கு. ப. ராஜகோபாலன் சிறுகதைகள்

தமிழ் நவீன சிறுகதை உலகின் முன்னோடிகளாகத் திகழும் புதுமைபித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி.ராஜநாரயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, ல.ச.ரா, ஜி.நாகராஜன், யுவன் சந்திரசேகர் எனப் பலரின் சிறுகதைகள் தமிழாசியா ஏற்பாட்டில் நிகழும் கலந்துரையாடலில் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்திருகின்றன. அவ்வகையில் கடந்த ஜூன் 29 எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் 4 சிறுகதைகளைக் குறித்த உரையாடல் நிகழ்ந்தது. ‘சிறிது வெளிச்சம்’, ‘விடியுமா?’, ‘ஆற்றாமை’, ‘பண்ணைச் செங்கான்’ எனும் கு. ப. ராஜகோபாலனால் புனையப்பட்ட கதைகள் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஓர் எழுத்தாளனின் கதை உலகத்தைப் புரிந்துகொண்டிருப்பதன் வழியே ஒரு வாசகனால் அந்த எழுத்தாளனின் கதைகளோடு ஆழமாக ஒன்றமுடியும். ஆக, கலந்துரையாடலின் தொடக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 சிறுகதைகளை மையமாகக் கொண்டு கு.ப.ராவின் கதை உலகத்தைக் குறித்த ஒத்துமொத்தப் பார்வைகள் வாசகர்களால் முன்வைக்கப்பட்டன. கச்சிதம், எளிய மொழிநடை, நுட்பமான கதைகள், பெண்களின் பாலியல் உலகைச் சார்ந்த கதைகள், அகத்தைப் பேசும் கதைகள், இலட்சியவாதத்தன்மையில் அமைந்துள்ள கதைகள், இருள் அடைந்த சூழலிலிருந்து வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லும் கதைகள், சவால்களற்ற கதைகள், புதிய திறப்புகள் இல்லாமை, வாசகர் இடைவெளி இல்லாமை போன்றவற்றால் கு.ப.ராவின் கதை உலகம் ஆனதாகப் பங்கேற்ற வாசகர்கள் கூறினர்.

வாசகர் பார்வையைத் தொடர்ந்து, ம. நவீன் கு.ப.ராவைச் சுந்தர ராமசாமி, புதுமைபித்தன், ஜெயகாந்தன் ஆகியோர்களோடு ஒப்பிட்டுக் கூறி அவரின் கதை உலகத்தைப் பற்றி மேலும் விளக்கினார். கு.ப.ராவின் கதை உலகைச் சுந்தர ராமசாமியின் கதை உலகத்தோடு ஒப்பிடலாம் என ம. நவீன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கதைகளில் கையாளுபவர்கள்தான் கு.ப.ராவும் சுந்தர ராமசாமியும். புதுமைபித்தன், ஜெயகாந்தன் போல் கதைகளில் பரிச்சார்த்த முயற்சிகளைத் தமது கதைகளில் நிகழ்த்திப் பார்க்காவிட்டாலும் கு.ப.ரா வடிவ ரீதியில் தமிழ் நவீன சிறுகதை உலகில் தமது கொடையை வழங்கியுள்ளார். ‘ஒரு காடு உருவாக்குவது வேறு, ஒரு தோட்டம் உருவாக்குவது வேறு’ என வேதசகாயம் குறிப்பிடும் உருவகத்தோடு புதுமைபித்தன், ஜெயகாந்தன் கதை உலகம் மர்மமும் பிரம்மாண்டமும் கொண்ட காடாகவும் கு.ப.ராவின் கதை உலகத்தைத் உலகம் திட்டமிட்டு உருவாக்கிய நேர்த்தியான தோட்டமாகவும் ஒப்பிட்டு கூறினார் ம. நவீன்.

