தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு சந்திப்பு தொடர்ந்து மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை பதினைந்தாவது சந்திப்பாக நவீன தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட மெளனியின் நான்கு சிறுகதைகளைக் குறித்துக் கடந்த 17.8.2024 மாலை 3.00 மணிக்கு மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்தில் கலந்துரையாடினோம்.
மெளனி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய இயற்பெயர் எஸ்.மணி ஐயர். இவருக்கு மௌனி என்ற புனைப்பெயரைச் சூட்டி, ‘மணிக்கொடி’ இதழில் எழுத ஊக்கப்படுத்தியவர் ‘மணிக்கொடி’ ஆசிரியர் பி.எஸ். ராமையா. மெளனி 1937 முதல் 1971 வரை 24 சிறுகதைகளையும் 2 கட்டுரைகள் மட்டுமே எழுதியிருக்கிறார்.
இலக்கிய உலகில் மிகக் குறைவான படைப்புகளை வழங்கியிருந்தாலும் இன்றளவும் பேசப்படும் ஓர் எழுத்தாளராகத் திகழ்கிறார் மௌனி இருந்து வருகிறார். மெளனி எழுத ஆரம்பித்த காலத்தில்தான் நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் போன்றவற்றின் நவீன இலக்கிய வடிவங்கள் தமிழுக்கு அறிமுகமாகி அதன் பல்வேறு சாத்தியங்கள் கண்டடையப்பட்டுக் கொண்டிருந்தன.
அப்படி நவீன இலக்கியத்திற்குள் நுழையும்போது ஒரு முரணாக; தாங்கள் பயின்ற மரபிலக்கியத்தின் வடிவத்தையும் கருத்தையுமே உரைநடையில் எழுத முயன்றனர்.
இந்தக் காலக்கட்டத்தில் மேற்கிலிருந்து பெற்ற உரைநடை இலக்கிய வடிவத்தைத் தமிழில் சரியாக எழுதிய எழுத்தாளர்களைச் சிறந்த எழுத்தார்களாக ஏற்றுக் கொள்கின்ற மனோபாவம் இருந்தது. அதன் அடிப்படையில், தொடக்கக்கால விமர்சகர்கள் மெளனியை மிகச் சிறந்த எழுத்தாளராக முன்வைத்திருக்கக்கூடும் என எழுத்தாளர் ம. நவீன் மெளனியின் படைப்புலகத்தைப் பற்றிய அறிமுகத்தில் குறிப்பிட்டார்.
அழியாச் சுடர்
1937-இல் எழுதப்பட்ட ‘அழியாச் சுடர்’ சிறுகதை தன்னிலிருந்து புற உலகைப் பார்க்கின்ற ஒரு தனி மனிதனின் அகச்சிக்கலைப் பேசுகிறது. இச்சிறுகதை 27 வயது நிரம்பிய ஒருவன் தன் நண்பனுடன் நடத்தும் உரையாடலிலே நகர்த்தப்படுகிறது. அந்த உரையாடலில் வருகின்ற கடந்த காலத்தையும் கோவிலையும் கதை களமாகக் கொண்டுள்ளது. கதையில் உவமைகளாகக் காட்சிப்படுத்தப்படுகின்ற வானை நோக்கி நிற்கும் பட்ட மரம் கதைமாந்தரின் வாழ்க்கையுடன் பொருத்திப்பார்க்கும்போது, சொல்லப்படாமல் விடப்பட்ட நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதாய் அமைந்திருக்கிறது. ஒரு தருணம் அல்லது நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை விரிவுப்படுத்திக் கூறாமல் அந்தத் தருணத்திற்குப் பிறகான உணர்வுகளையும் மனவோட்டத்தையும் இந்தக் கதையில் பார்க்க முடிகிறது. மனவோட்டத்தின் வழி கதை சொல்கின்ற பாணியை மெளனியிடத்தில் காண முடிகிறது.
