“துர்க்கனவுகளைப் பேய்கள் திங்கட்டும்,” என்று சொன்னார் அவர். முதலில் அவர் தனக்குத்தானே பேசிக் கொள்கிறார் என்று தோன்றியது. சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பிப் புன்னகைத்தார். அது என்னிடம் சொல்லப்பட்டதுதான் என்று உணர்ந்து, கொஞ்சம் தயங்கி பதிலுக்குப் புன்னகைத்தேன். இரைச்சலான ஜாஸ் இசை அதிர்ந்து கொண்டிருந்தது. விதவிதமான மது வகைகள் தொடர்ந்து கலக்கப்பட்டு பல வண்ணங்களில் மதுக்கோப்பைகள் சென்ற வண்ணம் இருந்தது. அந்தப் பார் முழுவதும் நீல நிற ஒளியால் பரவியிருந்தது.
ரொப்பங்கியில் அது புகழ் பெற்ற பார். இரு கூடங்களாக அந்தப் பார் அமைக்கப்பட்டிருந்தது. முதல் கூடத்தில், ஜப்பானிய அழகிகளுடன் அமர்ந்து குடிக்கலாம். ஆண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஐயாயிரம் யென். அந்த ஒரு மணி நேரத்தில் வழங்கப்படும் மது வகைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அருகில் அமரும் பெண்கள் தங்களுக்கான மதுவைத் தேர்ந்தெடுத்துக் கேட்பார்கள். பெரும்பாலும் விலை கூடியதாக அந்த மது இருக்கும். இவ்வகை பார்கள் ரொப்பங்கி முழுவதும் நிரம்பியிருந்தன. இரண்டாவது கூடம் தான் இந்தப் பாருக்கு கூட்டம் வருவதற்கான காரணம்.
ஒப்பாய் பார் என்று அழைக்கப்படும் இந்த இரண்டாவது கூடத்தில் நுழையும்போது பத்தாயிரம் யென் செலுத்திவிட வேண்டும். ஒரு மணி நேரத்தில் விஸ்கி, பியர் எனக் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் அங்குக் கிடைக்கும். இளம் ஜப்பானியப் பெண்கள் மேலாடை இன்றி அருகில் அமர்ந்து மதுவை ஊற்றித் தருவார்கள். முதல் கூடமும் இரண்டாவது கூடமும், மெல்லிய திரைச்சீலையால் பிரிக்கப்பட்டிருந்தது.
விதவிதமான கொங்கைகள். உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் சிறு சொப்பு போன்ற முலைகள், கைகளை மீறித் திமிறி எழுந்து நிற்கும் முலைகள், சரிந்து வழியும் முலைகள் என விதவிதமான முலைகள். சிறு குழந்தைகள், புதிதாகக் கிடைத்த பொம்மைகளைத் தொட்டும், நுகர்ந்தும் மகிழ்வது போல் ஆண்கள் தீராத ஆவலுடன் முலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்படி விளையாடுவதைச் சிறு புன்முறுவலுடன் அனுமதித்து, மேலாடையை நெகிழ்த்தி, அருகில் அமர்ந்திருந்தனர் பெண்கள். இந்தப் பிரபஞ்சத்தில் என்றென்றும் முடிவுறாத விளையாட்டு என இது நிகழ்ந்து கொண்டிருந்தது.
தங்க நிற வெல்வெட் ஷோபாக்களில் அமர்பவர்கள், அவர்களுக்கான பெண்களைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அருகில் அமர்ந்திருந்த பெண்கள், தங்களுக்கான விலை கூடிய மது வகைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கித் தர சொன்னார்கள்.புகை, மது மணத்தோடு அங்கிருந்த பெண்களின் வாசனைத் திரவியத்தின் மணமும் ஒன்று சேர்ந்து விசித்திரமான நறுமணம் அவ்விடத்தைச் சூழ்ந்திருந்தது.
