வல்லினம் இலக்கிய முகாம் (2024) அனுபவம்

நவம்பர் 29ஆம் திகதி வெள்ளி மதியம், நான், லதா, பாரதி மூவரும் சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்து இறங்கினோம். சிங்கையில் காலையில் இருந்தே அடை மழை பிடித்துக் கொண்டது. வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு டாக்சி கிடைத்ததே அதிர்ஷ்டம்தான். விமானமும் அரை மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. சுபாங் விமான நிலையம் வந்திறங்கி அங்கிருந்து முகாம் நடைபெறவிருந்த பிரீக்ஃபில்ட் YMCA விடுதிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியின் வாசலில் நவீன் எங்களுக்காக காத்திருந்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இம்முறை நவீனின் மனைவி பவித்திரா அவர்களையும், நவீனின் பெண் குழந்தையையும் பார்க்க வாய்த்தது. யாவரும் அருகில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டோம்.  நவீன் சமீபத்தில் சீனா சென்றிருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.  உணவுண்டதும், பத்துமலையில் எங்களை இறக்கி விட்டார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பின் பத்துமலைக்கு வருகிறேன். அன்று பத்துமலைக்கு வருவேன் என்று கனவிலும் நான் கருதவில்லை. சில நிகழ்வுகள் இப்படித்தான் எதேச்சையாக அமைந்து, காயப்பட்ட மனதுக்குள் காற்றோட்டத்தைப் புகுத்தி விடுகின்றன. பத்துமலை முகப்பில் கண் நிறைத்து வெளி நிறைத்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது பொன்னிற முருகன் சிலை. வழக்கம் போல், அதற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் நிரை. மழை பெய்து வடிந்திருந்த ஈரப் படிக்கட்டுகளில் கவனமாக கால் வைத்து ஏற வேண்டியிருந்தது. உச்சியில் மழையீரம் ததும்பும் சுண்ணாம்புப் பாறைகள், விதவிதமான வடிவங்களைக் கற்பனையில் எழுப்பவல்ல பாறை புடைப்பு, உச்சியில் இருந்து விழுந்து கொண்டிருக்கையிலேயே உறைந்து நின்றுவிட்டது போன்றதான பெரும்பாறை சொட்டுகள், இவை யாவும் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்தன. எங்கள் மூவருக்கும் இலக்கியத்தில் மட்டுமல்ல, ஆன்மிக ஈடுபாட்டிலும் மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டுள்ளதை வியப்புடன் உணர்ந்தேன். முருகப் பெருமானைப் பற்றி இலக்கிய நோக்கிலும் பக்தி நோக்கிலும் பேசிக் கொண்டு வந்தோம். சமீபத்தில் திருமுருகாற்றுப்படை வாசித்திருந்ததால், முருகனின் சிறப்பியல்புகள் மனதில் எழுந்தபடி இருந்தன. பத்துமலையில், உச்சிப் பாறைகளும் உயரத்தில் வீற்றிருந்த பசிய மரங்களும் திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்ட முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை நினைவுபடுத்தின.

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து

சுரும்பு மூசா சுடர்பூங்காந்தள்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

என்ற வரி நினைவில் தட்டுப்பட்டது. ஆனால், இந்த மலையில், மந்தியும் அறியாத உயரம் என்று எதுவும் இல்லை. உச்சி மலையில்கூட அந்த மழையிலும் சில குரங்குகளைப் பார்க்க முடிந்தது. கண்குளிர முருகப் பெருமானைத் தரிசித்தப் பின், கீழிறங்கி வந்தோம். சிவப் பெருமானின் ஆறாவது முகமான அதோமுகத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்தோம். திருமுருகாற்றுப்படையின் முடிவுப் பகுதியில் வாழ்த்துச் செய்யுள்கள் இடம் பெறும். அந்தப் பாடல்களில் ஒன்றான, “அஞ்சு முகம் தோன்றின், ஆறு முகம் தோன்றும், வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும், நெஞ்சில் ஒரு கால் நினைத்தால் இருகாலும் தோன்றும், முருகா என ஓதுவார்முன்” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலை மனதில் நினைத்தவாறே வந்தேன். அதே பாடலை, வேலாயுதர் சந்நதியின் பட்டர் பாடியது தற்செயலா?

பத்துமலை அடிவாரத்தில் ஒரு துர்க்கை சந்நதி இருந்தது. அங்குக் கிடந்த கோலத்தில், துர்க்கையின் சிலையை அழகாக வடித்திருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, திருவரங்கப் பெருமாள் வீற்றிருப்பது போன்றதான காட்சி மயக்கம் ஏற்பட்டது. அருகில் வந்து பார்க்கும்போது, பிரம்மாண்டமான துர்க்கையின் எழில் மனதை ஊடுருவியது. கரிய நிற துர்க்கையின் நெற்றியில் அடர்சிவப்புப் பொட்டு, சங்குச் சக்கரச் சின்னங்கள் தாங்கி, மிகப் பெரிதாகவும் நளினமாகவும் இருந்தது. குறிப்பாக, கால்நகங்கள் தத்ரூபமாகத் தோற்றமளித்தன. அவளது பாதத்தினருகே, வால் நிமிர்ந்த சிம்மம் அழகாக அமர்ந்திருந்தது. மாலை ஏழு மணிக்கு நவீனும் அரவின் குமாரும் எங்களை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர். மீண்டும் YMCA விடுதி.  சிறிது நேரத்தில், சிறப்பு விருந்தினர்களான, எழுத்தாளர்கள் பாவண்ணனும் ராஜகோபாலனும் வந்திருந்தனர்.

