சுகர் டாடி

அம்மா இறந்து இதோடு நான்கு மாதங்கள் ஆகிறது. நான் இன்னும் அம்மாவுடைய கடைசி காதலன் வீட்டில் தான் இருக்கிறேன். அவர் மிகவும் நல்லவர். என்னை அவர் வீட்டில் இன்னமும் வசிக்க அனுமதிக்கிறார். எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறை இன்னும் எனக்கானதாகவேதான் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து இம்மாதிரி பல வீடுகளின் அறைகளில் தங்கியிருக்கிறேன். அம்மா அவருடைய அப்போதைய காதலனுடைய அறையைப் பகிர்ந்து கொள்வார். எந்த வீட்டில் இருந்து நாங்கள் விரட்டப்பட்டாலும் அம்மாவுக்கு என்று போக ஒரு வழமையான மோட்டல் இருந்தது.

பால் போன்ற சிறிய சிறிய திருட்டுக்கள் செய்வது அப்போதிருந்துதான் எனக்கு வந்திருக்கக் கூடும்.

நான் எவரையும் அப்பா என்றோ டாடி என்றோ அழைப்பதை அம்மா ஒருபோதும் அனுமதித்தது இல்லை. இவரை எப்படி ‘பாட்ரிக்’ என்று பெயர் சொல்லி அழைக்கிறேனோ அப்படித்தான் அம்மாவின் எல்லா பழைய காதலர்களையும் பெயர் சொல்லியே அழைத்திருக்கிறேன். மற்றவர்களை விட பாட்ரிக் என் விஷயத்தில் கண்ணியமானவர். அவருடைய அத்துமீறல்களை அம்மாவுடன் மட்டும் நிறுத்திக் கொண்டவர். இந்தப் பாதுகாப்பான வாழ்வு என்றென்றைக்கும் தொடரும் என்று நம்பிக்கை இல்லாவிட்டாலும் இவ்வளவு விரைவாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

பாட்ரிக் ஒன்பது மணிக்குப் பணிக்குக் கிளம்புவார். அதுவரையில் நான் அறையை விட்டு வெளியே வருவதில்லை. அவர் சென்றதும் வீட்டை ஒரு வட்டம் வருவேன். கலைந்த பொருட்களை ஒழுங்கமைப்பது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, வீட்டை வாக்யூம் செய்வது, பூனைக்கு உணவு வைப்பது என்று முந்தைய தினத்தை ரத்து செய்து அன்றைய தினத்தைக் கட்டி எழுப்புவேன். எல்லாம் அப்படியே அம்மா செய்தது போல. பாட்ரிக் அறைக்கு மட்டும் நான் செல்வதில்லை. அங்கே அம்மாவின் வாசம் அடிக்கக்கூடும் என்ற பிரம்மை. அம்மாவின் அந்தரங்க வாசம். நான் அருவருக்கும் வாசம்.

என்னிடமிருந்து கடைசி சேமிப்பும் தீர்ந்துவிட்டது. வீட்டுக்கு என்ன பொருள் தேவை என்று எழுதி ஃப்ரிட்ஜின் மேல் ஒட்டி விடுவேன். பாட்ரிக் அதற்கான பணத்தை மேஜை மீது வைத்து விடுவார். அதுவே எனக்கு மிச்சம். இருந்தும் என் மணிபர்ஸை எடுத்துக் கொட்டிப் பார்த்தேன். ரசீது, கூப்பன், ஊக்கு, மிட்டாய், காலாவதியாகிப் போன அம்மாவின் கடன் அட்டை மற்றும் சில குப்பைகள். இப்படிப்பட்ட புராதனப் பொருட்கள் மட்டுமே கிடைத்தன. சில்லரை என்று செல்லா காசு கூட கிடைக்கவில்லை. எப்போதுமே என்னுடன் ஒட்டி இருக்கும் இந்த மணிபர்ஸில் இருப்பவைகளை இப்போதுதான் நானே முழுதாகப் பார்க்கிறேன். இவற்றோடு அம்மாவின் இளமை காலப் புகைப்படம் ஒன்று இருந்தது.

தினமும் காலை நான் வேலை தேடச் செல்வேன். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய எனக்குக் கிடைப்பதெல்லாம் உணவகங்களில் சுத்தம் செய்யும் வேலை, கார் கழுவும் வேலை, கழிவறை கழுவும் வேலை, நீச்சல் குளங்களைப் பராமரிக்கும் வேலை. இது போன்ற வேலைகள் என் அம்மா கூட செய்ததில்லை. எனக்கும் அந்த உத்தேசம் இல்லை. திறன் போதாமையால் நான் இஷ்டப்படும் வேலைகள் கிடைப்பதில்லை. கிடைப்பவற்றை எனக்குத் தக்க வைக்கத் தெரியவில்லை. ‘அம்மா என்ன வேலை செய்தார்?’ யார் யாருக்கோ காதலியாக இருப்பதை முழு நேர பணியாக வைத்திருந்தார். யோசித்துப் பார்த்தால் மகளாக என்னுடைய இருப்பு அவர் வேலைக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருந்திருக்கும். அம்மாவை வெறுக்க பல காரணங்கள் இருந்தும் என்னால் இப்போதெல்லாம் முடிவதில்லை.