ஒன்பது வருடத்திற்கு முன்பு கோவிலுக்குச் சென்றதையும் அங்கு ஒரு பதின்மூன்று வயது பெண்ணைப் பார்த்துக் காதலுற்று ‘உனக்காக நான் எது செய்யவும் காத்திருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்வதும் அதற்கு அவளும் இணக்கமாக நடந்து கொள்வதும் ஒரு நொடியில் எல்லாமே கலைந்து தன்னிடம் சொன்னதை மீட்டுக்கொள்ளச் செய்தப்பின் கோவிலுக்குச் செல்வதையே தவிர்ப்பதும் போன்ற நாடகீயத் தருணங்கள் கதையில் இருக்கிறன. இந்த நாடகீயத் தருணங்களைத் தர்க்கப்பூர்வமாக அணுகுகின்ற போது முரணாக உள்ளது என வாசகர்கள் குறிப்பிட்டனர்.
இந்த முழுச் சூழலும் நிகழும் வேளையில் இருக்கும் சூழல் சித்திரிப்பு மாயயதார்த்தவாதப் புனைவொன்றை வாசிக்கும் அனுபவத்தைத் தருவதாக கதை குறித்துப் பேசிய ரேவின் குறிப்பிட்டார். அந்தச் சூழல் ‘ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அது தலைகீழாகத் தொங்கும் ஒரு வௌவாலின் சப்தம்… காதில் சிரித்து மனதில் மரண பயத்தைக் கொடுக்கும் சப்தம்.’ இவ்வாறான சூழல்தான் மனத்தில் நிகழும் உணர்வுகளை நொடி பொழுதில் சூழலைக் கலைத்துப் போடுகிறது. கதைசொல்லியும் அவனது நண்பனும் கோவில் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காண முடியாத திகைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? என நிச்சிந்தையாக அவனுக்குள் எழும் கேள்வி மனித இருப்பையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது.
குறைந்த வெளிச்சத்தில் பிரகாரம் அதில் மனிதர்கள், அவர்களின் நிழல்கள், வெளவாலின் சப்தம் இவையெல்லாம் காரணமேயற்று நிகழ்ந்த சூழலாக இருந்தாலும் அதை கிரகித்து காரணம் உருவாக்குன்ற மனித பாவம் தங்களின் செயல்களுக்கு அர்த்தம் தேடுவதாகத் தோன்றுகிறது; அல்லது ‘நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற வரியின்வழி கதையை அணுகினால் நமக்கப்பாற்ப்பட்டு விதியால் தீர்மானிக்கப்படுகின்ற வாழ்க்கையின் நிச்சயமின்மையைப் பேசுவதாகக் கொள்ளலாம். இப்படி விளங்கிக் கொண்டால் சிறுகதையின் தலைப்பான அழியாச் சுடராக விதியையும் அதன் நடமாடும் நிழலாக மனிதர்களையும் உள்வாங்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பிரபஞ்ச கானம்
‘பிரபஞ்ச கானம்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தச் சிறுகதை காதலன் தன் எதிர்வீட்டில் வாழ்ந்த தன்னுடைய காதலியின் சங்கீதம் இயற்கையோடு கலந்துவிட்டதெனவும் அவளுடைய சங்கீதத் தேர்ச்சி பிரபஞ்சத்தின் வசீகரத்தையும் அவளுள்ளே கொண்டிருக்கிறதென நம்புகிறான். பாடுவதோடல்லாமல் வீணை வாசிப்பதிலும் சிறந்தவள் என இவன் மெய் மறந்து இரசித்துக் கேட்டதிலிருந்து அப்படி அவன் நம்புகிறான். இருதய பலவீனம் காரணமாக அவள் பாடக் கூடாதென மருத்துவர் அறிவுறுத்த மூன்று வருடமாக பாடாமல் வீணை மட்டும் வாசிக்கிறாள். அதனாலே இயற்கை அதனுடைய வசீகரத்தை இழந்துவிட்டதைப் போல கதைசொல்லி உணர்கிறான்.
