அந்தியில் நாங்கள் கினரெஜோவுக்குச் சென்று சேர்ந்தபோது கிராமத்தின் பெரும்பாலான மக்கள் கீழே பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். செல்லும் வழியெங்கும் அடர்ந்த காட்டிற்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக மின்னித் துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் குழுவில் மூத்தவரான எண்பது வயது கடந்த ம்பாஹ் சுரக்ஸோ கூட தன் வாழ்நாளில் அதுவரை இத்தனை மின்மினிகளைப் பார்த்ததில்லை என்று வியந்தார். இருள் அடர்ந்த காட்டின் ஊடாக நாங்கள் மஞ்சள் நிற கெனங்கா மலர்கள் உதிர்ந்து கிடந்த அந்தப் பாதி உலர்ந்த சேற்றுப் பாதையை ஏறிக் கடந்து சென்று ம்பாஹ் மாரிட்ஜானின் வீட்டை அடைந்தபோது அது பளிச்சென்று விளக்குகள் மின்ன ஏதோ சுப நிகழ்வுக்கு ஆயத்தமாகி நிற்பது போல காத்துக் கொண்டிருந்தது. காலியான அந்தக் கிராமத்தில் புதிதாகக் கட்டி முடித்திருந்த மசூதியையும் அந்த வீட்டையும் தவிர வேறெங்கும் விளக்குகளோ நடமாட்டமோ இருக்கவில்லை.
பல மணிநேரத்துக்குப் பின் மீண்டும் மெராப்பியின் மலையுச்சி எங்கள் கண்ணெதிரில் தோன்றியது. சட்டென்று மிக அருகில் எழுந்து நின்றது போல. என் பார்வைக்கு அது வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகப் புகை உமிழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது. உச்சி மலையில் எழுந்த அந்தப் புகை படலம் அவ்வபோது சில நொடிகள் மின்னலென செந்நிறமாகி மீண்டது. நாங்கள் ம்பாஹ் மாரிட்ஜானின் வீட்டை நெருங்குவதற்குச் சில நூறு அடிகளுக்கு முன்பே உள்ளிருந்து கமெலானின் பல்லாயிரம் மணிகள் அதிரும் அந்த வினோத இசை குளிர்ந்த ஈரக் காற்றை முழுதாக நிறைத்து மூச்சை அடைக்கச் செய்தது. அவை எல்லாம் சேர்ந்து என் மனதில் பயத்துக்கும் பதற்றத்துக்கும் மாறாக ஒருவித பரவசத்தை அளித்தது. காற்று ஒரு பருப்பொருளாக, உடலெங்கும் நனைத்து மெல்ல என்னை அதிரச் செய்து கொண்டிருந்தது.
எங்கள் குழுவின் தலைவர் விரகுணா மாரிட்ஜானின் வீட்டை நெருங்கும் முன்னரே பரபரப்பாகி எங்களுக்குக் கட்டளைகளை இடத் தொடங்கியிருந்தார். கூட்டத்தில் சற்று புதியவன் என்பதால் எனக்கு மேலும் கண்டிப்பான குரலில் எச்சரிக்கைகளை வழங்கினார்.
“புர்வாண்டோ, நீ எப்போதும் போல இருக்கலாகாது. சென்றவுடன் நாம் பணிகளை துவங்க வேண்டும். நள்ளிரவுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு நாம் கிளம்ப வேண்டியிருக்கும். மாரிட்ஜானின் ஆணை அது.”
ம்பாஹ் சுரக்ஸோ என் தோள்களை ‘பதற்றமாகாதே’ என்பது போல மெல்ல பற்றிக்கொண்டார்.
வீட்டை நெருங்கிய போது வாசலில் காத்து நின்றிருந்த மார்ட்ஜானின் தங்கை எங்களை உற்றுநோக்கி இருளில் அடையாளம் கண்டு கொண்டு ஓட்டமும் நடையுமாக முன்னால் வந்து எதிர்கொண்டார். விரகுணாவை வாழ்த்திவிட்டு, ம்பாஹ் சுரக்ஸோவின் கைகளை வாஞ்சையுடன் பற்றிக்கொண்டார். அவர்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் இடையே பல ஆண்டுகால நினைவுகளின் நெருக்கம் இருப்பது தெரிந்தது. புன்னகையும் தளும்பிய கண்ணீருமாக சுரக்ஸோவின் தலை வயோதிகத்திலா அல்லது உணர்ச்சிபெருக்கிலா என்று தெரியாத வண்ணம் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. அனேகமாக இரண்டுமாக இருக்கலாம். மாரிட்ஜானும் அவர் தங்கையும் சுரக்ஸோவும் எல்லாம் பால்யகாலம் முதல் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். மெராப்பி மலையின் பாதுகாவலராகப் பொறுப்பேற்கும் முன் மாரிட்ஜானின் இயற்பெயரும் கூட சுரக்ஸோ தான்.
மாரிட்ஜானின் தங்கை அதிகம் தாமதிக்காமல் எங்களை வீட்டின் பின்புறம் அமைந்திருந்த சாய்ப்பிற்கு அழைத்துச் சென்று சமையற்கூடத்தைக் காட்டினார். செல்லும் வழியில் வீட்டின் முற்றத்தில் ஜோக்ஜகார்த்தாவில் இருந்து ஜீப் ஒன்று வந்து நின்றிருப்பது தெரிந்தது. அது ஸ்ரீ சுல்தானின் அரண்மனையில் இருந்து வருகிறது என்று சுர்யபுத்ரோ என் காதில் சொன்னான். எப்படியாவது மாரிட்ஜானைக் கீழே அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு சுல்தான் பத்தாம் ஹமெங்குபுவனாவால் இடப்பட்ட ஆணை.
நாங்கள் ஐவரும் சமையற்கூடத்தில் இரவு விருந்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். கமெலான் குழுவினரையும் சேர்த்து கிட்டத்தட்ட இருபத்தைந்து பேருக்காக நாங்கள் சமைக்க வேண்டியிருந்தது. விரகுணா அல்லாது எங்கள் குழுவில் நாங்கள் நால்வர். விரகுணாவின் தாய்மாமனான ம்பாஹ் சுரக்ஸோ அதில் மூத்தவர். அவர்தான் விருந்தின் முக்கியமான ரெண்டாங் கறியை மேற்பார்வை செய்து பதம் பார்ப்பவர். அது போக நானும் சுர்யபுத்ரோவும் இளையவர்கள். காய்கள் அரிவதும் தேங்காய்ப் பால் பிழிவதும் எனச் சில்லறை வேலைகளைப் பொதுவாக நாங்கள்தான் செய்தோம். விரகுணாவின் நெடுநாள் உதவியாளரான மூலியா அதிகம் பேசுவதில்லை, சிரிப்பதுமில்லை. விருந்துச் சமையலுக்கு மாட்டை அறுப்பதும் கறியெடுப்பதும் வெட்டுவதும் எல்லாம் அவர்தான்.
ரெண்டாங்கிற்கும் மற்ற உணவுகளுக்கும் தேவையான இறைச்சியை நாங்கள் கீழிருந்தே கொண்டு வந்திருந்தோம். கூடவே தேவையான காய்களும், செராய் புற்களும் மற்ற வாசனை பொருட்களும் எல்லாம் வரும் வழியில் காட்டில் பறித்து வந்திருந்தோம். மற்றபடி விருந்திற்குத் தேவையான அரிசி, தேங்காய் போன்றவை மாரிட்ஜானின் வீட்டிலேயே இருந்தன. முதல் வேலையாக ரெண்டாங் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். குறைந்தது மூன்று மணிநேரமாவது அது அடுப்பில் வேக வேண்டும். மூலியா தன் வாள் போன்ற கத்தியை நன்றாகத் தீட்டிவிட்டு மாட்டின் தொடை இறைச்சியை, ஒரேபோல கை முஷ்டி அளவிலான பெரிய துண்டுகளாக வெட்ட தொடங்கினார். காய்ந்த தாமரை இலையில் வைத்து பொதிந்து கொண்டு வந்திருந்த இறைச்சியை முதலில் பிரித்துப் பார்த்தபோது அது உள்ளே கருக்குழந்தையைப் போல ரத்தச் சிவப்பாகச் சுருண்டு படுத்திருந்தது. கொழுப்பு ரேகைகள் ஏதும் இல்லாத தூயச் செந்நிறம்.
தொடைக்கறி தான் மாட்டின் உடலிலேயே மிகக் கடினமான இறைச்சி. அதை வேறெப்படி உண்டாலும் மெல்ல முடியாத அளவு இறுக்கம் கொண்டிருக்கும். பொதுவாக மாடு அதிகமாகப் பயன்படுத்தாத முதுகெலும்பை ஒட்டிய தசைகளே மென்மையான கறிகளுக்குத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், ரெண்டாங்கிற்குத் தொடை இறைச்சியே உகந்தது. அந்தப் பாகத்தில் இருக்கும் வளமான இறைச்சியில் தான் மாட்டின் ஒட்டுமொத்த உழைப்பும் ஆற்றலும் துவர்ப்பும் ரத்த வீச்சமுமாகச் சுவையென திரண்டிருக்கும். வாழ்நாளெல்லாம் மெராப்பியின் அடர் காடுகளில் அலைந்து எரிமலை உமிழ்ந்த வளமான மண்ணில் விளைந்த புற்களை மேய்ந்து திரட்டிய தசைத்திரள். ம்பாஹ் சுரக்ஸோ அதை காட்டின் உயர்ந்த கனி என்பார். அதிலும் முதிர்ந்த காளையின் முன்னங்கால் தொடைதான் உச்சம். உடலிலேயே கடினமான அந்த இறைச்சியை உண்ணும் பதத்துக்கு மாற்றியெடுப்பது ஒரு கலை. சுமத்ரா தீவில் தோன்றிய அந்தக் கலையை ஜாவாவின் மத்ய மாத்ர தேசத்துக்கு எடுத்து வந்தவர்கள் கடலோடிகளாக இருந்த சுரக்ஸோவின் முன்னோர்கள்.
ரெண்டாங்கிற்குத் தேவையான தேங்காய்ப் பாலை எடுப்பது தான் அதிகமான உழைப்பைக் கோரும் வேலை. அதை தாமதப்படுத்தவும் முடியாது. மூன்று மணிநேரமும் இறைச்சி தேங்காய்ப் பாலிலேயே வெந்து குறுக வேண்டும். எனவே, நானும் சுர்யபுத்ரோவும் அவசரமாகத் தேங்காய்களை உரிக்க ஆயத்தமானோம்.
பாலுக்குத் தேவையான தேங்காய்களைச் சாய்ப்புக்குப் பின்னால் இருந்த பத்தாயத்தில் வைத்திருந்தனர். அவற்றை எடுத்து வர நாங்கள் செல்லும் வழியில் ஒருகணம் என் கால்கள் தடுமாறின. பின்தலையில் ஏதோ நரம்பொன்று அறுபட்டு அதிர்ந்தது போல தோன்றியது. சட்டென மயக்கம் வருவது போல தலை சுழற்றியது. அருகே மாரிட்ஜானின் வீட்டிலிருந்து பொருட்கள் விழுந்து உடையும் சத்தம் கேட்க, நாங்கள் அனிச்சையாக அங்கேயே உரைந்து நின்று விட்டோம். நான் சுர்யபுத்ரோவைத் திரும்பிப் பார்த்தேன். அவனும் என்னைப் போலவே குழம்பியிருந்தான். மாரிட்ஜானின் வீட்டிலிருந்து சற்று நேர அமைதிக்குப்பின் கமெலானின் இசை மீண்டும் முழு வீச்சுடன் எழுந்தது.