ஒவ்வொரு நாள் வீடு செல்லும்போதும் என்னிடம் இருக்கும் சாவி வேலை செய்யாதோ என்ற பயம் இருக்கும். பாட்ரிக் எப்போது வேண்டுமானாலும் பூட்டை மாற்றி விடலாம். அவருக்கு அந்த எண்ணம் ஏதேனும் வருகிறதா என்று தெரிந்துகொள்ள எல்லா அறிகுறிகளையும் நான் எதிர்பார்த்தே இருப்பேன். வீட்டில் ஏதேனும் பொருள் கூடியிருந்தாலோ குறைந்திருந்தாலோ நான் பதற்றம் கொள்வேன். ‘இங்கிருந்து எங்குச் செல்ல? எங்குத் தங்க? உணவுக்கு என்ன செய்ய? இல்லை… பாட்ரிக் அப்படி செய்யும் ஆள் இல்லை. என்ன இருந்தாலும் அம்மா பாட்ரிக்கின் காதலி அல்லவா… ஆசை ஆசையாய் வைத்துக் கொண்ட நாயகி அல்லவா? நாயகியா அல்லது காதலியா? எதுவாக இருந்தால் என்ன, நான் மகள் போல் அல்லவா? இல்லையா? இல்லை… இல்லை… இல்லவேயில்லை… நான் ஏன் இன்னொருவருக்கு மகள்? எனக்கு யார் தயவும் தேவையில்லை. என்னுடைய விசுவாசத்தை நான் யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை…’ இப்படித்தான் என் எண்ண அலைகள் இருக்கும். பூனைக்கு வைக்கும் தட்டு நிறம் மாறியிருந்தால் கூட என்னுடைய எண்ணச் சுருள்கள் விரியும்.

பாட்ரிக்குக்கு முன் ரீடர். அதற்கு முன் ஸ்பென்சர். அதற்கு முன் ஜெஃப்ரி. அதுவரை தான் ஞாபகம் உள்ளது. நினைவு தெரிந்து அனைவருமே பணம் படைத்தவர்கள், குடிகாரர்கள். அவர்களுடைய காதலாடல்கள் எல்லை மீறும் போதோ அல்லது என்னை நோக்கி நீளும் போதோ அம்மா வெளியேறிவிடுவார். நானும் என் கழுத்து சங்கிலியைக் கடிக்க ஆரம்பித்து இருப்பேன். ஆனால், பாட்ரிக் அப்படி என்றுமே இருந்ததில்லை. மற்றவர்களிடம் தற்காலிகத்தையும் பாட்ரிக்கிடம் மட்டும் நிரந்தரத்தையும் அனுபவித்தோம். ஒரு வழியாக எங்களிடம் இல்லாதவொன்று கிடைக்க பெற்றாயிற்று என்றிருக்கையில் தான் அம்மா காலமானார். மீண்டும் தற்காலிகம் என்னைத் தத்தெடுத்துக் கொண்டது.

‘என்னை வெளியேறச் சொல்லி இன்று சொல்வாரோ? நாளை சொல்வாரோ? அல்லது சொல்லாமலே போவாரோ? சொல்லவில்லை என்றால்? இவ்வீட்டில் என் இடம் என்பது என்ன? மகளா? தோழியா? காதலியா? காதலியா… சீ…’ இந்த அவஸ்தையினால் பாட்ரிக் மீது வெறுப்பும் பயமும் ஒரு சேர முளைத்தது. ஆனால், இருப்பிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதல்லவா புத்திசாலித்தனம். வீட்டையும் பூனையையும் பூச்செடிகளையும் இன்னும் சிரத்தையோடு கவனித்துக் கொண்டேன். இன்னும் நல்ல உணவுகளைச் சமைத்தேன்.

பாட்ரிக்கின் பழைய ஒரு ஜோடி காலணிகள் என்னிடம் இருந்தது. ஒரு வேளை வீட்டில் பாட்ரிக் முன் நடமாடும் சூழல் வந்தால் நான் அந்தக் காலணிகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பாட்ரிக் என்னைக் கவனிப்பார்; காலணியைக் கவனிப்பார். சொல்லாததையும் சொல்ல வந்ததையும் விட்டு விடுவார்.

இது ஒரு அவஸ்தை. இந்த அவஸ்தை வேறு விதமாக முடிவுக்கு வந்தது. இரவுகள் முந்திக்கொள்ளும் ஒரு குளிர்காலத்து நாளில் பூட்டாத முன் கதவை நான் திறந்தபோது அதைக் கண்டேன். பருமனான அந்தச் சோஃபாவில் அதை விட பருமனான பாட்ரிக் அமர்ந்திருக்க அவரது வலது தொடை மீது ஒடிசலான அவள் ஒருக்களித்து அமர்ந்திருந்தாள். அவளது வலது கை பாட்ரிக்கின் இடது மார்பில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

நொடிப் பொழுதில் எல்லாம் புரிந்தது. ஆனால், அதை எண்ணமாக மாற்ற அப்போதைக்கு முடியவில்லை. கண் கூசும் காட்சியாக மட்டும் மூளையில் பதிந்தது. புகைமூட்டமான ஒழுங்கற்ற சொற்கள் அக்காட்சியைச் சுற்றி வலம் வந்தது. அங்கே அந்தத் தொடை மீது அமர்ந்திருப்பது அம்மா போலவும் அவள் போலவும் மாறி மாறி கற்பனைக்கு வந்தது. காணும் காட்சி காணும் போதே கற்பனையில் மாறியது. உறைந்து நின்றேன்.