கவுண்டர் இருக்கை என்றழைக்கப்படும் இடத்தில் அமர்ந்து சூடான சாக்கேவைப் பருகிக் கொண்டிருந்தேன். அப்போதுதான், என்னைப் போலவே, தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர், “துர்க்கனவுகளைப் பேய்கள் திங்கட்டும்,” என்று சொன்னார். மெல்லிய உடல் வாகு, நல்ல உயரம், திருத்தமாக வாரப்பட்ட தலைமுடி. கறுப்பு நிற சட்டையணிந்து மேலே லெதர் ஜாக்கெட் போட்டிருந்தார் அவர். அந்தச் சூழலுக்கு எந்தப் பொருத்தபாடுமில்லாது அவர் சொன்ன துர்க்கனவுகள் அந்தரத்தில் நின்றன.
சரி, மனிதர்கள் எல்லா நேரங்களிலும் பொருத்தமானவற்றைத்தான் பேச வேண்டுமா? ஜப்பானிய யென்னின் மதிப்புக் குறைந்துவிட்டது என்றோ இன்று குளிர் அதிகம் என்றோ அவர் சொல்லியிருந்தால் ஏற்படும் சலிப்பைவிட இது எத்தனை ஆசுவாசத்தைத் தருகிறது! குழந்தைகள் இரவு நேரங்களில் கெட்ட கனவுகளைக் கண்டால், ‘பக்கு’ எனச் சொல்லப்படும் ஜப்பானியப் புராண மிருகம் வந்து அந்தத் துர்சொப்பனங்களைத் தின்று குழந்தைகளைக் காக்கட்டும் என்கிற பிரார்த்தனை உண்டு. அதைதான் அவர் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஒலித்துக் கொண்டிருந்த இசை மாறி சாக்ஸபோன் ஒலிக்கத் தொடங்கியது.
“ஜான் கொல்ட்ரெய்ன்,” என்றார் கனவுகள் பற்றி சொன்ன லெதர் ஜாக்கெட் அணிந்த நண்பர்.
“ஜாஸ் இசை மிக பிடிக்குமா ?” என்று கேட்டேன்
“என் வயதை ஒத்தவர்களுக்கு ஜாஸ் இசை பிடிக்காமல் இருக்குமா? இப்போது எல்லாம் மாறி வருகிறது. ஜாஸ் ஒரு தூய இசை. அது ஒரு நிகழ்த்து கலை. இங்கு ஒலிக்கும் ஆஃப்ரோ ப்ளு ஒரே பாடல்தான். ஆனால், அதை நிகழ்த்துபவரைப் பொறுத்து மாறிக் கொண்டேயிருப்பது. கற்பனையில் மேம்படுத்திக் கொண்டே செல்வதற்கான வழிகளைக் கொண்டிருக்கும் கலைதான் எத்தனை மகத்தானது?”
“ஆம், இந்திய மரபிசையும் அப்படியான ஒன்றுதான்,”
“உண்மையில் ஜான் கொல்ட்ரெய்ன் உங்களுடைய இந்துஸ்தானி இசையால் உந்தப்பட்டவர். ரவிஷங்கருடைய சிதார் இசையின் மீது அவருக்கு மிகப் பெரிய ஈடுபாடு இருந்திருக்கிறது.”
பண்டிட் ரவிசங்கரின் சிதார் இசை வரை ஒரு ஜப்பானியர் தெரிந்து வைத்திருந்தது, ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சற்று நேரம் பொறுத்து, “ஜான் கொல்ட்ரெய்ன் 1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் வந்திருக்கிறார். சிஞ்சுக்கு கோசேய் நென்கின் அரங்கில் அவரது இசை கச்சேரி நடந்தது. அந்தக் கச்சேரியில்தான் என்னுடைய அம்மாவும் அப்பாவும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர்,”என்றார்.
“ஓ, உங்களுடைய ஜாஸ் ஆர்வம் எங்கிருந்து வந்தது என்று தெரிகிறது. சந்தித்தவுடன் காதலா?”
“ஆம், அப்படிதானே அது முடியும். இருவருக்குமே ஒரே மாதிரியான இசை ரசனை. தேடல்கள். இருவரும் சேர்ந்து சாக்ஸபோன் கூட கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். பிறகு திருமணம், இரு குழந்தைகள். எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும்போதுதான் அம்மாவிற்கு அந்தக் கனவுகள் வர ஆரம்பித்தது.”
