என் மெத்தையில் ஒரு நாகம்

இரும்பு வேலிக்குப் பின்னால் அடர்ந்து வளர்ந்திருக்கும் புதர்களுக்குள்ளிருந்தும், மரங்களில் ஊர்ந்தும் இந்தக் குடியிருப்புக்குள் ஏதும் வரக்கூடுமோ என்ற அச்சமூட்டும் பிரம்மையுடன் இந்த அமைதியான மலைப்பகுதியில் நான் உறங்கத் தொடங்கி சில இரவுகள் கடந்துவிட்டன. கூடவே, நான் வசிக்கும் இந்த வீட்டின் குடியிருப்பாளர் யார் என்ற என் சந்தேகம் என்னை மேலும் அயற்சியுற வைக்கிறது. இந்தச் சிறிய வீட்டை ஸ்டுடியோ என்று சொல்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால், சிறிய வீடொன்றைக் கலைஞர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற ஸ்டுடியோவாக மாற்றியமைத்திருக்கிறார்கள். இந்த வீட்டில், நான் படுத்துறங்கும் இந்த அறையில், மரணம் நிகழ்ந்திருக்குமோ, வீட்டு குடியிருப்பாளர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ போன்ற துர்கற்பனைகள் தேவையற்று எழுகின்றன. அல்லது கொலை நடந்திருக்கலாம். இங்கு இல்லை என்றாலும் பக்கத்து வீட்டில்… யார் கண்டது? வெளியே வீசும் ஊதக்காற்றின் ஓசை உள்ளே கேட்கிறது. குளிரூட்டி அறையை இதமாக வைத்துள்ளது.

இந்தக் குன்றில் முன்பு புறம்போக்கு வாசிகள் குடியிருந்தார்கள். போர் ஓய்ந்த பிறகு, குடியேறிய ஷியான் காய் ஷெக்கின் தேசிய ராணுவப்படை முன்னால் வீரர்கள்தான் முதல் குடியிருப்பாளர்கள். யுத்த தோல்வி அவர்களைப் பெருநிலத்தின் பூர்வ கிராமங்களிலிருந்து பிரித்திருந்தது. துரித வளர்ச்சி காணும் ஒரு தீவில், தனிமையில் வாழும் அந்நிய மனிதர்களாக அவர்கள் ஆனார்கள். அங்கேயே குடியிருப்பை அமைத்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. ராணுவ சேவையிலிருந்து வெளியேறிய பிறகு, அவர்களின் முகாமுக்கு அருகில் இருந்த குன்றைத் தங்களின் குடியிருப்பாக மாற்றத் தொடங்கினர். ஆற்றிலிருந்து பாறைகளையும் கற்களையும் சுமந்து சென்று குன்றின் சரிவில் சிறிய வீடுகளைக் கட்டினர்.

உட்புற பகுதிகளிலிருந்து பெருநகரத்தில் பிழைப்பு தேடி வந்த மக்கள் கூட்டம் அந்தக் குன்றில் வசிக்கத் தொடங்கியதும் அங்கே வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில் அந்த நிலம் புறம்போக்கு வாசிகள் வாழும் புறநகர்ப் பகுதியாக மாறியது. நகர வளர்ச்சியின் காரணமாகப் புறம்போக்கு வாசிகளை அரசாங்கம் வேறு இடங்களுக்கு மாற்றியது. ஆனாலும் தனித்துவம் மிக்க அந்தச் சிறிய வீடுகளை அரசாங்கம் சிதைக்கவில்லை, மாறாக, கலைஞர்கள் கிராமமாக மாற்றியமைத்தது. வெளிநாட்டு எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்வின் பங்கேற்பாளனாக நான் ஒரு மாதக் காலம் இங்கேதான் தங்கவைக்கப்பட்டுள்ளேன். இந்த அரிய வாய்ப்பு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலிதான். எல்லாமும் இலவசமாகக் கிடைத்ததோடு படித்தொகை வேறு கிடைத்தது. முற்றிலும் அந்நியமான அந்த ‘கலைஞர்கள் கிராமத்தில்’ வாழ்க்கை அனுபவம் பெருவதைத் தவிர, செய்து முடிக்க வேண்டிய கட்டாய பணியாக எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை.

