இன்துயில் கொள்க

அரை மணி நேரத்திற்கு முன்புதான், அண்ணா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அரை மணி நேரம் என்பது மிக துல்லியமாக எனக்குத் தெரிந்திருந்தது. அம்மா வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் என் அறைக்கு மிகச் சாதாரணமாக நடந்து சென்று கதவை மூடிக் கொண்டேன். உள்ளே எத்தனை நேரம் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைச் செல்பேசியைத் திறந்து பார்ப்பதிலும், சுவரில் மாட்டியிருந்த கண்ணாடி கடிகாரத்தை நோக்குவதிலும் மனம் காலத்தை அசைபோட்டுக் கொண்டேயிருந்தது.  மரக்கதவைச் சாத்தி மூடும் பொழுது, சத்தம் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நினைத்தது போல் சத்தம் வரவில்லை. அறைக்குள் சென்று மெத்தை மேல் அமர்ந்து கொண்டேன். புதிதாக வாங்கிய மெத்தை அழகாக என்னை உள்வாங்கிக்கொண்டது. சென்ற வாரம்தான் அண்ணா வாங்கியிருந்தார். என் பழைய மெத்தையின் ஸ்பிரிங் துருத்திக்கொண்டு நின்றதையே அப்படித்தான்  உணர்ந்தேன். அப்பொழுதுதான் அண்ணா அம்மாவைப் பற்றியும்  சொன்னார்.

“டே, அம்மாவை வீட்டுக்குக் கூட்டி வர்றது ஒக்கேதான உனக்கு. பிரச்சன ஒன்னும் இல்ல தான?”

அதற்குப் பதில் ஒன்றும் உரைக்காமல் ‘உம்’ மட்டும் சொன்னது நினைவிருக்கிறது.

அண்ணா அதற்கு மேல் பேசவில்லை. பொதுவாக அவர் என்னிடம் பேசுவது குறைவு. அவருக்கு என் மேல் அன்பே இல்லையென்ற எண்ணம் பல வருடங்களாய் எனக்குள் தொக்கி நின்றிருக்கிறது. ஒரு வேளை அண்ணாவின் சுபாவமே அப்படிதான் போலும். அதிகம் என்னிடம் பேச மாட்டார். எங்களுக்குள் உரையாடல்களும் மிகக் குறைவு. இடையில் விழுந்திருந்த வெளி மிக தூரம். அதை நாங்களாகவே உருவாக்கி கொண்டோமா அல்லது எங்களுக்குள் நிரந்தரமாய் தங்கிவிட்ட இறுக்கத்தினால் இப்படி இருக்கிறோமா என்று புரிந்ததில்லை.

அண்ணாவிடமிருந்து அம்மாவை பற்றிய சொல் எழுந்ததுதான், அப்போதைய என் அலைக்கழிப்பிற்குக் காரணம். அச்சொற்களை என் அகத்தினுள் செலுத்திப் பார்க்க சில நாட்கள் தேவைப்பட்டன. அண்ணா அப்படிப் பேசுபவர் கிடையாது. முப்பத்தைந்து  வயதை நெருங்கும் அவர், அம்மாவைப் பற்றியோ, அப்பாவைப் பற்றியோ என்னிடம் எவ்வித உரையாடல்களிலும் பகிர்ந்து கொண்டதில்லை. அவ்விதமான சந்தர்ப்பமும் அமைந்ததில்லை.

அண்ணா அம்மாவைத் தேடி கண்டுபிடிக்க வேண்டுமென்று சொன்னது முதலில் அதிர்ச்சிதான். பிறகு மெல்ல அது ஒருவித குற்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. அவர் போல நான் ஏன் இல்லையென்ற உணர்வு அது. அம்மாவைப் பற்றிய சிந்தனை அறவே எனக்கு இல்லையென்ற உணர்வின் வெளிப்பாடு அது. அது இன்னும் அவரை வெறுக்க வைத்தது. சினம் கொள்ள தூண்டியது. இன்னும் எங்களிடையே இடைவெளி தூரமானது. அவரை உள்ளுக்குள் வசை பாடிய காலங்கள் ஏராளம். அவர் விபத்தில் அடிபட்டுத் தலை சிதறி இறந்து கிடக்கும் எண்ணம்  மனதுக்குள் வந்து போவது உண்டு. அப்பொழுது ஒரு தியாகி போல நான் வெள்ளை வேஷ்டி போர்த்தி, கண் கலங்கி, அவர் பக்கத்தில் நின்று கொண்டு, வெளி வரும் கண்ணீர் துளிகளை அடக்கி, மனோ பலம்  உள்ளவனைப் போல் நடித்துக் கொண்டிருக்கும் காட்சியைச் சில சமயங்களில் நினைத்துப் பார்த்தும் இருக்கிறேன்.

ஒரு வகையில் இந்தக் கசப்பு என்னுள் நெடு நாட்களுக்கு முன்னமே தங்கிவிட்டது என்று எண்ணியிருக்கிறேன். இப்பொழுது அது குமிழியிட்டு வெளி தெறித்துக் கொண்டிருக்கிறதோ? இந்தக் கசப்பு என் அன்றாட வாழ்வையும் பாதித்தது. வேலையில் கவனமில்லை. திட்டமிட்ட திரைப்பட வேலை அப்படியே பாதியில் நின்றிருந்தது. எழுத நினைத்திருக்கும் பல கதைகள் எழுதி முடிக்காமலே இருந்தன. படத்திற்காக பணம் போட்டவரை அழைத்து, வாங்கிய முன் பணத்தைத் திரும்ப அவரிடமே கொடுத்து விட்டு, “என்னால் படம் எடுக்க முடியாது. நான் தனியாக இருக்க வேண்டும்,” என்று கூறி கை விரித்தபோது உடைந்து போனார். என் மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. என் திறமையின் மீதா அல்லது அவரும் ஒரு சுயநலத்திற்காக என்னைப் பயன்படுத்திக் கொள்கிறாரா? இப்படி எத்தனையோ எண்ணங்கள் எனக்குள்.

அறையின் ஒவ்வொரு மூலைக்கும் வேகமாக நடந்து கொண்டிருந்த நான், கதவைத் திறந்து வெளியே பார்ப்போமா, என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றி, மறு கணம் அது அப்படியே அடி மனதின் ஆழத்தில் சென்று மறைந்து கொண்டது. வலது கரத்தின் மோதிர விரல், கட்டையால் அடித்தது போல் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. பதற்றம் அடையும்போதெல்லாம் அவ்விரல் வலி கொள்ளும். அதை நீவி விட்டுக் கொண்டேன்.

