தாரா: அனைத்து புத்தர்களின் தாய்

மனித வரலாற்றின் பரிணாமத்தில், பெண் தெய்வ வழிபாடு காலங்கள் கடந்தும் மாறாமல் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பெண் தெய்வ வழிபாடு மனித நாகரிகங்கள், கலாச்சாரங்கள் நம்பிக்கை போன்றவற்றைச் சார்ந்த அமைப்புகளை வடிவமைத்ததில் முக்கிய அம்சமாகவே இருந்துள்ளது. வெவ்வேறு பெயர்கள், முகங்கள் சின்னங்களால் அடையாளப்படுத்தப்பட்டாலும், இந்த மரியாதைக்குரிய போற்றுதல் அனைத்தும் பெண் புனிதமானவள் என்ற ஒரு புள்ளியிலே அடங்குகிறது அல்லது அடைக்கப்பட்டுள்ளது. எந்த மதமாக இருந்தாலும் அம்மதத்தில் பெண்களின் புனிதத்தைக் கொண்டாடப்படும் வகையிலே அதன் வழிபாடுகளும் காரணங்களும் அமைந்துள்ளன. அதே சமயம், பெரும்பாலான மதங்களில் பெண் தெய்வமாக இருந்தாலும் அவர்களுக்குத் தொண்டு செய்யவும் தெய்வத்திற்கும் பக்தர்களுக்கும் இடையில் தூதுவராகவும் அங்கீகரிக்கப்பட்டவர்களாக ஆண்களே உள்ளனர்.

சமீப காலங்களில்கூடப் பௌத்த சமயத்தில் பெண்களைப் புத்த பிக்குகளாக நியமிப்பது குறித்து பல சர்ச்சைகள் எழுவதைக் காண முடிகின்றது. ஆரம்ப காலகட்டத்தில் பௌத்ததில் பெண்கள் துறவிகளாவது வழக்கத்தில் இருந்தாலும் கூட,  நாளடைவில் படையெடுப்புகள், போர்கள், பஞ்சம் மற்றும் பெண்களின் மீதான ஒடுக்குமுறையின் ஆதிக்கம் எனப் பல காரணங்களால் இந்நடைமுறை பலவீனமடைந்து சில நாடுகளில் முற்றிலுமாக கைவிடப்பட்டது. அதன் விளைவாக, பின் நாட்களில் பெண்களை முழுமையான பிக்குணியாக நியமிக்கும் நடைமுறையானது திபெத் போன்ற பிற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படவில்லை. தாய்லாந்தில் 1928-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக பௌத்த சட்ட உத்தரவின் கீழ் பெண்களைப் பிக்குணியாக நியமிப்பதைத் தடைசெய்து, ஆண்கள் மட்டுமே துறவிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நூற்றாண்டில் பௌத்த சமயத்தில் பெண்களின் நிலை இவ்வாறு இருந்தாலும், பௌத்தத்தின் தொடக்க காலங்களில் தாரா தேவி என்ற பெண்ணின் எழுச்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் இன்னமும் பேசப்பட்டும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டும் இருக்கின்றன. பெண்களும் துறவறம் பூண்டு ஞானம் அடையலாம் என்று நிரூபித்துக் காட்டியவள்தான் தாரா. அதன் பின், தாரா தேவியை எடுத்துக்காட்டாகக் கொண்டு அதனை பின்பற்றவும் செய்துள்ளனர் என்று கதைகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. இக்கட்டுரை அவற்றை அடிப்படையாகக் கொண்டு தாராவை அறிந்துகொள்ள எழுதப்பட்டுள்ளது.

தாரா

தாரா தேவியின் வழிப்பாடு எழுச்சிப் பெற்றதன் காரணமாகவே பௌத்த சமயத்தில் பெண் தெய்வங்களின் மீதான ஈடுபாடு வலுப்பெற்றுள்ளது. தாரா தேவி பல பரிணாமங்களைக் கொண்ட ஒரு காப்பாளராகவே போற்றப்படுகிறார். பௌத்த சமயத்தின் தொடக்க காலங்களில் பௌத்த மார்க்கத்தின் இறுதி இலக்கான நிர்வாணம் (Nirvana) என்பதை அடைய பெண்கள் தகுதியற்றவர்கள் என்று கருதி அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், மற்ற பௌத்த பற்றாளர்கள் இந்நிலையை அடைவதற்குப் பெண்கள் தடையாக இருப்பதாகவே எண்ணினர். ஞானம், மறுபிறப்பு மற்றும் துன்பத்தின் சுழற்சியில் இருந்து விடுபடுவதற்கான நிலையே நிர்வாணம் (Nirvana) எனப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையின் பிற்பகுதியில், பெண்கள் துறவற அமைப்பில் சேர அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சமூகம் மற்றும் மடங்கள் தொடர்ந்து ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், பெண்கள் ஓர் ஆன்மீக வழிகாட்டியாவது அரிதாகவே நிகழ்ந்து வந்தது. நாளடைவில் பௌத்தம் உலகெங்கும் விரிவடையத் தொடங்கி பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பற்றைப் பெற்று வந்த நிலையில், அது அதன் அடிப்படை நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் சில மாற்றங்களுக்கு உட்பட்டது. குறிப்பாக இம்மாற்றங்கள் ‘மகாயானம்’ (Mahayana) எனப்படும் பிரிவின் தோற்ற வரலாற்றில் வெளிப்படுகிறது.

‘மகாயானம்’ பிரிவு தனித்துவமானதாகத் திகழ்வதற்கு, கருத்தை நோக்கிய போதிசத்வாவின் புதிய அணுகுமுறை முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. உலக துன்பங்களிலிருந்து விடுதலை பெற ஆசை எனும் சுடரை அணைக்க முடிந்த ஒருவரே மகாயான பிரிவில் போதிசத்வா எனஅங்கீகரிக்கப்படுவார்கள்.

வஜ்ராயனம்

மகாயானியத்தில் (Mahayanism), தெய்வ வழிபாடு ஒரு முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியது. இவ்வாறு இதன் துணைபிரிவாக தோன்றியதுதான் ‘வஜ்ராயன’ பௌத்தம் (Vajrayana Buddhism). இது தாந்திரிக பௌத்தமாகவும் அங்கீகரிக்கப்பட்டது. இப்பிரிவில் பெண் தெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. மனித உடலினுள் பாலினத்திற்கு அப்பாற்பட்டு ஓர் உண்மை வாழ்கின்றதையே வஜ்ராயனா வலியுறுத்துகிறது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்குள்ளும் உண்மையும் ஆன்மீக சாரமும் இருப்பதாக நம்பப்படுகிறது.இருப்பினும், சில விடயங்களில் பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். வஜ்ராயனாபௌத்தத்தில்ஆன்மீக சடங்குகளுக்கு, குறிப்பாக தாந்திரிக சடங்குகளுக்கு, ஒரு பெண் உடலின் இருப்பு (a presence of a women’s body) அவசியம். ஏனென்றால், பெண் உடல் ஆன்மீக உணர்வை அடைவதற்கான முக்கிய ஆதாரமாகவும் பாதையாகவும் பார்க்கப்படுகிறது.மேலும், ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே உண்மையைக் கண்டறியும் திறனைக் கொண்டிருந்தாலும், இந்த ஆன்மீக சடங்குகள் அல்லது நடைமுறைகள் முழுமையடைய பெண் உடல் அவசியமான பங்கைக் கொண்டுள்ளது.இதனால், பெண் உடல் உண்மையை உணரும் உறைவிடமாகவும் ஊடகமாகவும் இருக்கின்றது என்பதை நம்புகின்றனர். வஜ்ரயான பௌத்தத்தின் மிக உயர்ந்த மற்றும் நன்கு அறியப்பட்ட தெய்வம் தாரா தேவி என்ற கருத்தைப் பௌத்தம் சார்ந்து ஆய்வு செய்கின்ற ஆய்வாளர்கள் பலர் ஒப்புக்கொள்கிறார்கள்.

