மாயரஞ்சனும் கானரஞ்சனும் – சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள்

80களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். 84 சிறுகதைகளை எழுதிய பிறகு, ஏறத்தாழ 40 வருடங்கள் வரை நாவலே எழுதாமலிருந்தவர், 2019ஆம் ஆண்டு அவரது முதல் நாவலான ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலை எழுதினார். அதற்குப் பின்பான இந்த நான்காண்டுகளில் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’, ‘நான் லலிதா பேசுகிறேன்’ மற்றும் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ ஆகிய நாவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது ‘பிறவிப் பெருங்கடல்’ எனும் புதிய நாவலும் வெளியாகவுள்ளது. இரண்டு குறுநாவல்கள் கொண்ட ‘எடின்பரோவின் குறிப்புகள்’ எனும் குறுநாவல் தொகுப்பும் வெளிவந்துள்ளது. வெளிவராத ‘பிறவிப் பெருங்கடல்’ நாவலைத் தவிர்த்து பிறவற்றை இந்தக் கட்டுரையில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவல் ஆதித்யா சிதம்பரம் எனும் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளரின் வாழ்வையும் படைப்புகளையும் பற்றி பேசுகிறது. நூலாசிரியர் முன்னுரையில் மரியோ வர்கோஸ் லோசாவின் நோபல் பரிசு ஏற்புரையால் உந்தப்பட்டதாக குறிப்பிடுவது இனிய தற்செயல். ஏனெனில் லோசாவின் ‘ஆண்ட் ஜூலியா அண்ட் ஹெர் ஸ்க்ரிப்ட் ரைட்டர்’ நாவலில் முற்றுபெறாத வானொலி நாடகங்களின் பகுதிகள் நாவலின் அங்கங்களாகத் திகழும். இந்நாவலில் முற்றுப்பெறாத ஐந்து குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன.

‘அம்பிகாவும் எட்வர்ட்ஜென்னரும்’ மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலய நுழைவு போராட்டத்தின் பின்புலத்தில் நிகழ்வது. வைஸ்ராயாக இருந்த லின்லித்தோ பிரபு தொடங்கி ராஜாஜி, மதுரை வைத்தியநாத அய்யர், ஆர்.எஸ். நாயுடு, தி.செ. சௌ. ராஜன் உட்பட பல்வேறு வரலாற்று ஆளுமைகள் நாவலின் முற்பகுதியில் வந்து செல்கிறார்கள். மதுரை ஜேம்ஸ் மில்லின் பொது மேலாளர் எட்வர்ட் ஜென்னரை அம்பிகா எனும் பிராமண பெண் காதலிக்கிறாள். கள்ளு வியாபாரியாக இருந்து பின்னர் பஞ்சு வியாபாரியாக மாறிய சங்கரலிங்க நாடார் இவர்களின் நலன்விரும்பி. நாவலின் பெரும்பகுதி அம்பிகா ஜென்னரை எப்படித் திருமணம் செய்துகொள்கிறார் அதற்குச் சங்கரலிங்க நாடார் எப்படி உதவுகிறார் என்பதை விவரிக்கிறது. ஆலய நுழைவு தொடர்பான ஆவணங்கள் நாவலின் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலும் வரலாற்று பின்புலம் கொண்ட நாவல்தான். ஆர்.எஸ். சுப்புலட்சுமி, முத்துலட்சுமி ரெட்டி, ஜெமினி கணேசன் போன்ற முக்கியமான வரலாற்று ஆளுமைகள் உயிர்பெற்று உலவுகிறார்கள். நாவலுக்கு நடுவில் முத்துலட்சுமி ரெட்டி மாகாண கவுன்சிலில் குழந்தை திருமணம் ஒழிப்பு தொடர்பாக ஆற்றிய உரை முழுமையாக இடம்பெற்றிருக்கிறது. லலிதா குழந்தையாக இருக்கும்போதே விதவையாகி சென்னை இல்லத்திற்குக் கல்வி கற்க வருகிறார். டெல்லியில் சென்று மருத்துவம் பயில்கிறார். நீல்கமல் எனும் முற்போக்கு எண்ணங்கள் கொண்ட வங்காளியைச் சந்திக்கிறார். ஐ.என்.ஏ விற்குச் சென்றவன் திரும்பவே இல்லை. அரசு மருத்துவராக இருக்கிறார். முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சிகளுக்குத் துணையாக இருக்கிறார். வெவ்வேறு மட்டத்திலிருக்கும் ஆண்கள் அவளை வசப்படுத்த முயன்றபடி இருக்கிறார்கள். தங்கையை இழக்கிறாள். அவளுடைய மரணத்துடன் நாவல் முற்றுப்பெறுகிறது. இறுதி பகுதியைத் தவிர்த்து மொத்த நாவலும் பிராமண மொழியின், லலிதாவின் தன்னிலையில் எழுதப்பட்டுள்ளது. நடுவில் ஒரு அத்தியாயம் மட்டும் முத்துலெட்சுமி ரெட்டியின் தன்னிலையில் வருகிறது.

‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நந்தினி எனும் பாடகியின் கதையைச் சொல்கிறது. அவளுடைய கணவன் சர்வேஸ்வரன் திருமணத்திற்குப் பின் அவளை விட்டுச்சென்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனந்தன் எனும் தொழிலதிபர் அவள் வீட்டுக்குள் தற்செயலாகப் பாடுவதைக் கேட்டு அதனால் ஈர்க்கப்படுகிறான். சபாவில் பாட வாய்ப்பு வாங்கிக்கொடுக்கிறான். தனி ஆல்பம் வெளியிட உதவுகிறான். ராம்பிரஸாத் எனும் இசை கலைஞர், ரேவதி எனும் வழக்குறிஞர் தோழி, தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பிரதான பாத்திரங்கள். தவிர வேறு வேறு பெயர்களில் வள்ளலார், அஸ்வத்தாமன், பட்டினத்தார் போன்றவர்கள் காணாமல் போன கதைகளைச் சொல்கிறார்கள். கதைசொல்லும் மாயப்பிறவி கடைசியில் தன்னைக் கடலில் கரைத்துக்கொள்வான். அந்த மாயப்பிறவியை நந்தினியை விட்டுச்சென்ற கணவன் சர்வேஸ்வரனாக வாசிக்க இடமுண்டு. ஆனந்தன் தனது மனைவி லாவண்யாவை விவாகரத்து செய்யவும் லாவண்யா கணவரை விவாகரத்து செய்வதற்கும் கணவன் சர்வேஸ்வரன் இறந்துவிட்டான் எனச் சான்று வாங்குவதற்காக நந்தினியும் ‘டைவர்ஸ்’ சாம்பசிவம் எனும் ஒரே வழக்கறிஞரைத் தனித்தனியாக அணுகுகிறார்கள் என்பதொரு சுவாரசியமான தற்செயல்.

‘எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவல் தொகுப்பில் ‘எடின்பரோவின் குறிப்புகள்’ மற்றும் ‘ரோஜா மலர்’ ஆகிய இரண்டு குறுநாவல்கள் உள்ளன. ‘அம்பிகா’ நாவலில் ஜெரால்ட் நிக்கல்ஸன் என்றொரு நாடோடி வெள்ளைக்காரர் ஆலய நுழைவு பற்றி ஆராய்ச்சி குறிப்புகளை அளிப்பார். எடின்பரோவை அவரது தொடர்ச்சி எனச் சொல்ல முடியும். காட்டில் குடிலமைத்து தனியாக வாழ்ந்து மறைந்தவன் எடின்பரோ அவனை மரத்தடியில் புதைத்துவிட்டு இறந்து ஓராண்டுக்குப் பிறகு மனைவி மகனுக்கு அவனுடைய மரணச்செய்தியைச் சொல்கிறார்கள். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அன்று அங்கே இருக்கிறான். எடின்பரோ பம்பாயில் கள்ளக்கடத்தலில் ஈடுபடுகிறான். குற்றங்கள் நிறைந்த இருளுலகத்தில் உழல்கிறான். கவுசல்யா, அகதா, சுகந்தி, லதா எனப் பெண்கள் அவன் வாழ்வில் வந்தபடியிருக்கிறார்கள். காமத்தால் அலைக்கழிக்கிறான். நகைக்கடை, நில வியாபாரம் என விதவிதமான தொழில்களைச் செய்கிறான். ஒவ்வொன்றாக நீங்கிச்செல்கிறது. கொடைக்கானல் காளி கோயிலில் அடைக்கலமடைகிறான். துய்த்து அலுத்து துறப்பது தான் அவன் வாழ்க்கை பயணம். அவனது குறிப்புகளே குறுநாவல். ஏறத்தாழ ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலின் மாயப்பிறவியைப் போல. கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானிடம்’ கணேசனை நினைவுபடுத்தும் பாத்திர வார்ப்பு. ‘ரோஜாமலர்’ ஒரு துப்பறியும் கதை. ரஞ்சனியின் கணவரான மருத்துவர் பிரஸாத் கொல்லப்படுகிறார். யார் செய்தது?ஏன் செய்தது?என்பதைச் சுற்றி நகர்கிறது.
2