மீண்டும் மெத்தை மேல் அமர்ந்தேன். பஞ்சு பொதிகள் திணிக்கப்பட்டுக் கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டிருந்த மெத்தை அது. உறுதியும் மென்மையும் ஒருங்கே அமைந்திருந்தது. மீண்டும் எழுந்து தாவி அமர்ந்தேன். பிட்டம் மெத்தை மேல் மெதுவாய் அமிழ்ந்து பரவி, உடலுக்கு  ஒரு வித சுகத்தை அள்ளித் தந்தது. அப்படியே சாய்ந்து படுத்து, மேல் சுழன்று கொண்டிருந்த மின் விசிறியைப் பார்த்தேன். அதன் வேகச் சுழற்சியால், ஒரு கணம் அதை பார்கையில் இடப்பக்கமாகவும் மறு கணம் வலப்பக்கமாகவும் சுற்றுவது போலிருந்தது. உடல் வெப்பம் முகத்தில் படர்ந்து காது மடல்கள் உஷ்ணமடைந்தன. அப்பொழுது ஸ்வேதா நினைவில் வந்து நின்றிருந்தாள்.

எழுந்து அவளுக்கு போன் செய்தேன். கைகள் அதிர்ந்து கொண்டிருந்தன. நாக்கு உலர்ந்து போயிருந்தது. முதல் இணைப்பில் அவள் வராமல், இரண்டாவது அழைப்பில் எடுத்துப் பேசினாள். அவள் குரல் கேட்க அப்பொழுது சற்று இதமாயிருந்தது. அம்மா அன்று அண்ணாவுடன் வரப் போவதை முன் கூட்டியே அவளிடம் சொல்லியிருந்தேன். அவளிடமிருந்து ஏதாவது சில ஆறுதல் மொழிகள் வெளிப்படட்டும் என்று நான் அமைதியாய் இருந்தேன். மறுபுறம் எவ்வித பேச்சொலியும் இல்லை. அவள் நான் பேசுவதற்காகக் காத்திருக்கிறாளோ என்று எண்ணினேன். இரு பக்கத்திலும் சீரான மூச்சொலி வெளிவந்து கொண்டிருந்தது.

“அம்மா வந்துட்டாங்க. அண்ணாதான் கூட்டிட்டு வந்தாரு. எனக்கு என்னா பண்றதுன்னு தெரியல. நேரா ரூமுக்கு வந்து கதவ சாத்திகிட்டேன். ஒரு மாதிரி பதட்டமா இருக்குது. ஐ டோன்ட் நோ ஹவ் டு ரியேக்ட்.” மீண்டும் ஒரு சில வினாடிகள் ஆழ்ந்த அமைதி. ஒரு கணத்தைக் கடந்து செல்வதே, ஒரு முழு ஆழி பெருங்கடலைத் தாண்டி செல்வது போலிருந்தது. நெஞ்சு படபடப்பதை உடல் எப்படியோ அறிந்து கொண்டிருந்தது.

“நீ ரொம்ப எல்லாம் போட்டு யோசிச்சிட்டு இருக்காதப்பா, வெளியே போயிட்டு பேசி பாரு. எனக்கு புரியிது உன்னோட சிட்டிவேஷன். பட் ட்ரை பண்றதுல ஒன்னும் ஆகாது. ஜஸ்ட் நோர்மலா இரு. அம்மா ஏதாவது பேசுனாங்கலா, அண்ணா என்ன சொன்னாரு?”

அவள் பேசுவதுகூட எங்கோ தூரத்தில் யாரோ உச்சி குரலில் கத்துவது போலிருந்தது. அவளிடமும் “உம்” என்ற ஒற்றைச் சொல் பதிலைச் சொல்லிவிட்டு போனை அடைத்து விட்டேன். வெளியே செல்லவே வேண்டாமென்று முடிவெடுத்தேன். அண்ணாவே வந்து அழைத்தாலும் சென்று விடக் கூடாது. அல்லது வெளியே சென்றால்தான் என்ன, எதற்கு இத்தனை அச்சம் என்னுள்? சரி அண்ணாவே வந்து அழைக்கட்டும். அதுவரை இங்கேயே காத்திருப்போம் என்று எண்ணி, மெத்தை மேல் புரண்டு  படுத்தேன். நெஞ்சுப்பகுதி கனத்துக்கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அந்த கனம் என் உடலை மெத்தையுடன் அழுத்தியது. அப்படியே மெத்தைக்குள் புதைந்துவிட்டால் நல்லதெனத் தோன்றியது.

வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அண்ணா காரில் ஏறி, எங்கோ  செல்கிறார். அறையில் நானும், வெளியே அம்மாவும். இப்பொழுது அவர் ஏதாவது நம்மிடம் கேட்டால் என்ன செய்வது? தண்ணீரோ அல்லது கழிவறைக்குப் போவதற்கு அழைத்தாலோ, என்ன செய்வேன்? மீண்டும் பதற்றம் கூடியது. அந்தச் சமயத்தில் வெளியே சென்ற அண்ணாவின் மீது எரிச்சல் ஏறியது. வெளியே அம்மா இருமல் சத்தம் கேட்டது. மெதுவாய் கதவைத் திறந்து பார்த்தேன்.

அம்மா அமர்ந்திருந்தார்.

கருப்பு நிற சட்டை, வெளிறி போயிருந்த இளநீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார். தலையில் கருப்பு தொப்பி. உடல் சதை வற்றி, எலும்புகள் துருத்தி வெளி தெரிந்து கொண்டிருந்தன. அமர்ந்திருக்கும் பொழுதே, கூன் விழுந்து காணப்பட்டார். கதவிடுக்கின் வழி பார்ப்பதால், காட்சிகள் மிக துல்லியமாக தெரிந்தன. ஒரு விழி மூடி பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாய் இருமி, தொப்பியைக் கழற்றி தலை சொரிந்தார். முக்கால் வாசி முடி உதிர்ந்து வறண்ட சருமம் தலை மேல் தெரிந்தது. மீதமிருந்த நரை, பல வருடம் எண்ணெய் காணாது காய்ந்து போயிருப்பது போலிருந்தது. குரூர நோய் வந்தவர் போலிருந்தார். சட்டையை முழங்கை அளவே மடக்கி விட்டிருந்தார். நான் கதவிடுக்கின் வழி பார்க்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டது போல், சட்டென திரும்பி என்னைப் பார்த்தார். முகம் பளிச்சிட்டது. அதைவிட ஆழம் கொண்டவை அவரது கண்கள். மிகத் தெளிவாய் அதை ஒரு கணம் நோக்கி விட்டு, சட்டென கதவை மூடிக் கொண்டேன்.

