என் வாழ்நாளில் மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் எப்போதுமே அறிந்திருக்கவில்லை. இளமையில் பசியோ வேதனையோ உடலில் தூலமாக உணர்ந்ததைபோல அதை நான் உணர்ந்ததில்லை. சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்திருந்த தருணங்கள் உண்டு. கரிசல் காட்டின் அந்தியில் வானம் சிவக்கும்போது சில சமயங்களில். அதையும் சிறுவயதில் அச்சத்துடன்தான் கண்டிருக்கிறேன். மொத்த வானமும் தலைக்கு மேல் தீப்பற்றி எரிவதுபோல அப்போது தோன்றும். பின் இளம் பருவத்தில் ஆடுமேய்த்து திரிந்த காலங்களில் அந்த அச்சத்துடன் மெல்ல என்னை பழக்கப்படுத்திக்கொண்டேன். எல்லாம் மறந்திருக்கும் அத்தருணங்களைத்தான் சந்தோஷம் என எண்ணிக்கொள்வேன். அதுகூட எனக்கு உறக்கத்தைப்போல முழுவதுமாக விடுதலை அளிக்கவில்லை. அதிகாலையில் ஆட்டுக் கிடையை எழுப்பி மந்தையை வெளியே பத்திவிடும்போதும் குட்டிகள் நின்ற இடத்திலேயே ஈர காற்றில் கால்கள் துடிக்க துள்ளிக்குதித்து மண்ணில் விழுவதை கண்டிருக்கிறேன், அதுதான் மகிழ்ச்சியா என வியந்திருக்கிறேன். சமயங்களில் மழைக்காலத்தில் கரிசல் மண்ணின் அடி ஆழங்களில் இருந்து புறப்பட்டு எழும் ஈசல் கூட்டங்களின் பதற்றத்தை அப்படி எண்ணிக்கொள்வேன்.
என் பத்து வயதுமுதல் நான் ஆடுகளை மேய்க்கத் துவங்கி விட்டிருந்தேன். அது எழுபதுகளின் தொடக்கம். ஆடு வளர்ப்பில் முன்புபோல பெரிய லாபம் இல்லாததால் எங்கள் கூட்டத்தில் பெரியவர்கள் எல்லாரும் தெற்கே சிமண்ட் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல தொடங்கிவிட்டிருந்தார்கள். முன்பெல்லாம் அறுவடை முடிந்து மேய்ச்சல் காலத்தில் நாங்கள் வெள்ளாட்டு மந்தைகளை பத்திக்கொண்டு தெற்கே திருநவேலி, நாஞ்சிநாடு வரை கிடை போட்டுச் செல்வோம். அறுப்பு முடிந்த நெல்வயல்களில் கிடைக்கு இத்தனை ரூபாய் என கீதாரிகள் முன்கூட்டியே நல்ல தொகையை கிடைக்கூலியாக பேசி முடிவு செய்துவிட்டு வருவார்கள். பின்பு அதன்படி பாதையை தீர்மானித்துவிட்டு பட்டியை திரட்டிக்கொண்டு செல்வோம். ஆலமநாயக்கம்பட்டி, சேவக்குளம், பழங்கோட்டை, கழுகுமலை, கள்ளம்பட்டி, இடச்சேவல், குருவிக்குளம் என சுற்றுமுள்ள ஊர்களில் எல்லாம் ஆடு வளர்ப்பவர்களை சென்று கண்டு பட்டிக்கு பாங்கு திரட்டுவோம். கோணார்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள் முதல் பள்ளர்குடி வரை ஆடுகள் கிடைக்கு வந்து சேரும். ஆயிரம் இரண்டாயிரம் தொடங்கி நல்ல வருடங்களில் ஆறாயிரம் வரை ஆடுகளும், அவற்றை மேய்க்க நூறு பேர்வரை மேய்ச்சல்கார்ரகளும் பல கிடைக்குழுக்களாக புறப்பட்டு செல்வார்கள். கிடைகள் எல்லாம் ஒன்றாகக் காடு கிளம்பி மேடு பள்ளம் ஏறி கடந்து செல்வதை பார்க்க கம்மாய் வெள்ளம் உடைத்துக்கொண்டு உயிர்பெற்று நகர்வதுபோலத் தோன்றும். காற்றில் மந்தைகள் கிளப்பும் புழுதி எழும்பி அவை வெகுதூரம் சென்று மறைந்த பின்னும் வானில் பல மணிநேரம் சுழன்று நிற்கும்.
கிடையை வழிநடத்திச் செல்லும் கீதாரியின் அனுபவத்தைப் பொறுத்து அதன் எண்ணிக்கை இருக்கும். ஒவ்வொரு ஆட்டுக்கும் மேய்ச்சல்கார்களிடம் அடையாளமும் பெயரும் உண்டு. ஆடுகளுக்கும் அதேபோல அவற்றின் பாங்கும் கிடையும் நன்றாகத் தெரியும். கிடை நாய்களின் சின்ன உறுமல் போதும், சீராகப் பிரிந்து தத்தம் கூட்டங்களைக்கண்டு மாலையில் கிடைக்குள் அணைந்துவிடும். மற்றப்படி மந்தையை மிரளாமல் பார்த்துக்கொள்வதுதான் மேய்ச்சல்காரர்களுக்கு மிகவும் முக்கியமான வேலை. மூவாயிரம், நாலாயிரம் ஆடுகள் ஒன்றாகச் செல்லும்போது ஏதேனும் கிடையாடுகள் கொஞ்சம் மிரண்டு விட்டாலோ அல்லது பள்ளங்களில், தண்ணீரைக் கடக்கும் இடங்களில் முன்னால் செல்லும் ஆடுகள் சற்றுத் தயங்கி நின்றுவிட்டாலோ சட்டென்று சுதாரிப்பதற்குள் மந்தையில் குழப்பம் பரவிவிடும். அவற்றை இணைத்திருந்த மாபெரும் மாய வலைச்சரடு ஒன்று அறுபட்டதுபோல. எண்ணுவதற்குள் ஆடுகள் ஒன்றன் மீது ஒன்று தாவி மிதித்துச் செல்ல மந்தை கலைந்துவிடும். சில மோசமான சம்பவங்களில் ஐம்பது அறுபது ஆடுகள் வரை மிதிபட்டு இறந்துவிடுவது உண்டு. அப்போது மிரண்ட கிடையின் கீதாரி அதற்கு பொறுப்பாக்கப் படுவார். கிடைக்கூலியும் திரும்பப் பெறப்பட்டு ஆறு மாதம் ஒதுக்கி வைக்கப்படுவார்.
இதெல்லாம் சாராய போதையில் பாட்டன் சொன்ன கதையாகத்தான் எங்களுக்கு தெரியும். பாட்டன் சொல்வார், அப்படி மந்தை கலையும்போது சில சமயம் ஒன்றிரண்டு ஆடுகள் பல மைல்கள் கரிசல்காட்டிற்குள் விரட்டப்பட்டு தொலைந்துவிடும். நாய் நரியேதும் அடிக்கவில்லை என்றால் அபூர்வமாக பல நாட்கள் கழித்து அவை மீண்டும் பட்டிக்கு வந்து சேரும். ஆனாலும் அவை முன்புபோல இராது. காத்தவராயன் அணைந்ததுபோல, மேயாமல் மண்ணை வெரித்து பார்த்தபடி நிற்கும், நீரருந்தாமல் வாயில் நுரைக்க வலிப்பு வந்து விழும், குரல் நடுங்க கணைக்கும். பெரும்பாலும் ஒன்றிரண்டு வாரங்களிலேயே அவை இறந்துவிடும். என் சிறு வயதில் பாட்டன் இதை சொன்னபோது, அவை ஏன் மீண்டும் திரும்பி வந்தன என்பதே எனக்கு பெரும் மர்மமாக இருந்தது. அவை தொடுவானில் காடு மலைகள் என தொலைந்து அலைவதை நான் பலவிதமாகக் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்.
பாட்டன் காலத்து மாபெரும் மந்தைகளெல்லாம் என் காலத்தில் பழங்கதை ஆகிவிட்டிருந்தன. பல நூறு வருடங்களாக பல தலைமுறைகளாக தொடர்ந்து வந்த நடைமுறை எங்கள் கண்முன்னால் ஒரே தலைமுறையில் கைவிடப்பட்டது. எழுபதுகளுக்கு பின்னால் யாரும் கிடை போட தெற்கே செல்வதில்லை. செல்லும் வழியான தரிசும் புஞ்சையும் எல்லாம் வேலி போட்ட பட்டா நிலங்கள் ஆகிவிட்டன, விவசாயம் மாறிவிட்டது, கிடைக்கு ஆடு விடும் ஜனமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டனர். எங்கள் சமூகத்தில் முதிர்ந்தவர்கள் தொழிற்சாலைகளுக்கு செல்ல தொடங்கினர். வடக்கே திருப்பூருக்கும் தெற்கே சிமண்ட் ஃபேக்டரிகளுக்கும் குடிபெயர்ந்தனர். ஊரும் மன்றும் காலியாயின. உழைக்க வழியில்லாமல் எஞ்சிய சிலர் என் பாட்டனைப்போல எதிலும் நிலைக்காமல் குடித்து, சூதாடி சீரழிந்தனர். அதனுடன் சேர்ந்து பழைய விதிகளும் கட்டுப்பாடுகளும் உடைந்தன.
என் சிறுவயதில் மந்தைகள் எல்லாம் ஐம்பது அறுபது உருப்படிகள் தாண்டினால் அதிகம். அவற்றையெல்லாம் எங்களைபோல இளந்தாரிகள்தான் மேய்த்து திரிந்தோம். பெரும்பாலும் தந்தையில்லாத எங்களை கண்காணிக்க யாருமிருந்ததில்லை. நாங்கள் யாரும் பள்ளிக்கும் சென்றதில்லை. பிறந்ததிலிருந்தே ஆடுகளுடன்தான் வளர்ந்தோம். என் பத்து வயதுக்கு பின் நான் வீட்டில் உறங்கிய நாட்களே இல்லை. என் தந்தை சிறுவயதிலேயே என்னையும் தாயரையும் விட்டுச் சென்றுவிட்டார். தெற்கே சிமண்ட் ஃபேக்டரி ஒன்றில் வேலை பார்த்த அவர் அங்கேயே ஒரு வேசியுடன் குடும்பம் நடத்தினார். ஆரம்பத்தில் வீட்டிற்கு வருவது படிப்படியாக குறைந்து பின் ஒரு கட்டத்தில் நின்றுபோனது. உண்மையில் நான் பிறத்ததிலிருந்துதான் வீட்டில் பிரச்சினை பெரிதாகத் தொடங்கியது. நெடுநாள் அவர்களுக்கு குழந்தையேதுமின்றி அதன்பின் நான் பிறந்தேன். நான் கருவான அந்தக் கணம் முதல் தந்தை என் பிறப்பை சந்தேகித்து தாயாரிடம் தினமும் பூசலிடத் தொடங்கினார். தந்தையிடம் அடிவாங்கி கன்னங்கள் வீங்கி உடலெங்கும் கன்றிப்போன தாயாரும் பதிலுக்கு அடிவயிற்றிலிருந்து சீறினாள், “ஆமாம் அவனோடுதான் படுத்தேன், இப்போது என்ன செய்வாய்?” ஒவ்வொருமுறையும் அவள் ஒவ்வொரு பெயரைச் சொன்னாள். கோபத்தில் தந்தை அவளை ரத்தம் சிந்த சிந்த தாக்கி அரைமயக்க நிலையில் விட்டுச்செல்வார். அப்போது அவரைத் தடுக்க யாரும் வரவில்லை. ஒவ்வொருநாளும் வீட்டில் ஒரு கொலை நிகழலாம் என்ற அச்சத்தில் அந்தியானவுடன் என் உடல் நடுங்கத் துவங்கும்.
நான் பிறந்து நான்காவது மாதத்திலேயே தந்தை என்னை கொல்லையில் கருவேலங்காட்டில் வீசிவிட்டு இரவெல்லாம் வெளியே சென்றுவிட்டார், ”எனக்கு வந்த சாபம் அது. செத்து ஒழியட்டும்!” என என் தாயாரும் வீட்டை பூட்டிக்கொண்டாள். இரவு முழுக்க நான் அழுததை அவளைத் தவிர வேறு யாரும் கேட்டிருக்கவில்லை. மறுநாள் பனியில் உடல் விரைத்துக் கிடந்த என்னைப் பக்கத்து வீட்டு மூதாட்டி செல்லியம்மாள்தான் கண்டெடுத்து காப்பாற்றியதாகச் சொல்வார்கள். என் நினைவு தெரிவதற்கு முன்னே இறந்துவிட்ட அவரைத்தான் நான் இதுவரை தாயாகக் கருதியிருக்கிறேன்.