ராஜகோபாலனின் ‘ஆட்டத்தின் ஐந்து விதிகள்’ நூலைச் சமீபத்தில் வாசித்திருந்தேன். அது சார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதன்பின், அவரோடு வைணவ இலக்கியம் சார்ந்து சிறிது நேரம் பேச வாய்த்தது. ஆண்டாளின், ‘புள்ளின் வாய் கீண்டானை’ என்ற திருப்பாவை பாசுரத்தில், ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற வரியில் உள்ள வானியல் குறிப்புகளும், அந்தச் சம்பவம் நடந்தது கிட்டத்தட்ட எட்டாம் நூற்றாண்டின் இறுதி பகுதி என்றும், ஆண்டாளின் வயதை அதை வைத்துப் பொருத்திப் பார்ப்பது சரியா என்ற கேள்விக்கு, அது சரியல்ல என்றும், இது போன்ற கொள்கைகள் எல்லாம் பின்னால் வந்த உபன்யாசகர்களின் வேலை என்றும் சொன்னார்.  Clubhouse செயலி மூலமாக, ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’ வகுப்புகள் நடத்திக் கொண்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு பாடல்களை இது வரை முடித்திருக்கிறோம் என்றும் சொன்னார். 

அனைவரும் சேர்ந்து இரவுணவை முடித்துக் கொண்டு, விடுதிக்குத் திரும்பினோம்.

***

மரபிலக்கிய வாசிப்பு

லதா, பாரதி

நவம்பர் 30ஆம் தேதி, சனிக்கிழமை: முதல் நாள் முகாம் சங்கக் கவிதை வாசிப்புடன் துவங்கியது. ராஜகோபாலன் தனக்கேயுரிய முறையில், கவிதை காட்டக்கூடிய காட்சியை அடுக்கடுக்காக வளர்த்தெடுத்துப் போய் கவிதையின் ஆழத்தைத் தொட்டுக் காட்டினார். ஒவ்வொருவருக்கும் ‘கவிதை திறக்கும் கணம்’ ஒன்று அமையும், அந்தக் ‘கணம்’ (moment) நம்மைக் கவிதைக்குள் ஆழமாகக் கொண்டு செலுத்தும் என்றார். தொடந்து ஆழமாக வாசிக்க வேண்டியதே நம்முடைய வேலை என்றார்.  ராஜகோபாலனுக்கேயுரிய இயல்பான நகைச்சுவை ததும்பும் உவமைகளால், இந்த அமர்வு கலகலப்பாக நகர்ந்தது.  பத்துப்பாட்டில் நெடுநல்வாடையிலிருந்து ஒரு கவிதையும் மதுரைக் காஞ்சியிலிருந்து ஒரு கவிதையும் வாசித்தோம். எட்டுத்தொகையில் அகநானூறு மற்றும் குறுந்தொகையிலிருந்து கவிதைகள் வாசித்தோம். நான்கு கவிதைகளை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சொல்லெண்ணி வாசிக்கையில் அடைய நேர்கிற ஆழத்தின் தீண்டலை அனைவரும் அனுபவித்தோம். நெடுநல்வாடையில், ‘வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள்’ என்ற பாடலில் வரும், பிச்சிப்பூ மாலையில் மலர்வதைப் பற்றி பேசும்போது, காலத்திற்கும் நேரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ராஜகோபாலன் மிக நேர்த்தியாக விளக்கினார். காலம் என்பது இயற்கை வகுத்தது, நேரம் என்பது மனிதன் வகுத்தது. இந்த நோக்கில், கவிதையை வாசிக்கும்போது, பைங்கால் பித்திகத்தின் இயல்பை எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதேபோல, அகநானூறில், சாகலாசனார் பாடிய, ‘நாயுடை முதுநீர் கெலித்த’ என்ற பாடலுக்கு அருமையான விளக்கம் அளித்தார் ராஜகோபாலன். இந்தப் பாடலில் வரும் நீர்நாய், தலைவனைக் குறிப்பதையும், தாமரை, தலைவியைக் குறிப்பதையும், முதுநீர் என்பது வற்றாத குளமாகிய குடும்பத்தைக் குறிப்பதையும் சொல்லி கவிதையின் அர்த்தத்தை விரிவாக்கிக் காட்டினார். இந்த நோக்கில் கவிதையை வாசிக்கும்போது கவிதை திறந்து கொள்ளும் தருணம் வாசகனுக்கு அமைகிறது. இக்கவிதையில், ‘செத்தனள் என்ற சொல்லுக்குப் பெரும்பாலான உரைகளில், மூச்சிழந்து நின்றாள் என்றே பொருள் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், ‘செத்த’ என்பது ‘ஒப்புநோக்க’ என்ற அர்த்தத்தில் வாசிக்க வேண்டும் என்று ராஜகோபாலன் சொன்னதே, ஒப்புநோக்க சரியாக இருந்தது.

***

நவீன கவிதை வாசிப்பு அமர்வு

மதிய உணவிற்குப் பின் நவீன கவிதை வாசிப்பு அமர்வு துவங்கியது. இந்த அமர்வில் கவிஞர் விக்கிரமாதித்யனின் கவிதையான ‘பொருள்வயின் பிரிவு’, கவிஞர் இசையின் ‘பணிசெய்து கிடத்தல்’, கவிஞர் அர்ஜுன் ராஜின் ‘காலத்தின் இலை’, கவிஞர் கார்த்திக் நேத்தாவின் ‘மெய்மையின் சுவை’, கவிஞர் மோகனரங்கனின் ‘எண்ணும் எழுத்தும்’ ஆகிய கவிதைகளை வாசித்தோம்.