தாகூருக்குப் பிறகு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் ஆதித்யா சிதம்பரம். (எப்பேர்பட்ட கற்பனை!). அவரது ‘இரட்டை மனிதன்’ Dual man என்கிற நாவலுக்காக நோபல் பரிசு அளிக்கப்படுகிறது (பொதுவாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு புக்கர் போல ஒரு ஆக்கத்திற்கு வழங்கப்படுவதில்லை என எண்ணுகிறேன்). ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலாசிரியர் ஆதித்யா சிதம்பரத்தின் கடந்தகால வாழ்வைச் சொல்லும்போது அவனது தந்தை வெட்டுண்டு கொல்லப்படும் சித்திரம் விவரிக்கப்படுகிறது. காரண காரியங்கள் விளக்கப்படவில்லை. அடுத்த அத்தியாயத்திலேயே அவனது அம்மாவும் பாட்டியும் இறந்து ஆதரவற்று பிழைப்பு தேடி அலைகிறான் எனும் இடத்திற்குக் கதை தாவி விடுகிறது. இவ்வகையான கதைகூறுமுறையே அவரது பாணி. ஆதித்யா சிதம்பரம் போலவே சிறுவனாக தாய் தந்தையை இழந்த சித்தரஞ்சன்‌ எனும் சிறுவனின் கதையை ‘இரட்டை மனிதன்’ எனும் நாவல் சொல்கிறது. வளர்ந்த பிறகு சித்தரஞ்சன், மாயரஞ்சன், கானரஞ்சன் என இரண்டாகப் பிரிகிறான். மாயரஞ்சன் அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்தியவன். கானரஞ்சன் அன்பின் மலரை ஏந்தியவன். அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்தியவனுக்கு மீண்டும் மீண்டும் நன்மையே நிகழ்கிறது. அன்பெனும் மலரை ஏந்தியவனைத்துரதிஷ்டங்கள் துரத்துகின்றன. ஒரு வகையில் சுரேஷ்குமாரஇந்திரஜித் நாவல்களில் உள்ள இருமையாக இதைப் புரிந்து கொள்ள முடியும். மாயரஞ்சனும் கானரஞ்சனும் சந்திக்கும் புள்ளியே அவரது படைப்புலகம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் மனிதனின் நல்லியல்புகளின் மீது ஓயாமல் ஐயத்தை எழுப்புபவை என்பது ‘மினுங்கும் கண்கள்’ போன்ற அவரது சிறுகதைகளை வாசித்தவர்களுக்குத் தெரியும். ‘தேம்பாவணி’ இல்லத்தை நடத்தும் செபாஸ்டியன் நாடார், அவரது மகள் ரெஜினா (கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்) போன்ற முழு நேர்மறைப் பாத்திரங்கள் அவரது முதல் நாவலில் அறிமுகமானபோது எனக்கது ஆச்சரியமாக இருந்தது. ‘நான் லலிதா பேசுகிறேன்’ முழுக்க நேர்மறை கதைமாந்தர்களால் நிரம்பியவர்கள். லலிதா இளமையில் இருந்தே இன்னல்களைச் சந்தித்து வருபவள். ஆனால், அவள் எதிர்கொள்ளும் பெரும்பாலானவர்கள் உறுதுணையாகவே இருக்கிறார்கள். டெல்லியில் அவளிடம் தவறாக நடந்துகொள்ள முனையும் ஆசார பிராமணரும் திருமணத்திற்காக சம்மதம் பெற சந்திக்க வரும் வேணுகோபாலனும்,அவளை அடையத் துடிக்கும் மருத்துவ அதிகாரி விஸ்வநாதனும் விதிவிலக்குகள். குழந்தை திருமணம் புரிந்து கொண்டு சிறுமிவிதவையாக உள்ள லலிதா மருத்துவம் படிக்க உதவுவது இறந்து போன கணவரின் தந்தை. அம்பிகாவும் அவள் வாழ்வில் நல்லவர்களையே எதிர்கொள்கிறாள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தந்தை கூட வீட்டு பத்திரத்தையும் சாவியையும் அவளுக்கு அனுப்பி வைக்கும் அளவிற்கு நாகரிகமானவர். அக்கிரகார வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் உள்ள புறணி பேசும் ஆச்சாரவாதிகளே அதிகபட்சம் அவள் எதிர்கொண்ட எதிர்மறை நபர்கள். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலிலும் எதிர்மறை பாத்திரங்கள் என எவரையும் பெரிதாக இனம் காண முடியாது. மகளின் புது வாழ்வை முழுமனதுடன் தந்தை ஏற்றுக்கொள்கிறார்.

இந்த மூன்று நாவல்களும் பிராமண பெண்களை மைய கதாப்பாத்திரமாக கொண்டவை. ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் வரும் லலிதா குழந்தை திருமணத்தில் விதவையானவள். முற்போக்குச் சிந்தனை கொண்ட நீல்கமலைக் காதலிக்கிறாள் . ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவலில் வரும் அம்பிகா சாதி, மதம், தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து வீட்டை மீறி திருமணம் செய்தவர். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலின் நந்தினியைக் கணவர் நீங்கிச் செல்கிறார். ஆனந்தனுடனான உறவின் வழியாக புதிய தொடக்கத்தை எதிர்நோக்குபவள்.

இந்த மூன்று நாவல்களும் பிராமண சமூகத்தில் பெண்களின் நிலையைச் சீர்திருத்த நோக்கில் அணுகுகிறது. இன்றைய காலத்தில் குழந்தை திருமணமோ, விதவை மறுமணமோ பெரும் புரட்சியாகவோ கலகமாகவோ பார்க்கப்படுவதில்லை. அ. மாதவையா, பாரதி காலம் தொட்டு பேசப்பட்டு இன்று காலாவதியாகிப்போன ஆவண மதிப்பு மட்டுமே உள்ள கடந்தகால விஷயங்கள். சாதி மீறிய திருமணங்கள் இன்றளவும் முக்கியமான சிக்கல்தான். இடை நிலை சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் இடையேயான திருமண உறவுகள் பெரும் மோதலை ஏற்படுத்துகிறது என்பதே இன்றைய சமூக யதார்த்தம்.

