
கடந்த 01.12.2024 அன்று நடந்த வல்லினம் விழாவில் பேசியதன் தொடர்ச்சி அல்லது அதன் சாராம்சம் இந்தக்கட்டுரை. இந்தக் கட்டுரையின் நோக்கம் எழுதப்படும் புனைகதைகளில் ’உயர்வு- தாழ்வு’ கற்பிப்பதல்ல. ஆனால் எழுதப்படும் அனைத்தும் ‘இலக்கியம்’ ஆகிவிடாது என்பதையும் எது இலக்கியம் என்பதையும் மீண்டும் ஒருமுறை உறுதிபடச் சொல்வதே.
***
புனைகதை என்பது பரந்து விரிந்த தளம். பொழுதுபோக்கிற்கு, வாசித்து மகிழ்வதற்கு உதவும் மெல்லிய கருக்கள்கொண்ட புனைகதைகள் முதல் குறிப்பிட்ட நோக்கம் உடைய, நுணுகி அறிந்துகொள்ள வேண்டிய, வாசகனின் ஈடுபாட்டைக் கோரும் ஆழமான கதைகள் வரையிலான படைப்புகள் நிறைந்தது இக்களம். ஒருபுறம் கல்கி, தேவன் தொடங்கி சுஜாதா, பாலகுமாரன், சுபா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் போன்ற எழுத்தாளர்கள். மறுபுறம் புதுமைப்பித்தன் தொடங்கி தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி என இன்று எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வரை நீளும் படைப்பாளிகள். முதல் பட்டியலில் இருப்போருக்கு ஆயிரக்கணக்கில், ஏன் சிலசமயம் லட்சக்கணக்கில் கூடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்றன. இரண்டாவது பட்டியலில் இருப்பவர்களது படைப்புகள் அவர்களது காலகட்டத்தில் சிலநூறு பிரதிகளே அச்சிடப்பட்டவை. ஆனால் இன்றைய தலைமுறையில் இலக்கியத்தை அணுகவிரும்புபவர்கள், அதன்வழி இருப்பின் ஆழங்களை அறிய நினைப்பவர்களின் வாசிப்பில் முதல் பட்டியலில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அதுகுறித்துப் பேசுபவர்கள் எத்தனை பேர்? கேள்விக்கான பதில் எளிமையானது. இன்னமும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை 1950களில் எழுதிய புதுமைப்பித்தன் அச்சில் ஏறுகிறார். தி.ஜாவும் சுந்தர ராமசாமியும் அப்படியே. அவர்களது படைப்புகள் இன்றும் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.

வெகுஜன இலக்கியம் என்பதற்கும் ‘தீவிர இலக்கியம்’ என்று கருதப்படுபவற்றுக்கும் இடையிலான கோடு எப்போதும் தெளிவான வரையறை கொண்டதாக இருந்ததில்லை; விவாதத்திற்குரியதாகவே இருந்துவந்துள்ளது. இருப்பினும், ஒரு படைப்பு தீவிர இலக்கிய வகைமையைச் சேர்ந்தது என்பதைச் சிலகூறுகள் வரையறுக்கின்றன. தனிமனித இருப்பு, வரலாறு, பண்பாடு, அரசியல் ஆகியவற்றிலுள்ள சிக்கல்கள்களோடு தொடர் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருப்பவையாக தீவிர இலக்கியப் படைப்புகள் இருக்கின்றன. இந்தக் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய கோட்டை ஒரு படைப்பு எப்போது தாண்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள, அப்படைப்பு சித்தரிக்க முயலும் உலகத்துடனான அதன் பன்முகத்தன்மை கொண்ட உறவு மற்றும் மனிதம், சமூகம், அதில் தனிநபரின் இடம் குறித்து அது எழுப்பும் ஆழமான கேள்விகள் ஆகியவற்றை ஆராய வேண்டும்.