தாரா எனும் பெயர்

‘தார்’ என்ற வேர்ச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் தாரா என்ற பெயர். தாரா என்பவள் தன் பக்தர்களைக் கடல் அல்லது பெருங்கடலைக் கடக்கச் செய்யும் தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இது மக்கள் எம்மாதிரியான ஆபத்துகளில் இருந்தும் பேரிடர்களில் இருந்தும் கடந்து வர வழி செய்வாள் என்ற நம்பிக்கைக்கு உரியவளாக தாரா தேவி இருக்கிறாள் என்பதைக் குறிக்கின்றது. தாரா என்ற சொல்லுக்கு ‘நட்சத்திரம்’ என்று பொருள்.ஒரு நட்சத்திரம் இரவு வானத்தைக் கடப்பது போல தாரா தேவியும் மனிதர்களைத் துன்பத்திலிருந்து கடக்கச் செய்கிறாள். மேலும், ‘கடந்து செல்வது’, ‘மீட்பவர்’ மற்றும் ‘வழிநடத்துகிறவள்’ என்ற பொருளும் வழங்கப்படுகிறன. இதன் வழியே, தாரா என்பதற்கு மற்றவர்களைக் கஷ்டங்களில் இருந்து வழி நடத்தி அல்லது சுமந்து சென்று, கஷ்டங்களைக் கடக்கச் செய்தல் எனப் பொருள் கூறப்படுகிறது. தாரா மற்றவர்களைத் துன்பங்களில் இருந்து மீட்டு, பாதுகாத்து விடுதலை செய்பவள். தாரா ஒரு பௌத்த தெய்வமாக உருவான தோற்றம் குறித்த விளக்கங்கள் பல பண்டைய இலக்கியங்களில் மற்றும் பிரபலமான நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாரா உருவான கதை

திபெத்திய போதனை படி, தாரா தேவி முதலில் ஒரு இளவரசியாக இவ்வுலகில் பிறந்துள்ளார். யேஷே தாவா (Yeshe Dawa) என்பதே இந்த இளவரசிக்குச் சூட்டப்பட்ட பெயர். இப்பெயருக்கு ‘முதன்மை ஞானத்தின் சந்திரன்’ (Moon of Primordial Wisdom) என்று பொருள். உலக வாழ்வில் துன்பப்படும் அனைத்து மக்களின் நலனுக்காக, தான் ஞானம் அடையப் போவதாக இளவரசி யேஷே தாவா உறுதிமொழிக் கொண்டார்.

ஆன்மீக அடிப்படையில் முதல் விடுதலை பெற்ற பெண் தாரா என்ற ஒரு பார்வை இருப்பதற்கு இக்கதையின் கரு முக்கிய விடயமாக உள்ளது. அக்காலக்கட்டத்தில், ஒரு ஆண் மட்டுமே ஞானம் பெற முடியும் என்று நம்பப்பட்டதால், இளவரசி ஆணாக மறுபிறவி எடுக்க பிரார்த்தனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், இளவரசி யேஷே தாவா, தனது ஞான அறிவொளியை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பெண் வடிவிலேயே மேற்கொண்டு, ஞானம் அடைவதாகவும் சபதம் செய்தார். அது போலவே இறுதியில், இளவரசி யேஷே தாவா முதலில் போதிசத்வாவாக மாறி, பின், மெய்ஞானம் அடைந்து தாரா என்று அறியப்பட்டார் என்று கதை உண்டு. 

பாலின அடையாளம் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்புடைய முழுமையான உண்மைகளைப் புரிந்து கொள்ள தாராவின் சபதம் ஒரு உத்வேகமாகச் செயல்பட்டுள்ளது. இந்தச் சபதத்தை எடுத்துக்கொண்டு அதன்படி ஞானம் அடைந்து காட்டிய தாரா, காலம் காலமாக பின்பற்றி வரும் கட்டாயத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு தனக்கான சுய வழியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

பின், தாரா ‘போதிசத்துவர் அவலோகிதரின்’ (Bodhisattva Avalokitesvara) என்ற பெண் அவதாரத்தை எடுத்தார். எல்லா உயிரினங்களையும் துன்பத்தில் இருந்து விடுவிக்க அவர் பல யுகங்களாக உழைத்த பின்னரும் உலகம் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என்பதை உணர்ந்த தருணத்தில் அவலோகிதரின் கண்களில் இருந்து சிந்திய பரிதாப கண்ணீரில் இருந்து மலர்ந்த தாமரையில் பிறந்தவள் தாரா என்பது பொதுவான கதையாக உள்ளது. இது போல நேபாள தேசத்திலும் ஒரு கதை உண்டு. ‘விரத கதா’ என்ற கதையில் தாரா பெண் போதிசத்துவராகப் பிறந்ததாகவே சித்தரிக்கிறார்கள்.

தாராவின் பன்முக வடிவங்கள்

மெய்ஞானம் அடைந்து தாரா ‘சம்போககாய’ (Sambhogakaya) பரிமாணத்திற்குள் நுழைந்தாள். ‘சம்போககாய’ பரிமாணம் என்பது ஒளியின் பரிமாணம் (dimension of luminosity) என்றும் எல்லையற்ற வடிவங்களின் நுட்பமான உடல் (subtle body of limitless form) என்றும் பொருள்படுகிறது. இது சாதாரணமாக அடையக்கூடிய பரிமாணம் அல்ல. இதன் வழியே தாரா அவளுடைய இருபத்தொரு வடிவங்களையும் வெளிப்படுத்தினாள். இவ்வடிவங்களில் ஆனந்தம், அமைதி, வெறுப்பு, கோபம், கடுமை, ஆசை மற்றும் திகைப்பு ஆகியவைகள் அடங்கும். தாராவின் ஒவ்வொரு வடிவமும் உணர்வுகளின் மற்றும் இரக்கத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை உள்ளடக்கியது. அனைத்து பரிமாணங்களிலும் மற்றும் நிலப்பகுதிகளிலும் உள்ள உணர்வுள்ள உயிரினங்களுக்கு உதவ அவள் அந்த எல்லா வடிவங்களிலும் தன்னைக் கிடைக்கச் செய்தாள் எனக் கூறப்படுகிறது.

தாராவை அடையாளம் காணக்கூடிய ஆரம்பக்காலக்கட்ட உருவ படங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் என யூகிக்கப்படுகின்றது. அப்படங்களில் தாரா பௌத்தத்தின் மும்மூர்த்திகளில் ஒருவராக (member of a triad); மையத்தில் அவலோகிதர் (Avalokiteśvara), அவரது வலதுபுறத்தில் தாரா (Tara) மற்றும் அவரது இடதுபுறத்தில் பிருகுதி தேவி (Bhrikuti) எனக் காட்சியளிக்கின்றனர். தாரா அவலோகிதரின் கருணையில் இருந்து உருவானவர் என்ற கூற்றை மேலும் வலுப்படுத்த இச்சான்று உதவுகிறது. கருணையின் வடிவமாக தாரா விளங்குவதால் இவ்விரண்டு பெண் தெய்வங்களில் தாரா மிகவும் முக்கியமானவராக இருந்துள்ளார். இருப்பினும், அச்சமின்மை மற்றும் தைரியம் இவை இரண்டுமே தாரா தேவியின் கொள்கையாகப் பின்பற்றப்பட்டன. இது மட்டுமல்லாமல், குழப்பம் மற்றும் கவனச் சிதறல்களால் பாதிக்கப்படும் மனிதர்களைக் கையாளும் முக்கிய தெய்வங்களில் தாராவும் ஒருவராக வணங்கப்படுகிறார்.

காலப்போக்கில், திபெத்திய பௌத்தத்தின் செல்வாக்கின் கீழ், தாராவின் வடிவங்கள்108ஆக விரிவடைந்து பெருகி, தாராவின் வெவ்வேறு வடிவங்களையும் அங்கீகரிக்கும் பாரம்பரியம் உருவானது. இருப்பினும், திபெத்திய பௌத்தம் தாராவின் குறிப்பிட்ட 21 வடிவங்களின் சித்தரிப்பை மட்டுமே முதன்மையானதாக வலியுறுத்துகிறது. திபெத்தியப் பாரம்பரியத்தில் பச்சை தாராவை மைய புள்ளியாகக் கொண்டு அதனை சுற்றி வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பல வண்ணங்களில் மொத்தமாக 21 வெவ்வேறு வடிவங்களில் தாராவை வணங்குகின்றனர்.