அந்த முகம். பல வருடங்களுக்கு முன் பார்த்த அதே முகம். இன்று வரை அந்த முகம் என் நினைவில் ஒரு படலம் போல்தான் வந்து போயிருக்கிறது. அவரை நான் அறவே பார்த்ததில்லை. ஒரு கணம்கூட என் நினைவில் தங்கியிராத உறவுதான் அவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மெய்யாகவே, அவர் முகம் என் அகத்தில் ஒரு வடிவமாக தோன்றியதே இல்லை. ஆனால், சற்று முன் அவர் திரும்பி என்னைப் பார்த்த பொழுது, நான் அவர் கண்களைச் சந்தித்த பொழுது, அந்த முகம் எங்கிருந்தோ பாய்ந்து வந்து என் மண்டையுள் ஏறிக் கொண்டது.  பஞ்சு பொதிக்குள், ஒரு துளி எரிகனல் விழுந்தது போல. அல்லது மறந்திருந்த அத்தனை நினைவுகளும் திரும்ப பெற்ற ஒரு கோமா நோயாளி போல. இப்பொழுது மிகத் துல்லியமாய் அனைத்தையும் உணர்ந்தேன். எங்கிருந்து ஒன்று முடிந்ததோ, எவ்விடத்தில் ஒன்று துண்டிக்க பட்டதோ, எது மீண்டும் வரவே வராது என்று நினைத்திருந்தேனோ, அது மீண்டும் தொடங்குவது போல் உணர்ந்தேன்.

அறையில் கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டேன். அம்மாவின் நிறம்தான் எனக்கு. அம்மா தோல் கறுத்து காணப்பட்டார். நான் அண்ணாவைவிட நிறத்தில் குறைந்தவன். அண்ணா வெண்மை கொண்ட மாநிறம். உயரமானவர்.  நான் மாநிறத்தின் அடிப்பகுதி. மணக்கும் காப்பியில் மூன்று துளி பால்விட்ட நிறம் போலிருப்பேன். அண்ணாவின் பாதி உயரம்தான். அம்மா, அவர்  நிறத்தை என் மேல் அள்ளி பூசியிருக்கிறார். புவியில் அவர் நினைவாக எஞ்சி இருப்பது, இருக்கபோவது நான் ஒருவனே என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

எனக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது, நானும் அண்ணாவும் பெரியம்மாவிடம் வளர்ந்தோம். பெரியம்மா வீட்டிற்கு வந்தபின், ஒரு முறை கூட நான் அம்மாவின் ஸ்பரிசமோ, தொடுதலையோ உணர்ந்ததில்லை. அந்த வயதில் நடந்தவைகள் எனக்கு ஞாபகம் வர வாய்ப்பே இல்லை என்று எண்ணியிருந்தேன். நான்கு அல்லது ஐந்து வயதேயான மூளைக்கு அதை புரிந்து கொள்வதற்கான எவ்வித நுட்பமும் இல்லை என்றே நினைத்திருந்தேன். இப்பொழுது அத்தனை நினைவுகளும் கண் முன்னே நடந்த காட்சிகள் போல் வந்து கொண்டிருந்தன. இத்தனை நாள், நான் எண்ணிக் கொண்டிருப்பது எல்லாம் வெறும் பாவனைகள்தானா, உண்மையில், இந்தக் கடுமையான கசப்பு தோன்றியதுகூட இந்த நினைவுகளை ஆழ் மனதில் போட்டுப் புதைப்பதனால்தானா?

நாங்கள் பெரியம்மாவிடம் செல்வதற்கு முன், எனது ஐந்து வயதுவரை நாங்கள் அம்மாவுடன்தான் இருந்தோம். அப்பாவும் கூட இருந்தார். அன்று நடந்தவைகளை இப்பொழுது நினைவு கூர்கிறேன். மிக தெளிவாக, மிக நுட்பமாக விழி முன் நின்றாடும் களம் அது.

அம்மாவை மோப் கட்டையால் அடித்து, தலை முடியைப் பிடித்து இழுத்து, சுவற்றில் அறைந்த அப்பாவை, ஒரு கணமும் தாமதிக்காமல் சுடு நீர் போடும் மின் கேட்டிலைக் கொண்டு அடித்தார் அம்மா. ரத்தம் சொட்ட வீட்டை விட்டு வெளியேறிய அப்பா, அன்றுடன் எங்கே போனார் என்பதே தெரியவில்லை. அவர் திரும்பி அம்மாவிடம் வரவேயில்லை. நானும் அண்ணாவும் கை கோர்த்துக் கொண்டு அழுதது நினைவிருக்கிறது. அம்மா தலைவிரி கோலமாய், அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார். அன்று நிகழ்ந்தவைகளை, இப்பொழுது நினைத்து ஆழ் மனதுக்குள் செல்ல செல்ல, அனைத்தும் பொங்கி பெருகும் பால் நுரையென அகத்தில் பீறிட்டுக் கொண்டு வந்தது.

அண்ணா அப்பொழுது என்ன செய்து கொண்டிருந்தார்? எனக்கு நான்கு என்றால் அவர் பத்து வயது சிறுவன். ஆனால், அவர் சிறுவனாக நடந்து கொண்டது இல்லை. என்னைச் சமாதானப்படுத்தியவர் அவர்தான். அழுத முகத்தைச் சிரிக்க வைத்தவர் அவர்தான். ஓடிச் சென்று எனக்கு ஒட்டு கடையிலிருந்து ‘கால் சோப்’ மிட்டாய் வாங்கி வந்தவர் அவர்தான். எனக்கு என்ன வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார். அன்று மட்டுமல்ல, இன்றும்கூட அப்படிதான். அப்பா சென்றவுடன், தந்தையின் ஒரு பாகத்தை நான் அவரிடமே உணர்ந்திருக்கிறேன்.