என்னைப் பெற்றவள் ஒருமுறைகூட என்னைக் கனிவாக நடத்தியதில்லை. அவளுக்கு நான் என் தந்தையின் முகத்தை நினைவுபடுத்தினேன். என்னைப் பார்த்த போதெல்லாம் பருத்தி விளாறால் தோல் கிழிய அடித்தாள். அதற்கு அவளுக்கு காரணங்கள் ஏதும் தேவையிருக்கவில்லை. அழுது தேம்பியபடி அல்லாமல் வேறெப்படியும் அவளால் என்னை ஏற்க முடியவில்லை. அவளது அனைத்து வலிகளுக்கும் நான்தான் காரணம் என நினைத்தாள். நான் அவளிடமிருந்து அடிதாளாமல் தப்பிச்சென்று கொல்லையிலிருந்த கருவேலங்காட்டில் நாள் முழுவதும் ஒளிந்து கொள்வேன். வளரும் பருவத்தில் வீட்டில் பெரும்பாலும் முழுப்பட்டினிதான். ஆறேழு நாட்கள் வரை உணவில்லாமல் இருந்திருக்கிறேன். அக்கம்பக்கத்து வீடுகளில் சென்று அவர்கள் உணவுண்பதை பார்த்து நிற்பேன். துர்சகுணம் என்று என்னை அவர்கள் அடித்து துரத்தியிருக்கிறார்கள். கல்லெரிந்து தலையிலிருந்து ரத்தம் கசிய வீட்டிற்கு ஓடி வந்திருக்கிறேன். சிறுவயதில் என் உடலெல்லாம் காயங்களும் காய்ந்த ரத்தப்பொருக்குகளும் இல்லாத நாட்களை என்னால் நினைவுகூர முடியவில்லை. கொஞ்சம் வளர்ந்ததும் என்னைப் போன்று பட்டினியில் இருந்த சிறுவர்களுடன் காட்டில் சென்று வளையெலியும் சாரைப்பாம்பும் பொறிவைத்து பிடித்துச் சுட்டுத் தின்று பசியாறினேன். வெண்ணெய்க்கிழங்கையும், கரட்டுக்கிழங்கையும் அகழ்ந்தெடுத்து சுட்டு தின்பது மற்றொரு வழி.
சில நாட்களிலேயே என் தாயார் பெரியவீட்டு நாயக்கருடன் தொடர்பு வைத்துக்கொள்ளத் துவங்கினாள். அவளது உடல் அசைவுகள் மாறின. ஆடையை எப்போதும் தழைவதுபோல உடுத்தினாள். காணும் எல்லா ஆண்களிடமும் குழைந்தாள். வீட்டில் பலசமயம் மேலாடையின்றி படுத்துறங்கினாள். எல்லாவற்றிலும் அவள் ஒரு வேசியாக மாறினாள். என் தந்தை யாருக்காக அவளை விட்டுச்சென்றாரோ அவளைப்போல. அது எனக்குப் புரியத் தொடங்கிய வயதில் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். பத்து பதினொன்று வயதில் என்னைக் கிடையில் சேர்த்துக்கொண்டார்கள். கரிசல் நிலத்திலேயே ஐம்பது அறுபது மைல் வட்டத்திற்குள் நாங்கள் ஆடு மேய்த்து சுற்றி வந்தோம். எங்கள் கிடைகளில் அனுபவமுள்ள கீதாரிகள் அரிதாகவே இருந்தார்கள். ஆனால் முன்புபோல பட்டினி இல்லை. தினமும் கம்பு, கேப்பை கிடைத்தது. முயலும் கௌதாரியும் பொறிகளில் சிக்கின. சமயத்தில் அரிசிச்சோறும் ஆக்கி உண்டோம்.
கோவில்பட்டி சந்தையில் ஆடு விற்ற நாட்களில், கிடையில் ஆளை நிறுத்திவிட்டு சினிமாவுக்குச் சென்றோம். வருத்தரிசியுடன் சேர்த்து பிடித்த ஈசலுருண்டைகளை எடுத்துக்கொண்டு ஆறு இடைவேளைகளுடன் ஐந்து மணிநேரம் ஓடிய பழைய வாத்தியார் படங்களை இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு வருவோம். அவர் அப்போதுதான் தனிக்கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்திருந்தார்.
ஆனால் இவை எதுவும் எங்கள் வாழ்கையில் கொண்டாட்டங்களாக இல்லை. அந்த வெற்றுக்கேளிக்கைகள் எங்களை மேலும் தனியர்களாகவே ஆக்கியது. நாளெல்லாம் மூத்தவர்கள் யாரும் மேற்பார்வையின்றிக் கிடையில் கிடந்த எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. எங்களுக்கும் ஊருக்கும் பிற மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. கரிசல் காடு ஒரு தனி ராஜ்ஜியம். அங்கே கொன்றுபோட்டாலும் கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை. கீதாரிகள் பெரும்பாலும் மந்தையை எங்களிடம் விட்டுவிட்டு இரவில் சாராயத்துக்கும் வேசிகளுக்கும் சென்று விடுவார்கள். மேய்ச்சல் சிறுவர்கள் யாரேனும் ஓடிச்சென்றுவிட்டாலும் மறுநாள் காலை வந்து தெரிந்துகொள்வார்கள். அவர்களை பொறுத்தவரை கிடைத்தவரை லாபம் என்ற கணக்குதான்.
ஆறுவடை இல்லாத காலத்தில் மந்தைகளை பல கிடைகளாகப் பிரித்து கரிசல் காட்டிலேயே வெவ்வேறு இடங்களில் அடைப்புத் தட்டுவோம். இரவணைந்ததும் எல்லாத் திசையிலிருந்தும் ’ஓவெய்’யென்ற அழைப்புக் குரல் எழும். ஒவ்வொரு கிடையும் எங்கே அடைந்தது என்று தெரிவிக்க. அதன்பின் ஆடுகளின் கனைப்புகள் மெல்ல அடங்கும். வின்மீண்கள் ஒவ்வொன்றாக வெளிவர, திகைக்கச் செய்யும் அமைதி ஒன்று கரிசலின் மீது கவியும். தொடுவானம் மெல்ல அழிந்து பூமி சாயமிழக்கும்.
மந்தைகளுக்கு மத்தியில் இரவின் தனிமையில் நாங்கள் வயதிற்கு வந்தோம். உடலின் தேவைகளை கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ அங்கே யாரும் இல்லை. இரவின் மத்தியில் கொப்பளித்து எழுந்த வேட்கையைத் தனிக்க சிலர் பெட்டை ஆடுகளின் பின்புறம் குறிகளை உரசினர். இளமையின் வெப்பத்தில் எங்களுக்குள் நிதம் வன்முறைகள் வெடித்தன. ஒருமுறை ஆட்டை திருட வந்த சற்றே மனநலம் பிறழ்ந்த ஒருவனை நாங்கள் அனைவரும் சேர்ந்து துரட்டிகளால் அடித்து, குத்திக் கிழித்து ரத்தம் வடிய காட்டில் விட்டுச்சென்றோம். மறுநாள் அவன் கண்களிலும் காதுகளிலும் குதத்திலும் எறும்புகள் மொய்க்க இறந்து கிடந்தான். அன்று முதல் என் உடலும் உள்ளமும் ஒரு கணமும் ஓயாமல் பகற்கனவுகளில் உழன்றது.
பசி, காமம், வன்முறை. இரவுகளில் ரத்தம் வழியும் வன்முறைக் கனவுகளில் என் உடல் திமிறி விந்து வெளியேறியது. மந்தையில் என்னுடன் நின்றவன் ஓயாமல் அதைப்பற்றியே பேசினான். எப்படி இரவு ரகசியமாக ஊருக்குள் புகுந்து உறங்கிக்கிடக்கும் ஆண்களை கட்டிப்போட்டுவிட்டு அவ்வீட்டு பெண்களை புணரவேண்டும் என்பதை விரிவாக விவரித்தான். முகம் தெரியாத இருளில் அவன் குரல் தீமையின் அடியாழங்களுக்குள் சென்று வருவதைத் திகைப்புடனும் குறுகுறுப்புடனும் கேட்டிருக்கிறேன். பகலில்கூட அவன் கண்களை நான் அதிக நேரம் பார்க்க துணியவில்லை. ஆடுகளை கண்மண் தெரியாமல் அவன் தாக்கினான். ஓந்துகளையும் பாம்புகளையும் கெக்கெலித்தபடி அவை வலியில் உடல் நெளிந்து புடைக்க பல மணிநேரம் துன்புறுத்தி கொன்றான்.
ஒருநாள் இரவுப்பொழுதில் எதிர்பாராத ஒருகணத்தில் அவன் என்னிடம் கேட்டான் “உனக்கு என்னைக் கொல்லத் தோன்றவில்லையா?”. நான் அமைதியாக இருந்தேன். “நீ நினைப்பது எனக்குத் தெரியும்” என்று சிரித்தான். அவன் மெல்ல தன் தற்கொலை எண்ணங்களைப் பேசத் துவங்கினான். அரளி விதையை அரைத்து உண்பதைப் பற்றி பேசினான். மேலும் எண்ணற்ற வழிகளில் சாவதை பற்றி பேசிக்கொண்டே சென்றான், இறப்பதன் படிநிலைகளை எல்லாம் நுட்பமாக விவரித்தான், ஒருவித ஆழ்ந்த கிளர்ச்சியுடன். சற்று நேர அமைதிக்கு பின் அவன் சொன்னான் ”செத்துப்போனால் இவை ஒன்றுமே இருக்காது.” என் உடல் சிலிர்த்தது. ”இது எதுவுமே இருக்காது” என்றான் அவன் மீண்டும். சில நாட்களில் அவன் யாரிடமும் சொல்லாமல் கிடையை விட்டுச் சென்றுவிட்டான். ஓரிரு நாட்களில் கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் அவன் உடல் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்ததைப் பற்றி பின்னால் ஊர்மக்கள் சிந்தனையில் சொன்னார்கள். நாய்களோ, காட்டுப்பன்றிகளோ அவன் தலையைப் பாதி உண்டபின் எங்கோ முள்காட்டில் குதறி விட்டுச்சென்றிருந்தன. விவரம் தெரியாமல் தண்டவாளத்தில் படுத்து உறங்கிவிட்டதாக அவர்கள் பேசிக்கொண்டார்கள். நான் எனக்குத் தெரிந்ததை யாரிடமும் சொல்லவில்லை.
அன்றிலிருந்து நான் கிடையை விட்டு எங்காவது தொலைவாக ஓடிச்செல்வதை பற்றிச் சிந்திக்க துவங்கினேன். எங்குச் செல்வது என்று எனக்கு எந்த வழியும் தெரியவில்லை. என்னைச் சுற்றி எல்லா திசைகளும் ஒரேபோல அந்நியமாகத் தெரிந்தன. எப்போதும் திறந்து கிடக்கும் பாதை என்பது அது ஒன்றுதான். உடல் பற்றி எரிபவன் ஒரு சிறு துளி நீரை தேடி அலைவதைப்போல நான் திரிந்தேன். அப்படி ஒரு நாளில், கரிசல் மண் உருகி தகிக்கும் கோடை மதியத்தில், நான் அவர் குரலை கேட்டேன்.
***
அவர் என்னைபோல ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் அல்ல, ஆனால் அதன் எல்லாச் சாத்தியங்களையும் கண்முன்னே கண்டு வளர்ந்தவர். அவரது வாழ்க்கை தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது. அவரது பசியும் துக்கமும்கூட அருளப்பட்டவை. அப்படித்தான் அவர் கண்டிருக்க வேண்டும். ஏனென்றால், தனக்குள் பொங்கியெழும் படைப்பாற்றல் அவரை ஒருபோதும் தனிமையில் விட்டதில்லை, வாழ்க்கையையும் படைப்பாற்றலையும் ஒரு கணம்கூட அவரால் பிரித்தறிய இயன்றிருக்காது. அவரது வருகை ஓர் அலைபோல தமிழ்நாட்டில் நிகழ்ந்தது.
அவர் பிறந்தது மேற்கே மலையோரத்தில் ஒரு சிறு கிராமத்தில். எங்களூர் கோடையின் இறுதி நாட்களில் வருடந்தோரும் வீசும் ஆடி மாதச்சாரல் அங்கிருந்தே புறப்படும். ஆனி – ஆடி மாதங்களில் மேற்கே தொலைவில் எழுந்த ஊதாநிற மலைகளெல்லாம் பின்னால் பருத்தி வெடித்ததுபோல திரண்டெழுந்து மெல்லக் கருக்கும் மழைமேகங்களை செறுத்தபடி நிற்கும். அங்கிருந்து நீர்மணம் சுமந்து வரும் ஊதக்காற்று மெல்லிய சலசலப்புடன் கோடை சுட்டெரித்த கரிசலின் சருகுகளை புரட்டிச்செல்லும். குளிர்வாடை மெல்ல துணிகளை ஈரமாக்கி நசநசக்கும். ஒருகட்டத்தில் தாங்கமுடியாத இறுக்கம் ஒன்று காற்றில் ஏறி அழுத்தும்போது மேற்கே திரையை கிழித்ததுபோல மலைகளைத் தாண்டி உடைத்துக்கொண்டு மலைகளுக்கு மேல் ஒரு மாபெரும் மலைபோல கருமேகங்கள் காற்றில் உருண்டெழும். இடியும் மின்னலும் வெற்று நிலத்தில் வானம் உடைபடுவதுபோல எதிரொலிக்கும். இருண்டபடி கண்முன்னே திரண்டுவரும் மழைமேகங்கள் உடலை நடுக்கும் பனிச் சாரலை அள்ளி வீசி தெளித்தபடி கிழக்கே கடல் நோக்கி விரைந்து கடக்கும். மண் மணம் பிடித்தபடி ஆடுகளும் கரிசல் ஜீவராசிகளும் அதில் பித்தேறி நிலைத்து நிற்கும். பனையும் கருவேலமும் எல்லாம் கோடையின் தூசு குளிர்நீரில் கழுவிச்செல்ல மினுக்கும் கன்னங்கரிய உடல்களுடன் தாட்டியமாக கல்போல் உறைந்து நிற்கும். கிடை ஆடுகளின் உடல் மட்டும் சிலிர்த்து சிலிர்த்து அடங்கும். மேய்ச்சலில் நிற்கும் நாங்கள் ஆடைகளை களைந்து விட்டு மயிர்கூச்செறிய சாரலில் நனைவோம். அவர் குரலும் அதுபோலத்தான் உள்ளே நுழைந்தது.
அவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்னே எங்கள் சுற்றுவட்டாரத்தில் பிரபலம்தான். தோட்டப்புரம் சகோதரர்கள் பாடுகிறார்கள் என்றால் ஊர்ப்புறமெங்கும் கூட்டம் கூடிவிடும். கடுமையான வறுமையின் பிடியிலிருந்த மேற்கு மாவட்டங்களுக்கெல்லாம் சிவப்புக் கொடியுடன் அவர்கள் அன்று பாடிய கம்யூனிசப் பாடல்கள் பெரிதும் ஈர்த்தன. ஐந்தாறு வயதில் பாட்டனுடன் சென்று ஒருமுறை நானும் அவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களில் வற்றி உடல் மெலிந்திருந்த மூத்தவர் அரிக்கேன் விளக்கொளியில் தேன் நிறத்தில் பளபளக்கும் புத்தம்புதிய ஹார்மோனியம் ஒன்றை இசைத்தபடி கணீர் குரலில் பாடுவார். தொண்டை நரம்புகள் புடைக்க அவர் எடுக்கும் பாட்டுக்கு சில பேர் அடிமை என்றால் அதற்கிணையாக அவரது ஹார்மோனிய வாசிப்புக்கும் பெரும் ரசிகர்கள் உண்டு. அவருடன் மூன்று சகோதர்களும் இணையாக தாளம் கொட்டி எதிர்பாட்டு எடுப்பார்கள். அதில் சமயத்தில் பெண்குரலில் பாடும் மூன்றாவது சகோதரரை நான் மிக புகைமூட்டமாகவே நினைவு கூர்கிறேன். முத்துமணி என்று அப்போது அவர் பெயர். ஒட்ட மழித்ததுபோல மயிரற்ற பளபளக்கும் கரிய உடலும், கன்னத்து எலும்புகள் சற்றே புடைத்திருக்கும் ஒடுங்கிய முகமுமாக, வெண்பற்கள் மட்டும் விளக்கொளியில் மின்ன சிரித்தபடி இரண்டாவது சகோதரருக்கு கண்களை சமிக்கை காட்டி காட்டி தபலாவை துடிப்பாக இசைப்பார். எனக்கு அந்த வயதில் அவர்கள் வாசித்த இசை அதிகம் எட்டவில்லை. கொப்பளிக்கும் அவர்களின் உற்சாகம் மட்டும் ஏதோ ஒரு வினோதமான உணர்வாக என் நினைவில் நின்றது.
அதன்பின் சில ஆண்டுகளிலேயே அவர்களில் மூத்தவர் ஞானதாசன் இறந்துபோனார். தோட்டப்புரம் எஸ்டேட்டில் மேற்பார்வையாளராக வேலைசெய்திருந்த அவர்களது தந்தையும் இளமையிலேயே காலமாகியிருந்தார். தந்தைக்கு இரண்டாம் தாரமான அவர்களது தாய் உட்பட அவரது இரண்டு மனைவியருக்கும் உடன்பிறந்த சகோதரிகளுக்கும் எல்லாம் மூத்த மகனின் இசைக்குழுவே அதுவரை சோறு போட்டது. மூத்தவர் இறந்தபின் வீட்டில் மீண்டும் வறுமை. குடும்பச் சொத்தாக அன்று வீட்டில் இருந்தது அண்ணனின் புகழ்பெற்ற அந்த ஹார்மோனியமும் ஒரு ரேடியோவும்தான். ரேடியோவை விற்று கிடைத்த நூறு ரூபாயும் மூத்தவரின் ஹார்மோனியத்தையும் மட்டும் எடுத்துக்கொண்டு முத்துமணியும் அண்ணனும் நான்காவது சகோதரனை அன்னைக்குத் துணையாக ஊரில் விட்டுவிட்டு மெட்ராஸுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆரம்பத்தில் பட்டினியும் அலைச்சலுமாக நாட்கள் கடந்தன. ஹார்மோனியமும் அந்த இசையும் மட்டுமே அவர்களுக்குத் துணையாக இருந்தன. பின் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்புகள் வழியாக சில நாடகங்களுக்கு பின்னணி இசை வாய்ப்புக் கிடைத்தது. அதுவரை மூத்தவரின் மெட்டுக்களையும் திரைப்பாடல்களையும் தழுவி பாடிவந்த முத்துமணி, மூத்த அண்ணனின் பெயரை தன் பெயரில் இணைத்து ஞானமுத்து என்ற பெயரில் முதல்முதலாக மெட்டுக்கள் அமைத்துப் பாடினார். எந்த முறையான இசைப் பயிற்சியும் இல்லாமல் ஹார்மோனியப் பெட்டியில் அவர் தொட்டதெல்லாம் தன்னியல்பாக இசையானது. மெட்ராஸில் சிறு நாடக அரங்குகளில் ஞானய்யாவின் பெயர் மெல்ல புகழ்பெற்றது. அங்கிருந்து கோரஸ் பாடகி ஒருவர் மூலமாக சில சினிமா அறிமுகங்கள் ஏற்பட, ஐந்தாறு மாதங்களிலேயே புகழ்பெற்ற கன்னட இசையமைப்பாளர் என்.கே.கணேஷுக்கு உதவி இசை ஒருங்கமைப்பாளராகச் சேர்ந்தார்.
கன்னடத் திரையுலகம் என்பது அப்போது உண்மையில் ஒரு குடிசைத் தொழில் போன்றது. மெட்ராஸில் வடபழனியைக் கடந்து போரூர் சாலையில் அவற்றுக்கு என்று ஆள் அரவமற்ற இரண்டாம் தர ஸ்டூடியோக்கள் இருந்தன. மாமரங்கள் சூழ்ந்த ஒதுக்குப்புறமான அந்த ஸ்டூடியோக்களில் ஒரு திரைப்படத்தை, கதையாலோசனை தொடங்கி இறுதிப்பிரதி வரை, மொத்தமாகவே முப்பது நாட்களுக்குள் அவர்கள் எடுத்து முடித்தனர். அதில் பாடல்களுக்கும் இசைக்கும் அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு நாட்கள்தான். கன்னடத்தின் உச்சநட்சத்திரமான ஷிவராஜின் படங்களுக்கு மட்டும் இரண்டுநாட்கள் கூடுதலாக எடுத்துகொள்ளவார்கள். ஆனால் அந்த வேகத்திலும் இப்போது பெயர் தெரியாமல் மறைந்துவிட்ட அந்தப் படங்களில் தென்னகத்தின் தலைசிறந்த மெட்டுகள் கன்னடத்தில் வந்துகொண்டிருந்தன. வருடத்துக்கு முப்பது படங்கள் என அசுர வேகத்தில் இசையமைத்த என்.கே.கணேஷிடம் சேர்ந்து ஆறு வருடங்களில் இருநூறு படங்களுக்கு மேல் ஞானய்யா வேலை செய்தார். அதே நேரத்தில் தினமும் காலையும் மாலையும் இரு வேறு ஆசிரியர்களிடம் மேற்கத்திய செவ்வியல் இசையும் கர்நாடக இசையும் கற்றுத் தேர்ந்தார். அந்த ஆறு வருடங்களிலும் என்.கே.கணேஷிடம் ஞானய்யாவின் இசை பங்களிப்பு படிப்படியாக வளர்ந்துகொண்டே சென்றது. கடைசிக் காலங்களில் படத்தின் பெரும்பகுதி பின்னணி இசையும் பாடல்களின் ஆர்கெஸ்ட்ரேஷன்களும் ஞானய்யாவிடமே விட்டுவிடும் அளவுக்கு வயதான என்.கே.கணேஷ் அவரை நம்பியிருந்தார். என்.கே.கணேஷின் இசையில் எழுபதுகளில் வந்த பல நல்ல பாடல்களின் மெட்டுக்களும் கூட ஞானய்யாவுடையதுதான் என்று இப்போது கேட்பவர்களுக்குத் தெரியும்.
அந்த சமயத்தில் பெரிதாக ஞானய்யாவின் ஆர்வமில்லாமலேயே சற்று முனைப்பான அவரது இரண்டாவது சகோதரர் பல இடங்களிலும் இளையவருக்காகத் திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்புகளைத் தேடினார். பல தடைகளையும் இடர்களையும் மீறித்தான் அவருக்கு முதல் திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்புக் கிடைத்தது. வெவ்வேறு தயாரிப்பாளர்கள் அவரது மெலிந்த உடலையும் கிராமத்து சிறுவனைப் போன்ற தோற்றத்தையும் கண்டு சந்தேகித்தனர், அதில் வேறு சில காரணங்களும் மறைமுகமாக இருந்தன. ஆனால் ஒன்று உண்டு, அவரை அதுவரை சந்தித்திருந்த, அவருடன் பணிபுரிந்த அத்தனை பேரும் ஒருவர் விடாமல் அவரது மேதைமைக்குச் சான்றளித்தனர். அத்தகைய ஒருவர் இந்த உலகில் புறக்கணிக்கப்பட வாய்ப்பே இல்லை என தோன்றும். முழுமையாக ஆறு வருடங்கள் பணிபுரிந்துவிட்டு கடைசியாக என்.கே.கணேஷை விட்டுப் பிரிந்துசென்றபோது, உடல்நிலை மிகவும் சரிந்திருந்த ஆசிரியர் கண்ணீருடன் மாணவனை உச்சிமுகர்ந்து வாழ்த்தி அனுப்பினார். அதன்பின் நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே. மொத்தமே இரண்டு லட்சம் பொருட்செலவில் தயாரான அந்த முதல் படம் தமிழ் திரை வரலாற்றில் ஒரு திருப்புமுனை. அதில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் தமிழகம் அதுவரை கண்டதிலேயே மகத்தான வெற்றிப்பாடல்கள். ஏனென்றால் அது ஒரு மாபெரும் காலமாற்றத்தின் தருணம்.
அதற்கு முன்புவரை திரைப்பாடல்கள் திரையரங்குகளிலும் எப்போதாவது திருவிழாக்களிலும் மட்டுமே ஒலிக்கும் ஒன்றாக இருந்தது. மக்களிடம் இசை என்பது நாட்டுப்புற இசையாகவும் வாய்ப்பாட்டுக்களாகவும்தான் இருந்தன. எழுபதுகளின் பிற்பகுதியில் லாங்க் பிளே ரெக்கார்டுகளும் ரேடியோக்களும் முன்பெப்போதும் இல்லாததைபோல் பிரபலமாயின. ஒரு பக்கம் கிராமங்களில் பழைய வாழ்க்கைமுறைகள் மாற்றம் கண்டன, நகரங்களின் எச்சங்களாக அவற்றின் நிறமற்ற, உருகுலைந்த நிழல்களாக அவை எஞ்சின, மறுபுறம் ஒவ்வொரு ஊருக்கும் ரேடியோக்கள் வழியாக திரைப்பட பாடல்கள் வந்து சேர்ந்தன. ஞானய்யாவின் இசை அவர்களுக்கு மீண்டும் பழைய கிராமங்களை காட்டியது. ஆனால் அவை வெறும் நாட்டுப்புற பாடல்களாக இல்லை, முற்றிலும் புதிதான ஒன்று அதில் சேர்ந்திருந்தது. கிராமத்தின் சோம்பலும் விரக்தியும் அதில் இல்லை. அதில் இருந்த அடர்த்தியும் கொண்டாட்டமும் வாழ்வின் மீதான பற்றும் இளைஞர்களைப் பித்தாக்கியது. பழைய தலைமுறையினர் கடும் கசப்புடன் அவரது இசையை எதிர்கொண்டனர். பறைச் சத்தத்தைக்கொண்டு திரைப்பாடல்களை அசுத்தம் செய்வதாகச் சொன்னார்கள். இளைஞர்களை வழி தவற வைப்பதாகவும் புலம்பினார்கள். ஆனால் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து தொழில் நகரங்களுக்கு சென்ற அடுத்த தலைமுறையினர் தங்கள் கிராமங்களை அதன்வழியாக நினைவுகூர்ந்தனர், கிராமங்களிலேயே தங்கிவிட்ட பிறர் அந்த இசை உருவாக்கிய கிராமத்தில் குடிபுகுந்தார்கள். இசையில் இருந்த அக்கிராமங்கள் பசியும், வன்மமும், அடக்குமுறையும் கொண்ட நாங்கள் வாழ்ந்த கிராமங்கள் அல்ல, அவை எங்கும் இல்லாதவை, இசையில் மட்டுமென இருப்பவை, விண்ணில் எங்கோ மிதப்பவை. கண்ணுக்கு தெரியாமல் காற்றில் கலந்து ரேடியோவுக்குள் உயிர் பெற்று வரும் அந்த இசை என்பது ஒருவித ஆன்மிக அணுபவமாகவே இருந்தது. வான் ஒலி! பின் மதியத்தின் நீல வானத்தில் சிறுவர்கள் அதன் தடயங்களைத் தேடினர்.