பாரதி

‘பொருள்வயின் பிரிவு’ கவிதை வாசிப்பில், சங்கக் கவிதைக்கும் நவீன கவிதைக்கும் இடையே இருக்கும் அபாரமான தொடர்பைக் குறிப்பிட்டார் ராஜகோபாலன். சங்கக் கவிதைகளில் பொருள் வயின் பிரிவேற்படும்போது தலைவியே தலைவனின் பிரிவை எண்ணி ஏங்குவாள். ஆனால், இந்த நவீன கவிதையில், மனைவியையும் குழந்தைகளையும் எண்ணி ஏங்குவது, தலைவன். இந்தப் பெருத்த வித்தியாசத்தை ராஜகோபாலன் தொட்டுக் காட்டியிருக்காவிட்டால் பெரும்பாலோருக்கு இந்தக் கோணம் தெரிந்திருக்காது. இந்த ஒரு கோணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த கவிதையிலும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி விட்டார் ராஜகோபாலன். இந்த அமர்வில் அவர் சொன்ன மற்றொரு முக்கியமான கருத்து, நவீன கவிதைகளை அதன் தலைப்பில் இருந்தே வாசிக்க வேண்டும் என்பதாகும். கவிதையின் தலைப்பிலேயே கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் காண கிடைக்கும் என்றார். கவிஞனின் குரல் என்பது காலத்தின் குரல் என்று அவர் சொன்னதும் முக்கியமானதொன்று. அதுபோல, நவீன கவிதை வாசிப்பில், வாசகன் ஒரு கவிதையில் ஏன் இது இல்லை என்று கேட்கக் கூடாது, ஏன் இது இருக்கிறது என்ற கேள்வியை முன் வைக்க வேண்டும் என்றும் சொல்லி, அதை மேலதிகாக விளக்கிச் சொன்னார். மேலும், மரபுக் கவிதைக்கும் நவீன கவிதைக்கும் இருக்கும் மற்றொரு முக்கியமான வித்தியாசம் என்பது, நவீன கவிஞன் தன் தவறுகளையும் கீழ்மைகளையும் பகிரங்கமாக ஒத்துக்கொள்ளத் தயங்கமாட்டான், மரபுக் கவிதைகளில் இதைப் பார்க்க முடியாது என்று அவர் குறிப்பிட்டதும் சிந்தனைக்குரியது.

மோகனரங்கனின் ‘எண்ணும் எழுத்தும்’ கவிதையில், தர்க்கத்திற்கும் கற்பனைக்குமான வித்தியாசங்களைச் சொல்லி, அதன் பின்புலத்தில் இந்தக் கவிதையை வாசிக்கத் தூண்டினார் ராஜகோபாலன். தமிழில் தர்க்க சாத்திரம் மிகத் தீவிரமாகப் பயிலப்பட்டது என்ற அரிய தகவலையும் முன்வைத்தார்.  தர்க்கத்திற்கு ஏன் கற்பனை எட்டாது என்ற கேள்வியில் தொடங்கிய விவாதம் சுவாரஸ்யமாக இருந்தது.

கணேஷ்பாபு

கார்த்திக் நேத்தாவின், ‘மெய்மையின் சுவை’ கவிதையில், தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகத் துறப்பவனுக்கும், தன்னிடம் எதுவும் இல்லாமல் பிறரிடம் இறைஞ்சுபவனுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை ராஜகோபாலன் விளக்கிச் சொன்னார்.  கார்த்திக் நேத்தாவின் கவிதைகளைச் சமீபத்தில்தான் வாசித்தேன். அது குறித்து ‘காண் காதைத்’ தொடரில் ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன். பாரதிக்குப் பிறகு இயற்கையை வர்ணித்து எழுதப்பட்ட மிகச் சிறந்த வசனக் கவிதைகள் என கார்த்திக் நேத்தாவின் கவிதையை மதிப்பிடலாம். அவரது இக்கவிதை நான் மிகவும் ரசித்தது. //பறவையெலாம் விசும்பின் அணிகலன். பாறையெலாம் போகப்போதின் பூரித்த மாமுலை.நாரையெலாம் விண்ணை மண்ணில்  விரித்து வைக்கும் வெண்கருணை. ஒளியெலாம் அன்பின் விந்து//

அர்ஜுன்ராஜின் கவிதையில், மரத்திலிருந்து இலைகள் வரிசையாக விழுவதை, இந்தியத் தத்துவ தரிசனத்துடன் ஒப்பிட்டுப் பேசினார் ராஜகோபாலன்.  எனக்கு முதல் வாசிப்பில், இது தேவதச்சனின் //வாழ்வைப் போல காற்றில் விநோத நடனம் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை இலையைப் பிடிக்கும்போதும் நடனம் மட்டும் எங்கோ ஒளிந்துகொள்கிறது// என்ற கவிதையை நினைவூட்டியது. ஆனால், ராஜகோபாலன் பேசும்போது, இந்தக் கவிதைக்கும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் விஸ்வரூபத்துக்குமிடையேயான ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார். விஸ்வரூப தரிசனத்தில், ஒரு பக்கம் உலகத்திலுள்ள உயிர்கள் யாவும் கிருஷ்ணனின் வாய்க்குள் வேகமாக சென்று சேர்கின்றன, அதே சமயத்தில் புதிய உலகமும் உயிர்களும் மற்றொரு வாயிலிருந்து வெளிவருகின்றன. இந்தக் கோணத்தில் வாசித்தால், இந்தக் கவிதையில், தனித்தனியே இலைகள் விழுந்தாலும், எல்லாமே ஓர் இலைதான். அது எப்போதும், முப்போதும் விழாத இலை. ஆதியுமின்றி அந்தமுமின்றி அந்தரத்திலேயே இந்த விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது “அது”. தத்துவம் படிக்காமலேயே, இக்கவிஞர் தத்துவத்தின் சாரத்தை எப்படி இக்கவிதையில் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கையில் யாவருக்கும் அது வியப்பாகவே இருந்தது. ஜெயமோகன் சொல்லும், படைப்பாளி ஞானிதான். ‘அவ்வப்போது ஞானியின் பீடத்தில் அமர்ந்து விட்டு மீண்டும் கீழறங்கி விடக்கூடியவன்’ என்ற வரியை இக்கவிஞருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன். இந்தக் கவிதை குறிப்பிடும் “அது” என்ற வார்த்தையை விளங்கிக் கொள்ளும் முயற்சியில் இருந்தபோது, ஆத்மானந்தரின் “Waves are nothing but water, so is the sea” என்ற வரியை நான் நினைவுகூர்ந்தேன். இந்த வரிகள் இந்தக் கவிதையை மேலதிகமாகப் புரிந்து கொள்ள உதவி செய்தன.