சில நேரங்களில், சொந்த மண்ணை விட்டு, புது நிலத்தில் கைவிடப்பட்ட ஷியான் காய் ஷெக்கின் அந்தப் படைவீரர்களின் வரலாறு எனக்குத் திரும்ப நிகழ்வது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. பேரமைதி நிழவும் இந்த இடத்தில் இது போன்ற எண்ணங்கள் கிளர்ந்து எழுந்து என்னை மேலும் அந்நியமாக்குகின்றன. ஈட்டியின் கூர்மையுடன் பெருந்துக்கம் தாக்குகிறது. இந்த வீட்டில் வாழ்ந்து மடிந்த படைவீரர்களின் ஆவி என்னைத் தாக்குகிறதோ என்னவோ? என் கைகளை மெல்ல நகர்த்தி என் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தேன். நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று தெரியவில்லை. ஆனால், நான் இன்னும் நானாகவே இருக்கிறேனா அல்லது இங்கு அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஆவிகளின் தாக்குதலில் மாறிவிட்டேனா என அறிந்து கொள்ள நினைத்தேன்.

சில இரவுகள் இங்குத் தங்கிய பிறகுதான், இந்தக் குன்றின் சரிவில் இருக்கும் சிறிய வீடுகள்(வீடுகளில்) அல்லது ஸ்டுடியோக்களில் யாரும் வசிக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். அதேப் போல, நான் தங்கியிருக்கும் வீடுதான் மிகத் தொலைவில் மலைச்சரிவின் ஆக உச்சியில் அமைந்திருப்பதையும் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். சற்று மேலே சென்றால் புதர்கள் மண்டிய குன்றின் உச்சியைக் குடியிருப்பு வீடுகளிலிருந்து பிரிக்கும் இரும்பு வேலியைப் பார்க்க முடியும். அடிவார நுழைவாசலில் காவல் கூடாரம் இருந்தது. அதில் ஒரு வாயிற்காவலர் பணியில் இருந்தார். பக்கத்திலேயே இருக்கும் அலுவலகத்தில் மேலும் ஒரு காவலர் பணியில் இருந்தார்.

என்னைப் போலவே கலைத்துறை விருந்தினர்களாக வேறு சிலரும் வந்திருந்தனர். ஆனால், அவர்கள் வேறு பிரிவில் தங்கியிருந்தனர். நான் தங்கும் பிரிவில் உள்ள ஸ்டுடியோக்களில் யாரும் தங்கவில்லை என்றே நினைக்கிறேன். எனது ஸ்டுடியோ இருக்கும் பிரிவுக்கு வரும் உள்ளூர் கலைஞர்களும் ஸ்டுடியோ வாடகை எடுப்பவர்களும் காலையில் வந்து இருட்டுவதற்குள் திரும்பிவிடுகிறார்கள். நான் அவர்களுடன் பழகவில்லை. வேறு யாரையும் தெரிந்து கொள்ளவும் இல்லை. இங்குப் பணி செய்யும் சில காவலர்களோடு மட்டும்தான் அறிமுகம் இருந்தது. அதுவும் தூரத்தில் செல்லும்போது கை தூக்கி விட்டுச் செல்வதோடு சரி. இதுவரை ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால், காவலர்கள் தினமும் எனது ஸ்டுடியோ வழியாக புதர் மண்டிய குன்றின் உச்சி வரை காவல் ரோந்துக்கு, தங்கள் வேலை அட்டவணைப்படி சென்று வருகிறார்கள் என்பதைக் கவனித்துள்ளேன்.

இன்றிரவு காற்று புயலாக வீசுகிறது. மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. நான் சன்னலை ஒட்டி கட்டிலில் சாய்ந்து கிடக்கிறேன். தடித்த கண்ணாடியுள்ள இந்தச் சன்னலில் ஏற்றி இறக்க முடிந்த கனத்த நெகிழி திரைச்சீலை ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் நான் சன்னலையும் திரைச்சீலையையும் இறுக்கமாக மூடி வைத்திருப்பேன். அந்தச் சுமாரான அறையில் நான் அடைபட்டு கிடப்பதுதான் வழக்கம்.