ஞானய்யாவின் இசை அப்படித்தான் என்னையும் முதலில் வந்தடைந்தது. அப்போதெல்லாம் கிடையைவிட்டு நான் அபூர்வமாகத்தான் ஊருக்குள் வந்தேன். என் வாழ்க்கை பெரும்பாலும் பல நாட்கள் மனித தொடர்பே இல்லாமல் கழிந்தது. எங்கள் கீதாரி வாரம் ஒருமுறை வந்தால்கூட பெரிய விஷயம். கிடையில் என்னுடன் நின்றவன் இறந்தபின் நான் மட்டும் தனியாளாக அறுபது ஆடுகளைக் கொண்ட மந்தையை பார்த்தபடி கரிசலில் திரிந்தேன். மந்தையில் எனக்கு சொந்தமான பன்னிரண்டு ஆடுகளும் இருந்தன. அக்காலங்களில் கரிசலில் பிற மந்தைகளை பார்ப்பதுகூட அரிதானது, அல்லது நான் அவர்கள் தேர்ந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. கழுகுமலை பாதையில் பல மைல்கள் முள்காட்டுக்குள் யாரும் அடையாளம் காணாத நீர்குட்டைகளை நான் கண்டுவைத்திருந்தேன். எனக்குத் தேவையான உணவு கையில் இருக்கும்வரை நான் ஊருக்குள் செல்வதையே தவிர்த்தேன். நாட்கணக்கில் எண்ணெய் தேய்க்காமல் குளிக்காமல் கரிசலில் அலைந்தேன். இரவின் நிசப்தத்தில் நான் குரல்கள் கேட்கத் துவங்கினேன். விதவிதமான ஓலங்கள், நகைப்புகள், அழுகைகள், மன்றாட்டுகள், முனகல்கள். எல்லாம் ஏதோ பொருளில்லா மொழிகளில். அல்லது மனித மொழியின் பொருள் என்னை விட்டுச்சென்று விட்டதா எனத் தெரியவில்லை. தோள்வரை புரண்ட கூந்தலில் சடை விழுந்து, என் உடலெங்கும் அழுகியதுபோல நிணம் வழிந்து ஈக்கள் மொய்த்தன. மந்தையில் ஆடுகளும் என்னைக்கண்டு விலகின. என்னுடன் அவ்வப்போது வந்திணைந்து கொள்ளும் மந்தைநாய் நெடுநாட்களாக வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் ஆடுகளுடன் எங்கோ தொலைந்து சென்றுகொண்டிருந்தேன். கையில் இருந்த உணவு குறைந்தும் நான் ஊரைத்தேடி செல்லவில்லை. காட்டில் கிடைப்பதை உண்டு வெக்கையில் அலைந்தேன், தாகத்துக்கு ஆட்டின் பாலை பீய்ச்சிக்கொண்டேன். என் கிழக்கேயும் மேற்கேயும் வடக்கேயும் தெற்கேயும் நெடிய மொட்டை மலையொன்று மீண்டும் மீண்டும் சுற்றி வந்துகொண்டிருந்தது. நாட்கள் கணக்கின்றி கழிந்தன, எண்களை, காலத்தை மெல்ல மெல்ல இழந்தன, என்றும் ஓயாத சுழற்சி. அப்படியே ஒருநாள் அந்த மலையின் அடிவாரத்தில் ஆடுகளின் மத்தியில் உடல் அழுகி இறந்து கிடக்கும் என்னை நானே கற்பனை செய்தேன். மறுநாள் காலை என்னவென்று தெரியாத ஒரு ஆற்றல் என்னை சட்டென்று உந்தி விலக்கியது. ஒரு கொடுங்கனவிலிருந்து மீண்டதைபோல நான் அச்சுழலை உடைத்துக்கொண்டு என் மந்தையுடன் ஊருக்குள் சென்றேன்.
நான்கே சிறு அங்காடிகளும் ஒரு தேநீர் கடையும் கொண்ட சிற்றூர் அது. அந்த மதியநேரத்தில் சாலைகளில் யாரும் நடமாடவில்லை. எந்த சத்தமுமில்லாமல் வீடுகள் உறங்கிக்கிடந்தன. மனிதர்களே இல்லாத ஊரென்று ஒருகணம் அது தோற்றமளித்தது. ஆனால் சற்று தொலையில் தேநீர் கடையிலிருந்து அந்த குரல் கேட்டது. உற்சாகம் கொப்பளிக்கும் அக்குரல். கானல் நீரில் மிதந்து மிதந்து ஊரெங்கும் அது பரவி பாவித்தது. மிக எளிய பாடல் அது. ஆனால் அந்த குரலில் இருந்தது வேறெதோவொன்று. சைக்கிள் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் பாடலில் அக்குரல் துள்ளியெழுந்தது. அத்தனை சிறிய காரணத்துக்காகவா? அதற்காகவா வானை வென்றுவிட்ட அந்த மகிழ்ச்சி? பல நாட்களுக்கு பின் நான் கேட்கும் மனிதக்குரல். என் உடல் நடுங்கியது, இதயம் படபடக்க நான் அந்த குரலெழுந்த திசையை நோக்கி நடந்தேன், என் கண்கள் இருண்டன. அந்த குரல் மேலும் மேலும் உற்சாகம் கொண்டெழுந்தது, சிரித்தது, எல்லாவற்றையும் கேலி செய்து சிரித்தது, எதுவும் அதற்கொரு பொருட்டல்ல என்பது போல். அதன் பின்னால் பல சிறுவர் குரல்கள் அதை ஏற்றுப் பாடின. ”ஆம் அப்படித்தான், மகிழ்ச்சிதான், சந்தேகமே வேண்டாம்” என்றன அவை. கால்கள் தளர நான் தள்ளாடிச்சென்று அந்த தேநீர் கடை வாயிலில் அமர்ந்துகொண்டேன். என் கண்களில் கண்ணீர் பெருகி பெருகி வழிந்துகொண்டிருந்தது. ஆம், என் வாழ்நாளில் முதல் முதலாக மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் அன்று உணர்ந்தேன், அதன் சாயலை.
அது என் மகிழ்ச்சி அல்ல, அது ஒரு பொருட்டே அல்ல. அந்த குரலின் மகிழ்ச்சி அது. அதற்காகவே நான் உயிரோடிருக்க வேண்டும். அதன் இன்பத்தைக் காண, அதன் எல்லா நிறைவையும் காண. இந்த பிரபஞ்சமே எனக்கு மீண்டும் கிடைத்தது போலிருந்தது. அன்று நான் அதை உணர்ந்தேன். தனக்காக மட்டும் வாழும் எந்த வாழ்க்கையும் காலடி மண்ணுக்குள் செரித்து அடங்கிவிடும்.
***
அன்று என்னை அந்த தேநீர் கடைக்காரர்தான் உணவளித்து ஊருக்கு வழிகாட்டி அனுப்பினார். மந்தைகளுடன் நான் கழுகுமலை கடந்து ஊர் வந்து சேர்ந்த போது கீதாரிகள் என்னை ஒரு மாதமாக தேடிக்கொண்டிருந்தது தெரிந்தது. கிழக்கே குருமலை வரை துப்பு கேட்டு அவர்கள் சென்றிருந்தார்கள். எல்லாரும் என்மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். முன்பு பாட்டனின் மந்தையிலிருந்த நாராயணப்பா மட்டும் என் மீது சற்று இரக்கம் காட்டினார். என்னைத் தாக்க வந்தவர்களை விலக்கிவிட்டு, பொறுமையாக என்னை அழைத்து என்ன வேண்டும் என்று விசாரித்தார். நான் மந்தையில் என் ஆடுகளுக்கான காசை மட்டும் கொடுத்துவிடுமாறு கேட்டேன். நான் மெட்ராஸுக்கு போகிறேன் என்று சொன்னது அவர்கள் யாருக்கும் அப்போது புரியவில்லை. என் பங்கு பன்னிரண்டு ஆடுகளுக்கும் சேர்த்து வெறும் ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு நான் கடைசியாக கிடையை விட்டுப் புறப்பட்டேன். எனக்கு ஊரில் அப்போது யாரும் இல்லை. பாட்டன் இறந்து ஏழாண்டுகள் ஆகியிருந்தது. தாய் இப்போது எங்கிருக்கிறாள் என்று எந்தத் தகவலுமில்லை, ஊரில் யாருக்கும் அவளைப் பற்றிய விவரம் தெரியவில்லை. பெரிய நாயக்கர் வீடு மட்டும் ஊரில் அப்படியே இருந்தது. எனக்கு அவளைத் தேடிச்செல்ல தோன்றவில்லை. ஆனால் ஊரைவிட்டு செல்லும் முன் கடைசியாக என் தந்தையை ஒருமுறை காணவேண்டும் என்று நினைத்தேன். அவர் முன் எனக்கு ஒரு கேள்வி இருந்தது. மீண்டும் ஒருபோதும் இங்கு திரும்பி வரப்போவதில்லை என்று அப்போது நான் அறிந்திருந்தேன்.
கயத்தாரை கடந்து தெற்கே அமைந்திருந்த அந்த சிமண்ட் தொழிற்சாலைக்கு சற்று தொலைவில் சுண்ணாம்பு ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் தகரக் கொட்டாய்களாலான மாபெரும் குடியிருப்பு பகுதி ஒன்று இருந்தது. கட்டம் கட்டமாக வரிசையாக இருபுறமும் நூற்றுக்கணக்கில் நீண்ட அவற்றின் துருவேரிய கூரைகள் சுட்டெரிக்கும் வெயிலில் அனல் எழுந்து தகித்தன. அங்கே ஒவ்வொருவராக ஊரையும் பெயரையும் சொல்லி விசாரித்துச் சென்று அவர் வீட்டை கண்டுபிடித்தேன். அங்கு ஒரு பத்து வயது சிறுமியை தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அவள் தாய் அருகே வேலைக்கு சென்றிருப்பதாக அவள் சொன்னாள். உள்ளே நான் எதிர்பார்த்ததுபோலவே அந்த மனிதர் மரணப்படுக்கையில் கிடந்தார். ஜன்னல்களற்ற அந்த சிறிய அறையின் அரை இருளில் நம்பமுடியாதபடி மெலிந்திருந்த அவரைக் கண்டேன். அவரது உடலெல்லாம் திறந்திருந்த வடுக்களில் பழுப்பு காய்த்து சீழ் வடிந்தது, ஆடைகள் ஏதுமில்லாமல் வெறும் ஒரு துண்டை மட்டும் போர்த்தி அவரை படுக்கவைத்திருந்தார்கள். உதடுகள் உலர்ந்து, சுருக்கங்கள் அடர்ந்த அவர் முகத்தைக் கண்டேன், கண்கள் இரண்டும் இருண்ட குழிக்குள் எங்கோ அமிழ்ந்து கிடந்தன. அதன் ஆழத்தில் இருந்து அந்தப் பார்வை என்னை வந்து தொட்டது. கத்தியைபோல கூர்மையாக. அவரது பழைய முகத்தை நான் என் அடியாழத்தில் இருந்து மெல்ல மீட்டெடுத்தேன், அது என் முகம்தான். அதே கணத்தில் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டார். எனக்கு வார்த்தைகள் ஏதும் எழவில்லை. கையிலிருந்த பணத்தையெல்லாம் அங்கேயே விட்டுவிட்டு நான் புறப்பட்டு வந்துவிட்டேன்.