***

சிறுகதை வாசிப்பு அமர்வு

ராஜகோபாலன்

அடுத்து சிறுகதை அமர்வு துவங்கியது. இந்த அமர்வில் காளி பிரசாத் எழுதிய ‘திருவண்ணாமலை, விஷால்ராஜா எழுதிய ‘திருவருட்செல்வி, சுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன் ஆகிய கதைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. நேரமின்மையால் தோப்பில் முஹம்மது மீரானின் ‘அனந்தசயனம் காலனி‘ கதையும் குணா கந்தசாமியின் ‘காதலும் ஏனைய பூதங்களும் கதையும் விரிவாக விவாதிக்கப்படவில்லை.

‘திருவண்ணாமலை’ கதையில் உள்ள வார்த்தை விளையாட்டு, ஒரு வசை சொல் புனிதச் சொல்லாக மாற்றிப் புரிந்துகொள்ளப்படும் விந்தை, இவை அனைத்திலும் உள்ளார்ந்துள்ள மாபெரும் அபத்தம் ஆகியவை குறித்து விவாதித்தோம். மனித ஆணவத்தின் அபத்தம் குறித்து ராஜகோபாலன் பேசினார். தான் இன்னொருவனை ஏசும்போது அவன் அதை வேறுவிதமான ஆன்மிக அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும்போது கதைசொல்லிக்கு அது பெரிய தவறாகப் புலப்படவில்லை ஆனால், இன்னொருவன் தன்னிடம் தனக்குப் புரியாத சொல்லைச் சொல்லும்போது, அது வசை சொல்லாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொள்கிறான். இக்கதையில் உள்ளது அபத்தத்தின் அபத்தச் சித்திரம். புத்தரின் புன்னகை என்பது காலத்தின் புன்னகை என்றார் ராஜகோபாலன்.

விஷால்ராஜாவின் ‘திருவருட்செல்வியிலும்’ ஒரு மாறுபட்ட புன்னகை இருப்பதை இந்த அமர்வில் கண்டு கொண்டோம். இந்தக் கதையில் வரும் பூனை என்பது செல்வியின் சுயம்தான். இக்கதையில் செல்வி ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் செல்லும்போதும் பூனைகள் தோன்றுகின்றன. ஆனால், அவள் தன் கடனைக் கட்டி முடித்தபோது வரும் பூனைகளை அவள் அணுகும் விதத்தில் அவளது ஆளுமை வளர்ந்து செல்வதைக் கவனிக்கலாம். இது ஒரு திருவருட்செல்வியைப் பற்றிய கதையல்ல. சென்னையில் இது போல பெண்கள் விடுதியில் தங்கியவாறே தன்னையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றப் பாடுபடும் எத்தனையோ திருவருட்செல்விகளைப் பற்றிய கதையும்தான் இது என்ற புரிதலை இக்கதை விவாதித்தின் மூலமாக அடைய முடிந்தது.

விஜயலட்சுமி

சுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ கதையும் அதிக விவாதத்தைக் கோரிய ஒன்று. இந்தக் கதை குறித்து பல்வேறு கேள்விகளும் அபிப்பிராயங்களும் எழுந்து வந்தன. அவற்றுள் முக்கியமானவையாக எழுந்து வந்தது, இக்கதையில் உள்ள தந்தையும் தாயும், அவர்களது குடும்பம், அதற்குள் நிகழும் ஒரு மானுட நாடகத்தின் சித்திரம் குறித்த விவாதமே. இந்தக் கதையில் வரும் தந்தையும் தாயும் தங்கள் நோயாளி மகனான வாசுதேவனைக் கண்ணும் கருத்துமாக நீண்ட காலமாகப் பேணி வருகிறார்கள். ஆனால், தங்கள் மகளும் அவளது குழந்தையும் வந்துவிட்டப் பின்னர், அவர்களது கவனம் திசை மாறுகிறது. வாசுதேவன் இயல்பாகவே இரண்டாம் இடத்துக்கு இப்போது வந்துவிடுகிறான். இந்தக் குழப்பத்தில், அவனுக்கான கவனம் தவறும்போது அவன் இறந்து போகிறான். கதையின் முடிவில் பொம்மையை உடைத்துப் போட்டு விளையாடும் சிறுமியின் சித்திரம் மிக முக்கியமானது என்றார் ராஜகோபாலன். குழந்தை பொம்மையை வைத்து விளையாடுவதைப் போலத்தான் வாசுதேவனாகிய இறைவன் இந்த மனிதர்களை வைத்து விளையாடுகிறான். இதற்கெல்லாம் காரணம் அல்லது பதில் என்று ஒன்று இருக்குமானால் அது “ஒன்றுமில்லை” என்பதாகத்தான் இருக்கும். கதையின் முடிவை இதன் ஆசிரியர் தெலுங்கில் எழுதியிருப்பது, இப்பகுதியை வாசகர் முயன்று படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்றார் ராஜகோபாலன். கதையின் முடிவு ஏன் தெலுங்கில் உள்ளது என்ற பலரது குழப்பத்துக்கு ராஜகோபாலனின் இந்தப் பதில் மூலம் ஒரு தெளிவு கிடைத்தது.

குணா கந்தசாமியின் ‘காதலும் ஏனைய பூதங்களும்’ கதையில், இதற்கு முன்னுள்ள கதைகளில் இல்லாத காட்சிகளினூடாக கதை சொல்லும் முறை பயின்றுவராததையும் அதற்கான காரணங்களையும் ராஜகோபாலன் சுருக்கமாக எடுத்துரைத்தார். குறிப்பாக, கதையின் முடிவில்  “அவனை நம்பி கிணத்துக்குள்ள விழுந்திட்டேன்” என்று ஜெயந்தி சொல்வதிலுள்ள முரணே இக்கதையை அழகாக்குகிறது என்றார்.

