ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இது போலத்தான் நடக்கும்.
அன்றும் அவன் அண்டை வீடுகளைக் கடந்து நடந்து கொண்டிருந்தான். வெயில் அவன் பின்னால் விழுந்து கிடந்தது. அது ஒரு சனிக்கிழமை மாலை. பச்சை வண்ணமிடப்பட்டிருந்த ஒரு இரும்பு கேட்டின் அருகே நின்றான். ‘ஓ வேண்டாம்…’ என்று எண்ணித் தயங்கினான். ‘இல்லை கூடாது… தயவுசெய்து வேண்டாம்… இன்னுமொரு முறையா? வேண்டாம்… கூடவே கூடாது. இவளுக்கு என்ன வயதிருக்கும்? ஏழு… எட்டு… அவ்வளவுதான் இருக்கும். இல்லை கூடாது… எனக்கு வேண்டாம்.’
அந்தக் கிராதியை ஒட்டி ஒரு சிறிய தோட்டம். சமீபத்தில் வெட்டப்பட்டும் தலை நிமிர்ந்திருந்த நுனிப்புல் தரை. அவ்வளவு நேர்த்தியாக இல்லை! மண்டிய புதரில் பாரிஜாதம் திமிறி பூத்திருந்தன. வேறொன்றும் இல்லை. சரியாக பராமறிக்கப்படாத சில வகை பூச்செடிகளும் இருந்தன. அந்தப் பெண் பஞ்சு போன்ற உரோமம் நிறைந்த ஒரு நாய்க்குட்டியோடு ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் வால்கூட வெளியே தெரியவில்லை. முகத்தில் மீசை மயிர் மட்டும் நீண்டு அடர்ந்திருந்தது.
அச்சிறு பெண் அதனோடு பேசிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவன் அவளோடு பேச முயற்சி செய்தான்.
“ஹாய்,” என்றான்.
அவள் தன் செல்ல நாய்க்குட்டியோடு விளையாடுவதிலேயே கண்ணாய் இருந்தாள்.
மீண்டும் “ஹாய்” என்றான். “உன் பெயர் என்ன?”
அவள், “என் அம்மா முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் பேச வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறாள்,” என்றாள்.
“அதனால்தான் உன் பெயரைக் கேட்கிறேன். நாம் பேசத் தொடங்கி நட்பாகிவிட்டால் நான் அறிமுகமானவன்தானே? நீ உன் பெயரைச் சொல்லு, நான் என் பெயரைச் சொல்கிறேன்,” என்றான் குழைவான குரலில்.
அவளுக்கு ஆறு வயதிருக்கும் என்று கணித்தான். ஆறுக்கு மேல் இருக்காது. ‘இந்த வயதில் மென்மையாக இருக்கும், வழவழவென்றிருக்கும். ஓ கூடாது!’
“நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.”
“நல்லது, உன் அம்மா வீட்டில் இருக்கிறாரா?”
“இல்லை, அம்மா கடைக்குப் போயிருக்கிறார்.”
”அப்படியானால் உங்க அப்பாவுடன் இருக்கிறாயா?”
‘அவள் ஆம் என்று சொல்ல வேண்டும். அவள் தன் அப்பாவோடு இருப்பதாகச் சொல்ல வேண்டும். நான் போய்விடுவேன். கண்டிப்பாகப் போய்விடுவேன்! தொல்லை வேண்டாம்.’
“இல்லை!”
“அப்படியென்றால் உன் வீட்டு வேலைக்காரியோடு?”
“என்ன?”
“உன் வீட்டு வேலைக்கு வைத்திருப்பீர்களே?”
“எங்களுக்கு வேலைக்காரியெல்லாம் இல்லை!”
“பின் யாரோடுதான் இருக்கிறாய்? உன் பாட்டி? உன் அத்தை?”
மென்மையாக மட்டுமல்ல, மிருதுவாக இருக்கும். எல்லாம் சிறியதாகவும் இருக்கும்.
“இல்லை!”
“நீ மட்டுமா இருக்கிறாய்?”
“ஆமாம்”
“இதோ பார், கேண்டி. இது உனக்குத்தான். நன்றாக இருக்கும். நீ தனியாக இருக்கிறாய் அதனால், இது உனக்கு வேண்டுமா? ஸ்ட்ரோபெரி கேண்டி”
“சரி!”
