வருடல்

சிரம்பானில் ‘முருகம்மா’ என்ற பெயரில் ஒருவரைத் தேடுவதென்பது சிரமமான காரியமாக இருக்காது என்றுதான் நினைத்திருந்தேன். முருகம்மா என்ற பெயர் உள்ளவர்கள் நிச்சயம் மிகக் குறைவானவர்கள்தான். அதுவும், என் தலைமுறையிலோ அதற்கடுத்த தலைமுறைகளிலோ பிறந்தவர்களுக்கு நிச்சயமாக முருகம்மா எனப் பெயர் இடப்பட்டிருக்க வாய்ப்பிருக்காது என்பதால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், யாரிடம் சொல்லித் தேடுவது என்பதில் தொடங்கி எதையெல்லாம் அடையாளமாகச் சொல்லித் தேடுவதென்பதற்கே நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அம்மாவிடம் கேட்டப்போதெல்லாம் தன்னுடைய பன்னிரண்டு வயது முருகம்மாவைத்தான் நினைவிலிருந்து மீட்டெடுத்தார்.

“நாங்க ரெண்டு பேரும் ஒன்னாத்தான் ஸ்கூலுக்கு ஜோடி போட்டுக்கிட்டுப் போவோம். அவ வீடு கீகுச்சியில இருந்துச்சு. அவகூட பேசாதன்னு அப்பா போட்டு அடிப்பாரு. பன்டி பன்டின்னு கொட்டாயே கதியா கெடக்குற இல்ல அதுங்க மாரித்தானே பீத்தின்ன புத்திப் போகும்ன்னு வச்சு சாத்துவாரு! ரெண்டு நாளு பேசாம இருப்பேன்… அப்புறமா மறுபடியும் ஜோடி சேந்துக்கிட்டுப் போவோம்.”

இதைச் சொல்லும்போது அம்மாவின் உதட்டில் மெல்லிய புன்னகை எழுந்து அடங்கியதைப் பார்த்தேன்.

“கொட்டாய்க்கு, மங்கு தொடைக்க, ஸ்கூல்லுக்கு எங்கன போனாலும் என் பின்னாலே வருவா. காலையிலே ஆரம்பிச்சு ரவ்வுல பத்து மணிக்குப் படுக்குற வரைக்கும் என் கூடத்தான் பல்லி மாரி ஒட்டியிருப்பா. நான் செய்ற வேல எல்லாத்தயும் இவளும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வா. எஸ்டேட்ல, இருக்குற கெழவிங்க, என்னங்கடி எங்க பாத்தாலும் ஜோடி போட்டுக்கிட்டுப் போறீங்க… நீ அவளை கட்டிக்கப் போறியா… இல்ல ரெண்டு பேரும் ஒன்னா ஒருத்தனையே கட்டிக்கிட்டுப் போகப் போறிங்களான்னு கேக்குங்க… நான் எதுக்கும் அஞ்ச மாட்டேன்.”

அம்மாவின் வாயில் வழியும் கோழையைத் துடைத்து விட்டேன்.

“ஆமா. நா எதுக்கும் அஞ்ச மாட்டேன். பொட்டு வெளிச்சம் இல்லாத ராத்திரி எட்டு மணி காட்டுல… இவளையும் சைக்கிள் சம்தாங்கில உக்கார வச்சிக்கிட்டுப் பன்டிக் கொட்டாய்க்குக் கூட்டிட்டுப் போவேன். வூடு வூடா போயி மத்தியானம் வச்ச டின்னுல ஊத்தி வச்சிருக்கிற கஞ்சித் தண்ணிய பெரிய பானையில ஊத்தி எடுத்துக்கிட்டு சேமக்கிழங்கும், தழைங்களும், புண்ணாக்கும் சேத்து அவிச்சி பன்டிக்களுக்கு போடுவோம். கொட்டாயி முழுக்க பன்டிங்க பேண்டு வச்சிருக்கிற பீ, மூத்திரத்த அல்லூர் தண்ணியெடுத்து கழுவி உடணும். அதயெல்லாம் அவத்தான் மொகம் கோணாம செய்வா,” கைலிதுணியை இடுப்பு வரை மேலெடுத்துக் கொண்டார்.

