சுங்குடி

வருடத்திற்கு இரு முறையாவது பாட்டியும் தாத்தாவும் தங்களின் சொந்த ஊரான நாமக்கலுக்குச் செல்வது வழக்கம். அப்பாவின் பெற்றோர்கள். அவர்களின் பயணம் பள்ளி விடுமுறையில் நிகழ்ந்தால், துணையாக நானும் அண்ணனும் உடன் செல்லலாம் என வீட்டில் ஓர் ஒப்பத்தம் இருந்தது. அப்படியான பயணம், ஈராண்டுகளுக்கு ஒரு முறையாவது எங்களுக்குக் கிட்டும். அவ்வாய்ப்பு பல வருட தவத்திற்குப் பிறகு பெற்ற வரம் போல அமையும்.

படிக்க வேண்டாம், வீட்டுப்பாடம் இருக்காது, சதா ஊர் சுற்றிக் கொண்டே இருக்கலாம். மேலும் கிராமத்தில் தஸ் புஸ் என ஆங்கிலம் பேசி பந்தா காட்டலாம். இந்திய ரூபாய் மலேசிய நாணயத்தைவிட மதிப்பில் குறைந்தது என்பதால், என்ன கேட்டாலும் தாத்தா வாங்கிக் கொடுப்பார்.

ஊரில் இருந்த தோப்பின் விளைச்சல், அவர் பெயரில் இயங்கிய தங்கும் விடுதியின் கணக்கு வழக்குகள் ஆகியவற்றை சுமார் மூன்று நாட்களில் முடித்து விடுவார் தாத்தா. அதற்குப் பிறகு தாத்தா பாட்டியுடன் ஊர் சுற்றல் ஆரம்பமாகும். மறக்க முடியாத பயணங்கள் அவை. தாத்தாவின் பழைய மாருதி வண்டியை எடுத்துக் கொண்டு நாமகிரியிலிருந்து திருப்பதி வரைக்கும் செல்வோம். செல்லும் வழிநெடுகிலும் வேடிக்கை பார்ப்பதைவிட, தாத்தாவும் பாட்டியும் கூறும் கதைகளுக்குச் சுவாரசியம் அதிகம். அப்படி அவர்கள் சொன்ன பல கதைகளில் ஒன்று ‘சுங்குடி’.

தாத்தா கணக்கு வழக்குகளைப் பார்த்தப் பிறகு, அவருக்கிருக்கும் அடுத்த முக்கியமான பணி, பாட்டிக்குச் சேலை வாங்கித் தருவதுதான். பாட்டியைச் சேலையில் தவிர, நான் வேறு உடையில் பார்த்ததில்லை. வீட்டில் கூட பாட்டி சேலைதான் உடுத்துவார். என் பாட்டி கட்டும் புடவைகள் மீது அம்மாவுக்கு எப்பொழுதும் ஒரு கண் உண்டு. அவர் பொறாமை கொள்ளும் அளவிற்குப் பாட்டியின் சேலை சேகரிப்பில் தனிச் சிறப்பு இருந்தது.

கோயிலுக்குச் செல்ல பாட்டி காஞ்சிபுரம் ரக சேலை மட்டும்தான் கட்டுவார். மற்றபடி வீட்டில் பாட்டிக்கு எப்பொழுதும் சுங்குடி சேலை கட்டதான் பிடிக்கும். வைர மூக்குத்தி, கழுத்தில் அட்டிகை, உடம்பில் பச்சை, மாணிக்கக் கற்கள் பதிந்த தோடு, இவைகளுடன் சுங்குடி சேலையும் பாட்டியின் அடையாளம். இவற்றில் ஒன்று குறைந்தாலும் தாத்தாவிற்குப் பிடிக்காது.

“பாட்டிக்குப் புடவை எடுக்கணும்,” எனத் தாத்தா சொன்னால், வண்டி மதுரைக்குப் போகின்றது என அர்த்தம்.

“மீனாட்சியைத் தரிசனம் செய்துட்டு, பாட்டிக்கு மதுரை சுங்குடி சேலை வாங்கிட்டு, ஜிகர்தண்டா சாப்பிடலாம்,” எனச் சொல்லும்போதே எங்களுக்கு வாய் ஊற ஆரம்பித்துவிடும்.

திருச்சியிலிருந்து மதுரைக்குச் செல்ல சுமார் மூன்று மணி நேரமாவது ஆகும்.