கு.ப.ரா கதைகளில் பரிச்சார்த்த முயற்சிகளும் புதிய திறப்புகளும் இல்லையென்பதாலே அவரின் கதைகள் சிறந்தவையல்ல என்று சொல்லிவிட முடியாது. அழகியல், வடிவம் சார்ந்த பிரக்ஞை ஆகிய தன்மையால் கு.ப.ரா கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நவீன சிறுகதைக்கான நேர்த்தி, கச்சிதம், கூர்மையாகச் சொல்லுதல் போன்றவற்றையும் கு. ப. ரா கதைகளில் நாம் காணலாம்.

இருந்தபோதிலும், கதைகளில் கவித்துவமான இடைவெளி இல்லாமைதான் கு. ப. ராவின் கதைகளைப் பலவீனமாக்குகின்றன என விவாதத்தின் வழி அறிய முடிந்தது. கவித்துவமான மௌனம் என்பது ஓர் எழுத்தாளன் திட்டமிட்டு எதையும் எழுதாமல் தன்னியல்பாக எழுதிக் கொண்டிருக்கும்போது உருவாகும் தரிசனத்தை வாசகன் சுயமாகச் சென்றடைதல் ஆகும். அதனை எழுத்தாளன் சொல்லிவிடக் கூடாது. ஆனால், கு. ப. ராவின் கதைகளில் வாசகன் சென்றடையக்கூடிய இடங்கள் இல்லாமல், கவித்துவமான மௌனங்கள் அற்ற படைப்புகளாக அவை நின்றுவிடுகின்றன என ம. நவீன் கூறினார். “கு. ப. ராவின் எழுத்துலகில் சிறந்த கதைகளாக இவை நான்கு மட்டும்தான் தொடர்ந்து கூறப்படுகின்றது என்றால் அவருடைய எழுத்துலகில் அவர் அடைந்திருக்கும் வெற்றியை இதன் வழியே நாம் அளவிடலாம்,” என்றும் ம. நவீன் குறிப்பிட்டார்.

சிறிது வெளிச்சம்

‘சிறிது வெளிச்சம்’ கதை குறித்து முதலில் உரையாடப்பட்டது. கதையின் வடிவம், கதை போக்கு, கதையின் மையம், கதை கடத்தும் உணர்ச்சி, மொழி, கதையில் தான் கண்டடைந்த உண்மை எனும் அடிப்படையில் சுதாகர் இக்கதையைக் குறித்து பேசினார். ‘சிறிது வெளிச்சம்’ சிறுகதை சாவித்திரி எனும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி பின்நோக்கி சொல்லும் உத்திமுறையில் புனையப்பட்ட கதை என சுதாகர் கூறினார். சாவித்திரியின் இறப்போடு தொடங்கும் கதை மெல்ல சாவித்திரிக்கும் கதை சொல்லிக்கும் இடையில் உள்ள உறவையும் சாவித்திரி தனது திருமண வாழ்க்கையில் எதிர்நோக்குகின்றன அவலங்களையும் அவளின் மனப் போராட்டங்களையும் கூறிச் செல்கின்றது. கதையின் இறுதியில் அவள் கண்டடையும் சிறிது வெளிச்சம் என்ன என்பதனைக் கதாசிரியரே கூறிவிடுகிறார் என்றார் சுதாகர்.

கதை எழுதப்பட்ட காலத்தோடு கதையை அணுகினால், அக்காலத்தில் பெண்கள் கணவனைத் தவிர்த்து மற்ற ஆண்களிடம் பேசுவதும் கணவனை எதிர்த்துப் பேசுவதும் மரபுக்கு எதிரான ஒன்றாகவும் கருதப்பட்டது. அதன் அடிப்படையில் சாவித்திரி பெண்களுக்கான மரபை உடைத்தெறிந்து தனது அந்தரங்க விஷயங்களைச் கதைசொல்லியிடம் கூறுவதே இக்கதையின் உச்சமாகப்பட்டதென்று சுதாகர் குறிப்பிட்டார்.