அப்பா விலகி சென்றதும், அம்மா மாறினார். குடித்தார், புகைத்தார், திடீரென அழுவார். பல சமயங்களில், என்னைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சுவார்.  தாவா ரொட்டியைச் சீனி போடாத பாலில் கையால் பிழிந்து வாயில் ஊட்டுவார். உச்சி முகர்வார். ஆனால், அண்ணாவை முழுமையாக வெறுத்தார். அவரை அருகில்கூட அனுமதிக்காதது நினைவில் இருக்கிறது. அம்மா இரவில் செய்யும் வேலைகளை அண்ணா தொந்தரவு செய்வதாக நினைத்தார். அம்மாவின் ரகசியம் எதையோ தெரிந்துக் கொண்டது போல், அண்ணாவை அம்மா ஒதுக்கியே வைத்தார்.

ஆனால் அண்ணாவிற்கு அம்மா தேவை பட்டார். அண்ணா, “அம்மா” என்று கத்திக் கொண்டு ஓடி வருவார். ஆனால், அவரைப்  பிடித்துத் தள்ளி விடுவார் அம்மா. நான் கண்களை மூடி தூங்குவதாக பாவனை செய்யும்போது அம்மா அண்ணாவைப் பல நூல்களை எடுத்து வைத்து படிக்கச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். காகித அட்டைகளில் ஒட்டியிருக்கும் ஆங்கில எழுத்துக்களை வாசிக்கச் சொல்லுவார். வாசிக்க தெரியாவிட்டால், அண்ணாவை அடிப்பார். ஆங்கிலம் இப்படிதான் பேச வேண்டுமென்று சொல்லுவார். இது எதுவும் எனக்கு அப்பொழுது புரிந்தது கிடையாது. வயது ஏறும் கணத்தில் நான் அனைத்தையும் புரிந்து கொண்டேன். அம்மா கற்றுக் கொடுக்கும் பொழுது அண்ணா தூங்கிய ஒரு சமயத்தில், காய்கறி நறுக்கும் கத்தியைக் கொண்டு அடித்தததில், அண்ணாவிற்குக் கையில் வெட்டு விழுந்த தழும்பு இன்றும் இருக்கிறது.

மற்றொரு நாள் வீட்டில், யாராரோ வந்து, எதுவோ பிரச்சனை நடந்து, நாங்கள் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டோம். பிறகு தெரு எங்களின் இருப்பிடமாய் ஆகியிருந்தது.    நாங்கள் மறுபடியும் முன்பு குடியிருந்த வீட்டிற்குப் போனதே இல்லை. அண்ணா கேட்டதற்கு, “இனி அது நம் வீடு அல்ல,” என்று அம்மா அண்ணனிடம் சொன்னதை, அவர் என்னிடம் விளக்கினார். எனக்கு ஒன்றும் புரியாமல் நான் சிரித்துக் கொண்டிருந்தேன். ஓடுவேன். குதிப்பேன். வயிறு கலக்கினால் அணிந்திருக்கும் பேண்டில், மலம் கழித்து விடுவேன். இல்லையென்றால் அம்மா ஏதாவது காகிதத்தை விரித்து வைத்து அதில் போக சொல்லுவார். அன்று எனக்கு ஒரு டைப்பர் வாங்க அவரிடம் பணமில்லை என்பது இப்பொழுது புரிகிறது. அவர் தெருவில் நடக்கையில், ஒரு கையில் என்னைத் தூக்கியும், மறுபுறம் அண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டும் நடந்தார். அண்ணா ஒரு முறைகூட அம்மாவின் மடியில் ஏறியதை நான் பார்த்ததில்லை. அம்மா அவரைத் தூக்கியதுமில்லை. அண்ணா அப்பாவைப் போன்றவர் என்பதை அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அம்மா எங்களைக் கூட்டிக் கொண்டு பல வீடுகளுக்கு அலைவார். எங்களை என்றுமே பழைய கிழிந்த ஆடைகளை அணிய வைத்ததில்லை. அது எங்கள் பிறந்தநாளுக்கு முன்பொரு முறை வாங்கியது. ஆனால், பல நாட்கள் அதை நாங்கள் அணிந்து கொண்டிருந்தோம். எத்தனையோ நாட்கள் குளிக்காமல் இருந்திருக்கிறோம். அம்மா சிலரிடம், நாங்கள் பஸ் டிக்கெட்டைத் தொலைத்து விட்டோம் என்று சொல்லி பணம் வாங்குவார். சிலரிடம், நயம்பட பேசி காசு வாங்கிவிடுவார். வேறு சிலரிடம் நாங்கள் கொண்டு வந்த லகேஜ் பைகள் பேருந்தில் காணாமல் போய்விட்டதாய் பொய் சொல்லி எங்களுக்கு மட்டும் அணிவதற்குச் சட்டைகள் வாங்கி கொள்வார். தனக்கென்று அவர் வாங்கிக் கொண்டதில்லை. இது பிச்சைதான், இப்படி பல நாட்கள் அலைந்திருக்கிறோம். பழைய அடுக்குமாடி கட்டடங்களுக்குக் கீழும், குப்பை தொட்டி அருகே வீசுவதற்காக இருந்த பழைய மெத்தை மேல் படுத்தும் தூங்கியிருக்கிறோம். பசி எடுத்தால் ‘ஹப் செங் அம்பாட் செகி’ ரொட்டியைப்  பச்சை தண்ணீரில் நனைத்து எங்களுக்கு ஊட்டிவிடுவார்.

இப்பொழுது நினைத்து பார்க்கையில், அம்மா அத்தனை துன்பத்திலும், எங்களை விட்டுவிடவில்லை. நான் எதுவும் அறியாமல் இருந்திருக்கிறேன் என்று உணர்கிறேன். ஆனால், அண்ணா அப்படி விவரம் தெரியாமல் இருந்ததில்லை. ஒரு வேலை அவருக்கு பத்து வயதிலே உலகம் அறிந்து விட்டதோ என்றும் எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அண்ணா அம்மாவின் பேச்சைத் தட்ட மாட்டார். அவர் என்ன சொன்னாலும் செய்வார்.  அண்ணாவே சில முறை, மற்றவரிடம் தான் காணாமல் போய் விட்டோமென்றும், தனக்குப் பணம் வேண்டுமென்றும், எதுவும் சாப்பிடவில்லை என்றும் ஏமாற்றி பணம் வாங்கியிருக்கிறார். அம்மாவிற்கு இது தெரியாமல் பார்த்துக் கொண்டார். வாங்கிய பணத்தைத்  தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார். எங்கேயோ சென்ற அம்மா திரும்பி வந்தவுடன் எதுவும் தெரியாதது போல் இருப்பார். பிறகு அம்மா இல்லாத நேரம், எனக்கு ஏதாவது வாங்கி தருவார்.