தாரா தேவி பலவிதமான பண்புகளுடன் தொடர்புடைய பல்வேறு வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கின்றார். தாராவின் ஆரம்பக்கால வடிவங்கள் எவ்வாறு இருந்துள்ளது என்பதை அவளுடைய தோற்றத்தின் கதைகள் விரிவாக விவரிக்கின்றன. அவலோகிதர் கண்ணீரில் இருந்து மலர்ந்த தாமரையில் பிறந்தவள்தான் தாரா என்ற கதையின் விரிவாக்கமான மற்றொரு கதைபடி அவலோகிதரின் இரு கண்ணீரிலிருந்து சிந்திய கண்ணீர் துளிகளிலிருந்து மலர்ந்த இரு தாமரையில் வெள்ளை தாரா மற்றும் பச்சை தாரா என இரண்டு தாரா தேவிகள் தோன்றினர்.

தாராவின் நிறங்கள்

ஜீனா என்று சொல்லப்படும் வெற்றியின் ஐந்து வகையான வண்ணங்களிலும் தாரா அவதாரம் ஏற்றுள்ளார். ஜீனா என்பதற்கு வெற்றியாளர் என்று பொருள். சம்சாரத்தில் மனிதர்களைச் சிறைபிடிக்கும் அனைத்து எதிர்மறை சக்திகளையும் வெல்பவர்களை ஜீனா என்று புத்த மதத்தில் குறிப்பிடுகின்றனர். பச்சை நிறத்தில் குறைந்தது பத்து வடிவங்களும்வெள்ளை நிறத்தில் ஏழு வடிவங்களும்மஞ்சள்/தங்க நிறத்தில் ஐந்து வடிவங்களும்நீல நிறத்தில் இரண்டு வடிவங்களும் சிவப்பு நிறத்தில் ஒரு தாரா வடிவமும் உள்ளன.

பச்சை தாரா

பச்சை தாரா பெரும்பாலும் ‘கதிரவாணி தாரா’ (Khadiravani Tara) அதாவது மணம் மிக்க காடுகளின் தாரா என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள். இது தாராவின் மிகவும் பிரபலமான வடிவங்களில் ஒன்றாகும். இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவும் அமைதியான தெய்வமாக இருந்தாலும் எதிரிகளை எதிர்கொள்வதற்கு அவள் பயமுறுத்தக் கூடிய கடுமையான வடிவங்களை எடுக்க வல்லவள் எனச் சொல்லப்படுகின்றது.

பச்சை தாரா அமோகசித்தி புத்தரின் துணைவி (Amoghasiddhi) என்றும் அறியப்படுகிறாள். முழுதாக மலர்ந்த தாமரை மற்றும் தாமரை மொட்டு என மாறுபட்ட சின்னங்களுடன் கொண்டிருக்கும் வெள்ளை தாரா மற்றும் பச்சை நிற தாரக்கள், தெய்வத்தின் முடிவில்லாத இரக்கத்தை அடையாளப்படுத்துகின்றனர்.

தாமரையில் பச்சை தாரா ஒரு கால் மடக்கி தியானம் செய்வது போன்றும் மற்றொரு கால் வெளியே வைத்து அமர்ந்திருப்பது போலவும் இருக்கும். மடக்கிய கால் பாதம் நிர்வாணத்தையும் (Nirvana)வெளியே இருக்கும் கால் பாதம் சம்சாரத்தையும் (SAMSARA) குறிக்கின்றன. அதாவதுதான் ஞானம் பெற அமைதியாகத் தியானம் செய்யும் அதே நேரம் இவ்வுலகத்தை விட்டு விலகாமல் எப்பொழுதும் உயிர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றேன் என்பதை உணர்த்துகிறது.

இது மட்டுமில்லாமல், பச்சை தாரா காதிரா (Khadira) மற்றும் பொட்டாலா (Potala) என்று சொல்லக்கூடிய காட்டில் இருந்து வருகிறாள் அல்லது அவள் அங்கு வாழ்கிறாள் என்றும் பல கதைகளும் நம்பிக்கைகளும் உள்ளன. எனவேதான் தாரா மரங்கள், காற்று மற்றும் பசுமையின் ஆற்றல் உடையவள் என்று போற்றப்படுகிறாள். அவலோகிதரின் தூய நிலம் எனச் சொல்லப்படும் லாசாவில் உள்ள தலாய் லாமாவின் பெரிய அரண்மனை பொட்டாலா என்ற (Potala) பெயரால் அழைக்கப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடும். தாராவைப் புகழ்ந்து பாடும் கவிதைகளில், காதிரா காட்டை மிகவும் பசுமையானதாகவும்அழகானதாகவும்காட்டு விலங்குகள் அங்கு மகிழ்ந்து விளையாடுவதாகவும்அங்கு பல மருத்துவ மூலிகைகள் வளர்ந்து செழிப்பாகக் காட்சியளிப்பதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. பச்சை தாரா இயற்கையின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறாள். அனைத்து தாராக்களிலும் பச்சை தாராவின் வடிவம் அனைத்து தாராக்களின் உச்சம்.  அவள் அறிவொளியின் பெண்பால்.

வெள்ளை தாரா

வெள்ளை தாரா, ஒரு முகம் மற்றும் ஆறு கரங்களுடன் அமைதியான தோற்றத்தில் வெள்ளை தாமரையின் மீது அமர்ந்திருக்கும் தெய்வமாகக் காணப்படுகிறாள். வெள்ளை தாராவின் மற்றுமொரு அவதாரத்தில் மூன்று முகங்கள் மற்றும் பன்னிரண்டு கரங்களுடன், மாலை, புதையல் நிரப்பப்பட்ட பானை, புத்தகம் மற்றும் பலவற்றையைக் கைகளில் ஏந்தி இருப்பது போல் காட்சியளிக்கின்றாள். மன அமைதிக்காகவும்நோய்களைக் குணப்படுத்த வேண்டியும் வெள்ளை தாரா தேவியை மக்கள் வணங்குகின்றனர்.

சிவப்பு தாரா

சிவப்பு நிறத் தாரா எட்டு ஆயுதங்களைக் கையில் ஏந்திக் கொண்டு தங்க தாமரையில் அமர்ந்திருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார். இழந்த சக்தியைத் திரும்ப பெற செய்வதே சிவப்பு தாராவின் மகிமையாகக் காணப்படுகிறது. சிவப்பு தாராவின் மற்றொரு தோற்றம் வரங்களை வழங்குபவர் எனப் போற்றப்படும் வரதா-தாரா (Varada-Tara) வடிவத்தில் உள்ளது. நேர்த்திக் கடன் செழுத்தும் நிகழ்வுகளின்போது கட்டாயமாக சிவப்பு தாராவை வணங்கும் வழக்கம் உள்ளது. சில சமயங்களில் மூன்று கண்கள் கொண்ட முகம் மற்றும் இரண்டு கைகளில் ஒன்றில் திரிசூலத்தை வைத்திருப்பது போன்றும் சிவப்பு தாராவின் உருவம் விவரிக்கப்படுகின்றது. எதிரிகளை அழிப்பவள் என்று அழைக்கப்படும், சிவப்பு தாராவின் வழிபாடு பக்தர்களின் மனதின் திறனை அதிகரிக்க வல்லது என நம்பப்படுகிறது. சிவப்பு தாராவுக்கு ‘குருகுல்லே’(Kurukullā) என்ற பெயரும் உண்டு. அதற்கு எதிரிகளை அடக்கி ஆள்பவள் என்று பொருள்.