“லீனா… லீனா… ” பாட்ரிக்கின் குரல் ஊதுகுழல் வைத்து பேசுவது போல் தூரத்திலிருந்து கேட்டது.

“ஆஹ்…”

“என்ன அப்படி நிற்கிறாய்? இவள் அமீலியா… இனி இவள் என்னோடுதான்… ”

“ஒஹ்… ”

“நான் சொல்லவில்லை. இவள் பெயர் லீனா. தற்சமயம் நம் வீட்டில் இருக்கிறாள். இப்போதைக்கு உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே?” பாட்ரிக் கேட்டார்.

‘பாட்ரிக் இதை யாரிடம் சொல்கிறார்?’ அவள் என்னை நோக்கினாள். அவள் வலது உள்ளங்கை மேல் நோக்கி இருந்தது. எதையோ ‘தா…’ என்பது போல. அல்லது ‘இவளா?’ என்று கேட்பது போல. அவளது ஓரக்கண் பார்வை, அலட்சியப் பார்வை, மேல்கீழ் ஏறி இறங்கும் பார்வை என்று அனைத்தையும் கலந்தடித்த அந்த மையமான பார்வை. அதை பார்த்தவுடன் நான் புரிந்து கொண்டேன்.

பாட்ரிக் கேட்டார், “லீனா… என் அறையைச் சுத்தம் செய்து தர இயலுமா?” அது கட்டளை போலவும் வேண்டுகோள் போலவும் கேட்டது.

அவள் பாட்ரிக்கின் காதில் மெல்ல ஏதோ சொன்னாள். பாட்ரிக் சிரித்தார். அவளும் சிரித்தாள்.

“முடியுமா?” என்றார். இம்முறை கட்டளையாக தெரிந்தது. “இதோ நொடிப் பொழுதில்…” என்று கூறிவிட்டு என் பையை அப்படியே தரையில் போட்டுவிட்டு அவர் அறை நோக்கித் திரும்பினேன்.

“பெண்ணே…”

முதலில் அது ஆண் குரல் போலத்தான் கேட்டது. ஆனால், அது அவள் குரல் என்று புரிந்தது.

“பெண்ணே…”

இப்போது அதுவே பெண் குரலாகக் கேட்டது. “தரையில் இப்படி உன் பொருட்களைப் போட்டுவிட்டுச் செல்லாதே… எனக்கு இதெல்லாம் பிடிக்காது…”

நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் “மன்னிக்கவும்.” என்றுவிட்டு என் பையை எடுத்துக் கொண்டு விரைவாக அவர் அறைக்குள் சென்று கதவடைத்தேன். கண்ணீர் மடையுடைந்தது.

அரை நிமிடத்துக்குள் அழுகையைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நான் எனக்கே புதிய நானாகத் தெரிந்தேன். கண்ணீரைத் துடைத்த பின் அந்த அறையை முதன் முதலில் பார்த்தேன். அம்மா வந்து போன அறை. அவள் பங்குபோட்ட அறை. அவளுடைய தடயம் என்று ஏதாவது இருக்கக் கூடிய அறை.

அங்கிருந்த பெரிய கட்டிலின் நேர் எதிரில் ஒரு கேமரா மூன்று கால் பரப்பி நின்று கொண்டிருந்தது. எதையோ எம்பிப் பார்ப்பது போல. புதிய கேமரா. அதன் இருப்பின் பொருள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை எனக்கு. என் கற்பனையில் அக்காட்சி விரிந்தது.

ஒவ்வொரு பொருளாகச் சீரமைக்கத் தொடங்கினேன். ஆங்காங்கே விழுந்து கிடந்த சிகரெட் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து வாக்யூம் செய்தேன். பாத்ரூம் சென்று அங்கும் சுத்தம் செய்தேன். மேஜை பிசுக்குகளை அதற்குண்டான ரசாயனத்தைத் தெளித்துத் துடைத்து எடுத்தேன். ஆளுயரக் கண்ணாடி மீதும் தெளித்து துடைக்கையில் அதில் என் உருவம் தெரிந்தது. அப்படியே அம்மாவின் முகம். அழுது முடித்த முகம். ஏன் அழுகிறாய் என்று யாரையும் கேட்க வைக்காத முகம். ஆனால், அழகிய முகம்.

‘இன்னும் ஏன் கேமராவை வந்து எடுக்காமல் இருக்கிறார்? மறந்துவிட்டார்களா? வீட்டில் ஒரு புதியவர் இருக்கும் போது சில விஷயங்கள் மறப்பதுதான். அதற்காக இதை மறப்பார்களா?’ கண நேரத்தில் ஒன்று உந்தியது. என்னிடம் ஒரு புதிய மெம்மரி கார்டு இருந்தது. வேகவேகமாக கேமராவின் கார்டை கழட்டி என்னுடைய புதிய கார்டை அதில் பொருத்தினேன். கேமராவில் இருந்து கழட்டிய அந்த கார்டை என் பையில் போட்டுக் கொண்டேன்.