“என்னிடம் ஒரு பொம்மை உண்டு… அழகிய பொம்மை. அதற்குப் பளிங்கு போன்ற வழவழவென்ற முகம். அதன் சின்னஞ்சிறு கால்களில் துக்குணூண்டு காலணிகளையும் தலையில் சின்ன தொப்பியையும் அணிந்திருக்கும்”
“கொடு நான் பார்க்கிறேன்.” ஆவல் மிகுதியில் கேட்டாள்
“இதோ… என் கோட் பையில்தான் இருக்கிறது. நீ பார்க்கப் போகிறாயா?”
‘அவள் கால்களுக்கிடையே மிக மிகச் சிறியதாய் இருக்கும். சிரமமாக இருக்கும். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. முதல் முயற்சியிலே தோல்வி கண்டுவிடுவாய். கூச்சலிட்டு அழ ஆரம்பித்துவிடுவாள். ஊர் கூடிவிடும். நிலைமை மோசமாகிவிடும்.’
“ஆமாம்!”
“கேட்டைத் திற. நான் அந்தப் பொம்மையைக் காட்டுகிறேன்.”
“அது திறந்துதான் இருக்கிறது. என்னை உள்ளே வைத்து பூட்டிவிடக் கூடாது என்பதற்காக.”
“அப்படியென்றால் நல்லது.”
அவன் கேட்டைத் தள்ளி உள்ளே நுழைந்தான். மனம் ‘வேண்டாம்! வேண்டாம்!’ என்றே நிராகரித்துக் கொண்டிருந்தது. ஆனால், உள்மனம் ‘வேண்டும்!’ என்று துடித்தது. அவளின் மென்விரல்களுக்கிடையே உள்ள மென்மையான தோலை மிக நெருக்கமாக அவனால் உணர முடிந்தது. பட்டின் மென்மையோடும் வழவழப்போடும் மென் சூட்டோடும் இருக்கும். ‘இல்லை எனக்கு வேண்டாம். அது எனக்கு மீண்டும் நேர்ந்துவிடக் கூடாது.’ ஆனால், அவள் தனியாகத்தான் இருக்கிறாள். தனிமை என்றால் வெறும் தனிமை. சுற்றிலும், தோட்டம் மட்டுமே எஞ்சும் தனிமையில். அவளை எங்கே கொண்டு செல்லலாம் என யோசித்தான்.
“நான் பொம்மையைப் பார்க்க வேண்டும்.”
“என் அருகே வா, நான் உடனே காட்டுகிறேன். உன் கையைக் கொடு நாம் அந்தச் செடிகளின் பின்னால் மறைந்து கொள்ளலாம். நம்மை யாரும் பார்த்துவிட முடியாது. யாரும் பார்த்துவிட்டால் உன் மீது அவர்களுக்குப் பொறாமை உண்டாகும்.”
“அப்பாடியானால் வெளியே போகலாம்.”
“கேட்டுக்கு வெளியேவா?”
‘கவனம் இது உனக்குப் பழக்கமில்லாத இடம். லூசியின் தங்கையோடு இருக்கும்போது நடந்தது மீண்டும் நடந்துவிடக் கூடாதல்லாவா? கவனம்!’
“அங்கு, அந்த நிலத்தில் ஒரு கட்டடம் கட்டப் போகிறார்கள். இன்றைக்குச் சனிக்கிழமை, அதனால் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள்.”
“அந்த வீட்டுப் பக்கமாகவா போகப் போகிறோம்?”
“இல்லை, இப்படிப் போகணும். சுவற்று ஓரமாகப் போகலாம். நீங்க பொம்மையைக் காட்ட வசதியான இடம்.”
“ஆமாம்… அடர்ந்த மரமெல்லாம் இருக்கிறது.”
“அந்த மரங்களையெல்லாம் வெட்டி நீக்கப் போகிறார்கள். அம்மா சொன்னாள் அவர்கள் முட்டாள்களென்று”
“உன் அம்மா சொல்வதுதான் சரி. அவர்கள் எப்போதும் சரியாகத்தான் சொல்வார்கள். உண்மைதானே?”
‘அச்சிறுமியின் அம்மா. அவள் இப்போது வந்தால் நல்லது. இல்லை வேண்டாம்! இப்போது வரத் தேவையில்லை!’