நாங்கள் ஒரு சிறு ரூமில் வாடைகைக்கு சென்றவுடன், அம்மா இரவு நேர வேலைக்கு செல்ல தொடங்கினார். அவர் எங்குச் சென்று வருகிறார் என்று எனக்கு அப்பொழுது தெரிந்ததில்லை. எப்பொழுதெல்லாம் இரவில் அவர் காசு பார்க்க வெளியே சென்றாலும் மறுநாள் நிறைய பணத்தோடு வருவார். அன்று மட்டும் எங்களுக்கு கேப்சி வாங்கிக் கொடுப்பார்.

அம்மா இரவு நேர வேலைக்கு சென்று பணத்தோடு திரும்பி வருகையில், அண்ணா முகம் உணர்ச்சியற்று இருப்பதை, இப்பொழுது  நினைத்து பார்த்து கொள்கிறேன். அம்மா வாங்கி தரும் கேப்சியை அண்ணா சாப்பிடாமல் தூக்கி வீசி விடுவார். அம்மா அதற்காகவே அண்ணாவை அடிப்பார். தரையில் விழுந்த கோழி துண்டை கையில் எடுத்து, ஊதி மீண்டும் சாப்பிட வைப்பார். அண்ணா அழுது கொண்ட சாப்பிடுவார். ஏனோ அண்ணா அம்மாவை அறவே வெறுத்தார். என்னிடமும் அம்மாவிடம் போகாதே,  அம்மா கெட்டவர் என்று சொல்லுவார். நான் ஒன்றும் புரியாமல் சிரித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு முறை இரவில் அம்மா காசு பார்க்க செல்கையில், அண்ணா வீட்டை விட்டு ஓட முயற்சிப்பதை உணர்ந்துக் கொண்ட அம்மா, அண்ணாவை கண்டபடி போட்டு அடித்து விட்டார். அண்ணா அம்மாவை பார்த்து எதையோ சொல்வதையும், அதற்கு அம்மா கடும் அதிர்ச்சியாகி நிற்பதையும் நான் கண்டேன். எதுவும் புரியாமல் அழுதுக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்விற்கு பிறகு, அம்மா என்னையும் அண்ணாவையும் அவர் கூடவே அழைத்து சென்று விடுவார். நான் அவர் தோளில் ஏறி கொண்டேன். அம்மா, அண்ணாவின் கையை பிடித்துக் கொண்டு வந்தார். நாங்கள் யாருடைய காரிலோ ஏறி, எங்கோ ஒரு விடுதிக்கு சென்றோம். அம்மா எங்களை கூட்டிக் கொண்டு, ஒரு அங்கிளை அறிமுகம் செய்து வைத்தார். அவரை மாமா என்று கூப்பிட சொன்னார். அவர் எங்களுக்கு நிறைய விளையாட்டு பொம்மைகளை வாங்கி வந்திருந்தார். என்னை அம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டார். நான் அவரிடம் பாசமாக தோளில் ஏறிக்கொண்டேன். அவர் என் கன்னத்தில் முத்தம் கொடுக்கும்பொழுது அவர் மீசை முகத்தில் குத்தி நான் அழுதது நினைவில் இருக்கிறது. அம்மா அண்ணாவை அவரிடம் போக சொன்னார். ஆனால் அண்ணா அவர் அருகே செல்லவே இல்லை. தயங்கி நின்றார். சலித்துக் கொண்டார். திமிறி ஓட முற்பட்டார்.

நான் அவர் தோளிலேயே தூங்கியிருப்பேன். விழி திறக்கையில், ஒரு வெள்ளை மெத்தையில் படுத்திருந்தேன். அருகே அம்மா படுத்திருந்தார். அம்மா பக்கத்தில், அந்த அங்கிள். எனக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி தந்த பாசமான அங்கிள். அம்மா நிர்வாணமாக படுத்திருந்தார். அப்படி அம்மாவைப் பல முறை பார்த்திருக்கிறேன். குளித்து விட்டு எங்கள் முன்பு தான் அம்மா சட்டை மாற்றுவார். அப்பொழுதெல்லாம் அண்ணா என் கண்களை அவருடைய கைகளை கொண்டு மூடி விடுவார். நான் அதை பார்க்க கூடாது என்று சொல்லுவார்.

ஆனால் இம்முறை அம்மா அப்படி ஒன்றுமே அணியாமல் படுத்திருந்ததை கண்டபொழுது அவர் முகத்தை கண்டேன். அவர் முகம் சுளித்து முனகி கொண்டிருந்தார். அடித்தொண்டையிலிருந்து கேவல் சத்தம் வந்துக் கொண்டிருந்தது. அது கெஞ்சுதல் போன்றும் இருந்தது.  நான் எட்டி அவர் முலைகளைப் தேடினேன். பாலுக்காக இருக்கலாம். முலைகள், நாவில் தவழும் முதல் சுவையின் அடி நாதம் கொண்ட இரு தசை குவியல்கள். ஒருபுறம் நானும், மறுபுறம் அந்த அங்கிளும். அருகருகே இருந்தது எங்கள் முகங்கள். ஒரு கணம் நான் அந்த அங்கிளின் முகத்தை பார்த்தேன். எங்கள் விழிகள் சந்தித்துக் கொண்டன. அது தான் முழுமையாக அம்மாவை நான் அறிந்த கொண்ட தருணம். மூளையில் சென்று பதிந்த ஒரு விகார படிமம்.

அன்று அண்ணா அழுததை முதலில் உணர்ந்தேன். அம்மாவும் அந்த அங்கிளும் படுத்திருந்த மெத்தையைத் தாண்டி கதவோரத்தில் நின்று தேம்பிக் கொண்டிருந்தார். ஓடிச் சென்று அண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டேன். அண்ணா என்னை இழுத்துக் கொண்டு கழிவறைக்குச் சென்றார். கழிவறை கதவை மூடி, என்னை அங்கிருந்த சிங்கின் அடியில் கிடத்தினார். தூக்கம் கலைந்த நான் வீறிட்டு அழுதேன். அண்ணா என் வாயைப் பொத்தினார். என் குரல் ஓங்கியது. என் வாயை உதறி விட்டு, அண்ணா கதவிடுக்கின் வழி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் காலைப் பிடித்து மேலே ஏற முயற்சித்தேன்.