மஞ்சள் / தங்க தாரா

தாரா தேவியின் தங்க நிற உருவம் ஒரு முகம் மற்றும் பத்து கரங்களுடன் காணப்படுகிறது. சில கைகளில் சில பொருள்களை ஏய்தி இருப்பது போல் காட்சியளிக்கின்றாள். அவற்றில் ஜெபமாலை, பட்டுத் தாவணி, தாமரை, மணி போன்றவை அடங்கும். ஆயுளை நீடிப்பதற்க்குப் பிரார்த்தனைகள் செய்ய உகந்த தெய்வமாக தங்க தாரா திகழ்கிறாள்.

தங்க தாராவின் மற்றொரு வடிவமாக, ஒரு மஞ்சள் தாமரை மீது அமர்ந்து, ஒரு முகம் மற்றும் நான்கு கைகள் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. இந்தத் தாராவை பெரும்பாலும் ‘உஷ்னிஷா-விஜய-தாரா’ (Ushnisha-Vijaya-Tara) என்று பாடல்களில் குறிப்பிடுகின்றனர். மேலும், நஞ்சை நடுநிலையாக்க தங்க தாரா பிரார்த்தனை செய்யப்படுகிறாள். இது மட்டுமில்லாமல், ஒரு முகம் மற்றும் எட்டு கைகள் கொண்ட மற்றொரு தங்க தாராவின் வடிவைச் செழுமையின் அடையாளமாக உணர்கின்றனர். இவ்வுருவம் கொண்ட தாராவின் வழிப்பாட்டு சடங்குகளுக்குத் தீ முக்கிய அம்சமாக விளங்குகின்றது. ஒரு முகம் மற்றும் இரண்டு கைகள் கொண்டு, மஞ்சள் வடிவ தாராவின் வலதுபுற கையில் கீழ்நோக்கி அபய முத்திரையும் இடதுபுற கையில் தங்க தாமரையைப் பிடித்திருப்பது போலவும் விவரிக்கின்றன. இவள் தீயவர்களை அடக்கும் சக்தி கொண்டவளாகப் பார்க்கப்படுகிறாள்.

நீல தாரா

அதன் பிறகு, நீல வடிவில் இருக்கும் மூர்க்கமான முக அம்சத்தைக் கொண்ட உக்ரா தாரா (Ugra Tara) எதிரிகளை அழிக்கும் வல்லமைக் கொண்டவள் என்றும் சொல்லப்படுகின்றது. நீல நிற தாரா இரு கைகளைக் கொண்ட வடிவில் தனது வலது கையில் திரிசூலத்தை வைத்திருப்பது போல் காட்சியளிப்பாள். உக்ரா தாரா இந்து தாந்த்ரீக மரபுகளிலும் பரவலாக வழிபடப்படுகிறாள். இந்த மரபின் அடிப்படையில் மகா பிரளயம் (Great Dissolution) போது பிரபஞ்சத்தை மூடிய நீரில் மலர்ந்த வெள்ளை தாமரையில் வீற்றிருப்பது போல அவள் காட்சியளிக்கிறாள். தாராவின் இந்த வடிவம் பஞ்சாப் மலைகளில் (Punjab Hills) பிரபலமாக இருந்துள்ளது என்பதற்கு ‘பஹாரி’ ஓவியங்கள் (Pahari paintings) சான்றாக விளங்குகின்றன. அவ்வொவியங்களில் பெரும்பாலும் தாராவை ‘தச மகா வித்யாக்கள்’ (Mahavidyas) என்று அழைக்கப்படும் தெய்வங்களின் குழுவில் ஒருவராக சேர்த்து வரைந்திருப்பார்கள். மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம் (அமராவதி குகைகள்), நேபாளம் மற்றும் திபெத்தில் உக்ரா தாரா தெய்வத்தின் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கறுப்பு தாரா

கறுப்பு நிற தாரா முக்கிய ஜீனா வண்ணங்களின் வரிசையில் இல்லாவிடினும், இந்து மதத்துடன் அதிக தொடர்புடைய தாரா என்பதால் குறிப்பிட்டு பார்க்கப்பட வேண்டியுள்ளது. கறுப்பு நிற தாரா அனைத்து கோபங்களையும் வெளிக்காட்டுவது போல கடுமயான முகபாவனையைக் கொண்டு, வாய் அகலத் திறந்திருக்கும் பாணியில், அவளுடைய மஞ்சள் தாமரை சிம்மாசனத்தின் மையத்தில் உள்ள நெருப்பு உமிழும் சூரிய வட்டில் அமர்ந்திருப்பாள். வழக்கமாக மற்ற நிற தாராக்கள் சந்திரனின் ஒளிக்கதிரின் மையத்தில் சாந்தமாகக் காட்சியளிக்கும் தோரணை இருக்கும், கறுப்பு தாராவிடம் மட்டும் சூரிய ஒளிக்கதிர் இருப்பதைப் பார்க்க முடியும். பௌத்தத்தில் சந்திரன் சாந்தமான தெய்வங்களின் அடையாளமாகவும்சூரியன் உக்கிரமான தெய்வங்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

கருப்பு தாரா ஒரு முகம் மற்றும் நான்கு கைகளை உடையவள், அவளது தலைமுடி பாம்புகளால் மேல்நோக்கி முட்டும் தோரணையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பகைவர்களை நசுக்கும் தாரா (Tara Crushing Adversaries) என்ற பெயறும் இவளுக்கு உண்டு. வலது கையில் வாளும்சக்கரமும் ஏந்தியவள், இடது கைகளில் வஜ்ராவுடன் கூடிய தாமரையை ஏந்தியபடி மிரட்டும் தொனியில் காட்சியளிக்கின்றாள். மற்றொரு இடது கையில் கருப்பு குடுவையை வைத்திருக்கிறாள், அதில் மிகவும் சிதைத்திற மற்றும் எதிர்மறை சக்திகளை வெல்லக்கூடிய ஆற்றல் மிகுந்த சக்தி உள்ளதாக நம்பிக்கை. இதனால், கறுப்பு தாரா அனைத்து எதிர்மறை சக்திகளையும் அழிப்பவர் என்றும் அழைக்கப்படுகிறாள்.

எட்டு பெரும் அச்சங்கள்

மேலும், தாராவின் இயல்பு எந்நிலையிலும் ஒருமைநிலைவாதம் (Nondualism) உடையது மற்றும் எந்த எல்லைகளும் அவளது வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாத உறுதி உடையது ஆகும். இவைகளே தாரா பிறவிச்சுழற்சி (samsara) மற்றும் முக்தி நிலையின் (nirvana) தாய் என்று அழைக்கப்படுவதற்கான காரணமாக உள்ளன. மனிதனை உண்ணும் பேய்கள் என பட்டியலிடப்படும் சிங்கங்கள் (பெருமை), காட்டு யானைகள் (அறியாமை), நெருப்பு (கோபம்), பாம்புகள் (பொறாமை), வெள்ளம் (பற்றுதல்), சிறைவாசம் (கஞ்சத்தனம்), திருடர்கள் அல்லது பிசாசர்கள் (தவறான பார்வைகள்) மற்றும் நரமாமிசம் உண்ணுதல் (சந்தேகம்) ஆகிய எட்டு பெரும் அச்சங்கள் அல்லது ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவதில் பிரசித்தி பெற்ற தெய்வமாக தாரா வணங்கப்படுகிறாள்.

உலகில் பேயருவம் (Demon) போன்ற அச்சங்களையும் ஆபத்துகளையும் அவள் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவள் என்பதால், தாரா பாதாள உலகத்தின் தேவியாகவும் (Goddess of the Underworld) கருதப்படுகிறாள் என்ற நேரடியான கருத்தும் உள்ளது. பல தாந்திரிக நடைமுறைகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கதைகளில் பேய்கள், ஆபத்தான மிருகங்கள் மற்றும் தீங்கிழைக்கும் மனிதர்களை வன்முறையைப் பயன்படுத்தாமல் ஆதிக்கம் செலுத்தி அவைகளை அடிபணிய செய்வாள் என விவரிக்கின்றன. பௌத்தர்கள் தாராவை ஜங்குலி என்ற பெயரில் நாக தெய்வமாகவும் அறிந்தனர். தாந்திரிக பிரிவில் கூட, பெரும்பாலான பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களின் அடையாளமற்ற துணைவியர்களாகவே உள்ளனர். இதனோடு ஒப்பிட்டு பார்க்கையில், தாரா தேவியின் சுயாதீனம் மிகவும் அசாதாரணமானது.

