சி. எஸ். லட்சுமி என்ற அம்பை தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். பெண்களின் உலகை வெளிக்கொணரும் வகையில் தன் படைப்புகளைப் பல்வேறு பரிமாணங்களில் படைத்துச் சென்றுள்ளார். அம்பையின் சிறுகதை உலகம் ‘கலைமகள்’ இதழில் தொடங்கியது. பெண்களின் மனநிலை, துயரங்கள், வாழ்க்கையை அவர்கள் எதிர்க்கொள்ளும் விதத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதினார். ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ எனும் சிறுகதை மூலம் அம்பை வாசகர்களின் கவனத்தைப் பெற்றார்.
ஜூலை 20, மதியம் 3 முதல் மாலை 5 வரை மலாயா பல்கலைக்கழக நூலகத்தில் அம்பையின் சிறுகதைகள் குறித்த உரையாடல் நடைபெற்றது. அமர்வின் முதல் கட்டமாக, அம்பையின் படைப்புலக்கத்தில் உள்ள கலை நுட்பம், சிந்தனைகள் குறித்த அறிமுக உரை ம. நவீனால் வழங்கப்பட்டது. தொடக்கக்காலத்தில் அவர் எழுதிய ‘தனிமையெனும் இருட்டு’ எனும் சிறுகதையைக் கூறி, ஒரு பெண்ணின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் கனவில் இரசிக்க கூடியவையாக மாறி நிஜ வாழ்க்கையில் நிறைவேறாமல் உடைப்படுகிற தருணங்களைச் சித்தரித்தார். ‘உடம்பு’ எனும் சிறுகதையில் வரக்கூடிய ஆணின் உளவியலைப் பெண் எழுத்தாளராக அவர் எவ்வாறு சென்றடைகிறார் என்பது குறித்து விளக்கினார். அறிமுக உரையில் கூறப்பட்ட இவ்விரு சிறுகதைகள் வழி அம்பையின் புனைவுலகை ஓரளவு அறிய முடிந்தது. அந்தப் புரிதலோடு அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’, ‘காட்டில் ஒரு மான்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ ‘கறுப்புக் குதிரைச் சதுக்கம்’ ஆகிய நான்கு சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அம்மா ஒரு கொலை செய்தாள்
முதல் சிறுகதையாக ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ குறித்து தினேஸ்வரி தன் பார்வையை முன் வைத்தார்.
டிசம்பர் 1971ஆம் ஆண்டு வெளியான இச்சிறுகதை ஒரு சிறுமி பருவமடையும் போது ஏற்படும் தடுமாற்றத்தை முன்வைக்கிறது. இக்கதை சிறுமியின் பால்ய வயதிலிருந்து பருவமடைவது வரையிலான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றன. சிறுவர்களுக்கே உரிய களங்கமின்மையுடன் சுதந்திரமாய் வளர்பவளுடன் அம்மா அணுக்கமாக இருக்கிறாள். தாய் தன் தங்கை மகளுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் படலத்திற்குச் செல்லும் வேளையில் அச்சிறுமி பூப்படைகிறாள். உடல் ரீதியான மாற்றத்தோடு அவளது சுதந்திரமும் பறிக்கப்படும் வேளையில் அவள் தடுமாறுகிறாள். அம்மா பக்கத்தில் இல்லாதத் தனிமை அவளுக்குக் கொடுமையாக உள்ளது. அவளின் சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கூண்டில் அடைக்கப்படும் கிளியாக உணர்கிறாள். ஒவ்வொரு தருணமும் அம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். தங்கையின் மகள் கறுப்பாக இருப்பதால் கைநழுவிப் போகும் வரண் குறித்த சஞ்சலத்துடன் வீட்டுக்கு வருபவளுக்கு மகள் பூப்படைந்திருக்கிறாள் எனத் தெரிகிறது. அம்மாவைக் கட்டித் தழுவி தன் கவலைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்கும் சிறுமியின் உணர்வுகளை அம்மா எதிர்காலம் குறித்த பயத்தால் சுக்குநூறாக்குகிறாள். கனவுகள் அனைத்தும் கொல்லப்படுகிறது.