சீர்திருத்த எழுத்துக்களின் வரிசையில் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் எழுதிய காலத்தில் பிராமண பின்புலத்திலிருந்து பெண் விடுதலையைப் பேச வேண்டிய சமூக சூழல் நிலவியது. சுரேஷ்குமார இந்திரஜித் தனது ஆதர்சமாக ஜெயகாந்தனைக் குறிப்பிடுகிறார். ஆனால், அவரது சிறுகதைகளில் ஜெயகாந்தனின் தாக்கம் ஏதும் பெரிதாக புலப்படவில்லை. ஜி. நாகராஜனின் கதையுலகோடு சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதை மாந்தர்களைப் பொருத்திப்பார்ப்பதுண்டு. ‘அணு யுகம்’, ‘கிழவனின் வருகை’ போன்ற கதைகளை வாசிக்கும்போது ஜி. நாகராஜனின் உலகம் இயல்பாக அறமின்மையைப் பேசுகிறது என்பதை விட அறத்திற்கான ஏக்கத்தையும் அது இல்லாததன் விரக்தியையுமே வெளிப்படுத்துகிறது. அந்த ஏக்கம் கூட சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகளில் வெளிப்பட்டதில்லை. ‘எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவலைத் தவிர்த்து பிற நாவல்கள் ஜெயகாந்தனின் லட்சியவாத உலகிற்கு நெருக்கமாக உள்ளது. பல நாவல்களின் பாத்திர வார்ப்புகளிலும் பேசுபொருள்களிலும் சர்வ நிச்சயமாக அவருடைய தாக்கத்தை உணர முடிகிறது. ‘அம்பிகா’ நாவலில் சங்கரலிங்க நாடார் எனக்கு ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ அண்ணாசாமியை நினைவுபடுத்தினார். வயதில் ஏறத்தாழ தந்தையின் வயதையொத்த சங்கரலிங்க நாடார் அம்பிகா எட்வர்ட் ஜென்னரைக் காதலிப்பதாகக் கூறும் வரை அவளது புடவையின் நிறத்தைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார். ஜெயகாந்தனின் எழுத்துக்கள் இலட்சியவாதத்தையம் சீர்திருத்த நோக்கையும் முன்வைப்பவை. மாயரஞ்சன் அவநம்பிக்கையின் குறுவாளை ஏந்திக்கொண்டு நுழைந்து படிப்படியாக அன்பெனும் விசையை உலக இயக்கத்தின் அடிநாதமாக கண்டுகொள்வது போன்றொரு பயணம் சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புகளின் ஊடாக நிகழ்கிறது.

இந்நாவல்களின் பேசுபொருளைக் கொண்டு நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்பது இவற்றின் இன்றைய முக்கியத்துவம் என்ன என்பதே. இவற்றை இன்று ஏன் எழுத வேண்டும்? இலக்கியத்திற்கு எந்தப் பேசுபொருளும் அந்நியமானதில்லை, காலாவதியாவதில்லை. ஆனால், கூறுமுறையும் கோணமும் தேய்வழக்குகளற்று புதிதாக உள்ளதா என்பதே கேள்வி.