இருண்டிருந்த சாவித்திரியின் வாழ்க்கையில் கதைசொல்லியின் வருகைதான் சிறிது வெளிச்சமாக அவளுக்கு அமைகின்றது என்றும் அவளின் வாழ்க்கையை அவளே வெளிச்சம் போட்டு கதைசொல்லியிடம் கூறுவதும் கதையில் உணர்த்தப்படும் சிறிது வெளிச்சம் என சுதாகர் கதையில் தான் கண்டடைந்த உண்மையை முன்வைத்தார். ஒரு பெண்ணின் அகத்தையும் அவளின் உடல், மனதின் தேவைகளையும் மையப்படுத்தி எளிமையான மொழிநடையில் தேவைக்கேற்ற கதாப்பாத்திரத்தோடு கதை நகர்ந்தது சிறப்பாக அமைந்தது எனவும் அவர் கூறினார்.

சுதாகரின் பார்வையைத் தொடர்ந்து, வாசகர்கள் கதை குறித்த அவர்களின் கருத்துகளை முன்வைத்தனர். புஷ்பவள்ளி, சாவித்திரியின் ஏக்கம்தான் கதையின் உச்சமாகத் தனக்குப்பட்டதென்று குறிப்பிட்டார். சாவித்திரிக்கு ஆண்கள் மீதான விரக்தி கதையில் நுட்பமாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் சாவித்திரி முழு பிரக்ஞையுடன்தான் கதைசொல்லியிடம் நெருங்குகிறாள் எனவும் சில வாசகர்கள் கூறினர்.

மேலும், கதைசொல்லி சாவித்திரியை அவளது கணவனைப் போல் முரட்டுத்தனமாக அணுகாமல், துன்பத்தில் உறைந்திருந்த அவளை மென்மையாக அணுகியதே அவளுக்கு அச்சமயத்தில் கிடைத்த சிறிது வெளிச்சம் என ஶ்ரீதர் குறிப்பிட்டார். அதோடு, 40ஆம், 50ஆம் காலக்கட்டத்தில் மேல்தட்டு வர்க்கத்துப் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் அடக்குமுறையின் முன் மெளனமாக இருப்பதையும் பிராமணப் பெண் சாவித்திரி பாத்திரம் மூலம் கதாசிரியர் உணர்த்துவதாகவும் ஶ்ரீதர் கூறினார்.

அதனை ஏற்றுக்கொண்ட ம. நவீன், கு.ப.ரா கதையில் காட்டப்படும் பெண்களைக் குறித்து விளக்கமளித்தார். மேல்தட்டு வர்க்கத்தினரிடையே மௌனமாக நடக்கும் வன்முறைக்கு இரையாகும் பெண்களின் அகச் சிக்கல்களைச் சார்ந்தவைதான் கு.ப.ராவின் புனைவுலகம். பெண்களுக்கான புரட்சியை மையமாகக் கொண்டு புனையப்பட்ட வங்கால இலக்கியத்தின் சாயலைக் கு.ப.ராவின் புனைவுலகம் சித்தரிக்கின்றன. அதற்கு மேலும் ஒரு காட்டாக ‘கனகாம்பரம்’ கதையைச் சுட்டிக்காட்டினார் ம. நவீன்.

சமூகக் கட்டமைப்பினால் தன் கணவனைவிட்டு எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் தவிக்கும் சாவித்திரி, தமக்குச் சிரிக்க ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்கும் நிலையில் இருக்கும்போது அதற்கான வாய்ப்பு அவளுக்குக் கதைசொல்லியின் வழி அமைகின்றது. அவ்வாய்ப்பினைச் சாவித்திரி மிகக் கவனமாகப் பயன்படுத்துகின்றாள். இடைவெளியில்லாத துன்பத்தில் அவள் உருவாக்கக்கூடிய சிறிது வெளிச்சம்தான் கதைசொல்லியிடம் அவள் கடத்தும் நேரமும் உணர்வும் என ம. நவீன் கூறினார். பூடகமான சொல்முறை கதையில் பயன்படுத்தப்பட்டாலும் இத்திறப்பைத் தவிர வேறு திறப்பு இக்கதைக்கு அமையவில்லை.