இக்கதையின் சுருக்கத்தைச் சொன்ன தினேசுவரி, தாயின் சொற்களால் இடிந்து உணர்வு அடிப்படையில் சிறுமி கொலை செய்யப்படுகிறாள் என்ற பகுதி இக்கதையின் மையம் என்றும் அவ்விடமே அக்கதைக்கான உச்சமாக மாறுவதையும் குறிப்பிட்டார். இந்த மையமே தலைப்புடன் சரியாகப் பொருந்தி அமைந்துள்ளது என்றார். இக்கதையில் வர்ணனை, உவமைகள், உருவகம் மற்றும் சிறுவர் உளவியலை ஆசிரியர் சிறப்பாகக் கையாண்டுள்ளார் எனக் கூறிய தினேசுவரி, சிறுமியின் ஆடையைக் கண்ணாடி பேழைக்குள் நீந்திக் கொண்டிருக்கும் மீனோடு ஒப்பிடும் காட்சியும் அக்கினி ஜுவாலைக்கும் அடுப்புத் தீக்குமான வேறுபாட்டையும் சிறுவர்களின் பார்வையில் வர்ணிப்பது சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். அத்தோடு சிறுமி பருவமடைவதற்கு முன்பும் பின்பும் தாயின் உளவியலில் ஏற்படும் மாற்றத்தை வார்த்தெடுக்கும் எழுத்தின் ஆழம் குறித்தும் சிலாகித்தார்.
இக்கதையைச் சார்ந்து சக வாசகர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இக்கதையின் தொடக்கத்தின் தாயின் பார்வையில் சிலாகிக்கப்படும் அச்சிறுமியின் கருமை நிறம், பருவமடைந்த பின் சுமையாகக் மாறிவிடுகிறது. மகளின் கறுமை நிறத்தை உச்சி மோந்து கொஞ்சி அவளின் சுதந்திரத்தையும் அம்மா ஆராதிக்கிறாள். அதே அம்மா, மகள் பருவமடைந்ததும் தன் தங்கை மகளுக்கு நேர்ந்த துயரம் தன் மகளின் வாழ்க்கையிலும் துரத்தக்கூடும் என்ற அச்சத்தாலும் வெறுப்பாலும் தன் முந்தைய குணத்தைக் கொலை செய்து வேறொரு அம்மாவாகச் சிறுமியின் பார்வைக்கு வெளிபடுகிறார் என விவாதிக்கப்பட்டது.
அச்சிறுமிக்கு அணுக்கத்துணையாகத் தோன்றிய அன்னையின் பிம்பம் சமூக மதிப்பீடுகளினால் கொலையுண்டு, மாறுபடுவதைக் காண்கின்ற சிறுமியின் மனம் சிதைக்கப்படுகிறது. ஒரு மலர் மொட்டிலிருந்து ஒவ்வொரு இதழாக விரிகின்ற தருணத்தை ஒத்த பருவமெய்தும் நிகழ்வை மலர்வதற்கு முன்னரே கைகளால் பறித்தெடுத்துச் சிதைப்பதைப் போன்ற உணர்வையே சிறுமி அடைகிறாள். பெரும்பாலும் தந்தைக்குப் பெண் பிள்ளைகளின் மீதும் தாய்க்கு ஆண் பிள்ளைகளின் மீதும் அதிக அன்பும் அணுக்கமும் இருக்கும் பொதுவான மனநிலைக்கு மாறுபட்டு, தாய்க்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிய மாறுபட்ட பார்வையை இக்கதையில் காண இயலுகிறது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.
மகளின் பார்வையில் தெய்வத்திற்கு நிகராக இருந்தவள் தன்னைத் தானே கொலை செய்துகொண்டு சராசரி பெண்ணாக உருகொள்ளும் சிறுகதை இது எனச் சிலரது வாசிப்பு அமைந்தது.
காட்டில் ஒரு மான்
‘காட்டில் ஒரு மான்’ எனும் சிறுகதை குறித்து அபிராமி தன் பார்வையை முன்வைத்தார். இக்கதை வயதாகியும் பருவமடையாமல் இருக்கும் தங்கம் எனும் பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதையாக அமைகின்றது. தங்கம் அத்தை குடும்பத்தின் சிறுவர்களுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கும் ஒரு நபராக இருக்கிறார். தான் சொல்லும் கதைகளில் அசுரர்களை நல்லவர்களாக மாற்றுகிறார். தங்கம் அத்தையின் வாழ்க்கையில் உள்ளடங்கிய துயரங்களைச் சித்தரிக்கும் வகையில் அவர் சொல்லும் கதைகள் அமைந்துள்ளன.