அரவின் குமார், சண்முகா

தோப்பிலின் ‘அனந்தசயனம் காலனி’ மனித வாழ்வின் அபத்தத்தை மற்றொரு வகையில் முன்வைக்கும் கதைதான் என்ற கோணத்தில் இக்கதை குறித்துப் பேசினோம். அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் கதைசொல்லி, பேனாவைக் காணாமல் பனியில் நெடுந்தொலைவு நடந்து சென்று வீடு திரும்பும்போது தனது சட்டை பையில் வைத்திருந்த பேனாவைக் கண்டுபிடிப்பது போன்றதான அபத்தச் சுவையே இக்கதையிலும் வருகிறது என்று நான் என் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

***

பாவண்ணன் உரை

முதல் நாள் மாலை அனைத்து அமர்வுகளும் நிறைவுற்றப் பின், எழுத்தாளர் பாவண்ணன் ‘சிறுகதையில் நேர்மறைத் தரிசனங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். எல்லா மனிதர்களும் நேர்மறையான பண்புநலன்களுடன்தான் பிறக்கிறார்கள் என்ற கருத்துடன் தன் உரையைத் துவக்கினார் பாவண்ணன். தான் ஒரு நல்ல மனிதனாக உருவாகக் காரணமான தனது ஆசிரியர்களை இந்த உரையில் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.  நல்ல மனிதர்கள் நம்மைச் சுற்றியும் இருக்கிறார்கள். அதனால், வாழ்வை நம்பிக்கையோடு அணுக வேண்டும் என்ற கருத்தை வழியுறுத்த சில கதைகளைக் கூறினார். ஓ. ஹென்றியின் ‘The last leaf’ கதையில், ஒரு இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற, கொட்டும் பனியில் இரவு முழுக்க விழித்து, ஒரு இலையை வரைந்த ஓவியர் குறித்துப் பேசும்போது அவையில் அமர்ந்திருந்த அனைவரின் கவனத்தையும் தனக்குள் ஈர்த்திருந்தார் பாவண்ணன். அடுத்ததாக, கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையையும் ஜெயகாந்தனின் ‘ஒரு பகல்நேர பாசஞ்சர் வண்டியில்’ கதையையும் கூறினார். அடுத்து, மக்ஸீம் கார்க்கியின் ‘My fellow traveller’ கதையை விரிவாகச் சொல்லி, தான் சொன்ன எல்லாக் கதைகளிலும் எப்படி நன்மையின் வலிமை சாரமாக அமைந்திருக்கிறது என்பதையும் விளக்கிப் பேசினார். தஸ்தாயெவ்ஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’ நாவலில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு கொலைக்காரன் ஒரு பூனையை அன்புடன் வளர்த்து அதற்குப் பால் கொடுப்பதன் சித்திரத்தை உயிரோட்டத்துடன் விவரித்தார். ஜவுளிக் கடையில் பணிபுரிந்த இளங்கோவன் என்ற சிறுவனை ஒரு தமிழ்ப் பேராசிரியராக மாற்றிய மனிதர்களையும் தற்செயல்களின் வலிமை குறித்தும் பேசினார் பாவண்ணன்.

பாவண்ணன்

நன்மையின் வலிமையையும் நம்பிக்கையின் வலிமையையும் எடுத்துரைத்து அந்த மாலை பொழுதில் அரங்கினரின் அகத்தை வெளிச்சம் கொள்ளச் செய்துவிட்டார் எழுத்தாளர் பாவண்ணன். உரையின் முடிவில், “உங்கள் முன் ஒரு அநியாயம் நிகழும்போது உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்” என்று நவீன் எழுப்பிய கேள்விக்கு, “ஒரு தனிமனிதன் தவறு செய்யும்போது அவனிடம் நியாயத்தை எடுத்துச் சொல்ல என்னால் முடியும். இதுவே ஒரு மாபெரும் அமைப்பு ஒரு தவறைச் செய்கையில், அந்த இடத்தில் என்னால் எதிர்வினையாற்ற முடியாமல் போய்விடுகிறது,” என்று பதிலளித்தார் பாவண்ணன்.

***

பக்தி இலக்கிய வாசிப்பு

மறுநாள் காலை சற்று முன்னதாகவே அமர்வுகள் துவங்கின. முதல் அமர்வில் பக்தி இலக்கியம் குறித்து கலந்துரையாடினோம். ராஜகோபாலன், பக்தி இலக்கியக் கவிதைகளின் சாரத்தை மிகச் செறிவாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்தார். இந்த அமர்வில், காரைக்கால் அம்மையாரின் ‘அற்புதத் திருவந்தாதியும்’ நம்மாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார், குலசேகர ஆழ்வார், ஆண்டாள் ஆகியோரின் பாசுரங்களையும் வாசித்தோம். இந்த அமர்வின் துவக்கத்திலேயே ராஜகோபாலன், தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம் மற்றும் ஆந்திர பக்தி இலக்கியம் குறித்தும் சுருக்கமான அறிமுகம் அளித்தார். தெற்கில் இருந்து துவங்கிய பக்தி இலக்கியத்தின் வலிமையும் ஆழமும் இந்தியா முழுக்கப் பரவிய விதம் குறித்துப் பேசினார். தற்காலத்தில் பலரும் பக்தி இலக்கியம் படைத்தவர்களையும் பக்தி இலக்கியத்தையும் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்க்கின்றனர். அந்தப் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். பக்தி இலக்கியத்திலுள்ள ஆழமும் தெளிவும் அதில் கொட்டிக்கிடக்கும் அக உணர்வுகளும் இலக்கிய வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை. அதைப் படைத்த கவிஞர்களும் சாதாரணமானவர்கள் அல்லர், அவர்கள் யாவரும் மிகச் சிறந்த சான்றோர்கள், மொழியில் உச்சப்பட்ச தேர்ச்சி கொண்ட பேரறிஞர்கள் என்றார். முதலில் காரைக்கால் அம்மையின் ‘அற்புதத் திருவந்தாதியிலிருந்து’ துவங்கினோம். அந்தாதி என்ற வடிவத்தை முதன் முதலில் தமிழில் பயன்படுத்தியவர் அம்மையே. அம்மையின், ‘இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான், தோற்றி இறைவனே ஈண்டு இறக்கம் செய்வான்’ என்ற பாடலையும், ‘தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்’ என்ற பாடலையும் வாசித்தோம். ‘அற்புதத் திருவந்தாதியில்’ தொடர்ந்து பயின்று வரும் அருவம்-உருவம் என்ற வடிவத்தைச் சைவ தத்துவமான பசு-பதி-பாசத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள ராஜகோபாலனின் விளக்கம் உதவியது. அவையில் உள்ளவர்கள் அனைவரும் நேரத்தை இதற்கெனவே திட்டமிட்டுக் கொண்டு, ‘அற்புதத் திருவந்தாதியை’ வாசிக்க வேண்டும் என்ற அன்புக் கட்டளையுமிட்டார்.