“எனக்குத் தெரியவில்லை, எனக்கு யாரும் மிட்டாய் கொடுத்தால் நான் வாங்கிக்கொள்ளக் கூடாதென்று அம்மா சொன்னாள். எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்றாள். அவர்கள் பன்றிகள் என்று சொன்னாள்.”
“இல்லை! அப்படியில்லை. எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை. கெட்டவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்களும் இருக்கிறார்கள். உன் அப்பா நல்லவர் இல்லையா, அப்படி!”
“என் அப்பா எங்களோடு இல்லை. அந்தப் பொம்மையைக் காட்டுங்கள். நீலச் சட்டை போட்ட பொம்மை தானே?”
“ம்… ம்… ஆமாம் நீலச் சட்டை. ம்… அதை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேனே, ஆனால்…”
“நீயும் கெட்டவன்தான். உன்னிடம் நீலச் சட்டை பொம்மை இருக்கிறது என்று சற்று முன்னர்தானே சொன்னாய். இப்போது இல்லை என்கிறாய்.”
“இல்லை… நான் எவ்வளவு நல்லவன் என்று காட்டுகிறேன். என்னருகே வா. அந்த மரத்தின் பின்னால் போகலாம். பொம்மையைவிடச் சிறந்த வேறொன்றைக் காட்டுகிறேன்.”
“கவனம்… அங்கே ஒரு கிணறு உண்டு. அது பயங்கரமான கிணறு என்று சொல்கிறார்கள்.”
“ஓ தண்ணீர் விநியோகத்திற்காக இருந்த கிணறா?”
“அதேதான்… மிக மிக ஆழமானது. அதனைச் சிமெந்து போட்டு, குப்பை, கற்கள் எல்லாம் கொட்டி மூடப் போகிறார்கள் என்று திரு லோவ்ஸ் சொன்னார்.”
“திரு. லோவ்ஸ்?”
“அவர் ஒரு போர்மேன். அவர்தான் சொன்னார் அது ஆழமான கிணறு, அதன் அடி ஆழத்தில் தண்ணீர் உண்டு என்று. அதனுள் தேள்கள், தவளைகள், எலிகள் இருப்பதால் அதனைச் சீக்கிரம் மூடிவிட வேண்டுமென்று அம்மா சொன்னாள்.”
“தேள்களா! வா அங்கேயே போகலாம்.”
“அதோ அந்தக் கிணறுதான்! கவனம்.”
”ம்ம்ம்… இது அவ்வளவு ஆழமில்லையே.”
“இது மிக மிக மிக ஆழமானது. இது இந்தப் பூமியின் அடுத்த பக்கம் வரை போகுமாம்.”
“ஆமாம்… ஆழமான கிணறுதான்… ரொம்ப ரொம்ப ஆழம்.”
அவன் குனிந்து அதன் ஆழத்தை எக்கி எக்கிப் பார்த்தான். “ஆமாம் ரொம்ப ஆழம்தான்.”
அவன் இதயம் அதன் ஆழத்தைப் பார்த்து எடையற்றுப்போனது. அவன் முதுகுத்தண்டில் அச்சம் சில்லிட்டு ஊர்ந்தது. அவன் உடல் நீரில் நிழலாகத் தெரிந்தது. அவன் கவனமெல்லாம் கிணற்றில் இருந்தது. இதுதான் தக்க தருணமென்று அவள் சிறு கைகளால் அவனின் பிட்டத்தில் கை வைத்து, அவள் பலத்தை ஒன்று திரட்டி அவனைக் கிணற்றுக்குள் தள்ளினாள். அதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் கதறுவது கிணற்றுக்கு வெளியே கேட்டது. கிணற்றின் விளிம்பில் முட்டிப்போட்டு அவன் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிறுமி.
“அங்கே தேள்கள் உண்டா?” என்று உரக்கக் கேட்டாள் சிறுமி.
“ஏமாற்றுக்காரியே… என்னை விடுவிக்க வேண்டும்.”
‘என்னை எப்படி அவள் காப்பாற்றுவாள்? தள்ளிவிட்டவளே அவள்தானே… அதனால் என்னை எப்படிக் காப்பாற்றுவாள்?’ அண்ணாந்து பார்த்தான். அவள் முகம் துலக்கமாகத் தெரிந்தது. மேலே வான நீலம் அகன்று தெரிந்தது. சனிக்கிழமை அதுவுமாய் அவனைத் தனிமைக்குத் தள்ளிவிட்டிருந்தது! யாரும் அருகிலில்லை! ‘அவள் பார்க்கத்தான் களங்கமில்லாதவள் போல இருக்கிறாள். ஆனால், அவளிடமிருந்து யாரும் எளிதில் தப்பிவிட முடியாது!’