புத்தர் தன் இறுதி தியானத்தில் இருக்கும்போது, விடியற்காலையில் இறுதி ஞானம் அடைவதற்கு முன்பும், மாராக்கள் என்று சொல்லப்படும் மாயையான எண்ணங்கள் மற்றும் பேய்கள் அவரின் தியானத்தை மிகத் தீவிரமாகத் தாக்கும்போது, புத்தரைப் பாதுகாக்க தாரா தேவி தோன்றியுள்ளார். அவள் அங்கு தோன்றி, அந்த மாராக்களைப் பார்த்து எட்டு வகையான சிரிப்புக்ளைச் சிரித்தாள், பேய்கள் மறைந்தன என்ற ஒரு கதை பௌத்த மதத்தில் சொல்லப்படுகிறது. அந்த எட்டு சிரிப்புகளும் எட்டு பெரும் அச்சங்களை எதிர்கொண்டு புத்தர் தன் இறுதி தியானத்தின் ஆழத்தைக் கண்டறிந்து ஞானம் அடைய தாரா தேவி துணை நின்றாள் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த வாழ்க்கையின் எதிர்மறையான நிகழ்வுகள் மற்றும் நமது இருட்டடிப்புகளையும் மீறி வெற்றி பெறும் ஆற்றல் கொண்ட சக்தியாக அவள் தோன்றுவதால் தாரா தேவிக்கு ‘அனைத்து புத்தர்களின் தாய்’  (Mother of All The Buddhas) என்ற ஓர் அடைமொழியும் உண்டு.

இந்து மதத்தில் தாரா

இந்து தர்மத்தில் தாரா தேவியின் வழிபாடு எப்பொழுது தொடங்கியது என்ற தெளிவான விளக்கம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஏழாம் நூற்றாண்டில் இவ்வழிபாட்டு முறை இந்தியாவில் வலுவாக வளர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு பிறகே திபெத் நிலப்பகுதியில் தாரா தேவியின் வழிபாடு பரவி, திபெத்திய மக்களின் தாயாகவும் அறிவிக்கப்பட்டார்.

தாரா இந்து மற்றும் பௌத்த தாந்திரிக வழிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், இரு மத மரபுகளிலும் தாரா ஒரு குறிப்பிடத்தக்க தெய்வமாகவும் இருக்கிறாள். உக்ர தாரா இந்து மதத்திற்கு நெருக்கமான வடிவமாக உள்ளது. மேல் சொன்னது போல், வஜ்ராயன பௌத்தத்தில் உள்ள 21 வகைகளில் உக்ரதாராவை அடர்-நீலம், மூர்க்கமான மற்றும் பயமுறுத்தும் முகமும் தலைமுடியும் கொண்டு கலைந்த உடையில் காட்சியளிப்பதாக ஓர் ஆய்வாளர் வரையறுத்துள்ளார். உக்ரதாராவின் உருவத்தைக் குறிக்கும் இந்த விளக்கம் இந்து தெய்வமான காளியை ஒத்ததாகக் கூறப்படுகிறது. இந்து பாரம்பரியத்தில், சிவபுராணத்தின்படி தாரா தேவி தச மகா வித்யாக்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறாள். இதேபோல், மகாபாரத ‘சபா பர்வம்’ (Sabhā Parva) இரண்டாவது புத்தகத்தில், தாரா வீட்டில் வைத்து வணங்கப்படும் தெய்வமாகவும், பேய்களை விரட்ட ஒவ்வொரு வீட்டிலும் அவளுடைய படம் அல்லது சிலை கட்டாயம் வைத்து வழிப்படுவார்கள் எனவும் குறிப்பிடுகின்றனர்.

நியிங்மா திபெத்திய பௌத்த பள்ளியில் (Nyingma School) தாராவின் வழிபாடு வழக்கத்தில் இருந்த போதிலும், கி.பி. 1000 வரை அங்குள்ள துறவிகளால் அவள் நன்கு அறியப்படவில்லை. அதிசர் (Atisha) வருகைக்குப் பின்பே அங்குத் தாராவின் போதனைகள் அதிகமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த போதனையாளர்களில் ஒருவரான அதிசர் போதனைகள் வழங்க திபெத்திற்கு அழைக்கப்பட்டபோது, அவர் திபெத்தியர்கள் மூர்கமானவர்கள் என்று கேள்விப்பட்டதாலும் மற்றும் உயரமான குளிர்ந்த பிரதேசத்திற்குச் செல்ல பயந்ததாலும் அந்தக் கோரிக்கையினை மறுத்துவிட்டார். ஒரு நாள் அவருடைய கனவில் தாரா தேவி தீர்க்கதரிசனம் புரிந்து, அவர் இருளில் சூழ்ந்திருக்கும் பனி நிலத்தில், சூரியனைப் போல இருப்பார் என்றும், அங்கு அவர் தனது பிரதான சீடரைச் சந்திப்பார் என்றும் கூறினார். எனவே, அதிசர் உடனடியாக திபெத்துக்குச் சென்று, அங்கு அவர் தனது சீடரான ட்ரோம்டன்பாவைச் (Dromtonpa) சந்தித்துள்ளார். அதன் பின், இருவரும் சேர்ந்து கடம்பா பௌத்த பள்ளியை நிறுவினர். இவர்கள் இருவரும் சேர்ந்து பௌத்த பள்ளிகளில் தாராவின் புகழையும் போதனைகளையும் பிரபலப்படுத்தினர், குறிப்பாக இருபத்தியொரு தாராக்களின் வழிப்பாடு நடைமுறைகளைப் போதித்தனர்.

பண்டைய காலங்களில் வர்த்தகத்திற்காக பயணம் செய்த வணிகர்கள் வழி மேற்கத்திய நாடுகளுக்குத் தாரா தெய்வமாகவும்நம்பிக்கையாகவும் மற்றும் கதைகளாகவும் பரவியிருக்கிறாள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தாரா முன்னாள் யுகோசுலாவியாவில் (Yugoslavia) இருந்ததாகவும், அங்கு உள்ள ஒரு புனித மலையுடன் அவளுக்குத் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவும் சில குறிப்புகள் வழி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், அயர்லாந்தின் பழங்கதைகளில் அதன் பண்டைய தலைநகரத்தின் பெயர் தாரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அயர்லாந்தின் தாரா மலை (Hill of Tara) என அழைக்கப்படும் இவ்விடம் தற்போது ஒரு பெரிய தொல்பொருள் நிலப்பரப்பின் மையமாக உள்ளது. மேற்கத்திய பாரம்பரியத்தில் தாரா தொடர்பான சான்றுகள் அவ்வளவு தெளிவாக இல்லாவிடினும் பாகால் -ஐரோப்பிய (Pagan-European) பாரம்பரியத்தில் பச்சை தெய்வத்தின் சில குறியீடுகளும் சான்றுகளும் இருந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