“என்ன கனவு?”
“ஒரு மாபெரும் இசைக்கூடம் அது. பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பெனி இசைக்கப்படுகிறது. கூட்டம் நிரம்பி வழிகிறது. எப்படியோ அம்மா உள்ளே நுழைந்து விடுகிறாள். விளக்கு அணைக்கப்பட்டு, புகழ் பெற்ற ஜப்பானிய நடத்துநர் செய்ஜி ஒசாவா மேடையின் மீது தோன்றுகிறார். நிசப்தம். கூட்டத்தினரிடம் தலைகுனிந்து வணக்கம் செலுத்துவிட்டு நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் விதமாக கை அசைக்கிறார். ஒளி பாய்ச்சப்பட்டு ஒரே நேரத்தில் அனைத்து வயலின்களும் இசைக்கப்படுகின்றன. ஆனால், முழு நிசப்தம். எந்த ஓசையும் எழாமல் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. நம்ப முடியாமல் அம்மா, தன்னுடைய காதுகளைத் தடவிக் கொள்கிறாள். உற்றுகேட்டுப் பார்க்கிறாள். முழு நிசப்தம் மட்டுமே நிலவுகிறது. அற்புதமான இசை காதுகளில் விழவேயில்லை. பயத்தினால் முகம் வெளிறி, மேடையை உற்றுப் பார்க்கிறாள். வாசித்துக் கொண்டிருக்கும் இசைக்கலைஞர்கள் முகங்களில் காதுகளே இல்லை. நாசித்துவாரங்கள் மட்டும் இரு பள்ளங்களாக இருக்கின்றன. சற்று நேரத்தில் மேடை மீது ஒரு சவப்பெட்டி தோன்றுகிறது. அனைவரும் அந்தப் பெட்டியைச் சுற்றி நின்று வாசிக்கிறார்கள். சவப்பெட்டியின் உள்ளே அம்மா இருக்கிறாள். பயந்து அலறி எழுகிறாள்.
இந்தக் கனவுக்குப் பின் அவளால் இசை கேட்க முடியவில்லை. இசையில்லாத தனிமையை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து, காதுகளும் நாசிகளும் இல்லாத மனிதர்கள் அவள் கனவில் வந்து கொண்டேயிருந்தனர். எனவே, தூக்கத்தையே அவள் வெறுத்தாள். சில நாட்களில் மனநோய் அவளை ஆட்கொண்டது. திடீரென்று அழத் தொடங்குவாள். பெரும் ஓலமாக எழும் அழுகை அது. நாட்கணக்கில் தொடரும் அந்த அழுகை. காலங்காலமாக அழுத்தி வைக்கப்பட்ட துயரம் வெடித்துக் கிளம்புவது போல் வரும் அந்த அழுகையின் சத்தத்தை அக்கம் பக்கத்தினர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனபோது எனது அம்மாவைக் காப்பகத்தில் சேர்த்தனர். அம்மாவைப் பிரிந்து அப்பா நீண்ட நாட்கள் வாழவில்லை,”
“மனநோயின் அறிகுறிகள் கனவில் ஆரம்பித்தது என்பது அதிர்ச்சியளிக்கிறது.”
“தலைமுறைகளாக அந்தத் துர்க்கனவு எங்கள் குடும்பத்தைத் தொடர்கிறது என்பதை எனது தாய்மாமா மூலம் அறிந்தேன். என்னுடைய தாத்தா, அவருடைய மூதாதையர்கள் இப்படிப் பலரும் இந்தக் கனவை கண்டிருக்கின்றனர். நாசிகளும் காதுகளும் இல்லாத மனிதர்கள் கனவில் தோன்ற ஆரம்பித்தப் பின்னர் சில நாட்களில் மனப்பிறழ்வு, பிறகு இறப்பு என இது ஒரு முடிவில்லாத சுழல்.”
மரபணுக்கள் மூலம் தலைமுறைகளாகத் தொடரும் மனநோய் சாத்தியம்தான். இருபத்தி மூன்று குரொமோசோம்களில், மூன்றாவது குரோமோசோமில்தான் இந்த நோய் தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது என்று படித்திருக்கிறேன். ஆனால் எங்கேயாவது இது தொடங்கியிருக்க வேண்டுமல்லவா?