முதலில், ‘தீவிர இலக்கியம்’ என்ற சொல் எப்படி, எப்போது உருவானது? இந்தச் சொல்லுக்கு குறிப்பிட்ட, ஆவணப்படுத்தப்பட்ட தோற்றம் அல்லது அதை உருவாக்கியவரென எந்தவொரு தனிநபரையும் குறிப்பிடமுடியாது. மாறாக, இலகுவான அல்லது அதிக பொழுதுபோக்கு-மையப்படுத்தப்பட்ட வகை எழுத்துகளிலிருந்து அறிவார்ந்த, ஆழமான பேசுபொருள் கொண்ட இலக்கியப் படைப்புகளை வேறுபடுத்துவதற்கான சொற்றொடராக இது உருவானது. விக்டோரியா காலகட்டத்தில் (1837-1901), இலக்கியங்கள் பெரும்பாலும் ‘உயர்ந்த’ அல்லது ‘தாழ்ந்த’ என வகைப்படுத்தப்பட்டன, ‘தீவிர இலக்கியம்’ என இன்று வகைப்படுத்தப்படுபவை ‘உயர்ந்த’ என்னும் வகைமையுடன் இணைக்கப்பட்டன. ‘தீவிர’ மற்றும் ‘வெகுஜன’ இலக்கியங்களுக்கு இடையிலான வேறுபாடு என்பது 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகம் எழுதப்பட்ட இலக்கிய வடிவமான நாவல் என்பதன் எழுச்சியின்போது முக்கியத்துவம் பெற்றது. அக்காலகட்டத்தில்தான் விமர்சகர்கள், அறிஞர்கள் ஆழமான கருப்பொருள்கள் கொண்ட எழுத்துகள் (எ.கா:மனிதனின் நிலை, ஒழுக்கம், தத்துவம்) மற்றும் வெகுஜனப் பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட படைப்புகளை வேறுபடுத்தத் தொடங்கினர்.

19ம் நூற்றாண்டில் ஆங்கிலக் கவிஞரும் விமர்சகருமான மேத்யூ அர்னால்ட், ‘பண்பாடு மற்றும் அரசின்மை’ (Culture and Anarchy-1869) போன்ற தனது படைப்புகளில் இலக்கியம் என்பது தீவிரமான நோக்கங்கள் கொண்டது என்பதை வலியுறுத்தினார். இருப்பினும், அவர் ‘தீவிர இலக்கியம்’ என்ற சொல்லை அப்போது பயன்படுத்தவில்லை. 20ம் நூற்றாண்டில், குறிப்பாக ’இலக்கியக் கோட்பாடுகள்’ உருவாகிவந்த காலத்தில் கல்வித்துறை மற்றும் விமர்சன வட்டங்களில் இந்த வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற இயக்கங்கள், மரபுகளை உடைத்தல், வடிவமுறையிலான சோதனைகளை நிகழ்த்துதல், சிக்கலான கருத்துகளைக் கையாளுதல் போன்றவற்றின் மூலம் ‘தீவிர’ என்ற வார்த்தைக்கு வலுச்சேர்த்தன. இந்த வார்த்தை தனியொரு நபரால் தோற்றுவிக்கப்படவில்லை என்றாலும் அதன் பொருள் காலப்போக்கில் வளர்ந்து வரும் இலக்கியத் தரநிலைகள் மற்றும் பண்பாட்டு உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது எனலாம். இன்று அதன் பயன்பாடு வணிகரீதியிலான அல்லது ’நிதர்சனத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்’ புனைவுகளிலிருந்து வேறுபட்டு, ஆழமான கருப்பொருள்/பேசுபொருள் கொண்ட, சிந்தனையைத் தூண்டுகிற, நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக் கூடிய படைப்புகளை அடையாளப்படுத்தப் பயன்படுகிறது.
(தீவிர) இலக்கியத்தின் மையம் என்பதே உலகத்துடனான உறவுதான் — அவ்வாறான படைப்புகள் அது எழுதப்படும் காலகட்டத்தின் வரலாற்று, பண்பாட்டு, அரசியல் சூழல்களுடன் ஆழமான பிணைப்பைக் கொண்டவை. படைப்பு என்பது வெறும் கதைகூறல் என்பதற்கு அப்பால் சென்று, மனிதனின் நிலை, சமூகக் கட்டமைப்புகள் மற்றும் இருத்தல் சார்ந்த தடுமாற்றங்கள் குறித்த நுணுக்கமான பார்வைகளை முன்வைக்கும்போது குறிப்பிடத்தக்க படைப்பாக மாறுகிறது. உதாரணமாக வரலாற்றுப் புனைவுகளை எடுத்துக் கொள்வோம். ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த புனைவை எழுதும்போது அங்கே ‘வரலாற்றைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம்’ என்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்தல்ல. ஒரு நிலத்தின் வரலாற்றுத் தருணத்தைத் தன் புனைவுக்குள் எழுத்தாளன் உட்பொதித்து வைக்கும் அதேசமயம் அத்தருணத்தை உலகளாவிய சிக்கல்களோடு தொடர்புபடுத்தியும் அச்சிக்கல்கள் சார்ந்த பார்வைகளையும் முன்வைக்கும்போது அது படைப்பிற்கு ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் வழங்கும், அப்படைப்பை வெறும் பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்டதாக மாற்றும். அவ்வாறான படைப்புகளில் ‘வரலாறு’ என்பது வெறும் ’பின்னணி’யாக மட்டுமின்றி, கதாபாத்திரங்கள், அவற்றின் நோக்கம் மற்றும் அனுபவங்களை வடிவமைக்கும் ஓர் உயிருள்ள சக்தியாக மாறுகிறது.