விடியுமா?

தொடர்ந்து, புஷ்பவள்ளி ‘விடியுமா?’ எனும் கதையைக் குறித்துப் பேசினார். குஞ்சம்மாள் எனும் பெண்ணின் மனத் தவிப்பை மையமாகக் கொண்டு ‘விடியுமா’ கதை நகர்கின்றது. எளிய மொழிநடையிலும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் வாசகர் முடிவை ஊகிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தராத வகையிலும் கதை அமைந்துள்ளதாகப் புஷ்பவள்ளி கூறினார். குஞ்சம்மாளின் சென்னை பயணம், அவளின் மனப் போராட்டம், அவள் கணவனின் இருப்பு எனும் கதையில் காட்டப்பட்டுள்ள மூன்று கூறுகளின் அடிப்படையில் விடியுமா எனும் வினாவை முன்வைத்து இக்கதையின் மையம் புஷ்பவள்ளியால் அணுகப்பட்டது.

தன் கணவனின் உடல் நலம் மோசமாக உள்ளது என தந்தி கிடைத்தவுடன் சென்னைக்குத் தன் தம்பியுடன் பயணிக்கும் குஞ்சம்மாளின் மனப் போராட்டம் கதையினூடே ஆழமாகவும் துல்லியமாகவும் காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குஞ்சம்மாளின் மனப் போராட்டத்தையும் காத்திருப்பின் அவஸ்தையையும் ரயில் பயணச் சூழலோடு கதாசிரியர் ஒப்பிட்டது சிறப்பாக அமைந்திருந்தது எனவும் கதையின் முடிவு தனக்கு ஏமாற்றத்தை அளித்தது எனவும் புஷ்பவள்ளியால் கூறப்பட்டது. அதோடு, //ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?” என்றாள் குஞ்சம்மாள். அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று. என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா?”// எனும் வரியின் வழி குஞ்சம்மாள் தன் கணவனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவில்லை என்பதனையும் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

சென்னையை நோக்கிச் செல்லும் பயணம் முழுமை பெறுவதன் வழியும் தன் அகப் போராட்டத்திற்கான விடையை அவள் பெறுவதன் வழியும் தன் கணவனின் இல்லாமையால் மகிழ்ச்சியற்ற இல்லற வாழ்க்கையிலிருந்து தனக்கு விடுதலை கிடைப்பதன் வழியும் குஞ்சம்மாளின் வாழ்க்கையில் விடியல் ஏற்படுகின்றது என அவர் கூறினார். மேலும், கதை தனக்குச் சோகம், பயம், துயரம் போன்ற உணர்ச்சிகளைக் கடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

புஷ்பவள்ளியின் பார்வைக்கு அடுத்து, குஞ்சம்மாளின் கணவனின் இறப்புதான் அவளுக்கு விடியல் எனும் குஞ்சம்மாளின் பயம் இறுதியில் தீர்வதுதான் விடியல் என்றும் தம்பியின் பார்வையில் கதை சொல்லப்பட்டு வருவதால் தம்பிக்குத்தான் விடியல் என்றும் வாசகர்களால் கூறப்பட்டது. அதோடு மனித மனம் பல உணர்வு முரண்களால் ஆனதால் ஓர் உணர்வில் மட்டும் திளைத்திருக்க முடியாமல் அவ்வப்போது மனித மனம் நழுவும் முறையையும் கதை காட்டியதாக அரவின் குறிப்பிட்டார். அரவினின் பார்வையோடு உடன்பட்டு ம. நவீன் தமது பார்வையை முன் வைத்தார். மனித மனம் எந்தவொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியை நாடும். மனித இயல்புக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடையே உள்ள அழுத்தத்தைதான் குஞ்சம்மாள் இக்கதையில் எதிர்நோக்குகிறாள் என ம. நவீன் கூறினார்.