அமீலியா உள்ளே வந்தாள். நான் குனிந்து வேலை செய்வது போல் இருந்தேன். வந்தவள் கேமராவையும் வேறு சிலவற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

குப்பைகளை ஒரு பையில் கட்டி எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அவர்கள் கேமராவைச் சோதித்துக் கொண்டிருந்தார்கள். ‘வேலை செய்யவில்லையோ…’ என்று பாட்ரிக் கேட்பது காதில் விழுந்தது.

அவள் மடி மேல் அமர்ந்திருந்த பூனை இறங்கி என்னிடம் வந்தது. நான் அதையும் தூக்கிக் கொண்டு கராஜுக்குச் சென்று குப்பை போட்டுவிட்டு வேக வேகமாக மாடியிலிருக்கும் என் அறைக்கு ஓடினேன்.

பல வகையான எண்ணங்கள். இன்றைய இருப்பு, நாளைய நிச்சயமின்மை, நேற்றைய கேள்விகள். மேலும், கடத்தல் பொருள் வைத்திருக்கும் கள்வன் போல வெகு நேரமாக எண்ணங்கள் உழன்று கொண்டிருந்தன. எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்பது. பூனையும் என்னை விட்டு விலகிச் சென்றது. மெம்மரி கார்டை ஒளித்து வைத்தேன். நள்ளிரவில் கீழிறங்கினேன். அவர்களின் நடமாட்டம் இல்லை. சமையல் அறைக்குச் சென்றேன். அது மாறியிருந்தது. கொஞ்சம் தான். ஆனால், மாறியிருந்தது. வேறு யார் பார்த்தாலும் தெரியாது. ஆனால், மாறியிருந்தது. நான் மீண்டும் பழைய சீருக்கு அவைகளை கொண்டு வரவில்லை. அது வீண் வேலை என்று தெரியும். அப்படியே விட்டுவிட்டேன். இருப்பதை உண்டுவிட்டு அறை திரும்பினேன். நாளை என்பதை நாளை சந்திக்கலாம் என்று மனம் ஒருகியிருந்தது.

மறுநாள் பாட்ரிக் வெளியே செல்வதையும் அமீலியா அவருக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பி வைப்பதையும் என் அறை ஜன்னலில் இருந்து பார்த்தேன். அவளுக்கு என்னைவிட ஓரிரு வயது தான் அதிகமாக இருக்கும். இப்போதுகூட, இந்தக் காலை வேளையில் கூட எங்கோ கிளம்பிப் போகும் தோரணையில் தான் தன்னை அலங்காரமாக வைத்திருந்தாள். பாட்ரிக்கின் கார் கிளம்பியது. இதோ அவள் உள்ளே வருகிறாள். ‘ஐயோ… உள்ளே வருகிறாள்… நேராக இங்கே தான் வரப் போகிறாள். வந்து பேச்சுக்கு கொடுக்கப் போகிறாள். என்ன கேட்பாள்? வேறு என்ன? எப்படி என்னை அறிமுகம் செய்து கொள்வது. அறிமுகம் தேவைதானா? எல்லாம் அவளுக்குத் தெரியாமலா இருக்கப் போகிறது? ‘ஹலோ… நான் லீனா… லீனா கொன்சாலஸ்… ஹலோ… நான் பாட்ரிக்கின் முன்னால் நாயகியின் ஒரே குழந்தை…’ இல்லை நான் எதுவும் பேசப் போவதில்லை.

ஆனால், அவள் என் அறையிருக்கும் மாடிக்கு வரவே இல்லை. எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது? அவள் வெளியேயும் செல்லவில்லை. அப்படியானால் நான் கீழிறங்கி வருவதற்காகக் காத்திருக்கிறாள். நான் காத்திருக்கும் தோறும் என் மனதில் அவளுடனான உரையாடல் தீவிரமடையும். அது என்னை மன அழுத்தத்தில் கொண்டு சேர்க்கும். இதை நிறுத்த ஒரே வழி… நான் கீழிறங்கிச் சென்றேன். நான் படியிறங்கி கீழே இறங்க இறங்க அவள் டிவி முன் அமர்ந்திருக்கும் காட்சி எழுந்து கொண்டு வந்தது. நான் கடைசி படிக்கும் வந்துவிட்டேன். ஆனால், அங்கேயே நின்றேன். அவள் டிவியை அணைத்தாள். அந்த டிவியின் திரையில் அவள் பிம்பம் தெரிந்தது. அவளுடைய பிம்பம் என் பிம்பத்தை நோக்கி இருந்தது.

“பெண்ணே… ஏன் அங்கேயே நிற்கிறாய்?” என்றாள்.

நான் அமைதியாக இருந்தேன்.

“பெண்ணே…”

“சரி சொல்ல வந்ததைச் சொல்… எல்லோரும் சொல்வது தானே?” என்றாள்.

நான், “எனக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை…” என் குரலின் தொனி எனக்கே புதிதாக இருந்தது. அடிபட்ட நாய்க்குட்டி போல.

“சரி… கேட்க வந்ததைக் கேள்…” என்றாள்.

“இன்னும் எத்தனை நாட்கள்?”