“எஸ்டேட் ஜனங்க வச்சிருந்த பன்டி கொட்டாயிங்கள அவுங்க அப்பாவும் அம்மாவும் தான் சுத்தம் பண்ணுவாங்க. பன்டிங்கள மேச்சலுக்குக் கூட கூட்டிக் கிட்டுப் போவாங்க. பொறந்த குட்டிப் பன்டிங்க மேலயே தாய்ப்பன்டிங்க விழுந்து பொரளப் போகுங்க. குட்டிங்கள கம்பாலே தள்ளி உட்டு… தண்ணியடிச்சு குளிப்பாட்டி… நாத்தமடிக்காம இருக்க பொகை போட்டுட்டு ராத்திரி பத்தாயிரும் வீட்டுக்கு வர. இந்தப் புள்ள பின்னால ஒக்காந்து, வேகமாக போடி, யாரோ பின்னாடி வர்ரா மாரி இருக்குன்னு தாவணிய புடிச்சுக்குவா. எல்லா எஸ்டேட் எளவட்டங்க… பாசா காட்டுல எங்களுக்குப் பயம் காட்டுறதுக்காக ஒளிஞ்சு நிப்பானுங்க. துணிப்பந்தம் கொளுத்திக் கொள்ளி வாய்பிசாசுன்னு கத்துவானுங்க. நான் எதுக்கும் அசரமாட்டேன். பொதருக்குள்ள என்னடா பொட்டப்புள்ளயாட்டம் சத்தம் கொடுக்குறிங்க… வாங்கடா வெளியன்னு வரிஞ்சுகட்டி நிப்பேன். இவ பயந்தவ… ஆனா, நெறம் மட்டும் நல்லா செவச்செவன்னு லட்சணமா இருப்பா. பயம் வந்துட்டா போதும் முகத்துல அப்படியே ரத்தம் கோத்துக்கும். பொம்பிள பிள்ள வேணும்ன்னு செரம்பானுல இருக்குற தண்டாயுதபாணி கோயில்லா வேண்டி பொறந்ததனால முருகம்மான்னு பேரு வச்சிருந்தாங்க…ஹூஹூம்…” மருத்துவமனை கட்டிலை உயர்த்திவிடச் சொன்னார். மருத்துவமனையிலிருந்த நாட்களில் ஒவ்வொரு நாளைக்கும் நான்கைந்து முறையாவது கட்டிலை உயர்த்திவிடவும் இறக்கவிடவும் சொல்லிக் கேட்பார்.

“வேற ஏதும் நெனப்பிருக்காம்மா,” என ஒரு தடவைக் கேட்டேன்.

“அவளுக்கு ரெண்டு அண்ணங்க,ரெண்டு பேருக்கும் அவள விட பத்து பதினைஞ்சு வயசு கூட. எல்லாம் போயி சேந்துருப்பாங்க… எல்லாத்துக்கும் எளப்பமா தெரிவா… எங்கன கெடந்து அல்லாடுறாளோ தெரில… அவளை எப்படியாவது ஒரு தடவ பாத்தருணும்…” என மருத்துவமனையில் முதல் தடவை அம்மாவுக்கு டையப்பர்ஸ் மாற்றிவிட தாதி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது சொன்னார். மருத்துவமனையில் வழங்கப்படும் தொள தொளப்பான பச்சை சட்டை, கைலியுடன் வெளி வராந்தாவையே பாதி நேரம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார். மூன்று வேளையும் ரத்த அழுத்தம் சோதிக்க வரும் தாதிகளிடம் எப்பொழுது வீட்டுக்குப் போகலாம் எனக் கொச்சை மலாயில் கேட்டுக் கொண்டிருப்பார். அம்மா படுத்திருந்த படுக்கைக்கு எதிர்ப்புறம் படுத்திருந்த பெண் பல முறை கையில் மருந்து நீர் ஏற்றுவதற்காகக் குத்தப்பட்டிருந்த ஊசியைப் பிடுங்கி போட்டுக் கொண்டிருந்தார். அதனாலே, அவரின் கைகள் கட்டப்பட்டு அம்மாவைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். அம்மாவும் மிரட்சியுடனே வார்டில் இருந்தார். நானும் தேவியும் தான் மாறி மாறி முறை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். மருத்துவமனையில் தரப்படும் உணவுகளை இரண்டு வாய் மட்டுமே உண்ணுவார். அவரைக் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்க எதையாவது பேசுவேன்.

மருத்துவமனையிலிருந்து வந்ததும், கீழே விழுந்து கிடக்கும் கைலிதுணியை எடுத்துத் தரவோ அல்லது டையப்பர்ஸ் மாற்றுவதற்காகத் தேவியை அழைக்கச் சொல்வதற்காகக் கூப்பிடும்போதும் இடையிடையே முருகம்மாவைப் பற்றி ஏதேனும் சொல்வார். தனியே கம்பத்து வீட்டில் இருந்தவரைச் சந்திக்க வாரம் ஒரு முறை செல்லும்போது கூட அதிகப்படியாக எதையும் பேச மாட்டார். ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைபொருட்களை வாங்கச் சொல்வது, ஒழுகிக் கொண்டிருக்கும் எதோ ஒரு குழாயை மாற்றச் சொல்வது இப்படியாகத்தான் எதாவது பேசுவார்.