மெத்தையில் கிடந்தபடி, பார்வைக்கு நேராகத் தெரியும் மேல் மாடியறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். மரவேலி அமைக்கப்பட்ட அந்த உப்பரிகைக்குச் செல்ல செங்குத்தாக ஒரு மரப்படி இருந்தது. நான் அந்த மேல் மாடியறைக்குச் சென்று பார்த்துள்ளேன். அதை இதே அளவுள்ள மற்றொரு படுக்கை அறையாக பயன்படுத்த முடியும். ஆனால் உயரம்தான் கம்மி. கூரையைத் தொடும் அளவுக்கு இருக்கும். அங்கும் இதேப் போல ஒரு தடித்த மெத்தை போடப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் மூடப்பட்ட பெரிய மரப்பெட்டிக்குள்தான் என்ன இருக்கிறது எனத் தெரியவிலை.

கீழிருந்து பார்க்கும்போது உப்பரிகையின் மேல்தளம் மட்டும்தான் தெரிகின்றது. அந்த மேல் அறையில் ஒரு சடலம் கிடப்பதாக எனக்கு ஏனோ திகில் கற்பனை தோன்றி கலவர மூட்டியது. இன்னும் கொஞ்ச நேரத்தில், தன் நீண்ட கூந்தலால் முகத்தை மூடியபடி, ஓர் உருவம் தன் தலையை மெல்ல வெளிநீட்டக் கூடும் எனத் தோன்றுகிறது. அல்லது மரப்படிகளிலிருந்து தவழ்ந்து கீழே இறங்கி கட்டிலின் விளிம்பைப் பிடிக்க வரலாம். மேல் அறையில் கிடக்கும் அந்த மரப்பெட்டியை நினைத்துக் கொண்டேன். அதற்குள்தான் இங்குள்ள துர் ஆவிகளை ஏவிவிடும் ஏதோ ஒன்று இருப்பதாக கற்பனை செல்கின்றது.

ஆனால், நான் காலைக் கட்டிலின் விளிம்பு வரை நீட்டிக் கொண்டு அசையாமல் கிடந்தேன். முகம் மறைத்த அந்த உருவம் தன் கைகளை நீட்டி என் காலைப் பிடிக்கக் காத்திருந்தேன். முகம் மூடிய அதன் தலையை ஓங்கி உதைத்துக் கீழே சாய்க்க வேண்டும் என்ற வெறியுடன் காத்திருந்தேன். அந்தத் தாக்குதலில் அது கீழே கவிழ்ந்து தலை உடலிலிருந்து துண்டாக வேண்டும்.

நான் அந்தச் சூன்யமான மேல் அறையையே வெறித்துக் கொண்டிருந்தேன். அங்கு மெல்லிய சுவாசம் எழுவது போல தோன்றியது. பின் மறைந்தது. நான் கட்டிலில் செயலற்று கிடந்தேன். எழுந்து சென்று பார்க்க சோம்பலாக இருந்தது. எது வந்தாலும் ஓங்கி உதைக்க தயாராகக் காத்திருந்தேன்.

என் ஸ்டுடியோ, பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஸ்டுடியோவுடன் இணைக்கப்பட்டிருந்தது. என் அறையில் இருந்து அங்குச் சென்று வர கதவு இருந்தது. ஆனால், அந்தக் கதவு பூட்டப்பட்டே இருந்தது. எனக்குத் தெரிந்து அந்த அறை காலியாகத்தான் இருந்தது. நிச்சயம் இருண்டு கிடக்கும். எவ்வளவு காலமாக அந்த அறை காலியாக கிடக்கிறது எனத் தெரியவில்லை. அல்லது யாராவது வந்து போகிறார்களா என்றும் தெரியவில்லை. நான் இங்கு வந்ததிலிருந்து அந்த அறை காலியாகத்தான் இருக்கிறது.