உதாரணங்களாக இரண்டு படைப்புகளைக் குறிப்பிடலாம். லியோ டால்ஸ்டாய் எழுதிய ’போரும் அமைதியும்’ மற்றும் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’. போரும் அமைதியும் நாவல் நெப்போலியப் போர்களின் பிண்ணனியில் அமைக்கப்பட்டது, போரின் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் ரஷ்யப் பிரபுக்கள் மற்றும் சாமானியர்களின் பின்னிப்பிணைந்த வாழ்க்கையை விவரிக்கிறது. இது தனிப்பட்ட நபர்களது வாழ்க்கைப் போராட்டங்களின் விவரிப்பு மட்டுமல்ல, தனிமனிதனின் வாழ்க்கையை வடிவமைப்பதில் வரலாற்றின் பங்கு என்ன என்பதை ஆராய்கிறது. அதேபோல கடலுக்கு அப்பால் இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியில் எழுதப்பட்டது. போர்ச்சூழலில் வேறொரு நாட்டில் வசிக்கநேர்ந்த கதைசொல்லியான பாண்டியனின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்கள் இதே ஆராய்ச்சியை நிகழ்த்துகின்றன.

இந்த உதாரணங்களோடு நாம் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலையும் கூடச் சேர்த்துக்கொள்ளலாம். வரலாறு, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கலான ஊடுபாவுதான் அந்நாவல். அதில் புயேந்தியா குடும்பத்தின் கதை லத்தீனமெரிக்காவின் பரந்துவிரிந்த அரசியல் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்து, அதிகாரம் மற்றும் புரட்சியின் சுழற்சித்தன்மை குறித்த விவரிப்பை வழங்குகிறது. இவ்வாறான படைப்புகள் தனிமனித மற்றும் வரலாற்றின் கலவையாக, குறிப்பிட்ட காலத்தின் சமூக-அரசியல் சூழல் தனிமனிதனை எவ்வாறு உருமாற்றுகிறது, தனிமனிதன் அவற்றை எவ்வாறு வடிவமைக்கிறான் என்பதை முன்வைப்பதன்வழி, தீவிர இலக்கியத்தில் தங்களுக்கான இடத்தைப் பெறுகின்றன.
அடுத்து, பண்பாட்டுத் தனிச்சிறப்புகளைக் குறிப்பது ஒரு படைப்பை வெறும் புனைகதை என்பதிலிருந்து தீவிர இலக்கியத்திற்கு உயர்த்தும் மற்றொரு முக்கியக்கூறு. இலக்கியத் தளத்தில் முக்கியமாகக் கருதப்படும் பல படைப்புகள் அதில் சித்தரிக்கப்படும் சமூகங்களின் பண்பாடு, மரபுகள் மற்றும் சித்தாந்தங்களை ஆழமாக ஆராய்ந்து வெளிப்படுத்துகின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட தேசம் அல்லது காலகட்டத்தின் பண்பாட்டு நுணுக்கங்கள் கதையை இணைக்கும் சரடாக மாறும், அது விவரிக்கப்படும் சூழலை மட்டுமின்றி அப்படைப்பைப் பொருள்கொள்வதில் செழுமையான பல அடுக்குகளையும் வழங்கும். எனக்கு மிகவும் பிடித்த இந்திய—ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் மால்குடி டேஸை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் (Malgudi Days தவிர்த்து அவரது மற்ற படைப்புகளைத் தீவிர இலக்கியமென்று வகைப்படுத்த முடியாது என்றாலும்). இந்தியச் சமூகத்தின் பின்காலனித்துவ மனோநிலையைப் பண்பாட்டு நுணுக்கங்களோடும் அக்காலகட்ட மனிதர்களை, அவர்களது அக-புறச் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் விதமான படைப்பு அது. தீவிர இலக்கியம் என்பது வெறுமே பண்பாட்டை மட்டும் சித்தரிப்பதில்லை; அதை விசாரணைக்கு உட்படுத்துகிறது. பண்பாட்டு விதிமுறைகளுக்குள் இருக்கும் உள்ளார்ந்த பதட்டங்களை, முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறது, ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வாசகனைத் தூண்டுகிறது. கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் பண்பாடு மற்றும் வரலாற்றின் சிக்கல்களை வெறுமனே கவனிப்பவனாக இருக்காமல் வாசகனையும் அதில் ஈடுபடும்படி வலியுறுத்துகிறது.