விண் அதிர்ந்து வானில் நட்சத்திரங்கள் அனைத்தும் சிறிதும் பெரிதுமான மணிகளாக மாறி தங்களுக்குள் உரையாடிக்கொள்வது போன்ற இசை. அதனுடன் காற்றைக் கிழித்து எழும் அந்த சூலிங் மூங்கில் குழல், மார்பில் வண்டு போல் குடைந்து செல்லும் அதன் இசை எல்லா மணியோசையின் மீதும் துள்ளி துள்ளி, எந்த ராக கட்டுமானத்துக்குள்ளும் சிக்காத பித்துடன் எழுந்து விண்மீண்கள் இடையே பாயும் எரிக் கல்லை போல ஆடியது. இசையின் மீது தாழ்ந்த குரலில் சில பெண்கள் ராஜமங்களா பாடத் தொடங்கினர். சற்று தயங்கி பின் ஆண் குரல்களும் அவர்களுடன் இணைந்து கொண்டன. சூலிங் குழலும், பெண் குரல்களும், ஆண் குரல்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று முயங்கி ஆழ்கடலின் கருநீல சிற்றலைகளாக எழுந்து எழுந்து விழுந்தன. ஒரு கட்டத்தில் அவையெல்லாம் ஒன்றாகப் பின்னி பின்னி ஒற்றை ஓசை பரப்பாக மாறி இந்த உலகத்தை மொத்தமாகத் தழுவி இறுக்கிக் கொண்டது போல தோன்றியது. பல்லாயிரம் ஊண் துண்டுகளென வெடித்துச் சிதற விழையும் இந்தப் பூமிப்பந்து, அதை அழுத்திப் பிடித்து வைத்திருக்கும் வானின் கைகளென அந்த இசை. எனக்கு மீண்டும் ஒரு முறை மயக்கம் வர உடலெல்லாம் வியர்த்து தளர்ந்தது. கால்கள் குழைந்து என்னால் நிற்க முடியவில்லை. கைகளை ஊன்றி தரையில் அமர்ந்துவிட்டேன்.
சற்று நேரத்தில் மாரிட்ஜானின் தங்கை கண்ணீருடன் கொல்லைப்புரமாக வெளியே வந்தார். அவருக்கு இருளில் நாங்கள் அங்கிருப்பது தெரியவில்லை. வீட்டின் முன்னால் அந்த ஜீப் புறப்படுவது கேட்டது. நானும் சுர்யபுத்ரோவும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் பார்த்தோம். நாங்கள் மெல்ல அங்கிருந்து அசைய முற்பட அவர் எங்களை அடையாளம் கண்டு சட்டென்று அழுகையை அடக்கிக் கொண்டு “தயாரிப்புகள் தொடங்கி விட்டதா?” எனக் கேட்டார். நான் சற்று சுதாரித்து எழுந்து கொண்டு “தேங்காய்களை எடுக்க வந்தோம்,” என்று சொன்னேன். அவர் பத்தாயத்தைக் கை காட்டி, “அதிக நேரம் இங்கு செலவிட வேண்டாம், தயவுசெய்து சீக்கிரம் கிளம்பிவிடுங்கள்,” என்று எச்சரித்தார்.
அந்த இசையின் பின்னணியில் அவருடைய பேச்சும் அசைவும் எல்லாம் காலத்துக்கு முந்தையதாக, முன்பு எப்போதோ பேசி ஒத்திகைப் பார்த்தது போலிருந்தது. நாங்கள் பத்தாயத்துக்குச் சென்று தேங்காய்களை எடுத்துக் கொண்டு வருவதற்குள் அவர் மறைந்து விட்டிருந்தார். வரும் வழியில் பின்னால் மெராப்பி வானின் இருண்ட நீலத்தின் பின்புலத்தில் ஒரு சாம்பல் நிறப் பூதம் போல எழுந்து நின்றது. பல நூறு அடிகள் எழுந்த அதன் புகைச்சுழல் மெல்ல மெல்ல கரிய மேகங்களில் மை போல கலந்தது. அதன் உச்சியில் இப்போது நெருப்பின் தீற்றல்கள் இன்னும் தெளிவாகத் தோன்றி மறைந்தன. அதில் புகைபடலம் ஒரு மாபெரும் புன்னகைக்கும் முகம் போன்ற பிம்பத்தைக் காட்டி, பின் இருளுக்குள் மறைந்து கொண்டது. ஏதோ அமானுஷ்யமான ஒர் உணர்வு பற்றிக்கொள்ள நாங்கள் விரைந்து நடந்து சமையற்கூடத்துக்கு வந்து சேர்ந்தோம்.
வெகுநேரமாக எங்களைக் காணாமல் விரகுணா பொறுமையிழந்திருந்தார். “எங்கே நின்றீர்கள். பூமி அதிர்ந்தது தெரியவில்லையா? சீக்கிரம் நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும், வேலைகளை ஆரம்பியுங்கள்.”
நாங்கள் தேங்காய்களை ஒவ்வொன்றாக உரித்து, உடைத்து, பின் எண்ணெய் மினுமினுக்கும் வெண் துருவல்களாகக் குவித்தோம். ம்பாஹ் சுரக்ஸோ பொறுமையாக வாசனை பொருட்களை வாணலியில் வறுத்து கொபெக்கில் இட்டு பொடிக்க ஆரம்பித்திருந்தார். விரகுணாவும் மூலியாவும் அப்பங்களை வேகவைத்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். செராய் புற்கள் இட்ட வாசனை அரிசியும் ஒருபுறம் வெந்து பதம் கொண்டிருந்தது. ஒரு சொல் கூட பேசிக் கொள்ளாமல் நாங்கள் கச்சிதமான ஒருங்கிணைவுடன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். எங்கள் அன்றாடத்தின் நேர்த்தியும் சகஜமும் அந்த அசாதாரணமான சூழலில் அபத்தமாக ஒருபுறம் மனதுக்குள் தோன்றிக் கொண்டிருந்தது.
எதிர்பாராத தருணத்தில் மாரிட்ஜானின் தங்கை மீண்டும் கூடத்தின் வாசலில் தோன்றினார். சுரக்ஸோ அவரிடம் ஏதோ கேட்க அவர் இல்லை என்று மட்டும் மௌனமாகத் தலையசைத்தார். ம்பாஹ் சுரக்ஸோ அவருக்குத் தாழ்ந்த குரலில் சமாதானம் சொல்ல அவர் எதுவும் சொல்லாமல் தலைகுனிந்து அமைதியாகக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். பின் எதையோ சொல்ல வந்து சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினார்.
“இங்கு எல்லாருக்கும் பைத்தியம் பிடித்திருக்கிறது சுரக்ஸோ. என்ன சொல்ல, இறைவனின் ஆணைப்படி நடக்கட்டும்.”
அதைக் கூறியவுடனேயே அவர் சற்று விடுதலை அடைந்தது போல தோன்றியது. சிறிது நேரம் சமையலைப் பார்வையிட்டபடி சுற்றி வந்தவர், பின்னர் ஒரு பெரிய தட்டு நிறைய அப்பங்களை அடுக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். இப்போதும் அதே எண்ணம் என் உள்ளுக்குள் எழுந்தது. அவருடைய செய்கைகளில் எல்லாம் எப்போதோ முன்னரே தீர்மானிக்கப்பட்டது போன்ற ஒரு உறுதி இருந்தது. உண்மையிலேயே அவர் மாரிட்ஜான் மீது அதிருப்தி கொண்டிருந்தாரா என்று என்னால் சொல்ல முடியவில்லை.
ஜோக்ஜகார்த்தாவின் க்ராட்டோன் அரண்மனையிலிருந்து ஸ்ரீ சுல்தானின் தூதுவர்களாக வந்திருந்த காரியகர்த்தாக்களை மாரிட்ஜான் இம்முறையும் திருப்பி அனுப்பிவிட்டிருந்தார். அவரைக் கினரெஜோவில் இருந்து இறங்கி பாதுகாப்பான பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்த சுல்தான் பத்தாம் ஹமெங்குபுவனாவை அவர் செவிமடுக்கவில்லை. தன்னை இப்பதவிக்கு நியமித்தவரே நேரில் வந்து சொல்லட்டும் என்று மாரிட்ஜான் அரண்மனை தூதுவர்களுக்குத் தீர்க்கமாகப் பதில் சொல்லி அனுப்பினார். ஆனால் மாரிட்ஜானை நியமித்த ஒன்பதாம் சுல்தான் ஹமெங்குபுவனா இறந்து இப்போது பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
தற்போதைய சுல்தானின் அதிகாரத்தை ஆரம்பம் முதலே மாரிட்ஜான் ஏற்கவில்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர். மாரிட்ஜானை அவரது ஐம்பதாவது வயதில் அவர் தந்தையைத் தொடர்ந்து அடுத்த மெராப்பியின் அடுத்த பாதுகாவலனாக நியமித்தவர் மறைந்த ஒன்பதாம் சுல்தான். மெராப்பியின் அதிகாரி என்பது குறைந்தது ஏழு தலைமுறைகளாகக் கைமாறப்பட்டு வரும் பெரும் மதிப்பிற்குரிய பதவி. லபுஹான் பண்டிகையின் போது மெராப்பியின் மலைமுடிக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைத் தலைமையேற்று செய்யும் பொறுப்பு அதில் முக்கியமானது.
வருடந்தோரும் க்ராட்டோன் அரண்மனையில் இருந்து லபுஹான் பண்டிகையின் பகுதியாகத் தெற்குக் கடல்களுக்கும் மெராப்பியின் எரிமலைக்கும் இரண்டு திசைகளிலாகச் சுல்தானின் காணிக்கையாக அப்பங்களும் மலர்களும் தங்கச் சரிகை கொண்டு நெய்த ஆடைகளும் மற்ற பரிசு பொருட்களும் அனுப்பப்படும். தெற்குக் கடல்களின் ஆழிப்பேரலைகளுக்கும் மெராப்பியின் நெருப்பு மழைக்குமான சமநிலையைப் பேணி மாத்ர தேசத்தை நிலைநிறுத்துவதே சுல்தானின் கடமைகளில் தலையாயது. கடலாழத்தில் குடியிருக்கும் தெற்குக் கடல்களின் அரசியான ந்யாய் ரோரோ கிடூல் எனும் அரசி சுல்தானின் மற்றுமொரு மனைவி என்பது மாதரத்தின் ஐதிகம். கணவனைப் பிரிந்திருக்கும் தேவி ரோரோ கிடூலுக்குக் கூடுதலாகச் சுல்தானின் நகங்களும் முடியும் நினைவாக கொண்டு செல்லப்படும். மெராப்பியைப் பாதுகாக்கும் கியை சாபு ஜகத் என்னும் ராட்சத காவல் தேவனுக்கு அதே போல காணிக்கைகளை மலை மீது கொண்டு சென்று படைத்து ஆற்றுப்படுத்துவர். பண்டைய காலங்களில் மெராப்பியின் கொதிக்கும் எரிவாயின் விளிம்புக்கே சென்று அதை அளித்து வந்தனர். பின்னர் எண்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பெரு நிகழ்வுக்கு பின் அந்த வழக்கம் கைவிடப்பட்டது. இப்போது மலையின் ஏழு நிலைகளில் மூன்றாம் நிலையைக் கடந்தே மனிதர்கள் யாரும் செல்வதில்லை. மாரிட்ஜான் மட்டுமே அதற்குப் பின் மெராப்பியின் உச்சி வரை சென்று வந்திருக்கிறார் என்று சொல்வார்கள்.