அந்தக் காலி ஸ்டுடியோவிலிருந்து ஏதோ சத்தம் வருவது போல இருக்கிறது. அங்கு ஏதாவது இருக்கக் கூடும். அந்த அறையில் இரவு நேரத்தில் யாரும் தங்க முடியாததனாலேயே நீண்ட காலமாக காலியாக விடப்பட்டிருக்கலாம். அமைதியிழந்த ஆவிகளின் தொல்லையாக இருக்கலாம். அது ஒரு கொலையோ, தற்கொலையோ நடந்த இடமாகக்கூட இருக்கலாம். பக்கத்திலிருக்கும் அந்த அறைக் கதவு திடீரென திறந்து கொண்டால் என்ன செய்வது? என் கைமுஷ்டிகளை இருக்கிக் கொண்டேன். அமைதியிழந்து அலையும் ஆவிகளை ஓங்கி ஒரு குத்துவிட வேண்டியதுதான்.

சட்டென வெளியிலிருந்து சன்னல் கண்ணாடியில் ஏதோ ஒன்று தட்டும் சத்தம் கேட்டது. காரிருள் வனத்தின் பக்கமிருந்து அச்சத்தம் வந்து கொண்டிருந்தது. நான் கட்டிலில் அப்போதும் அசைவற்றுக் கிடந்தேன். மனதில் அச்சம் படரத் தொடங்கினாலும் மெத்தென்றிருந்த அந்தக் கட்டிலிலிருந்து எழ மனம் வரவில்லை. வெளியில் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. கண்ணாடி சன்னலில் இடைவிடாமல் எழும் சத்தம் சன்னலினோரம் படுத்திருந்த என் காதுகளில் அலை அலையாக வந்து மோதிக் கொண்டிருந்தது. சீராக எழும் சத்தம் சிறிது நின்று மீண்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. சத்தத்துக்கான காரணத்தை மனம் ஆராய தொடங்கியது. ஆனால், உடல் கட்டிலிலிருந்து எழ மறுத்த்துக் கொண்டிருந்தது.

சன்னல் திரையை விளக்கி வெளியே பார்த்தால் என்ன என்று தோன்றியது. கண்ணாடியைத் தட்டிக் கொண்டிருக்கும் சில கரங்களை அங்கு நான் பார்க்ககூடும். அல்லது வெளியில் அலைந்து கொண்டிருக்கும் உருவத்தின் நிழலைப் பார்க்கக் கூடும். அதைவிட சன்னலைத் திறந்து கண்ணாடியின் ஓரம் நிற்கும் அந்த உருவதை(உருவத்தைத்) தாவி பிடித்து நெரிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது. திரையை விளக்கி சன்னலைத் திறந்து ஒரே பாய்ச்சலில் வெளியே நிற்கும் அந்த உருவத்தைப் பிடித்து இழுத்து அதன் கழுத்தை அழுத்தி நெரிக்க வேண்டும். கழுத்து அகப்படாவிட்டால் வேறு எந்தப் பாகம் கிடைத்தாலும் சரிதான். பிடித்து நெரிக்க வேண்டும். இதை மிகத் துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது, பலத்த காற்றின் ஊடே சன்னல் தட்டப்படும் சத்தம் வந்து கொண்டே இருந்தது. அது பலத்த காற்று சன்னலை அறையும்போது எழும் ஓசைதான் எனப் புரிந்து கொண்டேன். பலத்த காற்றைத் தொடர்ந்து லேசான மழை பெய்யத் தொடங்கியது. அறையின் உள்ளிருந்த குளிரூட்டியின் இதமும் வெளியே வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றின் குளிர்ச்சியும் என்னைச் சுகமாக மெத்தையில் அழுத்தின. போர்வையை இழுத்து கால் வரை மூடிக் கொண்டேன்.

என் மனவோட்டங்கள் ஸ்டுடியோவின் கூரையைத் தாண்டி வெளியே மிதந்து சென்றன. மழைக்காற்றின் குளிர்ச்சியும் பேரமைதியும் நிலவும் நள்ளிரவு வேளையில் அந்தத் தனித்துவிடப்பட்ட மலையுச்சி ஸ்டுடியோவில் நான் மட்டும் தனியே இருக்கிறேன் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. புதர்களிலிருந்து இரும்பு வேலியால் பிரிக்கப்பட்டிருக்கும் எனது ஸ்டுடியோவை நான் வானத்திலிருந்து பார்ப்பது போல் இருந்தது. மரங்களின் வேரும் கிளைகளும் வேலிக்குள் தவழ்ந்து ஸ்டுடியோவின் சுவர்களில் ஊர்ந்து ஏறுகின்றன. ஸ்டுடியோவிற்குப் பக்கத்தில் இறங்கும் மலைச்சரிவும் மரங்கள் அடர்ந்த நிலமும் இன்னும் மனிதர்கள் ஊடுருவாத பகுதிகளாகத் தெரிந்தன.