பௌத்த மற்றும் இந்து மத இலக்கியங்கள், குறிப்பாக தாந்திரீகம் தொடர்பான இலக்கியங்களில் தாரா தேவியைப் பற்றிய ஒரு பரந்த மற்றும் உயிர்ப்புள்ள கதைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. ஏனெனில், இதன் காரணமாகவே தாரா தேவியின் தோற்றம் பௌத்தமா அல்லது இந்து மதமா என்ற சர்ச்சை எழுகிறது. ஹிரானந்த சாஸ்திரி (Hirananda Shastri) போன்ற சில அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்கள் பௌத்த மதத்திற்கு ஆதரவாக வலுவாக வாதிடுகையில், மதுகர் கேசவ் தவாலிகர் (Madhukar Keshav Dhavalikar) போன்ற மற்ற சிலர், இந்து தாந்திரீக இலக்கியங்கள் மற்றும் புராணங்களைச் சான்றாகக் காட்டி தாரா தேவி இந்து மதத்தில் இருந்து தோன்றினார் எனக்கூறுகின்றனர். எதுவாக இருப்பினும், தாரா தேவி மனிதர்களைப் பாதுகாத்து, அவர்களை ஞானம் நோக்கி வழிநடத்தும் தெய்வமாகக் காணப்படுகிறாள். திபெத், நேபாளம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உட்பட தென்கிழக்காசியா முழுவதும் அவரது வழிபாட்டு முறை வெகுவாகப் பின்பற்றபட்டு வருகிறது. அவரது வழிபாட்டின் ஆரம்ப தடயங்கள் மேற்கு இந்தியாவில் காணப்பட்டாலும், பௌத்த மதம் மேலோங்கி இருக்கும் திபெத்து போன்ற பகுதிகளிலே தாரா தேவி மிகவும் பிரபலமடைந்துள்ளார். தாராவை வழிபடுவது வலிமையையும் செழிப்பையும் தரும் என்று திபெத்திய பௌத்தர்களிடையே சொல்லப்படாத புரிதல் ஒன்று எப்பொழுதும் உண்டு என்கின்றனர்.

ஸ்டீபன் வி. பேயர் (Stephan V. Beyer) போன்ற மேற்கத்திய அறிஞர்கள் தாராவின் பூர்வீகம் இந்து மதத்தில் இருந்து உருவானது என்று கண்டறிந்தாலும், பெனாய்டோஷ் பட்டாச்சார்யா (Benoytosh Bhattacharyya) போன்ற இந்திய அறிஞர்கள் தாராவின் தோற்றம் இந்து அல்லது பௌத்தம் இவ்விரண்டும் இல்லாமல், அது திபெத்திய கடவுள்களின் தழுவலில் இருந்து மற்ற மதங்களுக்குப் பரவியுள்ளது என்கிறார். தெய்வமாகவும் தோற்றமாகவும் மட்டும் அல்லாமல், தாரா தேவியின் வழிபாடு மற்றும் இதனுடன் தொடர்புடைய நடைமுறைகளும் கூட தூர தேசங்களில் இருக்கும் பாரம்பரியத்தைத் தழுவி இந்து மற்றும் பௌத்த வழிப்பாட்டு முறைகளில் கலந்திருக்கக்கூடும் என்கிறார்.

இன்னும் சில அறிஞர்கள் தாரா லடாக்கின் அருகாமையில் இருந்து பின்னர் திபெத் மற்றும் நேபாளத்திற்குச் சென்றுள்ளார் என்று கருத்து தெரிவிக்கின்றனர். மாறாக, தாரா மற்றும் உக்ரதாரா சீனா அல்லது திபெத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாகார்ச்சுனரால் (Nagarjuna) இந்திய இலக்கியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாகார்ச்சுனர் மகாயான பௌத்தப் சமயப் பிரிவில் மாத்யமக (Madhyamaka) பள்ளியை நிறுவிய இந்திய மெய்யியலாளர் ஆவார்.

தாராவை முதலில் பௌத்தர்களும் பின்னர் இந்துக்களும் ஏற்றுக்கொண்டதாக ‘ஆரியமஞ்ஜுஸ்ரீமூலகல்பா’(Āryamañjuśrī­mūlakalpa) தெரிவிக்கிறது. ‘ஆரியமஞ்ஜுஸ்ரீமூலகல்பா’ என்பது ‘மஞ்சுசிறீயின்’(Manjushri) சடங்குகளைக் குறித்துள்ள புனித நெறி கையேடு ஆகும். மேலும், ஜான் வூட்ரோஃப் (John Woodroffe) மற்றும் ஹர பிரசாத் சாஸ்திரி (Hara Prasad Shastri) போன்ற பௌத்த அறிஞர்கள் தாரா சீனாவிலிருந்து தான் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறாள் எனக் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், தாரா தேவி வஜ்ராயனாவில் உச்ச தெய்வம் என்பது ஒருமித்த கருத்தாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தாராவுக்கு இந்தியாவில்‘பமகேபா’ (Bamakhepa) மற்றும் திபெத்தில் ‘நங்சா ஓபம்’ (ஸ்நாங் சா ‘ஓட்’பம்) (Nangsa Obum (sNang sa ‘Od ‘bum) போன்ற தீவிர பக்தர்கள் இருந்துள்ளனர். பமகேபா ஒரு இந்து துறவி ஆவார். மேலும், பீர்பூமில் (Birbhum) உள்ள தாரா கோவிலுக்கு அருகில் அவரது சன்னதியும் அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தாரா தேவியின் தீவிர பக்தரான இவர், கோவிலுக்கு அருகிலேயே வாழ்ந்து, சுடுகாட்டில் தியானம் செய்து வந்தார். பின், புனித அன்னையின் வழிபாட்டைத் தொடர அவர் ‘மௌலிக்ஷா’ (Mouliksha) ஆலயத்தில் தங்கினார். இடுகாட்டில் உடலைத் தகன செய்யும் மையத்தில் பமகேபாவுக்குத் தாரா தேவி தனது காளி உருவில் தரிசனம் கொடுத்ததாக நம்பப்படுவதால், அந்த ஆலயத்தில், தெய்வத்திற்கு முன் பமகேபாவுக்கே முதலில் பிரசாதம் அளிக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. 

நங்சா ஓபம் (Nangsa Wobum) என்பவர் நீண்ட நாள் குழந்தை இல்லாமல் தாரா தேவியிடம் வேண்டி பிறந்தவர் ஆவார். அவரது பெற்றோர் குன்சாங் டெச்சென் (Kunzang Dechen) மற்றும் நியாங்ட்ஷா செல்டன் (Nyangtsha Seldon) பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் பெரும் சோகத்தில் இருந்த போது, தாராவின் பிராத்தனை மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஓதினார்கள். இதனால், தாரா இவர்களுக்கு ஓர் அழகான மகளைப் பெற்றெடுக்க ஆசீர்வதித்தாள். அவ்வாறு பிறந்தவரே நங்சா ஓபம். நங்சாவுக்குப் பதினைந்து வயதாகும்போது, அவளைத் திருமணம் செய்துக் கொள்ள பல வரன்கள் வந்த போதிலும், நங்சாவிற்குத் திருமண வாழ்க்கையிலோ குடும்ப வாழ்க்கையிலோ விருப்பமில்லை; அதற்குப் பதிலாக தாரா தேவியை வணங்கி தர்ம வழிப்பாட்டில் தன்னை அர்ப்பணிக்க விரும்பினாள்.