பலமுறை அம்மா எங்களை அழைத்துக் கொண்டு, வெவ்வேறு அங்கிள்களோடு அவ்வாறு இருந்தார். அண்ணா எங்கேயாவது என்னையும் கூட்டிக் கொண்டு ஓடி விடுவாரோ என்ற அச்சத்தில் எங்களையும் அவரோடு அழைத்துச் சென்றார் அம்மா. அன்றைய நாட்களில் தினமும் எங்களுக்கு கேப்சி. கோழியின் சதைகளை கடித்து குதருவதற்கு எனக்கு தெரியாது. அவர்கள் சாப்பிடுவார்கள். எனக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். சில நேரம் வாந்தி வரும். பிறகு பழகி விடும்.

பிறகு ஒரு முறை அம்மாவை போலீஸ் கூட்டிக் கொண்டு சென்றார்கள். அவருடன் நான் முதலில் பார்த்த அங்கிளும் இருந்தார். இருவரும் போலீஸ் வேனில் ஏறியதை பார்த்தேன். அது தான் அம்மாவை தெளிவாக பார்த்த இறுதி தருணம்.

பிறகு அதிகாரிகள் எங்களைப் பெரியம்மா வீட்டில் விட்டு விட்டார்கள். இருவரும் வளர்ந்தோம். எனக்கு ஐந்து வயது முடியும் பொழுது, என்னையும் அண்ணாவையும் கூட்டிக் கொண்டு பெரியம்மா ஒரு ஹாஸ்டலில் விட்டார்கள். அங்கே வாழ பழகிக் கொண்டோம். படித்தோம். பட்டம் பெற்றோம். வேலைக்குச் சேர்ந்தோம். எங்களுக்கான வழிகளை நாங்களே அமைத்துக் கொண்டோம். நான் சினிமா துறையில் சேர்ந்து, சென்ற வருடம் ஒரு படம் இயக்கியிருந்தேன். அண்ணா டாக்டர் ஆனார். வளரும் பொழுது, மறக்கக் கூடிய ஒன்றாகவே அம்மா இருந்து கொண்டிருந்தார். என்னுள் இருந்த அத்தனை அன்பும், எரிந்து அணைந்து, வெறும் கசப்பும் தாழ்வுணர்ச்சியுமாக மாறியது. மற்றவரின் அம்மாவை காணும் போதெல்லாம், என் அம்மா என்னை பார்க்க வராததை எண்ணி , அவரை முழுமையாக வெறுத்தேன்.

ஒரு முறை எங்களைத் தேடி அந்த ஹாஸ்டலுக்கு அம்மா வந்தார். எங்களை அவருடன் வந்து விடும்படி சொன்னார். அண்ணா அவரைக் கொச்சை வார்த்தைகளில் திட்டி, என் கைகளைப் பலம் கொண்ட மட்டும் பிடித்துக் கொண்டு அவரிடம் போக வேண்டாமென்று தடுத்தார். அம்மாவிடம் போக நான் துடித்தேன். அம்மா தூரத்தில் நின்றதால், அவர் முகம் எனக்குத் தெரியவில்லை. கண்கள் கலங்கி இருந்ததால், அவர் ஒரு படலம் போலவே தெரிந்தார். அண்ணா என்னை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அண்ணாவை மீறிச் செல்ல முயன்ற என்னை ஓங்கி அறைந்து, முதுகில் குத்தி, தரதர வென்று இழுத்துச் சென்றார் அண்ணா. எனது அந்தக் கதறலே, அன்று ஏற்பட்ட கொந்தளிப்பே, நான் அவர் மேல் கொண்ட விலக்கத்திற்கு முதல் விதை.

எனக்கு பதினேழு வயதாயிருக்கும் பொழுது, அம்மாவைப் பினாங்கு தைப்பூசத்தில் பார்த்ததாக அண்ணா என்னிடம் சொன்னார். அத்தனை கூட்டத்திலும் அம்மா மிகத் துல்லியமாக தன் கண்களுக்குத் தெரிந்தார் என்றார். ஒட்டிய முகம் கொண்டு, தசை வற்றிய உடலோடு, ஏதோவொரு ஆணின் தோளில் சாய்ந்து கொண்டு நடந்ததாகக் கூறினார். முகம் போதையின் உச்சத்திலிருந்ததாய் சொன்னார். அம்மா போதை மருந்துக்குத் தன்னை இழந்துவிட்டார் என்று கூறிய பொழுது, என் மனதில் எவ்வித உணர்வும் எழவில்லை. அம்மாவின் முகம் முற்றாகவே மறந்துவிட்ட காலம் அவை. அன்றிரவு தூங்கும் பொழுது, அம்மா பல ஆண்களோடு உளம் குவிந்து உடல் கலந்திருப்பது போன்ற கனவு வந்தது. அது ஒரு உணர்வாய் மூளை முழுவதும் பரவியது. அம்மாவைத் திட்டி  கொட்டாத கெட்ட வார்த்தைகள் இல்லை. கண்ணில் படும் ஆண்களிடமெல்லாம் படுத்து எழும் ஒரு பெண் அவள் என்று எண்ணினேன். அம்மாவின் மேல் உள்ள வெறுப்பு என்னைப் பெண்களிடமிருந்து பிரித்தது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வாமை எழுந்தது. அனைத்து பெண்களும் விபச்சாரம் செய்யக் கூடியவர்களே  என்ற எண்ணம் ஆழமாய் பதிந்தது. காதலிக்கும் பொழுது ஸ்வேதாவையும் முதலில் அப்படிதான் நினைத்தேன்.

செல்பேசியின் ஒலி கேட்டு, பித்து நிலை கலைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதை எடுத்து பார்கையில் ஸ்வேதாதான் மெசேஜ் அனுப்பியிருந்தாள். வாய்ஸ் நோட்டில் பேசியிருந்தாள். தட்டி காதருகே வைத்தேன். பெண்ணின் குரல் கேட்கையில் முதலில் எழும் ஒவ்வாமை அப்பொழுதும் எழுந்தது. பிறகு மனம் பழகிக் கொண்டது.

