கோர்க்கப்பட்ட பட்டயங்கள்

‘கொடை மடம்’ தமிழில் கவிதை, சிறுகதை எழுதுபவர்களில் ஒருவரான எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களின் முதல் நாவல். வித்தியாசமான வடிவம் கொண்ட நாவல் இது.

அத்தியாயங்கள், உபகதைகள் என இரு சரடாக இந்நாவல் பகுக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்களாக உள்ளவை முகுந்தன் மற்றும் ஜென்னி இருவருக்குமான காதலைக் கூறுவதாகவும் உபகதைகள் பல்வேறு அமைப்புகளாகச் சிதறுண்ட மார்க்சிய லெனிய (மா.லெ) அமைப்புகளில் இயங்கிய, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத வெவ்வேறு மனிதர்களின் வாழ்வினைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் முகுந்தன்-ஜென்னி இடையிலான கதை எளிமையான காதல் கதை போல தோற்றம் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உபகதைகளில் கூறப்படும் வாழ்வின் தீவிரத் தன்மைதான். ஆனால், உண்மையில் எளிமையென எண்ணச் செய்யும் முகுந்தனின் வாழ்வும் அதேயளவு கடினமானதுதான்.

பெரு நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகளை அறிவதற்காக முகவர்களை அமர்த்துகிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் நாற்பது வினாக்கள் அடங்கிய தாளை (கொஸ்டினர்) தங்கள் பிரதிநிதிகளிடம் கொடுத்து மக்களிடம் அனுப்பி பதில் பெறுகிறார்கள். அவர்கள் அளிக்கும் பதில்களைக் கொண்டு மக்களின் மனநிலையை அறிந்து அதற்கு உகந்த வியாபார யுக்திகளை வகுப்பார்கள். மா.லெ அமைப்பின் மேல் ஆர்வம் கொண்ட முகுந்தன் பதில் பெறும் பிரதிநிதிகளில் ஒருவனாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறான். பொதுவாக கேள்வி கேட்பதிலேயே இன்பமடையும் நம் மக்களிடையே அறுபது, எழுபது கேள்வித் தொகுப்பிற்கு (கொஸ்டினர்) விடையளிக்கக் கூடியவர்களைத் தேடியலைவது பெரும்பாடு. அத்துடன் அப்போது எதிர்கொள்ளும் சிக்கல்களும் சாதாரணமானவை அல்ல. ஆனால், அதைவிடக் கடினமாக இருப்பது ஜென்னி அவள் மனதில் எண்ணுவதைப் போல இவன் நடந்து கொள்ள முயற்சிப்பது. அதாவது, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அவள் கூறுவதில்லை. எனவே, இந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவள் எதிர்பார்ப்பாள் என்பதை யோசித்தபடியே அவன் இருக்க வேண்டியதாகிறது. சிறு பிசகு ஏற்பட்டாலும் பொதுவான ஆண்களைப் போலவே இருக்கிறாய் எனக் கடிந்து கொள்கிறாள்.

என் பள்ளி நாட்களில் எனக்குச் சில கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தார்கள். பழனி பஞ்சாமிர்தமோ திருப்பதி லட்டோ வீட்டிலிருந்து கொண்டு சென்றால் ஒருவனைத் தவிர பிறர் வாங்கித் தின்பார்கள். “அவன் மட்டும் ஏன் தொடமாட்டேன் என்கிறான்?” என இன்னொருவனிடம் கேட்டபோது “அவங்க சமீபமாகத்தான் மாறியிருப்பாங்க. அதனால தீவிரமா இருப்பாங்க,” என்றான். நாவலில் வரும் ஜென்னியும் அப்படிப்பட்டவள்தான். அவள் பாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜென்னியின் அப்பா ‘மா.லெ’ அமைப்பு ஒன்றில் இயங்கியவர். அவர் இறந்த பிறகு எந்த அமைப்பிற்குள்ளும் இல்லாவிட்டாலும் அமைப்பிற்குள் இருப்பவர்கள் போல தீவிரமாக வாழ முயற்சி செய்கிறாள். உண்மையிலேயே அமைப்பில் உள்ளவர்கள்கூட சில விசயங்களில் முன்னே பின்னே இருந்தாலும் ஏற்பார்கள். ஆனால், ஜென்னி பிடிவாதமாக இருக்கிறாள். குறிப்பிட்டு ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பதெல்லாம் பூர்ஷ்வா மனநிலை என்ற எண்ணத்தினால் வீட்டை குறைந்தபட்ச ஒழுங்குகூட இல்லாமல் வைத்திருப்பதோடு, சுத்தத்தை எதிர்பார்க்கக் கூடாதென முகுந்தனிடமும் அறிவுறுத்துகிறாள்.

