிட்டா போக முடியும்!” அவள் மனதின் கரவை நான் கண்டுகொண்டதை எதிர்ப்பவள் போல ஆவேசமாகச் சொல்லிவிட்டு உடனே, “ஆனா அன்னிக்கு அவன் அப்டி சொன்ன பிறகு என்னால சாதாரணமா சிரிக்க முடியல,” என என்னைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
“நீ ஒரு அரலூசு, அவன் ஒரு முழு லூசு ரெண்டு பேரும் என்னவும் பண்ணுங்க,” என அன்று சொன்னாலும் அவர்களின் காதலுக்குத் தூதுவனாக நான்தான் இருந்தேன். இப்போது அவர்களின் திருமணத்திற்கும் ஒருவகையில் நான்தான் காரணமாகவும் இருக்கிறேன்.
நிஷா அக்கா காதலில் மிதந்து நேரம் காலம் தெரியாமல் போனில் மூழ்கியதால் என் ரெக்கார்ட் நோட்டை எழுதி முடிக்கவில்லை. அவளிடம்தான் எழுதக் கொடுத்திருந்தேன் என்பதும் தேர்வுக்கு முந்தைய நாள் வரை என் நினைவில் வரவில்லை. விளைவாக கல்லூரி தேர்வில் அடைந்த தோல்வியால் விரக்தியிலிருந்த நான் பழிவாங்கும் எண்ணத்துடன் அக்காவின் காதலைப் பற்றி அவள் அப்பாவிடம் பற்ற வைத்தேன். என்னால் பற்ற வைக்கப்பட்ட அந்த நெருப்பு இந்த அளவுக்குக் கொழுந்துவிட்டு எரியும் என்று நான் நினைக்கவில்லை. ஊரே அறிந்து பாட்டான பிறகுதான் தங்கள் பிள்ளைகளின் காதலைப் பற்றி பெற்றோர்களுக்குத் தெரிய வருவது அவர்களுக்கே உரித்தான சாபம். அந்தச் சாபம் நிஷா அக்காவின் அப்பாவையும் விட்டு வைக்கவில்லை. அவர் நின்று எரிந்தார். அக்காவின் நடவடிக்கைகளில் எப்படியோ காதலின் தடத்தை முன்னரே கணித்திருந்த அவள் அம்மா அவரைச் சமாதானம் செய்ய முயன்றபோதெல்லாம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவரையும் பொசுக்கினார். நான் அந்த வீட்டுப் பக்கமே போகவில்லை.
சில விதிவிலக்குகளைத் தவிர பெற்றோர்களுக்கு எப்போதுமே பிள்ளைகள் மேல் உயர்ந்த அபிப்ராயமே இருக்கும். யார் சொல்லியும் நம்பாத ஒரு விஷயம் அவர்கள் கண் முன்னே நிரூபிக்கப்படும்போது சட்டெனப் பதறி விடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை உடைவது ஒருபுறம் என்றாலும், ஊரார் முன் ஏற்பட்ட அவமானமே கோவமாக மாறி பின் ஆணவமாக உருபெறுகிறது. அந்த ஆணவத்தை உடைக்க அதைவிட மேலான பிடிவாதம் தேவைபடுகிறது. நிஷா அக்காவின் காதல் வென்றது அந்தப் பிடிவாதத்தால்தான். பல்வேறு சமாதானங்கள், பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு முடிவான அக்காவின் திருமணத்திற்காக ‘கருப்பலுவை’ கிண்டுவதற்குத் தேவையான பொருட்களை வாங்க என் நண்பன் அழைத்ததால் இப்போது அவன் வீட்டிற்கு நான் வந்து காத்திருக்கிறேன்.