அதன்பின் ஆழ்வார்களின் பாசுரத்தை வாசித்தோம். நம்மாழ்வாரைக் குறித்த அறிமுகத்துடன், அவரது திருவாய்மொழியில் உள்ள ‘கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்’ என்ற அழகிய பாசுரத்தை விளக்கினார் ராஜகோபாலன். அதன்பின் பெரியாழ்வாரின் ‘மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட’ என்ற பாசுரத்தையும், ‘கடுவாய்ச் சின வெங்கண் களிற்றினுக்கு கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல’ என்ற பாசுரத்தையும் பயின்றோம். பேயாழ்வாரின், ‘புகுமதத்தால் வாய்பூசி’ என்ற பாசுரம் அனைவரையும் கவர்ந்தது. அதற்கு ராஜகோபாலன் கொடுத்த விளக்கமும் சிறப்பாக இருந்தது. நேர்ப்பொருளில், தன் மதத்தைத் தானே தன் மேல் பூசிக்கொள்ளும் யானையின் சித்திரம் சற்றே அசூயை அளித்தாலும், அதன் மறைபொருள் மிக ஆழமானதாக இருந்தது. யானை தன்னுடைய மதநீரை இறைவனிடம் திருப்பி பூர்ணமடைவதைப் போல மனிதனும் தன்னுள் உள்ள ஆணவத்தைத் தன்னினும் பெரிய சக்தியான இறைவனை நோக்கித் திருப்பினால் மட்டுமே தன்னை ஆட்டிப்படைக்கும் ஆணவத்தில் இருந்தும் மன விகாரங்களிலிருந்தும் தப்ப முடியும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாசுரம் இது என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதன்பின், குலசேகர ஆழ்வாரின், ‘தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்ற பாசுரத்தையும் வாசித்தோம். நேரமின்மையால், நான் பெரிதும் எதிர்பார்த்த ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் ‘கார் காலத்து எழுகின்ற கார்முகில்காள்’, நம்மாழ்வாரின் ‘வணங்கும் துறைகள் பலபல ஆக்கி’, பெரியாழ்வாரின் ‘சொல்லின் அரசிப் படுதி நங்காய்’ ஆகிய பாசுரங்களை வாசிக்க இயலவில்லை.

***

நாவல் அமர்வு

நாவல் அமர்வில், எழுத்தாளர் பாவண்ணனின் ‘பாய்மரக்கப்பல்’, தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ ஆகிய இரு நாவல்கள் குறித்து உரையாடினோம். ‘பாய்மரக்கப்பல்’ நாவல் குறித்து சாலினியும் மோகனாவும்  பேசினார்கள். காலமாற்றத்தினாலும் தலைமுறை இடைவெளியினூடாகவும் விவசாயம் என்பது தன் மதிப்பை இழந்து எப்படி விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகிப்போய் நுகர்வு கலாசாரத்தில் கரையத் துவங்குகிறது என்பதை இருவருமே நன்றாக எடுத்துரைத்தார்கள். குறிப்பாக, இவர்கள் இருவரும் எழுப்பிய கேள்வி, நாவலில் பெண்களின் அடங்கிய தன்மையும் குரலற்றவர்களாக அவர்களைக் காட்டிய விதத்தையும் குறித்துதான். அதைத் தொடர்ந்த விவாதத்தில், அக்காலப் பெண்கள் குறித்த யதார்த்தச் சித்திரமொன்றையே நாவல் காட்டுகிறது என்றும் வேண்டுமென்றே முன்வைக்கப்பட்ட சித்திரம் அல்ல என்றும் இதைக் குறித்து ராஜகோபாலன் தெரிவித்தார். இந்த நாவலின் முடிவில் தென்னங்கன்றை நடுவது குறித்த பேச்சில், பாரதி, இது இயல்பான சித்திரம் இல்லை, தென்னங்கன்றை நடுவது என்பது பலவிதமான தயாரிப்புகளை உள்ளடக்கியது, படிப்படியாக செய்ய வேண்டிய ஒன்று என்றார். அதற்குப் பதிலளித்த ராஜகோபாலன், அது போன்ற விரிவான முறைகள் எல்லாமே தென்னந்தோப்பில் செய்யப்படுவது, நாவலில் வீட்டுத் தோட்டத்தில் அவை நடப்படுவதால், இத்தகைய விரிவான வழிமுறைகள் பேணப்படவில்லை என்றார், இதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத்தான் இருந்தது.

இந்த நாவலை மேலும் ஆழ்ந்துப் புரிந்துகொள்வதற்கு ராஜகோபாலன் ஒரு சுருக்கமான வரைபடத்தை அளித்தார். இது கால மாற்றத்தைச் சொல்லும் நாவல் என்றும், அந்த மாற்றத்தினூடாக கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களாக விழுமியங்கள், நம்பிக்கைகள் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டார். இந்தச் சித்திரத்தை முன்வைத்ததாலேயே ‘பாய்மரக்கப்பல்’ நாவலை முக்கியமான நாவலாகத் தான் கருதுவதாகக் கூறினார்.

ஆனாலும், இந்த அமர்வில், நான் குறையாக உணர்ந்த ஒன்றுண்டு. நாவலாசிரியரான பாவண்ணன், அந்த அவையிலேயே இருந்தும், தன் நாவல் குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கும் விடையளிக்கவோ, விளக்கவோ முன் வரவில்லை. அவர் சார்பாக, ராஜகோபாலனே பேசிக் கொண்டிருந்தார். காரணம் எதுவானாலும், தன் நாவல் குறித்த இந்த அமர்வில், பாவண்ணன் அவர்கள் பேச முன்வராதது வருத்தத்திற்குரியதே.