1979-இல் எனது பதினேழாவது வயதில் நான் திருட்டு ரயிலில் மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தேன். எதற்காக என்று என்னிடம் எந்த பதிலும் இல்லை, அந்த உந்துதலை தர்க்கத்தால் விவரிக்க முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அன்று என்னைப்போல் கிராமங்களில் இருந்து தினம் பல்லாயிரம் பேர் மெட்ராஸுக்கு வந்திறங்கினர். அவர்களில் சிலநூறு பேரையாவது சினிமாவும், ஞானய்யாவின் இசையும் அழைத்து வந்தன. அந்த மகத்தான கனவில் ஒரு சிறு எறும்பாகவாவது இருந்துவிட வேண்டும் என்பதுதான் அந்த உணர்வு. உண்மையில் மனிதனின் எல்லா உந்துதலும் அதுவே, அவனது மேன்மையும் கீழ்மையும், எல்லாம் ஏதோவொன்றில் சிறு பகுதியாவதற்கே. எழும்பூரில் வந்திறங்கியபோது என்னிடம் பணமோ, மாற்று உடைகளோ எதுவும் இருக்கவில்லை. நாராயணப்பா தந்த நாலு முழ வேட்டி ஒன்றை மட்டும் உடுத்தியிருந்தேன். கையில் கசங்கிய ஐந்து ரூபாய் தாள் ஒன்று மட்டும் மிச்சம் இருந்தது. ஊரில் கேள்விப்பட்ட தகவல்களை வைத்து நானே விசாரித்து மெட்ராஸில் ஸ்டூடியோக்கள் இருக்கும் பகுதியை வந்தடைந்தேன். அப்போது கோடம்பாக்கம் முதல் வடபழனி வரை வரிசையாக வெவ்வேறு புகழ்பெற்ற ஸ்டூடியோக்கள் இருந்தன. தங்கள் மாபெரும் தோரணவாயில் வளைவுகளுடன் பெரும் வழிபாட்டிடங்கள்போல சாலை நோக்கி திறந்திருந்தன. அது இன்னமும் ஸ்டூடியோக்களின் பொற்காலம்தான். பல ஏக்கர்கள் விரிந்த அவை ஒவ்வொன்றுகுள்ளும் குடிசைகளும் தெருக்களும் கிணற்றடிகளும் எல்லாம் செட்டுகள் போடப்பட்டு படப்படிப்புகள் நடந்தன. என் வாழ்நாளில் நான் அத்தனை பேண்ட் அணிந்த மனிதர்களை கண்டதில்லை. பெரிய காது வைத்த சட்டையும், தோள்வரை நீண்ட கூந்தலும்தான் அன்றைய மோஸ்தர். ஞானமுத்து அய்யாவின் பெயரை ஒவ்வொரு ஸ்டூடியோவாகக் கேட்டு அலைந்தேன். என் பேச்சு வழக்கை புரிந்துகொள்ளவே அவர்கள் சிரமப்பட்டார்கள். முற்றிலும் வேறொரு உலகில் இருந்து வந்திறங்கியவனைபோல நான் உணர்ந்தேன்.
பழம்பெரும் இயக்குனர்-தயாரிப்பாளர் வி.ஆர்.ஆசிர்வாதம் வடபழனியில் தன் பெயரில் தொடங்கிய ஆசிர்வாதம் ஸ்டூடியோவில்தான் அப்போது மெட்ராஸின் மிகப்பெரிய ரெக்கார்டிங் ஸ்டூடியோ இருந்தது. படத்தொகுப்பு கூடம், ஃபிலிம் ரோல்களை பிரதியெடுக்கும் கலர் லேப், பத்துக்கும் மேற்பட்ட சவுண்ட் ஸ்டேஜுகள், பிரிவியூ தியேட்டர்கள் என ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் அது. ஐம்பத்து நான்கில் அவரது தயாரிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமான ”அற்புதத்தீவு” திரைப்படத்தின் முழு ஈட்டுத்தொகையைக் கொண்டு அப்போது வாங்கிய இடம். அங்குதான் ஞானம் அய்யா தன் பெரும்பாலான பாடல்களை அப்போது பதிவு செய்தார், விசாரித்தவர்களெல்லாம் அங்கேயே வழிகாட்டினார்கள். அங்குதான் என் இளமையின் பெரும்பகுதியை கழிக்கப் போகிறேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
அதிகாலையிலேயே ஸ்டூடியோவின் வாசலில் ரசிகர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. ரசிகர்கள் என்றால் சுமார் நூறு இருநூறு பேர் இருக்கலாம். கார்கள் செல்லும் பாதையில் இருந்து அவர்களை விலக்கி நிறுத்தவே இரண்டு காவலர்கள் தனியாக நிறுத்தப்பட்டிருந்தனர். பல ரகமான விலையுயர்ந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே விரைந்து சென்றபடி இருந்தன. ஒவ்வொன்றுக்கும் கூட்டத்தில் கொந்தளிப்பு எழுந்து அடங்கியது. அவை எல்லாம் வெவ்வேறு இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் சென்ற கார்கள். ரசிகர்கள் ஒவ்வொரு கார் சென்ற பின்னரும் ஞானய்யாவின் பெயரை உறக்க சொல்லி கூவினர். அவரைக் காணாததுகூட அவர்களை கிளர்ச்சியடையச் செய்ததுபோல. ஒவ்வொரு வாகனத்துக்கும் அவர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புப் பெருகியது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு திமிறினார்கள். என் உடல் புல்லரித்தது. நானும் சென்று அவர்களுடன் அந்த கூட்டத்தில் இணைந்துகொண்டேன். அவர்களில் பலர் ஏற்கனவே வந்திருப்பவர்கள்போல தெரிந்தது. சிரிப்பும் கூச்சலுமாக அவர்கள் நின்றார்கள். அத்தனை மகிழ்ச்சியை, குதூகலத்தை நான் அதற்கு முன் எங்கும் கண்டதில்லை. அவர்களுக்குள் அங்கு பேசிக்கொண்டவை எதுவும் எனக்கு புரியவில்லை. எல்லாம் சினிமாவை பற்றிய உள் தகவல்கள். வாகனங்களில் உள்ளே சென்றவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் கேலிப்பேச்சுக்களும் அவர்களை உற்சாகம் கொள்ளச்செய்தன.
சட்டென்று கூட்டத்தில் ஒருவன் தொலைவில் வந்த அந்த வெள்ளை நிற TMW3334 எண் பொறித்த அம்பாசடரை அடையாளம் கண்டுகொண்டான். “அய்யா, அய்யா” என்று அவன் குரல் கொடுக்க கூட்டத்தில் பெரும் கூச்சல் எழுந்தது. வடபழனி சந்திப்பில் கார் திரும்பி முடிப்பதற்குள்ளாகவே அதை எல்லாரும் பார்த்துவிட்டார்கள். கைகளை காற்றில் தூக்கி ”ஞானமுத்தய்யா, ஞானமுத்தய்யா” என்று அனைவரும் உச்சக்குரல்களில் கூவினர். அதுவரையிருந்த சிரிப்பும் வேடிக்கையும் எல்லாம் ஒரு கணத்தில் மறைந்தது. ஓலம்போல, பெரும் வலியில் துடிப்பதுபோல சத்தங்கள் எழுந்தன. கண்மண் தெரியாமல் எல்லாரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு காருக்கு குறுக்கே பாய்வதைபோல குடைந்தனர். வடபழனியிலிருந்து சாலிகிராமம் செல்லும் அந்த அகண்ட சாலையின் நெருக்கமான மர நிழல்களினூடாக ஒளித்துளைகள் ஊடுருவும் காலை இளவெயிலியில் அந்த கார் மெதுவாக வளைவைத் தாண்டி, சற்று வேகமெடுத்தது. ஸ்டூடியோ வாசல் நெருங்க நெருங்க மீண்டும் மெல்ல வேகத்தை குறைத்தது.
கூட்டத்தில் வெறிக்கூச்சல்கள் எழுந்தன, அழுவதுபோல சிலர் அவர் பெயரை ஓலமிட்டார்கள், சிலர் மார்பில் அறைந்துகொண்டார்கள். எனக்கு உடல் சிலிர்த்து கண்களில் கண்ணீர் பெருகியது. ஆம், அந்த குரலின் நாயகன். அந்த மிக மிக சிறிய காருக்குள் அவர் அமர்ந்திருக்கிறார். அந்தச் சிறிய உருவம். அந்த பாலகன். பேரழகன். கூட்டத்துடன் இணைந்து நானும் அவர் பெயரை உறக்கக்கூவினேன். என் கால்கள் தளர்வது போலிருந்தது, உடலின் ரத்தம் எல்லாம் கொதித்தெழுந்து தலைக்குள் சென்றதுபோல. கார் மெல்ல ஆசிர்வாதம் ஸ்டூடியோவின் வாசலை நோக்கி திரும்பியது. அந்த முதல் தருணத்தின் ஒவ்வொரு கணத்தையும் அணுவணுவாக நான் நினைவுகூர்கிறேன். நாம் இப்பாழும் வாழ்க்கையை வாழ்வதே அது போன்ற ஒரு சில நொடிகளுக்காகத்தான். மிக ஸ்டைலான ஒரு வெள்ளை காலர் வைத்த இளஞ்சிவப்பு முழுக்கை சட்டையும் அந்த கால பேஷனைப்போல மேல் பகுதி இறுக்கமான தூய வெண்ணிற பெல்பாட்டமும் அணிந்திருந்தார். தோள்வரை நீண்ட அடர்ந்த முடி நெற்றியில் புரள அதைக் கவனமின்றி ஒரு புறமாக கோதியிருந்தார். காருக்குள் இருந்தபடி எங்களைப் பார்த்து ஒரு சின்ன கூச்சத்துடன் கையசைத்தார். பலர் முண்டியடித்துக்கொண்டு காரை நெருங்க முயல காவலர்கள் பிரம்பால் தடுத்தனர். அவற்றுக்கெல்லாம் இடையில் சில கணங்களே நீண்ட அந்த சிரிப்பை நான் கண்டேன், இரண்டொரு நொடிகள்தான். இளமையில் முத்துமணியாக எங்களூரில் பெண் குரலில் பாடிய அந்த சிறுவனின் அதே சிரிப்பு, அதே குறும்பு கண்கள்.
கார் ஸ்டூடியோவுக்குள் சென்று மறைந்தது. அங்கு கூடியிருந்த கூட்டம் அதன்பின் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஏதோ ஒரு பிரம்மை கடந்து சென்றதுபோல மெல்ல அதிலிருந்து விடுபட்டனர். ஒவ்வொருவராக கலைந்து கிளம்பிச்சென்றார்கள். நான் மட்டும் அசைய மனமின்றி அங்கேயே நின்றிருந்தேன். அன்று மாலை மீண்டும் அவர் வண்டி வெளியே வருவதுவரை. மீண்டும் அவர் முகத்தை பார்த்தேன், இன்னும் சற்று தெளிவாக. அன்று இரவு சாலையோரத்திலேயே படுத்து எழுந்து மீண்டும் மறுநாள் அங்கு வந்து நின்றேன். தொடர்ந்து மூன்று நாட்களாக அதேபோல நின்றேன். ஒவ்வொருநாளும் அதே அனுபவம். நான்காவது நாள் அவர் வரவில்லை. எங்கோ கேரளாவுக்கு சென்றிருப்பதாகவும், திரும்பி வர மூன்று நாட்கள் ஆகும் எனவும் சொன்னார்கள். என் கையிலிருந்த காசெல்லாம் அன்றோடு செலவழிந்தது. மெட்ராஸின் தெருக்களில் பைத்தியத்தைபோல அலைந்தேன். இரவுகளில் கொசுக்கடியில் இருந்து தப்ப இரண்டு மைல்கள் நடந்து மாம்பலம் ரயில்நிலைய மேம்பாலத்தில் சென்று படுத்தேன். சில சமயம் கிடையின் நியாபகம் வர ஐந்து மைல்கள் நடந்து மரினா சென்று கடற்காற்றில் அலைகளை கேட்டபடி படுத்துக் கிடப்பேன். ஆரம்பத்தில் எல்லாம் நள்ளிரவில் அதிர்ந்து எழுந்து அரை உறக்கத்தில் தொலைந்த ஆடுகளை தேடியது உண்டு. வடபழனி சாலையில் பல கடைகளில் வேலை கேட்டு அலைந்து பின் ஒரு தேநீர் கடையில் சேர்ந்தேன். ஞானய்யா மீண்டும் வந்தார். தேநீர் கடையில் வேலை பார்த்துக்கொண்டே தினமும் ஞானய்யாவை சென்று கண்டு வந்தேன். ஒவ்வொரு நாளையும் அவர் முகத்தை காண்பதை நினைத்துதான் கடந்தேன். அவ்வாறே சில மாதங்கள் ஓடி சென்றன. அவ்வப்போது அவரை காணமுடியாத நாட்கள் வரும். சட்டென்று கொலைப்பழி ஒன்று சூழ்ந்ததுபோல அது என் நெஞ்சை இறுக்கி பழைய வாழ்க்கையை எல்லாம் ஆழத்தில் இருந்து கிளர்ந்தெழ செய்யும். அவர் முன்னால் என் சங்கை அறுத்து காட்டவேண்டும் என்று கோபவெறி எழும். ஆனால் மீண்டும் அவரை காணும்போது பற்றியெரியும் அந்நெருப்பில் குளிர் நீரை கவிழ்த்தியதைபோல மீண்டும் எல்லாம் அடங்கிவிடும்.