“எத்தனை நாட்கள் என்றால்?”

“இன்னும் எத்தனை நாட்கள் எனக்கு இங்கு தங்க அனுமதி…”

“விவரமான பெண் தான்… அதற்கு பிறகு வருகிறேன்… உன் வயது என்ன?”

“இருபத்தி இரண்டு…” என்றேன்.

“என்னை விட எட்டு வருடங்கள் சிறியவள் நீ…”

“உன் வயதிருக்கும் போதுதான் நான் ஆரம்பித்தேன். இப்போதுதான் ஒரு நல்ல ஆள் கிடைத்திருக்கிறான். இதை கெடுக்க உனக்கு அனுமதியில்லை. அதற்கு விட மாட்டேன்.” திடமாகச் சொன்னாள்.

“அந்த எண்ணம் எனக்கு இல்லை. நான் இனி என்ன செய்ய என்பதுதான் எனக்கு யோசனை.” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள். “பாட்ரிக் நல்லவர்…” என்றேன்.

அவள் கை காண்பித்து என்னை நிறுத்தினாள். “இதில் நல்லவர் கெட்டவர் கிடையாது. என்னுடைய வாய்ப்பா… அல்லது உன்னுடைய வாய்ப்பா… என்பதுதான் கேள்வி.”

“பாட்ரிக் என் அம்மாவுடன் இருந்தவர். ஆகையால்…” என்று நிறுத்தினேன். அவள் மனதில் ஏதோ ஒன்று சமரசம் அடைவதை அவளின் முக அசைவு சொன்னது. நானும் அமைதியானேன்.

சிறிது நேரம் கழித்து அவள் ஆரம்பித்தாள். “உன் வயதிருக்கும்போது தான் நான் தெளிவாகினேன். அப்போது எனக்கு இருந்த டாடி மோசமானவர். எனக்கு தெளிந்ததும் அவரை விட்டு விலகினேன். அதற்கு பிறகு பல டாடிக்கள். அங்கு ஆரம்பித்து இன்று இங்கு வந்து நிற்கிறேன். அநேகமாக இரண்டு மூன்று வருடங்கள் இதில் ஓடும். அதற்குள் இங்குள்ள என் தேவைகளும் முடிந்து விடும்.”

அமீலியா தொடர்ந்தாள். “உன் டாடியை நீ வேறெங்காவது தேடிக் கொள். உனக்கு ஒரு வாரம் தருகிறேன். இப்போதைக்கு நான் என்ன சொன்னாலும் கேட்பான் இந்தத் தடியன். பார்த்தாய் அல்லவா வெளியே நிற்கும் புதிய காரை…”

என் கால்களுக்கடியில் நிலம் இல்லாதவள் போல உணர்ந்தேன். உள்ளங்கைகள் குளிர்ந்தன. கால்கள் பலமிழந்தன. நெஞ்சுக்கூடு மூச்சிழுக்க மறுத்தன. எங்காவது அமர வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் அப்படியே நின்றேன். இருப்பிடம் இல்லாத, பணம் இல்லாத, ஏதேனும் திறமை என்று கிஞ்சித்தும் இல்லாத ஒரு பெண் எனக்குள் இருந்து என்னை விழுங்கி வெளியே பிரவேசித்தாள்.

அமீலியாவுக்கும் அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்? அம்மா இவளுடைய முந்தைய தலைமுறை நாயகி. அம்மா தவறவிட்டதை இவள் செம்மை செய்கிறாள். ஒரு வேளை இவள் முதல் தலைமுறையாகவும் அம்மா அடுத்த தலைமுறையாகவும் இருந்திருந்தால் அம்மாவுக்கு டாடிக்களை எப்படி நடத்தி இருக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும். நான் பிறக்காமல் கூட போயிருக்கலாம். பிறக்காத நான்… இப்போதைய எனது தேவை, ‘பிறக்காத நான்’

“பெண்ணே…”

“எனக்கு சுகர் டாடிக்கள் தேவையில்லை. நான் என் அம்மா போல் இல்லை,” என்றேன். அதை ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை.

“ஒரு வாரம்… அது வரை சமையல் உன் பொறுப்பு. என் அறையைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்… நீ செல்லலாம்… தெரியும் அல்லவா? பாட்ரிக் இப்போது நான் என்ன சொன்னாலும் செய்வான். ஹ்ம்ம்…”

பொத்தான் அழுத்திய பொம்மை போல் சமையல் அறை சென்றேன். இப்போதைய என் தேவை எனக்கு ஏதாவது ஒரு வேலை. என் எண்ண ரீங்காரத்தை மறக்கச் செய்யும் ஒரு வேலை.

அடுத்த நாள் பாட்ரிக் சென்றதுமே தாமதமில்லாமல் கீழே இறங்கிச் சென்றேன். எனக்காகக் காத்திருப்பது போல் நின்றிருந்தாள் அமீலியா. நான் ஒன்றும் சொல்லாமல் அருகில் சென்று தலை குனிந்து நின்றேன்.

அவள் கேட்டாள், “யோசித்தாகி விட்டதா? உன் அடுத்த நகர்வைப் பற்றி?” என்னை உன்னித்துப் பார்த்து,                 “இன்னும் ஆறு நாட்கள்தான் இருக்கிறது,” என்றாள்.