படைப்பில் அரசியல் பேசப்படுவதும் புனைகதையை தீவிர இலக்கியத் தளத்துக்கு உயர்த்துவதில் முக்கியப்பங்கு வகிப்பது. ஓர் இலக்கியப் படைப்பின் அரசியல் தாக்கங்கள் பெரும்பாலும் அது எழுதப்பட்ட காலகட்டத்தின் சூழலுக்கு அப்பாலும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. சமூகம் மற்றும் அரசியல் குறித்த உரையாடல்களில் இலக்கியத்தின் செல்வாக்குச் செலுத்தும் ஆற்றல் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலைச் சொல்லலாம். சர்வாதிகார ஆட்சி மற்றும் அரசதிகாரத்தின் அடக்குமுறைச் செயல்களை அதில் அவர் விமர்சிக்கிறார். உண்மையைத் திரித்தல் மற்றும் தனிநபர் சுதந்திரங்கள் நசுக்கப்படும் ஒரு கற்பனை உலகத்தைப் பற்றிய ஆர்வெல்லின் சித்தரிப்பு இன்றைக்கும் உலகம் முழுக்கப் பொருந்தக்கூடியதாக உள்ளது. இந்த நாவல் 20ம் நூற்றாண்டிலிருந்த சர்வாதிகாரத்தின் விமர்சனமாக மட்டும் இல்லாமல், கட்டுப்பாடுகளற்ற அரசதிகாரத்தின் விளைவுகள் குறித்த ஓர் எச்சரிக்கையாக இருக்கிறது. அதே வகையில், அதிகாரத்துவம் மற்றும் ஒடுக்குமுறை அடங்கிய உலகில் வாழ்வின் அபத்தத்தையும் தனிமனிதனின் அந்நியப்படுதலையும் ஆராய்ந்த ஆல்பர்ட் காம்யூ மற்றும் ழான்-பால் சார்த்தர் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் தனிமனித மற்றும் கூட்டு நனவிலியின் குறிப்பிடத்தகுந்த விமர்சனங்களாக இருக்கின்றன. சார்த்தரின் நாஸியா (Nausea), காம்யூவின் அந்நியன் ஆகியவை இருத்தலியல் கவலைகள், நவீனத்துவத்தால் உருவான அந்நியமாதல் ஆகியவற்றின் வெளிப்படையான ஆய்வுகள் என்றே கூறலாம்.