தங்கம் அத்தையின் கணவன் அவள் மீது அதீத அன்பு கொண்டவர். ஆனால் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டவர். தங்கம் அத்தை பூப்படையவில்லை என்பதை வள்ளி கதைச்சொல்லியிடம் சொல்கிறாள். ஆனால், அச்சிறுமிக்கு அதற்கான தெளிவு இல்லாமையால் தங்கம் அத்தையின் மீது அதீத அன்புடையவளாக இருக்கிறாள். அத்தை அவள் அம்மாவின் மீது அரவணைப்பைக் காட்டுவதையும் அவள் தொட்டது அனைத்தும் துலங்குவதையும் கொண்டு எந்தக் குறையையும் காணாதவளாக இருக்கிறாள். தங்கமும் தன்னிடம் எந்தக் குறையும் இல்லை என்பதையும் தான் மகிழ்ச்சியாகவே இருப்பதையும் தனக்கு வேண்டியதைத் தாமே செய்து கொள்ள இயலும் என வெளிபடுத்துகிறாள். தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாததை ஒரு பிரச்சனையாகக் கொள்ளாமல் கணவனின் இரண்டாவது மனைவின் குழந்தைகளுக்குத் தாயாக வாழ்க்கையை நகர்த்துவதை எண்ணி மகிழ்பவளாகக் காட்டிக் கொள்கிறாள். ஆனால், இவற்றை தாண்டி அவள் மனத்தில் உள்ளூர அரித்துக் கொண்டிருக்கும் துயரின் வெளிப்பாடாகத்தான் தன் வாழ்க்கையைக் காடாகவும் தன்னை மானாகவும் உருவகித்துக்கொண்டு சிறுவர்களிடம் கதை கூறுகிறாள்.
இக்கதையையொட்டி சக வாசகர்கள் தங்களின் விரிவான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இக்கதையில் தங்கம் அத்தை பூப்படையாததால் எதிர்கொள்ளும் துயர்கள் ஒரு பெண்ணுக்கான உளவியலை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாகக் கருத்துரைத்தனர். அதே வேளையில் சமூகக் மதிப்பீடுகளுக்காகப் போலியான வாழ்வையொன்றை அமைத்துக் கொள்வதைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டினர்.
பூப்படையாமலேயே தாய்மைக்கான குணத்தைக் கொண்டிருக்கும் தங்கம் அத்தையின் கதாப்பாத்திரம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கதையில் வேறொரு காட்டுக்குள் வழிதவறிச் செல்லும் மான் மெல்ல சூழலுக்குப் பழகியும் உள்ளூர வேடனின் ஆபத்தையும் அழகையும் ஒருசேர அனுபவிக்கும் நிலையைச் சித்தரிக்கும் பகுதிகள், தங்கம் அத்தை வாழ்க்கையில் கடந்து வரும் தருணங்கள்தான்.
இக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் தங்கம் அத்தையின் செயல் தாய்மையைப் பூர்த்தி செய்யும் இடங்களாகவும் தனக்கான அடையாளத்தையும் வெளிகொணரும் வகையில் உள்ளது. தங்கம் அத்தை வாழும் வாழ்க்கை ஒரு போலியானதாகவும் அதில் ஆனந்தத்தை வலுகட்டாயமாக தேடிக்கொள்வதாகவும் காண இயல்கிறது. இந்தச் சமூகம் கட்டமைப்புக்குள் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல் உட்புகுத்தி பாவனையாகக் காட்டப்படுகிறது என்றும் சில கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. மானுக்கு அந்தப் புதிய காடு பழக்கமாகினாலும் ஒரு நாள் வேடனின் அம்புக்குப் பழியாகுவது உறுதி என்பதைப் போல தங்கம் அத்தையின் வாழ்க்கையில் சமூகத்தால் எய்யப்படும் சொல் அம்பாகி மனதைத் தைத்துக் கொண்டேதான் இருக்கும் என்றும் கருத்துகள் பகிரப்பட்டன.