அடுத்து ‘அம்மா வந்தாள்’, நாவல் குறித்துப் பேசினோம். இந்த நாவல் குறித்து அரவினும் சுதாகரும் பேசினார்கள். அரவின் இந்த நாவலில் காணப்படும் உணர்ச்சிகளின் மாற்றம் குறித்துப் பேசினார். அலங்காரத்தம்மாளின் நுண்ணுணர்வுக்கும் ஆளுமைக்கும் பொருத்தமற்றவராக, வாழ்வை வேடிக்கை பார்க்கும் தண்டபாணி அமைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். சிவசுவிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம், அலங்காரத்தம்மாள் தன்னுடைய ஆணவ நிறைவை எய்திவிடுகிறார் என்று குறிப்பிட்டார். சுதாகர் பேசும்போது இது அக்காலத்தில் வெளியான புரட்சிகரமானதொரு படைப்பு என்றும், இது போன்ற கருவை உள்ளடக்கி எழுதி வெளியிட நாவலாசிரியருக்கு மிகுந்த துணிவுத் தேவைப்பட்டிருக்க வேண்டும் என்றார். மோகனா தன்னுடைய வாசிப்பில், இந்த நாவலின் உள்ளடக்கம் என்பது, பிரதானமாக, மரபைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவதும் சீண்டுவதுமாகவும் உள்ளது என்றார்.

லதா, அலங்காரத்தம்மாள் குறித்துப் பேசும்போது பெரும்பான்மையோர் அழகு குறித்தே பேசுகிறார்கள், உண்மையில், அவளது ஆளுமை குறித்துத்தான் பேச வேண்டும் என்றார்.

நான் என்னுடைய கருத்தையும் முன்வைத்தேன். இந்த நாவலில் இருவிதமான ஏமாற்றங்கள் காட்டப்படுகின்றன. நாவலின் துவக்கத்தில், அப்புவிற்குத் தன் அம்மா குறித்து தான் ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம் உடைபடும்போது தாங்க முடியாத ஏமாற்றத்துக்குள்ளாகிறான். நாவலின் முடிவில், அலங்காரத்தம்மாள், தன் மகனான அப்பு மீது தான் உருவாக்கி வைத்திருந்த எதிர்பார்ப்புகள் நொறுங்குவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் ஏமாற்றமடைகிறாள், “நீயும் அம்மாப் பிள்ளையாகத்தான் இருக்கிறாய்” என்று அவள் பேசும்போது வெளிப்படுவது இந்த ஏமாற்றம்தான், என்றேன்.

முடிவில், ராஜகோபாலன், இந்த நாவலுக்கும் தனக்கேயுரிய வகையில் ஒரு வாசிப்பு வரைபடத்தை உருவாக்கியளித்தார். ‘பாய்மரக்கப்பலில்’ விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் போல ‘அம்மா வந்தாள்’ நாவலில், ஒருவரின் சுயம் மீதான நம்பிக்கைகளும் சமூக அழுத்தங்களும் சார்ந்து அந்தச் சுயம் மாற்றமடைவதன் சித்திரத்தைக் காட்டுவதாகக் கூறினார். ஒருவரின் சுயம் அல்லது ஆளுமை மாற்றமடையும்போது அதனால் பாதிக்கப்படும் உறவுகள் குறித்த சித்திரமும் அதனை உள்வாங்கிக்கொள்ள முனையும் அல்லது தவிக்கும் மனிதர்களின் அகத்தைப் பற்றிய சித்திரமும் இந்த நாவலில் காட்டப்படுவதாக தன்னுடைய வாசிப்பை முன்வைத்தார். ஆனாலும், இந்த நாவல், தனிப்பட்ட முறையில், தன்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து அமர்வுகளும் இனிதே நிறைவேறியப் பின்னர், அனைவரும் விருது விழாவுக்குத் தயாரானோம்.

***

இளம் படைப்பாளி விருது விழா

டிசம்பர் 1ஆம் திகதி ஞாயிறு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை, YMCA மண்டபத்தில் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் தற்கால மலேசியச் சிறுகதைகள் குறித்த விமர்சன உரைகள் இடம்பெற்றன.  இந்த அமர்வில் ஶ்ரீதர் ரங்கராஜ், கி. இளம்பூரணன், விஜயலட்சுமி ஆகியோர் பேசினர். குறிப்பாக, எனக்கு ஸ்ரீதர் ரங்கராஜின் உரை பிடித்திருந்தது. மனதில் தோன்றியதை உண்மையாகப் பேசினார். தனக்கு ஏன் சிறுகதைகள் பிடித்திருந்தன என்று பேசிய அதே வேளையில் பிடிக்காத சிறுகதைகளின் பலவீனங்களையும் குறித்துப் பேசினார். ஸ்ரீதர் ரங்கராஜ், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்பும் தேர்ச்சியும் உடையவர். கசார்களின் அகராதி நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தற்போது, ‘ஹாப்ஸ்காட்ச்’ நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அவருடனான எனது தனிப்பேச்சில், சரமாகோவின் ‘Blindness’ நாவல் குறித்துப் பேசியபோது சரமாகோ உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் அடுத்து நீங்கள் வாசிக்க வேண்டியது ராபர்டோ பொலானோ என்றார். கார்லோஸ் ஃபுயந்தோஸ் நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய முன்னோடியான படைப்பாளி என்றார்.