அக்கிணறு ஆறேழு மீட்டருக்கு ஆழமிருந்தது. வீட்டு விட்டத்தின் உயரத்தைவிட ஆழமாக இருந்தது. அவன் அதலபாதாளத்தில் கிடந்தான். அங்கிருந்து அவனால் வெளியேறிவிட முடியுமா?
அவன் நடுக்கத்துடன் சொன்னான். “என்னைக் காப்பாற்ற தயவுசெய்து உடனே யாரையாவது கூட்டி வா!”
அப்பெண் அங்கிருந்து நகரவே இல்லை. அவனைப் பார்த்தபடியே இருந்தாள்.
“போ… போய் யாரையாவது அழைத்து வா செல்லமே. உன் பக்கத்து வீட்டார், சாலையில் பத்திரிகை விற்கும் கடைத் தெருவிலிருந்து யாரையாவது! உடனே அழைத்து வா. உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் செல்லமே, சீக்கிரம் போ! அவர்களிடம் சொல்லி கயிற்றையோ ஏணியையோ கொண்டு வரச் சொல்… போ…”
“வெளியே நாளிதழ் விற்கும் அங்காடிக் கடை ஏதும் இல்லை. அடுத்த தெருவில்கூட கடை இல்லை”
“வெளியே உடனே யாரையாவது அழைத்து வா… கெஞ்சிக் கேட்கிறேன் பெண்ணே…”
“சரி… சரி… போகிறேன். ஆமாம் கிணற்றின் அடியில் தேள்கள் உண்டா?”
அவள் போய்விட்டாள். இப்போது தனிமை அவனை அச்சுறுத்தியது. ஒரு தேள் கூட துணைக்கு இல்லை. அவன் தன் கைகளைப் பார்த்தான். உரசல்களால் ரத்தக்கோடுகள் உண்டாகியிருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தான். இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது. சேற்றில் கால்கள் புதைந்து நின்றிருந்தான். அவன் காலணி முற்றாகப் புதைந்து, நனைந்து, ஊறி, கால்களுக்கு ஈரம் பாவின. பாதங்கள் சில்லிடத் தொடங்கின. “ஏமாற்றுக்காரப் பெண்ணே விரைவாக வந்து தொலை. அவள் என்னைக் காப்பாற்ற அழைத்து வருபவரிடம் கயிற்றை உடன் கொண்டு வரச் சொல்லி இருப்பாளா? என்னைக் காப்பாற்ற வருபவரிடம் நான் என்ன காரணத்தைச் சொல்லிச் சமாளிக்க முடியும்? விபத்து என்று கூற முடியமா? நான் எப்படி இதற்குள் விழுந்தேன். நான் எதற்காக இங்கு வந்தேன். நான் அடுத்த தெருவிலிருந்து வந்தேன். எனக்கு மூத்திரம் முட்டி என் உள்ளாடை நனைந்துவிட்டதால், அவசரமாக இங்கே வந்தேன். இங்கே யாரும் இல்லாததால் நான் கிணற்றின் விளிம்பில் நின்று சிறுநீர் கழிக்கும்போது, கால் இடறி உள்ளே விழுந்துவிட்டேன் என்று சொல்லலாமா? ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும். கடவுளே! அப்பெண் என்னைப் பற்றி வேறெதையும் சொல்லி இருக்கக் கூடாது. நான் அவளுக்கு இனிப்பைக் கொடுக்க முயன்றது பற்றியும் பொம்மையைக் கொடுத்து ஏமாற்றப் பார்த்ததையும் கண்டிப்பாகச் சொல்லியிருக்கக் கூடாது. சீக்கிரம் என்ன செய்து கொண்டிருக்கிறாள் அவள். உனக்கு ஏன் இவ்வளவு தாமதம்? மோசக்காரப் பெண்ணே?” என்று சொல்லி தலை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் மீண்டும் மேலே அண்ணாந்து பார்த்தது தப்பாகிவிட்டது. அவன் தொண்டைக்குள் ஏதோ புகுந்து அடைப்பது போல இருந்தது. கிணற்றை மூடுபவர்கள் வேலையை ஆரம்பித்துவிட்ட பிரக்ஞை தட்டியது. கற்களும் குப்பையும் தூசும் அவனை மோதி மூடுவது போல உணர்ந்தான். அக்கிணறு ஒரு சிறை போலவும், கல்லறைக்குள் அவனைப் புதைப்பது போலவும் அச்சுறுத்தியது. “வஞ்சகச் சிறுமியே… விரைந்து வா… என்ன நடந்தது தெரியுமா… எனக்கு மூத்திரம் முட்டியது, நான் சிறுநீர் கழிக்க அவசரமாக ஓர் மறைவிடம் தேடியபோது, இந்த இடம் அதற்குத் தோதாகப்பட்டது. எனவேதான், இங்கே வந்தேன். தயவு செய்து கயிற்றைக் கொடுத்து உதவுகிறீர்களா? உடல் வலிமை உள்ள யாராவது என்னை மேலே இழுத்து உயிரைக் காப்பாற்றுகிறீர்களா?”
