
என் வாழ்நாளில் மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் எப்போதுமே அறிந்திருக்கவில்லை. இளமையில் பசியோ வேதனையோ உடலில் தூலமாக உணர்ந்ததைபோல அதை நான் உணர்ந்ததில்லை. சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்திருந்த தருணங்கள் உண்டு. கரிசல் காட்டின் அந்தியில் வானம் சிவக்கும்போது சில சமயங்களில். அதையும் சிறுவயதில் அச்சத்துடன்தான் கண்டிருக்கிறேன். மொத்த வானமும் தலைக்கு மேல் தீப்பற்றி எரிவதுபோல…