“விசித்திரமான அந்தத் துர்க்கனவு எதனால் வந்தது என்று ஏதேனும் தெரிந்ததா?”
“எனது மாமா குமானோ பகுதியில் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். சொந்தமாகச் சில மீன்பிடிப் படகுகள் அவரிடம் இருந்தன. அவரைத் தவிர எனக்குச் சொந்தகாரர்கள் யாருமில்லை. அவருக்கு இந்தக் கனவின் மூலம் பற்றி எதுவும் தெரியவில்லை. சில வருடங்கள் கழித்து, ஒரு நாள் மாமா என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவருடன் வந்து சில நாட்கள் தங்கியிருக்கும்படிச் சொன்னார். ”
சற்று நிதானித்து மாறியிருந்த இசையை கவனித்தார். சாக்கே வழங்கப்பட்ட போர்சிலின் பாட்டிலை தூக்கி அதில் வரையப்பட்டிருந்த சகுரா மலர்களை பார்த்தார். பிறகு, என்னிடம் கேட்டார்.
குமானோ பகுதியில் உள்ள கடலுக்குப் போயிருக்கிறீர்களா? மிகவும் அழகான கடற்கரை அது,”என்றார்.
“குமானோ கோதோ ஒரு புராதன யாத்திரிகர்களின் பாதை என்பது தெரியும்.”
“ஆம். கூடவே வெண்மையான மணற்பரப்பைக் கொண்ட அழகான கடற்கரைகள் அங்கு உண்டு. நான் அங்குச் சென்று பார்த்தபோது மாமா மிகவும் இளைத்திருந்தார். அவருக்கும் அந்தக் கனவுகள் வரத் தொடங்கிவிட்டன என்பதை நான் அறிந்து கொண்டேன்.”
“காதுகளற்ற இசைக்கலைஞர்கள் கனவா?”
“இல்லை. அவருக்கு வந்த கனவு சற்று வேறு மாதிரியானது. கடலுக்குள் வெகு தூரம் மீன்பிடிப்பதற்காகச் செல்கிறார். வழி தவறி கடலுக்குள் சிக்கிக் கொள்கிறார். படகும் முழுகிவிட, நீந்தி ஒரு தீவில் கரையேறுகிறார். அந்தத் தீவில் வசிக்கும் மனிதர்கள், அவரைக் காப்பாற்றுகிறார்கள். ஏதோ உந்துதலில் அவர்களை உற்றுப் பார்க்கிறார். அவர்கள் யாருக்கும் காதுகள் இல்லை. இந்தக் கனவு வரத் தொடங்கியதும்தான் அவர் என்னை அழைத்தார். மிகவும் பயந்திருந்தார். இந்தக் கனவுகளிலிருந்து எப்படியாவது தப்பித்துவிடு என்று வேண்டுதல் போல் பல முறை என்னிடம் சொன்னார். நான் தோக்கியோ திரும்பி சில மாதங்களில் அவர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் வித்தியாசமான ஒரு புகைப்படமும் இருந்தது. கற்களைக் கொண்டு அடுக்கிக் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் போல் அது இருந்தது. அந்த இடத்திற்குச் செல்லும்படி என்னிடம் வேண்டியிருந்தார் எனது மாமா. பிறகு இணையத்தின் மூலம் அந்த இடம்தான் காதுகளின் கல்லறை என்று தெரிந்து கொண்டேன்.
எத்தனையோ முறை கியோத்தோ நகரத்திற்குச் சென்று இருக்கிறேன். அதுவரை அங்கு அப்படி ஒர் இடம் இருக்கிறது என்பது தெரியாமல்தான் இருந்திருக்கிறேன். பெரும்பாலான ஜப்பானியர்களுக்கு அந்த இடமோ அதன் வரலாறோ தெரியாது. கசப்பான விஷயங்களை யார் நினைவில் கொள்வார்கள்?”
“காதுகளின் கல்லறை என்றால் என்ன?”