இம்மூன்று நாவல்களிலும் எதிர்மறை பாத்திரங்கள் என பெரிதாக ஏதுமில்லை என்றாலும் பழமைவாதம், ஆச்சாரம், மரபு போன்ற ‘அமைப்புகள்’ அவ்விடத்தை எடுத்துக்கொள்கின்றன. தனி மனிதர்களின் விழைவுகளுக்கும் மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகளுக்கும் இடையேயான உராய்வைப் பேச முயல்கின்றன. மனிதர் உருவாக்கிய அமைப்புகள் எப்படித் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் உளவியல் தளங்களிலும் ஒரு வலைபோல விரிகிறது, அதை அறுத்து வீச முடியாமல் மனிதர்கள் எப்படி அதற்குள் சிக்குண்டு அழிகிறார்கள் என்பதே இம்மூன்று நாவல்களிலும் சுரேஷ்குமார இந்திரஜித் எழுப்பிக்கொள்ளும் முதன்மை கேள்வியாக உள்ளது. பிராமண பின்னணி என்பது இந்தக் கேள்வியை விவாதிக்க ஏதுவான பின்புலமாக மட்டும் காணும்போது மேற்சொன்ன கேள்வியை வந்தடையலாம். லலிதாவிற்கும் நந்தினிக்கு என்னவாகிறது? அவர்களால் சமூகத்தின் வரையறையைத் தாண்ட முடியவில்லை. லலிதா யாரையுமே மணக்காமல் பிரமை பிடித்து மூளையில் கட்டி வந்து மரணமடைகிறாள். ஆனந்தனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் தருணத்தில் நந்தினி தன்னை விட்டுச்சென்ற கணவனான சர்வேஸ்வரனைப் பற்றிய அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் புத்தி பேதலித்துப் போகிறாள். சட்டப்படி அவனுக்கான மரண சான்றிதழை வாங்கிவிட்டாள், ஆனந்தனும் தனது மனைவியை விவாகரத்து செய்து தயாராக இருக்கிறான். ஆனாலும் அவர்களால் இணைய முடியவில்லை. இந்தப் பேதலிப்பு தனி மனுஷியின் பிரமை என்பதொரு கோணம், சமூக வரையறையைத் தாண்ட முடியாத திண்மையின்மை என்பது இன்னொரு கோணம். இவ்விரு முடிவுகளுக்கு மாறாக அம்பிகா ஆங்கிலேயரான எட்வர்ட் ஜென்னரை மணந்துகொண்டு இங்கிலாந்துக்குச் செல்கிறாள். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்குமாகப் பயணித்து அவள் எண்ணிய சமூக பணிகளை ஆற்றுகிறாள். இந்தியக் குடும்ப, பண்பாட்டு அமைப்பிலிருந்து தப்பிச் செல்லும் அம்பிகா மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்கிறாள். அவள் தான் வாழ்ந்த, தனக்கு உரிமையுள்ள பரம்பரை அக்கிரகார வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்குவது குறியீட்டு ரீதியாக முக்கியமான செயல். பழைய பாரம்பரியத்தின் மீது அவளுக்கு எந்தப் பிடிப்பும் இல்லை. அங்குப் புதிய கட்டிடத்தை எழுப்புகிறாள். அதுவும் நடைமுறை பயன்கொண்ட விதவைகளுக்கான விடுதியை அமைத்து கொடுக்கிறாள். அம்பிகாவின் நிகழ்கால தேர்வுகளை வருங்காலம் குறித்த கனவுகள் முடிவு செய்கின்றன என்றால் பிறரின் தேர்வுகள் கடந்தகாலத்தின் பாற்பட்டதாக உள்ளன.

இருத்தலியல் கோணத்திலிருந்தும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் நாவல்களை நோக்க முடியும். இருத்தலியல் சிக்கல் என்பது நமக்கான பாதைகளை நாம் தேர்வு செய்வதில் உள்ள குழப்பத்தைக் சுட்டுவது. நமது ‘தன் விருப்பை’ நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் தடுமாற்றமும் குழப்பமும் தான் அடிப்படை. லலிதாவும் நந்தினியும் இருத்தலியல் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டவர்கள். அம்பிகாவுக்கு அத்தகைய சிக்கல் ஏதுமில்லை‌. ‘ரோஜா மலர்’ ரஞ்சனாவும் காதலை ஏற்பதா வேண்டாமா எனும் குழப்பத்திற்கு ஆளாகி லலிதா நந்தினி வரிசையில் சேர்ந்துகொள்கிறாள். ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலின் ஆதித்யா சிதம்பரம் அவன் மணந்துகொண்ட சாரதாவிடமிருந்து பெரிய குழப்பம் ஏதுமின்றி விலகிவிட முடிகிறது. அவனுக்குத் தேவை மனைவியல்ல தோழி என்பதை உணர்ந்துகொள்கிறான். ஆகவே, ரஞ்சனாவுடன் இயல்பாக இருக்க முடிகிறது. எடின்பரோ அகதாவை விட்டு விலகுகிறான். சுகந்தியை மணக்கிறான். அங்கிருந்தும் விலகுகிறான். குடும்பத்திற்குள் அவனாலும் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலவில்லை. ஆண்களால் குடும்ப அமைப்பை விட்டு எளிதாக விலகிச்செல்ல முடிவதுபோல் சுரேஷ்குமார இந்திரஜித்தின் பெண் பாத்திரங்களால் விலக முடியவில்லை. ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலில் எழுத்தாளர் ஆதித்யா சிதம்பரத்திடம் பேட்டி காணும்போது ‘இந்திய மக்களுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள். அதற்கு ‘பழமை பாறாங்கல் போல் அழுத்திக் கொண்டிருக்கிறது. தொல் நாகரிகம் கொண்ட நாடுகளில் இவ்வாறு ஏற்படுகிறது. வெளியே வாருங்கள். புதிய காற்றைச் சுவாசியுங்கள். உங்கள் கைகளில் புதிய இந்தியா உருவாகட்டும்.’ இந்தச் செய்திதான் அவரது எல்லா நாவல்களின் மையம் எனச் சொல்லிவிடலாம். லலிதா டெல்லியில் ஒரு மாமியுடன் பேசும்போது ‘மாமிக்கு சில சிந்தனைகள் இருக்கு காலங்காலமா தலைமுறை தலைமுறையா சில எண்ணங்களை சந்ததிக்கெல்லாம் கடத்திண்டு வருவா. இவாள்ளாம் இப்படித்தான் யோசிப்பா. உண்மையாக சொல்லப்போனா இந்த மாமியோட பேசறப்போ நான் என்னையறியாமலேயே தமாஷா பேசறேன்னு தோணுது’ எனத்தனக்குள்ளேயே சொல்லிக்கொள்கிறாள்.