முகுந்தன் லட்சியக் காதலனுக்கு உதாரணமானவன். லட்சியக் காதலின் முதன்மையான விதியான ‘விரும்புபவரை அவரின் அத்தனை இயல்புகளுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்’ என்பதை முகுந்தன் ஆத்மார்த்தமாகக் கடைபிடிக்கிறான். இதற்கான உதாரணம் நாவல் முழுக்கவே உள்ளது. ஆனால், ஜென்னி தனக்கொரு துணைவன் தேவை என்பதற்காகவே முகுந்தனுடன் பழகுகிறாள். முகுந்தனைத் தான் நினைக்கும் வாழ்வு முறைக்கு மாற கட்டாயப்படுத்துகிறாள். அனைத்திற்கும் தயாராகவே உள்ள இவன் அவளிடம் எதிர்பார்ப்பது எவரிடமும் கிடைக்காத சிறு அரவணைப்பை. ஆனால், ஜென்னியின் இயல்பில் அப்படியொரு உணர்வேயில்லை. எனவே, வாசிப்பவர் எதிர்பார்ப்பிற்குத் தக்கதாகவே நாவலின் இறுதி அமைந்துள்ளது. அப்போது மனம் பெரும் ஆசுவாசமடைகிறது. இந்நாவலை வாசிக்கும் எவருக்கும் இக்காதல் எப்போதும் நினைவில் நிற்கும் என்பது என் நம்பிக்கை.

சங்கச் சித்திரங்கள் நூலில் சங்க கவிதைகள் சுட்டப்பட்டிருந்தாலும் தர்மபுரி அப்பு பாலன் கதைக்கான தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் திருக்குறள் மகத்தான ஒன்று. அதன்பிறகு அக்குறளை எதிர்கொண்ட ஒவ்வொரு முறையும் மனம் விகசிக்காமல் நகர்ந்ததில்லை.

என்ஐ முன் நில்லுமின் தெவ்வீர்பலர்
என்ஐ முன்நின்று கல்நின்றவர்”

என் கிராமத்தில் ஆண்டுதோறும் பனிரெண்டய்யனார் திருவிழா நடைபெறும். அவ்விழாவில் அய்யனாராக தோளில் சுமக்கப்படும் அந்தப் பன்னிரண்டு பேரும் ஊருக்காக முன்நின்று உயிர்விட்டவர்கள் என உணர்ந்தபோது விம்மல் எழ கண்ணில் நீர் வழிந்தது. இதே போல ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஓர் அய்யனாராவது இருக்கிறார். எதை எதிர்நோக்கி இவர்கள் காலனின் முன்நின்றார்கள். இப்படித் தெய்வமாக்கி மக்கள் தொழுவார்கள் என்பதற்காக அல்ல. அது அவர்களின் உடன்பிறந்த பிறருக்கென தன் வாழ்வை அர்ப்பணிக்கும் இயல்பு. ஆயிரம் பேரில் அல்லது லட்சம் பேரில் ஒருவர் அவ்வாறு படைக்கப்படுகிறார்கள்.

‘கொடை மடம்’ நாவலின் உபகதைகளில் வரும் மனிதர்கள் அம்மாதிரி இயல்புடன் பிறந்தவர்கள் அல்லது படைக்கப்பட்டவர்கள். தாழ்ந்து சீரழிந்து கிடக்கும் வையகத்தை உய்விக்க வேண்டும் என்ற லட்சிய உணர்வால் உந்தப் பெற்றவர்கள். அவர்கள் கண்ணில்படும் ஏதோவொரு லட்சியவாத குழு எனக் கூறிக்கொள்ளும் அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வைப் பற்றியெரியச் செய்ய வேண்டும் என்பதற்காக அமைப்பின் தலைமை கூறுவதைச் சிறிதும் யோசிக்காமலும் தயங்காமலும் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் மண்டபங்களில் அடிவாங்குகிறார்கள், குடும்பத்தைத் துறக்கிறார்கள், வீதிகளில் உறங்குகிறார்கள், சிலர் உயிரையும் கொடுக்கிறார்கள். எல்லாமே தங்கள் சக மனிதர்களுக்கு நன்மை விளைய வேண்டும் என்ற கனவினால். ஆனால், சக மனிதர்கள் தங்களுக்காகவே போராடுகிறார்கள் என்பதைக் கிஞ்சிற்றும் உணராமல் இவர்களைக் கண்டு ஒவ்வாமை கொண்டு விலகி நிற்கிறார்கள்.