அம்மாவுடைய பேச்சில் முருகம்மா வெளிப்பட ஆரம்பித்தது அப்பாவின் இறப்புக்குப் பின்னால்தான் என தேவியும் சொன்னாள். அப்பாவை மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்து சவப்பெட்டியில் வைக்கும்போது கதறி அழுதவர்தான் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கின்ற வரையில் மிக நிதானமாக நாற்காலியில் அமர்ந்து ஒவ்வொரு வேலைக்கும் ஆட்களை ஏவிக் கொண்டிருந்தார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கடைசி ஓராண்டாக அநேகமாகப் பெரிய பேச்சு வார்த்தை ஒன்றுமிருக்கவில்லை. வாரமொரு தடவையாவது சம்சு வாங்கி குடிப்பவரைக் கண்டிக்கச் சென்று இருவருக்குமான பேச்சு வார்த்தை சுருங்கிப் போயிருந்தது. கருமக்கிரியை முடியும் வரை அம்மாவுடன் தங்கியிருந்த அம்மாவின் மூத்த சகோதரித்தான் பேச்சு வாக்கில் “ஏய் புள்ள… முருகம்மா பத்திக் கேட்டியே… ஒரு தடவ சிரம்பான் கட வீதில பாத்துப் பேசியிருக்கேன். எதோ ஒடம்புக்கு முடியல போல. மொகம்லாம் அப்டியே வெளுத்துப் போயி கிடந்துச்சு. வூடு அட்ரஸ்… போன் நம்பருல்லாம், கேக்கணும்ன்னு நெனப்பில்லாம போச்சு,” எனச் சொன்னார். பெரியம்மா சொன்னதைப் பெரிய ஆர்வம் ஏதுமின்றியே கேட்டதைப் போலிருந்தது. துக்க வீட்டின் சடங்குகள் முடிந்து தனிமையானப் பிறகு முருகம்மா புராணத்தைப் பிடித்துக் கொண்டார்.

“ஏங்க… அவுங்களுக்கு எப்படியும் ஒங்கம்மா வயசு இருக்கும், சும்மா பேஸ்புக்ல தேடிப் பாப்போமா,” என தேவி யோசனை சொன்னாள். அவள் சொன்னப்படியே, பேஸ்புக்கில் முருகம்மா எனப் பெயரை நான்கைந்து வெவ்வேறு ஆங்கில உச்சரிப்புகளுடன் உள்ளிட்டுப் பார்த்துத் தேடினேன். அவள் சொன்னது மாதிரியே ஒரு புரோபைலில், பழையக் கல்யாணப் படம் ஒன்றைக் கால் தெரிய படம் பிடித்து முகப்புப்படமாய் வைத்திருந்த ‘முருகம்மா முரு’ என்ற பக்கம் கிடைத்தது. சிரம்பானில் வசித்துக் கொண்டிருப்பதும் அம்மாவைப் போலவே எழுபத்து இரண்டு வயதுடையவர் என புரோபைல் காட்டியது. எப்பொழுதும் படுக்கையில் எதையாவது சொல்லி வலி முனகிக் கொண்டிருக்கும் அம்மாவிடம் திருமணப் படத்தைப் பெரிதாக்கி “இவரா பாருங்க” எனக் காட்டினேன். கண்ணைச் சுருக்கிப் பார்த்து “நல்லா அரிசி தின்னுவா… ரத்தம் சுண்டிப்போயிரும் புள்ளன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். கல்யாணத்துல கூட எப்படி நரங்கி போயிருக்கா பாரு,” எனப் படத்தைக் கிட்ட வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம்தான். படத்தைப் பெரிதாக்கிக் காட்டச் சொன்னர் முகத்தை உற்றுப் பார்த்து “இவ இல்ல” எனச் சொல்லி விட்டார்.

“எவளோ ஒருத்திய காட்டி என்னைய ஏமாத்தப் பாக்குறியா? ஒழுங்கா தேடிக் கண்டுப்புடி,” என எரிச்சலடையத் தொடங்கினார். நான் என் கஷ்டத்தைத் தம்பியிடம் கூறினேன்.

“எங்கன்னு தேடச் சொல்றீங்க? நான் வேல செய்ற எடத்துலருந்து சிரம்பான் ரொம்ப கிட்டத்தான்… எப்படி தேடுறது… வாட்சாப்புல வேணா சொல்லி ஷேர் பண்ண சொல்லலாமா? இல்ல வீடு வீடா போயி கேக்கலாமா? அவுங்க சொல்றாங்கன்னு நீயும் அண்ணியும் எப்படி தேடுவீங்க? எல்லா கொஞ்ச நாளாவட்டும்… அவுங்களுக்கும் அந்த மாதிரி பழைய கூட்டாளிய பாக்கணும்ன்னு நெனப்பிருந்தா வந்து பாக்கட்டுமே… பெரியம்மாத்தானே அவுங்கள பாத்துருக்காங்க… அவுங்கக்கிட்ட சொல்லி பாத்தா சொல்லுங்கன்னு சொல்வோம்,” எனத் தம்பி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