தீவிர இலக்கியத்தின் மற்றொரு முக்கியப்பண்பு அதன் தத்துவ ஆழம். பொழுதுபோக்குவதற்கும் தார்மீக வழிகாட்டுதலை வழங்கவும் முற்படும் வெகுஜன வாசிப்புக்கான கதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் என்பது வாழ்க்கை, இறப்பு, காதல், சுதந்திரம், சமூகம், இருப்பின் அர்த்தம் குறித்த கேள்விகளை முன்வைக்கிறது. அவ்வாறான இலக்கியப் படைப்புகள் ஆழமான, பெரும்பாலும் பதிலளிக்க முடியாத கேள்விகளுடன் போராடுபவை, வாழ்க்கையின் தெளிவற்ற தன்மைகளை, சிக்கல்களை வாசகனை எதிர்கொள்ள வைப்பவை. எடுத்துக்காட்டாக, ஜெயமோகனின் ‘காடு’ நாவல். அது எளிதான தீர்வுகளையோ அல்லது தெளிவான ஒழுக்க நெறிகளையோ உங்களுக்கு வழங்குவதில்லை. பதிலாக இருத்தலின், தனிமைப்படலின் சிக்கல்களைப் பல்வேறு கோணங்களில் அணுகிப் பார்க்கிறது. இதேபோல், தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் நன்மை-தீமையின் தன்மை ஆகியவற்றின் தார்மீகச் சங்கடங்களை ஆய்வு செய்யும் படைப்பு. இந்த இரண்டு நாவல்களின் கதாபாத்திரங்களுமே இருத்தலியல் போராட்டங்களின் உருவகம். இது வாசகனை நம்பிக்கை-அவநம்பிக்கை, நன்மை-தீமை மற்றும் தனிமனிதர்களின் தார்மீகப்பொறுப்பு போன்ற வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்ள வைக்கிறது. இவ்வாறான தத்துவக் கருப்பொருள்கள்களின் அறிவார்ந்த விசாரமும் புறவயமாக மட்டும் படைப்பை அணுகிப்பெறும் வாசிப்பனுபவம் மட்டுமல்லாது, படைப்பு முன்வைக்கும் ஆழமான கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கு வாசகனின் தீவிரமான பங்கேற்பைக் கோருவதும் தீவிர இலக்கியமாக அதை மாற்றுகிறது.

மொழியியல் தேர்ச்சி தீவிர இலக்கியத்தை வாசிக்க இலகுவான புனைகதைகளிலிருந்து வேறுபடுத்தும் மற்றொரு அடையாளம். மொழியை நுட்பமாகக் கையாளுதல் – அதாவது அதன் இசைமை, விளையாட்டுத்தன்மை, ஆழ்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் திறன், நுணுக்கங்கள் போன்றவை – ஒரு படைப்பை புனைகதையிலிருந்து தீவிர இலக்கியத்திற்கு உயர்த்தும். மொழியைப் பயன்படுத்துவதில் எழுத்தாளர்களால் செய்யப்பட்ட மொழிநடை சார்ந்த தேர்வுகள் வாசகனின் முழு அனுபவத்தையும் வடிவமைக்கக் கூடியது, அப்படைப்பின் உலகை புதிய கோணத்தில் பார்க்க அவர்களை நிர்ப்பந்திப்பது. மிலரோட் பாவிச் எழுதிய ‘கசார்களின் அகராதி’ நாவலைக் கவனியுங்கள், அதன் அகராதி பாணியிலான விவரிப்பு ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை வெவ்வேறு கோணத்திலிருந்து அணுக அனுமதிக்கிறது. மொழியின் தேர்ச்சி தீவிர இலக்கியத்தின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று, வாசகனிடமிருந்து அறிவார்ந்த ஈடுபாட்டை மட்டும் கோருவது.

மொழியியல் தேர்ச்சி, தத்துவ ஆழம் ஆகியவை தீவிர இலக்கியத்தை வரையறுக்கும் அதேநேரத்தில், அதன் நீடித்த, காலம் கடந்த பொருத்தப்பாடும் முக்கியமாகிறது. தீவிர இலக்கியத்தின் ஒரு படைப்பு காலத்தின் மாறுபாடுகளைத் தாண்டி, கால எல்லைகளைக் கடந்து ஒவ்வொரு தலைமுறையினருடனும் உரையாடுகிறது. சமூக விதிமுறைகள், வரலாற்றுச் சூழல்கள் மாறி வேறொன்றாக உருவாகும்போது கூட அப்படைப்பு பொருத்தமானதாக இருக்கும். உலக இலக்கியத்தின் உன்னதமான படைப்புகளில் ஒன்றான புதுமைப்பித்தனின் சிறுகதைகள் ‘காலமற்ற’ மனிதக் கவலைகள், இருப்புசார்ந்த கேள்விகளை ஆராய்வதன் மூலம் அதன் காலங்கடந்து நீடிக்கும் சக்தியைத் தக்கவைத்துக் கொள்கிறது. அவை மனித இயல்பு குறித்த நுண்ணறிவுகளை நமக்கு வழங்கக்கூடியவை, அந்தப் படைப்பின் உருவாக்கத்தின் போதான குறிப்பிட்ட வரலாற்றுச் சூழ்நிலைகள் வரலாற்றில் கடந்துசென்ற பின்னும் அவை பொருத்தப்பாட்டை இழப்பதில்லை. காலம் தாண்டி அவை செலுத்தும் நீடித்த செல்வாக்கு மற்றும் தொடர்ந்த பொருத்தப்பாடு ஆகியவை அப்படைப்பு தீவிர இலக்கியம் என்ற நிலையை உறுதிப்படுத்துகிறது. அதாவது குறிப்பிட்ட படைப்பு எழுதப்பட்ட காலகட்டத்தில் மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியதாக இருப்பது.