அவரைக் காணாத மற்ற நேரங்களில் என்னால் இயல்பாக எதையும் செய்ய இயலவில்லை. காரணமின்றி என் உடல் அடிக்கடி நடுங்கியது. மனப்பிறழ்வின் எல்லைவரை சென்று வந்த காலங்கள் அவை. ஒரு கணமும் நில்லாமல் மனம் கிளைத்து கிளைத்துப் பரவியது. எக்கணமும் தலை வெடித்துவிடும் என்பதுபோல சூடானது. அப்போதெல்லாம் அவரது இசைதான் என்னைக் காத்தது. எல்லாத் திசைகளிலும் ரேடியோக்களில் அது என்னைச் சூழ்ந்திருந்தது. அன்றெல்லாம் மெட்ராஸின் எந்த சாலையிலும் தொடர்ச்சியாக ஒரு கடைவிட்டு அடுத்த கடை என அவரது பாடலைக் கேட்டுக்கொண்டே எங்கு வேண்டுமென்றாலும் நடந்து சென்றுவிடலாம். அந்த காலங்கள்தான் இசையில் ஞானய்யாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கும் உச்சம். ஆனால் அன்றெல்லாம் என்னால் அவர் தனது குரலிலேயே பாடிய பாடல்களை மட்டும்தான் முழுமையாக ரசிக்க முடிந்தது, அவர் இசையமைத்த மற்றப் பாடல்களையும்கூட நான் அவர் குரலிலேயே கற்பனை செய்துகொண்டேன். அவரது இசை ஒவ்வொரு திரைப்படத்துக்கும் நம்பமுடியாத வண்ணம் பரிணமித்தது. அத்தனை இசை முறைமைகளும் எந்த வரம்புகளும் இல்லாமல் அவர் இசையில் கலந்தன. வரம்புகளும் எல்லைகளும் அவரைப் பொருத்தவரை இசையின் ஜீவனுக்கு எதிரானது. எல்லாவற்றையும் காற்றின் அசைவுகளாகவே அவர் கண்டார். எதுவும் புனிதம் அல்ல, எதுவும் இழிவுமல்ல. நாயின் ஊளைகூட எனக்கு தியாகய்யரின் கீர்த்தனைபோலத்தான் என்று அவர் ஒரு பேட்டியில் சொன்னது அன்று வித்துவான்களிடையே பெரிய விவாதமானது. ஆனால் அவர் சொன்ன அர்த்தத்தை புரிந்துகொள்ள அவராக இருந்தால் மட்டுமே முடியும். “அந்த தலைக்குள் எப்படி ஒவ்வொன்றும் சுவரங்களாக மாறி உள்ளே அமர்கிறது என்று யாராலும் சொல்லமுடியாது கண்ணா” என்பார் வெங்கட ராவ் சார். அவர்தான் அன்று ஆசிர்வாதம் ஸ்டூடியோவின் ஆஸ்தான ரெக்கார்டிஸ்ட்.
வெங்கட் ராவ் சார் என்னை முதல் முதலில் கண்டபோது அவருக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். கிட்டத்தட்ட ஞானய்யாவின் அதே வயது. மெலிந்து நெடுநெடுவென்று இருப்பார், குரல்வளை நன்றாக புடைத்திருக்கும். அடர்ந்த புருவங்கள் சந்திக்கும் இடத்தில் அல்லாமல் நன்றாக மேலே, விரிந்த நெற்றியின் மத்தியில் சிறிய குங்குமப்பொட்டு ஒன்று எப்போதும் வைத்ததுபோலவே கலையாமல் இருக்கும். மற்றபடி டெர்ரிகாட் சட்டையும் பெல்பாட்டமும் என மிகவும் மாடர்னாக உடையணிவார். அவர்தான் அன்று தென்னிந்தியாவிலேயே தலைசிறந்த ரெக்கார்டிஸ்ட். புகழ்பெற்ற பெங்காலி இசையமைப்பாளர் நீல் சௌத்தரியின் கீழ் வேலை பார்த்தவர். அந்த காலத்தில் பாடல்களெல்லாம் எட்டு முதல் பதினாறு டிராக்குகள்வரை ஒரே சமயத்தில் லைவ் ரெக்கார்ட் செய்யப்படும். அதில் வெவ்வேறு வாத்தியங்களுக்கு ஒன்றன் மேல் ஒன்று மேலோங்காமல் ஒலிவாங்கி அமைப்பது ஒரு கலை. வாத்தியத்திலிருந்து ஒலிவாங்கிக்கான தொலைவும் அதன் திசையும்தான் ஒலிச்சாயலை தீர்மானிக்கும். வெங்கடராவ் சார்தான் ’குளோஸ் மைக்கிங்’ என்று சொல்லப்படும் முறையை தமிழில் அறிமுகப்படுத்தியவர். பேஸ் கிட்டார்களுக்கும், ட்ரம்ஸ்களுக்கும் அது சின்ன பிசிறுடன் கூடிய ஒரு பிரத்யேக சாயலை அளித்தது. ஞானய்யாவின் இசையில் இருந்த கொண்டாட்டத்தையும் மீறலையும் அது ஒலியில் கொண்டு வந்தது. ஞானய்யாவுக்கே அவர்மீது பெரும் மதிப்பு உண்டு. அவர் வராத நாட்களில் முக்கியமான ரெக்கார்டிங்கையே நிறுத்தி வைக்கும் அளவுக்கு. வெங்கட ராவ் சார்தான் என்னை ஆசிர்வாதம் ஸ்டூடியோவுக்குள் அழைத்துச் சென்றவர்.
ஒவ்வொருநாளும் ரெக்கார்டிங் செஷன் இடைவேளைகளின் போது வெங்கட ராவ் சிகரெட் பாக்கெட் வாங்க வெளியே வருவார். பின்காலையிலும் மாலையிலும் என மொத்தம் இரண்டு இடைவேளைகளில் இரண்டு சிகரெட் பாக்கெட்டுகள் வாங்கி காலி செய்துவிட்டு இரவு வீட்டுக்கு செல்லும்போது மேலும் ஒரு பாக்கெட் வாங்கிச் செல்வார். காலையில் ஆறுமணிக்கு ஸ்கூட்டரில் அவர் ஸ்டூடியோவுக்குள் செல்லும்போதே பலமுறை நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவரும் என்னைக் கவனித்து வந்தது எனக்கு அப்போது தெரியாது. பல நாட்கள் நான் ஆசிர்வாதம் ஸ்டூடியோவின் வாசலில் நிற்பதை கண்டவர் ஒருநாள் ஸ்டூடியோவுக்கு எதிரே இருக்கும் தேநீர் கடையின் முன்னால் நின்றபடி வாசலில் தொங்கிய சனல் நெருப்பில் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டே என்னை தொலைவிலெருந்து கைகாட்டி அழைத்தார். தயக்கத்துடன் நான் அவர் அருகில் சென்று நின்றேன்.
புருவங்களைச் சுருக்கி இரண்டு இழுப்புகள் என்னை உற்றுப் பார்த்துவிட்டு அவர் கேட்டார் “என்னா விஷயம் உனக்கு, தினமும் இங்க நிக்கிற?”
நான் பதில் சொல்லாமல் அவர் கண்களையே பார்த்தபடி நின்றேன். “நடிக்க ஏதாவது வாய்ப்பு வேணும்னா ராகினி ஸ்டூடியோவாண்ட போய் நில்லு. இங்கல்லாம் படம் எதும் எடுக்குறதில்லை”
“அதுக்காக நிக்கல”
“அப்றம்?” சிகரெட்டைக் கீழேபோட்டு மிதித்து அணைத்துவிட்டு என்னைக் கூர்ந்து பார்த்தார்.
“அய்யான்னா எனக்கு உசுரு…”
அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன், அத்தனை நாட்கள் என் மனதில் மட்டுமே இருந்த உணர்ச்சியை முதல் முதலாக ஒரு மனிதரிடம் வார்த்தைகளில் பகிர்ந்துகொள்கிறேன். அவர் நெருங்கி என் தோளில் கைவைத்த கணம் என்னால் அடக்க முடியாமல் அழுகை வந்தது. அந்த இரைச்சலான சாலையின் ஓரம் நான் ஒரு குழந்தையைப்போலத் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தேன். அவர் சட்டென்று அணைத்து தேற்றி “சரி வா” என்று என்னை முதன்முறையாக வாயில் காவலர்களை கடந்து உள்ளே அழைத்து சென்றார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் இடது பக்கம் நின்ற பெரிய மாமரத்தின் அடியில் வைத்துத்தான் என் வாழ்க்கையை மாற்றிய அந்த கேள்வி வந்தது.
“இங்கேயே ஹெல்பரா சேர்ந்துக்குறியா?”
எனக்கு வார்த்தைகள் வரவில்லை, அழுதுகொண்டே ஆமென்று தலையாட்டினேன். என்னால் அப்போது அவர் சொன்ன எதையும் முழுதாக உள்வாங்கக்கூட முடியவில்லை. ஞானய்யா இருக்கும் இடத்தில் நானும் இருக்கிறேன். அந்தக் கணமே இறந்தாலும் போதும் என்றிருந்தது. ராவ் சார் என் பெயரையும் ஊரையும் எல்லாம் அமைதியாக விசாரித்து கேட்டுக்கொண்டவர் சட்டென்று ”ஏமி கம்பளத்தாடா?” என்றார். ஆம் என்றேன். “நெணுக்கூட ஆ பக்கவாடு தா. ராஜபாளயம்” என்றார். அன்றிலிருந்து நான் ஆசிர்வாதம் ஸ்டூடியோ ரெக்கார்டிங் ரூம் ஐந்தில் உதவி பணியாளராக வேலைக்கு சேர்ந்தேன்.
***
காலை என் மேன்ஷனுக்கு கைலாசம் ஐயாவிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் எப்போதும் மொட்டை மாடியில் படுப்பது தெரியாமல், கீழே அறைக் கதவைப் பலமுறை தட்டிப்பார்த்த பின்தான் விடுதிச் சிறுவன் மேலே வந்து ”அண்ணோவ்!” என்று என்னைத் தட்டி எழுப்பினான். பதறி எழுந்து ஒரு கணம் திகைத்து அருகில் வைத்திருந்த கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். மணி எட்டரை கழிந்திருந்தது. என் கைப்பேசியை அப்போது அணைத்து வைத்திருந்தேன். ஸ்டூடியோவில் இருந்து அழைப்பு வந்ததாகவும், பத்து நிமிடத்தில் மீண்டும் அழைப்பதாக சொல்லியிருப்பதாகவும் சிறுவன் சொல்லி சென்றான். திருநெல்வேலி பக்கமிருந்து புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த அவனுக்கு என் பெயர் தெரியவில்லை. “ஸ்டூடியோக்காரண்ணா” என்றுதான் அவன் என்னை அழைத்தான். துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு மெல்ல எழுந்தேன். காலை ஒளி நன்றாகவே முகத்தில் அறைந்தது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் என்னால் நிம்மதியாக கூரையின் கீழ் படுக்க முடிவதில்லை. மழையில்லாத நாட்களில் எல்லாம் நான் மொட்டை மாடியில்தான் படுத்தேன். ஆனாலும் காலை வெயிலெழுவது வரை அங்கே படுத்தது எனக்கே விந்தையாக இருந்தது.
என்ன நடந்தது என்று சட்டென்று எனக்குப் புரியவில்லை. ஏதோ மிகவும் தவறாக சென்றுவிட்ட உணர்வு மட்டும் இருந்தது. மேன்ஷனின் குறுகிய மரப்படிகளில் அவசரமாக இறங்கினேன். அத்தனை ஆண்டுகளில் ஒருநாள்கூட நான் ஸ்டூடியோ செல்லப் பிந்தியதில்லை. நாற்பது ஆண்டுகாலப் பழக்கம், அது என் உடலின் இயக்கம்போல இயல்பாகிவிட்டிருந்தது. என்னைச் சுற்றியுள்ள மற்ற எல்லாமே மாறிவிட்டது, சாலைகள், கடைகள், கட்டிடங்கள், வாகனங்கள், பெயர் பலகைகள். ஆனால் என் தினசரி வாழ்கையில் அணுவிடைகூட மாற்றமில்லை. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி, சைக்கிளை மிதித்துக்கொண்டு ஆறுமணிக்குள் ஸ்டூடியோ சென்றுவி டுவேன். மார்கழி மாதக் கடுங்குளிரிலும், ஐப்பசி மழையிலும்கூட ஒருநாளும் அது பிந்தியதில்லை. ஒவ்வொருநாளும் ரெக்கார்டிங் ரூமையும், ஞானய்யாவின் தனி அறையையும் நான்தான் சுத்தம் செய்து ஊதுபத்தி ஏற்றிவைத்து பிறர் வருவதற்குக் காத்திருப்பேன். ஸ்டூடியோவுக்கு நேரம் தவறாமல் வரும் மற்றொருவர் அவர் மட்டும்தான். ஊரில் இருந்தாரென்றால் உலகமே தலைகீழாக ஆனாலும் தவறாமல் ஏழு மணிக்கு ஸ்டூடியோவுக்குள் அவரது வண்டி நுழைந்துவிடும். தூய வெள்ளை நிறத்தில் ஜிப்பாவும் வேட்டியும் சந்தன நிறத்தில் ஒரு மேல்துண்டும் அணிந்து, சிறுமயிர் பரவிய நரைத்த தலையைக் குனிந்தபடி சிந்தனையில் ஆழ்ந்து ரெக்கார்டிங் தியேட்டருக்குள் நுழைவார். காலை வந்தவுடன் நேராக தன் தனியறைக்குள் சென்றுவிடுவார்.