ஸ்டுடியோவின் சுவர்களில் வேர்களைப் படரவிடும் அந்தப் புதரைப் பற்றி(எண்ணி) மனம் அலசியது. பகலில் சன்னல் இடுக்கில் பார்த்தபோது நெருங்கி வளர்ந்த மரங்களும் அடர்ந்த புல்பூண்டுகளும் நிறைந்த இடமாக அது தென்பட்டது. இவ்வளவு அடர்ந்த வனத்தில் பாம்பு போன்ற விஷஜந்துகள் இருக்காதா? நிச்சயம் இருக்கும். இரும்பு வேலியால் பாம்புகள் ஸ்டுடியோவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க முடியாது. அதுவும் இது போன்ற அடர்ந்த இரவில். இந்த எண்ணம் எழுந்ததுமே, ஸ்டுடியோ சுவரில் மழைநீர் பட்டு மினுமினுக்கும் உடலுடன் பாம்புகள் ஊர்ந்து கொண்டிருப்பதாக மனம் பேதலித்தது. கூம்பு போன்ற தலையும் பிளந்த நாக்கும் நஞ்சு நிறைந்த கோரை பற்களும் கொண்ட உடல் பருத்த பாம்புகள் கற்பனையில் தோன்றின. நிஜமாகவே பாம்புகள் என்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியதும் மேல் அறையில் துர் ஆவிகளின் நடமாட்டம் இருக்கலாம் என்ற பழைய பயம் விலகி பாம்பு பற்றிய அச்சம் வியாபித்தது.

அறையின் குளிர்ந்த காற்று உரசி என் கண்கள் மங்கிக் கொண்டிருந்தன. உறக்கத்தின் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது மனம் கட்டுப்பாடுகளை இழந்து சபலத்தில் ஆழ்ந்தது. குளிர்ந்த அந்த இரவில் என் தனிமையை மறக்கடிக்க கட்டிலில் துணையாக ஒரு பெண் தேவைப்பட்டாள். வழவழப்பான வெள்ளை தோல் கொண்ட ஒருத்தி.

என் அறைக்குள் நுழையும் நாகம் ஒன்று வழவழப்பான வெள்ளை தோல் கொண்ட போதை தரும் அழகியாக சட்டென மாறினால் எப்படியிருக்கும். என் கண்கள் இருக மூடிக் கொண்டன. நினைவுக்கும் ஆழ்ந்த தூக்கத்துக்கும் இடையில் மனம் அலைந்து கொண்டிருந்தது. நாகம் ஒன்று அழகியாக மாறி துணையாக வருவது எவ்வளவு அபூர்வமானது. அப்படி ஒன்று உடனே நடக்க வேண்டும். இந்தக் கட்டில் சிறியதுதான். ஆனால், நாங்கள் நெருங்கி படுத்துக் கொள்ள போதுமானது. ஆனால், அது கோரமான உருவமாக மாறி வந்தால் நான் அதை ஓங்கி உதைத்து தூர வீசுவேன். அதன் கழுத்தை நெரித்து தலையைத் துண்டாக்குவேன். அப்போது நான் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று விட்டிருந்தேன்.