எனக்கு இந்த வேலையை ஒதுக்கிவிட்டு அவன் மண்டப சமையல் வேலைகளை மேற்பார்வையிட சென்றதில் காரணம் இருக்கிறது. கருப்பலுவை திருமணம் முடிந்த இரவில் மணமக்கள் உண்பதற்காக மணவறையில் வைக்கப்படும் ‘புஜபலபாராக்கிரமம்’ முதல் தொடர்புடைய ஒரு இனிப்பு. அது கிண்டுவதற்கு மிகப் பொறுமையும், உடல் வலிமையும் அவசியம். நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் ஓய்வே இல்லாமல் வேலை செய்து இறுதியில் கருப்பலுவை உருளியிலும் அகப்பையிலும் ஒட்டாமல் பதத்திற்கு வரும்போது குறுக்கெலும்பில் தெறிக்கும் வலியில் கிடைக்கிற இடத்தில் படுத்துவிட தோன்றும். இதனிடையில் சுற்றியிருக்கும் அத்தைமார்கள், மதனிமார்களின் கேலி பேச்சுக்கு ஆளாகாமல் இருக்க வீம்புக்காக உடல் வலியையும் பொருட்படுத்தாமல் கிண்ட நேரிடும். இதனாலேயே ஆண்கள் இந்த வேலையில் இருந்து கழன்று கொள்வார்கள். நான் அவன் குடும்பத்தினருக்கு மூன்றாம் நபர் என்பதால் அத்தகைய கேலி கிண்டல்களைச் சந்திக்க நேராது என்பது அவன் எண்ணம். ஆனால், கருப்பலுவை கிண்டி முடித்த பிறகு உருளியின் உள் ஓரங்களில் பொரிந்து ஒட்டியிருக்கும் சுடு அல்வாவின் சுவைக்கு மயங்கியே நான் இந்த வேலைக்கு ஒப்புக் கொண்டேன். அந்த ருசி அல்வாவைப் பிறகு எப்போது உண்டாலும் வருவதில்லை. உடல் வலிக்க உழைத்தப் பிறகு கிடைக்கும் அந்த இனிப்பில் நான் ஒரு இன்பத்தைக் கண்டிருந்தேன்.
நிஷா அக்கா கொண்டு தந்த சீட்டையும் பணத்தையும் வாங்கிவிட்டு திரும்பிய என்னிடம் அவள், “தேங்க்ஸ் லே,” என்றாள்.
நான் புரியாமல் “எதுக்கு?” எனக் கேட்டேன்.
அவள் இரு தோள்களைத் தூக்கி விட்டு கண்களைச் சிமிட்டி, “சும்மா!” என்றபடி உள்ளே போனாள்.
நான் குழப்பமாகப் பார்த்து, “இது என்ன அதிசயமா இருக்கு,” என முணுமுணுத்தபடி திரும்பி வந்து பைக்கில் ஏறியபோது, அக்காவின் பாட்டி கூன் விழுந்த உடலுடன் இரு கைகளும் எதிர் திசையில் ஆட விருவிருவென நடந்து வந்து என்னிடம், “மக்கா, சாதனங்கள நல்லா பாத்து வாங்கு, கருப்பலுவ கனிஞ்சு வரணும், அப்பதான் மணவறைல மாப்பிள பொண்ணுக்கு இடைல ருசி கூடும்,” எனத் தீவிரமான முகத்துடன் சொன்னாள்.
நான் சிறிய புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.
இரவு பதினொரு மணிக்கு அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் உறங்கி, ஊரடங்கிய பிறகு நிஷா அக்கா வீட்டின் பின்புறம் கருப்பலுவை கிண்டுவதற்கான இடமாக முடிவு செய்யப்பட்டது. இரவுதான் அதற்கு சரியான நேரம். எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யலாம். அதுவும் இல்லாமல் இரவு பெண்களுக்கான உலகம். அவர்கள் தயக்கங்கள் களைந்து தங்கள் இளமைக்கால காதல் கதைகளையும் அந்தரங்கங்களையும் பேசி சிரிப்பதை, நோட்டமிடும் கண்களை மறைக்கும் இரவில் சொந்தங்கள் எல்லோரும் ஒரு வேலையைப் பங்கிட்டு ஒன்றாக இணைந்து செய்யும்போது அவர்களுக்குள் ஒரு இணக்கம் உருவாகிறது. விழா வீடுகளில் அந்த இணக்கம் கொண்டாட்ட மனநிலையாக மாறி அதுவரை இருந்த கசப்புகளை மறந்து எல்லோரும் ஒரே மனதுடன் செயல்படுவார்கள். ‘இது நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற உணர்வு நுண்மையாக நிறைந்து அந்தச் சூழலே ரம்மியமாக, ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சி கலைடாஸ்கோப்பின் வண்ணங்களைப் போல பல்வேறு பரிமாணங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
நான் அந்தத் தெருவில் நுழைந்தபோது நிஷா அக்கா வீடு அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டில் அப்போதுதான் அலங்கார பணிகள் நடந்து கொண்டிருந்தது. அக்காவின் வீட்டு முகப்பில் சிலர் வரவேற்புக்காக வாழை மரத்தைத் தூணோடு சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தனர். ஒரு அரிவாள் சாலையில் கிடந்தது. கம்பிகளை நட்டு போடப்பட்ட பந்தலின் கீழ் ஒழுங்கில்லாமல் இடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து இரண்டு கிழவிகள் எதையோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். ஒலி ஒளி அமைப்பு செய்த செட்காரன் தலை வரை மூடிக் கொண்டு திண்ணையில் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தான். நான் வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்புறம் சென்றேன். வீட்டில் இடப்பட்டிருந்த வண்ண விளக்குகளால் பாதையின் நிறம் மாறிக் கொண்டே இருந்தது. வீட்டின் பின்புறம் சென்றபோது பலகாரங்கள் எண்ணெயில் பொரியும் சத்தமும் அவற்றின் வாசனையும் காற்றில் நிறைந்து எல்லோரும் அவர்களுக்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்க நான் மட்டும் பொருந்தாத ஆடை அணிந்தவன் போல அங்குப் போய் நின்றேன். என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. யாரையும் எனக்குத் தெரியவுமில்லை.