அவன் கிணற்றுக்குள் விழுந்து இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது. அந்தக் கிணற்றுச் சுவர் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அது சமமற்றுக் கரடு முரடாக இருந்தது. வாகாகப் பிடிக்கவோ கால்களைக் கொண்டு ஏறுவதற்கு இடைவெளியற்றுக் கிடந்தது. ஒரு பிடிமானமும் தென்படவில்லை!
‘என்னைக் கொஞ்சமும் இரக்கமற்றுக் கிணற்றில் தள்ளிவிட்ட அந்த அரக்கி ஏன் இன்னும் காணவில்லை?’
ஆழ்கிணற்றுக்குள் இருள் பாய்ந்து கொண்டிருந்தது.
‘உரக்கக் கத்தப் போகிறேன். ஆமாம் என் அபயக்குரல் கிணற்றுக்கு வெளியே கேட்கும்படி கத்தப் போக்கிறேன். என் கதறல் யார் செவிகளையாவது எட்டும்.’ அவன் கூவி அழைத்தான். “என்னைக் காப்பாற்றுங்கள். நான் ஆழ் கிணற்றில் விழுந்துவிட்டேன். யாராவது ஆபத்திலிருந்து தப்பிக்க எனக்கு உதவுங்கள்.” என்று கதறிக் கதறி அழைத்தான். அப்பெண்ணையும் அழைத்தான். அவன் குரல் யாருக்கும் கேட்கவில்லை. சனிக்கிழமை. சனிக்கிழமை மாலை. “எல்லாருமே இப்படி என்னைப் பரிதவிக்கவிட்டு விடுமுறையைக் கொண்டாடக் கிளம்பிவிட்டார்களா?” ‘நாளை ஞாயிற்றுக்கிழமை வேறு. யாரும் ஊரில் இருக்கமாட்டார்களே! அந்த வஞ்சகப் பிசாசு யாரிடமாவது நான் இங்குச் சிக்கிக் கொண்டிருப்பதைச் சொல்ல வேண்டும். அவள் தாயிடம் சொன்னாலாவது அவள் வரக் கூடும். அவள் அம்மா மகள் சொல்வதை நம்பாமல் போனால், நான் என்னாவது? ‘முட்டாள்தனமாகப் பேசாதே மகளே!’ என்று அவள் சொல்வது சிறுபிள்ளைத்தனம் என்று நிராகரித்துவிட்டு…. அன்றாட வாழ்க்கையை கவனிக்கச் சென்றுவிட்டாள்!’
“அம்ம்ம்ம்மா…” அவன் கூச்சலிட்டான்.