இரவில் கழிப்பறைக்குச் சென்றிருந்தபோது கீழே விழுந்து அம்மாவின் இடுப்பெலும்பு முறிந்திருந்தது. அதன் பிறகு, எங்களுடன் வீட்டில் வந்து தங்கியிருக்க வேண்டியதாகிவிட்டது. முதல் மூன்று நாட்கள் மட்டும்தான் “தண்ணி”, “ஒன்னுக்கு போகணும்… எழுந்து நிக்க வய்யி”, “ரேடியோ எடுத்து கொடு” என அடிக்கடி என்னையும் கிஷனையும் அழைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு, எங்களைக் கூப்பிடுவதைக் குறைத்துக் கொண்டிருந்தார். மூன்றே நாட்களில் மொத்த அறையுமே அவருக்கு ஏற்றதைப் போல மாறியிருந்தது. அவரைப் பார்த்த மாதிரியாக கடிகாரம், படுக்கையில் மறைவாய் பழையக் கைலியில் இருக்கும் மூத்திரப்பை, சிறிய வானொலி, கைவிளக்கு, தட்டுக் குவளைகள், மெல்லிழைத்தாள், சுருக்குப்பையும் இரண்டு மூன்று மாற்றுக் கைலிகள் கொண்ட துணிப்பையும் படுக்கையைச் சுற்றிலும் இருந்தன. அந்த அறையின் மணமே மாறி அம்மாவின் மீது வீசும் தேங்காய் பால் மணம் அறை முழுதும் வீசத் தொடங்கியது. டையப்பர்ஸ் மாற்றுவதற்காகப் பக்கவாட்டில் சாய்ந்து படுக்கும் போதோ கால்களை அகட்டி வைக்கும் போதோ முகத்தில் தெரியும் சலிப்புடன் முருகம்மாவைப் பற்றி கேட்பார்.

மருத்துவமனையிலிருந்து திரும்பியவர் இரவில் கூட பெயர் சொல்லி அழைப்பதால் பல முறை கூப்பிடாமலே அறை முன்னால் நின்று பார்ப்பேன். நடு இரவிலும் வானொலி கேட்பது அல்லது இருண்ட அறையில் கைவிளக்கால் துழாவிக் கொண்டிருப்பதைத் திரைச்சீலைக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் இரவில் என் பெயரைச் சொல்லி அழைப்பது போலத் தோன்றியது. மலம் கழிப்பதாக இருந்தால், தேவியை அழைத்து வரச் சொல்வார். அதுவும் என்னை அழைத்தே தேவியை அழைக்கச் சொல்வார். அப்படி ஏதாவது என நினைத்து தேவியை அழைத்துப் பார்க்கச் சொன்னேன்.

டையப்பர்ஸ் மாற்றிவிட சங்கடத்துடன் சொன்னார். அம்மாவின் வரிவரியாய்ச் சுருங்கியிருக்கும் பருத்த தொடையை ஓராளாகத் தூக்கிப் பிடிக்கச் சிரமமாக இருப்பதாக தேவி சொல்வதால் நானும் உடனிருந்தேன். தொடைகளைச் சற்றே தூக்கிப் பிடிக்க சிறிய இடைவெளியில் புதிய டையப்பர்ஸை இடுப்புப் பக்கமாய் உள்ளே நுழைத்தாள். ஈரம் காணாமல் காய்ந்திருந்த தொடைகளில் நகங்களால் கீறிய வெண் கோடுகள் தெரிந்தன. சுடுநீரால் நனைத்த துணியால் உடலைத் துடைக்க அருவருப்பால் கோணிய முகத்துடன் ஆச்சரியமாக தன் அப்பாவை நினைவு கூர்ந்தார்.

“பெருந்தலையான் சாவுற வரைக்கும் யாரையும் கிட்டைக்கு சேக்கல. தூங்குன பின்னாடிதான் பீ மூத்தரத்த தொடைக்கணும். அப்படி ஒரு திமிரு… திமுரோடவே செத்தாரு” என்றார்.

அம்மாவின் அப்பாவான பெருந்தலையான் தோட்டத்தில் பெரிய தலைகட்டாக இருந்தவர். தோட்டத்தில் இருந்த கங்காணிகளுக்கு எல்லாம் தலைவரைப் போல தோட்டம் முழுக்க செல்வாக்குடன் வலம் வந்தவர். தோட்டத்துக்குப் புதிதாக வந்த ஜோசப் கிராணிக்கும் அவருக்கும் தொடக்கம் முதலே உறவு சீராக இல்லை. மற்ற தொழிலாளர்களைப் போலவே தாத்தாவையும் ஒருமையில் அழைத்து வேலை ஏவவும் மற்றவர்கள் முன்னர் ஏசவும் செய்திருக்கிறார். ஒரு நாள் ஆபீஸ் பக்கமாய் நடந்து செல்கின்றபோது மோதுவதைப் போல காரை ஓட்டி வந்த ஜோசப்பின் மீதான கோபம் இன்னும் வளர்ந்திருக்கிறது. அவரைப் போலவே காரை வாங்கி ஓட்ட வேண்டுமென வைராக்கியம் வந்தது. அதற்காக வளர்த்த அத்தனைப் பன்றிகளையும் விற்று பயன்படுத்திய ஆஸ்டின் காரொன்றைப் பன்றி வாங்க வரும் சீன வியாபாரியிடம் வாங்கியிருக்கிறார்.