பல சமயங்களில் காலை வேளையில் நானும் அவரும் மட்டுமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்தது உண்டு. நான் அவரிடம் ஒருபோதும் நேராகப் பேசியதில்லை. இத்தனை நாட்களில் அவர் கண்களைக் கூடச் சந்தித்தது இல்லை. ஏதாவது ஒரு தேவைக்காக அவர் அழைப்பார் என கைலாசம் ஐயா வருவதுவரை அவரது அறைக்கு வெளியே அமைதியாகக் காத்திருப்பேன். ஒருமுறைகூட அப்படி ஒரு அழைப்பு வந்ததில்லை. அறைக்குள் பெரிதாக அவரது ஆன்மிக குருவின் புகைப்படம் ஒன்று புன்னகைத்தபடி வீற்றிருக்கும். அதற்கு நேர் கீழே அவரது ஹார்மோனியப் பெட்டி. காலையில் முதல் வேலையாக அதன்முன் அமர்ந்து தியானம் முடித்து ஏதேனும் புத்தகத்தைப் புரட்டியபடி அமர்ந்திருப்பார். அறைக்கதவின் சிறிய கண்ணாடி வட்டம் வழியாக அவரது வயதான முகம் தெரியும். கீழ் இமைகளில் சற்றே தசைதொய்ந்த அந்த கண்கள் கொஞ்சம்கூட அங்கே இங்கே அலைவுறாது. சற்றுத் தாமதமாக வந்தாலும் கைலாசம் அய்யா அலட்டிகொள்ளாமல் உள்ளே வந்து ஞானய்யாவின் அறைக்குள் சென்று லேசாக செறுமி தன் வருகையைத் தெரிவிப்பார். அன்றைய நாள் அதன்பின் பரபரப்பாக இயங்கத் துவங்கும். பெரும்பாலான தினங்களில் ரெக்கார்டிங் ஒன்பது மணிக்கு பின் ஆரம்பிக்கும். அதற்குமுன் எட்டு மணியில் ஆரம்பித்து, பிற சந்திப்புகள் இருக்கும். வரும் விருந்தினர்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருவது, டீ, காபி வழங்குவது என ஆரம்பித்து, அதன்பின் ரெக்கார்டிங் வரும் இசைக் கலைஞர்கள், டிராக் பாடுபவர்கள், அவர்களுக்கான காலைச் சிற்றுண்டி தொடங்கி மற்ற ஏற்பாடுகள் என என் வேலை நெருக்கடி ஆகிவிடும். ஆனால் கைலாசம் ஐயா வருவதற்கு முந்தைய அந்த பத்துப் பதினைந்து நிமிடங்களும் முள் மீது அமர்வதுபோல அமர்ந்திருப்பேன். இத்தனை வருடங்கள் ஆகியும் அந்தப் பதற்றம் சற்றும் குறையவில்லை. அச்சமயத்தில் அவரது கண்ணின் சிறு இமைப்புகூட என்னைச் சொடுக்கி எழச்செய்யும்.
அன்று கீழே மேன்ஷன் வரவேற்பறை செல்வதற்குள் எனக்குத் தலை சுற்றுவதுபோல ஆகிவிட்டது. வலக்கைப் பக்கம் லேசாக வலியெடுக்க, உடல் குப்பென்று வியர்த்தது. கிழே சென்று பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த சிவப்பு நிற சோஃபாவில் முதன்முறையாக அமர்ந்தேன். எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எங்கெங்கோ அலைவுற்றன. முந்தைய நாளை எத்தனை முயன்றாலும் நினைவு கூறமுடியவில்லை. அதற்கு முன்னான எண்ணற்ற இரவுகளுக்குள் அதுவும் எங்கோ சென்று அடையாளமில்லாமல் மறைந்துவிட்டிருந்தது. சற்று நேரத்தில் வரவேற்பறை தொலைப்பேசி அழைத்தது. நான்கைந்து முறை அழைப்பு மணி அடித்ததும் நான் எடுத்தேன். மறுமுனையில் கைலாசம் ஐயாவின் பதற்றமான குரல்.
“எங்கப்பா இருக்க நீ?”
தயங்கியபடி நான் சொன்னேன். ”கொஞ்சம் உடம்பு முடியல்லபோல இருக்குதுய்யா. எழுந்துக்க நேரமாயிப்போச்சு”
”நீ உடனே சீக்கிறம் கிளம்பி வா. நேத்து ரெக்கார்டிங் ரூம பூட்டி நீதான வாட்ச்மேன் கிட்ட சாவிய கொடுத்த?”
“ஆமாய்யா, என்னாச்சு?”
”உள்ள யாரோ வந்துருக்கான்யா, காலைல யாரும் இல்லாம அய்யா ரூம் திறந்து கிடக்கு”
எனக்குச் சட்டென்று நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிடித்ததுபோல இருந்தது. மறுபுறம் கைலாசம் ஐயாவின் குரலும் இடறுவதுபோலத் தோன்றியது. உடனே கிளம்பி வருவதாகச் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தபோது என் வாய் சற்றுக் குழறியது. தலைசுற்றி ஒரு கணம் தரையிலேயே அமர்ந்துவிட்டேன். விடுதி சிறுவன் ஓடிவந்து தண்ணீர் கொடுத்தான். பின் மெல்லத் தோள்களைப் பற்றி எழுப்பி சோஃபாவில் அமரவைத்தான். நெஞ்சில் சுறுக் சுறுக் என்று வலி துளைத்தது. ஆனாலும் என்னால் அங்கு அமரமுடியவில்லை. உடனே வடபழனி செல்ல வேண்டும் என்று சொல்லி அவனை ஆட்டோ பிடித்துவர அனுப்பினேன்.
கைத்தாங்கலாக என்னை ஆட்டோவில் ஏற்றினான். வடபழனி ஆசிர்வாதம் ஸ்டூடியோ என்றபோது, ஆட்டோக்காரனுக்கு இடம் அடையாளம் தெரியவில்லை, அருகிலுள்ள பெரிய வணிக வளாகத்தைச் சொல்லி வழி சொன்னேன். வண்டி காலை வேளையின் கடும் வாகன நெரிசலில் கோடம்பாக்கம் பாலத்தை மெல்ல மெல்ல ஏறிக் கடந்தது. அந்த நேரத்தின் நெரிசலை நான் எப்போதும் கண்டதில்லை. அதிகாலை ஸ்டூடியோ சென்றுவிட்டால் காலத்தில் உறைந்தது போன்ற அப்பெரிய மாமரங்களின் நிழல் அடர்ந்த அவ்வளாகத்தை விட்டு வெளியே வருவதற்கான வேலையில்லை. ஓட்டல்களிலும் கடைகளிலும் தேவையானவற்றை வாங்கிவர வட இந்திய இளைஞன் ஒருவன் இருந்தான். மற்றப்படி உள்ளே வளாகத்துக்குள் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. பத்து வருடத்துக்கு முன் எக்யூப்மெண்டுகள் சிலவற்றை பழைய அனலாக்-இல் இருந்து டிஜிட்டலாக புதுப்பிக்கபட்டன. இப்போதைய தொழில்நுட்பம் எதுவும் எனக்கு புரிவதில்லை. முன்பு வெங்கட ராவ் சார் இருந்தபோது இரவு நேரங்களில் டிராக்குகளுக்கு டவுன் மிக்ஸிங் நடக்கும். அப்போதெல்லாம் என்னை அருகில் அமர்த்தி அதன் செயல்முறை எல்லாவற்றையும் பொறுமையாக விளக்குவார்.
நாள் முழுவதும் பல டிராக்குகளில் ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடல்களை இரவு ரியல் டைமில் ஓடவிட்டு ஸ்டீரியோ அல்லது மோனோ டிராக்கிற்கு மாற்றுப்பதிவு செய்வார்கள். ரிகர்ஸலின் போது துண்டு துண்டாக கேட்டு கற்பனையில் பெருக்கிக்கொண்ட ஞானய்யாவின் பாடல்களை எல்லாம் இரவில் முழுமையான வடிவில் அமர்ந்து கேட்போம். மறக்க முடியாத நாட்கள் அவை. கண்ணீர் பெருக, உற்சாகம் பொங்க, புன்னகை ததும்ப என வெவ்வேறு மனநிலைகளில், அன்றுதான் புதிதாகப் பிறந்த அப்பாடல்களை அதன் கடைசி வடிவில் நாங்கள் கேட்டோம். பல சமயம் அவை காலையில்தான் அவரது கற்பனையில் உதித்தவையாக இருக்கும். ஏற்கனவே போடப்பட்ட மெட்டுகளும் கூட அந்நாளில்தான் முதல் நோட்டிலிருந்து கடைசி நோட் வரை முழுக்க முழுக்க ஆர்க்கஸ்டிரேஷன் செய்து முடிக்கப்பட்டிருக்கும். இரவு கடைசியாக ஒலிக்கலப்பு செய்த பின் எந்த மாற்றமும் இல்லை. அதை முற்றிலும் மறந்து விடுவார். எத்தனையோ அற்புதமான பாடல்களை நானும் வெங்கட ராவ் சாரும் அவரது உதவியாளர்களுள் ஒருவரும் மட்டும் அமர்ந்து இரவின் தனிமையில் கேட்டிருக்கிறோம். சுவர்களில் செந்நிற வெல்வட் துணி பதித்த ரெக்கார்டிக் ஸ்டூடியோவின் அரை இருளில் பகலெல்லாம் இசை கலைஞர்கள் அமர்ந்து வாசித்து சென்ற காலி இருக்கைகள் அங்கங்கே சிதறிக்கிடக்கும். அன்றைய பகலின் காட்சிகள் ஒரு கனவைபோல மறைந்து, அறையை நிறைக்கும் அந்த மகத்தான இசை மட்டும் அதன் சான்றாக அந்த இரவில் ஒலிபெருக்கிகளில் நிறைந்து பெருகும். சட்டையின் மேல் மூன்று பொத்தான்களை திறந்துவிட்டுக்கொண்டு மெலிந்த உடல் இருக்கையில் தழைய, மோவாயை கையில் தாங்கி ஏந்தியபடி வெங்கட ராவ் சார் அமர்ந்திருப்பார். நுட்பமாக செவிகூர்ந்து, கண்கள் இறுக மூடியிருக்கும். எப்போதாவது ஒலி அளவுகளில் சின்னத் திருத்தம் இருந்தாலும் சட்டென்று எழுந்துகொண்டு பாடலை நிறுத்தி சரிசெய்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து ஒலிக்க விடுவார்.
பாடல் முடிந்ததும் சத்தமில்லாமல் டேப்பை ரீவைண்ட் செய்து சுருட்டி வைப்பார். வண்டின் ரீங்காரம்போல எழும் அந்த சத்தத்தில் அவர் முகத்தில் ஒரு தியானத்தின் அமைதி குடியிருக்கும். அந்த நேரம் அவர் எதையும் பேச விரும்புவதில்லை. அங்கே ஸ்டூடியோவில் வந்துசெல்லும் எல்லாரையும் விட வெங்கட ராவ் சாருக்கு சங்கீத ஞானம் மிகுதி. ஞானய்யா கூட சமயங்களில் அவரிடம் அபிப்ராயம் கேட்டுக்கொள்வதுண்டு. இரவு அன்றைய பாடல்களை ஒலிக்கலப்பு செய்து முடித்தபின் வெளியே யாருமற்ற வராண்டாவில் இறங்கி ஒரு சிகரெட்டை பற்றவைத்து ஆழ இழுத்து எதிர்பாராத கணத்தில் அவர் சொல்வார்.
”என்ன மனுசன்யா அவன்?”
பின் மெல்ல நாசி வழியாக மிக சிறிதாக புகையை வெளியிட்டபடி உச்சு கொட்டுவார். அப்படியே நின்ற இடத்தில் மூன்று நான்கு சிகரெட்டுகளை வரிசையாக பிடித்தபடி வேறொன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்பார். நல்லிரவு வரை ஆனபின் மெல்ல என்னிடம் கண்ணசைத்து விடைபெற்று ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிச்செல்வார்.
சில வருடங்களில் வெங்கட ராவ் சார் ஆசிர்வாதம் ஸ்டூடியோவை விட்டுச் சென்றுவிட்டார். ஸ்டூடியோவுக்கும் அவருக்குமான வாக்குவாதம்தான் காரணம். ஞானய்யாவுக்கு அது ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பாக இருந்தது. நான் அதன்பின்னும் தொடர்ந்து ராவ் சாரின் வீட்டுக்கு சென்று வந்தேன். அவர்தான் எனக்கு எழுதப்படிக்க கற்றுத்தந்தார். இந்த நகரில் எனக்கு சொந்தமென்று இருப்பது அவர் வீடுதான். அவரது இரு மகள்களையும் நான் தூக்கி வளர்த்திருக்கிறேன். தனது ஐம்பது வயதில் ராவ் சார் புற்றுநோயில் இறந்தார். அன்றுதான் ஞானய்யாவை முதன்முதலாகக் கண்ணீர் சிந்தி நான் கண்டிருக்கிறேன். வெங்கட ராவ் சார் இறந்தே இப்போது இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன.