“நிலப்பிரபுத்துவக் காலக்கட்டத்தில் பல்வேறு தய்மியோ எனப்படும் நிலப்பிரபுக்களால் பிரிந்து கிடந்த ஜப்பானை வரலாற்றில் ஒருங்கிணைத்தவர் தளபதி ஹிதேயோஷி. உண்மையில் ஹிதேயோஷி சாமுராய் குலத்தில் பிறந்தவரல்ல. விவசாயப் பின்னணி கொண்டவர். எனவே, சாமுராய்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கிருந்தது. அவருடைய மிகப் பெரிய ஆளுமையால் முழு ஜப்பானையும் ஒருங்கிணைத்து ‘தய்க்கோ’ என்னும் பட்டத்தைச் சூடினார். அவருடைய காலக்கட்டத்தில்தான் கொரியா மீதான படையெடுப்பு நடந்தது. கி.பி 1592 முதல் 1598ஆம் ஆண்டு வரை நடந்த அந்தப் படையெடுப்பின்போது, ஜப்பானியர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றனர்.
அந்தப் படையெடுப்பில் கொன்றவர்களின் தலைகளை வெட்டியெடுத்து வந்து, அந்தத் தலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, பிரபுக்கள் சாமுராய்களுக்குப் பரிசுகளை வழங்கினார்கள். ஒரு கட்டத்தில் ஏராளமான தலைகளைக் கொண்டு வருவதில் உள்ள சிக்கலால், சாமுராய்கள் கொல்லப்பட்டவர்களின் காதுகளையும் மூக்குகளையும் மட்டும் வெட்டியெடுத்து வந்து தங்களுக்கான பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். அப்படிக் கொண்டு வரப்பட்ட நாசிகளும் காதுகளும் பிரிக்கப்பட்டும் ஜப்பானிய நிர்வாக முறைமைபடி மிகச் சரியாகக் கணக்கெடுக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டது.
பிறகு வெட்டப்பட்ட காதுகளும் மூக்குகளும் அந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அதுவே மிமிசுகா (காதுகளின் கல்லறை) என்றழைக்கப்படுகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள் அவை.”
“உங்கள் மூதாதையர்கள் அந்தப் போரில் ஈடுபட்டனரா?”
“ஆம், என் தாய்வழி முன்னோர் அந்தப் போரில் பங்கு கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வெறும் போர் வீரர்கள். அந்தக் காலக்கட்டத்தில் அவர்களுக்கு விதிக்கப்பட்டதை அவர்கள் நிறைவேற்றினார்கள். அதுவே எங்களைத் தொடரும் துர்க்கனவு என்று நீள்கிறது. அந்தக் கல்லறையில் கொல்லப்பட்டவர்களுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்து ஊர் திரும்பினேன்.”
“உங்களுடைய குடும்பம்?”
“நான் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. வாழ்க்கை செலவுகளுக்காக அவ்வப்போது வேலை செய்வேன். கொஞ்சம் பணம் சேர்த்தவுடன், எனது மோட்டார் பைக்கில் ஊர் சுற்றத் தொடங்குவேன். அப்படியே சில நாட்கள். பணம் தீர்ந்தவுடன் மறுபடியும் வேலை என எனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.”
சூடான சாக்கேவை ஊற்றிக் குடித்தார். அவரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. பிறகு சந்திப்பதாகச் சொல்லி, விடைபெற்றேன். ‘‘மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி தன்னுடைய விசிட்டிங் கார்டைத் தேடி எடுத்தார். பிறகு, எழுந்து நின்று தலை வணங்கி இரு கைகளிலும் விசிட்டிங் கார்டைப் பிடித்து என்னிடம் நீட்டினார். அயுமு அரகவா என்கிற அவரின் பெயரைப் படித்ததும் என்னை மீறிப் புன்னகைத்தேன். அயுமு என்கிற பெயரின் அர்த்தம், நடக்கும் கனவுகள். அயுமு என்கிற பெயருக்கான காஞ்சி எழுத்துக்களின் சேர்க்கை ‘மாலை நேர நிலவைக் கனவில் காணும் கண்கள்” என்கிற பொருளைத் தரும்.