உபகதைகளில் காட்டப்படும் வாழ்க்கையில் பெயரோ, ஊரோ மாறியிருக்கக்கூடும் மற்றபடி அத்தனையும் மெய்யானவை என்பதை வாசிக்கும்போது உணர முடிகிறது. இது எழுத்தாளர் சாம்ராஜின் எழுத்தின் வல்லமை. உபகதைகளில் காட்டப்படும் லட்சியவாத வாழ்க்கையும் ஆசிரியரின் கூறும் முறையும் அவற்றை காவியத்தன்மை கொண்டவையாக ஆக்கிவிட்டன.

மருத்துவர், வழக்கறிஞர், அரசு அச்சக ஊழியர், மேஜிக் கலைஞர், ஹோமியோபதி பயில்பவர் என உபகதை நாயகர்கள் வெவ்வேறு பின்புலத்துடன் இருந்தாலும் உலகை உய்விக்க தங்கள் தனிப்பட்ட வாழ்வைப் பணயமாக வைத்து அமைப்பில் இணைந்து செயலாற்றுகிறார்கள். இவற்றிற்குள்ளேயே ஒரு உருக்கமான காதல், வறட்டுப் பிடிவாதம், பிறழ் உறவு கதைகளும் அதே தீவிரத்துடன் உள்ளன.

எழுத்தாளர் சாம்ராஜின் சிறப்பு என்பது அவரது உரையாடல்களிலும் சிறுகதைகளிலும் தொடர்ந்து வெளிப்படும் பகடிதான். இப்பண்பு அவரது சாதாரண சிறுகதைகளை உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன.

‘கொடை மடம்’ நாவலிலும் பகடிகள் விரவிக் கிடக்கின்றன. வாசிக்கும்போது ஒரு கணம் திகைத்து புன்னகைத்த பின்தான் நகர முடியும். உபகதைகளில் எதிர்ப்படும் பகடிகள் வாசிப்பவரிடத்தில் ஒரு கைத்த புன்னகையைத் தோற்றுவிக்கிறது. இது இன்னும் அழுத்தமான கனத்தை உணர வைக்கிறது.

முகுந்தன் ஜென்னி கதைகளில் உள்ள பகடிகள் வெடித்த புன்னகையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக குரங்கிடம் கைப்பையைப் பெற முயற்சிப்பது, பக்கத்து வீட்டின் சுவர் ஏறிக் குதிப்பது, சுற்றுலா வண்டியில் நாய்களை ஏற்றிச் செல்தல் போன்ற இடங்களில் வாய்விட்டுச் சிரிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், அச்சூழ்நிலையில் முகுந்தனின் பாடு திண்டாட்டமாகவே உள்ளது. இந்த இடங்களில் வாசகன் புன்னகையுடன் இருப்பதால் முகுத்தனின் வேதனையை முழுதாக உணர்வதில்லை. இதன் காரணமாகவே முகுத்தன் ஜென்னி கதை எளிய காதல் கதையாக உணரப்படுகிறது.

மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது இந்நாவல் காவியத் தன்மை கொண்ட லட்சியவாத மனிதர்களின் வாழ்வைப் பொறித்த செப்புப் பட்டையங்களை இலக்கியம் வாசிக்கும் முகுந்தன் எனும் அமைப்பிற்குள் இல்லாத காரணத்தினாலேயே எல்லாவற்றையும் சற்று விலகி நின்று உணர்ந்து அறியக் கூடிய நுண்ணுணர்வு உடையவனுடைய வாழ்க்கை எனும் இரும்புக் கம்பியில் பிணைக்கப்பட்டதாக உள்ளது. செப்புப் பட்டயங்களாகக் கோர்க்கப்பட்டுள்ள, தாங்கள் நம்பிய லட்சியவாதத்திற்காக தங்கள் வாழ்கையையே பணயம் வைத்தவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு நாவலாக விரிந்து எழுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளன. எழுத்தாளர் சாம்ராஜ் எழுதாவிட்டாலும் இந்நாவலை வாசிக்கும் வேறொருவர் விரித்து எழுதக்கூடிய வகையில் ஒரு விதைப் பெட்டகம் போலவே இதன் உள்ளடக்கம் அமைந்துள்ளது.

சாம்ராஜ் – தமிழ் விக்கி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...