“பாட்டிமா, திருச்சியிலேயே நிறைய ஜவுளிக் கடை இருக்குல, ஏன் இவ்வளவு தூரம் காரில் போய் மதுரையிலதான் சீலை வாங்கனும்…” என அண்ணன் மதுரைக்குப் போகும் போதெல்லாம் சலித்துக் கொள்வான்.

”நீ ஜிகர்தண்டா சாப்புடமுல்ல…” என்பார் பாட்டி.

ஜிகர்தண்டா என்றவுடன் பெரும்பாலும் அமைதியாகும் அண்ணன் அன்று, “இன்னும் மூனு மணி நேரம் கழிச்சிதான் ஜிகர்தண்டா சாப்பிட முடியுமா?” என அதற்கும் சலித்துக் கொண்டான்.

“ஜிகர்தண்டா போல, மதுரையில சுங்குடி சேலையும் ஸ்பெஷல். சுங்குடி சேலைக்கு 500 ஆண்டு வரலாறு உண்டு, தெரியுமா?” எனத் தாத்தா கதை கூற ஆரம்பித்தார்.

தாத்தா கூறும் எல்லா கதையும் இப்படிதான் ஆரம்பிக்கும். அப்படிச் சொல்லும் போதெல்லாம், “பழைய கதையா” எனத் தோன்றும். ஆனால், வேறு வழியில்லாமல் அவர் கூறும் கதையைக் கேட்போம்.

“பிள்ளைகளா, இது பழைய கதை இல்ல. சுங்குடி சேலைங்கள மஹா ராணிங்கதான் உடுத்துவாங்க. சுங்குடி சேலைகளைக்கு அவ்வளோ மதிப்பிருக்கு. வெள்ளக்காரன் ஆட்சி செய்யுறதுக்கு முன்னலேருந்தே சுங்குடி சேலை பிரபலம். “

“சுங்குடினா என்ன பாட்டிமா, பேரே ஒரு மாதிரியா இருக்கு,” எனக் கேட்டோம்.

பாட்டி தன்னுடைய மூந்தானையை விரித்து, “இப்படி பொட்டு பொட்டா இருக்குல, இததான் சுங்குடின்னு சொல்லுவாங்க. சௌராஷ்ட்ரியருங்கள பட்டு நூல்காரங்கன்னு சொல்லுவாங்க. அவங்க உருவாக்குன சொல்லுதான் சுங்குடி,” எனச் சொல்லி ஏதோ புரியதா ஒரு பாட்டைப் பாடினார். சுங்குடி சேலை பற்றிய நாட்டுப்புற பாடல் போல.

”நான் கைத்தறி பட்டில் உருவான கைக் கட்டு சுங்குடி சேலையதான் கட்டுவேன்.” என்றவர் “தாத்தாவுக்கும் நா இந்த மாதிரி சேலை கட்டுனாதான் பிடிக்கும்,” எனக் காதில் ரகசியமாகக் கூறி வெட்கத்தால் சிரித்தார் பாட்டி.  

கொஞ்சம் விபரம் தெரிந்த பிறகு புடவை முழுவதையும் சுற்று புள்ளிகளால் அலங்கரிக்கும் தனித்துவமான அம்சம் சுங்குடி சேலைக்கு உண்டு என்பதை அறிந்து கொண்டேன். 

இந்தியாவில் சௌராஷ்டிரா எனும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் சௌராஷ்ட்ரியர்கள். சௌராஷ்டிரியர்களுக்கு ஒரு தனி கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகள் உண்டு. அவர்களின் கலாச்சாரம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. சௌராஷ்டிரியர்கள் நெசவு தொழில் செய்வதில் கைத்தேர்ந்தவர்கள். பருத்தி, பட்டு மற்றும் கம்பளி போன்ற பல்வேறு துணிகளை உற்பத்திச் செய்யும் கைத்தறி நெசவுகளின் பாரம்பரியத்தை இவர்கள் கொண்டுள்ளனர். அவைகளில் குறிப்பாக tie-and-dye technique நுட்பம் சௌராஷ்டிராவில் பிரபலமானது. துணியில் சாயமிடுவதற்கு முன்பு சிறிய முடிச்சுகளைக் கட்டி, அழகான வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளை உருவாக்குவார்கள். இந்த வகையான நெசவு மரபுதான் கைக் கட்டு சுங்குடி என அழைக்கப்படுகிறது.