“ஏ மாமி, இந்த அச்சுல முறுக்கு ஒழுங்கா வரல, வேற அச்சு இருக்கா?” என வீட்டினுள்ளிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
அப்போது கையில் அச்சுடன் வீட்டின் மறுபுறம் இருந்து வந்த நிஷா அக்காவின் அம்மா என்னைப் பார்த்து, “பிள்ள, எப்ப வந்த?” எனக் கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் அருகில் இருந்த செயரைக் காட்டி, “இதுல இரி, தேங்காபால் எடுத்து முடிச்ச உடனே தொடங்கலாம்,” எனச் சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே போனார். நான் செயரைப் பார்த்தபடியே நின்றிருந்தேன். போன வேகத்தில் திரும்ப வந்த அவர், “பிள்ள, சாப்டியா? சாப்பிடுறயா?” எனக் கேட்க, நான் “இல்ல, வேண்டாம்… சாப்டேன்…” என வேகமாகச் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.
வந்திருக்கக் கூடாதோ என்ற எண்ணம் எங்கிருந்தோ திடீரென வீசிய காற்று போல என் மனதில் பரவியது. எவ்வளவு நேரம் இவ்வாறு அமர்ந்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. சுற்றிலும் பெண்கள். பேச்சு துணைக்கும் யாரும் இல்லை. எனக்குக் கூச்சமாக இருந்தது. போய்விடலாமா என யோசித்துக் கொண்டே திரும்பியபோது, நிஷா அக்காவின் பாட்டி கையில் ஒரு சிறிய கிண்ணத்துடன் ஆடியாடி நடந்து வந்தார். அலுவை கிண்டுவதற்காக மூன்று கருங்கற்களைக் கூட்டி செய்த அடுப்பின் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருந்த கறுப்புநிற இரும்பு உருளியின் பக்கங்களில் இருந்து வடிந்து நடுவில் தேங்கியிருந்த சிறிதளவு நீரை கோரி வெளியே ஊற்றிவிட்டு வெண்ணிற துணியால் ஈரம் போக நன்றாகத் துடைத்த பின் குளிரில் நடுங்கும் உலர்ந்த உதடுகள் போன்ற விரல்களால் உருளியைத் தடவி ஈரம் போனதை உறுதி செய்துவிட்டு நிறைவடைந்த அவர் முகத்தில் மென்சிரிப்பு படர என்னைப் பார்த்து, “ஈரம் நல்லதில்ல மக்கா, கருத்தலுவனா என்னனு நினைச்ச? பாலும், கருப்பட்டியும், பச்சரிசி மாவும் துளி வெள்ளம் இல்லாம இறுவி வாரதாக்கும். இவளுகளுக்குச் சொன்ன புரியல” என்றவாறே என் அருகில் அமர்ந்தார். நான் புன்னகைத்தேன்.