ஆதித்யா சிதம்பரம் மணமுறிவு செய்து கொண்டவன். தோழி ரஞ்சனாவுடன் இருக்கிறான். அதாவது குடும்ப அமைப்பிற்கு ஆட்படாமல் இருக்கிறான். லலிதாவும் நந்தினியும் குடும்ப அமைப்புகளில் இருந்து தப்ப விரும்பும் அதே நேரத்தில் அன்பின் பொருட்டு நுழையவும் விரும்புகிறார்கள். இந்த முரணை எதிர்கொள்ள முடியாமல் தான் அவர்கள் பித்தர்களாகி விட்டார்களா? லலிதா ‘நேக்கு கல்யாண ஆசை இருக்கான்னு நேக்கே தெரியலை. இருக்குன்னு தான் தோண்றது. எல்லாருக்கும் இருக்கற ஆசை தானே. ஆனா திருமண வாழ்க்கைல ஒரு ஆணோட என்னால இருக்க முடியுமா. அது பிரச்சினைதான். இப்ப நான் என் இஷ்டப்படி இருக்கேன். அப்புறம் ஆத்துக்காரர் இஷ்டப்படி தான் நடக்கணும்’ என எண்ணுகிறாள்.

பண்பாட்டு சேகரம் தனிமனிதனின் காம விழைவுகளை என்னவாக பாதிக்கிறது என்பதை அவரது நாவல்களிலிருந்து இரண்டு தருணங்களை எடுத்துக்கொண்டு விரிவாக காணலாம். ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலில் ஆதித்யா சிதம்பரம் காட்டுமன்னார்கோவிலில் வசிக்கும் விதவையான சாரதாவை மணந்துகொள்ள முடிவு செய்வான். சாரதாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைப்பவர் சாராதாவின் மாமா சந்தானம். அதுவரை காமத்துடன் காணாத சந்தானம் ஆதித்யா சிதம்பரம் சாரதாவைத்திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதும் மிகுந்த கிளர்ச்சியை உணர்கிறார். எவ்வளவோ அடக்க முயன்றும் அவரால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை சாரதாவிடம் வெளிப்படுத்தவும் செய்கிறார். சாரதா பதிலுக்கு உங்களுக்கு உடலுறவு தான் வேண்டுமா என்கிறாள். இல்லை ஒரேயொருமுறை அணைத்துக்கொள்கிறேன் போதும் என்கிறார். சாரதா அவளுக்கு அந்தத் தருணத்திலிருந்து அம்பாளாக ஆகிறாள். ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலிலும் நந்தினி அம்பாளாக ஆகும் தருணம் உண்டு. ‘அவர் வீட்டை விட்டு ஓடிப்போறதுக்கு முந்தின நாள் ராத்திரி ‘நான் யார்’ என்று மூன்று தடவை தனக்குத்தானே கேட்டுண்டார். என்ன ஆச்சு உங்களுக்குன்னு கேட்டேன் ஒண்ணுமில்லேன்னு சிரிச்சார். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா என்றார். என்னோட ஆத்துக்காரர்னு சொன்னேன். அது மட்டும் தான் உனக்கு தெரியும்னு சொன்னார். அப்புறம் என் ட்ரெஸ்ஸை எடுத்துட்டு நிர்வாணமா இருக்கச் சொன்னார். நகைகளையும் எடுக்கச் சொல்லிவிட்டார். திருமாங்கல்யத்தையும் எடுக்கச் சொன்னார். நான் முடியாதுன்னு சொன்னேன். அவர் வற்புறுத்தி அதையும் காதுதோடு, நெற்றி போட்டு எல்லாத்தையும் எடுக்கச் சொல்லிவிட்டார். என் உடம்புல ஒண்ணுமே இல்லை. நிற்கச் சொன்னார். நின்னேன். என் கால்ல நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டார். நான் பதறிப் போனேன். நீ தேவி ரூபம் நான் ஒண்ணுமே இல்லைன்னு மயங்கிவிட்டார். சற்று நேரத்துலே எழுந்து என்கூட முரட்டுத்தனமா செக்ஸ் வைச்சுண்டார். அப்படியே தூங்கிட்டார். அடுத்த நாள் காலைலேந்து அவரை காணோம்.”

சுரேஷ்குமார இந்திரஜித் காரைக்காலம்மையார் பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளார். துய்க்க முடியாத தூய்மை இறைத்தன்மையடைகிறது என்பது இந்திய நம்பிக்கை. கள்ளமற்ற தெய்வீகம் நம்மைத் தொந்திரவு செய்கிறது. ‘பிளாக் மிர்ரர்’ தொடரில் ஒரு அத்தியாயத்தில் பாடகியாக விரும்பும் கள்ளமற்ற தெய்வீகப் பெண்ணை உனது மூலதனத்தைப் பாட்டில் செலவிடுவதைவிட பாலியல் வேட்கைக்கு உகந்தது என மடைமாற்றுவார்கள். இந்திய மரபு காமத்தைப் பக்தியாக மேல்நிலையாக்கம் செய்து கொள்வதன் வழி கற்பிதமான குற்ற உணர்விலிருந்து இந்திய மனம் தன்னை விடுவித்துக் கொள்கிறதா என்றொரு கேள்வியைச் சுரேஷ்குமார இந்திரஜித் எழுப்புகிறார்.