மாரிட்ஜானுக்கும் மெராப்பிக்கும் ஆன உறவு ஆழமானது. மலையில் அவர் ஏறும்போதெல்லாம் முற்றிலும் அமைதியாகிவிடுவார். மலையும் அவரும் வேறுவேறல்ல என்று அப்போது தோன்றும் என அவரைத் தன் சிறு வயதில் அருகில் கண்ட என் அம்மா கூறுவார். மெராப்பியுடன் கனவுகள் வழியாக உரையாடும் ஆற்றல் அவருக்கு உள்ளதாக நாட்டு மக்களால் நம்பப்பட்டது. நான்கு வருடங்களுக்கு முன் மெராப்பி மலை சினந்து எழுந்தபோது மாரிட்ஜான் மக்களிடம் “யாரும் பயப்பட வேண்டியதில்லை, இது வெறும் மெராப்பியின் இருமல் தான்,” என்று அறிவித்தார். மறுபுறம் சுல்தான் மக்களிடம் நிலவியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கையை மதித்து பாதுகாப்பாக இறங்கி வருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் மாரிட்ஜானின் பேச்சைக் கேட்டு மலைசரிவுகளிலேயே தங்கள் கிராமங்களில் தங்கிவிட்டனர்.
அந்தச் சமயம் எழுந்த உயர்வெப்ப சாம்பல் புயலில் கிட்டத்தட்ட நாற்பது பேர் வரை இறந்தனர். சாம்பல் புயலை மலையின் அடிவாரத்தில் எதிர்கொண்ட மாரிட்ஜான், உடலெல்லாம் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தார். உடல் முழுவதும் தோல் வெந்து சுருங்கிய நிலையில் கினெரெஜோவுக்கு நடந்தே வந்த அவரது புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் அதிர்வுகளைக் கிளப்பியது. ஆறு மாதம் மருத்துவமனையில் கடும் சிகிச்சை பெற்று அவர் மீண்டு வந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பின் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு பெரும் வீரக் கதாநாயகன் என்றானார். நாங்கள் புராணங்களில் மட்டுமே கேட்டு வளர்ந்த வீர யுகத்தின் பிரதிநிதியாக அவர் தோன்றினார். எதிர்தரப்பாக சுல்தான் தன் கடமைகளையும் பொறுப்புகளையும் கைவிட்டு நவீன யுகத்துக்கு மரபைப் பலிகொடுத்த துரோகியாகப் பார்க்கப்பட்டார்.
சுல்தான் வெளிப்படையாகவே நாற்பது பேரின் இறப்புக்கு மாரிட்ஜானின் அகங்காரமே காரணம் என்று தன் அரண்மனை பிரசங்கத்தில் குற்றம் சாட்டினார். மாரிட்ஜான் அதற்கு “ஜோக்ஜகார்த்தாவின் புனித நகரை நட்சத்திர விடுதிகளாகவும் கடைத்தெருக்களாகவும் கட்டி வாடகைக்கு விடுபவரை நான் மாதரத்தின் சுல்தானாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை,” என்று பதிலளித்தார்.
அதன் பின் சுல்தானுக்கும் மாரிட்ஜானுக்குமான கருத்து மோதல் தான் நாட்டின் பிரதான பேசுப் பொருளாக இருந்தது. மேலும் காவல் தெய்வங்களும் கடல் தேவதைகளுமாலான மாதரத்தின் புராணங்களும் சடங்குகளும் இஸ்லாமின் பகுதியல்ல என்று ஒரு சிறு குழு அவற்றை எதிர்த்தது. அவர்கள் மறைமுகமாக சுல்தானை ஆதரித்தனர். சுல்தான் மாரிட்ஜானை, “அவர் மெராப்பியின் லபுஹான் சடங்குகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அரண்மனையின் பூசாரிதானே ஒழிய, மக்களின் பாதுகாவலனோ, மெராப்பியுடன் தெய்வங்களுடன் பேசுபவரோ அல்ல,” என்று மீண்டும் தாக்கினார். மாரிட்ஜான் தன்னை ”நான் ஜோக்ஜாவின் க்ராட்டோனுக்கு மட்டுமே கட்டுபட்டவன், அரண்மனைக்கு தான் என் விசுவாசம் சுல்தானுக்கு அல்ல,” என்று அறிவித்தார். சென்ற மூன்று லபுஹான் பண்டிகைகளின் போதும் சுல்தானும் மாரிட்ஜானும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
ம்பாஹ் மாரிட்ஜானுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டேதான் சென்றது. இந்த நிலையில் கடந்த வாரம் எரிமலை பேரிடர் தடுப்பு ஆணையம் எங்கள் எல்லாருக்கும் சைரன்கள் முழங்க மீண்டும் எச்சரிக்கைகளை ஒலித்தனர். வழக்கமான ஒத்திகை முழக்கம்தான் என்று முதலில் நினைத்தோம். ஆனால், உடனடியாக அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரிடர் தடுப்பு முகாம்களில் வந்தணையுமாறு சுல்தானின் குரலில் அறிவிப்புகள் எங்கும் முழங்கின. மாரிட்ஜான் இம்முறை அதை ஏற்றோ மறுத்தோ எதுவும் சொல்லவில்லை.
மாரிட்ஜானுக்கு இம்முறை கனவுகளில் ஏதும் காட்சிகள் தோன்றவில்லை என்ற செய்தி எப்படியோ மக்களிடம் பரவ, அவர்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் கைவிட்டு தங்கள் கிராமங்களை நீங்கினர். மாரிட்ஜான் மக்களிடம் “நாம் மெராப்பியை இப்படி கைவிடலாகாது, நாம் எதுவானாலும் இங்கிருந்து நம் விதியை ஏற்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
மக்கள் மாரிட்ஜானால் தங்களைக் காக்க முடியும் என்ற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் கிராமங்களை, வீடுகளை, வயல்களை விட்டுச் செல்வதை மாரிட்ஜான் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியாக மெராப்பியின் பத்து கிலோமீட்டர் சுற்றுவட்டத்துக்குள் மாரிட்ஜானும் அவர் குடும்பத்தில் சிலரும் மட்டுமே எஞ்சினர்.
மெராப்பியின் பேராபத்து வளையத்தில் இருந்து பொது மக்களை முற்றிலுமாக அப்புறப்படுத்தி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பின் இன்று மாரிட்ஜானின் வீட்டிலிருந்து எங்களுக்கு விருந்து சமைப்பதற்கான அழைப்பு வந்தது. அதிகாலை மாரிட்ஜானின் இல்லப் பணியாளர் ஒருவர் ரகசியமாக வந்து முகாமில் அதை சொல்லிவிட்டு போனார். முதலில் விரகுணா மட்டுமே செல்வதாகவே முடிவெடுத்திருந்தார். வேறு யாரும் வரத் தேவையில்லை என்று அவர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். பின் ம்பாஹ் சுரக்ஸோவும் மூலியாவும் உடன் செல்வதாக உறுதியாக முடிவெடுத்தனர். மாரிட்ஜானைக் கைவிட்டு வந்தது அங்கே முகாமில் எங்கள் எல்லோருக்கும் ஏதோ குற்றவுணர்வை அளித்திருந்தது தெரிந்தது. நான் ம்பாஹ் மரிட்ஜான் மீதான இறந்து போன என் அம்மாவின் விசுவாசத்திற்காக உடன் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஏனோ அம்மாவே என்னை அனுப்பி வைப்பது போல உணர்ந்தேன். எவ்வளவு கூறியும் சுர்யபுத்ரோவும் ஆவலின் பேரில் எங்களுடன் சேர்ந்து கொண்டான்.
புறப்படும் வரை நாங்கள் இங்கு வருவதை முற்றிலும் ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்தோம். மூலியா மட்டும் மதியம் முகாமில் இருந்து முதிர்காளை ஒன்றை ஓட்டிச் சென்று ஆற்றங்கரையில் வைத்து அறுத்துவிட்டு வந்தார். விருந்துக்குத் தேவையான இறைச்சியைத் தவிர மற்றதெல்லாம் முகாமில் பிரித்தளிக்கப்பட்டது. முகாமில் மின் விளக்குகள் இருக்கவில்லை. எனவே, மாலை ஆறு மணிக்கெல்லாம் நன்றாக இருள் சூழ்ந்ததும் காவலர்கள் அறியாமல் நாங்கள் கிளம்பினோம். முகாமில் இருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவிலேயே காட்டுப் பகுதிக்குள் நுழைந்து விட்டோம். வழியில் எங்கும் நாங்கள் டார்ச்சு விளக்கைப் பயன்படுத்தவில்லை. ரோந்து சென்ற பேரிடர் தடுப்பு ஆணைய வண்டியின் தடங்கள் காட்டின் சேற்றுப் பாதையில் குறுக்கும் மறுக்குமாக பதிந்திருந்தது. ஒருமுறை ம்பாஹ் சுரக்ஸோ வண்டியின் ஒலி கேட்டு எச்சரிக்க நாங்கள் சட்டென்று காட்டுக்குள் இறங்கி நின்றோம். க்ரேட்டானின் அரண்மனை ஜீப் எங்களைப் பின்னாலிருந்து கடந்து சென்று காட்டுப் பாதைக்குள் மறைந்தது.
மூன்று மணிநேர நடைக்குப் பின் நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம். ஆனால், எங்களுக்கு முன்னரே கமெலானின் இசைக்குழுவும் பாடகர்களும் இங்கு வந்து சேர்ந்திருந்தது ஆச்சரியத்தை அளித்தது.