தாராவும் பெண்ணியமும்

முன்பொரு காலத்தில் விஸ்வபிரபா என்ற உலக அமைப்பு இருந்ததாகவும், அங்கு ஒரே நேரத்தில் ததாகத துர்யா (Tathagata Turya) என்ற புத்தரும் ஞானச்சந்திரா (Jnanachandra) மன்னரின் மகளும் வாழ்ந்ததாகவும் உண்மையும் கற்பனையும் கலந்தாற் போல் ஒரு கதை சொல்லப்படுகிறது. மன்னனின் மகளான இளவரசியின் பெயர் பெரிதாக எங்கும் குறிப்பிடப்பட்டவில்லை. சில தரவுகளில், இளவரசியின் பெயர்தான் ஞானச்சந்திரா எனச் சொல்லப்படுகிறது. இளவரசி புத்தரின் போதனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் எனவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அவர் புத்தரையும் அவரது பரிவாரங்களையும் வணங்கினார் எனவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் காலையில், அவள் பத்து திசைகளிலும் பிரசாதமாக இரண்டு யோஜனை (Yojana) நீளமுள்ள இடத்தை விலைமதிப்பற்ற ரத்தினங்களைத் தயார் செய்து நிரப்புவார். இதை முடித்த பிறகு, மக்களிடத்தில் பௌத்த ஞானம் மற்றும் சிந்தனையின் போதனைகளைப் போதிப்பார். அப்போது எல்லம், புத்த பிக்குகள் அவரிடம் “உங்கள் புண்ணிய வேர்களின் காரணமாக, நீங்கள் ஒரு ஆண் மனிதனின் உடலில் மீண்டும் பிறக்க ஆசைப்பட வேண்டும்”என்று அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அவர்களுடைய போதனைகளின்படி, இத்தகைய அறச்செயல்களில் இளவரசி தீவிர ஈடுபாடோடு தொடர்ந்தால், அது நிச்சயமாக அவர் ஒரு ஆண் உடலில் பிறக்க பலன் தரும் என்றும் பலமுறை அவளிடம் வலியுறுத்தியுள்ளனர். இவர்களின் அறியாமையைக் கண்டு பரிதாபம் கொண்ட இளவரசி “இங்கு ஆண், பெண், நான், தனி நபர், பிரிவுகள் என எதுவும் இல்லை. ஆணும் பெண்ணும் இந்த உலகில் குழப்பமான மனத்தால் உருவாக்கப்பட்ட அடையாளக் குறியீடு மட்டுமே. எனவே, ஆண் மற்றும் பெண் அல்லது சுய அடையாளம் என்ற பற்றுதல் முற்றிலும் பயனற்றது. நான் இந்த அறியாமையை மக்களின் மனதில் இருந்து அகற்ற இந்தப் பிறவிச் சுழற்சியிலிருந்து மோட்சம் அடையும் வரை அதாவது சம்சாரம் அடையும் வரை பெண் வடிவில் உயிர்களின் நலனுக்காக உழைக்கிறேன்,” என்கிறார்.

பின்னர் மனதில் நிறைநிலை அடைந்த ததாகத துந்துபி சவரா (Tathagata Dundubhi Savara) என்ற பௌத்த துறவறம் பூண்ட மகான் ஒருவர் இளவரசிக்குத் தீர்க்கதரிசனம் தந்து “அத்தகைய உயர்ந்த ஞானத்தை உலகிற்கு எடுத்துரைத்த நீங்கள் அதனை தொடர்ந்து ஒரு பெண் வடிவிலேயே பௌத்த போதனைகளை வெளிப்படுத்தும் வரை, நீங்கள் தாரா தேவி என்று அறியப்படுவீர்கள்”என்று கூறி மறைந்தார் என்று வேறு விதமாக ஒரு கதையும் சொல்லப்படுவது உண்டு.

இக்கதையை மேற்கோள் காட்டி, மிராண்டா ஷா (Miranda Shaw) என்கிற ஆய்வாளர், கௌதம புத்தரின் போதனைகளைப் பெற்ற அறிவின் விளைவாகவே, தாரா என்று அங்கீகரிக்கப்பட்ட இளவரசி மத மற்றும் ஆன்மீக உலகில் ஆண்களின் மேலாதிக்கத்தை நிராகரித்து முழுமையாக பெண்மையைத் தழுவினார் என்கிறார். ஆனால், மற்ற சில ஆய்வாளர்கள் இக்கூற்றை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள். காரணம், பௌத்தத்தின் போதனைகளும் நடைமுறைகளும் ஆண்களைக் குறித்தும் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவே உள்ளது. இதனாலேயே, பௌத்த போதனைகள் பெண் விடுதலைகளுக்கு வழிச்செய்கின்றது என்கிற கூற்றைச் சிலர் முழுவதுமாக ஏற்றுக் கொள்வது இல்லை.

தாரா ஏற்கும் அனைத்து வடிவங்களிலும், அவள் இருபாலியம் (androgynous) கொண்ட நபரின் பண்புகளை வெளிப்படுத்துபவளாகவே இருக்கிறாள். தாரா பெண்பால் மற்றும் ஆண்பால் குணங்களை உடையவள் என்று சமய குறிப்புகளிலும் கதைகளிலும் சொல்லப்பட்டாலும் கூட, பெரும்பாலும் அனைத்து புத்தர்களின் தாய் என்று அவளை ஒரு பெண்ணாகச் சித்தரிக்கவே விரும்புகின்றனார். இது பெண்ணாக இருந்துக் கொண்டே ஞானம் அடைவேன் என்று உறுதிமொழி எடுத்த தாராவிற்கு கொடுக்கப்படும் மரியாதையாகவும் இருக்கலாம் அல்லது ஆண் வர்க்கத்தின் மறைமுக அரசியலாகவும் இருக்கலாம். தாராவைப் பெண் பாலினமாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே திபெத்திய கலாச்சாரம், வாழ்க்கை, கலை, இசை அதற்கு அப்பால் இச்சிந்தனை அம்மக்களிடத்தில் ஊடுருவும்படி திபெத்து அறிவாய்வியலாளர்களால் (epistemologists) தீவிரமாகப் பரப்பப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க,மியான்மரில் இந்த நம்பிக்கையை ஏற்காமல் பெண் புத்த பிக்குகள் தாங்கள் அடுத்த வாழ்க்கையில் ஆண்களாக மீண்டும் பிறக்க வேண்டும் என்றே பிரார்த்தனை செய்கிறார்கள்.

அதே சமயம் இதற்கு எதிர்மறையான கருத்துகளும் எழுவதுண்டு. சமுதாயத்தில் தாய்மை என்பது பெண்களுடைய மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பௌத்தத்தில், வேறுபட்ட கண்ணோட்டம் உள்ளதாகக் கூறுகின்றனர். ஒரு தாய் தன் குழந்தைகளுடன் வைத்திருக்கும் வலுவான பற்றுதல் வாழ்க்கை மற்றும் மறுபிறப்பு சுழற்சியுடன் மீண்டும் ஒட்டிக்கொள்ள வழிவகுக்கும் என்று பௌத்தம் கற்பிப்பதோடு, இது ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகவும் கருதப்படுகிறது. தாயின் பற்றுதலை நேர்மறையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அதனை பயனற்றதாகப் பார்க்கின்றனர். தாய்மை என்னும் தன்மையை அகற்றி அதற்கு பதிலாக பற்றற்ற தன்மையை உள்ளடக்கிய மகிழ்ச்சி மற்றும் அமைதி போன்ற உணர்வுகளால் தெய்வத்தைக் காண்பதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் பௌத்தம் அறிவுறுத்துகிறது. இதற்கு, அனைவரிடமும் கருணையும் அக்கறையும் கொண்டு எல்லோரையும் நேசிக்கும் ஆனால் யாரிடமும் பற்றுக் கொள்ளாத போதிசத்துவரை (Bodhisattva) எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனர். இவரை ‘கற்புடைய தாய்’ (Chaste Mother) என்று அழைக்கப்படுவதற்கும் இதுவே காரணம்.

இது குறித்து அமெரிக்க பௌத்த பெண்ணிய மத அறிஞர் மற்றும் எழுத்தாளரான ரீட்டா எம். கிராஸ் (Rita M. Gross) தனது ஆய்வில் குறிப்பிடும்போது சில கலாச்சார விழுமியங்களுக்கு மாறாக, பௌத்த மதத்தில் குறைந்தபட்சமாக தன் குடும்பத்திற்கு அனைத்தையும் கொடுத்து, சுய தியாகம் செய்யும், இதுதான் தனது உண்மையான நோக்கம் என்று நினைத்து அதை நிறைவேற்றும் மற்றும் தன் மீது அதிக சுமை கொண்டு வாழும் தாயின் உருவத்தை எப்பொழுதும் போற்றுவதில்லை, மேலும், ஆணின் சிறப்புரிமையை வலுப்படுத்தக்கூடிய இந்தக் கருத்து பௌத்தத்தில் இலட்சியப்படுத்தப்படவில்லை என்பதும் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது என்கிறார்.

தற்போது தாரா அவரது ஆழ்ந்த ஞானத்தின் காரணமாகப் பௌத்தத்தில் குறிப்பிடத்தக்க ஒருவராகவும், போதிசத்துவர்களின் மற்றும் புத்தர்களின் தாயாகவும் காணப்படுகிறார் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், ஆரம்பக்காலங்களில் இவர் அவரது ஞானத்திற்காக அவர் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாகஇளவரசியாக இருந்து தாராவாக மாறியதாகச் சொல்லப்படும் கதைகளினாலே புகழ் அடைந்தார்.