சிறு சிறு தூர சந்திப்புகளுக்கப்பால் அவளுடைய சங்கீதத்தின் வழி மட்டுமே காதலை உணர்ந்தும் வாழ்ந்தும் வருகிறான் கதைசொல்லி. அவளுக்கு இன்னொருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. நலுங்கு வைபவத்தின் மூன்றாம் நாள் சடங்கில், அவளைப் பாட கட்டாயப்படுத்துகின்றனர், அவள் அதற்காக மட்டும் பாடாமல் தன் சங்கீதத்திற்காக ஏங்கித் தவிக்கும் காதலனைப் பார்த்துப் பாடி உயிர் துறக்கிறாள். அதன் பிறகு, இயற்கை மறுபடியும் பூரணமடைந்து விடுவதாக காதலன் நம்புகிறான். இந்தச் சிறுகதை முதல் முறை வாசிக்கும்போது சிக்கலாக இருந்தாலும் திரும்பத் திரும்ப வாசிக்கும்போது ஒரு காவியத்தன்மை கொண்டுள்ளதை உணர முடிகிறது.
சிறுகதையில் எண்ணிலடங்கா உவமைகள் சொல் விளையாட்டு போல அமைந்திருந்தாலும் காட்சிகளாக விரித்துப் பார்க்கும்போது சிறுகதையை வலு பெறச் செய்கிறது. இந்தக் கதை மூன்று வருடத்துக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களை மீண்டும் நினைவுப்படுத்துகிற காதலனுடைய அகவயமான உணர்வைச் சித்திரிக்கின்ற கதை களத்தைக் கொண்டிருக்கிறது. காதலியின் மரணம் துன்பமாக இருந்தாலும் அதைவிட துன்பமாக, அவள் சங்கீதம் அவளுள்ளே புதையுண்டிருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நிகழ்ச்சிகளை முன்பின்னாகக் கட்டமைத்து இறுதியில் ‘குளத்துமேட்டு வறட்டிகள் உலர்ந்து அடுக்கப்பட்டு இருந்தன.’ என்று முடியுறுவதும் அந்த இடத்தில் முன்பொருமுறை காதலியின் மரணத்தை அவளே கணித்துச் சொன்னது போன்ற காதலனின் எண்ணம் நினைவுக்கூற வைக்கிறது.
மாறுதல்
முன்றாவது கதையாக ‘மாறுதல்’ சிறுகதை கலந்துரையாடப்பட்டது. இக்கதை நெருக்கமான அதீத அன்பு வைத்துள்ளவருடைய மரணத்தை எதிர்கொள்கின்ற ஒருவருக்குத் தரக் கூடிய அகத் தத்தளிப்பை மையமாகக் கொண்டிருகிறது. கதையின் தொடக்கத்திலே கதைசொல்லியுடைய மனைவி இறந்து போகிறார். அந்த மரணம் பற்றி விவரணைகள் நீட்டிச் சொல்லப்படாமல் சில வார்த்தைகளில் முடிகிறது. இவர்கள் பின்னணி, இருவருக்குமான உறவு என எதை பற்றியும் விளக்காமல் நேரடியாக மரணம் அதற்குப் பிறகான கதைசொல்லியின் மனத்தின்வழி கதை நகர்கிறது. அகவயமாக மனத்தின்வழி கதை நகர்ந்தாலும் முழுச் சித்தரிப்பை மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருப்பதை உணர முடிகிறது.
முதல் நாள் மாலையில் இறந்துபோன மனைவியுடன் முழு நாள் இரவு கழித்து மறுநாள் காலையில் உறவினர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறான். காலை ஒன்பது மணிக்கு சூரியன் உதயத்தில் ஆனந்தத்தோடு எழுந்து கொண்டான் என்று வரும்போது பெருந்துயரைப் பிரக்ஞையில் வைத்திருகின்ற ஒருவன் இன்ன மனநிலையோடு இருக்கின்றான் என்றால் அவனுடைய துயர் எவ்வளவு கனமானதென்றும் அந்தரங்கமானதென்றும் உணர முடிவதாகக் கதை குறித்து அரவின் குறிப்பிட்டார். வீட்டிலிருந்து வெளி வந்து வீதியைப் பார்த்து துயரத்திலிருந்து துண்டிக்க நினைக்கின்ற நிலைக்கும் மனைவியின் அன்பையும் நெருக்கத்தையும் நினைத்து நெகிழ்கிற நினைவுகள் என இருவேறு உணர்வுகளில் மனம் ஊசலாடுகின்றது. நீண்ட நேரத்திற்கு மனம் ஒரு மனநிலையில் கொள்ளமுடியாத உணர்வு நிலையை இது காட்டுகிறது.