நேரம் இப்போது பத்து மணியை கடந்து விட்டிருந்தது. ரெண்டாங்கிற்கு தேங்காய்ப் பாலை முழுவதுமாகத் தயாராக்கி விட்டோம். மாரிட்ஜானின் வீட்டிலேயே இருந்த பெரிய பித்தளைக் கடாயில் நாங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து கறியை ஒன்றுகூட்ட தொடங்கினோம். ஒவ்வொருவரும் ஒன்றாக சேர்ந்து சரியான அளவில் செராய் தண்டுகளும்இலவங்க பட்டைகளும் எலுமிச்சை இலைகளும் மற்ற வாசனை பொருட்களும் எண்ணெய்யில் இட்டு வரட்டிக் கொண்டே இருக்க, இறைச்சித் துண்டுகளை மூலியா ஒவ்வொன்றாக கடாயின் ஓரத்திலிருந்து எண்ணெய் தெறிக்காமல் இட்டுக் கொடுத்தார். ம்பாஹ் சுரக்ஸோ அளவு சொல்ல அதற்கு ஏற்றது போல நாங்கள் பிழிந்தெடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி அது கொதிக்க ஆரம்பித்ததும் மூடிவிட்டோம். ரெண்டாங் சமையலில் இந்தக் கட்டம் அதிகப் பட்சம் இருபது நிமிடத்தில் முடிந்துவிடும். அதன் பின் மெல்ல சூடேறும் அந்தப் பாத்திரத்தில் தேங்காய்ப்பால் கொதித்தும் குளிர்ந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி இளகி வருவதற்குத்தான் பெரும் பகுதி நேரம். இன்று நாங்கள் செய்யும் இறைச்சியின் அளவுக்கு மூன்று மணிநேரம் வரை ஆகலாம். இன்னும் பெரிய கூட்டத்துக்காக நிறைய அளவில் செய்யும்போது பதம் வருவதற்கு ஆறு மணிநேரம் வரை சென்றதுண்டு.
அடுப்பின் கனலைச் சற்று தாழ்த்திக் குறைத்துவிட்டு சுரக்ஸோ கூடத்தின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தார். மெல்ல இடை கச்சையில் இருந்து கிராம்பும் ஜாதிக்காய் கொட்டைகளும் புகையிலையும் சேர்த்து முறுக்கிய அசல் நாட்டு க்ரெடெக் ஒன்றை எடுத்து பற்றவைத்தார். நாங்கள் எல்லோரும் ஏதோ தியானத்துக்குள் செல்வது போன்று அமைதியானோம். சமையலில் கிட்டத்தட்ட சிறிய அளவிலென்றாலும் விதியை நோக்கி எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கும் தருணம் அது. கமெலானின் இசை அந்த அமைதியின் இறுக்கத்தை எண்ணெயில் தீ போல பற்றிக் கொண்டது. முடிவின்மையின் இசை அது. அப்படியென்றால் முடிவுறும் அனைத்தையும் முடித்துவைக்கும் இசை அல்லவா. எனில் அது மரணத்தின் இசையாகவே இருக்க முடியும்.
மீண்டும் ஒரு முறை பூமி அதிர்ந்தது. நான் அதை உடலில் ஊரும் ஆயிரம் கால்கள் கொண்ட பூரானைப் போல உணர்ந்து சிலிர்த்தேன். ஆனால், நாங்கள் யாரும் அதை குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேசினால் அங்கே ஏதோ விழித்துக் கொள்ளும் என்பது போல. கூடத்தில் இருந்த நூற்றாண்டு பழமையான பெரிய பித்தளை பாத்திரங்கள் சட்டென்று உயிர் கொண்டுவிட்டவைப் போல ’விம்ம்’ என்ற ஒலியுடன் அதிர்ந்தன. நாங்கள் ஐவரும் ஐந்து திசையிலென ஒருவர் கண் ஒருவர் பாராமல் அமைதியாக அமர்ந்திருந்தோம். அக்டோபர் மாத மலைக்காற்றின் குளிர் முதுகின் வியர்வையைச் சில்லிட வைக்க, முன் பக்கத்தை அடுப்புக்குக் காட்டி அருகில் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் பின்னால் சுரக்ஸோ மெல்லச் சிரிப்பதை என் முதுகில் உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தபோது அவர் கண்களில் புன்னகை தெரிந்தது. சட்டென்று ஏதோ தோன்ற நான் அவர் அருகில் சென்று அமர்ந்தேன். அவரது கண்கள் பழுப்பு நிறமாக கலங்கிப் போயிருந்தன. அதில் காலம் என்னும் பிரக்ஞையே இல்லாதது போல.
நெடுநேரம் தனக்குள் புன்னகைத்தபடி இருந்தவர், மெல்ல என்னைப் பார்த்துக் கேட்டார்.
“நீ காடுங்க் மேலதியை பார்த்திருக்கிறாயா?”
எதிர்பாராத அந்தக் கேள்வியில் நான் சற்று திகைத்து ‘இல்லை’ என்று தலையசைத்தேன்.
“எனக்கு இப்போது அவள் வாசம் வருகிறது,” என்றுவிட்டு ம்பாஹ் சுரக்ஸோ மீண்டும் அமைதியானார்.
நான் மேற்கொண்டு தொடர்வார் என்று அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவர் ஒன்றும் சொல்லாததைத் தொடர்ந்து நான் கேட்டேன். “நீங்கள் மேலதியைக் கண்டதுண்டா?”
“ஆம், பலமுறை. மிகத் தொலைவில் ஒரு அசைவாக. சிறு வயதில் நாங்கள் மெராப்பியின் மலைச்சரிவுகளில் புல் அறுக்க செல்வதுண்டு. மலைக்கு மேலே செல்ல செல்ல புற்களின் வளம் கூடும். மாடுகளுக்கு அந்தப் புல்லை அளித்தால் நல்ல கொழுப்புடன் பால் கறக்கும். மலை ஓடைகளில் வழிந்து வரும் சாம்பல் மண்ணுக்கும் ஊருக்குள் பல மடங்கு விலை உண்டு. ஒரு மூட்டை மண் ஒரு ஏக்கருக்கு போதுமானது. எங்களுக்குள் போட்டி உண்டு, யார் மலையில் அதிக உயரம் சென்று புல் அறுப்பதென்று. சாம்பல் அள்ளுவதிலும் போட்டி உண்டு. அந்தி சாய்வதற்குள் திரும்பி விட வேண்டும் என்பதே அதிக உயரம் செல்வதற்குத் தடையாக இருப்பது. சில நேரங்களில் போட்டியின் ஆர்வத்தில் நாங்கள் எல்லை கடந்து சென்று விடுவோம். அப்போது அந்தி சாயும் நேரத்தில் காற்றில் மெல்ல மல்லிகைப் பூ வாசம் எழும். ஆனால், மெராப்பியின் மலை மீது எங்கும் மல்லிகைக் கொடிகள் கிடையாது. மேலதியின் வாசம் அது.”
சுரக்ஸோ அந்த இடத்தில் நாடகியமாக நிறுத்திவிட்டு அணைந்துவிட்டிருந்த க்ரெடெக்கை மீண்டும் ஒருமுறைப் பற்ற வைத்தார். நினைவுகளை மீண்டும் மெல்ல திரட்டிக்கொள்வது போல. க்ரெடெக் சிறு பொறிகள் வெடிக்க மீண்டும் பற்றிக் கொண்டது. மபாஹ் தொடர்ந்தார்.
“இப்போது அவர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள். சிலர் இளம் வயதில், காலராவில், புரட்சியில், சிலர் முதியவர்களாகி பேரன் பேத்திகளை பெற்றெடுத்து, சிலர் நண்பர்களாக, சிலர் எதிரிகளாக. எல்லாரும். நானும் சுரக்ஸோவும் மட்டுமே இன்னும் இங்கு உயிருடன் இருக்கிறோம்.”
அவர் சுரக்ஸோ என்று குறிப்பிட்டது ம்பாஹ் மாரிட்ஜானை.
“காலம் எப்படியெல்லாமோ மாறிவிட்டது. சுரக்ஸோ எங்களை போல அல்ல, அவன் காடுங்க் மேலதியை அருகில் பார்த்தவன். அவள் கைபிடித்து மெராப்பியின் உச்சிவரை சென்றவன்.”
“அது உண்மையா? சிறு வயதில் அம்மா சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்,” நான் கேட்டேன்.
“ஆம். அன்று நான் தான் அவனுடன் சென்றிருந்தேன். எங்களுக்கு அப்போது இருபதும் இருபத்திமூன்றும் வயதிருக்கும். அன்றெல்லாம் மெராபியின் மீது மக்களுக்கு இன்னும் அதிகம் அச்சமிருந்தது. நான் பிறந்த வருடம் தான் மெராப்பி கடைசியாக எழுந்து கொண்டது. அப்போது கிளம்பிய சாம்பல் புயலில், நெருப்பு மழையில் ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நான் அருந்திய முலைப்பாலில் கூட சாம்பல் கலந்திருந்தது என்று சொல்வார்கள். சுரக்ஸோவுக்கு அப்போது மூன்று வயது. அவன் தந்தை தான் அப்போது மலையின் பாதுகாவலராக இருந்தார். தன் மக்களை காக்க முடியவில்லை என்ற துக்கத்தில் ம்பாஹ் ஹர்கோ படுத்த படுக்கையானார். அடுத்த இருபது வருடமும் அவரால் இயல்பாக நடமாட முடியவில்லை. அவர் கனவுகளில் மெராப்பியின் குரல் வருவது நின்று போனது என்று கருதினார். பெயரளவில் பாதுகாவலராக நீடித்தாலும் அவரது தம்பிதான் லபுஹான் பண்டிகையெல்லாம் முன்னின்று நடத்தினார்.”
“சுரக்ஸோவுக்கு எப்போதும் அது குறித்து வருத்தம் உண்டு. தன் குடும்பத்தின் மீது விழுந்த பழியாக அதை அவன் கருதினான். ஆனால் அவன் அதை பற்றி அதிகம் பேசுவதுமில்லை. ஒருமுறை நாங்கள் மலை மீது முடிந்தவரை ஏறிச் செல்வதாக முடிவு செய்தோம். அவனது திட்டம் என்னவென்று எனக்கு அப்போது முழுதாக தெரிந்திருக்கவில்லை. நான் அவனுடன் அடிவாரத்தில் மூன்றாம் நிலை வரை சென்றிருந்தேன். நாங்கள் ஒரு சாகசமாக அன்று இரவு அங்கேயே தங்குவதாக முடிவு செய்திருந்தோம். இளமையின் துணிச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். அன்றிரவு இருட்டியவுடன் வழக்கம் போல மல்லிகைப்பூ வாசம் காற்றில் எழுந்தது. எரிமலை வாயில் இருந்து நியாய் காடுங்க் மேலதி எழுந்து வந்து மலைச்சரிவுகளில் விளையாடும் நேரம் அது. நாங்கள் மூன்றாம் நிலையில் அமைக்கப்பட்ட சிறு குடிலில் நெருப்பு மூட்டிக் கொண்டு அமர்ந்திருந்தோம். அந்த உயரத்தில் மலைக்காற்று பனிக்கட்டியைப் போன்ற குளிருடன் குடிலுக்குள் புகுந்து நெருப்பை அணைக்க முயன்று கொண்டிருந்தது. மிகத் தொலைவில் கனவைப் போல கமெலானின் இசை மெல்ல எழத் தொடங்கியது. கூடவே மிகச் சன்னமாக ஒரு பெண் குரல் பாடுவது கேட்டது. என் வாழ்நாளில் அத்தனை இனிதான குரலையும் இசையையும் நான் கேட்டதில்லை. நாங்கள் உள்ளுக்குள் எழுந்த பயத்தை மறைக்க பேசிக் கொண்டே இருந்தோம். ஒருவரை ஒருவர் சீண்டினோம். வெளியே இசை கொஞ்சம் கொஞ்சமாக மலை சரிவெங்கும் பரவுவது கேட்டது. மேலும் மேலும் அருகிலென. எங்கள் சிரிப்பும் வேடிக்கையும் மறைந்து பதற்றம் சூழ்ந்தது. மல்லிகைப்பூவின் வாசம் இப்போது மிகத் தூலமாக அந்தக் குடிலின் சிற்றறைக்குள் புகுந்தது போல தோன்றியது.”