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
சண்முகா ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ எனும் கதையை விவரித்தார். ராஜஸ்தானில் கூட்டுக் குடும்பமாக வாழும் வீட்டின் வரவேற்பு அறையைக் காட்டிலும் சமையலறை குறுகலாகவும் எந்த வசதியின்றியும் ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கதையின் வழி சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கப் போக்கை அந்த வீட்டின் அமைப்பே பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
இக்கதையின் மூலம் குடும்பத்தில் நிகழும் ஆணாதிக்கம் எவ்வாறு அது ஆணாதிக்கம் என்றே மறக்கப்பட்டு இயல்பாக்கப்படுகிறது என்றும் பெண்களும் அதற்குப் பழக்கப்படுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறது.
பெண்கள் தங்களின் வாழ்நாள் முழுவதையும் சமையலறையிலே முடித்துக் கொள்கின்றனர். மேலும், விதவையான பெண்ணுக்கு ஏற்படும் துயரங்களையும் அவளிடமிருந்து பறிக்கப்படும் உரிமைகளையும் குறித்தும் இக்கதையில் பேசப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
ஆணாதிக்கச் சமூகம், குடும்பம், பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு பெண்களை அடிமைபடுத்தி வைத்திருப்பதை இக்கதையின் ஊடே காண இயலுகின்றது. பெண், அந்தச் சமையல் அறையின் உரிமைக்காகப் போராடுவதன் பின் இருக்கும் ஆணாதிக்க வெற்றியும் பலராலும் எடுத்துக்கூறப்பட்டது.
கதையை ஒட்டி ஒட்டிய விமர்சனமும் எழவே செய்தது. இக்கதையில் நோய்படுக்கையிலும் சமையலறை ராஜ்ஜியத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் ஜிஜியிடம் மருமகள் அவளுக்கான தனித்த வெளியைப் பற்றி சிந்திக்கச் சொல்லிப் பேசும் உரையாடல்களைக் குறைத்திருந்தால் கதை இன்னும் கூர்மையடைந்திருக்கும் என அரவின் தன் பார்வையை முன் வைத்தார்.
வீட்டில் சமையலறையின் அளவை ஒப்பிடும் போதும் ஒரு குடும்பத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் அதே நிலையில் உள்ளதை இக்கதையின் வழி அறிய முடிந்தது. தங்கள் அதிகாரம் அந்தச் சின்ன அறையில் உள்ளது எனும் பெண்களை நம்ப வைக்கும் குடும்ப அரசியலை அம்பை தன் கதையில் சுட்டிக் காட்டுகிறார். தன் குழந்தை இறந்த பிறகும் பூரி பொரிக்கச் சென்றதாகச் சொல்லும் ஜிஜியின் அனுபவம் பெண்களின் அவல நிலையைக் காட்டும் வகையில் அமைந்திருந்ததாக ம. நவீன் குறிப்பிட்டார்.
கறுப்புக் குதிரைச் சதுக்கம்
அம்பையின் ‘கறுப்புக் குதிரைச் சதுக்கம்’ என்ற கதையையொட்டி மோகனா தன்னுடைய விமர்சனத்தை எடுத்துரைத்தார். இக்கதை அறிக்கை மொழியில் அமைந்துள்ளது. ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்மத்தை அம்பை பல கிளைக்கதைகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு சித்தரித்துள்ளார்.
அம்பை இக்கதையில் ரோசா எனும் களப்போராளிக்குக் காவல்துறையால் நேர்ந்த பாலியல் வன்கொடுமையை, அவளுக்கான நீதியையும் மையமாகக் கொண்டு நகர்த்திருப்பதை உணர இயல்கிறது. இக்கதையில் ரோசாவுக்கு நேரும் பாலியல் வன்முறையைத் தங்கள் அரசியல் சித்தாந்தங்களுக்கான கருவியாகப் பயன்படுத்தும் மார்க்ஸியவாதிகளை ஆசிரியர் சாடியிருப்பார் எனக் கருத்துப் பகிரப்பட்டது.