“நாளபின்ன மாப்ள வீட்ல நம்மள கொற சொல்லவா,” என மூனங்கிக் கொண்டே அருகில் தேங்காய் பால் பிழிந்து கொண்டிருந்த பெண்ணிடம், “எம்மா, தல பால தனியா தானே வச்சிருக்க” எனச் சந்தேகத்துடன் கேட்க, அவள், “ஆமா பெரியாளே, வச்சாச்சு” என அனிச்சையாகச் சொல்லிவிட்டு, “மானசா, செம்புல கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என யாரையோ அழைத்தாள். நான் எதேச்சையாக திரும்பி பார்த்தபோது, வீட்டில் இருந்து கையில் செம்புடன் வந்த அவளின் முகம் வெளியில் ஒளிர்ந்த வண்ண விளக்குகளின் நிறமாற்ற இடைவெளியின் இருளில் தெரியவில்லை. அந்தக் கணம் வீட்டினுள் எரிந்த விளக்கின் ஒளியில் நிழலுருவாக தெரிந்த அவள் அடுத்த கணமே மாறிய நீல ஒளியில் எண்ணெய் மினுக்கேரிய கற்சிலை போல தோன்றினாள். ஒரு கணம் என்னைக் கண்டு விலகிய அவள் விழியசைவில் நான் எங்கோ விழுவது போல உணர்ந்தேன். விரித்திட்டக் கூந்தல். காதிலும் கழுத்திலும் கையிலும் நகைகள் ஏதும் இல்லை. நெற்றியில் பொட்டு கூட இல்லை. எளிமையான வீட்டில் அணியும் உடை. ஆனாலும் அவள் ஏன் என்னைக் கவர்கிறாள் என என்னைக் கடந்து செல்லும்போது கண்டுகொண்டேன். அவளின் மூக்கு. இலையின் நுனியில் திரண்ட நீர்த்துளி போல ததும்பிக் கொண்டிருக்கும் அவள் உதடுக்கு மேல் இலையென அது கூர் கொண்டிருந்தது. அவள் யாரென்றே எனக்குத் தெரியாது ஆனால், அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் சென்று நீரைக் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்து தேங்காய் துருவல்களை எடுத்து வாயிலிட்டு மென்றாள்.
“எடி, இது என்ன கோலம் கல்யாண வீட்ல? போய் முடிய கட்டு, காதுலயும் கழுத்துலயும் ஒண்ணும் இல்லாம ஒருமாதிரி,” எனத் தண்ணீர் கேட்ட பெண் அவளைத் திட்ட, நான் மனதிற்குள், “அது இளம் பெண்களின் தந்திரம். விழாவின் முந்தைய நாள் நகைகளைக் களைந்து எண்ணை தேய்த்த தலையுடன் எளிய உடையில் தன் அழகை மற்றவர்களின் கண்களுக்குக் குறைத்துக் காண்பித்து, விழா நாளில் அணிகள் சூடி, அலசிய கூந்தலுடன் புத்தாடை அணிந்து புது அழகு கொண்டவர்கள் போல எழும் மாயம் கற்றவர்கள் அவர்கள். ஆனால், இவளுக்கு ஏன் இந்த வேலை?” என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவள் சட்டென திரும்பி என் கண்களைச் சந்தித்தாள்.
“இப்ப தீ பத்த வச்சா தான் சரியா இருக்கும்,” எனப் பாட்டியின் குரல் எங்கிருந்தோ வந்தது.
நான் பதறி, “என்ன?” என்றேன்.
அவர் அடுப்பைக் காட்டி, “ அலுவைக்குத் தீ பத்த வைக்கணும்னு சொன்னேன்,” என்றார்.
நான் “ஆமா!” என்றபடி பாய்ந்து எழுந்து விறகு கட்டைகளை எடுத்து அடுப்பில் வைத்து அதன் மேல் சூடத்தை வைத்துவிட்டு தீப்பெட்டிக்காக அங்குமிங்கும் அலைபாய்ந்தேன்.
பாட்டி, “என்கிட்ட இருக்கு மக்கா” என்றவாறே எழுந்து மெல்ல வந்து, “இயேசுவே” எனச் சொல்லிக் கொண்டே குனிந்து தீக்குச்சியை உரசி சூடத்தில் நெருப்பைக் கொழுத்த அது விறகிலும் பற்றி எரியத் தொடங்கியது.