“ஒருகட்டத்தில் என்னால் அச்சத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சட்டென்று பதறியெழுந்து நான் அந்தச் சிறிய வாசலின் மரத்தடுப்பைத் திறக்கவும் மலைக்காற்று குடிலுக்குள் அறைந்து வீசி நாங்கள் காத்து வைத்திருந்த நெருப்பை அணைத்தது. வெளியே நிலவொளி அந்த மலைச்சரிவின் புல்வெளி மீது வெள்ளிச் சரிகையைப் போல பரவியிருந்தது. அந்தப் புல்வெளிப் பரப்பை இரண்டாக பகுத்தபடி எங்கள் குடிலில் இருந்து நீண்டு சென்ற ஒற்றையடிப் பாதையின் முடிவில் அவள் நின்றாள். அடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி எழுந்த காற்றில் அவளது கூந்தல் பல அடிகள் வானில் எழுந்து பறந்தது. மரகதப்பச்சையில் வெள்ளிச்சரிகை ஓடிய ஆடை அணிந்திருந்தாள். வெண் பளிங்கு போன்ற நிறம். சட்டென்று அவள் எங்களை நோக்கி அசாதாரணமான வேகத்தில் நெருங்கி வந்தாள். காற்றில் மிதந்து வருபவளைப் போல. அப்போது காற்றில் எழுந்த கமெலானின் முழங்கும் இசையில், நாசியை நிறைக்கும் மல்லிகைப்பூ வாசத்தில் எனக்கு ஒருகணம் மூச்சை அடைப்பது போல தோன்ற நான் நிலைகுலைந்தேன். பற்றிக்கொள்ள ஏதுமின்றி சட்டென்று மூர்ச்சையாகி பின்னால் சரிந்தேன்.”
“அதன் பின் எவ்வளவு நேரம் கடந்தது என நான் அறியவில்லை, எழுந்து பார்த்தபோது என் கீழாடை முழுவதும் சிறுநீரால் நனைந்திருந்தது. சுரக்ஸோவை எங்கும் காணவில்லை. என்னைச் சுற்றி எங்கும் தூய நிலவொளி. நான் அவன் பெயரை உரக்க அழைத்தேன். என்னையே நான் அழைத்துக் கொண்டது போல. மலைக்காற்று புல் வெளியில் அலையலையாக வீசும் சலசலப்பு மட்டுமே என்னைச் சூழ்ந்திருந்தது. உலையில் நீரைப் போல புல்வெளிப் பரப்பு கொதிப்பதைக் கண்டேன். காற்று மட்டும் ஒரு ஊளையென என் குரலுக்கு மறுகுரலாக எழுந்து உக்கிரம் கொண்டது. நான் மலையின் உச்சியை நோக்கி என் பார்வையைத் திருப்பினேன். புற்களின் வெளி முடிந்து கந்தகப் புகை உமிழும் கன்னங்கரிய மெராப்பியின் தோல் பரப்பு பார்வைக்கெட்டிய தூரம் வரை விரிந்தது. உச்சியில் அதன் கண்ணுக்குத் தெரியாத எரிவாயில் இருந்து எழுந்த புகைச் சுழல் ஒரு மாபெரும் முகம் போல புன்னகைத்தது.”
அவர் அதை சொன்னபோது என் முதுகுத்தண்டில் சொடுக்கியது போலிருந்தது. நான் சுரக்ஸோவின் முகத்தில் அடர்ந்த சுருக்கங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் சொல்லாமல் விடும் ஏதாவது ஒன்று புலப்படுமோ என்பது போல.
அவர் தொடர்ந்தார். “அன்றிரவு அலறிப்பதைத்து நான் கீழே வந்து சேர்ந்தேன். எப்படியென்று எனக்கு நினைவில்லை. பல ஆண்டுகளாக புல் அறுக்கச் சென்று வந்த அந்தப் பாதையில் என் கால்கள் தான் என்னை கொண்டு வந்து சேர்த்தன. அன்றே எனக்குக் காய்ச்சல் கண்டு நான் படுத்துவிட்டேன். மறுநாள் காலை சுரக்ஸோவை மலைச்சரிவெங்கும் ஆட்கள் தேடியலைந்தனர். எங்கும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை எனத் தேடலைக் கைவிட்டனர். இரண்டாம் நாள் முகமெல்லாம் தோல் வழண்டு, தாடியும் தலைமுடியும் எல்லாம் பொசுங்கி, பாதி கரிந்த ஆடைகளுடன் அவர் வந்து சேர்ந்தார். மாரிட்ஜான். அவர் தன்னை அதன் பின் அப்படித்தான் அழைத்துக் கொண்டார். ஊர்மக்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. ‘நான் மெராப்பியின் எரிவாயை தரிசித்து வந்தேன்’ என்பது தான் எல்லாவற்றுக்கும் அவரது பதிலாக இருந்தது. அடுத்த வருடம் தொட்டு அவர்தான் லாபுஹானின் சடங்குகளை நிகழ்த்தினார். பின் ம்பாஹ் ஹர்கோ மரணித்தபோது ஒன்பதாம் சுல்தான் ஹமெங்குபுவனா நேரில் வந்து கண்டு மாரிட்ஜானை மெராப்பியின் பாதுகாவலனாக நியமித்தார். அன்றிலிருந்து மாரிட்ஜானின் எந்தச் சொல்லும் இதுவரை பிழைத்ததில்லை.”
ம்பாஹ் சுரக்ஸோ எழுந்து கொண்டார். அரையில் கட்டியிருந்த சாரோங்கை அவிழ்த்து உதறி இறுக்கி கட்டிக் கொண்டு ரெண்டாங் கொதிக்கும் கடாய் பாத்திரத்தின் மூடியை மெல்ல கவனமாகச் சரித்து விலக்கினார். கூடமெங்கும் அதன் வாசம் எழுந்து பரவியது. மெல்ல ஒரு நடன அசைவைப் போல சுரக்ஸோ கரண்டியால் அதை இளக்கி விடத் தொடங்கினார். மற்றவர்களும் அதுவரை அவரது கதையை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்களாக எழுந்து தத்தம் வேலைகளில் இறங்கினர். நான் மெல்ல கூடத்திலிருந்து இறங்கி வெளியே நடந்தேன்.
தலைக்கு மேல் வின்மீன்கள் அனைத்தும் பல லட்சக் கண்களாக மாறி நடக்கப்போகும் எதையோ பேரார்வத்துடன் பார்த்து நின்றன. இன்று, ஆம் இன்றுதான். எனக்கு அது உறுதியாகத் தோன்றிக் கொண்டிருந்தது. ஒரு மாபெரும் திருவிழாவில் பங்கெடுக்கும் பரவசத்துடன் அதை உணர்ந்தேன்.
வெளியே எத்தனை நேரம் அமர்ந்திருந்தேன் என்று தெரியாது. மாரிட்ஜானின் வீட்டிலிருந்து எழுந்த குரல்கள் ஏதுமற்ற கமெலானின் இசையும், மெராப்பியில் இருந்து வீசும் குளிர்ந்த மலைக்காற்றும், தெளிந்த வானமும் என்னைக் கால நேரத்தை எல்லாம் கடந்த எங்கோ கொண்டு சென்று மீட்டு வந்தது. மலை இப்போது மிக அருகில் வந்து விட்டது போல தோன்றியது. கைதோடும் தொலைவில் அதன் கொதிக்கும் எரி உலை.
கமெலானின் இசை மெல்ல ஓர் அலை போல சரிந்து ஓய்ந்தபோது நான் மீண்டும் சமையற்கூடத்துக்குள் நுழைந்தேன். மாரிட்ஜானின் தங்கை சிரித்தபடி ம்பாஹ் சுரக்ஸோவுடன் பேசிக் கொண்டு நின்றிருந்தார். அவர் முகத்தில் முன்பிருந்த கவலைகள் ஏதும் தென்படவில்லை. கூந்தலை நன்றாக சீவி பெரிய பஞ்சு வைத்த ‘கொண்டெ’ ஆக அணிந்திருந்தார். உதட்டில் செஞ்சாயம் பூசி, கண்களில் மையிட்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் வாஞ்சையுடன் புன்னகைத்தார். சுர்யபுத்ரோ அவருக்குப் பணிவுடன் செராய் தண்டும் எலுமிச்சை இலையும் இட்டு காய்ச்சிய இன்னீரை அருந்த அளித்தான். அவரது மூத்த மகனும் மாரிட்ஜானின் காரியஸ்தருமான சுரதேவா கைகளைக் கட்டிக் கொண்டு பின்னால் நின்று கொண்டிருந்தார்.
ரெண்டாங் குழம்பு கிட்டத்தட்ட வற்றிக் குறுகிவிட்டது. இன்னும் சற்று நேரம் வெந்தால் தேங்காய்ப் பாலில் எண்ணெய் பிரியத் தொடங்கும். அப்போது தனியாகக் கருக வறுத்து எடுத்த தேங்காய் துருவல்களை எரிமலைக்கல்லில் செய்த கோபெக்கும் உலெக்கானும் கொண்டு வெண்ணெய் போல சாந்தாக அரைத்துக் கடாயில் சேர்க்க வேண்டும்.
சுர்யபுத்ரோவுடன் நானும் இணைந்து கொண்டேன். மெராப்பியிலிருந்து உருகி வழிந்து உரைந்த அந்தப் பெரிய காலப் பழக்கம் கொண்ட கோபெக்கில் நாங்கள் இரண்டு பேருமாக சேர்ந்து வருத்த தேங்காய் துருவலை அரைத்தெடுத்தோம். விரகுணாவும் மூலியாவும் வடித்து கவிழ்த்து, ஓலைகளால் மூடிவைக்கப்பட்டிருந்த வாசனை அரிசிச்சோறை இரண்டு அகப்பைகள் கொண்டு வெட்டியெடுத்து வெண்களிமண் தட்டுகளில் ஒவ்வொன்றாக விளம்ப, இரு பணியாளர்கள் அவற்றை வட்ட வரிசைகளாக இரு பெரிய தாம்பாளங்களில் அடுக்கிக் கொண்டிருந்தனர். மாரிட்ஜானின் தங்கையும் அவர் மகன் சுரதேவாவும் குனிந்து வணங்கி வாழ்த்திவிட்டு விடைபெற்று சென்றார்கள். நாங்கள் சாந்தை அரைத்து முடித்துவிட்டோம். ம்பாஹ் சுரக்ஸோ கண் காட்ட அதை எடுத்துச் சென்று கடாயில் கொட்டிக் கவிழ்த்தோம். இறைச்சியின் முறுகிய வாசனை எழுந்து நாவில் எச்சில் ஊறியது. சுரக்ஸோ தேங்காய்ச் சாந்துடன் சேர்த்து அவற்றை கிண்டி முடிக்க, அதுவரை அமைதியாக இருந்த வீட்டிலிருந்து ஒரு தனித்த குரல் எழுந்தது.