தொடர்ந்து, கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான முரண்கள் கு.ப.ராவின் கதைகளில் காண முடிகின்றது என விஜயலட்சுமி கூறியதும் ம. நவீன் கு.ப.ரா கதைகளில் காட்டப்படும் பெண்கள் எல்லோருமே ஒரே வகையினர்தான் என்று கூறினார். கு.ப.ராவின் கதைகள் நவீனத்துவச் சிந்தனைகளில் அமையாவிட்டாலும் நவீனத்துவ அழகியலை அடியொற்றி அமைந்திருக்கின்றது என ம. நவீன் குறிப்பிட்டார்.

ஆற்றாமை

மூன்றாவது சிறுகதையான ‘ஆற்றாமை’ சிறுகதை குறித்து ரேவின் பேசினார். ஒரு பெண்ணின் பாலியல் உணர்வினால் அவளுக்குள் நிகழும் கையறு நிலையைச் சித்தரிக்கும் கதைதான் ‘ஆற்றாமை’. கதையின் வடிவம் அலங்கார மொழியில்லாமல் கச்சிதமாக அமைந்திருப்பதாகவும் கதையின் தொடக்கம் வாசிக்கத் தூண்டக்கூடியதாக அமைந்திருப்பதாகவும் ரேவின் குறிப்பிட்டார்.

கதையில் இரட்டை தன்மையுடன் காட்சிப்படுத்தப்படும் சாவித்திரி இறுதியில் நல்லவளாக மனம் மாறி தம்மை தானே நொந்துக்கொள்ளும் முடிவில் தனக்கு உடன்பாடில்லை என அவர் கூறினார். தொடக்கத்திலிருந்து சாவித்திரி தன்னால் அடைய முடியாத பாலியல் இன்பத்தைக் கமலா அடைவதால், சாவித்திரி கதை முழுவதும் எரிச்சலுடனும் வக்கிர எண்ணத்துடனும்தான் செயல்படுகிறாள். அந்த வக்கிர எண்ணத்தின் வெளிபாடாகத்தான் கமலா தன் கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் தருணத்தைக் கெடுத்துவிட்டு, செய்த தவற்றை எண்ணி தன்னைத் தானே திட்டிக் கொண்டு, திடீரென்று சாவித்திரி மனம் மாறும் தருணம் ஏற்புடையதாக அமையவில்லை எனத் தனது விமர்சனத்தை முன்வைத்தார் ரேவின்.

தொடர்ந்து, கதையில் வருகின்ற எதிர்க்கதாப்பாத்திரத்தின் தீய குணங்களை மட்டும் காட்டாமல் அக்கதாப்பாத்திரத்திற்குள் உள்ள நல்ல குணங்களைக் காட்சிப்படுத்துவதன் வழி எழுத்தாளன் ஒரு மனிதனை முழுமையாகக் காட்டிவிடுகிறார் என்கிற சு.வேணுகோபாலின் கருத்தோடு ‘ஆற்றாமை’ கதையை ஒப்பீட்டு விஜயலட்சுமி பேசினார். அதனை கு.ப.ரா கதைகளில் நம்மால் பார்க்க முடியும் என விஜயலட்சுமி கூறி கதையின் முடிவில் சாவித்திரியின் மன மாற்றம் ஏற்புடையதாகத்தான் அமைந்துள்ளது எனக் கூறினார்.