கனவுக்கும் நிஜத்துக்குமான கோட்டை அழிக்கிறார் என்பதை விட இந்த இருமையை மறுதலிக்கிறார். எல்லாமே சாத்தியங்கள் எனும் நிலையில் இந்தப் பிரிவினைக்குப் பொருளில்லை. ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ கதையில் அம்மா குறித்து ஆதித்யா சிதம்பரம் சிறுவனாகக் காணும் கனவு ஒரு மாற்று யதார்த்தம் எனும் அளவிற்கு விரிவாகத் துல்லியமாக காட்சிப்படுத்தப்படுகிறது. நீல்கமல் குறித்து லலிதா காணும் கனவுகளுக்குத் தொடர்ச்சியுண்டு. அவை பகல் கனவுகள் அல்லது பிரமை அல்லது இணைகதைகள் எனச் சொல்ல முடியும். சங்கரலிங்கம் நாடார் அம்பிகாவின் வீட்டிற்குச் செல்வதாகக் காணும் கனவையும் இதே வரிசையில் வைக்கலாம். இக்கனவுகள் மாற்று சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுகின்றன. மையக்கதைக்குச் சில அடுக்குகளை உருவாக்கி அளிக்கின்றன. இந்த வழமையிலிருந்து முற்றிலும் வேறு ஒரு விதமான கனவு என்று ஒன்றைச் சொல்லலாம் என்றால் அது ‘அம்பிகா’ நாவலில் மதுரை வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மனைப் பற்றி காணும் கனவு. அம்மன் ரதத்தில் வந்து ஐயருக்குக் கோவிலை பக்தர்கள் அனைவருக்கும் திறந்துவிடுமாறு ஆணையிடுகிறாள். கணித மேதை ராமானுஜத்திற்குச் சூத்திரங்கள் நாமகிரித் தாயாரால் அருளப்பட்டதைப் பற்றி பின்னொரு சமயத்தில் நாவல் விவாதிக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் தனித்துவமான நுண்ணிய அவதானிப்புகளை எழுதுபவர். உதாரணமாக ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவலில் ஒரு இடத்தைச் சுடடிக்காட்டலாம். ஆகஸ்ட் 15, 1947 அன்று என்ன நிகழ்ந்தது என்பது குறித்து பல்வேறு வரலாறுகள் உள்ளன. எத்தனையோ நிகழ்வுகளும் கதைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அன்று முதன் முறையாகக் கொடியேற்றும்போது சரியாக ஏற்ற வேண்டும் எனும் பதட்டம் பற்றி எவரும் குறிப்பிட்டதாக நினைவில்லை. நியாயமான பதட்டம் தான். சிரஸ்தாராக இருந்தவர் மட்டுமே கவனிக்கக்கூடிய பதட்டம். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும்போது இந்தப் பதட்டமிருந்திருக்கும். அம்பிகாவும் ஜென்னரும் கற்பனை பாத்திரங்கள் என்றாலும் அவர்களுக்கு முன்மாதிரிகள் உண்டு. அம்பிகாவே ருக்மணி அருண்டேல் பற்றி குறிப்பிடவும் செய்கிறாள். அதே போல் நந்தினி – ஆனந்தனுக்கு எம்.எஸ்- சதாசிவம் தொடர்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.

நாவல்கள் சார்ந்து எனது விமர்சனங்களையும் சொல்ல வேண்டும். தமிழ் நாவல் வரலாற்றில் இந்த நாவல்களின் தனித்துவமான பங்களிப்பு என்ன என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால் பெரிதாக ஏதுமில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.