சற்றே வயோதிகத்தின் நடுக்கம் கொண்ட கம்பீரமான ஆண் குரல். எந்த இசைக்கருவியும் துணையில்லாமல் கணீரென்று அந்த இரவின் சாரமாக அது எழுந்தது. அதன் வரிகள் எனக்குப் புரியவில்லை. என்றோ மண் மறைந்த பழங்காலத்து காவி மொழியில் அமைந்தவை அவை. ஒருகணம் காலம் ஸ்தம்பித்தது போல அனைத்தும் அசைவுகளற்று சாரமாக மட்டும் எஞ்சிவிட்டது போல தோன்றியது. அந்தக் குரலில் ஓர் ஆழ்ந்த இரங்கல் இருந்தது. நூற்றாண்டுகளின் வலியும் வேதனையும் இருந்தது. ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக அது எழுந்து கம்பீரமாக நின்று இறைவனின் கண்களை நேராக சந்தித்தது. அது ம்பாஹ் மாரிட்ஜானின் குரல்.
மெராப்பியின் தெய்வங்களுக்கான அந்தப் பிராத்தனை முடியும் வரை நாங்கள் யாரும் அசையவில்லை. எம்பூ ராமா, எம்பூ பெர்மாடி, நியாய் காடுங்க் மேலதி, கியை சாபு ஜகத், மறைந்த பெத்ருக்கள் என அனைவரிடமும் குடிகளைக் காக்க அவர் வேண்டிக் கொண்டார். மனம் கனிந்த அந்தப் பிரார்த்தனையின் முடிவில் மாபெரும் கோங்க் ஒன்று வீடும் கூடமும் எல்லாம் அதிரும் வண்ணம் ஒலித்தது.
அந்த இரண்டு பணியாளர்களும் அத்தருணத்திற்காகவே காத்திருந்தது போல சுரக்ஸோவிடம் வந்து முறையாக வணங்கி நின்றனர். வினோதமாக அவர்கள் இருவரும் எவர் கண்களையும் சந்தித்துக்கொள்ளவில்லை என்பதைக் கவனித்தேன். ஏதோ புராதான காலத்தில் உரைந்துவிட்ட ராஜ சேவகர்களைப் போல இருந்தது அவர்களது ஆடையும் உடல்மொழியும். ம்பாஹ் சுரக்ஸோ கடைசியாக ஒருமுறை ரெண்டாங்கை மொத்தமாக சேர்த்துக் கிண்டிவிட்டு, கைகாட்ட அவர்கள் கடாயிலிருந்து இறைச்சியை ஒவ்வொரு துண்டாக எடுத்து வாசனை சோற்றுடன் தட்டில் வைத்து அடுக்கி இரண்டு தாம்பாளங்களையும் உள்ளே எடுத்துச் சென்றனர். நள்ளிரவின் விருந்து துவங்கியது.
எங்கள் பணி அத்துடன் முடிவுக்கு வந்தது. விரகுணா ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுச் சொன்னார் “மக்களே, இனி நாம் இங்கு இருக்க வேண்டியதில்லை. ம்பாஹ் மாரிட்ஜானின் தங்கை என்னிடம் இங்கு வரும் முன்னரே கூறி விட்டார். நம் பணி முடிந்ததும் நாம் கிளம்பிவிட வேண்டும் என்று. மாரிட்ஜானின் வேண்டுகோள் அது”
நாங்கள் மூவரும் அவரையே பார்த்து நின்றோம். சுரக்ஸோ மட்டும் தள்ளாடும் நடையுடன் மெல்ல கொல்லைப்புறமாக வெளியே நடந்தார். உணவைச் சமைத்து முடித்ததும் ம்பாஹ் சுரக்ஸோவில் கூடும் வெறுமையை நான் பல முறை கண்டிருக்கிறேன். அவர் தான் சமைத்ததைச் சுவைத்துக்கூட பார்ப்பதில்லை.
விரகுணா மீண்டும் ஒரு பெருமூச்சுடன் சொன்னார் “இங்கு நாம் எதுவும் செய்வதற்கில்லை. ம்பாஹ் மாரிட்ஜானின் இந்த முடிவு அவருடையது. அவரை இறைவன் ஆசிர்வதிப்பார் என நம்புகிறேன். நாம் அனைவரும் பிரார்த்திப்போம். மெராப்பியின் சினத்தில் இருந்து அவராலேயே நம்மை காக்க முடியும்.”
விரகுணா மேற்கொண்டு எதையோ சொல்ல வருவது போல சற்று நேரம் கீழே தரையை வெறித்தபடி நின்றிருந்தார். நாங்கள் அவர் வார்த்தைகளுக்காக அமைதியாகக் காத்திருந்தோம்.
சட்டென்று விழித்துக் கொண்டவர் போல “ம்ம்… கிளம்புவோம். இன்ஷால்லா.” என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.
அந்நேரம் உள்ளிருந்து பணியாளர் ஒருவர் குனிந்தபடி பணிவுடன் எங்களை நெருங்கினார். சற்றே முதிர்ந்தவர் போல தெரிந்தவர் நேராக விரகுணாவை அணுகி ரகசியமாக ஏதோ சொல்ல, விரகுணா நிச்சயமாக என்பது போல முன்னால் குனிந்து வணங்கினார். முதிர்ந்தவர் மாரிட்ஜானின் அணுக்க சேவகராக இருக்க வேண்டும். அவரது உடல்மொழியில் பணிவையும் மீறி கண்ணியமும் அது தரும் அதிகாரமும் இருந்தது. அவர் எங்களை நோக்கி லேசாக புன்னகைத்து “தெரிமா கஸி!” என்று நன்றி கூறி நீங்கினார்.
விரகுணா என்னை அருகழைத்து ம்பாஹ் சுரக்ஸோவைக் கூட்டிவரச் சொன்னார். “ம்பாஹ் மாரிட்ஜான் சுரக்ஸோவை சந்திக்க விரும்புகிறார், நீ தான் அவரை மாரிட்ஜானிடம் அழைத்துச் செல்ல வேண்டும்,” என்றார்.
எனக்குக் கொஞ்ச நேரம் அவர் சொல்வது விளங்கவில்லை. ம்பாஹ் மாரிட்ஜான் எப்படி எங்களை அழைக்க முடியும். நான் விரகுணாவை விழித்துப் பார்த்தேன். அவர் என் தோளைப் பற்றி உலுக்கி “தாமதிக்க வேண்டாம் எக்கோ. அவர் காத்திருக்கிறார்.”
சுரக்ஸோவைத் தேடி நான் அவசரமாக வெளியே ஓடினேன். என் கால்கள் தடுமாறின. உடல் ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சித் தீவிரத்தில் மயிர்கூச்செரிந்தது. கொல்லைப்புரத்தின் அந்த மாபெரும் அத்தி மரத்தின் வேர்புடைப்பில் சுரக்ஸோ மெராப்பியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அதன் புகை சுழல் இப்போது பன்மடங்காக வளர்ந்திருந்தது. அதில் எழுந்த நெருப்பின் தீற்றல்கள் பல அடிகள் காற்றில் சீறி ஒட்டுமொத்த கீழை வானையும் ஒளியூட்டி ஒளியூட்டி அடங்கியது. நான் அருகில் சென்று சுரக்ஸோவை அழைத்தேன்.
“ம்பாஹ்!”
அவர் கனவில் இருந்து விழித்துக் கொண்டவர் போல என்னை அடையாளம் காணாது விழித்தார்.
“ம்பாஹ் மாரிட்ஜான் உங்களை காண வேண்டும் என்கிறார்.”
சுரக்ஸோ மீண்டும் மெராப்பியை ஒரு கணம் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னார். “எனக்குத் தெரியும், எல்லாம் அதன்படி தான் நடக்கிறது.”
கூடத்துக்குத் திரும்பிச்செல்லும்போது அவர் சொன்னார். “அவள் வாசம் இப்போது காற்றில் நன்றாகவே வீசுகின்றது. இத்தனை தாழ்வாக மலைமுடியை விட்டு அவள் இறங்கி வருவதில்லை. இது ஆசிர்வதிக்கப்பட்ட நாள்.”
ம்பாஹ் மாரிட்ஜானை நான் இதற்கு முன் லபுஹான் பண்டிகையின்போது தொலைவில் கண்டதுண்டு. நான் பிறந்த மூன்றாம் நாள் அவர் என்னைத் தொட்டு ஆசிர்வாதம் அளித்திருகிறார். கினெரெஜோவை ஒட்டிய மலை கிராமங்களில் பிறந்த பெரும்பாலான குழந்தைகள் அவரிடம் ஆசி பெற்றவையாகத்தான் இருக்கும். அவரது தொடுகை அனைத்து வாதைகளையும் நீக்கும் என மக்கள் நினைத்தார்கள். மெராப்பியின் ஆவிகள் அவரில் இறங்கி ஆசி வழங்குவதாகவே அவர்களது நம்பிக்கை. மற்றபடி அவரை எளிமையாக வீட்டு வேலைகள் செய்பவராக, தோட்டத்து ரோஜாச் செடிகளைப் பராமரிப்பவராக, மாடுகளுக்குப் புல் அறுத்து அளிப்பவராகக் கண்டவர்கள் பலர் உண்டு. வயதாகும்தோறும் அவரது நடமாட்டம் சற்று குறைந்தது. கமெலான் இசையும் வயாங் நாடகங்களும் பிரார்த்தனையும் என்றானது அவரது வாழ்க்கை.
மாரிட்ஜானைக் காண அழைத்துச் செல்கையில் ம்பாஹ் சுரக்ஸோவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. நடையில் வயோதிகத்தின் சிறு கவனத்துடன் குழந்தையைப் போல சுற்றும் வேடிக்கை பார்த்தபடி என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார். இருநூறு வருடங்கள் பழக்கம் கொண்ட மாரிட்ஜானின் வீடு ஒரு பழைய அரண்மனையை ஒத்திருந்தது. பண்டைய ‘பட்டிக்’ பொன்மெழுகு கொண்டு செய்த அலங்கார தோரண நிலைப்படியைக் கடந்து நாங்கள் உள்ளே சென்றோம். உள்ளே நுழைந்ததும் ஒரு மாபெரும் இசைக்கூடம் எங்களை வரவேற்றது. அதில் ஒரு பாதி முழுக்க கமெலான் இசைக்கருவிகள் விஸ்தாரமாக அடுக்கப்பட்டிருந்தன. காங்க்ஸாவும் கம்பாங்கும் கெண்டாங்களும் எல்லாம் கச்சிதமாக தங்கச் சரிகையில் செய்த உறைகள் போட்டு மூடப்பட்டிருந்தன. சற்றும் அசையாமல் தொங்கிய மாபெரும் கோங்கள் என்னை நிலைகொள்ளாமல் செய்தன. உள்ளத்தில் அதிர்ந்தது அவற்றின் ஓசையின்மை. சற்று முன் வரை அக்கருவிகளில் இருந்து தான் பிரபஞ்சத்தை நிறைக்கும் அத்தனை மகத்தான இசை எழுந்தது என்று நம்ப முடியவில்லை. முக்கியமாக அக்கருவிகளை வாசித்த கலைஞர்களின் எந்தத் தடையமும் அங்கு காண முடியவில்லை. புராதானமான அந்தப் பெரிய இசைகூடத்தின் முன்னால் சில கணங்கள் பிரம்மித்து நின்ற எங்களை அந்த முதிய பணியாளர் அருகில் வந்து சத்தமில்லாமல் வணங்கி வரவேற்றார்.