நன்றாக இருந்த காலத்தில் அம்மா தன் அப்பாவைப் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அதில் கொஞ்சம் பெருமிதம் இருக்கும். நோயானப் பின்னர் அவர் நினைவுகள் பன்றிகளையும் முருகம்மாவையுமே சுற்றிச் சுற்றி வந்தது. நானே வலிந்து “தாத்தா காடியெல்லாம் வச்சிருந்தாருல்ல…” என இழுத்தாலும் பதில் முருகம்மாவிடமே சென்றது.

“ஒரு தடவைக்கு பத்து பதினைஞ்சு குட்டிங்கள பன்டி போட்டுரும். பால் கொடுக்க சரிஞ்சு படுக்குறதுங்க அப்படியே குட்டிங்க மேலயே படுத்துச் சாகடிச்சுருங்க. மூர்க்கமா இருக்குறதுனால வெளியில கம்ப வச்சு குட்டிங்கள பால் குடிக்க தள்ளி விடனும். இவத்தான் மூர்க்கமா இருக்குற தாய்ப்பன்டிங்க பக்கத்துல போயி கஞ்சித் தண்ணில்லாம் வைப்பா. காடி வந்ததும் சடீர்ன்னு மொத்த கொட்டாயும் ஒஞ்சு போயிடுச்சி.”

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அம்மா திடீரென முதுமையாகிவிட்டதுபோல தெரிந்தார். குரலில் அதிக கரகரப்பு இருந்தது.

“தாத்தா காடிய பத்தி சொல்லுமா,” என்றேன் ஒரு முறை. உள்ளபடியே அம்மாவின் சிந்தனைகளைத் திசை திருப்ப கேட்டாலும் தாத்தா தோட்டத்தில் கார் பயன்படுத்தியுள்ள கதையைக் கேட்பதில் எனக்குக் கொஞ்சம் பெருமிதமும் இருக்கத்தான் செய்தது .

“ஆஸ்டின் காடிய பாக்குறப்பல்லாம் பன்டிங்க கெடந்து பொரண்டுக்குட்டு ஓடுற மாரித்தான் இருக்கும். அந்தக் காடிய வாங்கி எஸ்டேட்ல லயத்து வீட்டு முன்னால ஓட்டுனுமாம்! அதுவும் ஜோசப் கிராணி இருக்குற எடமா பாத்து வேகமாக ஓட்டனுமாம்! எங்க அண்ணன் எங்கப்பா பேச்ச கேட்டு காடிய எடுத்துக்கிட்டு எஸ்டேட் வழியே ஓட்டுவாரு. நானும் காடில ஒக்காந்துப்பேன். நாலஞ்சு பன்டிங்களும் குட்டிப் பன்டிங்களும் சேந்து ஓடுற மாதிரி காடி பள்ளத்துலயும் மேட்டுலயும் ஓடி உருண்டு போவும்.”

இதை சொல்லும்போது அம்மா உடல் குலுங்கியது.

“ஒரு தடவ ஜோசப் கிராணி காடியோட போட்டி போட்டுக்கிட்டு டவுனுல அண்ணன ஒக்கார வச்சு காடிய வுட்டாரு. அதுல ஜோசப் கிராணிக்கு அப்பா மேல வஞ்சம் வளந்துருச்சு. காடி அப்படியே எஸ்டேடயே சுத்தும். காடிக்குப் பின்னாலேயே முருகம்மாவும் ஓடி வருவா,” என முருகம்மாவிடம் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் நான் பேச்சைத் தொடரவில்லை. நாங்கள் அமைதியாக இருக்கவும் வானொலிக் குமிழ்களைத் திருகிப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

மறுநாள் காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்னால் “முருகம்மாவ… பாக்கணும் போல இருக்குயா… நாக்கு செத்தவ… எங்க இருந்து எப்படி சீரழிஞ்சு கெடக்குறாளோ…” என கைகளைப் பிடித்துச் சொன்னார். அம்மாவின் கருத்த முகம் அதைத்துப் போய் கண்கள் சிவந்திருந்தது தெரிந்தது. பள்ளியில் இருக்கும்போது தேவியிடமிருந்து அழைப்பு வந்தது. “ஏங்க, காலையில ஒடம்ப தொடச்சுக் குளிப்பாட்ட கேட்டாங்க… நேத்து ராத்திரி சொன்ன கதையத்தான் திரும்ப சொல்றாங்க… எதுக்கும் அவுங்க பேரச் சொல்லி ஒங்க பெரியம்மாக்கிட்ட விசாரிச்சுப் பாருங்க!” என்றாள்.