கலவையான நிறத்தில் மினுமினுக்கும் பருத்த பாம்பு ஒன்று புதரிலிருந்து வெளிப்பட்டு ஈரமான மலைச்சரிவில் நெளிகின்றது. அது கொடிய விஷம் கொண்ட அரிய வகை பாம்பு. சேரு படிந்த அதன் வழவழப்பான உடலை மழை நீர் கழுவிச் செல்கிறது. ஸ்டுடியோ கூரையின் மேல் தொங்கும் மரக்கிளை நோக்கி அது மரத்தில் வளைந்து ஊர்கின்றது. கூரையிலிருந்து எப்படியோ மிக லாவகமாக படுக்கை அறைக்குள் அந்தப் பாம்பு நுழைகின்றது. அதன் கூரிய பார்வை அந்த அறையில் வெள்ளை நிற விரிப்பு மூடிய மெத்தையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஆணின் மேல் குவிகின்றது. பாம்பு மெல்ல ஊர்ந்து கட்டிலின் பக்கத்திற்கு வருகின்றது. அது தன் தலையை மிக உயரமாகத் தூக்கி நிற்கின்றது. ஒரு மீட்டருக்கும் அதிகமாக அது உடலை நேராக நிமிர்ந்தி நிற்கிறது. அதன் சீற்றம் உறங்கும் அந்த ஆணின் தலைக்கருகில் சன்னமாகக் கேட்கிறது. கழுத்து வரை போர்வையை மூடித் தலையை மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டு தூங்கும் அந்த ஆணின் தலையில் மிகச் சரியாக தன் பற்களை இறக்க சில நொடிகள் போதும்.

உடலை நிமிர்த்தி சீறிக் கொண்டு நிற்கும் அந்தப் பாம்பு அவனைத் தாக்கவில்லை. மாறாக, மெல்ல நெளிந்து அசைந்து கொண்டிருந்தது. அதன் அசைவு மிகக் கவர்ச்சியான நடனம் போல இருந்தது. அசையும் அந்தப் பாம்பின் உடலில் சில மாற்றங்கள் தோன்றத் தொடங்கின. ஒரு பெண்ணாக மெல்ல அது மாற்றங்கண்டது. வழவழப்பான வெள்ளைத் தோல் கொண்ட வாலிப்பான பெண்ணாக உடலெடுத்து அது நின்றது. சிற்றிடையும் பெருத்த பின்புறமும் அத்தனை கச்சிதமாக பொருந்தி வந்தன. மதர்த்த மார்புகள் சிறு குன்றுகள் போல நிமிர்ந்து நின்று அவளை முழுமையான பெண்ணாக காட்டின. கண்கள் ஒளி வீசின. கூரிய நாசியும் சிவந்த கன்னங்களும் கச்சிதமான கனிந்த உதடுகளும் அவளைத் தேவதை போல காட்டின. நிர்வாணமாக நின்ற அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஆணை நோட்டமிட்டாள். அவள் கட்டிலுக்கு அருகில் சென்று ஒரு பாம்பைப் போல எந்தச் சலனமுமின்றி அவன் போர்வைக்குள் புகுந்தாள். குளிர்ந்திருந்த அவன் உடலில் உஷ்ணம் பரப்பி அவனோடு சங்கமித்தாள். தழுவி அணைத்து அவனோடு ஒன்றானாள்.

மழை ஓய்ந்துவிட்டது. நான் விழித்துக் கொண்டேன். எனக்குள் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. ஓர் ஆழ்ந்த நிறைவை உடல் வெளிப்படுத்தினாலும் அசதியாக இருந்தது. என் போர்வை உடலிலிருந்து விலகி கட்டிலின் விளிம்பில் தரையை உரசிக் கொண்டு கிடந்தது. நான் கட்டிலில் மிகுந்த ஆயசத்தில் கிடந்தேன். படுத்தவாரே பக்கதிலிருந்த சன்னல் திரையை விலக்கினேன். வெளியே இன்னும் இருள் விலகவில்லை. ஆனால், காற்றும் மழையும் இல்லாமல் அமைதியாக இருந்தது. அதிகாலை நேரம் எனத் தோன்றியது. இங்குச் சீக்கிரமாக விடிந்து விடுகின்றது. காலை 5.30க்கே வெளிச்சம் பரவிவிடுகின்றது. கடிகாரத்தைப் பார்த்தேன். ஐந்து மணியாக பத்து நிமிடம் இருந்தது. காலை தொழுகைக்கான நேரமாகிவிட்டது. எனக்கு உடலின் சத்து முழுவதும் வெளியேறி விட்டது போல சோர்வாக இருந்தது. ஏன் இந்தத் திடீர் சோர்வு என்று தெரியவில்லை.