“நான் எந்த வேலையாக இருந்தாலும் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டேன். இனி எனக்கு எந்த வேலைக்கும் மனத் தடைகள் இல்லை. மத்திய நகரத்தில் ஒரு காரியாலயத்தில் ஒரு வேலைக்காரிக்கான இடம் காலியாக இருப்பதாக தெரிகிறது,” என்றேன். உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. பகுதி அவளுக்குச் சொன்னேன். பகுதி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

அவள், “நல்லது…” என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றாள். பிறகு யோசித்துப் பார்த்தேன், ‘நான் ஏன் அப்படி பொய் சொன்னேன்?’ என்று. அவளுடை அங்கீகாரம் எனக்கெதற்கு. என் உள் மனம் அவளுடைய ஏதோ ஒரு ஏற்புக்காக ஏங்குகிறதா? இதற்கு பதில் கிடைக்கப் போவதில்லை. இந்தக் கேள்வி கூட ஒரு புகை மூட்டமாகத்தான் எனக்குள் எழுகிறது. அடுத்த நாளை நான் சொன்னது பொய் என்று அவளிடம் ஒத்துக்கொள்ளப் போகிறேன்.

அடுத்த நாளும் அதே போல் கீழிறங்கிச் சென்று அவள் முன் நின்றேன்.

“பிறகென்ன?” என்றாள்.

முந்தைய இரவு நான் தயாரித்து வைத்திருந்த எந்த வாக்குமூலமும் வாய்க்கு வரவில்லை. “இல்லை. என்னால் அந்த வேலைக்காரி வேலைக்கெல்லாம் போக முடியாது…” தலை குனிந்து கொண்டே கெஞ்சுவது போல் சொன்னேன்.

“ஏன்?” என்று கேட்டாள்.

“ஏனென்றால்…” வினாடி ஸ்தம்பித்தேன். “உனக்குத் தெரியாதா… ஏன் என்று?” என்றேன். நான் இப்போது மிகச் சரியாக பேசியது போல் எனக்குத் தெரிந்தது. இனி அது கொண்டு சேர்க்கும் இடமும் தெளிவாகத் தெரிந்தது.

“சரி. முடிவெடுத்து விட்டாயா… உனக்கும் ஒரு சுகர் டாடிதான் தேவை என்று?”

நான், “ஆம். அதற்கு நீ எனக்கு உதவப் போகிறாய்…” என்றேன்.

அப்போது அவள் முகத்தில் உதித்த மெல்லிய புன்னகையை இன்னதென்று என்னால் வகைப்படுத்த முடியவில்லை. அதே மென் சிரிப்பைப் பல முறை பலரிடம் பலவிதமாகக் கண்டிருக்கிறேன். அதேதான். ஆனால், அதுவல்ல. இந்தக் கணத்தில் அது வேறு. என் மூடிய அந்தரங்கத்தை அவள் கண்டது போல. நீயும் நானும் ஒன்றுதான் என்பது போல. நானும் உன் அம்மாவும் ஒன்று என்பது போல. அதற்கு எதிர்வினை என்று அப்போதைக்கு எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால், அந்தச் சிரிப்பு என்னில் பதிந்துவிட்டது.

அமீலியா அந்த வலைத்தளத்தைக் காண்பித்தாள்.

முதற்கணம் மந்தமும் இரண்டாம் கணம் அருவருப்பும் மூன்றாம் கணம் குற்றச் செயல் போலவும் நான்காம் கணம் ரகசிய குதூகலமும் ஐந்தாம் கணம் அமைந்த மனமுமாக பரிணமித்து நின்றது.

அந்த வலைத்தளத்தில் அனைத்து இன, கன, நிற, ரக பெண்கள் ஒரே நோக்கம் கொண்ட குணவதிகளாக இருப்பதைக் கண்டேன். அதில் அனைத்து ஆண்களும் தளர்வுற்றவர்களாக, வீரியத்துடன் நடித்துக் கொண்டிருப்பவர்களாக இருப்பதைக் கண்டேன்.

அமீலியா எனக்கு ஓர் கணக்கை அவளே பணம் கட்டி ஆரம்பித்தாள். கணக்கின் விவரங்களை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி என்னிடம் நீட்டினாள். நான் அதை பெற்றுக்கொள்ள அந்தக் காகிதத்தின் மறு முனையைப் பிடித்தாள். அவள் அதை விடாமல் இன்னும் பற்றிக் கொண்டு சொன்னாள், “உனக்கு நான் தரும் மூலதனம் இது. நினைவிருக்கட்டும்…” காகிதத்தை விட்டாள். அது என்னிடம் வந்தது. நன்றி கூறாமல் நான் மேலே ஓடினேன். எனக்குப் பின்புறம் “இன்னும் ஐந்து நாட்கள் தான்…” என்று கேட்டது.