குஜராத் கலாச்சாரம், மதுரை வரைக்கும் வந்தது ஒரு பெரிய வரலாறு. நெசவுத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற சௌராஷ்டிரர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருமலை நாயக்கர் மற்றும் ராணி மங்கம்மாளின் ஆதரவால் மதுரைக்கு வந்தனர். மன்னர்கள் சௌராஷ்டிரியர்களின் நெசவுத் திறமையைக் கண்டு கவரப்பட்டு, அரச ஆடைகளை நெய்ய மதுரைக்கு அழைத்து வந்தனர். சௌராஷ்டிரர்களுக்குப் பட்டுத்தறிகளை அமைக்கவும், சாயமிட்ட நூல்களைச் சாலைகளில் உலர வைக்கவும் அவர்களுக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டது. மதுரையில் ஓடும் வைகை ஆற்றின் நீரை அவர்கள் நெசவு தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுக்கு மதுரையின் மையப் பகுதியில் உள்ள அரசரின் அரண்மனைக்கு அருகில் வீடுகள் வழங்கப்பட்டன. இன்றும் திருமலை நாயக்கர் மஹாலைச் சுற்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சௌராஷ்டிரர்களின் வீடுகளைக் காணலாம். இப்படித்தான் அவர்கள் மதுரைக்கு வந்தார்கள். நெசவு தொழிலுக்காக வந்தாலும், நாளடைவில், அவர்களின் கலாச்சாரம் மதுரையின் அடையாளமாக மாறிவிட்டது.

இந்தக் கதைகளையெல்லாம் தாத்தா சிறுவர்களாக இருந்த எங்களுக்குப் புரியும் வகையில் கூறினார். 

“மதுரைக்குப் போனதும் ஜிகர்தண்டா சாப்பிட்டு, அந்த அரண்மனைக்குப் போகலாம், அப்புறம் சௌராஷ்டிரர்களின் வீட்டையும் பாக்கலாம்,” எனத் தாத்தா பாட்டியிடம் அடம்பிடிக்கத் தொடங்கினோம்.

“என்ன கதச் சொன்னாலும், ஜிகர்தண்டாவை மறக்க மாட்டீங்க,” எனத் தாத்தா சொல்லிக் கொண்டிருக்கையில், பாட்டி அணிந்திருந்த சுங்குடி சேலையின் கலை அம்சங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

‘பட்டு கருநீல புடவை பதித்த நல் வைரம்

நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி’

எனும் பாரதியார் கவிதை போல இருந்தது பாட்டியின் புடவை. கருநீல சேலையில் வைரம் போல வெள்ளை சுங்குடி புள்ளிகள். பாரதியார் போல சௌராஷ்டிரர்களுக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துதான், அவர்கள் நெய்யும் தைதெறி பட்டில், சுங்குடி எனும் கைக் கட்டு வித்தையைக் கொண்டு வந்திருப்பார்களோ எனத் தோன்றியது.

எங்கள் விருப்பதிற்கு ஏற்ப தாத்தா திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் மதுரை அரண்மனைக்கும் அதன் பக்கத்தில் அமைந்திருக்கும் சௌராஷ்ட்ரியர் கிராமத்திற்கும் அழைத்துச் சென்று, நெசவு செய்யும் முறைகளைக் காட்டினார்.

கைக்கட்டு சுங்குடியின் செய்முறை பார்த்தப் பிறகுதான், கலைக்கல்வி வகுப்பின்போது இதே போல செய்திருக்கிறேன் எனப் புலப்பட்டது. மெல்லிழைத் தாளைக் (tissue paper) கட்டி, அதனை வண்ணங்களால் நனைத்து, பிறகு அதன் கட்டை விரித்துப் பாக்கும்போது சூரியமண்டலத்தில் விண்மீன் திரள்கள் தெரித்து தாளில் விழுந்தது போல வண்ணங்கள் இருக்கும். அதே போல இருந்தது கைக்கட்டு சுங்குடி சேலையின் நுட்பம். ஒரு கண்ணைச் சுருக்கிக் கொண்டு கலையுருக்காட்டியில் (kaleidoscope) பார்த்தால் தெரியும் வடிவங்களைப் போல, இந்தச் கைக்கட்டு சுங்குடி நுட்பம் மிக அபாரமான வடிவமைப்புகளைப் பட்டு துணியில் உருவாக்குகிறது. வண்ணங்களால் நனைக்கப்பட்ட கைக் கட்டை திறந்தவுடன் ‘போஹேமியன் அதிர்வுகளைப்’ (bohemian vibes) போல எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நகரும் வண்ணங்களின் பாய்ச்சலைப் பார்ப்பதற்குச் சுவாரியமான இருந்தது. ஜிகர்தண்டாவை நினைத்து மூளையில் சுரந்த ‘டோபமைன் ஹார்மோன்’ (dopamine hormone) சுங்குடி சேலை தயாரிப்பைப் பார்த்தும் சுரந்தது.