“ப்பா, அவுங்க உங்க அம்மா ப்பா. நீ இந்த மாறி கண்டுக்காம இருக்கறது சரி இல்ல. அவுங்க எப்டி வேணும்னாலும் இருந்து இருப்பாங்க. அவுங்க சூழ்நிலை, எல்லாம் ஒரு மாதிரி உங்களுக்கு நடந்துருச்சி. எல்லா பொண்ணுங்களும் உங்க அம்மா மாதிரி இல்ல. ஆனா எல்லா பொண்ணுங்களும் ஒரு நாள் அம்மாவா ஆகத்தான் போறாங்க. போயிட்டு பேசுப்பா. ஷி நீட்ஸ் யூ. அவுங்க உடம்பு வேற சரி இல்லனு அண்ணா சொன்னாரு. இப்பதான் கால் பண்ணாரு. கோ, டாக் டு ஹேர்… ப்ளிஸ்… எனக்காக,” அவள் கொஞ்சல் தொணி  கொஞ்சம் மனதை ஆசுவாசப்படுத்தியது. ஆனால் அம்மாவிடம் பேசிவிடும்படி சொன்னது சலிப்பாயிருந்தது.

மீண்டும் கதவிடுக்கின் வழி, அம்மாவைப் பார்த்தேன். அம்மா சோபா நாற்காலியில் சாய்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்தார். நெஞ்சு மெல்ல ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவருக்கு மார்பே இல்லை என்று எண்ணத் தோன்றியது. போன வாரம் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர போவதாகச் சொன்ன அண்ணா, அதற்கும் முன்பே அவரைச் சென்று பார்த்திருக்கிறார். பினாங்கு ஹாஸ்பிட்டலில் எங்கோ அவர் அமர்ந்திருந்ததாய் சொன்னார். பெரியம்மாவிடம் அம்மாவின் இருப்பிட செய்தியை அறிந்து, அவரைத் தேடியிருக்கிறார். அண்ணாவிற்குத் தெரிந்த சில நண்பர்களின் மூலம், பினாங்கில் கஞ்சா விற்கும் சிலரைத் தேடி பிடித்து, அம்மாவின் பெயரையும், பெரியம்மா கொடுத்த அம்மாவின் பழைய புகைப்படத்தையும் காட்டி தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். அம்மாவைப் பார்த்த முதற்கணம் உள்ளம் நடுங்கியதாக அண்ணா சொன்னார். பல வருடம் கழித்துச் சந்தித்துக் கொண்ட இரு மானுட உள்ளங்கள். இரு வேறு உணர்ச்சி குவியல்கள். அண்ணாவைப் பார்த்ததும், அம்மா எழுந்து நின்று, ‘பெரியவனே’ என்று சொன்னதாக அண்ணா சொன்ன பொழுது, என் உள்ளம் ஒரு கணம் நடுங்கியது.

கேட் திறக்கும் சத்தம் கேட்டு, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அண்ணா காரை உள்ளே நுழைத்து, பார்க் செய்து விட்டு இறங்கி வந்து கொண்டிருந்தார். நான் அறையை விட்டு வெளி வரவில்லை. அண்ணா வந்து கதவைத் தட்டினார். என் பெயரை அழைத்தார். கதவைத் திறந்து வெளியே வந்தேன். அம்மா தலை திருப்பி என்னைப் பார்த்தார். முகம் ஒட்டிப் போய், கன்னத்தில் தோல் சுருக்கம் விழுந்து, தொங்கிய தாடைகளை மெதுவாய் ஆட்டி, சிரித்தார். கறை படிந்த பற்கள்.

“டே உனக்கு சென்டோல் வாங்கிட்டு வந்துருக்கேன். புளுட் போட்டது. ஸ்வேதா உன்ன மறுபடியும் கால் பண்ண சொன்னா. என்னனு கேட்டு பாரு,” என்று சொல்லிவிட்டு அம்மா பக்கத்தில் சென்று அமர்ந்தார்.

நான் அவர் முகத்தைப் பார்த்து “தேங்க்ஸ் அண்ணா” என்றேன். புதிதாய் என் முகத்தைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு, அண்ணா ஒன்றுமே பேசவில்லை. நான் அம்மா பக்கத்திலே செல்லவில்லை. அம்மா என்னவோ முனகுவது போலிருந்தது. அம்மா அழைக்கிறார் என்று அண்ணா சொன்னார். அருகே சென்றேன். “சின்னவனே,” என்ற ஒரு சொல் மட்டும்தான் அம்மா சொன்னார். பிறகு “பெரியவனே” என்றார். மீண்டும் “சின்னவனே” என்றார். எனக்கு அங்கே நிற்க முடியவில்லை. உடைந்துவிடக் கூடாது என்று எண்ணி, அண்ணா வாங்கி வந்திருந்த செண்டோலை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டேன். வெளியே காற்றோட்டமாய் இருந்தது. குளிர்ந்த செண்டோல், இனிப்புச் சுவை கலந்து தொண்டைக்குள் இறங்கி ஈரப்படுத்தியது.

எனக்கு பிடித்தவைகளை அண்ணா எப்பொழுது, எப்படி  அறிந்து வைத்திருந்தார் என்று தெரியவில்லை. ஒரே இழுப்பில், பாதி செண்டோலை குடித்து முடித்து விட்டேன்.

2 comments for “இன்துயில் கொள்க

  1. ஆதித்தன்
    January 1, 2025 at 8:31 pm

    ‘இன்துயில் கொள்க’ சிறுகதை ஒரு பார்வை

    வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளின் எழுத்துகளை ஆர்வத்தோடு வாசிப்பது வழக்கம். சில எழுத்துகள் பிரச்சார நெடியுடன் கூடிய நன்னெறி கதைபோல நகர்ந்து சலிப்பூட்டும். சிலவை வாசிக்கும் போதே கோவத்தைத் தூண்டும். அப்படியான படைப்புகளுக்கு நடுவில் தீவிர வாசிப்பனுபவத்தைத் தரவல்ல எழுத்துகள் மனத்தோடு களமாடி, அசைப்போட வைக்கின்றன.

    அவ்வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தீவிர வாசிப்பனுபவத்தை நுகர்ந்த எனக்கு, இளம் படைப்பாளர் சர்வின் செல்வா எழுதிய ‘இன்துயில் கொள்க’ சிறுகதை உள்ளத்துள்ளே பெரும் அணையை உடைத்தெரிந்த அனுபவத்தைத் தந்தது. தாய், தாய்மை பற்றிய அரண், அறம் அதன் மறுபக்கத்தைக் காட்டியிருக்கிறது.