பெரியம்மாவிடம் அழைத்துக் கேட்டதற்கு எந்த அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. அன்று சொன்ன கதையையே மீண்டும் சொன்னார். ஆனால், அன்று அதே ஞாபகமாக உறங்கி விழித்தபோது சட்டென ஒரு எண்ணம் நினைவுக்கு வந்தது. பள்ளி சார்பாக மாநிலக்கல்வி இலாகாவில் கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது சிரம்பானில் ஆசிரியராகப் பணிபுரியும் வெள்ளைச்சாமி என்ற ஆசிரியரைச் சந்தித்தது நினைவுக்கு வந்ததது. ‘நினைவுத்துளி’ என்ற பெயரில் மலேசியாவில் இருக்கும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் பலரையும் கொண்ட புலனக் குழுவொன்றை நிர்வகித்து வருகிறார். கூட்டத்தின் இடையிடையே புலனக் குழுவில் வரும் குரல் பதிவுகளையும் காணொளிகளையும் ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பவரை அதிகாரிகள் பல முறை கண்டித்தனர். கூட்டத்திற்கு வந்திருந்த மற்ற ஆசிரியர்களின் வழி திரட்டிய பல முன்னாள் தோட்டத் தொழிலாளர்களையும் குழுவில் இணைக்க முயன்று கொண்டிருந்தார். ஓய்வு வேளையின்போது “ சார் ஒங்களுக்கு எஸ்டேட் பின்னணி இல்லையா சார்… சொந்தகாரங்க இருந்தா சொல்லுங்க சார்… க்ரூப்புல சேத்துடலாம்” என்றவரிடம் அவர் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு தப்பித்துக் கொண்டேன்.

வேறு வழியின்றி, அவரை அழைத்துதான் இப்படி ஒருவரைத் தெரியுமா எனக் கேட்டேன். அவர் சொல்லி சிரம்பான் வட்டாரத்தில் முருகம்மா என்ற பெயரில் மூவர் இருப்பது தெரிந்தது. அதில் அம்மா சொன்ன வயது, முகத் தோற்றத்துடன் ஒருவர் இருப்பது மிக உறுதியாகத் தெரிந்தது. அவரது உறவினர் வழியாக அணுகியபோது அம்மா வாழ்ந்த லிம் சம் தோட்டத்தில் வாழ்ந்தவர் என்பது உறுதியானது. அவர்தான் அம்மா தேடிக் கொண்டிருக்கும் முருகம்மா என்பதை உறுதி செய்ய மூன்று நாட்கள் பிடித்தது.

முருகம்மாவின் கைப்பேசி எண்ணையும் வாங்கி கொடுத்தார் வெள்ளைச்சாமி. அவர் செய்ததற்கு நன்றியாக என்னையும் குழுவில் இணைத்துவிட்டார். முருகம்மா எண் கிடைத்தாலும் உடனடியாக அம்மாவிடம் சொல்வதற்கோ அல்லது அவருக்கே அழைத்துப் பேசவும் சற்றே தயக்கமாக இருந்தது. ‘நினைவுத்துளி’ குழுவில் வந்த சில ஒலிப்பதிவுகளையும் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவைப் போலவே காணாமல் போன அல்லது மறைந்து போன பலரைப் பற்றிக் குழுவில் பேசிக் கொண்டிருந்தார்கள். தோட்டம் மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உருமாறிப்போனப் பின்பும் பழையத் தோட்டத்தின் மிச்சத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

முருகம்மாவிடம் பேசுவதற்கான சொற்களை நன்கு ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் அழைத்தேன். அவரே கைப்பேசியை எடுத்துப் பேசினார். அம்மாவின் பெயரையும் லிம் சம் தோட்டத்தையும் சொன்னதுமே மிக இயல்பான குரலில் “தெரியும்” எனச் சொன்னார். அம்மாவின் எலும்பு முறிவையும் நிலையையும் சொன்னதும் வந்து பார்ப்பதாக உடனே ஒப்புக் கொண்டார். அவருடைய மகனை அழைத்து வரும் தேதியைச் சொல்வதாகச் சொல்லி இரண்டே நாளில் வாரக் கடைசியில் வருவதாகச் சொன்னார்.

முருகம்மா வருவதை நான் அம்மாவிடம் சொல்லவில்லை. ஆனால், அம்மாவிடம் நானே முருகம்மாவைப் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் வருவதற்குள் அம்மாவின் நினைவைக் கூர்மை செய்ய நினைத்தேன்.

“முருகம்மா காடி பின்னலயே ஓடி வருவாங்கலாம்மா… பாவமுல்ல… அவங்களையும் ஏத்திக்கிட்டு போகலாமுல்ல,” என்றேன். கடைசியாக அம்மா முருகம்மாவைப் பற்றி விட்ட இடத்திலேயே கதையைத் தொடங்கினேன்.