இக்கதையின் ஒவ்வொரு காட்சியை வாசிக்கும்போதும் தனக்கு ஏற்பட்ட மன கணத்தை விவரித்தார். அதே வேளையில் தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த முன்வருபவர்களிடம் இருக்கும் மறைமுக அரசியல் கனவுகளுக்கும் அரசியல் நிலைப்பாடுகளையும் உணர்ந்து இருப்பதாலே ரோசா மரத்துப் போனவளாகத் தன் துயரைச் சொல்லிக் கடக்கிறாள் என எழுத்தாளர் ஸ்ரீதர் குறிப்பிட்டார். அதே சமயத்தில் சமூகத்தில் நடக்கும் வன்முறை நிகழ்வுகளுக்குப் பெண்களே அதிகமும் பலிகடாவாக ஆக்கப்படுவதை ‘ஒரு கிராமத்தில் பலவீனமானவர்கள் தாக்கப்பட்டால் முதலில் அந்த வீட்டின் பெண்கள் பகடைகாய்’ என்று சொல்லி செல்கிறார்.
இக்கதை வடிவ ரீதியில் சிறுகதைக்கான தன்மை இல்லாமல் இருப்பதையும் இயல்பான மொழி நடையில் அனைவரும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையிலும் சினிமா குறியீட்டையும் இறைவன் சார்ந்த பிம்பங்களையும் உள்ளடக்கி எழுதியுள்ளார். அம்பை இரு பெண்ணுக்கான இருக்கும் அன்பைக் காட்டும் தருணத்தில் இக்கதையை உச்சமாக்கியுள்ளார். ‘கறுப்புக் குதிரைச் சதுக்கம்’ என்ற இக்கதையை ‘பொய்கை’ என்ற கதையுடன் தொடர்புபடுத்தலாம் என மோகனா தன் வாசிப்பை முன்வைத்தார். ‘பொய்கை’ கதையில் ஓர் ஆண் குளத்தில் நீராடிய பின் பெண்ணாக உருமாறுகிறார். அந்த இரவிலே அவருக்கு வன்புணர்ச்சி நேருகிறது. மறுநாள் தனக்கான நீதி கேட்க காவல் நிலையத்திற்குப் போகும் முன் மீண்டும் குளத்தில் நீராடி வெளியேரும் போது ஆணாக மாறுகிறார். அத்தருணத்தில் அவருக்குத் குடும்பத்தின் நினைவு தோன்றி மனைவியைக் கட்டித் தழுவும் எண்ணம் உதிக்கும் தருணத்தை மீட்டியுள்ளார் அம்பை.
காசிபாயுடன் பெண்கள் எந்த அசைவுமின்றி பாடையைத் தூக்கி ஊர்வலமாகச் செல்லும் காட்சியைக் கடத்துச் செல்ல கடினமாக இருந்ததாக ம.நவீன் குறிப்பிட்டார். அதே சமயத்தில் ரோசாவுக்கு உதவிக் கரம் நீட்ட வருபவர்களின் சுயநலம் அப்பட்டமாகத் தென்படுவதையும் அவளின் வலியை உணர்ந்தவர்களாக முன் வராததையும் உணர முடிகிறது. இக்கதையில் விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் மார்க்ஸியப் பின்னணி அரசியலில் ஆர்வமுள்ளவர்களாகவே ரோசாவும் லெனினும் படைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், மார்க்ஸியப் போராட்ட பின்புலத்தில் மறைமுகமாகச் செயற்படும் குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கத்தையே கதையில் எழுத்தாளர் சாடுகிறார் என எழுத்தாளர் ஸ்ரீதர் குறிப்பிட்டார். கதையில் தலித் பெண்ணாகச் சித்திரிக்கப்படும் ரோசாவுக்கு நேர்ந்திருக்கும் பாலியல் வன்புணர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதில் மார்க்ஸிய அமைப்பினரிடம் இருக்கும் அலட்சியம் என்பது அதில் செயற்படும் மறைமுக சாதி ஆதிக்கப் போக்கைக் காட்டுவதாகவே புரிந்து கொள்ள முடியுமெனத் தன் வாசிப்பை முன்வைத்தார்.
ஒரு பெண் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நுண்மையான உளப்போராட்டங்களை அவளின் உளவியலோடு ஆழமாகச் சித்தரிக்கும் படைப்புகளாகவே அம்பையின் படைப்புலகம் அமைந்திருப்பது எனக் கலந்துரையாடலின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.