“அம்மா… தாயே… என்னைக் காப்பாற்றுங்கள்… நான் இங்கே மாட்டிக் கொண்டேன்… இங்கே… உள்ளே…”
கிணற்றுக்கு மேலே ஒன்றுமே தெரியவில்லை. சூழ்ந்திருந்த இருளைத் தவிர. வானத்தில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. “கடவுளே… யாராவது வாருங்கள். அச்சிறுமி சொன்னதை நம்புங்கள். இனி நான் எந்தச் சிறுமியையும் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். கடவுள் சத்தியமாக. எனக்கு ஆசை வந்தால் ஒரு விலைமாதைத் தேடிப் போவேனே ஒழிய சிறுமிகளை ஏறிட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். இனி என்னால் ஒரு நொடிகூட இக்கிணற்றுக்குள் இருக்க முடியாது. திங்கட்கிழமை இந்தக் கிணற்றை மூடும் வேலை துவங்கிவிடும். நான் சாவது உறுதி. இறப்பு உண்டாவது இயல்பு. ஆனால், இப்படி நிகழக்கூடாது. கடவுளே என் குரல் கேட்கிறதா? யாரையாவது இங்கே வர வை…”
அவன் கத்திக்கொண்டே இருந்தான். இரவு முழுக்க. அவன் தொண்டை வறண்டது. எச்சிலை விழுங்கி ஈரப்பதத்தை உண்டாக்கச் சிரமப்பட்டான். மேலண்ணம் உலர்ந்துவிட்டிருந்தது. அவனால் கத்த முடியவில்லை. தொண்டை கட்டி குரல் வெளிவர மறுத்தது. அவன் முயன்று பார்த்தான். பலனில்லை. மேலே வானம் இருண்டு சுருண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்பட்டன. ‘என் அபயக்குரல் கடவுளுக்குக்கூடக் கேட்கவே இல்லை!’ சேற்றிலும் சேற்று நீரிலும் ஊறி, வியர்வையிலும் நனைந்த உடல் வலித்தது. அவன் வயிறு உள்வாங்கித் துடித்தது. உடல் நடுங்கியது. அவன் குளிக்க ஏங்கினான். கிணற்றுக்குள் இருந்து குளியலறையைத் தேடுவது அவனுக்கு முட்டாள்தனமாக இருந்தது. கூச்சலிட்டுச் சிரித்தான். பூமியின் ஆறு மீட்டருக்குக் கீழே மாட்டிக் கொண்டு குளிக்கும் அறை தேடுவதை அபத்தமாக உணர்ந்தான். தன் கால்சட்டையைத் தளர்த்தி குடலுக்குள் சுருண்டுத் தவிக்கும் அனைத்தையும் வெளியேற்ற முயன்றான்.
அவன் கால்கள் மரத்து, தசைநார் பற்றி இழுத்துக் கொண்டிருந்தது. வயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி மேலேறி வாந்தியைக் கிளர்த்தியது. கிணற்றின் உள்ளே தட்டுப்படும் கற்சுவரும், சேற்றுக் சகதியும், எரிச்சலையும் அச்சத்தையும் கூட்டிக்கொண்டே இருந்தது.
“தாயே…” அவனுக்கு நம்பிக்கையற்றுப் போனது. யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என்று.
அச்சிறுமியையும் காணவில்லை, வேறு யாரையும் காணவில்லை.
அப்போது அச்சிறுமி கிணற்றடிக்கு வந்துவிட்டிருந்தாள்.
“வந்துவிட்டாயா… வந்துவிட்டாயா… யாரையும் கூட்டிட்டு வந்தாயா? கயிறு கொண்டு வந்தார்களா? ஏணி கொண்டு வந்தார்களா?” என்று சொல்லி அல்லாடினான்.
அவள் பதிலளிக்கவில்லை. நகராமல் நின்று கொண்டே இருந்தாள். நட்சத்திர வானத்துக்குக் கீழ் இருக்கும் இருண்ட பாழுங் கிணற்றைப் பார்த்தபடி. நீர் தேங்கியிருக்கும் அடிக்கிணறு நட்சத்திரம் கொட்டிக் கிடக்கும் ஒரு சூப் தட்டு போல மினுமினுத்தது.
“பரவாயில்லை… கயிறும் ஏணியும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நீ வந்துவிட்டாயே அது போதும். காப்பாற்ற ஆட்களும் வந்துவிடுவார்கள்…” என்று ஆனந்தத்தில் கதறினான். “எப்படியாவது என்னை இந்தப் பாதாளத்திலிருந்து தூக்கி விட்டிடு, அம்மா… தாயே…”
அவன் விசும்பி விசும்பி அழுதான். அவன் குதத்தில் சூடாக ஏதோ ஒட்டிக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். அவன் மேலும் அழத் தொடங்கினான். கீழே இருந்து அண்ணாந்து கைகளை நீட்டிக் கதறினான். ‘காப்பாற்ற ஆட்கள் வந்துவிடுவார்கள். எனவே, நான் கண்டிப்பாகச் செத்துப்போய்விட மாட்டேன். நான் பிழைத்துக் கொள்வேன்.’ என்று நினைத்தான்.