ஒரு படைப்பு பன்முகவாசிப்புச் சாத்தியங்களைக் கொண்டிருப்பது மற்றுமொரு முக்கிய அடையாளம். அதாவது படைப்பில் நேரடியாக விவரிக்கப்பட்டுள்ளதைக் காட்டிலும் மேலதிகமாக வாசகன் தனது தொடர்சிந்தனையின் மூலமாகச் சென்றடைதலுக்கான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது. உதாரணமாக அசோகமித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதையை எடுத்துக் கொள்வோம். மேலோட்டமான வாசிப்பில் நலிந்த நிலையிலிருக்கும் நாட்டுப்புறக் கலைஞனின் நிலையைச் சொல்வதாகத் தோன்றினாலும் தேர்ந்த வாசகன் அக்கதையை, கலையின் உச்சம் வெளிப்படும் தருணம், கலையில் தனக்குள்ள தனித்துவம் குறித்த கலைஞனின் நிமிர்வு என நீட்டித்துக் கொள்ள முடியும்.
மற்றொரு கூறு வாசக இடைவெளி. ஒரு படைப்பில் எழுத்தாளன் முழுமையாக விளக்காமல் கோடிட்டுக் காட்டிச் செல்லும் இடங்கள், வாசகனால் கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்ள முடியும் என்பது. நவீனின் நெஞ்சுக்கொம்பு என்ற சிறுகதையில் முக்கியப் பெண் கதாபாத்திரம் தனது மாதவிடாய்த் துணிகளைப் பலரும் பார்க்க உலர்த்துவதைக் குறிப்பிடலாம். ஆண்மைச் செருக்குடன் உடல்வலிமையால் அனைவரையும் அடக்கியாளும் கொய்த்தியாவ் மணிக்கு அவள் அளிக்கும் பதில், உன்னால் என்னைக் கருவுறச் செய்யமுடியவில்லை, எனவே நீ ஆண்மகனில்லை என்பதை ஊரறியச் செய்வேன் என்பதான செயல். இந்த வார்த்தைகள் கதையில் சொல்லப்படுவதில்லை, ஆனால் வாசகனால் விளங்கிக்கொள்ளமுடியும்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். வாசகனே படைப்பை அர்த்தப்படுத்திக் கொள்கிறான் எனும்போது வெகுஜன இலக்கியப் படைப்பையும் வாசகனால் வெவ்வேறு வகையில் வாசித்து அதன் எல்லைகளை நீட்டித்துக்கொள்ள முடியாதா? அப்போது வெகுஜனப் புனைவையும் இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே? தீவிர இலக்கியம் மற்றும் வெகுஜன இலக்கியம் இரண்டும் மாறுபட்ட வாசிப்புச் சாத்தியங்களைக் கொண்டிருக்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், முன்கூறியபடி படைப்பின் ஆழத்திலும் நோக்கத்திலும்தான் வேறுபாடு உள்ளது. தீவிர இலக்கியம் உலகளாவிய கருப்பொருள்கள், தத்துவ விசாரங்கள், உணர்ச்சிசார் சிக்கல்களுடன் உரையாடலை நிகழ்த்தி பண்பாடுகள், சகாப்தங்களைக் கடந்து ஒத்திசையும்படி அமைக்கப்பட்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மொழிபு, நுணுக்கமான பாத்திரங்கள் மற்றும் அதிநவீன மொழி மூலம் வாசகனுக்குச் சவால் விடுப்பதாக இருக்கும். இந்தப் பேசுபொருளின் ஆழம் மீள் வாசிப்புகளின்போது புதிய அறிதல்களை வெளிப்படுத்தும், பெரும்பாலும் மொழியப்பட்டதற்கு அப்பாற்பட்ட ஒன்றை வாசகனுக்கு வழங்கும். அசோகமித்திரனின் புலிக்கலைஞன், பிரயாணம் போன்ற சிறுகதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மறுபுறம், வெகுஜனப் புனைகதைகள் பொதுவாக பொழுதுபோக்கிற்கு முன்னுரிமை அளிக்கின்றன, அவை Genre எனப்படும் வகைமரபுகளை, நேரடியாக விஷயங்களைத் தெளிவுபடுத்தும் முறையைக் கடைபிடிப்பவை. வெகுஜனப் புனைவிலிருந்து மேலதிக விளக்கங்கள் எழலாம் என்றாலும், அவை வாசகனின் கண்ணோட்டத்தில் இருந்து உருவாகின்றன, படைப்பில் பொதிந்துள்ளவற்றிலிருந்து அல்ல. முன்சொன்ன உதாரணங்கள் இதை விளக்கும். எனவே இது வெறுமே வாசகன் ஏற்படுத்திக் கொள்ளும் விளக்கத்திற்கான விஷயமல்ல, படைப்பின் கலை மற்றும் அறிவுசார் லட்சியத்தோடு தொடர்புடையது.