அவரின் கருத்தோடு உடன்பட்டு ம. நவீன் மனித மனம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டேதான் இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒரு நிமிடம் வன்மமாகவும் மறுகணம் இயல்பு நிலைக்கு மாறுவதுமாகத்தான் மனித மனம் செயல்படுகின்றது. அவ்வாறு செயல்படும் மனித மன மாற்றத்தைக் கு.ப.ரா கதைகளில் நாம் தொடர்ந்து கவனிக்கலாம் என்றும் அந்த மன மாற்றம் கு.ப.ராவின் முதல் கதையான ‘விசாலாட்சி’ கதையிலிருந்து தொடங்குவதாகவும் ம. நவீன் கூறினார். மன மாறுதலுக்கான நியாயங்கள் கதையில் உள்ளதா எனக் கவனித்தால், கு.ப.ரா கதைகளில் அதற்கான நியாயங்கள் கூடி வந்துள்ளன என்றும் சொன்னார்.

பண்ணைச் செங்கான்

இறுதியாக, ‘பண்ணைச் செங்கான்’ எனும் கதையைக் குறித்து ஶ்ரீகாந்தன்தமது பார்வையை முன்வைத்தார். மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவையும் சக மனிதன் இன்னொரு சக மனிதனைப் புரிந்துகொள்ளும் அழகியலை உணர்த்தும் கதைதான் ‘பண்ணைச் செங்கான்’. செங்கான் எனும் கதாபாத்திரத்தைப் பற்றி கூறி ஶ்ரீகாந்தன் தனது உரையை ஆரம்பித்தார். செங்கான் கூலிக்காக விவசாயம் செய்பவனாகத் தெரியவில்லை என்றும் மண்ணை மனப்பூர்வமாக நேசிக்கக்கூடியவனாகத்தான் செங்கான் தனக்குத் தெரிவதாகக் கூறினார். தற்போதைய காலக்கட்டத்தில் மனிதனின் சுயநலத்திற்காக விவசாய நிலம் விலைபோகக்கூடிய சூழலை 1930களிலே தமது கதைகளில் கு.ப.ரா காட்டியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது என ஶ்ரீகாந்தனால் கூறப்பட்டது.

//சொக்கனூர் கிராமத்திலேயே அவன்தான் வயது முதிர்ந்த கிழவன். எண்பது வயது என்று பேச்சு. ஆனால் பார்த்தால் அறுபதிற்கு மேல் சொல்ல முடியாது.// எனும் கதையில் செங்கானைப் பற்றி கூறியது நம்பகத்தன்மையாக அமைந்துள்ளதாக எனக் கூறி அதற்கு ஶ்ரீகாந்தன் விளக்கமளித்தார். மண்ணோடு என்றுமே தொடர்பில் இருக்கும் செங்கான் போன்றோர் விரைவில் முதிர்ச்சியை ஏந்துபவர்களாக இருக்கமாட்டார்கள். கதைசொல்லி தன் சபலத்தையும் மீறி செங்கானிடமே நிலத்தைப் பராமரிக்க கொடுப்பதன் வழி செங்கானின் மண்ணின் மீது உள்ள பற்று வெல்கின்றது. அதோடு, கதையில் சக மனிதனுக்கு இன்னலை ஏற்படுத்தி ஆதாயம் தேடுபவர்களைக் குறித்தும் மனிதனுக்கும் மண்ணுக்குமான தொடர்பை மதிக்கும் சக மனிதன் இல்லை என்றும் தான் கதையில் உணர்ந்ததைக் கூறினார் ஶ்ரீகாந்தன்.