    கதையோடு பொருந்துமா இந்தத் தலைப்பு என ஒரு கேள்வி உலாவி கொண்டிருந்த சிந்தனையில் துருத்திக் கொண்டே மேலெழும்பி தலையில் குத்தியது சிறுதுரும்பு. கதைச்சொல்லி நீண்ட நாள்களாக பெறாத துயிலை, இறுதியில் பெற்றுவிட்ட நிறைவைக் காட்டுவதாக கதையின் தலைப்பு அமைந்திருக்கிறது.

    கதையின் கரு ஏற்கனவே எழுதப்பட்டத் தாய்மை குறித்தானது. தி. ஜானகிராமன் எழுதிய ‘அம்மா வந்தாள்’ நாவலில் அம்மாவின் மறுபக்கம் மட்டும் தனித்துச் சிறுகதையில் காட்டமுடிந்தால் எப்படி இருந்திருக்கும்? இந்தச் சிந்தனை இன்துயில் கொள்க சிறுகதையை வாசித்தப் பின் எனக்கு எழுந்தது. துணிந்து எங்கும் பேசப்படாத தாய்மையின் மறுப்பக்கம் இந்தச் சிறுகதையில் முழுமையாகப் பேசப்பட்டிருக்கிறது.

    சர்வின் செல்வா சினிமா துறை மாணவர் என்பதால், அவரின் கேமரா மிக உயரத்தில் வைக்கப்பட்டு வேகமாக கதைச் சொல்லியின் முந்தைய நிகழ்வுகளைப் படம் பிடித்துக் கொண்டே போகிறது. மிகத் துள்ளியமாக கதைமாந்தர்களின், கோவம், அழுகை, சிரிப்பு, தற்காப்பு, தண்டனை, இரத்தம், முணகல் முதற்கொண்டு உணர்வுகளின் வெளிப்பாட்டையும் தவற விடாது கண்ணிமைக்கும் நொடியில் காட்டியிருக்கிறது.

    முற்றிலும் வேறு கோணத்தில் சிறுகதையை அணுகிய அனுபவத்தைத் தந்தது இச்சிறுகதை. நாவலில் மட்டுமே பார்த்திருந்த கேமராவைச் சிறுகதை பக்கம் திருப்பியிருக்கிறார் சர்வின் செல்வா. (இது முற்றிலும் எனது வாசிப்பனுபவத்தை குறித்து). எந்தத் தாயும் தனது குழந்தையை எப்போதும் தொந்தரவாக நினைத்துத் தூக்கி எறிந்தது கிடையாது. அது தாய்மையின் அறத்தைக் குறைத்து விடும் என்பதால் துணிந்து எந்த புதுப் படைப்பாளனும் கையில் எடுக்காத ஆயுதத்தை எடுத்திருக்கிறார் எழுத்தாளர். இருப்பினும் தாய்மையின் அறம் இக்கதையில் காக்கப்பட்டிருக்கிறது என்பதை தீவிர வாசகன் உணர்ந்து கொள்ளும் தருணம் கதையில் குறுகி ஒலிக்கிறது.

    இதை ஏன் இவ்வளவு ஆழமாக பேச வேண்டும் என நினைக்கிறேன்? வளர்ந்து வரும் படைப்பாளர் என்பதாலா? வல்லினத்தில் பதிவாகி இருக்கிறது என்பதாலா? பேசப்படாத மறுபக்கம் என்பதாலா?
    மூன்றுமே இல்லை. மனைவி, உடன்பிறந்த சகோதரிகள், காதலி, விபசாரம் புரிவோர் போன்றவர்களின் பெண்மை பேசப்பட்ட இடங்களை அள்ளி எடுத்து ஒரே படைப்பில் தர்க்கமாக பேசியிருக்கிறார் படைப்பாளர். பெண்களின் அங்க அவையங்களை மட்டுமே பேசும் கவிஞர்களும், எழுத்தாளர்களும், பக்கப்பக்க பால்முலையில் குழந்தையையும், காமத்தையும் ஒருசேர காட்டியிருக்கும் புதியதொரு படைப்பு. ஜனரஞ்சக வாசிப்பாளர்கள் விமர்சிக்கக் கூடும் கதை. இதை சர்வின் செல்வா எவ்வாறு கையாளப் போகிறார் என்பது அவரைப் பொறுத்தது.

    கதைச்சொல்லி, வளர்ந்த அண்ணன் இருவரின் தாயாகிய மாதுவின் தாய்மை உணர்வை மிஞ்சாத அன்பு, இறுதியில் வென்றதா இல்லையா என்பதுவே கதை. பொறுப்பில்லாத கணவன் கைவிடப்படுவதும், கைவிட்டு போகும் வீடும், அதனால் ஏமாற்றி பிச்சை எடுக்கும் நிலையும் உறுத்துவதால் போதை, விபசாரம் என தம் பிள்ளைகளுக்காக தன்னை இழந்து போகும் தாயின் கதை. ஐந்து வயதே நிரம்பிய கதைச்சொல்லியின் தாய்ப்பாசம். தந்தைபோல் இருப்பதாலும், நடப்பதைப் புரிந்துக் கொள்ளும் முதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் மூத்தவனை வெறுக்கும் தாய். இதற்கிடையில் அண்ணனா, அம்மாவா என தடுமாறும் தம்பி். கதை இறுதியில் தொண்டையில் இறங்கும் குளிர்ந்த நீர்போல் நிறைவை தந்ததா? அல்லது மேலும் அசூயைத் தந்ததா? என்பதே கதையின் முடிவு. உதைத்து தள்ளினாலும், அள்ளி அணைப்பது தாய்மை. கொட்டிக் கொடுத்தாலும் ஈடிணை இல்லாதது தாயன்பு. ‘இன்துயில் கொள்க’ தீராத அன்பின் திகட்டாத நிறைவு.

    ஆதித்தன் மகாமுனி
    1/1/2025

  2. Rajagopalan j
    January 4, 2025 at 11:17 am

    ஆழமான படைப்பு சர்வின் செல்வா… தாய்மை என்பதில் ஆண்களுக்கும் பங்குண்டு என உணர வைக்கும் கதைகள் தமிழில் அபூர்வம். உங்கள் படைப்பு அப்படிப்பட்ட ஒன்று. அண்ணன் கண்ணுக்குத் தெரியாத கதைநாயகன். வெகுநாட்கள் கழித்து மனதை கனக்கச் செய்யும் ஒரு வாழ்க்கையை வாசித்த உணர்வு. உங்கள் சிறுகதைத் தொகுப்பு வெளியாகும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறேன். அன்புடன்,
    ராஜகோபாலன் ஜா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...