***
அடுத்ததாக தீவிர இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் மொழிநடை, மொழிபு, நுட்பங்கள், உத்திகள் அதன் செழுமைக்கும் தாக்கத்திற்கும் கணிசமாகப் பங்களிப்பவை. கட்டமைப்பு சார்ந்த விஷயங்கள்தான் என்றாலும் இவை படைப்பில் கூறப்படும் கருத்துகளை ஆழமான அனுபவங்களாக மாற்றுகின்றன. உவமான உவமேயங்கள் உருவகங்களைப் பயன்படுத்துதல், மொழிபு உத்திகளான நனவின் ஓட்டம் அல்லது நேரியல் அல்லாத கதைசொல்லல் போன்ற விவரிப்பு நுட்பங்கள், வழக்கமான வாசிப்பைத் தாண்டிய அனுபவங்களை வழங்குகின்றன, படைப்புடன் ஆழமான ஈடுபாட்டைக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றன. ’லோலிதா’ நாவலில் நபகோவின் சிக்கலான சொற்பயன்பாடு அல்லது ஹாப்ஸ்காட்ச் நாவலில் கொர்த்தஸாரின் பரிசோதனை முறையிலான கட்டமைப்பு போன்ற இலக்கிய நுட்பங்கள் பொருள்கொள்ளுதலில் பல அடுக்குகளை உருவாக்குவதால், படைப்பென்பது வெறும் கதையாக இல்லாமல் வாசகன் அணுகிப் புரிந்துகொள்ள வேண்டிய கலையாக மாறுகிறது. இந்தக்கூறுகள் தீவிர இலக்கியத்தை வெறும் கதைசொல்லலுக்கு அப்பால் உயர்த்தி, அதை வடிவம், நடை, வெளிப்பாட்டின் எல்லைகள் பற்றிய கலைசார் ஆய்வுகளாக மாற்றுகின்றன எனலாம்.

கதாபாத்திரங்களில் உள்ள சிக்கலான தன்மை தீவிர இலக்கியத்தின் ஓர் அடையாளம் எனலாம். இது நேரடியான அல்லது வழமையான பாத்திரங்களைக் கொண்ட வெகுஜனப் படைப்புகளிலிருந்து இலக்கியப் படைப்புகளை வேறுபடுத்துகிறது. இவ்வகையான கதாபாத்திரங்கள் பெரும்பாலும் பன்முகத்தன்மை கொண்டவை, உண்மையான மனித நடத்தையின் சிக்கல்களைப் பிரதிபலிப்பவை. முரண்பாடுகள் மற்றும் அக-மோதல்களை உள்ளடக்கியவை. அப்பாத்திரங்கள் கதையின் போக்கில் பரிணமிக்கின்றன, சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்பகத்தன்மை உடைய, அனுமானிக்க முடியாத வழிகளில் தங்களை வெளிப்படுத்துவதால் அவை வாசகன் தன்னோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியதாக, சுவாரசியமானவையாக மாறுகின்றன. பாத்திரங்களின் சிக்கலான தன்மை வாசகனை அக்கதாபாத்திரங்களின் இடத்திலிருந்து சிந்திக்க, அவற்றைப் பகுப்பாய்வு செய்ய, அதுகுறித்து விவாதிக்க வகைசெய்கிறது, வாசித்துமுடித்த பிறகும் அந்தக் கதாபாத்திரங்கள் மனதில் நீடித்திருப்பதை உறுதிசெய்கிறது.