“ஒங்க தாத்தாவுக்குதான் அவள பாத்தாலே புடிக்காது. காடி வந்ததும் அது மேல அவருக்கு அப்படி ஒரு பிரியமாச்சி. காடி மேல கொஞ்சம் தூசா இருந்தாலும் அப்பா கண்டபடி ஏசி அடிப்பாரு. அதுக்குப் பயந்துகிட்டே காலையில மத்தியானம் சாயங்காலம்னு பொழுதனைக்கும் தொடச்சுக்கிட்டே இருப்பேன். காடி வந்ததிலிருந்து முருகம்மாவோட சேந்து வெளாயடுறதே இல்லாம போச்சு… காடி கூடவே பொழுது போயிக்கிட்டுருந்துச்சு… பள்ளிக்கொடத்துல இருக்குறப்பயும் காடி நெனப்பாவே இருக்கும். அவ காடி பின்னாடி ஓடி வாரத பாக்க சந்தோசமா இருக்கும். காடியில கைய ஊணிக்கிட்டு என்னா ஓட்டம் ஓடுவா…”

அம்மாவின் கண்களில் ஆச்சரியம். “ஒரு நாளு காலையில… காடில இவ கை வச்சு அழுத்துன எடத்துல என்னமோ கீறல் விழுந்துருச்சுன்னு அப்பா காலையிலேயே என்னைய வெளக்குமாத்துலே போட்டு சாத்தியெடுத்துட்டாரு… அவகிட்ட போயி என்னன்னு கேட்டேன்… அப்படியே ஒன்னும் பேசாம நிக்குறா… போடி! பன்டி மேய்க்கிற புத்தி பீத்தின்னத்தானே போவும்ன்னு… கீழ பிடிச்சுத் தள்ளுனேன். நெத்தியில கல்லு இடிச்சி ரத்தம் வழியுது… அவ வீட்டுக்குப் போயி அவ அப்பாகிட்ட சொல்ல… அவ அப்பா கள்ளு கடையில போயி எங்கப்பா கிட்ட என்னன்னு கேக்க போயிருக்காரு… ரெண்டு பேத்துக்கும் வாய்சண்ட முத்திப் போயி கள்ளுக் கடையிலே கட்டிப் பொரண்டு சண்ட போட்டுக்கிட்டாங்க. எஸ்டேட் ஜனமே வேடிக்க பாக்குது… போதையில சட்டை கிழிஞ்சு ரத்தம் காயத்தோட இருந்தவர அண்ணன்தான் கைத்தாங்கலா வீட்டுக்குக் கொண்டு வந்தாரு. அவர பாத்ததுமே எங்க அம்மா அவ வீட்டு முன்னாலே மண்ணு வாரி தூத்தி உட்டாங்க… இதான் சமயம்னு ஜோசப் கங்காணி அப்பாவ பத்தி தொரைங்க கிட்ட என்னத்தையோ சொல்லி ரெண்டு வாரம் நோட்டிஸ் கொடுத்து எங்கள எஸ்டேட் வீட்டு வெளியாக்கிட்டாங்க!” எனச் சொல்லும்போதே அம்மாவின் தொண்டை தழுதழுத்தது.

அம்மா சொன்ன கதையைக் கேட்டதும் அச்சம் எழுந்தது. இந்தக் கதையை முதலிலேயே சொல்லியிருந்தால் இப்படி ஒரு அதிர்ச்சி சந்திப்பை நான் ஏற்பாடு செய்திருக்க மாட்டேன். சனிக்கிழமை நெருங்க நெருங்க அம்மாவும் அவரும் மாறி மாறி வாய் சண்டை போடுவதைப் போல கனவுகள் எழுந்தன.

அம்மா உடனடியாக யாரிடமும் இறங்கிச் செல்லும் குணம் கொண்டவரில்லை. நாங்கள் செய்த சிறு தவறுக்காகச் சிறுவயதில் வாரக் கணக்காகப் பேசாமல் இருந்திருக்கிறார். அந்தத் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டப் பின்பும் சில நாட்களுக்குப் பின் வேலை ஏவுவதற்காகத்தான் மறு பேச்சைத் தொடங்குவார். அந்தக் கதைகளைத் தேவியிடம் சொல்லியிருக்கிறேன் என்பதால் இருவருக்கும் எங்கிருந்து பேச்சு தொடங்கும் என்பதை எண்ணி இருவருக்குமே கலக்கமாக இருந்தது.

முருகம்மாவின் மகன் வீட்டுக்கு அந்த வாரச் சனிக்கிழமை வந்திருந்தார். வாசலில் வந்து எங்களிடம் விசாரித்துவிட்டு அவர் அம்மாவைக் காரில் இருந்து இறங்கச் சொன்னார். முருகம்மா அம்மா சொன்னதைப் போலவே அழகாக இருந்தார். தோலில் சுருக்கங்கள் விழுந்திருந்தாலும், சிறுவயது அழகின் தடம் முழுவதும் மறையாமல் இருந்தது. அப்படித் தோன்ற அவர் பூசியிருந்த பவுடர் மணமும் வாசனைத் திரவியத்தின் மணமும் கூட காரணமாக இருக்கலாம். இளஞ்சிவப்பு நிறச் சட்டையும் கவுனும் அணிந்து கைகளில் சிறிய கைப்பையொன்றை வைத்திருந்தார்.