சட்டென்று மீண்டும் நெஞ்சில் ஆழமான வலி, காலம் இறக்கமில்லாமல் என்னை ஏறி மிதித்து கடந்து சென்றுவிட்டிருந்தது. உடைந்து அழுவதற்குக்கூட கண்ணீரில்லாமல் நான் அதன் இயக்கத்தில் சிக்கி இருக்கிறேன். ஏதோ ஒன்று அன்று மாறப்போவது உள்ளுணர்வாக எனக்குத் தோன்றியது. ஆட்டோ சரியாக ஆசிர்வாதம் ஸ்டூடியோவின் வாசலில் தயங்கி நின்றது. பதற்றமாக ஓடிவந்த வாயில் காவலரிடம் கைகாட்டிவிட்டு ஓட்டுனரை உள்ளே செல்லச் சொன்னேன். ரெக்கார்டிங் ஸ்டூடியோ முன்பு ஸ்டூடியோவின் மேனேஜர் உட்பட அனைவரும் கூடி இருந்தனர். கைலாசம் ஐயா வாசல்படிகளில் தளர்ந்து அமர்ந்திருந்தார். அங்கு எல்லாரும் எனக்காகத்தான் காத்து நின்றதைபோல ஒர் உணர்வு. நான் கைகள் நடுங்க ஆட்டோ காசை எடுத்துக் கொடுத்துவிட்டு மெல்ல அவர் அருகில் சென்றேன்.
கைலாசம் ஐயா என்னை நிமிர்ந்து பார்த்தார், அவர் முகத்தில் வினோதமான ஒரு பாவம் குடியேறியிருந்தது. ’இப்போது உனக்கு மகிழ்ச்சிதானே’ என்பதுபோல. நான் அவரைக் கடந்து படியேறி உள்ளே செல்ல முயன்றபோது அவரது குரல் எழுந்தது.
“அய்யாவோட ஹார்மோனியப் பொட்டிய காணல!”
நான் நா தழுதழுக்க அவரிடம் சொன்னேன், ”சத்தியமா கதவ பூட்டிட்டுதான் யா போனேன்.”
அவர் தலையில் கைவைத்தபடி ”உள்ளப்போய் நீயே தேடிப்பாரு,” என்றார்.
நான் அவசரமாக படிகளில் ஏறி உள்ளே நேராக அய்யாவின் தனியறைக்குள் சென்றேன். அங்கே எல்லாம் வைத்தது வைத்தபடி அடுக்கு கலையாமல் இருந்தது. பார்வை இயல்பாக அங்கு சென்றது. ஹார்மோனியப் பெட்டியை வைக்கும் அந்த மர அலமாரி மட்டும் காலியாக இருந்தது. அத்தனை ஆண்டுகளாக அதை அங்கே கண்டு கண்டு அதன் இன்மையிலும் என்னால் அதைக் காண முடிந்தது. அதன் ஒவ்வொரு கீறலையும், நிற வேறுபாடுகளையும் என்னால் நினைவில் மீட்டெடுக்க முடியும். என் தொண்டை வரண்டு, கால்கள் குழைந்தன. வீண்தான் எனத்தெரிந்தும் நான் அறைக்குள் சுற்றி வந்தேன். அது ஞானய்யாவின் கைகளிலோ அல்லது அந்த அலமாரியிலோ அல்லாது வேறெங்கும் இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை. அறையில் மீண்டும் மீண்டும் சுற்றிப்பார்த்தேன். என் கண்களில் நீர்த்திரை மறைத்தது.
ஞானய்யா இந்த உலகில் தனதாகக் கருதிய ஒரே பொருள் அதுதான். ஆம், என் சிறு வயதில் நான் அவரது அண்ணனின் கைகளில் தேன் நிறத்தில் மின்னக்கண்ட அந்த ஹார்மோனியம்தான். மதுரையில் அந்தக் காலத்தில் அறுபது ரூபாய்க்கு கிருஷ்ணன் ஆசாரி செய்தளித்தது அது. அண்ணன் இறந்தபின் அது ஞானய்யாவின் கைகளுக்கு வந்தது. அவர் அதை தன் வாழ்வின் மகத்தான பொக்கிஷம்போலக் காத்தார். அது உள்ளபோது அவருக்கு இவ்வாழ்கையில் வேறு ஒன்றுமே தேவையில்லை என்று தோன்றும். அவரது அத்தனை ஏழ்மையிலும் அத்தனை புகழுச்சங்களிலும், துயர்களிலும் மகிழ்ச்சியிலும் அது உடன் இருந்திருக்கிறது. அதை உடன்கொண்டுசெல்லாமல் இந்த உலகின் எந்த மூலைக்கும் அவர் சென்றதில்லை. பதின் வயதில் அண்ணன் அறியாது அவரது சிறு விரல்கள் அதன் மீது தவழ்ந்துதான் இசையை அறிந்து கொண்டன. அதில் எழுபவை என்ன ஸ்வரங்கள் அது என்ன ராகம் என்று அறியாமலேயெ அதில் அவர் வாசிக்கத் துவங்கிவிட்டார். இசை தேர்ந்தபின் அவரது ஆயிரக்கணக்கான மகத்தான மெட்டுகள் அதில்தான் முதலில் பிறந்தன. அவரது மகள் இறந்த மறுதினம் கண்ணீருடன் அவர் அதை அணைத்துக்கொண்டு சில கணங்கள் அமர்ந்துவிட்டு பின் மெல்ல வாசிக்கத் துவங்கியதை நான் நினைவு கூர்கிறேன். என்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்தச் செய்தியை அவர் எப்படித் தாங்கிக்கொள்வார் என என்னால் சிந்தனை செய்ய முடியவில்லை. அதற்குமுன் நான் இறந்துவிட வேண்டும் என எண்ணினேன்.
மேற்கொண்டு செய்வதறியாது நான் அறைக்கு வெளியே விரைந்து வந்தேன். கைலாசம் ஐயா என் கண்களைப் பார்த்து, “நீ நேற்று அறையைப் பூட்டவில்லை, சாவியையும் காவலாளியிடம் கொடுக்கவில்லை,” என்றார். என்னால் அவருக்குப் பதில் சொல்ல முடியவில்லை, முந்தைய நாளின் எதுவும் எனக்கு சுத்தமாக நினைவில்லை. நான் கைகளைக் கூப்பி அவரிடம் மன்னிக்கக் கோரினேன். என் உடலெல்லாம் வியர்வையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தது. முந்தைய நாளின் ஒன்றுமே எனக்கு நினைவில் இல்லை என்று நான் அவரிடம் ஒப்புக்கொண்டேன்.
”அய்யா திருவண்ணாமலைல இருந்து நேரா இங்கதான் வந்துட்டு இருக்காரு. அவர்கிட்ட விஷயத்தச் சொன்னேன்.”
சற்று நேரம் அமைதியாக என்னைப் பார்த்தார். என் உயிர் அப்போதே பிரிந்துவிடும் என தோன்றியது.
”ஒன்னுமே சொல்லல, வேற ஏதாச்சும் காணுமான்னு மட்டும் கேட்டார். இல்லைன்னேன்… அவர் வந்தா நீதான் என்னனு சொல்லனும்,” என்றுவிட்டு அவர் நடந்தார்.
***
அன்று மதியம் பதினொன்றரை மணிக்கு ஞானய்யாவின் கார் ஸ்டூடியோவுக்குள் நுழைந்தது. நான் வாசலில் சென்று நின்றேன். என் உடல் குளிர்ந்திருந்தது. காரின் கதவைத் திறந்து அவர் இறங்கினார், அந்த நடையில் எந்த மாற்றமும் இல்லை. கண்கள் ஏதோ சிந்தனையில் தொலைந்தவைபோல் இருந்தன. அதை நான் நன்கறிவேன். இசையில் மூழ்கியிருக்கும்போது மட்டுமே அவர் கண்களில் வரும் ஆழம் அது. ரெக்கார்டிங் ஸ்டூடியோ நெருங்கியவுடன்தான் அங்கு கூடியிருந்தவர்களைக் கவனித்தார். என்னவென்று புரியாதவர்போல விந்தையாக அவர்களைப் பார்த்தார்.
கைகளை கூப்பியபடி நான் அவர்முன் நின்றேன். எனக்கு அந்தக் கணம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசுவதைவிட அவர் கால்களின்முன் மண்டியிட்டு உயிர்விடுவது எளிதாகத் தோன்றியது. தொண்டை வரண்டுபோக, பேச்செழாமல் நான் காத்திருந்தேன்.
விரைவாகப் படிகளேறி வந்தவர் வாழ்நாளில் முதன்முறையாக என் கண்களைச் சந்தித்தார். ஒரு கணம்கூடத் தயங்காமல் சட்டென்று புன்னகைத்து, “என்னய்யா? இப்படி நின்னா ஒன்னும் வேல ஆவுமா? அவங்களயெல்லாம் போவச் சொல்லு,” என்று என் தோள்களைத் தட்டிவிட்டு உள்ளே சென்றார்.
என் உடலின் அத்தனை இறுக்கமும் அப்படியே தளர்ந்தது. கைகளும் கால்களும் எல்லாம் உதிர்ந்துவிடும் என்பதுபோல. வார்த்தைகள் எழாமல் நான் அவரைப் பின்தொடர்ந்தேன். நேராக தன் அறைக்குச் சென்றவர், செல்லும் வழியிலேயே “கைலாசம், அந்த கீபோர்ட எடுத்து வை,” என்றபடி உள்ளே சென்றமர்ந்தார்.
நான் சிலைபோல நின்றேன், அங்கே நடப்பது எதுவும் எனக்குப் புரியவில்லை. கைலாசம் ஐயா பரபரப்பாக ஓடிச்சென்று உதவியாளர்களைப் பிடித்து கீபோர்டை நகர்த்திக்கொண்டு அறைக்குள் சென்றார். சற்று நேரம் குருவின் படத்தின் முன் கண்மூடி அமர்ந்திருந்தவர். எழுந்து வந்து கீபோர்டில் கைவைத்தார். அவரைக் கண்ணெடுக்காமல் பார்த்து நின்ற கைலாசத்திடம் கண்களில் மெல்லிய சிரிப்புடன் சொன்னார்,
“விடுய்யா, அவருக்கும் எனக்கும் மத்தியில இன்னும் ஒன்னு தொலஞ்சுது.”
அஜிதனின் எழுத்துகளில், மொழியின் மீதான ஆளுமை மேலும் மேலுமென கூர் கொண்டபடியே இருக்கிறது. இந்த கதை அவற்றில் ஒன்று. தமிழர்கள் 1970 முதல் பட்டினியில் இருந்த போதும் அவருடைய பாட்டோடு இருந்ததால் உயிர் வாழ்ந்தார்கள் எனலாம். அப்படியான ஒருவருக்கு அஜி போன்ற குழந்தை கொடுக்கும் அன்பு முத்தம் இந்த கதை. கடவுளின் கன்னத்தை எச்சில் படுத்திய குழந்தைக்கு வாழ்த்துக்கள்
ஞானய்யாவின் biopic வர இருக்கும் சமயத்தில் அஜிதன் உருவாக்கி அளித்த vision board தான் இச்சிறு கதை. கிடைகளின் விவரிப்பு கிரா காலத்தை கண் முன் காட்டியது. குருஜி சொல்லிய மாதிரியே மொழி ஆளுமை கூர் கொண்டு மென்மேலும் எழுத வேண்டும். வாழ்த்துக்கள்.
Manam niraintha valthukkal ajithan for Asirvatham studios.
சிறு வயதில் இருந்து அலைந்து திரிவதையே வாழ்க்கையாக கொண்ட ஒருவன், மகிழ்ச்சி சிரிப்பு என்பதையே கண்டிராத ஒருவன், தனிமையின் பித்தில் தன்னை மறந்த ஒருவன், தன் வாழ்க்கையின் பயணம் எதை நோக்கி செல்லவேண்டும், அது முழுமையடைய யாரை சரணடைய வேண்டும் என்று உணரும் தருணத்தில் இந்த கதை முழுமை அடைகிறது. ஞானய்யாவுக்கு திருவண்ணாமலையில் கிடைக்கும் நிறைவு, இசையில் பிறக்கும் அமைதி, அவனுக்கு ஞானய்யாவின் தரிசனத்தில், சேவையில் கிடைக்கிறது. அவர் இவன் கண்களை பார்த்து சிரித்து தோள்களை தொடும் தருணம் இவன் தன் வாழ்வின் முழுமையை அடைகிறான். அவர் இந்த உலகில் தனக்கானதாக கருதும் ஒன்று காணாமல் போனதை இயல்பாக உதிர்க்கும் தருணத்தில் இந்த கதை இரண்டாம் முறை முழுமை அடைகிறது. அதனால் தான் அவர் ஞானய்யா.
அஜிதனுக்கு வணக்கமும் நன்றியும் வாழ்த்துக்களும்!
நான் படிக்கத் தொடங்கிய முதல் கதை…
விரிவுரையின் வார்த்தைகள் அழகு.
வாழ்த்துக்கள் அஜிதன்…🤩🤩🤩💐