மதுரையில் சௌராஷ்டிர வீடுகள் அமைந்துள்ள பகுதியைத் ‘தெப்பக்குளம்’ எனச் சொல்வார்கள். தெப்பக்குளம் பகுதி மதுரை நகரத்தின் மையத்தில் இருந்தது. அங்கே தண்ணீர் எளிதில் கிடைப்பதால், சௌராஷ்டிரியர் அங்கேயே நெசவுத் தொழில் செய்தார்கள். சௌராஷ்டிரியர் சமுதாயத்தில் நெசவுத் தொழிலை, அவர்களின் குடும்ப பாரம்பரியம் எனக் கருதி அதனை ஆத்மார்த்தமாகச் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நெசவு தொழிலைத் தலைமுறையாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

மலேசியாவில் மலாக்கா மாநிலம் போல, மதுரை தமிழகத்தின் ஒரு முக்கிய வணிக மையமாக இருந்ததால், சௌராஷ்டிரியர்கள் நெசவுத் தொழிலை நல்ல வியாபார வாய்ப்பாக உருவாக்கிக் கொண்டனர். சௌராஷ்டிரியர்கள் மிகவும் திறமையான நெசவாளர்களாக இருந்தது மட்டுமில்லாமல் அவர்கள் புதிய வடிவமைப்புகளை உருவாக்கி, அவர்கள் பாரம்பரியமான நெசவுத் தொழில்களை மேம்படுத்திக் கொண்டனர் என அவர்களின் சேலை கடைகளுக்குள் போனதும் தோன்றியது. மதுரை தெப்பகுளத்திலிருந்து வைகரை ஆற்று வரைக்கும் சுங்குடி சேலையின் வண்ணங்கள் பரவி இருந்ததை அன்று நானும் அண்ணனும் மிக ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் கைக்கட்டு சுங்குடி கலையியல் உத்தி, தாய்லாந்து, ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் அவர்கள் கலாச்சாரத்தில் கலந்திருக்கிறது என நான் வளர்ந்து பெரியவளான பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. அந்த வரிசையில் ஜப்பானில் ‘ஷிபோரி'(Shibori) எனும் மிகப் பிரபலமான கலைநுட்பம் இந்தக் கைக்கட்டு வித்தையைதான் பின்பற்றுகிறது. அதிலும் ‘இன்டிகோ'(indigo) கருநீல வண்ணத்தில் உருவான ‘ஷிபோரி’ நுட்பம் சர்வதேச அளவில் மிகப் பிரபலம். இந்தோனேஸியாவிலும் கைக்கட்டு நுட்பம் அவர்களின் கலாச்சாரத்தில் இடம் பெற்றுள்ளது. ‘இகாட் பாதிக்’(ikat batik) எனும் அவர்களின் கலாச்சாரத்தில் இந்த வகை நுட்பம் மிகச் சிறப்பானது. ஆப்பிரிக்காவில் இந்த நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படும் உடைகளுக்கு உலகச் சந்தையில் எப்பொழுதும் மதிப்பு அதிகம். இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்க வரை இந்தச் சிறப்பான கலை வடிவம் அதன் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வசீகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இரவில் உறங்கும் பொழுதெல்லாம், எவ்வளவு பெரிய கம்பளி போர்வை இருந்தாலும், கேமரன் மலை குளிரில் பாட்டியின் முந்தானை ஒரு நெருக்கமான கதகதப்பைக் கொடுக்கும். அந்த முந்தானையின் பின்னால் எவ்வளவு கதையும் வரலாறு உள்ளது என நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கும். வளர்ந்து சுங்குடி சேலை அணியும் போதெல்லாம், ஜிகர்தண்டா சாப்பிடுவது போல வாழ்வு ஓர் இனிய அனுபவத்தைப் பருகக் கொடுக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...