ஶ்ரீகாந்தனின் பார்வையைத் தொடர்ந்து சமூகச் சூழல் மாற்றத்தோடு இக்கதை ஒப்பிட்டு வாசகர்களால் பேசப்பட்டது. ஆரம்பக்காலக்கட்டத்தில் நிலம் வைத்துள்ளவர்கள் நிலம் இல்லாதவர்களை அடிமைகளாக நடத்தினர். ஆனால், ‘பண்ணைச் செங்கான்’ கதையில் நில உரிமையாளர் செங்கானை அடிமையாக நடத்தவில்லை. மாறாக, இக்கதை முழுதும் செங்கான் இந்த நிலத்திற்கும் கதைசொல்லிக்கும் உரிமை இல்லை என்பதை வழியுணர்த்திக் கொண்டே வந்தான். அதேபோல், கதைசொல்லியும் செங்கானை அடிமையாக நடத்தவில்லை என்றாலும் செங்கானின் வயதைக் கருதி அவனை மரியாதையாக அழைக்காமல் கதை முழுதுவம் ‘அவன்’, ‘செங்கான்’ என்றே கதைசொல்லி அழைப்பான். இச்சித்தரிப்பு சமூகச் சூழல் மாற்றத்தை உணர்த்துவதோடு மறைமுகமாக நிகழும் மேல்தட்டு, கீழ்தட்டு வர்க்கத்தினரின் வாழ்வியலையும் உணர்த்துவதாக அமைகின்றது என ஶ்ரீதரின் பார்வையின் வழி புரிந்துகொள்ள முடிந்தது.

மேலும், கதையில் கதைசொல்லிக்குள் நிகழும் மன மாற்றம்தான் கதையின் அழகியலாக அமைந்துள்ளது என ம. நவீன் கூறினார். கதைசொல்லி நிலத்தை விற்காமல் அதை செங்கானிடம் பராமரிக்க கொடுக்க முடிவெடுக்கும் அத்தருணம் கதைக்கான நியாயம் ஏற்படுத்துகின்றது. கதையில் கதைசொல்லிக்கு நிலம் குறித்து புரிதல் இல்லை என்பதை செங்கான் கதை நெடுக உணர்த்திக் கொண்டே வருகிறான். நிலக் குத்தகையைக் கைமாற்றும் முயற்சிகாளைத் தடுக்க மிரட்டல் போன்ற உரிமைநாட்டல்களினால் பயந்து மனம் மாறி கதைசொல்லி செங்கானிடமே நிலத்தை விடவில்லை. மாறாக, நிலம் தனக்குச் சொந்தமில்லை என அறிந்திருந்தாலும், விதைநெல்லைத் தூவும் போது ஏற்றப்பாட்டைப் பாடி நிலத்தோடு உறவாடும் செங்கானைப் புரிந்துகொண்டு அவனின் ஆளுமையை அறிந்தே கதைசொல்லி மனம் மாறும் தருணம்தான் இக்கதையில் வலுவாக அமைந்துள்ளது என ம. நவீனின் விளக்கத்தின் வழி அறிந்துகொள்ள முடிந்தது.

கு.ப.ராவின் நான்கு கதைகளையும் கலந்துரையாடிய பிறகு, கு.ப.ரா சக மனிதனை எவ்வாறு தமது கதைகளில் அணுகியுள்ளார் என்பதனைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மனிதன் இன்னொரு சக மனிதனைப் புரிந்துகொள்வதென்பது மேன்மையான குணம். கு.ப.ராவின் கதைகளில் நிகழும் மன மாற்றம் அனைத்திலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் புரிந்துகொள்வதாகவே அமைகின்றது. அந்த மனிதனிடையே நிகழும் மன மாற்றத்தை மிக அழகாகவும் வடிவ நேர்த்தியோடும் தமது கதைகளில் சித்தரித்துள்ளார் கு.ப.ரா. தமிழ் நவீன சிறுகதை உலகிற்கு வடிவ ரீதியில் சிறந்த கதைகளை அளித்த, பெண்களின் பாலியல் சுதந்திரத்த்தைப் பற்றிய கதை கருக்களுக்குத் திறப்பு கொடுத்த, சக மனிதனின் அகத்தை அழகாகச் சித்தரித்த கு. ப.ராவின் கதைகளை இக்கலந்துரையாடலின் மூலம் மேலும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் அணுக முடிந்தது.

கு.ப.ராஜகோபாலன் – தமிழ் விக்கி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...