“அவளுக்குத் தெரியுமா?” என்றார்.

“இல்லை, சொல்லவில்லை” என்றேன்.

மென்மையாகச் சிரித்தார்.

கட்டிலை ஒட்டி இருந்த கறுப்பு நாற்காலியில் முருகம்மா சென்றமர்ந்து கொண்டார். கைப்பையை நாற்காலிக்கு அடியில் தள்ளி விட்டு கவுனைச் சரிசெய்து அம்மாவைப் பார்த்தார். அப்போது அம்மா உறக்கத்தில் இருந்தார். மெல்ல தன் விரல்களால் அம்மாவை வருடவும் அம்மா கண் விழித்தார். நான் அறையை வெளியே இருந்த நீலத்திரைச்சீலைக்குப் பின்னால் நின்று கொண்டேன்.

அம்மா “முருகம்மா!” என்றார். அது ஒரு சிறுமியின் குரல் போல இருந்தது.

நான் எட்டிப்பார்த்தேன்.

அம்மா மெல்ல தன் கையை எடுத்துச் சென்று முருகம்மாவின் வலது நெற்றியில் இருந்த தழும்பை வருடினார்.

அன்புடன் அவள் கைகளைப் பற்றிய முருகம்மா, “அன்னிக்கு நா ஓடி வந்தது காடி பின்னால இல்ல புள்ள… உன் பின்னால…”

நான் சட்டென திரைச்சீலையை மூடினேன். மனைவி என்ன என்பது போல பார்த்தாள். நான் மௌனமாக அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டேன்.

4 comments for “வருடல்

  1. Nathanvsg
    September 3, 2024 at 10:24 am

    சிறந்த நடை. ஆழ்ந்து படித்தேன். திடீரென நிறைவுற்றது. இரு பழைய தோழிகள் என்ன பேசியிருப்பார்கள்?!

  2. September 4, 2024 at 5:25 pm

    “அந்நிக்கி நான் ஓடி வந்தது காடி பின்னால இல்ல புள்ள, ஒன் பின்னால” என்று முருகம்மா சொல்லும்போது பால்யத்தில் உண்டான உண்மை நட்பு புரிகிறது. பெரியவர்களிடையே காணப்படும் வர்க்கப்பிரிவு மனப்பாண்மை சிறுமிகளான கதை சொல்லியின் அம்மாவையும் முருகம்மாவையும் எந்த விதத்திலும் பாதித்திருக்கவில்லை. அவளோடு சேராதே என்று முருகம்மாவை தள்ளிவைத்தே பார்க்கிறார் கதைசொல்லியின் அப்பா. ஆனால் பால்யத்தில் வேரூன்றிய நட்பு முதுமைவரை நீடித்திருப்பது இயல்புதான் என்றாலும், நினைவு மரித்துப் போனாலும் முருகம்மாவை மட்டும் கேட்டுக்கொண்டேயிருப்பதை வாசிக்கும்போது மாநுடம் வகுத்துக்கொண்டு வழக்கமாக்கிக்கொண்ட பேதங்கள் ஆழ்மனதில் உடையாமல் உயிர்த்திருக்கிறது என்றே புரிந்துகொள்கிறேன். இந்த நுணுக்க விவரணையை பிரச்சாரமில்லாமல் சொல்லியிருப்பதே கதையின் சிறப்பு.

  3. pnirmalk
    September 4, 2024 at 7:49 pm

    சிறந்த நடை. மலேஷிய வாழ்வினை அரவின் குமார் அருமையாக எழுதியுள்ளார். தோட்டத்தொழிலாளர் வாழ்வு, தொழில், அதில் உருவாகும் அன்பு, அது அடியாழத்தில் புதைந்து போதல் , வயதாவதன் உடல் பிரச்சனைகள், மனப்பிரச்சனைகள் என கதை அனைத்தினை நன்கு காட்சிப்படுத்தியுள்ளது.

  4. Sharvin Selva
    September 7, 2024 at 2:02 pm

    முதுமையில் மிக நிச்சயமாய் தோன்றும் இறுக்கமும், அதை தொடரும் தளர்வும், மிக இயல்பாய் கதையில் வந்திருக்கிறது. முதுமையில் பிதற்றுவதும், அரற்றுவதும் ஒரு புறமென்றால், நினைவை சுவைத்தலும், தொடுதலை அணைத்தலும் இன்னொரு புறம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. அல்லது வசந்த நிலமும் செம்புலமும் போல. அதில் அவர்கள் காணும் சுகம், வாழ்ந்த வாழ்வின் உச்சம். நெடுங்காலம் தொலைத்த ஒன்றை, இறுதியில் கண்டுக் கொண்டு, அதை தீண்டி பெரும் இன்பத்திற்குதான் எத்தனை முழுமை. அந்த வருடலுக்கு தான் எத்தனை ஆழம். தொலைந்த ஒன்று மீண்டும் கிடைக்கப் பெற்றவர்கள் இதை அறிவார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...