“என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்,” என மெல்லக் கூறிவிட்டு வேகமாகச் சிற்றடிகள் வைத்து ஓசையெழாத வண்ணம் எங்கள் முன்னால் நடந்தார்.
நாங்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று இசைக்கூடத்தின் வலதுபுறமாக இருந்த அந்தச் சிற்றறையின் வாயிலை அடைந்தோம். அவர் அதை மெல்லத் திறந்து எங்களை உள்ளே செல்லுமாறு சமிக்ஞை செய்தார். மெல்ல தயங்கி உள்ளே நுழைந்ததுமே மாரிட்ஜானின் அதிரும் குரல் ஒலித்தது.
“சுரக்ஸோ!” சுவர்கள் அதிரும்படி அவர் சிரித்தார்.
“மாரிட்ஜான்!” என்றபடி சற்றே தயங்கிய ம்பாஹ் சுரக்ஸோவை எழுந்து வந்து தோள் தழுவி அணைத்துக் கொண்டார். அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாதிருந்த சுரக்ஸோவின் முகம் நடுங்கியபடி அவர் தோள்களில் சென்று படிந்தது. பாதி பற்கள் இழந்திருந்த அவர் வாயில் வார்த்தைகள் குழறி விநோதமாக ஒலித்தன. இறுக மூடிய கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. மாரிட்ஜான் அவரை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டு உரக்க ஆற்றுப்படுத்தினார்.
“என்னை காண நீ வரமாட்டாய் அல்லவா? எவ்வளவு அழைத்தும் வரமாட்டாய் அல்லவா? திருடா!” அவர் முகம் புன்னகையில் விரிந்திருந்தது, துக்கத்தின் எந்த ரேகையும் படியாத அழகிய புன்னகை.
சுரக்ஸோவை அணைத்தபடியே என்னைப் பார்த்து தலையசைத்து வணங்கினார். நான் என் முழுவுடலால் குனிந்து பதில் வணக்கம் செலுத்தினேன்.
எங்களை எஜமானர்களுக்குச் செய்யும் முறைமைகளுடன் அமரச் செய்து விட்டு அவரும் உடன் அமர்ந்து கொண்டார். மூத்த பணியாளரை அழைத்து
“லாங்கெங், எனக்கும் என் நண்பர்களுக்கும் சற்று உணவு கிடைக்குமா?” என மூவருக்கும் உணவு பரிமாறும்படி பணித்தார்.
“நிச்சயமாக ம்பாஹ் மாரிட்ஜான். இதோ வருகிறோம்,” லாங்கெங் ஒரு நடன அசைவைப் போல வணக்கம் செலுத்தி விடைபெற்றார்.
அந்தச் சூழலும் அவர்களது அசைவுகளும் எல்லாம் சேர்ந்து எனக்கு இவையெல்லாம் உண்மையில் நடக்கின்றனவா என்ற சந்தேகத்தை மனதின் ஆழத்தில் தோற்றுவித்தது. அதே நேரம் இவை எல்லாம் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்தவைப் போலவும் தோன்றியது.
ரெண்டாங்கும் வாசனை அரிசியும் அப்பங்களும் இன்னீரும் வந்து சேர்ந்தன. ஒவ்வொன்றும் முறையாகப் பரிமாறப்பட நாங்கள் இறைவனின் பெயரால் வணங்கி உண்ணத் துவங்கினோம்.
ரெண்டாங்கை சுவைத்த மாரிட்ஜான் சத்தமாக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சுரக்ஸோ மெல்ல புன்னகைத்தார். “இன்று சுவை மோசமில்லை.”
மாரிட்ஜான் கைகளை உயர்த்தி ”இல்லை. அற்புதம்… அற்புதம்…” என்று கூவினார்.
சுரக்ஸோ சட்டென்று உணர்ச்சி அடைந்தவராக “மாரிட்ஜான், நீ நம் மக்களுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு நீதான்…”
மாரிட்ஜான் மீண்டும் அழகாகப் புன்னகைத்தார். சற்று நேர அமைதிக்குப்பின் தணிந்த குரலில் அவர் பேசத் தொடங்கினார்.
“அன்பு சுரக்ஸோ, இந்த இறைச்சியைச் சுவைத்தாய் அல்லவா, எத்தனை மென்மை, எவ்வளவு சுவை? சமைத்த உனக்குத் தெரியும் அவற்றை அதற்களித்தது எது என்று? அந்த நெருப்புதானே.”
சுரக்ஸோ ஒன்றும் சொல்லவில்லை. மாரிட்ஜான் தொடர்ந்தார்.
“இறைவனது கொடை அது. அவன் படைப்பின் சாரம் அந்த நெருப்பு. நாம் அதையெல்லாம் விடுத்து சாம்பலை அல்லவா புசிக்கிறோம். சாம்பலில் இல்லங்கள் அமைத்து, சாம்பலில் பெற்றுப் பெருகி வாழ்ந்து மடிகிறோம். இங்கிருக்கும் இந்த அரண்மனை, சுல்தானின் அதிகாரம், இந்தத் தேசமே கூட வெறும் சாம்பல்தான். இந்த மாபெரும் நெருப்புக் கோளத்தின் மீது படிந்த சாம்பல் படலம். இந்தக் கலையும் பண்பாடும் காவியமும் எல்லாம் அதன் மீது வரைந்து வரைந்து அழிக்கப்படும் தீற்றல்கள்.”
“என் இருபத்துமூன்று வயதில் நான் கண்ட அந்தக் காட்சியை ஒரு போதும் மறக்கமாட்டேன். அந்த இரவு நான் மெராப்பியின் ஊற்றுமுகத்தைக் கண்டேன். மேலதி என்னை அங்கு கைபிடித்து அழைத்துச் சென்றாள். என்னை அதன் வாசலில் நிறுத்தி உள்ளே காண்பித்தாள். ஒரு ராட்சசக் கண் போல திறந்திருந்தது பாறைகள் கொதிக்கும் அந்த மாபெரும் நெருப்புக் குழி. அவள் அதன் திறந்து மூடும் கரிய வாயிலைக் காண்பித்தாள். அதன் உள்ளே நெருப்பின் பிம்பங்களாகத் தெரிந்தன உருவங்கள். கண்கள் கூசும் அவ்வொளியில் என் உடல் கனலாகி தகித்தது. மெராப்பியின் உள்ளே இருக்கும் அந்த அரண்மனையின் வாசல்கள் ஒவ்வொன்றாக என் முன் திறந்து கொண்டன. உள்ளே அரியணையில் எம்பூ ராமாவும் எம்பூ பெர்மாடியும் வீற்றிருப்பதைக் கண்டேன். கியை சாபு ஜகத் புன்னகைத்தபடி அவர்களைத் தாங்கி நின்றார். முன்னோர்களும் அரசர்களும் வீரர்களும் குழந்தைகளும் அன்னையரும் எல்லாரும் பெரும் களிப்பில் திளைத்திருந்தனர். இதுவரை மண்ணில் பிறந்து வாழ்ந்து மறைந்தவர்கள் அனைவரையும் அங்கு கண்டேன், இனி மண்ணில் பிறக்கவிருக்கும் எண்ணில்லா உயிர்களையும். காடுகளும் மலைகளும் பறவைகளும் விலங்குகளும் நதிகளும் கடல்களும். எல்லாம் நெருப்பின் பிம்பங்களாகக் கொப்பளித்தன. எவற்றுக்கும் வடிவமில்லை, வேற்றுமையில்லை. கீழில்லை, மேலில்லை. நான் அதன் முன் மண்டியிட்டு அமர்ந்தேன். என் உடல் அதிர்ந்தது. தெய்வமே என்னையும் உன்னுள்ளே எடுத்துக்கொள் என விம்மினேன். மேலதி என் தோளில் கைவைத்துச் சொன்னாள். நேரம் வரும்போது உன் மக்களை அழைத்துக் கொண்டு நீ இங்கே வருவாய்.”
மாரிட்ஜான் அமைதியானார். மெல்ல தன் புத்தாடையின் கூறிய மடிப்புகளை நீவிவிட்டபடி சொன்னார்.
“சுரக்ஸோ அறுபது ஆண்டுகளுக்குப் பின் அந்தத் தருணம் வந்துவிட்டது, இந்தச் சாம்பல் பூமியின் மீது அதோ நெருப்பின் ஒளிக்கீற்று தெரிகிறது. நாம் அதை பயப்படலாமா? பயந்து எது வரை செல்வது? மாதர தேசத்தை விட்டு… இந்தத் தீவை விட்டு… முலையுண்ட அன்னையைக் கைவிடுவதா நமது அறம். நெருப்பில் பிறந்தவர்கள் நாம், மீண்டும் அந்நெருப்பிலேயே சென்று அணைவோம். வானும் மண்ணும் வலியும் மரணமும் ஏதுமற்ற நெருப்பு.”
ம்பாஹ் மார்ட்ஜான் ஒரு மந்திரத்தைப் போல அதை சொல்லி முடித்தார். சுரக்ஸோ ஒன்றும் சொல்லாமல் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தார். விருந்துண்டு இன்னீர் பருகி நாங்கள் விடைபெற்றோம். கூடத்துக்குச் செல்லும் வழியில் சுரக்ஸோ தான் கீழே வரவில்லை என்று சொன்னார்.
“மேலதி என்னை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறாள். நான் இம்முறை அவளை அஞ்சவில்லை.”
எனக்கு அதன் முழுப்பொருள் அப்போது திரளவில்லை. என் மனதில் மீண்டும் மீண்டும் மாரிட்ஜான் கூரிய அக்காட்சி தான் எதிரொலித்தது. எவ்வளவு முயன்றும் என்னால் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க முடியவில்லை. நெருப்பின் கொந்தளிப்பு, தூய இருள் மட்டுமே. திரும்ப திரும்ப அதில் சென்று முட்டி நின்றது மனம்.
கூடத்தில் விரகுணாவும் மூலியாவும் சுர்யபுத்ரோவும் அதே போல் அமர்ந்திருந்தனர். அவர்கள் யாரும் அங்கிருந்து புறப்படுவது போல தெரியவில்லை. மீண்டும் மீண்டும் ஒன்றையே கூறியபடி சுற்றி வந்தனர். பெயர் சொல்லி உரக்க அழைத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை. சுரக்ஸோ சொன்ன அந்த வாசத்தை இப்போது நானும் காற்றில் உணர்ந்தேன்.