“தாயே… தாயே… வா என்னைக் காப்பாற்று… நான் உன்னை ஒன்றும் செய்துவிட மாட்டேன். பெரிய மனசு பண்ணி எனக்கு உதவி செய்… கடவுளைக் காப்பாற்றச் சொல்… அவனுடைய தேவதைகளை அனுப்பி என்னை உயிர் பிழைக்க வை. என்னை இந்த ஆழத்திலிருந்து தூக்கிவிடச் சொல். இங்கே தேள்களெல்லாம் இல்லை! அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. உறுதியாக இங்கே தேள்கள் அறவே இல்லை!”
அதன் பின்னர் அவ்விடம் சலனமற்றுப் போனது. கரிய இருள் கவ்விக் கொண்டு நிலைத்தது.
……………… ……………… ………………..
அந்த ஞாயிற்றுகிழமை பிற ஞாயிற்றுக்கிழைமைகள் போலவே கடந்தது. அச்சிறுமியும் அவள் தாயும் பாட்டி எமிலி வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவில் மிகத் தாமதமாகத்தான் வீடு திரும்பியிருந்தார்கள். மறுநாள் திங்கட்கிழமை. அவளுக்கு விடுமுறை. பாலர் பள்ளிக்குப் போக வேண்டியதில்லை. எனவே, அவர்கள் நன்றாக விடிந்தும் நிம்மதியாகத் தூங்கினார்கள். நல்ல குளிர் வேறு. அந்தியில் மழையும் பெய்துவிட்டிருந்தது.
“மேடம்… நான் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?” என்று வீட்டு வாசலில் நின்று திரு. லோவ்ஸ் கேட்டார். அனுமதி கேட்ட பின்னரே தொலைபேசியைப் பயன்படுத்துவார் அவர். அஜானபாகுவான உடல் அமைப்பு கொண்டவர். கருத்த மேனியர். முகம் நிறைய உற்சாகப் புன்னகை நிலைத்திருக்கும். மிகக் கனிவான மனிதர். அருகே உள்ள நிலச் சீரமைப்பு, கட்டுமான பணி காரணமாகவும், வாகனங்கள் போடும் இரைச்சலுக்காகவும், மரம் அறுக்கும் சத்ததுக்காகவும், அச்சிறுமியின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார் அவர்.
“உள்ளே வாங்க திரு. லோவ்ஸ். காப்பி அருந்திவிட்டுப் போகலாம். சற்று முன்னர்தான் தயாரித்தேன்.”
“நன்றி மேடம்… இப்பதான் பொறியியலாளரிடம் பேசிவிட்டு வந்தேன். சீரமைப்பு வேலைக்காக மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி உரிமையாளரிடம் பேச வேண்டும். பொறியியலாளர் சொன்னார் கிணற்றுக்குள் ஏதோ மிருகம் இருக்கிறதென்று. போய்ப் பார்த்தேன். அது நாயாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”
“அய்யய்ய… அப்படியா?”
“அதனிடம் அசைவில்லை. செத்துவிட்டது என்று நினைக்கிறேன். மதியம்தான் அங்கிருந்து அதை நீக்க வேண்டும்.”
“சரி…. நீங்க தொலைபேசியைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நான் அலுவலகம் செல்ல வேண்டும், நாம் மதியம் சந்திக்கலாம்.”
“நன்றி மேடம். தொந்தரவுக்கு மன்னிக்கனும்.” திரு. லோவ்ஸ் சொன்னது போல அந்த நாயை அங்கிருந்து நீக்க வேண்டும். மேலும் மழை பெய்தால் அதனை நீக்குவது பெரும் சிக்கலாகிவிடும். அந்தக் கிணற்றைத் மூடாமல் அப்படியே விட்டால் மக்களுக்கு ஆபத்தாகிவிடும்.
………………………………………
எழுத்து: ஆஞ்சலிக்கா கோரோடிஸ்செர் – அர்ஜெண்டினா
ஆங்கிலத்தில்: அமிலியா கிளாடார்ட்
தமிழில்: கோ.புண்ணியவான்
ABSIT சிறுகதையை எழுதியவர் ஆஞ்சலிக்கா கோரோடிஸ்ஸெர். இவர் அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்தவர். புனைவு, அபுனைவு, நாவல், கட்டுரைகள் எனப் பல விருதகள் பெற்றவர். அமரராகிவிட்டார்.