வீதியில் எப்போதும் நடக்கின்ற காட்சிகளை அன்றைய நாள் தன்னுடையை உணர்வுகளுக்கான வடிகாலாக கேள்வியும் பதிலுமாக மனது மாற்ற முயல்கிறது. வீதியில் எந்தப் பிரயத்தனமுமில்லாமல் விறகு வண்டியை இழுத்துப் போகின்ற மாட்டைப் போல கனத்த இதயத்தைக் கொண்ட தன்னை வண்டிக்காரன் போல வழி நடத்தி ஓட்டிப் போவது யாரென சிந்திக்கிறான். இரண்டாவது காட்சியாக பதனிக்காரன் மூங்கில் கழியில் இரண்டு வெற்றுக்குடங்கள் மண்ணைத் தொட்டுத் தொட்டு உடையாமல் சுமந்து வருகிறான். வெற்றுக்குடம் போல தன் மனதைத் துயரிலிருந்து விடுபட வேண்டும் என நினைப்பதாகப் பார்க்க முடிகிறது. மூன்றாவதாக சிங்கப்பூரிலிருந்து வந்த சீமான் வீதியைக் கடந்து மறைகிறான். கண்களுக்கு வசீகரமாக வந்து மறைகின்றவன் போல தன் மனைவியின் மறைவும் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகவும் அதிலிருந்து மீட்டுக் கொள்கிற மனநிலையை நம்மால் ஊகிக்க முடிகிறது.
இந்தக் காட்சிகளின் நடு நடுவே வந்து போகின்ற மனைவியின் நினைவுகள் காட்சிகளுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக எங்கோ பிரிந்து போய்விடுவதும் மீண்டும் அதை பிடித்து நிறுத்துகிறான். ஆக இந்த ஒட்டு மொத்தக் காட்சியை ஒன்றிணைத்துப் பார்க்கும்போது ஒரு மனம் தன் மனைவியின் நினைவை முற்றாக விலக்கி விடவும் மற்றொரு மனம் தானாக விரும்பி துயரங்களை ஏற்றுக்கொள்ளும்போது இரண்டு நிலைக்குமான மனத்தின் ஊசலாட்டத்தைக் கதை காட்டுகிறது. இந்த இரண்டு முரண்பாடுகள் மனத்தில் ஏற்படுத்துகிற மாறுதல்தான் இந்தச் சிறுகதையின் தலைப்பாக இருப்பதை உணர முடிகிறது.
மெளனியின் கதைகளில் கதாப்பாத்திரங்கள் தானாக முன்வந்து விரும்பி வேண்டி துயரங்களை ஏற்றுக் கொள்கிற மனோபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தக் கதையிலும் அதன் தன்மைகள் வெளிப்படுவதை அறிய முடிகிறது. இறுதியாக ஓராண்டு கழித்து உதிரியாக மேகம் கரைந்து வானத்தோடு கலப்பது போல ஒரு காட்சியில் மனைவியின் இறப்பை ஏற்றுக் கொண்ட மாதிரி முடிகிறது. இறுதி வரியாக ‘தலையெழுத்த மாத்தி எழுதல, தலையெழுத்ததானே எழுதியிருக்கு’ என்று மனதின் மாறுதலைக் காட்டுகிறது.
ஏன்?
நான்காவது சிறுகதையாக ‘ஏன்?’ கலந்துரையாடப்பட்டது. இக்கதை மெளனி எழுத்துலகிற்கு வந்த முதலாண்டில் எழுதப்பட்டது. மிகச் சிறிய சிறுகதையாகவும் உவமைகள் அதிகம் இல்லாமலும் நேரடியாக கதை நகர்த்தப்படுகிறது. கதையாசிரியரே கதையைச் சொல்வதாக அமைந்திருக்கிறது. கதைசொல்லி ஒரு காலக்கட்டத்தில் எதிர்வீட்டுப் பெண் மீது தீவிரமான காதல் கொண்டிருக்கிறான். பிறகு அதனை அடியோடு மறந்து இருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கை பாதை அமைந்த பின்னர் அவளை மீண்டும் காண்கின்ற போது தான் உற்ற காதலுணர்வு மீதான கேள்வியை எழுப்பிக் கொள்கிறான்.