“நம்மை கொண்டு செல்ல விரைவில் வண்டி வந்துவிடும்,” என்றார் விரகுணா. அவர் முகம் முற்றிலும் வெளிறிப் போயிருந்தது.
மீண்டும் நிலம் அதிர்ந்தது. கமெலானின் இசை துவங்கியது. உடல் அதிரும் ஒலியுடன் காதுகள் ரீங்கரித்தது. நான் பித்து பிடித்தவனைப் போல கூடத்திலிருந்து வெளியே ஓடினேன். கதவுகள் திறந்திருந்த மாரிட்ஜானின் வீட்டின் உள்ளே அந்த இசைக்கூடம் தெரிந்தது. அங்கே யாரும் இருக்கவில்லை. கொடுங்கனவிலிருந்து விழிக்க முற்படுபவனைப் போல உடலை உதறி ஏதோ ஒரு கணத்தில் நான் அங்கிருந்து ஓடத் தொடங்கினேன். காட்டுப் பாதையில் வழி தவறி தவறி எங்கெங்கோ சென்று கொண்டிருந்தேன். காடு மொத்தமும் கமெலானின் இசை எதிரொலித்தது. காற்றில் மிதந்த ஆயிரக்கணக்கான மின்மினிகள் அவ்விசையில் இயைந்தது போல துடித்தன. காடே உயிர்ப்பு கொண்டது போல. காட்டின் இருளினூடே அவளது இனிய குரல் கேட்டது, அடர்த்தியாக எழுந்த மல்லிகைப்பூவின் வாசம் எங்கும் சூழ்ந்தது. எந்தச் சிந்தனையுமில்லாமல் பள்ளத்தை நோக்கி நான் ஓடிக் கொண்டிருந்தேன். பின்னால் மிக மிக அருகில் அவள் தொடர்வது போன்ற பிரமை. அவள் மூச்சுக்காற்றை என் கழுத்தில் உணர்வது போல. என் இதயத்தின் ஓசை ஒரு முரசு போல காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்டின் முட்களும் மூங்கில் புதர்களும் என் உடலைப் பற்றிக் கிழித்தன. ஒரு கணம் கூட நான் நிற்கவில்லை.
ஓடியோடி சென்று நான் ஓர் ஓடையை அடையாளம் கண்டு கொண்டேன். அடிவாரம் செல்ல அதை கடக்க வேண்டும். முழங்காலளவுக்கு மேல் ஓடிய குளிர்ந்த நீரில் இறங்கி நடக்க, காலில் இடரிய வேரொன்று என்னை நீருக்குள் தள்ளி வீழ்த்தியது. உடல் மொத்தமும் நீரில் நனைந்து நடுங்கியபடி நீந்தி மறுகரை அடைந்து மேலும் ஓடி, சற்று பெரிய வண்டிப் பாதையை அடைந்தேன். அங்கிருந்து மீண்டும் திசை தெரியாமல் ஓடிய என் முகத்தில் பளீரென்று வெளிச்சம் அறைந்தது. அன்று நள்ளிரவு கடைசியாக எஞ்சியவர்களை மீட்க வந்த ரோந்து வாகனம் ஒன்று காட்டுப் பாதையில் என்னை அடையாளம் கண்டு முகாமுக்கு ஏற்றிச் சென்றது.
அன்று அதிகாலை ஐந்து மணிக்கு மெராப்பி வெடித்தது. எரிமலையிலிருந்து புறப்பட்ட ஆயிரம் டிகிரி அதிவெப்ப தூசிப் புயல் பத்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் எரித்து சாம்பலாக்கியது. முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜோக்ஜகார்த்தா நகரம் மூன்று நாட்கள் புழுதியால் மூடியது. மலைமுடியில் இருந்து வெறும் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கினரெஜோ கிராமம் எரிமலை வெடித்த ஆறாவது நொடி தாக்குதலுக்குள்ளானது. அடுத்த மூன்று நாள் வரை எந்தத் தகவலும் இல்லை. எக்கணமும் வெடித்தெழும் சாம்பல் புயலால் யாரும் வெளியே வரத் துணியவில்லை. மூன்றாம் நாள் இரவு முழுவதும் பெய்த கடும் மழையில் வானம் சற்று தெளிந்தது. முகாம்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கினரெஜோவை நோக்கிச் சென்றனர். அவர்களிடம் இருந்தது பதற்றமா அல்லது ஆர்வமா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை. அன்று நானும் அவர்களுடன் இருந்தேன். செல்லும் வழியில் எனக்கு எதுவும் அடையாளம் தெரியவில்லை. மலையைச் சுற்றிய பசும் காடுகளில் இப்போது ஒரு இலைகூட இல்லை. பெருமரங்களின் அடி மரங்கள் மட்டும் கரிய பூதங்களாக நிற்க, பாதையின் இருபுறமும் மழைநீரில் சாம்பல் கரைந்து ஒழுகியது.
மாரிட்ஜானின் மாபெரும் வீடு தரையோடு தரையாகக் கிடந்தது. கிராமம் எங்கும் இரும்பும் கண்ணாடியும் எல்லாம் மெழுகு போல நெகிழ்ந்துப் போயிருந்தன. இடிபாடுகளுக்கு இடையே கிடைத்த ம்பாஹ் மாரிட்ஜானின் உடல் அதிகாலைத் தொழுகையின் சுஜூதில் மண்டியிட்டு அமர்ந்திருந்தபடி கருகியிருந்ததாக மீட்புப்பணியினர் சொன்னார்கள். அவருடன் சேர்ந்து கினெரெஜோவில் தங்கிவிட்ட பதினான்கு பேரும் உயிர் பிழைக்கவில்லை. வீட்டின் வெவ்வெறு பகுதிகளிலாக உள்ளறைகளிலெல்லாம் அவர்களது உடல்கள் கிடைத்தன. சமையற்கூடத்தில் மேலும் நான்கு பேர் இறந்திருந்ததாகச் சொன்னார்கள். கமெலான் குழுவினர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. எல்லாம் ஒரு கனவு போல தெரிந்தது.
மாரிட்ஜானின் இறப்பையடுத்து ஜோக்ஜகார்த்தா மொத்தமும் மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்பட்டது.
ஆனால் அன்று காலை அங்கு கூடியிருந்தவர்கள் யாரும் அழவில்லை. இது இப்படித்தான் நடந்து முடியும் என்று அறிந்திருந்தவர்கள் போல, ஆழ்ந்த அமைதியுடன் இடிந்த அவர் வீட்டைச் சுற்றும் பார்த்து நின்றார்கள். சிலர் வயோதிகர்கள் கண்களில் அனிச்சையாக கண்ணீர் வழிந்தது. நான் கடைசி முறையாக மெராப்பியை விட்டு கீழிறங்கி நடக்கத் துவங்கினேன்.
மலையிறங்கி கீழே வர வர மாதரத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மெராப்பியின் எரிமலை சாம்பலை அள்ள கூட்டம் கூட்டமாக வந்தவர்களைக் கண்டேன். என்னுடன் அன்று கீழிறங்கியவர்களும் அவர்களுடன் உற்சாகமாக இணைந்து கொண்டார்கள். பெருகும் மழைநீரில் அடித்துச் செல்வதற்குள் சாம்பலை அள்ளிவிடும் முனைப்பில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் எல்லாம் ஒருவருடன் ஒருவர் கூக்குரலிட்டபடி முட்டி மோதினர். எரிமலை சேற்றில் விழுந்து புரள உடலெல்லாம் சாம்பல் பூசி சிரித்தனர். இரண்டு நாள் பெய்த மழையில் அதற்குள் கரிய சாம்பல் சேற்றில் எங்கோ அடியாழத்தில் இருந்து விழித்தெழுபவைப் போல விதைகள் சில முளைவிடத் தொடங்கியிருந்தன.
அதி அற்புதம்
சிறந்த அனுபவம்
நன்றி சகோ
அற்புதம்!! பரவசம்!!!! என்ன சொல்ல
அஜிதன் இந்த மலாய் வார்த்தைகளையெல்லாம் எப்போது கற்றுக்கொண்டீர்கள் மண்ணின் மைந்தர் போல
Valthukkal aji.The theme will never be forgotten.ir resides in me like rendang.
Though I find some hurdles to go through,rendang cooking mudiya mudiya I could also travel with it.
Brilliant. Just brilliant.
ஒரு மாபெரும் தரிசனத்தின் சாட்சி…
அஜிதனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் …
Future threat என Yuval சொல்வது AI, Robot, Climate Change , Alien கள் அல்ல. தகவல்களே எதிர்கால புதைகுழி எனும் அவர் எச்சரிக்கையை இச்சிறுகதையுடன் இணைத்து பார்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. ஒரு சிறுகதையில் எவ்வளவு தகவல்கள். தகவல்கள் தேனிக்கூட்டம் போல் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குகின்றன. மைத்ரி, அல்கிஸா அஜிதனை எதிர்பார்த்து வாசித்த எனக்கு பெரும் ஏமாற்றமே. தேன் தேடி வந்தவனுக்கு சர்க்கரைக்கரைசல் கிடைத்தது போல்.
தன்னளவில் முழுமையான ஆக்கம்.. மகிழ்ச்சி!
Aji no words to say.yr father as well as ur guru may feel very proud aji.valthukkal.May God bless u
அந்நிய நிலத்தில் நடக்கும் ஒன்றைக் புனைவாக்கும்போது எவ்வளவு உழைப்பும் நுண்கவனிப்பும் தேவையோ அவ்வளவையும் அவதானித்து எழுதப்பட்ட கதை இது.உதாரணமாக ரெண்டாங் உணவு வகை மலேசியாவிலும் பிரபலம். அச்சமையல் வகை கண்டிப்பாய்த் தமிழகத்தில் இல்லை. அதனைச் சமைக்கும் முறையறிந்து சரியாகவே எழுதியுள்ளார் அஜீதன். அந்த ஒன்றிலேயே அவருடைய நுண்விவரணைத் தேடல் வெளிப்பட்டுவிட்டது.
கதை பழங்குடி பண்பாட்டுக்கும் உள்ளே வரும் இஸ்லாமுக்கும் உள்ள குழம்புதலை, அதை ஒரு பழங்குடி culture bearer எதிர்கொள்ளும் விதத்தை பேசுகிறது
கதையின் முதல் வரியிலேயே கிராமத்தில் புதிய மசூதி பற்றிய விவரம் வருகிற்து
இறுதிக்காட்சியில் மாரிட்ஜானின் உடல் சுஜூத் தொழுகையில் அமர்ந்து எரிமலைக் குழம்பை ஏற்றுக்கொண்டுள்ளது
மாரிட்ஜான் தலைநகரின் மைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதன் ஆன்மீகத்தை தான் கண்டவற்றுடன் இணைத்துள்ளார்.
இங்கு பண்பாட்டு குழம்பு மிக சாஃப்டாக சொல்லப்படுகிறது
Feels like a timeless travel. Wonderful Ajithan. You are blossoming into a complete Literary writer.
தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரும் தாவல் இந்த சிறுகதை.