சிறுகதைகளில் எவையெல்லாம் அவருடைய பலமாக இருந்ததோ அவை நாவல்களில் பலமாக வெளிப்படவில்லை. முன்னமே கூறியது போல் பேசுபொருள் காலாவதியாவதில்லை ஆனால் கூறுமுறை ஆகிவிடும். ‘மாபெரும் சூதாட்டம்’ , ‘மறைந்து திரியும் கிழவன்’,’எலும்புக்கூடுகள்’, ‘கால்பந்தும் அவளும்’,’நடன மங்கை’ எனப் பல அபாரமான கதைகளை எழுதியவர். தமிழ் சிறுகதை வரலாற்றில் சுரேஷ்குமார இந்திரஜித்முக்கியமான எழுத்தாளர் என்பதில் எனக்கு ஐயமில்லை. பேசுபொருள், கூறுமுறை என இரண்டிலுமே புதிய தலங்களுக்குத் தமிழ் சிறுகதைகளை நகர்த்தி சென்றவர். சிறுகதைகளில் பல நூதனங்களைச் செய்த முன்னோடியாகத் திகழும் சுரேஷ்குமார இந்திரஜித்தால் அத்தகைய நூதனங்களை நாவல்களில் கொண்டுவர முடியவில்லை என்பதே என் நோக்கு. எந்த நாவலுமே நிறைவான வாசிப்பனுபவத்தை எனக்குக் கடத்தவில்லை. சிறுகதைகளிலும்,ஓரளவு குறுங்கதைகளிலும் வெளிப்படும் கூர்மை நாவல்களில் வெளிப்படவில்லை‌. இயல்பாக அத்தகைய கூர்மை வெளிப்பட்ட ஆக்கம் என்பதாலேயே ‘எடின்பரோவின் குறிப்புகள்’ அவர் எழுதிய நாவல் குறுநாவல்களில் சிறந்ததாக ஆகிறது. பஞ்சு வியாபாரம் தொடர்பாக குமாஸ்தாவுடன் சங்கரலிங்கம் நாடார் உரையாடும் பகுதிகளை வாசிக்கும்போது பஞ்சு வியாபாரத்தின் படிநிலைகள் அடுத்தடுத்த பக்கங்களில் மும்முறை சொல்லப்படுகிறது. நாவல்களை எப்படி வளர்த்துக்கொண்டுபோவது எனும் சிக்கல் உள்ளதாகப்பார்க்கிறேன். அவை இயல்பாக வளராமல் செயற்கையாக நீட்டிக்கப்படுகின்றன எனும் எண்ணமே ஏற்படுகிறது. ‘அம்பிகா’ நாவல் மிக முக்கியமான வரலாற்று பின்புலத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து திசை மாறிச் செல்கிறது. நாவலுக்குப் பின் இணைப்புகளாக பல்வேறு ஆவணங்களை அளித்துள்ளார். வரலாற்று புனைவில் வரலாறு தனியாகவும் புனைவு தனியாகவும் துண்டிக்கப்படுகிறது. இதை ஒரு நூதனமான உத்தியாக கருத முடியுமா எனத்தெரியவில்லை. வாசகனாக அது எனக்கு எவ்வித கிளர்ச்சியையும் கொடுக்கவில்லை‌. நாவலின் செய்திறன் சார்ந்து போதாமையைச் சுட்டுவதாகவே படுகிறது. ஒப்பு நோக்க ‘லலிதா’ நாவலில் வரலாறு கதைச்சரடோடு இணைந்து பயணிக்கிறது. முத்துலட்சுமி ரெட்டி கவுன்சிலில் ஆற்றிய உரை மொத்தமாக அளிக்கப்பட்டுள்ளது. லலிதா சொல்லிக்கொண்டிருக்கும் கதையில் திடீரென்று முத்துலெட்சுமி கதைசொல்லியாக ஆகிறார். இவையிரண்டும் கடந்தகால பாத்திரங்கள். நந்தினி சமகாலப் பெண் ஆனால், அவளுடைய சித்தரிப்பு நான் உணரும் இன்றைய யதார்த்தத்திலிருந்து வெகுவாக விலகியிருக்கிறது. எழுபதுகளின் பாத்திர வார்ப்பு எனத் தோன்றுகிறது. ஆகவே, அவள் மீது பெரிதாக கரிசனம் கொள்ள முடியவில்லை.

இந்தப் போதாமைகள் ஒரு புறமிருந்தாலும், சுரேஷ்குமார இந்திரஜித்தின் நாவல்கள் அவரது சிறுகதைகளை விடவும் அதிகம் பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன். சிடுக்கற்ற மொழியில் வாசக மனம் பற்றிக்கொள்ள ஒரு சுவாரசியமான ‘கதையை’ அவரால் உயிர்ப்புடன் எழுத முடிகிறது. அவரது படைப்புகளுக்குள் நுழைய சாமான்ய வாசகர்களுக்கு நாவல்களே சிறந்த வாயில்களாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. சிறுகதைகளில் அவர் ‘எழுத்தாளர்களின் எழுத்தாளராக’ இன்றளவும் இருக்கிறார் என நான் கருதுவதால் எனக்குள்ள எதிர்பார்ப்பாகவும் இதை கொள்ள முடியும்.

‘பாட்டி முறுக்கு சுட்டு அடுக்குவதுபோல் ஒரே மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்தேன்’ என ஒரு நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள் எழுதுவது என்பது எழுபது வயதில் காரோட்டப் பழகுவுது போல. அதிலொரு சாகசமும் குறுகுறுப்பும் உள்ளது. அவரது படைப்பூக்க விசை எனக்கு வியப்பளிக்கிறது. தன்னைத் தொடர்ந்து மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டும் எனும் முனைப்பு எனக்கு உந்துசக்தியாகவும் உள்ளது. ‘கடைசி எழுத்து என்பது வந்து சேர்ந்து நிலைத்திருக்கும் இடமல்ல கடந்து செல்லும் இடங்களில் ஒன்று’ எனக் குறிப்பிடுகிறார். அந்த விசை ஓயாதிருக்கட்டும்.‌

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...