காலப்போக்கில், தாரா பௌத்தத்தில் மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தார் என்பதைப் பௌத்தத்தைப் பின்பற்றுபவர்கள் ஒப்புக் கொள்ளத் தொடங்கினர். இருந்தபோதிலும், பாரம்பரியமாக பெண்கள் தங்கள் பாலினத்தின் காரணமாக மெய்ஞானம் அடையும் திறன் கொண்டவர்கள் இல்லை என்று கருதப்படுவதே அதிகம். தாரா தேவியைச் சார்ந்து இருக்கும் சில சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள், பொதுவாக பாலின சார்பு (gender biased) உடையதாகவே உள்ளது. எனவே, தாரா ஒரு முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த தெய்வமாக இருந்தாலும், அவர் சில சமயங்களில் பாரம்பரிய பாலின பாத்திரங்களின் பார்வையின் வழியே பார்க்கப்படுகிறார் என்ற ஆதங்கங்களும் பரவலாக ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளன.

இதற்கு இன்னொரு உதாரணமாக, தாராவின் பிரபலமான ஆறு நாள் சடங்கு விழாவைக் குறிப்பிடுகின்றனர். இவ்விழா தாரா தேவிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கருதுகின்றனர். இந்த ஆறு நாள் விழாவில், முதல் இரண்டு நாட்களில் பிரார்த்தனைகள் அவலோகிதருக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. அடுத்த மூன்று முதல் ஆறு நாட்களில் தான் தாராவிற்குகான பூஜையும் நான்கு மண்டல பிரசாதங்களும் வரிசையாக வழங்கப்படுகிறதுன.

இந்தச் சடங்கு பூஜை கடந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் எதிர்கால தயவுக்கான பிரார்த்தனைகளைக் கோரும் விழாவாகவும் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தாரா தேவியை முதன்மைப்படுத்தி கௌரவிக்கப்படும் நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இந்நிகழ்வு தாராவின் துணையாகக் கருதப்படும் ஆண் உருவத்தில் இருக்கும் அவலோகிதரைக் கொண்டே இந்நிகழ்வு தொடங்கப்படுவது, மறைமுகமாக தாராவைத் தனக்குறிய விழாக்களில் கூட இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுவது சமூகத்தின் ஆணாதிக்க கட்டமைப்பைக் காட்டுகின்றது என்கிறார்கள்.

பௌத்த மதம் மட்டுமின்றி அனைத்து மதங்களிலும் பெண்களை மதிக்கும், போற்றும் பெயரில் நிகழ்த்தப்படும் சடங்குகளில் ஆண் தெய்வங்களுக்கு முதன்மை அளிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள், சமூகத்தில் பெண்களைவிட ஆண்களே முதன்மையானவர் மற்றும் முக்கியமனவர் என்ற கருத்து எவ்வாறு மறைமுகமாகத் தினிக்கப்படுகின்றது என்பதை இது போன்ற விடயங்கள் உணர்த்துகின்றன.

REFERENCES

Patpicha Tanakasempipat. (2019). Thailand’s rebel female Buddhist monks defy tradition. Reuters. 1OX1YP/”https://www.reuters.com/article/world/thailands-rebel-female-buddhist-monks-defy-tradition-idUSKCN1OX1YP/#:~:text=Officially%2C%20only%20men%20can%20become,recognize%20female%20monks%20or%20novices.

NHK WORLD. (n.d.). Thai female monks fight for recognition. NHK WORLD. 3.nhk.or.jp/nhkworld/en/news/videos/20240613193809790/”https://www3.nhk.or.jp/nhkworld/en/news/videos/20240613193809790/#:~:text=Thailand’s%20Buddhist%20order%20has%20long%20forbidden%20the%20ordination%20of%20women%20as%20monks.

Why aren’t women ordained in Buddhism? – Buddhism for Beginners. (2021, March 9). Buddhism for Beginners. https://tricycle.org/beginners/buddhism/buddhist-nuns-ordination/#:~:text=Over%20the%20centuries%2C%20women’s%20orders,ordination%20was%20simply%20never%20introduced.

Suhani, S. (2023). Tara Devi – Perceptions and Visualisations. Journal of Research in Humanities and Social Science, 11(7), 07-11. https://doi.org/10.1080/14746689.2018.1510632

Green-Tara-Commentary. Taramandala, https://www.taramandala.org/wp-content/uploads/Green-Tara-Commentary-.pdf

Kaur, G. (2021). Tara in Vajrayana Buddhism: A Critical Content analysis. Feminist Theology, 30(2), 210–221. https://doi.org/10.1177/09667350211055444

Lam, R. (2014). Legitimizing legitimization: Tārā’s assimilation of masculine qualities in Indo-Tibetan Buddhism and the feminist ‘Reclaiming’ of theological discourse. Feminist Theology, 22(2), 157–172. https://doi.org/10.1177/0966735013507853

Landesman, S. S. (2008). Goddess Tārā: Silence and secrecy on the path to enlightenment. Journal of Feminist Studies in Religion, 24(1), 44–59. https://doi.org/10.2979/fsr.2008.24.1.44

Rountree, K. (2012). Tara, the M3, and the Celtic Tiger. Journal of Anthropological Research, 68(4), 519–544. https://doi.org/10.3998/jar.0521004.0068.404

Scherer, B. (2018). Buddhist Tantric Thealogy? The Genealogy and Soteriology of Tārā. Buddhist-Christian Studies, 38(1), 289–303. https://doi.org/10.1353/bcs.2018.0024

Madhu, K., & Sengupta, A. (2016). The Journey of Goddess Tara – Adoption and adaptation of a Buddhist goddess in Hindu tantric worship. Reference: Sengupta ArputhaRani, Cult of the Goddess, Delhi: DK Printworld, National Museum Institute, 2015, Chapter 7, pp.101-120. Jmi. https://www.academia.edu/27956232/The_Journey_of_Goddess_Tara_Adoption_and_Adaptation_of_a_Buddhist_Goddess_in_Hindu_Tantric_Worship_Reference_Sengupta_ArputhaRani_Cult_of_the_Goddess_Delhi_DK_Printworld_National_Museum_Institute_2015_Chapter_7_pp_101_120

Waddell, L. A. (1894). Art. IV.—The Indian Buddhist Cult of Avalokita and his Consort Tārā ‘the Saviouress,’ illustrated from the Remains in Magadha. Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland, 26(1), 51–89. https://doi.org/10.1017/s0035869x00143680

Bühnemann, G. (1996). The Goddess Mahā;Cīnakrama-Tārā (Ugra-Tārā) in Buddhist and Hindu tantrism. Bulletin of the School of Oriental and African Studies, 59(3), 472–493. https://doi.org/10.1017/s0041977x00030603

Taras who protect from the eight fears. (2024, February 27). Tsem Rinpoche. https://www.tsemrinpoche.com/tsem-tulku-rinpoche/one-minute-story/taras-who-protect-from-the-eight-fears

Kane, L. (2024, August 12). Limitless Tara, Beyond the Green: Mother of all the Buddhas, Goddess of Many Colors, Consort of Buddhas, Wisdom Mother, Action Hero. . . – Buddha Weekly: Buddhist Practices, Mindfulness, Meditation. Buddha Weekly: Buddhist Practices, Mindfulness, Meditation. https://buddhaweekly.com/limitless-tara-beyond-green-buddha-bodhisattva-savior-mother-buddhas-hindu-maa-tara-HYPERLINK “https://buddhaweekly.com/limitless-tara-beyond-green-buddha-bodhisattva-savior-mother-buddhas-hindu-maa-tara-goddess-many-colors-consort-buddhas-wisdom-mother-action-hero/”goddess-many-colors-consort-buddhas-wisdom-mother-action-hero/#google_vignette

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...