மெல்ல எழுந்தேன். என் கண்கள் அந்த மேல் அறையின் மீது முதலில் சென்றது. அந்த உப்பரிகை எந்தச் சலனமுமின்றி அமைதியாகவே இருந்தது. பிறகு என் கவனம் என் அறையிலிருந்து துர் ஆவிகள் உலவும் ஆட்களற்ற பக்கத்து இருண்ட ஸ்டுடியோவை இணைக்கும் கதவுக்குச் சென்றது. அந்தக் கதவு கோரக் கரங்களால் தகர்க்கப்படாமல் வழக்கம் போல இறுக சாத்தியிருந்தது. கட்டிலில் அமர்ந்தபடி கால்களைத் தரையில் ஊன்றினேன். கட்டிலில் வெப்பம் இன்னும் குறையாமல் இருப்பது போல உணர்ந்தேன். சுகமான மலர் மணம் காற்றில் மிதந்து வந்தது. இதமான அந்த மணம் எங்கிருந்து வருகிறது எனத் தேடினேன். அது கட்டிலிலிருந்து வருவதை அறிந்து திடுக்கிட்டேன். சட்டென எழுந்து நின்று கட்டிலை வெறித்தேன். மலர் மணம் வீசும் வெப்பமான கட்டில். கவலையும் குழப்பமும் சூழ்ந்து கொண்டது. சிந்தனையற்று நின்றேன். இரவில் நடந்தவற்றை ஞாபகப்படுத்த முயன்றேன். கனவு கண்டிருப்பேனோ எனக் குழப்பத்துடன் யோசிதேன். எதுவும் ஞாபகத்தில் எழவில்லை. மூளை செயலற்று நின்றுவிட்டது போல இருந்தது.

போர்வையை உதறி மெத்தையைச் சரி செய்தபோது மெத்தை மேல் மெல்லிய துணி போன்ற ஒன்று கிடப்பதைப் பார்த்தேன். அது ஒரு மனிதனைக் கால் முதல் தலை வரை மூடி வைக்கப் போதுமான அளவு நீளமாக இருந்தது. அதை நான் கையில் எடுக்க முயன்றபோது அது பொடிப் பொடியாகி உதிர்ந்தது. கண்ணாடி செதில்கள் போன்ற அவை மிக நுட்பமானவையாக இருந்தன. நான் ஒன்றும் தோன்றாமல் மெத்தையைப் போர்வையால் தட்டி உதறியபோது அவை நறுமணம் வீசும் தூசுகளாக உதிர்ந்து காற்றில் கலந்தன. நான் அதிர்ந்து பின்வாங்கினேன். நறுமணம் வீசும் அந்தத் தூசு சட்டென காற்றில் கலந்து காணாமல் போனது.

விதிர்த்து நின்றேன். நான் பார்த்தது என்ன என்று புரியவில்லை. ஆனால், என் மெத்தையில் நறுமணத்தின் மிச்சத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. என்னால் இப்போது சிந்திக்க முடிந்தது. மெத்தையில் கிடந்த துணி போன்ற அந்தப் பொருள் எதோ ஒன்றின் மெல்லிய தோல் என அனுமானிக்க முடிந்தது. உடனே கட்டிலில் மேலும் கீழும் வேகமாகத் தேடினேன். அந்தத் தோலுக்குரிய எதுவும் அங்கு இல்லை. சற்று முன் வீசிய நறுமணமும் இப்போது காணாமல் போயிருந்தது. என் அறை, கட்டில், மெத்தை எல்லாமே பழைய நிலைக்குத் திரும்பியிருந்தன.

எனக்குப் புழுக்கமாக இருந்தது. முந்தைய இரவின் குளிரிலும் வெக்கையை உணர முடிந்தது. காய்ச்சலின் தாக்குதல் போல வெப்பமும் கொதிப்பும் உடலில் மெல்ல பரவின. எனக்கு உடனே குளிக்க வேண்டும் எனத் தோன்றியது.

தமிழில்: அ. பாண்டியன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...