***
ஒரு படைப்பு எவ்வாறு ‘முக்கியமானது’ அல்லது இலக்கிய ‘நியதி’க்குட்பட்டது என்ற கேள்வி இலக்கியம் மற்றும் பண்பாட்டு வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு கேள்வி. ஒரு படைப்பை ‘இலக்கிய நியதி’க்குள் பொருத்தும் செயல்முறை என்பது புறவயமானதோ அல்லது நேரடியானதோ அல்ல; அது சமூகம், பண்பாடு மற்றும் அதன் நிறுவன சக்திகளால் வடிவமைக்கப்பட்டது. இலக்கிய நியதியில் ஒரு படைப்பைச் சேர்ப்பது, நடைமுறையில் உள்ள நெறிமுறைகளுக்குச் சவால் விடுக்கும், புதிய முன்னோக்குகளை வழங்கும் அல்லது இலக்கிய / அரசியல் வரலாற்றின் போக்கில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய திறனுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கார்ல் மார்க்ஸ் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் சமூக-பொருளாதாரச் சிந்தனையை மாற்றியமைத்தவை. அல்லது பெண் எழுத்தாளர்களான அயன் ராண்ட், பெண்ணியச் சிந்தனைகளை முன்வைத்த சிமோன் டி பிவோயர் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் இலக்கிய, அரசியல் நியதிகளுக்கு அடித்தளமாக உள்ளன. இந்தப்படைப்புகள் அவற்றின் அறிவார்ந்த, சிக்கலான மொழியின் காரணமாக மட்டுமல்லாமல், அவர்களது சமகாலத்தின், அதற்கு அப்பாற்பட்ட காலங்களின் உரையாடல்களை வடிவமைக்கும் திறனின் காரணமாகவும் முக்கியத்துவம் பெற்றன.
மிகமுக்கியமாக, இந்த ‘நியதி’ என்பது நிலையானதல்ல; அது தொடர்ந்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு மறுவரையறை செய்யப்படுகிறது. சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட குழுக்கள், பின்காலனித்துவ எழுத்தாளர்கள், இனம், பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த சிக்கல்களைப் பேசுபவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட குரல்களை அங்கீகாரப்படுத்துவதன் மூலம் தீவிர இலக்கியம் குறித்த நமது புரிதல் விரிவடைந்துள்ளது. அவ்வாறான எழுத்தாளர்கள் இலக்கியமெனும் நிலப்பரப்பை மறுவடிவமைப்பு செய்து, புதிய கண்ணோட்டங்களையும் புனைவுகளையும் கொண்டு வருகிறார்கள். ‘தீவிர’ இலக்கியம் என்றால் என்ன எனும் கருத்து மாறக்கூடியது. புரிந்துகொள்ளக் கூடியதாக, அது சமூகம் மற்றும் சிந்தனையின் தற்போதைய பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது.
சுருங்கச் சொன்னால், புனைகதை என்பது அதன் உடனடி மொழிபுசார் அக்கறைகளைத் தாண்டி, மனித இருப்பு குறித்த உலகளாவிய கேள்விகளுடன் உரையாடும்போது தீவிர இலக்கியமாகிறது. இந்த மாற்றம் வரலாறு, பண்பாடு, அரசியல், தத்துவம் ஆகியவற்றில் எழுத்தாளன் கொள்ளும் ஈடுபாட்டினாலும் மொழியின் மீதான அவனது தேர்ச்சியின் மூலமும் நிகழ்கிறது. தீவிர இலக்கியம் வாசகனை விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும் சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ளவும் வாழ்க்கையின்/இருப்பின் ஆதாரமான கேள்விகளைப் பிரதிபலிக்கவும் அழைப்பு விடுக்கிறது. அது வாசகனை வெறுமனே மகிழ்விப்பதில்லை; சிந்திக்கத் தூண்டுகிறது, கற்பிக்கிறது, அதனால் காலம் தாண்டி நிற்கிறது. அத்தகைய படைப்புகள் இலக்கிய நியதியின் ஒருபகுதியாக மாறுவது அவற்றின் அறிவார்ந்த மொழி மற்றும் மொழிபின் காரணமாக மட்டுமல்ல, உலகம் மற்றும் நம்மைப் பற்றிய நமது புரிதலை வடிவமைக்கும் அவற்றின் திறன் காரணமாக. அதில்தான் சுஜாதாக்களும் சுந்தர ராமசாமிகளும் வேறுபடுகிறார்கள்.