நாம் மனத்தில் உருவகிக்கும் அன்பு, காதல், நேசம் போன்ற உணர்வுகள் ஒரு காலக்கட்டத்திற்குப் பின்னர் ஒன்றுமே இல்லாமல் போவதைப் பற்றிய விசாரம் மனதுக்குள் ஏற்படுத்தக் கூடிய ஆழமான சஞ்சலத்தை உண்டாக்குவதைக் கதை பேசுகிறது.
எதிர்வீட்டில் வசிக்கக்கூடிய பதின்மூன்று வயதுடைய சுசிலா மீது பதினைந்து வயதுடைய மாதவன் காதல்வயப்படுவதும் அதன் உச்சமாக அவளைச் சந்தித்து அவன் “சுசீ நான் உன்னை மறக்க மாட்டேன். நீயும் என்னை மறக்காமல் இருக்கிறாயா?” இதுதான் அவர்களிருவரும் நேரெதிர் சந்தித்து அவன் பேசிய முதலும் கடைசியுமான உரையாடல்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் சுசிலாவைச் சந்திக்கின்ற மாதவன் தன்னைத் திரும்பவும் விட்ட இடத்திலிருந்து பார்க்கின்றான். அந்தக் காதலில் தான், தன்னுடைய உணர்வுகள் என எல்லாவற்றையும் வேறொரு மனிதனாக நின்று கேள்விக்குள்ளாக்கும்போது அவன் தன்னையே பரிசீலனை செய்கிறான். அது மனத்தை வருத்தி அவன் உடலையும் உருக்குலைத்து மரணத்திற்கும் இட்டுச் செல்கிறது. மாதவனின் இவ்வளவு துயரங்கள் அவனுக்கு மட்டுமானதல்ல என்பதனை இறுதியாக மாதவனின் மரணத்திற்காக இரு துளி கண்ணீர் விடும் சுசிலாவக்குள் காட்டப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக மெளனியின் சிறுகதைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது நிச்சயமற்ற வாழ்க்கை எதிர்பாரா திருப்பத்துக்கு அழைத்துச் சென்று முடக்கிப் போடுவதைப் பேசுகிறது. அவருடைய கதைகளில் நோயும் மரணமும் மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன. மனித இருப்பையே கேள்விக்குட்படுத்தும் இருத்தலியல் பேசுவதாகவும் அவருடைய கதைகளை எண்ண வாய்ப்பிருக்கிறது.
இரண்டாவதாக உறவில் இருக்கக்கூடிய நிலையற்றத் தன்மையையும் மூன்றாவதாக மரணம் இந்த வாழ்க்கையைப் பொருளற்றதாக்குவதாகவும் பகுத்துப் பார்க்க முடிகிறது. இந்த மூன்றும்தான் மெளனியின் கதைகளின் சாரங்களாக இருக்கின்றன. இந்த மூன்றின் சாரத்தை குறித்து கேள்விகேட்டோமானால் அது கடுமையான மனவுளைச்சலுக்கு நம்மை கொண்டு செல்லும். அதை தத்துவார்த்தமாக மெளனி அணுகுகிறார். புறத்தை விட அகவுலகின் வழியாக இன்னொரு வாசகனை அல்லது மனிதனைச் சென்று தொடுகிற கதைகளாகத்தான் மெளனியின் கதையை நெருங்க முடிகிறது. மெளனியின் கதைகளில் அற இயல்பு இருப்பதால்தான் இன்றளவும் கொண்டாடப்படக்கூடிய எழுத்தாளராக இருக்கிறார் என்ற எழுத்தாளர் திலிப் குமாரின் மெளனியைப் பற்றிய மதிப்பீடுகளுடன் கலந்துரையாடல் நிறைவுற்றது.