விஜயலட்சுமியின் தன்னுடைய உரையில் பதிப்பக உரிமை குறித்தும் அது சார்ந்த விழிப்புணர்வை வாசகர்களும் விமர்சகர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  அடிப்படையில் ஒரு படைப்பை விமர்சிக்க வாசகர்களுக்கு உரிமை உண்டு. அது பதிப்புரிமைச் சட்டத்தினால் தடை செய்யப்பட முடியாதவொன்று என்றும் இவர் விளக்கினார். இவர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நூலகத்தில் நூலகராகப் பணிபுரிகிறார். ‘சிலப்பதிகாரத்தை’ மலாய் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனக்கு இந்த முயற்சி புதுமையானதாகவும் இன்றியமையாததாகவும் தோன்றியது. அவரிடம் தனிப்பேச்சில் ‘சிலப்பதிகாரம்’ குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

அடுத்ததாக இளம் எழுத்தாளர் விருது விழா, டாக்டர் மா. சண்முகசிவா அவர்களின் தலைமையில் நடந்தது. மா. சண்முகசிவா ஆர்ப்பாட்டமில்லாத அடங்கிய குரலில் பேசுபவர், அதே சமயம் ஆழமாகவும் பேசக் கூடியவர். மனதில் தோன்றுவதை இயல்பாகப் பேசும் அவரது பேச்சு முறை என்னைக் கவர்ந்தது. ஆசிரியர் ப. தமிழ்மாறனும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். எழுத்தாளர் பாவண்ணன் சிறப்புரை ஆற்றினார். அதன்பின், அரவின் குமார் ஏற்புரை வழங்கினார். அரவின் குமார் விருது பெற்றது ஒரு முக்கியமான தொடக்கம். தொடர்ந்து வல்லினம் இது போன்று முக்கியமான இளம் எழுத்தாளர்களைக் கவனப்படுத்தவிருக்கிறது. இதன் பலம் என்பது அடுத்த ஐந்து முதல் பத்து வருடங்களிலேயே உணரப்படும். அப்போது மலேசியாவில் உலக அளவில் கவனத்தை ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் நிரையொன்று உருவாகிவிடும். அதுவே இந்த விருதின் தனிச் சிறப்பு.

***

இலக்கிய முகாமும் விருது விழாவும் நிறைவுற்றப் பின்னர், நான், பாரதி, லதா மூவரும் தேநீர் அருந்தச் சென்றோம். விழா நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தொடர்ந்து, அருகில் உள்ள சில கோயில்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். YMCA-வில் இருந்து நடந்து செல்லும் தொலைவில், கருப்பசாமி கோயிலும் ஆஞ்சநேயர் கோயிலும் இருந்தன. பாவண்ணனும் அவரது மனைவியும் எங்களுடன் இணைந்து கொண்டனர். அனைவரும் கோயிலில் ஒவ்வொரு சிற்பங்களாகப் பார்த்தோம். குறிப்பாக, இங்குள்ள அனுமார் கோயில் மிகப் புதுமையானதாக இருந்தது. அனைத்து வடிவிலும் அனுமனை வடித்திருந்தார்கள். வாசலில் சீன அனுமரும் இந்தோனேசிய அனுமரும் அழகிய வடிவில் காட்சியளித்தார்கள். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்றால், கோயில் முழுக்க பல்வேறு வடிவில் அனுமன் சிற்பங்களைச் செய்திருந்தார்கள். குறிப்பாக, ஒரு பாதி அனுமனும் மறு பாதி விநாயகருமாகச் செதுக்கப்பட்ட சிலை அனைவரையும் ஈர்த்தது. உள்ளே, கருவறையில், அர்ச்சகர்கள் அனுமருக்குப் பல்லாண்டு பாடினார்கள். ஜெயக்குமாரின் ஆலயக் கலை முகாமில் சிற்பங்கள் குறித்து நாங்கள் கற்ற விஷயங்களை நானும் பாரதியும் இந்தக் கோயில் சிற்பங்களைப் பார்ப்பதனூடாகச் சோதித்துப் பார்த்துக் கொண்டோம். முன்னிரவில், அருகில் உள்ள மாலில், சற்று நேரம் செலவழித்துவிட்டு, அறைக்குத் திரும்பினோம்.

அடுத்த நாள் காலை, அரவினும், நவீன் மனைவி பவித்திரா அவர்களும், எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள். அனைவரும் தேசிய அருங்காட்சியகத்துக்குச் சென்றோம். அங்கே, மலேசிய பழங்குடி இனம் குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. பழங்குடியினர் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர்களது இசைக்கருவிகள், இறந்தவர்களைப் புதைக்கும் அவர்களது வழிமுறைகள், வன விலங்குகளைப் பிடிப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய பொறி என யாவற்றையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து, தேசிய அருங்காட்சியகத்துள், கற்காலம், இரும்புக்காலம் ஆகிய காலகட்டங்களில் மலேசியாவில் கிடைத்த பொருட்களைப் பார்வையிட்டோம்.

அன்று மதியம், எழுத்தாளர் பாவண்ணன் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் பேச வேண்டிய நிகழ்வு இருந்தது. அதனால், அவருடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அந்த நிகழ்வில், பாவண்ணன், ஆசிரியர் மாணவர் இருவருக்கும் இடையே உள்ள உறவின் முக்கியத்துவம், ஆசிரியர் நினைத்தால் மாணவனை வாழ்வில் எவ்வாறெல்லாம் உயர்த்த முடியும் என்ற கருத்தினைப் பல்வேறு கதைகளினூடாகப் பேசினார். ‘ஆட்டிசத்தால்’ பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனைப் புரிந்து கொண்டு, அவனை மெல்ல மெல்ல வாழ்வில் உயர்த்திய ஒரு ஆசிரியர் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட ஒரு உண்மை கதை, நெகிழ்ச்சியூட்டக் கூடியதாய் அமைந்தது. தொடர்ந்து தி. ஜானகிராமனின் ‘முள்முடி’ கதையைக் குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, நானும், லதாவும் பாரதியும் கிளம்பிச் செல்ல வேண்டியதிருந்தது. நவீன், பவித்திரா மற்றும் அரவின் ஆகியோரிடம் பிரியாவிடை பெற்று விமான நிலையம் விரைந்தோம். முகாமில் கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும் ஏராளம். இந்த முகாமை ஒருங்கிணைத்த நவீன் உள்ளிட்ட வல்லினம் குழுவினருக்கும்  ராஜகோபாலன் அவர்களுக்கும் பாவண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டும் அடுத்த கூடுகைக்கான அறிவிப்பை எதிர்நோக்கியவாறும் சிங்கை வந்தடைந்தோம்.

வல்லினம் இளம் எழுத்தாளர் விழா காணொளித் தொகுப்பு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...