வீடு திரும்பிய பின்பும் அவரைப் பற்றிய நினைவுகள் தொடர்ந்தது. சில நாட்கள் கழிந்து ஜப்பானிய தளபதியான ஹிதேயோஷி பற்றி இணையத்தில் தேடிப் படித்தேன். 1598ஆம் ஆண்டு ஹிதேயோஷி தனது இறுதிக்காலத்தில் எழுதிய கவிதை ஒன்றை கண்டெடுத்தேன்.
பனித்துளி போல் உதிர்ந்து
பனித்துளி போல் மறைவதுதான்
என் வாழ்வு.
இதில் நான் செய்ததெல்லாம்
கனவுக்குள் தோன்றிய கனவு.
வருடப்பிறப்பு என்பதால் அயுமுவிடம் பேசலாம் என்று தோன்றியது. தொலைபேசியில் அழைத்தேன். நீண்ட அழைப்பிற்குப் பின் அவர் கைப்பேசியை எடுத்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஹிதேயோஷியின் கனவு கவிதை பற்றி சொன்னேன். ஆச்சரியப்பட்டார்.
தொலைபேசி அணைப்பைத் துண்டிக்கும் முன், “நிச்சயமாக, நீங்கள் அந்தத் துர்சொப்பனங்களிலிருந்து மீள்வீர்கள். வருடத்தின் முதல் நாளான இன்று ஹட்சுயுமே என்றழைக்கப்படும் அழகான நல்ல கனவுகள் உங்களைச் சூழட்டும், ”என்று சொன்னேன்.
“நன்றி நண்பா. ஆனால், எனக்கும் அந்தக் கனவுகள் வரத் தொடங்கிவிட்டன. நாம் முதன்முதலாகச் சந்தித்த ஒப்பாய் பார் ஞாபகமிருக்கிறதா? அங்குள்ள பெண்கள்தான் என் கனவில் வருகிறார்கள். என்னுடைய மதுக் கிண்ணத்தில் மதுவை நிரப்புகிறார்கள். நெருங்கி அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது எப்போதும் எழும் அந்த நறுமணம் எழவேயில்லை. அவர்களை முத்தமிட நெருங்கும்போதுதான் கவனிக்கிறேன். அவர்கள் நாசியின்றி, காதுகளின்றி இருக்கிறார்கள்,” என்று சொன்னார்.
அதிரும் முடிவு. ஒப்பாய் பாரில் உடன் இருக்கும் பெண்கள் உள்ளபடியே யார்?
மிகச்சிறப்பு !!!!!
யுமுவுன் பரம்பரை தொடர்ச்சி யோக மரபில் சொல்வதுபோல் துக்க காரணம் – மோட்ச சாதனம். .வித்தியாசமான கதை.வரலாற்றை சம்பவங்களோடு இணைத்து ,கனவுகள் எல்லாம் அந்தந்த கதாபாத்திரங்களின் வாழும் சூழ்நிலையோடு மையப்படுத்தி இருந்தது கண்வின்சிங்காக இருந்தது. தலைப்பு அற்புதம்.
செந்தில்குமாரின் சிறுகதைகள் எனக்கு பிரியமானவை. மொழி வளமை, சிறப்பான கதைகூறும் முறை இவற்றோடு அக்கதைகளின் வழியே நான் ஜப்பானைக்கானமுடிவதும் ஒரு முக்கியக்காரணம். இந்தக்கதையும் செந்தில்குமாரின் வேறு சில கதைகளைப்போல ஒரு பாரில் தான் தொடங்குகிறது. காதும் மூக்கும் இல்லாத முகங்களுடன் மனிதர்கள் கனவுகளின் வரும் கதை.
ஜப்பானிய வரலாறு, குரோமோசோம்களைச்சொல்லும் அறிவியல், சகுரா மலர்கள் வரையப்பட்ட ஜப்பனிய அரிசி மது பாட்டில் போன்ற நுட்பமான கலாச்சாரத்தகவல்கள், இசை, உளவியல் என்று கதை சுவாரஸ்யமாகச்செல்கிறது. அயமு என்னும் சொல்லுக்கான ‘மாலை நேர நிலவைக் கனவில் காணும் கண்கள்” என்னும் அர்த்தம் ஒரு ஹைகூ போல இருக்கிறது.