தேங்காய்பாலும், உருக்கிய கருப்பட்டி பாகும், வறுத்து சலித்த பச்சரிசி மாவும் தயார் நிலையில் இருக்க, இரும்பு உருளி சூடாகியதும் நிஷா அக்காவின் பாட்டி எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி சொன்னார். பின் ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலை எடுத்து தன் நெஞ்சருகே வைத்து “மாதாவே” என வேண்டிக் கொண்டு உருளியில் மெல்ல ஊற்றினாள். சுற்றியிருந்த அமைதியில் பால் சுழித்துக் கொண்டு உருளியில் நிரம்பும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. என் நெஞ்சளவு உயரம் இருந்த சட்டாய்ப்பையின் கைப்பிடியில் இரு கைகளையும் குவித்து நெஞ்சருகே பிடித்தவாறே நான் கருப்பு நிற உருளியில் வெண்ணிற பால் நிரம்புவதைப் பார்த்து நின்றேன். திடீரென எனக்கு உருளியில் நிரம்பும் பால் அவள் கண்ணின் எதிர் உருவகம் போலவும் அவள் என்னைப் பார்ப்பது போலவும் தோன்றவே நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். அவள் சிறிதும் கண்களை விலக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். மேல் உதட்டு வளைவில் வியர்வைப் பனித்திருந்தது. இரயில் ஏறி செல்லும் தண்டவாளம் போல என் உடல் மெல்ல நடுங்க இரயிலின் வேகத்தில் என் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. வியர்த்த என் உள்ளங்கையிலிருந்து சட்டாய்ப்பை நழுவியபோது நான் கண்களை விலக்கினேன். சூழலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் ஆழ்ந்திறங்கிய அவள் கூர் பார்வையை என்னால் சந்திக்க முடியவில்லை. யானை மீதமர்ந்து ஊர்வலம் வரும் அரசியின் கண்களை நேராகப் பார்க்க முடியாது. அவள் அரசி போல வீற்றிருந்தாள். அவள் உதட்டில் மெல்லிய புன்னகை இருந்ததா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஆனால், திரும்பி அவளைப் பார்க்க மனம் துணியவில்லை. அவள் உற்றுநோக்கும் பார்வையின் குளிரால் என் உடலெங்கும் ரோமங்கள் குத்திட்டு நிற்க சூடான தேங்காய் பாலின் வாசனையாக என் மனதில் மெல்ல காதல் எழுந்தது
“மணம் வந்திடுச்சி, கருப்பட்டி பாக ஊத்தலாம்,” என்றவாறே பாட்டி உருளியில் நிரம்பியிருந்த பாலில் கருப்பட்டி பாகை ஊற்றினார். வெண் நிறமும் கரு நிறமும் கலந்து தேன் நிறமாக மாறும்போது நான் மீண்டும் தண்டவாள இரயில் போல ஆனேன். இது அவள் நிறம். அவளைப் பார்க்க வேண்டாம் எனக் கட்டளையிட்ட மூளையின் ஆணையை அடம்பிடித்து மீறிய மனம் என் கண்களை அவள் பக்கம் திருப்பியது. ஒளிரும் வண்ண விளக்குகளின் மாறும் ஒளியில் விரிந்த கூந்தல் காற்றில் அசைய உறவுக்கார பெண் ஒருத்தியிடம் பேசி சிரித்தவாறே நிலக்கடலையில் தோல் அகற்றி உடைத்துக் கொண்டிருந்தாள். என்னை அறிந்தவாறே அவள் காட்டிக் கொள்ளவில்லை. என் பக்கமே திரும்பாமல் வேற்று ஆளை போல திருமண வீட்டில் சமையல் செய்ய வந்தவனைப் போல என்னைக் குன்ற செய்தாள். ‘ஆம், நான் வேற்று ஆள் தானே. என்னை பற்றி அவளுக்கு என்ன தெரியும்? ஒரு பார்வையால் வீணாக கற்பனை சிறகு விரித்து பறக்காதே’ என என்னை நானே கடிந்து கொண்டேன்.