என் அறையில் அங்கும் இங்குமாக நடந்தேன். உயிர் உச்ச விசையில் உள்ளுக்குள் சுழன்றது. எல்லாத் திசைகளிலும் எண்ணங்கள் சீரின்றி சிதறி திரிந்தன. அனைத்து சக்தியையும் திரட்டி எண்ணங்களை ஒன்று குவித்தேன். அது அம்மாவின் முகமாகக் குவிந்தது. அதே இளமைக்கால முகமாக. அடுக்கடுக்காக அவச்சொற்களை அந்த முகத்தின் மீது அள்ளி வீசினேன். அப்படிப்பட்ட சொற்கள் என்னிடம் இருந்து வந்ததை எனக்கு நானே கூட சொல்லிக் கொள்ள முடியாதவை. ஆத்திரம் அமிழ்ந்ததும் செயல்பட துவங்கினேன். அந்தக் காகிதத்தைப் பார்க்கக்கூட தேவையிருக்கவில்லை. அவற்றை அவள் எழுதும் போதே என் மனதிலும் எழுதிக் கொண்டேன்.

பார்க்கும் ஆண்களுக்கு எல்லாம் தொடர்பு பொத்தானை அழுத்தினேன். நரைத்தவர்கள், வழுக்கை விழுந்தவர்கள், தொந்தி தள்ளியவர்கள், கை கால் இழந்தவர்கள் என்று மதியத்துக்குள் எழுபது ஆண்களைப் பரிசீலித்து அவர்களின் மருமொழிக்காகக் காத்திருந்தேன். ஒன்றும் பிரயோஜனம் இல்லை. நேரம் செல்ல செல்ல பாதுகாப்பின்மை என்னை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டது. ஒன்றுமே நடக்கவில்லை. சாக்கடையில் குளித்து எழுந்தவள் போல் உணர்ந்தேன்.

வெறுப்பாகச் கீழிறங்கிச் சென்றேன். அவளிடம் மண்டியிட்டு அழுது கேட்கலாம் என்று. அழுவது சுலபம்தான். ஆனால், என்ன கேட்பது?

கீழே அவள் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள். பாதுகாப்பாக… அந்த இருப்பிடமே அவளின் இருப்புக்கு அடி சேவை செய்வது போல… மொத்த பூமியில் இந்த வீட்டை மட்டும் கூறுப் போட்டு அவள் கட்டுப்பாட்டில் எடுத்தவள் போல… இன்றைய தினத்தை மட்டும் காலக் கூறுப் போட்டு அவள் தன்னகம் செய்தது போல… நொடிப் பொழுதில் பாட்ரிக் ஏன் கவர்ந்திழுக்கப்பட்டார் என்று புரிந்தது. நான் அப்போது அம்மாவின் காலணிகளை அணிந்திருந்தேன். மெல்ல சென்று அவளுடைய காலணிகளை அணிந்து கொண்டு மேலே ஓடினேன். அவள் பார்த்திருக்கக் கூடும். அன்று இரவு முழுதும் அவள் காலணிகளை அணிந்திருந்தேன். அவள் போலவே உணர்ந்தேன். அவளின் அம்சத்தை என் மீது ஆவேசிக்க அனுமதித்தேன்.

பிறகு நான் தொடர்பு கொண்டு காத்திருந்த அத்தனை பேரையும் ரத்து செய்தேன். அந்த வலைத்தளத்தில் என் கணக்கை முற்றிலுமாக மாற்றி அமைத்தேன். அப்படியே தூங்கிப் போனேன். மறுநாள் காலை எட்டு கனவான்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரையும் பரிசீலித்தேன். பரிசீலிக்கும் போதே இன்னும் சில தொடர்புகள். இல்லாத ஒன்று கிட்டியது போல இருந்தது.

அடுத்து வந்த இரு நாட்கள் நான் வீட்டில் தலை நிமிர்ந்தே நடந்தேன். அங்கே என்னுடைய தேவை என்று எதையும் தெரிவித்துக் கொள்ளவில்லை. சமையல் செய்வதையும் சுத்தம் செய்வதையும் நிறுத்தி இருந்தேன். அதே பூனைதான் என்றாலும் அதை வெறுத்து ஒதுக்கினேன். எத்தித் தள்ளினேன்.

கடைசி இரண்டு நாட்கள் இருக்கும்போது என் மூட்டை முடிச்சுகளைக் கீழே கொண்டு வந்து வைக்க ஆரம்பித்தேன். நான் வெறும் கால்களுடன் இருந்தேன். பாட்ரிக் என்னோடு பேசுவது நின்றிருந்தது. ஓர் உடல் போல் அமர்ந்திருந்த அவர்களுள் இருந்த அமீலியா தனித்தெழுந்து என்னை நோக்கிக் கேட்டாள், “இன்றா?”

“நாளை…” என்றேன். “என்னை அழைத்துச் செல்ல கார் நாளைதான் அனுப்பப்பட்டிருக்கிறது.”

“உனக்கு சேராத எந்தப் பொருளையும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். நீ எடுத்துச் செல்ல விரும்பும் ஒவ்வொரு பொருளையும் கணக்குச் சொல்லி பட்டியல் எழுதி கண்ணில் காண்பித்து என் அனுமதி பெற்றுத்தான் எடுத்துச் செல்ல முடியும். நான் முழு முற்றாக உன்னைச் சோதனையிடுவேன். பெண்ணே! புரிகிறதா! உன்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்,”

“புரிகிறது…”

“நல்லது! இன்றும் சமையல் உன் பொறுப்பு. முடித்துவிட்டு எங்கள் அறையைச் சுத்தம் செய்துவிடு…” இறுகிய முகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தவள் பாட்ரிக்கை நோக்கித் திரும்பியவாறு தொடர்ந்தாள், ”அங்கே எங்கள் காதல் தடையங்களைக் கண்டு பொறாமை கொள்ளாதே.” அவள் இளம் பெண் போல சிரித்துக் காண்பித்தாள். அது தத்ரூபமாக இருந்தது.