“பாகு கொதிக்க ஆரம்பிச்சிருச்சு, மாவ தட்டுங்க,” எனப் பாட்டி சொல்ல, நிஷா அக்காவின் அம்மா வறுத்து சலித்த பச்சரிசி மாவைக் கவனமாக கொதித்துக் கொண்டிருந்த கலவையில் சேர்த்தார். இது முக்கியமான இடம். சேர்க்கும் பச்சரிசி மாவு திட்டுதிட்டாக மிதக்காமல் கலவையில் முழுதாக கரையும்படி கவனமாக கிளற வேண்டும். மாவு கரைய கரைய பாகு கட்டியாகி இறுக தொடங்கியது. இதற்குள் அடுப்பின் புகையும், சூடும் சேர்ந்து எனக்கு வியர்வையும், மூக்கு கண்களில் வியர்வையும் வழியத் தொடங்கவே அக்காவின் அம்மா தந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே கிளறிக் கொண்டிருந்தேன்.
“அடிபிடிக்க கூடாது, கவனம்” என யாரோ ஒரு பெண் சொன்னாள். நான் சுற்றியிருந்த யாரையும் கவனிக்கவில்லை. மெல்ல மெல்ல இறுகி அல்வாவாக மாறிக் கொண்டிருந்த கலவையை இடைவெளியின்றி கிண்டிக் கொண்டிருந்தேன். என் கை வலிக்க தொடங்கியது. அக்காவின் அம்மா தந்த நீரைக் குடித்து சிறிது நேரம் ஆசுவாசபடுத்திவிட்டு மீண்டும் வேலையைத் தொடங்கினேன். அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. அதற்குள் அம்மாவும் பாட்டியும் தவிர எல்லோரும் தூங்க சென்றுவிட்டார்கள். அவளும் சென்றிருப்பாள்.
“பதம் வந்திடுச்சு பாரு, தல பால எடுத்து ஊத்து” எனப் பாட்டி சொன்னபோது அரை தூக்கத்தில் இருந்த நிஷா அக்காவின் அம்மா வேகமாக எழுந்து பிழிந்த தேங்காயில் இருந்து எடுத்து தனியாக வைத்திருந்த முதல் பாலைச் சிறிது சிறதாக ஊற்றினாள். அது அல்வாவின் கருநிற மேனியில் வெண்ணிற ஆறாக ஓடி எரிமலை குழம்பில் பெய்த மழை போல உடனே ஆவியானது. தேங்காய் பால் ஊற்றி கிளற கிளற வரத் தொடங்கிய அல்வாவின் மணம் சென்று எழுப்பியது போல வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வரத் தொடங்கினர்.
“அலுவ ரெடி ஆயிடுச்சா?, நல்ல மணம் வருதே,” என தூக்கக் கலக்கத்தில் கேட்டவாறே நிஷா அக்கா வந்தாள். கூடவே அவளும் வந்தாள். நான் அவளைப் பார்த்ததும் விழிகளை விலக்கி கொண்டேன். அல்வாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும் பொடித்து வைத்திருந்த ஏலக்காய், முந்திரி பருப்பு மற்றும் உடைத்து வைத்திருந்த நிலக்கடலையும் சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி உடனடியாக தட்டுகளில் மாற்றத் தொடங்கினார்கள். நான் சென்று கைகளையும் முகத்தையும் கழுவிக் கொண்டு உடலில் நிறைந்த வலியோடு என் வீட்டிற்குச் செல்வதற்காக முன் வாசல் நோக்கி நடந்தபோது நிஷா அக்கா ஒரு தட்டு நிறைய அல்வா தூண்டுகளோடு என் எதிரே வந்தாள். நான் சிரித்தபடி ஒரு துண்டு அல்வாவில் விரலை வைத்தேன். “உனக்கில்ல லூசு, அவங்களுக்கு” என வெட்கியவாறே என்னைக் கடந்து சென்றாள். நான் திரும்பி பார்த்தேன். வீட்டு சுற்று சுவரின் வெளியே மாப்பிளை பையன் நின்றிருந்தான். அக்கா என்னிடம் இருந்து விலகி அவனிடம் சென்றாள்.
அல்வாவின் பிசுபிசுப்பை எங்கே துடைப்பது எனத் தெரியாமல் கொஞ்சம் நேரம் தவித்து நின்றேன். சட்டென அது அவ்வளவு அந்நியமாகத் தெரிந்தது.
தென் மாவட்டத்தில் கருப்பலுவை போன்று வெலிஉலகம் அரியாத பல இனிப்பு வகைகள் உண்டு! கதை கரு மற்றும் வட்டார மொழி சிரப்பு👏🏻👌
அருமை. எனக்கு பரிச்சயமில்லாத ஒரு புது உலகை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். மொழி நடை அருமை