சமையல் செய்து முடித்து கடைசி முறையாக அவர்கள் அறைக்குச் சென்றேன். மனதிற்குள் அம்மா எழுந்து வந்தாள்.

அறையைச் சுத்தம் செய்து முடித்து கடைசியாக நோட்டம் விட்டேன்.

அங்கு இருக்கும் எந்தப் பொருட்களும் எனக்கு முறையாக அறிமுகம் இல்லை. இருந்தும் அவை எதுவும் இங்கு இருக்கக் கூடாதவை என்று தோன்றியது. ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக் கொண்டு வந்தேன். கண்ணாடி, நகப்பூச்சு, முகப்பூச்சு, உதட்டுச் சாயம், வாசனை திரவியம், கைக்கடிகாரம், கழுத்தில், காதில், கையில், இடுப்பில், கணுக்காலில் அணிபவை என்று என்னென்னவோ. இவற்றில் ஒன்றுகூட என்னிடமோ அம்மாவிடமோ இது நாள் வரை ஒரு பொழுதிற்குக்கூட இருந்ததில்லை.

அடுத்த நாள் எனக்காக அனுப்பி வைக்கப்பட்ட கார் வீட்டின் முன் வந்து நின்றது. நான் என் பொருட்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைக்க, கார் ஓட்டுநர் அதை கவனமாக காருக்குள் வைத்துக் கொண்டிருந்தார். அன்று அதிக அலங்காரமில்லாத அமீலியா வந்து நின்றாள். என்னைச் சோதனை செய்வாளோ என்ற பயம் தொற்றியது. நான் அவளை நோக்கி திரும்பினேன். அவள் ஏதோ கேட்க வாய் எடுத்தாள், நான் முந்திக் கொண்டு சொன்னேன் “பாட்ரிக்கிடம் கடைசியாக ஒரு முறை பேச விரும்புகிறேன்…”

திடுக்கிட்ட அவள் “பெண்ணே…” என்று அழுத்தமாகச் சொன்னாள். “உனக்கு இத்தனை நாட்கள் நான் செய்தது போதவில்லையா?”

நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன்.

“என் வளையத்தை விட்டு வெளியேறு. அடுத்தவர் வாழ்க்கையில் உன்னுடைய தலையீடு என்ன என்பதைத் தெரிந்து பேசு… நீ இங்கிருந்து செல்லலாம்…”

நான் வெளியே எட்டு வைக்க வைக்க கதவு ஓங்கி அடைக்கப்பட்டது. அடைக்கும்போது என் குதிகாலில் கதவு அடித்து வலித்தது. வெளியே தலை குனிந்து நின்றேன்.

உணர்வுகள் அணைந்து அடங்கியிருந்தன.

ஓட்டுநர், “செல்வோம்…” என்றார்.

நான் திரும்பி கதவைப் பார்த்தேன். அதற்கு மறுபக்கம் அவள் நின்று துவாரத்தின் வழியாக என்னை நோக்கிக் கொண்டிருப்பாள் என்பது தெரிந்தது. விலகி ஜன்னலைப் பார்த்தேன். அதன் திரைச் சீலை அசைந்தது. கனமான உருவத்தின் தலை இன்னும் திரைச் சீலையின் பக்கத்தில் வந்து உன்னித்துப் பார்த்தது.

உள்ளம் ஓர் உணர்வாகத் திரண்டது.

அந்த மெம்மரி கார்டை சட்டைப் பையில் இருந்து எடுத்து, உதடுகள் அழுத்தி, கண்கள் சுருக்கி, மூக்கை விடைத்து, முகத்திற்கு நேராக அதை உயர்த்தி; காற்றைக் கிள்ளுவது போல் பிடித்து; திரை சீலையின் விரிசலுக்கும் மூடியிருந்த கதவின் துவாரத்திற்கும் காண்பித்து நின்றேன்.

கனமான உருவம் சட்டென்று பின் வாங்கி மறைந்தது. நான் காரின் பின் இருக்கைக்குப் பாய்ந்த்தேன். “சீக்கிரம்… சீக்கிரம்… சீக்கிரம்…” என்று கத்தினேன். கார் டயர் கிரீச்சிட பறந்தது.

நான் காரின் பின் இருக்கையில் இருந்து திரும்பிப் பார்த்தேன். பாட்ரிக் வெளியே ஓடி வந்து நின்றான், அவனுக்குப் பின்னால் அமீலியா வந்து நின்றாள். அவளிடம் என் திசை நோக்கி ஏதோ அவன் உரைப்பதும். அமீலியா தலையைப் பிடித்து நிற்பதும் வரை தெளிவாகத் தெரிந்தது. பிறகு அவர்கள் உருவம் சிறுத்துக் கொண்டு வர; என் அகத்தில் இன்னதென்று சொல்லவியலாத களி ஒன்று திரண்டு கொண்டு வந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...